எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 13

அத்தியாயம் 13:​

மறுநாள் காவ்யா அவர்களின் அப்பார்ட்மென்டில் உள்ள பார்க்கிற்கு சித்துவை அழைத்துச் சென்றாள். அங்கு சென்றதும் எப்பொழுதும் போல் கர்த்திக்கிடமே சித்து ஓடினான்.​

ஒரு நிமிடம் காவ்யாவை கார்த்திக் பார்த்தான். அவள் எதிர்ப்பேதும் தெரிவிக்காதலால் மனதில் ஊற்றாய் தோன்றிய மகிழ்ச்சியுடன் சித்துவைத் தூக்கியவன் அவனுடன் விளையாடினான்.​

சற்றுத் தள்ளி உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தவள் 'நாம எடுத்திருக்கிற முடிவு சரிதான்' என சஞ்சலத்தில் உழன்ற மனதை மீண்டும் சரி செய்தாள்.​

அவளின் பார்வையை உணர்ந்த கார்த்திக் அங்கிருந்த சிறு பிள்ளைகளுடன் சித்துவை விளையாட விட்டுவிட்டு காவ்யாவிடம் வந்தான்.​

அதுவரை அவனிடம் பேசி விட வேண்டும் என்று எண்ணியவளுக்கு அவன் பக்கத்தில் வர வர படபடப்பு அதிகமாகியது. அதனை மறைக்க கையில் வைத்திருந்த சித்துவின் தண்ணிர் பாட்டிலை இறுகப் பற்றிக்கொண்டாள்.​

காவ்யாவின் அருகில் வந்தவன் அவளின் பக்கத்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். ஆனால் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக சித்துவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.​

"என்ன முடிவெடித்திருக்கீங்க காவ்யா?" என கார்த்திக்கே பேச்சினைத் துவங்கினான்.​

இடப்பக்கம் திரும்பி அவனைப் பார்க்க, அவனின் கவனம் முழுவதும் சித்துவிடமே இருந்தது.​

மெல்ல தொண்டையை சரி செய்தவள், "சித்துவிற்காக சம்மதிக்கிறேன்" என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்.​

இப்பொழுது கார்த்திக் காவ்யாவை நோக்க, அவளின் கவனம் முழுக்க சித்துவிடம் தான் இருந்தது. அதை பார்த்தவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான். ஆனாலும் 'எனக்கு சித்துவை பிடித்திருக்கிறது அவனுக்காக திருமணம் புரிய கேட்டேன். ஆனா? இவங்க எதுக்கு சித்துவிற்காகன்னு சொல்லுறாங்க?' என்ற கேள்வி அவனின் மனதைக் குடைந்தது.​

அவனை பார்த்தவள் அவன் கேள்வி புரிந்தது போல், "எ.. என.. " என்று தொடங்கியவள் மூச்சினை நன்கு இழுத்துவிட்டு, "எனக்கு ஒரு வருஷம் முன்னால இருந்தே செகண்ட் மேரேஜ்க்கு பார்த்துட்டு இருந்தாங்க.." என்றாள்.​

கார்த்திக்கும் எதுவும் பேசாமல் அவளின் பேச்சை கேட்கத் தொடங்கினான்.​

"அப்ப.. எனக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்லை! இப்பவும் தான்!" என்றவள் கார்த்திக்கை ஏறிட்டு, "தப்பா எடுத்துக்காதீங்க.." என்க,​

சின்ன சிரிப்புடன் இடவலமாக தலையசைத்தவன், "கண்டிப்பா இல்ல.." என உறுதியளித்தான்.​

பின் காவ்யாவே, "ஆனா அவங்க பார்த்தவரைக்கும் யாருமே சித்துவோட என்னை ஏத்துக்க தயாரா இல்லை" என கசந்த முறுவலை உதிர்த்தாள்.​

'எப்படி சித்து மாதிரி ஒரு குழந்தையை அவர்களால் ஏத்துக்க முடியாம இருக்கும்?' என்ற கார்த்திக்கின் சிந்தனையை கலைக்கும் விதமாக,​

"அது அவங்க விருப்பம். நான் அதை தப்பு சொல்லல. அதையே சாக்கா வைத்துதான், நான் அந்த கல்யாண பேச்சை இப்பவரைக்கும் நிறுத்திக்கிட்டு இருந்தேன்" என்று சொல்லிவிட்டு கார்த்திக்கைப் பார்த்தவள்,​

"எப்படியோ? எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணாம விடமாட்டாங்க. இப்ப நீங்க சித்துக்காக கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுறப்ப தான் எனக்கும் தோணுது. நீங்க சித்து மேல அக்கரையா பாசமா இருக்குறதை நானே பலமுறை பார்த்திருக்கேன். சோ சித்துக்காக உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்" என்று முடித்தாள்.​

அவர்களிடம் ஓடி வந்த சித்து காவ்யாவிடமிருந்து தண்ணீர் குடித்துவிட்டு மறுபடி ஓடிவிட்டான்.​

"அப்புறம்.." என தொடங்கிய காவ்யா தயக்கத்துடன் கார்த்திக்கை பார்க்க,​

"எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க காவ்யா" என அவளை ஊக்கினான்.​

"அது கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைக்கு போவேன். அதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தான?" என கேட்க,​

"இங்க பாருங்க காவ்யா. நீங்க இப்ப எப்படி இருக்கீங்களோ? கல்யாணத்துக்கு பிறகும் அப்படியே இருக்கலாம். வேலைக்கு போகணும்னு தோணுச்சினா போங்க இல்லனா போகாதீங்க. உங்க விருப்பப்படியே நீங்க இருக்கலாம்" என்றான்.​

"நீங்க உங்க அம்மா அப்பா கிட்டலாம் பேசிட்டீங்களா..? அவங்களுக்கு என்.. என்னைய மாதிரி ஒருத்தவங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?"​

"இல்லை காவ்யா. உங்க முடிவு தெரியாம நான் எப்படி பேசுறது? இப்ப தான் நீங்க ஓகே சொல்லிட்டீங்களே! நாளைக்கே நான் ஊருக்கு போய் பேசிடுவேன். அப்புறம் உங்கள பத்தி நீங்களே குறைவா நினைக்க ஒண்ணுமே இல்லை" என்றான்.​

'பரவால நம்ம முடிவுக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறாங்க' என காவ்யா கார்த்திக்கை பற்றி உயர்வாகவே எண்ணினாள்.​

"உங்க வீட்ல.." என கார்த்திக் தொடங்க,​

"நான் இப்ப தான் உங்க கிட்டயே சொல்லிருக்கேன். அடுத்து கௌதம் அண்ணா கிட்ட சொல்லிட்டா? அவங்க அம்மா அப்பா கிட்ட பேசுவாங்க" என அதுவரை அவர்கள் இருவரை பற்றி பேசியவர்கள் அடுத்து குடும்பத்தில் யார் யார் உள்ளனர் என்று பேசினர்.​

காவ்யா சம்மதம் தெரிவித்த அன்றே தனது ஊருக்கு செல்ல கார்த்திக் தயாராகினான். எப்படியாவது தன் அன்னையிடம் பேசி சம்மதிக்க வைக்க நேரிலே அவரைப் பார்க்கச் சென்றான்.​

"எதுக்குங்க இப்ப எங்க வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கோம்?" என கார்த்திக்கின் அக்கா மீனாட்சி தன் கணவன் சத்யனிடம் கேட்டாள்.​

"என்னை கேட்டா? உன்னோட தம்பி தான் ஊருக்கு வரேன் மாமா. நீங்களும் அக்காவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னான்"​

சத்யன் காரை ஓட்ட அவனைப் பார்த்துக்கொண்டே, "உண்மைய சொல்லுங்க? எங்கம்மா சும்மா கூப்பிட்டாலே அவன் வரமாட்டான். இப்ப வரேன்னு சொல்லி நம்மளையும் வர சொல்லிருக்கான். உங்களுக்கு தெரியாம இருக்காது" என மீனாட்சி சத்யனிடம் சத்தியத்தை வாங்க முயன்றாள்.​

'இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு மூளை இருக்க கூடாது' என எண்ணிக்கொண்டே, "இங்க பாரு மீனு.. அவன் எதுக்கு வர சொல்லிருக்கானு அங்க போனா தான நமக்கு தெரியும். என்னைய எதுக்கு தொல்லை பண்ணுற?” என சமாளித்தான்.​

இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை எனும் விதமாக காரின் பின்னே ஃபோனில் கேம் விளையாடி கொண்டிருந்தான் அவர்களின் புதல்வன் சந்துரு.​

கார்த்திக்கின் வீட்டிற்குள் சத்யனும் மீனாட்சியும் நுழையும் பொழுதே விசாலாட்சி கத்திக் கொண்டிருந்தார்.​

"இப்ப, இவனுக்கு என்ன குறைச்சல்னு இப்படி ஒரு முடிவெடுத்திருக்கான்? ஹான்?" என அவருடைய கணவர் சுந்தரத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.​

சுந்தரமோ யாரின் பக்கம் பேச என தெரியாமல் இருவரையும் பார்த்து திருதிருத்தார்.​

உள்ளே நுழைந்த மீனுவிற்கு ஒன்றும் புரியவில்லை. "அம்மா இப்ப என்னாச்சின்னு இப்படி கத்திட்டு இருக்கீங்க? வெளிய ரோடு வரைக்கும் கேட்குது" என குறை கூறினாள்.​

"வா மீனு. வாங்க மாப்பிள்ளை" என அவர்களை வரவேற்றவர், "ஏன் மீனு? முப்பத்தி இரண்டு வயசுலாம் ஒரு வயசா? இவன் எதுக்கு இப்படி ஒரு முடிவெடுத்திருக்கான்?" என விசாலாட்சி கடுகடுத்தார்.​

ஆனால் கார்த்திக் சோபாவில் அமர்ந்து அமைதியாக விசாலாட்சியின் புலம்பலை கேட்டு(ரசித்து)க் கொண்டிருந்தான்.​

தலையும் புரியாமல் வாலும் புரியாமல், "என்னம்மா? புரியும்படியா சொல்லுங்களேன்?" என அவரையே மீனாட்சி கேட்டாள்.​

"அத எப்படி என்னால சொல்ல முடியும்?" என விசாலாட்சி மீண்டும் திட்டத் தொடங்க,​

சத்யன் மனத்திற்குள்ளே "வாயால தான் அத்தை!" என கவுண்டர் கொடுத்தவன் 'நாம வரதுக்குள்ள மாப்ள விஷயத்தை சொல்லிட்டாரு போலயே?' என கண்களால் கார்த்திக்கிடம் கேட்டு தெரிந்துக் கொண்டான்.​

"கார்த்தி! என்னாச்சி? நீயாவது நடந்ததை சொல்லு" என மீனு கண்டிப்புடன் கேட்டாள்.​

"நீங்க எல்லாரும் தான நான் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறேன்னு கேட்டிங்க? இப்ப பண்ணிக்கிறேன்ன்னு சொல்லிருக்கேன். அம்மா ஒத்துக்க மாட்டேன்குறாங்க.." என்று அழுத்துக் கொண்டான்.​

ஆனால் அவன் முடித்த உடன், "சும்மா ஒன்னுமில்ல மீனு! அவன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி நாலு வயசுல ஒரு பையன் இருக்கானாம்" என நீட்டி முழங்கினார்.​

கார்த்திக் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த உடன் மலர்ந்த மீனாட்சியின் முகம் விசாலாட்சி கூறியதைக் கேட்டு யோசனைக்குள்ளானது.​

திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். எந்த ஒரு அதிர்ச்சியும் காட்டாமல் நிர்மலமாக இருந்த சத்யனை பார்த்ததுமே அவருக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று யூகித்தவள் அவனை முறைத்தாள்.​

கார்த்திக், "இப்ப அதுனால என்னம்மா?" என எகிற,​

"ஏன்டா சொல்லமாட்ட? உனக்கு நாங்க இங்க பொண்ணு பார்த்துகிட்டு இருந்தா? அங்க யாரோ ஒருத்தி உன்னை மயக்கி கல்யாணம் பண்ணி தன்னோட பையனுக்கும் அப்பாவாக்க பார்க்கிறா. நீயும்.." என வரம்பு மீறி பேசிய விசாலாட்சியிடம்,​

"போதும் நிறுத்துங்க.." என கை காட்டி நிறுத்தினான் கார்த்திக்.​

சுந்தரம் அவரை முறைத்துப் பார்த்து தனது அதிருப்தியை வெளிப்படியாகவே காட்டினார். அவரும் "பொறுமையா பேசு! வார்த்தையை விடாதே!" என எவ்வளவு கூறியும் இப்படி பேசிவிட்டாளே, அதுவும் தங்களின் மாப்பிள்ளை முன்பு என சங்கடமாக உணர்ந்தார்.​

"காவ்யாவை பத்தி நீங்க எதுவும் பேசாதீங்க! பேசவும் கூடாது!" என தலையைக் கோதி தன்னை சமன் செய்ய முயன்றவன்,​

"நான் தான் அவங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன். அவங்க என்னைய திட்டி, சண்டை போட்டு ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் சரி சொல்லிருக்காங்க. அதுகூட அவங்க வீட்ல பேசுனதால தான்" என்றவனுக்கு ஆத்திரம் தீரவே இல்லை.​

என்னதான் சித்துவிற்காக திருமணம் என்றாலும் காவ்யா மீது அவனுக்கு அளவுக்கு அதிகமாகவே மதிப்பிருந்தது. அதனை தன் தாய் குறை சொல்வதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சோபாவில் இருந்து எழுந்தவன் கோபத்தில் இங்கும் அங்கும் நடந்தான்.​

மீனுவிற்கு அன்னை பேசியது பிடிக்கவில்லை என்றாலும் அனைவர் முன்பும் அவரை குறை சொல்ல யோசித்தவளுக்கு கார்த்திக்கிடம் பேசும் தைரியமும் இல்லாமல் தன் கணவன் சத்யனை பார்த்தாள்.​

அவனும் அவளிடம் கண்ணை மூடித் திறந்தவன், "என்ன மாப்ள? இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வந்தா என்ன செய்யுறது? வா வந்து உட்காரு பொறுமையா பேசலாம்" என அவனிடம் சற்று குரலை உயர்த்தி பேசியவன்,​

"அத்தை எல்லாருக்கும் காபி போட்டு கொண்டுவாங்க. மீனு நீயும் போ" என அவர்களை அங்கிருந்து அகற்றினான்.​

கிட்சனின் உள்ளே, "என்னமா? இப்படியெல்லாம் பேசுற நீ?" என காவ்யா கடிந்து கொள்ள,​

"ஏதோ? தெரியாம பேசிட்டேன் மீனு. ஒரு பெண்ணை இப்படி பேசுனது தப்பு தான். ஏற்கனவே நாம என்ன பாவம் பண்ணினோமோ கார்த்திக்கு வரனே வரல.. இப்ப இதுவுமா?" என கலக்கமாகக் கேட்டவரை சமாதானப்படுத்தி வெளியே கூட்டிச் சென்றாள்.​

அங்கே கார்த்திக் மீனுவின் மகன் சந்துருவுடன் ஃபோனில் விளையாடிக் கொண்டிருந்தான்.​

மீனு அனைவருக்கும் காப்பியை கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.​

"யாருன்னு தெரியாத பொண்ண பத்தி பேசுனது தப்பு தான் கார்த்தி. ஆனா நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க விடமாட்டேன்" என தன் தவறை ஒத்துக்கொண்டவர் தனது முடிவையும் கூறினார்.​

முழு காப்பியை குடிக்கும் வரை அமைதியாக இருந்த கார்த்திக், "எனக்கு உங்க சம்மதம் முக்கியம் தான் அம்மா. ஆனா? நான் காவ்யாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்" என எழுந்து சென்றான்.​

"பாரு மீனு இவனை. நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆக வேண்டியவன். போன மாகராசி போய்ட்டா, ஆனா என்னோட பையன் தான் இப்படி ஆகிட்டான்" என விசாலாட்சி தன் மகளிடம் புலம்பினார்.​

"நீங்க ஏன் அத்தை இப்படி நினைக்கிறீங்க? யாருக்கு யாரோட முடிச்சி போட்டிருக்கோ அவங்க கூட தான சேருவாங்க?" என்ற சத்யன் மேலும்,​

"அந்த பொண்ணு காவ்யாவுக்கு கூட ஐந்து வருடத்துக்கு முன்னாடியே கல்யாணம் நடந்தது. ஆனா விதியை பாருங்க, இப்ப நாலு வயசு பையனோட அவ தனியா இருக்கா? நம்ம கார்த்திக்கு அப்பவே கல்யாணம் ஆகிருந்தா இந்நேரம் அவனுக்கும் அதே வயசுல குழந்தை இருக்கும். ஒருவேளை இப்படி தான் கார்த்திக் திருமணம் நடக்கணும்னு இருந்தா நம்ம என்ன தடுத்தாலும் அது நடந்தே தீரும்" என தானும் கார்த்திக்கிற்கு தான் துணை என்று சொல்லிவிட்டான்.​

சத்யன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த விசாலாட்சி, 'ஒருவேளை இப்படி இருக்குமோ?' என சிந்தனை வயப்பட்டார்.​

இதுதான் சமயம் என்று சுந்தரமும், "இவ்வளவு நாள் திருமணம் பண்ணிக்காம இருந்தவன். இன்னைக்கு அந்த பெண்ணை பண்ணிக்கிறேன்னு சொல்லுறான். நான் வேணும்னா அந்த குடும்பத்தை பற்றி நல்லா விசாரிச்சி சொல்லுறேன் விசா. இதுக்கு மேலயும் அவன் வேற ஒரு கல்யாணத்தை பற்றி யோசிக்கவேமாட்டான்" என மகனைப் பற்றி நன்கு அறிந்த தந்தையாய் கூறினார்.​

"அவ்வளவு பெரிய பதவில இருப்பவன், அப்படி ஒன்னும் யோசிக்காம செய்யமாட்டான் அத்தை. எல்லாம் நல்லதாவே நடக்கும் அத்தை. நீங்களும் கொஞ்சம் யோசிங்க" என கூறிய சத்யன் மனைவியையும் மகனையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.​

கார்த்திக்கும் வேலை இருப்பதாக அன்றிரவே சென்னைக்கு திரும்பியும் விட்டான்.​

__________​

அன்று கௌதமின் மகள் தர்ஷினிக்கு முதலாம் பிறந்தநாள். காவ்யாவும் சித்துவும் முதல் நாளே அங்கு வந்துவிட்டனர்.​

போன வருடம் தர்ஷினி பிறந்த சமயம் தான் காவ்யா சித்துவுடன் தனியாக சென்றது அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? என நினைத்துக் கொண்டாள்.​

சரியாக மாலையில் கேக் வெட்டும் நேரம் கார்த்திக் வந்தான். அவனிடம் ஓடி வந்த சித்துவின் கையை பிடித்துக் கொண்டே தர்ஷினியிடம் சென்றவன் அழகிய பார்பி பொம்மையை சித்துவிடம் கொடுத்து கொடுக்க வைத்தான்.​

கௌதம் ஏற்கனவே கார்த்திக்கை பற்றி வீட்டில் கூறியதால், இன்று பிறந்தநாள் விழாவில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.​

விழா முடிந்து அனைவரும் கிளம்பியதும் கார்த்திக் மற்றும் காவ்யாவின் குடும்பம் மட்டுமே தனித்து இருந்தனர்.​

காவ்யாவின் தந்தை ராம மூர்த்தி, "உங்கள பத்தி கௌதம் சொன்னான். நானும் விசாரிச்சி பார்த்தேன். சித்துக்கு கூட உங்கள ரொம்ப பிடிக்குது. கவ்யாகிட்டயும் பேசிட்டோம் தம்பி. எங்க வீட்ல எல்லாருக்கும் சம்மதம். நீங்க முறைப்படி உங்க அம்மா அப்பாவை வந்து பேச சொல்லுங்க" என்றார்.​

"அவங்களுக்கும் சம்மதம் தான் அங்கிள். ஒரு இரண்டு வாரம் போகட்டும். அம்மா, அக்கா எல்லாரும் வந்து உங்ககிட்ட பேசுவாங்க" என்று விடைபெற்றான்.​

கௌதம் தான் சித்துவிடம் தெரிவித்தான். "நீ, கார்த்தி அங்கிள், அப்புறம் மம்மி. எல்லாரும் இனிமே ஒன்னா இருப்பீங்க.." என சொன்னதும் தன் அன்னையைத் தான் திரும்பி பார்த்தான்.​

'என்ன சொல்வது?' என திணறியவள், "ஆமா சித்து. உனக்கு கார்த்திக் அங்கிள பிடிக்கும் தான? அதான் இனிமே நாம ஒண்ணா, ஒரே வீட்ல இருக்கலாம்" என ஒருவழியாக கூறி முடித்தாள்.​

அப்போதைக்கு சித்துவிற்கு என்ன புரிந்ததோ, "ஐ ஜாலி!" என குதித்துக் கொண்டே ஓடினான்.​

நடக்கும் அனைத்தையும் பாத்துக்கொண்டிருந்த காவ்யாவிற்கு கலக்கமாக இருந்தது. "இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கூட யோசித்தாள்.​

இப்பொழுது பின்வாங்கினால் அனைவருக்கும் தர்மசங்கடமாய் அமையும் என்று நினைத்தவள் நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.​

காவ்யாவின் மாமியார் வீடு! அனைவரும் கூடியிருந்தனர்.​

காவ்யா யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.​

அங்கு விளையாடிக் கொண்டிருந்த சித்து, தாரிணியின் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.​

"இரண்டாம் கல்யாணம் பண்ணுறது அவ்வளவு தப்பு ஒன்னுமில்லை. அதுவும் காவ்யாவிற்கு இருபத்தி எட்டு வயது தான் ஆகுது. அவளும் அவளுடைய வாழ்க்கையை பார்க்கணும் தான?" என மங்கலம் நல்ல விதமாகவே பேசினார்.​

'”உங்க மாமியார் வீட்ல பேசணும் காவ்யா" என்று ராமமூர்த்தி சொன்னதும், ‘கண்டிப்பா அவங்க பிரச்சனை பண்ணுவாங்க’ என்றே காவ்யா எண்ணினாள்.​

ஆனால் அதற்கு நேர்மாறாக விஷயத்தை கேட்டதும் மங்கலம் சம்மதித்தது காவ்யாவிற்கு உறுத்தலாகவே இருந்தது.​

'புலி பதுங்குவது பாய்வதற்கே!' என்ற மங்கலம் பாய்வதற்கான நேரத்திற்கு காத்திருந்தார்.​

ராம மூர்த்தி, "அப்ப சரிங்க. கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்து உங்ககிட்ட பேசுறோம்" என காவ்யாவையும் சித்துவையும் அழைத்து சென்றார்.​

- தொடரும்​

 
Top