எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 09

zeenath

Active member

அத்தியாயம் 9

கணவன் தனக்கு ஒதுக்கிக் கொடுத்த இடத்தில் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த துணிகளைப் பெட்டியிலிருந்து எடுத்து அடுக்க ஆரம்பித்தாள் வினிகா. அடுக்கும்போதும் அதே சிந்தனைதான்,

'எங்க போச்சு இந்தப் பிரேஸ்லெட்?..'

இவள் காலையில் நகைகளைப் பரத்தி வைத்திருப்பதை பார்த்துவிட்டு என்னவென்று கேட்ட மோகன் இடமும் இவள் எந்த விளக்கமும் சொல்லவில்லை. இருவரும் கீழே சென்று காலை உணவை முடித்துவிட்டு மேலே வந்த போதும் இவளின் பெட்டிகளை எடுத்து உருட்ட ஆரம்பித்தாள். இவள் செயல்களைப் பார்த்தவனும்,

"ஏதோ தேடிக்கிட்டு இருக்க, ஆனா என்னன்னு சொல்ல மாட்டேங்குற.?" எனக் கேட்டபடியே, அவளின் அருகில் வந்தவன்,

"என்னன்னு சொல்லு? கேட்கிறேன் இல்ல? ஏதாவது காணோமா? இல்ல ஏதாவது வேணுமா? நான் போய் வாங்கிட்டு வரவா?.."

எனக் கேட்டவனிடம்.

கூறுவோமா! என இரு நொடிகள் சிந்தித்தவள். அத்தையைப் போல இவனும் கோபப்பட்டால் என்ன செய்வது என நினைத்தவளாக அமைதியாக இருந்து கொண்டாள் எதுவும் கூறாமல்.

இவனின் கேள்விக்கு எந்தப் பதிலும் வராமல் இருப்பதை பார்த்தவன்,

"சரி நான் கிளம்புறேன் ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்துடறேன்" எனச் சொல்லிக் கிளம்பி சென்று விட்டான்.

சித்தி பார்கவியும் இன்று சாயந்திரமோ அல்லது நாளையோ வருவதாகக் கூறி சென்று விட்டாள்.

தன் உடைகள் அனைத்தையும் அடுக்கி வைத்தவள் நகைகளையும் பத்திரமாக அலமாரிக்குள் இருந்த லாக்கரில் வைத்து மூடிவிட்டு ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து விட்டே, அங்கிருந்த மொட்டை மாடிக்குச் சென்றவள், அங்கு அமர்வதற்காக மேசைபோலக் கற்களால் கட்டப்பட்டு மேலே வழுவழுப்பான பலிங்கு ஒட்டப்பட்டு, இருவர் உட்காரும் அளவுக்கு இருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள் அமைதியாக.

தங்கள் வீட்டைப் போல வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை இங்கு, பாத்திரம் துலக்கவும், வீடு பெருக்கி துடைக்கவும் ஒரு பெண் வருகிறார் என்பதை தெரிந்து கொண்டாள். விசேஷ வீடு என்பதால் சமையலுக்கு ஒருவரை சேர்த்து இருந்தார்கள் அதனால் இவளும் எதுவும் உதவி செய்ய வேண்டுமா? எனக் கேட்காமல் மேலேயே அமர்ந்து கொண்டாள்.

ஏதேதோ நினைத்துச் சிந்தனையில் அமர்ந்திருந்தவள் தன்னை யாரோ குலுக்குவதை கண்டு அதிர்ந்து திரும்பிப் பார்க்க, மோகன் நின்றிருந்தான் அருகில். அவனைப் பார்த்ததும் சட்டென்று எழுந்தவள்

"என்ன ஆச்சு? எனக் கேட்க, "எவ்வளவு நேரமா உன்ன கூப்பிடுறேன்? என்ன சிந்தனையில் உட்கார்ந்துகிட்டு இருக்க.?" என்றான் இவனும்.

"இல்ல, சும்மா ஏதோ ஞாபகம்."

என்றவளைப் பார்த்தவன்.

"வா! கீழ சாப்பிட போலாம்."

என்ற படியே வேகமாகப் படிகளில் இறங்கி சென்றான். பெருமூச்சிட்டவளாக அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் இவளும்.

இவர்கள் சென்றபோது மோகனின் தந்தை அண்ணாமலை மற்றும் ரஞ்சிதத்தின் அண்ணன், அக்காள் கணவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களோடு சென்று மோகனும் அமர்ந்து கொண்டான். இவர்களுக்குப் பரிமாற வந்த ரஞ்சிதம்

"நீயும் உட்காருமா."

என்றார் தன் புது மருமகளை பார்த்து, "இல்ல அத்தை, நான் அப்புறமா உங்களோட சேர்ந்து சாப்பிடுகிறேன்." என்றாள் அவளும்.

ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கப் பெண்கள் அணி சாப்பிட அமர்ந்தது தங்களுக்குள்ளாகவே பரிமாறிக் கொண்டு உண்டு எழும்போது வந்தாள் யாழினி,

அவளைக் கண்ட ரஞ்சிதம்,

" என்ன யாழி? ரெண்டு மணி நேரத்துல வந்துருவேன்னு சொன்ன, மதியான சாப்பாடு நேரமே முடிஞ்சிடுச்சு. வா, வந்து சாப்பிடு முதல்ல." என்று அழைக்க,

"இருங்க மா, முகம் கழுவிட்டு வந்துடறேன்." என்ற படியே நிற்காமல் தன் அறையை நோக்கிச் சென்றாள்.

முகம் கழுவி வந்தவள் வினிகா மாடி ஏறுவதை பார்த்து,

"அண்ணி."என்று அழைத்த படியே அவள் அருகில் வந்தவள்,

"இந்தாங்க அண்ணி"

எனத் தன் கையில் இருந்த பிரேஸ்லெட்டை கழட்டி நீட்டவும், அதைக் கண்டு அதிர்ச்சியும் கேள்வியும் ஆக அவளை நோக்கியவள் கைகள் நீண்டு தன் பிரேஸ்லெட்டை வாங்கிக் கொண்டது.

"என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு, ரொம்ப நல்லா இருக்கு அழகா இருக்குன்னு சொன்னாங்க."எனப் பெருமையாகக் கூறியவள்,

"ஒரு ஒருத்தரா என் கைய பிடிச்சு பார்த்து முடிச்சு, அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வரவே, இவ்ளோ நேரம் ஆயிடுச்சு எனக்கு..."

எனச் சிரித்தபடியே கூறியவள், டைனிங் டேபிளை நோக்கிச் செல்லத் திரும்பினாள்.

"ஒரு நிமிஷம் நில்லு! யாழினி."

என்ற அண்ணனின் குரலில் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தாள். அண்ணன் அங்கு நிற்பதை இப்பொழுது தான் கவனித்தால் அவள்,

"என்ன அண்ணா?.." என்ற அவளின் கேள்விக்கு, வினிதாவின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை தன் கையில் வாங்கிக் கொண்டவன்,

"இத காலேஜுக்கு போட்டுட்டு போனியா.?"

என்றான் கேள்வியாக

"ஆமா." என்ற அவளின் பதிலில் "அண்ணி கிட்ட கேட்டியா? எப்போ எடுத்துப் போட்டுட்டு போன.?"

"காலையில் அம்மா கிட்டயும் அத்தை, சித்தி கிட்டயும் அவங்க நகை எல்லாம் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க, அப்பப் பார்த்தேன். பிரேஸ்லெட் ரொம்ப அழகா இருந்தது, எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. இதே மாதிரி ஒன்னு வேணும்னு அம்மாகிட்ட ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன்.அதான் சரி காலேஜுக்கு போட்டுட்டு போலாம்னு நெனச்சு போட்டுட்டு போனேன்.

"ஏன் அண்ணா.?" என்றளிடம் கோபமாக,

"பிடிச்சிருந்தது எடுத்துப் போட்டுகிட்டு போயிட்டேன்னு சொல்றியே, அண்ணி கிட்ட பர்மிஷன் வாங்கினியா.?"

"எதுக்கு பர்மிஷன் வாங்கணும்.?" என்றாள் சற்று குரல் உயர்த்தி,

"எதுக்கு பர்மிஷன் வாங்கணுமா? எனக் கேட்டவனுக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

"இது அவளோட நகை, அவ கிட்ட கேட்டுட்டு, அவ பர்மிஷன் கொடுத்தா தான் போட்டுட்டு போகணும்னு தெரியாதா உனக்கு? அந்தப் பேசிக் மானர்ஸ் கூட உனக்கு இல்லையா.?" என்றவனின் கோபத்தில் சற்று மிரண்டாலும்,

"அம்மா தான் சொன்னாங்க, அண்ணியோட நகையெல்லாம் நம்ம நகை மாதிரி தான் என்று, அதான் போட்டுட்டு போனேன்."

"அது எப்படி அண்ணியோட நகை உன் நகையாகும். அண்ணியோட நகை அவளோட நகை தான். அவ கிட்ட கேட்டு அவ பர்மிஷன் கொடுத்தா தான் நீ போட்டுட்டு போக முடியும். காலேஜ் படிக்கிற, இது கூட உனக்குத் தெரியாதா? அம்மா சொன்னாங்கன்னா உனக்கு எங்க போச்சு அறிவு.?"

என்றவனின் சரமாரியான கேள்வியில் கண்களில் நீர் நிறைந்து விட, திரும்பிக் கோபமாகத் தன் தாயைப் பார்த்தாள். இவை அனைத்தையும் சமையலறையின் வாசலில் நின்று தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

அவர் பார்ப்பது மாடிப்படி ஆரம்பத்தில் நின்றிருந்த மோகனுக்கும் வினிகாவுக்கும் தெரியவில்லை. ஆனால் யாழினிக்கு தாய் அங்கு நிற்பது நன்றாகவே தெரிந்தது. தன்னை காப்பாற்றவோ அல்லது தனக்கு ஆதரவாகப் பேசவோ அன்னை வராமல் இருப்பதோடு கண்களால் செய்கை செய்து, எதுவும் பேச வேண்டாமெனத் தாய் கூறுவதையும் கண்டு கொண்டவள். அண்ணனை நோக்கி,

"சாரி அண்ணா! இனிமே இப்படி பண்ண மாட்டேன்.ஏதோ ஆசையில எடுத்துப் போட்டுகிட்டேன்." என்றாள் மெதுவான குரலில்,

"சாரி என்கிட்ட கேக்காத, அண்ணிகிட்ட கேளு..." என்றான் அவனும், அதில் மேலும் கோபம் கொண்டவளாக, அண்ணியை நிமிர்ந்து பார்த்தவள்,

"சாரி அண்ணி தெரியாமல் எடுத்துட்டேன் இனிமே எடுக்கமாட்டேன்." என்றாள் அவளிடம்,

அவள் பரவாயில்லையெனச் சொல்ல வருவதற்குள் விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

தான் சொல்ல வருவதை கூடக் காதில் வாங்காமல் வேகமாகச் செல்லும் பெண் அவளைப் பார்த்தவள், தன் கணவன் மாடி ஏறிச் செல்லும் அரவம் கேட்டு அவன் பின்னையே சென்றாள் இவளும் வேகமாக.

மகனும் மருமகளும் மாடி ஏறிச் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ரஞ்சிதம், வேகமாக மகளின் அறைக்குள் சென்றார். அங்கு அன்னையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவள் கோபமாக அவரிடம்,

"என்ன? என்னைச் சமாதானப்படுத்த வந்தீங்களா? நான் திட்டு வாங்குவதை பார்த்துக்கொண்டே இருந்தீங்க தானே? நீங்கத் தானே சொன்னீங்க உனக்குப் பிடிச்சா எடுத்துப் போட்டுக்கலாம்னு, இப்ப அண்ணா எப்படி பேசிட்டு போறார் பாருங்க. உங்களால நான் தான் தேவையில்லாம அண்ணா கிட்ட திட்டு வாங்கி இருக்கேன். அண்ணி கிட்டயும் என்னைச் சாரி கேட்க வைத்துவிட்டான் எல்லாம் உங்களால தான்." என்றாள் அழுது கொண்டே.

மகளின் கண்ணீரைத் துடைத்தவர், "அம்மா ரொம்ப சாரி டா! நானும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கல." என்றார் எதையோ யோசித்தவராக.

அறைக்குள் நுழைந்த வினிகா கட்டிலில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் கணவனை நோக்கிச் செல்ல,

"இதைத்தான் தேடிட்டு இருந்தியா.?" எனக் கேட்டான் கையில் இருந்த பிரேஸ்லெட்டை அவளிடம் நீட்டிக்கொண்டே.

"ஆமாம்" என்பதாக அவள் தலையாட்ட

"இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்னு என்கிட்ட சொல்றதுக்கு என்ன.? எத்தனை முறை உன் கிட்ட கேட்டேன்." என்றான் சற்று குரல் உயர்த்தி.

"இல்ல, காலையிலேயே பார்கவி அத்தை கிட்ட சொன்னேன், பிரேஸ்லெட் காணோம்னு. அதுக்கு அவங்க ரொம்ப கோபப்பட்டுட்டாங்க எங்க வீட்டு ஆளுங்க மேல சந்தேகப்படுறியான்னு? கேட்டுட்டாங்க. உங்க கிட்ட சொன்னா நீங்களும் அப்படியே கேட்டிடுவீங்களோனு? பயமா இருந்தது. அதனாலதான் எதுவும் உங்க கிட்ட சொல்லல."

என்றாள் சற்று தயங்கியவாறு.

அவளின் பேச்சைக் கேட்டவன் தன்னிடம் அவள் கூறியிருந்தால் கட்டாயமாகத் தன் அத்தையைப் போலவே தானும் நினைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நூறு சதவீதம் இருப்பதாக எண்ணியவன் அமைதியாகத் தலையாட்டிக்கொண்டு அமர்ந்து விட்டான். ஆனால் இனி அவள் சொல்ல வருவதையும் சந்தேகப்படாமல் கேட்டுக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

தன் வீட்டில் இப்படி நடக்கும் என்பதே அவனுக்குப் புதிதாக இருந்தது. இனி ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி இரு வேறு கண்கொண்டு பார்க்க வேண்டுமோ என்ற நினைப்பே அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இன்னுமே தன் மனதில் தன் மனைவிக்கான இடம் என்ன என்பது புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவனுக்கு இது மேலும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தித் தலைவலியை தான் கொடுத்தது.

தன் போக்கில் சிந்தித்துக் கொண்டு, தலையைக் கரங்களால் தடவி விட்டுக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்க்க, இவனின் செயல்களைப் பார்த்து என்ன செய்வது எனப் புரியாமல் பாவம்போல் இவனையே பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தவனுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

"என்ன" என இவன் புருவம் உயர்த்தி, செய்கையால் தலையாட்டிக் கேட்க, "ஒன்றும் இல்லை" என்பதாக வேகமாகத் தலையாட்டியவளிடம் மெலிதான புன்னகையை கொடுத்தவன்,

"நகை எல்லாம் பத்திரமா எடுத்து வை, யாருக்கு காமிக்க கொடுத்தாலும் சரியா இருக்கான்னு ஒரு தடவை செக் பண்ணிடு, எதுவும் மிஸ் ஆகி இருந்தா அப்போதே கேட்டு விடு அதில் தவறு ஒன்றும் இல்லை, புரியுதா?.."

என்றவனிடம் புரிந்ததாகத் தலையாட்ட அவள் அருகில் வந்தவன் முதல் முறையாக அவள் தலையின் மேல் கைகளை வைத்து அழுத்தி, லேசாக அசைத்து,

"எல்லாத்துக்கும் தலைய தான் உருட்டுவியா.?"

எனப் புன்னகையுடன் கேட்டு விட்டு, அவள் பதிலுக்குக் காத்திருக்காமல் குளியலறை நோக்கிச் சென்றான்.

தன் கணவனின் புன்னகை முகமும் தன்னை தவறாக எடுத்துக் கொள்ளாமல் புரிந்து கொண்ட விதமும், தனக்கு ஆதரவாகத் தங்கையைக் கடிந்து கொண்டதையும் நினைத்தவளுக்கு மனது மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது.

தான் பயந்தது போன்று இல்லாமல், தன் வாழ்வு கண்டிப்பாகச் சிறக்கும் என்ற நம்பிக்கையோடு இவளும் அதே புன்னகை முகத்துடன் கணவன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு நின்றவள், மெதுவாகக் கணவன் அழுத்திச் சென்ற தலையைத் தடவிக் கொண்டாள். மனதில் ஒருவிதமான சிலிர்ப்பும் நிம்மதியும் உண்டானது.

வினிகா வின் மன நிம்மதி நிலைக்குமா? காத்திருப்போம் நாமும்.

மௌனம் தொடரும்...

 
Top