எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 15

S.Theeba

Moderator
மறுநாள் காலையில் நேரத்திற்கே எழுந்தவள் காலை உணவை மளமளவென செய்தாள். சுபாஷினிக்கான உணவை அவள் படுத்திருந்த இடத்திற்கே எடுத்துச் சென்றவள் அவள் உண்பதற்கு சக்தியற்று தடுமாறவும் தானே அவளுக்கு ஊட்டி விட்டாள். அவளை சற்று நேரம் ஓய்வெடுக்குமாறு கூறி படுக்க வைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு வந்தாள். அங்கே அவள் செய்து வைத்து விட்டு வந்த உணவு மொத்தமும் காலியாகியிருந்தது. வெறும் பாத்திரங்கள் மட்டும் உருண்டு கிடந்தன. அவள் யோசனையுடன் நிற்கவே பெரும் ஏப்பத்துடன் காலியான தட்டுக்களைக் கொண்டு வந்து தொட்டிக்குள் போட்டார் தனம்.
“ஏய் சின்னக் கழுதை நீயும் ஓரளவு சமைக்கிறாய்தான்… பரவாயில்லை. நாங்கள் எல்லாம் சாப்பிட்டாச்சு. இதெல்லாம் ஒதுக்கிட்டு மதிய சமையலையும் பண்ணிடு. தம்பி மட்டன் குழம்பு கேட்டான். அதப் பண்ணிடு. அப்புறம் சாயந்திரமா ராசு வீட்டிலிருந்து வருவாங்க. நீ கொஞ்சம் நல்லதா உடுத்து ரெடியாயிரு” என்று போற போக்கில் சொல்லிவிட்டுப் போனார்.

பாத்திரங்களையெல்லாம் ஒதுக்கி கழுவி வைத்துவிட்டு நேற்றிலிருந்து சாப்பிடாததால் பசித்த வயிற்றுக்கு தண்ணீர் மட்டும் கொடுத்துவிட்டு தமக்கையிடம் வந்தாள். அவள் அசதியில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள். தமக்கையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாணத்திற்கு முன்னர் எவ்வளவு கலகலப்பாக இருந்தவள். இன்று எல்லாமே மறைந்து முகமே களையிழந்து போய்விட்டது. எப்போதும் வேலை செய்த சோர்வும் சரியான சத்துள்ள உணவுகளை உண்ணாமையும் அவளை உருக்குலையச் செய்துவிட்டது. அவளைப் பார்க்கப் பார்க்க வேதனை மனதை பரிதவிக்கச் செய்தது. கால்களை முறுக்கிக் கொண்டு தமக்கை நெளிவதைக் காணவும் அவளது கால்களை எடுத்து தன் மடிமீது வைத்து பிடித்துவிட்டாள். அந்த சுகத்தில் சுபாஷினி அமைதியாக உறங்கினாள்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த தனம்
“போதும் போதும் மகாராணிக்கு சேவகம் செய்தது. இந்தா இதில் ரூபா இருக்கு மார்க்கெட்டுக்குப் போய் மட்டன் வாங்கிட்டு வா” என்று காசைக் கொடுத்துவிட்டு சென்றார். எந்தப் பதிலும் கூறாது எழுந்து மார்க்கெட் நோக்கி சென்றாள் நிஷாந்தினி.

தன் நிலையை எண்ணி விரக்தியுடன் வீதியில் நடந்து கொண்டிருந்தாள். அப்போது கார் ஒன்று அவளருகில் பிரேக்கிட்டு நிறுத்தவும் திடுக்கிட்டு ஓரமாக ஒதுங்கி நின்றாள். காரை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. தொடர்ந்து அவளது கால்கள் தன் போக்கில் நடைபோட்டன. அவள் எதிரே கார்க் கதவு திறக்கப்படவும் நிமிர்ந்து பார்த்தாள். காரின் இரு பக்கங்களிலும் கதவுகளைத் திறந்துகொண்டு இரு இளம் பெண்கள் இறங்கினர். அதில் ஒருத்தி நேற்று பார்க்கில் பார்த்த தனஞ்சயனை திருமணம் செய்ய போவதாகக் கூறியவள். மற்றவள் புதியவள் என்பதைக் கண்ட நிஷாந்தினி யோசனையுடன் நின்றாள்.
ஆம் அங்கே வந்தது மிருணாளினியும் கவிப்பிரியாவுமே. இறங்கிய இருவரும் சற்று நேரம் அவளை ஏற இறங்கப் பார்த்தனர்.
“கவி டியர், இதுதான் உங்க அண்ணன் பின்னால் சுத்துபவள். நம்ம ஸ்டைலுக்கும் அந்தஸ்துக்கும் ஏணி வைத்தால் கூட இவளுக்கு எட்டாது. இவளுக்கு என் தனா அத்தான் கேட்குது. என் அழகுக்கு கால் தூசுக்கு வருவாளா? காமடியா இல்ல?” என்று கேட்டுவிட்டு, ஏதோ மிகப்பெரிய நகைச்சுவையைக் கூறியவள் போல் சத்தமாக சிரித்தாள் மிருணாளினி.
அவளின் பேச்சிலிருந்தே மற்றையவள் தனஞ்சயனின் சகோதரி என்பதை அறிந்தாள் நிஷாந்தினி.
கவிப்பிரியாவிற்கு இப்படி அந்தஸ்து, அழகு என்று மற்றையவர்களை மட்டம் தட்டுவது பிடிக்காது. அவள் அதுபோல மற்றவர்களை நடத்தியதுமில்லை. மிருணாளினியின் பேச்சு இவளுக்கு சங்கடத்தைத் தந்தது. ஆனாலும், இப்போது பேசுபவள் அவளுக்கு அண்ணியாகப் போகும் அழகி. அவளது பேச்சை மறுத்துப் பேச முடியுமா? நிஷாந்தினியைப் பார்த்தாள். குறை சொல்லும்படியாக இல்லைதான். ஆனால், மிருணாளினி ஏற்கனவே அழகி. இப்போது மேக்கப்பில் இன்னும் ஜொலித்தாள். அவள் முன்னால் யார் நின்றாலும் அழகியாகத் தெரியாது தான். மிருணாளினியின் அழகு இவளைத் கட்டிப் போட ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“அப்புறம் உன் அட்ரஸ் சொல்லு. எங்க வெடிங் இன்விடேஷன் அனுப்பி வைக்கிறேன். பட் மறந்தும் வந்திடாத. உன்னைப் போல் அத்தான் பழகியவர்கள் எல்லாம் புறப்பட்டு வந்தால் அப்புறம் வெடிங் ஹோல் ஃபுல் ஆகிடும்” என்று சொல்லிவிட்டு கெக்கட்டமிட்டு சிரித்தாள். அவள் சிரிப்புடன் கலந்து கொள்ள முடியாமல் கையைப் பிசைந்தபடி நின்றாள் கவிப்பிரியா. என்னதான் அண்ணியாக வரப் போகின்றவள் என்றாலும் தன் அண்ணனைப் பற்றி இவ்வாறு சொல்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவன் எப்போதும், எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியைக் கடைப் பிடிப்பவன். யாருடனும் அதிகமாகப் பேசமாட்டான். பெண்கள் விடயத்தில் ரொம்பவும் கண்ணியம் காப்பான். அப்படிப்பட்டவனைப் போய் ஊரிலுள்ள பெண்களை எல்லாம் வளைத்துப் பிடித்தவன் போல பேசுகின்றாளே.
கவிப்பிரியா அமைதியாக இருக்கவும் திரும்பி அவளைப் பார்த்த மிருணாளினி இவள் தனக்கு சாதகமாகப் பேசமாட்டாள் என்பதை உணர்ந்து தானே தொடர்ந்து பேசினாள்.
“அப்புறம் எங்க வெடிங்கிற்கு வந்து கத்தி கூச்சல் போட்டு டிராமா பண்ணி ஏதாவது காரியம் சாதிக்கலாம் என்று திட்டம் போடாதே.. எந்தப் பயனும் இல்லை. அத்தான் உன்கூட பழகியதற்கு வேணும்னா கொஞ்சமா அமௌன்ட் தாறேன். வாங்கிக்கிட்டு அமைதியாக இருக்கிறது உனக்கு நல்லது. அத்தோடு அந்த அமௌன்ட் உன் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும். சொல்லு எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?”
அவளது கேள்வியே மனதை ரணமாக்க அடிபட்ட பார்வை பார்த்தாள் நிஷாந்தினி. அவளது பார்வை தாங்கமுடியாமல் கவிப்பிரியா காருக்குள் ஏறி உட்கார்ந்து விட்டாள். சற்று நேரம் அமைதி காத்தவள்
“உங்கள் அக்கறைக்கு தாங்ஸ். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நான் தடையாய் இருக்கமாட்டேன். எனக்கு எந்த பண உதவியும் தேவையில்லை” என்று விட்டு விறுவிறுவென அவ்விடத்தை விட்டு அகன்றாள். அப்பாடா ஒரு தொல்லை விட்டது என்ற நினைப்புடன் புறப்பட்டாள் மிருணாளினி.
மனம் தவிப்புறவும் கோயிலுக்கு செல்லவேண்டும் என்று தோன்றவும் மார்க்கெட் போகும் வழியில் இருந்த கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்றாள் நிஷாந்தினி. அந்நேரத்துக்கு கோயிலில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே காணப்பட்டனர். பிரகாரத்தைச் சுற்றி கும்பிட்டவள் தனியாகக் காணப்பட்ட ஆஞ்சநேயர் சந்நிதியின் முன் சென்று அமர்ந்தாள். கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“இறைவா நானும் என் அக்காவும் என்ன பாவம் செய்து பிறந்தோம். எங்களுக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை. அக்காவின் எதிர்கால வாழ்வு எப்படி அமையப் போகின்றதோ? அத்தை அவளை எவ்வளவு கொடுமைப்படுத்துகின்றார். அதனை தட்டிக் கேட்க வேண்டிய கணவன்… ஏன் இந்த நிலை. என் வாழ்வும் இன்று கேள்விக் குறியாகிவிட்டதே. நான் நம்பியவன் என்னை இன்று கேலிப் பொருளாக்கி விட்டான். அவன் டைம்பாஸுக்கு தான் நான் பயன்பட்டுள்ளேன். எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகம்.
அதிலிருந்து ஒரு அடி கூட அவள் இன்னும் மீளவில்லை அதற்குள் இன்னுமொருவருடன் கல்யாணமாம். ராசுவாம் அவர் எப்படி இருப்பார் என்று கூட தெரியாது. அவர் எப்படிப்பட்டவர் என்று கூட அறியவில்லை. என் வாழ்வில், முக்கியமாக என் மனதில் இன்னுமொருவரை ஏற்க முடியுமா? ஆனால், அக்காவின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்து வாழவேண்டிய சூழ்நிலைக் கைதியாகி விட்டேன். இறைவா எனக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மன தைரியத்தைத் தா” என்று பிரார்த்தித்து நின்றாள்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் நேரம் போவதை அறிந்து எழுந்து மார்க்கெட்டுக்குச் சென்றாள்.

அன்று மாலையே ராசு என அத்தையால் அழைக்கப்படும் ராசமாணிக்கம் வீட்டிலிருந்து வந்தார்கள். தாய் கனகவல்லி, தமக்கை பார்வதி, தமக்கையின் கணவர் செல்லத்துரை என்போர் வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சிலிருந்தே அவர்களின் குணம் வெளிப்பட்டது. தாயும் தமக்கையும் உலகத்திலுள்ள கெட்டவார்த்தையெல்லாம் குத்தகைக்கு எடுத்திருப்பவர்கள் போல பேசினர். எப்போதும் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு பேசும் கனகவல்லி வந்த கொஞ்ச நேரத்திலேயே நிஷாந்தினியை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார். அவரது மருமகனோ கனகவல்லியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு செயற்பட்டான். எந்நேரமும் இழித்துக் கொண்டு நிஷாந்தினியைப் பின்தொடர்ந்தான். யாரும் இல்லாத நேரம் பார்த்து ஆபாசமாக பேசினான்.
பொறுத்துப் பார்த்தவள் முடியாமல் பெரும்பாலும் தனியே இருப்பதைத் தவிர்த்தாள். அக்காவுடன் சென்று அமர்ந்தாள். அதற்கும் தனத்திடம் திட்டு வாங்கினாள். வேலை செய்யாமல் அமர்ந்திருப்பதாகத் தனம் திட்டினார்.

இரவு உணவு நேரம்.. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராசுவைப் பற்றிய பேச்சு வந்தது. தனமும் ராசுவின் வீட்டினரும் தமக்குள் பேசினர். அதிலிருந்து அவள் அறிந்து கொண்டது, ராசு இப்போது ஜெயிலில் இருக்கின்றான். சண்டையொன்றில் எதிராளியின் கையைத் துண்டித்த குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிக்கின்றான். தண்டனைக் காலம் இன்னும் மூன்று மாதங்களில் நிறைவு பெறப் போகின்றது.
அதைவிட அவனுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. கர்ப்பமாயிருந்த மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளான். அவனது கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்துள்ளன. அவனது கொடுமைகளைத் தாங்கமுடியாதவள் தனக்குத் தானே தீமூட்டி தற்கொலை செய்துள்ளாள். இவற்றையெல்லாம் தனது மகனின் வீரப்பிரதாபங்களாக எண்ணிப் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தார் கனகவல்லி.

மறுநாளே யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமலேயே நிச்சயத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர் ராசுவின் குடும்பத்தினர். அவன் ஜெயிலில் இருந்து வந்ததும் மறுநாளே கல்யாணத்தை முடிப்பதென நாள் குறித்தனர்.
தொடர்ந்து வந்த நாட்கள் நிஷாந்தினிக்கு நிற்க நேரமின்றி ஓடியது. வீட்டில் சகல வேலைகளையும் பார்ப்பதோடு பலவீனத்தால் துவண்டு கிடந்த தமக்கையைப் பராமரிக்கவும் வேண்டி இருந்தது.

சுபாஷினிக்கு ஏழு மாதங்கள் நிறைவடைந்த போது பன்னீர்க்குடம் உடைந்து குழந்தையைப் பிரசவித்தாள். குழந்தையை ஈன்றவள் அதன் முகம் காணாமலேயே இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டாள்.
 
Top