எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 12

காவ்யாவிடம் கௌதம் பேசிச் சென்றபின் அவளால் எவ்வளவு யோசித்தும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க தோன்றவில்லை.​

ஏதோ ஒரு பயம், அழுத்தம் அவளை சூழ்ந்துக்கொண்டது போல் இருந்தது.​

சித்துவை நினைத்து, அவளை நினைத்து என்று அனைத்தையும் யோசித்து குழம்பியவளால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.​

அன்று கௌதம் சொன்னதைப் போல் ரமேஷ் இறந்து ஒரு வருடத்திற்கு பின் காவ்யாவின் இரண்டாவது திருமணத்தைப் பற்றி வீட்டில் பேசினர்.​

ஆனால் வந்த வரன்கள் அனைத்தும் சித்துவோடு காவ்யாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் அதில் மறுமணத்திற்கு குழந்தையுடன் இருந்த வரன்களும் அடக்கம்.​

கௌதம் ஒருபடி மேல் போய் தன் தங்கைக்காக "சித்துவை நான் பார்த்துகிறேன் காவ்யா! நீ இன்னொரு திருமணம் பண்ணிக்கோ" என கூறினான்.​

அவன் கூறியதில் கோபம் கொண்டவள், "என்னண்ணா பேசுற? என்னோட பையனை விட்டுட்டு நான் எதுக்கு யாரையோ? கல்யாணம் பண்ணி வாழணும்" என்றவள் அதன் பிறகு திருமணத்தைப் பற்றி வரும் பேச்சினை சுத்தமாக தவிர்த்துவிட்டாள்.​

ஏனென்று தெரியாமல் அனைத்தின் மீதும் பிடிப்பற்று இருந்தாள்.​

ஒருநாள் கோவிலில் அவளின் தோழியை சந்திக்க நேர்ந்தது. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை காலியாக உள்ளதாக தெரிவித்தாள்.​

காவ்யாவும் இருக்கிற பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேலைக்கு செல்ல முடிவெடுத்துவிட்டாள்.​

ஆனால் அதற்கு எதிர்ப்பு அவளின் அப்பா ராமமூர்த்தியிடமிருந்து பலமாக வந்தது.​

"நம்ம கிட்ட என்ன இல்ல பாப்பா? நீ எதுக்கு வேலைக்கு போகணும்னு சொல்லுற?"​

"அப்பா ப்ளீஸ்! எனக்கு வேலைக்கு போகணும்னு தோணுது ப்பா"​

"என்ன பேசுறடா காவ்யா? உனக்கு பணத்திற்கு இப்ப என்ன தட்டுப்பாடு? மாதம் மாதம் சித்து பேருல இருக்க கடையோட வருமானம் வருது. நீ வேலைக்கு சென்று தான் இங்க நிறையணும்னு அவசியமே ஒன்னும் இல்லையே?"​

ஆனால் அந்த வேலையால் அவளுக்கு மனநிறைவு கிடைக்கப் போவதால், "எனக்கு ஒரு மாற்றம் வேணும் ப்பா.. அதுக்கு தான் போகப் போறேன்" என்றாள் இழுத்து வைத்த பொறுமையுடன்.​

"அதுக்கு தானம்மா அப்பா மறுபடி வரன் பார்க்கிறேன்.." என்று ராமமூர்த்தி முடிக்கும் முன்,​

"போதும் ப்பா! போதும்! நீங்க வரன் பார்த்து, நான் கல்யாணம் பண்ணி வாழ்ந்த வரைக்கும் எல்லாமே போதும்" என பொறுமையை கடந்தவள் அழுகையில் கரைந்தாள்.​

இப்படி ஒரு பதில் தன் மகளிடமிருந்து வரும் என எதிர்பார்க்காத ராமமூர்த்தி அதிர்ந்து பார்த்தார்.​

அவளின் அருகே வந்த கௌதம் அண்ணனாய் அவளைத் தாங்கினான்.​

அவளின் அழுகையைப் பார்த்த தேவிகாவிற்கும் அழுகை வர அடக்கிக்கொண்டவர், "அப்பா நீ கஷ்டபட கூடாதுன்னு தான அம்மு சொன்னாரு" என மகளை சமாதானப்படுத்த முனைந்தார்.​

ஆனால் அது காவ்யாவிற்கு சலங்கையை கட்டிவிட்டது போல் ஆகிவிட, "என்னம்மா கஷ்டம்? இப்ப நான் அனுபவிக்கிற கஷ்டத்தை விட நான் வேலைக்கு போறது ஒன்னும் கஷ்டம் இல்ல.." என்று பொங்கியவள்,​

"இப்படி தான்! நான் படிக்கிறேன் இல்ல வேலைக்கு போறேன்னு சொன்னப்ப, பிடிவாதம் பிடித்து கல்யாணம் செய்தீங்க தான? ஆனா.. ஆனா.. இப்ப என்ன நடந்தது?" என்ற அவளின் கேள்விக்கு அங்கிருந்த யாரிவரிடமும் பதில் இல்லை.​

'உண்மையிலேயே தன்னால் தான் காவ்யா இப்பொழுது இந்த நிலைக்கு இருக்கிறாளோ..?' என்று ராமமூர்த்தி என்றோ நினைக்க தொடங்கிவிட்டார். மகளும் இன்று அதையே கூற, குற்றவுணர்வில் மனது உடைந்துவிட்டார்.​

கலங்கி, நிற்கக் கூட முடியாமல் சோபாவில் உட்கார்ந்த தந்தையை பார்த்த கௌதம், "அம்மு என்ன பேசிட்டு இருக்க?" என்றான் அதட்டலுடன்.​

ஆனால் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிடும் வேகத்தில் காவ்யா இருந்தாள். அண்ணன் தன்னை எச்சரித்ததையும் கண்டுகொள்ளாதவள், "என்னை என்னண்ணா பண்ண சொல்லுற..? கல்யாணம் வரைக்கும் அப்பா சொல்லுறத கேட்டு அவரோட பொண்ணா இருந்தேன்.​

கல்யாணத்துக்கு அப்புறம் ரமேஷோட மனைவியா அவர் சொல்லுறத கேட்டுட்டு வாழ்ந்தேன்.​

இப்ப சித்துவோட அம்மாவா அவனுக்கு தேவையானதை பார்த்துக்கிட்டு இருக்கேன்.​

இதுக்கு இடைல எனக்கு ஒரு மாற்றம் வேணும்னு வேலைக்கு போறதுக்கு கூட உங்க எல்லார்கிட்டயும் எவ்வளவு போராட வேண்டியதா இருக்கு?" என கூறியவள் கோபத்தால் வந்த அழுகையை அடுக்கிக்கொண்டே,​

"ஒரு பொண்ணா பிறந்தா அப்பாவோட நிழல், இல்ல புருஷனோட நிழல் அதுவுமில்லைன்னா பிள்ளையோட நிழல்ல தான் வழணுமா? ஏன் எங்களுக்கு ஒரு அடையாளத்தை நாங்களே முயற்சி செய்து பெற கூடாதா? என்னால முடில ண்ணா. எங்கேயும் எப்போதும் யாரையாவது சார்ந்து இருக்கிற மாதிரியே இருக்கு. நான் சுயமா இருக்க விரும்புறேன் ண்ணா. என்னைய அப்படியே விட்டுடுங்க.." என கையெடுத்து அழுகையுடன் கேட்டவளை ஐந்து மாத வயிற்றுடன் இருந்த கண்மணி வந்து அணைத்துக் கொண்டாள்.​

காவ்யா கூறக் கூற கேட்டவர்கள் அனைவரும் கண்கள் கலங்க ஸ்தம்பித்து நின்றார்கள்.​

'இவ்வளவு நாட்களாய் காவ்யாவின் மனதில் என்னென்ன விஷயங்களை வைத்து மறுகிக் கொண்டிருக்கிறாளோ?' என்று தான் அனைவரும் யோசித்தார்கள்.​

அணைத்தபடியே காவ்யாவிற்கு குடிக்க தண்ணீரை கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினாள் கண்மணி. என்றும் யாரிடமும் எதிர்த்துப் பேசாத கண்மணியே, "காவ்யாவிற்கு வேலைக்குப் போவதில் விருப்பமிருந்தால் போகட்டுமே" என அவளின் கருத்தைக் கூறிவிட்டு காவ்யாவை உள்ளே அழைத்துச் சென்றாள்.​

அனைத்தையும் கொட்டிவிட்டதால் காவ்யாவின் மனம் நிர்மலமாய் இருந்தது. இனி வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் காவ்யாவிடம் பிறந்திருந்தது.​

இரண்டு நாட்களுக்கு பிறகு, தான் பேசியதற்கு அனைவரிடமும் காவ்யா மன்னிப்பும் கேட்டாள்.​

காவ்யாவின் தந்தை ராமமூர்த்தி, "நீ ஏன்டா அம்மு மன்னிப்பு கேட்கிற? அப்பா தான் உன்கிட்ட கேட்கணும். உன்னோட இந்த நிலைக்கு நானும் தான காரணம்?" என மீண்டும் ஆரம்பித்தார்.​

இடையில் புகுந்த கௌதம், "ரெண்டு பேர் மேலயும் தப்பில்லை. யாராவது எதிர்பார்த்தாங்களா இப்படி ஒரு கொடிய நோய் வந்து உலகமே ஸ்தம்பித்து போய்டும்? அதனால பல பேர் வாழ்க்கை மாறிடும்னு? நடக்கனும்னு இருக்கு நடந்துடுச்சி விடுங்க ப்பா" என்று அப்பாவிடமும்,​

"அம்மு நீ உனக்கு பிடிச்ச மாதிரியே வேலைக்குப் போ. இல்ல மேல படிக்கணும்னாலும் படி. உனக்கு பிடிச்சத செய்" என காவ்யாவிடமும் சொன்னவன் தனிமையில் தன் அப்பாவிடமும் அம்மாவிடமும் காவ்யா வேலைக்கு போக அனுமதி வாங்கிவிட்டான்.​

அதன்பிறகு தன் புகுந்த வீட்டிலும் ஒரு பெரிய போராட்டத்தை முடித்த காவ்யா வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.​

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்றானது. படித்து முடித்து ஐந்து வருடங்களுக்கு பிறகு அனைத்தையும் பார்த்தவள் சற்று மிரண்டுவிட்டாள். ஆனால் போகப் போக அனைத்தையும் கற்று தேர்ந்துவிட்டாள். தினமும் சித்துவை விட்டு வேலைக்கு செல்வது தான் கடினமாக இருந்தது. அதனாலே வாரயிறுதியில் மகனுடன் அவனுக்கு பிடித்ததை செய்து பொழுதை கழித்தாள்.​

கண்மணி கூட "சித்துக்கு மூனு வயசாகுதுல? ஸ்கூல் சேர்த்துவிட்டுடலாம். அப்ப அவனும் கொஞ்சம் பிஸி ஆகிடுவான்" என்றாள்.​

"ஆமா அண்ணி அடுத்த வருஷம் சேர்க்கலாம்" என காவ்யாவும் ஒத்துக்கொண்டாள்.​

ஒன்பதாம் மாதம் கண்மணிக்கு வளைகாப்பு நடத்த முடிவெடுத்தனர்.​

கண்மணியின் வளைகாப்பில் கண்மணியின் தாய் கண்மணியிடம், "உன்னோட நாத்தனார் எப்பவும் இங்க தான் இருப்பாளா?" என அறையில் யாருமில்லை என கேட்டார்.​

ஆனால் அது அந்த பக்கத்தில் இருந்த காவ்யாவின் காதில் நன்றாகவே விழுந்தது.​

தன் அன்னையின் கேள்விக்கு கண்மணி எதுவும் கூறாமல் இருக்க, அவளின் அம்மாவே தொடர்ந்தார்.​

"இப்ப உனக்குன்னு ஒரு குழந்தை வந்துடுச்சி கண்மணி! இன்னும் தங்கச்சி, தங்கச்சி பையன்னு உன்னோட வீட்டுக்காரரும்; பொண்ணு, பேரன்னு உன்னோட மாமியார், மாமனாரும் இருக்க போறாங்க பார்த்து நடந்துக்கோ" என தன் மகளின் வாழ்வில் எந்தவித பிரச்னையும் வர கூடாது என கூறினார்.​

அதற்கும் எதுவும் சொல்லாமல் இருந்த மகளை பார்த்தவர், "நான் சொல்லுறது எல்லாம் உனக்கு கேட்குதா இல்லையா?" என கேட்ட அன்னையிடம், "எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் அம்மா. நீங்க சும்மா இருங்க" என முடித்துவிட்டாள்.​

ஆனால் காவ்யாவிற்கு தான் சங்கடமாக இருந்தது. 'இப்படியே போனால் கண்டிப்பாக என்றோ ஒருநாள் பிரச்சனை வரும்' என யோசித்தவள் தனியாக செல்ல முடிவெடுத்தாள்.​

அன்று அனைவரும் கூடியிருக்க சித்துவை உறங்க வைத்தவள், "நாங்க வேறு வீட்டிற்கு போக போகிறோம்" என அனைவரிடமும் கூறிவிட்டவள்,​

பின் கௌதமிடம், "எனக்கும் சித்துவுக்கும் ஒரு வீடு உன்னால வீடு பார்த்து கொடுக்க முடியுமா அண்ணா..?" என்றாள்.​

கண்மணி அந்த வீட்டில் இல்லாததால் அவளுக்கு இங்கு நடப்பது தெரியவில்லை.​

அவளின் இந்த முடிவை வீட்டில் உள்ள அனைவராலும் மாற்ற முடியாமல் போக, இறுதியில் காவ்யாவும் சித்துவும் தனியாக வெளியே வந்தனர்.​

விஷயம் அறிந்த கண்மணி கௌதமிடம் அன்று நடந்ததை கூறினாள். நிறைமாதமாக இருக்கும் மனைவியை எதுவும் சொல்ல முடியாமல் முறைத்துவிட்டு வந்தான்.​

ஆனால் காவ்யாவின் இந்த செயலை ராமமூர்த்தியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ‘நம் வீட்டில் இல்லாத பாதுகாப்பு எப்படி அவளுக்கு வெளியே கிடைக்கும்?’ என்று நினைத்தவர் தனது அதிருப்தியை காவ்யாவிடம் வெளிப்படையாகவே காட்டினார்.​

அவளின் வீட்டிற்கு இன்று வரை செல்லாது இருந்தார். எதுவென்றாலும் கௌதம், கண்மணி மற்றும் தேவிகாவின் மூலம் மட்டுமே பேசிக் கொண்டார்.​

ராமமூர்த்தியின் இந்த செயல் கூட காவ்யாவை அசைக்கவில்லை. யாருக்கும் பாரமாக இல்லாமல் அவளும் சித்துவும் இருக்கவேண்டும் என்றெண்ணியவள் தனியாக வசிக்கத் தொடங்கிவிட்டாள்.​

__________​

அன்று மாலை கௌதமும் கண்மணியும் காவ்யாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.​

"வாங்க அண்ணி! வாங்க அண்ணா!" என வரவேற்றாள்.​

"என்ன தீடீர்னு வந்திருக்கீங்க?" என கேட்டவள் கண்மணியின் கையில் இருந்த அவளின் குழந்தையை வாங்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.​

கண்மணி கௌதமை பார்த்தாள். கௌதமும் அவளின் பார்வையை புரிந்துக்கொண்டு, "அடுத்த வாரம் ஞாயிறு தர்ஷினிக்கு பர்ஸ்ட் பர்த்டே காவ்யா. நீயும் சித்துவும் கண்டிப்பா வரணும்" என்று அழைப்பினை விடுத்தான்.​

கௌதமை முறைத்து பார்த்தவள், "நான் என்ன மூனாவது மனுஷியா அண்ணா? இப்படி வீடு தேடி வந்து கூப்பிடுற?" என கேட்க,​

"இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்குல காவ்யா?" என்றவன் சித்துவுடன் ஐக்கியம் ஆகிவிட்டான்.​

தர்ஷினியும் பசியில் சிணுங்க தன் அண்ணியிடம் கொடுத்தவள் சமையலறைக்கு சென்றாள்.​

குழந்தையை உறங்க வைத்த கண்மணி சமையலறைக்கு வந்தாள்.​

"நீங்க போங்க அண்ணி. சப்பாத்தி தான். நானே சுடுறேன்" என அவளிடம் கூறினாள்.​

"பரவாயில்லை காவ்யா. நான் தேய்க்கிறேன். நீ சுட்டு எடு" என்ற கண்மணி மாவை வட்டமாக தேய்க்கத் தொடங்கினாள்.​

காவ்யாவும் அமைதியாக சப்பாத்தியை சுட, "கௌதம் எல்லாமே சொன்னார் காவ்யா" என்றாள்.​

புரியாமல் பார்த்த காவ்யாவிடம் "அதான், கார்த்திக் அண்ணா உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டதா" என்க,​

கோபத்தில் மூச்சினை இழுத்து விட்டவள், "அதை பத்தி என்கிட்டே பேசாதீங்க அண்ணி" என சப்பாத்தியை திருப்பிப் போட்டாள்.​

"நீ நினைக்கிற மாதிரி கார்த்திக் அண்ணாக்கு இது முதல் கல்யாணம் இல்லை காவ்யா" என்ற கண்மணி அமைதியாகிவிட,​

அவள் கூறியதை கேட்ட காவ்யா அதிர்ச்சியுடன், "என்ன அண்ணி சொல்லுறீங்க? அப்ப அவரும் என்னை மாதிரி துணையை இழந்தவரா?" என கேட்டாள்.​

சப்பாத்தியை தேய்த்துக் கொண்டே, "ஆமா! உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் மூணு வருஷம் கழிச்சி ரமேஷ் இறந்தார். ஆனா..? அவருக்கு கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாடி அவருக்கு கல்யாணத்துக்கு பேசின பொண்ணு இறந்துட்டா" என்றாள்.​

இதற்கு என்ன சொல்வதென்று யோசித்த காவ்யா எதுவும் கூறாமல் இருந்துக் கொண்டாள்.​

மேலும் கண்மணியே, "அவருக்கு அடுத்து இன்னொரு கல்யாணம் கூட பேசுனாங்க போல.. ஆனா அதுவும் தட்டிப் போய்டுச்சாம். யார் யாருக்கு? எப்ப? யார் கூட கல்யாணம் நடக்கும்னு இருக்கோ அப்ப தான் நடக்கும் போல.." என்று கண்மணி ஜாடையாக கூற,​

அவளின் பேச்சை கேட்ட காவ்யா, "சப்பாத்தி எல்லாம் சுட்டு முடிச்சாச்சி. வாங்க அண்ணி சாப்பிடலாம்" என அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.​

'இவ கிட்ட பேசுன்னு அந்த மனுஷன் என்னை கோர்த்துவிட்டுட்டு அவரு மட்டும் சித்துக்கூட விளையாடுறாரு' என மனதிற்குள் புலம்பிய கண்மணி வெளியேறினாள்.​

சாப்பிட்டுவிட்டு கிளம்பிய கண்மணி காவ்யாவிடம் தனியாக, "உனக்காக இல்லனாலும் சித்துக்காக யோசி காவ்யா" என அவளின் கன்னம் வருடி சொன்னாள்.​

பின் கௌதமும் கண்மணியும் மறக்காமல் கார்த்திக்கிற்கும் பிறந்தநாளுக்கு அழைப்பினை விடுத்து சென்றனர்.​

கண்மணி வந்து சென்ற இரண்டு நாட்களுக்கு பிறகு சித்துவை பள்ளிக்கு கிளப்பிக்கொண்டு தானும் அலுவலகத்திற்கு கிளம்பினாள் காவ்யா. தனது இருசக்கர வாகனத்தில் அனைத்து பைகளையும் வைத்துக் கொண்டிருத்தாள்.​

அந்நேரம் அலுவலகத்திற்கு கிளம்பிய கார்த்திக் காரை எடுக்க வந்தான். காவ்யாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் எதுவும் பேசவில்லை.​

"கார்த்தி அங்கிள்.." என சிட்டாக பள்ளி சீருடையில் துள்ளி குதித்து வந்தவனின் உயரம் வரை மண்டியிட்டான் அந்த ஆறடி உயரமாவன்.​

"ஸ்கூல் கிளம்பிட்டியா சித்து..?"​

கிளுக்கி சிரித்த சின்னவன், "ஆமா கார்த்தி அங்கிள். அதான் யூனிபோர்ம் போட்டிருக்கேன்" என்றான்.​

சித்துவின் ஒரு ஷூவில் லேஸ் கலண்டிருக்க அதனை சரியாக மாட்டிய கார்த்திக், "பை.." என அவனிடம் விடைபெற்று காரினை எடுத்துக்கொண்டு சென்றான்.​

பின் காவ்யாவும் சித்துவை வண்டியின் பின்னே உட்கார வைத்தவள் வாகன நெரிசலில் கலந்தாள்.​

பள்ளி வந்ததும் கீழே இறங்கிய சித்து, "கார்த்தி அங்கிள் குட் பாய் தான மம்மி?" என கேட்டான்.​

தீடீர் என்று கார்த்திக்கைப் பற்றிப் பேசியவனை புரியாமல் பார்த்தவள், "என்ன சொல்லுற சித்து?" என கேட்க,​

"ரெயின்ல நம்மள கார்ல கூட்டிட்டு போனாங்க, இப்ப ஷூ போட்டு விட்டாங்க அப்ப அவங்க குட் பாய் தான?" என மீண்டும் தன் அன்னையிடம் வினவ,​

"ஆமா! குட் பாய் தான்" என்றவள் "உனக்கு டைம் ஆகுது உள்ள போ.." என்றவள் தன் அலுவலகத்திற்கு சென்றாள்.​

அன்றிரவு படுக்கைக்கு வந்த காவ்யா, 'சித்து கார்த்திக்கை பற்றி இவ்வளவு பேசுகிறானென்றால் கார்த்திக் இடம் நாமும் பேசி பார்க்கலாமா? இது சரிவருமா?' என யோசித்தாள்.​

அவளின் மனது, "அவனிடம் ஒரு முறை பேசிப்பார் காவ்யா! அவரும் முதல் கல்யாணத்தில் தோல்வியை சந்தித்தவர் தான். அதனால உன்னோட காண்டிஷன்ஸ்க்கு ஒத்துப்போக வாய்ப்பிருக்கு.." என கூறியது.​

'சரி நாளைக்கு சனிக்கிழமை தான பார்க்ல பேசிக்கலாம்' என்று முடிவெடுத்தவள் உறங்க சென்றாள்.​


- தொடரும்
 
Top