எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 18

அத்தியாயம் 18​

அனைவரும் கிளம்பியதும் அனைத்தையும் எடுத்துவைத்துக் கொண்டே தன் அண்ணி கண்மணி கூறியதை யோசித்துக் கொண்டிருந்தாள், காவ்யா.​

“கார்த்திக்கும் உனக்கும் சண்டையா காவ்யா?”​

“இல்லையே அண்ணி. எதுக்கு கேட்குறீங்க?”​

“அம்மாடி காவ்யா. எனக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷத்துக்கு மேலேயே ஆகுது. உங்கள பார்த்ததுமே நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் கண்மணி பெருமையாக.​

தன் மனதில் உள்ளதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்தவள் கண்மணியிடம் சிலவற்றை தவிர்த்து கூறினாள்.​

“இன்னும் நீங்க வாழவே தொடங்கலையா?” என கண்மணி அதிர்ந்து கேட்டாள்.​

அதற்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தவளை கவலையாக பார்த்தவள், “கார்த்திக் ரொம்ப நல்லவர் காவ்யா. நீ உன்னோட மனசுல இருக்குறதை அவர்கிட்ட மறைக்காம சொல்லு. அவர் உன்னை புரிஞ்சிப்பாரு” என அறிவுறுத்தியவள் வேறேதும் சொல்லவில்லை.​

இரவு சித்துவை உறங்க வைத்துவிட்டு கூடத்திற்கு வந்தாள் காவ்யா. அங்கே கார்த்திக் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.​

“அது..” என தயங்கியவளை பார்த்தவன்,​

“எனக்கு வேலை இருக்கு நீங்க ரெண்டு பேரும் தூங்குங்க” என்றான்.​

உண்மையில் அவனுக்கு வேலை எல்லாம் இல்லை. மாலையில் கண்கள் கலங்கிய நிலையில் இருந்த காவ்யாவை அப்பொழுது கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல விளைந்தவன், தன்னை மீறி அவளிடம் நெருங்கி விடுவோமோ? என அஞ்சியே அறைக்கு செல்லாமல் இங்கிருக்கிறான்.​

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் தைரியத்தை கூட்டி, “அன்னைக்கு கொடைக்கானல்ல எதுக்கு அப்படி சொன்னீங்க?” என்று கேட்டுவிட்டாள்.​

லேப்டாப்பை ஓரமாக வைத்துவிட்டு, “என்னோட மனைவிக்கிட்ட தான கேட்டேன்?” நிதானமாக.​

“சித்.. சித்துவுக்காக தான நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று தொடங்கியவளை இடையில் நிறுத்தி,​

“ஆமா சித்துக்காக தான் கல்யாணம். ஆனா உன்னையும் சித்துவையும் என்னோட குடும்பமா தான் நான் பார்க்கிறேன். உன்மேல மனைவின்ற உரிமை எனக்கு இருக்கு காவ்யா! எந்த இடத்துல உன்னை நெருக்கமா உணர்ந்தேன்னு தெரியல? ஆனா எனக்கு நீ வேணும்!” என்றவன்,​

“இதுக்கு மேல விளக்கம் வேணுமா?” என்றான் புருவம் உயர்த்தி,​

“இல்லை. ஆனா என்னால நீங்க எதிர்பார்க்குறத கொடுக்க முடியுமான்னு தெரியல” என குனிந்துக் கொண்டே கூறியவள்,​

“எனக்கு கஷ்டமா இருக்கு கார்த்திக்..” என தழுதழுக்க சொன்னாள்.​

“ரிலாக்ஸ் காவ்யா. உன்னை நீயே வருத்திக்காத. நான் உன்னை என்னைக்கும் கட்டாயப்படுத்தமாட்டேன்” என்றான்.​

இப்பொழுது கூட காவ்யா மீது காதல் என்றெல்லாம் கார்த்திக் யோசிக்கவில்லை. ஆனால் தனக்கானவள் அவள் தான்! தன்னுடைய குடும்பம் அவளும் சித்துவும் தான் என்றதில் தெளிவாக இருந்தான். அந்த நினைப்பே அவனுக்கு காவ்யாவின் நெருக்கத்தை விரும்பச் செய்தது.​

இருவாரம் கழித்து காவ்யாவின் வீட்டிற்கு மூவரும் சென்றிருந்தனர்.​

காவ்யா அப்பா ராமமூர்த்தி, "இன்னும் எதுக்கு மாப்பிள்ளை காவ்யாவை வேலைக்கு அனுப்பணும்? அதான் நீங்க சம்பாரிக்குறதே உங்களுக்கு போதுமே. காவ்யாவும் எதுக்கு கஷ்டப்பட்டு வேலைக்கு போகணும்" என்றார்.​

இன்னமும் அவரால் தன் பெண் மற்றவரிடம் வேலைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.​

"காவ்யா கஷ்டப்பட்டு வேலைக்கு போகல மாமா. இஷ்டப்பட்டு தான் போறா. அதுமட்டுமில்ல வேலைக்கு போறது போகாதது அவளோட விருப்பம். இதுல நான் சொல்லுவதற்கு ஒன்னுமில்லையே?" என்றான்.​

காவ்யாவின் மொத்தக் குடும்பமும் கார்த்திக் கூறியதை மகிழ்வுடன் கேட்டனர். அந்த வேலைக்கு செல்ல காவ்யா செய்த போராட்டம் பெரியது தானே! இன்று அவளுக்கு ஏற்ற மாதிரி கணவன், அவள் கனவை மதிப்பவன் கிடைத்தது அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.​

‘எங்கே கார்த்திக்கும் தன் தந்தை சொல்வதை கேட்டு, வேலைக்கு செல்லாதே! என்று சொல்வானோ?’ என்று பதறிய காவ்யா, அவன் சொன்னதைக் கேட்டு நிம்மதியடைந்தாள். அதை அவனிடமும் மறக்காமல் கூறினாள். கார்த்திக் அதை சிரிப்புடன் கடந்துவிட்டான்.​

தனக்காகவும் சித்துவுக்காகவும் இவ்வளவு யோசிப்பவனுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பு காவ்யாவின் உள்ளே எழுந்தது.​

மெல்ல அவனின் அருகாமையை ஏற்றுக்கொள்ள தன்னை தயார்படுத்தினாள்.​

அவளின் முயற்சி புரிந்தும் அவளாக மாறட்டும் என கார்த்திக் அவளுக்கான அவகாசத்தை கொடுத்தான்.​

வீடு, வேலை, பள்ளிக்கூடம் என்று அவர்களின் வாழ்க்கை அதனின் வட்டத்திற்குள்ளே சுழன்றாலும், வாரயிறுதியில் பார்க், காவ்யாவின் வீடு, இருமாதங்களுக்கு ஒருமுறை மதுரை என்று அவர்களுக்கான நாட்களை அழகாக்கிக் கொண்டிருந்தனர்.​

அப்படி ஒரு மழை நாளின் இரவில் தான் காவ்யா மற்றும் கார்த்திக்கின் கூடல் நிகழ்ந்தது. தயக்கமும், தவிப்புமாக இருந்த காவ்யாவை சிறு சிறு முத்தங்களாலும், ஆறுதல் நிறைந்த அரவணைப்பாலும் தன்னவளாக கார்த்திக் மாற்றிக் கொண்டான்.​

பிழையாகிப் போன கார்த்திக் வாழ்க்கையில் சித்து உயிர்ப்பை கொடுத்தான் என்றால்!​

கார்த்திக்குடன் ஈருடல் ஓருயிராய் கலந்த காவ்யா, ஒரு காவியமே படைத்தாள்!​

முடிந்து போனதாக நினைத்த கார்த்திக்கின் வாழ்வில் தொடர்புள்ளியை வைத்த காவ்யா அவனின் வாழ்வையும் பூரணமடைய செய்தாள்!​

ஒருநாள் காலை வேளையில் வேலைக்கு கிளம்பும் சமயம் காவ்யாவிற்கு தலை சுற்றியது. காவ்யாவே ஓரளவு யூகித்திருந்தாலும் மருத்துவமனை சென்று உறுதிப்படுத்த நினைத்தவள் கார்த்திக்கிடம் கூறினாள்.​

சித்துவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஒருவித எதிர்பார்ப்புடன் காவ்யாவை மருத்துவமனை அழைத்து சென்றான் கார்த்திக்.​

அனைத்து டெஸ்ட்களையும் எடுத்துவிட்டு காவ்யாவின் கர்ப்பத்தை உறுதி செய்தார் மருத்துவர். அந்த செய்தியை கேட்டதில் இருந்து இறக்கை இல்லாமலே வானத்தில் பறந்தான் கார்த்திக். மருத்துவமனையிலே காவ்யாவை அணைத்து தன் மகிழ்வை பகிர்ந்துக் கொண்டான். பின் மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினர்.​

“அம்மா, அப்பா, அத்தை கிட்டலாம் சொல்லணுமே கார்த்திக்?” என்றாள் காவ்யா.​

“முதல்ல சித்து கிட்ட தான் சொல்லணும். அதுக்கு அடுத்து தான் மத்தவங்க கிட்ட சொல்லணும்” என்று பதில் தந்தவனை இமைக்க மறந்து பார்த்தாள்.​

அவள் மிகவும் உணர்ச்சிவசத்தில் இருக்கிறாள் என்று அறிந்தவன், “இதுக்கு அப்புறம் எத்தனை குழந்தை வந்தாலும், நமக்கு எப்பவுமே சித்து தான் முதல் குழந்தை காவ்யா” என்றான் சிரிப்புடன்.​

“எது? இன்னும் குழந்தைகளா?” என கண்களால் மிரட்டியவள்,​

“சித்து எதுவும் நினைக்கமாட்டான் தான?” என கலக்கம் நிறைந்த குரலில் அவனிடம் கேட்டாள்.​

“சித்து கிட்ட நானே சொல்லுறேன்” என அவளின் கையைப் பிடித்து சொன்னவன் அவளுக்கு குடிக்க ஜூஸ் கலந்து கொடுத்தான். சித்து இதை எப்படி எடுத்துக் கொள்வானோ? என பதட்டத்துடனே காவ்யா இருந்தாள்.​

மாலையில் பள்ளியில் இருந்து வந்த சித்துவிடம், “உனக்கொரு தங்கச்சியோ? தம்பியோ? வர போறாங்க சித்து!” என கார்த்திக் பூரிப்புடன் கூறினான்.​

“உண்மையாவா கார்த்திப்பா? குட்டி பாப்பா எப்ப வரும் மம்மி?” என கார்த்திக்கிடம் கேட்டுவிட்டு காவ்யாவிடம் ஓடினான் சித்து.​

“குட்டி பாப்பா மம்மி வயித்துக்குள்ள இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல பெருசாகி வெளிய வரும்” என்றான் கார்த்திக்.​

காவ்யாவின் வயிற்றில் கைவைத்த சித்து, “பாப்பா சீக்கிரமா அண்ணா கிட்ட வாங்க” என்றான்.​

அதை பார்த்த காவ்யாவின் கண்கள் கலங்கிவிட்டன. சித்து இவ்வளவு இயல்பாய் இதை எடுத்துக் கொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.​

அதன் பிறகு இரு வீட்டாருக்கும் அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டனர். இதனை கேட்ட இரு குடும்பங்களும் மிகவும் சந்தோசமடைந்தனர்.​

பின் அவர்களும் வந்து காவ்யாவை பார்த்துவிட்டு அறிவுரைகளை வழங்கிவிட்டுச் சென்றனர்.​

விசாலாட்சி, “ரொம்ப சந்தோசம் காவ்யா. என்னோட பையன் பெயர் சொல்லவும் ஒரு குழந்தை வரப் போகுது. நல்லபடியா குழந்தையை பெற்று எடும்மா” என கண்கள் கலங்க வாழ்த்திவிட்டு சென்றார்.​

கர்ப்பகால அவஸ்தைகள் காவ்யாவை மிகவும் களைப்படையவே செய்தன. காவ்யாவை பார்க்க வந்த அவளின் அப்பா காவ்யாவின் சோர்வினை பார்த்துவிட்டு மறுபடியும் ‘வேலைக்கு செல்லாதே!’ என்று கூறிவிட்டே சென்றார்.​

அவர்கள் சென்றதும் கார்த்திக், “எதுக்கு உன்னோட அப்பா எப்ப பார்த்தாலும் நீ வேலைக்கு போகாதனு சொல்லிட்டே இருக்காரு?” என கேட்டேவிட்டான்.​

அவனுக்கு ஒரு கசந்த புன்னகையை உதிர்த்தவள், “எங்க அப்பா என்னைய இளவரசி மாதிரி வளர்த்தார். ஆனா என்னோட திருமண வாழ்க்கை பாதிலேயே முடிஞ்சது அவரை ரொம்பவே பாதிச்சிடுச்சி. நான் வேற மாறுதல் வேணும்னு அவர்கிட்ட சண்டைபோட்டு வேலைக்கு போனேன். அவர் ஆசை பொண்ணு மத்தவங்க கிட்ட கைகட்டி வேலை பாக்குறது பிடிக்காம இப்படி சொல்லிட்டு இருக்கார்” என முடித்தாள்.​

“ஓ.. இவ்வளவு இருக்கா இதுல?” என வியந்தவன், “மாமா சொல்லுற மாதிரி உன்னால முடியலனா நீ வேலைக்கு போக வேணாம் காவ்யா. குழந்தை பிறந்ததும் பார்த்துக்கலாம்” என்றான் கார்த்திக் அக்கறையுடன்.​

“இப்ப வேலை பார்க்க முடியுது கார்த்திக். என்னால முடியலனா கண்டிப்பா நான் பிரேக் எடுத்துப்பேன்” என தன் சம்மதத்தை தெரிவித்தாள் காவ்யா.​

காவ்யாவை கண்ணின் இமை போல் கார்த்திக் பார்த்துக்கொண்டான். அவளின் சோர்வையும், அவஸ்தையையும் பார்த்தவன் உதவிக்கு வீட்டில் ஒரு ஆளையும் ஏற்பாடு செய்தான்.​

தினமும் தவறாமல் அவளை வாக்கிங் அழைத்து சென்றுவிடுவான். அந்நேரம் சித்துவும் அவர்களுடன் வர, அவர்களுக்கான நேரத்தை வண்ணமயமாக மாற்றினார்கள்.​

ஏழாம் மாதம் துவங்கியதும் விசாலாட்சியுடன் ஆலோசனை செய்த கார்த்திக் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து வளைகாப்பு செய்ய திட்டமிட்டான்.​

“ரெண்டாவது குழந்தை தான கார்த்திக். எதுக்கு வளைகாப்பு?” என தயக்கத்துடன் காவ்யா கேட்டாள்.​

“குழந்தைக்காக இல்லை. உனக்கு வளைகாப்பு பண்ணி பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு காவ்யா” என்றான் அவளை ஊடுருவி.​

அவனின் பார்வையில் நேசத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தவள் அவனின் விருப்பத்திற்கு அனைத்தையும் விட்டுவிட்டாள்.​

ஒரு சிறு பார்ட்டி ஹாலில் சிறப்பாக வளைகாப்பு நிகழ்ந்தது.​

அனைவரும் வளை அடுக்கியபின், சித்துவும் கார்த்திக்கும் அவளுக்கு வளையல் போட்டுவிட்டனர்.​

“வளைகாப்பு முடிந்ததும் பொண்ணை அவங்க அம்மா வீட்டிற்கு தான அனுப்புவாங்க?” வேண்டுமென்றே கௌதம் கேட்டான். அதில் முழித்த கார்த்திக்கை பார்த்து அனைவரும் சிரித்தனர்.​

காவ்யாவை உடன் வைத்து பார்ர்த்துக்கொள்ள விருப்பம் கொண்ட தேவிகாவும், “எங்க வீட்ல கொஞ்ச நாள் இருக்கட்டும் மாப்பிள்ளை!” என கார்த்திக்கிடம் கேட்டார்.​

‘காவ்யா சென்றால் சித்துவும் செல்வான். மீண்டும் தனிமையா..?’ என்று யோசித்த கார்த்திக், “ரெண்டு நாள் வேணா அங்க இருந்துவிட்டு வரட்டும் அத்தை” என்றவன் காவ்யாவிடமும் பேசினான்.​

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே விசாலாட்சி கார்த்திக் மற்றும் காவ்யாவுடன் வந்து தங்கிவிட்டார்.​

நாள் நெருங்க நெருங்க கார்த்திக் தான் பதற்றத்துடன் காணப்பட்டான். காவ்யாவும், விசாலாட்சியும் அவனுக்கு எவ்வளவு ஆறுதல் அளித்தும் அவன் தெளியவில்லை.​

ஒருநாள் இரவு நல்ல உறக்கத்தில் இருந்த கார்த்திக்கை எழுப்பிய காவ்யா, “இடுப்பு வலிக்கிது கார்த்திக்..” என்றாள் மூச்சை நன்கு இழுத்துவிட்டு.​

உடனே விசாலாட்சியுடன் அவளை மருத்துவமனையில் சேர்த்தவன் மறக்காமல் காவ்யாவின் வீட்டிற்கும் அழைத்து தகவல் சொன்னான்.​

 
Top