எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 10

kani suresh

Moderator
கமலி ஒரு முடிவு எடுத்தவளாகத் தன் மகனைக் கண்மணி உடன் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு, காலை 11 மணி போல் தன் கணவனையும் அரை நாள் லீவு எடுக்கச் சொல்லிவிட்டு பத்மா எழுதி வைத்துச் சென்ற போன் நம்பருக்கு போன் செய்தாள்.

போன் எடுத்தவர், "சொல்லுங்க, யாரு?" என்று கேட்க,

"அம்மா நான் கமலி" என்றாள்.

பத்மாவிற்கு ஒன்றும் புரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க, "கண்மணியோட அண்ணி" என்றாள்.

"சொல்லுமா" என்றார் லேசாகச் சந்தோஷத்துடன். "அம்மா உங்ககிட்டக் கொஞ்சம் பேசணுமே" என்று சொல்ல, "நான் வீட்டுக்கு வரட்டா, இல்ல வெளியே எங்கயாவது வரட்டா" என்றார்.

"நீங்க எங்கேயும் வர வேண்டாம். உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க, நான் வீட்டுக்கு வரேன்."

“எதுக்குமா உனக்கு இவ்ளோ அலைச்சல்" என்றார்.

"எனக்கு என்னம்மா இதில் அலைச்சல்" என்றுவிட்டு அவரிடம் வீட்டு அட்ரஸ் வாங்கிக்கொண்டு ஃபோன் வைத்திருந்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் வினோத் வீட்டுக்குச் சென்று இருந்தார்கள்.

பத்மா, சங்கர் கமலி இருவரையும் வரவேற்று உபசரித்து தண்ணீர் கொடுத்தார். வாங்கிக் குடித்துவிட்டு அமைதியாக உட்கார, பத்மா கமலியின் முகத்தையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். சிரித்த கமலி

"நீங்களும் உட்காருங்க மா" என்றாள். பத்மாவும் உட்கார்ந்தார்.

"மா, நீங்க உங்க பையன் லைப்ல நடந்த ஒரு சில விஷயத்தைச் சொன்னீங்க. அதேபோல, நாங்களும் எங்க பக்கம் இருந்து கண்மணி லைப்ல நடந்த ஒரு சில விஷயத்தை உங்ககிட்டச் சொல்லணும்னு நினைக்கிறோம். நீங்க எப்படி எதையும் மறைக்காம, ஒளிவு மறைவு இல்லாம இருக்கணும்னு நினைக்கிறீர்களோ, அதுபோல தான் நானும் நினைக்கிறேன்" என்றாள்.

பத்மாவிற்கு லேசாகக் கண்கள் கலங்கியது. 'தன் மகனுக்குக் கன்மணியைக் கட்டி வைக்க ஒத்துக் கொண்டார்களா?' என்ற ஆசையில் கமலியைப் பார்த்துக் கொண்டிருந்தார்

"ஏற்கனவே, நாங்க கண்மணிக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சோம். அது மணமேடை வரை போச்சு மா" என்று சொல்ல பத்மாவிற்கு அடுத்த நொடி முகம் வாடி விட்டது. அவரது கையில் லேசாக அழுத்தம் கொடுத்த கமலி, "கல்யாண மணமேடை வரை போச்சு. ஆனா, கல்யாணம் நடக்கலமா” என்றாள்.

ஒருவித அதிர்ச்சியுடன் கமலியைப் பார்த்தார். "ஆமாம்" என்று விட்டு லேசாகக் கலங்கிய தன் கண்களைத் துடைத்தவள்,

"வீட்ல தான் பார்த்து கல்யாண ஏற்பாடு பண்ணினோம். கண்மணியும் அந்த மாப்பிள்ளைகிட்ட நல்லா தான் பேசிப் பழகினா. அவரும் நல்லவரு தான். கல்யாண நாளும் வந்தது. மணமேடையில் மாப்பிள்ளை ஹோம குண்டத்துல உட்கார்ந்து இருந்தாரு. அப்போ கண்மணி அலங்காரம் பண்ணிட்டு இருந்தா… ஐய்யர் பொண்ண அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதால, நான் அவளைக் கூப்பிடப் போயிட்டேன். அப்போ அவருக்கு மணமேடையிலேயே அட்டாக் வந்து இறந்துட்டாரு. அப்போ நடந்த அந்த பாதிப்பில் இருந்து கண்மணி இன்னும் வெளியே வரல. சுத்தி இருக்கவங்களும் சரி, சொந்தக்காரங்களும் சரி, கண்மணிக்கு ராசி இல்லன்ற மாதிரியும், கண்மணியோட ராசி தான் அவரைப் பாதித்துவிட்டது. அதனால் தான் அவர் இறந்துட்டாரு, அப்படின்ற மாதிரியும் சொல்லிட்டாங்க. அதை அப்போதைக்குப் பெருசா எடுத்துக்காதவ, நாள் ஆக ஆக வீட்டை விட்டு அவ வெளியே வரும்போது எல்லாம் அவ முகத்துல முழிக்கக் கூடாது. முகத்துல முழிச்சா போற காரியம் விளங்காது என்பது போல் பேச, சுத்தி இருக்கவங்க தினமும் சொல்ல, மனசுக்குள்ள முழுசா அவங்க பேச்சோட பாதிப்பு உள்ளுக்குள்ள வர, தன்னால தான் தன்னைக் கட்டிக்கிறதா இருந்தவர் இறந்துட்டாருன்னு நம்ப ஆரம்பிச்சிட்டா. இப்போ வரை அவ அதை நம்பறா...

இன்னும் அதுல இருந்து அவ வெளியே வரல. முடிஞ்ச அளவுக்கு என் பையன வச்சு ஓரளவுக்கு வெளியே கொண்டு வந்திருக்கோம். ஆனா, இன்னும் அதுல இருந்து அவ முழுசா வெளியே வரல. அதுதான் உண்மையும் கூட. அதே அளவுக்கு உங்க பேத்தி, கண்மணியைப் பாதிச்சு இருக்கா… அவளோட அழுகையும் சரி, அவளோட பேச்சும் சரி, இந்த நிமிஷம் வரைக்கும் உங்க பேத்திகிட்ட கண்மணியை அவளையும் மீறி நெருங்கி வர வைக்கிறது. உங்க மகன் ஒரு நாள் அவகிட்டப் பேசணும்னு சொல்லி இருக்காரு. அது கூட என் பையன் நேத்துச் சொல்லி தான் எனக்குத் தெரியும். அத்தை பயந்துட்டுப் பேசல மா என்று சொல்லிச் சொன்னான். எனக்குக் கண்மணியை நினைச்சுக் கொஞ்சம் சிரிப்பு. அவ்வளவு தைரியமான பொண்ணு. அவ பேசாம போனதுக்குக் காரணம் என்னன்னு அவளுக்கு தான் தெரியும். ஆனால்…" என்று விட்டு அமைதியாகி விட,

இப்பொழுது கண்மணியின் கையில் அழுத்தம் கொடுத்த பத்மா, "நான் அவளை என் பொண்ணு மாதிரிப் பார்த்துப்பேன் என்று சொல்ல மாட்டேன். அவ என்னோட பொண்ணாவே இந்த வீட்ல இருப்பா, என்ன நம்பி அனுப்பி வையுங்க. நானும் ஒரு விஷயத்தை ஒத்துக்குறேன். என் மகன் உடனே கண்மணியை மனைவியாக ஏத்துப்பான் என்று நான் சொல்ல மாட்டேன்" என்றார்.

"எனக்குப் புரியுதும்மா எல்லாம். நாலா பக்கமும் யோசிச்சு தான் வந்து இருக்கேன்" என்றாள் கமலி.

சிரித்தவர், "மேற்கொண்டு என்ன பேசணுமோ, அதை நான் உங்க வீட்டுல பெரியவங்ககிட்டப் பேசுறேன் மா. உங்களுக்கு விருப்பம் தானே" என்றார். ஒரு விதப் பதட்டத்துடன் சிரித்த கமலி, "இன்னும் நான் கண்மணிகிட்டப் பேசல மா. வீட்ல அத்தை, மாமா கிட்டயும், இவர்கிட்டயும் தான் பேசி இருக்கேன். இன்னும் கண்மணிகிட்டே இதப்பத்திப் பேசல. அதனால தப்பா எடுத்துக்காதீங்க. என்னதான் நாங்க பேசினாலும், அவளோட விருப்பம் இல்லாம அவளோட வாழ்க்கையில முக்கியமான முடிவுகளை நாங்களா எடுக்க முடியாதே" என்று விட்டு நிறுத்தினாள்.

சிரித்த பத்மா, "பேசுங்க கமலி, நானும் இன்னும் என் பையன் வினோத்கிட்ட இதப்பத்திப் பேசல. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் அவன்கிட்டப் பேசணும் என்று இருந்தேன். என் பேத்தியப் பத்திப் பிரச்சனை இல்ல. இப்போ பத்து நாளா வீட்டுக்கு வந்ததிலிருந்து தூங்குற வரைக்கும், ராகி மா வாயில வர வார்த்தை கண்மணி தான். அவளைப் பத்திப் பேசாம என் பேத்தி தூங்கினது இல்ல. அவ என் பேத்திக்கு அம்மாவா வந்தா, அது என் பேத்திக்கு கிடைச்ச அதிர்ஷ்டம் தான்" என்று சிறிது நேரம் இருவரிடமும் பேசிக் கொண்டு இருந்தார்.

பிறகு, டீ மட்டும் குடித்துவிட்டு நேரமாவதை உணர்ந்து சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பி விட்டார்கள். பத்மா இருவரையும் அனுப்பி வைத்துவிட்டுச் சாமியைக் கும்பிட்டவர். 'எல்லாம் நல்லபடியா முடியனும் சாமி' என்று வேண்டினார்.

தன் மகனிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது? என்று யோசித்தார். ஆனால், சீக்கிரமே பேசியாக வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவர், ‘இன்று இதைப் பேசி முடிப்போம்.’ என்றும் எண்ணிக் கொண்டார்.

இங்கு வீட்டிற்குச் சென்ற கமலி, பத்மாவிடம் பேசிவிட்டு வந்ததை காந்திமதி, ரகுபதி இருவரிடமும் சொல்ல அவர்களும் சரி என்று அமைதியாகி விட்டார்கள். அன்று மாலை கண்மணி வேலை விட்டு வந்தவுடன், இது போல் பத்மா பொண்ணு கேட்டு வந்த விஷயத்திலிருந்து அனைத்தையும் கமலி கண்மணியிடம் சொல்லி முடிக்க,

"என்ன நினைச்சுட்டு இருக்க கமலி" என்று வேகமாகக் கத்தினாள்.
கிட்டத்தட்டத் திருமணம் ஆகிவந்த புதிதில் "கமலி" என்று கூப்பிட்டவள் இந்த ஆறு வருடங்களில் இப்பொழுது தான் இப்பொழுதுதான் தனது தோழியுமான கமலியைப் பேர் சொல்லி அழைக்கிறாள்.

"நான் என்னடி தப்பா பண்ணிட்டேன்" என்று கேட்க,

"யாரைக் கேட்டு என் வாழ்க்கையில் நீ முடிவு எடுக்கிற?" என்றாள்.

சங்கர் "கண்மணி" என்று கத்த, "நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவ அண்ணியா என்கிட்டப் பேசல, என் பிரண்டா பேசிட்டு இருக்கா. அவகிட்ட என்ன பேசனுமோ நான் பேசிக்கிறேன்" என்று தனது கணவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கமலி கண்மணி புறம் திரும்ப,

"கமலி விளையாடாத, உண்மையா சொல்லிட்டு இருக்கேன். நான் இந்த வீட்ல இருக்கறது உங்களுக்குப் பாரமா இருக்கா" என்று கேட்க, வேகமாக ஓங்கி இரண்டு கன்னத்திலும் அறைந்திருந்தாள் கமலி.

மற்ற மூவரும், "கண்மணி" என்று தழுதழுத்த குரலுடன் கத்த, "பின்ன நான் என்ன நினைக்கிறது?" என்றாள் அழுகையுடனே.

"கொன்றுவேன்டி… உன்ன இந்த வீட்டில் யாராச்சும் பாரமா நினைச்சு இருக்காங்களா? இந்த வீட்டு மகாலட்சுமிடி நீ. உன்ன இங்க இருந்து துரத்தி விடனும்னு எங்களுக்கு ஒன்னும் ஆசை இல்லை. அதுக்காக வயசுப் புள்ளையை, வாழ வேண்டிய புள்ளையை வீட்டில் வைத்துக்கொண்டு என்னையும், என் புருஷனையும் குடும்பம், குட்டின்னு சுயநலமா வாழச் சொல்றியா?" என்றாள்.

"நான் என்னடி உன்னைப் பண்ணேன்" என்று கலங்கிய விழிகளுடன் கேட்டாள் கண்மணி.

"இதோ பாரு, நீ என் வாழ்க்கையில ஒன்னும் பண்ணல. ஆனா, நீ இப்படி இருப்பது எனக்கு வலியைத் தருகிறது. ஒரு தோழியாகவே சொல்றேன். கல்யாண வயசுல இருக்க தங்கச்சியை வச்சிக்கிட்டு உங்க அண்ணன் மட்டும் சந்தோசமா இருந்திடுவாரா? இல்லை அத்தை, மாமாக்கு தான் சந்தோசமா சொல்லு. இந்த வீட்டுக்கு வாழ வந்தவளா எனக்கும் நிறைய கடமை இருக்கு. இந்த வீட்டுப் பொண்ணு வாழாமல் எனக்கும் வலிக்கத்தான் செய்யுது. இந்த மாப்பிள்ளை உனக்குச் சரியா வருவாரு என்று நான் யோசிக்கிறேன். மற்றபடி நீ தான் இதுக்கு அப்புறம் யோசிக்கணும்.

ஆனா இது எல்லாத்தையும் விட நான் ஒரு விஷயம் சொல்றேன். எந்த அளவுக்கு அந்த விஷயத்துல நீ பாதிப்பு அடைஞ்சியோ, அதைவிடப் பல மடங்கு, ஏன்னு உனக்கே தெரியாத அளவுக்கு, ராகினி விஷயத்துல நீ பாதிப்பு அடைந்து இருக்க, இல்லன்னு மட்டும் சொல்லிடாத. அதுக்காக அவங்க அப்பாதான் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். ராகினி மட்டும்தான். அவளோட பேச்சும் சரி, அவளோட அழுகையும் சரி, அவளோட செயலும் சரி, இந்த நிமிஷம் வரைக்கும் உன்னப் பாதிச்சிருக்கு. இல்லைன்னு சொல்லிடுவியா?" என்று விட்டு அமைதியாகக் கண்மணியைப் பார்க்க,

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. சொன்னாலும், சொல்லா விட்டாலும் அது உண்மையே… ‘நாம் ஏன் என்று தெரியாமலே ராகினி விஷயத்தில் சிறிது பாதிக்கப்பட்டு தானே இருக்கிறோம்' என்று மனதிற்குள் நினைத்தவள் அமைதியாகவே இருக்க,

"யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு" என்று விட்டு, “இன்னொரு விஷயம்” என்றாள். என்ன என்பது போல் கண்மணி பார்க்க,

"இதுவரைக்கும் ராகினியோட அம்மா இருக்கும் போது, என்னைய ஏன் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேக்குறீங்க என்று நீ ஏன் கேட்கல?" என்று கேட்டாள்.

லேசாகச் சிரித்த கண்மணி, "எனக்கு ராகினிகிட்டப் பேசிய ரெண்டு நாள்ல அவங்க அம்மா இந்த உலகத்திலேயே இல்லை என்று தெரிந்து கொண்டேன் கமலி” என்று சிரித்தவள், "அதுக்காக அவங்க இடத்தை நான் பிடிக்கணும்னு ஆசைப்படல கமலி, அதுவும் உண்மை." என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் ரூமுக்குள் நுழைய, அவள் கதவைச் சாற்றுவதற்கு முன்பு கமலி "கண்மணி" என்று அழைக்க அமைதியாக நின்று பார்த்தாள்.

"யோசிச்சு நல்ல முடிவா சொல்லுவ என்று நினைக்கிறேன். அந்த வயசான அம்மாவையும் சரி, வாழ வேண்டிய உன்னையும், அவரையும் சரி, வளர வேண்டிய புள்ள ராகினியையும் சரி, எல்லோரையும் மனசுல வச்சு ஒரு நல்ல முடிவு எடுப்பன்னு நினைக்கிறேன். அதே போல எங்களையும் மனசுல வச்சு ஒரு நல்ல பதிலைச் சொல்லு.

கல்யாணம் பண்ணிட்ட உடனே புருஷன் பொண்டாட்டியா இங்க யாரும் வாழப் போறதும் கிடையாது. ராகினி அப்பாகிட்ட பத்மா அம்மா பேசுறேன் என்று சொல்லி இருக்காங்க. அவரு என்ன சொல்லுவாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு உன்னோட பதில் ரொம்ப முக்கியம். யோசிச்சு முடிவெடு, ஒன்னும் அவசரம் இல்ல" என்று சொல்ல எதுவும் பேசாமல் அவளை முறைத்து விட்டுக் கதவை அடித்துச் சாற்றிக் கொண்டாள் கண்மணி. வீட்டில் உள்ள அனைவரும் பாவமாகக் கமலியைப் பார்க்க,


சிரித்த கமலி, "நல்ல முடிவு எடுப்பா. அவ வாழ்க்கைக்காக இல்லையென்றாலும், அந்தக் குழந்தை ராகினிக்காக எடுப்பா" என்றவுடன் சங்கர்தான் கோவமாக "அப்போ, என் தங்கச்சிக்குனு ஒரு வாழ்க்கை" என்றான்.

அவனை முறைத்து விட்டுப் பிறகு சிரித்துக் கொண்டே, "உன் தங்கச்சிக்கான வாழ்க்கையும் தான் சரியா? குழந்தைக்காக மட்டும் அவளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி நான் பேசல" என்றாள்.

"நீ இப்போ சொல்றது அப்படி தான் இருக்கு" என்றான் கோவமாக.

"டேய், கொஞ்சம் அமைதியா இருடா சங்கர்" என்றார் ரகுபதி.

"அப்பா" என்று வாய் திறக்க, "கமலி எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காமல் செய்ய மாட்டா" என்றார்.

"ஆமா, இவளைத் தலையில் தூக்கி வச்சுக் கொண்டாடுங்க" என்று முனகி விட்டு ரூமுக்குள் நுழைந்து விட்டான். "கமலி" என்று ரகுபதி, காந்திமதி இருவரும் ஒருவிதச் சங்கடத்துடன் கூப்பிட, "ஒன்னும் இல்ல, உங்க பையனப் பத்தி எனக்குத் தெரியாதா? கோவம், அவ்வளவுதான். தங்கச்சியோட வாழ்க்கையை யோசிக்கிறாரு. மத்தபடி ஒன்னும் இல்ல, எனக்குத் தெரியும், நான் பாத்துக்குறேன். நீங்க இத நினைச்சு வருத்தப்பட வேண்டாம்.” என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
 
Top