காளி மகமாயி கருமாரி அம்மா.." என்ற கருமாரியம்மனின் பாடல் அந்தக் கோவிலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அம்மனின் அலங்காரத்தை கண்குளிர பார்த்துவிட்டு அம்மனிடம் தனது வேண்டுதலையும் வைத்துவிட்டு கூட்டத்தில் இருந்து சற்று நகர்ந்து கோவில் பிரகாரத்தில் வந்து அமர்ந்துவிட்டார் விசாலாட்சி. பின்பு கோவிலில் கொடுத்த பூவை தலையில் சூடிவிட்டு தன் மகனிற்கு அழைத்தார்.
இரு அழைப்புகளுக்குப் பிறகே கைபேசியை எடுத்தான் கார்த்திகேயன். திரையைப் பார்த்து அழைப்பினை ஏற்றவன் மல்லாக்கப் படுத்துக்கொண்டே, "சொல்லுங்க ம்மா..?" என்றான் தூக்கம் கலைந்த குரலில்.
விசாலாட்சி கனிவு நிறைந்த குரலில், "தூங்கிட்டு இருந்தியா கார்த்தி? எழுப்பி விட்டேன்னா?" என்க,
தாயின் கனிவான குரலைக் கேட்டுக்கொண்டே காதில் இருந்த கைபேசியை ஒரு நொடி விலக்கி நேரத்தைப் பார்த்தான். அது ஏழு முப்பது எனக் காட்ட, "மப்ச்.. நைட் ஒரு ஒர்க் இருந்தது ம்மா. முடிச்சிட்டு படுக்கவே இரண்டாகிடுச்சி" என படுக்கையில் இருந்து எழுந்து சென்று பால்கனியை அடைந்தவன், "நீங்க என்னமா? இவ்வளவு சீக்கிரமா கூப்பிட்டிருக்கீங்க?" கழுத்தை நெட்டி முறித்துக்கொண்டே கேட்டான்.
"எவ்வளவு வேலை இருந்தாலும் நேரத்துக்கு தூங்கப் பாரு கார்த்தி!" சிறு கட்டளையுடன் சொல்லியவர், "இன்னைக்கு என்ன நாள்னு மறந்துட்டியா நீ?" கோவிலில் இருப்பதால் கோபத்தை மறைத்துக் கேட்டார் விசாலாட்சி.
மறுபடியும் கைபேசியின் உதவியுடன் அந்த நாளின் தேதியைப் பார்த்தவன், 'இப்ப இந்த நாள் ரொம்ப முக்கியம்..' என்பதை மனதில் மட்டுமே நினைத்துக் கொண்டான். பிறகென்ன? அதனை அப்படியே விசாலாட்சியிடம் கூறிவிட்டு வாங்கி கட்டிக்கொள்ள அவன் தயாரில்லையே!
தன் மகன் எதுவும் கூறாதிருந்ததால், "லைன்ல இருக்கியா கார்த்தி? அமைதியாகிட்டியே?" என விசாலாட்சி சந்தேகத்துடன் வினவ,
விடிவெள்ளியாய் வானத்தில் உதிர்த்து மெல்ல மேலே வந்துக் கொண்டிருந்த சூரியனையே பார்த்துக்கொண்டு, "ம்ம் இருக்கேன் ம்மா. சொல்லுங்க?" என்று தலையைக் கோதியவன் அழுத்துக் கொண்டான்.
"இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா! அடுத்த பிறந்தநாளுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆகிடணும்" என்று மகனை மனமார வாழ்த்தியது அந்தத் தாயுள்ளம்.
முதலில் கூறியதை மட்டும் எடுத்துக்கொண்டு, "தேங்க்ஸ் ம்மா" என்றவன் மற்றதை விட்டுவிட்டான்.
விசாலாட்சிக்கு அதுவே பெரியதாகத் தோன்ற, "சரிப்பா உனக்கு வேலைக்கு நேரமாகும் நீ கிளம்பு. முடிந்தால் இந்தவாரம் ஊருக்கு வர பாருப்பா" என்று அழைப்பைத் துண்டித்தவர் தன் மகனிற்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என கருணை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த கருமாரியம்மனிடம் மனதால் மீண்டுமொருமுறை வேண்டிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினார்.
திருமணம் என்பது கார்த்திக்கிற்கு வெப்பங்காயாகத்தான் கசந்தது. திருமணம் என்ற பெயரில் வாழ்வில் ஒருமுறைக்கு இருமுறை பட்டதே போதும் என்றுமளவிற்கு அவன் வந்துவிட்டான்.
அவனைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது அவன் வாழ்வில் முற்றுப்புள்ளி வைத்து முடிக்கப்பட்ட ஓர் அத்தியாயம்.
ஆனால் அந்த முற்றுப்புள்ளியை தொடர்புள்ளியாய் மாற்றும் ஆற்றலையுடைய புயல் ஒன்று சீக்கிரமே அவனை மையம் கொள்ள காத்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை.
நேற்றிரவு செய்த வேலையின் விளைவால் தாமதமாக எழுந்தவன் இரவுடையிலேயே பல்லை துலக்கிவிட்டு காப்பியுடன் மீண்டும் பால்கனிக்கு வந்தான்.
அவன் வசித்துக் கொண்டிருந்த ஐந்தாவது மாடியில் இருந்து பார்த்தாலே அந்த அபார்ட்மெண்ட்டின் வளாகம் முழுவதும் தெரியும்.
அப்பாசாமி அபார்ட்மெண்ட், சென்னையைத் தாண்டிய கேளம்பாக்கத்தில் உயர்ந்து நின்றுக் கொண்டிருந்தது. அது 'ஏ, பி, சி, டி' என நான்கு ப்ளாக்குகள் கொண்ட அபார்ட்மெண்ட். ஒரு ஒரு ப்ளாக்கிற்கும் பத்து மாடிகள் இருக்கிறது. ஒரு ஒரு மாடியிலும் மூன்று வீடுகள் இருக்கிறது. இதில் கார்த்தி வசித்துக் கொண்டிருப்பது பி ப்ளாக் ஐந்தாம் மாடி.
கார்த்தி காப்பியை அருந்திக்கொண்டே பால்கனி வழியாக பாடசாலைக்குச் செல்லும் சின்னஞ்சிறு சிட்டுக்களை முகத்தில் தோன்றிய மென்புன்னகையோடு பார்த்தான். அதில் வார இறுதியில் இவனுடன் கிரிக்கெட், இறகு பந்து விடையாட வரும் குழந்தைகளும் அடக்கம்.
இவன் பார்ப்பதைப் பார்த்த அந்த குழந்தைகளும்,
"பாய் கார்த்தி அங்கிள்"
"பாய் கார்த்திண்ணா" என உற்சாகமாகக் கத்திக் கொண்டே ஐந்தாவது மாடியைப் பார்த்து கையசைத்துச் சென்றனர்.
காப்பியை அருந்தியவன் குளித்துவிட்டு பாக்கெட் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டான். பின்பு மதிய உணவை ஆபீஸில் பார்த்துக்கொள்ளலாம் என தனது லேப்டாப் பையை தோளில் மாட்டிக்கொண்டவன் காரின் சாவியை வலக்கையின் ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டே கதவினை பூட்டிவிட்டு மின்தூக்கியை நோக்கி தன் நீண்ட கால்களால் எட்டு வைத்தான்.
அந்த ப்ளாக்கில் மூன்று மின்தூக்கிகள் இயங்கிக் கொண்டிருக்கும். அதில் இரண்டு நேற்றே பழுதடைத்துவிட்டன.
கார்த்திக் பட்டனை அழுத்தி பத்து நிமிடமாகியும் மின்தூக்கி வராததால், 'ஏற்கனவே நேத்துல இருந்து ரெண்டு லிப்ட் ரிப்பேர்! இதுல இதுவும் ரிப்பேர் ஆகிடுச்சா..?' என்ற கடுப்புடன் படிகளின் வழியே இறங்கினான்.
இறங்கும் பொழுது அனைத்துத் தளங்களிலும் ஆட்கள் மின்தூக்கிக்காகக் காத்திருப்பதைப் பார்த்தவன் செக்யூரிட்டியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
தரைத்தளத்தை அடைந்த கார்த்திக் அங்கு மின்தூக்கியை இருவர் நிறுத்தி வைத்திருந்ததை பார்த்து அதிர்த்துவிட்டான்.
உடனே அவர்களிடம் சென்றவன், "யார் நீங்க? எதுக்கு லிஃப்டை ஹோல்ட் பண்ணிருக்கீங்க?" காலையிலே மூண்ட எரிச்சலில் சற்று காரமாகவே கேள்வியை கேட்டான்.
அந்த கேள்விக்கு திரும்பி கார்த்திக்கை பார்த்த கெளதம், "ஹலோ.. ஐம் கெளதம்!" என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், "இங்க தான் நான்காவது மாடிக்கு குடி வந்திருக்கோம்" என்றான் கூடுதல் தகவலாக.
அங்கு சுற்றி பார்த்தாலே தெரிந்தது அனைத்து பொருட்களையும் மேலே ஏற்றுவதற்காகவே மின்தூக்கியை நிறுத்தி வைத்திருக்கின்றனர் என்பது.
"இப்படி லிஃப்டை பிடிச்சிட்டு இருந்தீங்கன்னா? ஸ்கூல், காலேஜ், ஆபிஸ் போறவங்க எப்படி கிளம்புவாங்க..?" கொஞ்சம் அழுத்தத்துடனே கௌதமை பார்த்து வினவினான். நீல நிற பார்மல் சட்டையும் கருப்புநிற கால்சராயும் அணிந்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவனை பார்த்தாலே தெரிந்தது வேர்க்க விறுவிறுக்க படிகளில் இறங்கி வந்திருக்கிறான் என.
தங்களை அதட்டியவனை பார்த்த கெளதம் மனத்திற்குள்ளே அருகில் நின்றிருந்த தன் அன்னை தேவிகாவை அர்ச்சிக்கத் தொடங்கினான்.
"பால் தான் காச்சிட்டோமே! சமானுங்களை அப்புறமா எடுத்துக்கலாம் அம்மா" என்ற கௌதமை, "இன்னைக்கே எடுத்துட்டோம்ன்னா? சனி ஞாயிறுல அடுக்கி வெச்சிடலாம் கண்ணா. இல்லனா உன்னோட தங்கச்சி தான் தனியா கஷ்டப்படணும்" என்று கட்டாயப்படுத்தி சாமானை ஏற்ற வைத்தார் தேவிகா.
தங்களால் பிறருக்கு தொல்லையாவதை உணர்ந்த கெளதம், "சாரி சார். இப்பவே எடுத்துடுறோம்" என்று மின்தூக்கியில் இருந்த பொருட்களை வெளியே எடுத்தவன் அதனை மேலே செல்ல அழுத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டான்.
அவர்களை கடந்து சென்ற கார்த்திக் அப்பொழுதுதான் அந்த ப்ளாக்கின் உள்ளே நுழைந்த செக்யூரிட்டியை பார்த்து, "இன்னைக்குள்ள அந்த ரெண்டு லிப்ட்ட ரிப்பேர் பாருங்க அண்ணா.. இல்லனா.. அடுத்த மாசம் நடக்க போற அஸோசியேட் மீட்டிங்க்ல காம்பலைன்ட் பண்ணிடுவேன்" என்று மிரட்டிவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான்.
தொடர்ந்து ஐந்தாறு முறை மேலே கீழே சென்ற மின்தூக்கியில் இருந்து வேலைக்கு செல்லுவோர், வயது முதிர்ந்தோர் என்று வெளிவந்த ஆட்களை பார்த்த கௌதமிற்கு 'இவ்வளவு நேரம் லிஃப்ட்டை விடாமல் வைத்திருந்தோமே!' என குற்றவுணர்வு அதிகரித்தது.
செக்யூரிட்டியின் உதவியுடன் அங்கிருந்த அவர்களின் பொருட்களை பத்திரப்படுத்தி ஓரமாக வைத்த கெளதம் தன் அன்னையைப் பார்த்து, "நீங்க நம்ம பிளாட்க்கு போய் இருங்க ம்மா. நான் போய் காவ்யாவையும் கண்மணியையும் கூட்டிட்டு காலைல சாப்பிட நம்ம எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வரேன்" என சென்றுவிட்டான்.
தேவிகாவிற்கு ஒரு பையன் கெளதம் மற்றும் ஒரு பெண் காவ்யா. கண்மணி, கௌதமின் காதல் மனைவி. ஒரே ஆபீஸில் வேலை பார்த்து காதலித்து இணைந்தவர்கள். காவ்யாவின் வேலை நிமித்தம் அவளுக்காக வாடகைக்கு எடுத்தது தான் நான்காவது மாடியில் உள்ள பிளாட்.
அவர்களின் மாடிக்கு வந்த தேவிகா சாவியை துளைத்து கதவைத் திறக்க முயல, பக்கத்து பிளாட்டில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அவரிடம் வந்த லட்சுமி, "நீங்க தான் புதுசா குடி வந்திருக்கீங்களா?" என்று வாயினால் கேட்டுக்கொண்டே கண்களால் அவரை எடைப்போட முயன்றார்.
தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு தன் மகள் தான் இங்கு தங்க போகிறாள் என்று மற்ற விவரங்களையும் கூறினார். அனைத்தையும் கேட்ட லட்சுமி தலையை ஆட்டிவிட்டு அவரின் வீட்டிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.
தன் வாழ்க்கையின் அனுபவத்தில் இதை மாதிரி ஆட்களை கடந்து வந்த தேவிகா, அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த லட்சுமி பார்வையின் பொருளை அறிந்துக் கொண்டவர் 'இங்க காவ்யா தனியாக சமாளித்துக் கொள்வாளா..?' என்ற யோசனையுடன் உள்ளே சென்றார்.
இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு வீட்டில் தான் காவ்யா முன்பு குடியிருந்தாள். புது வீட்டில் காலையில் பால் காய்ச்சியதும் காற்று பற்றாக்குறையால் ஆறு மாத குழந்தையான தர்ஷினி சிணுங்க அவளுடன் சேர்ந்து நான்கு வயது சித்துவும் நச்சரிக்க தொடங்கினான். எனவே, அவர்களை அழைத்துக்கொண்டு காவ்யாவும் கண்மணியும் பழைய வீட்டிற்கே வந்திருந்தனர்.
அங்கு சென்ற கௌதம் தங்கை, மனைவி மற்றும் குழந்தைகள் இருவர் என அனைவரையும் அழைத்துக்கொண்டு உணவினையும் வாங்கிக்கொண்டு புதுவீட்டிற்கு வந்தான்.
அதனை சாப்பிட்டுவிட்டு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களை வைத்து பழைய வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் இங்கு மாற்றினர். பின் எலெக்ட்ரிசியனை வரவைத்து ஏசி, பேன் என்று மின் சாதனங்கள் அனைத்தையும் பொறுத்திக் கொண்டனர்.
__________
அந்த குளிரூட்டப்பட்ட அறையில் கணினி முன் அமர்ந்திருந்த அனைவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
"ஹே யாராவது போய் கூப்பிடுங்க.." பாலாஜி கூற, "நீங்க தான ஜி டீம் லீடர்! நீங்களே போங்க" புதியதாக பாலாஜியின் டீமில் சேர்ந்த பிரகாஷ் பாலாஜியையே ஊக்கினான்.
அவர்கள் டீமில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் அனைவருக்கும் மெயில் வரும் அதனை வைத்து அனைவரிடமும் பணத்தை சேகரித்து யாருக்கு பிறந்தநாளோ? அவர்களுக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவர்.
அந்த கொண்டாட்டத்தில் அவர்களின் மேனேஜரான கார்த்திகேயனையும் அழைப்பர். ஆனால் வேலையை தவிர அனைவரிடமும் வேறெதுவும் பேச்சு வைத்துக்கொள்ளாத கார்த்திக், அதனை தவிர்த்திவிடுவான்.
இன்று அவனுக்கே பிறந்தநாள் என்றிருக்க அவனை கேக் வெட்ட அழைக்கத்தான் யார் போவது? என்று விவாதித்து கொண்டிருக்கின்றனர்.
இறுதியில் பாலாஜியே போவதாக ஒத்துக்கொண்டு கார்த்திக்கின் அறையின் கதவைத் தட்டினான்.
கீபோர்டில் விரல்கள் தட்டச்சு செய்து கொண்டிருக்க லேப்டாப்பின் திரையையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் உள்ளே வருமாறு பாலாஜிக்கு அனுமதியளித்தான்.
உள்ளே வந்தவன் சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்தைக் கூறிவிட்டு ஆசுவாச மூச்சினை விட்டான்.
அலுவலகத்தைப் பொறுத்தவரை கார்த்திக் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் தான். வேலையில் மிகவும் கவனமாக இருப்பான்.
தவறு செய்தால் சுட்டிக்காட்டத் தயங்கமாட்டான். அதே நேரம் நன்றாக வேலை செய்தால் தட்டிக்கொடுத்து பாராட்டாமல் இருக்கவும் மாட்டான்.
பாலாஜி கூறியதை கேட்டவன் வழக்கம் போல் மறுத்துக் கூறினான். "எல்லாமே தயாராகிவிட்டது கார்த்திக்! எல்லாரும் நீங்க வரணும்னு ரொம்ப எதிர்பாக்குறாங்க. சோ ப்ளீஸ்.." என கெஞ்சவே தொடங்கிவிட்டான்.
அவனின் கெஞ்சலை பொறுக்க முடியாமல், "இன்னொருமுறை என்னை கேட்காமல்.. எனக்காக.. எதுவும் செய்யாதீங்க பாலாஜி!" என்ற கட்டளையுடன் அழுத்திக் கூறிவிட்டு மாலை ஆறுமணிக்கு மேல் வருவதாக ஒத்துக்கொண்டான் கார்த்திக்.
மாலை ஆறுமணி, அவர்களின் அலுவலகத்தின் பார்க்கில் கார்த்திக்கின் டீமில் உள்ள இருபதிற்கு மேற்பட்டோர் கூடியிருந்தனர். கார்த்திக் கேக் வெட்டிவிட்டு அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டான்.
"நீ வேற அனு அவரு வந்ததே பெரிய விஷயம். இதுல ட்ரீட்லாம் சுத்தம்" என அங்கலாய்த்தாள் கார்த்திக்குடன் மூன்று வருடமாக பணிபுரியும் ஸ்வேதா.
"நமக்கு தான் தெரியுமே வேலையை தவிர அவரோட வாயில இருந்து ஒருவார்த்தை வாங்க முடியாதுன்னு.." அவர்கள் இருவருடன் ரம்யாவும் இணைந்துக் கொண்டாள்.
"சரி நாம வீக்கெண்டை என்ஜோய் பண்ணுவோம்" என உற்சாகமாய் கலைந்தது அந்த மூவர் குழு.
இவர்கள் கூறுவதைப் போல் தான் கார்த்திக் வேலை வேலை என ஓடிக்கொண்டே இருப்பான். 'அது வேலை மேல் உள்ள பிடிப்பா? இல்லை அவன் மனதின் தவிப்பா?' என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்! அப்படி ஓடியதால் தான் இருபதிற்கு மேற்பட்டோருக்கு இப்பொழுது மேனேஜராக இருக்கிறான்.
இரண்டு முறை வெளிநாட்டுப் பயணமும் சென்று வந்திருக்கிறான்.
சொந்தமாக நான்கு வருடம் முன்பு வாங்கிய பிளாட். ஒருவருடம் முன் வாங்கிய டோயட்டோ கார் என தன் நிலையை உயர்த்தியுள்ளான்.
இரவு வீடு திரும்பிய கார்த்திக்கைப் பார்த்த செக்யூரிட்டி அனைத்து மின்தூக்கிகளும் வேலை செய்வதாக அறிவித்தான். அவருக்கு சிறு தலையசைப்பை கொடுத்தவன் பட்டனை அழுத்திவிட்டு மின்தூக்கிக்காக காத்திருந்தான்.
கீழே வந்த மின்தூக்கியில் இருந்த கௌதம் கார்த்திக்கை பார்த்து, "ஹலோ சார்" என்றவன் காவ்யாவுடன் மின்தூக்கியில் இருந்து வெளியே வந்தான்.
கௌதமை காலையில் பார்த்தது கார்த்திக்கிற்கு நன்றாகவே நினைவிருக்க, "ஹலோ மிஸ்டர்.." என அவனின் பெயரை யோசித்தான்.
அவனுக்கு சிரமம் கொடுக்காமல், "கௌதம்" என்றவன், "உங்க பேரு என்ன?" என கேட்டு ஸ்நேகமாக புன்னகைத்தான்.
"ஐம் கார்த்திக்!" என மின்தூக்கியின் உள்ளே சென்றான்.
"மீட் மை சிஸ்டர் காவ்யா. இவங்கத்தான் நான்காவது மாடில இருக்க பிளாட்ல இருக்கப்போறது" என அருகில் இருந்த தன் தங்கையையும் அறிமுகப்படுத்தினான்.
"ஹலோ.." என காவ்யாவிடம் சொன்னான் கார்த்திக்.
தன் அண்ணனை முறைத்துக்கொண்டே கார்த்திக்கை பார்த்து சின்னதாக சிரித்தாள் காவ்யா.
"நீங்க எந்த மாடி கார்த்திக்?" கௌதம் வினவ,
"ஐந்தாவது மாடி" என்றவன் அவர்களிடம் சிறு தலையசைப்பை கொடுத்துவிட்டு மின்தூக்கியில் மேலே சென்றான்.
தன் தங்கையின் சிரிப்பை ரசித்துக்கொண்டே, "காலைல இவரை தான் அம்மு மீட் பண்ணேன்" என,
"அப்ப யாருனே தெரியாதவங்க கிட்டயா என்னை அறிமுகப்படுத்தின?" காவ்யா சிடுசிடுத்தாள்.
"அப்படியில்லை அம்மு. இவரை பார்த்தாலே நல்லவிதமா தான் தெரியுது. நீ தனியா வேற இருக்க போகிறல? அதான் யாரோட அறிமுகமாவது இருக்கட்டும்னு உனக்கு இவரை அறிமுகப்படுத்தினேன்" சமாதானமாகக் கூறினான்.
"ஹ்ம்ம். இன்னைக்கு மட்டுமாவது எங்க கூட இங்க இருக்கலாம்ல? அப்.. அப்பாவையும் இங்க வர சொல்லலாம்ல?" கலங்கிவிடுமோ என்ற கண்ணை சிமிட்டி சரி செய்தவள் கேட்க,
"அப்பா தனியா இருப்பாரே அம்மு! நாளைக்கு அப்பாவை கூட்டிட்டு வரேன்" தங்கையின் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே கூறினான்.
"அப்பா வருவாரா அண்ணா?" நம்பிக்கையற்ற விழிகளால் அவனை ஏறிட்டாள்.
"கூட்டிட்டு வர முயற்சி பண்ணுறேன். நீ பார்த்து மேல போ" என தங்கையின் தோளில் ஆறுதலாகத் தட்டிவிட்டு பார்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு சென்றான்.
ராமமூர்த்தி, கௌதம் மற்றும் காவ்யாவின் தந்தை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். தன் பெண் இப்படி தனியாக சென்று வேலைபார்த்து வசிப்பதை சிறிதும் விரும்பாமல் இருப்பதால், இங்கு வருவதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்.
செல்லும் அண்ணனின் காரைப் பார்த்துவிட்டு நீண்ட மூச்சை இழுத்து தன்னை சரிசெய்த காவ்யா அவளது தளத்திற்கு மின்தூக்கியின் மூலம் வந்தாள்.
காவ்யா, இருபத்தியெட்டு வயதுடையவள்; மாநிறத்தில் மெல்லிய உடல்வாகுடன் இருப்பவள்; இடைவரை நீண்டிருந்த கூந்தலை காற்றில் அலைபாய விடாமல் எப்பொழுதும் நெருக்க பின்னிக் கட்டியிருப்பாள். வீட்டிற்குள் நுழைந்து கதவை நன்றாக சாத்திப் பூட்டிவிட்டு வந்தாள்.
ஒரு அறையில் அவளது அண்ணி கண்மணி தர்ஷினியை தூங்கவைத்து கொண்டிருந்தாள்.
மற்றொரு அறையின் கதவைத் திறக்க, "மம்மி..!" என்று கத்திக்கொண்டே எக்கி காவ்யாவின் கழுத்தை கட்டிக்கொண்டான் அவளது புதல்வனான சித்தார்த்.
"ஷ்.." என வாயின்மேல் விரல்வைத்து அவனை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்தவள், அப்படியே அவனை அள்ளிக்கொண்டு கட்டிலில் விட்டுவிட்டு அவனுக்கு கதை கூறி தூங்க வைக்க முயன்றாள்.
பூத்துக் குலுங்கி சோலையாக இருக்க வேண்டிய தன் மகளின் வாழ்வு இப்படி பாதியிலே பட்டை மரமாக இருப்பதைக் கண்ட தேவிகாவின் தாயுள்ளம் அழுகையிலே கரைந்தது.
"அம்மா.. எதையும் யோசிக்காம தூங்க பாருங்க.." என ஆறுதலையும் அதட்டலுடனே கூறியவள் போர்வையை அவர்கள் மூவருக்கும் சேர்த்தே போர்த்திவிட்டுப் படுத்தாள்.