ஏக தாளம் 3
'ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ...
நாடித் துடிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன்
அம்பலவாணர் ( ஆடி )
பங்கைய சிலம்பைந் தாட பாத சலங்கைகள்
கிண்கிண்நேண்றாட
பொங்குமுடனே உரித்து உடுத்த புலித்தோல். அசைந்தாட,
செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை. கண் முயலகனாட
கங்கை இளம் பிறை
செஞ்சடையாட கனக சபை தனிலே
நவமணி மாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட..
என்று செல்லம்மா, முத்து தாண்டவர் இயற்றிய தில்லை அம்பலவாணர் மீதான பாடலை அகாடமியில் தன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
மாலை வகுப்புகள் முடியவும் செல்லமாவின் நினைவுகள் அன்று காலை வீட்டில் நடந்தவற்றை மீண்டும் அசைபோட தொடங்கி விட்டது.
இன்று காலையில் தான்' இதே பாடலுக்குதானே', செல்வாம்பிகாவும் நடனம் ஆடிப் பயிற்சி செய்துக் கொண்டிருந்தாள்?
அவள் நடனப் பயிற்சியை விடாது முழுமூச்சாக வீட்டில் செய்து கொண்டிருந்தாலும், பிறர் முன் ஆடியதோ , வகுப்புகள் எடுக்க முயன்றதோ இல்லை.
'அநேகம் பேருக்கு செல்வா நன்றாக பாடுவாள்' என்று தான் தெரியும்! அவளுக்கு நடனம் அத்துப்படி என்று வெகு சிலருக்கு மட்டும் தெரிந்த சிதம்பர ரகசியம்!
அரங்கேற்றமான பிறகு ஏனோ வெளி உலகத்தின் முன் நடனம் ஆடுவதை அவள் சுத்தமாக நிறுத்தி விட்டாள்.இதோ இப்பொழுது தங்கைக்காகவென்று மீண்டும் புதியதொரு ஆரம்பம்! வேறு வழியில்லாமல் தான் இப்பொழுது நடன வகுப்புகள் எடுப்பதற்கும் சம்மதம் சொல்லி இருக்கிறாள்.
அதுவும் வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டும்!
தன் அக்கா ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவுக்கு என்னவோ தன்னைவிட செல்வாதான் அழகாக இருப்பதாகவும்,அவளது நடனத்தில் நளினம் மிகுந்திருப்பதாகவும் ஏனோ தோன்றியது.
" அக்கா நீயேன் நாட்டியத்தில் கண்டினியூ பண்ணல.. இன்ஃபேக்ட் என்னை விட நீ தான் ஃபர்ஸ்ட் கிளாஸ்ஸா ஆடுற." என்று பாராட்டு பத்திரமும் வாசிக்க தவறவில்லை.
செல்லம்மா, தன் அறையில் மாலை அகாடமிக்கு செல்ல வேண்டி, அன்றைக்கு வகுப்பு எடுக்கத் தேவையானவற்றை தயார் செய்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தினமும் வகுப்பு எடுப்பதற்கு முன்பாக, வீட்டிலேயே கொஞ்சம் பயிற்சி செய்து விட்டு தான் செல்லம்மா அகாடமி செல்வது.இன்று தனது மூத்த மகள் சொல்ல காத்திருக்கும் விடைக்காக செல்லமாவின் காதுகள் ஹாலில் நிலை பெற்றது.
அக்கா தங்கை இருவரும் பேசிகொள்வது அவள் காதுகளில் விழாமல் இல்லை.
'தன் மகள் ஏன் மேடைகளில் நடனம் ஆடுவதை தவிர்த்தாள்' என்ற கேள்வி செல்லமாவையும் தான் குடைந்து கொண்டிருக்கிறது.
செல்வா ஆறடிக்கு சற்றே குறைவான உயரம். எப்படியும் பெண்கள் கூட்டத்தில் அவள் தனியாக தெரிபவள்தான். அதற்கு ஏற்ற உடல்வாகு. அவளது உயரத்தை பார்த்து சிறு வயது முதலே செல்லம்மா வியந்து கொண்டு இருக்கிறாள்.
'ரகுகூட அசாத்திய உயரம் இல்லை. நானும் கூட. ஐந்தரை அடிதானே?' என்று செல்லம்மா தன் மூத்த மகளை பற்றி தோன்றும்தான்.
செல்வா பார்ப்பதற்கு பிரமாதமான அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் அவளைப் பார்ப்பவர்கள், அவள் மீதான ஈர்ப்பை தவிர்க்க முடியாமல் அவளிடம் மீண்டும் பேச முயல்வதை செல்லம்மா பலமுறை பார்த்திருக்கிறாள்.
நடனத்திற்கான ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது, செல்வா பேரழகியாக தெரிவாள்.நடனமாடும் பொழுது அவளது அங்க அசைவுகள், எதிரில் அமர்ந்து நடனத்தை பார்ப்பவர்களின் பார்வையை அசைய விடாது கட்டி போட்டு விடும் மந்திர நடனம்.
ஏன், செல்வா பாடும் பொழுது கூட, கேட்பவர்களின் கவனம் அதிலேயே ஐக்கியப் பட்டு விடும்.
பள்ளிக்காலங்களில் கூட செல்வா எப்பொழுதும், வகுப்பில் முதலாவது தான். அவள் 'மருத்துவமோ பொறியியலோ படிக்க கூடும்' என்று அவள் உடன் பயில் பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு ஊகம் இருந்தது.
ஆனால் அதையெல்லாம் விடுத்து, இசைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள் செல்வா. இன்று வரை செல்வா ஒரு முழு புதிராகத்தான் இருக்கிறாள்.
தனது தங்கையின் பாராட்டை ஏற்ற செல்வா , " நீ எனக்கு இவ்வளவு ஐஸ் வைக்கலனாலும் உனக்காக நான் கிளாஸ் எடுக்கத்தான் போறேன். இவ்வளவு எல்லாம் சொன்னினா, எனக்கு கோல்டு புடிக்கும் பாத்துக்கோ.. அப்புறம், அப்கோர்ஸ் அபெக்ட் ஆவது உன்னோட ஸ்டூடண்ட்ஸ் தான்! "என்று சிரித்துக் கொண்டே அபர்ணாவை மெல்லமாய் அழைத்துச் சென்று அவள் அறையில் விட்டவள், அங்கிருந்து தன் அறைக்கு சென்று விட்டாள்.
செல்லம்மாவிற்கு மீண்டும் ஏமாற்றம்தான்! எப்படியாவது இன்று செல்வா ஏன் மேடைகளில் நடனம் ஆடுவதை விடுத்தாள் என்று தெரிந்து கொண்டு விடலாம் என்று நினைத்திருக்க, மகளோ மகா அழுத்தம்.
செல்வா தனது அறைக்குள் சென்று அகடமி செல்ல தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டாள்.மாலை மணி நான்கு என்று கூவியது ஹாலின் கடிகாரம்.
ஆன்லைன் வகுப்பு இப்போது இருக்கிறது. அவளிடம் பயிலும் ஒரு மாணவியின் அம்மா இவள் தான் எடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க இன்னும் இரண்டு மாணவிகளும் கூட இவள்தான் எடுக்க வேண்டும் என்று கெஞ்ச தொடங்கிவிட்டார்கள்.
மூவருக்கும் சேர்த்து ஒரு மணி நேரம் வாய் பாட்டு வகுப்பு. அதை முடித்து விட்டு செல்ல வேண்டும்.அடுத்த வாரத்தில் செல்வாவுக்கும் தியரி தேர்வு இருக்கிறது. அதற்கும் படிக்க வேண்டும். கண்ணை கட்டியது செல்வாவுக்கு.
ஞாயிறு அன்றுகூட. சற்று நேரம் அதிகமாக தூங்கிவிட முடியாது. அன்றுதான் இன்னும் அதிகம் வேலை செய்ய வேண்டும்.
சமாளிக்க வேண்டும்...
நான் எல்லாவற்றையும் சமாளிப்பேன், எண்டு கண்ணாடியை பார்த்து மீண்டும் பலமுறை சொல்லிக் கொண்டாள்.
செல்லம்மா தனது காரில் கிளம்பிவிட்டாள். அந்த கார் ரகுவின் பரிசு. அதனால், மகள்கள் இருவரும் அவசரத்தில் கூட அதில் பிராயாணம் செய்வது இல்லை.
சுய சம்பாத்தியத்தில் இருவரும் ஆக்ட்டிவா ஆளுகொன்றாய் வைத்திருக்கும் போது கவலை என்ன?
தனது வகுப்புகளை நிதானமாய் முடித்துவிட்டு, இரவு உணவுக்கும் தயார் செய்த செல்வா தங்கை அபர்ணாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். அவள் கையில் அணிந்து கொண்டிருக்கும் தங்க நிற கடிகாரம். மணி ஆறரை என்றது. ஏழு மணியில் இருந்து ஒன்பது மணி வரை இன்று வகுப்பு உண்டு.
ஏழு மணிக்கு செல்லம்மா வீட்டுக்கு கிளம்பி விடுவாள். பெண் வரும் வரை காத்திருப்பாள்.
இப்போது அபர்ணாவால் இப்போது கொஞ்சம் தானாகவே ஊன்று கோல் பிடித்து நடக்க முடிகிறது. சமாளித்துக் கொள்கிறாள்.
நடுவில் சந்திர சூடன் இரண்டு முறை அலைபேசியில் அழைத்து அபர்ணா அவளுடன் பேசினான்.
அவன் மனதில் அபர்ணா பற்றிய ஏதோ ஒரு எண்ணம் நிச்சயம் இருக்கிறது
அதே சமயம் தன்னை சிறிதும் கவனித்து பார்க்காத செல்வாம்பிக்கை பற்றிய சிந்தனையும் உண்டு. ஒரு கிழமை முன்பாய் தியாகராயா நகரில் ஒரு பிரபல கடையின் வாசலில் தோழிகளுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.
அவளது அசாத்திய உயரத்தை அவன் அன்றுதான் கவனித்து பார்த்தான். பேசும் பொழுது அவளது கண்கள் காட்டிய பாவங்கள்,கூர்மையான நாசி... என்று கொஞ்சம்.. ம்ஹும்... நிறையவே அன்று கவனித்தான்.
அபர்ணாவும் செல்வாவும் அக்கா தங்கை என்று சொன்னால் அவனால் நம்ப முடியவில்லை.
அபர்ணா சராசரி பெண்களின் உயரம். நல்ல அழகியே! பழகுவதும். ரொம்ப கஷ்டம் என்று சொல்ல முடியாது. ஆண்களிடம் அதிகம் பேச மாட்டாளே தவிர தான் என்ற கர்வம் கிடையாது.
ஆனால் அவள் அக்கா... முகமே கர்வமாய் இருக்கிறதே! கண்களில் எவ்வளவு அலட்சியம்? இது போன்ற எண்ணங்கள்தாம் செல்வாவை பற்றி அவனுக்குள் பதிவு ஆயிற்று.
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும்பொய் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள்?
அவள் அங்கிருந்து கிளம்பியதுவும் தெரியாது அவளைப் பற்றி வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, தன்னிலிருந்து வெளி வரும் பொழுது அவள் அங்கில்லை என்பது ஒருவழியாக உறைக்க, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, பின் தலையில் தட்டிக்கொண்டே தனது ஸ்கோடாவை கிளப்பினான்.
அவனது எண்ணங்களை அத்தனை நேரம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த இரு பெண்களின் நினைவுகளை ஒதுக்கியவனாக, அவர்களின் திரைப்படம் எடிட்டிங் நடந்து கொண்டிருக்கும் இடம் நோக்கிய பயணம்.
திரைப்பட ப்ரோமோஷன் வேலைகள் வேறு இருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் திரைப்பட வெளியீட்டு விழாவும், நடன நிகழ்ச்சிகள் நடத்தவும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் திரைப்படம் தயாரிக்கும் செலவைவிட முன்னணி நடிகர்கள் வாங்கும் சம்பளம் தான் அதிகம். போக்ஸ் ஆஃபீஸ் ஹிட் ஆகும் படங்கள் குறைவு. எப்படியாவது எடுத்த படத்தின் செலவுகளை திரும்ப எடுத்தாக வேண்டும்.
முன்பெல்லாம் நிறைய திரைப்படம் திரையரங்கம் சென்று பார்ப்பவர்கள் அதிகம்.
இப்போதெல்லாம் ஒடிடியில் பார்ப்பதும், வெப் சீரிஸ், பார்ப்பதும் அதிகமாகிவிட்ட நிலையில் திரைப்படம் எடுப்பதும், காசு பார்ப்பதும் சர்க்கஸ் ஆகிவிட்டது.
இளம் பெண்கள் நிச்சயம் கொரியன்சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தில் ஒரு பங்கு கூட திரைப்படம் பார்க்க காட்டுவதில்லை. ஒரு படம் சாதாரணமாக ஒருவாரம் தாண்டியும் ஓடினால் அது மாபெரும் அதிசயம் என்றே ஆகிவிட்டது. ஓடிடி என்று ஒன்று இருப்பதால் பிழைப்பு ஓடுகிறது.
அவன் அக்காவே அப்படித்தான்! இவர்கள் வெளியிடும் படம் மட்டும் பார்ப்பாள்.சந்திரசூடனும் வேறு வழிகளில் பணத்தை முதலீடுகள் செய்கிறான். நிறைய தொழில் நிறுவனங்களில் அவனும் அவன் அப்பாவும் பங்குதாரர்கள்.
திரை துறை பொறுத்தமட்டில் கொஞ்சம் சறுக்கினாலும் பாதாளம் தான். அவனுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை.இரண்டு தலைமுறைகளாக இதே துறையில் தான் இருக்கிறார்கள். வருஷம் தவறாமல் இரண்டு படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர் அவன் அப்பா தில்லை நாதன்.
இன்று, அப்பாவும் மகனுமாக ஒ டி டி யில் படம் ரிலீஸ் செய்வது பற்றி ஒரு பிரபல தளத்துடன் ஒப்பந்தம் போட இருக்கிறார்கள். அது பற்றிய பேச்சுவார்த்தைக்கு சென்றாக வேண்டும்.
இரவு... இப்போது வெளியாக இருக்கும் படத்தின் நாயகியுடன் விருந்து.
'இது போன்ற பழக்கங்கள் வேண்டாம்' என்று அவன் அப்பா தில்லைநாதன் எவ்வளவு தடுத்தாலும் கேட்க சந்திரா தயாராக இல்லை.
"இங்கே இந்த அட்ஜஸ்ட்மென்ட் சகஜம்ப்பா" என்று தோளை குலுக்கி செல்லும் மகனை அவரால் என்ன செய்துவிட முடியும்?
திருமண உறவு பற்றிய எண்ணமும் அவனுக்கு இல்லை. "இப்போ நா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன் " என்று தீர்மானமாக சொல்லி விட்டான் சந்திரா.
அவன் அம்மா, அக்கா, மாமா எல்லோரும் சொல்லி அலுத்து போனது தான் மிச்சம்.
அவனுக்கு 'நிச்சயம் உடலுக்கான தேவை ' இருக்கிறது. அதற்கு வழி - வடிகால் அவனை தேடி வரும் பொழுது கல்யாணம் என்ன கட்டாயமா? இதை தவிர சமீப காலமாக நடிக்கவும் கேட்கிறார்கள். இவன்தான் சிக்காமல் நழுவுகிறான்.
ஹீரோவாக நடிக்க தேவையான தகுதிகள் மொத்தமும் அவனிடம் உண்டு. பார்க்க பாலிவுட் ஹீரோ போல் இருப்பான். ஆனால் அடர்த்தியான மீசை உண்டு.
இதற்கு மேல் அவனை பற்றி சொல்ல என்ன இருக்கிறது?
இவனை அதிகம் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவள் அபர்ணா.சுத்தமாகவே, கண்ணெடுத்தும் பார்க்காமல் விடுத்தவள். செல்வாம்பிக்கா.
இருவரும் அவன் ஞாபக அடுக்குகளில் இடம் பிடித்தது ஆச்சர்யமா?