எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 7

kani suresh

Moderator
அத்தியாயம் 7

பத்மா வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் ஆட்டோவை நிறுத்தியவர், தன் போனில் இருக்கும் அட்ரஸை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘இன்று நல்ல நாளாக அமையட்டும், அவர்கள் வீட்டில் சென்று பேசலாம்’ என்று மனதிற்குள் எண்ணிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் கண்மணி வீட்டு அட்ரஸ் சொல்லி அங்கு வண்டியை விடச் சொன்னார்.

அப்பொழுது கண்மணியின் அப்பா அம்மா மட்டும் வீட்டில் இருக்க, "யாராவது வீட்டில் இருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வர,

"வாங்க" என்று வரவேற்ற காந்திமதி, யார் என்று புரியாமல் ஒரு நொடி தயங்கி நின்று கணவனைப் பார்க்க, ரகுபதியும் தெரியாது என்பது போல் தலையாட்டினார்.

காந்திமதி, "உட்காருங்க" என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, "என்னை உங்களுக்குத் தெரியாதுதான், எனக்கு உங்க மக கண்மணியைத் தெரியும்" என்றார்.

“நீங்க…" என்று காந்திமதி கேட்டுவிட, "உங்க பேரன் கவின் படிக்கிற ஸ்கூல்ல தான், என்னுடைய பேத்தி ராகினியும் படிக்கிறா. ரெண்டு பேரும் ஒரே கிளாஸ்தான்" என்றவுடன்,

"ஓ" என்ற காந்திமதி, "குழந்தைகள் தினம் அன்னைக்கு உங்க பேத்தி தானே அழுதானு சொல்லிட்டு…" என்று விட்டுப் பாதியில் நிறுத்தி விட, "ஆமாமா, என்னோட பேத்தி தான். அன்னைக்கு எனக்கு உங்க பொண்ணு தான் ஹெல்ப் பண்ணா…"

"சரிங்கம்மா" என்று விட்டு அமைதியாகி விட்டார் காந்திமதி.

"தப்பா எடுத்துக்காதீங்க, ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக தான் வந்திருக்கேன். இன்னைக்கே பேசலாம், தள்ளிப் போட வேண்டாம் என்று நினைத்து தான் வந்தேன்" என்றார். இருவரும் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருக்க,

"உங்க பையனையும், மருமகளையும் வரச் சொல்ல முடியுமா?"

"எதுக்கு மா" என்றார் கண்மணியின் அப்பா ரகுபதி. "என் பையன் வாழ்க்கையப் பத்திப் பேசணும்" என்றவுடன் ரகுபதி தான், "உங்க பையன் வாழ்க்கையைப் பற்றி எங்களிடம் பேச வேண்டிய அவசியம் என்னமா இருக்கு?" என்று கேட்டார்.

"பேசணும் அண்ணா, உங்ககிட்ட தான் பேசணும். வீட்ல பெரியவங்க உங்ககிட்டப் பேசுற மாதிரி, உங்க பையன், மருமகள்கிட்டப் பேசுறதும் நல்லது என்று தோன்றுகிறது. அதனால் தான்…” என்றார். ரகுபதி காந்திமதியைப் பார்க்க,

காந்திமதி ஃபோன் எடுத்துத் தனது மகனுக்கு அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டு மருமகளுக்கும் சொன்னார். இருவரும் வேறு வேறு இடத்தில் வேலை செய்வதால், அடுத்த அரை மணி நேரத்தில் வந்திருந்தார்கள். முழுவதாக அவர்களுக்கும் விஷயம் என்ன என்று தெரியவில்லை என்றாலும், அடித்துப் பிடித்து இருவரும் வர,

வீட்டிற்குள் யார் என்று தெரியாத ஒரு நபர் இருப்பதைப் பார்த்துவிட்டு, தனது அத்தையின் அருகில் வந்த கமலி அமைதியாக, "யாரு அத்தை இவங்க, நம்ப சொந்தக்காரங்களா? நான் இதுவரை பார்த்தது இல்லையே? எதுக்கு இரண்டு பேத்தையுமே அவசரமா வரச் சொன்னீங்க?" என்று கேட்டாள். சங்கர் அமைதியாக நின்றான்.

"இவங்க அந்தப் பொண்ணு ராகினியோட பாட்டியாம் கமலி" என்றவுடன்,

"வாங்க மா" என்று விட்டு, “சொல்லுங்கம்மா" என்று கமலியே கேட்டாள்.

"இல்லம்மா, ராகினி அப்பாவைப் பற்றி உங்களுக்குப் பெருசாத் தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன். அதனால தான்…”

"சரி மா, நீங்க வந்த விஷயத்தை வெளிப்படையா பேசினா, கொஞ்சம் நல்லா இருக்கும். அத்தைக்கும், மாமாவுக்கும் சுகர், பிபி இருக்கு. நீங்க என்ன பேச வரிங்கன்னு அவங்களுக்கும் புரியல. எங்களுக்கும் புரியல. ஒடச்சிப் பேசினா கொஞ்சம் நல்லா இருக்கும்."

சிரித்த பத்மா, "பரவால்ல மா, இந்த வயசுல உனக்கு இவ்ளோ தெளிவு இருக்கு" என்று விட்டு, "என்னோட மகனுக்கு உங்க வீட்டுப் பொண்ண பொண்ணு கேட்டு வந்திருக்கேன்" என்றார். அவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த காந்திமதி எழுந்து நின்று விட்டார். ரகுபதியும் "என்ன?" என்று கேட்டார்.

"உங்களுக்கு ரெண்டு பையன் இருக்காங்களா?" என்று கமலி யோசனையுடன் கேட்க, கொஞ்சம் திக்கித் திணறிய பத்மா, "இ..இல்லமா, எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன்தான். பேரு வினோத். அவனுக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வயசுல ஒரு குழந்தையும் இருக்கு."

"அவருக்கு தான் எங்க வீட்டுப் பொண்ணைக் கேட்டு வந்து இருக்கீங்களா?" என்று அமைதியாகவே தான் கேட்டாள் கமலி.

"ஆமாம் மா, என்னோட மருமக இல்லம்மா…"

"இல்லனா..."

"இந்த உலகத்திலேயே இல்லம்மா" என்றவுடன் கமலி அமைதியாகத் தனது அத்தை, மாமாவை உட்காரச் சொல்லிவிட்டுத் தனது கணவனையும் அமைதியாக இருக்குமாறு கண்மூடித் திறந்து விட்டு,

"சரி மேலே சொல்லுங்க" என்றாள்.

"நாங்க வீட்ல பார்த்து வச்ச பொண்ணு தான். எனக்குத் தூரத்துச் சொந்தம், தெரிஞ்ச பொண்ணுனு தான் கட்டி வச்சேன். என் மருமக என்னவோ நல்ல பொண்ணு தான். ஆனா அவளுக்கு இந்த உலகத்துல வாழ தான் கொடுத்து வைக்கல. டெலிவரி அப்பவே என் பேத்தியை மட்டும் எங்க கையில ஒப்படைச்சிட்டு அப்படியே இறந்துட்டா" என்றார். கண்களில் கண்ணீர் வழியத் தன் சேலைத் தலைப்பால், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அழுகையுடனே சொன்னார்.

அனைவரும் அமைதியாக தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அதிலிருந்து என்னோட பேத்தியை, நானும் என் மகனும் தான் பார்த்துக்குறோம்."

"சரிம்மா, ஆனா நான் ஒன்னு கேட்கிறேன். எங்க இடத்தில் இருந்து மட்டும் யோசிச்சுப் பாருங்க. இன்னும் எங்க வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகல, வாழ வேண்டிய பொண்ணு. எப்படி மனசு வந்து உங்க பையனுக்கு இரண்டாம் தாரமா பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க? நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் இரண்டாம் தாரம் தானே. ஒரு பொண்ணோட வாழ்ந்து இருக்காரு. வாழ்ந்ததுக்கு சாட்சியா உங்க பேத்தி இருக்கா… நான் கேக்குறது தப்புன்னு மட்டும் நினைக்காதீங்க. பொண்ணப் பெத்தவங்களா, எங்க நிலைமையில இருந்து மட்டும் கொஞ்சம் யோசிங்க" என்று லேசாகக் கண்கள் கலங்கக் கேட்டாள்.

சிரித்த பத்மா, "யோசிக்காமல் வந்து கேட்க மாட்டேன்ம்மா. யோசிச்சிருக்கேன், என் பையனுக்குக் கல்யாணம் ஆகணும்னு நினைச்சு இருக்கேன். இப்பயும் கல்யாணமே வேணாம்னு தான் சொல்லிட்டு இருக்கான் என் பையன். என் பேத்தியை வச்சுக் கூட நான் சம்மதிக்க வைக்க, எவ்வளவோ கேட்டுப் பார்த்து இருக்கேன். ஆனா, என் மகளுக்குச் சாகுற வரைக்கும் அப்பாவா, அம்மாவா ரெண்டுமாவே நான் இருக்கேன் அப்படின்னு அவன் சொல்லிட்டான்.

எத்தனை நாளைக்கு நீயே பார்த்துடுவ அப்படின்னு நான் கேட்டதுக்குக் கூட, இத்தனை வருஷமா பார்த்துகிட்டேன். அவ சின்னப் பிள்ளையா இருக்கும் போதே பார்த்துகிட்டோம். இனிப் பார்த்துக்க முடியாதான்னு என்கிட்ட எதிர் கேள்வி கேட்டான். அவனுக்கு அவன் புள்ள எவ்ளோ முக்கியமோ, அதே அளவுக்கு எனக்கு என் புள்ளையோட வாழ்க்கை முக்கியம் இல்லையா? வாழவேண்டிய வயசுல அவன் வாழ்க்கையவே இழந்து நிற்கிறானே" என்றார்.

"நீங்க கேட்கிற கேள்வி சரிமா, எங்க பக்கம் நான் யோசிங்கன்னு சொன்ன மாதிரி, உங்க பக்கம் இருந்து நானும் யோசிக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க, உங்க பையன் மாதிரி இருக்கற ஒருவரையோ, இல்ல புருஷனை விட்டு இருக்காங்கல்ல விடோ, இந்த மாதிரி நிறையப் பேர் இருக்காங்க. ஆனா அப்படி இருப்பவங்களை எல்லாம் விட்டுட்டு, நீங்க வாழ வேண்டிய எங்க வீட்டுப் பிள்ளையை வந்து கேட்டு இருக்கீங்களே, இரண்டாம் தாரமா?" என்று கேட்டாள் .

காந்திமதி தான் "கமலி" என்றார்.

"அத்தை கொஞ்சம் இருங்க, நான் அவங்க வீடு தேடிப் போயி, ஏன் நீங்க இப்படி இருக்கீங்கன்னு கேட்டிருந்தா தான் தப்பு. அவங்க நம்ம வீட்டு பொண்ணைக் கேட்டு வந்திருக்கிறதால, நம்ம பக்கம் இருக்குறதையும் சொல்றேன். அவங்க பக்கம் இருக்குறதையும் கேட்கிறேன். எனக்கு இது தப்பா படல" என்றவுடன் சிரித்துக் கொண்டே எழுந்து நின்ற பத்மா,

கமலியின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீ கேட்டதுல எதுவுமே தப்பு இல்லம்மா. எல்லாமே நியாயமான கேள்வி தான். நீ நினைச்ச மாதிரி கூட நானும் யோசிச்சு இருக்கேன். ஒரு அம்மாவா என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டேன். அந்த மாதிரிப் பொண்ணைத் தேடவும் செய்தேன். ஆனால் எதுவும் எங்களுக்கு ஏத்தது போல் அமையவில்லை. அதற்கு என் மகனும் ஒத்துக் கொள்ளவில்லை" என்றார்.

"சரி, நீங்க உங்க பேத்தியை அவங்க அம்மா வீட்டுல கொடுத்து இருக்கலாமே மா… உங்க பேத்தியால மட்டும்தான் உங்க பையனுக்கு இரண்டாவது கல்யாணம் தடைப்பட்டுச்சுனா… அப்படியே நீங்க சொல்ல முடியாம முழுங்கறதால தான் கேட்கிறேன், தப்பா எடுத்துக்காதீங்க"

"அந்த மாதிரி எண்ணம் எனக்கும் சரி, அவனுக்கும் சரி, இருந்தது இல்லை. என் மருமக இறந்து, என் பேத்தி பொறந்த உடனே அவளைப் பார்த்துக்கிறேன் என்று சொல்லி என் மருமகளோட தங்கச்சி வந்தா. அவங்க அப்பாவுக்கு மொத தாரத்துல பொறந்த பொண்ணு என் மருமக. இரண்டாம் தாரத்துக்குப் பொறந்தவ அவளோட தங்கச்சி. என் பேத்தியைப் பார்த்துக்கிறேன் என்று சொல்லி வந்திருந்தா. அதுவும் அவங்க என் பேத்தி ராகினியை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு கேட்டாங்க.

என் மகன் தான் என் புள்ளயை என்ன விட்டு நான் யார்கிட்டயும் விட மாட்டேன்னு சொன்னான். அவங்க அப்பா தான், பச்சைக் குழந்தையை வச்சிட்டு என்ன பண்ணுவீங்க? அப்படின்னு சொல்லிட்டு அவங்க புள்ளைய விட்டுட்டுப் போனாங்க. நாங்களும் நம்பிதான் அந்தப் பொண்ண வீட்ல வச்சிருந்தோம். ஆனா, கொலைகாரப் படுபாவி... அவ பண்ண செயல்ல எங்களுக்கு மொத்த வாழ்க்கையும் வெறுத்துப் போச்சு. அவளால தான் என் பேத்தியை யாரை நம்பியும், பக்கத்துல அண்ட விடக் கூடப் பயப்படுறான் என் மகன். என் மகனுக்கு உங்க மக மேல இருக்க கோவமும் அதுதான்" என்று விட்டு அவர் அமைதியாகி விட,

சிரித்த கமலி, "எனக்கு விஷயம் என்னன்னு தெரியாது. ஆனா, எங்க கண்மணி உங்க பேத்தியால ரொம்பவே பாதிச்சி இருக்கா. உங்க பேத்தியோட அழுகையும், பேச்சும் அவள ரொம்பவே பாதிச்சு இருக்கு. அவங்க அம்மா எங்கனு கேட்ட கேள்விக்குக் கூடப் பதில் கிடைக்கல. உங்க பேத்தியோட அம்மா ஃபங்ஷனுக்கு வரலையேன்னு யோசிச்சாளே தவிர, அவங்க இந்த உலகத்திலேயே இல்லை என்ற விஷயம் அவளுக்கு இப்போ வரைக்கும் தெரியாது" என்றவள்,

"சரி மா, நீங்க சொல்லுங்க" என்றாள் அவரிடம்.

"நானும், என் மகனும் என் மருமக இந்த உலகத்தில இல்லை என்ற விஷயத்தை உணரவே, எங்களுக்குக் கிட்டத்தட்ட 20 நாளைக்கு மேல தேவைப்பட்டுச்சு. அந்த நேரத்துல மருமக வீட்டில் இருந்து அவ தங்கச்சி வந்து பார்த்துக்கிறேன்னு சொன்னதாலயும், அதும் குழந்தையை அவங்க கைல ஒப்படைக்க விருப்பம் இல்லாததால் சரின்னு ஒத்துக்கிட்டோம்.

அப்போ அந்தப் படுபாவி என்ன பண்றா, எங்க பேத்தியை எந்த அளவுக்குப் பார்த்துக்குறா, அப்படின்றத நாங்க உணரவே இல்ல. சுத்தி நடக்கறத உணருர அளவுக்கு நானும் சரி, என் மகனும் சரி அப்போ இல்ல.

எங்க உலகமே எங்க பேத்தியா மட்டும் தான் இருந்துச்சு. மருமகளோட தங்கச்சி தான என்று நம்பி அவகிட்டக் குழந்தையை ஒப்படைச்சு இருந்தோம். அதுதான் நாங்க பண்ண பெரிய தப்பு.

ஏதோ அந்தப் படுபாவி செய்யப் போன செயலில் இருந்து அந்தக் கருப்பசாமி தான் எங்களைக் காப்பாத்தி இருக்காரு" என்று அன்றைய நினைவில் இன்று கூட கை கால்கள் உதற பத்மா வாய் குழறச் சொல்ல,

வேகமாக அவரது கையை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் தோளோடு அணைத்துக் கொண்ட கமலி, "ஒன்னும் இல்ல மா" என்று விட்டுத் தன் கணவனைப் பார்க்க, வேகமாக எழுந்த சங்கர் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு அனைவரையும் பார்த்தார்.

அனைவரும் பத்மாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறார் என்று. அன்றைக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டிய ஆவலில்.



 
Top