எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 10

zeenath

Active member

அத்தியாயம் 10​

எந்த வண்ணங்களும் இல்லாமல் வாழ்வு வறண்ட பாலைவனமாக இருந்தது ராகவ்விற்கு. இயந்திரத்தனமாகக் காலை எழுவதும், குளித்து அன்னை தரும் உணவை அதன் ருசியும் அறியாமல் உண்டு வேலைக்குக் கிளம்பி வருவதும்.​

அங்குக் கொடுக்கப்படும் வேலைகளை எந்தச் சுவாரசியமும் இல்லாமல் கடனேயெனச் செய்து முடிப்பதும் என விட்டேற்றியாக நடப்பவனை அலுவலகம் மொத்தமும் என்ன ஆனது இவனுக்கு எனப் பார்த்துக் கொண்டிருந்தது.இவன் இருக்கும் இடங்கள் கலகலப்புக்கு பெயர் போனது என்ற வாக்கியத்திற்கு எதிர்ப்பதமாக மாறி, அமைதியின் சிகரமாகக் கொடுத்த வேலைகளைக் கவனத்தோடு செய்து கொண்டு, தான் உண்டு தன் வேலை உண்டு என்பதாகத் தன்னைத் தானே சுருக்கி கொண்டான்.​

தன் நட்புகளையும், அட்டகாசமான சத்தமிட்டு சிரிக்கும் சிரிப்பையும் குறைத்துக் கொண்டதோடு அல்லாமல் அனைவரோடும் வம்பு வளர்த்துத் தான் இருக்கும் இடத்தில் தான் மட்டுமே முதன்மையாகத் தெரியுமாறு நடந்து கொள்பவன் இப்பொழுது எங்கு இருக்கிறானென மற்றவர்கள் தேடும் நிலையில் அமைதியாக மாறிவிட்டிருந்தான்.​

இவனின் செயல்களைச் சிறிது நாட்களாக அவதானித்து கொண்டிருந்த இவனின் நண்பன் அகிலன் எதற்கு மேல் பொறுக்க முடியாது என நினைத்தவனாகச் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிலுவையில் வைத்துவிட்டு லேப்டாப்பை மூடியவனாக நண்பனை நோக்கிச் சென்றான்.​

கணினியின் உள் தலை நுழைத்து ஏதோ மும்முரமாக வாசித்துக் கொண்டிருந்தவனின் சுழல் நாற்காலியைத் தன்னை நோக்கித் திருப்பியவன்.​

"எழுந்திரு டா?.." என்றான் கோபமாக.​

வேகமாக இழுப்பட்டதில் அதிர்ந்து நோக்கியவன்,​

"என்னடா.?" என்றான் நண்பனைக் கண்டு அதிர்வாக, அவனின் இச்செயலை சற்றும் எதிர்பார்க்காதவனாக.​

"வா! கேன்டீன் போலாம். காபி குடிச்சிட்டு வரலாம்."​

"இல்லடா நான் வரல? வேலை இருக்கு." என்றான் நண்பனின் முகம் பார்ப்பதை தவிர்த்து,​

"நீ வேலை பாக்குற லட்சணத்தை தான் நான் பாத்துட்டு இருக்கேனே, கோபப்படுத்தாமல் எழுந்து வா." என்றான் அமைதியாகவே.​

"ப்பிச், ஏன்டா தொல்லை பண்ற? வரலைன்னு சொன்னா விடேன்." என்றான் சலிப்பாக.​

"இப்போ நீயா எழுந்து வரியா" இல்ல குண்டு கட்டா உன்னைத் தூக்கிட்டு போகவா.?" என்றவனை அமைதியாக நிமிர்ந்து பார்த்தான் ராகவ்.​

"நீ சரிப்பட்டு வர மாட்ட."என்றபடி தன் மடக்கிவிட்ட கைச்சட்டையை இன்னும் மேல் ஏற்றியவனாக இவனைத் தூக்குவதற்கு கீழே குனிந்தவனிடம்,​

"டேய்! டேய்! வரேண்டா இரு."​

எனச் சிறிது சிரிப்போடு கூறியவன்.​

இதற்கு மேல் நண்பனிடம் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவனாக அவனிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற நினைப்போடு பெருமூச்சிட்டவனாக லேப்டாப்பை மூடிவைத்து அவனோடு கிளம்பி சென்றான் கேண்டினை நோக்கி.​

இவர்களின் அலப்பறைகளை சுற்றி இருந்த மற்றவர்களும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் சிரிப்போடு. "அப்பாடா இவ்வளவு நாளு சோக கீதம் வாசிச்சுக்கிட்டு இருந்த ராகவ் இனி சரியாயிடுவான்னு நம்புவோம்." என ஒருவன் சிரிப்போடு கூற மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள் அதே சிரிப்புடன்.​

"ஆனால் அந்தச் சோக கீதத்துக்கு என்ன காரணம் என்று தான் தெரியல.?"என்றான் மற்றொருவன் கேலியோடு.​

"அதான் நம்ம அகிலன் கூட்டிட்டு போய் இருக்கான் இல்ல, இனி எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம்..." என்றாள் ஒருத்தி.​

இப்படி சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களின் சிரிப்பில் ஒளிந்து இருந்தது நண்பன் சீக்கிரம் சரியாகி விட வேண்டும் என்ற நினைப்பும், யாருக்கும் அவனின் இந்நிலை பிடிக்கவில்லை என்பதுதான்.​

கேன்டினில் அமர்ந்து சற்று மனம் விட்டுப் பேசிக்கொள்ள வேண்டும் என நினைத்து வந்தவர்கள் கண்டது கேண்டீன் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததை தான். மற்ற டிபார்ட்மென்ட் ஆட்களுக்கு அது பிரேக் நேரமாக இருக்க கேன்டீன் நிரம்பி வழிந்தது.​

இதில் எங்குச் சென்று அமர்வது என அகிலன் கண்களாலேயே இடத்தைத் தேடிக் கொண்டிருக்க, ராகவை கண்ட மற்றவர்கள் "ஹாய் ராகவ்" எனக் குரல் எழுப்ப, இவனும் அவர்களிடம் "ஹாய்" என்றான் முகத்தில் புன்னகையை அணிந்து கொண்டு. இப்படி நிறைய ஹாய் களை கேட்க, இது சரிப்பட்டு வராது என நினைத்தவனாக ஒரு மூலையில் காலியாக இருந்த இடத்தைக் கண்டுகொண்ட அகிலன் நண்பனை இழுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான் அங்கு வேறு யாரும் வந்து அமர்வதற்குள், அந்த இடத்தைப் பிடித்து அமர்ந்துவிடும் நோக்கத்துடன்.​

நாற்காலியில் அமர்ந்த அகிலன்,​

"போற இடத்துல எல்லாம் ஃபிரண்ட்ஸ் டா உனக்கு. அதான் சின்ன வயசுல இருந்து உன் கூடவே சுத்திகிட்டு இருக்கிற நான் உன் கண்ணுக்கே தெரியல.."​

என்றான் சற்று ஆதங்கமாக,​

"ஏன்டா இப்படி எல்லாம் பேசுற."​

"வேற எப்படி பேசச் சொல்ற.? ஏதாவது என்கிட்ட சொன்னியா? இல்ல, சொல்லணும்னு உனக்குத் தோணுச்சா? இல்லல்ல."​

"அப்படி எல்லாம் எதுவும் இல்லடா. நீ ஊர்ல இல்ல அதான்."என்று நிலுவையாக இழுத்தவனிடம்.​

"ஊர்ல தானே இல்ல? உலகத்திலேயேவா இல்லாமல் போயிட்டேன்."​

"பிச் ஏன்டா நீ வேற.?" என்றான் சலிப்புடன்.​

"நானும் வந்ததுல இருந்து உன்னைப் பார்க்கிறேன், ஒரு வாரமா இப்படித்தான் சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கே.சரி, நாமளே கேட்கக் கூடாது அவனே நம்ம கிட்ட சொல்லுவான்னு நானும் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். ஹுஹும்ம். எங்க? நீ சொன்ன மாதிரியே தெரியலையே."​

"அப்படி எல்லாம் இல்ல டா? அது என்னன்னா.?" எனச் சொல்ல வந்தவனை கை உயர்த்தி தடுத்தவனாக,​

"காலையில சாப்பிட்டியா.?"​

என்றான் கேள்வியாக​

"ஏன்டா சம்பந்தம் சம்பந்தம் எல்லாம் பேசிட்டு இருக்கே." என்றான் இவனும் ஆயாசமாக.​

"கேட்டதுக்கு பதில்."என்றவனிடம் இவனும்​

"சாப்பிட்டேனே."​

"என்ன சாப்பிட்ட.?"​

"ப்ப்ச் இப்போ என்னடா? அதான் சாப்பிட்டேன்னு சொல்றேனே." "அதான் என்ன சாப்பிட்ட.?"​

"தெரியல, ஏதோ அம்மா கொடுத்தாங்க. சாப்பிட்டேன்."​

என்றான் விட்டேற்றியாக.​

இவனின் பதிலில் முறைத்து பார்த்தவன் எழுந்து கொள்ள,​

"எங்கடா போற.? என்றவனின் கேள்விக்கு,​

"போய்க் காபி வாங்கிட்டு வரேன். அதுக்கு தானே வந்தோம், அதை வாங்கிட்டு வர வேண்டாமா.?" என சற்று சத்தமாக கேள்வி கேட்டபடியே எழுந்து சென்றான் காபி வாங்கி வருவதற்கு.​

காபி வாங்கி வர எழுந்து சென்றவன் அத்துடன் நண்பன் எப்போதும் விரும்பி உண்ணும் கராச்சி பிஸ்கட் இரண்டையும் இரண்டு வெஜ் பப்ஸும் வாங்கிக் கொண்டு அமர்ந்தான் அவன் அருகில். பிஸ்கட்டையும் பப்ஸையும் பார்த்தவன்,​

"ப்ச்ச் இப்ப எதுக்குடா இதெல்லாம் வாங்கிட்டு வந்த.?" என்று சலிப்பாகக் கூறியவன் காபியை எடுத்துக் கொள்ள,​

"பிஸ்கட் இல்லாமல் காபி இறங்காதுடா உனக்கு. மறந்து போச்சா.?" என்றான் இவன், கண்களில் உயிர்ப்பு இல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவன், "இப்போ எல்லாம் எனக்கு என்ன பிடிக்கும் என்பதே மறந்து போச்சு டா." என்றவனிடம்,​

"உன் புலம்பல முதல்ல நிப்பாட்டு, சாப்பிட்டு அதுக்கப்புறம் எதுனாலும் பேசு..." என்ற படியே அவன் கையில் இருந்த காபியை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு பிஸ்கட்டையும் பஃப்பையும் அவன் புறம் நகர்த்தி உண்ணுமாறு செய்கை செய்தபடி தானும் உன்ன ஆரம்பித்தான் அகிலன். நண்பனுக்காக என உண்ண ஆரம்பித்தவனுக்குமே பசி தான். உண்டு விட்டுச் சூடாக இருந்த காபியையும் அருந்தியவன். சற்று தெளிவாக, நண்பன் கேட்கும் கேள்விகளுக்குத் பொறுமையாகப் பதில் கூற தயாராக அமர்ந்து கொண்டான்.​

நண்பன் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்வதை பார்த்த அகிலன்,​

"அப்புறம் சொல்லு, இப்பவும் நானா உன்னைக் கூப்பிட்டு கேட்கப் போய்த் தான் என்கிட்ட சொல்லனும்னு உனக்குத் தோனி இருக்கு இல்லையா.?"​

"இல்லடா நீயே அம்மாக்கு உடம்பு சரியில்ல அப்புறம் உனக்குப் பொண்ணு பாக்குற விஷயம்னு பிஸியா இருந்த அதுதான் சொல்லக் கால தாமதம் செஞ்சேனே தவிர உன் கிட்ட மறைக்கணும்னு நினைக்கவே இல்ல. எத்தனை பேர் வேணா எனக்கு பிரண்ட்ஸ் இருக்கலாம் ஆனா உயிர் நண்பன்னா அது நீ மட்டும் தான்.." என்றான் அவனை ஆதுரமாக பார்த்து,​

"இப்ப பேசு எல்லாத்தையும் வக்கணையா."​

என்றவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது,​

"இப்ப என்னதான்​

ஆச்சு? நம்ம போய்ப் பேசுவோமா? உன் மனசுல இருக்குறத சொல்லாமலே முடிஞ்சு போச்சுன்னு நீயா நினைச்சுக்காதடா."​

"முடிஞ்சு தான்டா போச்சு. கல்யாணமே முடிஞ்சிடுச்சு." என்றவன் பதிலில் அதிர்ந்த அவனைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல், டேபிளில் மேல் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே மடக்காகக் குடித்து முடித்தவன்,​

"என்னடா சொல்ற? இந்த ராஜேஷ் எருமை கல்யாணம் பேசி இருக்காங்க, பத்திரிகை பார்த்துத் தான் நீ ரொம்ப அப்செட் ஆகிட்டேன்னு சொன்னான், கல்யாணமே முடிஞ்சிடுச்சா?.."எனக் கேள்வி எழுப்பினான் இன்னும் நம்ப முடியாமல். பின்,​

"ஏன்டா நீ எந்த முயற்சியும் எடுக்கல? என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல." எனக் கேட்டவனிடம்​

"என்ன சொல்லச் சொல்ற. மனசுக்கு பிடிச்சி இருந்துச்சு, மனசுல இருக்குறத அந்தப் பொண்ணு கிட்ட சொல்வதற்கான சரியான நேரம் பார்த்துட்டு இருந்தேன். ஆனா அதுக்கான வாய்ப்பே கிடைக்காமல் எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு. உனக்கு நான் சர்ப்ரைஸா என்னோட காதல சொல்லனும்னு நெனச்சிட்டு இருந்தா அந்தப் பொண்ணு சர்ப்ரைஸா எனக்கு அவளோட கல்யாண பத்திரிக்கையைப் பார்க்கிற மாதிரி நிலைமையை மாத்திட்டா…"​

என வேதனையை மறைத்துச் சிரிப்புடன் கூறியவன்.​

"ஆனால் செம பல்புடா எனக்கு." என்றான் வேதனை தாங்காமல் கண்கள் கலங்க.​

"சரி கல்யாணம் முடிஞ்சிடுச்சி இனி என்ன பண்ண போற? எவ்வளவு நாள் இதே மாதிரி சோகமா சுத்திட்டு இருக்க போற? ஆஃபீஸ் மொத்தத்துக்கும் தெரிஞ்சு போச்சு நீ ஏதோ மன வருத்தத்தில் இருக்கேன்னு, அது வீட்லயும் தெரிவதற்கு ரொம்ப நாள் ஆகாது…"​

"இப்பவே அம்மாக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்க தான் செய்து… ஏன் மா டல்லா இருக்கேன்னு? கேட்டுட்டு தான் இருக்காங்க.​

"நீ என்ன பதில் சொன்ன அதுக்கு.?" "ஒன்னும் சொல்லல. தலைவலி, ஆபீஸ் டென்ஷன் அப்படி சொல்லிச் சமாளிச்சுட்டு இருக்கேன்."​

"ரொம்ப நாள் சமாளிக்க முடியாதுடா. உன்னோட கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கணும்னு அம்மா யோசிச்சிட்டு இருக்காங்க, அது உனக்குத் தெரியும் தானே...?"​

"என்னடா புதுசா குண்டு போடுற? என் கல்யாணத்தை பத்தி உன்கிட்ட சொன்னாங்களா?.."​

"ஆமாடா! அம்மாவுடைய உடல் நிலையைப் பத்தி விசாரிக்கறதுக்காக என்கிட்ட பேசும்போது, உனக்குச் சீக்கிரம் பொண்ணு பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்களே. அநேகமா இந்நேரம் பார்த்தே வெச்சிருப்பாங்க."​

என்ற அவனின் பதிலில் ஒன்றும் புரியாத நிலையில் அமர்ந்திருந்தான் இது என்ன புது குழப்பம் என்று.​

"வினோதினிக்கு முடிக்காம எனக்கு எப்படி டா கல்யாணம் பேசுவாங்க.?" என்றவனிடம்,​

"அவங்க வேற ஏதோ பிளான் வச்சிருக்க மாதிரி எனக்குத் தோணுது, எதுக்கும் நீ கொஞ்சம் உஷாராவே இருந்துக்கோ."​

என்ற நண்பனின் பதிலில் மேலும் குழப்பமுற்றவனாக அமர்ந்திருந்தான், விஜயராகவன்.​

 
Top