எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 06

zeenath

Active member

அத்தியாயம் 6

மருதாணியின் அச்சு கைகளில் நன்றாகவே பதிந்து இருந்தது வினிக்காவிற்கு .

MV என்ற இரு எழுத்தும் கொடிகளின் இலைகளுக்கு நடுவே கோர்த்திருப்பதாக அழகாக டிசைன் செய்திருந்ததையே பார்த்துக் கொண்டிருந்தால் வினிகா.

இதை வரையும்போது நடந்தவைகளை நினைத்துக் கொண்டிருந்தது மனது.

"அக்கா உங்க ஹப்பி பேர் என்ன?.."

என மருதாணி இடும் பெண் கேட்க.

"ஏன் மா?" என்றாள் புரியாதவளாக "இதுல பேர் எழுதறதுக்கு தான்." "ஐயய்யோ! அப்படியெல்லாம் வேண்டாம்"

"ஏன் அக்கா வேண்டாம்? எல்லாருமே போடுறாங்களே. இது தான் ட்ரெண்ட் இப்போ." என்றவள் அதிசயமாக அவளைப் பார்க்க அருகில் இருந்த அகிலா,

" அவங்க பேரு மோகன்." என்றாள் வேகமாக

"சரி, இங்க லைன் இருக்குல்ல இதுல நான் எழுதிடறேன்."

"இல்லமா வேண்டாம்" என்றாள் திரும்பவும் மறுப்பாக.

"சரி அப்ப வெறும் உங்க பேரோட முதல் எழுத்து அவங்க பெயரோட முதல் எழுத்து மட்டும் போடட்டுமா.?"

எனக் கேட்க இதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதை உணர்ந்து மெதுவாகத் தலையாட்டிச் சம்மதம் கூறினாள்.

அப்படி தன் கைகளில் ஏறி இருந்த எழுத்தைப் பார்த்தவளுக்கு வெறுமையான உணர்வு தான். நாளைத் திருமணம் என்ற நிலையிலும் மனதில் அதற்கு உண்டான எந்தச் சந்தோஷமும் இல்லை. வாழ்க்கை தனக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை நினைத்துப் பயமாக இருந்தது...ஆனால் தன் பயம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிந்தால் அதனால் அவர்களுக்கும் சஞ்சலமே என்பதை உணர்ந்தவள்.பெருமூச்சை எடுத்துக் கொண்டு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் கண்டது வீட்டில் இருந்த மலர் அலங்காரங்களைத் தான். ஏனோ அவற்றைப் பார்த்ததும் சிறு உற்சாகம் தொற்றிக் கொண்டது மனதில் முகம் நிறைய சிரிப்போடு வரவேற்பறைக்கு சென்றவளை அதேச் சிரிப்போடு எதிர் கொண்டார்கள் அவ்வீட்டில் ஆண்கள் மூவரும்.

"வினிமா வாடா! வாடா! தாத்தா கிட்ட வா"

என அழைத்த தாத்தாவின் அருகில் அமர்ந்தவள் கைகளை விரித்துக் காட்டினாள் அவரிடம்

"அடடே! அழகா சிவந்து இருக்கே!.." எனக் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறும் தாத்தாவைப் பார்த்த அகிலா, வேகமாகத் தாத்தாவின் அருகில் சென்று

"தாத்தா எனக்கும் பாருங்க... என் கையிலயும் நல்ல சிவந்து இருக்கு." என்றாள் ஆர்ப்பாட்டமாக,

"ஆமாண்டா உன் கையிலயும் அழகா சிவந்து இருக்கு" என்றபடி அவளின் உள்ளங்கைகளை பிடித்து நன்றாக மூச்சை இழுத்து அதன் மனதை சுவாசித்துக் கொண்டார்...

இதைக் கண்ட பாட்டி,

"ம்க்கும்...நாங்க வச்சா தான் உங்க தாத்தனுக்கு ஆவாது... பேத்தி புள்ளைங்க வச்சதும் முகத்துல சந்தோஷத்தைப் பத்தியா?.." என நொடித்துக் கொண்டார்.

"என்ன அயித்த? கல்யாண வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு.? எனக் கேட்டபடி ஊரின் அங்காளி பங்காளிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்க கல்யாண கலை கட்டியது வீடு.

பெண் அழைக்க வந்து விட்டார்கள் மோகனின் தங்கை யாழினி மற்றும் அவனின் ஒன்றுவிட்ட அக்காமார்களும். வந்தவர்களைச் சிறப்பாக வரவேற்று அவர்களுக்கான சிற்றுண்டியையும் கொடுத்து உபசரித்த படி.

"சாப்பிடுங்க மா வந்துடறேன்…." என்றபடி சுசீலா தன் மகளின் அறையை நோக்கிச் சென்றார்.

மகளுக்கு திருமணம். இப்பொழுது தான் பெற்றெடுத்து தன் கையில் ஏந்தியது போல் இருக்கிறது அதற்குள் இருபத்தி ஒரு வருடங்கள் முடிந்திருக்கிறது. செல்ல மகளின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் மகளின் அறைக்கு சென்று எட்டிப் பார்த்தவர். அழகாக வாடாமல்லி நிற பட்டுப்புடவை உடுத்தி தயாராக நின்ற மகளின் அழகில் சிறிது நேரம் லயித்து நின்றவர் பின் நேரம் ஆவதை உணர்ந்து.

"என்ன ம்மா எல்லாம் ரெடியா? வாங்க போவோம் பெண்ணழைக்க வந்துட்டாங்க…" என்றபடி மகளின் பெட்டியை எடுத்துக்கொண்டு அவளோடு வெளிவந்தார்.

அவளிடம் வந்து உச்சி முகர்ந்த பாட்டி.

"வா வந்து சாமிய நல்ல வணங்கிட்டு கெளம்பு."என்றபடி அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவளின் தாத்தா செல்லத்துரை தந்தை மருதுபாண்டி சித்தப்பா முத்துப்பாண்டி அத்தை நிவிதா அவர் கணவர் துரை அன்னை சுசீலா என அனைவரும் குழுமி இருக்க, தாத்தா தன் செல்லப் பேத்தியின் வாழ்வு சிறக்க வேண்டிக்கொண்டு கற்பூரம் காட்டி அவள் நெற்றியில் மெல்லிய கோடாக விபூதியை தீட்டி விட்டார் மனம் நிறைந்த வேண்டுதலுடன்.

அவரைத் தொடர்ந்து மற்ற வீட்டின் பெரியவர்களிடமும் ஆசி பெற்று இறைவனை வணங்கிக் கண்ணீரோடு கிளம்பினாள் தன் புது வாழ்வை நோக்கி.

அவர்கள் வந்திருந்த காரில் பெண்ணை ஏற்றிக் கொள்ள நிவிதா அவள் கணவன் துறை மற்றும் மகன் நிகிலனோடு அகிலாவையும் அழைத்துக் கொண்டு காரைப் பின்பற்றிச் சென்றார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவரையும் அதற்கான வண்டிகளில் ஏற்றி அவர்களும் மண்டபத்தை நோக்கிச் சென்றார்கள்.

பெண்ணவள் பயந்து கொண்டு இருந்தது போலத் திருமணத்தில் எந்தச் சலசலப்பும் ஏற்படாமல் மோகனின் கைகளில் தாலி வாங்கி அவனின் சரிபாதியாக அவன் அருகில் நின்றாள் வினிகா.

ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ எனப் பயத்துடனும் படபடப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த நிவிதாவிற்கு அண்ணன் மகளின் கழுத்தில் தாலி ஏறவும் தான் சிறு நிம்மதியும் ஆசுவாசமும்.

அண்ணன் மகள் என்பதை காட்டிலும் மகளுக்கு நிகராகவும் உற்ற தோழியாகவும் நினைத்திருந்தவளின் வாழ்வில் இன்று ஒரு முக்கிய நிகழ்வு... மனம் நிறைந்திருந்தது நிவிதாவிற்கு.

அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவருக்குச் சிரிப்போடு கண்ணையும் சிமிட்டி தலையசைத்தாள் மனவறையில் இருந்த வினிகா.

அனைத்தும் நலம் என நினைத்ததும் அடுத்தடுத்து சடங்குகளையும் வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள். மதுரை வழக்கப்படி பெண் சிறிது நேரம் மணமகன் வீட்டுக்குச் சென்று பின்பு மணமகள் வீட்டில் தான் தங்குவார்கள் அதன்படியே நடந்தது வினிகாவிற்கும்.

தாலி கட்டும்போது நிமிர்ந்து பார்த்ததோடு சரி மோகன் வேற எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை சொன்ன சடங்குகளைச் செவ்வன செய்தான் மனைவியாக்கிக் கொண்டவளோடு.

அவன் வீட்டிற்கு செல்லும் போதும், எந்தப் பேச்சும் இல்லை அவனிடம் அமைதியே உருவாக அமர்ந்து வந்தான், வீடு வந்ததும் இருவருக்கும் ஒன்றாக ஆரத்தி எடுத்து உள் அழைக்க உள் நுழைந்தவன் வேகமாகத் தன் அறையை நோக்கிச் செல்ல இருந்தவனை தடுத்த ரஞ்சிதம்.

"எங்கடா போற? இங்க உட்காரு." என்றபடி அவன் கைப்பிடித்து வினிகாவின் அருகில் அமர வைத்தவர்.

"என்ன போட்டாங்க உங்க மாமனார் வீட்ல? காமி."

என்றபடி அவன் கழுத்தில் இருந்த செயினை எடுத்துப் பார்த்தவர்

"என்ன ஒரு ரெண்டு மூணு பவுன் தான் இருக்கும் போல? நான் ஒரு பத்து பவுனுக்கு போடுவாங்கன்னு நினைச்சேன்."

என்றார் சலிப்பாக

"ம்மா பத்து பவுன்ல போட்டுக் கழுத்து சுளுக்கு பிடிச்சுகிட்டு திரியணுமா நானு?.."

என்றான் கோபத்துடன்.

"ம்ம்ம்.... உன்னை யாரு கழுத்திலேயே போட்டு இருக்க சொன்னா? அப்பப்போ கல்யாண காட்சிக்குப் போட்டுட்டு அவுத்து வைக்க வேண்டியதுதானே. இல்லனா என்கிட்ட குடுத்தா நான் போட்டுட்டு இருக்க போறேன். இது ஒரு பெரிய விஷயமா"

என்றவரை கோபமாக முறைத்தவனுக்கு வேற என்ன செய்வது என்று தெரியாத நிலை.

இவர்களின் சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டே உள்ளே வந்த பார்கவி,

"என்ன அண்ணி?என்ன சொல்லிட்டு இருக்கீங்க? என்றார் சற்று குரல் உயர்த்தி.

"என்ன தப்பா சொல்லிட்டேன்?இப்படியா மாப்பிள்ளைக்கு இரண்டு பவுன்ல செயின் போடுவாங்க.?" "அண்ணி உங்களுக்குத் தெரியுமா அது மூணு பவுனு."

"அப்படி பார்த்தாலும் ஒரு பவுன் தானே அதிகமா இருக்கு, நான் ஒரு பத்து பவுன்ல எதிர்பார்த்தேன்." என்றார் முகத்தை வெட்டியவாறு

"ஏன் அண்ணி பத்து பவுன் எடுத்துப் பீரோ உள்ள பூட்டி வைக்கிறதா? இல்ல மூணு பவுனு செயின எப்போதுமே கழுத்துல போட்டு இருக்கிறதா?" என்று கேட்டபடி தன் கணவனைத் திரும்பிப் பார்க்க. அதற்குள் ஆண்கள் வருவதை அறிந்த ரஞ்சிதம் இதற்கு மேல் பேசினால் பிரச்சனையாகும் என்பதை புரிந்தவராக.

"யாழினி வா, வந்து உங்க அண்ணிய பூஜை அறைக்குக் கூட்டிட்டு போ, போ மா மோகன் நீயும் சேர்ந்து போடா" என்ற படியே அவரும் அவர்களின் பின்னே பூஜை அறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவர்களின் பின்னே பலியாடு போலச் செல்லும். தன் வீட்டு பெண்ணைப் பார்த்த பார்கவிக்கு மனம் தாங்கவில்லை. அண்ணியின் ஆசை தெரிந்தவர்தான் இருந்தாலும் வந்த அன்றே இப்படி பேசுவது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. நல்ல வேலை இவரின் வீடு என்பதால் மற்றவர்கள் யாரும் வராமல் இவர் மட்டுமே பொண்ணு மாப்பிள்ளைக்குத் துணையாக வந்து அவர்களை மறு வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது...

பூஜை அறையில் மாமியார் சொன்னது போன்று செய்து கொண்டிருந்தவளுக்கு மனதில் சஞ்சலம் இருந்தாலும் தாங்கள் குறைவாக நகை போட்டதாக சாடிய மாமியாரிடம் சிறிதேனும் கோபத்தை காட்டிய கணவனை லேசாகப் பிடிக்கத்தான் செய்தது பெண்ணுக்கு.

அந்த இனிதான மனநிலையோடு தன் வீடு வந்தவளை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் நின்று அன்போடு வரவேற்றார்கள் ஆலம் சுற்றி. இவர்களுக்கு ஆரத்தி சுற்றிய அகிலா.

"மாமா, கமான், எங்கே உங்க வெயிட்ட காமிங்க பாக்கலாம், நீங்கத் தட்டில் எவ்வளவு போடுறீங்களோ அதைப் பொறுத்துதான் உங்களுடைய மதிப்பு தெரிஞ்சிக்கோங்க." என்றாள் புருவம் உயர்த்தி அவனிடம் குறும்பாக, அவள் குறும்பில் சிரிப்பு வரப் பெற்றவனாகத் தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி தட்டில் போடுமாறு பக்கத்தில் நின்றிருந்த தன் மனைவியிடம் கொடுத்துக் கண்காட்டினான். அவனின் இந்த ஒரு செயலே பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்களுக்கும் பாவை அவளுக்கும் மனதிற்கு இனிமை சேர்த்தது.

அதே இனிமையோடு வீட்டில் நுழைந்தவர்கள் இங்கும் பூஜை அறை சென்று செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து சிறிது நேரம் ஆசுவாசம் செய்து கொண்டனர்.

சோபாவில் அமர்ந்திருந்த மணமக்களைப் பார்த்த பாட்டி

"மா வினி மாப்பிள்ளைய ரூமுக்கு கூட்டிட்டு போத்தா."என்றார்

"சரிங்க அப்பத்தா." என்ற படி

அவனைப் பார்க்க அவளோடு எழுந்து சென்றான். அவனுக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட்டது, உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் சேர்த்து.

அவளோடு அவளின் அறைக்கு வந்தவன் அவளிடம் வேறு எதையும் கேட்காமல் எதிரும் பார்க்காமல் அமைதியாகச் சென்று கட்டிலில் படுத்துக் கண்கள்மேல் கைகளை வைத்துப் படுத்துக்கொண்டான். சிறிது நேரம் அவனைப் பார்த்து இருந்தவன் வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியாக ஜன்னல் திரைகளை நன்றாக மூடி ஏசியையும் அதிகப்படுத்திச் சத்தம் வராமல் கதவை மூடி வெளியேறினாள் இவளும்... வெளிவந்தவளை கண்ட நிவி அவளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்று

"என்னடி மாப்பிள்ளை பக்கத்துல இருக்காம வந்துட்ட?"

என்றார்

"அவர் தூங்குகிறார் த்தை."என்றபடி கட்டிலில் அமர்ந்தவளுக்கு அவ்வளவு அசதி

"எல்லாம் ஓகே தானே!.."

"ஹான்! ஓகே! ஓகே!

என்றபடி கண்மூடி கொண்டாள்.

"என்ன டி? அதுக்குள்ள படுத்துட்ட இந்த அலங்காரத்தை எல்லாம் கழட்ட வேண்டாமா?.."

"போ அத்தை! ஹோம குண்டம் முன்னாடி உட்கார்ந்து கண்ணெல்லாம் எரியுது எனக்கு, கொஞ்ச நேரம் கண்ணு முடி படுத்து இருக்கேன் அப்புறமா இதெல்லாம் கழட்டலாம்."

என்றபடி கண்களை மூடிப் படுத்துக் கொண்டவளுக்கு தலையில் இருந்த அலங்காரங்கள் குத்தி அவஸ்தையை ஏற்படுத்தியது, மெதுவாகக் கண்ணைத் திறந்து அத்தையைப் பார்த்தவள், அவள் இவளின் நிலை புரிந்து, சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை பார்த்து,

"என்ன சிரிப்பு? கஷ்டப்படுறேன் தெரியுது இல்ல, வா, வந்து கழட்டி விடு எல்லாத்தையும்." என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

"வாய் டி உனக்கு, இந்த வாய் மட்டும் இல்லன்னா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும், அதான் சொன்ன பேச்சு கேட்கணுங்கிறது, இப்ப புரியுதா?.." என்றபடி அவளின் தலை அலங்காரங்களை மெதுவாகக் கழட்ட ஆரம்பித்தாள் சிரிப்போடு,

"ரொம்ப வாயாடறனா அத்தை நான்? ஆனா பேச வேண்டிய நேரத்துல பேசாம இருக்கேனோ! பேச வருமா அத்தை எனக்கு?.." என்று தனக்குள்ளாகவே உழன்று கொண்டு அவளின் தெளிவில்லாத மனதை தெளிவோடு இருக்கும் அத்தையிடம் குழம்பி வெளிப்படுத்தினாள் தன்னையும் அறியாமல்.

"ஹேய்! ஹேய்! என்னடி என்ன ஆச்சு? என்னென்னமோ சொல்லிட்டு இருக்க?.." என்ற படி அவளை வயிற்றோடு இருக அனைத்து கொண்டு அவள் முகம் நிமிர்த்திக் கேட்க மலங்க விழித்தவள் அத்தையின் தெளிவில்லாத முகத்தைக் கண்டவள் தெளிவடைந்து "ஒன்றும் இல்ல, ஏதோ குழப்பம் போகப் போகச் சரியாயிடும் நீ ஒன்னும் யோசிக்காத."

என்றவள் இடை வரை இருந்த முடியை நன்றாக உதறி தூக்கி ஒரு கொண்டையிட்டு மெதுவாகச் சென்று படுத்துக் கொண்டாள் கட்டிலில்.

"இன்னைக்கு நைட்டு நம்ம வீட்ல தான் தெரியுமில்ல."

" தெரியும், தெரியும் அதான் அப்பத் தூங்க முடியுமோ என்னவோ, இப்பவே கொஞ்சம் தூங்கி எழுந்துகிறேன்." என்றாள் சிரிப்பை அடக்கி ஒற்றக்கண்ணால் அத்தையை பார்த்தபடி, வேகமாக அவளிடம் திரும்பி வந்த நிவிதா

"சேட்டை, சேட்டை." என்ற படி அவளின் தொடையில் இரண்டு அடி கொடுத்துப் புன்னகையோடு வெளியேறினாள் அறையை விட்டு.

அத்தையின் மனநிலையை மாற்றிய நிம்மதியோடு சிறிது கண் உறங்க முயற்சி செய்தாள் வினிகா.

ஏதேதோ குழப்பமான எண்ணங்களோடு சிறிது நேரம் உறங்கி எழுந்தவளுக்கு கணவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ என்ற நினைவுதான்.

அப்படி எந்தச் சங்கடமும் இல்லை போல அவனுக்கு. இவள் அவசரமாக வெளிவரும்போது அவன் சோபாவில் அமர்ந்து தாத்தா மற்றும் இரு அப்பாக்களோடு பேசிக்கொண்டிருந்தான் கையில் தேநீருடன்.

கணவன் அனைவரோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் மெதுவாக விழிகளைச் சுற்றி நோட்டமிட்டாள், தூங்கி எழுந்தது கசகசப்பாக இருக்க குளித்துவிட்டு வரும் நோக்கத்தில் விரைவாகச் தன் அரை நோக்கிச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் யாரும் தன்னை பார்ப்பதற்குள். தலை அலங்காரம் செய்ததில் முடி சிக்குடன் இருக்க அப்படியே இருக்க விரும்பாமல் நன்றாகத் தலையை அலசிக் குளித்துவிட்டு வந்தவள், வான நிறத்தில் இருந்த மைசூர் சில்க் புடவை அணிந்து கொண்டு இவள் வெளிவரவும் மோகன் உள் வரவும் சரியாக இருந்தது.

இடித்து விடும் தூரத்தில் இருவரும் சமாளித்து நிற்க. என்ன பேசுவது என்று தெரியாத நிலை தான் இருவருக்கும் ஒரு மென் புன்னகையை கொடுத்துவிட்டு இவள் வெளியேற அதே புன்னகையை அவனும் கொடுத்துவிட்டு உள் சென்றான்.

கல்யாணத்திற்கு என வந்த சொந்த பந்தங்கள் இன்னும் வீட்டில் தான் அங்கங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் தங்கள் வயதை ஒற்றியவர்களோடு.

அன்னையை தேடி சமையலறைக்கு வந்த வினிகா,அவர் இரவு சமையலுக்காக, சமையல்காரரோடு மும்முரமாகப் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் மெதுவாக அவர் அருகில் சென்று,

"அம்மா ஒரு காபி"

திடீரெனக் கேட்டட அவளின் குரலில் திரும்பியவர்,

"நீ இங்க என்ன பண்ற? அத்தை கூட இருப்பேன்னு நினைச்சேன்." "கொஞ்ச நேரம் தூங்கினேன்மா ரொம்ப கசகசபா இருக்குன்னு போய்க் குளிச்சிட்டு வந்தேன்..."

என்றவளை பார்த்தவர்,

"சரி மாப்ள எங்க? என்றபடியே அவள் கேட்ட காபியை தயாரிக்கச் சென்றார்.

"அவர் ரூம்ல இருக்காரு."

"அத்தை தம்பியைப் பார்க்கப் போய்ட்டாங்க நினைக்கிறேன், நானே அவங்கள இன்னும் பாக்கல." என்றபடி அன்னை கொடுக்கும் காபிக்காக அருகில் நின்றிருந்தாள்.

அங்கு வந்த பார்கவி.

"இங்க என்ன செய்ற வினி? போய் மோகன் கிட்ட பேசிட்டு இருக்கலாம் இல்ல?.."

'இதோ போறேன் சித்தி."

என்றபடி அன்னை கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் தன் அறையை நோக்கி.

இவள் அறைக்குள் வந்த நேரம் தொலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டு மொட்டை மாடியை நோக்கி நகர்ந்தான் மோகன், அவனைப் பார்த்துக் கொண்டே காபியோடு தன் அறைக்குள் ஐக்கியமாகினாள் வினி. இப்படி ஒருவர் அறைக்குள் இருந்தால் மற்றொருவர் வெளியில் இருந்த படி ஒருவருக்கொருவர் ஹைடன் சீக் விளையாடிக் கொண்டிருந்தார்கள் தாங்களே அறியாமல்.

இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுபிடிப்பார்களா காத்திருப்போம் நாமும்.

மௌனம் தொடரும் ...

 
Top