எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஜென்மம் கொண்டேன் உனக்காக 3

Sathya theeba

New member
இருவரும் இவளையே பார்த்துக் கொண்டு, இல்லையில்லை இழித்துக் கொண்டு நின்றார்கள்.

"கோபி பட்சி நல்ல அழகா இருக்குல்ல"

"டேய் குணா நான்தான் காட்டினேன். எனக்குத்தான் முதல்ல..."

"டேய் பட்சி வெளியூர் போல இருக்கு."

"எந்த ஊராய் இருந்தா நமக்கென்ன. குணா நமக்குத் தேவை ------"

அவர்களின் குளறல் பேச்சிலேயே அவளுக்கு பயம் உண்டானது. உதவிக்கு யாராவது வருவார்களா என்று பார்த்தாள். தூரத்தில் தெரிந்த அந்த ஹோட்டலைக் கூடப் பூட்டிவிட்டார்கள். ஆள் நடமாட்டத்திற்கான அறிகுறியே எங்கும் இல்லை. மிரட்சியுடன் அங்கே நின்றவர்களைப் பார்த்தாள். அவள் சுற்றும்முற்றும் தேடியதையும் பயந்து நடுங்குவதையும் கண்டவர்கள் விகாரமாகச் சிரித்தபடி நக்கலாக,
"என்னா கண்ணு சுத்தி யாறுமே இல்லையா? இந்த நேறத்துக்கு இங்க யாரும் வரமாட்டாங்க.. பயப்படாத நான், அப்புறம் இதோ நிற்கிறானே குணா ரெண்டு பேருமே ஒனக்கு இருக்கம்."

"ஹலோ..., யார் நீங்க ..."

"இங்க பாரு கோபு.. நம்மகிட்ட போன்லயா பேசுது இந்தப் பொண்ணு... ஹலோவாம்... ஹிஹி.. நாங்க உனக்கு மாமங்க கண்ணு..." சொல்லியபடி அவளுக்கு மிக அருகில் வந்த ஒருவன் அவள் தோளில் கை வைத்தான். அவர்களின் பேச்சும் நடவடிக்கையும் அவர்களின் எண்ணத்தை அவளுக்கு எடுத்துரைத்தன. அவள் மிகவும் தைரியசாலிதான். ஆனாலும் புது இடம் அவளை சற்றே பயமுறுத்தியது.

இந்த இடத்தில் இப்போது யாருமே இல்லை. தொடர்ந்து இங்கேயே நிற்பது சரியில்லை என்ற உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையில் அவன் கையைத் தட்டி விட்டவள் அங்கிருந்து கால்போன போக்கில் ஓடத் தொடங்கினாள். முன்னே தெரிந்த பனிமூட்டத்தால் மூடியிருந்த தார் சாலையில் எந்த இலக்குமின்றி ஓடத் தொடங்கினாள்.

அவளைத் துரத்திக்கொண்டே அந்தத் தடியர்களும் பின்னால் வந்தார்கள்.

இவள் ஓடிய வீதியோ சிற்றூர் ஒன்றுக்குச் செல்லும் பாதை. எனவே வீதியிலும் ஆள்நடமாட்டமே இல்லை

பின்னால் துரத்துபவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள் அவள். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாடியது. ஆனால், துரத்துபவர்களின் எண்ணமே அவள் பெண்மையைத் திருடுவது. எனவே நின்றால் ஆபத்து என்பதை உணர்ந்ததால் மிகவும் சிரமத்துடன் ஓடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் குடித்திருந்தபடியால் சிறிது தள்ளாட்டத்துடனேயே ஓடி வந்தார்கள்.

ஓடிக் கொண்டிருந்தவள் சற்றுத் தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் காணவும் மனதில் நிம்மதியடைந்தாள். அது ஏதோ ஒரு வீட்டின் வெளிச்சமாக இருக்கலாம் என எண்ணியவள் அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

ஆனால் அருகே செல்லச் செல்லவே அது வீடு அல்ல, சுடுகாட்டின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு என அறிந்து கொண்டாள். அவளுக்குப் பயத்தில் தொண்டை உலர்ந்து விட்டது. திரும்பிப் பார்த்தாள். தூரத்தே அந்த இருவரினதும் உருவம் இருட்டாகத் தெரிந்தது. திரும்பிப் போவதற்கும்

வழியில்லை. வேறு மார்க்கம் இல்லை என யோசித்தவள், துணிவை வரவழைத்துக் கொண்டு அந்தச் சுடுகாட்டுக்குள்ளேயே சென்றாள். அங்கே இருந்த ஒரு சிறிய கட்டடத்தின் பின் சென்று மறைந்து கொண்டாள்.

சற்று நேரத்தின் பின் அந்த இருவருடைய குரல் அருகில் கேட்டது. மூச்சை அடக்கிக் கொண்டு சத்தமின்றி இருந்தாள்.

அங்கே வந்தவர்கள் அந்த சுடுகாட்டுக்குள் வரத் தயங்கினார்கள் போலும்.

"டேய் குணா எங்கடா ஆளையே காணோம்"

"ஒருவேளை இதற்குள்ளதான் போயி...ருப்பாளோ?"

"சீசீ.. நானே அதற்குள் போகமாட்டேன். அவளுக்கு அந்தத் தைரியம் இருக்காது"

"எதற்கும் உள்ளே போய் பார்ப்போமா?"

"ஐயோ நான் வரலைடா.. போன கிழமைதான் நந்தன் இங்கே எதையோ பார்த்துப் பயந்தானாம்"

அவர்கள் பேசியதைக் கேட்டதும் அவளுக்குத் தனது குரல்வளையை யாரோ நசுக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. பயத்துடன் திரும்பிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை. பயத்தில் கண்களை இறுக மூடி அவளுக்குப் பிடித்த முருகனை மனமார வேண்டினாள்.

சிறிது நேரம் கசகசவென தெளிவற்று பேச்சுச் சத்தம் கேட்டது.

"எதுக்கும் நான் உள்ளே போய் பார்த்து வாறன்" என்று ஒருவன் கூறுவதும் நெருங்கி வருவதும் கேட்டது. அப்போது எங்கிருந்தோ ஓர் நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. அச்சத்தத்தில் கிலியடைந்தவன் மீண்டும் ஓடிப்போய் வாசலை அடைந்தான். அப்புறம் அவர்கள் பேசிக் கொண்டே விலகிச் செல்வது புரிந்தது. இவளும் பயத்தில் கண்களை மூடியபடி தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதில் வேண்டிக் கொண்டாள். சத்தம் அடங்கி நடமாட்டம் இல்லை என்பதை உணர்ந்தவள் ஆசுவாசமாக எழுந்து நின்றாள்.

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த நாயொன்று திடீரென இவள் எழுந்து நிற்கவும் பயத்தில் பாய்ந்து ஓடி சற்றுத் தள்ளிப் போய் நின்றது. ஆனால் இவளுக்கு ஏதோ ஒன்று எழுந்து போவதுபோல் தோன்றவும் பயத்தில் வந்த பாதை வழியே ஓடத் தொடங்கினாள். நல்ல வேளையாக அவளைத் துரத்தியவர்களுக்கு அது பழக்கமான ஊர் என்பதால் இடையே சென்ற சிறிய பாதை வழியே சென்றுவிட்டார்கள்.

அந்தச் சிறிய வீதியூடாக ஓடியவள் ஒருவழியாகப் பிரதான வீதியொன்றை வந்தடைந்தாள். தூரத்தே வாகனம் ஒன்றின் வெளிச்சம் தெரியவும் அவள் மனதில் சற்றே நிம்மதி உண்டானது. ஏதோ ஒரு வாகனம் வருகின்றது. எதுவானாலும் அதனை நிறுத்தி வருபவர்களிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தபடி தள்ளாடிய கால்களைச் சிரமத்துடன் எடுத்து வைத்து ஓடினாள். அந்த வெளிச்சம் வேகமாக இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் அருகில் வரவும் அவள் மயங்கி விழவும் சரியாக இருந்தது. மயங்கும்போதும் வாகனத்தில் வருபவர்கள் யாரோ? அவர்களும் எப்படி நடந்து கொள்வார்களோ? என்ற பயம் அவள் உள்ளத்தில் எழுந்தது. ஆனாலும் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் மயங்கிச் சரிந்தாள்.

தூரத்திலேயே ஒரு பெண் ஓடிவருவதைக் கண்ட மதிவாணன் வேகமாகக் காரைச் செலுத்தினார். அவர் அருகில் காரை நிறுத்தும்போது அப்பெண் மயங்கி விழுவதைக் கண்டவர் காரிலிருந்து இறங்கி ஓடினார்.

இன்று ஒரு அவசர நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட அவருக்கான சிகிச்சையை முடித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்புகின்றார். வீடு செல்லும் வழியிலேயே அப் பெண் ஓடி வருவதைக் கண்டார். காரிலிருந்து இறங்கி அவளின் அருகில் சென்ற மதிவாணன் அவளை பரிசோதித்தார். இந்த இருட்டிலும் குளிரிலும் எதுவும் செய்ய முடியாது என யோசித்து அவளைத் தூக்கிக் காரில் கிடத்தினார். அவளைத் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

வீட்டிற்கு வந்தவர் அவளை ஒரு அறையில் படுக்கையில் கிடத்திவிட்டுப் பரிசோதித்தார். அந்த வேளையில் மெதுவாகக் கண்களைத் திறந்தாள் அவள். பசி மயக்கம் என்பதை அறிந்தவர் அருகில் நின்றிருந்த அகமேந்தியிடம் அவளுக்குச் சாப்பாடு கொண்டு வருமாறு கூறிவிட்டு அவளிடம் திரும்பினார்.

தான் எங்கே இருக்கிறோம் என்பது புரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள் அவள்.

"நான் எப்படி இங்கே?" என்று புரியாமல் கலக்கத்துடன் மதிவாணனிடம் கேட்டாள். அவர் அதற்குப் பதில் சொல்லாது,
"முதலில் நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

ஆம் என்று மெல்லத் தலையாட்டினாள்.
"என்ன சாப்பிட்டிங்க...?" என்று மீண்டும் கேட்டார். அதற்கு அவள், "நைட் பிஸ்கட்டும் கோக்கும்…"

"மதியம்?"

இல்லையென்று தலையை ஆட்டினாள்.

"காலையில் டீ குடிச்சேன்..." என்று அவள் பதில் சொல்லவும் அகமேந்தி உள்ளே வந்தார். அவரின் கையில் ஒரு தட்டில் சுடச்சுடத் தோசையும் சட்னியும் இருந்தன.

அவளை எழுப்பி மெல்ல உட்கார வைத்த மதிவாணன்
"முதல்ல இதை சாப்பிடும்மா." என்று கூறினார். தட்டை வாங்க நீட்டியவளின் கைகள் நடுங்குவதைக் கண்ட அகமேந்தி தானே அவளின் அருகில் அமர்ந்து அவளுக்கு ஊட்டி விட்டார். அவர்களின் கரிசனையும் அன்பும் அவளின் தவித்த மனதுக்கு இதமாக இருப்பதை உணர்ந்தாள். இரண்டு தோசைகளை உண்டதும் போதும் என்றாள். சிறிதளவு தண்ணீர் பருகக் கொடுத்தவர் கையோடு கொண்டு வந்திருந்த ஹோர்லிக்ஸைக் குடிக்கக் கொடுத்தார். சாப்பிட்டதால் அவளால் அதிகம் குடிக்க முடியவில்லை. சிறிதளவு குடித்ததும் போதும் என்று விட்டாள்.

அவளுக்கு சில மாத்திரைகளைப் போடக் கொடுத்த மதிவாணன், அவள் இங்கே எப்படி வந்தாள் என்று கூறிவிட்டு, படுத்து நன்றாகத் தூங்குமாறும் காலையில் எழுந்து பேசுவோம் என்றும் கூறிச் சென்றார். அவள் தூங்கும் வரை அவளுடன் கூட இருந்த அகமேந்தி அவளின் தலையை ஆதூரமாகத் தடவி விட்டார். உண்ட மயக்கமோ அல்லது மாத்திரைகளின் வீரியமோ உடனேயே உறங்கி விட்டாள்.

காலையில் வழமை போல் ஜாகிங் சென்றுவிட்டு வந்த இளமதியன் சிறிது நேரம் தன் பாசமலர்களான ரொனியுடனும் சுவீட்டியுடனும் விளையாடிவிட்டு உள்ளே வந்தான். சில நாட்களாக ஓடித்திரிந்த மகிழினி சென்றுவிட்டதால் அவனுக்கு வீடே வெறுமையாக இருப்பது போல் தோன்றியது. தயாமதியும் மகிழினியும் வந்தால் அந்த வீட்டில் இரு மடங்கு உற்சாகம் உருவாகிவிடும். மகிழினியுடன் அரட்டை அடித்து விளையாடுவான். நேற்றுத்தான் இருவரும் சென்றனர். ஒரு வெறுமை உணர்வு தோன்றியது.

மகன் வந்ததும் அவனுக்கு மணக்க மணக்க காபியுடன் வந்தார் அகமேந்தி. அவன் ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்டதும்
"என்ன கண்ணா ரொம்ப யோசிக்கிறாய்?"

"ஒன்றுமில்லையம்மா"

"இல்லை கண்ணா உன் முகமே சரியில்லை. ஹொஸ்பிடலில் யாருக்காவது உடம்புக்கு ரொம்ப முடியலையா?" என்று கேட்டார்.

வைத்தியசாலையில் யாராவது சீரியஸாக இருந்தால் இளமதியன் ரொம்பக் கவலைப்படுவான். அவனிடம் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவரும் அவனுக்கு ரொம்பவும் முக்கியமானவர்களே. அவர்கள் பூரண குணமாகி வீடு திரும்பும் வரை மிகவும் கவனமாகப் பார்ப்பான். மகனின் குணம் தெரிந்ததாலேயே அவர் இவ்வாறு கேட்டார்.

"இல்லையம்மா, மகி வீட்டில் இல்லாதது ஏதோ ஒன்று குறைஞ்ச மாதிரி இருக்கு. அதுதான்..."

"கொஞ்சநேரம் வீட்டில் இருக்கும் உங்களுக்கே இப்படி இருந்தால் என் நிலைமையை யோசிச்சுப் பாருங்க. நான் தனியாளாய் இந்த வீட்டில எவ்வளவு தவிச்சுப் போயிருப்பேன் தெரியுமா?"

"என்னம்மா செய்வது. மாமாவுக்கு கொழும்பில்தானே வேலை. அவரை அங்கே தனியா விட்டுட்டு அக்கா நம்ம வீட்டில எத்தனை நாள்தான் இருக்க முடியும்?"

"ம்ம். நான் ஒன்றும் உன் அக்காவை இங்க வந்து இருக்கச் சொல்லலையே. தயா அப்பப்போ வந்து போனாலே எனக்கு ஹப்பிதான். இப்போ நான் சொல்றது நீ ஒரு கல்யாணத்தைப் பண்ணி மருமகளைக் கூட்டிட்டு வந்தால் போதும். நானும் என் மருமகளுமே பார்ட்னராக மாறிடுவோம். அப்புறம் எனக்கு யாருமே தேவையில்லை. உன் பிள்ளையைப் பார்த்துக்குற வேலை வேறு வந்துடும்."

"இது ரொம்ப அநியாயம் அம்மா. உங்களுக்கு ஒரு பார்ட்னர் வேணும் என்பதற்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? இது என்ன புது டீலாக இருக்கு"

"உனக்கு என் மேல் அக்கறையே இல்லை கண்ணா"

"ஏம்மா அப்படி சொல்லுறிங்க? எனக்கு உங்களைவிட வேறு எதுவுமே முக்கியமில்லை"

"நடிக்காதடா படவா... நான்தான் முக்கியம் என்றால் என்னை இப்படி தவிக்க விடுவாயா? உனக்கு இருபத்தொன்பது வயசாகிடுச்சு. இப்பவே லேட்டாகிடுச்சுன்னு எவ்வளவு கவலையாய் இருக்கு தெரியுமா? காலா காலத்தில ஒருத்தியைக் கட்டி நாலைஞ்சு பேரக் குழந்தைகளைப் பெத்துத் தந்திட்டா நானும் சந்தோசமாய் இருப்பேன்தானே" எனத் தாய் கூறவும், இதற்கு எதிர்மாறாய் ஒருத்தி கூறியது அவன் எண்ணத்தில் தோன்றியது. 'மதி நம்ம கல்யாணம் முடிந்ததும் உடனேயே குழந்தை பெறச் சொல்லி என்னை டாச்சர் பண்ணக்கூடாது. ஐந்து அல்லது ஆறு வருஷம் போனபிறகுதான் அந்தப் பேச்சே எடுக்கணும். அதிலும் ஒரேயொரு குழந்தைதான். ஓகேதானே..' என்று அவள் கூறியதை இப்போது நினைவுகூர்ந்தான். ஆனாலும் எல்லாமே பொய்யாகிவிட்டதே என்றும் எண்ணியவன் பெருமூச்சொன்றை வெளிவிட்டான்.

"என்ன கண்ணா... அப்போ உனக்கு உடனேயே பொண்ணு பார்க்கவா?"

"அவ்வளவு அவசரம் தேவையில்லையம்மா. கொஞ்சநாள் ஆகட்டுமே"

"எப்போ பாரு இப்படியே தட்டிக்கழிக்கிறாய். எனக்கும் வயசாகுதில்லையா. இப்பவே கிழவியாகிட்டேன். அப்புறம் பேரக்குழந்தைகளை வளர்க்க உடம்பில தெம்பு வேணாமா?"

"மதி... இங்க யாருக்கு வயசாகிடுச்சு? யாரு இப்போ கிழவியாயிட்டாங்க?" என்று கேட்டுக் கொண்டே மற்றொரு சோஃபாவில் வந்தமர்ந்தார் மதிவாணன்.

"இதோ இங்கே பக்கத்தில உட்கார்ந்திருக்காங்களே மிஸிஸ் மதிவாணன்... இவங்கதான். தான் கிழவியாகிட்டதா ரொம்பவும் ஃபீல் பண்ணுறாங்க"

"யாரு என் பொண்டாட்டியா? ம்கூம்... நடிகை நதியா கணக்கா என்ன அழகாயிருக்கா. யாரு இந்த அபாண்டமான பொய்யைச் சொன்னது."

"அப்பா, இங்க பாருங்கப்பா... நான் உங்க அழகுப் பொண்டாட்டிய கிழவின்னு சொல்லல. அவங்கதான் சொன்னாங்க"

"என்ன செல்லம் உனக்கு வயசாயிடுச்சா...? ச்ச ச்ச... என் அழகுப் பொண்டாட்டி என்றும் பதினாறுதான்" என்றுவிட்டுக் கண்ணடித்தார்.

உள்ளார அவரது பேச்சுக்கும் செயலுக்கும் வெட்கப்பட்டாலும் அதனை வெளிக்காட்டாது அவரை முறைத்த அகமேந்தி, "கண்ணா, உங்க அப்பா ஒன்றும் எனக்கு வயசாயிடுச்சுன்னு ஃபீல் பண்ணிப் பேசல. எனக்கு வயசாகிடுச்சுன்னா தனக்கும் வயசாகிடுச்சுன்னு சொல்லணுமே.. அந்தப் பயம். பேத்திக்கே பத்து வயசாயிடுச்சு. பேச்சைப் பாரு... உங்களுக்கென்ன ஹொஸ்பிடலே கதியாய் கிடக்குறிங்க. பையனுக்கு வயசு ஏறுதே. ஒரு பொண்ணைப் பார்த்து சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி வைச்சிடுவம் என்று இல்லை"

"இன்னும் கொஞ்ச காலம் போகட்டுமே அம்மா"

"அதெல்லாம் நடக்காது. எப்போ கேட்டாலும் இதையேதான் சொல்லுறாய். உன் பேச்சைக் கேட்காமல் இன்றிலிருந்து உனக்குப் பொண்ணு பார்க்கிற வேலையில் இறங்கப் போறேன். தயாமதி வேறு அவ மாமியார் இப்போவும் அதே பேச்சாய்தான் இருக்குதாம். எப்ப பாரு வீட்டில் பேசச் சொல்லுறாங்கள் என்று புலம்பினாள். மதுராவை எப்படியாவது நம்ம வீட்டு மருமகளாக்கிடனும் என்று அவங்களுக்கு ஆசை. ஆனால், ம்கூம்... நம்ம மதிக்கு மதுரா வேண்டாம். நான் நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணாய் பார்த்துப் பேசி, சீக்கிரமாய் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணனும்" என்றார் காவேரி.

"பார்க்கிறதுதான் பார்க்கிற கொஞ்சம் அடக்கமான பொண்ணா பாரு.. அப்புறம் என்னை மாதிரியே என் மகனும் பொண்டாட்டிக்குத் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்" பயப்படுவதுபோல நடித்துக் கொண்டே கூறினார். அவரை முறைத்துப் பார்க்க முயன்ற அகமேந்தி முடியாமல் சிரித்துவிட்டார்.

ரகுபரனுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும். ரகுபரன் திருமணம் செய்ய முன்னரே மூத்த தங்கை கல்யாணிக்கு அவர்கள் சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தார்கள். இரண்டாவது தம்பி முகில். படித்து முடித்துவிட்டு வேலை பார்க்கிறான். மூன்றாவது தங்கையே மதுரா. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகின்றாள். வசதியான குடும்பத்தில் பிறந்ததால் தான் என்ற அகங்காரம் அவளுக்கு அதிகம். ரகுபரன் குடும்பத்தில் மற்ற எல்லோரும் எவ்வளவு வசதி இருந்த போதும் அதனை வெளிக்காட்டாது மிகவும் பண்பாகவே எல்லோரிடமும் பழகுவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதற்கு முன்னிற்பார்கள். ரகுபரனின் தந்தை தியாகராஜா இளமதியன் நடத்தும் இலவச மருத்துவ முகாமிற்கு மருந்துக் கொள்வனவுக்கென அதிகளவில் நன்கொடைகளை வழங்குவார்.

இவர்களின் எதிர்ப்பதமாக அமைந்தவளே மதுரா. ஏழைகள் என்றால் தனக்குச் சேவை செய்யப் பிறந்தவர்களே என்ற எண்ணத்தில் நடப்பாள். அதிலும் அவள் மிகவும் அழகாக இருப்பதில் அவளுக்கு இன்னும் கர்வம் அதிகம். அவளை எப்படியாவது இளமதியனுக்கு மனைவியாக்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் ரகுபரனின் தாய் அமுதவல்லி. ஆனால், அவளின் குணம் தெரிந்ததால் அந்த எண்ணமே வேண்டாம் என்று இருக்கின்றார் அகமேந்தி. ரகுபரனும் தனது தங்கையாயினும் இளமதியனுக்கு அவள் ஏற்றவள் இல்லை என்ற கருத்திலேயே இருக்கின்றான்.

தொடர்ந்து தாய், தந்தையுடன் அமர்ந்து இளமதியனும் அளவளாவினான். திடீரென ஞாபகம் வந்தவராக, "அகமேந்தி, அந்தப் பொண்ணு எழுந்திடுச்சா?" என்று கேட்டார் மதிவாணன்.

"இல்லைங்க.. நான் இரண்டு தடவை போய் பார்த்தேன். பாவம்.. அப்பவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் எழுப்பலைங்க"

"ஓகே ஓகே, எழுப்ப வேண்டாம். டப்லட் போட்டதால் நல்லாத் தூங்கட்டும். நான் குளிச்சிட்டு வந்து பார்க்கிறேன்"

"பொண்ணா...? நம்ம வீட்டிலா? யாரப்பா அது...?"

மதிவாணன் நேற்று இரவு நடந்த சம்பவங்களை மகனிடம் கூறினார்.

"மதி, இரவு நாங்கள் வந்தபோது நீ நல்லாத் தூங்கிக்கொண்டிருந்தாய். அதுதான் உன்னை டிஸ்ரப் பண்ண வேண்டாம் என்று சொல்லலை. அகி.., அந்தப் பொண்ணு எழுந்ததும் முதல்ல நல்லா சாப்பிடக் கொடு. ரொம்பவும் வீக்கா இருக்குது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் அவ வீடு எங்கே என்று கேட்டு வை. ஹொஸ்பிடல் போகும்போதே கொண்டு போய் விட்டுட்டு வருவோம். அகி நீயும் கூட வாம்மா" என்றவர் எழுந்து உள்ளே போக எத்தனித்தார், அப்போது "ஹாய், அங்கிள், ஆன்ரி எப்படி இருக்கிங்க" என்று கேட்டபடி உள்ளே வந்தாள் மயூரி.

"வாம்மா மயூரி... நாங்க நல்லா இருக்கோம். உன்னைப் பார்த்துதான் எவ்வளவோ நாளாச்சு. உனக்கு எங்க ஞாபகம் இப்போதான் வந்திச்சா? நீ எப்போ ஊருக்கு வந்தாய்?" என்று கேட்டார் அகமேந்தி.

"நான் சூப்பரா இருக்கேன் ஆன்ரி. நான் வந்து ஃபோர் டேய்ஸ் ஆகிடுச்சு. நீங்க ஏன் இப்படி இளைச்சு போயிட்டிங்க?"

"நான் இளைச்சிட்டேனாமா? நான் அப்படியே தானம்மா இருக்கேன். உன் அங்கிள் நான் டபுள் சைஸ் ஆயிட்டேன் என்கிறார். நீ இப்படி சொல்கிறாய். ஆனால் நீதான் நல்லா இளைச்சிட்டாய். உன் வீட்டில் எல்லோரும் சுகமா?"

"யா.. ஃபைன் ஆன்ரி"

"ஓகே மா.. நீங்க பேசிக்கொண்டிருங்க. நான் உனக்கு டீ போட்டு எடுத்து வாறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார் அகமேந்தி.

மதிவாணனும் அவளது வேலை குறித்து விசாரித்துவிட்டு, தன் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாவதற்கென உள்ளே சென்று விட்டார்.

"மதி நான் உனக்கு நைட் ஹோல் பண்ணினேன். ஏன் நீ ஆன்ஸரே பண்ணல"

"சாரி மயூ நான் நேற்று நேரத்துக்கே தூங்கிட்டேன். போனும் சைலண்டில் இருந்திச்சா. அதுதான் தெரியலை."

"மதி ஏண்டா என்னை நீ அவாய்ட் பண்ணுறாய்? எங்கேயாவது போவம் என்றாலும் வாறாய் இல்லை. ஹோல் பண்ணினாலும் எடுக்கமாட்டாய். கொழும்பில் இருந்து உனக்கு எத்தனை தடவை ஹோல் பண்ணியிருப்பன். பத்து தடவை கூப்பிட்ட பிறகு ஒருக்கா ஆன்ஸர் பண்ணுவாய். என்னை நீ புரிஞ்சு கொள்ளவே மாட்டியாடா?" என்று கெஞ்சும் தொனியில் கேட்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்து அவனது கைகளைப் பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

"மயூ பிளீஸ் கையை விடு. யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க" என்றபடி கைகளை அவளிடமிருந்து இழுக்க முயன்றான்.

கைகளை இறுகப் பற்றியவள்
"யார் நம்மைத் தப்பாக நினைக்கப் போகிறார்கள்? ஆன்ரி தானே பார்க்கப் போகிறார்கள். அவர்களுக்கும் நம் லவ் தெரியத்தானே வேண்டும்" என்று கூறவும் கோபம் உண்டாகத் தன் கையை அவளிடமிருந்து வேகமாக இழுத்து எடுத்தவன்,

"மயூ.. நான் திரும்பத் திரும்பச் சொல்றேன். வீணா உன் மனசில ஆசையை வளர்த்துக்காத"

"ஏன் மதி உனக்கு என் மீது லவ் வரலை? உன்னையே சுத்தும் என்னை ஏன்டா வெறுக்கிறாய்?" என்று இறைஞ்சும் குரலில் கேட்டாள்.

"பிளீஸ் மயூ.. உனக்கு நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எப்போவும் பிரண்ட் என்பதைத் தாண்டி என்னால் உன்னை லவ் பண்ணவே முடியாது. இந்த நிமிஷம் வரை உன்மீது லவ் வரலை. உன்மீது எனக்கு அன்பிருக்கு. பட், நீ லவ், லவ் என்று புலம்புவதால் உன்கூட பேசவே யோசிக்கின்றேன். எப்போதும் நான் உன் பிரண்ட்தான். அந்த உரிமையில் என்கூட தாராளமாய் பேசு. அத்தோடு, ரதி தந்த காயங்களே போதும். வேறு யாரையும் மனதில் நினைத்துப் பார்க்கவே முடியாது."

"டேய்... இன்னும் நீ அவளை நினைத்துக் கொண்டா இருக்கிறாய்?"

"அவள் தந்த காயங்கள் இன்னும்கூட என் மனதில் ரணமாக இருக்கின்றதே." அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அகமேந்தி வரவும் அப்பேச்சை நிறுத்தினர்.

"என்னம்மா இரண்டு பேருமே ரொம்ப சீரியஸாய் இருக்கிங்க"

"நத்திங் ஆன்ரி... உங்க மதியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமே. சரியான சோம்பறி. எப்போ, எங்கே கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்கிறான். எந்தநேரமும் பேஷன்ட் பற்றி யோசிக்கும் சின்ஸியர் டொக்டராகவே இருக்கான்" என்று சமாளித்தாள் மயூரி. அவரும் சிரித்துவிட்டு "மயூரி, டிபன் முடிஞ்சுது. இருந்து சாப்பிட்டு போடா"

"சாரி ஆன்ரி, பிரண்ட்ஸ் கூட வெளியில் சாப்பிட அரேன்ஜ் பண்ணிட்டோம். இன்னுமொரு நாள் வந்து கட்டாயம் சாப்பிடுறேன்"

"ஓகே மயூ எனக்கும் டைம் ஆச்சுது. நீ அம்மாகூட பேசிட்டு போ" என்றுவிட்டு அவன் தன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான்.

"இதுக்கொண்றும் குறைச்சல் இல்லை. இவனுக்கு எப்படித்தான் சொல்லி என் காதலைப் புரியவைப்பேனோ" என்று மனதுக்குள் புலம்பியபடி அவள் அகமேந்தியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்றாள்.
 
Last edited:
Top