எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிம்பப்பிழை - கதை திரி

Status
Not open for further replies.
முன்னோட்டம்:

வணக்கம்,

பிம்பப்பிழை கதையை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் படித்து தெரிந்துகொண்ட ஒரு சுவாரசியமான கதையை இங்கு பகிர விரும்பிகிறேன்.
ஏனென்றால் அக்கதைதான் பிம்பப்பிழை எனும் கதையின் தொடக்கப்பபுள்ளி.

ஜென்னட்டி - இது 1911, இத்தாலியை சேர்ந்த ஒரு தொடர்வண்டியின் பெயர்.

1911-ல் நூற்றியாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரோமிலிருந்து புறப்பட்ட ஒரு புகைவண்டி ஒரு சுரங்கப்பாதையினுள் நுழைந்தது. ஆனால் அவ்வண்டி அச்சுரங்கப்பாதையின் மறுமுனையில்
வெளிவரவில்லையாம்.

அதாவது புகைவண்டியோடு சேர்த்து அதனுள் பயணித்த நூற்றியாறு பேரையும் கூட காணவில்லை.

காவலர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது 106 பயணிகளில் இருவர் மட்டும் தண்டவாளத்தின் அருகே மயங்கிக் கிடப்பது தெரிய, அவர்களிடம் விசாரணை நடந்ததாம்.

ஆனால் அவர்கள் மிகவும் அதிர்ச்சி நிலைக்கு உள்ளாகியிருந்ததால் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தார்கள் என்று நான் படித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் பிதற்றிய விஷயம் என்னவென்றால், புகைவண்டி அச்சுரங்கப்பாதையினுள் நுழைய ஆரம்பித்ததும் வெள்ளை நிற புகை அப்புகைவண்டி முழுவதும் பரவ ஆரம்பித்ததாம். அதைக் கண்டு என்னவோ
ஏதோ.. புகைவண்டியில் ஏதோ கோளாறோ என்று நினைத்த இருவரும் வண்டியிலிருந்து வெளியே குதித்துவிட்டார்களாம்.

வெள்ளைப் புகை மூட்டத்தினுள் நுழைந்த புகைவண்டி சுரங்கப்பாதையின் மறுமுனை வழி வெளிவரவே இல்லையாம்.

காவலர்கள் பலர் வந்துத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லையாம்.

இச்செய்தியைப் படித்தபொழுது எனது புருவங்கள் ஆச்சரியத்தின் பொருட்டு வேகமாக உயர்ந்தன.

அந்த ஆச்சரியத்துக்கே ஆச்சரியம் கொடுக்கும் வகையில் இருந்தது நான் அடித்துப் படித்த செய்தி.

என்னவென்றால் 1840-ல்... அதவாது மேற்கண்ட சம்பவங்கள் நடந்து சுமார் 71 வருடங்களுக்கு முன்பு! காலத்தை பின்னோக்கிப் பயணித்துப் பார்த்தால் மெக்சிகோவின் ஊடகங்களில் வெளிவந்த செய்தி
ஒன்றில் அங்கு அவ்வாண்டில் 104 பயணிகளோடு ஒரு புகைவண்டி வலம் வந்ததாகவும், அதில் உள்ளவர்கள் தாங்கள் ரோமிலிருந்து வந்திருப்பதாகவும் கூறினார்களாம்.

இதில் முக்கியமாக உற்று நோக்க வேண்டிய விசயம் என்னவெனில் 1840-ல் ரோமிற்கும் மெக்சிகோவிற்கும் எவ்வித ரயில் தொடர்பும் இல்லையாம்.

அதனால் மக்கள் பலர் அதை "Ghost train" என்றும் குறிப்பிடுவதாக நான் படித்தேன்... மேலும் சிலர் அச்சுரங்கப்பாதை தான் நம் இணை உலகத்தின் அல்லது நம் இணை பிரபஞ்சத்திற்கு
செல்லும் பாதையாக அமைந்திருக்ககூடும் என்று தங்கள் யூகத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.

இந்த யூகமே நம் கதையின் அடிப்படையாக அமையப்போகிறது.

இரண்டு உலகங்களை இணைக்கும் வழி ஒரு சுரங்கப்பாதையாக அன்றி ஒரு அருவியாக இருந்தால் ? என்ற கற்பனையின் குழந்தை தான் இந்த பிம்பப்பிழை கதை.

முக்கியக்குறிப்பு(பொறுப்பு துறப்பு) : இதில் இணை உலகம் எனும் ஆராய்ச்சி முடிவுகள் முழுதாக வெளிவராத ஒரு தலைப்பை உள் நுழைப்பதால் இதை ஒரு அறிவியல் புனைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை மட்டும் தான்.
இக்கதையில் வரப்போகும் சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள், கதையமைப்பு ஆகிய அனைத்தும் கற்பனை மட்டும் தானே தவிர, எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களையும் கொண்டு இதை வடிக்கவில்லை.
 
பிழை - 1

“நீங்க ஹெலிக்காப்டர நம்ம ஹெலிபேட்ல பார்க் பண்ணுங்க... நா வேலைய முடிச்சுட்டு உங்களுக்கு கால் பண்றேன்”என்று பைலட்டிடம் சொல்ல அவரும் கட்டை விரலை தூக்கிக் காட்டி “ஓகே” என்றார்.

உள்ளேயிருந்த கயிறை எடுத்து போட்டு அதை பிடித்துக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி அவ்வுயர்ந்த மலையின் உச்சியில் இறங்கினான் அபிசேக்.

பழனி மலைகளில் ஒன்றான அம்மலையில் படர்ந்திருந்த பசுமை அவனது மனதை குளிர வைக்கவில்லை... காரணம் அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்த விசயங்கள்.

அப்பொழுது ஒரு அலைபேசி அழைப்பு வர, எடுத்து "ஹெலோ" என்றான்.

"பாஸ்‌..‌ நாம கடத்தி வச்சுருந்தவன் நம்ம ஆளுங்க கண்ணுல மண்ண தூவிட்டு காட்டுக்குள்ள ஓடிட்டான் பாஸ்" பதறியபடி ஒரு அடியாள் சொல்ல, கோபத்தில் முஷ்டியிறுக ஆரம்பித்தது அபிசேக்கிற்கு!

'இவன வாழ விடலாம்னு மனசமாத்திட்டு வந்தா... விடமாட்டான் போலையே' சலித்தது அவனது மனது.

"கடத்தி சோறு தண்ணி குடுக்காம கட்டி வச்சிருந்த ஒருத்தன் தப்பிச்சு போற வரைக்கும் நீங்கலாம் என்ன கிழிச்சிட்டுருந்திங்க? ம்ம்ம்ம்? அவன விட்டராதிங்க பிடிங்க... ஐ வான்ட் ஹிம் அலைவ்” என்று கத்திவிட்டு
ஒரு வினாடி நிறுத்தி “எந்த பக்கம் ஓடுனான்?” என்று கேட்டான் அபி.

“நம்ம... எடத்துலயிருந்து லெப்ட் சைட் பாஸ்” பயத்துடன் அவன் சொல்ல

“ வாட் த ***!!!!! அந்த பக்கம் தான தலையாறு அருவியிருக்கு... சீக்கிரம் அவன பிடிங்க” என்ற சொன்னவனின் கால்கள் அவன் சொன்ன திசை நோக்கி வேகமெடுத்திருந்தது.

கசங்கி போயிருந்த சட்டையும், ஆங்காங்கே மரக்கிளைகளால் கீறப்பட்டிருந்த தோலும்,
மிதிவண்டி டயரில் காற்றை செழுத்தும் பொழுது ஏறி இறங்கும் பம்ப் போல் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் மூச்சும்
என ஓடி கொண்டிருந்த ஹ்ருதயாவின் கண்கள் தன்னை துரத்திவருபவர்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே அடியாள் சொன்ன இடத்திற்கு பக்கமாக தானிருந்த அபிசேக்கிற்கு தனது ஆட்களை நெருங்க வெகுநேரம் எடுக்கவில்லை.

ஒரு பக்கம் அபிசேக்கின் ஆட்கள் துரத்த, அவர்களை விட்டுப் பிரிந்து தனித்து தன்னை துரத்தி வரும் அபிசேக்கை கண்ட ஹ்ருதயாவின் வேகம் கூடியது.

“ஹ்ருதயா.. நில்லு... ஓடாத” காற்றைக் கிழித்துக்கொண்டு தனது காதினுள் பாய்ந்த அபிசேக்கின் வார்த்தைகளை கேட்டாலும் அவற்றை மூளைக்கு எடுத்துச் செல்லவில்லை ஹ்ருதயா.

வேகமாக ஓடிக் கொண்டிருந்தவனது கண்கள் தான் எதிரே கண்ட காட்சியில் விரிந்தன.

ஆவேசமாய் பாயும் அருவியின் ஓசை காதுகளில் எட்டியபோதும் ஏனோ ஓடுவதை நிறுத்தவில்லை ஹ்ருதயா.

அருவியின் வாயிலைக் கண்டுவிட்டான் இனி நின்றுவிடுவான் என்று நினைத்திருந்த அபிசேக்கிற்கு ஏமாற்றமே மிஞ்ச இன்னும் வேகமாக ஹ்ருதயாவை நோக்கி ஓட ஆரம்பித்தான் அபிசேக்.

“வேணா... ஹ்ருதயா.... நில்லுஉஉஉஉ...” என்று அபிசேக் கத்திய வினாடி அருவியின் விளிம்பிலிருந்து குதித்திருந்தான் ஹ்ருதயா.

தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல்மூச்சு விடவும்மறந்து உறைந்து நின்றான் அபிசேக் சக்கரவர்த்தி.

தலையாறு அருவியின் மொத்த உயரம் 975 அடிகள் அதாவது மொத்தம் 297 மீட்டர்.

தமிழ்நாட்டின் மிக உயரமான அருவி!

அந்த ஆக்ரோஷத்தினுள் விழுந்த பின்னரும் ஒருத்தனால் உயிர் பிழைக்க முடியுமா?

எப்படி யோசித்தும் அது சாத்தியமற்ற ஒன்றே ஆகும்.

இப்பொழுது நடந்த இந்தச் சம்பவத்தால் அபிசேக்கிற்கு எந்தப் பின்விளைவுகளும் வரப்போவதில்லை தான்.

ஆனால் சபர்மதிக்கு அவன் என்ன பதில் சொல்லுவான்?

இதையெல்லாம் தாண்டி ஹ்ருதயாவின் முட்டாள் தனத்தை நினைத்து உண்மையில் வாயடைத்து தான் போனான் அபிசேக்.

இனி என்ன செய்ய முடியும்? அபிசேக்கின் அத்தனை கோடி சொத்தை வைத்தாலும் காலசக்கரத்தை பின் செல்ல வைக்க முடியுமா?

சாத்தியமற்றது!

“கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை, உயிர்களும் உடல் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே” என்ற சிவ வாக்கியரின் நிதர்சன எண்ணத்தை ஒத்து வாழ்பவன் அபிசேக்.

கண்களை மூடி நின்றிருந்தவனின் அருகில் வந்த மற்றவர்களின் உடல் ஹ்ருதயா செய்த செயலால் சிறிதாக நடுங்கிக்கொண்டிருந்தது.

“பா..பாஸ் இப்போ என்ன செய்யறது பாஸ்?”

“போங்க போய் அவனோட டெட் பாடிய தேடுங்க”என்று சற்று எரிச்சலோடு கட்டளையிட்டான் அபிசேக்.

ஒன்று, இரண்டு, மூன்று என நாட்கள் கடந்தது.

எத்தனை தேடியும் ஹ்ருதயாவின் உடல் கிடைக்கவேயில்லை.

ஹ்ருதயா அருவியின் விளிம்பிருந்து குதித்த போது கூட எழாத அதிர்ச்சி இப்பொழுது தான் அபிசேக்கினுள் எழுந்தது.

இந்த உயரத்திலிருந்து குதித்த பின்னரும் ஒருவன் உயிர் பிழைப்பது சாத்தியமற்றது,
அப்படியே உயிர் பிழைத்தாலும் நிச்சயமாக உடலில் பாதி எழும்புகளும் பாகங்களும் நொறுங்கியிருக்கும் என்பது திண்ணம்.

அப்படியிருக்கையில் மொத்த இடத்தையும் சலவை செய்த பின்னரும் ஹ்ருதயாவை கண்டுபிடிக்க முடியாதது அபிசேக்கினுள் நம்ப முடியாத ஆச்சரியத்தை விதைத்தது.

எத்தனை தேடியும் ஹ்ருதயாவின் உடல் கிடைக்காமல் போகவே, தனது ஆட்களை மட்டும் இங்கே இருக்க வைத்துவிட்டு சென்னை கிளம்பிவிட்டான்.

-----------
"அடடே! என்ன ஆச்சரியம் தளபதியார் இளவேனில் அவர்களே இங்கு வந்துள்ளாரே" மோவாயில் கைவைத்து விழிகளை விரித்து அதிசயித்தக் குரலில் நச்சினி சொன்னபொழுது

தான் பானையின் மீது வரைந்து கொண்டிருந்த பூவின் இதழ்களில் நிறம் பாய்ச்சிக் கொண்டிருந்தவளோ பகலவனைக் கண்ட மலரென விரிந்து நிமிர்ந்தாள்.

அவளது கண்கள் அங்கும் இங்குமென இளவேனிலைத் தேடின.

"என்ன தளபதியாரே... பொறுமையாக செல்லுங்கள் கதிர்மதி எங்கு சென்றுவிடப் போகிறாள்?" இன்னும் தொடர்ந்து கொண்டிருந்த நச்சினியின் குரலில் குழம்பி எழுந்து அவளருகில் வந்தாள் கதிர்மதி.

நதியினில் நீந்திக் கொண்டிருந்த மீன்களை உடலை வளைத்துப் பார்த்தபடி வசனம் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்த கதிர்மதியின் பற்கள் நறநறத்தன.

"ஏய்! எங்கேடி அவர்?" பட்டென நச்சினியின் தோளில் தட்டியபடி புருவம் நெளித்தாள் கதிர்மதி.

"எவர்?" ஒற்றைப் புருவம் உயர்த்தி நச்சினி சிறிது நக்கல் தொனியோடு கேட்டபோது கதிர்மதியின் முகத்தில் கோபமும் வெட்கமும் ஒரே நேரத்தில் முட்டிமோதி மின்னிக் கொண்டிருந்தது.

"அவர் தான். தளபதியார்." முகத்தை வேறுபக்கமாக திருப்பியபடி சொன்னவளின் குரலில் பெருமிதம் சற்று சாரல் தெளித்தது.

"அதோ அங்கே உன் பின்னேயே போய்க் கொண்டிருக்கிறார் பார்" தங்க நிற மீனின் பின்னே சென்று கொண்டிருந்த ஒரு நீல நிற மீனைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள் நச்சினி.

இத்தனை நேரம் மலர்ந்திருந்த கதிர்மதியின் முகம் சுருக்கம் கண்டது.

'அடர் கானகம் இறங்கி சூரிய ஒளி கூட மண் தொட்டுவிடும் ஆனால் அவரது கடைக்கண் பார்வை கூட என் கன்னம் தொடாது' உதட்டுச்சுளிப்புடன் எண்ணிக் கொண்டவளின் கவனம் மீண்டும்
அவள் வரைந்து கொண்டிருந்த பானை மீது திரும்பியது.

சோர்வான முகத்துடன் பாறையின் பக்கம் நகர்ந்து அமர்ந்து தனது பணியைத் தொடர்ந்தாள்.

கதிர்மதியின் மௌனம் வீசிய திசையில் போன நச்சினியின் கண்கள், பிடரி முடியை சிலுப்பியபடி குலுங்கி வந்து கொண்டிருந்த குதிரையை தன் கட்டளைக்கிணங்க இயக்கிக் கொண்டிருந்த
இளவேனில் மீது படிந்தன.

கம்பீரம் எனும் சொல் உருவாக காரணகர்த்தாவாக இவன்தான் இருப்பானோ? என்று நம்மை யோசிக்க வைக்குமளவிற்கு தன் உடற்கட்டை எக்காளமிடும் தோற்றம்.
என்னைப் பார் என் நிறத்தைப் பார் என முறுக்கிக் கொண்டிருக்கும் மீசையின் கீழ்
சிரிப்பெனும் மழையைக் கண்டிராத வறண்ட நிலம் எனும் சதை பிடிப்புகள்.

பிறந்த பொழுதிலிருந்தேஅவனது கண்கள் இப்படிச் சுருங்கி கூர்மையாகத்தான் இருந்ததா இல்லை அப்படிக் கூர்மையாகப்பார்த்து பார்த்து அப்படியே நின்றுவிட்டதா என்பது பலரால் ஆராய்ச்சி
செய்தும் கண்டுபிடிக்க முடியாத ஒரு செய்தியாகவே போய்க் கொண்டிருக்கிறது.

"தளபதியாரா?" வாயைப் பாதி பிளந்தபடி சொன்ன நச்சினியின் வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து கதிர்மதியின் காதுகளில் விழ அவளது முகம் கோவவிழா சூடிக்கொண்டது.

தொடர்ந்து கேட்ட குதிரையின் டொக் டொக் சத்தத்தில் கையிலிருந்த பானையை நங்கென கோபத்தோடு கீழே வைத்தவள் \
"ம்ம்ம்... பரவாயில்லையே... குதிரை போல் விகடம் செய்ய எல்லாம் கற்றிருக்கிறாயே
நாளை யார் போல்? தளபதி போல் பேசிக் காண்பிப்பாயா?" என்று கதிர்மதி நச்சினியிடம் கோபமாகக் கத்த
"இந்நேரத்தில் அருவிக்கரையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" கணீரென்று கேட்ட
தளபதி இளவேனிலின் குரலில் அதிர்ச்சியில் மூச்சடைக்க திரும்பினாள் கதிர்மதி.

இளவேனிலின் குரல் மட்டுமே இவள் திசை நோக்கியிருக்க, பார்வை பாய்ந்தோடும் நதியின் மேலிருக்க, அதிர்ச்சி மாறி கோபம் ஜனித்தது கதிர்மதியின் முகத்தில்.

"என் முகம் நதியினில் தான் நீராடிக் கொண்டிருக்கிறதா?" என்று பட்டெனக்கேட்டவள் "சரிதான், முன்னே பின்னே என் முகத்தைப் பார்த்திருந்தால் தானே தளபதியாருக்கு அடையாளம் தெரிவதற்கு"
சிலுப்பிக் கொண்டு சொன்னவளின் முகத்தின் மேல் கூர்மையாகப் படிந்தது இளவேனிலின் கூர்பார்வை.

தன் மீது அவன் பார்வை படுகிறதென அறிந்தும் முகத்தை அவன் பக்கம் திருப்பவில்லை கதிர்மதி 'எத்தனை நாள் இப்படி கண்டுக்கொள்ளாமல் என்னை வாட்டிருப்பாய்... இன்று நீ வாடு' கங்கணம் கட்டிக் கொண்டது
அவளது மனது.

நிமிடங்கள் நகர அவனது பார்வையின் அழுத்தமும் அடர்த்தியும் கூட ஆரம்பித்தது.

போதாதற்கு நச்சினி வேறு கதிர்மதியின் கைகளை சுரண்ட ஆரம்பித்திருந்தாள்.

அவளும் பாவம் எத்தனை நேரம் தான் தலைகுனிந்தவாறே நிற்பாள்.

"அவரைப் போகச் சொல் நச்சி" என்று சொன்னவள் இன்னும் இளவேனில் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை.

அவனும் அவளை அப்படியே விடுவதாய் இல்லை.

பார்வையும் திம்மென அவள் மீதே இருந்ததே தவிர, மில்லிகணக்கில் கூட நகரவில்லை.

நச்சினியின் சுரண்டல் அதிகமானது. அதில் எரிச்சல்பட்டவள் 'சரி போனால் போகிறதென இளவேனிலை நோக்கித திரும்பினாள்.

ஆனால் அவள் திரும்பிய அதே சமயம் அவள் இத்தனை நேரம் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த கானகத்தை முதல் முறையாகப்
பார்ப்பது போல் ஆர்வமாக நோக்கியபடி "ஓ.. ஓ.." என்று குதிரையை ஒட்டியபடி
இவர்களைக் கடந்து முன்னேறினான் இளவேனில்.

பற்றிக்கொண்டு வந்தது கதிர்மதிக்கு.

"இன்று மாரி வருமென முகில்வான் கூறிக்கொண்டிருந்தார்... விரைந்து வீட்டிற்கு சென்று அடையுங்கள்" போகிரப்போக்கில் சொல்லிக்கொண்டே சென்றவனின் குரல் மட்டும் கேட்கவே, கேட்டவளுக்கோ
தாடை தானாக இறுக, திரும்பியும் பாராமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்திருந்தாள் கதிர்மதி.

அவள் பின்னே ஓடிப்போனாள் நச்சினி.

குதிரையை நிறுத்திவிட்டு பின்னே திரும்பி பார்த்தவனின் முகம் கதிர்மதியின் கோபம் சுமந்த நடையைப்பார்த்து மெல்லிய புன்னகையில் விரிய, பறவைகளும் மிருகங்களும் அவனின் சிரிப்பை
நிகழாத அதிசயம் நிகழ்ந்துவிட்டதாய் நினைத்து பெருங்குரலெடுத்து ஓசையெழுப்ப ஆரம்பித்தன.

தன் பங்குக்கு சோவெனப் பெய்ததது மழை.

குதிரையிலிருந்து இறங்கியவன் நடந்து சென்று கதிர்மதி நங்கென வைத்திருந்த சிறிய பானையை எடுத்தான்.

கதிர்மதி வரைந்து வைத்திருந்த பூச்செடியின் நடுதண்டு தண்ணீரில் கரைந்து ஓடியிருக்க, இலைகள் இரண்டு மட்டும் வண்ணங்கள் கலந்து சிதைந்து இறக்கைகள் போல் காட்சியளித்தன.

அவள் வரைந்திருந்த பூ பறவையாகியிருந்த்து!
 
பிழை - 2

"நான் தளபதியாரை மணம் செய்து கொள்ள மாட்டேன் தந்தையே" அடிதடியாக மகள் கூறிய சொல்லில் ஆடிப்போனார் அவளது தந்தை உசித வினையன்.

உசிதவினையன் - வளர்பிறை தம்பதிக்கு திருமணமானதிலிருந்து தொடர்ந்து ஏழு குழந்தைகள் பிறந்து இறந்து இறந்து போயிற்று. அதிலேயே பெரிதாக மனமுடைந்த தம்பதியருக்கு, அடுத்த
பத்து வருடங்களுக்கு குழந்தை தங்காமல் போய் என கிட்டத்தட்ட அவர்களுக்கு திருமணமாகி முப்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள் தான் கதிர்மதி. அவளுக்குப் பின்னரும் ஒரு
குழந்தை பிறந்து இறந்துவிட்டதால் கதிர்மதி மட்டுமே அவர்களுக்கு என்றாகிப் போனது. அதனாலேயே தம்பதியர் இருவருக்கும்
அவள் மீதான செல்லம் அதிகம். அவளிடம் அதட்டிக் கூடப் பேசமாட்டார்கள் இருவரும். இப்படியே காலம் நகர, கதிர்மதி வளர வளர தாங்கள் கொடுக்கும் செல்லத்தால் சமூகக்கட்டுப்பாடுகளுக்கு
இணங்காமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளர்கிறாள் என்று உணர்ந்த தாய் வளர்பிறைக்கு ஒற்றைப் பிள்ளை தான் அவளையும் ஒழுங்காய் வளர்க்கவில்லையா? என்று உலகம் பேசிடுமோ என்று எண்ணிய
வளர்பிறை தான் கதிர்மதியை கண்டிக்க ஆரம்பித்தார்.

நல்லவேளையாக கதிர்மதி இளவேனிலை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என சொன்னபொழுது
அவளது தாய் வளர்பிறை அப்பொழுது அங்கே இல்லை. இருந்திருந்தால் கதிர்மதியின் தலையிலேயே ஒரு போடு போட்டிருப்பார்.

"என்னவாயிற்று கதிர்மதி? ஏன் இப்படி ஒரு வார்த்தை சொல்கிறாய்?" பதறிப்போனார் அவளது தந்தை.
ஏனெனில் இரு வருடங்களுக்கு முன்பே அவரது ஒன்றுவிட்ட தங்கையின் மூத்த மகனாகிய
இளவேனிலின் வீட்டாரும் கதிர்மதியின் வீட்டாரும் கலந்து பேசி , திருமண நிச்சய வாக்குறுதியும் குடுக்கப்பட்டாகிவிட்டது.

கொடுத்த வாக்கை மீறுவது சாதாரண விசயம் இல்லை. அப்படியே யாரோ ஒருவர் வீட்டில் மறுப்பு தெரிவித்தாலும் கதிர்மதியிடம் தான் ஏதோ குறை உள்ளது போல என்று ஊர் பேசும்.

நினைக்கவே படபடத்தது அவரது நெஞ்சம்.

இருந்தும் கதிர்மதி சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கினார்.

"அவர் என் முகத்தைக் கூட பார்ப்பதில்லை தந்தையே... என்னிடம் பேசும்பொழுது கல்லையும் மண்ணையும் ஏன் பார்க்க வேண்டும்?
அவர் உயர்ந்த பதவியில் இருக்கவும் என்னை இழப்பமாக நினைக்கிறாரா?" அவளது பதிலைக் கேட்டு மனது இலேசாக, சிறிதாக
சிரித்தவர்
"அப்படியெல்லாம் இருக்காதம்மா... இளவேனில் மிகவும் தங்கமானவன்... அப்படி நினைக்கக்கூடியவன் இல்லை... ஒருவேளை உன்னைக் கண்டு
வெட்கப்படுவானாக இருக்குமோ?" அவர் யோசனையாக கேட்க,
கோபமாக உதட்டைச் சுழித்தவள் "யார்? அவரா? அந்தக் கல் உடலில் வெட்கம் வந்துவிட்டாலும்" அவள் துளி எரிச்சலோடு சொன்னாள்.

"ஏன் கல்லுடலில் காதல் இருக்காதா?" உசித வினையன் சாதாரணமாகக் கேட்டுவிட, 'காதல்' என்கிற வார்த்தையில் அவளது கரங்கள் சில்லிட்டின.

'காதலா? அவருக்கா? அதுவும் என் மீதா?' தலையை இருபுறமும் ஆட்டி வேகமாக சிலுப்பியவள் "பேச்சை மாற்றாதீர்கள். நான் அவரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதில்லை என்று முடிவு
செய்துவிட்டேன்" அவள் கறாராகக் கூறியபடி தரையில் அமர்ந்துவிட
"என்னம்மா புரியாமல் பேசுகிறாய்..." என்று அவர் ஆரம்பித்த பொழுது
"சரி புரிந்தே பேசுகிறேன்... நாளையிலிருந்து எனக்கு குதிரையேற்றம், வில் பயிற்சி, வாள் பயிற்சி ஆகிய மூன்றும் கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் எங்களது திருமணம்
மூன்று ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படவேண்டும்... இவை எல்லாவற்றிற்கும் சம்மதம் என்றால் நான் அவரை மணம் செய்துகொள்ளவும் சம்மதிக்கிறேன்"
படபடவென தன் மனதிலிருந்த முடிவுகளை அடுக்கிவிட்டு முகத்தை அழுத்தமாக வைத்தபடி அமர்ந்திருந்தாள் கதிர்மதி.

மகள் இத்தனை தெளிவாய் இருக்கிறாளே என்று மகிழ்வதா? வருந்துவதா? என்று உசிதவினையன் சிந்தித்த நேரம்,
வீட்டின் வாசலிலிருந்து "மாமா" என்ற குரல் கேட்டது.

அக்குரலைக் கண்டுகொண்ட கதிர்மதி, உசிதர் இருவரின் முகமும் அதிர்ந்து அடங்கியது.

"...இளவேனில்... உள்ளே வாருமப்பா" என்றபடி வாசல் நோக்கி நகர்ந்தார் உசிதவினையன்.

இளவேநிலைக் கண்ட அவ்வீட்டில் வேலையாள் ஒருவன் கதிர்மதியின் தாய் வளர்பிறைக்கு சேதி சொல்ல, பின்வாசல் வழி ஓடினான்.

பின்னே விசாலமாக இருந்த கற்தூண்களாலான கூடாரம் ஒன்றினில் மற்ற மகளிரோடு சேர்ந்து சேலைக்காரர் கொண்டுவந்திருந்த சேலைகளில் தனக்குப் பிடித்தவற்றை ஒதுக்கிக் கொண்டிருந்தார்
வளர்பிறை.

சேதி தெரிந்ததும் அவரது மனம் சேலையை மறந்து வீட்டை நோக்கிப் பயணித்தது.

"வந்தவருக்கு நீரும் பலகாரமும் எடுத்து வை" என்று சொல்லியவாரே அடுத்து என்ன செய்யவேண்டும் என சிந்தித்தவர், ஏதோ தோன்ற நின்றார்.

"முத்தா... நீர் முதலும் பலகாரம் பின்னுமாக தர வேண்டும்... இரண்டையும் கதிர்மதியையே கொண்டு போய் தரச்சொன்னதாக நான் பணித்தேன் என்று கூறு
அவளிடம்" என்று கட்டளையிட்டபடி கிணற்றடிக்கு விரைந்தவர் அதிலிருந்த நீரைக்கொண்டு காலை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் புகும் முன்,
கையில் தண்ணீர்ச்செம்போடு இளவேனிலின் முன் நின்றிருந்தாள் கதிர்மதி.

நிமிரவில்லை!

கோவமும், 'அம்மா சொன்னதால் செய்கிறேன்' என்ற உடல்மொழியும் அவளிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
இதைக் கண்ட வளர்பிறைக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

'தன் புத்தியுமில்லை, சொல் புத்தியுமில்லை... இவளை என்னதான் செய்ய இறைவா?' என்று நொந்தபடி சமையல்கட்டினுள் சென்று பலகார வகைகளை தட்டில் வைத்து எடுத்து வந்தவர்
கதிர்மதியின் அருகே வந்து நின்றார்.
இவர் வருவதற்குள் இளவேனிலிடம் நீர் நிரம்பிய சொம்பை கொடுத்துவிட்டு நகர்ந்துவந்திருந்தாள் அவள்.
அவளின் கையினில் இப்பொழுது தான் எடுத்துவந்திருந்த பலகாரத் தட்டினைத் திணித்தவர் "அவர் முன் மரியாதையோடு நில், கடனே என்று நிற்காதே புரிந்ததா?" சற்றே கடுப்பான, கிசுகிசுப்பான குரலில்
கதிர்மதியின் கையைக் கிள்ளியபடி வளர்பிறை சொன்னபொழுது கதிர்மதியினுள் கனன்று கொண்டிருந்த நெருப்பு சீமெண்ணெய் ஊற்றியது போல் எரிந்தது.

எப்பொழுதும் வளர்பிறை சொல்லும் சொற்கள் தான் இவை, ஆனால் இன்று மட்டும் ஏனோ வழக்கத்திற்கு மாறாக அதிகமாக எரிச்சலூட்டுவது போல் தோன்றியது கதிர்மதிக்கு.

முன்னரை விட முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, ஏதோ இளவேனிலுக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரன் போல் மெத்தனமாக நின்றாள் கதிர்மதி.

அவளின் செயலைக் கண்ட வளர்பிறையின் வாய்க்குள்ளேயே வசவு வார்த்தைகள் அரைபட்டன.

ஏன் இதுவரை கதிர்மதி மேல் கோவமேபடாத உசிதவினையனுக்குக் கூட அவளின் மேல் கோபம் வந்தது.
ஆனால் பலகாரத்தை வாய்க்குள் அடக்கி சிரிப்பையும் சேர்த்து அடக்க முயற்சிக்கும் இளவேனிலை அவரது கண்கள் கவனித்துவிட்டன.

இருப்பினும்
"வீட்டிற்கு வந்தவரிடம் இப்படித்தான் நடந்துக் கொள்வாயா கதிர்மதி?" என்று கேட்டுவிட்டார்.

முதல்முறையாக தந்தை தன் முன் குரலுயர்த்தியதில் கதிர்மதியின் மனது சுணங்கிப் போனது.

'அதுவும் இவர் முன் தானா என்னிடம் குரலுயர்த்த வேண்டும்...?' என்று சிணுங்கும் மனது 'எல்லாம் இவரால் வந்தது தான்... தந்தையார் இதுவரை என்னிடம் இப்படி பேசியதே இல்லை...
இவரால் தான்! எல்லாம் இவரால் தான்! இவரை யார் வரச்சொன்னது' என்று அவளது மனது கீச்சிட, கசிந்த கண்களோடு நிமிர்ந்து இளவேனிலை முறைத்தவள் அவன் இவளிடம் பார்வையைத் திருப்பும்முன்
தன்னறைக்கு ஓடிவிட்டாள்.

வளர்பிறைக்கும், உசிதருக்கும் கோவம் பெருகியது.

"அ..அது..." கோபமிருந்தாலும் தன் மகளை விட்டுக்கொடுக்க முடியாமல் ஏதோ சமாளிக்க வாயெடுத்த வளர்பிறையிடம்
"பரவாயில்லை அத்தை.... சிறு பெண் தானே" என்று தான் சமாதானம் பேசினான் இளவேனில்.
மனது குளிருந்துப் போனது வளர்பிறைக்கு.

இருந்தும் இப்படி மனதுடைய ஒருத்தனிடம் தன் மகள் மரியாதையில்லாமல் நடந்துக் கொள்கிறாளே என்ற கோபம் பெருக
"அவளுக்கு பதினெட்டு வயதாகிறது மாப்பிள்ளை, சிறுபெண் எல்லாம் ஒன்றுமில்லை... இதற்காகத்தான் சிறுபிள்ளையிலிருந்தே கண்டித்து வளர்க்க வேண்டும் என்பது" என்று குற்றம்சாற்றும் பார்வை
உசிதவினையனின் மீது படிந்தது.

'எல்லாம் நீங்கள் கொடுத்த செல்லத்தினால் தான்' என்பது போல்.
பேச்சை மாற்ற நினைத்த இளவேனில் அத்தனை நேரமிருந்த இலகுத்தன்மை மாறி தன் முழு உயரத்திற்கு உசிதர் முன் எழுந்து நின்றான்.

அவனது முகம் மீண்டும் இறுக்கம் சூடிக்கொண்டது.
இப்பொழுது நான் உங்கள் மாப்பிள்ளை இல்லை, இந்நாட்டின் தளபதி என்று அறிவித்தது.

அதைப் புரிந்துகொண்ட உசிதர் தானும் எழுந்து நின்றபடி வலது பக்கமிருக்கும் அறைக்குப் போகலாம் என்று வழிகாட்டினார்.

உள்ளே சென்று அறையைத் தாளிட்டவுடன், இளவேனில் தன் இடுப்பிலிருந்த வாளை அதன் உரையிலிருந்து சீரிய வேகத்தோடு வெளியில் எடுத்தவன் அதைத் தன் இரு உள்ளங்கைகளில் தாங்கியபடி
உசிதர் முன் ஒரு கால் மண்டியிட்டு தன் கையிலிருந்த வாளை அவரின் கால்களுக்கு முன் வைத்தான்.

அது அந்நாட்டின் மரபு. எத்தனைப் பெரிய வீரனாக இருந்தாலும் எதிரில் இருப்பவரின் மேல் தன் முழு நம்பிக்கையும் இருக்குமானால் தன் உறையிலிருக்கும் வாளை எடுத்து அவர் முன் வைத்துவிட்டார்கள் என்றால்
தன்னுயிர் அவரின் முன் பாதுகாப்பாக இருக்குமென்று நம்புவதற்கு சான்றாகும்.
எதிரில் இருப்பவரின் காலடியில் வைப்பது என்பது அவரின் மீது தான் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறோம் என்பதை பறைசாற்றும்.

"அறிவில் சிறந்த அரச குரு அவர்களுக்கு வைகைத் தமிழ் நாட்டு தளபதியின் பணிவின் வணக்கம்!" என்று கைகள் கூப்பி வணங்கினான்.

உசிதர் அதை தலை அசைத்து ஏற்றுக் கொண்டவுடன் தன் சட்டைக்குள் வைத்திருந்த ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான்.

"மன்னர் தங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்ற வார்த்தைகள் அவனது வாயிலிருந்து பணிவுடன் உதிர்ந்தன.

அதை வாங்கி தனது உடையினுள் மறைத்து வைத்துக் கொண்டார் உசிதர்.
ஒரு கால் மடக்கி அமர்ந்திருந்தவன் எழுந்தான்.

வெகுநேரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை புறப்படும் முன் சொல்லியாக வேண்டும் என்ற உந்துதல் தொனித்தது அவனது மனதினில்.

"கதிர்மதி.." என்றான் சற்று தயங்கியப்பை இழுத்தவாறு...
ஏதோ யோசனையிலிருந்த உசிதர் ஜன்னலில் இருந்து அவன் பக்கம் முகம் திருப்பினார்.

"அவள் வில், வாள், குதிரையேற்றம் என விருப்பப்படும் அனைத்தையும் கற்றுக்கொள்ளட்டும்... காத்திருக்க நான் தயார்" என்றான் அவரின் ஆழ்ந்த கண்களை நோக்கி ,

அதை உள்வாங்கிய உசிதர் கதிர்மதி தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவற்றை இளவேனில் கேட்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டபடி அவர் சொன்னார்

"இல்லை இளவேனில்...அவள் விளையாட்டுப் பிள்..."

"இல்லை மாமா... அவள்... அவள் மற்ற மகளிர் போலில்லை. அவளது வாழ்க்கை இது..." என்று சொன்னபடி முழுதாக அவர் பக்கம் திரும்பி நின்றவன்

"நீங்கள் இதுவரை அவளுக்கு குறுக்காக நின்றதில்லை என எனக்குத் தெரியும்... நானும் நிற்க விரும்பவில்லை. அவள் பறக்க நினைத்தால் அவளுக்கு சிறகாவே இருக்க விரும்புகிறேன்..
தடையாக அல்ல... இது எனது வேண்டுகோள்"

"ஆனால்..." என்று உசிதர் ஆரம்பிக்க

"அம்மா அப்பாவிடம் நான் பேசிக்கொள்கிறேன்.. வேறு ஏதாவது சிரமம் உள்ளதா?" அதையும் தீர்த்து வைக்கிறேன் என்ற தொனியோடு முந்திக்கொண்டு அவன் கேட்டபொழுது சட்டென சிரித்துவிட்டார்
உசிதர்.

"நன்றியப்பா" மனமார உதிர்ந்தன அவரது வார்த்தைகள்.
"நீங்கள் தான் எனக்கு உதவி செய்கிறீர்கள்... நான் தான் உங்களுக்கு நன்றி நவில வேண்டும்" அவன் தாழ்மையுடன் சொன்னபொழுது அவரது சிரிப்பு சிறிது மறைந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

குனிந்து தன் வாளை எடுத்தவன் அவரிடம் விடைபெற்றுக்கொண்டான்.

இளவேனில் சென்றவுடன் மன்னர் அனுப்பியிருந்த கடிதத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் உசிதர்.

ஏனோ அவரது மனதிலிருந்த சஞ்சலங்கள் கூடிக்கொண்டே போவதாக தெரிந்தது.

தான் கணித்தது நடந்துவிடுமா? என்ற கேள்வி எழ தன் மன அமைதியின் ஆணி வேர் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டதை உணர்ந்தார் அவர்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top