எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 19

Privi

Moderator

எல்லாம் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்தது. உமையாள் அதிர்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தாள். காவல் துறையினர் அவளை வந்து பார்த்தனர். கர்ப்பமாக இருக்கும் பெண், அவளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.​

விஷயம் கேள்விப்பட்டு அடித்து பிடித்து ஓடி வந்தான் நீலன். உமையாள் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தாள். அவளிடம் காவல் துறையினர் எப்படி எப்படியோ கேள்வி கேட்டனர். அவளால் பதில் கூற முடியவில்லை.​

பின்னர் நீலன் வந்துதான் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தான். நீலனோ காவல் துறையினரிடம் அவன் இப்போது இந்த தொழில் செய்வதை விட்டுவிட்டதாகவும், இப்போது திருந்தி வாழ்வதாகவும் கூறினான். ஆனால் காவல் அதிகாரிகளோ​

"சில காலம் அவர் இந்த தவறை செய்வதில்லை, ஒழுக்கமாக தான் வாழ்ந்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு வாரமாக அவரின் போக்கு மாறி விட்டது. எங்களுக்கும் அவர் மேல் நிறைய புகார்கள் வந்த வண்ணமே இருந்தது.​

தவறு செய்தவர்களுக்கு நாங்களும் திருந்த வாய்ப்பு தருவோம். அவர்கள் திருந்த வில்லை என்றால் நாங்களும் எங்கள் கடமையை செய்ய வேண்டும் அல்லவா" என்று கூறினார்.​

அப்போதுதான் உமையாள் கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது. அவன் கடைசியாக கேட்ட மன்னிப்பிற்கு அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. அவள் அவன் மீது வைத்த நம்பிக்கை பொய்த்து போனது.​

அவள் மனமோ ஓலமிட்டு அழுதது. அவளால் இந்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.​

ஆம் இதனை அவள் துரோகம் என்றே நினைத்தாள். அவளுள் அவனுடனும் அவள் குழந்தையுடனும் வாழ பல கனவுகள் இருந்தன. தப்பு செய்த கணவன் தான் ஆனால் நல்லவன், திருந்தி விட்டான், இனி அவனுடன் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்தாள்.​

அவனின் இச்செயலால் எல்லாம் வீணாய் போனதே. அவனுக்கு வாழ்க்கையே போய் விட்டதே.​

அவள் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். விடை தரத்தான் ஆள் இல்லை. வாழ்க்கையே இருண்டு போன உணர்வு. நீலன் காவல் துறையினர் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து விட்டு உமையாளை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றான்.​

அவளை வீட்டில் விட்டு விட்டு பக்கத்துக்கு வீட்டு அக்காவிடம் அவளை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு அருணை வீட்டிற்கு அழைத்து வரும் ஏற்பாட்டினை பார்க்க போனான்.​

எல்லாம் முடிந்து ஒரு நாள் கழித்தே அருணின் உடலை வீட்டிற்கு கொடுத்தனர். அவளின் வளைகாப்பு நாள் அருணிற்கு இறுதி சடங்கு செய்யும் நாளாக மாறியது. விஷயம் அருணின் தங்கைக்கும் அத்தைக்கும் தெரிவிக்க பட்டது. இருவரும் ஒரு பார்வையாளராக மட்டுமே வந்தனர் பின் வந்த வழியே சென்றும் விட்டனர்.​

இறப்பிற்கு வந்தவர்களுக்கு அவன் இறப்பின் காரணம் கசிய ஆரம்பித்தது. அவர்களில் சிலர் உமையாள் அவனின் பணத்துக்கு ஆசைப்பட்டுதான் அவனை திருமணம் செய்தாள் என்றும் இன்னும் சிலர் இவ்வளவு நாள் குடும்பம் நடத்தியவளுக்கு புருஷனின் போக்கு தெரிய வில்லையா என்றும் புறம் பேசி சென்றனர்.​

அன்று காவல் நிலையத்தில் அழுததுதான். அதன் பின் உமையாள் அழவே இல்லை. அவளுள் ஒரு வைராக்கியம்​

"நான் ஏன் அழவேண்டும்? பொண்டாட்டி, பிள்ளை என்று அழகிய ஒரு கூடு இருப்பதை உணராது, குடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல், மனைவிக்கு துரோகம் செய்தவனுக்காக நான் ஏன் அழவேண்டும்? அழமாட்டேன் அவனுக்காக அழவே மாட்டேன்” என வைராக்கியம் கொண்டாள்.​

எல்லா சாங்கியங்களையும் அமைதியாகவே செய்தாள். அருணின் உடலை அவர்கள் வழக்கப்படி புதைக்க எடுத்து சென்றார்கள்.​

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் உமையாளுக்கு வலி வந்து விட்டது. அவளை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அருணை புதைத்த நேரமும் குழந்தை பிறந்த நேரமும் ஒரே நேரம். அவர்கள் ஆசைப்படியே பெண் பிள்ளை தான் பிறந்தது.​

உமையாளை தூற்றுபவர்கள் அவள் குழந்தையை மட்டும் விட்டு வைப்பார்களா?​

“அவள் பிறக்கும் முன்பே தந்தையை முழுங்கி விட்டாள்” என மனசாட்சியே இல்லாமல் பேசினார்கள்.​

அவன் செய்த தப்பிற்கு அவனுக்கு தண்டனை கிடைத்தது. அதற்கு ஒன்றும் அறியா பச்சை குழந்தையின் மீது பழியை சுமத்துவார்களா? வெறுத்து விட்டாள்.​

“என்னடா நீலா இது? தப்பே செய்யாத நாம் ஏன் இந்த பேச்சை எல்லாம் கேட்க வேண்டும்? என்னை விடு, இந்த குழந்தையை பற்றியும் புறம் பேசுகிறார்களே. இவர்களுக்கு எப்படி மனசு வந்தது? போயிரலாம் டா நீலா" என நீலனிடம் கேட்டு கொண்டாள். நீலன் சிறு அமைதியின் பின் சரி என தலை ஆட்டினான்.​

" ஏன்டா யோசிக்கிற? ஒஹ் ஆமாம் உனக்கு இங்கு தானே பல்கலைக்கழகம். தோழர் தோழிகள் என எல்லோரும் இருக்கின்றனர். நீலா என்னை மன்னித்து விடு. என்னால் உனக்கும் பிரச்சனை" என கண் கலங்க கூறினாள்.​

"அக்கா என்ன பேச்சு இது? உனக்கு அடுத்து தான் எல்லாமே" என அவனும் கலங்கிய கண்களுடன் கூறியிருந்தான்.​

பின் நீலன் அருணின் பதினாறாம் நாள் துக்கத்தை முடித்தவுடன் புது ஊரை தேர்வு செய்து அங்கு ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்தான்.​

உமையாளும், நீலனும் இருந்த இடத்தை விட்டும் அருணின் நினைவுகளை விட்டும் புது இடத்திற்கு சென்றனர். உமையாள் அவன் பணத்தில் வாங்கிய பொருள் ஒன்றையும் எடுத்து கொள்ளவில்லை. வேலைக்கு சென்ற போது அவளின் வருமானத்தில் சேர்த்து வைத்த பணத்தை மட்டுமே நம்பி புது இடத்திற்கு சென்றாள்.​

உமையாளுக்கு அந்த வீட்டிலிருந்த பாப்பாவை போடும் தொட்டியை பார்க்கும் போதுதான் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. கண்ணீரை உள்ளிழுத்து அழுகையை கட்டு படுத்தினாள்.​

இனி அவள் வாழப்போகும் வாழ்க்கை அவள் குழந்தைக்கானது மட்டுமே என்று மனதில் பதிய வைத்தாள். அவள் வாழ்க்கையின் ஒரே ஒரு மகிழ்ச்சி என்றால் அது அவள் பெற்றெடுத்த செல்வம் தான் அதனால் அவளுக்கு மகிழினி என பெயரிட்டாள்.​

அவர்கள் இருவருக்கும் கொஞ்ச காலம் எடுத்தது புதிய மனிதர்களுடனும், புதிய சூழ்நிலையிலும் பொருந்தி போவதற்கு. நீலனுக்கும் புதிய கல்லூரி மாற்றல், அங்கு இருக்கும் விதிமுறைகள் என எல்லாம் பொருந்தி போக நேரம் எடுத்தது. உமையாளுக்கு வேலைக்கு போக வேண்டும், வருமானம் வேண்டும் அல்லவா? அதே சமயம் மகிழையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.​

என்ன செய்வது என்ற நெடு நேர யோசனையின் பின் நீலனின் ஐடியாவில் வந்ததுதான் அவள் இப்போது செய்து கொண்டிருக்கும் கலை பொருள்கள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை.​

முதலில் கொஞ்சம் கஷ்ட பட்டாலும் அவளின் தனித்துவமான டிசைன்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை சம்பாதித்து கொண்டாள். எவ்வளவோ முயற்சி செய்து அருணின் நினைவுகளில் இருந்து வெளி வந்திருந்தாள்.​

இப்படியே வருடங்களும் ஓடின. மகிழினிக்கு தந்தை என்னும் சொல்லே தெரியாமல்தான் வளர்த்தாள். சில சமயம் அருணின் நினைவுகள் அழையா விருந்தாளியாய் வந்து போகும். அப்போதெல்லாம் கடினப்பட்டு அதிலிருந்து வெளியே வருவாள். அதில் வெற்றியும் கண்டாள். ஆனால் நாம் நினைத்தது மட்டுமே வாழ்க்கையில் நடக்காது அல்லவா?​

இன்று மகிழ் கேட்ட கேள்வியில் அனைத்தும் கண்ணீரோடு ஞாபகம் வந்தது. நீலனும் கயலின் கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டே அவன் அக்காவின் வாழ்க்கையை பற்றி கூறி முடிந்தான்.​

கயல், எப்போதும் உமையாள் மிகவும் உறுதியான பெண் என்றே நினைப்பாள். ஆனால் அவளுக்கு பின்னால் இவ்வளவு சோகம் இருக்கும் என்று கயல் எதிர்பார்க்கவில்லை.​

அருணின் நினைவுகளை ஓர் புறம் தள்ளி வைத்து விட்டு அன்றாட வேலைகளை பார்க்க சென்றாள் உமையாள்.​

இங்கு கயலோ நீலனிடம்​

"அண்ணியை இப்படியே விட்டுரலாம் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டாமா?" என கேட்டாள்.​

நீலனோ "அப்படி நான் நினைக்கவில்லை. அக்காவுக்கு ஒரு வாழ்க்கை அமைந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் இனி அக்கா வாழ்வில் வர போகும் ஆள் அக்காவையும் சரி மகிழினியையும் சரி நன்றாக பார்த்துக்கொள்பவனாக இருக்கணும். அவனுக்கு மகிழினி இலவச இணைப்பு என்னும் எண்ணம் வர கூடாது, ஆனால் இதற்கெல்லாம் முதன்மையாக அக்கா மறு திருமணத்திற்கு சம்மதிக்கணும். அவளுக்கு இந்த எண்ணம் இருப்பது போல் எனக்கு தோன்ற வில்லை" என்று கூறினான்.​

அதற்கு கயலோ "அவுங்க கடந்து வந்த வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் போது மறுமணம் செய்வதில் கண்டிப்பாக அண்ணிக்கு விருப்பம் இருக்காது. ஆனால் நாமும் அவர்களை அப்படியே விட கூடாது" என்றாள்.​

"ஹ்ம்ம்ம் சரி பாப்போம் எதிர்காலம் அக்காவுக்கு என்ன வைத்துள்ளது என்று" என கூறி நீலனும் அவ்விடம் விட்டு அகன்றான்.​

இன்னும் மூன்று நாட்களில் உமையாள் குடும்பத்தினர் பார்வதியின் சொல்லுக்கிணங்க, பார்வதி வீட்டிற்கு இரவு உணவு உண்ண செல்ல போகிறார்கள்.​

பார்வதிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீலனிடம் கேட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்பதை குறித்து கொண்டார்.​

இதன் நடுவே ஒருநாள் மாலையில் நீலனிடம் பேசி திரும்பவும் மகிழினியை பார்க்க சென்றிருந்தான் ருத்ரன். அவனுக்கும் மகிழினிக்கும் நடுவே நல்ல பிணைப்பு ஏற்பட்டிருந்தது.​

அவர்களின் கொஞ்சல்களையும், மகிழ் ருத்ரனுடன் காட்டும் கூடுதல் ஒட்டுதலையும் பார்த்து நீலனுக்கே கொஞ்சம் பொறாமை ஏற்பட்டிருந்தது.​

ருத்ரன் அன்று பார்வதியிடம் அவர்கள் வரும்போது தானும் இருக்கிறேன் என ஒத்துக்கொண்டதற்கு காரணமே மகிழினிதான். அவனுக்கும் ஏன் என்று புரியாத ஒரு பாசம் அவள் மேல்.​

காலம் விரைந்தோடி ஞாயிற்றுக்கிழமை மாலையும் வந்து சேர்ந்தது. உமையாள், நீலகண்டன், கயல் மற்றும் மகிழினி என அனைவரும் புறப்பட்டனர் பார்வதி வீட்டிற்கு.​

அவர்களுடன் பார்வதி வீட்டிற்கு வர மறுத்த கயலையும் அவர்களுடன் கண்டிப்பாக வரவேண்டும் என கட்டளையிட்டு உமையாள் அழைத்திருந்தாள். மகிழினியும் கயலை அத்தை என்றே இப்போதெல்லாம் அழைக்க ஆரம்பித்திருந்தாள்.​

இனி நடக்க போவது எல்லாம் நன்மைக்கே அப்படினு நான் நம்புறேன். நீங்களும் நம்புங்கள் தங்கம்ஸ்​

 
Top