எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 1

Privi

Moderator
கிரீன் ஸ்ட்ரீட், நியூஹாம் சிட்டி, லண்டன். காலை மணி 4.56... வெய்யோன் அவன் ஆதிக்கத்தை செலுத்த காத்திருந்த தருணம். கர்னி ரோடு ஈ15 ஆம் எண் வீட்டில் விளக்குங்கள் அனைக்கபட்டு, அந்த வீடே அமைதியாக இருந்தது.


அப்போது அந்த வீட்டினுள் ஒரு உருவம் சத்தமில்லாமல் மெதுவாய் நடந்து கொண்டிருந்தது. பூனை எலியை பிடிக்க மெதுவாய் வருமே அது போன்று அந்த உருவமும் எதையோ தேடி பதுங்கி மெதுவாய் நடந்து சென்றது.


அந்த உருவம் ஒரு இடத்தில் நின்று எதையோ தேடிக்கொண்டிருக்க, சட்டென அந்த உருவத்தின் கண்களில் ஒரு ஒளி.... தேடியது கிடைத்து விட்டதுக்கான ஒரு மகிழ்ச்சி.


அந்த பொருள் ஒரு பையினுள் இருக்க, அதை பிரிக்க முயற்சி செய்தது, அந்த உருவம். அப்போது பட்டென அந்த வீட்டு விளக்குகள் ஒளிர்ந்தது.


"பம்கின்........" என ஒரு ஆணின் மிரட்டல் சத்தம்.


அந்த உருவமோ பதறிக்கொண்டது திரும்பி பார்த்தது. அங்கு அந்த உருவத்தை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது ரணதீரன் என்கிற ராயின்.


ரணதீரன் எனும் அழகான தமிழ் பெயரை அங்குள்ள வெள்ளைக்காரர்கள் ராயின் என்று அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள். அவனும் ஒருசில காரணங்களுக்காகவும் “ஊருடன் ஒன்றி வாழ்” எனும் சொல்லுக்கு ஏற்பவும் அந்த பெயரையே அதன் பின் உபயோகிக்க ஆரம்பித்து விட்டான்.


அவன் கோபமாக முறைகவும். அந்த உருவம் அதன் பற்களை இளிப்பது போல் காட்டின. உடனே அவ்வுருவம்


" ஹாய் டாட்," என்றது. ஆம் அவ்வுருவம் வேறு யாரும் இல்லை ராயினின் அன்புக்குரிய மகள் மேக்னா என்கிற மேக் தான்.


மேக்னா ராயினின் செல்ல மகள். அவளை பற்றி கூற வேண்டும் என்றாள் மாநிறத்தில், குண்டு கண்களை கொண்டு கொஞ்சம் பூசிய உடல் வாகு கொண்டு இருக்கும் எட்டு வயது சிறுமி. கொஞ்சம் வாழுதானமும், பேச்சில் சுட்டித்தனமும் இருக்கும் சிறுமி.


ஆனால் இவை இரண்டும் தந்தையிடமும் அவளுக்கு கொஞ்சம் நெருக்கமானவர்களிடமும் மட்டுமே இருக்கும். மற்றவர்களிடம் மௌனமாகவும் முசுட்டுத்தனமாகவும் தான் இருப்பாள். அவள் கலகலப்பு எல்லாம் அவர்கள் வீட்டினுள் மட்டுமே.


ராயின் "எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. மணி என்ன? இப்போது இந்த நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவது அவசியமா?" என கேட்டான்.


அதற்கு மேக்னாவோ " நோ டாட் இட்ஸ் மை ஏர்லி மோர்னிங் கிரேவிங்." (இல்லை அப்பா அதிகாலையிலேயே சாக்லேட் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது) என கூறினாள்.


அதற்கு ராயினோ "போதும் பம்கின் இன்னும் உனக்கு ஒன்றரை மணி நேரம் தான் இருக்கிறது போய் தூங்கு ஆறரை மணிக்கு எழுப்புவேன். கோவிலுக்கு செல்ல வேண்டும்." என கூறினான்.


"டாட்" என அவள் ஆரம்பிக்கும் முன்பே "போய் தூங்கு என சொன்னேன்" என்றான்.


செல்லும் முன் தந்தையை பார்த்து பளிப்பு காட்டினாள். அதற்கு ராயின் அவளை அடிக்க வருவதை போல் ஒரு பாவலா செய்ய அவள் அறைக்கு ஓடியே விட்டாள்.


அவள் சென்றபின் ராயினோ தலை அசைத்து கொண்டே பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு கொண்டான்.


அவள் எடுத்து வைத்த சென்ற சாக்லேடுகளை திரும்பவும் அதன் இடத்தில் எடுத்து வைத்தான்.. எடுத்து வைத்து கொண்டிருந்தவன் மனக்கண்ணில் அவளின் முகம், இதழ்களில் விரக்தி புன்னகை...


அவன் இதழ்கள் "போடி" என முணு முணுத்தது. பின் அமைதியாக அவன் அறைக்கு சென்று பழைய நினைவுகளுடன் துயில் கொண்டான். சரியாக ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவன் அவனை சுத்தம் செய்து கொண்டு மேக்னா அறைக்கு சென்றான்.


அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்து "அம்மு குட்டி, பம்கின்…. எழுந்துக்கோ ட கோவிலுக்கு போகணும். அப்பா தங்கம்ல… எழுந்துக்கோ…” என அவளை தூக்கத்திலிருந்து எழுப்பி கொண்டிருந்தான்.


அவளும் சிறு சிணுங்களுடன் எழுந்தாள். பின் அவளை தயார் படுத்தி தானும் தயார் ஆகி இருவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்றனர். லண்டன் மாநகரத்தில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலுக்கு தகப்பனும் மகளும் ஒன்றாக சென்றனர்.


நேராக சென்று முதற் கடவுள் பிள்ளையாரை வணங்கி விட்டு மூலஸ்தானத்தில் உள்ள முருகனை மனம் உருகி வேண்டினான் ராயின். அவனை பார்த்து அவனை போலவே இரு கைகளையும் கூப்பி வைத்து கொண்டு வெறுமனே கடவுளை பார்த்து கொண்டிருந்தாள் மேக்னா..


அவளுக்கு என்ன வேண்டுவதென்றே தெரியவில்லை... எப்போதுமே அப்படிதான் கோவிலுக்கு தந்தையுடன் செல்பவள் வெறுமனே இரு கையையும் கூப்பி வைத்துக்கொண்டு நிற்பாள்.


முருகனிடம் அர்ச்சனை ஒன்றை போட்டு விட்டு, அங்கிருந்த ஐயரிடம் "தர்ப்பணம் செய்ய வேண்டும்" என கூறினான்.


ஐயரோ "யாருக்கு தர்ப்பணம் பண்ண போறேல்?" என கேட்டார்.


ராயின் "என் மனைவிக்கு" என்று கூறினான்.


ஐயரோ" சிவன் சன்னதி முன்னே நில்லுங்கோ. தர்பணத்துக்கான பொருட்களை எடுத்துண்டு வந்துர்றேன்." என கூறினார்.


அவனும் அவரிடம் சரி என தலை ஆட்டினான். சிவன் சன்னதி முன் நின்றிருந்தான். ஐயர் பொருட்களை எடுத்து வந்து சிவன் முன் அமர்ந்து தர்ப்பணம் குடுக்க ஏற்பாடுகள் பண்ணி கொண்டிருந்தார்.


ராயினும் அவன் மேல் சட்டையை கழட்டி மேக்னாவிடம் குடுத்து விட்டு தர்ப்பணம் குடுக்க சிவன் சன்னதி முன் அமர்ந்தான். எல்லாம் முடிய அந்த கோவிலின் பின்னால் இருக்கும் சிறு குளத்தில் தர்ப்பணத்தை விட்டு, மூழ்கி எழுந்து வந்து ஐயருக்கு தர்ச்சனை குடுத்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.


அன்றைய நாள் நினைவுகள் இன்னும் பசுமையாக அவன் மனதினில் இருக்கிறது. கண்களின் ஓரத்தில் மனைவியை நினைத்து கண்ணீர் துளிகள்... மேக்னா அமைதியாக வந்து கொண்டிருந்தாள்.


இத்தனை வருடத்தில் அவளும் தான் அந்நாளில் அப்பா படும் வேதனையை பார்த்து கொண்டிருக்கிறாள். இத்தனைக்கும் இன்று தான் அவளின் பிறந்த நாளும். ஆம் மேக்னாவை ஈர்ந்தெடுத்து விட்டு அவள் சென்று விட்டாள்.


காலையில் தர்ப்பணம் தருபவன், அவன் சோகத்தை அவனில் புதைத்து கொண்டு மாலையில் மகளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவான். இவ்வருடமும் அதே கதைதான்..


வீட்டிற்கு சென்றவன், மேக்னாவிடம் "பம்கின் அப்பா கொஞ்ச நேரம் அறையில் இருக்கிறேன். நீயும் சிறிது நேரம் ரெஸ்ட் எடு பின் ஐந்து மணியை போல் தயாராகி நாம் இருவரும் ரெஸ்டடோரண்ட் போகலாம்." என கூறினான்.


அவளும் சமத்தாக தலையை ஆட்டி கொண்டாள். அவன் சென்று அறையில் அடைந்து கொள்ள, மேக்னா தான் என்ன செய்வது என தெரியாமல் இருந்தாள். அவனுக்காவது மனைவின் முகம் நினைவில் உள்ளது ஆனால் தன் தாய் யார் என்றே தெரியாமல் சோகத்தில் இருப்பது மேக்னா தான்.


பிறந்ததிலிருந்து இன்று வரை தாயின் முகம் கண்டறியாதவள். அவளுக்கு தாயின் அறிமுகம் எல்லாமே தாயை பற்றி தந்தை சொல்லும் கதைகள் மட்டுமே. இப்படியே இருவரும் அவர்களின் அறையில் இருக்க மணி ஐந்தை தொட்டது. ராயின் தயாராகி வெளியே வர அதே நேரத்தில் மேக்னாவும் தயாராகி வந்தாள்.


வந்தவளிடம் அவள் தலையில் முத்தமிட்டு "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ட கண்ணா" என கூறினான் ராயின். மேக்னாவும் "நன்றி பா." என கூறி அவனை தழுவி கொண்டாள்.


இருவரும் ஒன்றாக முன்னமே முன் பதிவு செய்து வைத்த ரெஸ்டோரனுக்கு புறப்பட்டனர். ரெஸ்டோரனில் ராயின் அழைத்த அனைவரும் வந்திருந்தனர். மேக்னாவின் நண்பர்கள் பட்டாளமே வந்திருந்தார்கள்.


அவர்கள் முன் கேக் வெட்டி, எல்லோரும் வாழ்த்து கூறி, அன்பளிப்பு கொடுத்து என எல்லா வருடமும் போல் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்தது. களைப்புடன் வீட்டிற்கு வந்தனர் தந்தையும் மகளும்.
வலியிலும், வேதனையிலும், கொண்டாட்டத்திலும் என வெவ்வேறு மனநிலை மாற்றங்களுடன் அந்நாளை இருவரும் நிறைவு செய்தனர்...


==================================================================================


மறுநாள் பொழுது விடியும் வேளையில் ராயின் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான். மேக்னாவிற்கு காலை சிற்றுண்டிக்கு பான்கேக் செய்து அதின் மேல் புற்றுப்பழம் (ரெஸ்பெர்ரி) வைத்து அதில் கொஞ்சம் தென் தூவி வைத்திருந்தான்.


பின் அவள் பள்ளி உடைகளை எடுத்து ஐயன் செய்து வைத்தான். அவள் காலணிகளை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்திருந்தான். அவள் புத்தகங்களை சரி பார்த்து அவள் பள்ளி பையில் வைத்தான்.


அவளுக்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்தான். பின் சென்று அவளை எழுப்பினான். சிணுங்கி கொண்டே எழுந்தவள் "இன்னும் கொஞ்ச நேரம் டாடி" என்றாள்.


அதற்கு உடனே அவன் கண்டிப்பது போல் "அப்பா" என அழுத்தி சொன்னான்.


மேக் "ப்பா எப்படி சொன்னாலும் பொருள் ஒன்று தானே. படுத்தாதீங்க... கொஞ்ச நேரம் நான் தூங்குறேனே." என கூறி விட்டு மெத்தையில் சாய போனாள்.


அவள் கையை பிடித்து "போதும் போதும் நீ தூங்கியது பம்கின்.. பள்ளி முடிந்து கூட வந்து தூங்கிக்கலாம். இப்போ எழுந்து குளிக்க போ." என விரட்டினான்.


அவனின் நச்சரிப்பு தாங்காமல் எழுந்து தன்னை சுத்தம் செய்ய போனாள். அவள் சென்றவுடன் அவளுக்கு தேவையானது அனைத்தையும் அவள் கை எட்டும் தூரம் வரை வைத்து விட்டு, அவனது மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டான்.


அவளும் தன்னை சுத்த செய்து விட்டு பள்ளி சீருடையை அணிந்து விட்டு வெளியே வந்தாள் " அப்பா தலை வாரி விடுங்க" என கத்திக்கொண்டு இருந்தாள்.


அவனும் செய்யும் வேலையை பாதியில் விட்டு வந்து அவளுக்கு தலைவாரி விட்டான்.


ஒரு கட்டத்தில் ";அஹ்ஹ்ஹ வலிக்குது பா. நான் தான் சொல்றேனே முடியை கட்டையாக வெட்டிக்கிறேன் என்று. நீங்கள்தான் அனுமதிக்க வில்லை. அப்படி முடியை நான் சொல்வது போல் வெட்டிருந்தாள் உங்களுக்கு தலை வாரும் வேலை மிச்சம். நானும் இப்படி வலியை அனுபவிக்க வேண்டாம்." என்றாள் மேக்.


அதற்கு ராயின் "அது மட்டும் முடியாது பம்கின். நானும் தானே சொல்லுகிறேன் அது உன் அம்மா" என அவன் கூறி கொண்டிருக்கும் போதே அதில் இடை புகுந்த மேக்னா


"அம்மாவின் முடி… அவளுக்கும் இதேபோல்தான் நீளமான முடி... அவளுக்கு அழகே அந்த முடித்தான். உனக்கும் அவளை போலவே அழகான முடி. எக்காரணம் கொண்டும் இந்த முடியை வெட்ட கூடாது. சரிதானே" என அவன் கூற ஆரம்பித்ததை மனப்பாடம் செய்ததை போல் அவள் ஒன்று விடாமல் சிறு எரிச்சலுடன் கூறி முடித்தாள்.


அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. மேக் "பல வருடமாக கேட்கும் அதே வசனம். போங்கப்பா" என சலித்து கொண்டாள் மேக்னா.


தலைவாரிய பின் அவள் சென்று அவள் புத்தகங்களை சரி பார்க்க, ராயினோ "மேக் சாப்பிட வா மா" என அழைத்தான். அவளும் வந்து உணவு மேசையின் முன் அமர்ந்து ராயின் செய்த உணவை பார்த்தாள், "அப்பா பான் கேக் ஆஹ்.... எனக்கு இப்போதெல்லாம் பான் கேக் சாப்பிடவே பிடிப்பதில்லை... எனக்கு வேண்டாம்." என்றாள்.


ராயின் "சரி நாளை வேறு உணவு செய்து தருகிறேன் இன்று இதை சாப்பிடு பம்கின்." என்றான்.


அவளும் முகத்தை சுளித்து கொண்டு "சரி" என உன்ன ஆரம்பித்தாள். உணவு உண்டு முடிப்பதற்கும் அவள் பள்ளி பேருந்து வந்து ஹார்ன் அடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.


உடனே பள்ளி பையை எடுத்து கொண்டு பேருந்தை நோக்கி ஓடினாள். அப்போது ராயின் "பம்கின்" என அழைத்தான் .


அவளும் எதையோ மறந்ததை போல் தலையில் அடித்து கொண்டு, பேருந்து சாரதியிடம் ஒரு நிமிடம் என கை காட்டி விட்டு மறுபடியும் அவள் தந்தை நோக்கி ஓடினாள் பெண். அவனை இருக அனைத்து அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து "பை ப்பா" என கூறி விட்டு மீண்டும் பேருந்தை நோக்கி ஓடினாள்.


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் அவள் தந்தைக்கு இன்னொரு முறை கை ஆட்டி “டாட்டா” காட்டி விட்டு பக்கத்தில் இருக்கும் பெண்ணுடன் பேச ஆரம்பித்து விட்டாள். பேருந்தும் புறப்பட்டு சென்று விட்டது. பேருந்து சென்ற திசையை சிறிது நேரம் பார்த்து விட்டு, ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டு வீட்டினுள் சென்றான். அதன் பிறகு இவன் தயாராகி இவன் வேலை செய்யும் இடத்திற்கு சென்றான்.
 
Top