எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
பட்டப் பகலுலதான் பால் நிலவு தெரியுதடி
வட்ட முகத்தழகி என் நிலவு நீ தாண்டி
பங்குனித் திருவிழால பாவி மகன் நீ சொல்ல
பாதகத்தி இவ பவுசு பவுன் கணக்கா கூடிடுச்சே...

சித்திர பொறந்திடுச்சு சீரோடு வாரேன்டி
எங்குலசாமி உன்ன மட்டும் உங்கப்பன தரச்சொல்லு
சிறுக்கி மடி நெறெச்சு நீ சொன்ன போதெல்லாம்
சிணுங்கி சிணுங்கித் தான் பொழுதும் போயிடுச்சே...

வைகைக் கரயில் வச்சு உள்ளங்கை புடிச்சு
உச்சந் தலையடிச்சு உன்ன விடமாட்டனுன்னு
நீ சொன்ன கதையக் கேட்டு வைகாசி நிலவுந்தா
தேயாம நின்னுடுச்சு, தேம்பி அழுதுடுச்சு...

ஆனிப்பட்டம் விதைச்சதுமே ஆளாப் பறந்துட்டான்.
எல்(லை)ல என்னத் தேடுதுன்னு என் உசுரைக் கொறச்சுட்டான்.
என்ன சொல்லி என்னைத் தேத்த புரியாமக் கொழம்பிட்டான்.
சிறுக்கி மவன் அவனும் சீக்கிரமே கெளம்பிட்டான்.

ஆயிரவள்ளி கோயிலுக்கு ஆடிக் கூழ் ஊத்திப்புட்டேன்
மதுரவீரன் சாமிக்குத்தான் மலையாடு வாங்கிவிட்டேன்
ஊரெல்லாம் சுத்தி வந்தும் ஒரு சாமி இறங்கலையே....
உங்காத்தா மனங்குளிர உஞ்சேதிக் கிடைக்கலையே...

ஆவணி பொறந்ததுமே அயித்தக்காரி தூதுவிட்டா....
அண்ண மவளக் கேட்டு ஆளும் அனுப்பிவிட்டா...
ஆத்தா மகமாயி செத்த கண்ணத் தொற, அவன
கண்ணு முன்னக் காட்டிப்புடு எஞ்சீவன் போகுமுன்ன...

புரட்டாசி பொறந்துடுச்சு புது நாத்தும் தகைஞ்சுடுச்சு
புத்தி தெளியலயே பொழுதும் திரும்பலயே
பச்ச மரத்தப் போல புத்தி எரியுதய்யா உன் நெனப்பு
முழுசா அனுப்பி வெச்ச உனக்குப் பதிலா உன் உடுப்புதான் பதிலா…?

ஐப்பசி கடக்கையில அரை உசிராகிப்புட்டேன்
ஆயிரவள்ளி கோயில அடியோட வெறுத்திட்டேன்
எங்கப்பன் முகத்துக்காக நடமாடக் கத்துக்கிட்டேன்
உங்காத்தா ஒப்பாரிக்குக் காதை மூடிக்கிட்டேன்

ஊரே ஒண்ணாக் கூடி கார்த்திகையத் தள்ளி வைக்க
உங்காத்தா அழுகைச்சத்தம் ஆத்தாடி நிக்கலயே...
ஒத்த மவனப் பெத்த மவராசி அழுது தீர்த்தாலும்
கண்ணீரும் தீரலயே, உன்ன கடக்கத்தான் முடியலயே...

மண்ணு குளிரும் மார்கழி பொறக்கையில
எங்க மனங் குளிர வெச்ச சாமி எது தெரியலயே...
எல்ல தாண்டி போயிட்டனு சேதி வந்து சேந்துச்சு...
ஒத்த உசுரு இங்க உன்ன எண்ணித் தவிக்குது...

தப்பாமத் தை பொறக்கும் தவறாம வழி பொறக்கும்..
வெரசா வா மச்சான் வேண்டுதல சாத்தணும்...
செவல செனையாகி கன்னும் போட்டிடுச்சு...
ஆச வச்ச மக அயராமக் காத்திருக்கேன்...

மறுக்காம மாசி வர மச்சுங் குளிரெடுக்க...
மாமன் மவன் நீ இன்னும் வரலயே..
களரிக் கும்பிட வெள்ளி முளைச்சிடுச்சு...
நீ வார வழி பாத்துப் பாத்துக் கண்ணும் பூத்திடுச்சு...

எல்ல தாண்டி அங்கப் போனதுதான் குத்தமா?
காத்தும் , மழையும் தான் சொன்னா இதக் கேக்குமா?
எல்லை ஏதும் இல்ல மச்சான் என்ன வந்து அணைச்சுக்கோ...
மூச்சுக் காத்த தாரேன் முத்தம் வச்சு இழுத்துக்கோ…


அன்பும்
நன்றியும்
ஹேமா ஸ்ரீ தீனதயாளன்
 
Top