மணிமேகலை :
அத்தியாயம் 5 :
எல்லோரும் தூங்கிய பின் கிசுகிசுப்பான குரலில் மெல்ல கேட்டேன்
"தாத்தா ! ஒருவேளை மணிமேகலைத்தான் ஏதாது செய்தாளோ? உங்கள என்ன பண்றேன் பாருங்க னு சவால் விட்டு போனா"
"ஷ் ! பேசாம போய் படு காலைல பாத்துக்கலாம் . அங்க என்ன ரகசியம் னு உங்க ஆச்சி கேப்பா அப்புறம்"
"அங்க என்ன ரகசியம் ?" ஆச்சி குரல் கேட்டது . இருவரும் சத்தம் வராமல் சிரித்தோம் .
"சரி தூங்கு. "
தாத்தா, இருந்த ஒரே கட்டிலில் தூங்க , நான் அப்பா அம்மா அருகே படுக்கை விரித்து பட்டாளையில் படுத்தேன் .
இன்றும் குரல் கேட்குமா ? எவ்வளவு தெளிவாக கேட்டது ?
'இங்கதான் ' என்று . வெகு நேரமாகிவிட்டதா என்ன ?
தாத்தாவின் குறட்டை ஒலியை தவிர ஏதும் கேட்கவில்லை.
மெதுவாக கண் திறந்து பார்த்தேன் .மெல்ல விடி விளக்கு வெளிச்சத்தில் மேலே விட்டத்தில் ஒரு கீறல் , அது மெல்ல வளர்த்து ஒரு முகமாக மாறியது . ஐந்து விரல்களை முன்னால் நீட்டி அப்படியே என்னை தொட்டுவிடும் நோக்கத்தோடு , விரிந்த உள்ளங்கை அந்த முகத்தை மறைக்க கண்கள் மட்டும் தெரியும் ஒரு பெண் முகம் . திடுக்கிட்டது ! முகத்தை திருப்பி வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன் . சுவர் முழுவதும் முகம் , முகங்கள் . ஒரு பெண் அழும் முகம் , உறங்கும் முகம் , அலறும் முகம் . அப்படியே கண்கள் தத்ரூபமாக உணர்வுகளை பிரதிபலிக்கும் பிம்பங்கள் . என் உடல் நடுங்கியது . கண்களை மூடினேன் . ஆனால் மனதிற்குள் புதைந்த பிம்பத்தை மூட முடியவில்லை . என்னையும் அறியாமல் வீட்டின் நேற்று பார்த்த 'அந்த ' மூலைக்கு கண்கள் சென்றது . ஹாலில் உள்ள நிலைக்கண்ணாடி வழியே பார்த்தால்
'அந்த ' மூலை தெரியும் .
அதோ!!! அ...அது என்ன?!!
நான் பார்ப்பது நிஜம் தானா??
ஒரு பெண்தானே?? ஆமாம்! ஒரு பெண்ணே தான். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அதில் முகத்தை புதைத்துக்கொண்டு! கடவுளே!!!!!! குரல் சிக்கிக்கொண்டது.
இதயம் துடிப்பை மறந்தது . அதே சமயம் லேசாக சத்தம் கேட்டது . விசும்பலா? இல்லை பூனை தான் இது . ஆம் பூனையே தான் . சத்தம் எங்கிருந்து வருகிறது?. நான் லேசாக திரும்ப , என் காலடியில் புசு புசு என்று ஏதோ தட்டுப்பட , அடுத்த நொடி கை கால்களை உதறி கிரீச் என்று அலற , என் காலடியில் சுருண்டு கிடந்த அழகுராஜா தெறித்து பாய்ந்து அப்பா மேல் அமர்ந்தது . பட்டென்று லைட் போட்டாள் அம்மா . அப்பா தூக்கத்திலிருந்து வெடுக்கென எழுந்திருக்க , பூனை ஓட இடம் தெரியாமல் குருட்டாம்போக்கில் பாய,நேர நிலைக்கண்ணாடியில் போய் விழ, அதே கண்ணாடி வழியே வீட்டின் 'அந்த ' மூலையில் தெரிந்த பெண்ணின் பிம்பம் இப்போது தத்ரூபமாக உண்மையிலேயே தெரிய, கண்ணாடி தூள் தூளாக சிதறும் முன்,அந்த பெண்ணின் முகம் நெற்றி வரை தெரிந்தது . குப்பென்று வியர்த்து கண்கள் இருண்டு அப்படியே சரிந்துவிட்டேன் .
விடிந்ததா?இல்லை இன்னும் இரவு கொடுமைதானா? புரியாத அவஸ்தை நிலை நிலை. நெற்றியில் அம்மாவின் கை ஈரமாக படிந்தது. அம்மாவும் தாத்தாவும் பேசுவது கேட்டது . அம்மா என் தலைமாட்டில் அமர்ந்து நெற்றியில் ஈர துணி வைத்துக்கொண்டே சொன்னாள்.
"என்னப்பா , நீயும் இவகூட சேந்துக்கிட்டு பேசுத?"
"இங்க பாரு! எனக்கு இந்த வீட்டுக்குள்ள வந்தொடனேயே தெரிஞ்சுட்டு , இது ஒரு ஆக்கங்கெட்ட வீடுன்னு . பூஜை எல்லாம் பண்ணி வச்சு இருந்தாதானே வீட்டுக்கே விருத்தி . இங்க ஏதோ ஒரு கெட்டது இருக்கு . சீக்ரம் இங்கேந்து போய்டணும் " என்றார் .
"யப்பா ! திடீர்னு போனா என்ன நினைப்பாங்க ? நம்ம பூஜை எல்லாம் பண்றோம் நம்ம வீட்டுக்கு எப்படி வரும் அதெல்லாம் ?"
"ஏய் ! உனக்கு புரிதா இல்லையா ? நம்ம வீட்டுக்கு அது வரல . அது எடத்துக்குத்தான் நம்ம வந்திருக்கோம் ".
தெரிந்த டாக்டர் என்று ஒருவரை கீழ் வீடு மாமா அழைத்துவந்தார் . டாக்டர் என்னை பரிசோதித்து பார்த்தார் . கண்விழிகளை திறந்து பார்த்தார் .
'ஏதும் infection இருக்கிற மாதிரி இல்ல . fever இதுனாலன்னு இப்போ சொல்லமுடியாது . மருந்து கொடுங்க . மூணு நாள்ல கொறயலைனா அட்மிட் பண்ணித்தான் பாக்கணும் . " என்றார் .
"temperature எவ்ளோ இருக்கு? " அம்மா கேட்டாள்
"104 ! கொஞ்சம் severe தான் . Fits மாதிரி ஏதாது வந்தா உடனே அட்மிட் பண்ணுங்க " என்றார் .
இதே போல ஒரு மர்ம காய்ச்சலில் இங்கே இருந்து உயிரைவிட்ட,
மணிமேகலை ஒரு நாள் சொன்ன , அந்த பெண் தான் என் நினைவில் வந்தாள். ஒரு வேளை அவள் ஆன்மா தான் இங்கே இருப்பதா ?அவள் உருவதைத்தான் நான் வீடு முழுவதும் பார்த்தேனா ? மூலையில் அழுதுகொண்டிருப்பது அவள்தானா ? ஆனால் மணிமேகலை போல ஒரு பெண் என்று தாத்தா சொன்னாளே!! இந்த பெண்ணிற்கும் மணிமேகலைக்கும் என்ன சம்மந்தம் ?
நெற்றியின் முத்துமுத்தாக வியர்த்ததும் உடலில் ஒரு தெம்பு பிறந்தது .
தாத்தா என்னருகில் அமர்ந்து பேசினார் என் கைகளை அழுத்தி பிடித்தபடி.
"இங்க பாரு பிள்ளை ! இப்போ உன்னோட உடம்பு ஒத்துழைக்காது , அதனால மனச திடப்படுத்திக்கோ. இப்போ உனக்கு ஒரு போராட்டம் ஆரமிச்சிருக்கு . இந்த போராட்டத்தில நீதான் ஜெயிக்கணும். எதுவா இருந்தாலும், குனிஞ்சு பயந்து ஓடாம, நின்னு நிமிந்து பாரு . face பண்ணு. உன்கூட நாங்க எல்லாரும் இருக்கோம் .
நல்ல நியாபகம் வச்சுக்கோ . நீ எக்காரணத்தை கொண்டும் எங்களை விட்டு போகமுடியாது . இன்னொன்னு! பயப்படவே கூடாது . " நெற்றியில் தடவி கொடுத்தார் . கண்களில் கண்ணீர் வழிய தலையசைத்தேன் .
"சீக்கிரமா எல்லாம் சரியாகிடும் . இங்கேந்து போய்டலாம் . " சக்தி இல்லாமல் துவண்டு போன என் கையை தன்னோடு இறுக்கிக்கொண்டார் தாத்தா .
"அப்பா எங்க ?"
"அப்பா , உனக்கான வேண்டுதல் நிறைவேத்த அச்சன்கோவிலுக்கு போயிருக்கா. நாளைக்கு வந்துருவா ".
"நாங்கெல்லாம் இருக்கோம்ல , பயப்படாம இரு " என்றாள் அம்மா .
கொஞ்சம் காற்றோட்டமான இடத்தில் என்னை படுக்கவைக்கவேண்டும் என்பதாலும் , தாத்தாவிற்கு கீழே படுக்கமுடியாது என்பதாலும் , தாத்தா உள் அறையில் கட்டிலில் படுக்க , ஆச்சி வழக்கம் போல வழியில் போர்வை விரித்து படுக்க , நான் மெத்தை போட்டு ஹாலில் படுக்கவைக்கப்பட்டேன் .
ஏதோ திடீர் துஷ்டி வீடு என்று கீழே அத்தையும் மாமாவும் சென்றுவிட , மணிமேகலையின் பாட்டி மட்டும் கீழே ஒற்றைக்கு படுத்திருந்தார் . வெளியே மழை அடர்ந்து பெய்தது . இடியும் மின்னலும் காதுகளை கிழித்தது . இங்கே எனக்கு உடல் நெருப்பாக தகித்தது . சுயநினைவும் மயக்க நிலையும் மாறி மாறி வந்து என்னை இம்சித்தது.
தடாலென்று கீழே ஏதோ விழும் சத்தம் கேட்டது .
"ஐயோ! என்னனு தெர்லயே ! அந்த ஆச்சி மட்டும் தானே கீழ இருக்கா. இருடி நான் என்னனு பாத்துட்டு வாரேன்". அம்மா வேகமாக படி இறங்கி போனாள்.
அவள் படி இறங்கின அடுத்த நொடி யாரோ படி ஏறுவது போல கொலுசொலி கேட்டது . மூன்றே மூன்று படிகள் . சில் ..சில் ..சில் ..
என்ன இந்த அம்மா இப்போத்தானே கீழ போனா. ஏன் மறுபடி மேல வாரா ? அதும் இவ்ளோ நிதானமா ? தலை உயர்த்தி பார்த்தேன் . செங்குத்தாக இறங்கிய படிக்கட்டு தவிர வேறு யாருமில்லை . கண்களை மூடிக்கொண்டு தாத்தா சொன்னதை திரும்ப திரும்ப கூறினேன் . பயப்படக்கூடாது !
'அதர்வண பத்ரகாளியே போற்றி !" மனதிற்குள் பாராயணம் செய்யத்துவங்கினேன் . தட்டடியின் கதவு பட்டென்று அடிக்கும் சத்தம் கேட்டது. என் இதயம் அதிர்ந்தது. தொடர்ந்து , தட்டடியில் இருந்து உள் அறைக்கு நடந்து போவது போல அதே மூன்று முறை கொலுசொலி என் தலைமாட்டில் கேட்டது . தடாலென ஒரு இடி ஆக்ரோஷமாக எங்கோ விழுந்தது . எண்சாண் உடலை ஒரே ஜானாக்கி சுருண்டு கிடந்தேன் . பயம் கூடாது ! அருகே , மிக அருகே மூச்சுக்காற்று உஷ்ணம் உணர்தேன் . காது மடல்கள் குறுகுறுத்தது . என்னோடு படுக்கையில் யாரோ ஒன்றாக படுத்திருப்பது போல .
குரல் எழும்பவில்லை , கண்களை மூடிக்கொண்டு பாராயணத்தை தொடர்ந்து கூறினேன் .
தட்டடி கதவு இடுக்கு வழியாக மழை தண்ணீர் வடிந்து அறைக்குள் வரும் சத்தம் கேட்டது . நெருப்பாகக் கொதித்த என் நெற்றி மீது பனிக்கட்டி போன்ற மூன்று விரல்கள் பதிந்த போது பட்டென்று லைட் போடப்பட்டது . நெற்றி நெறய திருநீர் பூசிக்கொண்டு ஆச்சி என்னருகில் வந்தாள் . என் நெற்றியில் திருநீறு பூசினாள். என்னருகே படுத்தாள் .
"ஆச்சி ! என்னாச்சு " என்றேன் . இப்போது எனக்கு , சற்றுமுன் எனக்கு நிகழ்ந்தது அனைத்தும் உண்மையா? இல்லை கனவா? இல்லை கற்பனையா? என்றே குழம்பியது . சுரவேகத்தில் மனம் கண்டதையும் நினைக்குமாம் .
"தட்டடிலேந்து மழை தண்ணி உள்ள வந்து என் போர்வைய நனச்சிருச்சு . சரி உங்கிட்ட படுக்கலாம்னு வந்தேன் . நெத்தில திருநாறு இல்லை . அதான் பூசிவிட்டேன் " என்றாள் .
"இப்போதான் என்கிட்ட வாரியா ?"
"ஆமாம் . மணி ரெண்டு . நீ தூங்கலை?" என்றாள் .
அதற்குள் அம்மாவும் மேலே வந்துவிட , மறுபடி படுத்தோம் . அதிசயம் ஒன்றுமே நிகழவில்லை . சட்டென்று மழை நின்று சில்வண்டுகள் சப்தம் மட்டுமே இரவு முழுவதும் கேட்டது . ஆனால் , காய்ச்சல் குறைந்தபாடாக இல்லை