எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா! - 22

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 22


அன்று காலை விஹான் ஊருக்கு வந்திறங்கியதும் சூர்யான்ஷ்ஷை சந்தித்தபோது, பிரணவிகாவை தன்வசப்படுத்தி விஹானை வீழ்த்திவிட்ட மமதையில் சூர்யான்ஷ் விஹானிடம் அத்தனை திமிராகவும், தெனாவெட்டாகவும் பேசி அவனைச் சீண்டினான்.


கடைசியில் விஹான் பிரணவிகாவுக்காகத் தன்னிடம் கெஞ்சுவான் என சூர்யான்ஷ் நினைத்தான். அப்போதும் அவன் குறுக்குபுத்தியில் இரண்டு திட்டங்கள் இருந்தது. ஒன்று அவளைத் தன்வசப்படுத்தி விஹான் துடிப்பதை ரசிக்க வேண்டும் அல்லது அவளைப் பகடைக்காயாக உபயோகித்து அவனிடமிருந்து ஷரா காஸ்மெஸ்டிக்ஸ் கம்பெனியை அவனிடமிருந்து விலைக்கு வாங்க வேண்டும்.


இரண்டாவது திட்டத்தைவிட முதல் திட்டம் தான் அவனுக்குப் பிடித்தும் இருந்தது காரணம் பிரணவிகாவை அவனுக்கும் பிடித்து இருந்ததே! அவளது குழந்தை தனமான சேட்டைகளை அவனும் ரசிக்க ஆரம்பித்து இருந்தானே!


ஆனால் விஹான் வந்து பிரணவிகாவை அவனிடமிருந்து பிரித்துக் காட்டுவேன் அவளை விட்டுக்கொடுக்கமாட்டேன் எனப் பேசிச் சென்றதும் அவனது இரு திட்டமும் ஆட்டம் கண்டுவிடுமோ எனக் கலக்கமுற்றவனுக்கு அதீத கோபம்.


இத்தனை காலம் திட்டம் போட்டு அவன் நகர்த்திய காயை தீடீரென புயல் போல் இடையில் புகுந்து ஆட்டையைக் கலைக்கும்படி விஹான் பேசிச் சென்றதில் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தவன் அடிப்பட்ட புலியாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவன் அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தான்.


அவன் மூளை என்ன நல்லதாகவா யோசிக்கும்? குறுக்கு புத்தி காரன் யோசனையும் அப்படித்தானே இருக்கும். தன் கைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்துப் பேசியவன், அவனுக்கு அனுப்ப வேண்டிய தகவல்களையும் அனுப்பி வைத்தவன் அப்போதும் ஓயாமல் சிந்திக்க ஆரம்பித்தான்.


பிளான் எ வெற்றிகரமாக அமையவில்லையெனில், அடுத்து செயல்படுத்த பிளான் பி வேண்டுமல்லவா? அதற்காகத்தான் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த பிளான் பி யை லட்டு போல நம்ம நாயகியே அவனுக்குக் கொடுப்பாளென அவன் கனவிலும் நினைத்திருக்கவே மாட்டான்.


அப்போது தான் சூர்யான்ஷ்ஷூக்கு அழைத்தாள் பிரணவிகா..


“ஹலோ பியூட்டி குயுன்” எனத் துள்ளலாக ஆரம்பித்தான் சூர்யான்ஷ்.


“ஹாய் சூர்யா.. என்ன பன்றீங்க.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”


“ஒஹ் மை குயின்.. நீ கால் பண்ண மாட்டியானு நான் தவம் இருக்கேன்.. எனக்கு நீ டிஸ்டர்ப்பா.. நமக்கு நடுவுல தான் எந்த டிஸ்டர்ப்பும் வராம இருக்கனும் மை குயின்”


“அது.. நான்..” எனத் தயங்கினாள்.


“என்கிட்ட என்ன தயக்கம் என் குயினுக்கு.. நீங்க ஆர்டன் போட்டா சொல்லுங்க மஹாராணினு நீங்க சொல்றத செய்ய நான் காத்துருக்கேன்.


என்னைக்கும் நானா கால் பண்ணாம நீ பேச மாட்ட.. இன்னைக்கு நீயே கால் பண்ணிருக்க அதுக்காகவே நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்”


“அது நம்ம மீட் பண்ணலாமா?” எனக்கேட்டதும் அத்தனை சந்தோஷம் அவனுக்கு. அவனாக எத்தனை முறை அவளிடம் கேட்டிருப்பான். ஆனால் இன்று பழம் நழுவி பாலில் விழுந்த கதையாட்டம் அவளே அதைக் கேட்டிருக்க, கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுடுவானா சூர்யான்ஷ்.


“வாவ்.. வாட் அ சர்ப்ரைஸ். ஃபார் அ லாங் டைம் ஐ அம் வெயிட்டிங் ஃபார் திஸ் பீரிஷியஸ் மொமண்ட். லவ் யூ மை குயுன். எங்க மீட் பண்ணலாம்? வீட்டுக்கு வரியா?” எனக்கேட்க,


“வீட்டுக்கா?” எனத் தயங்கினாள்.


“ம்ம்.. வீட்டுக்கு தான். என் வீடு உன் வருகைக்காக தான ரொம்ப நாளா காத்திருக்கு”


“இல்ல சூர்யா.. அது வெளியில எதாவது பப்ளிக் பிளேஸ்ல”


“வெளிய வா.. அது பிரைவெசி இருக்காதே! வீட்டுக்கு வரலாமே? ஏன் தயக்கம்?”


“இல்ல அங்க உங்க அம்மா அப்பா எல்லாம் இருப்பாங்க.. அதான் தயக்கமா இருக்கு”


“ஹே குயின்.. அவங்க எல்லாம் மும்பைல இருக்காங்க.. இங்க நான் மட்டும் தான் இருக்கேன்.. வா” என அழைத்தான்.


உண்மையில் இப்போது தான் அவள் தயங்கி இருக்க வேண்டும். தனிமையில் ஆள் இல்லாத இடத்திற்க்கு அழைக்கிறானேயென.. ஆனால் அவளோ கண்மூடித்தனமான இருக்கிறாளே! அதற்கும் சம்மதித்து விட்டாள்.


“இன்னும் ஒரு ஒன் ஹவர்ல ஷார்ப்பா வந்துருறேன்” எனக்கூறி வைத்துவிட்டாள்.


அவள் வருவதை கணக்கீட்டு அவன் பிளான் பி யையும் யோசித்துவிட்டான். ஆனால் இவர்களின் பிளானை எல்லாம் உடைக்க அங்கே ஒருத்தி வேலையைப் பார்த்துவிட்டாளே!


ஆம் சாத்விகா தான். பிரணவிகா கல்லூரியிலிருந்து கிளம்பி சூர்யான்ஷை சந்தித்து அவனுடன் சேர்ந்து கவினை சந்திக்க போகும் விஷயம் அறிந்த சாத்விகா அதை விஹானிடம் ஃபோனில் தகவல் தெரிவித்து விட்டாள். அதை அறிந்த விஹானுக்கோ உச்சக்கட்ட கோபம் பிரணவிகா மீது.


‘இவளுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? அவனை போய் மாமா கிட்ட காட்ட போறாளே! இவ என்ன பண்ணினாலும் மாமா இதுக்கு ஒத்துக்கப் போறதில்ல.. இவ அவன கூட்டிட்டு போய் மாமா முன்னாடி நிக்குறதுக்கு முன்னாடி மாமாவ என் வீட்டுக்கு அனுப்பி விடனும். பெரியப்பா மூலமா அவர்கிட்ட பேசி கல்யாண தேதிய குறிக்க சொல்லனும்' என நினைத்துக் கவினுக்கு அழைத்து


“மாமா பெரியப்பா உங்கள உடனே வீட்டுக்கு வரச் சொன்னாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசனுமாம். அதுனால நீங்க அத்தைய கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க” எனக்கூறவும், கவினுக்கும் விஹான் பிரணவிகாவை காதலிக்கும் விஷயம் தெரியுமாதலால் அது விஷயமாகத்தான் இருக்கும் என நினைத்தவர்,


‘கவிதா சம்மதிச்சுட்டாளா என்ன? இருக்காதே அவ்வளவு சீக்கிரம் அந்த ராங்கி இறங்கி வரமாட்டேளே! அவ சம்மதம் சொல்லாம மாமாவும் கூப்பிட்டு இருக்க மாட்டார்.. சரி போய் பார்ப்போம் ஆனா அவ சம்மதிக்காம என் பொண்ண கொடுக்கமாட்டேன்’ என மனதில் நினைத்தவரோ வங்கியில் பெர்மிஷன் போட்டு இரண்டு மணிக்கெல்லாம் கிளம்பி கார்த்திகாவை அழைக்கச் சென்றார்.


அவரே பள்ளிக்குச் சென்று அழைக்க, அவரும் பெர்மிஷன் போட்டு வர, அருகில் உள்ள காஃபி ஷாப்புக்கு அழைத்துச் சென்றவர், பிரணவிகா பிறந்த நாளைக்கு அழைக்கச் சென்றபோது விஹானுக்கு பிரணவிகாவை பெண் கேட்ட விஷயத்தையும் அதன் பின் அவர் கவிதாவும் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியம் எனக்கூறியதையும் கூறினார்.


“யார கேட்டு கவின் இப்படி சொன்னீங்க?”


“மாமாவே கேக்கும்போது என்ன சொல்றது கார்த்தி?”


“கல்பனா அண்ணி பையனா இருந்தா கண்ண மூடிட்டு நிஹாரிகாவை கொடுத்த மாதிரி கொடுத்திருப்பேன் ஆனா விஹானும், விராஜ்ஜூம் கவிதா புள்ளைங்க.. இது சத்தியமா செட் ஆகாது கவின்”


“அது எனக்கும் தெரியும். கவிதா சம்மதிச்சா மட்டும் தான் நானும் சம்மதிப்பேன்னு சொல்லிட்டேன் அன்னிக்கே. ஒரு வேலை கவிதாவே சரி சொல்லி முறைப்படி பொண்ணு கேட்டா கொடுக்கலாம். எதுக்கு ஆசை பட்டவங்கள பிரிக்க?”


“ஓஹ் அப்போ உங்க பொண்ணும் கூட்டோ? அது தான் காலையில காதல் கீதல்னு உலருனாளா? அப்பவே இரண்டு போட்டு இருக்கனும்” எனக் கோபமாகக் கூற,


“கார்த்தி! அவங்க எல்லாம் சம்மதிச்சு பொண்ணு கேட்டா மட்டும் கொடுக்கலாம்.. இல்லனா வேணாம்”


“வேணவே வேணாம்னு தான் எனக்கு தோனுது. உங்க தங்கச்சிக்கு நம்ம மேல நல்ல எண்ணமே இல்ல”


“நீ ஏன் அவள மட்டும் யோசிக்கிற? விஹானை யோசி.. விஹானுக்கு என்ன குறை?”


“எனக்கு ஷிம்ரித், விஹான், விராஜ் எல்லாமே என் புள்ளைங்க போலத் தான். அவங்கள எனக்கும் ரொம்ப பிடிக்கும். தங்கமான புள்ளைங்க தான் எல்லாமே! அதுக்காகத் தேள் போல கொட்டிட்டே இருக்குறவங்க கிட்ட என் புள்ளைங்கள கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல”


“அங்க கல்பனா, நிஹாரிகா.. இரண்டு மாமா.. மூணு மாப்பிள்ளை எல்லாம் இருக்காங்க.. அதை எல்லாம் கூட நீ யோசி கார்த்தி”


“அவங்க எல்லாரையும் தூக்கி சாப்பிடுறவங்க தான் உங்க தங்கச்சி”


“கார்த்தி!”


“முடியாது கவின்”


“லட்டு”


“முடியாதுதுது”


“சரி.. போவோம் அங்க நிலைமைய பார்த்துட்டு முடிவு பண்ணலாம்”


“நான் வரல”


“கூப்பிட்டு போகாம இருந்தா நல்லா இருக்காது கார்த்தி”


“சரி போகலாம். ஆனா என் முடிவு மாறாது” எனக் கூறியே வந்தார் கார்த்திகா.


*******


இங்கு சூர்யான்ஷின் வீட்டிலோ அவனுடன் இருக்கும் பாடிகாட், மேனேஜர் என அனைவரையும் அனுப்பிவிட்டான் வாயில் காவலர் ஒருவர் மட்டுமே இருந்தான். ஏனோ அவனுக்கு பிரணவிகாவுடன் செலவிடப்போகும் இந்தத் தருணமும், அவன் திட்டமும் யாருக்கும் காட்சிப் பொருளாக இருக்க விருப்பமில்லை. அதனால் அனைவரையும் அனுப்பிவிட்டு தனியாக பிரணவிகாவுக்காக காத்திருந்தான். ஆனால் அவன் திட்டத்தைக் கெடுக்க ஒருத்தன் வருவானென நினைத்திருந்தால் அனுப்பியிருக்க மாட்டானோ என்னமோ!


அப்போது தான் அவன் வீட்டு வாயிலுக்கு வந்தாள் பிரணவிகா. அவள் வருவதை அவன் முன்கூட்டியே காவலாளிக்கு தெரிவித்திருந்ததால் அவளைக் காரணம் கேட்காமல் உள்ளே செல்ல அனுமதித்தான் அவன்.


அவளும் தயங்கியபடியே உள்ளே வர அந்தப் பிரமாண்டமான வீட்டின் நிசப்தமும், தனிமையும் அவளை மிரட்டியது என்னமோ உண்மை. ஆனாலும் அவன்மீது அவள் கொண்டுள்ள குறுட்டுத்தனமான நம்பிக்கையில் முன்னேறி வீட்டு வாயிலுக்கு வர, காவலாளி மூலம் விஷயம் அறிந்தவனோ தானாக வந்து கதவைத் திறந்தான்.


“வெல்கம் ஹோம் மை டியர் பியூட்டி குயின்” என் மேல்நாட்டவர் பாணியில் குணிந்து வரவேற்க்க அவளுக்குச் சற்றே கூச்சமாக இருக்க, தனிமையின் பயத்தை உள்ளுக்குள்ளே மறைத்துச் சிரித்து வைத்தாள் அவனைப் பார்த்து.


“உள்ளே வா” என அவள் கையைப் பிடிக்க, நாசூக்காக அவனிடமிருந்து தன் கையைப் பிரித்து எடுத்துக் கொண்டு அவள் பின்னால் வர, அவளின் செய்கை அவனுக்குச் சற்று எரிச்சலைத் தான் தந்தது. தனது திட்டத்திற்கு அடிபணியமாட்டாளோ என்ற பயமும் சேர்ந்தது அவனுக்கு.


நல்ல வேலையாக அவன் கதவை மூடவில்லை அப்படி மூடியிருந்தால் அப்போதே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியிருப்பாளோ என்னவோ அப்படியொரு மனநிலையில் தான் உள்ளே வந்தாள்.


அங்கிருந்த ஷோஃபாவில் அமர்ந்தவர்கள் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதுவும் பேச வில்லை. அவளுக்கு அவனைப் பார்த்ததும் ஏதோ ஒரு பதட்டம் நெஞ்சில் குடிகொண்டு வாயில் வார்த்தைகளை வரவிடாமல் செய்தது. ஆனால் அப்பதட்டம் நிச்சியம் காதலனைக் கண்டதும் வரும் வெட்கம் கலந்த பதட்டம் அல்ல என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.


சூர்யான்ஷ்ஷூக்கும் அவளது பதட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது. அவளுடைய பதட்டத்தை பார்த்தவனுக்கு நிச்சியம் இவள் இன்று தன்னை நிராகரிக்க வந்திருப்பதாகவே பட்டது. இவ்வளவு சீக்கிரம் விஹான் இவள் மனதை மாற்றிவிட்டானா என்ற சீற்றம் எரிமலையாய் அவனுள் கனன்றது. ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் ஒரு சின்னப் புன்னகையின் கீழ் மறைத்துக் கொண்டான்.


ஷோஃபாவில் அமர்ந்து கையைப் பிசைந்து கொண்டிருந்தவளிடம்,


“குயின் காஃபி ஆர் டீ?” என்றான்.


“இ.. இல்ல வேண்டாம்” என்றவளும் அவனிடம் இயல்பாகப் பேச நினைக்கிறாள் தான் ஆனால் இந்த மாளிகையும், தனிமையும், நிசப்தமும் அவளைக் கலங்கடிக்கிறது.


“ஜூஸ்” என்றவன் அவள் தடுத்து பேசும் முன் அந்த அறையிலே இருந்த குளிர் சாதனப் பெட்டியிலிருந்து அவளுக்கும் தனக்குமான குளிர்பானத்தை ஊற்றிக் கொண்டு வந்தான். தவிர்க்க முடியாமல் வாங்கிவிட, அவன் முகத்தில் அதீத சந்தோஷம். ஏனெனில் அந்த குளிர்பானத்தில் கலந்த பொருள் அப்படியாகப்பட்ட பொருள்.


அவளும் குடிக்க ஆரம்பிக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அவனும் குடிக்க ஆரம்பித்தான் ஒருவித வெற்றிப் புன்னகையுடன். முதல் ஒரு மிடறு விழுங்கியவளுக்கு சர்வ நிச்சியமாக இதில் ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் அவள் கண்முன்னே தான் ஒரே பாட்டிலிலிருந்து இரண்டு குவளைகளில் ஊற்றினான். அவள் கண் முன்னே அவனும் குடிக்கிறான் அதனால் அந்த பானம் சரியில்லையோ என்று நினைத்து அவனிடம் சொல்வதற்காக நிமிர, அவனோ அந்தக் குவளையைக் காலி செய்திருந்தான்.


“ஜூஸை குடி குயின்” என அவன் கூற,


“ஜூஸ் கெட்டு போயிருக்கு சூர்யா.. உங்களுக்கு தெரியலயா? பேட் டேஸ்ட் வருது..” எனக்கூறியவள் அதைக் குடிக்காமல் கீழே வைக்க கோபமடைந்தவன்,


“ஏய் குயின்.. அது ஃபாரின் ஜூஸ்டி அப்படி தான் இருக்கும். வெரி காஸ்ட்லி. குடி நல்லா தான் இருந்தது நான் குடிச்சேனே” என்றான் நிதானமாகத் தான் ஏனெனில் அந்த பானம் இன்னும் அதன் வேலையைக் காட்டவில்லை.


“இல்ல.. எனக்கு வேண்டாம்.. அல்ரெடி தலை வலிக்குது” எனக்கூற,


“டயர்டா இருக்க பாரு குயின். அதான் உனக்கு தலை வலிக்குது. ஜூஸை குடி எப்படி எனர்ஜி ஏறுதுனு பாரு..” என்றான்.


திரும்பத் திரும்ப வேண்டாம் என்றால் அவனை அவமதிப்பது போல ஆகுமென நினைத்தவள், கஷ்டப்பட்டு மீண்டும் அந்தக் குளிர்பானத்தை வாயருகில் கொண்டு செல்ல, அந்த குளிர்பானத்தின் மனமே அவளுக்கு ஒமட்டலை கொடுத்தது. பேருக்கு வாயில் வைத்து வைத்து எடுத்தாள்.


“கொஞ்சம் தண்ணி வேணும்” எனக்கேட்க, அவனோ கிட்சனுக்கு சென்றான், அவளும் பின்னாலே சென்றவள் அவன் தண்ணீர் பிடிக்கும்போது அங்கிருந்த பாத்திரம் துலக்கம் தொட்டியில் குளிர்பானத்தை கொட்டிவிட்டு வெறும் குவளையோடு அவனருகில் நின்றாள். அவன் திரும்பும் நேரம் சரியாகக் கடைசி மிடறை குடிப்பது போல நடித்து, குவளையை அங்கு வைத்துவிட்டு தண்ணீரை வாங்கினாள்.


“குடிச்சிட்டியா?” என முகம் முழுக்க சிரிப்புடன் கேட்க, அவளும் ஆமெனத் தலையசைத்துக் கொண்டே தண்ணீரைக் குடித்தவளின் கண்கள் அவ்வீட்டை சுற்றிவர,


“வா குயின் வீட்டைச் சுற்றிக் காட்டுறேன்” என அவள் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, அவள் கையை உருவி விடக்கூடாதென இறுக்காமாகப் பற்றியிருந்தான். அவளும் அவன் பின்னால் செல்ல வீட்டின் கீழ்தளம் முழுவதும் சுற்றிக் காட்டியவன் முதல் தளத்திற்கு அழைத்துச் செல்ல அங்கிருந்த முதல் அறையே அவனுடைய அறை தான்.


கிட்டத்தட்ட அந்தத் தளத்தில் முக்கால்வாசியை சேர்த்தது போலான பெரிய அறை. அறைக்குள்ளே சில அறைகள் இருந்தது. பொதுவான அறை, கழிவறை, உடைகளுக்கான அறை, அவனுக்கான ஜிம், அவனுக்கான ஆஃபீஸ் அறை, அறைக்குள்ளேயே ஒரு மினி பார் அறை, மினி தியேட்டர், இரண்டு பால்கெனி அதில் ஒன்றில் ஜர்க்கூஸி.


“திஸ் இஸ் அவர் பெட் ரூம்” எனக் கடைசியாக அவன் உறங்கும் பிரத்யேகமாக அறையைத் திறந்து அதற்குள் அவளை அழைத்துச் சென்றான்.


அவ்வறைக்குள் நுழைந்தவளுக்கு மூச்சு கூட விட முடியவில்லை. ஏனெனில் அவ்வறை சுவர் முழுவதும் விதவிதமான மாடல் அழகிகளின் புகைப்படம் அறையும் குறையுமாக அதுவும் அவனுடன் மிக நெருக்கமாக, அந்தரங்கமாக இருந்தது. அவள் அதிர்ந்து நின்றாள்.


“இத்தனை மாடல் கூட பழகியிருக்கேன்.. ஏன் நிறைய ஆக்டர்ஸ்களோட கூட பழகியிருக்கேன்.. எல்லாமே ஒன் நைட் ஸ்டாண்ட் தான்.. யாராலயும் என் மனசுல இடம் பிடிக்க முடியல.. நீ.. நீ மட்டும் தான் என் மனசுல இடம் பிடிச்ச.. உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்னு தோனுது.. ஆனா ஆனா உன் அத்தான் அதான் அந்த விஹான் அவன் உன்னை எனக்கு விட்டுக்கொடுக்கமாட்டானாம்..” என அந்த அறையே அதிரும் படி சிரித்தான். அவள் பேயறைந்த போல நின்றாள்.


“அவன் என்ன விட்டுக்கொடுக்க மாட்டேன்னு சொல்றது. நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். அவனுக்கு உன்னை விட்டே கொடுக்கமாட்டேன். ஏன்னா அவன் உன்னை விரும்புறான்னு தெரிஞ்சு தான, நான் உன்னை அவன் கிட்ட இருந்து பிரிக்க, உன்னைக் காதலிச்சேன். அதனால உன்னை அவனுக்கு நான் விட்டே கொடுக்கமாட்டேன்” எனக் குலறலாக வந்தது அவன் வார்த்தைகள். குளிர்பானம் வேலையைக் காட்ட ஆரம்பித்தது அவனுக்கு.


இனி என்ன ஆனது என பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
Last edited:
Top