எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 13

kani suresh

Moderator
கண்மணி அமைதியாக வினோத்தைப் பார்த்தவள் லேசாகச் சிரித்து விட்டு, "இவ்வளவு தூரம் நீங்க சொன்னதால உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். பத்மாமா உங்ககிட்ட சொன்னாங்களா, இல்லையான்னு தெரியல. மேக்ஸிமம் எங்க அண்ணி பத்மா அம்மாகிட்டச் சொல்லாம இருந்திருக்க மாட்டாங்க. அதனால, உங்ககிட்ட எதுக்கும் நான் ஒருமுறை சொல்லிடறேன், என் பக்கம் இருக்க விஷயத்தை" என்றாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு, ‘இவ என்ன சொல்லப் போகிறாள்’ என்று அமைதியாகப் பார்த்தான். "நீங்க சொல்ற மாதிரி நானும் வாழ வேண்டியவ தான். எனக்குக் கல்யாணம் மணமேடை வரை போச்சு" என்றாள்.

"புரியல, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா" என்றான் லேசான அதிர்ச்சியுடன்.

"இல்ல" என்று தலையாட்ட ஒன்றும் புரியாமல் அவளைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்றான்.

"மேடை வரைக்கும் போச்சு, ஆனால், கல்யாணம் ஆகல."

"புரியலமா, கொஞ்சம் புரியிற மாதிரி விளக்கமா சொல்லு."

"அப்போ பத்மாமா இதைப்பத்தி உங்ககிட்டப் பேசல."

"இல்ல, உங்க வீட்ல வந்து பேசினதா சொன்னாங்க. மத்தபடி வேற எதுவும் பெருசா சொல்லல, உங்களப் பத்தி" என்று விட்டு அமைதியானான்.

கண்மணி, கமலி பத்மாவிடம் சொன்ன அனைத்தையும் ஒன்று விடமால் வினோத்திடம் சொன்னாள்.

அவனுக்கும் அதிர்ச்சி தான். "அதுக்காக நீங்க ஏன் வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்கணும். அவருக்கு இந்த உலகத்துல அவ்ளோதான் வாழனும்னு இருந்திருக்கு. போய் சேர்ந்துட்டாரு. இதுல எங்க இருந்து உங்க ராசி வந்துச்சு. எதுக்காக நீங்க உங்களோட லைப் வேஸ்ட் பண்ணிட்டு இத்தனை வருஷம் அமைதியா இருக்கணும்?"

"என்னால அதுல இருந்து வெளியே வர முடியல சார்"

"புரியல மா, நீங்க என்ன பைத்தியமா? நீங்க என்ன பழைய காலத்து ஆளா ராசி, நட்சத்திரம் பார்த்துட்டு இருக்கீங்க?"

"இல்ல சார், நான் அதைப்பத்தி யோசிக்கல."

"புரியல, அப்புறம் எதுக்கு யோசிச்சீங்க? அதுல இருந்து இன்னும் வெளியே வரலைன்னு சொன்னீங்க இல்லையா?".

"சார் நான் வந்து வேற ஒருத்தவங்களைக் கல்யாணமே பண்ணிக்கிட்டாலும்" என்றவுடன் அவளை அமைதியாகப் பார்த்தான். மனதிற்குள் எதுவாக இருந்தாலும் பேசி முடித்தாக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

"நான் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வையுங்க. அவரு என்னை எந்த அளவுக்கு யோசிப்பார் என்று தெரியாது இல்லையா?"

"நீங்க சொல்றது எனக்குப் புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு."

சிரித்துக் கொண்டே, “உங்களுக்குப் புரியுது. ஆனா நான் சொல்ல வருவது அது தானா, அப்படின்னு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்கு. நான் இப்படி ஒரு பையனோட கல்யாண மணமேடை வரை போயிருக்கேன். அந்தப் பையன் கிட்டப் பேசி இருக்கலாம். பேச்சையும் தாண்டி அங்க எல்லாமே முடிந்து இருக்கவும் சான்ஸ் இருக்கு."

"நீங்க…"

"சார், நான் சொல்லிடறேன். எல்லாரும் அப்படிதான் நினைப்பாங்க என்று சொல்லல. நான் அப்படித்தான் இருந்தேன் அப்படின்னும் சொல்லல. அப்படி நினைக்கிற ஆளுங்களும் இருக்காங்க. எனக்கு வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆகிய பிறகு, உனக்கு இதுக்கு முன்னாடி கல்யாணத்துக்குப் பார்த்த மாப்பிள்ளை கூட கல்யாணத்திற்கு முன்னாடியே அவன் கூட இருந்தியா? இல்ல, அவன் கூட இப்படி எல்லாம் இருக்கணும்னு யோசிச்சியா? அப்படின்னு கேட்கும்போது, என்னோட மனநிலை எப்படி இருக்கும்னு யோசிங்க.

அதுக்கு நான் வருத்தப்பட்டு, கோவப்பட்டு எங்க அம்மா வீட்டுல வந்து உட்காருற நிலைமை வந்துச்சுன்னா… அந்த வலியை நான் அவங்களுக்குக் கொடுப்பதை விட, இது எவ்வளவோ பெட்டர் தானே. தன் பொண்ணக் கட்டிக் கொடுத்து வாழாவெட்டியா வந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கான்னு நினைக்கிறதை விட, தன்னுடைய பொண்ணாவே இருக்கா அப்படின்றது பரவாயில்லைன்னு தோணுச்சு.

இந்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான், நான் இதுவரை கல்யாணத்தைப் பற்றி யோசிக்காததிற்கு. எங்க வீட்ல இருக்கவங்களுக்கு என்னோட காரணம் புரியாமல் இருக்கலாம். ஆனா, என்னோட அண்ணி கமலிக்குப் புரியும். அதனால் தான் அவளும் எனக்கான நேரத்தைக் கொடுத்து அமைதியா இருக்கா? எங்க வீட்டுல எனக்கு ரொம்ப நாளாவே மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்காங்க."

"புரியல, உங்க அண்ணி…" என்று அமைதியானன்.

"அவ எனக்கு அண்ணி மட்டும் கிடையாது. என்னுடைய பெஸ்ட் பிரண்ட்.” தனக்கும் அவளுக்குமான உறவு, தன் அண்ணனுடன் ஆகிய திருமணம் அனைத்தையும் சொன்னாள் மேலோட்டமாக.

சிரித்தவன், "பரவால்ல. நல்ல பிரண்டு, நல்ல அண்ணி"

"எனக்கு அண்ணியா மட்டும் கிடையாது. அண்ணனுக்குப் பொண்டாட்டியாவும், எங்க வீட்டுக்கு மருமகளாவுமே கிடைச்சது ரொம்ப பாக்கியம். நாங்க கொடுத்து வச்சிருக்கணும்." என்றாள்.

சிரித்தான். "அதனால இப்ப என்னம்மா சொல்ல வரீங்க?"

"தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க எந்த ரீசனால கல்யாணம் வேணாம்னு சொல்றீங்க" என்று கேட்டாள்.

"நான் ஏற்கனவே வாழ்ந்திருக்கேன். புரியுது தானே? உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு. இப்ப நீங்க சொன்ன மாதிரியே இருக்கட்டும். நான் என்ன மாதிரி இருக்கற ஒரு பொண்ணக் கல்யாணம் பண்றது வேற. புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போற ஒரு பொண்ணுக்கு, ஆயிரம் சந்தோஷம் கனவு இருக்கும். ஏற்கனவே தன்னுடைய புருஷன் வேற ஒரு பொண்ணு கூட இருந்திருக்காரு, அப்படின்றது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு பெரிய வலியைத் தரும். நீங்க சொன்ன மாதிரி தான்" என்றவுடன்,

சிரித்துக் கொண்டே, "அப்போ நீங்க உங்கள மாதிரி இருக்கற பொண்ணப் பார்த்து ஏற்கனவே கல்யாணம் பண்ணி இருக்கலாமே சார், ஏன் உங்க வைஃபை மறக்க முடியலையா?"

"கொஞ்சம் அப்படி தான்".

"அதனால தான் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலையா?” என்றாள்.

அவளைப் பார்த்துச் சிரித்த வினோத், "மறக்கல அப்படின்னு சொல்லிட முடியாது தான். இருந்தாலும், யார் மேலயும் எனக்கு நம்பிக்கை இல்லம்மா?” என்றான் விரக்தியாக..

"புரியல சார். நம்பிக்கை இல்லனா என்ன காரணம்? அப்படி உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு வரப் போற பொண்ணு, ராகினியை அவங்களோட பொண்ணு மாதிரிப் பார்த்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?".

விரக்தியாகச் சிரித்தவன், "பொண்ணு மாதிரி இல்ல, பொண்ணாவே பார்த்துக்குறேன் அப்படின்னு சொல்லி என் பொண்டாட்டியோட தங்கச்சி வந்தா…"

"புரியல, அப்போ அவங்களை நீங்க மேரேஜ்…" என்று விட்டு அப்படியே நிறுத்த,

சிரித்துக் கொண்டே, "அம்மா உங்க வீட்ல எப்படியும் பேசி இருப்பாங்களே" என்று கேட்டான்.

"பேசி இருக்கலாம், என்னிடம் யாரும் சொல்லல நினைக்கிறேன். சரி நீங்க சொல்லுங்க" என்று கேட்டாள். அன்று பத்மா கண்மணி வீட்டில் பேசிய அனைத்தையும் சொல்லி முடித்தான்.

"என் பொண்டாட்டியோட தங்கச்சின்னு ஒருத்தி வந்தா, அவளால தான் என் பொண்டாட்டியும் இப்ப இந்த உலகத்துல இல்ல. என் குழந்தையையும் சாவடிக்கப் பார்த்தா…" என்று அனைத்தையும் சொல்லி முடிக்க,

அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் கண்மணி. அவளைப் பார்த்தவன் இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தான். அவள் அமைதியாகவே இருக்க, தனது பைக் சாவியை வைத்து அவளது கையில் தட்டினான். அதிர்ச்சியில் இருந்து மீண்டு, "ச..சா..சார்" என்று திக்கித் திணறியவள்,

"ப..ப..பச்சைக் குழந்தை சார் அது..." என்று சொல்ல,

சிரித்துக் கொண்டே, "இத்தனை வருஷம் கழிச்சு அதை என் வாயால கேட்கிற உங்களுக்கே இப்படி இருக்கே, என்னோட மொத்த உலகம், என்னுடைய ரத்தம், அதை என் கண்ணால நேருக்கு நேர்ல பார்த்தேன். அதுவும் என்னோட உசுரு, என்னோட பொண்டாட்டியைப் பறி கொடுத்து இருந்த நிலையில என் பொண்ண, அதுவும் என் பொண்டாட்டியோட தங்கச்சியே கொல்லப் பாக்குறத கண்ணு முன்னாடி பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? அதனால தான் எனக்கு யார் மேலவும் நம்பிக்கை வரல." என்றவுடன்,.


"அதனால்தான் என்னையும்…" என்று விட்டு அமைதியாக இருந்தாள்.

"இருக்கலாம் மா… அடிபட்ட நான் நாளா பக்கமும் யோசிக்க தான் செய்வேன், இல்லையா? அதுதான் உண்மையும் கூட. அதுக்காக நீங்க அப்படித்தான் பண்ணுவீங்க அப்படின்றது கிடையாது. ஒரு எச்சரிக்கை உணர்வு எனக்குள்ள இருக்கணும் இல்லையா?" என்றான் தழுதழுத்த குரலுடன்.

"கண்ணு முன்னாடி ஒருத்தி, அதுவும் கைக் குழந்தையா, தன்னோட உலகமா இருக்கற பிள்ளையைக் கழுத்தை நெரிப்பதையும், உசுருக்குப் போராடுவதையும் பாத்திருக்கீங்க. சோ யாரை நம்பியும் விடக் கஷ்டமா தான் இருக்கும் என்று எனக்குப் புரியுது.” என்றாள்.

"அதனால்தான் சொல்றேன். என் வாழ்க்கைக்குள்ள யாரையும் கொண்டு வர அளவுக்கு நான் யோசிக்கல. எனக்காக என்று இல்லனாலும், என் குழந்தைக்காக என்று அம்மா சொல்றாங்க. அவங்க அம்மாவா மகனோட வாழ்க்கைக்கு யோசிக்கிறாங்க, தப்பு இல்ல.

ஆனா, எனக்காகவும் சரி, என் பொண்ணுக்காகவும் சரி… என் லைஃப்ல ஒரு பொண்ணக் கொண்டு வர அளவுக்கு நான் ஸ்ட்ராங்கா இல்லன்னு நினைக்கிறேன். அப்படி ஒருத்தி எங்க லைஃப்ல வரவும் வேண்டாம். முடிஞ்ச அளவுக்கு என் பொண்ணை நான் பாத்துக்குறேன். அப்பாவா நான் உசுரோட தான் இருக்கிறேன். என்னால் என் பொண்ணக் கடைசிக் காலம் வரைக்கும் பார்த்துக்க முடியும் அப்படின்ற நம்பிக்கை இருக்கு."

"கொஞ்சம் நீங்க தப்பா எடுத்துக்கலனா…" என்று விட்டுத் திரும்பவும் ஆரம்பித்தாள்.

"உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு கண்மணி. வாழ வேண்டிய பொண்ணு நீ. உனக்கான வாழ்க்கையைப் பாரு, இங்க இருக்கற எல்லா ஆம்பளைங்களுமே தப்பானவங்க கிடையாது கண்மணி" என்றான்.

"அதேதானே சார், நான் உங்களுக்கும் சொல்றேன். இங்க இருக்கற எல்லாருமே தப்பானவங்க கிடையாது சார். அது…” என்று இழுத்து விட்டு, “நான் உங்க பொண்ணுக்கு அம்மாவா இருப்பேன் அப்படின்னு சொல்ல முடியாது சார், ஒரு பிரண்டா இருப்பேன். என்ன செய்யணும் நினைக்கிறேனோ அதைச் செய்வேன். என்னை நம்பலாம் சார்.

உங்களுக்கும் ஒரு உறவை ஏத்துக்கிற மனநிலை இல்லை. நானும் ஒரு உறவை ஏத்துக்கிற மனநிலையில் இல்லை. கொஞ்சம் யோசிங்க." என்று விட்டு அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளைப் பார்த்து முறைத்தவன், "திரும்பத் திரும்ப என்னைக் கத்த வைக்காதீங்க கண்மணி. இப்பவும் சொல்றேன், உங்களுக்கு ராகி மேல பாசம் இருக்கலாம். அவளுக்கும் உங்க மேல பாசம் இருக்கலாம். நீங்க நல்லவங்களாவே இருக்கலாம். அவள நல்லாவே பாத்துக்கலாம். இது எதுவும் பிரச்சனை இல்லை. ஆனா, உங்களுக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. உங்க வயசுக்கு நீங்க பார்க்க வேண்டிய நல்லது நிறையவே இருக்கு. அது எல்லாத்தையும் நான் ஓரளவுக்கு வாழ்ந்து பாத்துட்டேன்…"

"ஆனா, நீங்க இன்னும் வாழ்ந்து முடிக்கலையே சார். பார்த்து இருக்கீங்க, ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் அவ்வளவுதான். அவ்ளோதான் சார், உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்" என்றாள்.

"கண்மணி" என்று குரலை உயர்த்தினான்.

"ப்ளீஸ் சார் புரிஞ்சுக்கோங்க, நானும் உண்மையாவே ஃபிசிக்கலா ஒருத்தர் கூட ரிலேசன்ஷிப் வச்சிக்கிற அளவுக்கு இல்லை. நீங்களும் அந்த மனநிலையில இல்லை. நம்மளப் பெத்தவங்களுக்காகவும், நீங்க உங்க குழந்தைக்காகவும், நான் என்னைச் சுற்றி இருக்கறவங்களுக்காகவும், நாம கல்யாணம் பண்ணிக்கலாமே சார். நீங்க உங்க லைஃப் பார்க்கலாம். நான் ராகினியை என் பொண்ணா பாத்துப்பேன். அவ்வளவுதானே சார், எனக்கு இதுல பெருசா எதும் தப்பு இருக்கிற மாதிரித் தெரியல."

"உங்க வீட்டில உன்னை அம்மாவுக்கு மேல பார்த்துட்டு இருக்கற உங்க அண்ணன் பையன் இருக்கான். ஞாபகத்துல இருக்கா கண்மணி…"

"வேற எங்கயாச்சும் நீங்க சொல்றது போல எனக்குனு ஒரு லைஃப் பாத்துட்டுப் போனாலும், இருக்கே சார்… எனக்கு ஏதோ உங்க மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு சார். அப்படி நான் உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு உங்க வீட்டுக்கு வந்தாலும் கூட, நான் கவினைத் தினமும் பார்க்க முடியும். ஆனா அவன் என்கிட்டச் சொன்ன விஷயமே வேற" என்று அன்று அவன் சொன்னதைச் சொன்னாள். ராகிக்கு அம்மா வேணும் என்பதை மறைத்து மற்ற அனைத்தையும் சொன்னாள்.

"நீ அங்க கல்யாணம் பண்ணிட்டுப் போனா, நான் உன்னை டெய்லியும் பார்ப்பேன் அத்தை" என்று அவன் சொன்னதைச் சொல்ல,

சிரித்தவன், "இந்த வயசுல ரொம்பத் தெளிவு. எல்லாம் உன்னோட வளர்ப்பு" என்றான்.

"அப்படி எல்லாம் சொல்லிட முடியாது சார்" என்றாள்.

சிரித்தவன், "சரி மா, பார்ப்போம். எதையும் அவசர அவசரமா முடிவெடுக்க வேணாம், யோசிப்போம்."

"யோசித்து தான் சார் உங்ககிட்டப் பேசணும்னு முடிவு பண்ணி இருக்கேன். எனக்கான டைம் வீட்ல கொடுத்து தான் இருந்தாங்க."

"எனக்கும் அம்மா டைம் கொடுத்தாங்க, இல்லை என்று சொல்லல கண்மணி, இருந்தாலும்…"


"நீங்க இப்பக் கூட, இந்த நிமிஷம் என் வாழ்க்கைக்காக யோசிக்கிறீங்க சார். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க."

"நீயும் ராகினியை யோசிக்க தான செய்யற…"

"சார், நீங்க… எப்படிச் சொல்றது? நான் இல்லனா ராகினிக்கு வேற ஒரு நல்ல அம்மா கூட கிடைப்பாங்களே சார்…"

"வேகமாக அப்படியா சொல்ற" என்றான். அவள் அமைதியாக இருக்க,

"பார்க்கலாம், நான் வீட்ல பேசுறேன்" என்று விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தான்.

"சார் ஒரு நிமிஷம்" என்றாள்.

"என்ன கண்மணி" என்றான்.

“இல்லை நான் மேற்கொண்டு…" என்று விட்டு நிறுத்தி, "வேலைக்குப் போகலாம் தானே, அதுல எதுவும் உங்களுக்குப் பிரச்சனை இல்லையே? அதுபோலக் கவினஒ பத்தி…”

"அப்புறம் என்ன? டெய்லி கவினை நீ பாக்க தான போற, பேச தான போற, ராகினியை ஸ்கூலில் விடப் போகும் போது நீ அங்க போகலாம். அவன் இங்க வரலாம். வேலைக்கு, அது உன்னோட தனிப்பட்ட விஷயம் விருப்பம் கண்மணி. நீ எவ்வளவு நாளைக்கு வேலைக்குப் போகணும்னு ஆசைப்படுறியோ போகலாம். அதுல எந்தத் தடங்கலும் வராது. அம்மாவும் போக வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. நானும் சொல்ல மாட்டேன், ஓகே வா… நான் அம்மாகிட்டப் பேசுறேன். பேசிட்டுச் சொல்றேன்." என்றான்.

"ஓகே சார், சரி நேரம் ஆகுது. வீட்ல தேடிட்டு இருப்பாங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கமலியிடம் இருந்து போன் வந்தது.

"சொல்லு அண்ணி" என்றாள்.

"கவினைத் தானடி ஸ்கூலுக்கு விடப்போன, வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா? இன்னைக்கு லீவு தானே? ஆபீஸ் கூடப் போற வேலை இல்லையே? காலை சாப்பாடு சாப்பிடலையே" என்று பொரியத் தொடங்கினாள்.

"வரேன். வர வழியில ஒரு பிரண்டைப் பார்த்தேன். பேசிட்டு இருக்கேன்." என்றாள்.

"பிரண்டா? அது யாரு டி எனக்குத் தெரியாம…" என்று நிறுத்தினாள் கமலி.

அவளிடம் சொல்லத் தயக்கமாக இருக்க, "நான் வீட்டுக்கு வந்து சொல்றேன் கமலி" என்று விட்டு ஃபோனை வைத்தாள் கண்மணி.

வினோத் லேசாகச் சிரித்தான்.

"பிரண்ட் என்று சொல்றீங்க, நான் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே? அவ்வளவு தயக்கமா" என்றான்.

அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, "சரி சார், நேரம் ஆகுது. நான் வீட்டுக்குப் போறேன். போன் வேற பண்ணிட்டா. இப்போ கேரிங்கா இருக்கா, நான் போற வரை சாப்பிடாமல் வேற இருப்பா" என்றாள் அக்கறையாக.

"எத்தனை மாசம்?" என்றான் வேகமாக.

"இப்பதான் கன்பார்ம் பண்ணி இருக்காங்க" என்றாள்.

"சரி மா, நீ கிளம்பு" என்று அவளை அனுப்பி வைத்துவிட்டுப் போகும் கண்மணியைப் பார்த்துக் கொண்டு நின்றான் வினோத்.

'இந்தப் பொண்ணுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை அழிச்சுக்கப் பார்க்குது. வாழ வேண்டிய புள்ள, அதோட குடும்பத்துக்காகவும், என் குடும்பத்துக்காகவும் யோசிக்குது' என்று மனதிற்குள் நினைத்தான்.
 
Top