அழகியல்
-------------------------------
கடிகாரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணி என்று காட்டி நின்றது.
தன் அலைபேசியை எடுத்த திவ்யாவின் அசைவில் தூக்கம் கலைந்த அவள் கணவன் ரவி, "என்ன பண்ற?" என்றான்.
"இன்னைக்கு கவிதா அக்கா பர்த்டே அதான் விஷ் ஒன்னு அனுப்பலாம்னு.."
"ஆமா வருஷத்துல முன்னூறு நாள் உன் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு யாருக்காவது பர்த்டே இல்லைன்னா வெட்டிங்டே வந்துட்டே தானே இருக்கு?" என்று வழமை போல முனுமுனுத்துக் கொண்டே விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான்.
'ஹாப்பி பர்த்டே கவி அக்கா' என்ற சொற்களுடன் தான் ஏற்கனவே செய்து வைத்திருந்த வாழ்த்துச் செய்தியை இவள் அனுப்ப அடுத்த நொடி,
'தேங்க்ஸ் திவ்யா. ஃபர்ஸ்ட் விஷ் நீ தான். மாமாவுக்கும் முன்ன விஷ் பண்ணி இருக்க' என்று பதில் வந்தது.
சிரிக்கும் பொம்மை ஒன்றுடன் காலையில் பேசுவதாக பதில் அனுப்பியவள் அலைபேசியை வைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.
அன்றைய வேலைகள் எல்லாம் முடிந்து மாலை நேரத்தில் கவிதாவை அழைத்து இருந்தாள்.
"ஹாப்பி பர்த்டே அக்கா. எப்பிடி இருக்கீங்க?"
"தேங்க்ஸ் திவ்யா. ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? பசங்க மூனு பேரும் எங்க?"
"நாங்களும் நல்லா இருக்கோம். பசங்க வெளிய விளையாடிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிறைய வேலை அதான் இப்போ உங்களுக்கு கால் பண்ணேன்" என்றாள்.
"அதுக்கென்ன திவ்யா? அதான் நைட் மெசேஜ் பண்ணிட்டியே! ஆமா உனக்கு எங்க யாரோட பர்த்டேயும் மறக்காதா? எனக்கு யாராவது சொன்னா தான் ஞாபகம் வரும். இல்லைன்னா ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல பார்த்துத் தான் ஞாபகம் வரும். ஆனா உனக்கு அப்பிடி இல்ல போல? ஃபேமிலி க்ரூப்ல உன் விஷ் பார்த்து தான் எல்லாரும் எல்லாருக்கும் விஷ் பண்றாங்க" என்றாள் சிரித்துக் கொண்டே.
"சின்ன வயசுல இருந்தே
எல்லோருக்கும் விஷ் பண்ணி பழகிட்டேன்ல அக்கா அதான் ஞாபகம் இருக்கு. அந்த பழக்கத்த விடவும் முடில" என்று ஆரம்பித்து சற்று நேரம் உரையாடல் தொடர்ந்தது.
"சரி நான் ஒன்னு கேட்கணும் உண்மைய சொல்லுவியா?"
"என்னக்கா கேட்கப் போறீங்க? அதுவும் நான் எதுக்கு பொய் சொல்லணும்?" என்றாள் புரியாது.
"நீ எப்பிடி இருக்க? இந்த லைஃப் நிஜமா சந்தோஷமா தான் இருக்கா உனக்கு?"
தனது திருமணம் முடிந்து பத்து வருடங்களின் பின் இப்படி ஒரு கேள்வியை சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை திவ்யா அதுவும் கவிதாவிடம் இருந்து.
"ஆமாக்கா. எனக்கு என்ன? நான் நல்லா தான் இருக்கேன்" என்றவள் குரல் முன்பிருந்த உற்சாகத்தை இழந்திருந்தது. சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டாள்.
"ரொம்ப நாளா என் மனசுல இருந்த உறுத்தல் திவ்யா. இன்னைக்கு கேட்கணும்னு தோனிச்சி. அதுவும் உனக்கு மத்தவங்க மாதிரி இல்ல நான், ஆனாலும் நீ ஒரு நாளும் என்னைத் தள்ளி நிறுத்தினதே இல்ல. உன் மனசுல ஒன்னுமே வெச்சுக்காம தான் இருக்க. ஆனா நான்.."
என்று ஏதோ கூற வந்தவளைத் தடுத்து,
"பழையத எல்லாம் ஏன் இன்னும் நினைச்சிட்டு இருக்கீங்க க்கா. நடந்தது எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு. அதையே நினைச்சு மனசப் போட்டு குழப்பிட்டு இருக்காதீங்க. எனக்கு விதிச்சது தான் எனக்குன்னு நானே கடந்து வந்துட்டேன் நீங்க வேற" என்று அவளை சமாதானம் செய்து விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இருவரது மனங்களும் சொல்லி வைத்தால் போல பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றை அசை போட ஆரம்பித்தன.
"அக்கா.. கவி அக்கா"
"சொல்லு திவ்யா" என்றாள் தன் கையில் இருந்த கதைப் புத்தகத்தில் பார்வையை பதித்தபடி.
"உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்"
"என்ன?"
"அது வந்து.."
"என்னன்னு சொல்லு திவ்யா" என்றாள் இப்போதும் நிமிராமல்.
"நான்.. நான் ந.. நம்ம பிரபு மாமாவ வி.. விருப்புறேன்"
என்று திக்கித் திணறி சொல்லி முடிக்க,
"என்னது? உண்மையாவா?" என்று கேட்டுக் கொண்டே நிமிர்ந்து இவளை ஏறிட,
"ஆமாக்கா. நாளைக்கு பாட்டி வீட்டுக்குப் போய் ஒரு வாரம் தங்கி இருந்து தான் வருவேன். வந்ததும் மாமா கிட்ட சொல்லிடலாம்னு இருக்கேன்" என்றாள் வெகுளியாக.
"ஓ.. சரி.. சரி" என்று அசிரத்தையாகக் கூறிவிட்டு மீண்டும் புத்தகத்தில் கவனமானாள் கவிதா.
இரவு தூங்கச் சென்றவளிடம்,"நீ மட்டும் தானே மாமாவ விரும்புற? இன்னைக்கு வர மாமா அப்பிடி ஏதாவது உன் கிட்ட சொல்லி இருக்காங்களா?" என்று கேட்டவளிடம்,
"இல்லக்கா மாமா அப்பிடி ஒன்னும் சொன்னதே இல்ல. நான் தான்.." என்றாள்.
"ம்ம்.. சரி" என்றதோடு கவிதா இவள் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
தன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவருக்கு உதவியாக இருக்கவென அங்கே சென்ற திவ்யா பத்து நாட்கள் கழித்து வரும் போது அவள் கற்பனையிலும் கனவிலும் ஆசை ஆசையாய் காதலித்த பிரபுவுக்கு கவிதாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர் வீட்டினர்.
இடியென காதில் விழுந்த செய்தியை கிரகிக்கவே பல விநாடிகள் தேவைப்பட்டது இவளுக்கு.
'ஏன் இப்பிடி அவசரமா கல்யாணம் பேசி முடிச்சுட்டாங்க? எப்போ பேசி இருப்பாங்க? டெய்லி கால் பண்ற அம்மா ஏன் எதுவுமே சொல்லாம விட்டாங்க? அக்காவுக்கு நான் மாமாவ விரும்புறது தெரியும் தானே அப்போ ஏன் இதுக்கு ஒத்துக்கணும்?' என்று தனக்குள்ளே பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் தாள முடியாது எழுந்து சென்று கவிதாவின் எதிரில் நின்றாள்.
"அக்கா.. உ.. உங்களுக்கு நா..நான் மாமாவ விரும்புறது தெரியும்ல அப்போ ஏன் இதுக்கு ஒத்துக்கிட்டீங்க?" என்றாள்.
அவளைப் பார்த்து நகைத்து, "நீ விரும்புறது தெரிஞ்சதுனால தான் அப்பா கிட்ட எனக்கு மாமாவ கட்டி வைக்க சொல்லிக் கேட்டேன்" என்றாள்.
"என்ன?" என்றவள் அதிர்ச்சியில் கால்கள் துவள அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
ஏன் இப்படி? என்ற கேள்வி இவள் விழிகளில் தொக்கி நின்றது.
"நீ அன்னைக்கு மாமாவ விரும்புறத சொல்லவும் தான் உன்ன விட ஆறு மாசம் மூத்தவ நான், அப்போ எனக்குத் தானே உரிமை அதிகம் இருக்குன்னு யோசிச்சேன்.
அதோட நீ கல்யாணம் பண்ணி புருஷன் வீடுன்னு தெரியாத இடத்துக்கு போனா கூட சமத்தா அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி இருந்துக்குவ. என்னால அப்பிடி எல்லாம் இருக்க முடியாது ரொம்ப கஷ்டம். பொறந்து வளர்ந்த இந்த வீட்ட விட்டு கல்யாணம் பண்ணி போறத நினைச்சேன் ரொம்ப பயமா வேற இருந்துச்சு. அதான் அன்னைக்கு மாமாவுக்கும் உன் மேல எதும் நினைப்பு இருக்கான்னு கேட்டேன் நீ இல்லைன்னு சொன்னல்ல? நீ போனதும் ரெண்டு நாள் இதையே தான் யோசிச்சுட்டு இருந்தேன்.
அப்புறம் எங்க அப்பா கிட்ட போய் மாமாவையே எனக்கு கட்டி வைப்பீங்களாப்பா? எனக்கு அவர விட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். எங்கப்பாவும் அன்னைக்கே வீட்ல பேசிட்டாங்க" என்று படபடவென அவள் மாரியென பொழிந்தி முடிய இவளுக்கோ மாரி வெள்ளத்தில் மூழ்கி மூச்சடைக்கும் உணர்வு.
திவ்யாவின் தந்தைக்கு கூடப் பிறந்த அண்ணன் ஒருவர் அக்கா ஒருவர். எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருந்து விவசாயத்தை குடும்பத் தொழிலாக செய்து வந்தனர்.
ஆளுக்கு மூன்று, நான்கு என பிள்ளைகள் இருக்க அதில் ஆண் பிள்ளைகள் வளர்ந்து விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருந்தனர்.
என்றும் இல்லாதவாறு புதிதாக அத்தை மகன் பிரபுவின் மீது திவ்யாவிற்கு ஒரு ஈர்ப்பு வந்து இருந்தது. நாளடைவில் அது காதலாகி விட தன் மனதை அவனிடம் வெளிப்படுத்த பெரும் தயக்கம் கொண்டாள். தன்னை விட வயதில் மூத்த கவிதா இருக்கும் போது வீட்டில் யாரிடமும் கூறவும் முடியாது என்று தயங்கியவள் ஏதோ தைரியத்தில் தான் அன்று கவிதாவிடம் கூறியதும். ஆனா அதுவே தன் காதலுக்கு எதிராக வந்து நிற்கும் என்று அறியாமல் போனாள்.
சற்று நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டு கீழே இறங்கியவள் பின்புறத் தோட்டத்தில் ஏதோ செய்து கொண்டிருந்த தன் தாயாரிடம் போய் நின்றாள்.
"அம்மா.."
"ம்ம்ம்" தன் வேலையில் கவனமாக இருந்தவரை மீண்டும் அழைத்தாள்.
"சொல்லு திவ்யா"
"கவி அக்காவுக்கும் பிரபு மாமாவுக்கும் கல்.. கல்யாணம்.." மீதி வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள, தொண்டை அடைத்து கண்ணீர் சுரந்தது.
"ஆமாண்டா திவ்யா, உன்கிட்ட ஒழுங்கா சொல்லவே இல்லையே நான்" என்று தொடர்ந்தார்.
"வீட்ல எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? உங்க மாமா கேட்ட உடனே உங்க பெரியப்பா சரின்னதும் மத்தவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அன்னைக்கு ராத்திரியே பிரபு கிட்ட கேட்டுட்டாங்க அவனும், கூடவே வளர்ந்தவ மேல இதுவரை அப்படி ஒரு நெனப்பு என் மனசுல இருக்கவே இல்ல, ஆனா இப்போ நீங்க அவள கல்யாணம் பண்ண கேட்குறதுனால நானும் சம்மதிக்கிறேன்னு சொல்லிட்டான்" என்றார் உற்சாகக் குரலில்.
"ஆனா.. ஆனா எனக்கு,, என் மனசுல அப்படி ஒரு நெனப்பு இருந்துச்சும்மா" என்றாள் தட்டுத்தடுமாறி கரை உடைந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
"ஏய்.. என்னடி சொல்ற?" என்ற தன் தாயிடம் நடந்தவற்றைக் கூறி சற்று நேரத்திற்கு முன் கவிதா கூறியதையும் கூற அங்கே இருந்த மரத்தடியில் நலிந்து அமர்ந்து விட்டார்.
"ஆனா இப்போ ஒன்னும் பண்ண முடியாதே. இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம்னு எல்லாம் பேசி முடிச்சுட்டாங்க. இப்போ போய் இதெல்லாம் சொன்னா குடும்பத்துல பெரிய பிரச்சினை தான் வரும். எல்லாரோட நிம்மதியும் சந்தோஷமும் கெட்டுடும். வேணாம் திவ்யாம்மா உன் மனசுல இருந்து அந்த நெனப்ப தூக்கி தூரப் போடு" என்றவர் பார்வை தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டிருந்தது.
ஏளனப்புன்னகை ஒன்று முகத்தில் தவழ அவரருகில் அமர்ந்து அவரது கையைப் பற்றிக் கொண்டு "அம்மா எனக்குத் தெரியும் நீங்க இப்பிடித் தான் சொல்லுவீங்கன்னு, ஆனாலும் நான் ஏன் சொன்னேன்னு தெரியுமா?" என்று நிறுத்தியவள் பக்கம் திரும்பி புரியாத பார்வை பார்த்து வைக்க,
"நான் இப்போ சொல்லாம விட்டுட்டு, அப்புறமா எப்பவாச்சும் இது தெரிய வந்ததுன்னா, ஒரு வார்த்த சொல்லி இருந்தா பெரியவங்க கிட்ட பேசிப் பார்த்து இருக்கலாமேன்னு நீங்க சொல்லிடக் கூடாது இல்லையா அதனால தான் சொன்னேன்மா. சத்தியமா இனிமேல் மாமாவ அந்த நெனப்போட பார்க்கவே மாட்டேன். உங்களை கடந்து இந்த விஷயம் அப்பாவுக்குக் கூடத் தெரிய வேணாம்மா. எனக்கு அவர் கூட வாழ கொடுத்து வைக்கல்ல, கடவுள் எனக்கானவர கொண்டு வந்து சேர்ப்பார்" என்று
கூறி விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.
அக்காள் மீது வைத்த நம்பிக்கை, துரோகத்தால் சிதறி இருக்க திவ்யாவின் மனதில் தானாக ஒரு முதிர்ச்சி வந்து அதுவே அவள் வார்த்தைகளில் பிரதிபலித்தது.
அதன் பிறகு யாரின் கவனத்தையும் கவராமல் பிரபுவிடம் இருந்து சற்று விலகியே இருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து பிரபு, கவிதா திருமண நாளும் வந்தது. திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் ஒருவர் பிரபுவின் தம்பி பத்ரனுக்கு திவ்யாவைப் பேசலாமே என்று யோசனை கூறி விட்டுச் செல்ல அதை சற்றும் எதிர்பாராதவள் தன் அன்னையிடம் ஒரே பிடியில் மறுத்து விட்டாள்.
"ஏன்டா அவனக் கட்டிக்கிட்டு நீயும் இங்கயே இருக்கலாம்ல?" என்று கேட்டவரிடம்,
"இல்லம்மா எனக்கு இங்க வேணாம் வெளிய எங்கேயாவது பாருங்க. பிரபு மாமாவக் கட்டிக்கத் தான் ஆசப்பட்டேனே தவிர இங்க இருக்கணும்னு எல்லாம் நெனைக்கல்ல" என்றிருந்தாள்.
'இப்பவே எனக்கு மூச்சு முட்டுது, ஆசப்பட்டவரோட தம்பிய கட்டிக்கிட்டு இதே வீட்டுல இருக்குறது கொடும. கவி அக்காவே எப்பவாச்சும் அத சொல்லிட்டா அத்தன பேரோட வாழ்க்கையும் தினமும் நரகம் தான்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
திருமணம் முடிந்த சில நாட்களில் திவ்யாவின் விலகலைக் கண்டு கொண்ட கவிதாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
"நீ ஏன் முன்ன மாதிரி மாமா கூட பேசமாட்டேங்குற? நான் மாமாக்கிட்ட எதுவும் சொல்லவே இல்ல, நீ எப்பவும் போல பேசு திவ்யா" என்றாள்.
'ரொம்பப் பெரிய மனசு தான்' என்று மனதில் நினைத்து சன்னமாகப் புன்னகைத்தவள் பதிலே கூறாது இருந்து கொண்டாள்.
ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருக்கவே இல்லை ஆனால் திருமணம் எனும் பந்தம்
பிரபு கவிதா இருவருக்கிடையே காதலைத் துளிர்க்க வைத்து இருந்தது, கூடவே அவர்களது மகவையும்.
சில மாதங்களுக்குப் பின் திவ்யாவிற்கு திருமணத்திற்கு வரன் பார்க்க, பத்ரனை இவள் மறுத்த ஒரே காரணத்திற்காக இவளை ஏறிட்டும் பார்க்காமல் முறிக்கிக் கொண்டு இருந்தான்.
ஏற்கனவே ரணப்பட்டவளை மீண்டும் வலிக்கச் செய்வது
பெற்றவளுக்கு தாளாமல் பத்ரனிடம் உண்மை எல்லாம் கூறிவிட்டார்.
"அவ உன்ன பிடிக்கல்லைன்னு சொல்லவே இல்லையே, அவ விரும்பினவன விட்டுக் கொடுத்துட்டு அந்த வலியோட நிற்குறாப்பா. அவளுக்கு இங்க வேணாம் வெளிய ஒரு வரன் பார்க்கலாம்"
என்று கூற
அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவன்
சற்றே தொலைவில் இருந்த ஊரில் வரன் தேடி ரவியை திவ்யாவிற்கு மாப்பிள்ளையாக்கி விட்டான். பெரியவர்களுக்கும் அந்த வரன் திருப்தியாக இருக்கவே பேசி முடித்தனர்.
அவசர அவசரமாக இரண்டு மாதங்களில் திருமணம் நடந்தது.
ஓர் உறவின் அழகான ஆரம்பம்!
தனக்கான சொந்தம் இவனே என்று புரிந்து கொண்டவளுக்கு அந்த வாழ்வை ஏற்றுக் கொள்வதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. கடந்து வந்த நாட்களில் வலி கொடுத்த முதிர்ச்சியும் பக்குவமும் அவளை வாழ வைத்தது.
அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்குச் சென்று வருபவள் அத்தனை பேரையும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டாள். தன் ஒருதலைக் காதல் கை விட்டுப் போனது மனதை வருத்தவில்லை ஆனால் துரோகம் அந்நாட்களில் வலிக்க வைத்தது உண்மை தானே!
ஒற்றைப் பிள்ளையாக பிறந்து வளர்ந்தவன் ரவி. அவனது மூன்று பிள்ளைச் செல்வங்களைச் சுமந்த பெட்டகம் ஆனாள்.
குலம் தழைக்க வைத்தவள் என்று அத்தையின் அன்பு மருமகள் ஆனாள்.
ஊன் உருக உயிர் உருகும் காதல் இல்லை. மஞ்சள் கயிற்றின் மாயவித்தை திவ்யா ரவி தம்பதியிடம் தன் வேலையை செய்யவில்லை. எனினும் இணைத்து வைத்த திருமண பந்தத்தை மனதார ஏற்றுக் கொண்டு இயல்பாக வாழ்ந்து வந்தனர்.
எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாத நிம்மதியான வாழ்க்கை
பத்து வருடங்களாக தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருந்தது.
கணவனும் பிள்ளைகளும் வயதான மாமியாரும் அவளது பொறுப்பு என்றிருக்க அவர்களுக்குள்ளே தன் உலகத்தை உருவாக்கிக் கொண்டாள்.
இத்தனை வருடங்கள் கழித்து இன்று கவிதா கேட்ட கேள்விக்குப் பதிலை ஒற்றை வரியில் முடித்து விட்டவள் பத்து வருடங்கள் அவள் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையை மனதோடு அசை போட்டுக் கொண்டாள்.
காதல் அவளுக்கு கண்ணெதிரே தோன்றிய தொடுவானம் என்றாக, கை சேர்ந்திருந்ததுவோ மணம் வீசும் நந்தவனம் போன்ற ஓர் அழகியல்!
சுபம்!