எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 21

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 21


முதல்வரின் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்தக் கருப்பு நிற பென்ஸ் கார். அப்போது தான் கவினும், கார்த்திகாவும் அனைவரிடமும் விடைபெற்று வெளியே வர, அவர்களோடு அவர்களை வழியனுப்பக் கூடவே வந்தார் கல்பனா.


விஹானின் காரைப் பார்த்ததும் கவினுக்கும் கொஞ்சம் பாவமாகத் தான் இருந்தது. தனது மகளை மிகவும் பிடித்திருக்கிறது என தன்னிடமே கூறி, பெண் கேட்டவனுக்கு வெறும் கையைக் காட்டப் போகிறோம் என நினைக்கையில் வருத்தமாகத் தான் இருந்தது.


கார்த்திகாவுக்கு பெரிதாய் வருத்தம் எல்லாம் இல்லை. அவருக்கு இந்த வீட்டில் அதுவும் கவிதாவின் மகன்களுக்குத் தனது பெண் பிள்ளைகளைக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை கூட இதுவரையில் இருந்தது இல்லை காரணம் கவிதாவின் குணம் தான்.


கல்பனாவுக்கோ இங்கு நடந்த விஷயம் விஹானுக்கு தெரிந்தால் என்ன செய்வான்? மனதார விரும்பியவள் கிடைக்காமல் போனால் அவன் மனம் என்ன பாடுபடும் எனத் தான் வளர்த்த மகனை நினைத்துக் கண்கள் முட்டக் கண்ணீரோடு நின்ற அந்தக் காரின் கதவுகள் திறக்கப்பட்டது.


காரிலிருந்து விஹான், பிரணவிகா இருவரும் காலையில் அணிந்திருந்த சாதாரண உடையில், கழுத்தில் மாலை போட்டுத் தம்பதியினராக இறங்கினர். அவள் கழுத்தில் புது மஞ்சல் தாலி அவள் நெஞ்சோடு உறவாடிக் கொண்டிருந்தது.


இருவரையும் ஒன்றாக இந்தக் கோலத்தில் பார்த்த மூவருக்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்து அப்படியே நின்றனர். சில நொடி தான் அதிர்ச்சி அதிலிருந்து வெளிவந்த கார்த்திகா வேகமாக வந்து பிரணவிகா கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டார்.


விஹானும் அவர் அப்படி செய்வாரென எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் முதல் அடி குறி தப்பாமல் பிரணவிகாவின் கன்னத்தில் அதிரடியாக இறங்கியது. அடுத்த அடி அடிக்கும் முன் அவளை இழுத்து தன் பின்னால் மறைத்து நெஞ்சை நிமிர்த்தி கார்த்திகாவின் முன் நின்றான்.


கவின் அசையவே இல்லை. அவர் உலகம் அப்படியே நின்றுவிட்டது போல் நின்றார். கல்பனா தான் கத்தி உள்ளே இருப்பவர்களை வெளியே அழைத்தவர், கார்த்திகா பின்னால் வருவதற்கு முன் முதல் அடியை அடித்திருந்தார் கார்த்திகா.


அடுத்த அடி அடிக்கக் கையோங்கியவர் முன் நின்ற விஹானோ “அத்தை! இதுவரை அவ பிரணவிகா கவின் அவள அடிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது.. ஆனா எப்போ அவ கழுத்துல என் கையால தாலி ஏறுச்சோ அப்போதுல இருந்து அவ பிரணவிகா விஹான் ராகவேந்திரா. ராகவேந்திரா குடும்பத்து மருமகளை அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல” எனக் காட்டமாகக் கூறினான் விஹான்.


அதற்குள் அத்தனை பேரும் கல்பனாவின் சத்தத்தில் வெளியே வர அவர்களுக்கும் அதிர்ச்சி தான் ஆனால் கவிதாவுக்கு தான் ஆத்திரம் தலைக்கு ஏறியது.


“என்ன திமிருடி உனக்கு. என்புள்ளைய மயக்கி யாருக்கும் தெரியாம இப்படியொரு காரியத்தைப் பண்ணிட்டு வந்து நிற்கிற?” என மகனுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரியும், அவள் தான் அவனை வளைத்துப் பிடித்துப் பிடிவாதமாகக் கல்யாணம் முடித்தது போலவும் பிரணவிகாவை அடிக்கப் பாய்ந்தாள் கவிதா.


அதில் கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் பெண்ணவள். அவளை இழுத்து தன் கையணைவுக்கு கொண்டு வர, நடுக்கம் மேலும் அதிகமாகத் தான் மாறியது. அத்தனை பேரின் முன்னால் அவள் நின்றிருக்கும் நிலையால் அவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.


“பயப்படாதேன்னு சொன்னேன்ல.. அமைதியா நில்லு” எனக் கூற, அவன் வார்த்தைக்கு மகுடிக்கு அடங்கும் பாம்புபோல அடங்கி நின்றாள் பேதைப் பெண். ஆனால் அவள் மனமோ ‘எங்கம்மா அடிய கூட வாங்கிப்பேன் ஆனா உன் பக்கத்துல இப்படி நிக்கத்தாண்டா சிடுமூஞ்சி பதட்டமா இருக்கு’ என நினைத்தாள்.


சந்தோஷூக்கும், விமலேஷ்ஷூக்கும் கூட அவன் செய்து வந்த காரியம் உவப்பானதாக இல்லை. அன்று ஷிம்ரித்தும் யாரும் இல்லாமல் பதிவுத்திருமணம் செய்தான் தான் அனால் அவன் வீட்டினரிடம் அவன் செய்யப் போகும் காரியத்தைக் கூறிவிட்டு கல்பனாவையும், கவினையையும் மட்டும் அழைத்துச் சென்று அனைவரின் சம்மதத்தின் பேரில் தான் நிஹாரிகாவை திருமணம் செய்து கொண்டான்.


ஆனால் இவன் யாரிடமும் எதுவும் கலந்து கொள்ளாமல் தன்னிஷ்டத்திற்கு இப்படி செய்தது சற்று உறுத்தலாக இருந்தாலும், தான் விரும்பிய பெண்ணை அடைய வீட்டினரே தடையாக இருந்த காரணத்தினால் தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கானென எண்ணி அவர்கள் தேற்றிக் கொண்டாலும் வருத்தமாகத் தான் இருந்தது அவர்களுக்கும்.


கவிதா “அவள விட்டுத் தள்ளி நில்லுடா முதல்ல.. என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்க. உனக்கு நான் ஜட்ஜ் பொண்ண பார்த்துப் பேசிட்டு இருக்கேன் நீ என்னடா இந்த கேடுகெட்டவ மகள கட்டிட்டு வந்து நிற்கிற”


கார்த்திகா “வார்த்தைய அளந்து பேசுங்க.. யாரு கேடு கெட்டவங்க?”


“நீ தான்.. நீ என்ன மானஸ்தியா? உன்னைப் பத்தி விளாவரியா நான் சொல்லனுமா?”


“என் மானத்துக்கு என்ன குறைன்னு கேட்குறேன்?” என கார்த்திகா எகிறிக்கொண்டு சண்டைக்கு நிற்க கல்பனா தான் “கார்த்திகா விடு இந்தப் பேச்சை வளர்க்காத” என்றார்.


“என்ன அண்ணி நீங்களும் அவங்க சொல்றத சரின்னு பேசுற மாதிரி தெரியுது அப்போ நீங்களும் என்னைப் பத்தி அப்படி தான் நினைச்சிட்டு இருக்கீங்களா?” என இயலாமையாகக் கண்ணீர் வடிய கேட்க,


“கார்த்திகா.. என்ன நீ இப்படி பேசுற? உன்னை அப்படி நான் நினைப்பேனா? நீ யாருனு எங்க அண்ணனுக்குத் தெரியும். அவன தவிற உன்னையும், உன் கேரக்டரையும் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையே இல்ல.. அதனால நீ அவளுக்கு பதில் சொல்லி உன்னை நிரூபிக்கனும்னு அவசியமும் இல்ல. இப்போ பழச பேசித் தேவையில்லாத காயத்தைக் கீறி புண்ணாக்கிகாத”


“எல்லாத்துக்கும் காரணம் இவ தான். எதிர்த்து எதிர்த்துப் பேசி, அடங்காம திரியும் போதே கால ஒடச்சி எவனுக்காவது கட்டி வச்சிருந்தா இப்படி கண்டவங்க கிட்டயும் பேச்சு வாங்க வேண்டி இருக்குமா?” என மீண்டும் அடிக்கப் போக, அவளை லாவகமாகத் திசைமாற்றி அடியிலிருந்து காத்தான்.


‘இப்போ சந்தோஷமா ராசா தேவையில்லாம குடும்பத்துக்குள்ள சண்டைய இழுத்து விட்டுட்டில.. எல்லாம் என் தப்பு தான்.. படிச்சோமா, ஜாலியா சைட் அடிச்சோமானு இருந்திருக்கனும்.. தேவையில்லாத வேலை எல்லாம் பார்த்ததுக்கு அடி வாங்க வச்சிட்டு இப்போ காப்பாத்துறானாம்.. சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி’ என இந்தப்பக்கம் பிரணவிகா நினைக்க,


கேட்டுக்குள் இருந்தாலும் வீட்டு வாசலில் இப்படி நின்று சண்டையிட்டு குடும்ப மானம் வெளியே செல்லக் கூடாது என அந்தப்பக்கம் நினைத்த சந்தோஷ்..


“இப்படி வாசல்ல நின்னு பொம்பளைங்க எல்லாம் சண்டை கட்டினா என்ன அர்த்தம்? நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? வாசல்ல நின்னு மீடியாவுக்கு கண்டெண்ட் கொடுக்கப் போறிங்களா எல்லாரும் சேர்ந்து? எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சி பார்த்துக்கலாம். முதல்ல வீட்டுக்குள்ள வாங்க எல்லாரும்” எனக்கூற,


முதல் ஆளாக வீட்டுக்குள் ஓடினார் கல்பனா.. அவரைத் தவிற யாரும் அசையவில்லை.. கார்த்திகாவும், கவிதாவும் ஒருவரை ஒருவர் முறைத்த படி நிற்க, விமலேஷ்


“ஏய் கவிதா இப்போ உள்ள போறியா என்ன?” எனக்கத்த,


“விஹான் வாடா.. இவள இப்படியே விட்டுட்டு வா..” என விஹானின் கையைப் பற்றி இழுத்தவரோ பிரணவிகாவிடம் “நீ உள்ள வராதடி” எனக் கத்த, கார்த்திகா பின்னால் திரும்பி கவினைப் பார்த்தார். கவினின் கண்கள் யாரையும் பார்க்கவில்லை அவர் பார்வை மொத்தமும் பிரணவிகா ஒருத்தியின் மேல் தான்.


காலையில் ஆளோட வரேனு சொன்னவ, கல்யாணம் கட்டி புருஷனவே கூட்டிட்டு வருவானு அவர் கனவுல கூட நினைக்கல.. அவர் நிலைக்குத்தி பார்த்தது பார்த்தபடி நிற்க, கார்த்திகாவுக்கு எல்லாம் பின்னாடி தள்ளப்பட்டு கவின் மட்டுமே முக்கியம் என அவரை நோக்கி நடந்தவள்,


“நமக்கு அவ வேணாங்க.. போயிடலாம்.. அவ எப்படியோ போகட்டும்.. வாங்க” என கார்த்திகா அழைக்க,


‘சாரிப்பா நான் இப்படி எல்லாம் ஆகும்னு நினைக்கவே இல்லப்பா.. எல்லாம் என் தப்பு தான்ப்பா.. என்னோட முட்டாள் தனத்தால தான் நான் இன்னைக்கு இப்படி நிலையில நிக்கிறேன்.. உங்களுக்கும் அவமானத்தைத் தேடி தந்துட்டேன்.. ஆனாலும் இந்த வாழ்க்கை நான் விரும்பி அமைச்சிக்கிட்டது இல்லப்பா.. என்னை மன்னிச்சிடுங்கப்பா’ என மனதில் ஆயிரம் மன்னிப்பு கேட்டாள் கவினிடம்.


சந்தோஷ் “என்னம்மா இப்படி பேசுற? இது என்ன அப்படி விட்டுட்டு போற உறவா? முதல்ல உள்ள போங்க இரண்டு பேரும்” எனக்கூற, விமலேஷ் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அதற்குள் கல்பனா ஆரத்தி தட்டுடன் வெளியே வர விஹானின் இதழ்கள் பெரிதாய் விரிந்தது தன் பெரிய அன்னையின் செய்கையில்.


ஆரத்தி தட்டுடன் நின்ற கல்பனாவைப் பார்த்த கவிதாவுக்கோ ஆத்திரம் மொத்தமும் இப்போது கல்பனா மீது திரும்ப, “உனக்கு இப்போ சந்தோஷமா? இது நடக்கனும்னு தான நீ அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி என் புள்ளைகளையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்ட? இப்போ இவளுக்கு ஆரத்தி தான் ஒரு கேடு.. நீ பண்றத பார்த்தா நீ தான் ஐடியா கொடுத்து ஓட்டி விட்டியா இதுங்கள” என கல்பனாவிடம் பாய,


அவருக்கு அவள் பேசியதெல்லாம் காதிலே விழவில்லை. “விஹான் பிரணிய கூட்டிட்டு உள்ள வாப்பா” என கவிதாவை தாண்டி விஹானிடம் கூற,


கவிதா “அப்போ கன்ஃபார்ம் ஆஹ் நீதான் பிளான் போட்டு இத பண்ணிருக்க” எனக்கத்த,


சந்தோஷ் “கவிதா.. வெளிய நின்னு பிரச்சனை பண்ணாம உள்ள போ.. உள்ள வச்சி பேசிக்கலாம்” எனக்கூற, அவர் ஒருவருக்கு மட்டுமே அடங்குபவள் கல்பனாவை தீயாய் முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.


சந்தோஷ் “மருமகள கூட்டிட்டு உள்ள வாடா” எனக்கூற, சந்தோஷமாக அவள் கையைப் பற்றி அழைத்து வர, கல்பனா புன்னகை முகமாக ஆரத்தி எடுத்து இருவரையும் நேராக முதலில் பூஜை அறைக்கு அழைத்துச் செல்ல,


கவிதா “கல்பனா!” என வீடே அதிர கத்தினார்.


கல்பனா “முதல்ல விளக்கேத்திட்டு வரட்டும் அப்புறம் நீ ஆடு”


“அவ விளக்கேத்த கூடாது” எனக்கத்த


விமலேஷ் “நீங்க முதல்ல பிள்ளைகள கூட்டிட்டு போய் முடிக்க வேண்டியத முடிச்சுட்டு வாங்கண்ணி” என்றவர், கவிதாவை முறைத்தார்.


கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வையுன்னு பழமொழி சொல்லுவாங்க அதுபோல இங்க இரண்டு பேரையும் பெத்தவங்க இவர்கள் செய்த காரியத்தால் கொந்தளித்து நிற்க, கல்பனா புதுமணத் தம்பதியினருக்கு விளக்கேத்தி, பாலும் பழமும் கொடுத்துச் சீராட்டி, நெற்றிமுறித்து, அவள் கன்னத்தில் முத்தமிட, கவிதா வயிற்றில் சிலிண்டர் வெடித்தது.


கவிதா “மாமா! பார்த்தீங்களா உங்க பொண்டாட்டி செய்யுற வேலையை.. அப்போ அவ தான அந்த ஓடுகாளிய என் புள்ள தலையில கட்டி வட்சிருக்கா?” என சந்தோஷிடம் கேட்க, கவினோ கண்களை இறுக மூடி நின்றார். சாவகாசமாக வந்த விஹானோ,


“பிரணிய நான் கல்யாணம் பண்ண போறேன்னே பெரியம்மாவுக்கு தெரியாது.. ஏன் பிரணிக்கே தெரியாது.. நான் சுமூகமா எல்லார் சம்மதத்தோட கல்யாணம் பண்ணலாம்னு கேட்டேன்.. மாமா உங்க சம்மதம் வேணும்னு சொல்றார்.. நீங்க பிரணிய கட்டவே கூடாதுனு சொல்றீங்க.. அப்போ எங்க லவ் என்னாகுறது? அதான் இப்படி அதிரடியா கட்டிக்கிட்டோம்”


என ஆசுவாசமாக, நிதானமாகப் பதில் கூற பிரணவிகாவே அவனை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தாள். பிறகு பேசும்போது சர்வ சாதாரணமாகப் பிரணவிகாவும், அவனும் பல வருடம் காதலில் மிதந்தது போலல்லவா பேசுகிறான். அவன் பேசியதை கேட்ட அனைவருக்கும் அப்படி தான் கட்டாயம் தோன்றியிருக்கும்.


கவிதா “லவ்வா இவ உன்னைக் காதலிக்கவே இல்லனு தானடா கொஞ்ச நாளைக்கு முன்ன புலம்பிட்டு இருந்த? இப்போ என்னடா லவ்வு, கிவ்வுனு உலர்ற?”


“காதலிக்கலன்னு சொல்லியா புலம்புனுனேன்.. நல்லா யோசிம்மா அவ என்ன வேணாம்னு சொல்லிட்டானு புலம்புனேன்..


நீங்கக் கல்யாணத்துக்கு லேட் பண்ணீங்க அதான் அவ என்னை பிரேக் பண்றேன்னு சொல்லிட்டா.. அதான் புலம்புனேன்.. காதல்னா ஊடல் இருக்க தான செய்யும்?” எனப் பொய்க்கு மேல் பொய்யா அடுக்க பிரணவிகாவின் விழிகள் தெரித்து வெளிவந்துவிடும் போல.


‘அவ்வா! என்னா புழுகு புழுகுறான் புழுகுமூட்டை புழுகுமூட்டை.. இவன கட்டிக்க துடிச்ச மாதிரி என்னா சீன்.. அய்யோ கார்த்திகா வேற முறைக்குதே’ என பிரணவிகா மனதில் நினைக்க, அடுத்த ஜோடி வீட்டுக்குள் நுழைந்தது.


சாத்விகாவும், விராஜ்ஜூம் ஒன்றாக வீட்டிற்குள் வர, அனைவரின் கண்ணும் குறுகுறுன்னு இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் தம்பதியினராக நின்ற விஹானையும், பிரணவிகாவையும் பார்த்து அதிர்ந்து நின்றனர்.


இருவருக்குமே தெரியும் பிரணவிகா விஹான் பேரைக் கேட்டாளே பாததூரம் ஓடுவாளென்று. அவள் எப்படி விஹானை எனத்தான் தோன்றியது இருவருக்கும். மேலும் விராஜ்ஜூக்கு பிரணவிகா சூர்யான்ஷ்ஷோடு பழகுவது அரசல் புரசலாகத் தெரியும் சாத்விகா மூலம். ஆனால் சாத்விகாவுக்கோ அவள் சூர்யான்ஷ்ஷின் காதலை ஏற்றுக் கொண்டதும் இன்று மதியம் கூட அவனைக் காண சென்றவரையும் தெரியும் அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியம் என அதிர்ந்து நின்றாள்.


இனி குடும்பத்திற்குள் வரப்போகும் மாற்றம் என்ன? பொருத்திருந்து பார்க்கலாம்.
 
Top