எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 3

kani suresh

Moderator
அத்தியாயம் 3

கண்மணி காலையில் 8 மணி போல் தான் எழுந்தாள். விடிய விடியத் தூக்கம் வராமல், ராகினி நினைவில் புரண்டு புரண்டு படுத்தவள், விடியலில் தூங்கி இருந்தாள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதே கண் எரிச்சல் ஏற்பட, கண்கள் சிவந்து இருந்தது. கண்களை அழுந்தத் தேய்த்தவள் நேரத்தைப் பார்த்தாள். மணி எட்டாக, அடித்துப் பிடித்து எழுந்து வெளியில் வந்தாள்.

அவள் வெளியில் வரும்போது அவளுடைய அண்ணன், அப்பா இருவரும் ஹாலில் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு, நாட்டு நடப்புப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அம்மாவும், அண்ணியும் சமையல் அறையில் இருக்க, "குட் மார்னிங் பா, குட் மார்னிங் அண்ணா" என்று சொல்லிக் கொண்டு வந்து அவர்களுடன் உட்கார்ந்தாள்.

"என்னடா, இவ்ளோ நேரமா எழுந்திருக்க?" என்று அப்பா ரகுபதி கேட்க, "இல்லப்பா, கொஞ்சம் தூங்கிட்டேன்" என்றாள்.

"விடிய விடியத் தூங்காமல் இருந்தால், விடிந்துதான் தூங்குற மாதிரி இருக்கும்" என்றான் சங்கர்.

"ஏன்டா, கண்மணி நைட்டுத் தூங்கலையா?" என்று ரகுபதி கேட்டார்.

"உங்கப் பொண்ணு எப்படித் தூங்குவா? யாருன்னே தெரியாத ஒரு பொண்ணப் பத்தி யோசிச்சுகிட்டே இருந்தா, தூக்கம் எப்படி வரும்?" என்று சொல்ல, “நேத்து நடந்ததையே எதுக்கு கண்மணி நினைச்சுட்டு இருக்க?" என்றார் ரகுபதி.

சமையலறையில் இருந்து பால் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த கமலி, "உங்கள அதப்பத்தி அவகிட்டக் கேட்க வேண்டாம் என்று சொன்னேன்.” என்று கணவனைப் பார்த்து முறைத்து விட்டுக் கண்மணி கையில் பாலைக் கொடுக்க,

"தேங்க்ஸ் அண்ணி" என்று வாங்கிக் குடித்துவிட்டு, "கவின் எங்க அண்ணா?" என்றாள்.

"நேத்தி நீயும், அவனும் போட்ட ஆட்டத்துல நைட் ஃபுல்லா கால் வலிக்குதுன்னு புலம்பிட்டு இருந்தான். இன்னும் எழுந்திருக்கவே இல்லை, தூங்கிட்டு தான் இருக்கான்" என்று சங்கர் சொல்லும் போதே கவின் கண்களைத் தேய்த்துக் கொண்டே வெளியில் வந்தவன்,

"ஹாப்பி மார்னிங் அத்தை" என்று கண்மணியின் மடியில் வந்து உட்கார, "டேய், நீ அவளை விட்டு நகரவே மாட்டியா?" என்று தன் மகனின் தலையைக் கோதி விட்டு, “காபி எடுத்துட்டு வரட்டா?” என்று கமலி கேட்டாள்.

“மா, எனக்கு பூஸ்ட் தான் வேணும்."

"டேய், இருக்க வேலையில் உனக்கு இப்ப பூஸ்ட் போட்டு ஆத்திகிட்டு இருப்பாங்களா?"

"அத்தை, நீ எடுத்துட்டு வா" என்றான்.

"டேய், அவளே இப்பதான் எந்திரிச்சா" என்று சொல்லும்போதே, "விடுங்க அண்ணி" என்று தான் குடித்த பால் கிளாசை எடுத்துக் கொண்டு சென்று கிச்சன் சிங்கில் போட்டவள், கவினுக்கு பூஸ்ட் போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவனுக்குப் புகட்டி விட்டுச் சிரித்தாள்.

"சரி சரி, ரெண்டு பேரும் வேலைக்கும், ஸ்கூலுக்கும் கிளம்புற வழியப் பாருங்க" என்று கமலி சொன்னவுடன், “கவிக்குட்டி வாங்க, நம்ப போய் கிளம்பலாம்.” என்று தனது அண்ணன் மகனைக் கொஞ்சித் தூக்கிக்கொண்டு தன்னுடைய ரூமுக்குச் சென்றாள். போகும் கண்மணியையே பெற்றவர்கள் கவலையாகப் பார்த்திருக்க, தனது அத்தையின் தோளில் கை வைத்த கமலி, "சீக்கிரம் சரியாகும், அவளுக்கான வாழ்க்கை சீக்கிரம் வரும்.” என,

"அது தான் எப்பன்னு தெரியல, அது நடந்து மூன்று வருஷம் ஆகுது. ஆனா அதுக்கும், நம்ம கண்மணிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே."

"ஊர்ல இருக்கவங்க தான் ஆயிரம் பேசுறாங்கனா, அந்த நினைப்பு அவ மனசுல பதியிற அளவுக்கு ஆயிடுச்சே. எனக்குக் கல்யாணமே வேண்டாம். அந்தப் பேச்சே எடுக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாளே. ஊர்ல இருக்கவங்க பேசினால் கூட எங்களுக்குக் கவலை இல்லையே கமலி.

இவ இப்படியே இருக்கிறது தானே எங்களுக்கு வருத்தத்தைத் தருது. நீ மட்டும் இல்லன்னா, இந்த வீடு வீடாவே இருக்காது கமலி" என்று தனது மருமகளின் தோளில் வைத்தார்.
"அத்தை, அப்படி எல்லாம் எதுவுமே இல்லை" என்று சொல்ல ரகுபதி எழுந்து நின்றவர், "என்ன கமலி, இப்படிச் சொல்லிட்ட, உன்னால மட்டும்தான் நாங்க இப்போ அதுல இருந்து மீண்டே வந்து இருக்கோம். அப்ப எங்களைத் தேத்துனதும் சரி, கண்மணியை அதிலிருந்து வெளிக்கொண்டு வர உதவியதும் சரி, நீ மட்டும் தான்…

அவளை வேலைக்குத் திரும்ப அனுப்பி வச்சதும் சரி, அதுவும் கைக்குழந்தையான கவினை முழுக்க முழுக்க அவ பொறுப்புல விட்டு, அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர வச்சது நீதான். எந்த அம்மாவும் தன் குழந்தையை முழுக்க முழுக்க தன்னுடைய சொந்த நாத்தனாராவாவே இருந்தாலும், அவ கையில ஒப்படைப்பாங்களா? ஆனால் நீ அதை செஞ்சிருக்கமா, உன்ன மாதிரி ஒரு மகாலட்சுமி கிடைக்க நாங்க தான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றார் கண்கள் கலங்க.

"அத்தை, மாமா, காலைலயே எதுக்கு இந்தப் பேச்சு? மறக்கணும்னு நினைக்கிற விஷயத்தை நினைச்சு கூடப் பார்க்கக் கூடாது. அவளை அதிலிருந்து கொண்டு வரணும்னு முடிவு பண்ணி இருக்கோம். ஆனா நீங்களே அப்பப்ப அதை ஞாபகப்படுத்திப் பாக்காதீங்க, எல்லாம் சீக்கிரம் சரியாகும். சரி நேரம் ஆகுது பாருங்க, அவங்க அவங்க வேலைக்குக் கிளம்பலாம்.” என்றாள்.



காந்திமதி தான், “கமலி நீ கிளம்பு, நேரம் ஆகுது பாரு" என்றார்.

"அத்தை, தோசை ஊத்தணும்.”

“நான் பாத்துக்குறேன், இவ்ளோ நேரம் எனக்கு ஒத்தாசையா தான இருந்த கிளம்பு."

“அது மட்டும் செஞ்சிட்டா வேலை முடிஞ்சிடும் அத்தை.”

“சரிமா, அத்தை சமைச்சு முடிச்சிட்டு வீட்ல என்ன பண்ணப் போறேன்? வீடு பெருக்குவதில் இருந்து பாத்திரம் கழுவி வைத்துவிட்டுச் செல்லும் வரை, எல்லா வேலையும் நீங்க முடிச்சு வச்சுட்டுப் போயிடுவீங்க தான… அதுக்கப்புறம் பொழுதுக்கும் நானும் மாமாவும் சும்மா தானே உட்கார்ந்து இருக்கோம், கதை பேசிட்டு." என்று சிரித்தார்.

“சரி” என்று விட்டுக் கமலியும் தன்னுடைய ரூமுக்குச் சென்று விட, சங்கரும் பின்னாடியே சென்றான்.

"உங்களை அவகிட்ட இதைப்பத்திப் பேச வேண்டாம் என்று தானே சொன்னேன்" என்று முறைக்க, "ஏதோ ஒரு ஆதங்கத்தில் வந்துடுச்சு கமலி" என்றான்.

"நான் ஆதங்கம் தாங்காம உங்ககிட்ட வந்து சொன்னா, நீங்க அவகிட்டயே திரும்பக் கேளுங்க" என்று முறைத்து விட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

தன் மனைவியைக் கெஞ்சிக் கொஞ்சிச் சமாதானப் படுத்தினான் சங்கர். இங்குக் கண்மணி, கவினைக் குளிக்க வைத்து அவளும் குளித்துவிட்டு இருவரும் கிளம்பி வெளியில் வந்தார்கள்.

அப்போது சங்கரும், கமலியும் கூட வேலைக்குக் கிளம்பி டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். கவின், "அத்தை, எனக்குக் குட்டி தோசை வேணும்" என்று அடம் பிடித்தான்.

"உனக்கு இல்லாததா கவிக்குட்டி" என்று சமையல் அறைக்குச் சென்று அவனைச் சமையல் மேடையில் உட்கார வைத்து விட்டு, அவனுக்குக் குட்டி குட்டியாகத் தோசை ஊற்றி ஊட்டி விட்டாள்.

அவளும் சாப்பிட்டுவிட்டு வெளியில் வர நேரமாகுவதை உணர்ந்து, “சரி வரேன்” என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டுத் தனது அண்ணன் மகனை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்குக் கிளம்பினாள்.

அவனை ஸ்கூலில் விட்டுவிட்டு அப்படியே அவள் வேலைக்குச் செல்வாள். இது அவன் ஸ்கூலுக்குச் செல்ல ஆரம்பித்ததில் இருந்து நடக்கக்கூடியது தான். தினமும் காலை, மாலை இருவேளையும் கண்மணியே கவினை அழைத்துக் கொண்டு சென்று அழைத்துக் கொண்டு வருவாள். அவளுக்கு காலை 9 மணி போல் ஆபிஸ் ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு முடியும்.

கவின் ஸ்கூலுக்கு அருகிலேயே அவளுடைய கம்பெனியும் இருக்க, அவனை ஸ்கூலில் விட்டு விட்டு அப்படியே வேலைக்குச் சென்று விடுவாள். ஆரம்பத்தில் அவளுக்கு நேரம் ஆகும் என்று சொல்லி சங்கர், “நான் அவனை ஸ்கூலில் விட்டு விடுகிறேன்.” என்று சொன்னான்.

அப்போது கமலி தான் ஒரே வார்த்தையாக, “நேரம் ஆனாலும் பரவால்ல. அதுக்கு ஏத்த வேலைக்கு அவ போகட்டும். அவளோட சம்பளத்தை வைத்து நாம் இங்கு வாழப் போறது இல்ல” என்று தனது கணவனை அடக்கி விட்டாள். சங்கரும் சிரித்த முகமாகச் சரி என்று அமைதியாகி விட்டான்.

இங்குக் காலையில் எழுந்தவுடன் வினோத், தனது மகளின் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டவன், தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர, அவன் அன்னை அப்போதுதான் எழுந்து, கிச்சனில் உருட்டிக் கொண்டிருக்க,

"அம்மா, நீங்க அதிகமா எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லி இருக்கேன் தானே. திரும்பத் திரும்ப ஏன் மா இப்படிப் பண்றீங்க?” என்று ஒரு மகனாக ஆதங்கப்பட்டான், அவரது உடல் நலனின் மீது உள்ள அக்கறையில்.

"வீட்டுக்கு ஒரு மருமக வந்தா, நான் ஏண்டா இப்படிக் கஷ்டப்படப் போறேன்.” என்று அவரும் ஆதங்கமாகக் குறைப்பட்டுக் கொண்டார்.

"காலையிலேயே உங்க புலம்பல ஆரம்பிக்காதீங்க. உங்களுக்குக் கஷ்டமா இருந்தா சொல்லுங்க, வேலைக்கு ஆள் வைக்கிறேன்னு சொன்னேன். நீங்க தான் நம்ம செய்யற மாதிரி வராதுன்னு சொன்னீங்க. அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது, சரியா?" என்று சிடுசிடுத்து விட்டுச் சமையலில் இறங்கி இருந்தான்.

பத்மாவிற்கு ஆதங்கமாக இருந்தாலும், இப்போது இந்தப் பேச்சை எடுக்க விரும்பாமல், 'இவனுக்கு எப்போது தான் மனம் மாறும்?' என்று மனதிற்குள் எண்ணிப் புலம்பினார்.

பத்மா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "என்னைப் பார்க்கிறதை விட்டுட்டுப் போயி, உங்க பேத்தியை எழுப்புங்க. இல்ல வேற ஏதாச்சும் வேலை இருந்தா போய் பாருங்க. இங்க நான் பார்த்துக்கிறேன்." என்றான்.

பத்மாவை அனுப்பி வைத்துவிட்டு, வினோத் சமையல் அனைத்தையும் முழுவதாக முடித்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியில் வர, அப்போதுதான் எழுந்து வெளியில் வந்தாள் ராகினி.

"ராகிமா, பால் குடிக்கிறீங்களா?" என்று கொஞ்சித் தனது மகளுக்குப் பால் ஆத்திக் கொடுக்க,

"ஐ லவ் யூ அப்பா" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு,

"பிரஷ் பண்ணிட்டுப் பால் குடிக்கிறேன். உங்க ராகிமா இன்னும் பிரஷ் பண்ணல" என்று சிரித்தாள்.

"சரி போங்க, பிரஷ் பண்ணிட்டு வாங்க" என்று குழந்தையை அனுப்பி வைத்தான்.

அவள் பிரஷ் செய்துவிட்டு வந்தவுடன் பால் புகட்டிவிட்டான். சிறிது நேரம் குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு, அவளைக் குளிக்க வைத்துத் தானும் குளித்துவிட்டுக் கிளம்பி இருவரும் அவர்களது ரூமில் இருந்து வெளியில் வந்தார்கள்.

பத்மா டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்திருந்தார். மூவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டார்கள்.

"சரிமா, மாத்திரை ஞாபகமா போடு, மதியம் நேரத்துக்குச் சாப்பிடுங்க. நீங்க சாப்டீங்களா இல்லையான்னு நான் போன் பண்ணுவேன்" என்று பத்மாவிடம் சொல்லிவிட்டுத் தன் மகளுடன் ஸ்கூலுக்குக் கிளம்பினான்.

அதுவரை அமைதியாக இருந்த ராகினி ஸ்கூலுக்குப் போகும் வழியில் திரும்பவும் கண்மணி பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்.

"அந்தக் கண்மணி ஆன்ட்டி வருவாங்களான்னு தெரியல, வந்தா நல்லா இருக்கும்பா. தினமும் பார்த்தா சூப்பரா இருக்கும். நான் அவங்களப் பார்த்தேன்னா உங்களுக்குக் காமிக்கிறேன். அவங்களை உங்களுக்கு இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறேன்" என்று சொன்னாள்.

தன் மகளின் பேச்சில் எரிச்சல் உண்டானாலும், அதை அவளிடம் காட்டாமல் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு இருந்தான். மகளைக் காலையிலேயே திட்டக்கூடாது என்று எண்ணி அமைதியானான்.

அவளை இதுவரைக்கும் திட்டியும் பழக்கம் இல்லாதவன். தவறு செய்தாலும் பாசமாகச் சொல்லிப் புரிய வைத்தவனுக்கு, கண்மணி பற்றிய பேச்சு எடுக்க வேண்டாம் என்று பொறுமையாகச் சொல்லும் அளவிற்கு, அவனுக்குப் பொறுமை தான் இல்லை.

அவன் அமைதியாக இருக்க ராகினி திரும்பவும் ஆரம்பிக்க, "ராகிமா, அப்பா இன்னைக்குச் சொல்றதுதான். அந்த ஆண்டியைப் பத்தி இனிமே அடிக்கடி பேச வேண்டாம். அவங்கள நேத்து பார்த்த அதோட முடிஞ்சிடுச்சு. விட்றணும். சரியா? திரும்பத் திரும்ப அந்த ஆன்ட்டி பத்திப் பேசக்கூடாது. பார்த்தாலும் பேச வேண்டாம்.” என்று ராகினியிடம் சொல்லிக் கொண்டே அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

ராகினி தன் அப்பாவைப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஸ்கூலும் வந்து விட, "நீங்க ஸ்கூலுக்குப் போங்க, நம்ம நைட் பேசலாம்" என்று விட்டுக் கீழே இறங்கித் தன் மகளை அவளுடைய கிளாஸ் ரூமில் விட்டுவிட்டு ஆபீஸ் நோக்கிக் கிளம்பினான்.

ராகினியும் வினோத்தும் வருவதற்கு முன்பாகவே கண்மணி, கவினைக் கொண்டு வந்து விட்டவள், "சரிடா தங்கம், பார்த்துப் போ" என்று கண்மணி மண்டி போட்டுக் கீழே உட்கார்ந்து, அவனைத் தலையைக் கலைத்துவிட்டு நெற்றியில் முத்தமிட, "அத்த, நானு நானு…" என்றான். பிறகு அவளும் கன்னத்தைக் காண்பிக்க அவன் முத்தமிட்டுச் சிரித்தான்.

“சரிடா, பாய்” என்று விட்டு நகர, நகர முடியாமல் ராகினியின் நினைவு வந்து அவளைக் குடையச் சுற்றித் தன் கண்களைச் சுழல விட்டாள். "அத்தை, நேரம் ஆகுது, என்ன நின்னுட்டு இருக்க" என்று கேட்டான்.

"இல்லடா, அந்தப் பொண்ணு ராகினி…" என்றாள்.

“அவ அவங்க அப்பா கூட வருவா… இப்ப வரமாட்டா, இன்னும் கொஞ்சம் லேட் ஆகும். இருந்து பார்த்துட்டுப் போறியா?" என்று கேட்டான்.

"இல்லடா, எனக்கு நேரம் ஆகுது" என்று கை கடிகாரத்தைப் பார்த்தவள்,

"பாய்" என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் ஒரு முறை பள்ளி வளாகத்தைச் சுற்றித் தன் கண்ணைச் சுழல விட்டவள், "சரிடா, பார்த்துப் போ" என்று கவினிடம் சொல்லிவிட்டுத் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

தன்னையும் மீறிக் கண்மணியின் மனது ராகினி பற்றியும், நேற்றைய அவளது கண்ணீரும் மனதைக் குடைய, ராகினி பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்த கண்மணி, தன் வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.

ராகினிக்கும் கண்மணியின் நினைவுகளும், அவளுடைய செயல்களும் மனதிற்கு இதம் தர அதை எண்ணிச் சந்தோஷத்தில் தன் தந்தையிடம் பரிமாற, அவர் ஒரே வார்த்தையாகக் கண்மணி பற்றி நினைக்காதே, பார்த்தாலும் பேச வேண்டாம்.” என்று சொல்லவும், லேசான வருத்தத்துடன் தன்னுடைய கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தாள் ராகினி.
 
Top