எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 4

அத்தியாயம் - 4

நான்கு வருடங்களுக்கு முன்,​

"எனக்கு உங்களை பிடிச்சிருக்கு கார்த்திக்!" என வெட்கம் நிறைந்த குரலில் சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டே சரஸ்வதி கூறினாள்.​

அவளின் வெட்கம் நிறைந்த அவஸ்தையை ரசித்தவன்,​

"அப்படின்னா? கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லிடவா?" ஆர்வத்துடன் அவளின் வதனத்தை பார்த்துக் கொண்டே கேட்டான்.​

நிமிர்ந்து அவனின் முகத்தை பார்க்க தயங்கியவள், "ம்ம்ம்.." என்று குனிந்துக் கொண்டே தலையசைத்து அங்கு மாடியில் இருந்த அறையில் சென்று மறைந்துக் கொண்டாள், சரஸ்வதி என்கிற சரோ!​

கார்த்திக்கிற்கு பெண் பார்க்கும் நிகழ்வு தான் அங்கே நடந்துக் கொண்டிருந்தது.​

பெற்றவர்களால் பார்த்து தேர்வு செய்த பெண் தான் சரஸ்வதி. கார்த்திக்கிற்கு காதலில் பெரும் நாட்டம் இல்லாததால், தன் திருமணத்தை பெற்றவரின் விருப்பத்திற்கே விட்டுவிட்டான்.​

மதுரையை பூர்விகமாக கொண்ட கார்த்திக்கின் குடும்பம் மதுரைக்குள்ளே தேடிக் கிடைத்த பெண் தான் சரஸ்வதி. அவளும் படித்துவிட்டு சென்னையிலே வேலை பார்க்க திருமணத்திற்கு பின் இருவரும் சென்னையிலே இருந்து கொள்வார்கள், என அனைத்தையும் அலசி ஆராய்ந்த விசாலாட்சி சரஸ்வதியை தன் அன்பு மகனுக்கு தேர்வு செய்தார்.​

பெற்றோர் பார்த்த வரன் தான் என்றாலும் சரஸ்வதியுடன் பேசும் பொழுது மனதிற்கு நெருக்கமாக கார்த்திக் உணர்ந்தான். 'இவளுடன் இணையத் தான் காதல் என்ற ஒன்று எனக்கு வரவேயில்லையோ?' என்றும் எண்ணினான்.​

முகம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்த புன்னகையுடன் கீழிறங்கி வந்த கார்த்திக்கைப் பார்த்த கூடத்தில் இருந்த பெரியவர்களுக்கு 'மணமக்கள் தங்களுக்குள் பேசி சம்மதித்திருக்கின்றனர்' என்று தானாகவே புரிந்து கொண்டனர்.​

இருந்தாலும் கார்த்திக்கிடம் வினவ, "எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தான்" என சரஸ்வதியின் பதிலையும் சேர்த்தே உரைத்தான்.​

இரு வாரங்கள் கழித்து நிச்சயம் செய்துவிட்டு மூன்று மாதத்திற்கு பின் திருமணம் என ஏற்பாடாகியது. நிச்சயத்தை எளிதாக சரஸ்வதியின் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். பின் கல்யாணத்தை பெரிதாக பண்ணலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.​

பேசியது போல் எளிதாக நிச்சயம் முடித்துவிட்டு கார்த்திக் மற்றும் சரஸ்வதி சென்னை திரும்பிவிட்டனர். இரு குடும்பங்கள் இங்கு திருமண வேலையை பார்க்க, அந்த இளம் இருவுள்ளங்கள் தங்களுக்குள் முளைத்த காதல் பயிரை வளர்த்துக் கொண்டிருந்தனர்.​

தன் மகனின் திருமணத்தில் ஒரு குறையும் இருக்கக் கூடாது என அனைத்து சம்பிரதாயங்களை முறைப்படி நடக்கும்படி பார்த்துப் பார்த்து செய்தார் விசாலாட்சி. ஆனால் இவருக்கு மேல் விதி ஒன்று இருப்பதை அவர் யோசிக்கவில்லை!​

"இந்த சாரீ ஓகே வா" என சரஸ்வதியின் மேல் அடர்ந்த மஞ்சள் நிறத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அன்னையை வெட்டவா குத்தவா என்பதை போல் முறைத்தான் கார்த்திக். அவனின் பாவனையில் வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே முழுங்கிக் கொண்டாள் சரஸ்வதி.​

"ம்மா.. என்ன கலர் இது?" என அன்னையை கடிந்து கொண்டவன் தானே தன்னவளுக்கான கல்யாணப் பட்டினை எடுக்க முனைந்தான்.​

அருகில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கின் அக்கா மீனாட்சி, "அம்மா.. பார்த்தும்மா இனி உன்னோட பையன் உனக்கு இல்லை போல" என கிண்டலுடன் கூற,​

அதிர்ந்து விழித்த சரஸ்வதியின் கன்னம் வருடி, "என்னோட பையன் அவனுக்கு வர போறவளுக்கு புடவை எடுக்கிறான். இதுல உனக்கு என்ன மீனா?" என தன் மகளை வாரினார்.​

"ஓஹோ! இனி நீயும் உன் மருமக கட்சி தானா? எம்மாடி சரஸ்வதி.. என்னையலாம் இனி உங்க வீட்டுக்குள்ள விடுவியா?" என பவ்யமாய் கேட்பதாக நடிக்க,​

"ஐயோ அண்ணி என்ன இப்படி பேசறீங்க?" என கலவரமாக கேட்டவளை பார்த்த கார்த்திக், "அம்மா, அக்கா போதும்" என சரோவை தனியாக அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினான்.​

"என்ன மீனு? அந்த பிள்ளையை இப்படி கலவரபடுத்துற? இந்தா இவன் அழுவுறான். என்னனு பாரு" என அவர்களின் மூன்று வயது மகன் சந்துருவை அவளின் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான் மீனாட்சியின் கணவன் சத்யன்.​

இப்படி ஒருவித கலாட்டாவாக திருமணத்திற்கு அனைவருக்கும் உடைகளை எடுத்து முடித்தனர்.​

__________​

வெள்ளி திருமணம் என்றிருக்க திங்கள் இரவு கார்த்திக் மற்றும் சரஸ்வதி மதுரையை நோக்கிய இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர்.​

"இது தான் நாம சிங்கிளா போற கடைசி பயணம் சரோ! வரப்ப நாம கணவன் மனைவியா மிங்கிள் ஆகி வருவோம்" என்றான் கண்கள் முழுவதும் கனவுகள் மின்ன.​

அவன் ஆசையாக கூறியதை கேட்டுக்கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கும் வெட்கம் சூழ்ந்துக் கொண்டது.​

"ஹே! என்ன பண்ணுற..?" என தலையைக் கோதி தன்னை சமன் செய்ய முனைந்தான் கார்த்திக். அவனின் அந்த செய்கை அவனை மேலும் கவர்ச்சியாய் காட்ட, சரஸ்வதி பார்வையின் தீவிரம் அதிகமாகியது.​

"இந்த பார்வையெல்லாம் இன்னும் மூணுநாள் கழிச்சி பாரு சரோ.. என்னோட பதில் வேற மாதிரி இருக்கும்" என குறும்புடன் கூறியதைக் கேட்டவள் நாணம் கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.​

மதுரையை அடைந்தவர்களை வரவேற்க அவரவர்களின் வீட்டினர் வந்திருந்தனர்.​

கார்த்திக்கை அழைக்க வந்த அவனின் அக்கா மீனாவின் கணவர் சத்யன், "போதும் மாப்பிள்ளை மீதியை கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கோங்க.." என சரோவிடம் பேசிக்கொண்டே இருந்த கார்த்திக்கின் கையை பிடித்து இழுத்தான்.​

சரோவை அழைக்க வந்த அவளின் அப்பாவும் கார்த்திக்கிடமும் சத்யனிடமும் பேசிவிட்டு சரோவை அழைத்து சென்றார்.​

அதிகாலையில் வீட்டிற்கு வந்த சரோ உறங்க சென்றுவிட்டாள்.​

பின் ஏழு மணி போல் எழுந்து குளித்து சாப்பிட்டு வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்தவளிடம்,​

"இந்நேரம் எங்கடி போக கிளம்பிக்கிட்டு இருக்க?" என கோபமாய் கேட்டார் அவளின் அன்னை.​

"அம்மா என்னோட தோழி திருச்சில இருக்க ஆனந்தி வீட்டுக்கு போய் பத்திரிக்கை வெச்சிட்டு வரேன் ம்மா. வீட்டுக்கு வந்து வெச்சாதான் அவங்க மாமியார் விடுவார்களாம்" கொஞ்சும் குரலில் சரஸ்வதி கெஞ்சினாள்.​

"முடியாது! வெள்ளிக்கிழமை கல்யாணம் வெச்சிக்கிட்டு செவ்வாய்க்கிழமை உன்னைய தனியா அனுப்பவா..?" என மிரட்டியவர் அவளின் தந்தையையும் அழைத்து கூறிவிட்டார்.​

அவர் வந்து சத்தம் போட, "அப்பா என்னோட க்ளோஸ் பிரண்ட் ப்பா. வீட்டுக்கு வந்து கூப்பிட்டா தான் அனுப்புவேன்னு அவ மாமியார் சொல்லுறாங்க.. நான் என்ன பண்ண..?"​

"அப்படி ஒருத்தி உன்னோட கல்யாணத்துக்கு வரலானாலும் பரவாயில்லை.." என சரோவின் அம்மா திடமாக மறுக்க,​

"ப்பா ரெண்டு மணி நேரம் தான ப்பா. நேத்து வரைக்கும் சென்னைல தான இருந்தேன். ஏன் இன்னைக்கு காலைல கூட ட்ரெயின்ல தான வந்தேன். எட்டு மணி பஸ்ல போய்ட்டு மதியம் ரெண்டு மணி பஸ்ல வந்துடுவேன் ம்மா. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படிலாம் போக முடியாதுல?" தன் தந்தையை பேசியே கரைத்தாள் சரஸ்வதி.​

"சரி ம்மா. கூட யாரையாவது கூட்டிட்டு போ. இப்ப நானும் வெளிய கிளம்பணும் இல்லனா உன்கூட வருவேன்" என்ற தந்தையிடம்,​

"ப்பா பக்கத்துல இருக்க திருச்சிக்கு அனுப்ப இவ்வளவு போராட்டமா?" என புலம்பிய மகளைத் தனியாகவே அனுப்ப சம்மதித்தார் அவளின் தந்தை. சரோவின் அம்மாவும் அரைமனதாக ஒத்துக்கொண்டார்.​

சொன்னபடியே திருச்சி சென்றவள் அவளின் தோழியின் வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு மதிய உணவையும் முடித்துவிட்டு இரண்டு மணி பேருந்தில் ஏறினாள்.​

பின் தன் அன்னை, தந்தை இருவரையும் அழைத்து, "இன்னும் ரெண்டு மணிநேரம் தான்! அடுத்து நம்ம வீட்ல இருப்பேன்" என அலைபேசியில் தகவலையும் கொடுத்தாள்.​

அந்நேரம் அழைத்த கார்த்திக்கின் அழைப்பை ஏற்றாள். "நான் போன் போட்டா எடுக்கல? மாமாக்கு போட்டு கேட்டா நீ திருச்சி போயிருக்கிறதா சொல்லுறாங்க? சொல்லிருந்தா நம்ம சேர்ந்து போயிருக்கலாமே?" என்றான் கார்த்திக்.​

"அதான் சொல்லல. இது என்ன சென்னையா? நாம சேர்ந்து ஊர் சுற்ற?" என கிண்டலுடன் கேட்டாள் சரோ.​

"சரி விடு. இப்ப எங்க இருக்க..?" என்ற கார்த்திக்கிடம், "நான் திருச்சில பஸ் ஏறிட்டேன். வந்துடுவேன் கார்த்திக்" என்றவள், "நீங்க பேசுறது சரியா கேட்கலை அப்பறம் கூப்பிடுறேன்" என அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.​

'திருச்சில பஸ் ஏறிட்டேன். வந்துடுவேன் கார்த்திக்' என்பது மட்டுமே அவன் காதில் விழ மறுமுறை அழைத்தான். அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நெட்ஒர்க் பிரோப்ளேம் என நினைத்தவன் சிறிது நேரம் கழித்து அழைக்கலாம் என விட்டுவிட்டான்.​

அவனுக்கு தெரியவில்லை அவன் சரோவின் குரலில் கேட்ட கடைசி வாக்கியம் அதுதான் என!​

 

கார்த்திக்கின் குடும்பம், சரோவின் குடும்பம், இருவீட்டின் உறவுகள் என அனைவரும் அந்த திருச்சி அரசு மருத்துவமனையில் தான் கூடியிருந்தனர்.​

"ஐயோ! நானென்ன பண்ணுவேன்? என் பொண்ணு இப்படி வந்து படுத்திருக்காளே.." என மருத்துவ அறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சரஸ்வதியை நினைத்துப் புலம்பியபடி அவளின் அன்னை தலையில் அடித்து அழுது கொண்டிருந்தார்.​

சரோவின் தந்தையும் மனதிற்குள் உடைந்தவர் தன் மனைவியின் அருகினில் நின்று கொண்டு தோளில் தொங்கிய துண்டினை வாயில் வைத்து அழுகையை அடக்கிக் கொண்டிருந்தார்.​

சுற்றி இருந்த அனைவருக்கும் அவர்களை பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. இவர்களை போல் அழாமல் இறுகிய முகத்துடன் கற்சிலை போல் அமர்ந்திருந்தான் கார்த்திக்.​

திருச்சியில் இருந்து கிளம்பிய பேருந்தை எதிரே வந்த அதிவேக லாரி ஒன்று இடித்துத் தள்ளியது. பாதிக்குமேல் பயணிகளால் நிரம்பியிருந்த அந்த பேருந்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே இறந்திருந்தனர். மேலும் நான்கு பேர் உயிருக்கு போராட, அதில் சரஸ்வதியும் ஒருத்தி. மீதி இருந்தவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.​

மூன்று மணிக்கு நடந்த விபத்து, ஐந்து மணி போல் இவர்களுக்கு செய்தி கிடைக்க, மருத்துவனையை நோக்கி ஓடி வந்திருந்தனர்.​

கார்த்திக் உறவினர்களில் யாரோ, "மூணு நாள்ல கல்யாணம் இருக்கப்ப.. இப்படியா பொண்ணு கேட்டான்னு தனியா அனுப்புவீங்க? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கணும்" என குரலை உயர்த்தினார்.​

உடனே சரோவின் உறவுகளில் இருந்த ஒருவர், "பையனுக்கு என்ன தோஷமோ..? பொண்ணை இப்படி உயிருக்கு போராட விட்டுடுச்சி?" என கார்த்திக்கை தாக்கி பேசினார்.​

இப்படியே அவர்களுள் சண்டை தொடங்கியது. அவர்களிடம் வந்த தாதி, "இப்படி கத்துறீங்கனா? எல்லாரும் இப்பவே வெளிய போங்க.." என சத்தமிட்டு அனைவரையும் அதட்டினார். அவரின் அதட்டலில் அனைவரும் வாயை மூடிக்கொண்டனர்.​

இது எதையும் அறியும் நிலையில் கார்த்திக் இல்லை! அவன் எண்ணம் முழுக்க, "திருச்சில பஸ் ஏறிட்டேன். வந்துடுவேன் கார்த்திக்" என சரோ கூறியதிலேயே சுற்றிவந்தது. 'வந்துடுவேன்னு சொல்லிருக்கா.. கண்டிப்பா எப்படியாவது வந்துவிடுவாள்' என நம்பினான்.​

இரண்டு மணிநேரம் சென்று தீவிர சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார் மருத்துவர். அங்கிருந்த அனைவரும் நம்பிக்கையுடன் அவரை பார்க்க, "எங்களால காப்பாத்த முடியலை.. மன்னிச்சிடுங்க!" என கையை விரித்தவர் அங்கிருந்த அனைவரின் தலையிலும் பேரிடியை இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.​

வெளியே சண்டையிட்டாலும் மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்த அந்த உறவுகள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றிருந்தனர். சரோவின் அம்மா துக்கம் தாங்காமல் மயங்கி விழ அவரையும் ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

மருத்துவர் கூறியதை கேட்ட கார்த்திக்கின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. மனதில் சரோவோடு வாழப்போகும் வாழ்க்கையை பற்றி கட்டிவைத்திருந்த கற்பனைக் கோட்டை அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன.​

நடுங்கிய கால்களை மெல்ல நகர்த்தி சரோ இருந்த மருத்துவ அறையை அடைந்தான். கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். மருத்துவ உபகரணங்கள் எதுவும் கழற்றப்படாமல் இருந்த சரோவை உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்தான்.​

பின் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் வலக்கையை தன் கைகளில் பொத்தி வைத்துக்கொண்டவன், "வந்துடுவேன்னு தான சொன்ன சரோ? இப்படி பாதிலேயே விட்டுட்டு போய்ட்டியே?" என கரகரப்பான குரலில் கேட்டான்.​

அவனின் கேள்வியை கேட்காமலும் அதற்கான பதில் கொடுக்காமலும் அனைத்து உறுப்புகளின் செயலும் இழந்து, கண்கள் மூடப்பட்டு நிரந்தர உறக்கத்தில் இருப்பவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை அவனின் மாமா சத்யன் வந்து வெளியே அழைத்து சென்றான்.​

மருத்துவமனையில் அனைத்து முறைகளையும் முடித்துவிட்டு இரவு தான் சரோவின் உடலை அவளின் வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஊரே அங்கு குடியிருக்க கார்த்திக் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான்.​

திருமணத்திற்கு பந்தல் போட வேண்டிய வீட்டிற்கு இப்பொழுது இந்த நிலையில் பந்தல் போடப்பட்டதை பார்த்தவர்களுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.​

ஒரே பெண் என்பதால் கேட்டதை அனைத்தையும் செய்து சீரும் சிறப்புமாக வளர்த்தவளை காலனிடம் தூக்கிக்கொடுத்த பெற்றவர்கள் இருவரையும் யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.​

ஒருவழியாக மறுநாள் சரோவை அவர்களின் முறைப்படி சாங்கியம் செய்து அவளின் ஆத்மாவிற்கு சாந்தியை கொடுத்தனர்.​

அதன்பின் அங்கிருந்த கார்த்திக்கின் உறவினர்கள் அனைவரும் அவரவர் வீட்டை பார்க்கச் சென்றனர். கல்யாணம் நடக்காது என்பதை தொலைபேசியில் அனைத்து உறவுகளுக்கும் அழைத்து தகவல் கொடுத்தனர் கார்த்திக்கின் குடும்பத்தார்.​

கார்த்திக்கின் அக்கா மீனாவின் கணவர் சத்யன் தான் கார்த்திக் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். அவர்களும் அவன் நிலை சரியானதும் வந்துக் கொள்ளட்டும் என்று அறிவித்தனர்.​

திருமணத்திற்காக வெள்ளை அடித்து; புது துணி எடுத்து என பரபரப்பாக இருந்த வீடு இப்பொழுது களையிழந்து காணப்பட்டது. சத்யனும் மீனாட்சியும் தான் அனைவரையும் தாங்கிக்கொண்டனர்.​

அங்கிருந்து வீடு வந்த கார்த்திக் அவனது அறையில் போய் அடைந்து கொண்டான். நன்றாகப் பார்த்தால் மூன்று மாதம் மட்டுமே சரோவிடம் பழகியிருக்கிறான். ஆனால் அவன் மனதில் அவள் தன் தடத்தை ஆழமாக பதித்துவிட்டு சென்றுவிட்டாள்.​

இரண்டு நாட்கள் இப்படியே இருந்தவன் மூன்றாம் நாள் கடிகாரத்தைப் பார்க்க, அது அவர்களுக்கு குறித்த முகூர்த்த நேரத்தை காட்டியது.​

‘இந்நேரம் சரோ இருந்திருந்தா அவளுக்கு தாலி கட்டி என்னுடையவளா ஆக்கியிருப்பேனே..' என அழுகையிலே கரைந்தான்.​

இவனின் அழுகுரலை கேட்டு உள்ளே வந்த சத்யன், "மாப்ள நீயே இப்படி கலங்கலாமா?" என அவனை சமாதானப்படுத்த முயன்றான்.​

"முடியலை மாமா. எவ்வளவு ஆசைகள், எவ்வளவு கனவுகள் எல்லாமே போய்டுச்சி.. அவ மொத்தமா எடுத்துக்கிட்டு போய்ட்டா மாமா.." எனக் கூறியவன் குரலை சரி செய்துகொண்டு,​

"நான் இப்ப பிளாட் புக் பண்ணது கூட அவளுக்கு தெரியாது மாமா. சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு அவகிட்ட சொல்லவே இல்லை. அதைக்கூட கேட்காமயே என்னை விட்டுட்டு போய்ட்டா.." என விட்டத்தைப் பார்த்து வருத்தத்துடன் கூறினான். சிறிது நேரம் அவனுடன் இருந்துவிட்டு வெளியே சென்றான் சத்யன்.​

இதற்கிடையில் கார்த்திக்கின் ஜாதகத்தால் தான் சரோ இறந்துவிட்டாள் என காற்றுவாக்கில் செய்தி வர, விசாலாட்சி தான் கொதித்துவிட்டார்.​

"கல்யாண பொண்ணை தனியா அனுப்பிட்டு.. இப்ப நம்ம மேலேயே பழியை போட பாக்குறாங்களா?" என்றவரை மீனாட்சி அடக்க பெரும்பாடுப்பட்டாள்.​

"விடு விசாலாட்சி. பேசுறவங்க பேச தான் செய்வாங்க. நமக்கு இப்ப நம்ம பையன் தான் முக்கியம். அவனை கவனிப்போம்" என கூறிவிட்டு உள்ளே சென்றார் கார்த்திக்கின் தந்தை சுந்தரம்.​

வீட்டிற்கு வந்து அழைத்தால் தான் அனுப்புவேன் என கூறிய ஆனந்தியின் மாமியார் மேல் தவறா? மூன்று நாட்களில் திருமணம் என்றிருக்க தோழியை அழைக்க சென்றது சரோவின் தவறா? இல்லை அவளை அனுப்பிவைத்த அவளின் பெற்றவர்கள் மீது தவறா? இவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் ஒரு பங்கு வகித்தனர் என்றால், பட்டப்பகலில் அதிவேகமாக லாரியை ஓட்டிக்கொண்டு வந்த ட்ரைவரே பெரும் பங்கு வகிக்கிறான்.​

நடக்க வேண்டும் என்று இருப்பது எப்படியாயினும் நடந்துவிடுவதை போல் இங்கு இந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதனின் விளைவு கார்த்திக்கின் வாழ்வில் தான் எதிரொலித்தது.​

நடந்தது துக்கம் தான்! துயரம் தான்! ஆனால் அப்படியே தேங்கிவிட முடியாதே! முயன்று இரண்டு வாரம் கழித்து கார்த்திக்கை சென்னைக்கு அனுப்ப தயாரானது குடும்பம். அவனுடன் சென்று அவனின் அம்மாவும் அப்பாவும் இருவாரம் தங்குவர் என முடிவாகியது.​

புதிதாய் வாங்கிய பிளாட்டில் எளிதாக பாலை மட்டும் காய்ச்சுவிட்டு, குடிவந்தனர். கார்த்திக்கும் தன் சோகத்தை தனக்குள் புதைத்தவன் எப்பொழுதும் போல் வேலைக்கு செல்லத் தொடங்கினான்.​

ஆனால் அவனுடன் வேலை செய்யும் அனைவரும் அவனைப் பாவம் போல் பார்க்க, அவனுக்கு தான் மிகவும் சங்கடமாக இருந்தது. இருவாரம் இருந்துவிட்டு கார்த்திக்கின் பெற்றவர்களும் அவர்களின் வீட்டிற்கு திரும்பினர்.​

உடன் பணிபுரிவோரின் பரிதாப பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தன் மேலதிகாரியிடம் சென்று பேசியவன் வேறொரு கிளைக்கு மாற்றல் வாங்கி சென்றுவிட்டான். அங்கு அவனை வெளிநாடு செல்லுமாறு பணிக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி சரோவின் நினைவுகளில் இருந்து தப்பிக்க பிறந்த நாட்டை விட்டே ஓடினான்.​

நேரம் காலில் சக்கரம் காட்டாத குறையாக செல்ல இரு வருடங்கள் ஓடிவிட்டன. அனைவரிடமும் பேசுவான் ஆனால் கார்த்திக்கை வருமாறு அழைத்த விசாலாட்சியின் வார்த்தையை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டான்.​

நினைவுகளில் நிறைந்திருந்த சரோவின் பொழுதுகள் அனைத்தும் இப்பொழுது ஞாபக அடுக்கிற்கு இடம் மாறியிருந்தது. முன்பு எந்தப் பொருளைப் பார்த்தாலும் சரோவின் நினைவு எழ, அதனை கடந்துவர பழகிக் கொண்டான்.​

கார்த்திக்கால் கடந்து மட்டுமே வர முடிந்தது. முழுதாக மறந்துவர முடியவில்லை. இதுவே இப்பொழுது அவனுக்கு போதுமானதாக இருந்தது.​

அவன் சென்ற வேலையும் முடிய இரண்டு வருடங்கள் கழித்துத்தான் ஊருக்குச் சென்றான். விசாலாட்சி அனைத்து முயற்சிகளையும் செய்து தலையால் தண்ணி குடித்து கார்த்திக்கை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தார்.​

ஆனால் இந்த முறை மிக மோசமாக திருமணத்தில் அடிவாங்கினான். அவனால் யாரையும் பார்க்கவே முடியவில்லை. அந்த நிகழ்வினாலே விசாலாட்சி எவ்வளவு அழைத்தாலும் ஊருக்கு செல்ல மறுக்கிறான்.​

அனைத்தையும் தொடர் சங்கிலியாக நினைத்துக்கொண்டே வந்தவனுக்கு இரண்டாம் முறை திருமணப் பேச்சி வார்த்தையில் அடிவாங்கியதை மட்டும் நினைக்கக் கூட முடியவில்லை. முதல் திருமணத்திலாவது அவனின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை. சரோவைக் கடந்துவர மட்டுமே கார்த்திக் திணறினான்.​

இரண்டாவதிலும் அவனின் பங்கு ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், முழுவதும் அவனின் தவறாக சித்தரிக்கப்பட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால் திருமணம் என்ற வார்த்தையை வெறுக்கத் தொடங்கியவன், அதற்கு முற்றுபுள்ளியும் வைத்துவிட்டான்.​

தன் மனதின் அலைப்புறுதலைக் குறைக்கத் தான் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என தொடங்கினான். அப்படித்தான் இருவருடங்கள் முன் அந்த அப்பார்ட்மென்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவான்.​

இதுவரை பார்த்த குழந்தைகளுடன் தோன்றாத ஒரு உணர்வு சித்துவிடம் மட்டும் முளைக்க அவனையும் சென்றவாரம் பார்க்காததினால் மனதில் தோன்றிய வெறுமை, இன்று ஸ்வேதா கூறிய சொற்கள் என அனைத்தும் சேர்ந்து அவனின் ஞாபக அடுக்கில் இருந்த சரோவின் அத்தியாயத்தை புரட்ட வைத்துவிட்டது.​

மழை விட்டிருந்தாலும் சிறு தூறல் போல், அவனின் வாழ்வில் இருந்து சென்றிருந்தாலும் அவ்வப்பொழுது ஞாபகத்தில் தோன்றும் சரோவை என்றும் போல் இன்றும் கடந்து செல்ல முயன்றான்.​

சனிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்தவன், மழையின் உதவியால் கழுவப்பட்டு இருந்த பார்க்கில் நடைப்பயிற்சி மேற்கொண்டான். அது அவன் எதிர்பார்த்ததை போல் அவனுக்கு புத்துணர்வை கொடுத்தது.​

எப்பொழுதும் போல் அவனின் வேலையை முடித்துவிட்டு சீக்கிரமே பார்க்கிற்க்கு விரைய, அவனை ஏமாற்றாமல் சித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்தான்.​

"ஹாய் கார்த்தி அங்கிள்!” என கையசைத்தவனை பார்த்தவனுக்கு மனதிற்குள் மென்சாரல் அடித்தது.​

"ஹாய் சித்து! போனவாரம் எங்க போனீங்க? விளையாட வரலையே?" என அவனின் உயரம் வரை குனிந்து வினவினான்.​

"பாட்டி வீட்டுக்கு" என சொல்லிவிட்டு பந்துடன் ஓடிவிட்டான்.​

எப்பொழுதும் பழைய ஞாபகங்கள் அவனை சூழ்ந்து கொண்டால் கடற்கரையையே தஞ்சமாக கொண்டிருப்பான். ஆனால் இந்தமுறை இந்த நான்கு வயது சிறுவனை பார்க்க வேண்டும் என மனதில் தோன்றியது. சித்துவை பார்த்த பின் மனதை அழுத்திய பாரம் மாயமாய் மறைவதைப் போல் உணர்ந்தான்.​

எப்பொழுதும் போல் அடம்பிடித்து கார்த்திக்குடன் விளையாடிய சித்து காவ்யாவுடன் சென்றுவிட்டான்.​

விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு தான், சித்துவிடம் அவன் அப்பாவைப் பற்றி விசாரிக்கவே இல்லை என்ற ஞாபகம் கார்த்திக்கிற்கு வந்தது. சரி நாளைக்கு பார்க்கும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என உறங்க சென்றான்.​

இதுவரை தனக்கு மட்டுமே வாழ்வின் திசை மாறியுள்ளது என எண்ணிக் கொண்டிருந்தவன், காவ்யாவின் வாழ்வும் விதி என்னும் சூறாவளியில் திசை மாறி உள்ளதை அறிந்துகொள்ளப் போகிறான்!​

- தொடரும்​

 
Top