எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மஞ்சம் 3

subageetha

Moderator
காலங்கள் யாருக்காகவும் எப்பொழுதும் நிற்க போவதில்லை. ஆறாம் வகுப்பின் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்த பிறகு இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை. இத்தனை நாட்கள் நிரஞ்சனுடன் சுற்றிக் கொண்டு திரிந்தவளுக்கு இந்த விடுமுறை கடுமையாக தாக்கத்தை உண்டு பண்ணியது.

வித்யா தீர்மானம் செய்தபடிக்கு, நவம்பர் மாதமே தனது வேலையில் இருந்து விலக கடிதம் கொடுத்து விட்டாள் தான்.


ஆனால், நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குமா?


ஏப்ரல் வரை வேலையை முடிக்கும் படிக்கு நிர்வாகம் சொல்ல, ஏப்ரல் பின்னர் ஜூன் இறுதி வரை என்று ஆனது. நல்ல கணவனாக குடும்ப சூழ்நிலை, மகளின் தனிமை உணர்வு அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தாலும் அலுவலகம் சார்ந்த விஷயங்களில், குடும்ப தலைவனாக, மனைவிக்கு உதவ முடியாத சூழ்நிலை கைதியாய் விஸ்வம்.


அம்மா வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்க ,அப்பாவும் வீட்டுக்கு வருவது குறைந்து போயிற்று. அதிதிக்கு விவரம் தெரிந்த நாள் முதலே ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் விஸ்வத்தை அதிகமாக வீட்டில் பார்த்தது கிடையாது.

அதிகம் நண்பர்கள் பட்டாளம் அவளுக்கு இல்லை. பேசியும், பழகியும், விளையாடியும் பொழுது போக்க அவள் முயற்சி செய்ததும் இல்லை. வீட்டுக்கு அருகில் உள்ள அவள் ஒத்த பெண்களுடன் விளையாட தீர்மானித்து, சில நாட்கள் சென்றாள்தான்.

அங்கு பெண்கள் விளையாடும் பொழுது போடும் சண்டைகள் பாகுபாடுகள் இவளுக்கு புதுசாக உணர்ந்தாள். அவை இன்று வரை அவள் அனுபவித்திராதவை.

அதிதி வீட்டில் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிகபட்சம் டிவி பெட்டி சத்தம் போடும். என்றாவது வித்யா பாட்டு பாடுவாள்.

இப்படிப்பட்ட வீட்டில் இருந்து வந்த அவளால் அவற்றை இயற்கை என கையாள இயலவில்லை. விளையாடி முடித்து வீட்டுக்கு வந்தால் நடந்தவற்றை பகிரவும் ஆளில்லை.


பாட்டி அறைக்கு சென்றால், அவருடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருக்கும் பொழுதே பாட்டி உறங்கி விடுகிறாள். கொஞ்ச நேரம் டிவி, புத்தகங்கள் என நேரம் சென்றது.


சில பெண்கள் பாட்டி வீடு சென்று விட, மீதம் இருந்த பெண்கள் கோடை பயிற்சி வகுப்புகள் சேர, இவளுக்கு மீண்டும் தனிமை.அந்தப் பெண்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு நேரம் கிடைக்கும்போது பார்க்கில் சந்தித்து விளையாடுகிறார்கள் தான். ஆனால் அதில் அதிதிக்கு இடம் கிடைக்கவில்லை.

மீண்டும் தன்னை கூட்டுக்குள் அடைத்து கொண்டாள் பெண். நீயும் ஏதேனும் பயிற்சி வகுப்பில் செய்கிறாயா அதி என்று வித்யா கேட்டதற்கு 'இப்போ வேண்டாம்மா என்று விட்டாள்'.

தனக்கு என்ன வேண்டும் எது வேண்டாம் என்று யோசிக்கும் நிலையில் கூட அதிதி இல்லை. வாயை திறந்து சொல்லாவிட்டாலும் தனிமை அவளுக்கு நரகம் போல் தான் இருந்தது.

பெண்ணுக்கு இரண்டு மாதங்களும், கடுப்பாய் கழிய, நிரஞ்சனோ தனது நண்பர் கூட்டத்துடன் கிரிக்கெட் மட்டை சகிதமாக கிரௌண்ட்டில் ஐக்கியம் ஆகி விட்டான்.

அவன் அப்பா தொழில் விஷயமாக வெளியூர் சென்றிருக்க அவன் அம்மா அவனை விளையாட அனுப்பி வைத்தார்.அவனுக்கு அந்த சமயம் அதிதி பற்றி சுத்தமாக நினைவில் இல்லை.

வித்யாவின் பெற்றோர் அவள் அண்ணனுடன் ஸ்பெயின் சென்று ஐந்து வருஷங்கள் ஆகிறது. ஸ்கைபில் அவர்களுடன் பேசுவதுடன் சரி. அவர்களும் அங்கேயே பிடித்து விட இந்தியா அதிகம் வருவது இல்லை. அந்த விதத்திலும் அதிதிக்கு பாட்டி வீடு அமையவில்லை.


விஸ்வம் உடன் பிறந்த அக்கா பிரான்ஸ் நகரில். அங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் தான். அதனால் அதிதிக்கு என்ன பிரயோஜனம்?

அவர்களின் வாழ்க்கை முறையே வேறு. இங்கு இருக்கும் குழந்தைகளுடன் அதிதியால் கலக்க முடியவில்லை. உறவின் குழந்தைகளுடன் வெறுமனே ஸ்கைப்பில் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். அவர்களுடன் மனம் இணைந்து விளையாட முடியுமா என்பது கேள்விக்குறிதான். தவிரவும் வித்யாவின் அண்ணன் குழந்தைகளும் சரி, விஸ்வத்தின் அக்கா குழந்தைகளும் சரி, அவர்களிடம் ஒரு நிமிர்வு இருந்தது. அது அதிதியிடம் இல்லை.

அந்த சிறுமி ஏக்கம் கொள்வது தவிர வழி இல்லை. காலம் மாறிவிட்டது. உடன் பிறந்தவர்கள் இருந்தாலும், முன்புபோல் எளிதாக உறவை வளர்க்கமுடியாது. நினைத்தால் பார்க்கலாம்,இன்டெர்நெட் உபயத்தில். ஒருவர் வீட்டுக்கு மற்றவர் குழந்தைகளை அனுப்புவதோ, உறவுபிள்ளைகளுடன் விளையாடுவதோ, முன் ஜன்ம பாக்கியமே.

வீட்டுக்கு ஒரு குழந்தை, பெற்றோரின் அளவுக்கு மீறிய செல்லம்., அளவுக்கு மீறிய பாதுகாப்பு வளையம். பிள்ளைகள் மற்ற வீட்டு பிள்ளைகளுடன் விளையாடுவதை பெற்றோரே சமயங்களில் விரும்புவதில்லை. பெற்றோராலும் குழந்தைகளுடன் நேரம் செலவு செய்ய இயலுவதில்லை.

பெரும்பாலும், இன்றைய பெற்றோர்கள் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போதும், அதற்கு நடுவில் சண்டை ஏதேனும் வந்தால் தானே தீர்த்துக் கொள்ளட்டும் என்று விடுவதில்லை. அந்த சண்டையில் பெரும் போர்க்களம் போல மாற்றி பெரியவர்கள் ஒருவருடன் ஒருவர் யுத்தம் புரிந்து,குழந்தைகள் கடைசி வரை ஒன்றாக விளையாட முடியாத அளவிற்கு கொண்டு சென்று விடுகிறார்கள். குழந்தைகளுக்கு சகிப்பு தன்மை இருக்கிறது.

பெற்றோர்களுக்கு தான் இல்லை. இளம் பிராயத்திலேயே சகித்து வாழ்வது எவ்வாறு என்று புரிய வைக்காமல் சட்டென்று உறவை முறிப்பது எவ்வாறு என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். ஒற்றை குழந்தைகளுக்கு இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். தலைமுறை தலைமுறையாக அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாடமும் இதுவேவாகத்தான் இருக்கப் போகிறது. விஷ்வம், வித்யா இருவருக்கும் உடன்பிறந்தவர்கள் இருப்பதற்க்கும்,அவர்களின் ஒரே மகள் அதிதிக்கு உடன் பிறந்தவர் இல்லாமைக்கும் என்ன வேறுபாடு? சிறுவயது விளையாட்டுகளுக்கும். உணர்வுகளின் வடிகாலுக்கும் வழி இல்லை. பகிர்தல் என்பது உணவையோ ,பொருட்களையோ மட்டும் இல்லை. உயிரை கட்டுண்ண பண்ணும் உணர்வையும்தானே?


சிறுமி அதற்குத்தானே தவிக்கிறாள்?அவளின் ஏக்கங்களையும், ஆசைகளையும் பெற்றவர்களிடம் சொல்லலாம்தான். அதை முப்பதுகளில் நடுவில் இருக்கும் விஷ்வமும் வித்யாவும் பதினொரு வயது சிறுமிக்காக கீழிறங்கி புரிந்துகொள்ள வேணும்.நடைமுறையில் இது சாத்தியமா?

அவள் பெற்றோரை பார்க்கில் ஊஞ்சலாடவும், கடற்கரையில் மண் வீடு கட்டி பொம்மை விளையாடவும் அவளால் அழைக்க முடியுமா? நிறைய நடைமுறை சிக்கல்கள்.

திருமணமான புதிதில்,விஷ்வம் அப்பொழுதான் சி.ஏ முடித்திருந்தார். இன்னும் கால் ஊனாத நிலையில் குழந்தை வேண்டாமென முடிவெடுத்து இருவரும் நான்கு வருஷங்கள் கழித்துதான் அதிதியை பெற்றெடுத்தார்கள். இடைப்பட்ட காலத்தில்தான் வித்யா சி.ஏ இண்டர் முடித்தாள். பிறகு ,வேறு குழந்தைகள் பெறுவதற்க்கு விஷ்வம் உடன்படவில்லை. நான்கு வருஷங்களில் வயது ஏறாமல் அப்படியே இருக்குமா? அந்த வகையில்,இருவராலும் சிறுமிக்கு ஈடாக ஓட முடியாது.


அதிதியிடம் நிறைய விளையாட்டு பொருட்களும்,அவளுக்கென டேப்லெட்,வீடியோ கேம், மியூசிக் பிளேயர்,அவளரையில் தனியாக தொலைக்காட்சி பெட்டி கார்ட்டூன் சானேல்களுடன் உண்டு. இவை அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை.

எவ்வளவு நேரம் இவற்றில் மூழ்க முடியும்.?சிலசமயங்களில் யூடியூப் சேனலை பார்த்து சிறுமியை கைவேலைகள் செய்து பார்ப்பதுமாய், வரைந்து பார்ப்பதுமாய் இருக்கிறாள் தான்.ஆனால் இவை எல்லாம் அவளது குழந்தைதனத்துக்கு வடிகாலாக அமையவில்லை.

இரண்டு மாத விடுமுறையில்,நிஜத்தில் அவள் துக்கத்தில்தான் மூழ்கினாள். வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தி அதிதியை சேர்ப்பதற்கும்,

வகுப்புகளுக்கு,அழைத்து செல்லக் கூட வித்யாவின் வேலை அவளை அனுமதிக்கவில்லை என்பது ஜீரணிக்க முடியா நிஜம். அதிதிக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் பெற்றோர் இப்படித்தான். பாட்டியும் தாத்தாவும் இருந்தவரை இந்தக் குறை தெரியாமல் இருவருமாக குழந்தையை பார்த்துக் கொண்டனர். தாத்தா போனதும்,நிலமை வேறாகிவிட்டது.


இரண்டு மாதங்கள் நெட்டி தள்ளிய பிறகு,ஒருவழியாக மீண்டும் பள்ளி தொடங்கியது. முதல் வருடம் போல் இந்த வருடம் மாதிரி அழுதுகொண்டே கிளம்பவில்லை அதிதி . சற்று பயம் தெளிந்து இருந்தது. எதிர்பார்ப்புகளுடன் பள்ளிக்குள் சென்றாள்.

போன வருஷம் மிக மிக நெருங்கியவனாக இருந்த நிரஞ்சன்,சற்றே ஒதுங்கியதுபோல் தோன்றியது.இவள் அமைதியானாள். முதல் வாரம்,தனது நண்பர் பட்டாளத்துடன் விடுமுறை நாட்களுக்கு சேர்த்துக் கொட்டமடித்தவன் இவளது ஒதுக்கத்தை கவனிக்கவில்லை.

பிறகு அனைத்தும் வழக்கம்போல் சீரானதும்தான் இவளை கவனித்தான். அவனுக்கு சலிப்பே மிஞ்சியது.

பொறுத்துக்கொள்ள முடியாமல்,அவளிடமே கேட்டுவிட்டான்.“ஏன்,மகாராணி தானே வந்து பேச மாட்டீங்களோ?”

அவளது இயல்பு புரிந்தவந்தான். ஆனால்,கொஞ்சமாவது மாற்றம் இருந்திருக்கவேண்டுமே. ஆம், அவள் மாறி இருக்கிறாள்,வெகுவாகவே. முன்பைவிட,அதிகமாகவே நத்தை தன்னை கூட்டுக்குள் சுருக்கிக்கொண்டு உள்ளது.


திரும்பவும்,முதலில் இருந்து அவளை சரி செய்தாக வேண்டும். அவனுக்கு இது அனாவசியம்தான். அவளை தவிர வகுப்பின் இருபத்து மூன்று மாணவமணிகளும் அவனின் நட்பு வட்டமே. அவனது கோவம்,பணிவு,படிப்பு,தோழமை என்று அவன் இயல்புகள் வகுப்பு மொத்தமுமே பிரசித்தம்தான்.அவனால் யாரோடும் ரொம்ப நேரம் சண்டை போட முடியாது.


ஆனால், இந்த பெண் அவனை ஏதோ ஒரு வகையில் ஆட்டி வைக்கிறாள். அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை. இவள் முதன்முதலாய் வகுப்பில் நுழைந்தபொழுது ஷீலா இவளை அலட்சியம் செய்தாலும்,இந்த உணர்வுதான் அவளை அவனருகில் உட்கார இடம் கொடுக்க வைத்தது.


இந்த நிமிடம் வரை அவளின் குணம் ஏன் இப்படி என புரியாவிட்டாலும்,அவளை கலகலப்பாக மற்ற பிள்ளைகள் போல மாற்ற முனைகிறான். அவளை சிரிக்க வைக்க,மற்றவர்களுடன் தோழமை கொள்ளவைக்க விரும்புகிறான்.


நிரஞ்சனுக்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் சுகுமாரன். இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரியில் ,டில்லியில் இடம் கிடைத்து படிக்க போய்விட்டான். அவன் சென்று இரண்டு வருஷங்கள் ஆகிறது. அவன் அம்மா வேறு, இவன் அம்மா வேறு. அதனாலோ என்னவோ,சுகுமாரனுக்கு இவன் மீது ஒட்டுணர்வு கிடையாது. இவன் அம்மாவிடமும் சரியாக பேச மாட்டான்.பெரியம்மா இறந்ததால்,இவன் அம்மாவை அப்பா இரண்டாம் தாரமாய் மணந்துகொண்டார். சுகுமாரன் தனது எட்டு வயதுவரை பாட்டி வீட்டில் இருந்தான். பாட்டி இறந்த பிறகு இங்கு இவர்களுடன் வந்தான்.


அப்பொழுது, நிரஞ்சன் பிறந்த சமயம். நிரஞ்சனின் அம்மா அவனிடம் எவ்வளவு பாசம் காட்டினாலும் ,

மாற்றாந்தாய் எனும் எண்ணம் சுகுமாரனிடம் அதிகமுண்டு. அதனாலேயே நிரஞ்சனிடமும் சரி என் அம்மாவிடமும் சரி எப்போதும் ஒதுக்கம் மட்டுமே!


அந்த வகையில்,நிரஞ்சனும் ஒற்றை பிள்ளையே. வீட்டின் நிலை ஓரளவு தெரியும். முழுதாக அல்ல. ஆனால், அவன் சுபாவமே,கலகலப்பு,சந்தோஷம்.ஆர்பாட்டம்.,

அதனால்,அதிதி போல் அவனால் இருக்க முடியவில்லை. இத்தனைக்கும்,நிரஞ்சனுக்கு அவன் அப்பா விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அதிகம்.

சுகுமாரன் வந்தால் மனைவியையும் நிரஞ்சனையும் ஒரு வழி செய்துவிடுவார். சுகுமாரனை கொண்டாடுவார்.எதை யாருக்கு என்னவென்று நிரூபிக்க எண்ணுகிறார் என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.


இந்த செய்கைகள் நடப்புகள்,நிரஞ்சன் மனதில் ஒரு வைராக்கியத்தையும் நிமிர்வையும் விதைத்துள்ளது. அவன் அம்மா பக்கம் கொஞ்சம் தாழ்ந்த நிலை. அவருக்கு படிப்பும் அதிகம் இல்லை. நிரஞ்சனை ஆளாக்கி பார்க்கவேண்டும் எனும் எண்ணம் மட்டுமே அவரை கணவருடன் பொறுத்து வாழ கட்டாயப் படுத்துகிறது. இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அவருக்கு கிடைத்த ஒரே சந்தோஷம் நிரஞ்சன். இதை அவனும் நன்கறிவான். அவனது முரட்டு சுபாவமும் கோவமும் சற்று அதிகமாக இருக்க குடும்ப நடப்புகளும் காரணமாக இருக்கலாம். எனக்கு ஒரே பயம்தான். அவன் தனது கோவத்தால் தன் வருங்கால வாழ்க்கைக்கு தீங்கு செய்துக் கொள்வானோ என்பதுதான் அது...முன் கோவம் மனிதன் மூளையை மந்தமாக்கி விடும்.


“காலம் யாருக்காகவும் என்றும் நிற்க போவதில்லை.ஓடிகொண்டிருக்கும் ஓடை போல் நிற்காமல் ஓடும் மனிதன் வெற்றியை கைக்கொள்கிறான்."

விடுமுறை முடிஞ்சுது. ஸ்கூல் திறந்து பதினஞ்சு நாட்கள் அதிதி நம்ம ஹீரோ நிரஞ்சனோட அதிகம் பேசி பழகவில்லை. அவனும் இதை பெருசா எடுத்துக்கலை. அதுவும் சின்ன பையன் தானே. அதே ஊடல் வீட்டுக்கு வந்த பிறகு பெற்றோரிடம் காண்பித்தாள் சிறுமி. முன்னரெல்லாம் நிரஞ்சன் மாலை வித்தியாவை பார்க்க அதிதியுடன் வருபவன் இப்போ அவன் வருவதில்லை.

“அதிதி, நீரு பையன் எங்கடி, அவனோட உனக்கு ஏதும் சண்டையா? “ கேள்வி கேட்ட அம்மாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்று தன்னுள் தன்னை புதைத்துக் கொண்டாள் குட்டி அதிதி.


அவன் ஏன் என்னை கண்டுக்க மாட்டேங்குறான்? அவனுக்கு அவனோட பிரெண்ட்ஸ் தான் முக்கியமா? நா இல்லியா? ஆனால் அந்த சிறுமிக்கு தானே நிரஞ்சனை மட்டுமல்ல மற்ற சிறுவர்களையும் தன்னிடம் நெருங்க விடாமல் ஒதுங்கி நிற்கிறோம் என்பது புரியவில்லை.


அப்போ, அவனோட பிரண்ட் லிஸ்டுல என்னை சேர்த்துக்கலையா? பலவாறு தன்னுளேயே குழம்பினாள். விடை சொல்லத்தான் ஆளில்லை.
 
Top