எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 19

S.Theeba

Moderator
அழகிய மாலைப் பொழுது. இருளும் ஒளியும் கலந்த பொன்மாலை வேளை. ஸ்வீட் கஃபே என்னும் நட்சத்திர உணவு விடுதியில் அமர்ந்திருந்தான் பிரசாந்த். அவன் அருகில் பதட்டம், பயம், ஏக்கம் என்ற கலவை உணர்வை முகம் பிரதிபலிக்க அமர்ந்திருந்தான் ராகேஷ்.

அடிக்கடி கஃபே வாயிலைப் பார்ப்பதும் திரும்பி பிரசாத்தின் முகத்தை ஏக்கத்துடன் பார்ப்பதுமாக இருந்தான். இடையிடையே பிரசாந்திடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தான். ஐம்பத்தைந்தாவது தடவையாக அதே கேள்வியை மீண்டும் கேட்டான்.
“மச்சான் என் மிரு கட்டாயம் வருவாளாடா?”
அதுவரை பொறுமையாகப் பதில் சொன்ன பிரசாந்த் சற்றே கோபத்துடன்,
“இப்படியே கேட்டுக்கிட்டே இரு. நான் எழுந்து போயிடுறன்? ஓகே வா போவோம்” என்றவன் எழுந்தே விட்டான்.
அவன் எழுந்ததும் ராகேஷ் பதறிவிட்டான்.
“இல்லை, இல்லை மச்சான், அவள் எப்பவும் அப்படித்தான். சொன்ன டைமுக்கு வரவே மாட்டாள். வெயிட் பண்ணுவோம்” என்றவன் தன்முன்னே இருந்த கிளாஸில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டு வைத்தான். அவனது ஏக்கம் கலந்த விழிகளைப் பார்த்ததும் பிரசாந்துக்குப் பரிதாபமாக இருந்தது.
“மச்சி சாரிடா… கட்டாயம் அவள் வருவாள். என்னை நம்பு, உன்கூட அவளை சேர்த்து வைப்பது என் பொறுப்பு” என்றான்.

அவன் அவ்வளவு உறுதியாகக் கூறுவதற்கும் காரணம் உள்ளது.
நிச்சயதார்த்த சடங்குகள் முடிந்ததும் விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. ஏற்கனவே இந்த நிகழ்வு எதிலும் முழு ஈடுபாட்டோடு பங்குபற்றாத தனஞ்சயன் விட்டால் போதும் என்று தன் அறைக்குள் போய் புகுந்த கொண்டான். வந்திருந்த உறவினர், நண்பர்கள் ஒவ்வொருத்தராகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர். மிருணாளினியோ சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அருகில் சென்ற பிரசாந்த்,
“மிருணா, உன் கூட அவசரமாய் பேசணும். மொட்டை மாடிக்கு வருகிறாயா?”
“பிரசாந்த் நான் இப்போ உன் அண்ணி. அந்த மரியாதை தரணும்?”

“இன்னும் உனக்குக் கல்யாணம் ஆகலை. முதல்ல கல்யாணம் நடக்கட்டும். ஒருவேளை அப்படி நடந்தால் அப்புறம் மரியாதையெல்லாம் வரும்”
“ஏய் பிரசாந்த், என்ன நீ ஒருவேளை நடந்தால் என்று சொல்கிறாய்? நிச்சயம் எனக்கும் வெடிங் நடக்கும்.. அப்புறம் இருக்கு உனக்கு”
“அதுசரி… என் ஃபிரண்ட் ஒருத்தன் ஃபங்ஷனுக்கு வாறதாய் சொன்னான். இப்போ என்னடா என்றால் வரமுடியாது என்கிறான்” என்று சோகமாகக் கூறினான்.
“அதற்கு நான் என்ன செய்ய?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“என் ஃபிரண்ட் பாவம். உன்னைப் போல் தான் அவனும் பெங்களூரில் படிக்கிறான். உனக்கு அவனைத் தெரியுமா?”
“எனக்கு வேறு வேலை இல்லை பார்… உன் ஃபிரண்ட் யாருன்னு தேடி அலைஞ்சு பார்க்கவா?”
“சேச்சே… நீ அவ்வளவுக்கெல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை. நானே அவனை நாளைக்கு வரவைக்கிறேன். அப்போ பார்க்கலாம்”
“நீ என்ன நினைச்சிட்டு இருக்காய்? எனக்காக அங்கே எல்லோரும் காத்திருக்காங்க. நீ பைத்தியம் மாதிரி உளறிகிட்டு இருக்கிறாய்” என்று சிடுசிடுத்துவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.
“வெயிட் வெயிட்… என் பிரண்ட் நேம் கேட்டிட்டு போ. அவன் நேம் ரா..கே.. ஷ்” என்று அழுத்திக் கூறினான் பிரசாந்த். திரும்பி செல்ல எத்தனித்தவள் அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டாள்.
அவள் முன்னே சென்றவன்,
“என்ன மிருணா உன் முகத்தில் இவ்வளவு அதிர்ச்சி தெரியுது. சொல்லப் போனால் பேயறைஞ்சது மாதிரி இருக்காய்? என்னம்மா ஆச்சு” என்று ஏளனமாகக் கேட்டான்.
“அ.. அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்”
“அப்படியா?” என்று நம்பாத குரலில் கேட்டான்.
எந்தப் பதிலுமின்றி அமைதியாக நின்றாள்.
“மிருணா, ராகேஷைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”
“அ… அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?”
“ஓகோ எதுவும் தெரியாது…? பட் யாரென்றே தெரியாதவங்ககூடத்தான் இப்படி ஃபோட்டோ எடுப்பீங்களோ?” என்று தன் அலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டினான்.
அதில் இருந்த புகைப்படத்தைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். ஆனால், அவள் அப்படியே நின்று விட்டால் அது மிருணாளினி அல்லவே.
உடனடியாகத் தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவள்
“பிரசாந்த், இப்போ இந்த ஃபோட்டோவெல்லாம் எதுக்கு? எனக்கும் உன் அண்ணாவுக்கும் எங்கேஜ்ட்மெண்ட் முடிஞ்சிடுச்சு.”
“அதுக்கு?”
“அப்படியே விட்டிடு பிரசாந்த்”
“ஏய், நீ என்ன நினைச்சிட்டு இருக்க? ஒரு பக்கம் என் நண்பனின் வாழ்க்கையை பாழாக்கிட்டாய். இப்போ என் அண்ணாவை கல்யாணம் பண்ணி அவரையும் ஏமாற்றவா?”
“இல்லை பிரசாந்த், நீ நினைக்கிற மாதிரி இல்லை. ராகேஷ் ரொம்ப மோசம். அவன் என்னை பிளாக் மெயில் பண்ணித்தான் லவ் பண்ணினான். அவனிடமிருந்து தப்பிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இப்போதான் நான் நிம்மதியற்ற இருக்கேன். பிளீஸ் அந்தப் பேச்சையே விட்டிடு” என்று கெஞ்சும் தொனியில் கேட்டாள்.
“ஓகே அவன் எப்படிப்பட்டவன் என்று நாளை தெரிந்திடும். நாளை ஈவினிங் சிக்ஸூக்கு ஸ்வீட்டிக்கு வந்திடு. ராகேஷையும் வரச் சொல்லுறேன்”
“நோ நோ… வேண்டாம் பிரசாந்த், நான் அவனை மீண்டும் சந்திக்க விரும்பலை”
“சந்திக்கிற… நீ நாளை ஸ்வீட்டிக்கு வருகிறாய். இல்லாவிட்டால் பெரும் பின்விளைவுகளை சந்திப்பாய” என்றவன் மளமளவென அவ்விடத்தை விட்டு அகன்றான்.

இந்த விடயம் குறித்து ராகேஷிடம் சொன்னதும் மறுநாள் ஐந்து முப்பதுக்கே பிரசாந்தைத் தூக்கிக் கொண்டு வராத குறையாய் இழுத்துக் கொண்டு வந்து விட்டான்.
இதோ இப்போது மிருணாளினியின் வரவுக்காய் காத்திருக்கின்றனர்.

சரியாக மணி ஆறிற்கு உள்ளே நுழைந்தாள் மிருணாளினி. அவளைக் கண்டதும் பிரசாந்த் இருப்பதையே மறந்து ”மிரு” என்று காதலுடன் அழைத்தபடி அவளை இறுக அணைத்தான் ராகேஷ்.
“ஏய் விடு.. விடு” என்று சங்கடத்துடன் நெளிந்தபடி பிரசாந்தைப் பார்த்தாள்.

“என்ன மிருணா, சொன்ன டைமுக்கு வந்திட்டாய்?”
“அது அது…”
“மிருணா ராகவ் ரொம்ப நல்லவன். அவனைப் போய் ஏமாத்துறாயே”
“இல்லை ராகேஷ் உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது. பேசாமல் நீ என்னை மறைந்திடுறதுதான் நல்லது.”
“எது மிரு செட் ஆகாது? என் கூட ரூமில் நைட் எல்லாம் தூங்கும்போது செட் ஆகாதுன்னு தெரியலை. எத்தனை நாளாய் வரம்பு மீறி நாம நடந்துக்கும்போது தெரியலை. இப்போது மட்டும் எப்படி மிரு தெரியுது”
“அது அது… அப்படித்தான்”
“மிரு பிளீஸ்”
“என்ன நீ நான் சொல்றதைக் புரிஞ்சுக்க மாட்டியா?”
“எதைப் புரிஞ்சுக்க?”
“நீ என்ன சொன்னாலும் அத்தையும் தனாத்தானும் நம்ப மாட்டார்கள். எனக்கு எந்தக் கவலையுமில்லை.”
“மிருணா நீயும் ராகேஷூம் ரொம்ப ரொம்ப நெருக்கமாய் இருக்கிற போட்டோ, வீடியோ எல்லாம் ஆல்ரெடி அம்மாவுக்கு சென்ட் பண்ணியாச்சு. சோ நீ அம்மாவைப் பற்றி யோசிக்காமல் ராகேஷ் பிரச்சினையை மட்டும் பார்” என்றுவிட்டு ராகேஷிடம் ஒரு தலையாட்டலுடன் விடைபெற்று புறப்பட்டான். திக்பிரமை பிடித்தவள் போல் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

பிரசாந்த் அன்று காலையிலேயே ராகேஷை நேரில் சென்று சந்தித்து அவனிடம் அவன் காதல் பற்றி கேட்டறிந்தான். அப்போதே ராகேஷ் தாங்கள் இருவரும் நெருக்கமாகப் பழகுவதையும் தான் எடுத்துவைத்த ஃபோட்டோ, வீடியோ அனைத்தையும் காட்டினான். அவனிடமிருந்து சிலதைத் தனது அலைபேசிக்கு அனுப்பி வைத்தவன் மிருணாவுக்கும் தங்கள் வீட்டுக்குமான சம்பந்தம் குறித்து ராகேஷூக்குக் கூறினான். அதைக் கேட்டதும் அதிர்ச்சியானவன் சொல்வதற்கு வார்த்தைகள் இன்றித் தடுமாறினான்.
“ராகேஷ் நீ கவலைப்படாதே. மிருணா உனக்கானவள். அம்மாவுக்குத் தெரிந்தால் போதும்…” என்றவன் மாலை சந்திப்புக் குறித்துக் கூறினான்.

மிருணாவின் பேராசைக் குணத்தை சுபத்திரா அறிந்திருந்த போதும் இந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லை. ஒருவனுடன் இந்தளவுக்கு நெருக்கமாகப் பழகி ஏமாற்றி விட்டு பணத்துக்காக தனஞ்சயனைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டிருக்காளே. அதிலும் தனஞ்சயனைக் காதலிப்பதாகவும் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறி ஏமாற்றியதை எண்ணிப் பெரும் கோபப்பட்டார்.

தாயாகத் தனஞ்சயனை எண்ணிக் கவலையும் கொண்டார். இது குறித்து அவனிடம் எப்படிக் கூறுவது என்று தயங்கினார். ஆனால், இந்த விடயத்தை அறிந்த தனஞ்சயனோ எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாதாரணமாக் கடந்து சென்றான். அவனைப் பொறுத்தவரை இந்தக் கல்யாணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் எல்லாமே ஒன்றுதான்.

சுபத்திராதான் ரொம்பவும் தவித்துப் போய்விட்டார். தன் மகனுக்கு ஆசை காட்டி மோசம் செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு அவரை மிகவும் வேதனைப்படுத்தியது.
சில வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்றுவரை தனஞ்சயன் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. சுபத்திரா கல்யாணப் பேச்செடுத்தாலே தட்டிக் கழித்து வந்தான். அவனது முழுக் கவனமும் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதிலேயே இருந்தது. அவர்களின் கே.எஸ்.குயின் நிறுவனத்தின் பல்வேறு கல்லூரிகளை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களிலும் நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டான். அதன் ஒரு திட்டமாகவே அவன் திருநெல்வேலி வந்ததும்.

பிரசாந்த் படித்து முடித்ததும் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்கவும் அங்கே சென்றுவிட்டான். கவிப்பிரியா படித்துக் கொண்டிருக்கும் போதே சுபத்திராவின் சொந்தத்தில் இருந்து வரன் ஒன்று வந்தது. எல்லோருக்குமே பிடித்துவிடவும் நிச்சயம் செயதனர். மாப்பிள்ளையும் டாகடரே டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். பட்டமளிப்பு முடிந்ததுமே திருமணத்தை முடித்து விட்டனர். இப்பொழுது அவர்களது மருத்துவமனையிலேயே பணியாற்றுகின்றாள்.

வேதாச்சலம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாரடைப்பில் இறந்துவிட ராஜலட்சுமி ஓய்ந்துவிட்டார்.


எல்லோரையும் விட முக்கியமாக நாங்கள் பார்க்க வேண்டிய ஒருத்தர் மிருணாளி. அவள் ஆரம்பத்தில் ராகேஷைத் திருமணம் செய்ய மறுத்தாள். அவனால் தன் கனவு வாழ்க்கை பாழாகிவிட்டதாகக் குற்றம் சுமத்தி அவனை ரொம்பவும் காயப்படுத்த ஆரம்பித்தாள். அவனுடன் வாழ்ந்தால் தான் பிச்சைக்காரியைப் போலவே வாழ வேண்டுமே என்று அழுது புலம்பினாள். இறுதியில் அவனையே வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்தவள், அவனை அடிமை போலவே நடத்தினாள். அவனும் அவள் மேல் கொண்ட கண்மூடித்தனமான காதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். இப்போது இருவருக்கும் மூன்று வயதில் அஸ்வத் என்ற மகன் உள்ளான்.
 
Top