எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கண்ணாளனே 21

kani suresh

Moderator
கண்மணி அதிர்ச்சியுடன் வினோத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க, லேசாகச் சிரித்தவன், "ஒன்னும் இல்ல" என்றான்.

கண்மணி அவனைப் பாவமாகப் பார்க்கச் சிரித்த வினோத், "சரி வா, நேரம் ஆகுது. வீட்டுக்குப் போகலாம். அம்மாவும், ராகியும் தனியா வீட்டுல இருக்காங்க" என்றான்.

அவள் அவனை முறைத்து விட்டு எழுந்து கொள்ள முயற்சி செய்ய அவளது கைப்பிடித்து எழுப்பி விட்டான். "எனக்கு எழுந்து வரத் தெரியும்" என்று அவனது கையைத் தட்டிவிட, "உன்னோட கோவம்கூடச் சின்னப்புள்ள தனமா தான் இருக்கு" என்று முறுவலித்தான். முறைத்துக் கொண்டே அவனுடன் நடந்து வந்தாள். இருவரும் வீட்டிற்குச் செல்ல பத்மா சமையலை முடித்திருந்தார். "அத்தை, நான் வந்து செஞ்சு இருப்பேன்ல. எதுக்கு நீங்க இவ்வளவு கஷ்டப்படுறீங்க" என்று கேட்டாள்.

"ஒரு நாள் சமைக்கிறதுல ஒன்னும் ஆகிடாது கண்மணி. அது மட்டும் இல்லாம அப்படியே ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் கஷ்டமா இருக்கு. அப்பப்ப சின்னச் சின்ன வேலை செய்யணும்" என்றார். சரி என்று விட்டு அமைதியாகி விட்டாள்.

"சரி, நீங்க இரண்டு பேரும் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க, சாப்பிடலாம்." என்றார்.

சரி என்று விட்டு கண்மணி ரூமுக்குள் நுழைய, வினோத் ராகினியிடம் சென்று, "ராகி மா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டான்.

"அப்பா, பாப்பா குட்கேர்ள் சமத்தா ஹோம் ஒர்க் முடிச்சிட்டேனே" என்று பல்வரிசை தெரிய புன்னகைத்தாள்.

அப்பொழுது கண்மணியும் முகம் கழுவிக்கொண்டு வந்து, "என் பொண்ணு எப்பயுமே சமத்துதான். குட்கேர்ள் தான். உங்க அப்பா மாதிரி பேட் பாயா" என்று ராகினியைத் தூக்கிக்கொண்டு அவளைக் கொஞ்ச,

வினோத் தான், "சந்தடி சாக்கில் என்னைக் குற்றம் சுமத்துறா பாரு. நாங்க என்ன பேட் பாயாம்?" என்று கேட்டான்.

"போய் பிரஷ் ஆயிட்டு வாங்க, ஃபர்ஸ்ட் சாப்பிடலாம். அப்புறமா வச்சுக்கலாம் நம்ம பஞ்சாயத்த…" என்றாள். "எதே பஞ்சாயத்தா?" என்று சிரித்து விட்டுத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.

பிறகு நால்வாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, எங்க போயிட்டு வந்தீங்க என்று பத்மாவும் கேட்கவில்லை. கண்மணியும் சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் கண்மணி, ராகினி ஹோம்ஒர்க் முழுதும் முடித்து விட்டாளா என்று பார்த்துவிட்டுக் கதை சொல்லி அவளைத் தூங்க வைத்தாள். வினோத் அதுவரை தன்னுடைய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் குழந்தை தூங்கிய பிறகு, "என்னமா பஞ்சாயத்து என்கிட்ட உனக்கு?" என்று கேட்டான்.

"ஒரு பஞ்சாயத்தும் இல்லையே!" என்று சொன்னாள்.

"நீதான சொன்ன?" என்று சிரித்துக் கொண்டே கேட்க,

"ஒன்னும் இல்ல, தூங்குங்க நேரம் ஆகுது. நாளைக்குக் காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்லையா?" என்றாள்.

"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு" என்றான்.

"அப்ப வேலையப் பாருங்க, என்ன வம்பு இழுக்காம" என்று விட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொள்ள, "எதே, நான் உன்ன வம்பு இழுக்கிறேனா?"

"அப்புறம், நானா உங்ககிட்ட வந்தேன்" என்று விட்டு லேசான சிரிப்புடன் படுத்துக்கொள்ள, "பாவி" என்று சிரித்து விட்டு வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

அரைமணி நேரத்துக்குப் பிறகு அவளைப் பார்க்க கண்மணி அசந்து தூங்கி இருந்தாள். அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் வலி உண்டாகியது.

'சின்னப்பெண், இந்த வயதில் எத்தனை வலிகளைச் சுமந்து கொண்டிருக்கிறாள். உண்மையாவே உன்னைக் கமலியை விடப் புரிஞ்சி வச்சிருக்கவங்க வேற யாருமே இல்லடி, அவ உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணித் தரணும் என்று முடிவு பண்ணி வந்த அப்பவே, என்னைத் தனிப்பட்ட முறையில் பார்த்து, "ஏதோ ஒன்னு உன் லைஃப்ல இருக்கு, அந்த விஷயத்தால் நீ ரொம்பவே பாதிச்சிருக்க. ஆனா, அது என்னன்னு எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் தெரியாது. உங்ககிட்டக் கல்யாணத்துக்குப் பிறகு அவளே சொன்னா கேட்டுக்கோங்க.
ஆனா, பெருசா ஏதும் இருக்காதுன்னு நினைக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா மட்டும் அவ கழுத்தில் தாலி கட்டுங்கன்னு" வந்து கேட்டா. இப்போ கூட உன் உடம்பு நடுங்குதுனு அவ என்னைப் பார்த்த பார்வை, அது என்னன்னு தெரிஞ்சுகிட்டிங்களா? என்ற மாதிரி தான் இருந்துச்சு. அவளுக்குன்னு ஒரு குடும்பம் வந்ததுக்கப்புறம் கூட, ஃப்ரெண்டாவோ இல்ல, நாத்தனாராவோ கூட உன்னப் பத்தி இவ்ளோ யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உனக்காக யோசிக்கிறா' என்று மனதிற்குள் எண்ணியவனுக்கு லேசாகக் கண்கள் கலங்கியது.

நேரத்தைப் பார்த்தான். 'கமலியிடம் சொல்லலாமா?' என்று யோசித்தான்.

‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்துப் பார்க்க கமலியிடம் இருந்து நான்கு, ஐந்து மெசேஜ் வந்து இருந்தது. அதைப் பார்த்தவனுக்கு உதட்டுக்குள் லேசாகச் சிரிப்புத் தோன்ற, 'தூக்கம் கூட வர மாட்டேங்குது உனக்கு, அவளைப் பத்தித் தெரிஞ்சுக்காம' என்று சிரித்து விட்டு போன் பண்ணலாமா, வேண்டாமா?’ என்று யோசித்தவன் முதலில் மெசேஜ் செய்திருந்தான்.

அடுத்த நொடி கமலியே போன் செய்திருக்க, வேகமாக போனை சைலண்டில் போட்டவன், லேசாக நகர்ந்து வந்து போன் பேச ஆரம்பித்தான்.

"தூங்கலையா கமலி, அசதியா இல்லையா?" என்று கேட்டான்.

"இல்ல அண்ணா, தூக்கம் வரல. நீங்க போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தேன்.” என்று விட்டு அமைதியாகி விட, "என்ன கமலி சொல்லு?" என்றான்.

"அண்ணா, நீங்க தான சொல்லணும்" என்று விட்டு அவள் அமைதியாக லேசாகச் சிரித்தான். "அண்ணா…" என்றாள் தயக்கத்துடன். தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒரே மூச்சில் வினோத் சொல்லி முடிக்க, இங்குக் கமலிக்குத் தொண்டை அடைத்தது.

"அண்ணா, நீங்க அவளைத் தப்பா நினைக்கிறீங்களா?” என்று லேசான அழுகையுடனே கேட்க, "என்னைப் பார்த்தா உனக்கு அப்படிதான் தெரியுதா கமலி, அப்புறம் எந்த நம்பிக்கையில் அவளை எனக்குக் கட்டி வச்ச?"

"அப்படி இல்ல அண்ணா, என்ன இருந்தாலும் இப்போ இந்த நிமிஷம் உங்களுக்குச் சொந்தமான ஒன்னு அப்படின்னு வரும்போது..." என்று தடுமாறினாள்.

சிரித்தவன், "ஒத்துக்குறேன், எனக்கு சொந்தமான ஒன்னுதான். அதுக்காக, அவன் அவகிட்டத் தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சான். அவளே தன்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்திகிட்டா. இன்னொரு விஷயம் அந்த இடத்தில்…” என்றான்.

ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, “அப்படி அவன் கண்மணிகிட்டத் தப்பா நடந்து இருந்தாலுமே கூட, அதுல அவளோட பங்கு எதுவுமே கிடையாது. சரியா? அப்படிப் பார்த்தா நான் ஏற்கனவே ஒரு பொண்ணு கூட வாழ்ந்து இருக்கேன் கமலி, தெரிஞ்சு தான நீ எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வச்சிருக்க."

"ஆனா, அ..அ..அது வந்து..."

"அது வேற, இது வேறனு சொல்லாத. நான் தெரிஞ்சு ஒரு பொண்ணத் தொட்டு இருக்கேன் அப்படின்னும் போது, அவ தெரியாம ஒரு பையனால் பாதிக்கப்பட்டிருக்கா, அப்படின்னு நினை… அது வெறும் உடல் மா... இங்கே உடல் மட்டும்தான் வாழ்க்கை இல்ல. இன்னொரு விஷயம், உன் பிரண்டு இந்த நிமிஷம் வரைக்கும், உன் பிரண்டா தான் இருக்கா… அவளுக்கு எதுவும் நடக்கல." என்றான்.

தொண்டையடைக்க வேகமாகத் தண்ணி எடுத்துக் குடித்தவள், "சரி அண்ணா, நாளைக்குப் பேசலாம் தூங்குங்க" என்றாள். “நீ தூங்கு, எதையும் யோசிக்காத நான் இருக்கேன். உன் உடம்பப்பாரு, இனி கண்மணி என் பொறுப்பு. என்கிட்ட நம்பி தானே ஒப்படைச்சிருக்க, அவளை நல்லாப் பார்த்துப்பேன்” என்றான்.

"நீங்க நல்லாப் பார்த்துப்பீங்க என்று நம்பிக்கை இருக்கு. ஆனா…" என்று விட்டு நிறுத்த, “எனக்கு இப்பவும் சொல்லத் தெரியல கமலி, நீ கேட்க வருவதற்கு என்கிட்ட இப்போதைக்குப் பதில் கிடையாது.” என்று வைத்து விட்டான்.

கமலியிடம் பேசிவிட்டு வந்த வினோத் கண்மணியை ஒரு சில நொடி பார்த்தான். அவளின் சிறுசிறு அசைவுகளையும் ரசிக்கிறானே தவிர, அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டானா? என்று கேட்டால், அதற்கு அவனிடம் பதில் இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். பெருமூச்சு விட்டவன், 'பார்க்கலாம்' என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டு வந்து படுத்து விட்டான்.

மறுநாள் விடியலில் கண்மணி சமைத்துக் கொண்டு இருக்க, "என்னடா ராகிமா, உங்க அம்மா பீன்ஸ் கேரட் எடுத்து வச்சி இருக்காங்களே, பொரியலுக்கா? இல்ல வெஜ் ரைஸா?" என்று கேட்க, "இல்லை" என்று உதட்டைப் பிதுக்கினாள்.

"அப்புறம் என்ன?" என்று கேட்க, "கிச்சடி செய்யப் போறாங்களாம்" என்று மெதுவாக அவனது காதில் வந்து சொன்னாள்.

"கிச்சடி பிடிக்குமாடா ராகிமா உனக்கு? அப்பா கிட்டப் பிடிக்காதுனு சொல்வீங்க" என்று கேட்க, "இல்லை" என்பது போல் தலையாட்டியவள், "அம்மா தான் கிச்சடி சாப்பிடச் சொன்னாங்க, மாவு இல்லையாம்" என்று மெதுவாகச் சொல்ல,

"அப்பாகிட்ட மட்டும் எனக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது செய்யாதன்னு சொல்லுவீங்க. உங்க அம்மாகிட்ட மட்டும் அமைதியாகச் சாப்பிடுறீங்களோ? ரொம்ப தான்டா தங்கம் பண்றீங்க. அம்மா என்றால் மட்டும் செல்லமோ? அப்பா செல்லம் இல்லையா, அப்போ…" என்றான்.

"அப்பா செல்லமும் தான்" என்று அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"பேசறதை விட்டுட்டுக் காய் கட் பண்ணித் தரீங்களா?"

"வரவர உன்னோட அம்மா என்னை ரொம்ப மிரட்டிட்டே இருக்கா தங்கம்" என்று சொல்ல லேசாக வாய் பொத்திச் சிரித்தாள் ராகினி.

"கட் பண்ணிட்டீங்களா, இல்லையா?" என்று மீண்டும் ஒருமுறை கண்மணி குரல் கொடுக்க, சிறு சிறு துண்டுகளாக கட் செய்த கேரட்டைத் தூக்கி கண்மணி மீது போட்டான்.

"கொஞ்ச நேரம் அமைதியா இருடா ராகிமா" என்று ராகியிடம் சொல்லிவிட்டு கண்மணி சமையலில் ஈடுபட, இன்னொரு கேரட் துண்டை எடுத்து கண்மணி மீது போட, "சும்மா இரு ராகிமா" என்றாள். இரண்டு, மூன்று முறை இப்படியே தொடர, "அமைதியா இருனா இருக்க மாட்டியா? இது என்ன விளையாட்டு?" என்று கரண்டியுடன் அவளை மிரட்டிக் கொண்டே திரும்ப ராகினி சிரித்தாள்.

வினோத் தன் கையில் இருக்கும் கேரட் துண்டைப் பார்த்து விட்டுக் கையைக் கீழே இறங்கிவிட்டு அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். “ராகினி” என்று வேகமாகத் திரும்பிய கண்மணி ஒரு நிமிடம் அமைதியாகி விட்டு, "இ...இல்ல, அ..அது ராகிமானு நினைச்சுட்டு" என்று திணறினாள்.

அவன் அவளைப் பார்த்துச் சிரிக்க ராகினி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள்.

"காய் எவ்வளவு விலை விக்குது, தூக்கிப் போட்டு இப்பதான் விளையாடிட்டு இருக்கீங்க? குடுங்க, சின்னப் பிள்ளனு நினைப்பு" என்று கட் பண்ணி வைத்திருக்கும் காய்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் செல்ல, "அடிப்பாவி, என்ன பேச்சுப் பேசிட்டுப் போறா, மொத்தத்துக்கே 1 கேரட் கூட இருக்காது" என்று புலம்பியவன், “ஆனாலும், வரவர ரொம்பப் பண்றடி" என்று அவளை ரசனையாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அருகில் வந்த பத்மா, "என்னடா மவனே, என் மருமகளையே குறுகுறுன்னு பார்க்கிற" என்று அவன் தோளில் கை வைக்கப் பதற்றத்துடன் திரும்பி தன் தாயைப் பார்த்தான்.

"வினோ, கண்மணி பத்தி என்ன நினைக்கிற" என்றார்.

தன் தாயை அமைதியாகப் பார்த்தவன், "நான் நினைப்பதற்கு என்னமா இருக்கு?"

"நான் கேக்குறது உனக்குப் புரியுதா டா வினோ" என்றார்.

லேசாகப் புரிகிறது என்பது போலத் தலையசைத்தவன், வேறு எதுவும் பேசாமல், “நேரம் ஆகுது. ராகி குட்டி, வாங்க ஸ்கூலுக்குக் கிளம்பலாம்" என்று ராகினியைத் தூக்கிக்கொண்டு சென்று விட்டான்.

"என்கிட்ட இருந்து நழுவப் பாக்குறியா, இல்ல. உன் மனசுகிட்ட இருந்து நழுவப் பாக்குறியா டா வினோத்" என்று கேட்க, அவனிடம் தான் பதில் இல்லை. அவனுக்கே அதற்குப் பதில் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறிது சிறிதாகக் கண்மணியிடம் நெருங்கி இருக்கிறான். அவனுக்குத் தெரிகிறது. அந்தச் சிறு சிறு நெருக்கம் கூட அவனுக்குப் பிடித்து தான் இருக்கிறது. இருந்தாலும், தான் மட்டும் முடிவு செய்ய வேண்டியது இல்லையே என்று உணர்ந்தவன் அமைதியாக நகர்ந்தான்.

'அவளுக்கான நேரம் கொடுக்க வேண்டும்' என்று மட்டுமே மனதிற்குள் எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டான். இருவரும் ஸ்கூலுக்குக் கிளம்பி வெளியில் வர, நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டுக் கிளம்ப, "சரி அத்தை, மதியம் சாப்பிட்டு மாத்திரை ஒழுங்காப் போடுங்க" என்று விட்டு ராகினியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து வண்டியை எடுக்க வண்டி பஞ்சர் ஆகி இருந்தது.

"இப்போ என்னம்மா பண்றது?” என்று ராகினி கேட்க, “இருடா ராகிமா, ஆட்டோ பிடிச்சுப் போகலாம்" என்றாள்.

"என்ன? கிளம்பிட்டு அம்மாவும், புள்ளையும் இங்கவே நின்னு பேசிட்டு இருக்கீங்க, நேரம் ஆகலையா?" என்று சிரித்துக் கொண்டே அவர்களின் அருகில் வினோத் வர, "அம்மா வண்டி பஞ்சர்பா" என்று உதட்டைப் பிதுக்கினாள் ராகினி.

"என்ன பண்ணலாம்னு ஐடியாவில் இருக்கீங்க?" என்று கேட்டான்.

"ஒரு ஆட்டோ புடிச்சுத் தாங்க. என்ன பண்ணலாம்னு இருக்கீங்கன்னு கதை கேட்டுட்டு இருக்கீங்க" என்று அவனை முறைத்தாள்.

"ஏன் மேடம், என்கூட எல்லாம் வர மாட்டீங்களா? நான் கொண்டு போய் விட மாட்டேனோ?" என்றான்.

"உங்களுக்கு லேட் ஆகாதா? எங்களை விட்டுட்டு நீங்க ஆபீஸ் போறதுக்கு"

"அப்படின்னு நான் உன்கிட்டச் சொன்னேனா?"

"அப்போ கவின்?" என்றாள் ராகினி.

"கவினையும் கூட்டிட்டுப் போலாம் குட்டி" என்று சொல்லும்போதே,

"இல்ல, இல்ல. உங்களுக்கு லேட் ஆயிடும். நான் அண்ணனுக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன். நம்ப மூணு பேர் மட்டும் போகலாம், சொன்னா கேளுங்க வினோ" என்றாள்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். எப்போதாவது ஒருமுறைதான், அவளையும் மீறி 'வினோ' என்று அழைக்கிறாள் என்று எண்ணி விட்டு அமைதியாக இருக்க, கண்மணி சங்கருக்கு போன் செய்து விவரத்தைச் சொல்ல, அவனும் தானே கொண்டு வந்து விட்டுவிட்டு மாலையும் கூப்பிட்டுக் கொள்வதாகச் சொன்னான்.

"சரி நேரம் ஆகுது, கிளம்புங்க" என்றவுடன் ராகினி முன்னால் உட்கார்ந்து கொள்ள கண்மணி பின்னால் உட்கார்ந்து கொண்டாள்.

"மாலை நானே இருவரையும் வந்து அழைத்துக் கொள்கிறேன்" என்று விட்டு வண்டியை எடுத்தான்.

"இல்ல, உங்களுக்கு நேரம் ஆகும். அதெல்லாம் வேணாம், நான் ஆட்டோ புடிச்சோ, இல்ல பஸ்லயோ வந்துடறேன். நானே ராகிமாவையும் கூட்டிக் கொண்டு வந்துக்கிறேன்" என்றாள்.

அவன் பின்னால் திரும்பி முறைக்க, "சரி" என்று அமைதியாகி விட்டாள். அவனுக்கு லேசாகச் சிரிப்பு தோன்றி மறைந்தது. அவளைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வண்டியை ஓட்ட, ஒரு ஸ்பீட் பிரேக்கர் வர, அவன் அவளிடம் வாதாடிக் கொண்டே அதில் ஏறி இறங்க, கண்மணி வேகமாக வினோத்தின் மீது மோதி நின்றாள்.

"முன்னாடி பார்த்து வண்டி ஓட்ட மாட்டீங்களா?" என்று முறைக்க,

"பார்த்து தான் மா வண்டி ஓட்டுறேன். அதனாலதான்" என்றவுடன்,

"என்னத்தப் பார்த்து ஓட்டுனீங்க?" என்று கண்மணி முனக, வாய் பொத்திச் சிரித்தாள் ராகினி. "ராகிமா, வர வர நீ அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணவே மாட்ற. உன் அம்மாக்கு தான் சப்போர்ட் பண்ற. நீ உன் அம்மா கட்சியா?" என்றான் சிறு பிள்ளையாக.

"ஆமா, அம்மா என் செல்ல அம்மா" என்றாள் சிரிப்புடன். "ஏன்? அப்போ அப்பாவ எல்லாம் பார்த்தா செல்ல அப்பாவா தெரியலையா?" என்று கேட்க, கண்மணிக்குச் சிரிப்பு வர வேகமாகவே சிரித்து விட்டாள்.
அவளை முறைத்துவிட்டுத் தன் மகளைப் பார்க்க, "அம்மா டெய்லியும் கதை சொல்றாங்க, நீங்க எனக்குப் புடிச்ச மாதிரி கதை சொல்லி இருக்கீங்களா?"

"ஏன் உங்க அம்மா மட்டும்தான் சொல்லுவாங்களா? அப்பா உனக்குக் கதை சொன்னதே இல்லையா?"

"எது? நீங்க சொன்னதுக்குப் பேரு கதையா? அம்மா கதை சொன்னா எப்படி ஜாலியா இருக்கும் தெரியுமா? என்னையும் கவினையும் தினமும் ஸ்கூல் கூப்பிட்டுப் போகும்போது, வீட்டுக்கு வரும்போது, தூங்க வைக்கும் போது என்று அம்மா எப்பவும் புதுப்புது கதையா வெரைட்டி வெரைட்டியா எங்களுக்குப் புடிச்ச மாதிரி ஜாலியா சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா நீங்க எப்பவுமே போர் அடிக்கிற மாதிரி ரெண்டே ரெண்டு கதை வச்சுக்கிட்டு அதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லுவீங்க" என்று சிரித்தாள்.

"அது சரி, நான் என்ன பண்றது? எனக்குத் தெரிந்ததே அந்த ரெண்டு கதை தான்.”

“ஏன் உனக்குப் பாட்டி சின்ன வயசுல கதை சொன்னதே இல்லையா அப்பா" என்றாள்.

"உங்க பாட்டி எனக்குக் கதை சொன்னதே இல்லையே?" என்று உதட்டைப் பிதுக்க,

"பொய் சொல்லாத அப்பா… பாட்டி எனக்கு டெய்லி நிறையக் கதை சொல்றாங்க. உனக்கு எப்படிச் சொல்லாம இருந்து இருப்பாங்க? நீ ஒழுங்காவே கதை கேட்டு இருந்திருக்க மாட்ட. நீ சின்ன வயசுல ஒழுங்காவே படிக்க மாட்டியாம், ரொம்ப அடம் பண்ணுவீங்கனு பாட்டி சொல்லிருக்காங்க. நீங்க ரொம்பச் சேட்டை பண்ணுவீங்களாம், நீ உன் அப்பா மாதிரி இல்லடா ராகி குட்டி, சமத்துப் பொண்ணுன்னு சொல்லி இருக்காங்க பாட்டி" என்றவுடன் கண்மணி சிரித்து விட்டாள்.

அம்மா, மகள் இருவரையும் முறைத்தவன், "உன் அம்மா கூட சேர்ந்து உனக்கு வாய் ஜாஸ்தி ஆயிடுச்சு" என்று ராகினியின் காதைத் திருகினான்.

"இது என்ன பழக்கம்? சின்னப் புள்ள காதைத் திருகறீங்க, வலிக்காது?" என்று முறைத்தாள்.

"அது சரி, அம்மாவைப் புள்ளையும், புள்ளைய அம்மாவும் விட்டுக் கொடுத்துறாதீங்க" என்று விட்டுச் சிரித்தான். ராகினி ஸ்கூலும் வந்து விட, அவளை உள்ளே சென்று கண்மணி விட்டு விட்டு வர, கவின் இன்னும் வந்திருக்கவில்லை.

"சரி ராகி மா, அம்மா வந்து ஈவினிங் கூப்பிட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் வர,

"அத்த வந்துட்டியா?" என்று சிரித்தான் கவின்.

"டேய், உன் மாமா இங்க நிக்கிறேன். நான் உன் கண்ணுக்குத் தெரியல? ஆனா தினமும் பாக்குற உன் அத்தை மட்டும் தெரியுறாளா?" என்று கேட்டான்.

பல் வரிசை தெரியச் சிரித்த கவின், "சும்மா மாமா" என்று வினோத்தின் தலையோடு தலை முட்ட,

"நல்லா ஐஸ் வைக்கிறீங்க டா, ரெண்டு பேரும்" என்று சிரித்து விட்டு, "சரி நேரம் ஆகுது" என்று விட்டுக் கண்மணி வண்டியில் ஏறி உட்கார,

"சரிடா பாய்" என்று விட்டுக் கிளம்பினார்கள்.

போகும் வழியில் "நீங்க என்ன சின்னப்புள்ளையா? குழந்தையோட சண்டை போட்டுட்டு வரிங்க, சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட" என்று சிரித்தாள்.

"நான் என்ன பண்ணேன்? அவ தான் என்னை வம்புக்கு இழுத்தா" என்றான்.

"அவளுக்கு நீங்க கதை சொல்லாம விட்டுட்டு, என்னையும், அத்தையையும் குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க" என்று வாயைக் கோணித்தாள்.

"அது சரி! நீயும், உன் அத்தையும் ஆயிரம் கதையைத் தெரிஞ்சு வச்சுட்டு, கதை தெரியாத என்னைக் கதை சொல்லு, கதை சொல்லுனா நான் என்ன சொல்லுவேன்?" என்றான்.

அவனது தோளில் தட்டி, "உங்களுக்குக் கதை தெரியாததிற்கு எங்க மூவரையும் குத்தம் சொல்லுங்க." என்றாள் சிரித்துக் கொண்டே.

"இது கூட நல்லா தான் இருக்கு" என்று சிரித்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, "நீங்க சிரிக்கும் போது எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா? அதும் அந்தக் கன்னத்தில் குழி விழுறது…" என்று சிரித்தாள்.

"நல்லா மயக்குறியே…" என்று சிரித்தான்.

"எ
ன்ன சொன்னீங்க?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

"ஒன்னும் இல்லையே!" என்று உதட்டைப் பிதுக்கினான்.

சிரித்த முகத்துடன் இருவரும் பேசிக்கொண்டே வண்டியில் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
 
Top