மதுரை கார்த்திக்கின் வீட்டில் அனைவரும் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தனர்.
அன்று காலை தான் கார்த்திக்கிற்கும் காவ்யாவிற்கும் மதுரை மீனாட்சி அம்மனின் கோவிலில் திருமணம் முடிந்தது.
இரு வாரங்கள் முன்பு ஒருநாள் விசாலாட்சியும் சுந்தரமும் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தனர்.
சத்யனுக்கு வேலை இருந்ததால் அவனும் மீனாவும் வரவில்லை.
சம்மதம் தெரிவிக்காமல் இருந்த விசாலாட்சியை பேசி, பேசியே ஒத்துக்கொள்ள வைத்தனர் சுந்தரம், சத்யன் மற்றும் மீனாட்சி.
விசாலாட்சி, "நான் அந்த பொண்ணுகிட்ட, அவளோட அப்பா அம்மா கிட்டலாம் பேசணும் கார்த்திக். அதுக்கு அப்புறம் தான் என்னோட முடிவை சொல்லுவேன்" என கட்டளையாக கூறினார்.
அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிதாகப் பட, கௌதமின் வீட்டில் சந்திப்பதற்கு ஏற்பாடாகியது.
பெண் பார்க்கும் நிகழ்வு போல் நடப்பதை பார்த்த காவ்யாவிற்கு சங்கடமாக இருந்தது. முடிந்துபோன வாழ்வின் மிச்சங்கள் அவளை சூழ்ந்து கொள்ள படபடப்பாக இருந்தாள்.
அனைவரும் வந்த பிறகு காவ்யாவையும் சித்துவையும் பார்த்த விசாலாட்சியின் மனதில், 'பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கா? ஆனா கார்த்திக் இருபத்தி எட்டு வயசுன்னு சொன்னானே?' என நினைத்தவர் அனைவரிடமும் சகஜமாகவே பேசினார்.
பார்ப்பதற்கு சகஜமாக பேசுவதை போல் தோன்றினாலும் மனதில் அனைவரையும் எடை போட்டுக் கொண்டிருந்தார்.
ஏற்கனவே சுந்தரமும் அவரின் பங்கிற்கு விசாரித்து நல்ல விதமாக கூறியிருக்க, இப்பொழுது அவர்களை நேரிலே சந்தித்தது விசாலாட்சிக்கு சற்று நிம்மதியே!
சுந்தரம் கூறிய 'இதுகேக்குமேல கார்த்திக் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வானான்னு தெரியல விசா. அவனுக்கு பிடிச்சிருந்தா திருமணம் பண்ணி வைப்பது நம்ம கடமை தான?' வார்த்தைகள் மனதில் மின்னி மறைய கண் பார்வையில் சுந்தரத்திடம் தனது சம்மதத்தை தெரிவித்தார் விசாலாட்சி.
"இன்னும் இரண்டு வாரத்துல நல்ல முகூர்த்த நாள் வருது. அன்னைக்கே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமா?" என சுந்தரம் கேட்டார்.
அவ்வளவு சீக்கிரமா என காவ்யாவின் வீட்டினர் அதிர்ந்தனர். கௌதம் தான் அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டு, "அவ்வளவு சீக்கிரமா?" என்றான்.
"இரண்டு குடும்பத்துக்கும் பிடிச்சிருக்கு! அதுக்கு மேல என்ன வேணும் தம்பி? எங்க ஊர்ல மீனாட்சி அம்மன் கோவில்ல கல்யாணம் நடத்திக்கலாம். எங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா அங்க கல்யாணம் நடக்க பதிவு பண்ணிடலாம். இங்க சின்னதா ஒரு வரவேற்பு வெச்சிடலாம்" என சுந்தரம் ஆலோசனை கூறினார். 'எங்க விசாலாட்சி மனம் மாறிவிடுவாளோ?' என்ற பயம் அவருக்கு.
தேவிகா, "ஆமா நல்ல காரியத்தை எதுக்கு தள்ளி போடணும்?" என்றவர் தன் கணவருக்கு கண் காட்ட,
பின்பு திருமணத்திற்கு தேவையானதை எப்படி? எங்கே? வாங்குவது என அனைத்தையும் கலந்து ஆலோசித்தனர்.
அங்கு வந்ததில் இருந்து கார்த்திக் சித்துவிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தான். இடையிடையே நடை பழகிக் கொண்டிருந்த தர்ஷினியுடனும் பேசினான்.
அனைத்தையும் பேசி முடிவெடுத்தவர்கள் ஊருக்குச் சென்றனர்.
அன்று முடிவெடுத்தது அதன் பிறகு திருமணம் முடிந்து இப்பொழுது இங்கிருக்கின்றனர்.
பூவோடும் பொட்டோடும் இருக்கும் தங்களின் மகளைப் பார்க்கப் பார்க்க காவ்யாவின் பெற்றவர்கள் மனம் குளிர்ந்துவிட்டது.
'எங்கே தங்களின் மகனுக்கு திருமண ராசியே இல்லையோ?' என பயந்த கார்த்திக்கின் பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்துவிட்டது.
புது இடம், புது ஆட்கள் என சற்று பயந்த சித்து காவ்யாவிடம் ஒட்டிக் கொண்டிருந்தான்.
மீனாட்சி, "என்கிட்ட வா. நான்தான் உனக்கு புது அத்தை" என சித்துவிடம் அறிமுகமாக முயன்றாள்.
ஆனால் சித்து கார்த்திக்கின் பின்னே ஒளிந்து கொண்டான்.
"புதுசா இருக்குறதால பயப்படுறான் போலக்கா. பழக பழக சரி ஆகிடுவான்" என கார்த்திக் கூறினான்.
‘அந்தப் பிள்ளையைப் பற்றி எவ்வளவு சரியாக கூறுகிறான்!’ என விசாலாட்சிக்கு சுந்தரத்திற்கும் ஆச்சர்யமாக இருந்தது.
மாலை முடிந்து இருள் கவிழ்ந்தது. காவ்யாவும் கண்மணியும் ஒரு அறையில் இருந்தனர். சித்து அங்கிருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான். கலக்கமும், குழப்பமுமாக இருந்த காவ்யாவை பார்த்த கண்மணி, "இது உன்னோட வாழ்க்கை காவ்யா. நீ இதுல நிறைவா வாழணும்" என்றாள்.
கண்மணியின் கையை பிடித்த காவ்யா, "எ.. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு அண்ணி" என தவிப்புடன் சொன்னாள். அவளை ஆறுதல்படுத்தி சாப்பிட வைத்தாள் கண்மணி.
அங்கே மாடியில் சத்யன் கார்த்திக்கிடம், "இங்க பாரு மாப்ள, கல்யாணம் வேணா அந்த குழந்தைக்காக நடந்திருக்கலாம். ஆனா இனி காவ்யா உன்னோட மனைவி. அத மனசுல வெச்சிக்கோ. உன்னோட வாழ்க்கை கண்டிப்பா சிறக்கணும்" என கூறிவிட்டு அவனை அறைக்கு அனுப்பினான்.
'உன்னுடைய மனைவி' என்ற வார்த்தை கார்த்திக்கை அசைத்துப் பார்த்தது. 'ஆமா இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கே எனக்குன்னு மனைவி, மகன் வந்துட்டாங்க' என்ற எண்ணம் அவன் மனம் முழுவதும் பரவி இதம் தந்தது.
அறைக்குள் வந்தவன் அங்கே உறங்கிக் கொண்டிருந்த சித்துவிடம் சென்றான்.
மெதுவாக அவன் தலையை கோதிவிட்டு நெற்றியில் முத்தமிட்டவன் நிமிர்ந்து காவ்யாவைப் பார்த்தான்.
‘என்ன பேசுவது?’ என தெரியாமல் இருந்த இருவரும் சங்கடமாக உணர்ந்தனர்.
"எப்பவும் இப்படி தான் சீக்கிரமா சித்து தூங்கிடுவானா?" என கார்த்திக் வினவ,
“அப்படின்னு இல்லை. இன்னைக்கு காலைல சீக்கிரம் எழுந்ததுனால சீக்கிரமா தூங்கிட்டான்"
"சரி நீங்க கட்டில்ல தூங்குங்க. நான் கீழ படுத்துக்கிறேன்"
இதற்கு மறுப்புக் கூற முடியாமல் இருந்தவள் அமைதியையே கடைப்பிடிக்க, ஒரு பாயை விரித்த கார்த்திக் படுத்துவிட்டான்.
அவன் மனதில் திருமணத்திற்கான கனவுகள் இருந்த காலங்கள் எல்லாம் என்றோ கலைந்து கானலாய் போய்விட்டன. ஆனால் இப்பொழுது எதுவோ ஒன்று அவனைத் துரத்துவது போல் இருக்க மனதை சமன்படுத்த முயன்றவன் கண்ணை இறுக மூடிப் படுத்துக் கொண்டான். பின் காவ்யாவும் எதுவும் சொல்லாமல் படுத்துவிட்டாள்.
காவ்யாவின் வீட்டினர் அனைவரும் மறுநாளே அங்கிருந்து கிளம்பினர். கார்த்திக், சித்து, காவ்யா மட்டும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு புறப்பட்டனர்.
அங்கிருந்தவரை காவ்யா அனைவரிடமும் நன்றாக பழக, விசாலாட்சிக்கு காவ்யாவை ஓரளவு பிடித்துவிட்டது.
இவர்களை வரவேற்க காவ்யாவின் வீட்டினர் அனைவரும் காவ்யாவின் வீட்டில் இருந்தனர்.
இங்கு வந்த பிறகு, ஏற்கனவே மூட்டை கட்டி வைத்திருந்த காவ்யா மற்றும் சித்துவின் பொருட்கள் அனைத்தையும் கௌதமின் உதவியுடன் கார்த்திக்கின் வீட்டில் மாற்றினர்.
காவ்யா மற்றும் கார்த்திக்கின் திருமணத்தை கேள்விப்பட்டு அப்பார்ட்மென்டில் வசிப்பவர்கள் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.
சித்து எப்பொழுது கார்த்திக்குடன் பேசினாலும், "கார்த்தி அங்கிள்" என விழிப்பதை பார்த்த ராமமூர்த்தி, "அப்படி சொல்ல கூடாது சித்து.." என ஆரம்பித்து முடிக்கும்முன்,
"அவனுக்கு என்ன தோணுதோ? அப்படியே கூப்பிடட்டும் மாமா. நாமளா எதையும் திணிக்க கூடாது" என்றான் கட்டளையுடன்.
அதன் பிறகு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டனர்.
கிளம்பும் முன் கௌதம் கார்த்திக்கிடம், "எனக்கு மட்டும் தான் தெரியும் கார்த்திக். நீங்க ரெண்டு பேருமே குழந்தைக்காக மட்டுமே கல்யாணம் பண்ணியிருக்கீங்கன்னு, ஆனா அதையும் தாண்டி உங்க ரெண்டு பேருக்கான வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கு. கொஞ்சம் அத பத்தியும் யோசிங்க" என்றவன்,
"அதுக்கு நீங்க மொதல்ல காவ்யாவை உங்க மனைவியா பாருங்க" என்று சொல்லிவிட்டு விடைபெற்றான்.
மதுரையில் இருந்தவரை கார்த்திக், காவ்யா, சித்து என மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
ஆனால் இங்கே மூன்று அறை இருக்க காவ்யாவிற்கு 'எங்கு தங்குவது?' என குழம்பினாள்.
"உன்னோட பொருளையும் சித்துவோடதையும் என்னோட.." என்று சொல்ல வந்தவன், "சாரி இனிமே அது நம்மளோட அறை. அங்கேயே வெச்சிடு காவ்யா" என்றான் கார்த்திக்.
முதல் முறை அவளை ஒருமையில் அழைத்தவன் உரிமையாக பேசுவதில் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவள் 'இனி இதை பழகிக்கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்தாள்.
சித்துவின் குறும்புப் பேச்சு, சித்துவை அதட்டும் காவ்யாவின் சத்தம், ஒவ்வொரு நிமிடமும் இங்கு, அங்கு என நடக்கும் பொழுது காவ்யாவின் மெல்லிய கொலுசின் ஒலி என அனைத்தும் அந்த வீட்டை நிறைத்தது. அவர்கள் இனி தனக்கானவர்கள் என்ற எண்ணமே அவன் அறியாமல் காவ்யாவை ஒருமையில் அழைக்கத் தூண்டியது.
அதிலிருந்து தனது வாழ்க்கைக்கான அடுத்த அத்தியாயத்திற்கு தானறியாமலே பிள்ளையார் சுழி போட்டான் கார்த்திக்.
கார்த்திக்கின் கட்டில் பெரிதாகவே இருக்க சித்துவை நடுவில் படுக்க வைத்துவிட்டு இருவரும் இரண்டு பக்கமும் படுத்துக் கொண்டனர்.
எப்பொழுதும் போல் காவ்யா சித்துவிற்கு கதை கொல்லிக் கொண்டிருத்தாள். அதையே கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் தான் முதலில் உறங்கிப் போனான்.
காடெங்கும் சுற்றி தனக்கான இடத்திற்கு வந்ததாக நிம்மதியாக உணர்ந்தான் கார்த்திக். காலையில் எழுந்ததும், "குட் மார்னிங்! அண்ட் தேங்க்ஸ் காவ்யா" என்றான்.
"எதுக்கு?" என புரியாமல் விழித்தவளிடம்,
"எத்தனையோ இரவு தூங்காமல் வானத்தை வெறிச்சி பார்த்துகிட்டு இருந்திருக்கேன். ஆனா? நேத்து நைட் நீ சித்துக்கு சொன்ன கதையை கேட்டுகிட்டே எனக்கு நல்ல தூக்கம் வந்தது" என்றான்.
'இது பாராட்டா? இல்லை கிண்டலா?' என யோசித்தவள் சின்ன சிரிப்புடன் வெளியே சென்றாள்.
மறுநாளே கார்த்திக் அலுவலகம் புறப்பட்டான்.
“எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு காவ்யா. நீயும் சித்துவும் தனியா இருந்துப்பீங்க தான?”
“நீங்க போய்ட்டு வாங்க நாங்க இருந்துப்போம்” என்று காவ்யா கூற,
“எப்ப கார்த்தி அங்கிள் வீட்டுக்கு வருவீங்க?” என எதிர்பார்ப்புடன் கேட்டான்.
“சித்து குட்டியை பார்க்க சீக்கிரமே வந்துடுவேன்” என்றவனுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. அது பிடித்தும் இருந்தது!
காவ்யா இன்னும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்திருத்தாள். 'என்ன செய்வது?' என யோசித்தவள் அவள் மற்றும் சித்துவினுடைய துணிகளை அடுக்கத் தொடங்கினாள்.
மதியம் போல் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தார் லட்சுமி. “எங்க நீ இந்த சின்ன குட்டியை வெச்சிக்கிட்டு தனியாவே இருந்துடுவியோன்னு நான் கவலைப்பட்டேன் காவ்யா. நல்லவேளை கார்த்திக் மாதிரி ஒரு நல்ல தம்பியை கல்யாணம் பண்ணிகிட்ட” என்று சொன்னார்.
‘அன்னைக்கு எப்படி பேசுனாங்க? இன்னைக்கு இப்படி பேசுறாங்க?’ என மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொண்டவள் அவர்களை பேசி வழி அனுப்பி வைத்தாள்.
இரவு ஏழு மணிக்கு மேல் வந்த கார்த்திக்கை வால் பிடித்துக் கொண்டே சுற்றினான் சித்து.
இருவரும் ஒன்றாக அமர்ந்து கார்ட்டூன் பார்த்தனர்.
காவ்யா மற்றும் கார்த்திக்கின் பேச்சு சித்துவை வைத்தே நடந்துக் கொண்டிருந்தது.
திருமணம் ஆனாலும் நேரிடையாக பேச இருவரும் கொஞ்சம் தயங்கினர்.
ஒருவாரம் சென்றிருக்க விசாலாட்சியும் சுந்தரமும் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தனர். ஒருவாரம் தங்கிவிட்டு வரவேற்பை முடித்துவிட்டு செல்ல வந்திருந்தனர்.
அன்று அலுவலக மீட்டிங் அறையில் யாவரும் கூடியிருந்தனர். வேலை நிமித்தம் அனைவருடனும் பேசி முடித்த கார்த்திக், "ஒரு டூ மினிட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணுங்க" என அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியேறினான்.
"எதுக்கு இப்ப வெளிய போறாரு?"
"டீம்க்கு புதுசா யாராவது வராங்களா?"
"கார்த்திக் வேலைய விட்டு போறாரா?" என்ற கேள்விகள் நொடியில் பிறக்க பதில் தெரியாமல் அனைவரும் குழம்பினர்.
உள்ளே வந்த கார்த்திக்கின் கையில் இனிப்பு இருந்தது.
பாலாஜி, "உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கா கார்த்திக்? கங்கிராட்ஸ்!" என முதல் ஆளாக வாழ்த்து கூற,
"ப்ரோமோஷன் தான்! ஆனா ப்ரோபஷனலா இல்லை பர்சனலா!" என்றவன்,
"லாஸ்ட் வீக் தான் எனக்கு கல்யாணம் நடந்துச்சி. அதுக்கு தான் இந்த ஸ்வீட்" என அனைவரிடமும் இனிப்பை பகிர்ந்தான்.
முதலில் அதிர்ந்தவர்கள், பின் வாழ்த்துகள் கூறிவிட்டு, "எங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் வேணும்" என கோரிக்கை வைத்தனர்.
"அதனால என்ன?" என்ற கார்த்திக், ஒரு பார்ட்டி ஹாலின் பெயரை குறிப்பிட்டு "நெக்ஸ்ட் சண்டே எல்லாரும் பேமிலியோட கண்டிப்பா வாங்க" என வரவேற்றவன் மீட்டிங் அறையை விட்டு வெளியேறினான்.
"என்ன இருந்தாலும் நம்ம கார்த்திக் சார் கெத்து தான். கல்யாணம்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம முடிச்சிட்டு வந்து சொல்லுறாரு. ஆமா? அவரு ரெண்டு நாளுக்கு மேல லீவு கூட எடுக்கல தான?" என ஒருவன் சந்தேகம் கேட்க தொடங்கினான்.
மற்றொருவன் "எனக்கென்னமோ? அவரை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண வெச்சிருப்பாங்கன்னு தோணுது" என அவனுடைய அனுமானத்தை கூறினான்.
"என்ன இருந்தாலும். அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு பார்க்கவாது நாம போகணும்" என ரம்யா சொன்னாள்.
"ஆமா டி. என்னோட கல்யாணத்துக்கு தான் அவரு வரல! ஆனா அவரோட பார்ட்டிக்கு நான் மொத ஆளா போய் ஷாக் கொடுக்குறேன் பாரு" என சபதமெடுத்தால் இரு மாதங்களுக்கு முன் திருமணமான ஸ்வேதா.
கார்த்திக் முதலில் அனைவரிடமும் சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தான். ஆனால் அவனின் நண்பன், "இதெல்லாம் மறைத்து வைத்து என்ன பண்ண போற கார்த்திக்? என்ன தான் பர்சனல்னு நாம இருந்தாலும் நம்ம கூட வேலை செய்யுறவங்களுக்கு நாம யாரு, நம்ம வீட்ல யார் இருக்காங்க அப்படின்ற அடிப்படை தெரிஞ்சி இருக்கணும். நாளைக்கே ஏதோ ஒரு எமெர்ஜென்சில நமக்கு தான் அது உபயோகமா இருக்கும்" என விளக்கினான்.
கார்த்திக்கிடம், அவனது டீமில் இருக்கும் அனைவரின் இருப்பிடம் மற்றும் அவசரத் தேவைக்கு யாரை அழைக்க வேண்டும் என அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் தனது நண்பனின் கருத்தை ஆமோதித்தான்.
ஞாயிறு மதியம் அனைத்து ஏற்பாடுகளும் அந்த நட்சத்திர ஹோட்டலில் தயார் செய்யப்பட்டது. இருபக்கமும் நெருங்கிய சொந்தங்கள், அபார்ட்மென்டில் பழகியவர்கள் என அழைக்கப்பட்டிருந்தனர்.
காவ்யாவும் தன்னுடன் பணிபுரிவோரை அழைத்திருந்தாள்.
மேடையில் நின்று அனைவருக்கும் காட்சி பொருளாக இல்லாமல் சாதாரண ஒரு நலவிசாரிப்பு மாதிரி அனைவரிடமும் காவ்யாவும், கார்த்திக்கும் சென்று பேசிவிட்டு வந்தனர்.
சித்து வந்திருந்த குழந்தைகளுடன் விளையாட ஓடிவிட்டான். எப்பொழுதும் எண்ணி எண்ணி பேசும் கார்த்திக் கூட சற்று கலகலப்பாக உரையாடினான்.
"இது நம்ம கார்த்திக் சார் தானா? இவ்வளவு பிரன்ட்லியா இருக்காரே?”
“ஆபீஸ்ல மட்டும் தான் டெரர் போல”
“அவரோட மனைவி கூட அழகா தான் இருக்காங்க” என ஆளாளுக்கு அவர்களின் கருத்தை கூறிக் கொண்டிருந்தனர் கார்த்திக்குடன் பணிபுரிவோர்.
அந்நேரம் காவ்யாவை நோக்கி, “மம்மி..” என சித்து ஓடிவந்தான்.
அதைப் பார்த்து அதிர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இதற்குமேல் இவர்களை விட்டால் ஏதேனும் பேசுவார்கள் என நிலைமையை கையில் எடுத்த பாலாஜி, “சரி வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம்” என அனைவரையும் அழைத்து சென்றான்.
விழா முடியும் தருவாயில் காவ்யாவின் முன்னாள் மாமியார் மங்கலம் வந்தார். அவர்களுடன் ராஜேஷ் வந்திருந்தான்.
காவ்யாவின் குடும்பம் அவர்களை வரவேற்றனர்.
அவர்களிடம் பாட்டி பாட்டி என கதை பேசிய சித்துவை பார்த்த கார்த்திக்கின் அன்னைக்கு சற்று புகைச்சலாகவே இருந்தது.
விசாலாட்சியும், மீனாட்சியும் சித்துவிடம் எவ்வளவு பேச முயன்றாலும் சித்து அவர்களுடன் பேசாமல் ஓடிவிடுவான். ஆனால் இவர்களிடம் சென்று கொஞ்சுபவனை பார்த்ததும், ‘என்ன இருந்தாலும் அவங்க இரத்தம் தான?’ என நினைத்துக் கொண்டார்.
பின் காவ்யாவையும் கார்த்திக்கையும் வாழ்த்திவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
காவ்யாவிற்கு இன்னமும் அவர்களின் செயலை புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அவள் அறிந்தவரை ‘மங்கலம் இப்படிப்பட்ட பரந்த மனதை உடையவர் கிடையாது! நிச்சயம் எதுவோ இருக்கு. பார்த்துக்கலாம்’ என்று அதோடு அதை விட்டுவிட்டாள்.
வரவேற்பு முடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டிற்குப் புறபட்டனர்.