அத்தியாயம் 7
அலங்காரம் செய்ய முற்பட்ட அத்தையிடம்.
"எதுக்கு அத்தை இப்போ இதெல்லாம், எனக்கு ஒரு மாதிரி சங்கோஜமா இருக்கு"
என்றாள் தவிப்பாக.
"இதெல்லாம் ஒரு முறை மா செஞ்சு தான் ஆகணும், இன்னும் நம்ம வீட்ல சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க அவங்க எல்லாம் பார்த்தா ஏதாவது பேசுவாங்க. அவங்களுக்கு முன்னாடி நடிக்கவாவது நாம இதையெல்லாம் செஞ்சு தான் ஆகணும், உள்ள போனபிறகு, என்ன நடக்கணும்னு முடிவு பண்ண போறது நீயும் உன் புருஷனும் மட்டும்தான்.
அதனால எதைப் பத்தியும் கவலைப்படாம, யோசிக்காமல் கொஞ்ச நேரம் சொல்றபடி நடந்துக்கோ ரூமுக்குள்ள போற வரைக்கும் தானே. சில நேரங்களில் சில இடங்களில் நடிச்சிக்க தான் வேணும்"
"இருந்தாலும் உள்ள என்ன நடக்கும்னு எல்லாரும் யோசிப்பாங்க தானே, அதுவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு."
"எல்லோரோட கற்பனையையும் நாம தடை செய்ய முடியாதுல்ல..?"என்றவரின் கேள்விக்கு
"ஆமா, அதுவும் சரிதான், ஒவ்வொருத்தர் மனசுக்குள்ள புகுந்து அப்படி நினைக்காதீங்க, நினைக்காதீங்கன்னு நம்ம சொல்லவா முடியும்?.." என்று சலிப்பாக கூறியவள்,
"ஆனாலும் வேறு எந்த அலங்காரமும் வேண்டாம் அத்தை? பூ மட்டும் வெச்சு விடு போதும், இந்தப் புடவை சாயந்திரம் தான் கட்டினேன் நல்லா தான் இருக்கு இப்படியே விட்டுவிடு ப்ளீஸ்…" என்று தன்னிடம் கெஞ்சுபவளை அதற்கு மேல் தொல்லை செய்யாமல் அவள் கூறியபடியே பூவை மட்டும் அளவாக அவள் தலையில் வைத்து அவள் கட்டிருந்த புடவையோடு பூஜை அறைக்கு அழைத்து வந்தவள்
"நல்ல சாமிய கும்பிட்டுக்கோ, அப்படியே வெளியில வந்து தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி நம்ம தாத்தாவுடைய தம்பி சின்னத் தாத்தா அவங்க மனைவி அந்தப் பாட்டி அதுக்கப்புறம் பக்கத்துல யார் எல்லாம் இருக்காங்களோ எல்லாரும் கால்லையும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.. நடிக்கிறது என்று ஆயிடுச்சு அத சிறப்பா செஞ்சிருவோம், கடைசியாக என் காலில் கூட விழுந்துட்டு போலாம் தப்பில்லை." என்றாள் சிரித்தபடி,
"சரிதான் அத்தை நீ சொல்ற மாதிரி எல்லார் கால்லையும் பொறுமையா விழுந்து எழுந்துகிறேன் அதிலேயே நேரம் போயி விடிஞ்சிடும். இந்தச் சம்பவத்துக்கே அவசியம் இல்லாம ஆயிடும் எப்படி நம்ம ஐடியா." என்றாள் கண்ணடித்துக் கொண்டே அத்தைக்கு நிகராக, இவர்கள் பூஜை அறையில் நின்று வழக்கடித்துக் கொண்டிருக்க இவர்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதைக் கண்ட பாட்டி,
"ஏ த்தா! என்ன முடிஞ்சுதா? இல்லையா? நேரமாவது பாருங்க, இன்னும் எவ்வளவு நேரம் உள்ளயே நிப்பீங்க ரெண்டு பேரும். வெரசா வாங்க த்தா" என்றார் பூஜை அறை வாசலிலிருந்து சத்தமிட்டபடி, அவரின் குரலில் திடுக்கிட்டவர்களாக இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியேறினார்கள்.
அத்தை கூறியது போல அனைவரின் காலிலும் விழுந்து எழுந்தவள் அனைவரிடமும் நெற்றி முத்தத்தைப் பெற்றுக் கொண்டாள்,
உறவினராக வந்த சின்னப் பாட்டி மட்டும்
"சீக்கிரமா ஒரு பையனையோ, பொண்ணையோ பெத்து குடு." என்ற படியே அவள் நாடியை பிடித்து வழித்தெடுத்து கைகளை நெற்றியில் ஒற்றி சொடுக்கு எடுத்துக் கொண்டார். அவரை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே அத்தையின் கால்களிலும் விழுவதற்கு சென்றவளை இறுக அணைத்துக் கொண்டாள் நிவிதா.
"கவலைப்படாம போ! உன் மனசுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும்." என்றவளின் குரல் கரகரத்து இருந்தது.
இவளின் குரல் கரகரப்பு அருகில் இருந்த பார்கவிக்கும் கேட்டது
"ஏன் நிவிதா உங்க அண்ணன் மகள என்ன போருக்கா அனுப்ப போற? வாழ்க்கையை தானே தொடங்கப் போறா! அதுக்கு எதுக்கு உன் குரல் கட்டி இருக்கு? என்றார் சிறிது நக்கலாக,
"எல்லாம் தெரிஞ்ச பையன் தானே, எந்தப் பயமும் இல்லை, தைரியமா போ எல்லாம் சரியா இருக்கும்."என்று வினிகாவிடம் கூறினார், அவரின் கூற்று சரிதானென மற்றவர்களும் நினைத்தபடி நின்று இருக்க, அனைவரும் இப்படி அவளையே பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்குச் சிறிது சங்கோஜத்தை கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்ட பார்கவி
"வாங்க நேரம் ஆயிடுச்சு, உங்களுக்குப் படுக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறேன், அக்கா, வாங்க அக்கா." என்றபடி சுசிலாவையும் உடன் அழைத்துக் கொண்டு உறவினர்களாக வந்தவர்களுக்குப் படுக்க ஏற்பாடு செய்து கொடுக்க நகர்ந்தார், அவரைப் பின்பற்றி மற்றவர்களும் நகர்ந்தார்கள் ஒவ்வொருவராக.
அறையில் அமர்ந்திருந்தவனுக்கு அவன் வயதொற்றிய ஆண்கள் எவரும் இல்லாமல் யாருடனும் சகஜமாகப் பேச முடியவில்லை. ஏற்கனவே குடும்ப நிகழ்வுகளில் இவர்களைப் பார்த்திருந்தபடியால் பெரிதான தயக்கமும் இல்லை. ஆனால் பெண் அவளின் அறைக்கு வருவது இதுவே முதல் முறை, பார்கவியின் கணவனிடம் மட்டும் நன்கு பரிச்சியமும் பேசுவதற்கு எளிதாகவும் இருந்தது. அத்தையின் கணவன் என்ற முறையில்.
இரவு உணவை முடித்தபின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவனிடம், அறைக்குச் சென்று குளித்துவிட்டு தயாராக இருக்குமாறு மெதுவாகக் கூற இவனும் புரிந்து கொண்டு தலையாட்டி அப்படியே அவளின் அரை நோக்கிச் சென்றவன் அமைதியாகக் குளித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டான், வரும் பெண் அவளிடம் என்ன பேசுவது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுமே புரியாத நிலை தான் அவனுக்கு.
பால்குவளை உடன் உள்ளே வந்த வினிக்காவைப் பார்த்தவன் தன்னை தயார்படுத்திக் கொண்டான். எதற்கென்று தெரியாமலேயே..
உள்ளே வந்தவளுக்கும் அதே நிலைதான், கொண்டு வந்த பாலை அவனிடம் கொடுக்க
"இல்ல, வேண்டாம்? இருக்கட்டும்." என்றபடி, அவளைப் பார்க்க,
'இருக்கட்டுமா? எங்க இருக்கட்டும்?. சரி, மேஜை மேல இருக்கட்டும்.' என மைண்ட் வாய்ஸில் பேசியபடி, வேறு என்ன செய்வது எனப் புரியாமல் அவன் சொன்ன வாக்கியத்திற்கு கவுண்டர் கொடுத்தபடி, அருகில் இருந்த மேஜையில் பால் குவலையை வைத்துவிட்டு அவனை ஏறிட அதற்குள் பேச வேண்டியதை முடிவு செய்து நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்.
"வா வந்து உட்கார்." என்றான் தன் அருகில் தட்டி காண்பித்து, அவளும் அதிகபட்ச கூச்சம் எல்லாம் கொள்ளாமல் அவன் தட்டி காட்டிய இடத்தில் அமர்ந்து அவனை நோக்க,
"நாம இதுக்கு முன்னாடி நிறைய குடும்ப விழாக்களில், கல்யாணங்களில் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டாலும் பெருசா பேசிக்கிட்டதில்லை, நமக்குக் கல்யாணம் அப்படின்னு சொன்னபிறகு எனக்குப் பெருசா அதுல மறுக்கிறதுக்கும் ஒன்னும் இல்ல, பெருசா விரும்பறதுக்கும் ஒன்னும் இல்ல, நான் சொல்ல வரது உனக்குப் புரியுதா?.."என்றான் கேள்வியாக.
"புரியுது சொல்லுங்க." என்றாள் அமைதியாக,
"திருமணத்திற்கு முன்னாடி நான் எதுவும் பேசலன்னு தப்பா எதுவும் நினைக்காத, பிசினஸ் இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். அதைக் கொஞ்சம் நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும் அப்படிங்கறதுதான் ஒரே எண்ணமாக இருந்தது."
"நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துட்டீங்களா?.." என்றவளின் கேள்வியில்,
"இல்ல இல்ல இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன், இப்பதான் பிக்கப் பண்ணிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா, அதனால எங்கேயும் டைவர்ட் பண்ண முடியல, புத்தியையும்,மனசையும் ...அதுக்காக உன்ன பிடிக்காம கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன்னும் கிடையாது. வீட்ல எல்லாருக்கும் பிடிச்சி இருந்தது, அதுக்கு தான் சம்மதம் சொன்னேன், கல்யாணம் நடந்து நீயும் என் வாழ்க்கையில வந்தபிறகு, கண்டிப்பா ஒரு பிடிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை நிறையவே எனக்கு இருந்தது..."
"இப்போ பிடிப்பு வந்துருச்சா?"
"ஒரு நாளிலேயே வந்துரு மா, என்ன? "ஓஹோ!இப்ப என்ன சொல்ல வரீங்க.?
"கல்யாணம் ஆன உடனேயே எல்லாமும் நடந்திடனுங்கறது இல்ல,
நாம ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கலாம் அதுக்கப்புறம் வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்ன சொல்ற?.." என்றவனின் கேள்விக்கு "கண்டிப்பா ஃபர்ஸ்ட் நைட் ங்கறது என்ன? நம்ம இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும்போது சந்தித்துக் கொள்ளும் முதல் இரவு, அப்படிங்கிறது தான் என்னோட புரிதல், ஆனா இங்க, அதற்கான விளக்கங்களும் புரிதல்களும் வேற மாதிரி ஆயிடுச்சு, அது சரியா கூட இருக்கலாம் எனக்குச் சொல்லத் தெரியல…உணர்வுகளால முதல்ல புரிஞ்சிட்டு அதுக்கப்புறம் உடல்களால் புரிஞ்சுக்கலாம், நீங்கச் சொல்றது ரொம்பவே சரி, நானுமே உங்ககிட்ட இத பத்தி எப்படி சொல்றதுன்னு யோசிச்சுகிட்டே வந்தேன், உங்களுக்கும் என்னைப் போன்றே எண்ணம் இருக்கின்றத நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என்றாள் புன்னகையுடன், அந்தப் புன்னகை அவனையும் தொற்றிக்கொள்ள அமைதியாகப் படுத்துக்கொண்டான்.
அவளும் அவன் அருகில் சற்று இடைவெளி விட்டுப் படுத்துக் கொண்டாள் தன் மனதில் உள்ளதை உரைக்க முடிந்த நிம்மதியோடு.
அலாரம் அடிக்கும் சத்தத்தில் மெதுவாக முழித்துப் பார்த்த வினிகா, அலாரத்தின் சத்தத்தை நிறுத்திவிட்டு மெதுவாக எழுந்து அமர்ந்தவள் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மோகனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் குளியலறை நோக்கிச் சென்றாள் தன் காலைக் கடன்களை முடித்துக் குளித்து வருவதற்கு, குளித்து ஒரு நைட்டியுடன் வெளியே வந்தவள் அவன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தபடி தனக்கான புடவையோடு அதற்குத் தேவைப்படும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள் அன்னையின் அறையிலோ அல்லது அத்தையின் அறையிலோ புடவை கட்டி வருவதற்காக, இவள் எப்போது வெளி வருவாளெனப் பார்த்துக் கொண்டிருந்த நிவிதா இவள் அரை திறக்கும்போதே வாசலுக்கு வந்தவள் கையோடு அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன்னரைக்கு வந்தவள்,
"எல்லாம் ஓகே தானே!..." என்றாள் வேகமாக,
"எல்லாமே ஓகே தான்!..." என்றவள்,
"உன்னோட கற்பனை குதிரையை உடனே பறக்க விடாத, நாம ஒருத்தர ஒருத்தர புரிந்து கொள்ள வேண்டும் என்று மோகன் சொல்லிட்டாரு, அதுக்கப்புறம் தான் வாழ்க்கையை தொடங்கணும்னு சொன்னாரு அதே நினைப்பு தான் எனக்கும் இருந்தது, அவர் சொன்னதும் நானும் சந்தோஷமா சரின்னு சொல்லி, நல்ல தூங்கி எந்திரிச்சு வெளிய வரேன்..." என்றாள் மனம் நிறைந்த புன்னகையோடு.
அவள் புன்னகை முகத்தைப் பார்த்துச் சற்று சஞ்சலங்கள் அடங்கியவராக
"எப்படியோ! உங்க வாழ்க்கைய நீங்க ஆரம்பிக்கப் போறீங்க, அது எப்போன்னு நீங்கத் தான் முடிவு பண்ணனும்...யாரோட கட்டாயத்திற்காகவும் வாழ்க்கையை அவசர அவசரமா ஆரம்பிக்கிறது நல்லதில்ல, சரியான முடிவுதான், உங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்கறது எப்பவுமே நல்லது தான்." என்ற படியே,
"சரி நீ புடவையைக் கட்டு நான் போய் உனக்கும் எனக்கும் காபி கொண்டு வரேன்." என்றபடி திரும்பியவரிடம், "ஏன்? எழுந்ததுமே காபி குடிக்கணுமே உனக்கு, இன்னும் குடிக்காமலயா இருக்க?.."
"நீ வெளியில வந்து என்ன சொல்லப் போறியோனு பயத்திலேயே காபி குடிக்காம உனக்காகக் காத்துட்டு இருந்தேன்?.."என்றபடி வெளியேறினாள் சிறு நிம்மதியுடன்...
காபி எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தவள் கண்டது அழகாக மடிப்பு எடுத்துத் தேவையான இடங்களில் பின் குத்தி இளஞ்சிவப்பு நிற சாஃப்ட் சில்க் புடவையைக் கட்டி, இரு பக்கத்திலும் இருந்த முடியை எடுத்து நடுவில் ஹேர்பின் கொண்டு முடியை அடக்கிக் கொண்டிருந்தவளைத்தான், அத்தையிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டவள்.
"எங்க அத்தை மாமா, தம்பி எல்லாம் காணோம்?.." என்றபடி காபியின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தவள் மெதுவாக அருந்த ஆரம்பித்தாள், அவளின் கேள்விக்குப் பதிலாக "மாமா இப்போது தான் வாக்கிங் போனாங்க. தம்பி நேற்று இரவு அகிலாவுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அங்கேயே படுத்துத் தூங்கிட்டான். " என்றாள் அவளும் காபியை அருந்திய படி, இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த வினியின் அன்னை
"என்ன ம்மா ரெடியாகிவிட்டாயா? சரி ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கம மாப்பிள்ளை எழுந்துட்டாரான்னு பாரு? அவருக்கு என்ன வேணும்னு கேட்டு எடுத்துட்டு போய்க் குடு, கொஞ்ச நேரத்துல வீட்ல இருக்குற சொந்தம் பந்தம் எல்லாம் முழிக்க ஆரம்பிச்சிடுவாங்க இன்னைக்கு தல முழுக்கு இருக்கு. காலையிலேயே உங்க தாத்தா அப்பா எல்லாம் விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க, நீங்களும் சீக்கிரமா ரெடி ஆகி கீழ வாங்க." என்ற படி அவளின் நாடியை பிடித்து ஆட்டி முத்தம் கொஞ்சி வெளியேறினார்.அவர் வெளியேறியதும்
"அது என்ன அத்தை தல முழுக்கு? என்றாள் இவள் கேள்வியாக அத்தையிடம்,
"நம்ம ஊர்ல கல்யாணத்துக்கு மறுநாள் அங்காளி பங்காளிகளைக் கூப்பிட்டு கறி விருந்து வைக்கிறதுக்கு பேரு தான் தல முழுக்குனு சொல்லுவாங்க.
இன்னைக்கு கறி விருந்துக்கு அப்புறம் உன்னை மறு வீட்டுக்குக் கூட்டிட்டு போய்டுவாங்க.
அங்க போயிட்டு ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு மறுபடியும் நீ நம்ம வீட்டுக்கு வந்துடனும் இங்க ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு அதுக்கப்புறம் நீங்க எப்பவும் போல வந்து போய் இருக்கலாம் அதோட திருமண சடங்கு எல்லாமே முடிஞ்சிடும்."
"ஓஹோ.!" எனச் சொல்வதைக் கேட்டுக் கேட்டுக் கொண்டாள் வினிகா.
"சரி சரி நேரமாச்சு போ, மோகன் கிளம்புனதுக்கு அப்புறமா ரெண்டு பேரும் சேர்ந்து கீழ வாங்க. சரியா?.." என்றபடி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு, மகனை எழுப்பச் சென்றாள் அகிலாவின் அறையை நோக்கி,
இவளும் எழுந்து அறைக்குச் செல்ல மோகனின் அறவம் குளியலறையில் கேட்டது, அவன் கிளம்பி வரும் வரை அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
குளியலறையிலிருந்து வெளிவந்தவன், இவள் அமர்ந்திருப்பதை கண்டு மெதுவாகப் புன்னகைக்க, இவளும் அதே புன்னகையுடன்.
"காபி கொண்டு வரவா?.." எனக் கேட்க
"எனக்கு டீ ப்ளீஸ்" என்றான்
"ஓகே! ஓகே! கொண்டு வரேன்."
"இல்ல நானும் வந்துடறேன்." என்றபடி கிளம்பி இருவரும் ஒன்றாகவே வெளிவந்தார்கள்.
இவர்கள் இருவரும் ஒன்றாக வெளி வருவதை கண்ட பெரியவர்களுக்கு மனம் நிறைந்தது.
"வினி மா, வா! வா! வாங்க மோகன் காபி குடிச்சீங்களா?.." என்றபடி பேத்தியின் கைகளைப் பிடித்துத் தன் அருகில் நிற்க வைத்துக் கொண்டார் தாத்தா. அப்போதுதான் காலை நடை பயிற்சி முடித்துவிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தார்.
"அவர் டீ கேட்டாரு தாத்தா."
"சரிம்மா போய்க் கொடு." என்றபடி மோகனுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவாறு தன் அறையை நோக்கி நகர்ந்தார்.
அவனைச் சோபாவில் அமருமாறு பணித்து விட்டு அவனுக்கான தேனீரை எடுக்கச் சென்றாள் வினிகா
அதற்குள்ளாக அவளை எதிர்கொண்டு தேனீரோடு வந்தார் பார்கவி, அண்ணன் மகனின் விருப்பம் எது எனத் தெரிந்திருந்தது அவருக்கு, புன்னகையுடன் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு மோகனிடம் கொடுக்கச் சிறிது நேரத்திலேயே ஒரு ஒருவராக வீட்டிற்கு வர ஆரம்பித்தார்கள் சொந்த பந்தங்கள், காலை நேர உணவே அசைவத்தால் நிறைந்திருந்தது.
தேங்காய் பணியாரம், ஆட்டுக்கறி குழம்பு, இட்லி, நாட்டுக்கோழி மிளகு குழம்பு,கோழி பிச்சு போட்ட பரோட்டா, என வாழை இலையை நிறைத்திருந்தது உணவு.
அதுபோலவே மதியத்திற்கும் கறி பிரியாணி, கோழி வறுவல், ஈரல் மிளகு கூட்டு, அவித்த முட்டை, பொறித்த மீன், இறால் வருவல், தயிர் பச்சடி, சாதம், சாம்பார், ரசம், உருளை வறுவல் என வந்தவர்கள் மனமும் வயிறும் நிறைந்து கிளம்பினார்கள்.
மோகனின் வீட்டிலிருந்தும் அவனின் தாய் தந்தை, தங்கை, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா அவர்களின் குழந்தைகள் என வீடு நிறைந்து இருந்தது அவர்களின் வரவால், திருப்தியாக அனைவரும் சாப்பிட்டுவிட்டு எந்தக் குறையும் கூறாமல் மணமகளையும் மணமகனையும் அழைத்துச் செல்லக் கிளம்பி இருக்க. அனைவரிடமும் கண்ணீருடன் விடை பெற்றுக் கொண்டாள் வினிகா தன் புகுந்த வீட்டை நோக்கி.
"நாளைக்கு வீட்டுக்கு வாங்க! சில விஷயங்கள் எல்லாம் பேசணும்.."என்றாள் மோகனின் தாய், சம்மதமாக தலையசைத்த பாட்டி பேத்தியின், அருகில் வந்து அவளை அணைத்து உச்சி முகர்ந்து "நல்லபடியா போய்ட்டு வா! நூறு ஆயுஸுக்கு குழந்தை குட்டியோட நல்லா இருக்கணும்."
என்றபடி அவளை வாழ்த்த.
"போய்ட்டு வரேன் பாட்டி." என்றாள் அவளும் கண்ணீருடன், தாத்தாவிடம் சென்றவள் எதுவும் கூறாமல் அவரை அணைத்து இருக்க. அவரும் அவளை அனைத்த படி எதுவும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தார், தாத்தா வென தன்னை முதலில் அழைத்த பேத்தி, தன் பாசத்திற்கும் அன்பிற்கும் நிகரானவள், இப்போது வேறொரு வீடு நோக்கிச் செல்லும் நிலையை எண்ணியவாறு அமைதி காக்க.
அவரை நிமிர்ந்து பார்த்தவள்.
"வரேன் தாத்தா!.." என்றாள் கண்ணீரை அடக்கியபடி,
"ம்ம்" என்ற வார்த்தையுடன் அவரும் முடித்துக் கொண்டார், சித்தப்பா மற்றும் தந்தையிடம் வந்தவள் அவர்களிடமும் அதே ஒற்றைச் சொல்லைப் பெற்றுக்கொண்டு அன்னையிடம் திரும்பியவள் அதற்கு மேல் முடியாமல் அவரைக் கட்டியணைத்து கதறினாள். இவளுக்கு மேல் அழுத சுசிலாவை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை ஒற்றை மகளாகத் தன் கைக்குள் வளர்ந்தவளை பிரிவது வெகு வேதனையாக இருந்தது அவருக்கு, பெண் குழந்தைகள் பெற்றெடுத்தால் இந்த நிலை ஒரு நாள் வரும் என்பது நிதர்சனம்.
இவர்களிடம் விரைந்து சென்ற நிவிதா,
"அண்ணி என்னது இது? நீங்களும் அழுது, அவளை இன்னும் அழுக வைக்கிறீங்க, புது வாழ்க்கையை வாழப் போறா சந்தோஷமா சிரித்து வழி அனுப்புங்க." என்று அவர்களைச் சமாதானம் செய்ய, அன்னையின் பிடியிலிருந்து திரும்பி அத்தையை இறுக அனைத்தவள்.
"பயமா இருக்கு அத்தை?.." என்றாள் அழுது கொண்டே, அவளின் பயம் இவளையும் தொற்ற. ஏனோ இவளுக்கும் அடி வயிறு கலங்கியது, வந்த அழுகையை பெரும்பாடு கொண்டு அடக்கிப் பெண் அவளைச் சமாதானம் செய்து
"போய்ட்டு வா நல்லதே நடக்கும், எதைப் பற்றியும் யோசிக்காத." என்றவள், இவை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மோகனிடம் திரும்பி,
"நல்லா பாத்துக்கோங்க, எங்க வீட்டு ராணி இவ, கைக்குள்ளேயே வளர்ந்துட்டா ஒரு சொல்லு சொன்னா பொறுக்க மாட்டா, ஆனா சொன்ன பேச்சு கேட்டுப்பா. நல்லா பாத்துக்கோங்க, உங்களை நம்பி தான் அனுப்புறோம்..."என்ற படியே குரலை மீறி வெளிவர இருந்த கேவலையும்,கண்ணீரையும் அடக்கிப் பேச, அனைவருக்கும் கண்கள் நிறைந்தது நீரால்.
மெதுவாக அவர்களின் அருகே வந்த மோகன் வினிதாவின் தோளோடு அனைத்து.
"கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பாத்துப்பேன், கவலைப்படாதீங்க." என்றபடியே, அனைவரிடமும் விடை பெற்று தன் வீடு நோக்கிச் சென்றான். வாழ்வு நல்லதே வைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, அதே நம்பிக்கையைப் பெண் அவளும் கொண்டாளா? தெரிந்து கொள்வோம் நாமும் இனிவரும் காலங்களில்.
மௌனம் கலையும்...