அத்தியாயம் 11
பூங்காவனம் வீடே அமைதியாக இருந்தது விடியற்காலை ஐந்து மணி.திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.
எப்போதும் இந்நேரத்தில் ஒவ்வொருவராக எழ ஆரம்பித்து விடுவார்கள் ஆனால் திருமண அலைச்சல் காரணமாக அனைவருமே சற்று உறங்கி இருக்க, கல்லூரியில் கொடுத்த அசைன்மென்ட்டை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுந்த அகிலா, வெளிவந்தவள் கண்டது சோபாவில் அமர்ந்திருந்த பாட்டியைத்தான்.
வயதின் காரணமாகச் சில நேரங்களில் அவர் இப்படி எழுந்து அமர்ந்திருப்பது வாடிக்கைதானென உணர்ந்தவளாக,
"என்ன பாட்டி இன்னைக்கு சீக்கிரம் எந்திரிச்சிட்டிங்களா?.." எனக் கேட்டபடியே அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவரின் அமைதியில் துணுக்குற்றவர்கலாக
"என்ன ஆச்சு பாட்டி உடம்பு ஏதும் சரியில்லையா.?" என்றாள் சற்று கவலையாக. என்னதான் அவரோடு வம்பு இழுத்தாலும் அவளின் செல்லப் பாட்டி அல்லவா அவர், பேத்தியின் பரிதவிப்பான குரலில் பெருமூச்சிட்டவராக.
"ஒன்னும் இல்ல சின்னக் குட்டி! ஏனோ மனசே சரியில்ல, ஒரு மாதிரி பாரமா இருக்கு."என்றவரிடம்
"ஏன் அப்படி இருக்கு? அக்கா கல்யாணம் முடிச்சு போனதாலயா.?" என்ற அவளின் கேள்விக்கு
"அதுவும் ஒரு காரணம் தான்! ஆனால் என்னமோ மனசு ரொம்ப சஞ்சலமாக இருக்கு." என்றவரிடம்
"ஐயோ பாட்டி! நீங்களே எதையாவது நெனச்சு இழுத்து வச்சிக்காதீங்க. உடம்புக்கு எதாவது முடியாமல் போகப் போகுது. அப்பா எழுந்ததும் உங்களைப் போய் முதல்ல டாக்டர் கிட்ட காட்ட சொல்றேன்." என்றாள் மேலும் பதறிவளாக.
அவளின் பதற்றத்தில் மனம் கனிந்தவராக அவளிடம் வம்பு வளர்க்க எண்ணி
"ஏன்? எனக்கு எதுவும் வந்தால் உனக்கு நல்லது தானே. நான் தானே உன்கிட்ட எப்ப பாரு, இது செய்யாத அதைச் செய்யாதே என்று வம்பு வளர்க்கிறேன்." என்ற பாட்டியின் பதிலில்,
"அச்சோ பாட்டி! வாயில அடிங்க, வாயில அடிங்க, எனக்குக் கல்யாணம் ஆகி என் புள்ளைக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீங்க நல்ல ஆரோக்கியமா இருக்கணும். உங்களை யாருக்கும் கொடுக்கமாட்டேன்." என்றபடி அவரின் மடியில் படித்துக் கொண்டு அவரை இடுப்போடு கட்டி அணைத்துக் கொண்டாள்.
அவளின் பதிலில் மேலும் மனம் கனிந்து
சரிடி? சரிடி? யாருக்கும் என்னைய தராத, நீயே என்னைப் பிடிச்சு வச்சுக்கோ! உன் புள்ள, உன் புள்ளையோட புள்ள எல்லாரையும் பார்த்து, வளர்த்து விட்டுட்டு நான் போறேன் சரியா.? என்றார் அவளை அவரும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு.
இவர்களின் சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டே அவர்களுக்கான காபியுடன் வந்த சுசீலா,
"என்ன பாட்டியும், பேத்தியும் கொஞ்சி முடிச்சாச்சா.?" எனக் கேட்டுக்கொண்டு அவர்களிடம் காபியை நீட்டக் காபியின் மணம் மூக்கில் ஏற நன்றாக அதன் வாசத்தை உள் இழுத்துக் கொண்டே அன்னையிடமிருந்த காபியை வாங்கி ஒரு மிடர் அருந்தியவள்.
"அட! அட! காபி பிரமாதம்!" எனச் சிலாகித்துக் கொண்டே,
"ஏன் பாட்டி இவ்வளவு நேரம் உங்க கூடத் தொண்டைடை தண்ணி வத்த பேசிக்கிட்டு இருந்தேனே, காபி குடிச்சியா ன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?.."
"என்ன தான் இருந்தாலும் அம்மான்னா அம்மாதான். பாருங்க காபியோட வராங்க."
என அவரை வம்பு இழுக்கும் செயலை அமோகமாக ஆரம்பித்துக் காபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
"ஏண்டி வயசு புள்ள நீ என்னைக் கேட்கணுமா? நான் உன்னைக் கேட்கணுமா? போடி போக்கத்தவள." என நொடித்துக் கொண்டு காபியை குடிக்க ஆரம்பித்தவர்,
"ஏம்மா சுசிலா, வினிகா வைப்பார்க்க இன்னைக்கு தானே போறோம். அவளுக்குக் கொடுக்க வேண்டியது எல்லாம் எடுத்து வச்சாச்சா?"
எனக் கேட்க, ஆமா அத்தை வேற என்னென்ன வேணும்னு அவங்க வீட்டுக்குப் போய்த் தான் பார்த்து முடிவு செய்யணும்.." என்ற படியே அதற்கு உண்டான திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தார்கள் மாமியாரும் மருமகளும்மாக.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வர வீட்டு வேலைக்கு இருக்கும் செல்வி அம்மா அனைவருக்கும் காபியை கொண்டு வந்து கொடுத்தார். சூடான பானத்தை அருந்தி கொண்டே வேகமான திட்டமிடல் ஆரம்பித்தது அனைவரிடமும். மகள் வீட்டுக்குச் செல்வதை பற்றி.
சோபாவில் செல்லத்துரை தாத்தா வந்து அமர, அவரைப் பின்பற்றியவர்களாக, இரு பாண்டியன்களும் வந்து அமர்ந்தார்கள் தந்தையின் அருகில்.
காபி அருந்தியவாறு
"அப்புறம் பெரிய தம்பி, என்னென்ன சாமான் செட்டு கொண்டு போகணும் வினிம்மா வீட்டுக்கென்று முடிவு பண்ணிட்டீங்களா.?" எனப் பெரிய மகனைப் பார்த்துக் கேட்க,
"இல்லைங்க அப்பா நாம நேரில் போய் என்னென்ன வேணும்னு ஒரு முறை பார்த்துட்டு அதுக்கப்புறம் வேணும்ங்கிறத வாங்கி கொடுப்போம்னு முடிவு பண்ணி இருக்கோம் நானும் சின்னவனும்." என்று தன் தம்பி முத்துப்பாண்டியை கைகாட்டி பேசினார் தந்தையிடம் மருதுபாண்டி.
மகன்களின் பதிலில் திருப்தி உற்றவராக அமைதியாகி விட,
"நாம போகும்போது அவளுக்கு உண்டான நகைகள் அனைத்தையும் கொண்டு போய்க் கொடுக்கத்தானே போறோம்." எனப் பாட்டியின் கேள்விக்கு
"ஆமா, நகை அம்புட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தையும் வினிமாவிடம் ஒப்படைச்சிடனும், அது அவளுக்கு உண்டானது." என்றார் தாத்தாவும்.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பார்கவியும்,
"சரிங்க மாமா அப்ப எங்க அண்ணாவிடம் நாம மதியத்துக்கு சாப்பிட வருகிறோம்னு சொல்லிட வா.? எனக் கேட்க
"வேண்டாமா நாலு மணிக்கு நாம போவோம். நீங்க எதுவும் சொல்ல வேணாம். சின்னவர் சொல்லட்டும்." என்றபடி சின்ன மகனைப் பார்க்க,
அவரும் "சரி" என்பதாகத் தலையாட்டினார். அத்துடன் பேச்சு முடிந்ததாகத் தாத்தா எழுந்து வெளியில் சென்றார். அவரைப் பின்பற்றி இப்போதும் இரு பாண்டியன்களும் எழுந்து சென்றார்கள்.
வீட்டில் உள்ள மற்றவர்களும் கலைந்து செல்ல. இரு மருமகள்களையும் பிடித்து வைத்த பாட்டி,
"எம்மா சுசீலா நிவிதாக்கு போன போட்டு நாலு மணிக்குக் கிளம்புறோம்னு சொல்லிடுங்க, அவ அப்படியே வாராளா? இல்ல நம்ம கூடச் சேர்ந்து வாராலானும் ஒரு வார்த்தை கேட்டிடுங்க.?" என்றவரிடம்
"சரிங்க அத்தை" என்ற சுசிலாவை பார்த்து,
"சரி வாங்க நாம போயி நகையெல்லாம் என்னென்ன கொடுக்கிறோம் அப்படிங்கறத ஒரு முறை பார்த்து எடுத்து வச்சுருவோம். யம்மா பார்கவி ஒரு நோட்டு பேனா எடுத்துட்டு வா, என்னென்ன கொடுக்கிறோம்கிறத எழுதி வைப்போம்."
"என்ன அத்தை சொல்றீங்க.? எதுக்கு எழுதி வைக்கணும்.?"
"என்னடி இவ கூறு கெட்டவளா இருக்கா? ஆமாம், நாம என்னென்ன நகையெல்லாம் கொடுத்துருக்கோம்னு தெரியணும் இல்லையா."
"நமக்குத் தான் நாம என்ன கொடுத்திருக்கோங்குறது தெரியுமே அதை ஏன் எழுதி வைக்கணும்?.." "எழுதித் தான் வைக்கணும். அதெல்லாம் ஒரு கணக்கு உனக்குச் சொன்னா புரியாது போ! போய் நான் சொன்னதை செய்."என்றவரிடம் கோபமாக,
"ஏன் அத்தை? எங்க அண்ணன் வீட்டுக்கு நகையைக் கொடுத்தா அவங்க என்ன அழிச்சிடவா போறாங்க."
"அழிக்கிறாங்க, அழிக்கல அது அவங்க பாடு. நான் அப்படி சொல்ல வரல. நாம கொடுக்கிற நகைக்குக் கணக்கு சரியா வச்சுக்கணும்னு சொல்றேன். நாளைக்கு அகிலாக்கு கல்யாணம் முடியும்போது இதே மாதிரி தான செய்யணும். புரியுதா? நீ எதுவும் விதண்டாவாதமா பேசாம ஒரு நோட்டு பேனாவை எடுத்துக்கிட்டு பெரியவ ரூமுக்கு வா." என்ற படியே புடவை முந்தானியை உதறிவிட்டு எழுந்து சென்றார்.
செல்லும் மாமியாரை பார்த்துக் கொண்டவருக்கு என்ன மனநிலை என்பது புரியவில்லை.அவரைச் சங்கடமாகப் பார்த்த சுசீலா,
"தப்பா எதுவும் நினைச்சுக்காத பார்க்கவி. அத்தை சொல்றதும் சரிதானே, என்னென்ன நகை கொடுத்திருக்கோம்னு நாம எழுதி வச்சிக்கிறது நல்லது தானே. நாளைக்கு வினிகாவே மறந்துட்டாலும் நாம ஞாபகப்படுத்தலாம் தானே அதுக்கு தான் சொல்றாங்க. நீ எதுவும் வித்தியாசமா நினைச்சுக்காத." எனக் கூற, அவர் கூறியதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டவர். "சரி தான் கா நீங்க முன்ன போங்க நான் நோட்டு பேனா எடுத்துட்டு வரேன்." என்ற படியே தன் அறைக்குச் சென்றார். மனதில் சிறு தெளிவோடு.
தன் குடும்பத்து ஆட்கள் தன் புகுந்த வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்ததிலிருந்து தலை கால் புரியாமல் ஆடிக்கொண்டிருந்தாள் வினகா.
அவர்கள் அனைவரும் வரும் செய்தி கேட்டதிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஹாலில் இருக்கும் பெரிய கடிகாரத்தை பார்த்தவண்ணம் இருந்தாள். மணி மூன்றாகவும் வேகமாக மாடிக்கு வந்தவள் மறுபடியும் ஒரு குளியலை போட்டுவிட்டு அடர் ஊதா நிறத்தில் இருந்த சந்தேரி காட்டன் புடவையைப் பாங்காக மடிப்பு எடுத்து அழகாக உடுத்திக் கொண்டவள்.
முடியையும் தளர பின்னி, பிரிட்ஜிலிருந்து எடுத்து வந்திருந்த, நெருங்கத் தொடுத்த ஜாதிமல்லி பூவை அதன் சில்லிப்புடன் இருபுறமும் தோள்களில் வழியுமாறு சூடிக்கொண்டாள்.
மதிய உணவிற்கு பின்பு சிறிது ஓய்வெடுத்து செல்ல அறைக்கு வந்த மோகன் கண்டது இவளின் அளப்பறைகளை தான்.
"தாய் வீட்டிலிருந்து வராங்கன்னு சொன்னவுடனே இந்தப் பொண்ணுங்களுக்கு எங்க இருந்து தான் குஷி வருமோ தெரியல.?" என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே.
அதில் மெலிதாகச் சிரித்தவள் முகத்திற்கு மிதமான ஒப்பனை செய்து புடவை நிறத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர் பொட்டையும் வைத்துக்கொண்டு தன்னைத்தானே கண்ணாடியில் ஒரு முறை பார்த்துத் திருப்தி உற்றவாளாக மறுபடியும் கடிகாரத்தை பார்க்க, அது நான்காகப் பத்து நிமிடம் எனக் காட்டியது. அதில் சளிப்புற்றவளாக.
"ப்ச்ச் எப்பதான் நாலு மணி ஆகும்? சரியா ஓடுதா இல்லையா இந்தக் கடிகாரம்?.." எனப் புலம்பியவளிடம் சிரிப்புடனே.
"உன் அவசரத்துக்கு அது ஓடுமா என்ன? எது சரியான நேரமோ அதைத் தான் அது காட்டும்." என்றான் மனைவியின் புதிய அவதாரத்தைப் பார்த்தவாறு.
"சரி அது என்ன உங்கள அப்படியா நாங்க கஷ்டப்படுத்துறோம்? உங்க அம்மா வீட்டுல இருந்து வராங்கன்னு சொன்ன உடனேயே நீங்க எல்லாம் இவ்வளவு குஷி ஆகிடுறீங்க." என்றான் சட்டென்று, அவனின் இந்தக் கேள்வியில் சற்று அதிர்வுற்றவளாக.
"அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவும் இல்ல. இத்தனை நாள் அவர்களைப் பிரிந்து இருந்ததே இல்ல, அதான் ஒரு மாதிரியான எக்சைட்மென்ட் வேற ஒன்னும் இல்ல." என்றாள் மெதுவான குரலில். அவளின் குரல் வேறுபாட்டில் தான் சட்டென்று அவளிடம் அவ்வாறு கேட்டிருக்கக் கூடாது என்பதை உணர்ந்தவனாக, "சாரி! சாரி! நான் எதார்த்தமா தான் கேட்டேன்." என்றான் அவனும்.
மேலும் அவள் மனம் வருந்துவது பொறுக்காமல்
"இவ்வளவு நேரம் மணியைப் பார்த்துக்கிட்டே இருந்த? நாலு மணி ஆயிடுச்சு பாரு." என்று அவன் கூறியவுடன் வேகமாகத் திரும்பிக் கடிகாரத்தை பார்த்தவள்
"சரி, சரி நான் கீழே போறேன். எல்லாரும் இப்ப வந்துருவாங்க நீங்களும் சீக்கிரமா வந்துடுங்க." என்ற படியே துள்ளி குதித்து ஓடினாள்.
ஓடும் அவளையே பார்த்தவனுக்கு ஏனோ மனம் சற்று இதமாகவும் இருந்தது, வருத்தமாகவும் இருந்தது. அது ஏன் என்பது தான் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது இப்பொழுதும்.
மனைவி வேகமாகக் கீழே இறங்கி செல்வதை பார்த்தவன். மென் சிரிப்புடன் சற்று நேரம் கண் மூடிப் படுத்துக்கொண்டவன் மனதில் பெரும் யோசனை தான். தன் மனம் தன் மனைவியை மெல்ல விரும்ப ஆரம்பித்து விட்டதோ என்று.
பின்பு அவனும் எழுந்து முகம் கழுவி கீழே இறங்கி வர, அங்கு வினிகாவின் குடும்பமே அவளைச் சூழ்ந்து அணைத்த படி பேசிக் கொண்டிருந்தது.
'ஓ வந்துட்டாங்களா?' என நினைத்தபடி, வேகமாக இறங்கி வந்தவன்,
தாத்தா செல்லத்துறையின் அனணப்பிலிருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்தபடி,
"வாங்க தாத்தா." என அழைத்தவாறு அவர் பாதம் பணிந்து எழும்ப அவன் செயலில் குடும்பமே மகிழ்ந்திருக்க,
மேலும் வீடாளாக அனைவரையும் பார்த்து
"எல்லோரும் வாங்க" என வரவேற்பாகக் கூறியபடி அனைவரையும் சோபாவில் அமர வைத்தான்.
பின்பு முறையே பாட்டி மாமா அத்தை சின்ன மாமா சின்னத்தையென அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டான்.
"எங்கே நிவிதா சித்தி வரலையா.?" என்ன இவன் கேட்டபிறகு தான் தன் அத்தை அங்கு இல்லாததை உணர்ந்தவள் தாயை நோக்கி,
"எங்க மா அத்த.?" எனக் கேட்டாள்.
சுசிலா பதில் சொல்வதற்குள் சிவகாமி பாட்டி
"அவ நேரா இங்கதான வரேன்னு சொன்னா? இன்னும் வரக்காணமே! அவளுக்கு ஒரு போனை போடுமா.?" எனக் கூறி முடிப்பதற்குள்ளாகவே,
"வந்துட்டேன்! வந்துட்டேன்!.." எனக் கூறியபடியே வேகமாக வந்தாள் தன் கணவன் மகனுடன் நிவிதா.
அவளைக் கண்டவுடன் வேகமாக அவளிடம் விரைந்து சென்ற வினிகா இறுக அவளை அனணத்து கொள்ள கண்ணில் நீர் கட்டிக் கொண்டது.
நிவிதாவும் அவளை அனைத்து கொண்டு உச்சி முகர்ந்தபடி,
"எப்படி இருக்க.?"எனக் கேட்டாள் மென்மையாக.
நன்றாக இருப்பதாக இவள் தலையாட்டிக் கொண்டிருக்க, இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதம்
"வினிகா வந்தவங்களுக்கு குடிக்க ஏதாவது குடுமா வா வா." என அழைத்தபடி கிச்சனுக்குள் செல்ல இவளும் அத்தையையும் அவள் கணவனையும் அமருமாறு பணித்துவிட்டு தன் தம்பியின் தலைமுடியை கலைத்தபடி,
"இரு உனக்குச் சாக்லேட் கொண்டு வரேன்." என அவனிடமும் செல்லம் கொஞ்சி விட்டுத் தன் மாமியாரின் பின் சென்றாள் வந்தவர்களைக் கவனிக்க.
அனைவரும் உண்டு, குடித்து முடிக்க. அவர்கள் கொண்டு வந்திருந்த நகைகளை வினிகாவிடமும் மோகனிடமும் கொடுத்தார்கள் தாத்தாவும் பாட்டியும். மனைவியுடன் சேர்ந்து மகிழ்வுடன் வாங்கிக் கொண்டான் மோகன்.
பின்பு தன் சம்மந்தியை பார்த்த மருதுபாண்டி
"வேற என்னென்ன வேணும்னு சொன்னீங்கன்னா?அதுக்கு தகுந்த மாதிரி எல்லாமே கொடுக்க வசதியா இருக்கும்." என்றார் அதைக் கேட்ட மோகன் யோசித்தபடி
"வேற என்ன வேணும் எல்லாமே இருக்கே." என்றான் அவன்.
'இவன் காரியத்தைக் கெடுப்பான்.' என நினைத்த ரஞ்சிதம்,
" இல்ல மோகன், உன் ரூம்ல இருக்கிற பர்னிச்சர் எல்லாம் புதுசா மாத்தி தரேன்னு சொல்லி இருக்காங்க." எனக் கூற, அன்னையை கோபத்துடன் முறைத்தவன். "அதெல்லாம் வேண்டாம் எல்லாம் நல்லா தானே இருக்கு, பெருசா வசதியா தான் இருக்கு." என்றான் மனைவியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு.
கணவனின் பார்வையை கண்டவள் "நான் எதுவும் கேட்கல." என்றாள் வேகமாக.
"ஆமாம்பா அவ எதுவும் கேட்கல ஆனா கொடுக்கிறது எங்க முறை இல்லையா, அதனால உங்க அறையில என்னென்ன வேணும்னு பாத்து அளவெடுத்துட்டு ஆர்டர் கொடுக்கலாம் என்று நெனச்சு தான் நாங்க எல்லாம் சேர்ந்து வந்தோம்." என்றார் தாத்தா இதுதான் முறை என்பது போல அறிவிப்பாக.
அவர்களின் பதிலில் சற்று கோபம் உற்றவனாக
"எனக்கு இதெல்லாம் எதுவுமே பிடிக்கல, இதுக்கு மேல கொடுக்கணும்னு நினைக்கிறது உங்க விருப்பம், கடையில கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்." என்ற படியே விருட்டென்று விரைந்து சென்றான்.
அவனின் செயலில் அதிர்ந்த பெரியவர்களுக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்பதே தெரியாது நிலை.
மகனின் மரியாதை அற்ற செயலில் சங்கோஜம் கொண்ட மோகனின் தந்தை அண்ணாமலை,
"அவன் சின்னப் பையன், ஏதோ தெரியாம சொல்லிட்டான். பெரியவங்க நீங்க எதுவும் மனசு சங்கடப்பட்டுக்காதீங்க. அவனுக்கு இந்த முறை எல்லாம் தெரியல." என்றவர் நிலைமையைச் சகஜமாக
"போ மா வினிகா. மேல கூட்டிட்டு போய் உன் அறையைக் காட்டு, என்ன என்ன வேணும்னு நீயும் சொல்லு." என்றார் தன் மனைவியையும் கண்காட்டிய படி.கணவரின் கண் ஜாடையை புரிந்து கொண்ட ரஞ்சிதமும்
"ஆமாமா எல்லோரும் மேல போங்க. கூட்டிட்டு போ வினிகா" என்றார் அவரும்.
இதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என்பதை உணர்ந்தவர்களும். சிறிது நேரத்திற்கு முன்பு
அவன், தங்கள் பாதம் பணிந்து தங்களுக்கான மரியாதை கொடுத்ததை நினைத்து மகிழ்ந்த பெரியவர்கள், ஒரு முறை செய்யும் விஷயத்தில் தன் பிடித்தமின்மையை காட்டும் விதமாக இப்படி மரியாதை இல்லாமல் எழுந்து சென்றவனை எப்படி எடுத்துக் கொள்வது என்பதே புரியாத நிலை.
அவன் தன்மானத்தை நினைத்து மகிழ்வதா அல்லது தங்கள் பெண்ணுக்குச் செய்வதை அவன் விரும்பவில்லை என்பதை நினைத்து வருந்துவதா என நினைத்தபடி, தங்கள் வீட்டு செல்லப் பெண்ணின் வாழ்வு எப்படி இருக்குமோ? எனச் சிறிது அச்சத்துடனேயே அவள் அறை நோக்கிச் சென்றார்கள்.
இவர்கள் அச்சப்படும் படி வினிகாவின் வாழ்வு இருக்குமா? நாமும் தெரிந்து கொள்வோம் போகப் போக.
மௌனம் தொடரும்...