எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பா. ஷபானாவின் சிறுகதைகள் - 06

Fa.Shafana

Moderator
உன்னவன் நானடி!
—--------------------------------

மாலை மங்கி இருள் கவிழ ஆரம்பித்த நேரம். தங்களது அறையின் வெளிப்புறக் கதவைத் திறந்து கொண்டு வந்தவள் உப்பரிகையில் (பால்கனி) நின்று மணம் வீசும் மலர்ச் செடிகள் அடர்ந்த அந்த முற்றத்தில் பார்வை பதித்து நின்றாள்.

காலையில் தான் திருமணம் நடந்து அதையொட்டிய நிகழ்வுகளும் முடிந்து இருக்க, அடுத்த சில மணிநேரங்களில் தன்னவள் அகலிகாவை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருந்தான் வருனேஷ்.

அவனின் தாத்தாவின் பூர்வீக வீடு தான் இது.
மரங்கள் சூழ்ந்த குளு குளுவென இதமான வீடு. நகரத்து வாழ்க்கைக்கு வெகுவாக ஈர்க்கப்பட்ட அவனது குடும்பத்தினர் ஒவ்வொருவராக அங்கே குடியேற வெளியாட்களை வைத்து இந்தப் பெரிய வீட்டை பராமரிப்பு செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் யாராவது வந்து செல்ல வருனேஷ் மட்டும் அடிக்கடி வந்து செல்வான்.

இன்றும் அதே போல இவளை அழைத்துக் கொண்டு வந்தவனை இப்போது வரை முறைத்துக் கொண்டு தான் இருந்தாள் இவள்.

அதெல்லாம் தனக்கு ஒரு பொருட்டே அல்ல எனும் விதமாக மென்னகையுடனே அவளை எதிர்கொண்டான் அவன்.

'எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும் இவங்க? அதான் அந்த அக்கா இவங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தாங்கல்ல அவங்கள பண்ணிக்க வேண்டியது தானே!' என்று ஆயிரமாயிரம் தடவை எண்ணம் தோன்றியது.

எதையும் ஆழ்ந்து யோசிக்கத் தோன்றாமல் அப்படியே நிற்க அவள் நெற்றி முடியைக் கலைத்து முகத்தில் படர விட்டுச் சென்றது மென் தென்றல். அதை எதையும் உணராதவளின் பின்னால் வந்து அவள் இடையில் தன் கை வைத்து தன்னோட அணைத்துக் கொண்டவன் அவள் முகத்தில் விளையாடிய முடிக் கற்றைகளை காதிற்குப் பின்னால் செறுகி விட சிலிர்த்துக் கொண்டு திரும்பியவள்,

"என்னை விடுங்க" என்று அவனைத் தள்ளி அவன் அணைப்பில் இருந்து விடுபட முயல, அவனோ இன்னும் கொஞ்சம் தன் அணைப்பை இறுக்கி இருந்தான்.

"ச்சு.. விடுங்கன்னு சொல்றேன்ல. காது கேட்கல்லையா?" என்று அவள் முரண்ட இன்னுமே அணைப்பு இறுக அவன் மென்னகை விரிந்து புன்னகையானது. அதில் மேலும் சினம் கொண்டு,

"விடுங்க.. விடுங்க.." என்றவள், "விடு.. விடு.. விடுடா" என்றிருந்தாள்.

அவளது ஒருமை அழைப்பில் குனிந்து ரசனையாக அவளைப் பார்த்தவன், "அவ்வளவு ஈசியா விடுறதுக்கா உன்ன கல்யாணம் பண்ணி இருக்கேன்" என‌க் கேட்க,

"அதான் கேட்குறேன். எதுக்கு இந்தக் கல்யாணம்?" என்றவள் அவனை விட்டு விலக முயன்று கொண்டே தான் இருந்தாள்.

"எதுவா இருந்தாலும் என் பக்கத்துல இருந்து பேசு, சண்டை போடணும்னாலும் இப்படியே என் கைக்குள்ள இருந்தே சண்டை போடு" என்றவன்,
"உன்ன புடிச்சி இருந்தது, உன்ன ரொம்ப விரும்பினேன் அதான் கல்யாணம் பண்ணேன்" என்றுவிட்டு "கொஞ்சம் நேரம் சும்மா இருக்கமாட்டியா நீ ஏன் இப்பிடி நெளியுற?" என்றிருந்தான் எதுவுமே அறியாதவன் போல.

அவன் கூற்றில் கடுப்பானவள், "இப்பிடிப் பண்ணினா நெளியாம.." என்றவள் கண்களால் தன் இடை வளைத்திருக்கும் அவன் கைகளைப் பார்க்க அவன் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு நினைவில் வந்தது பிடித்ததால் தான் திருமணம் என்று அவன் கூறியது.

"பொய்.. என்னை விரும்பி எல்லாம் கல்யாணம் பண்ணவே இல்லை நீங்க. வேற ஏதோ இருக்கு" என்றாள்.

மீண்டும் ஒரு புன்னகை அவனிடத்தில். அவளுக்கு ஏன் இந்த எண்ணத் தோற்றம் என்று அறியாதவனா அவன்? ஆனாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை விளக்கம் கொடுக்க விளையவில்லை வருனேஷ்.

அவனின் அமைதியிலும் அந்த அசத்தல் புன்னகையிலும் வெகுண்டு திமிறிக் கொண்டிருந்தவளைப் பார்த்து, "உனக்கு பிடிக்கல்லையா? இந்த வருனேஷ், இந்தக் கல்யாணம், இந்த அணைப்பு, இந்த நெருக்கம் இதுல ஏதாவது பிடிக்கல்லைன்னா சொல்லு விடுறேன்" என்றான் அவளை ஆழ்ந்து பார்த்து.

பிடிக்காமலா? அவனை நிறைய நிறையப் பிடிக்குமே அவளுக்கு! அவனை மட்டும் தானே பிடிக்கும்!

பதிலறியா சிறுபிள்ளையாக ஏறிட்டவளின் கீழுதட்டைப் பிடித்து இழுத்து,
"சொல்லு, இத்தன பேசின இந்த வாயால இப்போ சொல்லு பிடிக்கல்ல விடுடான்னு சொல்லு விடுறேன்" என்றவன் கூற்றில் மூச்சு முட்டியது அகலிகாவிற்கு.

சில நொடி அமைதியின் பின் சட்டென்று "முடியாது, என்னால சொல்ல முடியாது" என்று படபடத்தவள், "நீங்க தானே விருப்பம் இல்லாமலே என்னை கல்யாணம் பண்ணி இருக்கீங்க" என்றாள் நலிந்த குரலில்.

"லூசு.. யாரு சொன்னா உன்ன விருப்பம் இல்லாம கட்டிக்கிட்டேன்னு? ஆசை ஆசையா கட்டிக்கிட்டேன்டி உன்ன. இப்போ ஹனிமூனுக்கு கட்டம் கட்டி தூக்கிட்டு வந்தா நீ வந்ததுல இருந்து முறைச்சிட்டே இருக்க" என்றான்.

"இத நான் நம்பணுமா என்ன?"

"நான் எதுக்கு பொய் சொல்லணும்?"

"அது.. அது வந்து.." என்று தடுமாறியவளைத் தூக்கி அங்கே இருந்த சுவற்றில் அமர வைத்து, அவள் கன்னம் தாங்கி நெற்றி முட்டி நின்று

"நீ கண்டது, கேட்டது எதுவும் உண்மை இல்ல. அகல்மா" என்றான் அவளவன்.
அவன் குரலே என்னை நம்பு எனும் விதத்தில் இருக்க புரியாத பார்வை இவளிடம்.

அவன் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது இவள் முதலாம் ஆண்டில் சேர்ந்து இருந்தாள்.

அடுத்து வந்த ஒருநாள் வருனேஷின் வகுப்புத் தோழி கௌரி அவனிடம் சிவப்பு ரோஜா
ஒன்றை நீட்டி "ஐ லவ் யூ" என்றது அவனுக்கு மட்டுமல்ல தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அகலிகாவுக்குமே அதிர்ச்சி தான்.

இவளது பத்து வயதில் இருந்தே ஒரே தெருவில் வசித்து வருபவர்கள் வருனேஷ் வீட்டினர். அவனது பெற்றோருடனும் பாட்டியுடனும் நல்ல பழக்கம் இருந்த போதும் அவனுடன் நெருங்கிய பழக்கமோ நட்போ இல்லை என்றிருக்க புதிதாக ஒரு நேச விதை இவளது மனதில் விழுந்து இருந்தது. அதை இவள் வெளிப்படுத்தும் முன்னர் தன்னவனைக் கொண்டாட இன்னொருவள் என்ற எண்ணம் சட்டென்று எழுந்து இவளை நிலை கொள்ளாது கலங்க வைத்தது அன்று.

அன்றைய நாள் நினைவில் இந்த நொடியும்
மனம் சற்று அதிர அது அவளில் பிரதிபலித்தது.

"என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்றான் மீண்டும்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவளிடம், "நீ ஏன் இப்படி இருக்க, என்னெல்லாம் நினைச்சிட்டு இருக்கன்னு எனக்குத் தெரியும்" என்றான்.

"என்ன நினைச்சேன்?" என்றாள் இவளும் விடாமல்.

"நானும் அவளும் லவ் பண்ணினோம்னு நீ நினைச்சிட்டு இருக்க" என்றான்.

"ஆமா தானே?"

"இல்லை தானே" என்றான் அவளைப் போலவே.

"பொய்.. பொய்.. பொய் சொல்லாதீங்க. காலேஜ்ல அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட சொல்லி இருக்காங்க"

"என்னன்னு?"

"அவங்க உங்கள.." என்றவளுக்கு அடுத்த வார்த்தை வெளி வர மறுத்தது.

"அவளோட அப்பாவும் எங்க அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ். சின்ன வயசுல இருந்தே பழக்கம். அவளுக்கு என் மேல ஒரு க்ரஷ் ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. நீ பார்த்த அன்னைக்கு எங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பெட் கட்டி தோத்துப் போய்ட்டாளாம். அவங்க, அவள யாருக்காவது ப்ரபோஸ் பண்ண சொல்லி இருக்காங்க. அவளும் கிடைச்ச சான்ஸ மிஸ் பண்ணாம நேரா என் கிட்ட வந்து சொல்லிட்டா" என்றவனை நம்பாத பார்வை பார்த்து வைத்தவள்,

"ஆனா.." என்று ஆரம்பிக்க,

"இருடி.. முழுசா சொல்ல விடு" என்று தொடர்ந்தான்.

"அவ வந்து ப்ரபோஸ் பண்ணவும் எனக்குமே ஷாக் தான் அப்புறம் என் மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைன்னு சொல்லிட்டேன் அவளும் அத ஈசியா எடுத்துட்டா. அப்புறம் லவ்வுன்னு எல்லாம் அவ பேசினதே இல்லை"

"நீங்க வர்க் பண்ற கம்பெனில தானே அவங்களும் வர்க் பண்ணிட்டு இருந்தாங்க?" என்று கேட்டாள் பட்டென்று.

புருவ மத்தியில் முடிச்சு விழும் அளவு கண்களை சுருக்கி அவள் கேட்ட விதத்தில் மென்னகை ஒன்று மீண்டும் அன் இதழ்களில்.

"யெஸ்.. இன்டர்வியூல ஒரே கம்பெனிக்கு செலக்ட் ஆகி இருந்தோம் அங்க கொஞ்சம் நாள் வர்க் பண்ணிட்டு அவ வேலைய விட்டுப் போய்ட்டா. போகும் போது தான் என்கிட்ட உன்னப் பத்தி சொன்னா" என்றவனைப் பார்த்து,

"என்னைப் பத்தி என்ன சொன்னாங்க?" என்று கேட்டவள் குரலில் ஓர் ஆச்சர்யக்குறி!

"நீ என்னை விரும்புறது தெரிஞ்சி வேணும்னே காலேஜ்லயும் எங்க வீட்டுலயும் வெச்சி உன்ன சீண்டி விட்டாளாம்" என்று புன்னகைத்தவனைப் பிடித்துத் தள்ளி விட்டு இருந்தாள் அகலிகா.

திடீரென அவள் தள்ளி விடுவாள் என நினைக்காதவன் முதலில் தடுமாறி பின் தன் கால்களை ஊன்றி நின்று கொண்டான்.

"எதுக்குடி இப்பிடி பிடிச்சு தள்ளி விட்ட?" என்று பாவம் போல் கேட்டவனை முறைத்துக் கொண்டே,

"தள்ளி விடாம அள்ளிக் கொஞ்சவா செய்வாங்க" என்று இவள் முனுமுனுத்தது சரியாக வந்து அவனது காதில் விழுந்து விட்டது.

"புருஷன் தானே கொஞ்சினா குறைஞ்சா போய்டுவ?" என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தான்.

"எனக்கும் உன்ன ரொம்பப் பிடிக்கும். ஆனா நாம க்ளோஸா பழகினதே இல்லைல்ல. அது மட்டும் இல்லாம படிக்கிறவ மனச லவ்வுன்னு சொல்லி குழப்பி விடவும் எனக்கு விருப்பம் இல்லை. அதான் உன் படிப்பு முடிஞ்சதும் எங்க வீட்டுல சொல்லி உங்க வீட்டுல பேசலாம்னு இருந்தேன்.
ஆனா இடைல அவ இப்பிடி ரகள பண்ணி உன்னையும் சீண்டி விட்டது எனக்கு சத்தியமா தெரியாதுடி"

என்றவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் எதுவும் பேசாமல். இன்னும் விளக்கம் கேட்டு நிற்பது போல் ஒரு பாவணை.

"எங்க வீட்டுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் வந்தப்போ நீயும் அங்க இருந்த. அன்னைக்கு தான் அவங்களுக்கு நீ, என்னை விரும்புறது தெரிஞ்சிருக்கு, அவ ப்ரபோஸ் பண்ணத தூரத்துல நின்னு நீ பார்த்ததும் தெரியுமாம் அவங்களுக்கு, அதான் உன்ன வேணும்னே சீண்டி இருக்காங்க" என்றவன், "உனக்கு என் மேல பிடித்தம் இருக்குன்னு எனக்கும் அன்னைக்கு தான் தெரியும்" என்றான் ரகசியம் போல.

அதிர்ச்சியில் விரிந்த அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே "யெஸ்.. அன்னைக்கு நான் ஃபோன் பேசிட்டு இருக்கும் போது நீ என்னை திருட்டுத்தனமா பார்த்துட்டே எங்க வீட்டுக்குள்ள போனத நான் கவனிச்சேன். அந்த பார்வை இருக்கே.. ப்பா என்ன பார்வைடி அது? அப்போ இருந்து உன்ன கவனிக்க ஆரம்பிச்சேன். உன் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சதும் அவ்ளோ ஹாப்பி. ஆனா உன் படிப்பு முடியணுமே அதான் பொறுமையா இருந்தேன்.

கௌரி வேலைய விட்டு போகும் போது தான் உன்ன சீண்டி விட அவ பண்ணினதெல்லாம் சொன்னா. கேன்டீன், லைப்ரரிலன்னு நீ இருக்குறப்போ எல்லாம் என் பெயர் அடிபட அவ ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டே இருப்பாளாம். நீயும் கடுப்பாகிடுவியாம். ஆனா எதுவுமே பேசமாட்டியாமே?" என்றவனை முறைத்துப் பார்த்தாள் அகலிகா.

"எதுக்கு இப்போ முறைக்குற?" என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்ட அவன் கைகளைத் தட்டி விட்டாள்.

"நீயும் என்னை விரும்புறன்னு
தைரியமா பொண்ணு கேட்டு வந்தா, நீ என்னடான்னா உங்க வீட்டில கேட்டதுக்கு வேணாம்னு சொல்லி இருக்க. அவங்களே உன்ன கன்வின்ஸ் பண்ணி சம்மதம் சொல்ல வைக்குற மாதிரி அவ்வளவு பிடிவாதமா இருந்திருக்க. கடைசியா உங்க அப்பா உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொல்லி கல்யாணப் பேச்ச நிறுத்திடலாம்னு சொல்லவும் தான் சம்மதிச்சு இருக்க. அத்தனை படுத்தி எடுத்த உன்னை என்ன பண்ணலாம் சொல்லு" என்றான்.

"அதான் உங்களுக்கு ஒரு லவ் இருந்ததே அத விட்டுட்டு ஏன் இந்த கல்யாணம்னு தோனிச்சி. இப்போ சொல்ற நீங்க அப்போ ஒன்னுமே சொல்லவே இல்லையே. எங்க வீட்ல நான் வேணாம்னு சொன்னதும் அவங்க மறுத்து இருந்தா?"

"உண்மைய சொல்லி இருந்தா உன்ன இப்பிடி சீண்டி விளையாட முடியுமா? நான் வேணும்னே தான் சொல்லாம இருந்தேன். உங்க அண்ணா கிட்ட நடந்தது எல்லாம் சொல்லித் தான் மறுபடியும் உன் கிட்ட பேசச் சொன்னேன். நீ கடைசி வரை சம்மதம் சொல்லாம இருந்தா நானே வந்து உன்கிட்ட பேசி உண்மை எல்லாம் சொல்லிடலாம்னு இருந்தேன் ஆனா அதுக்கு வேலையே இல்லாம நீ ஓகே சொல்லிட்ட நானும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றவனை மறுபடியும் தள்ளி விட்டுவிட்டு குதித்து கீழே இறங்கிக் கொண்டாள்.

இறங்கிய அடுத்த நொடி அவனது கையணைப்பில் தான் இருந்தாள் அவள்.

"போனா போகுதுன்னு எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்க தானே நீ?" என்றான் வம்பு இழுக்கவென்றே.

"ஆமா லவ்வு புட்டுக்கிச்சி போல அதான் நம்மள தேடி வந்து இருக்காங்கன்னு பாவமேன்னு வாழ்க்கை கொடுத்தேன்" என்றாள் இவளும் விடாமல்.

"பாவமேன்னு வாழ்க்கை கொடுத்துட்டு இப்படியா முறைச்சிட்டு இருப்பாங்க? மடி சாய்த்து தலை கோதி விடணும்" என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவை ஏகத்துக்கும் முறைத்தவள்

"மண்டைல நாலு குட்டு வேணா கொடுக்குறேன்" என்றிருந்தாள்.

"வாய்.. வாய்.. இந்த வாய" என்று கூறிக் கொண்டு தன் அணைப்பில் இருந்தவள் அருகில் செல்ல அவள் அவனைப் பிடித்துத் தள்ளி விடவும் அவனது அலைபேசி ஒலி எழுப்பவும் சரியாக இருந்தது.

எடுத்துப் பேசியவன்,

"டின்னர் ரெடியா இருக்காம். வா சாப்டலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு கீழ் தளத்திற்குச் சென்றான்.

அங்கே அந்த வீட்டைப் பராமரிக்க ஒரு தம்பதி இருக்க அந்தப் பெண்மணி தான் இங்கே இவர்கள் யாராவது வரும் பொழுது சமையலும் செய்து கொடுப்பார்.

அந்த வீட்டின் பின்புறம் இருந்த சிறிய தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வைத்து சமைத்த அருமையான உணவு. ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய உணவை தட்டில் வைத்துக் கொரித்துக் கொண்டு இருந்தாள் அகலிகா.

சிந்தனை இங்கே இருந்தால் தானே உணவு ருசிக்கும்!

இவள் கல்லூரிப் படிப்பு முடிந்த அடுத்த மாதமே வருனேஷ் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்திருக்க அவள் சம்மதம் வேண்டி நின்ற பெற்றோரிடம் எடுத்த எடுப்பிலேயே முடியாது என்று விட்டாள்.

அவர்களும் நல்ல இடம், நல்ல பையன் எ‌ன்று எத்தனை எடுத்துக் கூறியும் சற்றும் இறங்கி வந்தாள் இல்லை அகலிகா.

பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறி அவர்கள் மறுத்து விட, இவளது அண்ணனை நேரில் சந்தித்து நடந்த அனைத்தையும் கூறி இருந்தான் வருனேஷ்.

பெற்றவர்களிடம் அனைத்தையும் ஒப்பித்தவன், "இந்த கல்யாணப் பேச்ச இத்தோட முடிச்சுடலாம்னு, வேற இடம் பார்க்கலாம்னு சொல்லுவோம் ப்பா. அதுக்கு என்ன சொல்றான்னு பார்க்கலாம்" என்றவன் கூற்றில் தகப்பன்
அதையே செயல்படுத்த

"எனக்கு ஒன் வீக் டைம் கொடுங்கப்பா யோசிக்கணும்" என்றவள் இரண்டே நாட்களில் தன் சம்மதத்தைக் கூறி இருக்க அடுத்த இரண்டே மாதங்களில் திருமணம் என முடிவானது.

தனது அவன் மீதான விருப்பத்தை அறிந்து கொண்டு தான் வேண்டும் என்றே திருமணத்தை நிறுத்தலாம் என்று தன் வீட்டினர் கூறி இருப்பது புரிந்தது. அவர்கள் அப்படிக் கூறியது தானே தன் வறட்டுப் பிடிவாதத்தை கை விட்டு தன் நேசத்துக்குரியவன் கை சேரக் கிடைக்கும் வாய்ப்பை பற்றிக் கொள்ள வைத்தது என்ற எண்ணமும் வந்தது.

'அவன் லவ் பண்ணினவள விட்டுட்டு உன்னக் கல்யாணம் பண்ணக் கேட்டு வந்து இருக்காங்க. அவனோட கடந்த காலத்த நினைச்சு உன் எதிர்காலத்த வீணாக்கிடாத. நீ விரும்பினவன் கூட வாழ வாய்ப்புக் கிடைச்சிருக்கு விட்டுடாத' என்று மனம் அடித்துக் கூற சம்மதம் கூறியவளுக்கு அவனது கௌரியுடனான காதல் என்னவானது ஏன் தன்னை திருமணம் செய்து கொள்ள விளைகிறான் என்ற கேள்விகள் மனதில் எழுந்து கொண்டே தான் இருந்தன.

ஏதோதோ எண்ணங்கள் எங்கெல்லாமோ சென்று வர நேரம் சென்றதே தவிர அவள் உணவைக் கொரித்து முடிக்கவில்லை.

"ஒழுங்கா சாப்பிடு இல்லைன்னா சொல்லு நானே ஊட்டி விடுறேன்" என்ற கணவனின் குரலில் திடுக்கிட்டு விழித்தவள் பரபரவென சாப்பிட ஆரம்பித்தாள்.

இரவும் அதை அழகாக்கிய நிலவும் துணை வர தங்கள் அறையில் தன்னவளுடன் பிணைந்திருந்தான் வருனேஷ்.

காலையில் இருந்து தன்னை முறைத்துக் கொண்டு இருந்தவளை சீண்டிச் சீண்டி சினம் கொள்ள வைத்தவன் இந்த ஏகாந்த வேளையில் உடமையானவளை உரிமையுடன் தீண்டித் தீண்டி தவிக்க வைத்தான். நாணம் கொண்ட பெண்ணவளோ அவனுக்குள்ளே புதைந்து கொண்டாள்.

முத்தத்தால் அவளை ஆராதித்து மொத்தமாய் அவளிள் வீழ்ந்தான். காதலில் கலப்பதும் மோகத்தில் திளைப்பதும் அவளிடம் என்றிருக்க மிச்சம் மீதி இருந்த தன் உணர்வுகள் அனைத்தையும் அவளிடமே உணர்த்தி விட விளைந்தான்.

"என் முத்தமும் மொத்தமும் உனக்கே என்றான உன்னவன் நானடி!"

அவளது கழுத்தடியில் முத்தம் வைத்து காதுக்குள் கவிதை பேச சிலிர்த்தது பெண்ணவள் மேனி!

அடுத்த இரண்டு நாட்கள் அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு மூன்றாவது நாள் இரு வீட்டாரும் குல தெய்வ வழிபாடு செய்ய இங்கே வந்து விட்டனர்.

கோயில் பூஜை எல்லாம் முடிந்து அனைவரும் அங்கங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அருகில் இருந்த கடைக்கு அகலிகாவை அழைத்துச் சென்று பனிக்கூழ் (ஐஸ் கிரீம்) வாங்கி வந்தான் வருனேஷ்.

அனைவருக்கும் கொடுத்து முடிய அகலிகா கையில் எதுவும் இல்லை என்று கண்ட அவனது பாட்டி இரண்டைக் குறைத்து வாங்கி விட்டார்கள் என்று நினைத்து

"எங்க எல்லாருக்கும் வாங்கி இருக்கான் உனக்கு ஒன்னுமே வாங்கிட்டு கொடுக்கல்லையா என் பேரன்?" என்று கேட்டார் அவளை சீண்டி விடும் எண்ணத்தில்.

"கூட்டத்தோட கும்மியடிக்க வேணாம்னு என் புருஷன் எனக்கு மட்டும் ஸ்பெஷலா சாக்லெட் வாங்கிக் கொடுத்திருக்கார் பாட்டி" என்று தன் கைப்பையில் இருந்ததை வெளியே எடுத்தவள் நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.

சிரிப்பொலி நிறைந்த அவ்விடத்தில் அமர்ந்து தன் மனைவியை ரசித்தவன் மனதில் காதல் நிறைந்து இருக்க அவன் கண்களோ அதை பிரதிபலித்தன.

சுபம்..
___________________________
இது என் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சிறுகதை. அழுத்தம் தவிர்த்து இலகு நடையில் ஒரு சிறிகதை வேண்டும் என்ற சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதியது. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் (நிறை, குறைகள் எதுவாயினும்) நன்றி!!

 
Top