எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 03

Fa.Shafana

Moderator
வஞ்சியின் அன்பன்
**----------------------------------------**

அதிகாலைப் பொழுது…
நந்தினி எழுந்து குளித்து தன் அன்றாட வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.


மனதில் குடிகொண்டிருக்கும்
வெறுமையைப் போக்க
தனக்கு மட்டும் கேட்கும் குரலில்
பாடலொன்றை முனுமுனுத்துக் கொண்டே இருப்பது அவள் வழக்கம்.

"நந்தினி இன்னைக்கு என்ன டிஃபன் பண்ணியிருக்க?"

அதிகாரம் எல்லை கடந்த குரலில்
அத்தை கல்பனா கத்திக் கொண்டு வந்து
சாப்பிட உட்கார,

"நைட் நீங்க சொன்ன மாதிரி இட்லியும் சாம்பாரும் தான் அத்த"

"சரி பரிமாறு.."

அவர் சாப்பிடும் வரை அருகில் இருந்து பரிமாறியவள்,

"அத்த மதியத்துக்கு என்ன சமையல் பண்ண?"

"இன்னைக்கு நான் வெளிய போறேன்
நீ ஏதாவது சமைச்சு சாப்பிடு"

"சரிங்க அத்த"

அவர் எழுந்து போக,
உட்கார்ந்து ரெண்டு கவளம் சாப்பிட்டவளுக்கு

கல்பனா தன் தம்பி மகளை வரவேற்கும் சத்தம் கேட்க
தட்டுடன் எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.
வரும் என்று தெரிந்த புயல் இன்றைக்கே வந்து விட்டது.

"அட வா விந்தியா
எப்போ ஊருக்கு வந்த?"

"நான் எப்போ வந்தா உங்களுக்கு என்ன?
நீங்க என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கீங்க அத்த?"

"ஏன்டா கோவப்படற?
அந்த டைம்ல அத்தையால ஒண்ணும் பண்ண முடியல டா.
அதான் மாமா சொன்னதுக்கு
தலையாட்டி அவனுக்கு இந்தக் கழுதைய கட்டி வெச்சேன்"

"அது சரி தான் ஆனா
அவள கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளாம
இ‌ன்னு‌ம் எதுக்கு வீட்டுல வெச்சிருக்கீங்க?
அதான் கல்யாணத்த நடத்தி வெச்சிட்டு மாமா இறந்துட்டாங்கல்ல?
புது மருமகள் மேல பாசம் வந்திருச்சு போல!"

"இல்லடா..
அப்பிடி இல்ல
வினித் கூட இவள பிடிக்காம தானோ என்னவோ வெளிநாட்டுக்கு போய் இருக்கான்
அவன் வர ஆறு மாசம் ஆகும்
அது வர இவள வெச்சிட்டு இருந்துட்டு
அவன் வர முன்ன விரட்டி விடலாம்ன்னு தான் இருக்கேன்.
அதுவர சம்பளம் இல்லாம வேல செய்வா
எனக்கும் துணையா இருக்கும்ல?"

தன் அத்தையின் முகமூடி கிழிந்த நொடி நந்தினியின் இதயம்
சுக்கு நூறாக உடைந்து சிதறியது.

"விந்தியாவத் தான் என் வினித்துக்கு கட்டி வைக்க ஆசைப்பட்டேன்
ஆனா
உன் மாமா
சாகப் போறோம்னு தெரிஞ்சதும்
உன்ன அவன் தலைல கட்டி வெச்சிட்டு போய் சேந்துட்டாரு.
இப்போ அவன் உன்னப் பிடிக்காம நாட்ட விட்டே போய்ட்டான்.
நடந்தது நடந்து போச்சி
அவன் திரும்பி வந்ததும் என்ன சொல்றான்னு பாப்போம்.
எப்பிடியாவது அவன் மனச கரைக்கப் பாரு"
என்று சொன்ன அத்தை முழுக்க முழுக்க வேசம் பூண்டிருந்தது இப்போது புரிந்தது.

இவள் சிந்தனை கலைந்தது
விந்தியா இவளை அழைத்த சத்தத்தில்.

"ஆ.. இதோ வர்றேன்"
கலங்கிய கண்ணைத் துடைத்தபடி அவர்கள் முன்னால் போய் நின்றாள்.

"அனாதக் கழுத நீ!
உனக்கு என் அத்தான் புரிஷனா?
கொன்னுடுவேன் உன்ன.
சின்ன வயசுல அம்மா அப்பாவ காவு கொடுத்துட்டு நின்னப்ப
தங்க இடம் கொடுத்தாங்க எங்க அத்த,
இப்போ என்னடான்னா
என் வாழ்க்கைய காவு வாங்கி இருக்க"

உச்சஸ்தாதியில் கத்தியவள்
நந்தினியின் கழுத்தைப் பிடித்து நசுக்க,

"விடு விடு விந்தியா
செத்துடப் போறா"

"சாவட்டும் அத்த.
என் வாழ்க்கைய புடுங்கி இவ வாழறா நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா?"

"சொன்னாக் கேளு விந்தியா
அவள விடு"

"அப்பிடின்னா இப்போ இந்த நிமிஷம் இவள இங்க இருந்து போகச் சொல்லுங்க"

"சரி சொல்றேன்,
நீ விடு"

அவள் கழுத்தை விட
இருமலும் கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது நந்தினிக்கு.

"நான்.. போறேன்..
என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க"

"பேச்ச விட்டுட்டு கெளம்புடி"
ஆக்ரோஷமாகக் கத்த,

அப்படியே படியிறங்கிப் போனவளின் பின்னால்
மீண்டும் ஒரு குரல்.

"அத்தான் கட்டின தாலிய கழட்டி போட்டுட்டு போ..!"

"முடியாது.
ப்ளீஸ் அத மட்டும் செய்ய சொல்லாதீங்க"
தாலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கதற,

"என்னடீ ப்ளீஸ்?
கழட்டு அத"
சொன்னவள்
பிடுங்கி எடுத்திருந்தாள்.

பத்து வயதில் ஒன்றுமே இல்லாமல் எப்படி தன் தாய்மாமன் கை பிடித்துக் கொண்டு இந்த வீட்டுக்குள் வந்தாளோ அதே போல
வெறுங்கையுடன் வெளியேறி இருந்தாள்.
துணைக்கு அந்த தாய்மாமன் கூட இல்லை இன்று.

'ஒரு வேள மாமா, அத்தானுக்கு என்னைய கட்டி வைக்காம இருந்திருந்தா
வேலைக்காரியா
அந்த வீட்டுல இருந்திருக்கலாம்
இப்போ எங்கே போறது எப்பிடிப் போறதுன்னே
தெரில'
மனதில் ஆயிரம் சிந்தனைகள் மாறி மாறி வர எங்கே போகிறோம் என்றறியாது நடந்து கொண்டே இருந்தாள்.

இவளின் வெறித்த பார்வையும்
தன்னிலை மறந்த நிலையும்
இரு மனித ஓநாய்கள் கண்ணில் பட
பின் தொடர்ந்து சென்றன
அவை ஒரு ஒதுக்குப்புறம்
தென்படும் வரை.
தொலைவில் தென்பட்ட பாழடைந்த வீட்டை
கண் காட்டிய ஒருவன்

"விட்டுடாத"

என்ற சத்தத்துடன் இவள் கை பிடிக்க மற்றவனும்
மற்றக் கையைப் பிடித்துக் கொண்டான்.

அது மட்டும் தான் அவளுக்கு தெரியும்.

ஓநாய்கள்
வேட்டையாடியதெல்லாம்
அவள் மயக்கத்தில் இருக்கும் போது.

அவள் அடுத்து கண் முழித்த போது நன்றாக இருட்டியிருக்க,
தான் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் முழித்தவளுக்கு

எ‌ல்லா‌ம் ஞாபகம் வர
உடம்பு அசதியும்
எழுந்து நிற்க முடியாத அளவுக்கு சோர்வும் வலியும்
மயக்கத்தில் நடந்தது என்னவாக இருக்கும் என்று புத்தியில் உரைக்க
உடைந்து கதறி விட்டாள்.

'இப்போ இங்க இருந்து போகணும்
மறுபடியும் அவனுங்க வந்தாலும் வருவானுங்க'

நினைத்த அடுத்த நொடி
மனதில் தைரியம் வர எழுந்து
ஓட ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் ஓடியவள்
ஒரு கடையின் முன்னால் அடியற்ற மரமாய் உணர்வற்று விழுந்தாள்.

சத்தம் கேட்டு கடையிலிருந்த இருவர் வந்து தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டு,

"நீங்க யாரு
எங்க போறீங்க?"
கேட்க

"என் பேர் நந்தினி.."

"இது எங்க ஹோட்டல் தான்.
உள்ள வந்து சாப்பிடுங்க"

"சாப்பாடு வேணாம்" என்றவளிடம்,

"எங்க போறீங்க?"
மறுபடியும் கேட்க

"நா.. ன் எங்க போ.. போறதுன்னு தெரியாம.. தப்.. தப்பி ஓடிக்கிட்டு இருக்கேன்.." என்றவளை
புரியாமல் பார்க்க

நடந்த அனைத்தையும் தயங்கித் தயங்கி சொன்னவளுக்கு கண்ணீர் கட்டுக்கடங்காமல் வந்தது.

"அண்ணா இவங்கள
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்
ஆட்டோவ எடுண்ணா"

"வேணாங்க
உங்களுக்கு எதுக்கு சிரமம்?"

"சிரமம்லாம் இல்ல
பக்கத்துல இருக்கற கவர்மென்ட் ஹாஸ்பிடல்க்கு
தான் கூட்டிட்டு போறோம்
வாங்க"
சொன்னவன் வண்டியை எடுக்க

அடுத்த சில நிமிடங்களில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.


"அவங்களுக்கும் யாருமே இல்ல
நாங்களும் கஷ்டத்துல
இருக்கோம்
தயவு செய்து
போலிஸ்க்கு எல்லாம் சொல்லாம
ட்ரீட்மெண்ட் பண்ணுங்க டாக்டர்"


கலாவின் அந்தக் கெஞ்சலுக்கு இல்லாத மதிப்பு
பாலா டாக்டர் கையில் திணித்த சிறு தொகை பணத்துக்கு இருந்ததால்
எந்தத் தொந்தரவும் இல்லாமல்
அவளுக்கு சிகிச்சை நடந்தது.

'ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்துட்டேன்
இனி எங்க போறதுன்னு தெரியலயே'
நினைத்துக் கொண்டிருந்தவளது
தோள் தொட்டாள்
கலா.

"என்ன யோசிக்கிறீங்க?"

"நீங்க ரொம்பப் பெரிய
உதவி பண்ணிருக்கீங்க
ரொம்ப நன்றிங்க.
உங்க அண்ணாவுக்கும்
நான் நன்றி சொன்னேன்னு
சொல்லிடுங்க
நான் கெளம்புறேன்"

"எங்க போகப் போறீங்க?"

"தெரிலயே!"

"எங்க கூடயே தங்கிக்குறீங்களா?"

"வேணாங்க..
உங்களுக்கு எதுக்கு சிரமம்?
நான் இப்பிடியே எங்கேயாவது
போறேன்"

"உங்கள தனியா அனுப்ப மனசு வருதில்ல.
எங்களுக்கு சிரமம் ஒன்னுமில்ல
எங்க கடைக்கு பின்னால தான் எங்க வீடு
அம்மாவும் நானும் அண்ணாவும்
தான்.
வீடு சின்னது தான்
ஆனா சமாளிச்சுக்கலாம்,
வாங்க"

"இல்ல அது..
சரி வராது"

"ஒன்னும்
யோசிக்காதீங்க
வாங்க"

தயங்கி நின்றவளை
தரதரவென இழுத்துக் கொண்டு
போனவள்
பாலாவிடம்
சொல்லி
தன் வீட்டுக்கு
அழைத்து வந்தாள்.

"இது தான் எங்க அம்மா.
எழுந்துக்கவோ பேசவோ முடியாது.
நாம பேசுறது புரியும்"
கட்டிலில் ஓய்ந்திருந்து
ஒரு உருவம்.

"ஒரு வருஷமா இப்பிடி தான் இருக்காங்க
இவங்கள
பார்த்துக்க தான்
நான் காலேஜ்
படிப்ப விட்டேன்.
இவங்கள
கவனிச்சுட்டு
மத்த நேரங்கள்ல
சும்மா
இருக்க முடியாம
இந்தக் கடைய ஆரம்பிச்சேன்
அண்ணா ஆட்டோ ஓட்டுறான்.

நீங்க போய் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்.
இந்தாங்க என் ட்ரெஸ்

உங்களுக்கு சைஸ்
சரியா தான் இருக்கும்"

ஏதோ பல நாள் பழகியவள் போல அவள் நடந்து கொண்டது
நந்தினியின் மனதுக்கு பெரும் ஆறுதல்.

மாலையில் மாவாட்டிக்
கொண்டிருந்தவளிடம்

"நான் இத செய்றேன்
நீங்க வேற
ஏதும் வேல செய்ங்க"

"ஓகே பிடிங்க
நான்
சட்னிக்கும் சாம்பாருக்கும் ரெடி பண்றேன்"

இயல்பாக
வேலைகளை
பிரித்துச் செய்த இருவரையும்
ஒரு புன்னகையுடன் பார்த்திருந்தான்
பாலா.

அடுத்து வந்த
நாட்களில் கலாவின் அம்மாவை
கூட கவனித்துக் கொண்டாள் நந்தினி.

அவர்களுடன்
இயல்பாக
ஒன்றிவிட்டவள்,
அன்று இரவு
சாப்பிடும் போது.

" கலா நீங்க மறுபடியும் காலேஜ் போங்க நான் அம்மாவையும்
கடையையும் கவனிச்சுப்பேன்"
சாதாரணமாகச் சொல்ல,

புரியாமல் முழித்தனர்
அண்ணனும் தங்கையும்.

"என்ன பாக்குறீங்க?
எப்பிடியும் என்ன இங்க இருந்து போக விட மாட்டீங்க.
சும்மா இருக்குற நான் அம்மாவ பாத்துக்க மாட்டேனா,
என் மேல நம்பிக்க இல்லையா?
பாதில நிறுத்தின படிப்ப
நீங்க படிச்சு முடிங்க"

"நம்பிக்க இல்லாம இல்ல.
உங்களுக்கு எதுக்கு சிரமம்?"

"நீங்க எனக்குபெ பண்ணின உதவிக்கு நான் பண்ணப் போறது ஒன்னுமே இல்ல கலா.
நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா நான் இன்னைக்கு
என்ன ஆகியிருப்பேன்னு
நெனைக்கவே பயமா இருக்கு"
சொல்லும் போதே அவளின் தேகம் நடுங்கி அடங்கியது.

"என்னையும் உங்கள்ல ஒருத்தியா நெனச்சீங்கன்னா
நான் சொல்றத
கேளுங்க"

"ஓகே.. இவ காலேஜ் போகட்டும்.
ஆனா கடை வேணாம்
மூடிடலாம்"
பாலா சொல்ல,

"இல்லைங்க
பணம் வாங்கிட்டுன்னாலும்
நெறைய பேரோட பசியாத்தி
இருக்கீங்க
இந்த வருமானத்த நம்பி
கடைல வேல செய்ற அந்த பையன் கூட இருக்கான்ல அதனால
இத விட வேணாம்.
நான் கடைய நடத்துவேன்
முடியலன்னா சொல்றேன்
மூடிடலாம்"

அழகாக ஓடி முடிந்தது
இரண்டு வருடங்கள்.

கடை கொஞ்சம் பெரிய அளவில் முன்னேறி இருக்க,
கலைத்துறையில் பயின்ற கலாவும் படிப்பில் நல்லபடியாக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்றாள்.
அம்மாவின் உடல் நிலையில் தான் எந்த முன்னேற்றமும் இல்லை.

அன்று
காலையில் சவாரி சென்ற பாலா திரும்பி வந்து

"நந்தினி ஒரு லன்ச் ஓடர் வந்திருக்கு
இருவது முப்பது பேருக்கு
சாப்பாடு வேணுமாம்"

"இன்னைக்கா.? "

"இல்ல புதன்கிழமைக்கு தான்"

"அப்போ ஓகே
பண்ணிடலாம்.
என்னென்ன மெனு?"

"அதெல்லாம் நான் இன்னும் கேக்கல்ல.
உங்க கிட்ட கேட்டுட்டு
சொல்றேன்னு சொல்லிட்டேன்"

"யாரு கேட்டாங்க?"

"மெயின் ரோட்டுல இருக்குல்ல ஆர்கே ன்னு ஒரு சின்ன கம்பெனி.
அதுல வேல பாக்குற மேனேஜர் போன வாரம் நம்ம ஹோட்டல் சாப்பிட வந்தார் போல
இங்க சுத்தமாவும் டேஸ்ட்டாவும் இருந்துச்சுன்னு அவர் கம்பெனி மீட்டிங் வர்றவங்களுக்கு இங்கேயே லன்ச் ஓடர் பண்ணலாம்னு சொன்னாராம்.
எம்டி கூட ஓகே சொல்லிட்டாருன்னு இங்க வந்துட்டு இருந்தவர் தெருவுல என்னக் கண்டு கேட்டாரு"

"சரி சமைச்சுக் கொடுக்கலாம்
ஒன்னும் பிரச்சினையில்.
மெனு என்னன்னு கேட்டு சொல்லுங்க.
அப்புறம் லிஸ்ட் போட்டு தேவையானதயெல்லாம் வாங்கிக்கலாம்"

தடபுடலாக சமையல் செய்து,
கடையில் வேலை செய்யும் சிறுவனை அம்மாவிற்கு துணையாக வைத்து,
விடுமுறையில் இருந்த கலாவை அழைத்துக் கொண்டு கிளம்பிப் போனவளை
அந்த நிறுவன வாசலில் இறக்கி விட்ட பாலா,

"நீங்க உள்ள போய் எல்லாம் செட் பண்ணி கொடுங்க
அவங்களே பரிமாறிக்குவாங்க.
நான் இன்னும் அரமணி நேரத்துல வர்றேன் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போக"


சொன்னவன் கிளம்ப
இருவரும் உள்ளே சென்றனர்.
மேனேஜர் வந்து அழைத்துச் சென்று
இடத்தைக் காட்டி ஒழுங்கு படுத்தச் சொன்னவர்

இவர்கள் வேலையை முடிக்கவும்
கொடுக்க இருந்த மீதிப் பணத்தைக் கொடுத்து விட

வாசலுக்கு வந்து பாலா வரும் வரைக் காத்திருந்தார்கள்.

அப்போது..

"நந்தினி"
என்ற பரீட்சயமான குரல் கேட்டது.

சற்றென திரும்பிப் பார்த்தவளின்
வாய் மெதுவாக உச்சரித்தது.


"அத்தான்"

"எங்க போன நீ
எப்பிடி இருக்க?"

"நந்தினி யாரு இவர்.?"

"வினித் அத்தான்.."

"ஓஹ்… உனக்கு தாலி கட்டினாரே அவரா.?"

ஆமென்று தலையசைக்க..

கேலியாக பார்த்து வைத்தாள் கலா.

"இது யாரு நந்தினி.?"

"நான் இவங்க வீட்ல தான் தங்கியிருக்கேன்"

சொல்லி முடிய வந்த பாலாவின் வண்டியில் ஏறி வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

இதயம் தான் மத்தளம் கொட்டும் உணர்வு.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்
அங்கே விசாரித்து தகவல் எடுத்து,
மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை முடிந்த உடனே
பாலாவின் வீட்டு வாசலில் வந்து நின்றான்.

மதியம் உண்ணும் போதே கலா அங்கு நடந்ததை சொல்லியிருக்க
கதவு தட்டும் சத்தம் கேட்டு
போய்ப் பார்த்த
பாலாவிற்குப் புரிந்து விட்டது
கலா சொன்னது இவனைத் தான் என்று.

"நந்தினி இருக்காளா?
நான் அவகிட்ட கொஞ்சம் பேசணும்"

"வாங்க.. உட்காருங்க"உள்ளே சென்றவன்
அவளை அனுப்பிவிட்டு
உள்ளேயே இருந்து கொண்டான்.
இருவருக்குமிடையே போகக் கூடாதென்ற எண்ணம் அவனுக்கு.

"எதுக்கு இங்க வந்தீங்க?"

"ஏன் நந்தினி?"

"என்னத் தான் உங்களுக்கு பிடிக்காதே?
மாமா சொன்னதுக்காக தாலி கட்டிட்டு
அவர் இறந்ததும் என்ன அம்போன்னு விட்டுட்டு போய்ட்டீங்க"

"நான் திரும்பி வரும்வர இருக்காம
நீ ஏன் வீட்ட விட்டு வந்த?
தாலிய கூட கலட்டி போட்டுட்டு
ராத்திரி அம்மாவுக்குத் தெரியாம ஓடி வந்திருக்க"
கோபமாக அவன் சொல்ல,

"என்னது நந்தினி வந்தாங்களா?
உங்க மாமா பொண்ணு
வீட்ட விட்டு தொரத்தினா"
சீறிக் கொண்டு வந்தது அறையிலிருந்து வெளியே வந்த கலாவின் குரல்.

" என்ன சொல்றீங்க? புரியல எனக்கு"
அவன் கேட்க

அனைத்தும் சொல்லி முடித்த நந்தினிக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள் கலா.

"அம்மா பொய் சொல்லி இருக்காங்க நான் கூட அத நம்பிட்டேன்.
இப்போ அம்மா எப்பிடி இருக்காங்கன்னு கேக்கவே மாட்டியா நீ?"

"எதுக்கு கேக்கணும்
அவங்கெல்லாம் நல்லவே இருக்க மாட்டாங்க.
நாத்தனார் பொண்ணுன்னு இல்ல ஒரு மனுசியாக் கூட
இவங்கள உங்க அம்மா ட்ரீட் பண்ணல்லயே!"
ஆத்திரமாக கலா சொல்ல,

"ஆமா அவங்க இப்போ உயிரோட இல்ல.
நான் வெளிநாட்டுல இருந்து வந்து அம்மா சொன்னதக் கேட்டு
விந்தியாவ கல்யாணம் பண்ணேன்.
எங்க பொண்ணு பொறந்து கொஞ்ச நாள்ல அம்மாவுக்கும் விந்தியாவுக்கும் சண்ட வந்து
அவங்கள மாடில இருந்து தள்ளி விட்டுட்டா அவங்க படுத்த படுக்கயா இருந்தாங்க.
அப்புறம் போலீஸ் கேஸ்க்கு பயந்து அவளும் ஊர விட்டே ஓடிட்டா.
கொஞ்சம் நாள்ல அம்மாவும் இறந்து,
இப்போ நானும் என் பொண்ணும்
அனாதையா இருக்கோம்"


அதான் உன்ன என் கூட கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்.

அவன் சொன்னதையெல்லாம் கதை போல் கேட்டுக் கொண்டிருந்தவள்,

"யார யாரு கூட்டிட்டு போறது?
இப்போ கூட உங்க தேவைக்குத் தான் கூட்டிட்டு போக வந்திருக்கீங்க
நான் உங்க கூட வருவேன்னு
எப்பிடி எதிர்பாத்தீங்க?"

"நான் உன் புருஷன் தானே?"

"பைத்தியமா நீங்க?
தாலி கட்டிட்டு என்ன தவிக்க விட்டுட்டு போனீங்க,
அவ தாலிய பிடுங்கிகிட்டா
இப்போ வந்து புருஷன்னு சொல்றீங்க.
தாலி கட்டிட்டு திரும்பிக் கூடப் பாக்காத
நீங்க புருஷனா?

செத்தாலும் சாவேனே தவிர
அந்த நரகத்துக்கு மறுபடியும் நான் வர மாட்டேன்"

"என்ன சொல்ற அங்க இத விட வசதியா தானே இருந்த?"


" எது?
மாமாவுக்குத் தெரியாம உங்க அம்மா என்ன தங்க வெச்ச
எலியும் கரப்பானும் ஓடுற ஸ்டோர் ரூமா வசதி?

அந்த வீட்டுல எனக்கு இத்தன வருஷம் கிடைக்காத சந்தோஷம் நிம்மதி எல்லாம் இங்க இருக்கு.
என் அம்மாவுக்கு செய்யாத கடமைகள செய்றதுக்கு இன்னொரு அம்மாவே இங்க இருக்காங்க.

மாத்துத் துணி கூட இல்லாம
கழுத்த புடிச்சி வெளிய தள்ளி,
நான் எப்பிடி இவங்க கிட்ட வந்து சேர்ந்தேன்னு தெரியுமா?
இவங்க அன்னைக்கு இல்லன்னா
உங்க முன்னாடி நின்னு பேச நானே இருந்திருக்க மாட்டேன்"

என்றவள் அதையும் சொல்ல
அதிர்ந்து விட்டான் வினித்.

"அது மட்டுமில்ல
நான் இங்க வந்து அடுத்த ரெண்டு வாரம் ராத்திரி எல்லாம் வண்டியோட்டி அதுல வந்த பணத்துல
எனக்கு தேவையான துணியெல்லாம் எடுத்துக் குடுத்தாங்க இவங்க அண்ணா
கற்ப பறி கொடுத்து சின்னா பின்னமாகி
வந்த எனக்கு
மானத்த மறைக்க துணி வாங்க
ரெண்டு வாரம் தூங்காம உழைச்சிருக்காங்களே
அதுக்கே
நான் காலம் பூரா கடன்
தானே?"

அவளுக்கு தெரிந்து விடாமல் தான் சாதாரணமாகத் தொழில் செய்வது போல பணம் சேர்த்து துணி வாங்கியதை அவள் அறிந்து வைத்து சொன்னது அதிர்ச்சி தான் பாலாவுக்கு!

"அதுக்கும் அதிகமா நாம பணத்த கொடுக்கலாம்.
நீ என்கூட வா"

"முடியாது.
எதுக்கு பணம் கொடுக்கப் போறீங்க?

அவங்க எனக்கு அந்த நேரம் செஞ்ச உதவிக்கு உங்க சொத்து மொத்தமும்
கொடுத்தாக் கூட போதாது.."

இவர்கள் வாக்குவாதம் பலக்க
உள்ளே இருந்து வெளியே
வந்த பாலாவிடம்,

"அண்ணா அவன போகச் சொல்லு
அவனப் பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு"
என்று கலா சொல்ல,

"நானும் அதுக்கு தான் வந்தேன்"
தங்கையிடம் சொல்லி

"போதும் சார் நீங்க கெளம்புங்க"

"அவளுக்கு நான் தாலி கட்டி இருக்கேன்.
அவள என்கூட அனுப்புங்க"

"அப்பிடியா? இருங்க வர்றேன்"

என்று உள்ளே சென்றவன் பின்னால் ஓடியவள்,
"என் பண்றண்ணா நந்தினிய அனுப்பப் போறீயா?"
கேட்க

"இல்ல இனி எவனும் இப்பிடி பேசக்கூடாது அதுக்கு"

என்றவன்
பூஜையறையில் இருந்த தன் தாயின் தாலியை எடுத்து வந்து
நந்தினி கழுத்தில் கட்டியிருந்தான்.

அவள் என்ன என்று உணரும் முன் மூன்று முடிச்சிட்டவன்.

"இவ இப்போ என் பொண்டாட்டி.
இப்போ கூட வெளிய போக முடியாதுன்னா இருங்க கல்யாண விருந்து
சாப்பிட்டுட்டுப் போகலாம்
என் பொண்டாட்டி கைப் பக்குவம் செம்மயா இருக்கும்"
படு நக்கல் குரலில் அவன் சொல்ல,

வினித் வெளியேறி சென்று விட்டான்.

"அண்ணி! "
என்ற
கூவலுடன்
கலா அவளை அணைக்க

"கொஞ்சம் சும்மா இருங்க கலா"
என்று அவளை விலக்கி..

"என்ன காரியம் பண்ணி இருக்கீங்க?"
என்று பாலாவைக் கேட்டாள்.

"ஏன் உனக்கு என்ன பிடிக்கல்லையா நந்தினி?"
பன்மைக்கு மாறின வார்த்தைகள்.

"அய்யோ..
ஏன் இப்பிடி பேசுறீங்க?
எனக்கு என்ன நடந்து எப்பிடி உங்க கிட்ட வந்தேன்.."

இடையிட்டவன்,

"மறக்க வேண்டிய சாக்கட அது.
அதையே எத்தன வருஷம் நெனச்சிட்டு இருக்கப் போற?
கொஞ்ச நாள் கழிச்சி உன்கிட்ட பேசி உன் முழு சம்மதத்தோட
கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் எனக்கு விருப்பம்
அதான்
கலா சந்தோஷப் படுவான்னு தெரிஞ்சும் அவக்கிட்ட கூட சொல்லாம
இருந்தேன்.
ஆனா இன்னைக்கு உன் அத்தான் என் பொறுமய சோதிக்கவே வந்தான் போல"

என்றவன்,
ஒரு நொடி யோசித்து
"ஒருவேள..
உனக்கு உண்மையாவே
என்ன பிடிக்கல்லயா நந்தினி? "
ஆழ்ந்து பார்த்துக் கேட்க,

"அப்பிடி இல்ல உங்கள பிடிச்சிருக்கு.
ஆனா நான் தான் உங்களுக்கு தகுதியே இல்ல"

"அட போங்கண்ணா.
நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?
அவனவன் நியூ ட்ரெண்ட் என்ற பெயர்ல தன் சொந்த பொண்டாட்டிய
அடுத்தவனுக்கு விட்டுக் கொடுக்குறான்.
உங்களுக்கு நடந்த கொடுமைய தடுக்க் கூட முடியாம மயக்கத்துல தான் இருந்தீங்க.
சோ அது தூக்கத்துல வந்த கனவு போல தான்
கடந்து வந்து சந்தோஷமா வாழுங்க"

சொன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்
நந்தினி.

"வா நந்தினி அம்மா கிட்ட சொல்லிட்டு கோயிலுக்கு போய்ட்டு வரலாம்"

"அண்ணா இந்த வீக் எண்டு
என் ஃப்ரண்ட்ஸுக்கும் உன் ஃப்ரண்ட்ஸுக்கும்
டின்னர் ஒன்னும் ரெடி பண்ணுவோமா?"

"ஓகே
பண்ணிடலாம்.."

சொன்னவன் நந்தினியுடன் பக்கத்திலிருந்த கோவிலுக்கு நடந்தே போகலாமென
அவளின் ஒற்றைக் கரம் பற்றியவனிடம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்து
நிம்மதியாக ஆரம்பித்தாள் பயணத்தை.
அவள் வாழ்க்கையும் இனிக்கும் இனிமேல்.

சுபம்.
 
Last edited:

Fa.Shafana

Moderator
For your comments

 
வஞ்சியின் அன்பன்.....
வாழ்க்கையில் சொந்தங்களால்
வாழ்க்கை இழந்து
வலியுடன் வாழ
வழியில்லாமல் கண்ணீருடன்
வெளியில் வர _கயவர்களால்
வஞ்சிக்கப்பட... காப்பாற்றி
வஞ்சியின் கண்ணீரைத் துடைத்து வசந்தமாய் வந்த
வஞ்சியின் அன்பன்💐💐💐💐
 

Fa.Shafana

Moderator
வஞ்சியின் அன்பன்.....
வாழ்க்கையில் சொந்தங்களால்
வாழ்க்கை இழந்து
வலியுடன் வாழ
வழியில்லாமல் கண்ணீருடன்
வெளியில் வர _கயவர்களால்
வஞ்சிக்கப்பட... காப்பாற்றி
வஞ்சியின் கண்ணீரைத் துடைத்து வசந்தமாய் வந்த
வஞ்சியின் அன்பன்💐💐💐💐
அருமை சகோதரி!
உங்களுக்கு என் அன்புகளும் நன்றிகளும் ❤️❤️❤️
 
Top