(இந்தக்கதையின் கதைக்கரு, காட்சிகள், கதை மாந்தர்கள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இந்தக்கதை முழுவதும் என் சொந்த கற்பனையால் மட்டுமே எழுதப்பட்டது. மேலும் இந்தக்கதை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல)
அசுரப்புனிதனின் காதலடிமை
அத்தியாயம் – 1
“என்ன ஆதி எதுவும் பேசாம அமைதியா இருக்க? உனக்காக தான் இவ்வளவு பெரிய பார்ட்டியை, நான் ஏற்பாடு பண்ணி இருக்கேன். வந்துருக்குற எல்லாருமே, பெரிய பெரிய தொழில் துறை ஜாம்பவான்களின் பொண்ணுங்க. இதுல உனக்கு யாரை பிடிக்குதுன்னு சொல்லு. இப்பவே பேசி கல்யாணத்தை முடிச்சிடுறேன்”
என்று தன் அருகே ராஜ கம்பீரத்துடனும், திராவிடனுக்கே உரிய நிறத்துடனும், கண்களில் கனல் தெறிக்கும் பார்வையுடனும், உடற்பயிற்சி செய்து இரும்பென்று உயர்ந்த நெஞ்சத்துடனும், இறுகிப் போய் நின்றிருந்த ஆதியிடம் கேட்டார், அவனின் தந்தை துரை.
துரையின் வீட்டில் தான் அந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்றே சொல்லலாம். அதை அனைவருமே சிவப்பு மாளிகை என்றே அழைப்பர். அங்கே மூலை முடுக்குகளில் எல்லாம் பணத்தின் செழுமை கொட்டி தான் கிடந்தது. விருந்தின் நோக்கமே, துரையின் ஒரே ஆண் வாரிசான ஆதிக்கு பெண் பார்க்கும் படலம் தான்.
நகரில் உள்ள அனைத்து செல்வந்தர்களும், தங்களது மகளை, அறிவும், பணமும், அழகும் கொட்டிக் கிடக்கும் ஆதிக்கு மணமுடிக்க ஆர்வமாக இருந்தனர்.
துரைக்கு, ஏற்றுமதி, வைர வியாபாரம், நட்சத்திர விடுதி என ஏகப்பட்ட தொழில்கள் உள்ளது. ஆனால் அதில் மிகவும் முக்கியமானது ஆயுதக் கடத்தல். அதில் தான் பல ஆயிரம் கோடிகளில் பணம் வந்து குவிகிறது. துரை சாதாரண ஆள் கிடையாது மாபியா கூட்டத்தின் தலைவர்.
அங்கே வந்திருக்கும் மிகப்பெரிய தொழில் அதிபர்கள் அனைவருமே அவருக்கு மிகுந்த விசுவாசி.
ஆப்ரிக்காவுக்கு கடத்தல் செய்யப்பட்ட ஆயுதங்களை இன்டெர்போல் அதிகாரிகள் கைப்பற்ற, அதனை ஒற்றை ஆளாக மீட்டுக்கொண்டு வந்தான் ஆதி. அவன் தலைமையில் உள்ள மற்ற தொழில்களும் அசுர வளர்ச்சி பெற பூரித்து தான் போனார் துரை.
அவனது வயதோ முப்பதைத் தொட, தனக்குப் பின் இந்த ராஜ்யத்தை ஆளப்போகும் ஆதிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் துரை.
பாறைபோல் இறுகிய முகத்துடன் தன் தந்தையைப் பார்த்த ஆதி, தன் கையில் இருந்த ஒயின் க்ளாசை அழுத்தமாக பற்றியபடி, “எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல” என்றான் கோபத்தை அடக்கியபடி.
“பிடிக்கலைனா என்ன அர்த்தம்? இன்னும் கொஞ்ச நேரத்துல, இங்க வந்திரிக்குறதுல ஒரு பெண்ணை நீ தேர்ந்து எடுத்தே ஆகணும். உனக்கு வேற வழியே இல்ல” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, அங்கே வந்த ஒருவரிடம், “ஹேய் வர்மா, எப்படி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே, அவரிடம் பேச ஆரம்பித்தார்.
அங்கே நிற்கப்பிடிக்காமல் வேகமாக தன் அறைக்குள் சென்றவன், அங்கே இருந்த, விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தான்.
ஆளுயர கண்ணாடி முன் சென்று நின்றவன், கோபத்துடன் பூஜாடியை எடுத்து கண்ணாடி மீது தூக்கி வீசினான்.
உடைந்த கண்ணாடியில், இப்போது அவனது முகம் அலங்கோலமாக காட்சி அளித்தது. அதன் மேலே அப்படியே தன் கையை வைத்தி அழுத்த, அதில் இருந்து செந்நீறக் குருதி வடிய ஆரம்பித்தது.
****
“ஹேய் இயலிசைஅங்க இங்க பார்க்காம ஒழுங்கா வேலையைப் பாரு” என்று மருண்ட படி நின்ற இயலிசையை அரட்டிக்கொண்டிருந்தாள் ஐம்பது வயதிருக்கும் பெண்ணொருத்தி.
“இதோ.. பண்ணிடுறேன் மேடம்” என்று திக்கித்திணறியபடி சொல்லிவிட்டு வேகமாக சிலையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் இயலிசை.
மகர யாழைப் போலவே அழகும் வடிவமும் கொண்டவள் தான் இயலிசை. அவள் பார்வையோ மீனை ஒத்தவை. யாரேனும் அங்கு அவளது பெயரை சத்தமாக அழைத்தாலோ, பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய், கைகள் எல்லாம் நடுங்கிப் போய்விடும் நம் நாயகி இயலிசைக்கு.
இயலிசையுடன் மேலும் ஐந்தாறு பெண்கள் அங்கே சிலைகளை துடைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ஐம்பது வயதிருக்கும் மல்லிகா.
சிலை துடைத்துக் கொண்டே மல்லிகாவைப் பார்த்த பெண்ணொருத்தி, “எப்ப மேடம் சாப்பாடு போடுவீங்க” என்று மெதுவான குரலில் கொஞ்சம் பயந்தபடி தான் கேட்டாள்.
“அடிக்கழுத காலையில் தானே நல்லா கொட்டிக்கிட்ட, இப்ப மறுபடியும் சோறு கேட்குற. நீ ஒன்னும் இங்க வேலை பார்க்க வரல. இங்க நீங்கள் எல்லாரும் அடிமை மட்டும் தான்” என்று சொல்லிக் கொண்டே, அந்த அப்பாவி பெண்ணை தன் காலால் ஓங்கி மிதித்து கீழே தள்ளினாள் மல்லிகா.
அதைப் பார்த்து அனைவரும் பயந்துவிட்டனர். இயலிசையின் கைகள் இரண்டும் நடுங்க ஆரம்பித்து, அவள் முகத்தில் பயம் அப்பட்டமாக காட்சி அளித்தது.
சிலையை துடைத்துக் கொண்டு இருந்த இயலிசையின் கைகள் அப்படியே நின்று விட்டது. அதனைப் பார்த்த மல்லிகா, “என்னடி அப்படியே நிக்குற” என்று கேட்டபடி, இயலின் அருகே வந்து அவள் தலையில் பலமாக கொட்டி, “வேலையைப் பாரு” என்று கத்த, தன் தலையில் விழுந்த அடியை தடவியபடி, கண்களில் நீர் பொங்க, தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தாள்.
அப்போது அந்தப்பக்கம் வந்த ஒருவன் மல்லிகாவிடம், “உள் வேலைக்கு ரெண்டு பேரை உள்ள அனுப்புங்க மல்லிகா” என்று சொல்லிவிட்டு சென்றான்.
இயலிசையையும் அவள் அருகே வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணையும் பார்த்தவள், “ஏய் நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்க” என்று அழைத்தவள், “உள்ள போய், வந்துருக்குறவங்களுக்கு குளீர் பானம் கொடுங்க” என்றாள் கட்டளையாக.
மருண்ட மருண்ட விழித்த இயல் தன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.
“நல்லா கேட்டுக்கோங்கடி, நீங்க இங்க வந்துருக்குறது வேலைக்குக் கிடையாது. அடிமையாத் தான் வந்திருக்கீங்க. அதை நியாபகத்தில் வச்சிக்கிட்டு, சொல்ற வேலையை ஒழுங்கா செய்யணும். இல்லாட்டி, ஒரு வாரத்துக்கு நீங்க பட்டினி தான். புரிஞ்சி நடந்துக்குவீங்கன்னு நம்புறேன்” என்று சொல்லி இருவரையும் வீட்டிற்குள் அனுப்பி வைத்தாள்.
வீட்டிற்குள்ளோ பார்ட்டி களைகட்டிக் கொண்டிருந்தது. இயலும், அவளுடன் உள்ளே வந்த இன்னொரு பெண்ணும்,குளீர் பானத்தை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்திருக்கும் ஆட்களைப் பார்க்க இயலுக்கு பயம் பிடுங்கித்தின்றது.
நடுங்கும் கைகளுடன் குளீர் பானம் அடங்கிய தட்டை ஒவ்வொருவரிடமும் நீட்டி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்த இடத்தில் தான் ஐந்தாறு பெண்கள் அடங்கிய கூட்டம் ஒன்று வட்டமாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அங்கிருக்கும் அனைவருக்குமே, பணத்தின் செழுமையால் அழகு கூடியே தெரிந்தது. அதில் ஒருத்தி, “நீவேன பாரு, இந்த சாம்ராஜ்யமே என் காலடியில் தான் விழுந்து கிடக்கப்போகுது” என்று அழகே பொறாமை கொள்ளும் பேரழிகியாக ஒய்யலாய் நின்றபடி கூறிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் தான் நிஷா.
அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற பெண்களுக்கு எல்லாம் வயிற்றில் புகைச்சல் உண்டானது.
“அதை எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?. ஆதி உன்னை தேர்ந்து எடுக்கலைன்னா உன் முகத்தை எங்க போய் வைப்ப?” என்று எரிச்சலுடன் கேட்டாள், இன்னொரு பெண்.
அதற்கு அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தவள், “உன்னோட பொறாமை அப்பட்டமா தெரியுது. இங்க வந்துருக்குற எல்லாருக்குமே தெரியும் நான் தான் அழகுன்னு. என்னை அடைய எத்தனையோ ஆம்பளைங்க தவம் கிடக்குறாங்க. இந்த ஆதி மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன? கூடிய சீக்கிரம் ஆதிக்கும் எனக்கும் நடக்கப்போற கல்யாணத்துக்கு, உங்க எல்லாத்துக்கும் ட்ரீட் தரேன்..” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, நம் நாயகி கையில் எடுத்து வந்த குளீர் பானங்கள், அந்த பெண்ணின் உடையில் கொட்டி விட்டது.
அனைவருக்கும் குளீர் பானங்களை கொடுத்துக் கொண்டிருந்தவள், இவர்கள் அருகே கொடுக்க வந்த போது, ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த நிஷாவின் கைப்பட்டு அவள் மீதே கொட்டி விட்டது.
சற்றும் தாமதிக்காத நிஷா, இயலின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள், அவ்வளவு தான் சுருண்டு கீழே விழுந்தாள் இயல்.
நிஷாவிற்கோ இன்னும் ஆத்திரம் தீரவில்லை. “ச்சீ...” என்று இயலின் உடையைப் பார்த்து முகத்தை சுளித்தவள், அவள் அடிமை என்பதனை கண்டுகொண்டு, “உன்னை யாரு உள்ள விட்டது?” என்றாள் எரிச்சலுடன்.
பதறியபடி எழுந்த இயல், “ம... மன்னிச்சிடுங்க மேடம்” என்றாள் திணறிய குரலில்.
மற்ற பெண்கள் முன்பு தன் பவரைக் காட்ட நினைத்த நிஷா, இயலை நோக்கி, “உன்னை நான் இந்த இடத்திலையே கொன்னு போட்டால் கூட கேட்க யாரும் வரமாட்டாங்க. அப்படி இருந்தும், நீ எப்படி இவ்வளவு பெரிய தப்பை செய்யலாம்” என்று கேட்டுக் கொண்டே திரும்பவும் அவளை அடிக்கப்போக, அந்த சமயம் சரியாக அந்த இடத்திற்கு வந்தான் நம் நாயகன் ஆதி.
அவன் அறை இருந்த பக்கம் தான் இவ்வளவும் நடந்து கொண்டிருந்தது. அவன் வந்ததைப் பார்த்த பெண்கள் அனைவரும், தங்களை மறந்து அவனை ரசிக்கத் தொடங்கினர். நிஷாவோ ஒரு படி மேலே சென்று அவனது கையை பற்றிக் கொண்டாள்.
இயல் மட்டுமே தன் தலையைக் கீழே குனிந்தபடி நின்றிருந்தாள். ‘சிவப்பு மாளிகையில் இருப்பவர்கள் அனைவருமே வேட்டை ஆடும் மிருகத்தை விட கொடூரமானவர்கள். அவங்களுக்கு இரக்கமே கிடையாது’ என்று எங்கோ எப்போதோ, யாரோ சொன்ன வார்த்தைகள் தான் இயலின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
இயலை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் கைகளைப் பற்றிய படி நின்று இருந்த நிஷாவிடம் திரும்பியவன், இயலைக் காட்டி, “இவள் வெறும் அடிமை தான். இந்த கேவலமானவளை அடிச்சி உன் கையை பாழாக்கிறாத” என்று சொல்லிவிட்டு, ஜூஸ் கொட்டப்பட்டு இருந்த அவளின் உடையைப் பார்த்து, “லெப்ட் போனா வாஷ் ரூம் வரும்” என்றான்.
அவன் தன்னிடம் பேசியதில் மனம் மகிழ்ந்த நிஷா, தன் அருகே நின்ற பெண்களை ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, “நீங்க என் மேல இவ்வளவு அக்கறை வச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை ஆதி” என்றாள் வெட்கப் புன்னகையுடன்.
அதற்கு அவனிடம் எந்த வித பாவனையும் இல்லை. எதுவும் பேசாமல், தன் கையை விடுவித்துக் கொண்டு அங்கிருந்த நகன்றான்.
பெண்களுக்குள் ஒரே சலசலப்பு. பெண்களைக் கண்டாலே கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்ப்பவன், இப்போது நிஷாவிடம் அக்கறையாக பேசிவிட்டு செல்கின்றானே, நிஷா நினைத்தது போல் தான் நடக்குமோ என்று ஆளாளுக்கு ஏதேதோ பேச, அவர்களை மிதப்புடன் பார்த்துவிட்டு, இயலை நோக்கியவள், “இன்னைக்கு நான் ரொம்ப நல்ல மூடில் இருக்கேன். அதனால நீ தப்பிச்ச” என்று போனால் போகுது என்று கூறி அவளை விட்டாள்.
‘நான் அடிமையா இருந்தாலும், நிச்சயம் உயிரோட இருப்பேன்’ என்று நினைத்துக் கொண்டாள் இயலிசை.
பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் ஆதி என்பவனால், தன்னுடைய நினைப்பு எல்லாம், தான் செத்து போவதற்கு வழியைத் தேடப்போகின்றது என்று.
விழா ஆரம்பமானது. வந்திருப்பவர்கள் அனைவரும், ஆதி தங்களது பெண்ணை தேர்ந்து எடுக்க மாட்டானா என்ற ஆசையில் மிதந்து கொண்டிருக்க, திருமணம் என்ற சொல்லைக் கேட்டே எரிச்சல் அடைந்து கொண்டிருந்த ஆதி, தன் தந்தையிடம், “இங்க இருக்குற பெண்களில் ஒருத்தியைத் தான் நான் தேர்ந்து எடுக்கணுமா?” என்று திரும்பவும் கேட்டான்.
“நீ யாரைக் கைக்காட்டுறியோ, அவள் தான் என் மருமகள். இதில் எந்த வித மாற்றமும் இல்ல. இது தான் என்னோட வாக்கு” என்று அடித்துக் கூறினார்.
‘எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்னு, நான் எத்தனையோ முறை சொல்லியும் நீங்க கேட்கல அப்பா. இப்ப நான் செய்யப்போற வேலையால, நீங்களே எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்க’ என்று நினைத்துக் கொண்ட ஆதி, நேராக பார்த்தான்.
அவன் முன்னே தான் பளிச்சென்று சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள் நிஷா.
ஆதி தன்னைத் தான் தேர்ந்து எடுப்பான் என்று அவளுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. தொழில் துறையில் ஆதியின் தந்தைக்கு நெருக்கமானவர் தான் அவளின் தந்தை. அதன் பொருட்டே, ஆதிக்கு நிஷாவை நன்றாக தெரிந்து இருந்தது.
நிஷாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அப்படி தான் அங்கிருந்த அனைவருமே நினைத்துக் கொண்டிருந்தனர், அவன் வாயில் இருந்து, “இந்த அடிமையைத் தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்று நிஷாவிற்கு பின்னால் நின்றிருந்த இயலிசையை அவன் கைக்காட்டி சொல்லும் வரை.
ஆதியின் பதிலில் அங்கே பெரும் அமைதி. புயலுக்கு முன்பே வரும் அமைதியோ!
அங்கே இருந்த யாராலும் அவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட துரை, அவனது செயல்களை நன்கு உணர்ந்தவராக, “நீ என்ன பேசுறன்னு தெளிவா சொல்லு” என்றார்.
தன் கடைக்கண் கொண்டு துரையைப் பார்த்துவிட்டு, “நான் தெளிவா தான் சொல்றேன். எனக்கு அந்த அடிமையைத் தான் பிடிச்சி இருக்கு” என்றான்.
அவன் பேச்சைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர். நிஷாவால் தன் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அங்கிருக்கும் அனைவருமே தன்னைப் பார்த்து சிரிப்பது போன்ற பிரம்மை அவளுள் ஏற்பட்டது.
துரைக்கு கோபம் எல்லாம் வரவில்லை, மாறாக, நான் உனக்கே தந்தையடா என்று சொல்லும் வகையில், “உனக்கு அது தான் விருப்பம்னா தாராளமா நீ அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ ஆதி. என் வாக்கை நான் மீற மாட்டேன்” என்று சொல்லிவிட்டு தன் மகனைப் பார்த்தார்.
அத்தனை பேர் கூடி நிற்கும் அந்த இடத்தில், தன் தந்தை இதற்கு ஒத்துக் கொள்வார் என்று அவன் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
அவன் வேறு எதற்கோ திட்டம் தீட்ட, அது இப்படி ஒன்றில் வந்து விடும் என்று அவனே எதிர்பார்க்கவில்லை.
ஆதியின் முகம் பாறை போல் அப்படியே இறுகிப் போய் இருந்தது. அங்கே இருக்கும் அனைவருமே பெரிய தொழில் அதிபர்கள். பணத்தின் செழுமையால் அதிக அலங்காரத்துடனும், அழகுடனும் இருக்கும் தங்களது மகளை விடுத்து, அழுக்கு உடையில், வெளிறிப்போய் பாவமாக நின்றிருந்த இயலிசையை ஆதி தேர்ந்தெடுத்தது கோபமாக மாற, அதை அப்படியே தங்களது விழிகள் மூலம் சுட்டு எரிப்பதைப் போல இயலிசையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தான் ஏதோ மிகப்பெரிய தவறை செய்து விட்டது போல குனிக்குறுகி நின்றிருந்தாள் இயல். அனைவரது பார்வையும் தன்னை நோக்கியே இருக்க, இந்த நிமிடமே உலகம் அழிந்து விடாதா? என்ற நினைப்பு அவளுள் எழுந்தது.
பயத்தில் நடுங்கியபடி நின்றிருந்த இயலிசையைப் பார்த்த துரை, “ஹேய், இங்க வா” என்று அவளை அரட்டிக் கூப்பிட்டார்.
அவர் குரலைக் கேட்டு பயந்தவள், வேகமாக ஓடி வந்து அவர் முன்னே நின்றாள். அவள் முகத்தைப் பார்த்தவர் பின் தன் மகனின் முகத்தைப் பார்த்து, ‘டேய் மகனே உன்னோட டிராமா எனக்கு நல்லாவே தெரியும். நான் உனக்கே அப்பன்டா நான்’ என்று நினைத்துக் கொண்டவர்,
“இப்பவே இந்த இடத்திலையே உனக்கும் இந்த அடிமைக்கும் கல்யாணம் ஆதி” என்ற சொல்லை துரை உதிர்த்ததும், திரும்பவும் அந்த இடத்தில் பேரமைதி.
நடப்பதை எல்லாம் துரையிடம் என்னவென்று காரணம் கேட்கும் தைரியம் அங்கே யாருக்கும் இல்லை. ஏனெனில் அங்கே அவர் வைத்தது தான் சட்டம். அவர் சொல்லும் சொல்லே அனைவருக்கும் வேதம்.
ஆதிக்கு கோபம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர, அதே பார்வையுடன் தன் தந்தையைப் பார்த்தவன், “என்ன சொல்றீங்க? இதில் உங்களுக்கு சம்மதமா?” என்றான் பல்லைக் கடித்தபடி.
தொழிலில் தனக்கான பாதையை தானே வடிவமைத்துக் கொண்ட ஆதியை, கையைக் காலைக் கட்டியா திருமணதிற்கு சம்மதிக்க வைக்க முடியும்? அதனால் இயலிசையை பகடைக்காயாக வைத்து விளையாட ஆரம்பித்திருந்தார் துரை.
“எனக்கு முழு சம்மதம் தான் ஆதி. இப்பவே உனக்கு கல்யாணம்” என்றார்.
“எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று இறுகிய குரலில் திரும்பவும் அவன் கூற, “தொழிலை மொத்தமா தூக்கி என் பொண்ணு நிலா கையில் கொடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது ஆதி” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினார் துரை.
அதற்கு வெறிகொண்டு அவரைப் பார்த்தவன், “இந்த ஆதியவே மிரட்டிறீங்களா அப்பா” என்றான் கோபத்தை அடக்கியபடி.
“நீ எப்படி வேணாலும் வச்சிக்கோ” என்று சிரித்துக் கொண்டே கூறினார் துரை.
“எனக்குன்னு தனியா சாம்ராஜ்யத்தை உருவாக்க எனக்கு தெரியும்ப்பா. உங்க மிரட்டல் என்னை ஒன்னும் செய்யாது” என்று மெதுவாகவும் அதே சமையம் அழுத்தமாகவும் கூறினான் ஆதி.
“உருவாக்குற திறமை உனக்கு இருக்குன்னு எனக்குத் தெரியும் ஆதி. ஆனா அதை உருவாக்க விடாம செய்யுற பவர் என்கிட்ட இருக்கு. தமிழ்நாட்டுல எல்லாமே நான் வச்சது தான் சட்டம். அடுத்த சிஎம் கூட நான் சொல்ற ஆள் தான் வரமுடியும். இப்ப நீ என்ன செய்யலாம்னு இருக்க” என்று கேட்டார்.
இப்போது ஒரு முடிவு எடுத்தவனாக, “நான் இந்த அடிமையை இப்போவே கல்யாணம் பண்ணிக்குறேன்” என்றான் தீயாய் அனலைக் கக்கியபடி.
இதனைக் கேட்ட நிஷாவிற்குத் தான் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை. அந்த இடத்தில் இருந்து கண்ணீர் சிந்தியபடி அவள் ஓடிவிட்டாள்.
தன் மகளின் துக்கத்தை உணர்ந்த வர்மா, தன் பயத்தை விடுத்து, துரையின் அருகே வந்தவர், “என்ன பாஸ், ஆதி சின்ன பையன். ஒரு தடவை யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறவள கேட்குறாரு, நீங்களும் சரின்னு சொல்றீங்க” என்றார்.
அதற்கு சிரித்துக் கொண்டவர், அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், “சபை முன்னாடி என்னை அசிங்கப்படுத்த தான் என் பையன் இப்படி பண்றான். நானும் அவன் போக்கில் விட்டுப் பிடிக்குறேன் வர்மா” என்று சொல்லிவிட்டு தன் மகனைப் பார்த்தவர், “இப்பவே இவள் கழுத்தில் நீ தாலி கட்டு ஆதி” என்று சொல்லி தன் காற்சட்டைப் பையில் இருந்து தாலியை எடுத்து, அவன் முகத்திற்கு முன்னால் நீட்டினார் துரை.
அவன் அதனை வாங்கப் போக, “ஆனா ஒரு விஷயம் ஆதி” என்று சொல்லி நிறுத்தினார். அவனோ, என்னவென்பது போல் அவரைப் பார்க்க, “இவளுடன் உன்னால் வாழமுடியலைன்னா அடுத்த நிமிஷமே நான் சொல்ற பொண்ணை நீ கட்டிக்கணும்” என்று, ஒன்று இல்லை என்றால், வேறு ஒன்று என்று போதைப் பொருளை வியாபாரம் செய்வது போல் பேசினார்.
“சரி” என்று சொல்லிவிட்டு அதை தன் கையில் வாங்கியவன், அதனை இயலிசையின் கழுத்தில் கட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
இயலுக்கோ எதுவும் புரியவில்லை. எதுவும் அறியாமல், தன் கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்தபடி அந்த இடத்திலையே சிலையாகி நின்றாள். எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால் அவளோ அந்த இடத்திலேயே கல்லாக சமைந்துவிட்டவள் போல் நின்றாள்.
சூழ்நிலையால் அடிமை வாழ்க்கை வாழ்ந்து, யாரோ எவரோ அவள் வாழ்க்கையை எடுத்து விளையாடும் பொம்மையாகி விட்டாள் இயலிசை.
இங்கே தன் அறைக்கு வந்த துரையை பின் தொடர்ந்து வந்த வர்மா, “என்ன சொல்றீங்க, நம்ம ஆதி தம்பியின் ஜாதகத்தில் இப்படி ஒரு தோஷம் இருக்கா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
“இந்த வாரம் சித்ரா பௌர்ணமி வர்றதுக்குள்ள ஆதிக்கு கல்யாணம் பண்ணனும் இல்லாட்டி அவன் உயிருக்கு ஆபத்துன்னு, நம்ம ஜோசியர் சொல்லிட்டாரு. எனக்கும் வேற வழி தெரியல. அவனுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்ல. அவனைக் கட்டாயப்படுத்தி தான் பொண்ணு பார்க்க சம்மதிக்க வச்சேன். இப்ப அவன் சொன்ன பொண்ணை நான் சம்மதிக்கலைன்னா, திரும்பவும் இவனைப் பிடிக்க முடியாது” என்று தன் பக்கம் இருக்கும் காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தார் துரை.
“எல்லாம் சரிதான் பாஸ். அதுக்காக ஒரு அடிமையைப் போய்..” என்று இழுத்தபடி தன் தலையை சொறிந்துகொண்டு கேட்டார் வர்மா.
அதற்கு சிரித்துக் கொண்டவர், “ஒரு அடிமை டீ போட்டுக் கொண்டு வந்தாலே, என் பையன் அந்த ஆட்டம் ஆடி, முகத்தை சுழிப்பான். இதில் அவளை தன்னோட மனைவியா எப்படி பார்ப்பான்?. ஒரு வாரம் கூட அந்த அடிமை இந்த வீட்டில் தாக்கு பிடிக்க மாட்டாள். அவளை அவனே அனுப்பி வச்சிட்டு, இந்த ராஜ்யத்துக்கு ஏத்த மருமகளா கூட்டிட்டு வருவான்” என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.
அதற்கு சிரித்துக் கொண்ட வர்மா, “அதுவும் சரி தான் பாஸ்” என்று சொல்லிவிட்டு, வெளியே சென்றவர், இந்த நல்ல விஷயத்தை வேகமாக, தன் மகள் நிஷாவிடம் சொல்ல அலைபேசியை எடுத்தார்.
துரை எவ்வளவு பெரிய நிழல் உலக தாதாவாக இருந்தாலும், அவரிடம் மூட நம்பிக்கைகள் கொட்டிக் கிடந்தன. ஜோசியரிடம் கேட்காமல் அவர் எதுவும் செய்வது இல்லை. ஆதிக்கு எதிராக எதுவும் செய்வது அவருக்கு நல்லதாக படவில்லை. அதனால் தான் அவன் அடிமையைப் பிடித்திருக்கின்றது என்று கூறவும் இவர் பிடித்துக் கொண்டார்.
சித்ரா பௌர்ணமி வர இன்னும் மூன்று நாட்கள் மட்டும் தான் உள்ளது. அதற்குள் இவனை எதற்கும் பணிய வைக்க முடியாது என்று கருதி அவன் போக்கில் விட்டு, பின்பு பலமாக பிடிக்கும் முயற்சியில் இறங்க தீர்மானித்தார்.
இயலிசையை ஆதி பத்திவிடவில்லை என்றாலும், இவரே பத்திவிடவேண்டும் என்ற முடிவில் தான் இருந்தார். அவர் அடங்கி இருப்பது என்னவோ ஜாதகத்திற்காக மட்டுமே.
அவ்வளவு பெரிய அறையும், விழா நடந்ததற்கு எந்த வித ஆர்பாட்டமுமின்றி இருட்டடைந்து போய் இருந்தது. அங்கே ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் இயல்.
ஏதோ காலடி ஓசை தன்னை நோக்கி வர, பயத்தில் நடுங்கிப்போய், நிமிர்ந்து பார்க்க திராணியற்றவளாய் பயத்துடன் இருந்தாள். அவளின் முன்னே வந்து நின்ற காலடியோசை, வேறு யாரும் இல்லை, மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா தான்.
“என்னடி எஜமானி ஆகிட்டோம்னு திமிர்ல உட்கார்ந்து இருக்கியா” என்று கத்த, பயத்துடன் அடித்துப் பிடித்து எழுந்தவள், “இல்ல.. இல்ல மேடம்” என்று வார்த்தைகளை சொல்ல முடியாமல், மனம் உடைந்த நிலையில் விம்பிக் கொண்டிருந்தாள்.
“முதல்ல எழுந்திரி, பெரிய ஐயா உன்னை ஆதி ஐயா அறைக்குள் போக சொன்னாரு” என்றதுமே, அவளுக்கு மயக்கம் வரும் நிலை ஆனது.
இங்கே காலடி எடுத்து வைத்ததில் இருந்து தன்னுடைய கற்பையும், உயிரையும் காப்பாற்ற படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கின்றாள். இப்போது அதற்கு ஆபத்து என்று நினைக்கும் போதே, அவள் கை கால்கள் எல்லாம் ஆட்டம் கொடுக்க ஆரம்பித்தது.
“இன்னும் என்ன அப்படியே இருக்க” என்று கூறியபடி, அவளது கையை வெடுக்கென்று பிடித்து இழுத்த மல்லிகா, அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஆதியின் அறையை நோக்கிச் சென்றாள்.
ஆதி அறையின் வாசலில் அவளைத் தள்ளிவிட்டவள், திரும்பி பார்க்காமல் அங்கிருந்து சென்றாள்.
தன் முன்னே வந்த பூட்ஸ் அணிந்த கால்களைப் பார்த்தவள், முகத்தில் பயம் தாண்டவமாடியது.
கீழே குனிந்து அவளது முகத்தைப் பார்த்த ஆதி, பெண்ணவள் கண் இமைக்கும் நேரத்தில், அவள் நெற்றியில் தனது நவீன துப்பாக்கியை வைத்து அழுத்தினான்.
ஏற்கனவே பயத்தில் இருந்தவள், அவனது செயலால் அந்த இடத்திலையே மூர்ச்சையானாள்.
அதற்கு இகழ்ச்சியாக சிரித்துக் கொண்டவன், அவளின் உடையைப் பார்த்து முகத்தை சுழித்தபடி, ஜக்கில் இருந்த நீரை அவள் மீது ஊற்றினான். அவளோ அடித்துப் பிடித்து எழ, அவள் முன்னே தன் துப்பாக்கியை தூக்கி எறிந்தவன், “அதைக் கையில் எடு. அதை வச்சி உன்னை நீயே சுட்டு தள்ளிட்டு செத்துப்போ. அதுவும் இப்பவே” என்றான் வேட்டையாடும் மிருகத்தின் பார்வையில்.
தன் அருகில் கிடந்த துப்பாக்கியைப் பார்த்த இயலிசையின் கண்களில் எப்போதும் இல்லாத வகையில் இப்போது ஒரு வித ஒளி உண்டானது. ஆம் அவள் கண்களில் பயம் இல்லை.
அவ்வளவு நேரம் நடுங்கிக் கொண்டிருந்த இயலிசை, இப்போது மிகவும் மிடுக்கான பார்வையில் ஆதியைப் பார்த்து, “இப்ப நீங்க என்ன தான் சொல்ல வரீங்க?” என்றாள். அவள் குரலில் எந்த வித தடுமாற்றமும் இல்லை.
அனைத்தையும் ஆதியின் கண்களில் இருந்து தப்பவில்லை, ஆனால் அவன் மனதினுள் இகழ்ச்சியாக சிரித்துக் கொண்டு, “துப்பாக்கியை எடுத்து, உன்னை நீயே சுட்டு செத்துப்போன்னு சொன்னேன்” என்றான்.
இயலிசையின் உடலில் மாற்றங்கள் உண்டானது, இப்போது அவள் கண்களில் தோன்றிய தீ ஜுவாலை, கூடிய மட்டும் ஆதியை தாக்க ஆரம்பித்தது.
அவளின் கோபம் அவள் கட்டுப்பாட்டை மீற, அவளின் மனதோ பதறிப்போய், நிதர்சனத்தை அவளுக்கு எடுத்துரைக்க, ‘தான் வந்த வேலை என்ன, இப்போது செய்து கொண்டிருப்பது என்ன?’ என்ற பரிதவிப்பில் சடாரென்று, தன் தலையைக் குனிந்து கொண்டவள், “என்னை மன்னிச்சுடுங்க.. என்னால நீங்க சொன்னதை செய்ய முடியாது” என்று தன்னை பயத்துடன் காட்ட முயற்சி செய்தாள்.
ஆம் முயற்சி தான் செய்தாள். இதுவரை கன கச்சிதமாக அடிமை போல் நடித்தவளுக்கு, ஏனோ ஆதியின் முன்னால் நடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவளை எரிச்சல் படுத்திக் கொண்டு இருந்தான் ஆதி.
“எவ்வளவு திமிர் இருந்தா, என் வார்த்தைக்கு மறுபேச்சு பேசுவ? நீ இங்க சாதாரண ஒரு அடிமை மட்டும் தான்” என்று உரும்பினான் ஆதி.
நொடியும் தாமதிக்காது, அவன் முன்பு மண்டிபோட்டவள், “இந்த அடிமையை தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க. என்னைக் கொன்றாதீங்க. நீங்க என்ன சொன்னாலும். நான் செய்வேன்” என்று உயிர் பிச்சைக் கேட்டாள். அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.
பல்லைக் கடித்தபடி, அவளின் சங்கு கழுத்தைப் பற்றியவன், “யாரு நீ? எதுக்காக இங்க வந்துருக்க? நீ உளவாளியா? இல்லை போலீசா” என்றான் கோபத்துடன்.
உயிருக்காக போராடிய இயல், அவன் கை மேல் தன் கையை வைத்து விலக்கப் பார்த்தாள், ஆனால் அவனது பிடியோ, உடும்புப் பிடி போல் இருந்தது.
அவள் கண்கள் மேலேறி, அவள் நாக்கு வறண்ட பிறகு தான், அவளை விடுவித்தான் ஆதி.
அவன் விடுவித்த மறுகணமே பயங்கரமாக இறும்பியவள், தன் கழுத்தைத் தடவிக் கொண்டே, “நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு தெரியலை சார். நான் இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு ஆனாதை. மூணு வேளையும் சாப்பாடு போடுவாங்கன்னு நினைச்சு தான், நான் அடிமையா இந்த சிவப்பு மாளிகைக்கு வந்தேன்” என்று அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசினாள்.
பார்ப்பவர்கள் தன் மீது இரக்கம் கொள்ளும் வகையில் மிகவும் கனகச்சிதமாக நடித்த இயலுக்கு, தன் முன்னால் இருப்பவன் இரக்கமே இல்லாத மிருகம் என்று தெரிந்தே தான் இருந்தது. இருந்தும் அவன் தன் மீது பரிதாபம் கொண்டு விட மாட்டானா, என்ற பேராசை அவளுள்.
அதற்கு ஒரு பக்கமாக தன் உதட்டை வளைத்து சிரித்தவன், “சரி, என் முன்னாடி உயிர் பிச்சை கேட்குற, நானும் பிச்சை போடுறேன்னு வச்சிக்கோ, அதற்குப் பிறகு நீ என்ன செய்யுறதா உத்தேசம், இதோ இதே அறையில் என்கூட சேர்ந்து குடும்பம் நடத்துறதா முடிவு பண்ணிட்டியா?” என்றான் தன் அறையைச் சுட்டிக் காட்டி.
உடனே பதறியவளாக, வேகமாக தன் தலையை மறுப்பாக ஆட்டியவள், “நீங்க என்னை இங்க இருந்து விட்டா போதும் சார். உங்க கண்ணில் படாத இடமா பார்த்து போயிடுறேன்” என்றாள் கண்களில் கண்ணீருடன்.
“சோத்துக்குக் கூட வழி இல்லாமல் தான் கஷ்டப்பட்டு, இங்க அடிமையா இருக்குறேன்னு சொன்ன, இப்ப வெளிய போயிட்டா என்ன செய்வ?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“கோவில் குளத்துல பிச்சை எடுத்து சாப்பிடுவேன் சார்” என்றாள் உள்ளே போன குரலில்.
தன் கையை விரித்து, “இந்த சாம்ராஜ்யத்தின் அரசன் நான். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி பிச்சை எடுப்பேன்னு, வெக்கமே இல்லாம சொல்ற. இது எனக்கும் அவமானத்தைக் கொடுக்கும்னு உனக்குத் தெரியலையா” என்று கத்தினான்.
‘இவனுக்கு என்ன தான் பிரச்சனை! சரியான பைத்தியமா இருப்பான் போல’ என்று மனதிற்குள் நினைத்த இயல் வேறு எதுவும் பேசாமல் நடுங்கியபடியே அவனைப் பார்த்தாள்.
“இந்த சிவப்பு மாளிகையில், அடிமைகள் தங்களது வாயைத் திறக்குறதுக்குக் கூட அனுமதி இல்ல, ஆனால் நீயோ இவ்வளவு பேசுற. நான் சொன்னதை நீ இன்னும் செய்யவே இல்ல” என்று சொன்னபடியே, கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றியில் வைத்தான்.
இயலிடம் சிறிதும் பயம் இல்ல, இந்த சூழ்நிலையில் இருந்து எவ்வாறு தப்பிப்பது, என்ற தீவிர சிந்தனையில் இருந்தவள், தன் முகத்தை பயத்துடன் வைத்துக் கொண்டு, “என்னைக் கொலை செய்தால், உங்களுக்கும் ஆபத்து தான் சார்” என்று அவன் முகத்தை நிமர்ந்து பார்த்துக் கூறினாள்.
அவள் நெற்றியில் இருந்து துப்பாக்கியை எடுத்தவன், “உன்னோட இந்த முகம், பயந்த பாவனையை எனக்குக் காட்டுது, ஆனா உன்னோட குரலோ, வேறு ஒன்னை எனக்கு சொல்லுது. சொல்லு, நீ யாரோட ஆள். எந்த ரகசியத்தை தேடுறதுக்கு நீ இங்க வந்து இருக்க? உன்னைக் கொல்றதால எனக்கு என்ன ஆபத்து வரப்போகுது?” என்றவன் கண்களில் தீப்பொறி பறந்தது.
“மறுபடியும் நான் சொல்றேன் சார், நான் அடிமை மட்டும் தான். நான் இங்க வேற எந்த வித உள்நோக்கம் கொண்டும் இங்க வரல. எனக்குத் தேவை என்னோட உயிரை நான் காப்பாத்திக்கணும். என்னை நீங்க கொலை செய்தால், உங்க தொழிலுக்கு தான் ஆபத்தா முடியும். உங்க அப்பா முன்னாடி நம்ம கல்யாணம் நடந்து இருக்கு. நான் செத்தா, உங்க சாம்ராஜ்யம் உங்களுக்கு இல்லை. அது உங்க அக்காவுக்கு போயிடும்னு, மல்லிகா மேடம் யார்கிட்டையோ, போனில் பேசுறதை நான் கேட்டேன்” என்று மிகப்பெரியதாக அனைத்தையும் பேசி முடித்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது, “கேவலம் ஒரு அடிமை நீ. நீ, எனக்கு, நான் என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு சொல்றியா?” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
அதில் பயந்தபடி தன முகத்தை வைத்துக் கொண்டு, தன் கைகளை நடுங்க செய்தபடி, பயத்தில் இருப்பது போல் நடிக்க ஆரம்பித்தாள் இயல், “இந்த அடிமைக்கு வேற எதுவும் தெரியாது சார். நான் கேட்டதை தான் உங்களுக்கு சொன்னேன்” என்று மன்றாடினாள்.
“மாளிகையில் நடக்கும் அரசியல் ரகசியம் எல்லாம் உனக்குத் தெரிஞ்சி இருக்கு. உன்னோட நோக்கம் தான் என்ன?” என்றான் இப்போது சாதாரண குரலில்.
“உள்ள நடக்கும் ரகசியம் எல்லாம் மல்லிகா மேடம் பேசுறத வச்சி தெரியும் சார். அவங்க உங்க அக்காவின் ஆள் தான். ஆனா நான் உங்களுக்கு, எப்போதும் சிறந்த அடிமையா இருப்பேன் சார். எனக்குத் தேவை எல்லாம் சப்பாடும், நான் உயிரோட இருக்குறதும் மட்டும் தான் சார்” என்று வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாண்ட படி பேசினாள் இயல்.
இயலின் முகத்தை கூர்மையாக பார்த்த ஆதியின் ஞாபக இடுக்குகளில், ஒரு பெண் தோன்றி மறைந்தாள்.
‘இவள் பார்க்க அப்படியே அவளை மாதிரியே இருக்கா. ஆனா அவள் தான் செத்து போயிட்டாளே!’ என்று அவன் நினைவுகள் எல்லாம் எங்கேங்கோ பயணமானது.
அதனை எல்லாம் ஒதுக்கி வைத்தவன், “என்னோட டேஸ்ட், எப்போதும் அருமையாத் தான் இருக்கும், அதனால தான் அடிமையில் கூட அழகான அடிமையா தேர்ந்து எடுத்துருக்கேன்” என்றான் அவள் கண்களை ஊருடுருவியபடி.
மெதுவாக எழுந்து நின்றவள், “இந்த அடிமை உங்களுக்கு சேவை செய்ய காத்துக்கிட்டு இருக்கேன் சார்” என்றாள்.
அவளைப் பிடித்து, தன் அருகே இழுத்தவன், அவள் நெற்றியில் திரும்பவும் துப்பாக்கியை வைத்து, “நீ சொல்றதை நான் நம்பலாமா?” என்று கேட்டான்.
“நான் சமயம் வரும் போது, அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன் சார்” என்றாள் உறுதியான குரலில்.
துப்பாக்கியை அவள் நெற்றியில் இருந்து எடுத்தவன், “இனி, இந்த மாளிகையை பொறுத்த வரைக்கும், நீ அடிமை கிடையாது. ஆனா எனக்கு நீ விஸ்வாசமான நாய் மட்டும் தான்” என்று சொல்லிக்கொண்டே அவள் உடையைப் பார்த்தவன், “இனி இதுபோல் வேஷம் போட வேண்டிய அவசியம் இல்ல. அந்த அறையை தான் இனி உன்னோட அறை. உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்” என்று தன் அறைக்குள் இருந்த இன்னொரு அறையை, அவளுக்குக் காண்பித்தவன், “நல்லா ஞாபகம் வச்சிக்கோ, என்னோட கண்காணிப்பில் நீ எப்போதும் இருப்ப” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியே சென்றான்.
அவன் சென்றதும் பெருமூச்சி ஒன்றை சிந்திய இயல், ‘என்ன தான் இங்க நடக்குது. நான் சொன்னதை நிஜமாகவே நம்பிட்டானா, இல்ல, என்னை நம்ப வச்சி வேற ஏதாவது திட்டம் போடுறானா’ என்று நீண்ட நேரம் சிந்தித்தவள், அவன் சொன்ன அறைக்குள் சென்றாள்.
இங்கே இரவோடு இரவாக மல்லிகாவை வேலையில் இருந்து நீக்கினான் ஆதி.
ஆனால் அவனது மனதோ ஒரு நிலையிலையே இல்லை. பழைய ஞாபகங்கள் எல்லாம் ஒரு வித சூழல் போல, அவனை தன்னுள் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது.
“இந்த உலகத்தில் ஒரே மாதிரியான முகத்தோற்றத்தில் மனிதர்கள் இருப்பார்களா?” என்று தன்னைத் தானே பலமுறை கேட்டுக் கொண்டான்.
பின் தன் அறைக்கு வந்தவன், அங்கே இடப்பக்கமாக இருக்கும் இயல் இருக்கும் அறையைத் திரும்பி பார்த்தான்.
அவன் அறையே, அப்பார்ட்மென்ட் வீடு போல் தான் காட்சி அளித்தது. சென்றதும் வரவேற்பு அறை போல் இருக்கும் இடத்திற்கு இடப்பக்கம் தான் இயலுக்காக அவன் கொடுத்த அறை இருந்தது. தன் தலையை ஆட்டிக்கொண்டவன், தன் படுக்கை அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
பணத்தால் செதுக்கியது போலவே இருந்த அந்த அறையின் வலப்பக்கம் ஒரு கண்ணாடி தடுப்பு இருந்தது, அங்கே நீச்சல் குளமும், அதன் அருகில் பலவித ஆர்கிட் மலர்களின் பூந்தொட்டிகள் இருந்தன. அதைக் கடந்து சென்று குளியல் அறைக்குள் சென்றவன், அங்கே பெரியதாக இருந்த குளியல் தொட்டிக்குள் இறங்கி, தன கண்களை மூடி யோசிக்கத்தொடங்கினான்.
பின் குளித்து முடித்து வெளியே வந்தவன், ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடி முன் வந்து நின்று, அதை அப்படியே திருப்பினான். அதில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் இயலிசை.
ஆம் கண்ணாடிக்குப் பின்னே, இயலின் நிழல் படம் இருந்தது. ஆனால் அவள் முகத்தில் பயம் இல்லை. மாறாக ராஜ தோரணை மின்னிக்கொண்டு இருந்தது.
“வெண்பா... வந்துருக்குறது, நிஜமாவே நீ தானா?” என்று சொல்லி பெருங்குரல் எடுத்து சிரித்தவன், “உன்னோட சாவு என்கையில் தான் வெண்பா. அணுஅணுவா சித்தரவதை பண்ணி உன்னைக் கொல்லுவேன்” என்று இப்போது கண்களில் கனல் பொங்க கத்தினான்.
“ஏன் என்னைத் தெரியாத மாதிரியே நல்லா நடிக்குற வெண்பா. நீ நிஜமாவே வெண்பா தானா? இல்ல வேறு யாரோவா? நீ நிஜமாவே வெண்பாவா இருந்தா, எந்த திட்டத்தோட என் இடத்துக்கே வந்தன்னு தெரியல. ஆனா இந்த விளையாட்டில் ஜெயிக்கப்போவது என்னவோ நான் தான்” என்று இயலின் படத்தைப் பார்த்து கத்தினான் ஆதி.
அவன் கண்களில் அவ்வளவு கோபம். பார்வையால் எரிக்கும் சக்தி மட்டும் அவனுக்கு இருந்திருந்தால் அவன் எப்போதோ, இயலிசையை பஸ்பமாக்கி இருப்பான்.
ஆகமொத்தம் அவன் அவளைப் பயங்கரமாக வெறுத்தான். அதிகம் காதலித்த பெண்ணை இப்போது வெறுக்கின்றான் போல, என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இயலை வெறுக்க அவனுக்கு மிகப்பெரிய காரணம் இருந்தது.
அந்தக் காலை வேலையில் தன் அறையில் குளித்து முடித்து, அங்கிருந்த அலமாரியில் இருந்த உடைகளை அணிந்த இயலுக்கு, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அறையில் இருந்து வெளியே வரும் போது, அவள் நிஷாவை எதிர்கொண்டாள்.
முன்பு அழுக்கு உடையில் பார்க்கவே பரிதாபமாக இருந்த இயலிசை, இப்போது கண்களில் ஒளியுடனும் நடையில் மிடுக்குடனும் நடந்து வருவது, நிஷாவிற்குப் பிடிக்கவில்லை. அவளுள் ஆத்திரம் எழுந்தது.
தன் தந்தை வர்மாவின் பேச்சை நம்பி, ஆதியின் காதலைப் பெற, அடிக்கடி இங்கே வந்தாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது.
என்ன தான் அடிமையாக இருந்தாலும், ஆதியின் மனது இயலிடம் சென்று விடுமோ, என்ற பயமும் ஆத்திரமும் ஒன்று சேர, தன் விஷமமான வேலைகளை ஆரம்பித்தாள் நிஷா.
இயலின் முன்னே சென்று நின்றவள், “என்னடி திமிரா நடந்து வர்ற?” என்று கேட்டுக் கொண்டே தன் பற்களைக் கடித்தாள்.
அதியைத் திருமணம் செய்வதுக்கு முன்பு வரை, பயந்தபடி நடுங்கிக் கொண்டு இருந்த இயலின் கண்களில் இப்போது சிறிதும் பயம் இல்லை. நேருக்கு நேராக நிஷாவைப் பார்த்தவள், “மரியாதையா பேசு. நான் ஆதியோட மனைவி” என்றாள் மிடுக்கான குரலில்.
நிஷாவின் ஆத்திரம் அவளது கண்ணை மறைக்க, இயலை அடிப்பதற்காக தன் கையை ஓங்கினாள்.
அவள் மணிக்கட்டைப் பிடித்து அவளைத் தடுத்த இயல், “நான் மறுபடியும் சொல்றேன் உன் எல்லையை மீறாத. நான் இப்ப அடிமை கிடையாது. இந்த வீட்டில் ஆதிக்கு இருக்கும் மரியாதை எனக்கும் இருக்கு” என்றாள் கண்களில் கனல் தெறிக்க.
தன் கையை அவளிடம் இருந்து விடுவித்துக் கொண்ட நிஷா, இயலை கோபமாகப் பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றாள்.
இங்கே நடக்கும் கூத்தை எல்லாம் மேலே தூணின் அருகே நின்று பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதி, ‘உன்னோட உண்மையான சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது வெண்பா. நீ எப்படி இங்க நிம்மதியா இருக்கன்னு நானும் பார்க்குறேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அங்கே வந்தான்.
திடீரென்று தன் முன்னே வந்து நின்ற ஆதியைப் பார்த்தவள், ‘அடிமையா இருக்கும் போது, அந்த மல்லிகாவை சமாளிக்க வேண்டியது இருந்துச்சு, இப்ப இவனை சமாளிக்கணும் போல, இப்படி இருந்தா, என்னால எப்படி என் வேலையைப் பார்க்க முடியும்’ என்று நினைத்து எரிச்சல் அடைந்தாள் இயல்.
இயலின் முகத்தைக் கூர்மையாக பார்த்தவன், “என்னாச்சு, என்னைப் பார்த்தா எரிச்சல் வருதா?” என்று மிகவும் சரியாக கேட்டான்.
அதில் பதறியவள், “அச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார். உங்களுக்கு வேலை செய்யுறதுக்குத் தான் நான் இருக்கேன்” என்று ஒரு அடிமை போல் மிகவும் கச்சிதமாக நடித்தாள்.
அதற்கு தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்துக் கொண்டவன், “மேல ரூமுக்கு வா. உன்கிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு, தன் நீண்ட கால்களால் எட்டு வைத்து வேகமாக மாடி ஏறினான்.
‘இப்ப எதுக்காக கூப்பிடுறான்னு தெரியலையே’ என்று நினைத்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள் இயலிசை.
அறைக்குள் அவள் நுழைந்ததும் கதவை சாற்றியவன், “உன்னைப் பார்த்தாலே, அவ்வளவு கோபம் வருது” என்றபடி தான் தனது பேச்சை ஆரம்பித்தான்.
“நீ இப்போதும் இந்த வீட்டில் அடிமை தான். என்னைக் கேட்காமல் கீழ போனது உன்னுடைய தப்பு” என்று காச்மூச்சென்று கத்திவிட்டு கீழே சென்றுவிட்டான்.
நேற்று இரவே அதிக பசியுடன் இருந்தவளுக்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று எதுவும் தெரியவில்லை.
ஆதி எங்கு சென்றான் என்று எதுவும் இயலுக்கு தெரியவில்லை. பின் பசி வயிற்றைக் கிள்ள, அவனது கட்டளையையும் மீறி கீழே சென்றாள்.
சமையலறையில் யாரும் இல்லாததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டவள், உணவு ஏதாவது இருக்கின்றதா என்று தான் பார்த்தாள்.
“எதை திருடுறதுக்குடி நீ இப்படி பாத்திரங்களை எல்லாம் உருட்டிக்கிட்டு இருக்க?” என்று அவள் பின்னால் வந்து நின்ற நிஷா கத்தினாள்.
நிஷா அங்கே நிற்பதை எதிர்பார்க்காதவள், “முதல்ல உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்பந்தம். சும்மா சும்மா என்னை வந்து வம்பிழுத்துக்கிட்டு இருக்க” என்று குரலில் திடத்துடன், வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டிப் பேசிய இயலைப் பார்த்து நிஷாவே ஆடி தான் போய் விட்டாள்.
***
இங்கே தன் அலுவலக்திற்கு வந்தவனை எதிர்கொண்டான் ஆதியின் நண்பன் அகில்.
அவனும் மிகப்பெரிய செல்வந்தனின் மகன் தான். ஆதியின் ஒரே ஒரு நண்பன்.
ஆதியைப் பார்த்த அகில், “என்னடா பண்ணி வச்சி இருக்க?” என்று தான் எடுத்ததுமே கேட்டான்.
அவனது பேச்சைக் காதில் வாங்காதவன் போல், அவனைக் கடந்து சென்ற ஆதி, “முக்கியமான மீட்டிங் இருக்குது அகில். இப்ப உன்கிட்ட, நான் எதுவும் பேசுறதா இல்ல” என்று சொல்லிவிட்டு, அவனைக் கடந்து, தன் அலுவலக அறைக்குள் சென்று மறைந்தான் ஆதி.
விடாமல் அவனைப் பின்தொடர்ந்த அகில், ஆதியின் அறைக்குள் சென்று, “இன்னைக்கு காலையில் தான், நான் யூஎஸ்ல இருந்து லேண்ட் ஆனேன். வந்ததும் வீட்டுக்குக் கூட போகாம, உன்னைப் பார்க்க தாண்டா வந்தேன் . ஆனா நீ என்னடான்னா, என்னைக் கொஞ்சமும் பார்க்காமல் இருக்க” என்று குறைபட்டுக் கொண்டான்.
அந்த வட்டாரத்தில் ஆதியைப் பார்த்து சிறிதும் பயப்படாமல் கேள்வி கேட்கும் ஒரே ஆள், ஆதியின் உயிர் நண்பன் அகில் தான்.
சிறுவயதில் இருந்தே இருவருமே இணைப்பிரியாத நண்பர்கள். இருவருக்குள்ளும் எப்போதும் எந்த ஒரு ரகசியமும் இருந்தது இல்லை.
இன்று காலை, அகில் தரையிறங்கியதும், தன் பிஏ சொல்லிய செய்தியைக் கேட்டு தான், அடித்துப் பிடித்து ஆதியைப் பார்க்க வந்திருந்தான் அகில்.
“நீ இப்ப என்ன கேட்டாலும் அதுக்கு நான் பதில் சொல்றதா இல்ல அகில்” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்து சொல்லிவிட்டு, திரும்பவும் தன் மடிக்கணினியில் தன் கண்ணைப் பதித்தான் ஆதி.
அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவன், “நேத்து என்னடா நடந்துச்சு பார்டியில? நீ ஏதோ அடிமைப் பெண்ணை கல்யாணம் பண்ணிட்டதா எல்லாரும் சொல்றாங்க. நாலு நாளைக்கு முன்னாடி கூட கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு, கத்திக்கிட்டு இருந்த! இப்ப திடீர்னு எவளோ ஒருத்திக்குத் தாலி கட்டி இருக்குற. உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க?” என்று வரிசையாக கேள்விகளை அவன் முன்னால் அடுக்கி வைத்தான் அகில்.
அதற்கு எதுவும் பதில் பேசாத ஆதி, “வேலை இருக்குது அகில். நீ முதல்ல வீட்டுக்குப் போ” என்று மட்டும் சொன்னான்.
அவனை முறைத்துப் பார்த்த அகில், “சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம். உனக்குக் கல்யாணம் ஆச்சுன்னு தெரிஞ்சதும், நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு உனக்குத் தெரியாது. ஆனா நீ யாரோ ஒரு அடிமையைத் தான் கல்யாணம் செஞ்சி இருக்கன்னு தெரிஞ்சதும், எனக்கு ரொம்பவே பயமா போயிடுச்சி ஆதி... ஏதோ ஒரு திட்டத்துக்காகத் தானே இப்படி நீ செஞ்ச?” என்று ஆதியைப் பற்றி மிகவும் சரியாக கணித்தவனாகக் கேட்டான் அகில்.
இப்போது நிமிர்ந்து அகிலின் முகத்தைப் பார்த்தவன், “சரியா சொன்ன” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் தன் வேலைகளில் தன் கவனத்தை செலுத்த, அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அவனது பிஏ, “சார் மீட்டிங்கிற்கு எல்லாமே தயாராகிடுச்சி சார்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
தன் இருக்கையில் இருந்து எழுந்த ஆதியோ, அங்கிருந்து செல்லப்போக, அவனை செல்ல விடாமல், அவன் முன்னே வந்து நின்ற அகில், “டேய், இங்க ஒருத்தன் பேசிக்கிட்டு இருக்கேன்டா” என்றான் தன்னை சுட்டிக் காட்டி.
அவனை ஏற இறங்க பார்த்தவன், தனது கையை குறுக்காக கட்டிக் கொண்டு, “உனக்கு இப்ப என்ன தெரியணும்” என்று சாதாரணமாகக் கேட்டான்.
“போயும் போயும் வேலைக்காரியையும் விட மோசமான அடிமையை நீ கல்யாணம் பண்ணி இருக்க ஆதி. இதுக்கான காரணம் எனக்கு தெரிஞ்சே ஆகணும்” என்று தன் பிடியில் நின்றான் அகில்.
சில கணங்கள் மெளனமாக இருந்த ஆதி, பின் அதனைக் கலைத்துவிட்டு, “வெண்பா” என்றான் ஒற்றை வரியில்.
“ஆங்... என்ன சொன்ன? இப்ப நீ வெண்பான்னா சொன்னா?” என்று கேட்ட அகிலின் நியாபக இடுக்குகளில், அன்று அந்த ஊரே தீப்பிடித்து எரிந்ததும், வீதிகளில் எல்லாம் ரத்த வெள்ளம் ஓடி, அந்த இடமே பிணக்காடாய்க் கிடந்ததும் தான் நியாபகத்திற்கு வந்தது.
அது தந்த வேதனையில் அவன் கையில் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியிட்டவன், “இப்ப எதுக்காக அந்தப் பெயரை நியாபகப் படுத்துற ஆதி” என்றவன் குரலில் இன்னும் நடுக்கம் குறையவே இல்லை.
அதற்கு அசட்டாக சிரித்துவிட்டு, கண்களில் தீப்பொறி பறக்க, “நான் கல்யாணம் செய்ததே அவளைத் தான்” என்று ஆதி சொல்லி முடித்ததும், அகிலின் இதயமே நழுவிக் கீழே விழுவது போல் இருந்தது.
அகிலுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தைகளைக் கடினப்பட்டு வெளியே எடுத்துப் பேச ஆரம்பித்தான்.
“உன்னுடைய ஒரே எதிரியான விமலின் மனைவி வெண்பாவைத் தான் நீ சொல்றியா?” என்று அவன் கேட்டதிற்கு, ஆதி, “ஆம்” என்று குரோதமாய் தன் தலையை ஆட்ட, அகில் தான் அதனைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரோடிருக்கும் சவமாய் ஆனான்.
பின், மெல்ல உயிர்பெற்றவனாக, அவன் ஆதியின் முகத்தைப் பார்க்க, அவனோ எப்போதோ அந்த இடத்தைக் காலி செய்திருந்தான்.
அந்த மாலைப்பொழுது இளவெயில் நேரத்தில், தன் மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தான் ஆதி.
அந்த நேரம் மீண்டும் அங்கே வந்த அகில், தன் வாயைத் திறப்பதற்குள், முந்திக் கொண்ட ஆதி, “பப்புக்குப் போகலாம் வா” என்று அவனிடம் சொல்ல, வேறு எதுவும் பேசாமல் அவனுடன் சென்றான் அகில்.
ஆதி மிகப்பெரிய மனஅழுத்தத்தில் இருக்கின்றான் என்பது மிகவும் தெளிவாக, அவனது உயிர் நண்பன் அகிலுக்கு தெரிந்து தான் இருந்தது. எப்போதும் வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஆதி, வெளியே எங்கேனும், பொழுதுபோக்குவதற்காக அகிலை அழைத்தான் என்றாலே, அவன் மனஅழுத்தம் கொண்டுள்ளான் என்று தான் அர்த்தம்.
மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே வந்து செல்லும் அந்த பப்பில், டிஜேவின் ஒலி காதைக் கிழித்துக் கொண்டு இருந்தது. நாகரிகம் என்ற பெயரில் போதையில் இளம் பெண்களும் ஆண்களும் குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர்.
இது எதையும் கண்டுகொள்ளாமல், அந்த ஆடம்பர பப்பில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக போடப்பட்டு இருந்த, சோபாவில் சென்று ஆதியும் அகிலும் அமர்ந்தனர்.
என்ன தான் பணத்தின் செழுமையில் பிறந்து வளர்ந்து இருந்திருந்தாலும், ஆதி தீயபழக்கங்களில் இருந்து விலகியே தான் இருக்கின்றான். அவனுக்கு வேலை செய்ய பல அடிமைகள் இருந்தாலும், தானே ஒன்றிற்கு அடிமை ஆவதை என்றும் ஆதி விரும்பியதில்லை.
மது அருந்துவது கூட எப்போதாவது மனஅழுத்தம் இருந்தால் மட்டுமே அருந்துபவன் அதனை ஒரே ஒரு கோப்பையோடும் நிறுத்திக் கொள்வான்.
சோபாவில் அமர்ந்த ஆதி தன் முன்னே மேஜையில் இருந்த மதுக்கோப்பையைப் பார்த்தபடி இருந்தான். அனால் அவனது யோசனை வேறு எங்கோ இருந்தது.
இது அனைத்தையும் பார்த்த அகில், தன் கையில் இருந்த மதுக்கோப்பையில் இருந்த மதுவை ஒரு இடறு விழுங்கிவிட்டு, “நிஜமாவே வெண்பா உயிரோடு தான் இருக்காளா?” என்று கண்களில் எழுந்த பிரகாச ஒளியோடு கேட்டான்.
அகிலின் மனதில் எழுந்த ஆர்வம், பரிதவிப்பு போன்ற உணர்ச்சிகள் எதுவும், ஆதியை சென்று அடையவில்லை. அவனோ தீவிர சிந்தனையில் இருந்தான். அகில் பேசியது கூட அவனது காதில் விழவில்லை.
ஆர்வம் தாங்காமல் ஆதியின் தோளில் கைவைத்த அகில், “என்னாச்சி ஆதி! குடிக்க கூட்டிட்டு வந்துட்டு யோசனை பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டதும் தான், தன் சுயத்திற்கு திரும்பினான் ஆதி.
மதுக்கோப்பையை தன் கையில் எடுத்துக் கொண்டவன், “அது நிச்சயம் வெண்பா தான் அகில்” என்றதும், அகிலின் மனதில் படபடப்பு உண்டானது. இப்போதே அவளைப் பார்க்கும் ஆர்வம் அவனுள் எழுந்தது.
ஆதியிடம் இருந்து, எதையும் மறைக்காத அகில், ஒன்றை மட்டும் எப்போதும் மறைத்து வந்தான். அது வெண்பாவின் மீது அவனுக்கு இருக்கும் காதல் தான்.
எதிரி வீட்டுப் பெண் மட்டும் அல்ல, தங்களின் ஒரே எதிரியின் காதல் மனைவியும் அவள் தான். அன்று இறுதியாக தீப்பிடித்து எரிந்த வெண்பாவின் உடலைப் பார்த்துவிட்டு, சத்தம் இல்லாமல் தனது காரில் வந்து கதறி அழுதவன், உயிர் இருந்தும் வெற்று உடலாய்த் தான் அலைகிறான். ஆனால் மற்றவர்கள் பார்வையில் தன்னை மிகவும் சந்தோசம் மிகுந்தவன் போல் காட்டிக் கொள்ள, வெற்று முகமூடியை அணிந்து கொண்டு திரிகிறான் அகில்.
அப்படிப்பட்டவனிடம், வெண்பா உயிரோடு தான் இருக்கின்றாள் என்று சொல்லப்பட, அவனது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டானது அது தந்த பரபரப்பில், சட்டென்று எழுந்தவன், “உண்மையைத் தான் சொல்றியா ஆதி! நான் இப்போதே அவளைப் பார்க்கணும்” என்று ஆர்வம் தாங்காமல் வெளிப்படையாக அவனிடம் சொல்லியேவிட்டான் அகில்.
அவன் சொன்னதைக் கேட்ட ஆதியின் கண்கள் யோசனையாக சுருங்கியது. அகிலின் முகத்தில் தோன்றிய பரபரப்பைப் பார்த்தவன், “உன் நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்குது அகில். அவள் உயிரோடு இருக்கான்னு சொன்னதும் நீ எதுக்காக இவ்வளவு பரபரப்பாகுற?” என்றவன் தன் நெற்றியை நீவினான்.
உடனே தனது மனதை கட்டுப் படுத்திக் கொண்ட அகில், திரும்பவும் சோபாவில் அமர்ந்து, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆதி. செத்துப் போனவள் உயிரோட இருக்கான்னு நீ சொல்றதை என்னால் நம்ப முடியல. அந்த ஆர்வத்தில் தான் கேட்டேன்” என்று சொல்லி சமாளித்தான்.
“அவள் நிச்சயம் வெண்பா தான் ஆதி. ஆனா அவள் என்னைத் தெரிஞ்ச மாதிரியே கட்டிக்கல. எந்த நோக்கத்துக்காக என் வீட்டுக்கே வந்தாள்ன்னு தெரியல. ஆனா அவளை நான் சும்மா விடுறதா இல்ல” என்றவன் கண்களில் இருந்து தீப்பொறி பறந்தது.
இங்கே அகிலோ உணர்வுப் பிடியில் இருந்தான். ‘அவளுக்கு பழசெல்லாம் மறந்துடுச்சா!’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டான் அகில்.
அவன் முன்னே சுடக்கிட்ட ஆதி, “உன் யோசனை எல்லாம் தீவிரமா இருக்குது அகில்?” என்றான் ஆதி.
“வெண்பாவின் உடலை நான் பார்த்தேன் ஆதி. அப்படி இருக்கும் போது, அவள் உயிரோடு தான் இருக்காள்னு, நீ சொன்னதை என்னால் நம்பவே முடியல” என்றான் உள்ளே போனக் குரலில்.
“அது எனக்கும் நல்லாவே தெரியும் அகில். ஆனா அவளது நடை பேச்சு எல்லாமே வெண்பா மாதிரி தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே, தன் கையில் இருந்த மதுக்கோப்பையை, தன் முன்னே இருந்த மேஜையில் வைத்துவிட்டு, சோபாவில் இருந்து எழுந்தான் ஆதி.
அகிலின் மனதோ வெண்பாவைக் கேட்டு துடிக்க, தானும் அவனுடன் சேர்ந்து எழுந்தவன், “அவள் வெண்பா தான்னு, எப்படி அடிச்சி சொல்ற ஆதி?” என்று திரும்பவும் கேட்டான்.
“அதுக்காக அவள் வேற டைமென்சன்ல இருந்தா வந்துருக்கப் போறா?” என்று கேட்டு சிரித்தாலும், ஆதியின் மனதில் எரிமலைக் குழம்பு கொதித்துக் கொண்டு தான் இருந்தது.
தொடர்ந்து பேசிய ஆதி, “அவள் என் பார்வையில் இருந்து தப்பவே முடியாது அகில். கடைசியில என் இடத்துக்கே வந்துட்டு எனக்கே மனைவி ஆகிட்டாள்” என்று ஆதி சொல்லியதும், அவன் சொன்ன ‘மனைவி’ என்ற வார்த்தை, அகிலின் மனதில் நெருஞ்ச முள்ளாய் குத்தியது.
அது தந்த தாக்கத்தில், “உன் அப்பா, ஏதோ ஜோசியத்தைப் பார்த்து தான், உனக்குக் கல்யாணம் பண்ணி இருக்கார். அதைப் பதிவு கூட செய்யல” என்றான்.
“அதைப் பதிவு செய்யலைங்குற தைரியத்தில் தான் வெண்பா இருப்பாள். அதுக்குத் தான், நான் இன்னைக்கே அந்த திருமணத்தை பதிவு செய்யலாம்னு இருக்கேன்” என்று சொல்லி, அகிலின் இதயம் வலிக்கும் என்று தெரியாமலையே வலியைக் கொடுத்தான் ஆதி.
“அது நிஜமாகவே வெண்பாவா இருந்தாலும், அவளை அருகில் வச்சி இருக்க வேண்டாம் ஆதி. அவளை சிவப்பு மாளிகையில் இருந்து துரத்தி விட்டுரு” என்று ஆதியிடம் அகில் சொன்னாலும், அவனது மனது வெண்பா நலமாக சிவப்பு மாளிகையில் இருந்து சென்று விட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தது.
அதற்குப் பல்லைக் கடித்தவன், “அதெல்லாம் முடியாது அகில். என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே உனக்குத் தெரியும். என் இழப்புக்கு எல்லாம் காரணம் அந்த வெண்பா மட்டும் தான். அவளை எப்படி நான் சும்மா விடுவேன்” என்றான் குரலில் கனல் தெறிக்க.
“நிஜமாவே வந்துருப்பது வெண்பா தான்னா... உங்கிட்டவே எதுக்காக வந்து மாட்டாப்போறாள்? அதனால் தான் சொல்றேன் ஆதி. இதில் ஏதோ குழப்பம் இருக்கு. வெண்பா செத்துப் போயிட்டாள். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்” என்றவன் நினைப்பு அன்று முகம் முழுவதும் எரிந்த நிலையில் இருந்த பிணமாய் ஆன வெண்பாவைச் சுற்றி வர, அகிலின் மனதோ, ‘அப்ப அன்னைக்கு செத்தது என் வெண்பா இல்ல. அவள் நல்லாத் தான் இருக்காள்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.
அகிலும் ஆதி திருமணம் செய்திருப்பது, தான் காதலிக்கும் வெண்பாவைத் தான் என்று உறுதியாக நம்பியவன், முதன் முதலாக தன் உயிர் நண்பனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தான். அதனால் தான், வந்திருப்பது வெண்பா இல்லை என்று கூறி ஆதியைக் குழப்பத் தான் பார்த்தான்.
ஆனால் ஆதியோ, அவனுடன் பேசும் நிலையில் இல்லை.
அவனது தோளில் கைவைத்த ஆதி, “இன்னைக்கு நீ ரொம்ப குடிச்சிட்ட அகில். உன் பிஏ உனக்காக வெயிட் பண்றான். நீ கிளம்பு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
***
‘செத்துப்போன வெண்பா, திரும்பவும் எப்படி உயிரோட வரமுடியும்? முதல்ல செத்துப்போன மாதிரி எதுக்காக நடிச்சா?’ என்ற எண்ணம் தான் ஆதியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.
அதே நினைப்போடு தன் வீட்டிற்கு வந்தவன், நேராக இயலிசை இருக்கும் இடத்திற்கு தான் சென்றான்.
அவனை அங்கே பார்த்ததும், பதறிப்போய் எழுந்து நின்றாள் இயலிசை.
அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தவன், “நீ நிஜமாவே அனாதையா?” என்று கேட்டான்.
அவன் பேச்சைக் கேட்டதும் பயப்படுபவள் போல் மெதுவாக தன் தலையை ஆட்டியவள், “என் உயிரைக் காப்பாத்திக்குறதுக்குத் தான், நான் இங்க வந்துருக்கேன் சார். நான் உங்களுக்கு நிச்சயம் விசுவாசமான அடிமையாத் தான் இருப்பேன் சார்” என்றாள் தன் தலையைக் கீழே குனிந்து கொண்டபடி.
அவளை நெருங்கி வந்தவன், அவளது கன்னத்தைப் பிடித்துக் தூக்கி, “உன்னுடைய பெயர் என்ன?” என்றவனின் சூடான மூச்சுக் காற்று, அவளின் பட்டுப்போன்ற முகத்தில் கந்தகமாய் வீச, பெண்ணவலுக்கோ உள்ளுக்குள் திக்கென்ற உணர்வு உண்டானது.
உதடுகள் தந்தியடிக்க, “இய... இயலிசை...” என்று சொல்லியபடியே பின்னே செல்லப்போக, அவளை செல்ல விடாமல், அவளது மெல்லிய இடையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் ஆதி.
இயலிசையின் இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.
“எனக்காக வேலை பார்க்குறேன்னு சொன்னியே?” என்று அவன் கேட்க.
அவன் கையில் இருந்து விடுபட முயன்றபடியே, ”ஆமாம் சார். நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கத் தயாரா இருக்கேன்” என்று மடமடவென்று பேசினாள்.
அதற்கு தன் உதட்டை வளைத்து சிரித்தவன், அவளை அப்படியே தூக்கிக் கட்டிலில் கிடத்தினான்.
இயலிசையின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. முழுவதுமாக இந்த அடிமை வாழ்க்கைக்குள் வந்த பிறகு, ஒவ்வொரு கயவர்களிடம் இருந்தும் தன்னைத் தானே காத்து வந்தவளுக்கு, ஆதியிடம் மாட்டியதும் அவளின் நிலை, வலையில் வசமாக சிக்கிக் கொண்ட மீனாய் மாறியது.
ஆதியைப் பற்றிக் கேள்விப்பட்டு தான், அவள் அவனருகில் இருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருந்தாள். ஆனால் ஆதி இப்போது தன்னிடம் அத்து மீறுவதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அந்த சிவப்பு மாளிகையில் இருக்கும் அடிமைகள் அனைவருக்கும் என்ன நடந்தாலும், யாரும் கேட்க வரமுடியாது. இதில் ஆண் அடிமைகளும் அடக்கம் தான்.
அவன் அவளைக் கட்டிலில் கிடாசியதும், மெத்தையை இறுக்கமாகப் பற்றியவள், அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்குத் தாவினாள்.
குனிந்து அவளது முகத்தை ஊற்றுப் பார்த்த ஆதி, அவள் சுடிதாரின் டாப்ஸை மேல்வாக்கில் தூக்கினான்.
அதில் துள்ளி குதித்து எழுந்தவள், “என்ன சார் பண்றீங்க? நான் கேவலமான அடிமை” என்றாள் படபடப்பாக.
இருதயத்தின் அடிவாரத்தில் இருந்து, கனல் தெறித்தக் குரலோடு, “இங்க அடிமைகளுக்குப் பேச, எந்த ஒரு தகுதியும் இல்ல” என்று கர்ஜித்தான்.
அவனது பேச்சு நிஜமாகவே இயலிசையின் மனதில் பயத்தை வரவழைத்தது. அவள் நாவறண்டு போய், பேச்சே வரவில்லை.
அவளது தோளைப் பிடித்துக் கட்டிலில் தள்ளியவன், அவசர அவசரமாக பெண்ணவளின் மேலாடையைக் கழற்றித் தூக்கி எறிந்தான்.
சிற்பிகளோ, காலத்தால் காணாமல் போயிருக்க, அவர்கள் படைத்த பெண்களின் சிலை, பூமியில் அழகாய் இருப்பது போல் தான், இயலிசையும் இருந்தாள்.
ஆனால் அவள் சிலை இல்லையே! ரத்தம் மற்றும் சதையுடன் தனது கோப உணர்வுகளை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பெண்ணாயிற்றே!
இயலிசை, தன் தாயின் கருவறையில் இருக்கும் போதே, பல வித போராட்டங்களை அனுபவித்தவள். இப்போது மட்டும் தனது போராட்டத்தைக் கைவிடவா போகின்றாள்?
ஆதி அவசர அவசரமாக அவளது மேலாடையைக் கழற்றி எறிய, தன் சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி அவனது முகற்றில் குத்துவிட முயன்றாள் பெண்ணவள்.
ஆனால் அதற்குள், அவனே அவளை விடுவித்தான். எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், அங்கிருந்து வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை பயங்கர சத்ததுடன் சாற்றினான் ஆதி.
அவனது செயல்களை எல்லாம் இயலிசை உணர்ந்து கொள்ளவே அவளுக்கு சில கணங்கள் பிடித்தது.
பின், நடப்புக்கு வந்தவள், வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து, அவன் தூக்கி எரிந்து விட்டு சென்ற, தனது மேலாடையை வேகமாக மாட்டிவிட்டு, ‘இவன் என்ன பைத்தியமா? இப்ப எதுக்காக இப்படி செஞ்சான்னு தெரியலையே!’ என்று நினைத்துப் புலம்பினாள்.
அவள் அதிக நேரம் யோசித்துப் பார்த்ததில், ‘பார்த்தா, காமூகன் மாதிரியும் தெரியல. இவன் என்கிட்ட எதையோ தேடி இருக்கான். ஒருவேள அந்த நிஷா சொன்னதைக் கேட்டு, நான் எதையாவது திருடி இருப்பேன்னு நினைச்சிட்டானோ!’ என்றவள் மனது தேவை இல்லாத ஒன்றை தான் யோசித்தது. ஆனால் ஆதி தேடியதோ வேறு. அவன் தேடியது அவனுக்குக் கிடைத்ததும் தான், அவன் சிறிது நேரம் கூட அங்கில்லாமல் கிளம்பி தன் அறைக்குள் சென்றான்.
இங்கோ தன் குளியல் அறையில், ஷவரின் கீழே நின்று இருந்த ஆதியின் கண் முன்னே, இயலிசையின் நாபியின் அருகே இருந்த மச்சம் தான் பிம்பமாய் அவன் முன்னே வந்து நின்றது.
இயலிசையின் வாயிற்றில் நாபியின் அருகே இருந்த மச்சம் ஆதிக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
ஆதியின் உயிர் நண்பனான அகில், இவனிடம் இருந்து, வெண்பாவை பற்றிய தனது நினைப்பை மறைப்பது போல். ஆதியிடமும், அகிலிடம் இருந்து மறைக்க ரகசியம் இருந்தது.
முக்கோணக் காதல் போல் அவர்களை இணைக்கும் புள்ளியாக வெண்பா அதாவது இயலிசை இருந்தாள். அதற்கும் நடுவே தான் இருந்தான் அவளது கணவன் விமல்.
ஷவரில் நின்றபடியே, பல்லைக்கடித்து, தன் சிகையைக் கோதி விட்ட ஆதி, “நீ சொல்றது எல்லாம் நிஜம் தானா? நிஜமாவே எல்லாத்தையும் மறந்துட்டியா நீ... என்ன ஆனாலும் சரி, இனி நீ சாகுற வரைக்கும் என்னுடைய அடிமை தான் வெண்பா” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் உடையை அணிந்து விட்டு, மறுபடியும் இயலிசையின் அறைக்கு வந்தான்.
அவனைப் பார்த்ததும், தன்னைப் பயந்தவள் போல் காட்டிக் கொண்டாள் இயலிசை.
அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவன், அவளது சாதாரண பார்வையைப் பார்த்து, ‘அந்த சைக்கோ விமலிடம் இருந்து எப்படி தப்பிச்சி இங்க வந்த’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன், அவளைப் பார்த்து, “வெளிய போகணும் என்கூட வா” என்று சொல்லிவிட்டு முன்னே சென்றான்.
இயலிசையும் அவனது வேகத்திற்கு, கிட்டத்தட்ட அவன் பின்னால் ஓடினாள்.
அவன் தனது காரில் ஏறி அமர்ந்ததும். அவன் அருகில் இருந்த இருக்கையில் வேகமாக ஏறி அமர்ந்து கொண்டாள் இயலிசை.
தானே காரை ஸ்டார்ட் செய்து, ஸ்டியரிங்கில் தனது கையை வைத்தவன், திரும்பிப் பார்க்காமல், “சீட் பெல்ட் போடு” என்றான் கட்டளையாக.
உடனே பதறியவள் போல், சீட் பெல்ட்டைத் தேட ஆரம்பித்தவள், அது கிடைத்ததும், அதனை எப்படி போடுவது என்று தெரியாமல் விழித்தாள்.
அதனைக் கண்டவன், ‘என்னை மறந்துட்ட சரி, ஆனா இதெல்லாம் நீ மறந்த மாதிரியே தெரியலையே!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவளிடம், “இப்ப என்ன நானே உனக்கு அதைப் போட்டு விடணுமா?” என்றான் பல்லைக் கடித்தபடி.
“இல்ல... இல்ல சார் எனக்கு இதெல்லாம் போடத் தெரியாது. நான் முன்ன பின்ன இதில் எல்லாம் போனது கிடையாது” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.
அவள் அப்படி சொல்லியதும், வெளிநாட்டுக் கார்கள் எல்லாம், அவள் கையில் பறந்தது தான் ஆதியின் நியாபகத்திற்கு வந்தது. இருந்தும் அவளிடம் அவன் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
‘வெப்சீரீஸ்ல வர்ற மாதிரி, இவன் பாட்டுக்கு சீட் பெல்ட் போட்டுவிட வருவானோ’ என்று அவள் யோசிக்க, ஆதியோ, அதனைப் பற்றி எதுவும் பெருசாக எடுத்துக் கொள்ளாமல், தனது காரை இயக்க ஆரம்பித்தான். இயலிசையோ, “சார், நான் சீட் பெல்ட் போடல” என்று சொல்லி அவன் முகத்தைப் பார்க்க, அவனோ, “பாதுகாப்புக்குத் தான் சீட் பெல்ட். உன்னை மாதிரி அடிமைக்கு அதெல்லாம் தேவை இல்லைன்னு தெரியாமல், முதல்ல நான் சொல்லிட்டேன்” என்று சொல்லி சாலையில் தன் கண்ணைப் பதித்தான்.
அப்போது காரின் டேஷ்போர்ட்டில் இருந்த அவனது அலைபேசி அலறியது. அகில் தான் அழைத்து இருந்தான்.
தன் காற்சட்டைப் பையில் இருந்து, ப்ளூடூத்தை எடுத்து, தன் காதில் மாட்டியவன், இணைப்பை அழுத்தி அவனுடன் பேச ஆரம்பித்தான்.
அகில் எடுத்ததுமே, “எங்க இருக்க ஆதி? இப்ப நான் உன் வீட்டில் தான் இருக்கேன். உன்னைக் கேட்டதுக்கு நீ வெளிய போயிருக்குறதா சொன்னாங்க” என்று மடமடவென்று பேசினான்.
“ஆமாம். என்ன விஷயம் அகில்?” என்றான் ஆதி. என்ன தான் தோழர்களாக இருந்தாலும், ஏதாவது தேவை இருந்தால் தான் மட்டுமே ஆதியின் சிவப்பு மாளிகைக்குள் அடியெடுத்து வைப்பான் அகில். அந்த எண்ணத்தில் தான் அப்படிக் கேட்டான் ஆதி.
“ஒன்னும் இல்ல. உன் அப்பாவைப் பார்த்துட்டு வர சொல்லி என் அப்ப அனுப்பினார். அதான் அப்படியே உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு நினைச்சேன்” என்ற அகில் உண்மையிலையே இயலிசையாக இருக்கும் வெண்பாவைப் பார்க்கத் தான் அங்கே வந்திருந்தான்.
அங்கே வேலையாட்கள் மூலம், இருவரும் வெளியே சென்று இருப்பதை அறிந்தவன், வெண்பாவின் நினைப்பைத் தாங்கமாட்டாமல் தான், ஆதிக்கு அழைத்து இருந்தான்.
“இன்னும் ஒரு மணி நேரத்துல, நாம எப்போதும் போற பப்புக்கு வந்துரு அகில்” என்று சொல்லிவிட்டு வைத்தான் ஆதி.
அந்த இரவு வேளையில் இயலிசையை அழைத்துக் கொண்டு, தன் திருமணத்தைப் பதிவு செய்யத் தான், அந்த அரசு அலுவலகத்திற்கு வந்திருந்தான் ஆதி.
அவள் வெண்பா தான் என்று எப்போது உறுதி செய்தானோ, அந்த நிமிடத்திலையே திருமணத்தை இப்போதே பதிவு செய்துவிட வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டுத் தான், அவளை அழைத்துச் செல்கின்றான்.
ஆதியின் ஒரே ஒரு கண் அசைவில், அந்த இரவு வேளையிலும் அரசாங்க அதிகாரிகள், அனைத்து வேலையையும் செய்து முடித்தனர். திருமணத்தைப் பதிவு செய்ய, இயலிசையின் பெயரில் தவறான தகவல்களை வைத்து நியாயமான ஆதார் கார்ட் முதற்கொண்டு எடுக்கப்பட்டது.
அங்கே சென்றதுமே, அங்கே நடப்பது எல்லாம் அவளுக்குப் புரிந்துவிட்டது.
‘இப்ப எதுக்காக இவன் இப்படி எல்லாம் செய்யுறான்’ என்று நினைத்தவள் சிறிது நேரம் கழித்து, ‘இதனால் என்ன பிரச்சனை வந்துவிடபோகிறது? என் வேலை முடிஞ்சதும், நான் இங்க இருந்து போகத் தானே போறேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள், அதிகாரிகள் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டாள்.
அவர்கள் சொன்ன இடத்தில், ஆதியும் கையெழுத்துப் போட்டு முடிக்க, பின் அவளைக் கூட்டிக்கொண்டு, தான் வழக்கமாக செல்லும் பப்பிற்குள் நுழைந்தான்.
அங்கே சென்றதும் அதிக சத்ததுடன் அதிர்ந்து கொண்டிருந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்து தான் போய்விட்டாள் இயலிசை.
அடிக்கடி இது போன்ற இடத்திற்கு எல்லாம் செல்பவள் தான் இயலிசை. ஆனால், அவள் இப்போது அந்த இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போனதுக்கு வேறு ஒரு காரணம் இருந்தது.
ஆதியின் வருகைக்காக, எப்போதும் தாங்கள் அமரும் அதே இடத்திலையே அமர்ந்து அவனுக்காகக் காத்துக் கொண்டு இருந்தான் அகில்.
அப்போது தான், ஆதிக்குப் பின்னால், பயந்த தோற்றத்துடன் வெண்பா வருவதைப் பார்த்து, அப்படியே அதிர்ச்சியில் எழுந்து நின்றான் அகில்.
அவன் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. வெயிலால் வறண்டு போய், வெடித்த கரிசல் நிலமாக இருக்கும் அவனது மனதில், சாரல் விழுந்து குளிர்விப்பது போல் இருந்தது வெண்பாவின் வருகை.
ஆதி அகிலின் அருகே வந்து அமர்ந்தவன், “உட்காரு அகில்” என்றவன், அவனது கையைப் பிடித்து இழுத்து, தன் அருகே அமரவைத்தான்.
ஆனால் தன் கையைப் பிசைந்து கொண்டே நின்று இருந்த இயலிசையை அவன் அமர சொல்லவே இல்லை. அவளின் மனதில், பல வித சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்தது. அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து, அவளை ஒரு ஜோடி காஜலிட்ட கண்கள் வெறித்துக் கொண்டே இருப்பதை அவளும் அறிந்து தான் இருந்தாள்.
அகிலின் முகத்தில் எந்த வித உணர்வுகளும் இல்லை. ஆனால் அவனது மனதில் பல முடிச்சுகளுக்கு தீர்வு கிடைக்கப் படாமல் சிக்குண்டு கிடந்தது.
அகில், வெண்பாவையே பார்ப்பதைக் கண்ட ஆதி, ‘செத்துப்போனவள் உயிரோடு எப்படி வந்தாள், என்ற நினைப்பில் அகில் இருக்கின்றான் போல’ என்று நினைத்துக் கொண்டான் ஆதி.
இயலிசையையே நோக்கிக்கொண்டு இருந்த அந்தக் கண்கள், இப்போது வாஷ் ரூமை நோக்கிச் சென்றது. அதனை குறிப்பால் உணர்ந்து கொண்ட இயலிசை, “நா... நான் வாஷ்ரூம் போகணும் சார்” என்று பயந்து கொண்டே ஆதியிடம் கூறினாள்.
“சரி” என்று தன் தலையை ஆட்டியவன், “இங்கிருந்து தப்பிச்சுப் போகணும்னு நினைச்சா, உன் உயிர் உன்கிட்ட இல்ல... அதை நியாபகத்தில் வச்சிக்கோ” என்று மிரட்டிவிட்டே அவளைச் செல்ல அனுமதித்தான் ஆதி.
அவள் சென்றதும் அப்போது தான் உயிர் வந்தவன் போல், ஆதியைப் பார்த்த அகில், “என்னால் இன்னும் நம்பவே முடியல ஆதி. வெண்பாவுக்கு நிஜமாவே நம்மளை எல்லாம் மறந்து போச்சா? முதல்ல, இவள் நிஜமாவே வெண்பா தானா?” என்று கேட்டான்.
உடனே, வீட்டில் வைத்து அவள் உடம்பில் பார்த்த ஒற்றை மச்சம் தான், ஆதியின் கண் முன்னால் வந்து நின்றது. அந்த நினைப்பை ஒதுக்கு வைத்தவன், “உனக்கு இன்னும் சந்தேகமா இருக்குதா?” என்று கேட்டான் ஆதி.
“நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. நான் அன்னைக்குப் பார்த்த எரிந்த உடல் வெண்பா உடையது இல்லையா?” என்று யோசனைக்குள் சென்றான் அகில்.
“அவளுக்கு எதுவுமே நியாபகம் இல்லைனாலும், ஏதோ கேம் விளையாடத் தான் அவள் என் இடத்துக்கே வந்துருக்காள் அகில்” என்று உறுதியாக சொன்னான் ஆதி.
ஆதியிடம் இருக்கும் ரகசியம் தெரியாததால் அகிலோ, ‘ஆதி அவளைப் பழி வாங்கத் தான் கல்யாணம் பண்ணி இருக்கான். இவன் அவளைக் கொடுமை படுத்துறதுக்கு முன்னாடி, எப்படியாவது சிவப்பு மாளிகையில் இருந்து, நான் வெண்பாவைக் காப்பாத்தி, இங்கே இருக்குற எல்லாத்தையும் விட்டுட்டு, அவளைக் கூட்டிக்கிட்டு வெளிநாடு போயிடணும்’ என்று நினைத்துக் கொண்டான்.
ஆதியோ, “முன்னாடி உன்னைக் காதலிச்ச அதே மனசு தான், இப்ப உன்னைக் கொல்லணும்னு துடிக்குது வெண்பா... ஆனா உன்னை உடனே சாகடிக்க மாட்டேன். அணு அணுவா சித்திரவதை செஞ்சி தான் உன்னைக் கொல்லுவேன்’ என்று சிவப்பேறிய கண்களுடன் தன் கையில் இருந்த மதுக்கோப்பையைப் பார்த்தபடி நினைத்துக் கொண்டான்.
அந்த பப்பில், டிஜேயின் துடிக்கும் பீட்ஸ்சுடன், இயலிசையின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
அவளுள் ஏற்பட்ட பயங்கள் அனைத்தும், அவளை நிலைகுலைய வைத்தது. அங்கே குடிப்பவர்களின் கலகலப்பான சந்தோஷக் குரல்கள், கிளாஸ்களின் கிளிங் ஒலி எதுவும் இயலிசையின் காதில் விழவில்லை. அவள் மனதிலோ பல போராட்டங்கள் அவளை சுழற்றி அடிக்க, ஆதியிடம் தான் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பரிதவிப்பு வேறு இருந்தது.
அந்த இடமே இருட்டாக இருக்க, அங்கே மேலே தொங்கவிடப்பட்டு இருந்த, டிஸ்கோ பால், ஆயிரம் முனைகளில் சிதறிய வெயில் போல சுழன்று சுழன்று பல வித வண்ணங்களில் ஒளியைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மேலும் மேஜையில் ஸ்பார்க்கிளிங் விளக்குகள் அங்கே ஒளி கொடுத்துக் கொண்டு இருந்தன.
இந்த இரண்டு வெளிச்சமும் தான், அதனுள் இருக்கும் வாஷ்ரூமிலும் ஒளி கொடுத்துக் கொண்டு இருந்தன. டிஜேவின் ஒலியோ, உள்ளே வரைக் கேட்டது.
ஆதியிடம் சொல்லிவிட்டு, அங்கே வந்த இயலிசையின் முன்னால் வந்து நின்றாள் ஒரு இளம்பெண், உள்ளே வந்ததில் இருந்து இயலிசையைப் பார்த்துக் கொண்டே இருந்த காஜலிட்ட கண்களுக்கு சொந்தக்காரி தான், இந்தப்பெண்.
அவளைப் பார்த்த இயலிசை, தன் வாயைத் திறப்பதற்குள் முந்திக்கொண்ட அந்தப்பெண், “இன்னும் வேலைய முடிக்கலையா நீ?” என்று அதிகாரக்குரலில் கேட்டாள்.
இயலிசை இவளைப் பார்த்துப் பயந்தாளா? இல்லை எரிச்சல் அடைந்தாளா? என்பது எதுவும் அவள் முகத்தில் இருந்து தெரியவில்லை. ஆனால் இப்போது முகத்தை மட்டும் சாதாரணமாக வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் இயலிசை, “ஏன் நான் முடிக்க மாட்டேன்னு நீ நினைக்குறியா?” என்று கம்பீரமாக வந்தது இயலிசையின் குரல்.
அதற்கு நக்கலாக சிரித்துக் கொண்ட, அந்தப்பெண் மது, “நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!” என்றாள்.
அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்ட இயலிசை, “உன்கிட்ட எல்லாம் தகவல் சொல்லணும்னு எனக்கு எந்த ஒரு அவசியமும் இல்ல” என்று சூடாக வந்தது வார்த்தைகள்.
உடனே மூக்குவிடைக்கப் பேசிய மதுவோ, “உன் நிலை என்னன்னு தெரியாம நீ பேசாத. இப்ப நீ பேசுற நிலையில் இல்ல” என்று சொல்லிவிட்டு, இயலிசையை மேலும் கீழுமாகப் பார்த்தவள், இளக்காரமாய் சிரித்தபடி, “ஒரு அடிமைக்கு உரிய பொருத்தம் எல்லாம் உன்கிட்ட கனக்கச்சிதமாக இருக்கு” என்றாள்.
இங்கே உள்ளே வரும் போதே, மதுவைப் பார்த்தவுடன், ஏதோ விபரீதமான அபாயம் நேரப் போகிறதென்று இயலிசையின் மனதில் பட்டது. அதனால் மதுவுடன் வாக்குவாதம் செய்ய அவள் நினைக்கவில்லை.
அவளது அமைதியைப் பார்த்து, “டார்க் குயின், தி கிரேட் இயலிசை வெண்பாவுக்கு என்ன தான் ஆச்சு?” என்று அவள் கேட்டு முடிக்கவும், அந்த இடத்திற்கு யாரோ கதவைத் திறந்து வரவும் சரியாக இருந்தது.
ஆனால் அங்கே வந்தப் பெண் ஒருத்திப் போதையில் இவர்களைக் கண்டு கொள்ளாமல் செல்லவும் தான், இயலிசைக்கு மூச்சே வந்தது.
அதனைக் கண்ட மதுவின் கண்கள் இயலிசையின் நிலையை நினைத்து சிரித்துக் கொண்டது.
மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்ட இயலிசை, மதுவைப் பார்த்து, “இப்ப உனக்கு என்ன தான் வேணும்? எதுக்காக என்னை இங்க வரச்சொன்ன?” என்றாள் வேகமாக.
உடனே தன் அலைபேசியை அவள் முன்னால் நீட்டிய மது, “ம்... பேசு” என்றாள் கட்டளையாக.
இயலிசை அவளிடம் இருந்து, அதை வாங்கி காதில் வைத்ததுமே, “சொன்ன வேலையை இன்னும் முடிக்காமல் என்ன செஞ்சிக்கிட்டு இருக்க?” என்று அந்தப்பக்கம் நாரகாசமாய் கேட்டது ஒரு வயது முதிர்ந்த ஆணின் குரல்.
அதனைக் கேட்டு சற்றும் பயப்படாமால், “கொஞ்சமும் என் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல், நான் அந்த இடத்துக்குப் போயிருக்கேன். நீங்க கேட்டது கிடைக்குற வரைக்கும், எனக்குக் கொடுத்த வாக்கை நீங்க காப்பத்துவீங்கன்னு நம்புறேன்” என்று இயலிசையும் ஆளுமையான குரலில் பேசினாள்.
“வேலையை முதலில் முடி” என்று சொன்னதுடன், அந்தப்பக்கம் இணைப்பு அணைக்கப்பட்டது.
இயலிசை, தன் காதில் வைத்திருந்த அலைபேசியை வெடுக்கென்று பறித்த மது, “அப்பா சொன்னது எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கும்னு நம்புறேன்” என்றாள் தன் உதட்டை வளைத்தபடி.
அவள் மனதிலோ, ‘அப்பாக்கிட்ட நீ மாட்டவில்லை என்றாலும், அந்த சிவப்பு மாளிகை உன்னை சும்மாவே விடாதுடி. உன் சாவு ரொம்பவே கொடூரமா இருக்கப்போகுது’ என்று நினைத்துக் கொண்டாள் மது.
“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். நான் இப்ப தான், கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிட்டு வரேன்” என்றாள் இயலிசை.
“அது எங்களுக்குத் தேவை இல்லாதது இயல். நீ உயிரோடு இல்லாமல் போனால் கூட, நீ சொன்னதை நிறைவேற்ற தான் செய்யணும். உன் விதி எவ்வளவு கேவலமா எழுதப்பட்டு இருக்குன்னு பார்த்தியா!” என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள் மது.
நெஞ்சில் திடத்துடன், தன் கையை குறுக்காகக் கட்டிக் கொண்ட இயலிசை, “என் விதி கேவலமா இருந்தாலும், நான் உன்னை மாதிரி கேவலமான பிறப்புக் கிடையாது மது” என்று சொல்லி அவளுக்குத் திருப்பிக் கொடுத்தாள்.
அடக்கமுடியாத கோபத்துடன் தனது பல்லைக் கடித்த மது, “வார்த்தைகளை ஒழுங்கா பயன்படுத்திப் பேசு இயல். நான் உனக்குத் தங்கச்சி” என்றாள்.
அதனைக் கேட்டு அசட்டாக சிரித்த இயலிசை, “தங்கச்சியா? நீ என்ன என் அம்மாவுக்காப் பிறந்த? முறை தவறி பிறந்தவள் தானே நீ” என்று சொல்லிவிட்டு, அங்கே இருந்து வேகமாக வெளியேறினாள் இயலிசை.
செல்லும் இயலிசையின் முதுகைப் பார்த்து, பல்லைக் கடித்தபடி இரண்டு ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை மட்டுமே முணுமுணுக்க முடிந்தது மதுவால்.
வாஷ்ரூமில் இருந்து வெளிவந்தவளைப் பார்த்த ஆதி, “இவ்வளவு நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” என்று சந்தேகத்தோடுக் கேட்டான்.
அவள் தனது வாயைத் திறப்பதற்குள் முந்திக்கொண்ட அகிலோ, “ஆதி பெண்களுக்குப் பல வித பிரச்சனைகள் இருக்கும். இதெல்லாம் எதுக்குக் கேட்டுக்கிட்டு இருக்க” என்றான் ஆதியின் முதுகில் கைவைத்தபடி.
இயலிசை மிரண்டு போய் நிற்பதைப் பார்த்த ஆதிக்கு, முன்பு தன்னுடன் இருக்கும் போது, அவள் ஒரு பாட்டிலை அப்படியே ராவாக தன் வாயில் சரித்தது தான் நியாபகத்திற்கு வந்தது.
தன் தோள்களைக் குலுக்கி அந்த நினைப்பை அப்புறப்படுத்தியவன், தன் காற்சட்டைப் பையில் இருந்து, தனது கார் சாவியை அவள் முன்னால் நீட்டி, “கார்ல போய் உட்காரு” என்றான்.
அதனை வாங்கிக்கொண்டு, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து ஓடினாள் இயலிசை.
செல்லும் அவளைப் பார்த்துவிட்டு, அப்படியே ஆதியைப் பார்த்த அகில், “வெண்பா, உடைய முழுப்பெயர் இயலிசை வெண்பாவா இருக்கலாம் ஆதி” என்றான்.
“அது எனக்குத் தெரியும் அகில். விமல் எங்க போய்த் தொலைஞ்சான்னு உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான் ஆதி.
அதற்கு மறுப்பாக தன் தலையை ஆட்டியவன், “தெரியல ஆதி”
“அப்ப அவனைக் கண்டுபிடி. அவன் சுதந்திரமா நடமாடுறது யாருக்குமே நல்லது இல்ல” என்றான் முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு.
“சரி ஆதி” என்றவன் தீவிர யோசனைக்குள் சென்றான்.
அவனைப் பார்த்த ஆதி, “வெண்பாவை எப்படி அந்த விமல் விட்டான்னு யோசிக்குறியா அகில்?” என்க, அவனோ, “ஆம்” என்று தன் தலையை ஆட்டி, “வெண்பா மேல ரொம்பவே பொசசிவ்வா இருந்தான் ஆதி. அவளை எங்கயுமே தனியா விட மாட்டான். வெண்பாவோட படத்தைக் கூட தன் நெஞ்சில் பச்சைக் குத்தி இருந்தான்” என்று அகில் சொல்லும் போதே, விமலின் மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கியது.
அவனுக்குக் கொஞ்சமும் சலைக்காத கோபத்தில் தான் விமலின் செயல்களைக் கேட்டுக் கொண்டு இருந்தான் ஆதி.
இப்போது மெதுவாக தனது தொண்டையை சொரும்பிக் கொண்ட அகில், “வெண்பா பிறந்ததில் இருந்தே அதிகமான கஷ்டங்களை அனுபவிச்சு இருக்காள் ஆதி. போதாததுக்கு அந்த சைக்கோ விமலை வேற கல்யாணம் பண்ணி, என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிச்சாளோ... இதில் நாம வேற மறுபடியும் அவளைக் காயப்படுத்த வேண்டாம். அவளை சிவப்பு மாளிகையில் இருந்து அனுப்பிடலாம் ஆதி” என்று அவனுக்குப் புரிய வைக்கப் பார்த்தான் அகில்.
சிவப்பு மாளிகையில் வெண்பாவை விட்டுவைக்கக் கூடாது என்று முதலிலையே நினைத்த அகில். அவளைத் தப்பிக்க வைப்பதற்கு முன்பு ஒரு தடவை, ஆதியிடம் இதனை மெதுவாக எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம் என்ற நினைப்பில் தான் பேசினான்.
ஆனால் அகில் பேசப் பேச ஆதியின் ஆத்திரம் அதிகமானது. அதில் தன் கையில் இருந்த மதுக்கோப்பையில் இருந்த மது கீழே சிந்தும் வண்ணம் பொத்தென்று, மேஜையில் கோப்பையை வைத்தவன், “என் அம்மாவைக் கொலை செய்த கொலைகாரி அவள். இது தெரிஞ்சிருந்தும் எப்படி நீ இது போல் எல்லாம் பேசலாம்” என்று வெடித்து சிதறினான் ஆதி.
***
இங்கே வெளியே செல்லப்போன, இயலிசையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாக வந்தாள் மது.
அவளது கையைத் தட்டிவிட்ட இயலிசை, “மறுபடியும் எதுக்காக வந்த?” என்று சிடுசிடுவென்று கேட்டாள்.
“நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே, நீ பாட்டுக்குப் போயிட்ட... சரி அது இருக்கட்டும், நீ எப்படி இந்த இடத்துக்கு வந்த? சிவப்பு மாளிகையில் உள்ள அடிமைகள் யாரையும் வெளிய கூட்டிட்டு வர்றது இல்லையே! அந்த ரெண்டு பேர் உள்ள உட்கார்ந்து இருக்காங்களே, அவனுங்க யாரு? பார்த்தா, சிவப்பு மாளிகையை சேர்ந்த வேலையாட்கள் மாதிரி தெரியலையே” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அவள் முன் அடுக்கி வைத்தாள் மது.
“அதில் ஒருத்தன், சிவப்பு மாளிகை ஆதி” என்றாள் இயலிசை.
அதனைக் கேட்டு தன் கண்களை விரித்துக் கொண்டவள், ‘ஆதியா! அவன் கூட இவள் எப்படி! பார்க்க அழகா இருக்குறதுனால தன் அழகைக் காட்டி மயக்கிட்டாளோ ஆதியை... அப்ப அப்பா சொன்ன வேலையை சீக்கிரமா முடிச்சிடுவாளா?’ என்று தன் மனதிற்குள் அதிர்ந்தவள், ‘இல்ல... இதை நான் நடக்கவே விட மாட்டேன். அந்த சிவப்பு மாளிகை உனக்கு சமாதி கட்டும் இடமா மட்டும் தான் இருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டு, வெளியே சிரித்தபடி, “அப்ப வேலை சீக்கிரமே முடிஞ்சிடும் அப்படித் தானே!” என்றாள்.
அதற்கு எதுவும் பேசாத இயலிசை, “உன் அப்பாகிட்டப் போய் சொல்லிடு. இன்னும் ஒரு வாரத்தில் அவர் சொன்ன வேலையை முடிச்சிட்டு வந்துடுறேன்னு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
மனம் முழுவதும் இயலிசை மேல் வஞ்சனைகளை சுமந்து கொண்டு திரியும் மது, வன்மமாக சிரித்துக் கொண்டே, உள்ளே ஆதியை நோக்கிச் சென்றாள்.