எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை‌14

வான்மழை 14

“ஏய் இந்தா ப்பா, பந்தி சரியா ஏழு மணிக்கு எல்லாம் ஆரம்பிச்சடனும்.”

“பொண்ணு ரூம்ல தண்ணி வரலை என்னன்னு பாருங்க.”

“அந்த இலைக்கட்டை தூக்கி தள்ளி வைப்பா, ஆளுங்க மிதிச்சுட்டு போறாங்க பாரு.”

“ஏங்க, பொண்ணு வீட்டுக்காரங்க தங்குறதுக்கு, ஒரு ரூம் அதிகமா தேவைப்படுது.”

“பொண்ணோட தாய்மாமா எங்கப்பா?”

“கொஞ்சம் சீக்கிரம் பொண்ணுக்கு மேக்கப் போட்டு முடிங்கப்பா! அங்க முகூர்தத்துக்கு நேராமாச்சு.”

என கலவையான வாக்கியங்களை தன்னுள் நிறைத்திருந்தது அந்த கல்யாண மண்டபம்.

இதோ, இன்னும் சிறிது நேரத்தில் கார்முகிலன்- வருணாக்ஷியின் திருமணம்.

மணமகனான கார்முகிலன் மணமேடைக்கு அழைக்கப்பட்டு, மந்திரங்களை கூறிக் கொண்டிருக்க‌ சிறிது நேரத்தில் மணப்பெண் அலங்காரத்தில், அழைத்து வரப்பட்டாள் வருணாக்ஷி.

அனைத்து கேமராக்களும் அவளை போக்கஸ் செய்ய, அதனை பற்றிய கவலையின்றி மகிழ்ச்சியில் பூரித்த முகத்துடன் முகிலனை பார்த்தவாறு அவள் நடந்து வர,

அவளின் பார்வையை உணர்ந்தவனுக்கு மெல்லிய சிரிப்பு உண்டாயிற்று. அவனிற்கு தான்‌ தெரியுமே அவளைப் பற்றி.

‘வாத்தி சார், ப்ளீஸ் நான் அங்க வந்து உட்காருறதுக்குள்ள ஒரு‌தடவை என்னை நிமிர்ந்து பார்த்திடுங்களேன்.’ என விடாது மனதினில் அவள் ஜெபித்திட, அவளின் எண்ணம் அவனை எட்டியதோ?

சில விநாடிக்குள்ள அவளது விழிகளை ஸ்பரிசித்திருந்தது அவனது விழிகள். நொடி நேர விழிகளின் உரசல் அங்கிருந்தவர்களின் கவனத்தை கவராதிருந்தாலும், வருணாக்ஷியின் விழிகளும், புகைப்பட கருவியும் அதனை அழகாய் தனக்குள் உள்வாங்கி கொண்டன.

தன்னருகே அமர்ந்தவளை உணர்ந்தவளின் இதழ்கள் மென்னகையை பூசிக் கொண்டன.

ஐயர் மந்திரங்களை கூறிக் கொண்டிருக்க அனைவரது அகமும் முகமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளை சங்கவியின் உள்ளம் மட்டும் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது.

அதன் தகிப்பை‌ சற்றும் அணைய விடாது ஊதுக்குழல் கொண்டு விசிறி விட்டுக் கொண்டிருந்தார் அவளின் அன்னை.

“இப்பவாச்சும் கொஞ்சம் சுதாரிச்சுக்கோடி, இந்த கல்யாணம் நடக்கறதுக்கு முன்னமே நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். இந்த சீமாட்டி உன் வீட்டுக்கு வந்தா உன்னை மூலையில முடக்கி போட்டுடுவான்னு, அப்போ கேட்டியா? இப்போ பாரு நான் சொன்னது தானே நேத்து நடந்துச்சு.” என விடாது அவளை வசைப்பாடிக் கொண்டிருப்பதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. எல்லாம் நேற்று இரவு நடந்த கார்முகிலன் - வருணாக்ஷியின் நிச்சயத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீர் வரிசையைக் கொண்டு தான்‌.

முனிஸ்வரி வருணாவின் பாட்டி கட்டாயமாக சொல்லி விட்டார், பெண்ணின் சீர் வரிசைகளை சபையில் அடுக்கு வேண்டும் என. குருசாமி எவ்வளவோ தாயிடம் போராடிப் பார்த்தார், ம்ஹீம் இம்மியளவும் தனது வீம்பில் இருந்து விலாகாது நின்று காரியத்தை சாதித்து விட்டிருந்தார்.

ஏற்கனவே, குருசாமி பெண்ணிற்கென அதிகமே சேர்த்து வைத்திருந்தார். இதில் முனிஸ்வரியின் நகைகள், போதாக்குறைக்கு தாய்மாமான் சீரு, வருணாவின் அத்தை வீட்டு முறை என சபை நிரம்பி வழிந்தது.

வந்திருந்த அத்தனை சனங்களும் அன்று சீர் வரிசையை பற்றித்தான் பேசினர்.

ஏற்கனவே, ஒரு வித தாழ்வு மனப்பான்மையிலும், ஆதங்கத்திலும் இருந்த சங்கவிக்கு இந்த சீர் வரிசைகள் மேலும் அதனை கூட்டின.

“ஏன் அண்ணி, பெரிய மருமக கொண்டு வராததுக்கும் சேர்த்து சின்ன மருமக சீர் கொண்டு வந்திட்டாப் போலயே”. என‌ அவளின் காதுப்படவே சில உறவுகள் முத்துபேச்சியிடம் நக்கலடித்துச் செல்ல,
முகம் கருத்துவிட்டது அவளிற்கு.

முத்துப்பேச்சிற்கு இப்படிப்பட்ட பேச்சுக்களை எல்லாம் கேட்க கேட்க சங்கடமாகிப் போனது. அவருக்கு இப்படி சபை நிறைக்க சீர் வைத்ததை தவிர்த்திருக்கலாம் என எண்ணமோ ஏற்பட்டு விட்டது உறவுகளின் பேச்சினால். ஆனால் இதை பெண் வீட்டாரிடம் கூற முடியாதல்லவா? எனவே, கண்டும் காணாமல் உறவுகளின் பேச்சை காதில் வாங்காது போல் நகர்ந்துவிட,

அவரின் அந்த செய்கையே மேலும் சங்கவிக்கு ஆத்திரமூட்டியது. தனக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விட்டாரே என ஆதங்கமும் எழுந்தது.

இதுவரையிலும் ‘ நீங்கள் தேடினாலும் இப்படிப்பட்ட பெண் மருமகளாக‌ கிடைத்திருக்க மாட்டாள்’ என உறவுகளின் முன் அவள் வாங்கி வைத்திருந்த பேரும், பெருமையும், இன்று இந்த சீர் வரிசைகளால் அவள் எடுத்து வைத்திருந்த நற்பெயர் ஓரங்கட்டபட, அவளின் குறைகளை தோண்டி எடுத்தது உறவுக் கூட்டம்.

தாயின் ஓயாத பேச்சில் எரிச்சலடைந்தலள்,
“அம்மா, போதும் நிப்பாட்டு.‌‌ சும்மா பேசிட்டே இருக்காத” என்றிட,

“நான் உனக்காக தானேடி பேசுறேன். இன்னைக்கு வந்தவ முன்னாடி நம்ம கெளரவம் கீழே இறங்கிய கூடாதுன்னே தானே இவ்வளவு பேசுறேன்.” விடுவென அவர் மீண்டும் பேச,

“உனக்கு அவ்வளவு கெளரவம் இருந்தா, எனக்கும் இந்த மாதிரி சபை நிறைக்க சீர் செஞ்சு கெளரவத்தை நிலைநாட்டேன், யாரு வேண்டாம்னு சொன்னது.” என அவள்‌ ஒரேப் போடாக போட்டு விட, அதற்கு மேல் அவர் எங்கே பேச, அமைதியாகி விட்டார்.

அவரின் அமைதியில் நக்கலாக சிரித்தவள், “என்ன அமைதியாகிட்ட? முடியாதுல்ல, அப்போ கல்யாண முடியிற வரை பேசாம உட்காரு.” என திட்டிட, அவளை முறைத்தவர் அதன்‌பின் அவள் பக்கமே திரும்பவில்லை.


அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு, திருமாங்கல்யம் முகிலனின் கைகளிற்கு வர, அதுவரை கீழே அமர்ந்திருந்த மனைவியை, தன்னுடன் அழைத்து மேடையில் நிற்க வைத்துக் கொண்டான் பரணி. அவனின் அந்த சிறு‌ செய்கையே சங்கவயின் மனதை நிறைக்கப் போதுமாய் இருந்தது.

கைகளை குவிந்து வருணாக்ஷி அழகாய் புன்னகைத்து அமர்ந்திருக்க, அவளின் புன்னகையை தனக்குள் உள்வாங்கி கொண்டு அவளது கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து அவளின் முழு உடைமையாகிப் போனான் வருணாவின் முகிலன்.

நெஞ்சம் முழுவதும் நிறைந்த சந்தோசத்துடன் அடுத்தடுத்து சம்பிராதாயங்களில் மூழ்கிப் போயினர் கணவன் மனைவி இருவரும்.

அன்று மாலையே ரிசப்சன் ஏற்பாடு செய்திருக்க, மணமக்களை சில போட்டோக்கள் எடுக்க விட்டு, உணவுண்ண வைத்து விட்டு ஓய்வெடுக்க அனுப்பி வைத்து விட்டனர்.

திருமணத்திற்கு மறுநாள் வைத்திருந்த ரிசப்சனை மாற்றி திருமணம் அன்றே வைத்து விட ஏற்பாடு செய்து விட்டிருந்தான் முகிலன். இன்றைய நிறைவும், நெகிழ்வும் நாளை அவர்களிடம் இருக்காது என்ற காரணத்தோடு, மீண்டும் இத்தனை ஆடம்பரத்தையும், சோர்வினையும் நாளையும் அவன் ஏற்க தயராக இல்லை என்பதும் அடக்கம்.

வெளியூர் உறவினர்களை தவிர்த்து, மற்றவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். பெண்ணிற்கென ஒதுக்கப்பட்ட அறையில், அமர்ந்திருந்தாள் வருணா. அணிந்திருந்த ஆடை, அணிகலன்களை தளர்த்தி விட்டு இலகு உடையில் அமர்ந்திருந்தாள். அடுத்து சில மணி நேரங்களில் ரிசப்சனிற்கு‌ தயராக வேண்டும் என நினைக்கும் போதே கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது அவளிற்கு.

கஷ்டம் ஒருபுறம் இருந்தாலும், அப்பாடா இன்றோடு இவையாவும் முடிந்து விடும் என்ற நிம்மதியும் சேர்ந்தே எழுந்தது.

கட்டிலில் விழுந்த நொடி, அவளது கண்கள‌ அயர்வில் மெல்ல சொருகிக் கொள்ள, சில நொடிகளில் அவளது உறக்கம் தடைப்பட்டது அலைப்பேசி அழைப்பினால்.

“ப்ச்!” என்றவாறே‌ புரண்டு படுத்தவள்‌ அலைப்பேசியை எடுக்க அதில் சிரித்துக் கொண்டிருந்தான் அவனின்‌ கணவன்.‌ அதே நேரம் அவள்‌ திரும்பி படுத்ததில் அவள்‌ நடு நெஞ்சில் “சுருக்” என வலி எடுத்ததில், அவள் குனிந்துப் பார்க்க,

அழகாய் அவள் உடையின் மீது வீற்றிருந்தது, அலைப்பேசி திரையில் சிரித்துக் கொண்டிருந்தவன்‌ கட்டிய திருமாங்கல்யம்.

அதனை கண்டவளின் இதழ்களில் வெட்கப் புன்னகை எழ, போனை அட்டன் செய்யவிருந்த நேரம் அது‌ கட்டாகியது.

திரும்ப இவள் அழைக்காது, அவனின்‌ முகம் திரையில் வர காத்திருந்தாள்.‌ நொடிகள் விநாடிகளாகி நிமிடங்களாய் மாறிய பொழுதும், அவன்‌ முகம்‌ திரையில் விழாது போக,

உதட்டை கோணியவள், “ஏன்? இன்னொரு தடவை கூப்பிட்டா ஆகாதாம இவருக்கு. ரொம்பத்தான் கெளரவம் பாக்குறாரு” என்றவள்,


“ப்ச் மொத இப்புடி துடுக்குத்தனமா வார்த்தையை விடுறதை நிப்பாட்டு வரு நீ? பொண்டாட்டிக்கிட்ட என்ன கெளரவம் பார்த்திடபோறாரு அவரு. அன்னைக்கு ஜவுளி கடையிலயே சொன்னாருல! வார்த்தையை பார்த்து பேசுன்னு! இருந்தும் அடங்குறியா நீயி?” என தன்னைத்தானே குட்டி கொண்டவள்,
நல்ல பிள்ளையாக அவளே அவனிற்கு அழைத்தாள்.

முழு ரிங்கும் போய் கட்டாகும் வேளையில் அந்தப்புறம் எடுக்கப்பட்டது.

“தூங்கிட்டியா வருணாக்ஷி?” காதில் மொத்தென்று வந்து விழுந்த அவனது குரலில் பட்டென்று எழுந்துமர்ந்து விட்டாள்.

“வருணாக்ஷி!” அவள் சத்தமின்றி போகவும் மீண்டும் அவன் அழைக்க,

அவனது வருணாக்ஷி என்ற நீட்டி முழக்கிய அழைப்பில் கடுகடுத்தவள்,

“ம்ம் இருக்கேன்! இருக்கேன்” என்க,

“ஹ்ம்ம் தூங்கிட்டியான்னு கேட்டேன்!”

“ஆமா, லேசா கண்ணசஞ்சேன், உங்க போன் வந்தது எடுக்குறதுக்குள்ள கட்டாகிடுச்சு.”

“ஓஹ்! அதான் திரும்ப நான் கூப்பிடுவேனா, இல்லையான்னு பாத்துட்டு இருந்தியா?” என்றவனின் அலட்டாத கேள்வியில், இங்கே‌ இவள் மூச்சை இழுத்துப் பிடித்து விட்டாள்.

‘வாய் விட்டுறாத வரு! வாத்தி வறுத்தெடுத்துடுவாறு.’ என மனதோடு பேசியவள் இதழ்கள் பூட்டிக் கொள்ள,

அவளது அமைதியில் அவளைக் கண்டுக் கொண்டவன்,
“என்ன? மூச்சடச்சிக்கிச்சா? நீ நினைச்சதை சொன்னதும்.” என அவன் மெல்லிய குரலில் கடிய,

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே, நான் பேசுனேன் உங்களுக்கு தான் கேக்கலை. சிக்னல் ப்ராப்ளமா இருக்கும்.” இனியும் அமைதிக்காத்தால் தனது வாயை பிடுங்கி விடுவான் என்பதில் உஷராகியவள் இதழ் திறந்திருந்தாள்.

“ஓஹ்! பேசுனியா? என்ன பேசின? இப்போ சிக்னல் நல்லாக கிடைக்குது, திரும்ப பேசு நான் கேட்கிறேன்.” விடுவேனா என‌ அவன் அவளை கட்டம் கட்ட,

‘ஹய்யோ!’ என மனதில் அலறியவள்,

“ச்சு, இப்போ நான் என்ன பேசினேன்றதாங்க முக்கியம்? நீங்க எதுக்கு கால் பண்ணிங்க?” என‌ அவனை திசைத் திருப்ப,

“ராஸ்கல் பேச்சை மாத்துறியா? பிச்சிடுவேன்.”

“சரி விடுங்களேன்” என அவள் சிணுங்கியதில்,

“பொழச்சுப் போ! ரிசப்சன் டிரஸ் பத்தி பியூட்டிசன்ஸ்கிட்ட பேசணும்னு சொன்னியே? பேசிட்டியா?” என,

“அச்சோ! நல்லவேளை ஞாபகப்படுத்துனிங்க மறந்துட்டேன். இப்போ‌ மணி எத்தனை” என்றபடி மொபைலை பார்த்தவள்,

“இன்னும் நேரமிருக்கு, அந்த அக்கா கிளம்பிருக்க மாட்டாங்க. நான் சொல்லிடுறேன்.”

“சரி, இப்பவே சொல்லிடு. கொஞ்ச நேரம் களைப்பு போக தூங்கி எழும்பு.”

“ம்ம் நீங்க?”

“எனக்கு தூங்க நேரமில்லை. ஈவ்னிங் ரிசப்சன் வேலை கொஞ்சம் இருக்கு.‌ சரி நான் வைக்கிறேன்.” என்றபடி அவன் போனை வைத்து விட்டிருக்க, இவள்‌ திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பியூட்டிசனை அழைத்து விவரத்தை கூறியவள், அதற்கு மேல் தாங்க முடியாது‌ தூங்கி விட்டிருந்தாள்.

மாலை பியூட்டிசனின் கைவண்ணத்
தில் க்ளாசிக் பியூட்டியாக இவள்‌ ஜொலிக்க, அவளிற்கு இணையாக கம்பீர அழகுடன் கார்முகிலன் நிற்க, அவர்களின் விழா இனிதே துவங்கியது.








 
Top