நினைவு 05
காலை நேரே பரபரப்பு அடங்கி ஆசுவாசமாக
ஆபீஸில் தன் அறையில் இருந்த விக்னேஷ்க்கு அப்போது தான் ஞாபகம் வந்தது கண்ணன் இரவு பலமுறை அழைத்து இருந்தது.
'ஐயோ இவனுக்கு காலைல பேசணும்னு இருந்தேன் மறந்துட்டேன்' என நினைத்துக் கொண்டு தன் அலைபேசியை எடுத்தவனுக்கு கண்ணனின் குறுந்தகவல்..
'அம்மு வாண்ட்ஸ் டு டாக் டு யூ'
இதை விக்னேஷ் எதிர்பார்க்கவில்லை.
சில நிமிடம் வேலை நிறுத்தம் செய்த அவன் மூளை அவனின் காதலைத் தவிர வேறு எதையும் யோசிக்க மறந்தது.
மூன்று வருடங்களுக்கு முன் வெளிநாடு செல்ல சில நாட்களுக்கு முன்பு கண்ணன் மூலம் அவளிடம் தன் மனதை சொன்னது, அதன் பின்னர் ஒரு வருட வெளிநாட்டு வாசம்.
இப்பொழுதும் அர்ஜுன் கம்பெனியில் தான் வேலை செய்கிறான். இந்த இரண்டு வருடங்களில் மிகக் குறைந்த தடவைகள் தான் அம்முவை பார்த்திருப்பான்.
அதிலும் மற்றவர் யாரும் கவனிக்காத வகையில் இவனுடன் பேசுவதை அம்மு அழகாக தவிர்த்தும் இருந்தாள்.
விக்னேஷ் அம்முவை தனியாக சந்திக்கவோ பேசவோ சந்தர்ப்பம் இலகுவில் அமையவில்லை.
அர்ஜுன் அமையவிடவில்லை என்பது அர்ஜுன், அம்முவைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.
தன் நினைவில் இருந்து மீண்டவன் அடுத்த நொடி கண்ணனை அழைத்திருந்தான்.
"ஹலோ.. குட் மார்னிங் விக்கி"
"குட் மார்னிங் டா.
சாரி டா கண்ணா இப்போ தான் மெசேஜ் பார்த்தேன்.
எங்க டா அம்மு. என்கிட்ட பேசணும்னு சொன்னாளா?"
"ஓஹ்.. அப்போ அந்த மெசேஜ் பார்த்து தான் கால் வந்திருக்கு.
நைட் எத்தன தடவ கால்
பண்ணேன் ஏன்னு ஒரு வார்த்த கேட்கணும்னு தோனல்லல்ல?"
"அம்மு பேசத் தான் நைட்டும் கால் பண்ணிருப்ப. நான் எடுக்காம விட்டதால இப்போ மெசேஜ் பண்ணிருக்க அப்பிடித் தானே?"
"ஓஹ்.. உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா சார்? ஓவர் கற்பனையில தத்தளிக்காதிங்க. நைட் நான் தான் முக்கியமான விஷயம் பேச கால் பண்ணேன்"
''அப்போ நான் ஃபோன் அட்டென்ட் பண்ணல்லன்னு இப்படி மெசேஜ் அனுப்பி இருக்க அப்படி தானே?"
"அய்யோ உன் அறிவு!
விக்கி விக்கின்னு உன்ன எல்லாரும் கூப்பிட்டு உன் அறிவு எங்கேயாவது விக்கிகிச்சு போல.
அப்படி சீப்பான வேல எல்லாம் நான் செய்யமாட்டேன். நிஜமாவே அம்மு பேசணும்னு சொன்னா. என்ன மேட்டர்னு சொல்லட்டுமா?"
"அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல, நீ இப்போ அம்மு கிட்ட ஃபோனக் கொடு நான் பேசறேன். அவ கூட பேச கிடைச்ச சான்ஸ நீ கெடுத்து விட்டுடுவ போல"
'ஆமா நாங்க தான் கெடுக்கணும். காதல் கீதல்னு அவளுக்கு வெறுப்ப ஏத்தி வெச்சுட்டு பேச்சப் பாரு'
என மனதோடு பேசிக் கொண்டவனிடம்,
"கண்ணா.. என்னடா சைலன்ட் ஆகிட்ட? அம்மு கிட்ட கொடு நான் பேசணும்"
"கொஞ்சம் வெயிட் பண்ணு விக்கி. நான் கார்டன்ல இருக்கேன், அவ உள்ள இருக்கா போய் கொடுக்குற வர ஒன்னும் பேசாத"
சொன்னவன் அம்முவைத் தேடி உள்ளே போக, அலைபேசி வழியே காத்திருந்த விக்னேஷிற்கு
பொறுமை காற்றில் பறந்தது.
"அம்மு.." கதவைத் தட்ட
"ம்ம்.. வா கண்ணா கதவு லாக் பண்ணல்ல"
கதவைத் திறந்து உள்ளே பார்க்க கவிதாவுடன் ஏதோ கை வேலை (க்ராஃப்ட் வர்க்) செய்து கொண்டிருந்தாள்.
"அம்மு.. விக்கி லைன்ல இருக்கான்
பேசு"
அலைபேசியைக் கொடுத்தவன் கவிக்கு கண்ணால் சைகை கட்டினான் வெளியே வா என.
"கவிய கூட்டிட்டு எங்க போற கண்ணா?"
"இல்ல அம்மு நீ பேசு நான் என் ரூமுக்குப் போறேன்"
"நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க, ரகசியமா பேச ஒண்ணும் இல்ல நான் பால்கனில போய் பேசிட்டு வர்றேன்"
"ஓகே.. பேசு"
"ஃபோன் போட்டு கொடு கட்டாகி இருக்கு"
அழைப்பை ஏற்றவன் "ஹலோ.. ஹலோ.. அம்மு..
சொல்லு அம்மு ஃபோன் பண்ணிட்டு பேசாம இருக்க?"
"என்ன சொல்லணும் விக்னேஷ்?"
அவளின் விக்னேஷ் என்ற அழைப்பே அவனை மனதளவில் தூர நிற்க வைத்தது.
விக்கி நீண்டு விக்னேஷ் ஆகி இருக்கிறதே. அவனை விட்டு அவள் தூரம் தான் சென்றுவிட்டாள்
தான் நினைத்தது போல சந்தோஷமான செய்தி சொல்ல அவள் அழைக்கவில்லை என அவன் ஆழ்மனம் அவனுக்கு சொல்லிவிட
ஒருமுறை கண்களை இறுக மூடித் திறந்தான்,
"நீ என் கிட்ட என்ன பேசணும்னு ஃபோன் பண்ணின அம்மு அதச் சொல்லு"
அவன் குரல் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை தொலைத்திருந்தது. அதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.
"ஆமா.. விக்னேஷ்,
கண்ணன் மூலமா நீங்க கேட்ட விஷயம் தான். நான் எத்தன தடவ சொல்லிட்டேன் ஆனா நீங்களும் சரி கண்ணனும் சரி அத விடறதா இல்ல அதனால நானே உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்"
"அம்மு நீ நம்ம ஃபேமிலிய நினைச்சு தயங்குறியா? நான் அப்பா கிட்ட சொல்லி அங்கிள் கிட்ட பேச சொல்ல தான் இருக்குறேன். அதுக்கு முதல்ல எனக்கு உன் விருப்பம் என்னன்னு தெரியணும் அதான் உன்கிட்ட கேட்டேன்"
"இல்ல விக்னேஷ் அதெல்லாம் ஒன்னுமில்ல. என்னால அந்த இடத்தில உங்கள வெச்சி பார்க்க முடியல்ல. நீங்க எத்தன தடவ கேட்டாலும் எத்தன வருஷம் ஆனாலும் என்னோட முடிவு இது தான்"
"ஏன் அம்மு அப்படி சொல்ற..?"
அவனின் குரல் உள் இழுத்து கொண்டது
"நான் உன்கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன் அதே போல உன்னையும் சந்தோஷமா பார்த்துப்பேன். என் மேல உனக்கு நம்பிக்க இல்லையா அம்மு?"
"பிளீஸ் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க, உங்க மேல நம்பிக்க இல்லாம இல்ல விக்னேஷ். என் மனசுல உங்களுக்கான இடம் காதல் இல்லைன்னு தான் சொல்றேன். உங்கள நான் எந்த விதத்தில டிஸ்டர்ப் பண்ணினேன்னு எனக்கு புரியல்ல. அதுக்கு சாரி கேட்டுகுறேன். என்னை மன்னிச்சிடுங்க"
"ஹேய்.... அம்மு அப்படில்லாம் ஒன்னும் இல்ல நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்ல"
"இல்ல விக்னேஷ்.. சின்ன வயசுல இருந்தே நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து தான் வளர்ந்திருக்கோம். மாமா குடும்பம் ஊர்ல இருந்தாலும் லீவு வந்தா நாம அங்க போறதும் இல்லன்னா அவங்க இங்க வர்றதும்னு தானே இருந்தோம்.
சின்னவங்க பெரியவங்க ஒன்னா இருந்துட்டு இப்போ கொஞ்ச நாளா உங்க குடும்பத்த விட்டு நான் என்னை தூரமாக்கிக்கிட்டேன்.
அது உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் எதனால? நீங்க சொன்ன காதல்னால தானே? இப்படித் தூரமா இருக்குறது எனக்கே கஷ்டமா இருக்கு விக்னேஷ்.
அங்கிளக் கூட என்னால முன்ன மாதிரி பார்க்க வர முடியல்ல"
"என்னை அவ்வளவு வெறுக்குறியா அம்மு?"
"வெறுப்பு இல்ல தயக்கம் விக்னேஷ். எப்போ, எப்படி உங்க மனச டிஸ்டர்ப் பண்ணினேன், நான் என்ன தவறா நடந்துகிட்டேன்னு எனக்கு சுத்தமா புரியல்ல அந்தத் தயக்கம். குற்ற உணர்வுன்னு கூட செல்லலாம்"
"நீ ஒன்னும் அப்படி தப்பா நடந்துக்கல்ல அம்மு. எந்தத் தயக்கமும் குற்றம் உணர்வும் உனக்கு வேணாம். நான் தான் உன்னைப் புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன்.
உன் கூட சந்தோஷமா இருக்கணும் ஆசைப்பட்டேன். உங்க ஃபேமிலில உரிமைப்பட்டவனா இருக்க ஆசைப்பட்டேன்
ஆனா அதுல உன் விருப்பத்த யோசிக்க மறந்துட்டேன். கேட்ட உடனே நீ மறுத்தாலும் கொஞ்சம் நாளைக்கு அப்புறம் ஓகே சொல்லுவன்னு நினைச்சு நான் தான் தப்பு பண்ணிட்டேன்.
உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா எக்ஸ்ட்ரீம்லி சாரி அம்மு.
நான் இதுக்கப்புறம் இதப் பற்றிப் பேசி உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். நீ ஃப்ரீயா இரு"
"தேங்க்ஸ் விக்னேஷ் என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு. நான் ஃபோன கண்ணன் கிட்ட கொடுக்குறேன்"
"ஓகே அம்மு பை.."
கண்ணனிடம் அலைபேசியைக் கொடுத்தவள் விட்ட வேலையை செய்யத் தொடங்கினாள்.
விக்னேஷுடன் பேசிக்கொண்டு வெளியே வந்து கண்ணன் அவனின் அறைக்குள் நுழைந்தான்.
"நைட் எதுக்கு கண்ணா கால் பண்ணின?"
"உனக்கு இப்பவாச்சும் கேக்க தோனுச்சே?" என்று சலித்துக் கொண்டவன்," நீ மறுபடி கேட்க சொன்னத வந்த உடனே நான் அம்மு கிட்ட சொன்னா அவ முடியாதுன்னு சொல்லிட்டு போய்ட்டா. மறுபடியும் நைட் அதப் பேச ஆரம்பிக்க ரொம்ப அழுதாடா"
என்று நடந்ததைக் கூறியவன்,
"அதுக்குத் தான் உன்கிட்ட இத விட்டுடு. அம்மு ஹர்ட் ஆகுறதப் பார்க்க கஷ்டமா இருக்குன்னு சொல்லலாம்ன்னு கால் பண்ணினேன், நீ எடுக்கல்ல.
காலைல அம்முவே வந்து உன்கூட பேசணும்னு சொன்னா. இப்போ அம்மு சொன்னத நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். அவளுக்கு விருப்பம் இல்லன்னா விட்டுடு விக்கி கட்டாயப்படுத்தி அவள கஷ்டப்படுத்தாத"
"ஆமா கண்ணா நானும் அத தான் அம்மு கிட்ட சொன்னேன் இனிமேல் இதப் பற்றி பேசவேமாட்டேன்.
ஏதோ மனசுல ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு இன்னைக்கு அம்மு பேசின பிறகு அது இப்போ இல்ல. சரி நான் பிறகு உன்கிட்ட பேசுறேன்"
"ஓகே.. விக்கி பை"
பேசி முடிந்து அலைபேசியை சில நொடி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் சிறிது நேரம் கண் மூடி அமர்ந்திருந்தான்.
அம்முவுடனான அவனின் காதல் முற்றுப் பெற்றுவிட்டது. இதன் பிறகு அவள் இவனுடன் சாதாரணமாகக் கூட பேசுவாளா இல்லாவிட்டால் இந்த மூன்று வருடங்கள் தவிர்த்தது போல தவிர்த்து விடுவாளா என்பது கூட அவனுக்கு சந்தேகமாய் இருந்தது.
அவன் சிந்தனையைக் கலைக்க அவனின் வேலைகள் அழைக்க அதில் மூழ்கிவிட்டான்.
மாலையில் எல்லோரும் தினேஷ் வீட்டுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருக்க அம்முவின் அறைக்கு வந்த கண்ணன்,
"நீ வரமாட்டன்னு நினைச்சேன் ஆனா நீ என்னடான்னா முதல் ஆளா ரெடி ஆகிட்ட போல?" என்றான்.
"நான் ஏன் வராம இருக்கணும்? அங்கிளப் பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா?" ஒன்றுமே நடவாதது போல் அப்பாவியாகக் கேட்டாள்.
"நாம போற நேரம் விக்கியும் இருப்பானே அதான் கேட்டேன் அம்மு"
"யாரோ ஏதோ மனசுல வெச்சிட்டு சுத்துறாங்க அதுக்கு நான் பழியா?"
"ஹ்ம்.. அதுவும் சரி தான்"
"உனக்கு ஒன்னு தெரியுமா கண்ணா? அண்ணாவும் அங்கிள் வீட்டுக்குப் போய் ரொம்ப நாளாச்சு அதனால நாம போற நேரம் அண்ணாவும் அங்க வருவான். சோ.. நான் கவலைப்படவே தேவையில்ல" என்று கூறிச் சிரித்தாள்.
"நீ விவரமான ஆள் தான் போ. நான் போய் ரெடியாகிட்டு வர்றேன்" என்றான் அவன்.
தினேஷ் வீட்டில்..
இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் நண்பன் குடும்பத்தினரையும் பல நாட்கள் கழித்து அம்முவையும் காண அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
"ஏண்டா கருணா ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் உனக்கு இங்க வர டைம் கிடைச்சது போல?"
"ஆமாடா. கவியோட காலேஜ், கண்ணன் வேல விஷயமா அலையன்னு ரெண்டு வருஷம் பறந்துடுச்சு"
"கண்ணன் நம்ம கதிர் கம்பெனில தானே வேல செய்றதா இருந்தான்?"
"ஆமா அங்கிள், அண்ணா கம்பெனில தான் வேல பாக்குறேன். ஆனா நான் தனியா எல்லாம் செய்தாத் தான் சீக்கிரமே வேலை பழகலாம்னு நிறைய வேல தருவார். ஹெல்ப் கூட பண்ணமாட்டார். என்னால முடியலன்னு அவருக்கு ஃபீல் ஆனா மட்டும் தான் ஹெல்ப் பண்ணுவார்.
அண்ணன் கம்பெனில வேலைக்கு சேர்ந்து எல்லாரையும் வேலை வாங்கணும்னு நான் பிளான் போட்டா, அவர் என்னை வெச்சு செய்றார். அவர்கிட்ட மாட்டிகிட்டு நான் முழிக்கிற முழி எனக்கும் அந்த கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும்" என்று சொல்லி வராத கண்ணீரைத் துடைக்க,
"ஓஹ்.. நீ இங்க வந்தும் இதையே தான் புலம்புற இரு உன்ன கோர்த்து விடுறேன்"
"அம்மா.. தாயே.. கவி குட்டி!! உன் அண்ணன் பாசத்த காட்டப் போய் எனக்கு ஆப்பு வெச்சிடாத செல்லம் என்னால தாங்க முடியாது" என்று கண்ணன் கெஞ்ச, அந்த இடமே சிரிப்பலையில் நிறைந்தது.
"அது சரி தானே கண்ணா நீ வேலை பழகினாத் தானே மத்தவங்கள வேலை வாங்கலாம்"
"போ அம்மு.. நீயும் எங்கண்ணன் சொல்ற மாதிரியே சொல்ற"
"அம்மு சொல்றதுல என்னடா தப்பு?" என்று கேட்டுக் கொண்டு விக்னேஷ் மாடியிலிருந்து இறங்கி வந்தான்.
அவனின் குரல் கேட்டு அம்மு மெதுவாக கவிதாவின் பக்கம் திரும்பி ஏதோ பேச ஆரம்பித்தாள்.
"ஏன்மா அம்மு.. நீ கூட இந்த அங்கிள மறந்துட்டல்ல? எத்தன நாளாச்சு நீ இங்க வந்து? நான் அர்ஜுன் கிட்ட கூட ஃபோன்ல பேசும் போது உன்ன கூட்டிட்டு வர சொன்னேன். அவனுக்கும் நிறைய வேலைன்னு விக்கி சொன்னான்"
தினேஷ் பேசத் தொடங்கியதுமே கண்ணனும் விக்கியும் அம்முவைப் பார்க்க, அதை உணர்ந்தும் அவள் அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து தினேஷிடம் பேசினாள்.
"மறக்கல்ல அங்கிள் நீங்க சொன்னது தான் அண்ணாவுக்கு நிறைய வேல. அப்பா இங்க வந்த ரெண்டு முறையும் நான் கொஞ்சம் வேலையா இருந்தேன் அதனால தான் வர முடியல்ல. இனிமேல் அடிக்கடி வந்து உங்கள பார்க்குறேன் அங்கிள்" என்று கூறியவளின் விழி ஒரு நொடி விக்னேஷை தழுவி மீண்டது.
அதைக் கண்டு கொண்டவன், 'என்னை இக்னோர் பண்ணத் தான் இங்க அதிகம் வராம இருந்திருக்கா. ரெண்டு மூன்று முறை அப்பாவைப் பார்க்க வந்தவ அவசரமாக கிளம்பியும் விடுவா. இன்னைக்கு நேரடியா என்கிட்ட பேசிட்டதுனால அடிக்கடி வர்றேன்னு சொல்றா. நான் ஒரு முட்டாள். காதல்னு குழப்பி விட்டு இவ இங்க வர்றதக் கூட கெடுத்து வெச்சுட்டேன்' என யோசித்துக் கொண்டிருந்தவன்,
"டேய் நல்லவனே என்ன யோசனை பலமா இருக்கு?" என்ற கண்ணனின் குரலில் நடப்பிற்கு வந்தான்.
"ஒன்னும் இல்லடா சும்மா ஏதோ ஒரு.. சரி அத விடு"
இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் அம்மு சொன்னது போலவே அர்ஜுன் அங்கு வந்துவிட்டான்.
"ஹாய் அங்கிள் எப்படி இருக்கிங்க?"
"வா.. ப்பா அர்ஜுன். உன்ன எல்லாம் பார்க்க ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குல்ல?"
"இல்ல அங்கிள் நியூ ப்ராஜக்ட் ஒன்னுல கொஞ்சம் பிசியா இருக்கேன். விக்கி சொல்லி இருப்பானே. அது கைக்கு வரும் வர வேலை தான், இப்போ எடுத்துட்டேன். இன்னும் ரெண்டு மூனு நாள் வேலை இருக்கும் அதுக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீ ஆகணும். அத்த, மாமா வந்ததுக்கும் அவங்க கூட இருக்க முடியல்ல"
"ம்ம்.. நான் சொன்னா எங்க கேக்குறாரு? எப்போ பார்த்தாலும் உன்னப் பற்றித்தான் பேசிட்டு இருப்பார் அர்ஜுன்" என்ற விக்னேஷைத் தொடர்ந்து,
"ஆமா அர்ஜுன் விக்கி சொன்னான் தான். ஆனாலும் என்னவோ உன்னையும் அம்முவையும் பார்க்கணும்னு நினைச்சா பார்த்தே ஆகணும்பா இல்லனா மனசு கேக்காது. ஆனா இப்பல்லாம் அது முடியாம போகுதே. என்னால முன்ன மாதிரி வெளிய எங்கேயும் போகவும் முடியல்ல கம்பெனி விட்டா வீடுன்னு இருக்கேன்" என்றவரிடம்
"சாரி அங்கிள் இனிமேல் இப்படி நிறைய நாள் வராம இருக்கமாட்டேன் அடிக்கடி வர ட்ரை பண்றேன்"
"நீ மட்டுமில்ல அம்முவையும் கூட்டிட்டுத் தான் வரணும் சரியா?"
"கண்டிப்பா அங்கிள்"
"என்னே ஒரு பாசப் பிணைப்பு? மேலெல்லாம் புல்லரிக்குது அங்கிள்" என்ற கண்ணன் புறம் திரும்பி,
"ஏன்டா.. உனக்கு பொறாமையா இருக்கா? நீ எப்பவுமே தூரமாத் தான் இருப்ப வருஷத்திற்கு ஒரு தடவ, ரெண்டு தடவ வருவ ஆனா இவங்க அப்படி இல்லடா அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போவாங்க" என்றவரின் கூற்றில்
"ஆமா அத கெடுத்து வெச்சது உங்க மகன் தான். அப்படி தானே விக்கி?" என்று மற்றவரைப் பார்த்துக் கொண்டு விக்கியின் காதில் கிசுகிசுக்க,
"டேய்.. சும்மா இரு டா. நானே தப்பு பண்ணிட்டேன்னு ஃபீல் பண்றேன் நீ வேற"
"ஓஹ்.. சார் ஃபீல் பண்றீங்களா? ஓகே.. ஓகே.."
அம்மு எல்லோருடனும் கலகலத்துப் பேசினாலும் யாரும் கவனிக்காதவாறு விக்னேஷைத் தவிர்த்தாள்.
எல்லோரும் சிரித்துப் பேசி சிற்றுண்டி உண்டு தினேஷ் வீடே கலகலப்பாக இருந்தது. எல்லோரும் அங்கு சில மணிநேரங்கள் இருந்து விட்டுக் கிளம்பினார்கள்..
அம்மு, கவிதா, கண்ணன் மூவரையும் தன் வண்டியில் ஏற்றி வந்து வீட்டில் அர்ஜுன்,
"அம்மு நைட் நான் வர கொஞ்சம் லேட்டாகும் அம்மா கிட்ட சொல்லிடு" என்றான்.
"சரி ண்ணா நான் சொல்றேன். நீ கவனமா போய்ட்டு வா. அப்புறம் அண்ணா வேலை இருந்தும் எனக்காக தானே நீ அங்கிள் வீட்டுக்கு வந்த?" அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு கேட்டாள்.
"யெஸ் டா அம்மு.. நீங்க போற டைம் விக்கி அங்க தான் இருப்பான்னு தெரியும்.
ரொம்ப நாள் கழிச்சு அத்தை மாமா எல்லாரும் போறதால அவன வேலை கொடுத்து வெளிய அனுப்பவும் முடியாது. நீ சங்கடப்படாமலும் இருக்கணும் சோ நான் அங்க வர்றது தான் கரெக்ட் அதான் வந்தேன் டா"
"எனக்குத் தெரியும். நீ வருவேன்னு கண்ணன் கிட்ட சொன்னேன்" என்று கூறி புன்னகைத்தாள்.
"என் வேலைய இன்னக்கு இல்லைன்னா நாளைக்குக் கூட செய்து முடிப்பேன் ஆனா உன்ன அப்படி என்னால விட முடியாது அம்மு மா. எனக்கு உன் சந்தோஷம், நிம்மதி தான் முக்கியம். உனக்கு பிறகு தான் மத்ததெல்லாம்"
"எனக்கு தெரியும் என் அண்ணா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான்னு" என்று மீண்டும் அவள் புன்னகைக்க,
அர்ஜுனும் ஒரு அர்த்தப் புன்னகையுடன்,
"சரி டா நான் கிளம்பறேன் அம்மா கிட்ட சொல்லிடு" என்று கூறி கிளம்பிவிட்டான்.
அர்ஜுனை அனுப்பிவிட்டு வந்தவள் கவிதா மற்றும் கண்ணனுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டாள்.
என்ன தான் எல்லோருடனும் சிரித்துப் பேசி நேரத்தைக் கழித்தாலும் மனதின் ஓரத்தில் அவள் காதலின் சிந்தனை ஓடிக் கொண்டு தான் இருந்தது.