எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உள்ளத்தில் உறைந்திடவா கண்ணாளனே -1

kani suresh

Moderator
அத்தியாயம் -1

ஒரு புறம் ஸ்பீக்கரில் பாட்டு காதைக் கிழிக்க, இன்னொரு புறம் ஒரு இளம் வயதுச் சிட்டு, தனது காந்தக் குரலால் வந்திருந்தவர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தது.


அந்தத் தனியார் பள்ளி வளாகமே இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டுக் களைகட்டி இருந்தது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அந்த எஸ்ஆர்எம் பள்ளியில் இன்று நடனப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி எனப் பல வகையான போட்டிகள் வைத்திருக்க, குழந்தைகள் துள்ளிக் குதித்துக் கொண்டும், ஆர்ப்பாட்டத்துடனும், ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்வதற்கும், தனது நண்பர்கள் கலந்து கொள்வதைப் பார்ப்பதற்கும் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மேக்கப் செய்து கொண்டு இருந்த ரூமில், ஒரு சிறுவயது இளம்சிட்டு, தனது பாட்டி பத்மாவிடம் அழுது கொண்டிருந்தது.

“அப்பா வராமல் நான் கிளம்ப மாட்டேன் பாட்டி, அப்பா எங்க? அப்பா தானே என்னை ரெடி பண்றதா சொன்னாரு. இப்போ, அப்பா இல்லாம நான் கிளம்ப மாட்டேன்.” என்று அழுது கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட அது 10 நிமிடங்களுக்கு மேலாக, இதே வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருக்க, அருகில் இருந்த கண்மணியோ, அந்தக் குழந்தையின் அருகில் வந்து குழந்தையைக் கொஞ்சி விட்டு, “உன்னுடைய பெயர் என்னடா குட்டிமா?” என்று கேட்க,

அது லேசாகக் கண்கள் கலங்க, “ராகினி” என்றது.

"ராகினிச் செல்லத்துக்கு என்ன? ஏன் கிளம்பாம அழுதுட்டு இருக்காங்க?” என்று தாடையைப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டே கண்மணி கேட்க,

“இல்ல ஆண்ட்டி, அப்பா தான் எனக்கு மேக்கப் பண்ணி விடுறதா சொல்லி இருந்தார்…”

“சரிடா தங்கம், அதுக்கு என்னமா?”

“அப்பா இப்போ வரல, இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட பேச்சுப்போட்டி ஆரம்பிச்சுடும். டான்சிலும் கலந்து இருக்கேன். அப்பா தான் வந்து எனக்கு மேக்கப் பண்ணிவிட்டு, இன்னொரு டைம் பேச்சுப் போட்டியில் பேசுவதற்குச் சொல்லித் தரேன்னு சொன்னாரு."

"ஏன் பாப்பா, பிரிப்பேர் பண்ணிட்டு வரலையா?” என்று குழந்தையுடன் குழந்தையாகவே ஐக்கியமாகிக் கொஞ்சலுடனே கேட்க,

“அதெல்லாம் நான் பிரிப்பேர் ஆயிட்டேன் ஆன்ட்டி, அப்பா எனக்கு நல்லா சொல்லிக் கொடுத்துட்டாரு. டான்ஸ் ஆடவும் அப்பா தான் கத்துக் கொடுத்தாரு. அப்பா வரேன்னு சொல்லிட்டு இன்னும் வரல. இப்போ கேட்டா, பாட்டி அப்பா முக்கியமான வேலையா போயிருக்காரு, வரமாட்டாரு என்று சொல்றாங்க, எனக்குக் கஷ்டமா இருக்காதா?

"அப்பா இல்லாம நான் எதுலயும் கலந்துக்க மாட்டேன். எனக்கு எல்லாமே எங்க அப்பா தான்… எனக்கு எங்க அப்பா வேணும்.” என்று திரும்பவும் அழுகையுடனே ராகினி சொல்லிக்கொண்டு இருக்க, கண்மணி நிமிர்ந்து ராகினியின் பாட்டி பத்மாவைப் பார்க்க,

பத்மா கண்கள் கலங்கக் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.

“என்ன ஆச்சுமா?” என்று பத்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கண்மணி கேட்க,

“என் பையன் வரமாட்டான் மா, முக்கியமான வேலையா போயிருக்கான்…”

"ஏன் ம்மா, குழந்தையை விட அவருக்கு அந்த வேலை முக்கியமா?"

“இல்லமா, அவனுக்கு அவனோட உலகமே அவன் பொண்ணு ராகினி தான். அவன் வராமலா? அவன் ஸ்கூலுக்குக் கிளம்பும்போது தான், அவனுக்கு முக்கியமான மீட்டிங் வந்துருச்சு. அதனாலதான், அதைத் தவிர்க்க முடியல.

எனக்கு போன் பண்ணிச் சொல்லிட்டான். அதையும் நான் பாப்பாகிட்டச் சொல்லிட்டேன். ஆனா அவ சமத்தா கேட்டுப்பா… அவனும் இவளும் ஆசைப்பட்ட மாதிரியும், அவன் சொல்லிக் கொடுத்த மாதிரியும் சொல்லிடுவானு நினைச்சேன்…

என் மகன் சொல்லி இருந்தான். அப்பா வந்துருவாரு, நீ கிளம்பி இரு. நீ பேச ஆரம்பிக்கும் போது அப்பா வந்து நிப்பேன் தங்கம்… அப்படின்னு சொல்லி தான் சொல்லச் சொன்னான். நான் தான் குழந்தை எங்கே, லாஸ்ட் வரைக்கும் அப்பா இல்லை என்று வருத்தப்படுமேனு அவன் வர மாட்டான் என்ற உண்மையைச் சொல்லிட்டேன்.” என்றார்.

“சரிமா விடுங்க, அவங்க அம்மா எங்க?” என்றாள் கண்மணி.

“அவங்க அம்மா…” என்று பத்மா வாய் எடுக்கும் பொழுது,

“பேச்சுப்போட்டி ஆரம்பம் ஆகிறது. யுகேஜி ஏ செக்சன் ராகினி வினோத் மேடைக்கு வரவும்” என்று அழைக்க,

குழந்தை, “என்னோட பேரு வந்துடுச்சு பாட்டி, இன்னும் அப்பாவைக் காணோம்.” என்று புலம்ப,

குழந்தையை வேகமாக அலங்கரித்த கண்மணி, தன் கையோடு மேடைக்கு அழைத்துச் சென்றாள்.

குழந்தை மேடைக்குச் செல்வதற்கு முன்பே, 5 முறை குழந்தை பேரைச் சொல்லி இருக்க, “அடுத்ததாக ராகினி பேசச் செய்வாள்” என்று தனது அண்ணன் மகன் கவினிடம், டீச்சரிடம் சொல்லச் சொல்லிக் கண்மணி சொல்லி அனுப்பி இருக்க, அதன்படி கவினும் சென்று அங்கு மைக்கில் பேசும் ஆசிரியரிடம் சொல்லி இருந்தான்.

ஆகையால், வேறு ஒரு மாணவன் முதலாவதாகப் பேசி முடிக்க, இரண்டாவதாக ராகினியைப் பேச அலங்கரித்துத் தன் கையோடு அணைத்துக் கொண்டு, மேடைக்கு அழைத்துச் சென்றாள் கண்மணி.

ராகினி மேடைக்குச் சென்ற பிறகும், பல முறை வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, கீழே முட்டி போட்டு உட்கார்ந்து, குனிந்து ராகினியின் நெற்றியில் இதழ் பதித்த கண்மணி, “அப்பா வருவாரு டா தங்கம்… இவ்வளவையும் உனக்காகப் பண்ண அப்பாவுக்கு, உனக்காக வந்து இங்க நிக்கத் தெரியாதா? ஏதோ முக்கியமான வேலைன்றதால தான வரல… அதை நீயும் புரிஞ்சுக்கோ...

அது உன் அப்பாவுக்கும் கஷ்டமா தான இருக்கும், ஆனா இப்போ நீ பேசாம விட்டனா அப்பாவுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும், இல்லையா? அப்பாவுக்கு அந்தக் கஷ்டத்தைத் தர நினைக்கிறியா? உனக்கு உங்க அப்பானா ரொம்பப் புடிக்கும் தானே” என்று கேட்க,

குழந்தை அழுகையுடனே ஆமாம் என்பது போலத் தலையாட்ட,

“அழக்கூடாது தங்கம்… நீங்க நல்லாப் பேசினீங்கன்னா அப்பாவுக்கும் சந்தோஷம், உங்களுக்கும் சந்தோஷம். அப்பா சொல்லிக் கொடுத்ததுக்கு அப்பாவுக்கும் பெருமை தானே” என்று சொல்ல,

"ஆன்ட்டி, நான் பேசறதை வீடியோ எடுத்துத் தரீங்களா?” என்று கேட்டாள் ராகினி.

“சரிடா தங்கம், ஆன்ட்டி வீடியோ எடுத்துத் தரேன். நீங்க நல்லாப் பேசினீங்கன்னா, ஆன்ட்டி கூட உனக்குச் சாக்லேட் வாங்கித் தருவேன்.” என்று நெற்றியில் முட்டிவிட்டு எழுந்து குழந்தையின் தலையைக் கோதி விட்டு, “சரி டா தங்கம், நல்லாப் பேசுங்க” என்று சொல்லிவிட்டுக் கீ
ழே இறங்கி குழந்தையின் பார்வையில் படும்படி கண்மணி நின்று கொண்டாள்.
 
Top