தாளம் எனக்கு ரொம்பவே பிடிச்சமான கதை. பயணம் ஆரம்பிப்போம்.வாங்க.
தாளம் 1
'என்ன தவம் செய்தனை..
யசோதா, எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க...
என்ன தவம் செய்தனை... யசோதா... யசோதா
ஈரேழு புவனங்கள் படைத்தவனை...
கையில் ஏந்தி சீராட்டி..
பாலூட்டி, தாலாட்ட..
என்ன தவம் செய்தனை... யசோதா'
என்று கண்களில் உருகி நீர் வழிய ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் காபி ராக கண்ணன் பாடலை மனம் நெகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள் செல்வாம்பிக்கை.
அவள் அம்மாவே பாட்டு கற்றுத்தரும் ஆசிரியை தாம் எனும் பொழுது கவலை என்ன? மொழி கற்கும் முன்பே இசை மொழியானது.
செல்வாம்பிக்கையின் அம்மா செல்லம் திருவையாறு இசை கல்லூரியில் முறையாக வாய் பாட்டும், வீணையும் பயின்றவர். அவரது குரல் வளத்தில் காதல் கொண்டு, செல்லதுடன் சேர்ந்த ரகுநாதனுக்கு இருபத்து இரண்டு வயது செல்வாம்பிகை திருமணம் செய்ய காத்திருக்கும் பொழுதும் ஊர் அறிய செல்லத்தை மனைவியாக்கிக் கொள்ளும் எண்ணம் வரவில்லை. அத்துடன் அவளிடம் மயக்கமும் தெளியவில்லை.அந்த தீராத மயக்கத்தில் பிறந்தவள் இளைய மகள் அபர்ணா. செல்வாம்பிக்கைக்கும் அபர்ணாவுக்கும் மூன்று ஆண்டுகள் வித்யாசம் உண்டு.
ரகுவிற்கு முறையான திருமண உறவில் மனைவி, மகள், மகன் எல்லோரும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கும் ரகுவின் தொடர்பு பற்றியும், அதனால் உண்டான குடும்பம் பற்றியும் தெரியும்.
ஆனால் ரகுவை ஒன்றும் செய்ய முடியாது.ரகுவின் மனைவி காயத்ரிக்கு செல்லத்தின் மீது கோவம், பரிதாபம் இரண்டும் உண்டு.
மனைவிக்கே உரிதான கணவன் மீதான உரிமையுணர்வும் அதனால் உண்டான கோவமும்,ஒரு பெண்ணாக செல்லம் இப்படி ஏமாந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் நிற்கும் அவலத்தின் காரணமாக பிறந்த பரிதாபமும் எல்லாவற்றையும் சரிக்கட்டும் ரகுவின் அபார செல்வம்.
ஆம், ரகு பெரும் செல்வந்தன். அத்துடன் “நான் ஆண், என்ன செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு” எனும் எண்ணம் வேறு.
காயத்ரி இது பற்றி கேட்டு சண்டை போடும் பொழுது வரும் பதில், 'அவளுக்கு என்ன தாலியா கட்டிட்டேன்.. என் சொத்து எல்லாம் இந்த குடும்பத்துக்கு தான் ".
அப்போ அந்த பொண்ணுங்க நிலைமை என வாயில் வரும் அடுத்த வார்த்தையை வெளியே விடாமல் முழுங்கி கொள்வாள் காயத்ரி.‘தனக்கும் ஒரு மகள் உண்டு’ என்ற பயம் அவளது அடி மனதை ஆட்டிப்படைத்தது.
ஆனாலும் ஆணின் சபலம்.. அடக்க வழி தெரியவில்லை. இத்தனைக்கும் மனைவியிடமும் தேவையானதை இன்னமும் பெற்று கொண்டிருக்கும் ரகுவரனுக்கு திருப்தி என்பது மட்டும் இல்லை.காயுவின் ஒரே ஆறுதல் வேறு எந்த பெண்ணுடனும் வரிசையான தொடர்புகள் கணவனுக்கு இல்லை என்பது மட்டும் தான்!
ஆனால் காயத்ரியின் பிள்ளைகள் மதுமிதா, விஷ்ணு இருவரும் அப்பாவின் அந்த தொடர்பு, குடும்பம் இரண்டையும் மொத்தமாக வெறுத்தார்கள்.
மதுவை விட. செல்வாம்பிக்கை ஆறு மாதங்கள் பெரியவள் எனில் ‘காயத்ரி’ ஏமாற்றப் பட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம் ஆகிறது.மது, விஷ்ணு இருவருமே தகப்பனுடன் பேசி பல வருஷங்கள் ஆகிறது. அதை பற்றிய கவலை ரகுவிற்கு இல்லை.
செல்லம்மா வீட்டில் செல்வா, அபர்ணா இருவரும் கூட ரகுவுடன் பேசுவதில்ல.
செல்வாம்பிக்கையும் அபர்ணாவும் சேர்ந்து அகாடமி வைத்து பாட்டு, நடனம், வயலின் மூன்றும் கற்றுத் தரகிறார்கள்.செல்லம் வழிகாட்டி.அதோடு அவளது வகுப்புகளும் அங்கேயே தான்.
முறையாக நடனம் பயின்ற அபர்ணா இப்போது அதில் இளநிலை மூன்றாம் ஆண்டு.
செல்வா, முதுகலை வாய் பாட்டில் இரண்டாவது ஆண்டு.செல்லம்மாள் தன் பெண்டுகளின் அகாதமியில் இசை வகுப்புகள் எடுக்கிறாள். நிர்வாகமும் அவளினதே!
ரகு செல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்தாலும் அவனது பணத்தில் சோறு உண்ண பிள்ளைகள் விருப்பம் கொள்ளவில்லை.
பின்னே, செல்லம் ஏன் இன்னும் ரகுவின் தொடர்பில் இருக்கிறாள்? என்றால் நாற்பதுகளின் மத்தியில் ரகுவின் துணை அவளுக்கும் தேவை படுகிறதே!தாலியே கட்டாவிட்டாலும் அவள்தான் ரகுவின் முதல் அத்யாயம். அவளால் தனது கணவ(வா)னை(?)நிச்சயம் விட முடியாது.
செல்லம், ரகு இருவரும் கிட்டத்தட்ட ஒத்த மனநிலையில்.. இருவருமே பெற்ற பிள்ளைகள் பற்றிய கவலைகள் படுவதாக இல்லை.
காயத்ரிக்கு நகையோ,புடவையோ வாங்கினால், செல்லத்திற்கும் சேர்த்து வாங்கும் ரகு எதில் சேர்த்தி? செல்வாம்பிக்கைக்கு தன் மற்றும் தனது தங்கையின் வாழ்க்கை எப்படி போகும் என்பது பற்றிய ஊகங்கள் உண்டு.
தன்னுடன் மேடை கச்சேரிகளில் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக வாசிக்கும் விஷால் தனது காதலை சொன்னதும், " நம்ம உறவை கல்யாணத்துல தொடர முடியாது... ஆனா, என்று கொக்கி போட்டு தொக்கி நின்றதுவும் இப்போதும் அவளுக்குள் நிழலாடுகிறது. எனில் காதலிக்கிறேன் என்று சொல்பவனுக்கு மனைவியாக்கி கொண்டு குடும்பம் நடத்தும் இஷ்டம் இல்லை என்று தானே அர்த்தம் ஆகிறது? அந்த நிகழ்வுக்குப் பிறகு அவள் விஷாலை தன் கச்சேரிகளில் சேர்த்துக் கொள்வதை விடுத்தாள். அவளால் வேறு என்னதான் செய்து விட முடியும்?அன்று இரவு முழுவதும் அழுததில் அடுத்த நாள் கண்கள் இரண்டும் சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டு வீங்கி இருந்தது தான் மிச்சம்!
செல்வாம்பிகை பாடி கொண்டு இருந்த பாடல் அவளுக்கு கூட மன அமைதி தோற்றுவிப்பதற்கு பதிலாக சுய எண்ணங்களின் சூறாவளியை மனதிற்குள் ஏற்படுத்தி இருந்தது.
அக்கா வெகு நேரமாக கண்ணீருடன் பாடி கொண்டிருப்பதை பார்த்த அபர்ணாவுக்கு அக்கா இந்த பாடலில் உருகி அழவில்லை என்பது புரிய சோபாவில் இருந்து மெல்ல எழுந்து வந்தவள் தன் அக்காவின் கைகளில் தன் கைகளை கொடுத்துக் கொண்டாள்.
தங்கையின் கைகள் கொடுத்த கதகதப்பில் மெல்லமாய் கண் திறந்து பார்த்த செல்வாம்பிகையின் கண்களில் ஆயிரம் கேள்விகள்.
"கொஞ்சம் வருஷம் பொறுத்துக்கோ அக்கா. இந்த நாட்டை விட்டு நம்ம எங்கேயாவது போயிடலாம். சிங்கப்பூர்ல என்னோட பிரண்டோட அப்பா நாம அங்க வாழறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாக்குறேன்னு சொல்லி இருக்காங்க." தங்கையின் வார்த்தைகள் கொடுக்க முயன்ற தைரியத்தில் செல்வாம்பிகை முகத்தில் புன்னகை கூட வந்தது.
அடுக்களையில் இருந்து இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செல்லத்தின் மனதினுள், " இங்க இப்ப இவங்க ரெண்டு பேருக்கும் என்ன குறைசல்னு இந்த சீன் போடுறாங்க?" என்று நொடித்துக்கொண்டாள்.
கண்டிப்பாக பெண்கள் இருவரின் மனபாரம் அவர்களின் அம்மாவிற்கு புரியப் போவது இல்லை.
இந்த நொடி வரை தன் பெண்கள் இருவருக்கும் ரகு தனது இனிஷியலை கொடுத்தான் இல்லை.ரகுவின் சொந்த ஊரான ராஜமங்கலம் தான் இருவருக்கும் துணை பெயராகிப்போனது.
அபர்ணா தனது பெயரை மீண்டும் உச்சரித்துப் பார்த்தாள்.. "அபர்ணா ராஜமங்கலம்". அபர்ணா ரகுவரன் என்பதை விட, இந்த பெயர் நன்றாக உள்ளது என்று தனக்குத்தானே பலமுறை சொல்லிக் கொண்டும் இருக்கிறாள்.
ஆனால் காயத்ரியின், இரு குழந்தைகளுக்கும் தனது பெயரையே இனிஷியலாக கொடுத்து விட்டான் ரகுவரன்.செல்லம் இது பற்றி எல்லாம் அவனிடம் ஒருமுறை கூட கேட்டதில்லை. ரகு என்ற ஒருவன் தன்னுடன் இருப்பதே அவளுக்கு போதுமானதாக இருக்கிறது.
'முதல் கோணல் முற்றும் கோணல்.. என்று மாறிவிடாமல் இரு பெண்களும் எப்படித்தான் இந்த சமூகத்தில் போராட போகிறார்களோ '?
தனது கல்லூரியில், பரதம்- கிராமிய நடனம் இரண்டையும் கலந்து ஆடிய அபர்ணாவின், அபார திறமை விழாவை காண வந்த அந்த பிரபலமான திரைப்பட நடன ஆசிரியை, கண்களில் தப்பாமல் பதிந்தது.
விளைவு, தான் நடன இயக்குனராக பணி புரியும் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகியின் நடன அசைவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று, யோசித்தவர் அபர்ணா பயிலும் கல்லூரியின் மூலமாக அவளை தொடர்பு கொண்டு "லோங் ஷார்ட்ல பரத நாட்டியம் ஷூட் பண்ணுவோம். உன்னோட முகத்துக்கு பதிலா ஹீரோயின் முகம் எடிட்டிங் ல மாத்திடுவோம்.உனக்கு சம்மதமா? "என்று பெரும் தொகை ஒன்றைக் கொடுப்பதாகவும் பேச என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழம்பிப் போனாள் அபர்ணா.
கொடுப்பதாக சொல்லி இருப்பது மிகப்பெரும் தொகை . தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட இது போன்ற வாய்ப்புகள் என்றாவது தான் கதவை தட்டும். கதவை திறக்கலாமா.. வேண்டாமா... என்று எப்படி முடிவு எடுக்க முடியும்?
அன்று மாலையில் தங்களது அறையில் அக்கா செல்வாம்பிகையுடன் இது பற்றி அபர்ணா பேச, " சினிமா வாய்ப்பெல்லாம் எடுத்துக்காத அபர்ணா. வெளில வர்றது கஷ்டமாயிடும். உன்னோட ப்ரொபைல் மாறிடும்.
ஏற்கனவே நம்ம நிலைமை உனக்கு நல்லா தெரியும் தானே! சிக்கலை இடியாப்ப சிக்கலா மாத்திக்க வேண்டாம் " என்று மூத்தவளாய் தங்கைக்கு புரிய வைத்தாள் செல்வா.
விதிதான் வலியது ஆயிற்றே.. கல்லூரியில் அபர்ணா உடன் பயிலும் தோழிகள், " இதுபோல வாய்ப்பு எல்லாம் யாருக்காவது ஒருத்தருக்கு தான் கிடைக்கும் அப்பு.. மிஸ் பண்ணிடாதே."என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்த அபர்ணா வாய்ப்பை ஒப்புக் கொள்வதாக, நடன ஆசிரியைக்கு அலைபேசியில் அழைத்துச் சொல்லியும் விட்டாள்.
சில நாட்கள் விடுப்புகள் எடுத்துக் கொண்டு, கல்லூரிக்கு செல்லாமல் சினிமாவிற்கான நடன பயிற்சிக்கு செல்லத் தொடங்கினாள் அபர்ணா.
கல்லூரியில் இவளுக்கு பாடம் எடுக்கும் சில ஆசிரியர்களுக்கு இவளது இந்த முடிவு பிடிக்கவில்லை தான். நல்ல மாணவி, இவளுக்கு இது தேவையா? என்பது போல அவர்கள் மனதில்.
ஆனால் யாரும் வாய் விட்டு சொல்வார் இல்லை. அவளுடன் பயிலும் சில மாணவிகளுக்கு அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப் பெரியதாகப்பட்டது. இதனால் நிறைய
பொறாமைக்காரர்களையும் சம்பாதித்துக் கொண்டது பெண்.
ஒரு வழியாக ஷூட்டிங், நாளும் வந்தது. அபர்ணா முழு ஒப்பனையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்க , சூட்டிங் எப்படி செல்கிறது என்று பார்ப்பதற்காக அன்று அங்கு வந்திருந்த அந்தப் பட தயாரிப்பாளரின் மகன் சந்திரசூடன் கண்களை வேறுபக்கம் திருப்ப முடியாமல், அசைவின்றி இவளையே பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.
அவனது இதயம் நழுவி அvaளது பாதங்களில் சலங்கைகளுடன் இறுக்கி கட்டப்பட்டது போன்ற உணர்வு அவனுக்குள்.
அங்கே வந்திருந்த திரைப்பட கதாநாயகியின் தம்பிக்குள் தேவையே இல்லாமல் அபர்ணாவின் மீது வன்மம்.விளைவு அவள் நடந்து வரும் வழியில் காலை இடறி விட்டான். கீழே விழுந்த அபர்ணாவால் எழுந்து நடக்க இயலவில்லை.
பதறிப்போன, தயாரிப் பாளரின் மகன் சந்திரசூடனின் மனதில் அபர்ணாவை விடவும் அதிக வலி.பெண் அவளை மெல்லமாய் கைப்பற்றி தூக்கியவன், கை தாங்கலாகவே தனது கார் வரை அழைத்துச் சென்று, தானே அவள் வீடு வரை கொண்டு விடவும் செய்தான்.
செல்வாம்பிகை கல்லூரியிலிருந்து அப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்திருந்தாள். வெயிலில் பிரயாணம் செய்து கொண்டு வந்தது வேறு அவளுக்கு தலை இரண்டாக பிளக்கும் போது வலித்தது.
'தங்கை இன்னும் வீடு வரவில்லையே 'என்று நினைத்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தவளுக்கு அபர்ணாவின் நிலை கண்டவுடன் பதறியது.
சந்திர சூடனை நிமிர்ந்தும் அவள் பார்த்தாள் இல்லை. தங்கையை மட்டும் அவதானித்தவாறு அவனுக்கு நன்றியை சொல்லி அனுப்ப பார்த்தாள்.சந்திர சூடனும் நிலையை புரிந்து கொண்டவனாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.
மருந்துக்கும் தன்னை ஏறெடுத்து பார்க்காத செல்வாம்பிகை அவனது அடி மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அழுத்தமாக அடி பதித்து விட்டாள்..
உடனே கண்டதும் காதலா என்று என்னிடம் கேட்கக் கூடாது .