எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 3

priya pandees

Moderator
அத்தியாயம் 3

மறுநாள் காலையில் அவன் போனில் வந்த அழைப்பில் தான் விழித்தான் மார்கண்டேயன். அது மூன்று அறைகளை கொண்ட ஃபுல் ஃபர்னிஷ்டு(அனைத்து வீட்டுப் பொருட்களும் அடங்கிய முழு வசதியுடன் கூடிய வீடு) சற்று வசதியான அமைப்புடைய வீடு.

நான்கு தளங்கள், அதில் இவர்கள் வீடு இரண்டாவது தளம், இங்கு வந்த பனிரெண்டு வருடங்களாக மார்க் இங்கு தான் இருக்கிறான். மூன்று, மூன்று வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்ந்து போட்டு வேறு வீடு மாறாமல் அங்கேயே இருக்கிறான்.

திருவள்ளுவன் கடந்த ஐந்து வருடங்களாக தான் இவனுடன் இருக்கிறான். ஆளுக்கொரு அறை, மற்ற அறையில் ஊரில் இருந்து வருபவர்களை, நண்பர்கள் பார்ட்டி என வருபவர்களை தங்க வைத்துக் கொள்வர், இதுவரை வருடம் தோறும் மார்கண்டேயனின் அக்கா குடும்பம் மட்டும் வந்து ஒரு மாதம் தங்கிவிட்டு செல்லும், திரு வீட்டிலிருந்து இரு முறை மட்டுமே அவன் மனைவி இரு பிள்ளைகள் வந்து ஒரு வாரத்தில் திரும்பிச் சென்றுமிருந்தனர்.

இதுபோல நேரங்கழித்து வரும் நாட்களில் ஹாலில் ஹீட்டரை போட்டுவிட்டு ஆளுக்கொரு நீள்விருக்கையிலேயே சுருண்டு கொள்வதும் வழக்கம். இப்போது அலைபேசி சத்தம் இறைய, இருவருக்கும் கண்ணே விழிக்க முடியாமல் தீயாக காந்தியது.

"டேய் மார்க்கு நைட்டு நீ தூங்க விட மாட்டேங்குற, காலைல உன் ஃபோனு தூங்க விட மாட்டேங்குது. ஒன்னு அத எடு இல்லனா அமத்தி போடு" என வள்ளுவன் கத்த,

"வள்ளுவன்னு பேர வச்சுட்டு நாராசமா பேசாத நாதாரி" என போர்வையை சுழற்றி அவன் முகத்திற்கு வீசிவிட்டு எழுந்த மார்கண்டேயன் முகத்தை இரு கைக்கொண்டு அழுந்த தேய்த்து விட்டான்.

மறுபடியும் "ஆதியில் ஆண்டவன்,
இந்த பூமியை படைத்தானே,
அவன் ஆசையை போலவே,
இந்த பூமி அமையலையே.."என போனில் அழைப்பு வர, "ஐயோ!மார்க்கண்டேயா.. அந்த போன எடேன்யா ப்ளீஸ்" என கண்ணைத் திறக்காமலே திரும்பிப் படுத்துத் தூக்கம் கலையும் கடுப்பில் புலம்பினான் திரு.

அவனை ஒரு பார்வைப் பார்த்த மார்கண்டேயன் நிதானமாக டீஷர்டை கழற்றி சோபாவில் வீசிவிட்டு துண்டுடன் குளியலறை நுழைந்துவிட்டான். அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்றுகூட பார்க்கவில்லை அவன்.

மறுபடியும் அழைப்பு, "ஆதியில் ஆண்டவன்.." என ஆரம்பித்து அதுபோக்கில் "புயல் மையம் கொண்டால், மழை மண்ணில் உண்டு" என அலறிக் கொண்டிருந்தது.

"டேய் மார்க்கு நீலாம் இருக்க ஊர்ல மழை முதல்ல பெய்யுமா? என் உசுர வாங்கிக்கோன்னே உன்கூட சுத்றேன் நானும்! என்னைய சொல்லணும்" என புலம்பியபடி எழுந்தமர்ந்து சுற்றிலும் அவனைத் தேட, அவன் எழுந்து சென்ற அடையாளம் மட்டுமே இருக்க, பல்லைக் கடித்து மொபைல் இருக்கும் திசையைப் பார்த்தான், இரவு வைத்த இடத்திலேயே அது இன்னும் இருந்தது.

"எந்துச்சு போகும்போது அத அணைச்சுட்டு போனா என்ன இவனுக்கு" என தலையில் கை வைக்க அழைப்பு நின்றிருந்தது.
"ஷப்பா! திரும்ப வராம இருந்தா சரி" என மல்லாக்க சாய்ந்துவிட்டான். அரைமணி நேரம் சென்றிருக்க, மார்கண்டேயன் காலைகடன்களோடு குளியலையும் முடித்து வேறொரு டீஷர்ட் ட்ராக் சகிதம் ட்ரையரில் காய வைத்த முடியை கோதியபடி அவன் அறைக்குள்ளிருந்து வெளியே வர, அவன் அலைபேசி, "சந்தோஷம் சந்தோஷம்!" என ஆரம்பித்தது.

திடுக்கென்று தூக்கிப்போட எழுந்தமர்ந்தான் திரு, அவன் அதிர்வில் அவனைத் திரும்பிப் பார்த்த மார்க், "குட் மார்னிங் வள்ளுவா!" என சொல்லி, "சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்" என பாடிக்கொண்டு செல்லையும் எடுக்க,

"எங்கடா சந்தோசமா இருக்க விடுறீங்க? ஊர்ல அந்த சொக்கலிங்கம் சந்தோசமா இருக்க விட்ருந்தா இங்க வர வந்துருப்பனா, உன்கிட்ட இப்படி அல்லோல படுவேனா?" என எரிச்சலாக பேச,

"வீக்கெண்ட் ஆஃப் பார்ட்டி வரல நீ?" என்றான் மார்க் கேள்வியாக,

"எனக்கு இன்னும் விடியவே இல்ல ராசா! நீ முதல்ல அந்தப் போன எடுத்துட்டுக் கிளம்பு, கூடவே வந்தாலும் பாதில கலட்டிவிடத்தான போற? இன்னைக்கு உனக்கு அந்த வேலைய கூட நா வைக்கல, கிளம்பு"

"இத நேத்து நைட்டே செஞ்சுருக்கலாம்ல?"

"தப்பு தான், தனியா டென்ஷனா இருக்கியேன்னு உட்கார்ந்திருந்தேன்ல? அதுக்குத்தான இப்ப இப்படி பலிவாங்குற? இனி அந்த தப்ப செய்யவே மாட்டேன் கிளம்பு" என முறைத்தே கூற,

"ஓகே உன் இஷ்டம்" என தோளைக் குழுக்கியவன், அலைபேசியில் காரை புக் செய்தவாறு கிளம்பிவிட, "இவனோட போய் வேற ஆள கம்பெனி குடுக்கத் தேடுறதுக்கு இங்கேயே நாலு சுவத்தப் பார்த்துட்டுப் படுத்துருக்கலாம்" என போர்வையை இழுத்து மூடிப் படுத்துவிட்டான் திரு.

காரில் சென்றுகொண்டிருக்கையில் தான் காலையில் வந்த அழைப்புகளையே எடுத்துப் பார்த்தான் மார்க். அவன் அக்கா இருமுறையும், அம்மா நான்கு முறையும் அழைத்திருந்தனர். அப்போதும் கூட அவனிடம் பதட்டமில்லை, ஏனென்றால் அவன் மனைவியைப் பற்றி பேசுவதைத் தவிர வேறு எதற்காகவும் இப்படி மாற்றி மாற்றி அழைக்க மாட்டார்கள் இருவரும். விஷயம் சிறியதோ பெரியதோ அவன் காதில் போட்டு வைத்துவிட வேண்டும் என விடாமல் அழைத்து நச்செறித்துவிடுவர்.

இது கூட இப்போதுதான் அவனுக்கு புரியத் துவங்கியிருக்கிறது. மூன்று வருடத்திற்கு முன் மனைவியிடம் பேச்சுவார்த்தையில் இருந்தபோது அடிக்கடி சண்டை கூட இதனால் வரும், அப்போதெல்லாம் அவளை வறுத்தெடுத்துவிடுவான். இப்போது அவளிடமிருந்து எந்த பிராதுகளும் இல்லை ஆனால் இவன் உடன்பிறப்பு தவறாமல் அவளைப் பற்றி ஒன்றும் விடாமல் ஒப்புவித்து விடுகிறாள். தம்பியைத் தவிக்கவிடும் கோபமாகவும் இருக்கலாம் என்ற எண்ணம் இவனுக்கு.

இப்போதும் அப்படி எதுவோ ஒன்று தான் என தோன்ற, திரும்ப அழைக்க கூட எரிச்சலாக இருந்தது. இப்படி எந்த தொந்தரவும் வேண்டாம் என்று தான் பிள்ளைகளிடம் கூட பேசாமல் இருக்கிறான், அவள் விட்டாலும் இவர்கள் விடுவதாக இல்லை. வாரம் முழுவதும் வேலையில் மண்டையை உடைப்பவனுக்கு இந்த வார இறுதிகள் மிகமிக முக்கியம். எந்த பாரமும் அழுத்தாமல் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள நினைப்பான்.

இரண்டு நாட்களும் சியாட்டில் நகரத்தை இஷ்டம் போல சுற்றி வருவான், 'அட்வென்ச்சர் படங்கள் விரும்பி!' மாதம் ஒரு படம் பார்த்துவிடுவான். தனிமை விரும்பி, அவனாகவே அனைத்தையும் சுற்றிப் பார்த்து மனதில் பதியவைத்து அதை ரசித்து அனுபவித்து என அத்தனையும் தனியாக செய்வதில் தான் அவனுக்கு அலாதி இன்பம். திரு வந்தாலும், உடன் ஒருவன் வருகிறான் என்ற எண்ணமே இல்லாமல் தனி உலகில் அவனுக்குள் அசைபோட்டுக் கொண்டு நடப்பான். அதில் கடுப்பாகி அவனே வழியில் அவர்கள் அபார்ட்மெண்ட் அல்லது அலுவலக நண்பர்கள் யாரையும் கண்டால் அவர்களோடு சென்றுவிடுவான். அந்த தனிமை மீது கொண்ட விருப்பமே, மனைவி பிள்ளைகளை கூட பிரிந்து இருக்க வைத்திருக்கிறது.

இன்றும் சற்று உயரமான மலையும் அதில் கொட்டும் அருவியுமான இடத்திற்கு வந்திறங்கியவன், வேடிக்கைப் பார்த்தவாறு நடக்கத் துவங்க, அவனுக்கு அழைப்பு வந்துவிட்டது.

"சொல்லும்மா!" என்கையிலேயே, அங்கு அழ ஆரம்பித்திருந்தார் சாம்பவி.

"என்னம்மா?" என்றான் சுருங்கிய புருவங்களுடன்.

"எவ்வளவு நேரமா உனக்கு ஃபோனடிக்கோம். நீ இப்படி எடுக்காம இருந்தா அவ்வளவு தூரத்துல இருக்கவனுக்கு என்னவோ ஏதோன்னு என்னன்னு நினைக்கிறதுடா நாங்க?" என விசும்பினார்.

"இங்க எனக்கு எதுவும்னா நீ இத்தன ஃபோன் அடிக்கவே வேணாம், அவங்களே உன் மருமகளுக்கு கூப்பிட்டு சொல்லிருவாங்க, அவ்வளவு கஷ்டம் இல்ல உங்களுக்கு"

"என்னடா பேசுற நீ? ஒரு பேச்சுக்கு சொன்னா!" என கடிந்தவர், "அந்த மருமகள்ட்ட சொல்ல கூட அவ ஃபோனெடுக்கனும் ஞாபகம் வச்சுக்கோ. அவ என்ன முடிவுல இருக்கான்னே தெரியல, நீயும் அங்க யாரும் வேணாம்னு போய் உட்கார்ந்துருக்க. இங்க நடக்குற எதாவது தெரியுமா உனக்கு?"

அவனுக்கு இன்னொரு அழைப்பில் அவன் அக்கா எண் வர, "இரு அக்காவும் கூப்பிடுறா, ரெண்டு பேருட்டையும் ஒரே டைம்ல பேசிடுறேன்" என அவன் அக்கா லதாவையும் அதில் இணைத்தான்.

"தனி தனியா பேசக்கூட நேரம் வீணா போகும்னு நினைக்கறவன்ட என்னத்த பேச தம்பி" என அவர் அருகில் இருந்த அவர் தம்பி, மார்கண்டேயனின் தாய்மாமவிடம் புலம்பினார் சாம்பவி.

அதைக் கேட்டவாறே லதாவிடம், "சொல்லுக்கா" என்றான், மாமாவும் அங்கிருப்பது புரிய, விஷயம் என்னவோ என்ற யோசனை தான் அவனிடம்.

"ஏன்டா போனடிச்சா எடுக்க மாட்டியா?" என்றார் லதா எடுத்ததும்.

"என்ன விஷயம்?" என்றான் இவன் அதைவிட சுருக்கமாக.

"அங்க உன் பையனுக்கு தலைல அடிபட்டு ஹாஸ்பிடல்ல வச்சுருக்காங்களாம். அவன் எப்படி இருக்கான்னு கேட்க கூட ஃபோனெடுக்க மாட்டேங்குறா உன் பொண்டாட்டி" என லதா சொல்ல,

"உன் மாமனார்ட்ட காலைல தான் பேசுனேன் மாரா, அவர் அப்ப இப்படி எதுவும் சொல்லல, சாயந்தரம் தான் நம்ம மருது சித்தப்பா சொல்றாரு. ஆறு மணில இருந்து போன போடுதேன் எடுப்பேனான்னு இருக்கா. எங்க பேரன பத்தி விசாரிக்க கூட அவகிட்ட கெஞ்சிட்டு கிடக்கணுமா நாங்க" என இன்னும் அழுதார் சாம்பவி.

அவர் அழுகை உண்மையே, மகன் வாழ்க்கையை இப்படி வீணடிக்கிறானே என மனதினுள் அவ்வளவு பொறுமல் ஆனால் எவ்வளவு புலம்பியும் அவனிடம் வேலைக்காகவில்லை, மருமகளாவது இவனை இழுத்துப் பிடிப்பாள் என பார்த்தால், விட்டுவிட்டு இவர்களையும் ஒதுக்கி வைத்து அல்லாட விடுகிறாள் என நாட்கள், மாதங்கள் இப்போது வருடங்கள் என அவர்கள் பிரிவு தொடருவது தீரா பயத்தைத் தந்திருந்தது அவருக்கு.

"அம்மாவ அழவிடுறாடா உன் பொண்டாட்டி. நம்ம வீட்டு வாரிசு அவங்க ரெண்டு பேரும், இவ என்ன பதில் பேச மாட்டேன்னு சொல்றது. நீ விட்டுட்டு இருக்க இருக்க அவ ரொம்பத்தான் ஆடுறாடா, இப்ப வேலைக்குப் வேற போறால்ல அதனால இனி உன் தயவு கூட அவளுக்குத் தேவைபடாது" என லதா பொரிந்து தள்ள,

"ம்ச் உன் தம்பியே ஆணவம் புடிச்சவன், நீ இன்னும் அவன ஏத்திவிட்டா நல்லா குடும்பம் பண்ணிருவான். நீ பேசாம இரு லதா" என்றார் சாம்பவி.

"ம்மா. உனக்கு போய் பார்க்கணும்னா போய் பார்த்துட்டு வா. சின்ன பசங்க தானே கீழ விழுந்து எழ தானே செய்வாங்க. பெருசா எதுவும் இருக்காது. எதுக்கு அவளுக்கு ஃபோன் பண்ணிட்டுக் காத்துட்டு இருக்க?" என்றான் இவன்.

"ஆமாம்மா போய்ட்டு கையோட அவனக் கூட்டிட்டு வந்துரு. இனி அவன் இங்க இருந்து வளரட்டும். நாம வளத்துக்கலாம்" என்றார் லதா.

"நாமன்னா? நீ உன் கூட சென்னைக்குக் கூட்டிட்டுப் போயிடுவியா? எனக்கு ஓடியாடுற பிள்ளைகளோட சேர்ந்து ஓடி விளையாடுற வயசுன்னு கண்டியா நீ?" என்றார் சாம்பவி.

"ஏன் என் தம்பி பிள்ளைகள நா வளர்க்க மாட்டேனா? என்னைய என்னம்மா நினச்ச நீ? நா உனக்காகவும், மாராக்காகவும், என் மருமவனுங்களுக்காகவும் தான் பேசுறேன். அவள நம்ம வீட்ல இருக்க வேணாம்னு நாமளா சொன்னோம்? அவளா கோச்சுட்டுப் போய் அவ அம்மா வீட்ல உக்காந்துட்டு நாம வாழவிடாம வச்சுட்ட மாதிரி சொந்தகாரங்க எல்லாரையும் பேச வச்சுட்டா தான?"

"நம்ம பக்கமு தப்பிருக்குடி" என இவரும் பேச, லதாவும் பேச, நடுவில் அமைதியாக இருக்கும் ஒருவனை இருவரும் மறந்திருந்தனர்.

கடைசியாக, கண்ணன் பிறந்தபோது அவர்கள் மூவரையும் நேரில் பார்த்தான், அதன்பின் அவ்வபோது, அவள் அண்ணன் வைக்கும் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்களில் அவர்கள் புகைப்படங்களில் தான் இன்றுவரைப் பார்க்கிறான். இவன் பார்க்கட்டும் என்றே அவள் அண்ணன் வைப்பதாக தோன்றும். 'நீ இல்லாமல் என் தங்கை ஒன்றும் வாடிபோய்விடவில்லை' என காட்டவே வைக்கிறானோ என புகைச்சலாகவும் இருக்கும், அது அவன் பார்க்கும் சமயங்களைப் பொறுத்து மாறுபடும்.

திருமணம் முடித்த தினத்திலிருந்தே அடிக்கடி சண்டை வரும், இவனை அங்கு வரச் சொல்லி அழைப்பாள், இல்லை என்றால் தான் அமெரிக்கா வருகிறேன் என்பாள், இரண்டுக்கும் மசியாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தவன் இவன்தான். அப்படி ஆரம்பிக்கையில் எல்லாம் சண்டையில் தான் சென்று முடியும். முதலில் வாரக் கணக்கில் பேசாமல் இருந்து, பிறகு சமாதானமாகி இறங்கி வந்திருந்தனர் இருவரும். அடுத்து அது மாசக் கணக்கிற்கு சென்றபோது, நேரில் சென்று கூட சமாதானம் செய்து, "இன்னும் ஒரு வருஷம் தான் அப்றம் இங்கயே வந்துடுறேன்" என சொல்லி கிளம்பி வந்திருக்கிறான். இரண்டாம் பிள்ளைப் பிறந்தபோது இந்தியா போனவனிடம், "இனி இங்க தான் இருக்கணும் நீங்க. என்னால ரெண்டு பேரலாம் சமாளிக்கவே முடியாது" என பிடி பிடியென பிடித்துக் கொண்டவளிடம்,

"நா காண்ட்ராக்ட் சைன் பண்ணிருக்கேன். இப்படி வந்த இடத்துல இருந்துக்க முடியாது, நா போய்ட்டு எழுதிக் குடுத்துட்டு தான் வர முடியும். இங்கையும் எனக்கு வேலை கிடைக்கணுமே, ஒன்பது வருஷமா அங்க வேலைப் பாக்றேன். இன்னும் ஒரு வருஷம் பார்த்தா, எம்ப்ளாயி ஆஃப் த இயர் கூட கிடைக்கும். இப்ப இப்படி சொல்ற நீ" என இவனும் பேச,

"எனக்கு தெரியாம அங்க ஒரு குடும்பம் வச்சுருக்கீங்களா நீங்க?" என்றிருந்தாள் பட்டென்று.

அதில் சுறுசுறுவென ஏறிவிட்டது அவனுக்கு, "கல்யாணமே வேணாம்னு இருந்தவன் தான் நான். வீட்ல கட்டாயப்படுத்தினதால தான் உன்னப் பொண்ணுக் கேட்கவே சரின்னு சொன்னேன். அதும் கல்யாணம் பண்ணாலும் நீ இங்க, நா அங்க தான்னு தெளிவா சொல்லிடுங்கன்னு என் அம்மா, அக்காட்ட சொல்லவும் செஞ்சேன். கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கலாம்னு அத சொல்லாம மறைச்சு, என்னைய சமாளிச்சுக்கலாம்னு நினைச்சுட்டாங்க. உன்ட்ட பேச ஆரம்பிச்சு உன்னைய பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். சின்னப் பிள்ளையா, நீ ஆசையா பேசும்போது என்னால உன்ன ஹர்ட் பண்ண முடியல, அதான் இப்பவர இத சொல்லல. கொஞ்ச நாள் தான், அப்புறம் நா இங்கேயே தான் வருவேன். உங்க கூட தான் இருப்பேன்" என்றான் உறுமலாக,

"அதான் எப்போ?" என்றாள் அவனையே கூர்ந்துப் பார்த்து.

"எனக்கே அமெரிக்கா சலிக்கும்போது"

"ஓ!" என யோசித்தவள், பின் ஒரு முடிவுடன், "அதுவரை நா இங்க தான் இருப்பேன். என்னைய,'அங்க போ இங்க போ, என் சார்பா நீ நில்லு, அந்த கல்யாணத்த அட்டென்ட் பண்ணு, இந்த கருமாதிய அட்டென்ட் பண்ணு, பொங்கலுக்கு தீபாவளிக்கு அங்க நம்ம வீட்டுக்குப் போ, அக்கா வந்துருக்கா பிள்ளைய போய் காமிச்சுட்டு வா, அம்மாவால அழைய முடியல கொஞ்ச நாள் நீ அங்கப் போய் இரு' இப்படி எதுவும் சொல்லக் கூடாது, நா செய்ய மாட்டேன். நீங்க எப்ப அந்த அமெரிக்கா சலிச்சுப் போய் இங்க வரீங்களோ அன்னைக்குத் தான் நீங்க என் புருஷன் அப்புறம் தான் நா உங்க பொண்டாட்டி" என்றுவிட்டாள்.

இவனும், கோவத்தில் பேசுகிறாள், அங்கு போன பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்து கிளம்பி வந்திருந்தான். ஆனால் இங்கு வந்தபிறகு, அவன் சொன்ன எதையும் கேட்கவில்லை, முடியாது என அடமாக நின்று சாதித்தாள். அவனுக்கும் அவன் அம்மா, அக்கா, தாய் மாமா குடும்பம் என இவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேச பேச கோவம் ஏறியது, இவளுக்கும் எரிச்சல் அதிகமாகத் துவங்க, ஒருநாள் இருவரும் போட்ட சண்டையில், இனி பேச்சே இல்லை என்றாகிப்போனது.

"என்னடா நாங்க பேசிட்டே இருக்கோம்?" என இப்போதுதான் மகன் அமைதியைக் கவனித்தார் சாம்பவி.

"உனக்குப் போய் பார்க்கணுமா ம்மா?" என்றான் மீண்டும்.

"என்னால அலையவும் முடியலடா மூட்டுவலி இருக்கு தெரியும்? கால ரொம்ப நேரம் ஊனக் கூட முடியல" என்றவருக்கும் வயது எழுபதைத் தாண்டி இருந்தது.

"அக்கா நீ போறியா?" என்றான் லதாவிடம்.

"நா சென்னைல இருந்து என்னன்னுடா போவேன்? இங்க உன் மாமாவும் ஆபிஸ் வேலையா பெங்களூர் போய்ட்டாரு. ப்ருத்வியும், ரிதன்யாவும் நாளைக்கு ஸ்கூல் போணும்ல? என்ன பண்ண முடியும்?"

"அப்றம் என்னத்துக்கு ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் தம் கட்டிப் பேசுனீங்க?" என்றான் கடுப்பாக.

"அவ ஃபோனெடுத்து கூட பதில் சொல்ல மாட்டேங்குறாடா? நாங்க என்ன யாரோவா அந்தப் பிள்ளைங்களுக்கு?" என லதா மறுபடியும் ஆரம்பிக்க.

"என் மாமனாருக்குப் போட்டுக் கேளுங்க, அவர் கண்டிப்பா எடுப்பாரு" என்றான் கத்தரித்து.

"ஆமா பின்ன மக வாழ்க்கை முக்கியம்னு அவருக்காது எண்ணம் இருக்கணும்ல"

"அக்கா நாம பார்க்கல, அவர்தான் நம்ம வீட்டுப் பிள்ளைங்களையும் சேர்த்து பாக்றாரு. இது எனக்கும் என் பொண்டாட்டிக்குமான சண்டை. நீ என்கிட்ட பேசுறத பொறுமையா கேட்கேம்னா நீ தம்பின்னு ஒரு ஆதங்கத்துல பேசுறன்னு தான். அதுக்காக அவள சார்ந்த வேற யாரையும் மட்டந்தட்டி பேசாத, அதுக்கு நா பொறுமையா இருக்க மாட்டேன்" என்றான் கடுகடுவென்று.
 
"நா ஒன்னும் மட்டம் தட்டல, அவள நாம ஒன்னும் நம்ம வீட்ல இருக்க வேணாம்னு விரட்டல, அவ அம்மா வீட்ல இருக்கத்தான் அவளுக்கு பிடிச்சுருக்கு போறான்னு அதையும் அமைதியா எடுத்துட்டோம். இப்ப என்னன்னா ஃபோன கூட எடுக்க மாட்டேங்குறா, நா அங்க போன நேரத்துல நேர்ல போய் பேசுறேன்னு சொன்னாலும் நீ விட மாட்டேங்குற. ஆனா உன் மாமானார் வீட்ட மட்டும் நா எதுவும் பேசிட கூடாதாக்கும்?" என சண்டைக்குக் கிளம்பிவிட,

"இதுக்கு தான் நா ஃபோனே எடுக்குறதில்ல. வைங்க ரெண்டுபேரும். நானாவது என் மாமனார்ட்ட பேசி, கிருஷ்ணாக்கு எப்டி இருக்குன்னு கேட்டுக்கிறேன்" என சொல்லவும்,

"பேசுடா மாரா" என சாம்பவியும், "நீ ஏன் அவருக்கு போட்டு பேசணும்? சரி அப்படியே அவரு ஃபோனெடுத்தாலும், உன் பொண்டாட்டிய உனக்குக கூப்பிட சொல்லிட்டு வை, அவ கூப்பிடட்டும், அவகிட்ட கேளு, எப்படி இருக்காம்ன்னு" என லதாவும் சொல்ல,

"நீ அவன பேச சொல்லல சண்டை போட சொல்ற" என சாம்பவி மகளை அதட்ட, அதற்கு மேல் பொறுமையாக இருக்கவில்லை மார்கண்டேயன், பட்டென்று அழைப்பை நிறுத்திவிட்டு, அடுத்த நொடி அவன் மனைவிக்கு அழைத்திருந்தான்.

கோபக்காரன், ஆணவம் பிடித்தவன் மாமனாருக்கு அழைக்க சொன்னவன், நொடியும் சிந்திக்காமல் மனைவிக்கு அழைத்திருந்தான். கை தன்னால் அவன் மனைவி எண்ணிற்கு தான் சென்றிருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் அவனாக அழைக்க எதுவும் காரணம் வரவில்லை, அவன் தாய்மாமா சென்று விசாரித்து இவனுக்கு சொல்லிவிடுவார், இந்த முறை அவரையும் செல்லவிடாமல் சாம்பவி பிடித்து வைத்திருக்க, இவனும் யோசிக்கவில்லை அழைத்துவிட்டான்.

ஒருவேளை இதற்கு முன்பே அவன் அக்கா, அம்மா, தாய்மாமா என இவனுக்கு இங்கு நடப்பதை பகிர ஆள் இல்லாமல் இருந்திருந்தால், மனைவி குழந்தைகள் பற்றி அறிய தோன்றியிருக்கலாம் அதற்காகவேணும் அவளுக்கு அழைத்திருக்கலாம், ஆனால் அவனுக்காக என்றே எல்லாம் தன்னால் நடக்க, அவனும் அமைதியாக இருந்து கொண்டான். இன்று தேவை வந்துவிட்டது போல அழைத்துவிட்டான்.

நறுமணந்தியில்,

இரவு பதினொரு மணி, குழந்தைகளுக்கான மருத்துவமனையின் ஒரு அறையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மனோ, அவளின் இருபக்கமும் காலை போட்டு கண்ணன் அவள் கழுத்தோடு கட்டிக்கொண்டு தேம்பியபடி படுத்திருக்க, அவன் முதுகில் ஆசுவாசமாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த கட்டிலில் கிருஷ்ணன் தலையில் கட்டுடன் மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். ஊசியான கருங்கல் தலையில் குத்தி இறங்கியிருந்ததால் அதிக ரத்தமும் சென்றிருக்க, இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கட்டும் என்றுவிட்டிருந்தார் மருத்துவர்.

சற்றுமுன் கண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க, "அம்மா கூட தான் இருப்பேன்" என அழுது ஆர்ப்பாட்டம் செய்து, மறுபடியும் மருத்துமனைக்குக் கூட்டி வர வைத்திருந்தான், வந்தும் அவ்வளவு அழுகை என இருக்க இப்போது தான் அது தேம்பலுக்கு வந்திருக்கிறது.

அங்கு வீட்டில் அவள் அண்ணியோடு அம்மா இருக்க வேண்டியிருக்க, ஞானம் இங்கு இவளோடு இருந்தார். அண்ணனின் ரயில்வே உத்யோகம் ஞானமே அனைத்தையும் பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

"நீங்க போங்கப்பா, காலைல வாங்க. இங்க தான் நர்ஸ் இருக்காங்களே நா பார்த்துக்குறேன்" என மனோ சொன்னபோது, அவளுக்கு வலித்ததோ இல்லையோ அவளின் அநாதரவான நிலை அவரை மிகுதியாக அழுத்தியது. அப்பா, அம்மா, அண்ணா என யாருடன் இருந்தாலும் கட்டிக் கொடுத்தப் பெண்ணுக்கு கட்டியவனுடன் சந்தோஷமான மணவாழ்க்கையில் இருக்கவில்லை என்றால் அது அநாதரவான நிலை தான் என நினைத்தவருக்கு தாங்கவே முடியவில்லை.

"அப்பா உன்ன இப்படி விட்டுட்டு எங்கையும் போ மாட்டேன்லே. அவன தூங்க வச்சு என்ட்ட குடுத்துட்டு நீ கொஞ்சம் நேரம் சரிஞ்சு படு மனோ" என அவள் தலையைத் தடவிவிட்டு வெளியே வந்தார்.

'என்னவோ முடியுமட்டும் ஓட வேண்டும்' என்ற நினைப்பில் மனோ அப்படியே இருக்க, அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அலறியது அவள் அலைபேசி.

அருகில் பென்ச்சில் இருந்ததை திரும்பிப் பார்க்க, 'மை மார்க்!' என மின்னி மறைந்தது அதில், கண்ணை நிறைத்த அழுகை அந்த எழுத்தை மறைக்க, சிமிட்டி விட்டுப் பார்த்தாள், கையால் அந்த ஃபோனைத் தொடக் கூட முயலாமல் பார்த்தாள் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா, கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக், குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" அது பாடிக்கொண்டே இருந்தது.
 
Top