எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவே வெண்ணிலவே! - கதை திரி

Status
Not open for further replies.

Aathirai Mohan

Moderator
வணக்கம் மக்களே,

நான் உங்கள் எழுத்தாளர் NNK 70.


நிலாக் காலம் என்பதால் என் கதையின் தலைப்பும், நாயகன் மற்றும் நாயகியும் நிலவாய்
இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

நாயகன் - நிலன்
நாயகி - வெண்ணிலா

எனக்கு டீசர் எல்லாம் வராது பா. அதான், இரண்டு வரில சின்னதா கதை சொல்ல வந்திருக்கேன்.

காதல், கல்யாணம் இரண்டிலும் நம்பிக்கை இல்லா நாயகி.

அந்த இரண்டுமே வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்னு சொல்ற நாயகன்.

இவர்கள் இருவருக்குமான நிகழ்வு. அது எப்படித் தொடங்கும், எப்படி முடியும்?

படிக்க ஆவலாய் இருங்க...

படத்தில் இருக்கவங்க தான் என் கதையின் நாயகன், நாயகி. கற்பனை செய்துக்கோங்க.


eiQE97G94637.jpg


 
Last edited:

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 1


காலைப் பொழுது இனிதாகத் துவங்கி இருந்த வேளை, கதிரவனின் கதிர்கள் மெல்ல மேலே எழுந்து கொண்டிருந்தது. ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலின் ஆழத்தை தனக்கு மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் கதிரவன்.

அலை கடலின் ஓசையையும், கதிரவனின் சுட்டெரிக்கும் பார்வையையும் சற்றே தொலைவிலிருக்கும் தனது வீட்டு மாடியின் பால்கனியில் இருந்து வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

ஆனால், காலை எழுந்ததும் காபியை எடுத்துக்கொண்டு ஓடி வந்து எப்பொழுதும் ரசிக்கும் அந்தப் பார்வை அல்ல. இன்று பலவித எண்ணங்கள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அவளின் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன், நிலன். இளம் நீல நிற சட்டையில், பார்மலாய் உடை அணிந்து கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவனை அவ்வப்போது திரும்பிப் பார்த்தாள். ஆனால், அது வேறு எந்தத் தப்பான பார்வையும் அல்ல என்பதை வெண்ணிலாவும் புரிந்து கொண்டாள்.

பாந்தமான பிங்க் நிற பட்டுப் புடவையில், அழகான கூந்தலை பின்னலிட்டு, அளவான மேக்கப்புடன் நின்றவளின் அழகை யாராக இருந்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவனின் பார்வையோ அவளின் மனத்தை படிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டிருந்தது.


sai-pallavi-hd-stills-16-12-2021-30.jpg1597311603896_92937925.jpg


இங்கே இவர்கள் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாலும், கீழே பேசுபவர்களின் பேச்சு நன்றாகவே அவர்களுக்குக் கேட்டது.

"அமெரிக்கால ரமணி அம்மா ஊறுகாய்னா தெரியாத ஆளே இல்லைன்னு அடிச்சு சொல்லுவேன். அந்த அளவுக்கு உங்க ஊறுகாய் அங்க பேமஸ். ஏன், என்னையே எடுத்துக்கோங்க தினமும் ஒருவேளை சாப்பாட்டில் உங்க ஊறுகாய் இல்லாம நான் சாப்பிட்டதே கிடையாது." என்று அவர்களின் ஊறுகாயைப் பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து கொண்டிருந்தார் பத்மநாபன்.

அதைக் கேட்டு அனைவரும் சிரித்தபடி இருந்தனர். இதற்கிடையில் பலகாரங்கள் பரிமாறப்பட்டது. அதை சுவைத்துக் கொண்டே மறுபடியும் பேசினார் பத்மநாபன்.

"உங்க ஊறுகாய் மட்டும் இல்ல பலகாரமும் ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி பலகாரத்தையும் போட்டு எக்ஸ்போர்ட் பண்ணீங்கன்னா அமெரிக்கால இன்னும் சூப்பரா போகும்." என்று அவர் சொல்ல அதைக் கேட்டு இன்னும் பலமாக சிரிக்க ஆரம்பித்தனர் அனைவரும்.

அதைப் பார்த்த அவரது மனையாள் கமலா, "இவர் எப்பவுமே இப்படித்தாங்க மனசுல பட்டது எல்லாத்தையுமே இடம் பொருள் பாக்காம, டக்குனு பேசிடுவாரு. முதல்ல நாங்க வரன் பார்த்தப்ப நீங்க தான்னு எங்களுக்குத் தெரியல. நீங்க தான்னு தெரிஞ்சதுக்கப்புறம் உங்களைக் கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு இவர் சொல்லிட்டாரு. அதனாலதான் உடனே அமெரிக்காவில் இருந்து கிளம்பி பேரனோட இங்க வந்துட்டோம்." என்றார்.


அதைக் கேட்டு "அமெரிக்காவில் இருந்து முதலில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு தெரிஞ்சதும் நாங்களுமே கொஞ்சம் பதறிட்டு தான் இருந்தோம். ஆனா, இங்க வந்து நீங்க பேசுற விதத்த பார்த்ததுமே நீங்க ரொம்ப இயல்பா, எதார்த்தமா பழகறவங்கன்னு புரியுது. அதுவே எங்களுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு." என்றார் ரமணி அம்மாள்.

"அம்மா சொன்னது சரிதான் அமெரிக்கான்னு சொன்னதுமே, குடும்பம் எப்படி இருக்குமோ? அப்படின்னு கொஞ்சம் பதற்றம் இருக்க தான் செஞ்சது எங்களுக்கு." என்றார் ரமணியின் புதல்வன் சந்திரபிரகாஷ்.

"அட நீங்க வேற அமெரிக்கா மாப்பிள்ளைனா என்ன கொம்பா முளச்சிருக்குது. எல்லாருமே மனுஷங்க தான் பா. இது மாதிரி வெளிப்படையா சகஜமா பேசறதும், பழகறதும் தான் என்னைப் பொறுத்தவரைக்கும் சரி." என்றார் பத்மநாபன்.

"அப்படி இல்லைங்க பொண்ணு குடுக்குறவங்க நாங்க பத்து இடத்துல விசாரிச்சு கொடுக்கிறது தானே முறை. அப்படி இருக்கும் போது நீங்க அமெரிக்கால இருந்து வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சதும் எங்களுக்குள்ள கொஞ்சம் பதற்றம் உருவாகறது இயல்பு தானே?" என்றார் ரமணியின் புதல்வி சந்திரகலா.


"அதுவும் வாஸ்தவம்தான் மா, பொம்பளப் பிள்ளைகளை கட்டிக் கொடுக்கிறது சாதாரண விஷயம் இல்ல. பத்து இடம் என்ன? இருபது இடம் பார்த்தாவது நல்ல இடமான்னு பார்த்துதான் கட்டிக் கொடுக்கணும்." என்று கமலா தீர்க்கமாகச் சொன்னதும் அவர்களிடத்தில் பரந்த அமைதி நிலவியது.

அவர்களது அமைதிக்கு பின்னால் இருக்கும் வலியை அவர்களால் மட்டுமே உணர முடியும்.


"அப்பறம் என்னோட பேரனப் பத்தி நானே சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ரொம்ப ரொம்ப நல்ல பையன். குடும்பத்தோட தேவையை அறிந்து நடந்துக்கிற பையன். அவ்ளோ சீக்கிரம் யாரோட மனசையும் நோகடிக்க மாட்டான். படிச்சது இன்ஜினியரிங் தான், ஆனா மத்தவங்க மனசப் படிக்கிறதுல அவன விட கெட்டிக்காரங்க இந்த உலகத்தில இருப்பாங்களான்னு எனக்கே தெரியாது. சைக்காலஜியும் படிச்சிருக்கான். இன்ஜினியரிங் படிச்சிட்டு எதுக்குடா சைக்காலஜி படிக்கிற அப்படின்னு கேட்டா, இது ரொம்ப அவசியம்னு சொல்றான். அதாவது அவனோட கம்பெனியில் கூட வேலை செய்றவங்க, அவனுக்கு மேல இருக்க அதிகாரிங்க, இவங்க எல்லாரோட மனசையும் படிச்சிட்டா அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கலாம் இல்லையா.? அதை வச்சு தான் அவன் சொல்றான்னு அதுக்கு அப்புறம் தான் எங்களுக்குத் தெரிஞ்சது." என்றார் பத்மநாபன்.

அதைக் கேட்ட போது தான் வெண்ணிலாவிற்கு அவன் தன் மனதை படித்துக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.


"நிலன் சில சமயம் அவனோட அண்ணனுக்கே புத்தி சொல்வான்னா பாத்துக்கோங்களேன். அவங்க அண்ணன் ஒரு பொண்ண காதலிக்கிறான்னு தெரிஞ்சு வீட்ல சொல்ல பயந்துட்டு இருந்தப்போ, இவன் தான் தைரியமா எல்லாத்தையும் எங்க கிட்ட சொன்னதோட இல்லாம, அவங்க வீட்லயும் பேசி சம்மதம் வாங்கி, ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லி சேர்த்து வச்சான்." என்றார் கமலா.

அவனைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது சற்று நிம்மதியாக இருந்தது குடும்பத்தினருக்கு. திருமணம் என்னும் நிகழ்வால் பல வலிகளையும், வேதனைகளையும் தாங்கி நிற்கும் குடும்பம். இந்த வரனாவது நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே அவர்களுடைய பிரார்த்தனை.


“வெண்ணிலா என்னோட மகள் சந்திராவோட பொண்ணு. ரொம்ப தன்மையான, அடக்கமான பொண்ணு. விரும்பி தான் மருத்துவம் படிக்கிறேன்னு சொல்லி, அதுக்காக ரொம்ப உழைச்சா. அதுக்குப் பலனா அவளுக்கு கவர்மெண்ட் காலேஜ்லயே ஈஸியா சீட் கிடைச்சது. இப்போதான் எம்.எஸ்ஸூம் முடிச்சா. இன்னும் படிக்கணும்னாலும் படிப்பா. நாங்கதான் காலா காலத்துல அவளுக்கு ஒரு நல்ல வரன தேடினா தான் சரின்னு நினைச்சு, மேட்ரிமோனில போட்டோம். நிறைய இடத்துல இருந்து வரன் வந்தது. ஆனா, எதுவும் அந்த அளவு த்ருப்தி இல்லாதது மாதிரி இருந்துச்சு. அவளுக்கு நகை நட்டுன்னு எல்லாத்தையுமே செய்ய நாங்க தயாராதான் இருக்கோம். ஆனா, சரியான இடமான்னு தெரியணுமே. அதுக்காக தான் இத்தனை மாசமா காத்திருந்தோம். இப்போ, நீங்களாகவே கேட்டப்போ எங்களால மறுக்க முடியல. அதனால தான் சரின்னு சொல்லிட்டோம்.” என்றார் ரமணி அம்மாள்.

“பொண்ணு டாக்டர்ன்னு சொன்னதும், ஒருவிதத்துல நாங்க ஆச்சர்யப்பட்டோம். ஏன்னா, எங்க மருமகப் பொண்ணு, அதான் நிலனோட அம்மாவும் டாக்டர் தான். அமெரிக்காவுல அவ வேலை பார்க்கற இடத்துல ரொம்ப கைராசியான டாக்டர்ன்னு பட்டம் குடுத்திருக்காங்க அவளுக்கு. இப்போ, அவளுக்கு வரப் போற மருமகளும் டாக்டர்ன்னு தெரிஞ்சதும், எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ ஒரே வீட்ல டாக்டரும், இன்ஜினியரும் இருக்கப் போறாங்க.” என்றார் கமலம் சிரித்துக்கொண்டே.

அவர் பேச்சில், சிறு துளி கூட அவரது மருமகளைப் பற்றி கவலைப்படும்படி பேசவில்லை. பெருமையாய் அவரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு ஒரு பக்க ஆச்சர்யத்தையும் மீறி, வெண்ணிலாவிற்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற எண்ணம் மனதிற்க்குள் தோன்றியது.

“மேட்ரிமோனில பொண்ணு பார்க்கப் போறோம்னு சொன்னதும், நீங்க உங்களுக்குப் புடிச்சத செலக்ட் பண்ணி வைங்க. ஆனா, நான் தான் ஃபைனலா சூஸ் பண்ணுவேன்னு நிலன் சொல்லிட்டான். நாங்க செலக்ட் பண்ணதெல்லாம் பார்த்து கிட்டத்தட்ட முப்பது பொண்ணுங்க பக்கமா நல்லா இருந்தாலும் அவனுக்கு த்ருப்தி இல்ல. கடைசியா உங்க வெண்ணிலாவத்தான் பார்க்கணும்னு சொன்னான். சரி, அவன் பார்க்கலாம்னு சொல்றதே பெரிய விஷயம். போய்ப் பார்த்துடலாம்னு தான் உடனே வந்துட்டோம். வந்ததுக்கப்பறம் தான் நீங்கன்னே எங்களுக்குத் தெரிஞ்சது.” என்றார் பத்மநாபன்.

“பையன் மைக்ரோசாஃப்ட்ல வேலை பார்க்கறார்ன்னு சொன்னதும், எங்களுக்கும் கொஞ்சம் த்ருப்தியா இருந்துச்சு. அங்க வேலை செய்யறது எவ்ளோ பெரிய விஷயம்.? எல்லாருக்குமே அந்த வாய்ப்பு அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது. ஆனா, உங்க பேரன் அங்க வேலை செய்யறார்ன்னா அது அவருடைய திறமையா தான் இருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டோம். போட்டோ பார்க்கும் போதே, ஒரு மனத்ருப்தி எங்களுக்கு. இருந்தாலும், நேர்ல பார்த்துப் பேசிட்டா ஒரு நிம்மதி இருக்கும்னு தான், நாங்களும் நீங்க கேட்டப்போ உடனே சரின்னு சொன்னோம்.” என்றார் பிராகாஷ்.

“அதுவும் இல்லாம, இப்போ வெண்ணிலாவுக்கும் அமெரிக்கா போக அவ வேலை பார்க்கற ஹாஸ்பிடல்ல இருந்து வாய்ப்பு வந்திருக்கு. அதனால தான் நாங்களும் இந்த வரன பார்க்கறதுல என்ன தப்புன்னு நினைச்சோம். இல்லைன்னா என் பொண்ண அவ்ளோ தூரம் கட்டிக்கொடுக்க எங்களுக்கு விருப்பம் இல்ல.” என்றார் சந்திரா.


“யாரு, யாரோட சேரணும்னு ஆண்டவன் முடிச்சு போட்டிருக்கானோ, அதை யாராலும் மாத்த முடியாது மா. நிலனுக்கு, வெண்ணிலா தான்னு இருந்தா, அதை நம்ம யாருமே தடுக்க முடியாது. எல்லாத்தையும் கடவுள் காலடில போட்டுட்டு நம்ம வேலையப் பார்ப்போம்.” என்றார் பத்மநாபன்.

இதைத்தவிர பல பொதுவான விஷயங்களைப் பற்றியும் அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, ஒரு நிமிடம் மேலே பார்த்த கமலம்,

"நாமதான் ரொம்ப சுவாரசியமா பேசிட்டு இருக்கோம். பசங்க ரெண்டு பேரும் மேல போய் அரை மணி நேரம் ஆகுது. என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியல." என்று சொல்லி சிரித்தார்.

"எதிர்காலத்தில் வாழப் போறவங்க அவங்க. பேசிக்க எவ்வளவோ விஷயம் இருக்கும். பேசட்டும், பேசி ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுக்கட்டும்." என்றார் பத்மநாபன்.

ஆனால், மேலே நடப்பது என்னவோ அப்படியே எதிர்ப்பதமாக இருந்தது. அவர்கள் இருவரும் இன்னும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நீண்ட நேரமாகப் பொறுத்துப் பார்த்தவன் அதற்கு மேல் முடியாதவனாய், அவனே பேச ஆரம்பித்தான்.

"ஓகே மிஸ்.வெண்ணிலா, நானும் ரொம்ப நேரமா நீங்க பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா இன்னும் உங்களுக்குத் தயக்கம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். உங்களுக்கு எப்ப பேசணும்னு தோணுதோ அப்போ பேசுங்க. நாங்க நாளைக்குக் கூட வரோம். இன்னும் கொஞ்ச மாசம் நாங்க இங்கதான் இருப்போம். சோ, எங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல." என்றபடி எழுந்துவிட்டான்.

அவன் எழுந்ததைப் பார்த்தவள், "இல்ல ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதை எப்படி சொல்றதுன்னு தான், இவ்வளவு நேரமும் யோசிச்சிட்டு இருந்தேன்." என்று அவள் சொன்னதும், புருவத்தைச் சுருக்கி அவளையே பார்த்தான் நிலன்.


தொடரும்…….









உங்கள் கருத்துக்களை கருத்துத் திரியில் பகிரவும் மக்களே!

 
Last edited:

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 2

வெண்ணிலா தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொன்னதும், அவளை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தான் நிலன். அந்தப் பார்வைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது கூட வெண்ணிலாவுக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது.

“பரவாயில்ல, நான் சைக்காலஜி படிச்சது வீணாப் போகல.” என்றதும், அவனைப் புரிந்துகொள்ளாது பார்த்தாள்.

“இல்ல, இவ்ளோ நேரமும் நீங்க அமைதியா இருக்கறதப் பார்த்து உங்களுக்கு இந்த திருமண ஏற்பாட்ல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதை நீங்களா சொல்லாம நானா எப்படி கன்ஃபார்ம் பண்றது? அதனால தான் இத்தனை நேரமும் அமைதியா இருந்தேன்.” என்றான்.

அதைக் கேட்டு அவள் சலிப்புத்தட்டும் ஒரு பார்வையை அவனிடம் காட்டினாள். அவனோ அதைக் கண்டு ரசித்தவிதமாக அலட்டிக்கொள்ளாமல் சிரித்தான்.

“சரி, என்ன ரீஸன்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?” என்றான்.

“அது ரொம்பப் பெரிய கதை. அதை சொல்ல எனக்கு ஒரு நாளே வேணும். அவ்ளோ டைம் எனக்கு இல்ல. வீட்ல எல்லாரும் கட்டாயப்படுத்துனாங்க, அதனால தான் இந்தப் பொண்ணு பார்க்கற படலத்துக்கு ஓகே சொன்னேன். சொல்லப்போனா, இப்படி மாப்பிள்ளை வந்ததும், அவங்க முன்னாடி ஒவ்வொரு முறையும் போய் பொம்மை மாதிரி நின்னுட்டு, அவங்க என்ன சொல்வாங்களோன்னு பயந்துட்டு இருக்கற சராசரி பொண்ணு நான் இல்ல. நான் ஒரு டாக்டர். எனக்குன்னு பல கடமைகள் இருக்கு. ப்ளீஸ் அதைப் புரிஞ்சுக்கோங்க.” என்றாள் வெடுக்கென.

அதைக் கேட்ட நிலன், “அஃப்கோர்ஸ் நீங்க டாக்டர்ன்னு தெரிஞ்சு தான உங்களப் பார்க்க இத்தனை மைல் தாண்டி இங்க வந்திருக்கோம். ஒரு டாக்டரோட பொறுப்புகள், கஷ்டங்கள், கடமைகள் இதெல்லாம் என்னன்னு எனக்கும் தெரியும். ஏன்னா, எங்கம்மாவும் ஒரு டாக்டர் தான். சோ, அதெல்லாம் எங்க ஃபேமிலிக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல.” என்றான்.

அப்போது அவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “அம்மா டாக்டரா…?” என்று தன் வாய்க்குள்ளேயே முணகிக்கொண்டாள்.

“எனக்கு உங்க ப்ரொஃபைல மேட்ரிமோனில பார்த்ததுமே பிடிச்சுது. அதான், பார்க்க வந்தோம். நீங்க மேரேஜே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அப்படி என்ன பெரிய கதைன்னு நான் தெரிஞ்சுக்க விரும்பறேன்.” என்றான்.

“அதான், சொன்னேனே. அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல, ஒரு நாளே தேவைப்படும்ன்னு.” என்றாள் அதே அலட்சியத்துடன்.

“பரவாயில்ல மிஸ்.வெண்ணிலா. நாங்க எந்த முடிவும் தெரியாம போகறதா இல்ல. இன்னும் ஒரு த்ரீ மன்த்ஸ் இங்க தான் இருக்கறதா ப்ளான். சோ, அதுல ஒரு நாள் கூடவா கிடைக்காது? அந்த நாள்ல கண்டிப்பா நாம எகைன் மீட் பண்ணலாம். எனக்கு ரீசன் தெரிஞ்சே ஆகணும்.” என்று பிடிவாதமாய்ப் பேசியவனை ஒரு கணம் பார்த்து பெருமூச்சை விட்டாள் வெண்ணிலா.

இருவரும் இறங்கி கீழே வர, பெரியவர்களின் கண்களில் எதிர்பார்ப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“என்ன பேராண்டி, பேசியாச்சா? என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ரெண்டு பேரும்?” என்றார் பத்மநாபன்.

“தாத்தா, எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் வேணும். இன்னைக்குத்தானே முதல்ல பார்க்கறோம். சட்டுன்னு முடிவெடுக்க முடியல. கொஞ்ச நாள் பேசிப் பழகிட்டு சொல்றோமே.” என்று வெளிப்படையாகப் பேசிய நிலனை பத்மநாபன், கமலத்தைத் தவிர அனைவருமே வியப்பாகத்தான் பார்த்தனர்.

அதைப் புரிந்துகொண்ட பத்மநாபன், “அவன் இப்படித்தான். சட்டுன்னு முடிவெடுக்க மாட்டான். எதையும் யோசிச்சு நிதானமா தான் முடிவு பண்ணுவான். நீங்க அனுமதி கொடுத்தா அவங்க ரெண்டு பேரும் பேசிப் பழகட்டும். நாங்க இன்னும் மூணு மாசத்துக்கு இங்க தான் இருப்போம். எப்படியும், இவனோட கல்யாணத்த முடிச்சிட்டுப் போகணும்னு தான் ஆசை. பார்க்கலாம், எது நடக்க இருக்கோ அது நல்லதாகவே நடக்கட்டும்.” என்று நேர்மறையாய் பேசியவரின் பேச்சு அனைவரின் மனதிலும் ஒரு நிம்மதியைப் பரவச் செய்தது.

“தாரளமா.. எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்ல. கல்யாணம் நல்லபடியா நடந்தா சந்தோஷம்.” என்றார் ரமணி அம்மாள்.

அப்போதைக்கு அனைவரும் ஒருமனதாக இதற்க்கு சம்மதம் தெரிவித்து விடைபெறத் தயாராகினர். அப்போது நிலன் ஏதோ தோன்றியவனாக,

“எனக்கு வெண்ணிலா அவங்களோட போன் நம்பர் வேணும். நான் வாங்கிக்கலாம் தானே?” என்றான் அவர்கள் அனைவரையும் பார்த்து.

அதைக் கேட்டவர்கள் இதழ்களில் சிறு புன்சிரிப்பு. “அட என்னப்பா! தாரளமா வாங்கிக்கோங்க. நானே தரேன்.” என்று அவனிடம் அவளின் எண்ணைப் பகிர்ந்துகொண்டார் பிரகாஷ்.

வாங்கிக்கொண்டவன், வெண்ணிலாவைப் பார்த்து சிறு புன்னகையுடன் விடைபெற்றான். ஆனால், அவளுக்குத்தான் வெறுப்பாய் இருந்தது. அவர்கள் சென்றதை உறுதிப்படுத்தியவள்,

“நான் தான் இது வேண்டாம்னு சொன்னேனே, ஏன் என்னைத் தேவையில்லாம கட்டாயப்படுத்தறீங்க.? நான் வேணாம்னு சொல்லியும், என்னோட நம்பரக் கேட்டுட்டுப் போறாங்க.” என்று அவள் எரிச்சலில் பேச,

“என்ன அவங்ககிட்ட வேண்டாம்னு சொன்னியா.?” என்றார் சந்திரகலா தனது மகளிடம்.

“ம்ம்..” என்று ஒற்றைச்சொல்லை உதிர்த்தாள்.

“உனக்கு என்ன கிறுக்குப் புடிச்சிருக்கா? அவங்க எவ்ளோ தூரத்துல இருந்து ஃப்ளைட் புடிச்சு உன்னைப் பார்க்க வந்தா, நீ ரொம்ப ஈஸியா வேண்டாம்னு சொல்லியிருக்க? ஏதோ, அவங்க குடும்பம் கொஞ்சம் நல்லவங்களா இருக்கறதால பரவாயில்ல. அதுவும், அந்தப் பையன் எவ்ளோ வெளிப்படையா பழகறோம்னு சொல்லி நம்மள சங்கடப்படுத்தாம போயிருக்கான். அவன் நினைச்சிருந்தா நீ சொன்னதுக்கு வேற ஏதாவது சொல்லி நம்மளக் காயப்படுத்தியிருக்க முடியும். ஆனா, அதைப்பண்ணாம எவ்ளோ தன்மையா நடந்திருக்கான்.” என்றார்.

“ஆமா, எல்லாம் ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். ஆனா, உண்மை என்னன்னு யாருக்குத் தெரியும்?” என்றாள் வெறுப்புடன்.

“நிலாம்மா, எல்லாரும் உலகத்துல ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. மனுஷங்களுக்கு மனுஷங்க மாறுவாங்க. நீ எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கறது தான் தப்பு.” என்றார் பிரகாஷ்.

“மாமா, எனக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுடுங்க. இந்த ஏற்பாட்டால, அத்தை கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாங்க. கூடவே அக்காவையும் கூட்டிக்கிட்டுப் போய்ட்டாங்க. எனக்குத்தான் ரொம்ப வேதனையா இருக்கு. இந்த ஒரு வாரமா அவங்க என்கிட்ட சரியா கூட பேசல. நான் வேணாம்னு சொல்லியும் நீங்க பண்ணதுக்கு இப்போ நான் தண்டனைய அனுபவிக்கிறேன்.” என்றாள் வெண்ணிலா.

“ப்ச்ச்.. அவ கிடக்கிறா மா. நாம நல்ல வரன் வரும் போதே பார்த்து பண்ணா தான் நல்லது. எனக்கு என் பொண்ணு வேற, நீ வேற இல்ல. ரெண்டு பேருமே சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைக்கிறேன். அதுக்காகத்தான் இந்த வரனத் தேடிப் பிடிச்சோம். ஃபேமிலியும் பரவால்ல. பையனும் மனசுக்கு ஓரளவு த்ருப்தியா இருக்கான். இனிமேல் நீதான் முடிவு பண்ணி சொல்லணும்.” என்றார் பிரகாஷ்.

“என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.” என்றாள் திரும்பவும்.

அதைக் கேட்டு அவள் அருகே வந்து அவளது கைகளைப் பற்றி பேசினார் ரமணி.

“இங்க பாரு நிலாம்மா, நாங்க ஒன்னும் உன்னைக் கட்டாயப்படுத்தல. ஒரு குறிப்பிட்ட வயசு வந்தா பொண்ணுங்களுக்கு நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்றது சகஜம். இதை நீ ஏத்துக்கிட்டுதான் ஆகணும். உன் மனசுல ஏற்பட்டிருக்க வலிய எங்களால புரிஞ்சுக்க முடியுது. அதே வேதனையும், வலியும் எங்களுக்கும் இருக்கு. ஆனா, அதையே நினைச்சுக்கிட்டு எத்தனை நாள் இருக்க முடியும்? ஒரு மாறுதல் வேணும் தானே? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. நீ அவங்க சொன்ன மாதிரி அந்தப் பையனோட பேசிப் பழகு. அதுக்கப்பறமும் உனக்கு விருப்பமில்லைன்னா வேற பார்த்துக்கலாம்.” என்றார்.

“அப்பவும் இந்தக் கல்யாண விஷயத்தை விடமாட்டீங்க தானே? எப்படியும் நான் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும் இல்ல? என் தலைவிதி எதுவோ அதுவே நடக்கட்டும்.” என்று சங்கடத்தில் பேசியபடி அவ்விடம் விட்டு தனது அறையை நோக்கிச் சென்றவளை அவர்கள் மூவரும் வருத்தத்துடன் பார்த்து நின்றனர்.


******

சென்னையின் பிரத்யேக சாலையான அண்ணா சாலையைக் கடந்து, அடையாறு சாஸ்த்ரி நகர் வந்து சேர்ந்தனர் நிலனும், அவனது தாத்தா, பாட்டியும். பத்மசேஷாத்ரி இல்லம் என பலகையில் பொறிக்கப்பட்ட கேட்டிற்க்கு உள்ளே அவர்களது கார் நுழைந்தது.

பத்மநாபனின் தாத்தா வழி வீடு அது. ஆனால், அந்த இடம் மட்டுமே அவருடையது. மீதமுள்ள அனைத்தும் அவரின் தந்தை பத்மசேஷாத்ரியால் உழைப்பால் உருவானது. அவருடைய மனைவி, இரு மகன்கள் மற்றும் மகள்கள் என சந்தோஷத்திற்க்குக் குறைவில்லாமல் வாழ்ந்த இல்லம்.

மூத்த மகன் தான் பத்மநாபன். அத்தை மகள் கமலத்தையே அவருக்கு மணமுடித்து வாழ்க்கைத் துணையாக்கினர். பெரியவர்களுக்குப் பிறகு, அவரும் அவரது தம்பி ஏகாம்பரமும் தான் அந்த வீட்டைப் பாதுகாத்தனர்.

தங்கைகளுக்குத் திருமணம், விஷேஷம் என அனைத்தும் அங்கேயே சிறப்பாக நடைபெற்றன. ஆனால், ஒரு கட்டத்தில் பத்மநாபனுக்கும், ஏகாம்பரத்துக்கும் சிறு விரிசல் சொத்துப் பிரச்சினையால் உருவானது. சொத்தை சரிசமமாகப் பிரிக்க நினைத்தார் ஏகாம்பரம்.

ஆனால், தந்தையின் நினைவாய் இருக்கும் வீட்டை எப்படி பிரிப்பது என்று யோசித்தார் பத்மநாபன். அதனால், அவரது தம்பிக்கும், தங்கைகளுக்கும் சேர வேண்டிய சொத்துக்களை ஒட்டுமொத்தமாக அவரது உழைப்பில் சேர்த்த பணத்தையும், சிலவற்றை கடனை வாங்கியும் கொடுத்துவிட்டார்.

வீட்டை யாரும் கேட்காமல் இருந்தாலே போதும் என்று நினைத்தார். ஒரு பக்கம் அனைத்தையும் கொடுத்துவிட, கடன் அதிகமானது. வயதும் ஏறிக்கொண்டே செல்ல செய்வதறியாது நின்ற போதுதான், அவருடைய மகன் அனந்தராமனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது.

அமெரிக்க இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அவருடைய சம்பளமும் அதிகமாக இருந்தது. அதை வைத்து ஓரளவு கடனை அடைத்தனர். அதே போல், அந்த சமயம் டாக்டராக இருந்த சுஜாதாவின் வரன் கிடைக்க, உடனே தாமதிக்காமல் இருவருக்கும் திருமணத்தை நல்லபடியாக செய்துமுடித்தனர்.

இருவரும் அமெரிக்கா சென்றுவிட, அங்கேயே ஒரு மருத்துவமனையில் பணியாற்ற ஆரம்பித்தார் சுஜாதா. மேலே படிக்கவும் செய்தார். அதே போல், அனந்தராமனுக்கும் தூதரகத்தில் அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்க, வேலைப்பழுவும் அதிகரித்தது.

இருவரும் பார்த்துக்கொள்ளும் நேரத்தில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். இருவரின் அன்புக்குப் பரிசாக முதல் மகனாய் கார்த்திகேயன் பிறந்தான். அவனை வளர்ப்பது சற்று சிரமமாக இருக்கவே, பெரியவர்களை அங்கேயே வரவழைத்துக்கொண்டனர். அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் போக, வீட்டைப் பராமரிக்க ஆட்களை நியமித்துவிட்டுச் சென்றனர்.

வருடத்திற்க்கு ஒருமுறையாவது பெரியவர்கள் இருவரும் வந்து, இல்லத்தில் இருந்தபடி அந்த வருடம் நடந்த விசேஷங்கள், துக்கங்கள் என அனைத்திற்க்கும் சென்றுவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அதன்பிறகு, மூன்று வருட இடைவெளியில் நிலன் பிறந்தான். தாத்தா, பாட்டி இல்லாமல் பேரன்கள் இல்லை என்ற அளவுக்கு அவர்களிடம் பாசமாக இருந்தனர் இருவரும். அவர்களுடன் பொழுதைக் கழிப்பதையே ஆனந்தமாக நினைத்தனர்.

அனந்தராமனும், சுஜாதாவும் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் அவர்களை விட்டுவிட்டு உழைக்க ஓடினர். அதைப் புரிந்துகொண்ட பெரியவர்கள், அதைப் பேரன்களிடமும் சொல்லிப் புரியவைத்தனர். அதனாலேயே, இயல்பிலேயே புரிந்துகொள்ளும் குணம் நிலனுக்குச் சற்று அதிகமாகவே இருந்தது.

கிடைக்கும் நேரங்களில் தந்தையிடமும், தாயிடமும் பாசத்தைப் பகிர்ந்துகொள்வர். சில சமயம் பெரியவர்களோடு சேர்ந்துகொண்டு நிலனும் இந்தியா வந்துவிடுவான். இதே வீட்டில் அவர்களோடு நேரத்தைக் கழிப்பான். அவர்கள் சென்றுவரும் இடங்களுக்கெல்லாம் சென்று உற்றார், உறவினர்கள் அனைவரையும் தெரிந்துகொள்வான்.

வருடம் ஒரு முறை ஒரே ஒரு மாதம் மட்டுமே வந்து செல்பவர்கள், இந்த முறை ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்கள் இருக்க முடிவு செய்து வந்துவிட்டனர். காரணம் அந்த வீட்டை சீர்செய்து, புதுப்பிக்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 50 வருடங்கள் பழமையான வீடாக இருப்பதால், மழை, புயல், வெயில் என அனைத்தாலும் பொழிவிழந்தும், விரிசலும் அதிகமாகிவிட்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து வீட்டைப் பராமரிப்பவர்கள் சொன்னதாலேயே இந்த முன்னேற்பாட்டோடு மூன்று மாதங்கள் தங்க ஏற்பாட்டுடன் வந்துவிட்டனர்.

நிலனும் கணிணி பணியை வீட்டிலிருந்து செய்வதற்க்கு அனுமதி வாங்கிக்கொண்டு இங்கே வந்துவிட்டான். அதோடு, அவனுக்கு பெண் பார்க்கும் படலத்தையும் பார்த்து முடிவாகிவிட்டால், திருமணத்தையும் இங்கேயே முடித்துக்கொண்டு கிளம்பிவிடலாம் என்பது பெரியவர்கள் திட்டம்.

ஆனால், அனைத்தும் ஒரு சேர நடக்க வேண்டுமே. அது கடவுளுக்கே வெளிச்சம்.

வீடு வந்து சேர்ந்ததுமே பத்மநாபன், “ஏன்டா பேராண்டி, பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்துல ஏதாவது பிரச்சினையா?” என்றார் வந்ததும் வராததுமாக.

அதைக் கேட்டு அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்த நிலன், “எப்படி தாத்தா கரெக்ட்டா சொல்றீங்க?” என்றான்.

“அந்தப் பொண்ணு முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது. அவங்க வீட்ல அந்தப் பொண்ண கட்டயாப்படுத்தியிருக்க மாதிரி தெரியுது. நீயும் கொஞ்சம் பழகணும்னு டைம் கேட்ட, அதை வச்சே புரிஞ்சுக்கிட்டேன்” என்றார்.

“ஆமா தாத்தா. அது ஏதோ பெரிய கதை இருக்காம். அதனால தான் வேண்டாம்னு சொல்றான்னு நினைக்கிறேன்.” என்றான்.

“குடும்பம் நல்ல குடும்பமா தான் தெரியுது. ஆனா, வரப் போற பொண்ணோட முழு சம்மதம் முக்கியமாச்சே. அது இல்லாம கல்யாணம் பண்றது எந்தவிதத்துல சரியா இருக்கும்? பேசாம நாம வேற பொண்ணப் பார்க்கலாமா நிலா?” என்று அவசரப்பட்டார் கமலம்.

“கமலம்.. என்ன பேசற நீ? அவனுக்கு எது சரின்னு படுதோ அதைத்தான அவன் செய்வான். இவ்ளோ தூரம் போய் பார்த்துட்டு வந்திருக்கோம், அந்தப் பொண்ணோட பேசிப் பழகறேன்னு சொல்லிட்டு வந்திருக்கான். விருப்பம் இல்லமலா போன் நம்பர் முதல்கொண்டு கேட்டிருக்கான். நீ எப்படி சட்டுன்னு வேண்டாம்னு முடிவு பண்ண?” என்றார் பத்மநாபன்.

அவர் சொன்னதைக் கேட்டு, அவர் எந்தளவு தன்னைப் புரிந்துகொண்டுள்ளார் என்பதைத் தெரிந்துகொண்ட நிலன் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்தான்.

“டேய். நீ சிரிக்கறதப் பார்த்தா, உங்க தாத்தா சொன்னதுதான் சரியா?” என்றார் கமலம்.

“என்னைக்குமே தாத்தா தான் சூப்பர் பாட்டி. என்னை ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்கார். அவர் சொன்னதுதான் சரி. என்னவோ அந்தப் பொண்ணு மேல எனக்கு கொஞ்சம் இண்ட்ரஸ்ட் அதிகமாவே இருக்கு. நான் எதை வச்சு அந்தப் பொண்ண செலக்ட் பண்ணேன்னு நினைக்கறீங்க?” என்றான் கமலத்தைப் பார்த்து.

“அது.. பொண்ணு கண்ணுக்கு அழகா, லட்சணமா இருக்கா. அதுக்கும் மேல டாக்டர் வேற. யார்தான் வேண்டாம்னு சொல்லுவாங்க.” என்றார்.

“இல்ல பாட்டி. நீங்க செலக்ட் பண்ண எல்லா ஃப்ரொபைலையும் பார்த்தேன். அதுல, நாம எதிர்பார்க்கற விஷயங்கள குறிப்பிட சொல்லியிருப்பாங்க இல்ல? அதுல எல்லாரும் என்னென்னவோ சொல்லியிருக்க, இந்தப் பொண்ணு மட்டும் நோ மோர் எக்ஸ்பெக்ட்டேஷன்னு போட்டிருந்தா. நிஜமா அதைப் பார்த்துதான் பாட்டி அந்தப் பொண்ண நான் செலக்ட் பண்ணேன். இந்தக் காலத்துல இருந்துட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லன்னு சொன்னா, உங்களால நம்ப முடியுதா? எனக்கே நிறைய இருந்துச்சு. அப்படிப்பட்டவள நான் எப்படி மிஸ் பண்ண முடியும் சொல்லுங்க. அதனால தான் நீங்க உடனே கூப்பிட்டதும் வந்துட்டேன்.” என்று அவளைப் பற்றி தன் மனதில் நினைத்திருந்த ரகசியங்களைக் கொட்டினான் நிலன்.

“பேராண்டி…. நீ இந்தளவுக்கு ரசனைக்காரனா டா? எனக்கு இத்தனை நாள் தெரியாம போச்சே. நீ ரொம்ப நல்லவன்டா. அந்தப் பொண்ணு மட்டும் ஓகே சொல்லிட்டான்னா, அவள விட அதிர்ஷ்டசாலி யாருமே இருக்க மாட்டா.” என்று அவனைப் பற்றி அவனிடமே புகழ்ந்தார்.

“அய்யோ தாத்தா! இந்தப் புகழ்ச்சியெல்லாம் இருக்கட்டும். அந்தப் பொண்ணு ஏதோ நிறைய கதை சொல்லணும்னு சொல்லியிருக்கா. அதையெல்லாம் சொல்ல ஒரு நாளே பத்தாதுன்னு வேற சொன்னா. அதனால நாளைக்கு நான் லீவ் போட்டுட்டு அந்தப் பொண்ணுகிட்ட எப்படியாவது பேசி என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஓகே வா?” என்றான் அவர்களைப் பார்த்து.

“இதென்னாடா கேள்வி? இது உன்னோட லைஃப். நீ டிசைட் பண்ணாப் போதும். நாளைக்கு அவளைப் போய் பார்க்கணும்னு உனக்குத் தோணுச்சுன்னா போய்ப் பாரு. அதையேன்டா எங்ககிட்ட அனுமதி கேக்கற. இதென்னா ஸ்கூலா?” என்று பத்மநாபன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“அப்படியில்ல தாத்தா. நீங்க ரெண்டு பேரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் மாதிரி. ஜஸ்ட் ஒரு சஜஷன் நீங்க கொடுத்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். அதுக்குத்தான் கேட்டேன். சரி விடுங்க. நான் ஃபிக்ஸ் ஆய்ட்டேன். நாளைக்கு அவகிட்ட பேசி அப்படி என்னதான் கதைன்னு தெரிஞ்சுக்கப் போறேன்.” என்று சொன்னபடி குதூகலித்துச் சென்றவனைப் பெரியவர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

தொடரும்……..






உங்கள் கருத்துக்களை கருத்துத் திரியில் பதிவிடவும் மக்களே!

 
Last edited:

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 3


அடுத்த நாள் காலை அவளை எப்படியாவது சந்தித்துப் பேசி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தான் நிலன். இரவே அவளுடைய நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுப் படுத்தான்.

அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து தன்னைத் தயார்படுத்திக் கொண்டவன் அப்பொழுதே அவளுடைய எண்ணிற்கு அழைத்தான். ஓரிரு ரிங்கிற்க்கு பிறகே அழைப்பை ஏற்றாள் வெண்ணிலா.

அவனுடைய எண்ணை இன்னும் அவள் சேமித்து வைக்காததால் புது எண்ணாகத் தெரிந்ததும் யாராக இருக்கும் என்று சந்தேகத்தில் தான் எடுத்துப் பேசினாள்.

"ஹலோ.. யாரு?" என்று கேட்க,

எதிர் முனையில் அவனோ, " ஹலோ மிஸ்.வெண்ணிலா நான் தான் நிலன். நேத்து உங்களப் பொண்ணு பார்க்க வந்திருந்தேனே?" என்ற அவனுடைய குரலில் அதிக எதிர்பார்ப்பு தெரிந்தது.

ஆனால் அவளிடமோ வெறுப்பு தான் அதிகரித்தது. ஆனால், அவனிடம் தன் கோபத்தை காட்டிப் பேச அவளுக்கு விருப்பமில்லை. அதனால் தன்மையாகவே பேசினாள்.

"சொல்லுங்க மிஸ்டர்.நிலன் என்ன விஷயம்?" என்றாள் அவனைப் போலவே.

அதைக் கேட்டவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு. "இன்னைக்கு உங்கள மீட் பண்ண முடியுமா? நேத்து நைட்டே உங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேனே பார்த்தீங்களா?" என்றான்.

அதைக் கேட்டு புருவம் சுருக்கியவள், " இப்படி சடர்னா சொன்னா என்னால எப்படி உங்களைப் பார்க்க முடியும்? நான் அவ்ளோ சீக்கிரம் மெசேஜ் எல்லாம் பார்க்கறது கிடையாது. நான் என்ன வீட்ல சும்மாவா இருக்கேன்? நான் ஒரு டாக்டர்ன்னு நேத்து தான் உங்களுக்கு சொன்னேன். அப்படி இருக்கும் போது எனக்கு இன்னைக்கு டியூட்டி இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா? அதுவும் இல்லாம நான் இன்னைக்கு சீக்கிரம் ஹாஸ்பிடல்க்கு போகணும். ஒரு எமர்ஜென்சி கேஸ். சோ, இன்னைக்கு கண்டிப்பா உங்களை என்னால மீட் பண்ண முடியாது. சாரி மிஸ்டர்.நிலன்." என்று வெளிப்படையாகவே அனைத்தையும் சொல்லி விட்டாள்.

அதைப் பொறுமையாகக் கேட்ட நிலன், "ஓகே, அப்போ இந்த வீக்எண்ட்ல உங்களக் கண்டிப்பா நான் மீட் பண்ணனும்னு நினைக்கிறேன். சண்டே நம்ம மீட் பண்ணலாமா? அப்போ ஓகே தானே?" என்றான்.

இவன் விடமாட்டான் போலிருக்கிறது என்று யோசித்தவள், "ம்ம்.. சரி பார்க்கலாம், நான் சொல்றேன்." என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

அப்படி என்னதான் அவள் வாழ்க்கையில் நடந்தது? இத்தனை வெறுப்பு எதற்கு? என்றெல்லாம் யோசித்துப் பார்த்தான் நிலன். பதில் தெரிய ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும் என்று நினைத்தவன், இன்று பணிக்கு விடுப்பு எடுப்பதாக இருந்ததை ரத்து செய்ய நினைத்து உள்ளே சென்றான்.


******

அன்றுதான் வீட்டிற்கு வந்திருந்தனர் ஜோதிலட்சுமியும், வான்மதியும். சந்திரபிரகாஷின் மனைவி மற்றும் மகள். மூன்று நாட்களாகப் பிறந்தகம் சென்றிருந்த ஜோதிலட்சுமி ஒருவாராக தன்னை சமாதானம் செய்து கொண்டவர் திரும்பி வந்திருந்தார்.

அவரைக் கண்டதும் சந்திரகலா அப்போதே வந்தார் அவரிடம். "அண்ணி.. வாங்க.. நீங்க எப்போ வருவீங்கன்னு தான் காத்துட்டு இருந்தேன்." என்று மகிழ்ச்சியாகப் பேசியவளை ஏற இறங்கப் பார்த்தார் ஜோதிலட்சுமி.

ஆனால், அவருடைய பார்வையை பொருட்படுத்தாத சந்திரா, "வெண்ணிலாவுக்கு இந்த வரன் எப்படியும் கண்டிப்பா அமைஞ்சிருன்னு நம்பிக்கை இருக்கு. நீங்களும் கூட இருந்திருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்." என்று பேசியவரை இப்போது முறைத்துக் கொண்டிருந்தார் ஜோதிலட்சுமி.

"எதுக்கு? உன்னோட பொண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமைஞ்சிடுச்சுன்னு நீ அலப்பறை பண்றத பார்க்கவா?" என்றார் அலட்சியமாய்.

அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த பிரகாஷ், "ஜோதி, இப்பதானே வந்திருக்க. அதுக்குள்ள பிரச்சனைய ஆரம்பிக்கிறயா?" என்றார்.

"ஹ்ம்ம்.. யாரு நானா ஆரம்பிக்கிறேன்? நீங்க தான் என்னை இப்படிப் பேச வைக்கிறீங்க. நம்ம வானுக்கு ஒரு நல்லது செய்யாம, அதுக்குள்ள வெண்ணிலாவுக்கு வரன் பார்த்துக் கல்யாணம் பண்றது எந்த விதத்தில் நியாயம்?" என்றார்.

அதைக் கேட்டபடி அங்கே வந்த ரமணி, "ஜோதி உனக்குத் தெரியாதது இல்ல. நாம வானுக்கு வேற எதுவும் பார்க்காமலா இருந்தோம்? அவ அதுக்கு சம்மதிக்கல. கெஞ்சியும் பார்த்தாச்சு. அதுக்கப்பறமும் நாம வேற என்ன பண்ண முடியும் சொல்லு? நிலாவுக்கும் வயசு கூடிக்கிட்டே போகுது. இந்த அக்டோபர் வந்தா அவளுக்கு 25 வயசு ஆயிடும். அவளுக்கும் கால காலத்தில ஒரு நல்லது பண்ணனும்னு நினைச்சோம். அது தப்பா?" என்றார்.

"நீங்க தாராளமா வெண்ணிலாவுக்கு பண்ணுங்க அத்த. அத நான் தடுக்கவும் இல்ல, வேண்டாம்னும் சொல்லல. ஆனா, வானுவுக்கு ஒரு நல்லது பண்ணிட்டு அதுக்கப்புறம் அவளுக்கு பண்ணுங்கன்னு தான் சொல்றேன். அதை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க?" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினார் ஜோதிலட்சுமி.

அதுவரை அங்கே அமைதியாக அமர்ந்திருந்த வான்மதி, "அம்மா கொஞ்சம் நிறுத்துறியா?அதான் பாட்டி எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னதால தான் நிலாவுக்குப் பார்க்கறோம்னு சொன்னாங்கள்ல உனக்குக் காதுல விழுகலையா?" என்றாள் ஆவேசமாக.

"ஏய்.. என்னடி? நான் உனக்காகத் தான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ என்னையே எதிர்த்துப் பேசற?" என்று அவளிடம் எகிறினார்.

அவரிடம் கையெடுத்துக் கும்பிட்டவள், "போதும்மா நீ எனக்காகப் பேசினது, பண்ணதெல்லாமே போதும். இதோட நிறுத்திக்கோ. இதுக்கும் மேல வேண்டாம். நான் ஒரு தடவை சித்திரவதைப்பட்டு சின்னாபின்னம் ஆனதே போதும். இதுக்கும் மேல என்னால முடியாதுன்னு நான் உன்கிட்ட பல தடவை சொல்லி இருக்கேன். எனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு இதுக்கும் மேல நினைக்காத, அதைப் பத்தியும் பேசாதன்னும் சொல்லியிருக்கேன். ஆனா நீ இன்னும் அதைப் பத்தியே பேசிப்பேசி என்னைக் கஷ்டப்படுத்தறதும் இல்லாம, ஒட்டுமொத்த நம்ம குடும்பத்தையே நீ காயப்படுத்திட்டு இருக்க." என்றாள் தன் பேச்சில் ஆவேசம் குறையாமல்.

“ஆமாடி. நீ எல்லாத்துக்கு என்னையே குத்தம் சொல்லு. நான் மட்டும் என்ன எதிர்பார்த்தேனா? நீ நல்லா இருக்கணும்னு தான நினைச்சேன். ஒவ்வொரு அம்மாவும் என்ன பண்ணுவாங்களோ அதைத்தான் நான் உனக்கும் செய்யணும்னு நினைச்சேன். ஆனா, யாருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்கும்னு?” என்று புலம்பினார்.

“அம்மா. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். தயவுசெய்து இதுக்கும் மேல எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சுட்டு தேவையில்லாத வார்த்தைகள விடாத. அது நம்ம குடும்பத்துக்கு நல்லதில்ல. எனக்கு தான் இப்படி ஆயிடுச்சு. ஆனா, நிலாக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்னு தான் நானும் நினைக்கிறேன். அது வரும்போது அமைஞ்சா தானே உண்டு. அதனால தான் பாட்டி, அப்பா, அத்தை எல்லாரும் அவங்கள வரச்சொன்னாங்க. இதுல உனக்கு என்னம்மா பிரச்சினை? நானும் இங்க இருக்கக் கூடாதுன்னு நீ என்னையும் கூட்டிக்கிட்டுப் போய்ட்ட. அங்க தாத்தா, பாட்டி இருந்தாங்கன்னு தான் பேசாம இருந்தேன். இங்க வந்து நீ உன் மனசுல இருக்கறத சொல்லும் போது என்னால அமைதியா இருக்க முடியல.” என்றாள் வான்மதி.

அதைக் கேட்டு கண்ணீர் மல்க, அவளை அணைத்துக்கொண்டார் சந்திரகலா.

“ரொம்ப நன்றி வானுமா. நீ எங்கள விட வயசுல சின்னவன்னாலும், மனசளவுல பெருந்தன்மையா நடந்துக்கற. நீயும் என்னோட பொண்ணு தான். அதுல எந்த மாற்றமும் இல்ல. உங்கம்மா நினைக்கறதுல எந்தத் தப்பும் இல்லடா. அம்மா ஸ்தானத்துல இருந்து பார்க்கும் போதுதான் அந்த வலி தெரியும். உன்னை நினைச்சு ஜோதி அண்ணி வருத்தப்படாத நாளே இல்ல. இப்போ இப்படி ஆகி இருக்கலாம். ஆனா, உனக்கும் சீக்கிரம் ஒரு நல்லது நடக்கும் பாரு.” என்று அவளிடம் ஆறுதலாய்ச் சொன்னார்.

“அத்த, ப்ளீஸ் நீங்களும் இதைப்பத்திப் பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க. என்னால திரும்பவும் அந்த நரக வாழ்க்கைக்குப் போக முடியாது. என்னை விட்ருங்க. நான் இங்க இருக்கறது உங்க எல்லாருக்கும் பாரமா இருக்குன்னா, நான் வேற ஏதாவது ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டுட்டுப் போயிடறேன்.” என்றாள் வெறுப்புடன்.

“வானுமா! என்ன பேசற நீ? அப்படியெல்லாம் பேசாத. என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு யாருமே பாரம் இல்ல. நீங்க எல்லாரும் என்கூட இருக்கறதால தான், நான் இன்னும் உயிரோட இருக்கேன். இல்லைன்னா நான் என்னைக்கோ உங்க தாத்தா கூட போய் சேர்ந்திருக்க வேண்டியது. இந்த மாதிரி இனிமேல் நீ பேசக்கூடாது.” என்று அவளை அணைத்துக்கொண்டார் ரமணி அம்மாள்.

“சரி பாட்டி. நீங்க சொன்ன மாதிரி நான் இனிமேல் இது மாதிரி பேச மாட்டேன். ஆனா, நீங்க யாருமே இனிமேல் இந்த விஷயத்தைப் பத்தி என்கிட்ட பேசக்கூடாது. அவ்ளோதான்.” என்று கட்டளையிட்டவளாய் தனது அறைக்குச் சென்றாள்.

அவள் சென்றதன் பிறகு, “அப்படிப் பார்த்தா நானும், நிலாவுமே உங்களுக்குப் பாரம் தானே?” என்றார் சந்திரகலா.

“சந்திரா.. அவ தான் பேசறான்னா, இப்போ நீயுமா? யாரும், யாருக்கும் பாரம் இல்ல. எல்லாரும் அவங்கவங்க சுயத்துல தான இருக்கோம். அப்படியிருக்கும் போது எதுக்கு இந்த வீண் பேச்சு? விடு. எல்லாமே சரியாகிடும்.” என்று சொன்னார் பிரகாஷ்.

ரமணியும், சந்திராவும் அவர்களது வேலையைச் சென்று தொடர, ஜோதிலட்சுமியின் அருகே வந்த பிரகாஷ், “பார்த்தியா? யாரும் உன்னோட பொண்ண பிரிச்சுப் பார்க்கல. ஏன், அவளே எல்லாரையும் உறவா தான் நினைக்கிறா. ஆனா, உன்னோட புத்தி இருக்கே அது என்னைக்கு மாறுதோ, அப்போதான் நம்ம வீட்டுக்கு விடிவு காலம். அதுவரைக்கும் இப்படித்தான் இருக்கும். தயவுசெய்து உன்னால இந்த வீட்டுக்கு நல்லது பண்ண முடியலன்னாலும், கெட்டது பண்ணனும்னு நினைக்காதே.” என்றார்.

அதைக்கேட்ட ஜோதியின் கண்கள் அவரின் மேல் அனல் பார்வையை வீசியது.

“ஆமா, நான் தான் இந்த வீட்டுக்கு சாபம் கொடுத்திருக்கேன். எல்லாமே இந்த வீட்டோட விதி. அதை மாத்த யாரால முடியும்? ஏதோ, நான் தான் எல்லா தப்புமே பண்ண மாதிரி என்னையே எல்லாரும் குறை சொல்லுவீங்க. இதோ உங்க பொண்ணு கூட அதையே தான் சொல்லிக்காட்டிட்டுப் போறா. விடுங்க என்னை யாருமே புரிஞ்சுக்க ஆளில்ல. அப்படியிருக்கும் போது நான் என்ன பண்ண முடியும்?” என்று கண்ணீரை வடித்துக்கொண்டே உள்ளே சென்றார் ஜோதி.

அதைக் கண்ட பிரகாஷ், எப்போதுதான் இந்தப் பிரச்சினை எல்லாம் தீர்ந்து அனைத்தும் நல்லாதாக நடக்குமோ? என்று நினைத்துக்கொண்டே பெருமூச்சு விட்டார்.


******

எப்போது ஞாயிறு வரும் என்று காத்திருந்தான் நிலன். ஆனால், வெண்ணிலாவிற்க்கோ, அவள் எதையுமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்க்கு மருத்துவமனையில் வேலைப்பழுவில் இருந்தாள். அதனால், நிலன் சொன்னதைக் கூட அவள் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.

நிலனோ, வெண்ணிலாவின் வீட்டினருக்குத் தெரியப்படுத்திவிட்டு அவளை ஞாயிறு அன்று அழைத்துப் போக வந்திருந்தான். அதை அறியாத வெண்ணிலாவோ நன்றாகப் படுத்து உறங்கி எழுந்தவள், இரவு உடையில் மொட்டை மாடி பால்கனியில் அமர்ந்து கடல் காற்றை ரசித்தவாறே காஃபி குடித்துக்கொண்டிருந்தாள்.

முந்தைய நாள் பகல் முழுவதும் வேலை பார்த்தவள், இரவு ஒரு அவசர சிகிச்சைக்காக அங்கேயே இருந்துவிட்டாள். விடியற்காலை 3 மணிக்கே வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள். அதனால் தான் இன்று வீட்டில் இருக்கிறாள். இல்லையென்றால் ஞாயிறு அன்று கூட மருத்துவமனைக்கு சில சமயம் சென்றுவிடுவாள்.

அவசரம் என்றால், எந்த நேரம் என்றுகூட பார்க்க மாட்டாள். பத்து நிமிடத்தில் எல்லாம் உடனே கிளம்பி, மருத்துவமனை அருகே இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்க்குள் சென்று சேர்ந்துவிடுவாள்.

இப்படியிருக்க, நிலன் அவளை அழைத்துப்போக வந்திருப்பதை அறியாமல் சாவகாசமாய் மேலே நின்றுகொண்டிருந்தாள். கீழே அவளின் குடும்பத்தினர் அவனை உபசரிக்க, அப்போதுதான் முதன்முறை ஜோதிலட்சுமி அவனைப் பார்த்தார்.

“இதுதான் என்னுடைய வைஃப் ஜோதி.” என்று அவனுக்கு அறிமுகம் செய்துவைத்தார் பிரகாஷ்.

அவரைப் பார்த்து புன்னகைத்த நிலனுக்கு பதிலாக ஜோதி ஒரு சிறு தலையசைப்பை மட்டுமே தந்தார். அது அவனுக்கு புரியாமல் இல்லை. அவரைத் தொடர்ந்து வந்த வான்மதியைப் பார்த்தான்.

“இது என்னோட பொண்ணு வான்மதி. உங்கள மாதிரியே சாஃப்ட்வேர் இன்ஜினியர் தான்.” என்று அவளையும் அறிமுகப்படுத்தினார்.

அதைக் கேட்டு முகம் மலர்ந்தவன், “ஹாய்… நான் நிலன்.” என்று அவளிடம் கையைக் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டான்.

அவளும் அவனுடைய பணிவான குணத்தைக் கண்டு வியப்பானவளாய், “அப்பா சொன்னாரு. நீங்க தான் எங்க நிலாவுக்கு பார்த்திருக்க அமெரிக்க மாப்பிள்ளைன்னு. ரொம்ப ஹேப்பி.” என்று சகஜமாய்ப் பேசினாள்.

அதைக் கேட்டு முறுவலித்தவன், அனைவரிடமும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தானே தவிர அவன் கண்கள் வெண்ணிலாவைத் தேடுவதைத் தான் மும்முரமாய் செய்துகொண்டிருந்தது.

அதை அறிந்த குடும்பத்தினர் அவனது தவிப்பைப் புரிந்துகொண்டார்கள். “நிலா, மேல மொட்டைமாடி பால்கனில இருக்கா. நைட் ஒரு எமர்ஜென்சி கேஸ்ன்னு அங்கயே இருந்துட்டா. மிட் நைட்ல தான் வந்தா. அதனால தான் கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கா. இன்னும் குளிச்சிருக்க மாட்டா.” என்றார் சந்திரகலா தயக்கத்துடன்.

“பரவாயில்ல ஆண்ட்டி. இருக்கட்டும். நான் அவங்களப் பார்த்து பேசிட்டு, அவங்க ரெடியானதும் கூட்டிட்டுப் போறேன்.” என்றான் இலகுவாக.

“இன்னும் கொஞ்ச நேரத்துல டிஃபன் ரெடியாயிடும். நீங்க தப்பா நினைக்கலன்னா இங்க கொஞ்சம் சாப்பிடுங்க தம்பி.” என்றார் ரமணி அம்மாள்.

“பாட்டி, இதுல என்ன ஃபார்மாலிட்டிஸ்? நான் தாராளமா சாப்பிடுவேன். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இங்க சாப்பிட முடியும்னு நினைக்கறீங்களா? அதெல்லாம் தாத்தா, பாட்டி எதுவும் நினைக்கமாட்டாங்க. சோ, நீங்க அதை நினைச்சுத் தயங்க வேண்டாம். நீங்க ரெடியானதும் சொல்லுங்க. நான் போய் அதுக்குள்ள நிலாவ கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்திடறேன்.” என்று சொன்னவன், மாடிப்படி ஏறி உற்சாகமாகச் செல்வதைக் கண்டவர்களின் மனம் குளிர்ந்தது.

ஆனால், ஜோதி மட்டும் அதைப் பார்த்து உள்ளுக்குள் பொங்கிக்கொண்டிருந்தார். “இதெல்லாம் என்ன கூத்து? இன்னும் முடிவே ஆகல. அதுக்குள்ள பொண்ணப் பார்க்க வரதும், வீட்டுக்குள்ள போய்ப் பேசறதும், சாப்பிடறேன்னு சொல்றதும், கொஞ்சம்கூட நல்லா இல்ல?” என்று வேண்டுமென்றே சொன்னார்.

அதைக் கேட்டு ரமணியும், சந்திராவும் அமைதியாக இருக்க, பிரகாஷ் வாய் திறக்கும் முன், வான்மதி அவரைப் பிடித்துக்கொண்டாள்.

“ஓ! உன் பொண்ண மட்டும் இந்த மாதிரி பார்க்க வந்தாலோ, வீட்ல சாப்பிட்டாலோ, வெளிய கூட்டிட்டுப் போனாலோ அப்போ மட்டும் ஒத்துக்கலாம். இதுவே வேற யாருன்னாலும் உன்னால ஒத்துக்க முடியாது அப்படித்தானே?” என்றதும், ஜோதியின் முகமே மாறிவிட்டது.

வாயே திறக்காமல் அமைதியாய் அவரது அறைக்குச் சென்றுவிட்டார். அதைக் கேட்ட பிரகாஷ், “சபாஷ் வானு, நீயே போதும் உங்கம்மா கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல. இனிமேல் அவ வாயவே திறக்க முடியாது.” என்று அவளைப் பாராட்டினார்.

அதே நேரம் மேலே சென்ற நிலன், அவள் இரவு உடையில் கடல் அழகை ரசித்தவண்ணம் இருப்பதைப் பார்த்து, சில நிமிடங்கள் அப்படியே வாயிலில் கையைக் கட்டி நின்றுகொண்டான்.

கடலின் அழகை ரசிக்கும் அழகை, அவன் ரசித்தான் இப்போது. எதேச்சையாகத் திரும்பியவள் அங்கே தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பவனைப் பார்த்து ஒருகணம் திகைத்தாள்.

அவள் விழிப்பதைப் பார்த்து சிரித்தவன், மெல்ல அவள் அருகே நடந்து வந்தான். “மிஸ்.வெண்ணிலா காலைல இந்த மாதிரி கடலப் பார்த்து ரசிக்கறதே ரொம்ப அலாதியான விஷயம் இல்லையா? அந்த விதத்துல நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்க. நாம இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொல்லியிருந்தேனே, அதான் உங்களக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றான் அவள் கண்களை நேரடியாகப் பார்த்து.

அதைக் கேட்டு, “அதுக்குன்னு இப்படியா நேரா இங்க வருவீங்க? நான் எப்படி இருக்கேன் பாருங்க? எனக்கு இன்னைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். ஒரு எமர்ஜென்சி கேஸ், அது முடிஞ்சு மிட் நைட்ல தான் வந்தேன். இப்போ என்னால வர முடியாது.” என்று அவனோடு வெளியே செல்ல விருப்பமில்லாமல் சாக்கு சொன்னாள்.

ஆனால், அவனோ விடுவேனா என்று, “ஓ! ஒன்னும் பிரச்சினை இல்ல. நாம வெளிய தான் போகணும்னு எந்த ஒரு கட்டாயமும் இல்ல. இங்கயே கூட நாம பேசலாம். எனக்குத் தேவை உங்க ரீஸன் என்னன்னு தெரிஞ்சுக்கறது மட்டும் தான். மத்தபடி அதுக்கு வெளிய தான் போகணும்னு இல்ல. நீங்களே முடிவு பண்ணுங்க.” என்றான் சாமர்த்தியமாக.

அதைக் கண்டு அதிர்ந்தவள், எப்படியும் இவன் விடப்போவதில்லை என்று தெரிந்துகொண்டு, “சரி, ஒரு ஹால்ஃப் ஆன் அவர். நான் குளிச்சு ரெடியாகிட்டு வரேன். போகலாம்.” என்று சொன்னபடி நேரே முதல் தளத்திற்க்குச் சென்று தனதறைக்குள் புகுந்தாள்.

அதைக் கண்டு சிரித்தவன், ரமணி அம்மாளின் கைப்பக்குவத்தை அறிந்துகொள்ள கீழே சென்றான்.




தொடரும்………………








உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும் நண்பர்களே............

 
Last edited:

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 4

வெண்ணிலாவின் வீட்டில் காலை உணவை அமிர்தமாய் ருசித்த நிலன், ஏக போகமாக ரமணியைப் பாராட்டிவிட்டு வெண்ணிலாவைக் கூட்டிக்கொண்டு நேரே மகாபலிபுரத்திற்க்கு வண்டியைச் செலுத்தினான்.

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, அவனுடைய காரில் மெலிதான குளிர்சாதனத்தின் குளிரில், மனதை வருடும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிட, அவனது ரசனையை நினைத்து ஒரு நிமிடம் ஆச்சர்யமானாள் வெண்ணிலா.

ஆனால், அவனது பக்கமே திரும்பவில்லை அவள். வெளியே கிழக்கு கடற்கரைச் சாலையின் அழகை ரசித்தபடியே வந்தாள். இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தவளை, வண்டியை செலுத்துவதில் கவனம் இருந்தாலும் இந்த முறையும் ரசிக்கத் தவறவில்லை அவன்.

எங்கே அழைத்துப் போகிறோம் என்று கூட கேட்கமாட்டாளா? என்று அவளைப் பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.

அப்போது, அவன் அமைதியாக வருவதை நினைத்து ஒரு கணம் அவனை வெண்ணிலா திரும்பிப் பார்க்க, இருவரின் பார்வைகளும் ஒரே நேரத்தில் சந்தித்தன. அவள் என்னவென்று புருவம் தூக்கி அவனைக் கேட்க, அவனும் என்னவென்றே அவளையும் கேட்டான்.

இருவரும் மனதிற்க்குள் சிரித்தாலும், எதுவும் பேசிக்கொள்ளாமலேயே மகாபலிபுரத்திற்க்கு ஒரு மணி நேரத்தில் சென்று சேர்ந்தனர். அங்கே உள்ள ஒரு பிரபலமான கேளிக்கை விடுதிக்குள் காரை விட்டவன், நேரே பார்க்கிங்கில் சென்று நிறுத்தினான்.

அங்கே வெண்ணிலா வருவது முதன்முறை என்பதால், இறங்கியவள் ஒரு முறை அனைத்தையும் சுற்றிப் பார்த்தாள். அதன் பிறகு, அவன் அழைத்துச் சென்ற பூங்காவிற்க்குச் சென்றாள். அங்கே இருந்து கடற்கரைக் காற்று வீச, அலைகள் கதிரவனின் அனலுக்கு நிகராய் போட்டி போட்டுக்கொண்டு வந்தவண்ணம் இருந்ததைப் பார்த்தாள்.

தான் தினமும் ரசிக்கும் அந்தக் கடற்கரையும், இதுவும் சற்றே வித்தியாசப்படுவதை உணர்ந்தாள். அவன் அமருவதற்க்குத் தோதான இடம் காட்ட, அவள் அங்கே அமர அவளுக்கு அருகே எதிரே பேசும்விதமாக சென்று அமர்ந்துகொண்டான் நிலன்.

அதைக் கண்டவள், ஒரு சிறு புன்னகையை மட்டுமே பரிசாகத் தந்துவிட்டு மீண்டும் கடலைப் பார்த்தாள். அதைக் கண்டு பெருமூச்சு விட்டவன்,

“வெண்ணிலா. இது நீங்க தினமும் பார்க்கற கடல் தான். கொஞ்சம் என்னையும் பார்க்கலாமே?” என்றவனை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பார்வைக்குப் பரிசாய் அவனுடைய புன்னகை அவளுக்குக் கிடைத்தது. அதைப் பார்த்தவள், “மிஸ்டர்.நிலன், நீங்க என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்கன்னு தெரியாது. ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி என்னால கல்யாணம் பண்ணிட்டு உங்ககூட வாழ முடியாது. அது எனக்கு ஒத்துவராத விஷயம்.” என்றாள் எடுத்த எடுப்பில்.

அதைக் கேட்டு அவளைக் கூர்ந்து நோக்கியவன், “ஏதாவது லவ் ப்ராப்ளமா? அதனால தான் இந்தப் ப்ரப்போசல் வேண்டாம்னு சொல்றீங்களா?” என்றான்.

“ஹலோ.. எனக்கு லவ்வுன்னாலே பிடிக்காது. அது ஒரு இம்சை. அதை மத்தவங்க பண்ணிட்டு அவஸ்தைப்படறது பத்தாதுன்னு என்னை வேற கேட்கறீங்க?” என்று பாகற்காய் கசப்பைப் போல் பாவனை செய்தவளை அபூர்வமாகப் பார்த்தான் நிலன்.

“இந்தக் காலத்துப் பொண்ணு தான நீங்க? அப்பறம் ஏன் பிடிக்கல?” என்று கேட்டவனைப் பார்த்து முறைத்தவள்,

“ஓ! இந்தக் காலத்துப் பொண்ணுங்கன்னா கண்டிப்பா லவ் பண்ணிருக்கணும்னு விதி இல்ல?” என்றவளிடம் அதற்க்கு மேல் காதலைப் பற்றிக் கேட்க அவனுக்கு விருப்பமில்லை.

“சரி, லவ் ப்ராப்ளம் இல்ல. வேற என்ன ரீஸன்னால நீங்க இது வேண்டாம்னு நினைக்கறீங்கன்னு கொஞ்சம் ஃப்ரான்க்கா சொன்னா நல்லா இருக்கும்.” என்றான்.

அவன் அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் தன்னை நிதானித்துக்கொண்டவள், அதன் பிறகு தொடர்ந்தாள்.

“எங்க பாட்டி ரமணி, தாத்தா ரவிச்சந்திரன் ரெண்டு பேரும் ரொம்பப் பாசமா, அன்பா அவங்க குடும்பத்தோட ஒன்னா வாழ்ந்துட்டிருந்தாங்க. அப்போ தாத்தாவோட அப்பா சாகும் போது, சொத்த பிரிச்சு எல்லாருக்கும் ஒரே மாதிரி சமமா பங்குபோட்டுக் கொடுத்தாரு. அவருடைய வீட்ட மூத்த மகனான எங்க தாத்தாவுக்குத்தான்னு சொன்னத தம்பி, தங்கச்சின்னு யாருமே ஏத்துக்கல. அவர் இறந்ததுக்கப்பறமும் நிறைய கோர்ட், கேஸ்ன்னு ரொம்ப அலைஞ்சாரு. கடைசில முடியாம அந்த வீட்டயும் அவங்களுக்கே கொடுத்துட்டு, இருக்கற பணத்தை வச்சு ஒரு சின்ன தொழில் ஆரம்பிச்சு, அதுல தான் வாழ்ந்துட்டிருந்தாங்க. பாட்டிக்கு ஊறுகாய் போடறது அத்துப்படி. அதனால அதைத்தான் ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா அதுல முன்னேறி வரும் போது, ஒரு நாள் தாத்தாக்கு எதிர்பாராம ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார். அப்போ, அவருக்கு வயசு வெறும் 40 தான். அப்போ, எங்க மாமாவும், என் அம்மாவும் ஸ்கூல் தான் போய்ட்டிருந்தாங்க. தாத்தாவோட இழப்ப, பாட்டியால தாங்க முடியல. இவங்க ரெண்டு பேருக்காகவும் வாழணும்னு ஒரு தைரியத்துல அதே பிஸினெஸ்ஸ அடுத்த கட்டத்துக்கு கொண்டுட்டுப் போனாங்க. கடவுள் அந்த சமயம் அவங்களுக்குத் துணையா இருந்ததால தான், இப்போ நாங்க இருக்க வீட்டையும், பிஸினெஸ் பண்ற இடத்தையும் கட்ட முடிஞ்சது. தாத்தாக்கு அப்பறம் அவங்க சொந்தபந்தம் எல்லாம், ரொம்ப ஒட்டி உறவாடுனாலும் அவங்ககிட்ட அளவாவே தான் இப்போவரைக்கும் இருக்காங்க.” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் சற்று நிறுத்தினாள்.

அப்போது நிலன் மனதிற்க்குள், இதுவரை எந்த ஒரு நிகழ்விலும் இவள் வேண்டாமென்று சொல்வதற்க்கான காரணம் எதுவும் இல்லையே? என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

“பாட்டி, தன்னோட வாழ்க்கை தான் இப்படி ஆயிடுச்சு. பசங்க வாழ்க்கையாவது நல்லா இருக்கணும்னு சொல்லி, அவங்க ரெண்டு பேரையுமே காலேஜ்ல சேர்த்து படிக்க வைச்சதோட இல்லாம, படிப்பு முடிஞ்சதும் வேலையும் வாங்கிக் கொடுத்தாங்க. மாமா, இந்த பிஸினெஸ்ஸையே பார்த்துக்கறேன்னு சொன்னதுக்கு, பிஸினெஸ்ஸ எப்பவும் நம்ப முடியாது. ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தா அந்த சமயம் ஒருத்தராவது நிரந்தர வருமானத்தில இருந்தாதான் நல்லதுன்னு சொல்லி, அவரை வேலைக்கே போகச் சொன்னாங்க. அவரும் பாட்டி சொல்றது சரியா இருந்ததால இப்போ வரைக்கும் வேலைய விடாம போய்ட்டுத்தான் இருக்கார். ஆனா, அவங்க ரெண்டு பேரோட சம்பளத்தையும் பாட்டி ஒரு நாள் கூட வாங்கினது இல்ல. அதை முழுசா அவங்களோட பயன்பாட்டுக்கு மட்டும் தான்னு சொல்லி, சேமிப்புல போடச் சொல்லிட்டாங்க. இப்போவரைக்கும் பாட்டி தான் எங்க குடும்பத்துக்கு ஆகற எல்லா செலவையும் பார்க்கறது. ரொம்ப போல்டானவங்க. இரும்பு மனுஷி. அவங்க மனசு யாருக்கும் வராது.” என்று அவளது பாட்டியைப் பற்றிப் புகழ்ந்த நேரம்,

நிலனுக்கு அவனுடைய தாத்தா ரமணியைப் பற்றிப் பெருமையாகச் சொன்ன சில விஷயங்கள் தான் அப்போது ஞாபகம் வந்தது. அதில் இருக்கும் உண்மையை இப்போது நன்றாகவே தெரிந்துகொண்டான்.

“அதுக்கப்பறம் என்னோட அம்மா, கூட வேலை செய்யற எங்கப்பாவ விரும்பறேன்னு அடம்பிடிச்சு பாட்டிக்கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பாட்டியும், அம்மாவோட விரும்பம் தான் முக்கியம்னு நினைச்சு சம்மதிச்சாங்க. ஆனா, அதுக்கப்பறம் தான் பிரச்சினையே ஆரம்பமாச்சு. அப்பா அவங்க நினைச்ச மாதிரி அந்தளவுக்கு சரியில்ல. நிறைய குடிப்பாராம். அது மட்டுமில்லாம போதைக்கு கூட அடிமைன்னு கேள்விப்பட்டப்போ தான் எல்லாருமே அதிர்ச்சியானாங்க. அப்பாவோட வீட்ல கேட்டப்போ, அவங்க எதுவுமே பேசலையாம். ஒரு கட்டத்துல நான் வயித்துல இருந்தப்போ, எங்கம்மாவ ரொம்ப அடிச்சுக் கொடுமைப்படுத்துனாராம். அதுல அந்த வீட்ட விட்டு வந்தவங்க தான் எங்கம்மா. இப்போவரைக்கும், இங்க தான் இருக்காங்க. ஒரு நாள் அப்பா போதைல வண்டியோட்டிட்டு வரும் போது, ஆக்ஸிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே இறந்துட்டாருன்னு தகவல் வந்தது. அப்போ நான் பிறக்கவே இல்ல. இறுதி சடங்குக்கு போய் எட்டிப் பார்த்துட்டு வந்ததுக்கப்பறம் எங்கம்மா அந்தப் பக்கமே போகல. அவங்க நிழல் கூட என்மேல படக்கூடாதுன்னு இங்கயே இருந்துட்டாங்க. நான் பிறந்தப்போ கூட யாருக்கும் தகவல் சொல்லல. அவங்களும் என்னைப் பார்க்கணும்னு பெருசா கேட்டு வரல. அம்மாவோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு பாட்டி வருத்தப்படாத நாளே இல்ல. அவங்களுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கணும்னு பாட்டி நினைச்சாலும், அதுக்கு அம்மா சம்மதிக்கவே இல்ல.” என்று தனது அம்மாவின் கதையைக் கூறி ஒரு கணம் நிறுத்தினாள்.

அந்த இடைவெளியில், “உங்க அம்மாவுக்கு இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?” என்றான்.

அதற்க்குப் பார்வையை மட்டுமே பதிலாகத் தந்தாள். அதை நினைத்து ஒரு கணம் தன்னைத் தானே தேற்றிக்கொண்டவள், மீண்டும் பேசினாள்.

“அம்மா லவ் மேரேஜ் பண்ணினதால தான் இப்படி ஆயிடுச்சுன்னு பாட்டிக்கு ஒரு ஸ்ட்ராங் நம்பிக்கை உருவாயிடுச்சு. எங்கம்மா கல்யாணம் ஆன பிறகு அப்பாவோட வீட்ல இருந்த சமயம் மாமாவும், ஒரு பொண்ணை விரும்பறேன்னு வந்து நின்னார். அதுக்கு பாட்டி ஒத்துக்கவே இல்ல. இந்தக் காதல்ன்னால கஷ்டப்படறது போதாதா? அதனால வேண்டாம்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. மாமாவும் அவரோட காதல தனக்குள்ளயே புதைச்சுட்டு எங்க பாட்டி செலக்ட் பண்ண ஜோதி அத்தைய கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா, ஜோதி அத்தையும் ஒரு மாதிரி டைப்ன்னு அதுக்கப்பறம் தான் தெரிஞ்சது. தான் நினைச்சது எப்படியாவது நடக்கணும்னு நினைப்பாங்க. அது நடக்கலன்னா அவ்ளோ தான், வீடே ரெண்டாகிடும். அதனால அத்தைக்கும், மாமாவுக்கும் தினமும் சண்டை நடக்குமாம். பாட்டி தான் சமாதானம் பண்ணிப் பேச வைப்பாங்களாம். இதுக்கிடையில எங்க அக்கா வான்மதியும் பிறந்தா. அதுக்கப்பறம் தான் எங்கம்மா அப்பா கொடுமைப்படுத்துனாருன்னு இங்கயே வந்துட்டாங்க. அதை சாக்கா வச்சுட்டு எங்க அத்தை கைக்குழந்தையா இருந்த எங்கக்காவத் தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போய்ட்டாங்களாம். அதுக்கப்பறம் எந்த ஒரு பிரச்சினைன்னு வந்துட்டாலும், உடனே கோவிச்சுட்டு அங்க போய்டுவாங்க. அவங்க வீட்லயும் இவங்க பண்றது வாடிக்கையாகி அப்படியே விட்டுட்டாங்க. இப்போவரைக்கும் பிடிக்காத வாழ்க்கைய வாழ்ந்துட்டிருக்கோமேன்னு எங்க மாமா ஃபீல் பண்ணிட்டே தான் இருக்கார். பொண்ணு, பையனோட வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சேன்னு பாட்டியும் ரொம்ப சோர்ந்துட்டாங்க.” என்று சொன்னவளை ஏறிட்டு நிலன் பார்க்க,

அதை உணர்ந்தவளாய், “இதோட முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காதீங்க, இன்னும் முடியல. இன்னும் சொல்ல வேண்டியது இருக்கு. ஆனா, இப்போ எனக்கு ரொம்பப் பசிக்குது. சாப்பிட்டு முடிச்சதும் மீதிக் கதைய சொல்றேனே.” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவளைப் பார்த்து சிரித்தான் நிலன்.

“எக்ஸாக்ட்லி. நானும் இப்போ அதேதான் ஃபீல் பண்ணேன். கேட்கற நானே டயர்ட் ஆகிட்டேன். அப்போ, நீங்க சொல்லவே வேண்டாம்.” என்று சொல்பவனைப் பார்த்து கண்களைச் சுருக்கி முறைத்தாள் வெண்ணிலா.

அதைப் பார்த்தவன், அவளைச் சமாளிக்கும் விதமாக, “நான் இங்க நம்ம ரெண்டு பேருக்கும் பஃபெட் லன்ச் புக் பண்ணிருக்கேன். நீங்க எல்லாமே டேஸ்ட் பண்ணலாம்.” என்று அவளை அழைத்துக்கொண்டு டைனிங்க் ஏரியாவிற்க்குச் சென்று ஒரு தட்டை எடுத்துக் கொடுத்தான்.

பலவகை உணவுப் பதார்த்தங்கள் அங்கே அவர்கள் சாப்பிடுவதற்க்காக வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொன்றாய் எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டே வந்து, அவன் காட்டிய இடத்தில் அமர்ந்து ஒவ்வொன்றாய் ருசி பார்த்தாள் வெண்ணிலா.

அவள் ருசிப்பதை ஓரக்கண்ணால் ரசித்தான் நிலன். அவள் அதை உணர்ந்து புருவம் தூக்கி, என்ன என்பதைப் போல் கேட்க, அப்போதைக்கு எதையாவது சமாளிக்க வேண்டும் என்று நினைத்து,

“இல்ல, இந்த டிஷ்ஷஷ் எதுவுமே நீங்க இதுக்கு முன்னாடி டேஸ்ட் பண்ணதில்லையா?” என்றான்.

“நான் முதல்ல வெளிய வந்தா தானே இதுமாதிரி சாப்பிடறதுக்கு. எனக்கு வொர்க்கே கரெக்ட்டா இருக்கும். லீவ் டேன்னா அன்னைக்கு நல்லாத் தூங்கணும்னு தான் தோணும். எனக்குத் தெரிஞ்சு காலேஜ் முடிச்சதுக்கப்பறம் ரெஸ்ட்டே இல்லாம ஓடிட்டு தான் இருக்கேன்.” என்றாள்.

அவள் சொல்வதைக் கேட்கப் பாவமாகத்தான் இருந்தது. “நீங்க அதுக்குன்னு ஒரு டைம் ஒதுக்கிக்கோங்க. எங்க அம்மா அப்படித்தான் பண்ணுவாங்க. சின்ன வயசா இருக்கும் போது, உங்கள மாதிரி தான் இருந்தாங்க. அதுக்கப்பறம் கொஞ்சம் மாறி எங்களோட வெளிய வர ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அப்போ, அம்மாவும் இதே மாதிரிதான் சொன்னதா ஞாபகம்.” என்றான்.

“டாக்டர்ஸ்ஸோட லைஃப் அப்படித்தான். நார்மல் பீப்பிள்ஸ் மாதிரி அவ்ளோ சீக்கிரம் எங்கயும் போக முடியாது. ஒரு சிலர் மட்டும் தான் அவங்கள ரொம்ப கம்ஃபர்ட்டபிளா வச்சுக்கிறாங்க. எல்லாராலும் அப்படி இருக்க முடியறது இல்ல.” என்று சொல்பவளின் வார்த்தைகளில் தான் எத்தனை உண்மை? என்று நினைத்தான் நிலன்.

சாப்பிட்டு முடித்து வந்தவர்கள் கடற்கரை அருகே இருந்த மர நிழலில் அமர்ந்துகொண்டனர். கதிரவன் இப்போது சற்றே கருணை காட்டி மேகமூட்டத்தின் இடையில் மறைந்துகொண்டதால், அவர்களுக்கு அந்தக் கடற்கரைக் காற்று, சற்று சில்லென்று இருந்தது அந்த மதிய வேளையில்.

“ம்ம். சொல்லுங்க வெண்ணிலா. அதுக்கப்பறம் என்னாச்சு?” என்று அவளிடம் ஆர்வத்துடன் கேட்க, அவனை அர்த்தமற்ற ஒரு பார்வை பார்த்தாள்.

“எங்க ஸ்டோரியெல்லாம் கேட்க, உங்களுக்கு ரொம்ப வேடிக்கையா இருக்குல்ல? அதுல எவ்ளோ மன உளைச்சல்ன்னு எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.” என்றாள்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் சாதாரணமா தான் கேட்டேன். நீங்க சொல்லுங்க.” என்று சொன்னவனை மேல் ஒரு பார்வையை மேல் வீசிவிட்டுத் திரும்பவும் கடலை நோக்கியபடி சொல்ல ஆரம்பித்தாள்.

“நானும், அக்காவும் நல்லபடியா படிச்சு காலேஜ்ல சேர்ந்தோம். நான் மெடிசின் எடுத்தேன். அக்கா, இன்ஜினியரிங்க் முடிச்சா. அவ வேலைக்குப் போகணும்னு இருந்தப்போ, அதுக்கு அத்தை ஒத்துக்கல. ஒரே பிடிவாதமா அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நின்னாங்க. கடைசில அவங்க பிடிவாதம் தான் ஜெயிச்சது. அவங்க நினைச்ச மாதிரியே அவளுக்கு சிங்கப்பூர்ல வேலை பார்க்கற மாப்பிள்ளையப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவளும் அங்க போய் வேலை பார்க்கணும்னு கனவோட இருந்தா. முதல்ல அவள அவ ஹஸ்பெண்ட் கூட்டிட்டுப் போகல. விசாக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா. அதுவரைக்கும் இங்கயே தான் இருந்தா. மூணு மாசம் கழிச்சு விசா ரெடியானதும், அவர் வந்து கூட்டிட்டுப் போகல. ஏதோ, கம்பெனில லீவ் போட முடியலன்னு சொல்லிட்டார். அதனால, அவளாவே போக வேண்டியதா இருந்தது. போனதுக்கப்பறமும் அவர் பெருசா அவ மேல இண்ட்ரஸ்ட் எதுவும் காட்டல. அதே மாதிரி வாரம் இரண்டு நாள் மட்டும் தான் வீட்டுக்கு வருவாராம். கேட்டா, வேலை ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்லி சமாளிச்சுடுவாராம். அப்படியே ரெண்டு மாசம் போயிடுச்சு. ஒரு நாள் ரொம்ப சந்தேகம் வந்து, அவரோட ஆஃபீஸ்ல போய்க் கேட்டப்போ, அவர் வீட்டுக்கு எப்பவும் கரெக்ட்டா கிளம்பிடுவாரேன்னு சொன்னாங்களாம். அக்காக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அடுத்த நாள், அவர் அங்க இருந்து போகறதுக்கு முன்னாடியே அக்கா வெய்ட் பண்ணி அவர ஃபாலோ பண்ணிப் போனா, அவர் ஒரு வீட்ல போய் இறங்கிப் போனாராம். அங்க ஒரு லேடி, கைக்குழந்தையோட அவர அணைச்சுக்கறதப் பார்த்திருக்கா. அதைப் பார்த்துட்டு அழுதுட்டே வீட்டுக்கு வந்து இருந்திருக்கா. அப்போவே போன் பண்ணி மாமாகிட்டயும், அத்தைகிட்டயும் சொல்லிட்டா. அதைக் கேட்டதும் நாங்க எல்லாரும் ரொம்ப பதறிப்போய்ட்டோம். அவரோட வீட்டுக்கு போன் பண்ணிக் கேட்டா, அவங்க எதுவும் தெரியாத மாதிரியே நடந்துக்கிட்டாங்க. அதுக்கப்பறம், அவர் வீட்டுக்கு வந்ததும், அவர்கிட்ட இதைப்பத்திக் கேட்டு சண்டை போட்டிருக்கா. அதுக்கு அவரு ஏற்கனவே கல்யாணம் ஆனவர்ன்னு சொல்லியிருக்கார். ஏன் ஏமாத்துனீங்கன்னு கேட்டப்போ, வீட்ல சொத்துக்கு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணச் சொன்னாங்கன்னு சொன்னாராம். அவ விடாம சண்டை போட்டப்போ, அவரு அவள அடிச்சு கீழ தள்ளிவிட்டுட்டார். ரெண்டு நாளா, யாருக்கும் தெரியாம அவள அங்க ஒரு ரூம்ல போட்டு பூட்டி வைச்சிட்டார். அவ இங்க போன் பண்ணது அவருக்குத் தெரியாது. அதுக்குள்ள மாமா அங்க போய் அவரோட கம்பெனில விசாரிச்சப்போ, எதையெதையோ சொல்லி மழுப்பி அவர அனுப்பிவைக்கப் பார்த்திருக்கார். ஆனா, மாமாக்கு சந்தேகம் தீரல, அங்க இருக்க அவரோட ஃப்ரெண்ட் மூலமா போலீஸ்க்கு தகவல் கொடுத்து, அவங்க அவர பிடிச்சிட்டுப் போய் விசாரிச்சப்போ தான் அக்காவ ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வைச்சது தெரிஞ்சது. அப்பறம், உடனே போய் அக்காவக் காப்பாத்திட்டாங்க. ரெண்டு நாளா உள்ளயே பசி, தாகம் தாங்காம மயங்கி விழுந்திருந்தா அக்கா. அவள ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்து கொஞ்சம் சரியானதுக்கப்பறம் தான் இங்க மாமா கூட்டிட்டு வந்தார்.” என்று வான்மதிக்கு நடந்தவற்றைச் சொல்லி முடித்தாள்.

“அதுக்கப்பறம், அவங்க ஓகே தானே?” என்றான் நிலன்.

“அதுக்கப்பறம் தான் ஜாப்ல ஜாய்ன் பண்ணா. இப்போதான் கொஞ்சம் தேறி இருக்கா. ஆனாலும், சில சமயம் அந்த பேட் இன்சிடண்ட்ட நினைச்சுப் பார்த்து அழுவா. நான் தான் அவள சமாதானப்படுத்துவேன்.” என்றாள்.

“பாவம் தான் அவங்க.” என்றவன், “சரி, அதெல்லாம் ஓகே. ஆனா, இதுக்கும் நீங்க என்னோட ப்ரப்போசல் வேண்டாம்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை அவளிடம் வைக்க,

அவளோ, “என்ன சம்பந்தம்ன்னா? எனக்கு கல்யாணத்து மேல நம்பிக்கை இல்ல. அதனால தான் வேண்டாம்னு சொன்னேன்.” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்தவன், “உங்க வாழ்க்கைல பார்த்த ஒரு சில விஷயங்களுக்காக, கல்யாணம் மேலயே நம்பிக்கை இல்லன்னு சொல்றது உங்களுக்கே முட்டாள்தனமா தெரியல?” என்று அவன் அமைதியாகத்தான் கேட்டான்.

ஆனால், அவளோ அதைக் கேட்டவுடன் அவனை முறைத்தவாறு அவன் எதிர்பாராத நேரம் வெடுக்கென அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துவிட்டாள்.

“இந்த மாதிரி சென்சிட்டிவ்வான விஷயம் உங்க லைஃப்லயும் நடந்திருந்தா அப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இது என்னோட லைஃப்லதான நடந்திருக்கு. அதனால தான் உங்களுக்கு சிரிப்பா இருக்கு. ப்ளீஸ் மிஸ்டர்.நிலன். இதுக்கும் மேல என்னால எதையும் பேசி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. என்னை வீட்ல ட்ராப் பண்ணிடுங்க.” என்று படபடவென பட்டாசாய்ப் பொறிந்தவளை, வியந்தவண்ணம் பார்த்தான் நிலன்.

அப்போதைக்கு அவன் அவளிடம் வேறு எதுவும் பேசவில்லை. கோபத்தில் இருப்பவரிடம் எதைப் பேசினாலும், எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நன்கு அறிந்தவனாய் வந்து வண்டியை எடுத்தான். வீடு சென்று சேரும்வரை அவன் பக்கமே திரும்பாதவள், உள்ளுக்குள்ளே குமைந்துகொண்டிருந்தாள்.

அங்கே சென்றதும், அவனிடம் எதுவுமே சொல்லாமல் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள். ஆனால், அவனோ அவர்கள் குடும்பத்தினர் ஏதேனும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று நினைத்து உள்ளே சென்று ஒரு வார்த்தை பேசிவிட்டுக் கிளம்பினான்.

வெண்ணிலாவின் மனதைப் புரிந்துகொண்டதால் தான், அவளுடைய கோபத்தையும் பொருட்படுத்தாது அமைதியாக வந்தான். அதே நேரம், அவளுடைய இந்த முடிவு சரியானது இல்லை என்பதையும் நன்கு உணர்ந்தான். அதை மாற்ற வழி கிடைக்குமா? என்று யோசிக்க ஆரம்பித்தான்.



தொடரும்…………………….





உங்களின் கருத்துக்களைக் கருத்துத் திரியில் பகிரவும் நண்பர்களே......................

 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 5

அடுத்த நாள் வழக்கம் போல் மருத்துவமனைக்குக் கிளம்பினாள் வெண்ணிலா. முந்தைய நாள் நிலனுடைய பேச்சின் முடிவால் கோபத்தின் உச்சிக்குச் சென்றிருந்தவள், இப்போது அவை எதையும் நினைவில் கொள்ளாமல் இன்றைய நாளுக்கான பணிகளை மனதில் வைத்துக்கொண்டு, மருத்துவனை வந்தடைந்தாள்.

தன் வண்டியை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியவள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் தவறாமல் இறைவனை வழிபட்டுவிட்டுச் சென்றாள். அங்கே தனது தோழியும், மனநல மருத்துவருமான ரஞ்சனியைக் கண்டாள். அவளைக் கண்டதுமே அவளது முகத்தில் வழக்கம் போல புன்னகை வந்து தொற்றிக்கொண்டது.

குடும்பத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளின் போது, தனது மனதிற்க்கு ஆறுதலும், வழிகாட்டுதலும் தந்தது அவளே என்பதால் அவள் மேல் நட்பிற்க்கும் மேலான பாசம் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

தன் குடும்ப விஷயங்களை சக நண்பர்களிடமோ, வேறு மனிதர்களிடமோ பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இல்லாத நிலையில் ரஞ்சனியுடன் அனைத்து விஷயங்களையுமே வெண்ணிலாவால் சொல்ல முடியும். அத்தனை நம்பிக்கை அவள் மேல். இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த தோழிகள்.

வெண்ணிலா ஐந்து வருடப் படிப்பு முடிந்ததும், குழந்தைகள் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தாள். மனநல மருத்துவருக்கே உரித்தான மென்மையும், பேச்சுத்திறமையும் இயல்பாகவே ரஞ்சனியிடம் இருந்ததால் அவள் அதற்க்குத் தகுந்த துறையையே தேர்ந்தெடுத்திருந்தாள்.

அதனாலோ என்னவோ, அவள் கடந்த வருடங்களில் சென்னையின் சிறந்த மனநல மருத்துவர்களில் ஒருவராக அனைவராலும் கௌரவிக்கப்படுகிறாள். அவள் இந்த மருத்துவமனை மட்டுமல்லாது, வேறு சில மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறாள்.

அதனால், இங்கே திங்கள், புதன் கிழமைகளில் மட்டுமே வருவாள். இன்று திங்கள் என்பதால் அங்கே வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் தனக்குள் ஒரு புது உற்சாகம் பிறந்ததாய் உணர்ந்த வெண்ணிலா, அவளிடம் வேக வேகமாய் வந்தாள்.

புன்னகையுடன் தன்னை நோக்கி வந்தவளைப் பார்த்த ரஞ்சனி, “ம்ம்.. மேடம் என்ன ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல?” என்றாள் சாதாரணமாக.

இது எப்படி இவளுக்குத் தெரிந்தது என்று யோசித்தவளாய், “அது எப்படி உனக்குத் தெரிஞ்சது ரஞ்சு? ஆனா, நான் அத உன்கிட்ட முகத்துல கூட காட்டலயே.” என்றாள் ஆச்சர்யமாக.

“ஹே! சிம்பிள் யா. நான் ஒரு சைக்காட்ரிஸ்ட்ன்னு தெரிஞ்சும் எப்படி உன்னால ஆச்சர்யப்பட முடியுது? உன்னோட ரியாக்‌ஷன்ஸ வைச்சே நீ எப்படி இருக்கன்னு என்னால சொல்ல முடியும். சொல்லு என்ன ப்ராப்ளம்?” என்றாள்.

எப்பொழுது யாரிடமாவது இந்த விஷயத்தைச் சொல்லி ஆறுதல் தேடலாம்? என்று நினைத்தவளுக்கு, இப்போது ரஞ்சனியே என்னவென்று கேட்டதால் அனைத்தையும் மனம் திறந்து சொல்ல வந்தாள்.

“என்னைப் பொண்ணு பார்க்க வந்தாங்கன்னு அன்னைக்கு சொன்னேன் இல்ல ரஞ்சு, அவர் என்னை நேத்து வெளியில கூட்டிட்டுப் போனார்.” என்றாள்.

நிலன், வெண்ணிலாவைப் பார்த்துச் சென்ற பிறகு, அதைப்பற்றி ஒரு நாள் ரஞ்சனியிடம் சொல்லியிருந்ததை நினைத்தவளுக்கு அது ஞாபகம் வர, “ஹே! சூப்பர் யா. எங்க போனீங்க?” என்றாள் உற்சாகம் பொங்க.

“மகாபலிபுரம்ல இருக்க ஒரு ரெசார்ட்டுக்கு.” என்றாள்.

“வாவ்! எப்படி இருந்துச்சு? சார் எப்படி? ஸ்மார்ட்டா? உனக்கு ஓகேவா?” என்று அடுக்கடுக்காய் கேள்விகள் வைத்தாள்.

“இரு இரு ரஞ்சு, நீ ரொம்ப எதிர்பார்க்கற. ஆனா, நீ நினைக்கிற மாதிரி இல்ல. நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு என்ன ரீசன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு கூட்டிட்டுப் போனார்.” என்றாள்.

“ஹூம்ம் அதையெல்லாம் ஏன் அவர்கிட்ட போய் சொல்லிட்டு இருக்க? இதெல்லாம் ஒரு ரீசனான்னு நினைச்சிருப்பார்.” என்றாள் ரஞ்சனி.

அவளைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள், “இது முட்டாள்தனமா தெரியலையான்னு கேட்டுட்டார். எனக்கு கோபம் வந்து அங்கிருந்து பேசாம வீட்டுக்கு வந்துட்டேன்.” என்றாள்.

“பின்ன, அது உண்மை தான? அவர் சரியா தான கேட்டிருக்கார்.” என்று ரஞ்சனி சொன்னதும், அவளை முறைத்தாள்.

அதற்க்குள், மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்களும் நேரத்திற்க்கு தங்கள் அறைகளுக்குச் செல்ல, வெண்ணிலாவும் அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் செல்வதைப் பார்த்து சலித்தவளாய் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள் ரஞ்சனி. அதன் பிறகு, அன்றைய பொழுது அவர்களுக்கு எப்பொழுதும் போல நோயாளிகளுடன் செல்ல அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், வெண்ணிலாவால் தான் சட்டென நிலனின் வார்த்தைகளைக் கடந்து வர முடியவில்லை. போதாக்குறைக்கு இப்போது ரஞ்சனியும் அதை சரிதான் என்று சொல்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று மாலை வழக்கம் போல் ரஞ்சனி தனது வேலை சீக்கிரமே முடிந்துவிட்ட காரணத்தால், வெண்ணிலாவைக் காண அவள் இருக்கும் குழந்தைகள் மருத்துவர் அறைக்குச் சென்றாள். அப்போதுதான் அவளும் கிளம்புவதற்க்குத் தயாராக நின்றாள்.

மாலை, வேறொரு குழந்தைகள் மருத்துவர் அங்கே காண வருவதால், வெண்ணிலா அந்த நேரம் கிளம்பிவிடுவாள். ஏதாவது முக்கிய அவசரம் என்றால் மட்டுமே அங்கேயே இருப்பாள்.

இன்று எப்பொழுதும் போல கிளம்பிக்கொண்டிருந்தவள் வாயிலில் தனக்காகக் காத்திருக்கும் ரஞ்சனியைக் கண்டதும், எதுவும் பேசாமல் அவளைக் கடந்து செல்ல நினைத்தபோது, அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் ரஞ்சனி.

“நிலா டியர். எனக்கு ரொம்பப் பசிக்குது. கேண்டீன் போனா, அங்க நம்ம முத்து அண்ணா சூடா வடையும், டீயும் போட்டுட்டிருப்பாங்க. நாம அதை சாப்டுட்டே கொஞ்ச நேரம் பேசலாம். உனக்கு ஓகே தான?” என்றாள் கண்களை உருட்டி.

அவள் சொன்னவிதத்தைப் பார்த்து சிரிக்க முயன்றவள், அத்தனை நேரம் அவளிடம் ஒட்டியிருந்த கோபத்தை மறந்து மெலிதாய் புன்னகை சிந்தினாள். அதைப் பார்த்த ரஞ்சனியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பின் பிரகாசம்.

“எனக்குத் தெரியும். நீ வராம இருக்கமாட்டியே?” என்று சொன்னவள், வெண்ணிலாவின் தோள்களைப் பிடித்து அவளை முன்னே தள்ளிக்கொண்டே சென்றாள் விளையாட்டாக.

வெண்ணிலாவும், ரஞ்சனியும் மருத்துவமனையில் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், அவர்கள் கேண்டீனுக்குத் தவறாமல் சென்று வடை மற்றும் தேநீரைச் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் ஆனாலும் பேசிவிட்டுச் செல்வது வழக்கம்.

வெண்ணிலாவின் மனதை சாந்தப்படுத்த முதல் வழி இதுதான் என்பதை நன்றாகவே தெரிந்துகொண்டதால் தான் ரஞ்சனி அங்கே அவளை அழைத்துச் சென்றாள். வழக்கம்போலவே ஆளுக்கு இரண்டு வடைகளையும், தேநீரையும் சொல்லிவிட்டு வந்து வெண்ணிலாவின் அருகே அமர்ந்தாள்.

அங்கே பணி செய்பவர் கொண்டுவந்து கொடுத்த வடையையும், தேநீரையும் தனக்கொன்றும், அவளுக்கொன்றுமாகக் கொடுத்துவிட்டு சாப்பிட்டபடியே கேட்டவள், “சொல்லு நிலா டியர், அப்படியென்ன கோபம் என்மேல உனக்கு?” என்றாள்.

அவள் கேட்டதும் நிமிர்ந்தவள், “நான் தான் முட்டாள்தனமா யோசிக்கறவளாச்சே. அப்பறம் ஏன் என்கூட எல்லாம் பேசறீங்க மிஸ்.சைக்காட்ரிஸ்ட்.” என்றாள் சிறிது கோபம் துளிர்க்க.

“ஏய், நீ பேசறதப் பார்த்தா வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளத்தனமா இருக்கு. லுக் நிலா, நீ ரொம்ப சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ற. ஒரு வேளை நீ பீடியாட்ரிஷியனா இருக்கறதால குழந்தைகள தினமும் பார்த்துப் பார்த்து, உனக்கு அதோட எஃபக்ட் வந்துடுச்சோன்னு எனக்குத் தோணுது.” என்றாள் தேநீரைப் பருகிக்கொண்டே.

அதைக் கேட்டு உதட்டைச் சுழித்த வெண்ணிலா, “நான் ஒன்னும் சின்னக்குழந்தை இல்ல ரஞ்சு. எனக்கும் மெச்சூரிட்டி இருக்கு.” என்று எரிச்சலில் பேசினாள்.

“ஆனா, அந்த மெச்சூரிட்டி உனக்கு இருந்திருந்தா இப்படி ஒரு டெஷிசன் நீ எடுத்திருக்கமாட்ட நிலா. இதெல்லாம் நீயா உன் மனசுல உருவாக்கிக்கிட்ட கற்பனைகள். ஒரு மனுஷன் மத்தவங்க வாழ்க்கைல நடக்கற விஷயங்கள வச்சு, தனக்கும் அப்படித்தான் நடக்கும்னு நினைக்கிறதுக்குப் பேரு என்னைப் பொறுத்தவரைக்கும் நானும் முட்டாள்தனம்னு தான் சொல்லுவேன். ஏதோ மனஉளைச்சல்ல இருந்தன்னு தான் நிறைய டைம் உனக்கு கவுன்சிலிங்க் கொடுத்து உன்னை நார்மலா மாத்தினேன். ஆனா, அது எதுவுமே பிரயோஜனமே இல்லாத மாதிரி நீ சொல்றதப் பார்த்தா எனக்குத்தான் ரொம்ப பயமா இருக்கு.” என்றாள் ரஞ்சனி.

“எதுக்கு பயமா இருக்குன்னு சொல்ற?” என்று புருவம் சுருக்கினாள் வெண்ணிலா.

“ம்ம்… உனக்கு பைத்தியம் பிடிச்சிடுமோன்னு.” என்றாள் ரஞ்சனி.

அதைக் கேட்டதும், “ஏய். என்ன உளர்ற? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது? ஐ ஆம் அ டாக்டர். யூ நோ இடியட்?” என்றாள் கோபத்தில்.

ஆனால், ரஞ்சனியோ மிக நிதானமாக, “ஹூம்ம் டாக்டர்ன்னா எவ்ளோ தைரியமா, தெளிவாவும் இருப்பாங்க தெரியுமா? ஆனா, நீ காலேஜ் படிக்கும் போதிலிருந்தே எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து தான எல்லாத்தையும் கோட்டை விட்ட? இல்லன்னா நீ ஏன் பீடியாட்ரிசியனா வரணும்னு நினைச்ச? வேற எதுலயாவது ஸ்பெஷலிஸ்ட்டா ஆயிருக்கலாமே? பதில் சொல்லு.” என்றாள்.

“அது என்னோட கம்ஃபார்ட்டபிள் எதுவோ அதைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன்.” என்று பூசி மொழுகியவளைப் பார்த்து சிரித்தாள் ரஞ்சனி.

“உனக்கு வீணான பயம் நிலா. அந்த பயம் தான் உன்னை வேற வேற வழில உன்னைப் போக வைக்குது. அதுக்கு நீ இடம் கொடுக்கக் கூடாது. நீ போற பாதைக்கு உன்னோட மனச வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போ. நிறைய பாசிட்டிவ் எனர்ஜிஸ்ஸ உனக்குள்ள கொண்டு வா. சகஜமா எல்லா மனுஷங்களோடவும் நீ இயல்பா பழகணும். அதே மாதிரி, உன் குடும்பத்துல இருக்கவங்க வாழ்க்கைல நடந்த மாதிரியே உனக்கும் நடக்கும்னு நினைச்சுக் கல்யாணமே வேண்டாம்னு நினைக்கிறது சரியில்ல. உலகத்துல எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலையா? அதை நீதான் பார்த்ததே இல்லையா? நீ சொல்ற மெச்சூரிட்டி உனக்கு உண்மையாலுமே இருந்திருந்தா நீ இப்படி ஒரு டெஷிசன எடுத்திருக்க மாட்ட நிலா. நல்லா யோசிச்சுப் பாரு, என்னைப் பொறுத்தவரைக்கும் நீ சொன்னது வைச்சுப் பார்த்தா, உன்னைப் பார்க்க வந்தவரு கண்டிப்பா நல்லவரா தான் இருக்கணும். இல்லைன்னா நீ கோபப்பட்டுட்டு வந்ததுக்கு எதுவுமே பேசாம, உங்க வீட்லயும் எதுவும் சொல்லாம இருந்திருக்க மாட்டார். எனக்குத் தெரிஞ்சு அவர் இதை அவரோட வீட்லயும் சொல்றதுக்கு வாய்ப்பில்ல. உன்னோட மெண்டாலிட்டிய எப்படி சரி பண்ணலாம்னு தான் யோசிப்பார்.” என்றாள் ரஞ்சனி.

“சூப்பர் ரஞ்சு. அதெப்படி, ஒரு தடவை கூட நேர்ல பார்க்காத, பேசாத ஒருத்தரப் பத்தி இவ்ளோ தெளிவா சொல்ல முடியுது உன்னால?” என்றாள் கிண்டலாக.

“உனக்கு நான் சொல்றதெல்லாம் கிண்டலா தான் இப்போ தெரியும். ஆனா, நான் சொல்றது உண்மைன்னு அவரோட பழகிப் பார்த்தா உனக்கே புரிஞ்சிடும். அப்பறம் நீ ஒவ்வொரு டைமும் என்னைத்தான் நினைப்ப.” என்றாள்.

“ப்ச்ச் அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி தான். இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்லாவா இருக்கப் போறாரு? இதுல அமெரிக்காலயே பொறந்து, வளர்ந்தவர். சொல்லவா வேணும்? அங்கிருக்க கல்ச்சர் தெரியாது உனக்கு?” என்றாள்.

“அதுக்குத்தான் நான் சொல்றேன் நீ அவரோட பழகிப் பாருன்னு. ஏன்னா, ஆரம்பத்துல எல்லாரும் இயல்பா இருக்கற மாதிரிதான் தெரியும். கொஞ்ச நாள் கழிச்சுப் பார்க்கும் போது, ஒரு சிலரோட இயல்பான குணம் வெளிய வந்தே தீரும். அதுலயே எல்லாமே தெரிஞ்சுடும். அதுக்கப்பறம் நீயே டிசைட் பண்ணிக்கோ. நீ என் பேச்சைக் கூட கேட்க வேண்டாம்.” என்றாள் ரஞ்சனி இறுதியாக.

அவள் அப்படிச் சொன்னதும் சிறிது யோசித்தவள், “ஓகே, நீ சொன்ன மாதிரி நான் ஒரு மாசம் பழகிப் பார்க்கறேன். அதுக்கப்பறம் என்னோட ரிசல்ட்ட சொல்றேன்.” என்றாள்.

நல்லவேளையாக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல், இதோடு விடுகிறேன் என்று சொன்னதே பெரிய விஷயம் என்று நினைத்த ரஞ்சனி, தனது தோழியை ஆதரவாய்க் கட்டிக்கொண்டாள்.

அதற்க்குப் பிறகு நிலனிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வராததைக் கண்டவள், இவனும் அனைவரைப் போல இதற்க்கே தன்னை விலக்கிவிட்டான் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால், அவள் நினைத்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் அவளுடைய நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான் நிலன்.

வேலை இருந்தவரை அதைப் பார்க்காதவள், வேலை நேரம் முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போதுதான் பார்த்தாள். தான் நினைத்த விஷயத்தை இவன் முறியடித்து விட்டானே என்று சற்று அவன் மேல் எரிச்சல் வந்தது வெண்ணிலாவுக்கு.

சிறிது யோசித்தவள், சட்டென அவனுடைய எண்ணிற்க்குத் தொடர்பு கொண்டாள். ஓரிரு ரிங்கிற்க்குப் பிறகு அழைப்பை ஏற்றான் நிலன்.

“சொல்லுங்க வெண்ணிலா. நீங்க கால் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல. நீங்க எப்போ பிஸியா இருப்பீங்க, ஃப்ரீயா இருப்பீங்கன்னு தெரியாம தான் மெசேஜ் பண்ணேன். இன்னும் என் மேல கோபமா?” என்றான்.

“உங்க மேல கோபப்பட்டு எனக்கு என்ன கிடைக்கப்போகுது மிஸ்டர்.நிலன்? நான் ஏதோ நீங்க ரீஸன் கேக்கறீங்கன்னு தான் போனாப்போகுதுன்னு உங்கள மதிச்சு சொன்னேன். ஆனா, நீங்க அப்படிச் சொன்னதும், எனக்கு கொஞ்சம் டென்ஷன் அதிகமாகிடுச்சு. ரொம்ப டென்ஷனானா நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியாது. அதனால தான் அமைதியா வந்தேன். சோ, நீங்க அதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்.” என்றாள்.

“இட்ஸ் ஓகே வெண்ணிலா. எனக்கு உங்க மேல எந்தக் கோபமும் இல்ல. நான் எப்பவும் போல தான் இருக்கேன். நீங்க அன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருந்ததால எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல? அதுவும் இல்லாம உடனே ஏதாவது பேசினாலும் நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கன்னும் எனக்குத் தெரியல. அதனால தான் கொஞ்சம் நீங்க நார்மலானதுக்கப்பறம் பேசலாம்னு நினைச்சேன். அதான் மெசேஜ் பண்ணேன்.” என்றான்.

தான் கோபப்படும் போது, தன் மனநிலையைப் பற்றி யோசிக்க எத்தனை பேருக்கு மனது வரும்? என்று அந்த நிமிடம் யோசித்தாள் வெண்ணிலா. இருந்தாலும் அதை அப்போது அவனிடம் சொல்லத் தோன்றவில்லை.

“சரி, விடுங்க. இப்போ என்ன விஷயம்?” என்றாள்.

“என்ன விஷயம்ன்னா, நாம ரெண்டு பேரும் இந்த மூணு மாசம் பேசிப் பழகறதா தான ப்ளான். அதனால தான் பேசலாம்னு இருந்தேன்.” என்று அவன் சொன்னதின் மூலம் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்டாள்.

“ஆங்க்.. பழகலாம். ஆனா, எல்லா நாளும் முடியாது. நான் ஃப்ரீயா இருந்தா சொல்றேன். அப்போ பேசலாம்.” என்றாள்.

“அட்லீஸ்ட் வீக்லி ஒன்ஸ் மீட் பண்ணலாமா? ஐ காண்டாக்ட்டும் ரொம்ப முக்கியம் ரிலேஷன்ஷிப்க்கு.” என்று ஒரு புது அர்த்தத்தைச் சொன்னவனை நினைத்து வியப்படைந்தாள் வெண்ணிலா.

“ஓகே. சண்டே மட்டும் தான் மோஸ்ட்டா லீவ் இருக்கும். சப்போஸ் எதுவும் எமர்ஜென்சின்னா நேரம் காலம் பார்க்காம போய்டுவேன். சோ, நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும்.” என்றாள்.

அதைக் கேட்டு சிரித்தவன், “எனக்குத் தெரியும் வெண்ணிலா. அம்மாவ சின்ன வயசுல இருந்தே பார்க்கறேன் தானே? ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். நோ ப்ராப்ளம்.” என்றான்.

“ஓகே, போனை வைச்சிடட்டுமா? வேற ஏதும் இருக்கா?” என்று கேட்டவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன்,

“நோ வெண்ணிலா. டேக் கேர். பை பை.” என்றான்.

இந்த பை பைய கூடிய சீக்கிரமே சொல்லத்தான் போற. அதுக்கும் ஒரு நேரம் வரணுமே, என்று நினைத்தபடி திரும்பியவள் பின்னால் அவளைச் செல்ல முறைப்போடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ரஞ்சனி.

“நீ எப்போ வந்த ரஞ்சு?” என்றாள்.

“ம்ம் நீ ஸ்ட்ரிக்ட் மிலிட்டரி ஆஃபீஸர் மாதிரி அவர்கிட்ட பேசிட்டிருந்தியே அப்போவே வந்துட்டேன்.” என்றாள் கிண்டலாக.

“ஏய்….” என்று அவள் தோளில் அடித்தாள் வெண்ணிலா.

“பின்ன என்ன, மனசுக்கு கஞ்சி போட்டு விறைப்பா வைச்சிட்டிருக்க பொண்ண இன்னைக்குத்தான் பார்க்கறேன் நிலா. அதுவும் உன்னை மாதிரி சாஃப்ட்டான பெயர் வச்சிட்டு எப்படித்தான் இப்படி இருக்க முடியுதோ?” என்றாள்.

“ப்ச்ச் ஏய் சும்மா தேவையில்லாம பேசாத. நீ சொன்னதால தான் அவரோட பழகிப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நீ இப்படியெல்லாம் பேசுன, அப்பறம் நான் எதுவுமே வேண்டாம்னு சொல்லிடப் போறேன்.” என்றாள் சுட்டு விரலை அவள் முன்னே நீட்டியபடி.

“பார்ரா.. இதென்ன வம்பா இருக்கு? இது உன்னோட லைஃப். உனக்காக நான் பேசினா, நீ என்னமோ என்னை ப்ளாக் மெய்ல் பண்ணிட்டிருக்க. இதெல்லாம் உனக்கே நியாயமா இருக்கா சொல்லு?” என்றாள் கெஞ்சலாக.

அதைப் பார்த்து சிரித்தவள், “சரி வா. நாம கேண்டீன்ல போய் வடையும், டீயும் சாப்பிடலாம்.” என்று அவளை அழைத்துக்கொண்டு போனாள்.

இத்தனை நாட்கள் இருந்த வெண்ணிலாவை விட, இப்போது இருக்கும் வெண்ணிலாவின் மனது சிறிது மாற்றம் கண்டிருப்பதை உணர்ந்த ரஞ்சனி மனதுக்குள் மகிழ்ந்தபடி அவளுடன் கேண்டீனுக்குச் சென்றாள்.



தொடரும்……………………








உங்களுடைய கருத்துக்களை இங்கே பகிரவும் நட்புக்களே...................


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 6

அந்த வார விடுமுறையில் காலையிலேயே அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தாள் வெண்ணிலா. வீட்டில் உள்ளவர்களோ, அவள் நிலனைப் பார்க்கச் செல்வதற்க்குத்தான் அவள் இத்தனை அவசரம் காட்டுகிறாள் என்றே எண்ணினர்.

இதைப்பற்றி நிலன் அவர்களிடம் முன்னமே கூறியிருந்ததால் தான் அவளும் கிளம்பிக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருந்தது. ஒரு வழியாக தயாராகிக் கீழே வந்தவள் கையில் இருந்த பெரிய அளவு வண்ணக் காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசைக் கண்டபோதுதான் அவர்களுக்குக் குழப்பமானது.

“நிலா, நீ எங்க கிளம்பிட்டு இருக்க? இதென்ன இவ்ளோ பெரிய கிஃப்ட்? யாருக்கு இது?” என்றார் அவளுடைய அன்னை சந்திரகலா.

“அது, அம்மா எங்க ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ற டாக்டர். அம்பிகா, அதான் நியூரோ ஸ்பெஷலிஸ்ட்டுன்னு சொல்லியிருக்கேனே? அவங்க பொண்ணுக்கு இன்னைக்கு பர்த்டே செலிபரேஷன் 9 மணிக்கு இருக்கு. அவங்க வீட்டுப் பக்கத்துல இருக்க மினி ஹால்ல அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. என்னையும் நேத்தே இன்வைட் பண்ணியிருந்தாங்க. அதுக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன்.” என்றாள்.

அவள் சொன்னதுமே, அவர்களது முகங்கள் கேள்விக்குறியானது.

“இன்னைக்கு நீ அந்தப் பையன மீட் பண்ணப் போறதா தான ப்ளான்?” என்றார் பிரகாஷ்.

அப்போதுதான் நிலனுடைய வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. “ஐ காண்டாக்ட்டும் ரொம்ப முக்கியம்.” என்ற அவனது குரல் அவளது மனதில் அந்த நிமிடம் ஒலித்தது.

“இந்த ஃபங்க்‌ஷன்க்கு கண்டிப்பா போகணும் மாமா. அவங்க என்கூட வொர்க் பண்றவங்க. போகலன்னா நல்லா இருக்காது. அதனால தான்….” என்று தயங்கியபடி இழுத்தாள்.

“சரி நிலா. நீ தாராளமா போய்ட்டு வா. ஆனா, அங்க போய்ட்டு அதுக்கப்பறம் அந்தப் பையனையும் பார்த்துட்டு வந்துடு. பார்த்துப் பேசிப் பழகணும்னு தான டைம் கேட்டிருக்கீங்க. அப்பறம் அதை செயல்படுத்தலைன்னா எப்படி? அவங்களும் இந்த சம்பந்தம் வேணும்னு தான் அத்தனை மைல் தொலைவிலிருந்து வந்திருக்காங்க. அதை நாமளும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் நிலா.” என்று பொறுமையாகவும், எப்படிச் சொன்னால் அவள் புரிந்துகொள்வாள் என்று தெரிந்தும் சொன்னார் ரமணி.

பாட்டி சொல்வது நியாயமான விஷயமே என்று நினைத்தவள், ரஞ்சனியும் சொன்னவை மனதில் இருக்க, “சரி, பாட்டி. நான் அந்த ஃபங்க்‌ஷன் முடிச்சிட்டு அவரப் போய் மீட் பண்றேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் சரியென்று சொன்ன பிறகு தான் மூவருடைய முகத்திலும் சற்று தெளிவு பிறந்தது. நல்லவேளையாக அங்கே ஜோதி இல்லை. கடைக்குச் சென்றிருந்ததால், இது எதுவும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை. இல்லை என்றால், இதைப் பற்றிப் பேசியே பிரகாஷை வார்த்தைகளாலேயே கொன்றிருப்பாள். அதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார் பிரகாஷ்.

சொன்னதைப் போலவே அவள் அந்த பிறந்தநாள் விழா நடக்கும் இடத்திற்க்குச் சென்று சேர்ந்துவிட்டாள். வண்டியை கீழே அடித்தளத்தில் நிறுத்திவிட்டு, மேலே இருக்கும் வரவேற்பறைக்குச் செல்ல நினைத்தபோது, சரியாக நிலனிடமிருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.

“ஹலோ வெண்ணிலா, எங்க இருக்கீங்க?” என்றான் ஒருவித எதிர்பார்ப்புடன்.

“நான் அடையார்ல ஒரு ஃபங்கஷன்க்கு வந்திருக்கேன். சாரி, உங்கள மீட் பண்ற ஞாபகம் இல்ல. அதுவும் இல்லாம, நான் வரேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். நான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும்.” என்று தன் ஞாபக மறதியை நினைத்து முதன் முதலில் வருத்தப்பட்டாள்.

அதைக் கேட்டு சிரித்தவன், “அடடே! டாக்டர் மேடம் இதுக்கெல்லாம் கூட ஃபீல் பண்ணுவீங்களா? நோ ப்ராப்ளம். சரி, என்ன ஃபங்க்‌ஷன்? அதுவும் எங்க ஏரியா அடையார்ல?” என்று அவன் சொன்னதும் தான் அவனும் அங்கே தான் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டாள் வெண்ணிலா.

அவர்களைப்பற்றிய முழு விவரங்களை வெண்ணிலாவின் குடும்பத்தினர் தெரிந்துகொண்ட அளவிற்க்கு, அவள் பெரிதாக எதையும் தெரிந்துகொள்ள விருப்பப்படவில்லை என்பதற்க்கு இதுவே உதாரணம்.

“இங்க ஜீவரத்தினம் நகர்ன்னு இருந்துச்சு. பர்த்டே பார்ட்டி. கூட வொர்க் பண்ற டாக்டரோட பொண்ணுக்கு.” என்று வினா-விடை அளித்தாள்.

“ஓ! இங்க பக்கத்துல தான் எங்க சாஸ்த்ரி நகர் இருக்கு. நீங்க ரொம்ப தூரம் போக வேண்டியது இல்ல. நீங்க பார்ட்டிய அட்டெண்ட் பண்ணிட்டு லொகேஷன் ஷேர் பண்ணிடுங்க. நான் அங்க வரேன்.” என்றான் நிலன்.

“எதுக்கு உங்களுக்கு சிரமம்? நீங்க பேசாம எனக்கு ஷேர் பண்ணிடுங்க. நான் அங்க வந்திடறேன்.” என்றாள்.

“வெண்ணிலா, எனக்கு எங்க ஏரியா நல்லாவே தெரியும். அமெரிக்கால இருந்தாலும், எப்பவும் இங்க வரதால எனக்கு எல்லா இடமும் நல்லா ஞாபகம் இருக்கும். நீங்க இந்த ஏரியாவுக்கு எந்த அளவுக்கு பழக்கம்ன்னு தெரியல. ஃபங்கஷன் முடிச்சு வரும் போது கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. இதுல நீங்க தேவையில்லாம மேப் ரூட் போட்டுட்டு அலையணும். அதுக்குத்தான் நானே உங்கள வந்து கூட்டிட்டுப் போறேன். உங்க எக்ஸாக்ட் லொகேஷன் தெரியாதுன்னு தான் உங்கள ஷேர் பண்ண சொல்றேன்.” என்று விளக்கமாய்ச் சொன்னவனின் அக்கறையைப் புரிந்துகொண்டாள்.

“சரி, நான் ஃபங்க்‌ஷன் முடிச்சிட்டுக் கூப்பிடறேன்.” என்று சொல்லி அலைபேசியை வைத்துவிட்டாள்.

சொன்னது போலவே, நிகழ்ச்சி முடிந்து அவனது எண்ணுக்கு தனது சரியான வழியை கூகுள் மேப் மூலமாகப் பகிர்ந்துவிட்டு, அவனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டாள். அவனும், நிதானமாய் அதைப் பார்த்து அடுத்த பதினைந்து நிமிடங்களில் அங்கே வந்து சேர்ந்தான்.

அவன் தனது இரு சக்கர வாகனத்தில் முன்னே செல்ல, அவளும் அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் இத்தனை தூரம் தனக்காக மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. தான் வீணாக அலைவானேன் என்ற எண்ணமே அவனது அக்கறையை அவளுக்கு பறைசாற்றியது.

அவன் அவளை அழைத்துச் சென்ற இடத்தின் முன் வாயிலில் மர வேலைப்பாடுகள் கொண்டு செய்யப்பட்ட அந்த வாயிற்கதவு வரவேற்றது. பெரியதாகவும், உயரமாகவும் இருந்த அந்த கதவிற்க்குள்ளே அவளைப் பின்தொடரச் சொன்னான் நிலன்.

அந்த உயரமான வாயிற்கதவின் மேலே, வளைவு வடிவில் பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட “பத்மசேஷாத்ரி ஆதரவற்றோர் இல்லம்” என்று இருந்ததையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. வண்டிகளை மர நிழலில் சென்று நிறுத்தியவன், அங்கேயே அவளையும் நிறுத்தச் சொல்லிவிட்டு அவளை அழைத்துச் சென்றான்.

செல்லும் போது அவளால் அதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. “நிலன், இது ஆதரவற்றோர் இல்லம்ன்னு போட்டிருக்கே. இங்க யார் இருக்கா? இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?” என்றாள்.

அதைக் கேட்டு ஒரு நிமிடம் நின்றவன், அவளைப் பார்த்து புன்னகைத்தவாறு, “இத்தனை நேரம் நீங்க இதைக் கேட்காம இருந்தாதான் அதிசயம். ஏன்னா, எங்க போறோம்னு தெரியாம போறதோட சுமை இருக்கே அது கொஞ்சம் கஷ்டம் தான்.” என்றவன்,

அவள் இன்னும் அவளுடைய கேள்விக்கு தான் விடையளிக்காமல் இருப்பதை எதிர்பார்ப்பது தெரிந்து சொன்னான்.

“இது எங்களோடதுதான். தாத்தா அவரோட அப்பா பேர்ல ஆரம்பிச்ச ஹோம். இங்க எல்லா ஏஜ்ல இருக்கறவங்களும் இருக்காங்க. அநாதையா ரோட்ல வீசப்பட்ட குழந்தைங்க, ஆதரவே இல்லாம, எங்க போறதுன்னு தெரியாம தெருவுல நின்ன நிறைய நடுத்தர வயசுல இருக்கறவங்க, பிள்ளைகளே பாரமா நினைச்சு துரத்திவிட்ட வயசானவங்கன்னு எல்லாருமே சேர்ந்தது தான் இந்த ஹோம். இன்னைக்கு உங்கள இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு.” என்றான்.

அதைக் கேட்டவள், எந்த ஒரு முக பாவனையையும் அவனிடம் காட்டாமல் முன்னோக்கி நடந்து சென்று அங்கே இருந்த மரத்தடி திண்ணையில் லாவகமாய் அமர்ந்துகொண்டாள். அவனும் இவளுடைய செய்கை புதிராய்த் தோன்ற அவள் பின்னாலேயே சென்று அவளுக்கு அருகில் அமர்ந்துகொண்டான்.

“என்னாச்சு? எதுவும் பேசாம வந்து இங்க உட்கார்ந்துட்டீங்க? உங்கள ஆஃபீஸ் ரூம்க்கு கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேன்.” என்றான்.

அதைக் கேட்டு அந்தத் திண்ணையில் தன் இரு கைகளையும் ஊன்றியபடியே பேசினாள். “எனக்கு இந்த மரத்தடி நிழல்ல இப்படி திண்ணைல உட்கார்றது ரொம்பப் பிடிக்கும். நான் படிச்ச ஸ்கூல்ல இதே மாதிரி இருக்கும். நானும், என்னோட ஃப்ரெண்டும் அங்கதான் உட்கார்ந்து மதியம் சாப்பிடுவோம். அதுக்கப்பறம் நான் படிச்ச மெடிக்கல் யுனிவர்சிட்டிலயும் இருந்துச்சு. அங்கயும் அப்படித்தான் ஒரு கேங்கா உட்கார்ந்து கதை பேசுவோம். அதுக்கப்பறம் அதை ரொம்ப மிஸ் பண்ணேன். இங்க வந்ததுமே நான் முதல்ல பார்த்தது இதைத்தான். அதான், சும்மா காத்தோட்டமா உட்காருவோம்னு பழைய நினைப்புல வந்து உட்கார்ந்துட்டேன். தப்பா நினைக்காதீங்க.” என்று அவனிடம் முதன் முதலில் புன்னகைத்தாள்.

அதை ரசித்தவன், “வாவ்! இது உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கும் ரொம்பப் பிடிச்சமான விஷயம். நானும் இங்க வரும்போதெல்லாம் இங்க தான் உட்கார்ந்துப்பேன். என்னோட ஃப்ரெண்டோட அரட்டை அடிப்பேன். நான் அமெரிக்கா கதைய சொன்னா, அவன் இங்க நடக்கற கதைய சொல்லுவான். இது எனக்கு அமெரிக்கால கூட கிடைச்சது இல்ல. இங்க வரும் போது நல்லா என்ஜாய் பண்ணிப்பேன்.” என்றான்.

அப்போதே ஒரு சில குழந்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அதே போல், அங்கும் இங்கும் நிறைய பேர் உலாவுவதையும் கண்டாள். அதிலும் சில பெரியவர்கள் அவர்கள் இருவரும் அமர்ந்திருப்பதைக் கண்டு விட்டு அவளை யாரென்று விசாரிக்க, அவனும் தனக்குத் தெரிந்தவள் என்று சொன்னாலும், அவர்கள் சிரித்துவிட்டுச் சென்றதை அவனால் தடுக்க முடியவில்லை.

அதை வெண்ணிலா புரிந்துகொண்டாலும், பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் மற்றொரு வயதான தம்பதியர் அவர்களை நோக்கி வந்தனர்.

“கண்ணா, நீ இங்க உட்கார்ந்திருக்கியா? இன்னைக்கு கபாலீஸ்வரர் கோவிலுக்கு நானும், இவளும் போயிருந்தோம். நல்ல கூட்டம். தரிசனம் நல்லா இருந்துச்சு. இந்தா பிரசாதம்.” என்று உரிமையுடன் அவனது நெற்றியில் விபூதியை வைத்துவிட, அதை பவ்யமாய் பணிந்து ஏற்றுக்கொண்டான் நிலன்.

அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் அவளிடமும், “நீயும் எடுத்து வச்சுக்கோ மா.” என்று சொன்னவர்கள், அவள் எடுத்து வைத்த இடைவெளியில் அவனிடம் கண்களாலேயே அவளை யாரென்று கேட்டதை வெண்ணிலாவும் பார்த்துவிட்டாள்.

“இது, என்னோட ஃப்ரெண்ட் வெண்ணிலா பாட்டி. சும்மா இந்தப் பக்கமா வந்தாங்க. அதான் நம்ம ஹோம்க்கு வரச் சொன்னேன்.” என்று பதிலளித்தவனிடம், சரியென்று இருவரும் புன்னகைத்துவிட்டு தலையாட்டிச் சென்றனர்.

அவர்கள் சென்றதும், “இவங்க யாரு? இவ்ளோ உரிமையா உங்களுக்கு வந்து விபூதியெல்லாம் வைச்சுவிடறாங்க?” என்றாள்.

“அவரு அழகேசன் தாத்தா. அது அவரோட வைஃப் ராஜலட்சுமி பாட்டி. எங்க தாத்தாவோட ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். இன்னைக்கு இந்த ஹோம் இங்க இருக்குன்னா அதுக்கு இவங்க தான் காரணம்.” என்று அவர்கள் செல்வதைப் பார்த்துக்கொண்டே சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள் வெண்ணிலா.

“இவருக்காக தான் தாத்தா இந்த ஹோம்மையே ஆரம்பிச்சார். எனக்கு ஞாபகம் இருக்கு, அப்போ நான் ஃபிஃப்த் க்ரேட் படிச்சிட்டிருந்தேன். அப்போவே, இவரோட பசங்க இவங்கள பாரமா நினைச்சு, சொத்தையெல்லாம் பிடுங்கிட்டு வீட்டை விட்டுப் போகச் சொல்லிட்டாங்க. போக வழியில்லாம நின்னப்போ தாத்தா கேள்விப்பட்டு இங்க இருக்க எங்க வீட்டுக்கு போய் இருக்கச் சொல்லிட்டார். அதுக்கப்பறம் தாத்தா இங்க வந்து இவருக்காகத்தான் இந்த மாதிரி ஆதரவற்றவங்களுக்குன்னு ஒரு ஹோம் ஆரம்பிச்சா என்னன்னு தோணுனதும், எதையுமே யோசிக்காம உடனே ஆரம்பிச்சார். அப்பறம் ஒவ்வொருத்தரா இங்க சேர ஆரம்பிச்சாங்க. பிறந்த குழந்தையிலிருந்து, 80,90 ஐக் கடந்தவங்கன்னு எல்லாருமே இருக்காங்க. கிட்டத்தட்ட இருநூறு குடும்பங்கள் ஆகிடுச்சு. ஆரம்பத்துல வரும் போது அவங்க முகத்துல இருக்க வலி, அதுக்கப்பறம் இங்க எல்லாரோடையும் பழக ஆரம்பிச்சதும், காணாம போயிடும். அந்த அளவுக்கு எல்லாரும் ரொம்ப அன்பா பழக ஆரம்பிச்சிட்டாங்க. சில நேரம் இங்கயே நாமளும் இருந்தா என்னன்னு தோண ஆரம்பிச்சிடும்.” என்று பேசியவன் கண்கள் மகிழ்ச்சியை பிரதிபலித்தது.

“இன்னைக்கு ஒரு பர்த்டே செலிப்ரேஷன்க்கு போயிருந்தீங்களே, அவங்களோட செலவு தோராயமா எவ்ளோ ஆகியிருக்கும்?” என்றான்.

இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவள், “ஒன் லாக் பக்கம் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டிருந்தாங்க.” என்றாள்.

“ம்ம். அந்த ஒன் லாக் இருந்தா இங்க இவங்க எல்லாம் ஒரு மாசம் மூணு வேளையும் வயிறார சாப்பிடுவாங்க. அவங்க இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்ல வரல. அது தேவையில்லாத ஒரு செலவுன்னு நான் நினைக்கிறேன். முன்னல்லாம், எங்க அப்பா சொல்லுவாரு, எங்க பிறந்தநாள் எப்போன்னு எங்களுக்கே தெரியாது. அம்மா தான் சொல்லுவாங்க. கோவிலுக்குப் போய்ட்டு அர்ச்சனை வச்சுட்டு, அன்னதானம் பண்ணிட்டு வந்தா அதோட முடிஞ்சிடும் எங்க செலிபரேஷன். ஆனா, இப்போவெல்லாம் இது மாதிரி ஆடம்பரம் எல்லாம் அவசியமான்னு ஒரு கேள்வி வருதுன்னு சொல்லுவார். ஏன், நாங்க கூட அமெரிக்கால பக்கத்துல இருக்க ஃப்ரெண்ட்ஸ மட்டும் கூப்பிட்டு ஈவினிங்க் அம்மாவே செய்யற ஹோம் மேட் கேக்க கட் பண்ணினா அதுதான் எங்க செலிபரேஷன். இதெல்லாம் இவங்க ஏன் யோசிக்கறது இல்லன்னு தெரியல. இவங்களே குழந்தைங்க மனசுல ஆடம்பரம்ன்னு ஒரு விதைய தூவிவிட்டுட்டா, அது வளர்ந்து பெரியவங்களா வளரும் போது ரொம்ப கஷ்டப்படுத்தும்னு அவங்க உணரமாட்டிங்கறாங்க. இந்த மாதிரி இடங்களுக்குக் கூட்டிட்டு வரும் போதுதான் இங்க இருக்க குழந்தைங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு தெரிஞ்சுக்குவாங்கன்னு யாரும் நினைக்கிறதே இல்ல.” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினான் நிலன்.

“அது அவங்களோட தனிப்பட்ட விருப்பம் தான். நீங்க சொல்ற மாதிரி பண்றதும், யோசிக்கறதும் ஒரு சில பேர் தான். ஆனா, ஒருத்தர் பண்ணா, நாமும் அதே மாதிரி பண்ணனும். அப்போதான் நம்ம ஸ்டேட்டஸ் தெரியும்ன்னு நிறைய பேர் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால வந்த விளைவு தான் இது. இதெல்லாம் அவங்களா மாத்திக்கிட்டா மட்டும் தான் முடியும். யாரும் சொல்றதுக்கு இல்ல.” என்று அவளும் அவள் மனதில் உள்ளதைச் சொன்னாள்.

அதற்க்கு அவனும் ஆமோதிப்பாய் தலையாட்டினான். அப்போது, பின்னாலிருந்து ஒருவருடைய செல்ல அடியை முதுகில் வாங்கினான் நிலன். திரும்பிப் பார்த்த போது, அவனுடைய வயதை ஒத்த ஒருவன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் நிலன் முகத்தில் பிரகாசம்.

“டேய். வந்துட்டியா? நீ எப்போ வருவேன்னு தாண்டா காத்துட்டிருந்தேன்.” என்று அவனை ஆரத் தழுவிக்கொண்டான் நிலன்.

“இப்போதாண்டா வந்தேன். வந்ததும், உன்னைத் தேடினேன். நீ இங்க உட்கார்ந்துட்டு இவங்ககிட்ட பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன். அதான் உனக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன்.” என்று அவனிடம் உரிமையோடு பேசினான்.

தழுவிக்கொண்டவர்கள் விலகியதும், “சரி, சிஸ்டர் யாரு?” என்று அவள் யாரென்று தெரிந்துகொள்ளும் நோக்கில் கேட்டான் அவனிடம்.

“இவங்க வெண்ணிலா. ஒய்.எம்.சி ஹாஸ்பிடல்ல டாக்டர்.” என்றவன் வெண்ணிலாவிடம், “இவன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நந்தன்.” என்று இருவரையும் அறிமுகம் செய்தான்.

அவர்களும் பரஸ்பரம் தங்களின் புன்னகையால் அறிமுகமாகினர். ஆனால், அவளை யாரென்று சொல்லாதது நந்தனுக்கு உறுத்த நண்பனிடம் பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்ற முடிவோடு அப்போதைக்கு விட்டுவிட்டான்.

“அப்பறம், மலேசியா ட்ரிப்பெல்லாம் எப்படிப் போச்சு?” என்றான் நிலன் அவனிடம்.

“நான் மலேசியாவுக்கு சுத்திப் பார்க்கவாடா போனேன்? ஒன் மன்த் ப்ராஜக்ட் வொர்க்ன்னு போனேன். ஹெவி வொர்க். ரெண்டே நாள் தாண்டா சுத்திப் பார்க்க முடிஞ்சது. அதுக்குள்ள வந்தாச்சு.” என்றான் நந்தன்.

“அதுவும் சரிதான்.” என்று நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கிடையில் அந்நியமாய் வெண்ணிலா இடைஞ்சலாக நிற்பதாக உணர்ந்தாள்.

அதை உணர்ந்தவனாய் நிலன், அவளை தங்களுக்குள் சகஜமாக்க முயன்றவனாய்ப் பேசினான்.

“வெண்ணிலாவோட அக்காவும் நம்மள மாதிரியே சாஃப்ட்வேர் இன்ஜினியர் தான். பட், கம்பெனி…” என்று இழுத்தவாறு வெண்ணிலாவைப் பார்க்க,

அவள், “சாஃப்ட்டெக் சொல்யூஷன்ஸ்.” என்றாள்.

அதைக் கேட்டதும், நந்தனின் கண்கள் விரிந்தன. அவன் மட்டுமல்ல நிலனும் ஆச்சர்யப்பட்டான்.

“அங்க தான் நானும் வொர்க் பண்றேன். அவங்க பேர் என்ன?” என்று நந்தன் ஆவலுடன் கேட்க,

அவளும் முறுவலித்தவளாய், “வான்மதி.” என்றாள்.

அவள் சொன்னதும், நந்தனின் கண்கள் ஒருவித உணர்வை வெளிப்படுத்தியதை உணர்ந்துகொண்டான் நிலன்.

தொடரும்…………………………







வணக்கம் நண்பர்களே, உங்களுடைய கருத்துக்களை இங்கே பதிவிடவும்,


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 7

வான்மதி என்ற பெயரைக் கேட்டவுடனே தனது நண்பனின் முகம் மாறியதைக் கண்ட நிலன், வெண்ணிலா உடன் இருந்ததால் பெரிதாக எதையும் அப்பொழுது கேட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் வெண்ணிலாவோ, “உங்களுக்கு அக்காவத் தெரியுமா?” என்றாள் நந்தனிடம்.

அதைக் கேட்டு அதிர்ந்தவனாய் அவளை நந்தன் பார்க்க, “ஒரே கம்பெனின்னு சொல்றீங்க. அதான் கேட்டேன்.” என்றதும் தான் அவனுடைய மனம் சற்று நிம்மதி அடைந்தது.

“அவங்க என்னோட டீம்ல தான் முதல்ல இருந்தாங்க. இப்போ வேற டீம். ஆனாலும், நல்லா பேசுவாங்க, பழகுவாங்க.” என்று அவளின் பேச்சை சுருக்கமாய் முடித்துக்கொண்டான்.

அதைக் கேட்டு வெண்ணிலா புன்னகைத்தாலும், உள்ளுக்குள் வான்மதியின் கடந்த கால வாழ்க்கை பற்றிய முழு விவரமும் ஒரு வேளை இவனுக்குத் தெரிந்திருக்குமோ? என்ற எண்ணம் ஒரு நிமிடம் வந்தாலும், அதை நேரடியாகக் கேட்கும் தைரியம் அவளுக்கு இல்லை. அதனால், அவளும் அதற்க்கு மேல் பேசவில்லை.

“சரிடா நான் உன்னை அப்பறமா பார்க்கறேன். வரேங்க.” என்று இருவரிடமும் சொல்லிவிட்டு விடைபெற்றான் நந்தன்.

அவன் சென்றபிறகு, “இவர் தான் உங்களோட பெஸ்ட் ஃப்ரெண்ட்டா?” என்றாள் வெண்ணிலா.

அதைக் கேட்டு ஆச்சர்யமாய் புன்னகைத்தவன், “அது எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது?” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறதுலயே தெரிஞ்சது. உரிமையா இருக்க ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் இந்த மாதிரி பேசுவாங்க.” என்றாள்.

அவளின் சொற்களை உள்வாங்கியவன் அதற்க்கு அவசரமாய் ஆமென்று தலையசைத்தான்.

“சரி தாத்தா, பாட்டி எங்க இருக்காங்க? அவங்க இங்க வரமாட்டாங்களா?” என்றாள்.

“அவங்க உள்ள இருக்க ஒரு பெரிய ஹால்ல எல்லாரோடையும் உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டிருப்பாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இங்க ஃப்ரெண்ட்ஸ் அதிகம். இங்க வந்தாலே பாதி நேரம் இங்க தான் இருப்பாங்க. அதுவும் சண்டே கம்பல்சரி இங்க வந்துடுவாங்க. நானும் அவங்களோட வந்து எல்லார்கிட்டயும் பேசி, சிரிச்சிட்டு இருக்கறதுல இருக்க சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது.” என்று சிலாகித்தபடி அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான்.

வெண்ணிலாவோ, தங்கள் வீட்டில் அனைவரும் இருந்தாலும் அதிகளவு யாரும், எவருடனும் அந்த அளவு பேசிக்கொள்வதில்லையே என்று நினைத்தாள். அதைப்பற்றிப் பேசியபடியே நிலன் அவர்கள் இருக்கும் இடத்திற்க்கு அவளைக் கூட்டிக்கொண்டு சென்றான்.

அவளைக் கண்டதும் கமலம் பாட்டி, வாயெல்லாம் சிரிப்பாக வந்து அவளை வாஞ்சையாய் வருடியபடி அவளை உச்சி முகர்ந்தார். அதே போல், பத்மநாபனும் அவளிடம் வந்து நின்றார்.

வெண்ணிலா என்ன நினைத்தாளோ, அந்த நிமிடம் அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், சட்டென்று அவளை தூக்கிவிட்டனர். நிலனுக்கே அது ஆச்சர்யம் தான்.

“நல்லா இருக்கணும் மா. எங்க பேரன நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு, ரெண்டு பேருமா சேர்ந்து மாலையும், கழுத்துமா நிக்கும் போது ஆசிர்வாதம் பண்ணனும்னு தோணுது. நீதான் சீக்கிரமா மனசு வைக்கணும்.” என்றார் கமலம் அந்த இடைவெளியில்.

அதைக் கண்டு நிலன் கமலத்தைச் செல்லமாக முறைக்க, வெண்ணிலாவோ பேச வழியின்றி நின்றாள்.

“கமலம், இப்படியா பேத்திகிட்ட பேசுவ? அவங்க தான் டைம் கேட்டிருக்காங்கள்ல. அவங்க ஒரு முடிவு எடுக்கற வரைக்கும் நாம பொறுமையாதான் இருக்கணும்.” என்றார் பத்மநாபன் அவளின் நிலை உணர்ந்தவராய்.

அதன் பிறகுதான் வெண்ணிலாவும் தயக்கமின்றி அங்கே நின்றாள். அவளின் முக பாவனைகள் அனைத்தையும் ரசித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் நிலன். அவளை பெரியவர்கள் கூட்டிக்கொண்டு சென்று தங்களது சகாக்களிடம் அறிமுகப்படுத்தினர்.

அவள் சங்கடப்படக்கூடாதென்று அவளைத் தெரிந்தவர்கள் பெண் என்றே சொல்லிவைத்ததால், வெண்ணிலாவும் சங்கோஜமின்றி நிற்க முடிந்தது. அப்படியே மதிய உணவு வேளை வர, கிளம்ப நினைத்தாள் வெண்ணிலா.

ஆனால், பெரியவர்களோ விடவில்லை. அங்கேயே சாப்பிட்டாக வேண்டும் என்று கட்டாயமாய் இருக்க வைத்தனர். அதைக் கேட்டு வெண்ணிலா தீவிரமாய் முழிக்க, அதையும் ரசித்தவண்ணம் சிரித்தான் நிலன். அவளும் வேறு வழி தெரியாமல் அவர்களுடனே மதிய உணவை உண்ண ஆயத்தமானாள்.

உணவு கூடாரமொன்று அங்கே தனியாக இருக்க, பார்ப்பதற்க்கு ஒரு கல்யாண மண்டபத்தின் பந்தி போன்றிருந்தது. முதலில் சிறுவர்களும், வயதானவர்களும் சாப்பிடுவதற்க்கு அமர்ந்திருக்க, நடு வயதொத்தவர்கள் அனைவரும் பரிமாற அங்கே பெரிய விருந்தே நடந்ததைக் கண்கூடாகக் கண்டாள் வெண்ணிலா.

அசைவப் பிரியர்களுக்கு தனியாக அசைவ உணவுகளைப் பக்குவமாய் சமைத்திருந்தனர். சைவப் பிரியர்கள் அவர்களுக்கென ஒரு வரிசையில் அமர்ந்து சாப்பிட்டனர். நிலனும் அவர்கள் அனைவருக்கும் பறிமாற, வெண்ணிலா வேறு வழி தெரியாமல் அவர்களுடன் இணைந்து கொண்டு வாழ்வில் முதல்முறையாக அனைவருக்கும் பறிமாறினாள்.

அவளுக்கே அவள் இது போல் செய்த விதம் ஆச்சர்யம் தான். வீட்டில் பெயருக்குக் கூட எந்த ஒரு பொருளையும் நகர்த்தி வைக்காதவள். இன்று, இந்தப் பந்தியில் சாப்பிடும் அனைவருக்கும் பறிமாறியதை நினைத்து தன்னைத் தானே வியந்துகொண்டாள்.

அடுத்து வந்த பந்தியில் இளையவர்கள் அனைவரும் அமர, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குப் பறிமாறினர். சாப்பிட்ட நொடியே வெண்ணிலாவுக்குப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், வீட்டில் சமைத்த உணவை அதிக ருசியில் சாப்பிடும் உணர்வு.

அந்த அளவிற்கு பக்குவம், ருசி அதோடு அவர்களின் அன்பு கலந்துதான் சாப்பிட்டதைப் போலிருந்தது அவளுக்கு. நிலனிடம் அவள் பார்த்த பார்வையே அவளுடைய ஆச்சர்யத்தை அவனுக்கு பிரதிபலித்தது.

சாப்பிட்டுமுடித்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு திரும்பவும், அதே அரசமரத் திண்ணையில் வந்து அமர்ந்துகொண்டார்கள் இருவரும்.

“இங்க நடக்கற விஷயம் ஒவ்வொண்ணும் எனக்கு ரொம்பப் புதுசு நிலன். ரொம்ப ஆச்சர்யமாவும் இருக்கு. நாங்க எல்லாரும் குடும்பமா பேருக்குத்தான் இருக்கோம்னு தோணுது. ஆனா, இவங்க எல்லாருமே குடும்பத்தை இழந்தவங்க, குடும்பம் யாருன்னே தெரியாதவங்க தான். ஆனா, எவ்ளோ ஒற்றுமையா பெரிய குடும்பம் மாதிரி இருக்காங்க. இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கே இங்க வந்து இவங்க கூட வந்து இருக்கலாம்னு தோணுது.” என்றவளை ஆச்சர்யமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் நிலன்.

“தாராளமா நீங்க இங்க வந்து இருக்கலாம். அதுல யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்ல. ஆனா, உங்க வீட்ல என்னைத்தான் திட்டுவாங்க. பேசறேன்னு கூட்டிட்டுப் போய்ட்டு, எங்க பொண்ண உங்க ஆசிரமத்துலயே வச்சுட்டீங்களான்னு கேட்பாங்க. அதுக்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று மிகவும் யோசனையுடன் பேசியவனை ஒரு பார்வை பார்த்தாள் வெண்ணிலா.

அவன் ஓரக்கண்ணால் அவளைப் பார்க்க, முதல் முறையாக அவளது சிரிப்பை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தாள் வெண்ணிலா. அதில் ஒரு நிமிடம் கிறங்கித்தான் போனான் நிலன்.

“சரி, நான் அப்படியே கிளம்பறேன். கொஞ்சம் டயர்டா இருக்கு. நாளைல இருந்து எப்பவும் அதே ரொட்டீன் வொர்க் ஸ்டார்ட் ஆயிடும். சோ, பார்க்கலாம்.” என்றபடி எழுந்தவளைத் தடுக்க முடியாதவனாய் நின்றான் நிலன்.

“சரி…” என்று சொன்னவன், அவள் கிளம்ப எத்தனித்ததும், “வெண்ணிலா, ரொம்ப டைம் எடுத்துக்காதீங்க. சீக்கிரமே ஒரு பாசிட்டிவ் முடிவ சொல்லுங்க. ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றதும்,

அவன் புரிந்துகொள்ள முடியா ஒரு பார்வையை வீசியவள், “பார்க்கலாம் நிலன்.” என்று மட்டும் சொல்லிவிட்டு தனது வண்டியைக் கிளப்பி அவனிடமிருந்து விடைபெற்றாள்.

நிலனுக்கு தான் அவளிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோமோ? என்ற எண்ணம் தோன்றினாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உள்ளே சென்றான்.


******

அன்றைய நாள் மாலை நந்தன் அதே மரத்தடி திண்ணையில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசிப்பதைப் பார்த்து நிலன் நேரே அவனிடமே வந்தான். அவன் வருவது கூடத் தெரியாமல் அதிதீவிரமாக யோசித்தபடியே இருந்தான் நந்தன்.

வந்தவன், அவனது சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “டேய் நந்து, என்னடா தீவிரமா எதையோ யோசிச்சுட்டு இருக்க?” என்று கேள்வி கேட்டவனது மனதில் சட்டென்று காலை வெண்ணிலாவை அவன் அறிமுகம் செய்தபோது நடந்தவை நினைவுக்கு வர,

“உனக்கு வெண்ணிலாவோட அக்கா, வான்மதிய தெரியுமா?” என்றதும், நந்தன் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்.

ஏனென்றால், அவன் அத்தனை நேரமும் தீவிரமாக நினைத்துக்கொண்டிருந்ததே வான்மதியைப் பற்றித்தான். நிலன் அதை சரியாகக் கணித்துக் கேட்டதும், ஒரு பக்கம் ஆச்சர்யத்தையும், ஒரு பக்கம் பதட்டத்தையும் கொண்டவனாகப் பார்த்தான் நந்தன்.

“டேய்…… ஒரே டைம்ல ஏண்டா பல ரியாக்‌ஷன்ஸக் கொடுக்கற? உனக்கு நான் கண்டுபுடிச்சிட்டேன்னு ஆச்சர்யமா? இல்ல பயமா?” என்றான் அவன் மனதை அப்படியே படித்து.

“நிலா, நீ சைக்காலஜி படிச்சிருக்கேன்னு அப்பப்போ ப்ரூஃப் பண்றடா. நிஜம்தான். நீ நினைச்சது மாதிரி நான் மதி… ஸாரி வான்மதியப் பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என்றதும், அவனைத் தீவிரமாய்ப் பார்த்தான் நிலன்.

“அவங்களுக்கும், உனக்கும் ஏதோ ஃப்ளாஷ்பேக் இருக்க மாதிரி தோணுது. நிஜமா?” என்றான் நிலன்.

அதற்க்கும் அவனது சிரிப்பை பதிலாய்த் தந்த நந்தன், “வெல்டன் நண்பா. உனக்கு அவார்ட் தான் கொடுக்கணும்.” என்று சொல்லி அவனைப் பாராட்டியதற்க்கு நிலனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே திருப்பி வந்தது.

“நான் டீம் லீடா இருந்தப்போ என்னோட டீம்ல தான் வான்மதி ஃபர்ஸ்ட் ஜாய்ன் பண்ணாங்க. ரொம்ப ஆக்டிவ்வான, டேலண்ட்டான பொண்ணு. ரொம்ப ஷார்ட் டைம்லயே எல்லாத்தையும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிட்டு அதை கரெக்ட்டா ப்ரொசீட் பண்ணுவாங்க. அதிகமா யார்கிட்டயும் அநாவசியமா பேசியது இல்ல. அவங்க ரொம்ப பொலைட்ன்னு டீம்ல எல்லாரும் பேசும் போது, அவங்களுக்கு ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்குன்னு எனக்குத் தோணுச்சு. அவங்க பாஸ்ட் எல்லாம் எனக்குத் தெரியாது. அவங்களும் யார்கிட்டயும் ஷேர் பண்ணிட்டது இல்ல. ஆனா, ஒரு நாள் அவங்ககிட்ட சும்மா பேசிட்டிருக்கும் போது, மேரேஜ் அலையன்ஸ் ஏதும் பார்க்கறாங்களான்னு கேட்டேன். ரொம்ப நேரமா எதுவும் பேசாம இருந்தாங்க. அதுக்கப்பறம் தான் அவங்க பாஸ்ட்ல நடந்த கொடுமையான விஷயங்களப் பத்தி சொன்னாங்க. எப்படி ஒரு மனுஷனால இப்படி ஒரு கொடுமையப் பண்ண முடியும்? அந்த நிமிஷம் என்னால எதையும் கேட்கவே முடியல. அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு. என்னை மாதிரி ஆசிரமத்துல வளர்ந்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னாலே என்னால தாங்க முடியாது. அவங்கள அவங்க வீட்ல பொத்தி, பொத்தி வளர்த்து ஆசையா கல்யாணம் பண்ணி வச்சா, அந்த நாய் அவங்கள என்ன பண்ணிருக்கான் தெரியுமா?” என்று ஒரு நிமிடம் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம் கேட்டான் நந்தன்.

ஒரு பெருமூச்சை விட்ட நிலன், “தெரியும்டா. அவங்களுக்கு நடந்த கொடுமையெல்லாம் வெண்ணிலா என்கிட்ட சொன்னாங்க. பாவம் அவங்க.” என்றான்.

“ம்ம்…. உனக்கே தெரியும் தான? அவங்க வீட்ல எவ்ளோ வேதனைப்பட்டிருப்பாங்க? நானா இருந்தா அந்த நாய ரோட்லயே சுட்டிருப்பேன்.” என்றான் கோபத்தில்.

“ஒரு சாதாரண மனுஷனா எனக்கு அவங்க மேல பரிதாபப்படத்தான் முடிஞ்சது. ஆனா, ரொம்ப உரிமையா அவங்கள கஷ்டப்படுத்துனவன் மேல என்னால கோபப்படமுடியல நந்து. ஆனா, உனக்கு ஏன் அவ்ளோ கோபம் வந்துச்சு?” என்றதும் தான் நந்தனுடைய விழிகள் கலங்குவதை அறிந்து பதறினான் நிலன்.

“நந்து… நீ அழறியா? நீ ரொம்ப ஸ்ட்ராங்கானவனாச்சே? நீயா இதுக்குப் போய் அழற?” என்றான் நிலன்.

“ம்ம்… இதே கேள்வி அன்னைக்கு எனக்கும் இருந்துச்சு நிலா. அது ஏன்னு எனக்கும் தெரியல. அதுக்கப்பறம் வான்மதி மேல ரொம்ப அன்பும், இரக்கமும் காட்ட ஆரம்பிச்சேன். ஆனா, அவங்க எப்பவும் போலதான் என்கிட்ட பழகுனாங்க. ஆனா, எனக்கு அவங்க மேல ஒரு இனம்புரியா உணர்வு வளர ஆரம்பிச்சது. அதுக்கான காரணம் என்னன்னு எனக்குத் தெரியல. ஆனா, அது காதல் தான்னு எனக்கு நல்லாவே தெரிய ஆரம்பிச்சது. அது சரியா? தப்பா?ன்னு கூட எனக்குத் தெரியல. அத மேலும், மேலும் வளர விடக்கூடாதுன்னு என்னோட விருப்பத்தை ஒரு நாள் வான்மதிகிட்டயே சொன்னேன்.” என்று சற்று நிறுத்தினான்.

“அவங்க என்ன சொன்னாங்க நந்து?” என்று ஆவலாய் தன் நண்பணின் விழிகளை ஏறிட்டவனைப் பார்த்து புன்னகைத்தபடி சொன்னான் நந்தன்.

“எனக்கு கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கையே போய்டுச்சு. ஒரு தடவை அதுல இருந்து நான் உயிரோட பொழச்சு வந்ததே பெரிய விஷயம். இதுல மறுபடியும் நான் இன்னொரு முறை ரிஸ்க் எடுக்க முடியாது. வேண்டாம். என்னை விட்டுடுங்கன்னு சொல்லிட்டாங்க. அதோட மேனேஜர்கிட்ட சொல்லி வேற டீம் கேட்டுட்டு அதுக்கப்பறம் வேற டீமும் போய்ட்டாங்க. அதுக்கப்பறம் நான் அவங்களப் பார்க்கறதே ரொம்ப அரிதாயிடுச்சு.” என்றான் நந்தன்.

அவன் அதைச் சொன்னதும், வெண்ணிலாவின் அடிமனதில் ஏன் அப்படி ஒரு எண்ணம் வேர் விட்டு மரமாய் வளர்ந்திருக்கிறது என்பதை கண்கூடாய் அப்போதுதான் உணர்ந்தான் நிலன். கூடவே இருக்கும் ஒருவருடைய வலிகள் தினம் தினம் நாம் பார்க்கும் போது, நமக்கும் அந்த வலி இருப்பதாய் உணர்வோம். அது போல் தான் இதுவும்.

வான்மதியின் வாழ்க்கையில் நடந்த விஷயம், தனக்கும் நடந்துவிடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே வெண்ணிலாவை இந்த முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது. மேலும், அவளுடைய குடும்பத்தினரின் வாழ்வும் இதில் கலந்திருக்கிறது எனும் பொழுது அவள் எடுத்திருக்கும் முடிவு இப்போது நிலனுக்கு தவறாகப்படவில்லை.

ஆனால், அது நிதர்சனம் அல்லவே! வாழ்க்கை என்பது பெரிது. அதில் நடக்கும் சம்பவங்களும், நல்லதும், கெட்டதும் அனைத்தும் சரிசமம். ஒரு பக்கம் கெட்டது நடந்தால், அதற்க்குப் பின் நல்லதே நடக்கும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அதன்படி பார்த்தால் மாற்றம் என்பது அனைவருக்கும் நிகழ்வதே என்பதை சக மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிலனால், வெண்ணிலாவின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிகழும் என்பதில் அவனுக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு. ஆனால், அவள் அதற்க்கு முதலில் புரிந்துகொள்ள வேண்டுமே? அதுவே இப்போது கேள்விக்குறி. இதில் நிலன் தன்னை மட்டுமல்லாது, அவளையே அவளுக்கும் தான் நிரூபித்தாக வேண்டும், என்பதை தனக்கு சவாலான விஷயமாக நினைத்துக்கொண்டான்.

தொடரும்…………….........










உங்களுடைய கருத்துக்களை இங்கே பகிரவும் நட்புக்களே................


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 8

வெண்ணிலா எப்பொழுதும் போல மொட்டைமாடியின் பால்கனியில் இருந்துகொண்டு கடலை ரசித்துக்கொண்டிருந்தாள் அந்த இரவு வேளையில். இந்தக் கடல் மட்டும் அவளுக்கு எப்பொழுதும் அலுத்துப்போவதே இல்லை. அதன் மீதே தனது கவனத்தை செலுத்திக்கொண்டிருந்தவளின் நினைவை கலைக்கும் விதமாக ஒரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள்.

“இன்னுமா நிலா நீ இன்னும் தூங்காம இங்கயே இருக்க?” என்றபடி வந்து நின்றாள் வான்மதி.

“இல்லக்கா. உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்த கடல ரசிக்க எவ்ளோ பிடிக்கும்னு. மனசே வரல. தூங்கவும் தோணல. மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு.” என்று அவள் வர்ணிக்கும் விதமாய்ப் பேச, வான்மதிக்கு அவளைப் பார்க்க ஏனோ வியப்பாக இருந்தது.

ஏனென்றால், வெண்ணிலாவைப் பொறுத்தவரை எப்பொழுதும் ஒருவித இறுக்கமான முகத்தோடே இருப்பாள். அது எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் சரி.

சிரிப்பு, புன்னகை இவை இரண்டையும் அவள் முகத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். ஒட்டுமொத்த குடும்பத்தின் நிலை அவள் மனதில் ஒருவித இறுக்கத்தை அவ்வாறு ஏற்படுத்திவிட்டது.

ஆனால், வான்மதியோ எந்த ஒரு சூழ்நிலையானாலும் அதை கடந்து வந்துவிடுவாள். முந்தைய வாழ்க்கைச் சூழல் மட்டுமே அவளை அப்படிப் பேச வைத்ததே தவிர, அவள் சற்று பக்குவமானவள்.

“என்ன இன்னைக்கு ரொம்ப ஹேப்பி மூட்ல இருக்க மாதிரி தெரியுது? அமெரிக்க மாப்பிள்ள ஓகே ஆய்ட்டாரா?” என்று கேலியாகச் சொல்ல,

அதுவரை வெண்ணிலாவின் முகத்தில் இருந்த பிரகாசம் குறைந்து மீண்டும் இறுக்கம் உண்டானதை வான்மதி உணர்ந்தாள்.

“ஹே….. நிலா நான் சும்மா கிண்டலாதான் கேட்டேன். எப்பவும் மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டு இருப்பியே. இப்போ, உன்னோட ஃபேஸ்ல ஒரு சேஞ்ச் தெரியறதப் பார்த்தேன். அதனால தான், ஒருவேள அவரால தானோன்னு கேட்டேன்.” என்று அவசரமாய் பதிலளித்தாள்.

அவளின் மனதை எந்தவிதத்திலும் நோகடிக்க விரும்பாதவள், “அதெல்லாம் இல்லக்கா. அவர் செஞ்ச ஒரு விஷயம் தான் எனக்கு இன்னைக்கு ஹேப்பினஸ்ஸ கொடுத்திருக்கு.” என்றாள்.

“அப்படி என்ன விஷயம்?” என்று வான்மதி அவளைக் கேட்க, காலை நிலனுடன் ஆசிரமம் சென்ற விஷயத்தைக் கூறினாள் வெண்ணிலா.

“சூப்பர் நிலா. இந்த மாதிரி மனுஷங்களப் பார்க்கறதே ரொம்ப அபூர்வம். நீ அங்க போய்ட்டு வந்தது நினைச்சா ரொம்ப ஹேப்பியா இருக்கு. நிலன் ரொம்ப க்ரேட் தான்.” என்றாள் வான்மதி.

“இல்லக்கா. அவரோட தாத்தா தான் க்ரேட். இப்படி ஒரு விஷயத்தை பண்ணனும்னு நினைச்சாரே. அவரைத்தான் நாம பாராட்டணும். அங்க போனதுக்கப்பறம் தான் நாமெல்லாம் வாழறது வாழ்க்கையா? இல்ல அவங்க ஒருத்தருக்கொருத்தர் அன்பா, பாசமா, வாழறது வாழ்க்கையான்னு எனக்குத் தோணுச்சு. நம்ம வீட்ல அப்படி ஒரு சந்தோஷமான முகத்தப் பார்க்கவே முடியாது. ஆனா, அங்க இருக்க ஒவ்வொருத்தரோட முகத்துலயும் இருக்கற சந்தோஷத்துக்குக் காரணம் அவங்க தான். ரொம்ப நல்லவங்க அந்தத் தாத்தாவும், பாட்டியும்.” என்றாள் சிலாகித்தபடி.

அவள் சொன்ன விதம் வான்மதிக்கு ஆச்சர்யத்தைத்தான் கொடுத்தது. “அப்படிப்பட்டவங்க வளர்த்த பையன்னா கண்டிப்பா நிலன் ரொம்ப நல்லவரா தான் இருப்பார் நிலா. நீ அவரக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை ரொம்ப ஹேப்பியா இருக்கும்னு தான் எனக்குத் தோணுது.” என்றாள் வான்மதி.

“அக்கா, எல்லாமே மேலோட்டமா பார்த்தா அப்படித்தான் தெரியும். ஆனா, யாரோட மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்? இதையெல்லாம் வச்சு ஒருத்தர் இப்படித்தான்னு நம்மாள சட்டுன்னு எப்படிக்கா முடிவெடுக்க முடியும்? அது ரொம்பக் கஷ்டம். எனக்கு டைம் வேணும். பார்க்கலாம்.” என்று ஒட்டாமல் பேசியவளை நினைத்து மனம் வருந்தினாள் வான்மதி.

சிறிது அமைதியாக இருந்தவள், சட்டென்று நந்தனின் ஞாபகம் வர, “அக்கா, அங்க ஆசிரமத்துல நிலனோட ஃப்ரெண்ட் ஒருத்தர் நந்தன்னு இருந்தார். அவரும், நீயும் ஒரே ஆஃபீஸ்ன்னு சொன்னார். நிஜமா?” என்று கேட்டதும், ஒரு நிமிடம் முகம் மாறியது வான்மதிக்கு.

அவள் முகம் மாறுவதை உணர்ந்த வெண்ணிலா, “ஏய்… நான் என்ன கேட்டேன்? அவரைத் தெரியுமான்னு தானே கேட்டேன். அதுக்கேன் உன் முகம் இப்படி மாறுது?” என்று கேட்டாள்.

“அது… அது…. ஆமா…” என்று தயங்கித் தயங்கிப் பேசியவளை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தவள்,

“என்னாச்சு? எனி ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் சொல்லுக்கா? தயவுசெய்து மறைக்காத.” என்று அவளைக் கட்டயாப்படுத்திக் கேட்டாள் வெண்ணிலா.

அதற்க்கு மேல் மறைக்க முடியாமல், நந்தன் தன் மேல் விருப்பம் கொண்டதைச் சொன்னாள் வான்மதி. அதைக் கேட்டதும், வெண்ணிலா ஆச்சர்யப்பட்டாள்.

“அவர் உன்னை லவ் பண்ணாரா? உனக்கு இந்த மாதிரி நடந்ததைக் கேள்விப்பட்டும் உன்னை லவ் பண்ணாரா?” என்று அவளிடம் திரும்பத் திரும்பக் கேட்டாள் வெண்ணிலா.

“ஆமா நிலா… ஆனா, எனக்கு இதுக்கு மேல எதுவும் வேண்டாம்னு தோணுது. ஒரு தடவை அந்தக் கொடுமையிலிருந்து வெளிய வரவே நான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். இதுக்கும் மேல அது வேண்டாம்னு தான் அவர்கிட்ட அப்போவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அவரோட டீம்லயே இருந்து அவரை ஃபேஸ் பண்ண முடியாதுன்னு தான் வேற டீம் கேட்டுட்டுப் போய்ட்டேன். இப்போ நான் வேற பில்டிங்க்ல இருக்கேன். அதனால, அவர அதிகமா மீட் பண்றது இல்ல.” என்று அவனைப் பற்றிய எண்ணத்தைச் சொல்லிவிட்டாள் வான்மதி.

அதைக் கேட்ட வெண்ணிலாவோ, அவளின் எண்ணமும் சரிதான். அனைவரும் எப்பொழுதும் அதே மனநிலையில் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தபடி அவளிடம் அதைப் பற்றி அதற்க்கு மேல் பேசாமல், அவளைத் தேற்றுவதில் கவனமானாள்.


*******

அந்த வாரம் எப்பொழுதும் போல், அவரவர் நேரத்திற்க்கு ஏற்றாற் போல் சுழல ஆரம்பித்திருந்தது திங்கள் கிழமையில். வான்மதியும் அலுவலகம் சென்றவள், அன்றைய தனது வேலையைச் செய்ய ஆரம்பித்திருந்தாள். மாலை வேலை முடிந்து எப்பொழுதும் போல கிளம்பி வெளியே வந்தபோது, அவளது அலுவலக பணியாளர்கள் காத்திருப்பு அறையில் நிலன் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவனைக் கண்டதும் ஆச்சர்யப்பட்டவள் புன்னகைத்தபடி அங்கேயே நின்றாள். நிலனோ அவளைக் கண்டதுமே நேராக வந்து அவள் முன்பு நின்றான்.

“ஹலோ, சிஸ்டர். எப்படி இருக்கீங்க? நான் இங்க எப்படின்னு தான யோசிக்கிறீங்க?” என்றதும், ஆமாமென தலையாட்டினாள் வான்மதி.

“அது….” என்று இழுத்தவன், “உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசணும். முடியுமா? உங்களுக்கொன்னும் ப்ராப்ளம் இல்லையே?” என்றான்.

“இல்ல… அதெல்லாம் ஒன்னும் இல்ல…… பேசலாம்.” என்று சொன்னவளை நேராக அலுவலகக் கேண்டீனுக்குக் கூட்டிச் சென்றதோடு, டீ, காஃபி, சான்விச் என்று ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் நீட்டி சாப்பிடச் சொல்லிவிட்டு அவனும் அதை உட்கொண்டான். அப்படியே மெல்லப் பேச்சையும் ஆரம்பித்தான்.

“உங்களுக்கு நந்தனத் தெரியுமா? அவன் என்னோட திக் ஃப்ரெண்ட்.” என்று சொல்ல, காஃபியைக் குடித்து மெல்ல கீழே வைத்தாள் வான்மதி.

“அதுக்காக காஃபி குடிக்காம இருக்காதீங்க. அவனைப் பத்தி தான் உங்ககிட்ட பேசணும். தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்.” என்று அவன் மிகத் தாழ்மையுடன் சொல்ல, மீண்டும் காஃபியைப் பருகினாள்.

“சொல்லுங்க. அவரைப்பத்தி என்கிட்ட என்ன தெரிஞ்சுக்கணும்?” என்று சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டே பேசினாள் வான்மதி.

அதைக் கேட்டு சிரித்த நிலன், “அவன் என்னோட ஃப்ரெண்ட்டுங்க. அவனைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு இந்த உலகத்துல யாரும் தெரிஞ்சிருப்பாங்களான்னு எனக்குத் தெரியல. அவன் உங்கள விரும்பற விஷயம் எனக்கு நேத்து தான் தெரிஞ்சது. வெண்ணிலா அநேகமா சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்று சொன்னதும், அதற்க்கும் ஆமென்று தலையாட்டினாள்.

“ம்ம்… அவன வேண்டாம்னு நினைக்கறதுக்கு உங்க பாஸ்ட் லைஃப்ல நடந்த இன்சிடண்ட் தான் காரணமா?” என்றான் நிலன்.

இது எப்படி அவனுக்குத் தெரிந்தது? என்று அவள் ஒரு நிமிடம் நினைத்தாலும், ஒரு வேளை நந்தனே சொல்லியிருப்பான் என்று நினைத்து,

“உங்களுக்கு எந்த அளவுக்கு என்னோட பாஸ்ட் தெரியும்னு எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு நடந்த கொடுமையும், வலியும் எனக்கு மட்டும் தான் தெரியும். அதனாலதான் திரும்பவும் அதே ஒரு நிலைக்கு நான் போயிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். இப்போ கொஞ்ச நாளா தான், நான் பழசையெல்லாம் மறந்து கொஞ்சம் நார்மலா இருக்கேன். அதனால தான் வேற எந்த புது ரிலேஷன்ஷிப்பும் தேவையில்லன்னு ஒதுங்கியிருக்கேன்.” என்றாள்.

அவளைக் கூர்ந்து கவனித்த நிலன், “சரி, நீங்க சொல்றது எல்லாத்தையுமே நான் ஒத்துக்கறேன். ஆனா, இது எதுவரைக்கும்னு உங்களால சொல்ல முடியுமா?” என்றான்.

அப்போது அவளிடம் கணத்த அமைதி மட்டுமே இருந்தது. அவளால் எந்த ஒரு பதிலையும் அப்போது தர முடியவில்லை.

“நான் சொல்லட்டுமா? உங்க பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, தங்கச்சின்னு எல்லாரும் இருக்கறவரைக்கும். அவங்க காலத்துக்கு அப்பறம் உங்களுக்குன்னு ஒரு தனிமை உருவாயிடும். யாருமே உங்களுக்குன்னு இருக்கமாட்டாங்க. அப்போ ஏற்படுற வலி இதைவிடக் கொடுமையா இருக்கும். அப்போ அதை நீங்க ஏத்துக்கத் தயாரா இருக்கீங்களா?” என்றான் நிலன்.

அதற்க்கும் வான்மதியிடம் பதிலில்லை. இறுக்கமாய் அமர்ந்திருந்தாள். அதை உணர்ந்த நிலன், “நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும் சிஸ்டர். உங்களுக்கு நடந்த விஷயம், யாருக்கும் நடக்கக்கூடாதுதான். ரொம்ப கொடுமையானதும் கூட. ஆனா, அதுவே நிரந்தரம் இல்ல. நீங்க அதைவிட்டு வெளிய வரணும்னா, அதுக்கு மாற்றமா ஒரு விஷயம் நடக்கணும். உங்கள நேசிக்கற ஒருத்தர் கிடைச்சா நீங்க அதை ஏத்துக்கும்போது கண்டிப்பா அது முடியும். உங்க கடந்த கால வலிகளுக்கும், வேதனைகளுக்கும் மருந்தா அவர் இருப்பார். என் நந்து கண்டிப்பா அப்படி இருப்பான். எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு. ஏன்னு தெரியுமா?” என்று அவன் கேட்க,

அதுவரை அமைதியாய் இருந்த வான்மதி, என்னவென்று முகம் நிமிர்ந்து பார்த்தாள்.

“அவன் எங்க ஆசிரமத்துல வளர்ந்த பையன். அவனுக்கு குடும்பம்ன்னா அது எங்க ஆசிரமம் தான். பிறப்புல அவன் அநாதையா இருக்கலாம். ஆனா, வளர்ந்தப்போ அவன் பார்த்த, பழகுன ஒவ்வொரு மனுஷங்களோடவும் அவன் ரொம்ப ஆத்மார்த்தமா இருப்பான். அப்படித்தான் இப்போவரைக்கும் இருக்கான். அவனுக்கு யாரோட மனசையும் அவ்ளோ சீக்கிரம் நோகடிக்கத் தெரியாது. அப்படி நோகடிக்கறவங்களுக்கு முதல் எதிரியே அவன் தான்.” என்றான்.

“நந்தனோட பழகற விதம் எனக்கும் பிடிக்கும் நிலன். ஆனா, அவர் வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் நினைக்கிறேன்.” என்றாள் வான்மதி.

“இல்லைங்க. அது ரொம்பக் கஷ்டம். அவன் உங்களைத்தான் முதல் முதல்ல விரும்பியிருக்கான். அதுவும் உங்க பாஸ்ட் தெரிஞ்சதுக்கப்பறம்தான் உங்கள விரும்பவே ஆரம்பிச்சிருக்கான். அது உங்க மேல இரக்கப்பட்டு இல்ல, உங்க குணத்தைப் பார்த்துதான் அவனுக்கு உங்கமேல ஒரு பிரியம் ஏற்பட்டு அது காதலா மாறியிருக்கு. உங்களைக் கஷ்டப்படுத்தினவன் மேல அவனுக்கு ஏங்க கோபம் வரணும். அப்போ அதுக்குப் பேர் காதல் தான? எப்படி உங்கள அவன் கஷ்டப்படுத்தலாம்னு கோபப்பட்டத நானே நேர்ல பார்த்தேன். அந்த அளவுக்கு உங்கள விரும்பறான். இல்லைன்னா, நீங்க வேண்டாம்னு சொன்னதுக்கப்பறமும், உங்களைத் தொந்தரவு பண்ணாம உங்க நினைப்பே போதும்னு இப்படி இருக்கமாட்டான்.” என்று தன் நண்பனுக்காக பரிந்து பேசினான் நிலன்.

அதைக் கேட்ட வான்மதி சற்று கண் கலங்கித்தான் போனாள். “அப்படி ஒருத்தர் என்னோட வாழ்க்கைல முன்னாடியே வந்திருந்தா, நானும் அவர் மேல உயிரா இருந்திருப்பேன். ஆனா, இப்போ என்னால அப்படி சகஜமா இருக்க முடியாது. எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு.” என்று வெறுப்பாய்ப் பேசியவளைப் பார்த்து சங்கடமாய் உணர்ந்தான் நிலன்.

“புரியுது சிஸ்டர். ஆனா, அது உண்மை இல்ல. நீங்க அப்படி ஒரு நிலைமைல இருந்தது எல்லாமே ஒரு மாயைன்னு நினைச்சுக்கோங்க. அதுவே நிரந்தரம் இல்ல. கண்டிப்பா வாழ்க்கைல ஒரு மாற்றம் வரும். அதை நீங்க மனசார ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். அப்படி நீங்க ஏத்துக்கும் போது, உங்க வாழ்க்கை கண்டிப்பா சந்தோஷமா தான் இருக்கும். அது இப்போ உங்களுக்குத் தெரியாது. ஆனா, நடக்கும்போது அது தானாவே உங்களுக்குப் புரியும். என்னால எந்த அளவுக்கு உங்களுக்குப் புரியவைக்க முடியுமோ, அதைப் பண்ணிட்டேன். இனிமேல் நீங்க தான் முடிவெடுக்கணும். இதுக்கப்பறம் நானும், நந்து மாதிரியே உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஏதோ, என்னோட சிஸ்டர்ன்னு நினைச்சுத்தான் உங்ககிட்ட இதைப்பத்திப் பேசினேன். தப்பா இருந்தா ஸாரி. பட், நீங்க கொஞ்சம் இதைப்பத்தி யோசிச்சா நல்லா இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் உங்க குடும்பத்துல எல்லாரும் ஆசைப்படுவாங்க. அவங்களையும் நீங்க கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்.” என்றான்.

அவளிடம் திரும்பவும் அமைதியே தொடர, அவள் யோசிக்க அவளுக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டுமென்று நினைத்த நிலன், அவளிடமிருந்து விடைபெற்றான்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தைத் துளைக்க தான் என்ன செய்வது? என்று தெரியாமல் யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் வான்மதி.

தொடரும்…………………………..









ஹலோ டியர்ஸ்... கதை எப்படி இருக்கு? நீங்க ஏதும் சொன்னா நான் எப்படி எழுதறேன்னு தெரியும். நேரம் குறைவா இருக்கு. ஆனாலும், கதையை முடிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க டியர்ஸ்..........

 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 9

அன்று பிரகாஷ் வேலை முடிந்து களைத்துப் போய் வந்தார். உடலை விட மனது தான் ஏனோ அவருக்குச் சோர்வைத் தந்திருந்தது. மனதில் உள்ளவற்றை யாரிடமாவது சொன்னால், சிறிது ஆறுதலாக இருக்கும் தோன்றியது அவருக்கு. அது பெரும்பாலும், ஒன்றாய் மனைவி அல்லது அன்னை என்றே ஆண்களுக்குத் தோன்றும்.

மனைவியான ஜோதியிடம் சொல்வதும் ஒன்று, சொல்லாததும் ஒன்று. எதுவாக இருந்தாலும் அதில் தனக்கு என்ன ஆதாயம் உள்ளது என்று மட்டுமே தேடுபவரிடம் எதைச் சொன்னாலும் கடைசியில் தேவையில்லாத பேச்சுக்கள் தான் மிஞ்சும் என்பதால், அது வீணான சிந்தனை என்று விட்டார்.

அடுத்து அம்மா, இந்த வயதான காலத்தில் அவர் இன்னும் இருப்பது எத்தனை வருடங்கள் என்று தெரியாது. ஏற்கனவே பல விஷயங்களால் அவர் மனவருத்தம் அடைந்திருப்பது தெரிந்த விஷயமே. இதில் மேலும் அவரை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிந்தனையும் உள்ளுக்குள்ளே புதைந்து போனது அவருக்கு.

வீட்டு வேலையாள் கொடுத்த தேநீரை எடுத்துக்கொண்டு மேலே மொட்டை மாடிக்குச் சென்றவர், வெண்ணிலா எப்பொழுதும் நின்று ரசிக்கும் இடத்தில் சென்று தேநீரைப் பருகியவாறே கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்.

“என்ன எப்பவும் இல்லாம இங்க வந்து நிக்கறீங்க? டீ குடிச்சிட்டே நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கற மனுஷனுக்கு, இங்க என்ன வேலை?” என்று நக்கலாகக் கேட்டபடி வந்து நின்றார் ஜோதி.

அவரோ, ஜோதியின் பேச்சை சட்டை செய்யாமல், கடைசி தேநீரைப் பருகி முடித்து அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் செல்வதைப் பார்த்து முறைத்த ஜோதி, இன்னும் எத்தனை காலம் இப்படியே இருப்பார் என்று ஏளனமாக நினைத்துச் சிரித்தபடி சென்றார்.

தனது அறைக்குச் சென்ற பிரகாஷ், உடை மாற்றிவிட்டு வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் சிறிய தோட்டத்தில் உள்ள திண்ணையில் சென்று அமர்ந்துகொண்டார். அங்கே அமர்ந்தவாறு, பறவைகளின் கீச்சிடும் சத்தத்தைக் கேட்டபடி இருந்தார்.

மனது நிலைகொள்ளாமல் அமைதி இழந்து தவித்தால், சில சமயம் இயற்கையின் மீது நாட்டம் ஏற்படும் என்பது பிரகாஷின் விஷயத்தில் உண்மையானது. கணத்த அமைதியை மனதில் அடக்கியபடி அமர்ந்திருந்தவரின் நினைவில் அன்றைய சம்பவம் பெரும் மனஉளைச்சலைத் தந்தது.

அவரது அலுவலகத்திற்க்கு மதியம் அவரைச் சந்திக்க அவரது முன்னாள் நண்பர் தண்டபாணி வந்திருந்தார். அவரை எதிர்பார்க்காத பிரகாஷோ, வேறு வழி தெரியாமல் அவரை வரவேற்றார்.

அவரும் அவரை ஏளனமாகப் பார்த்து சிரித்தபடி அவரின் முன்னே அமர்ந்தார். அவரின் பார்வையைச் சந்திக்க திராணியற்றவராய் தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருந்தார் பிரகாஷ்.

“என்ன பிரகாஷ் எப்படி இருக்க? உங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று அவர் பேசும் தொணியே அவரது மனதை நெருடியது.

“ஆஆங்.. எல்லாரும் நல்லாருக்காங்க.” என்றார் ஒரே வார்த்தையில்.

“ஹூம். சும்மா பேச்சுக்கு சொன்னா எங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு நினைச்சிட்டியா? எல்லாம் தெரியும். எங்கள எவ்வளோ அவமானப்படுத்தினீங்க? அதெல்லாம் ஆயுசுக்கும் மறையாது. இப்போ உன் பொண்ணு நிலைமை என்ன ஆச்சுன்னு பார்த்தியா? அதுக்குத்தான், சொத்து, சுகம் இல்லாட்டியும் மனுஷங்க இடம் பார்த்து கொடுக்கணும்னு சொல்லுவாங்க. அது உங்க விஷயத்துலயும் உண்மையாயிடுச்சு பார்த்தியா? சரி உன் பொண்ணோட விதி. தலையெழுத்து அதுதான்னா மாத்த முடியாது. அனுபவிச்சுத்தான் ஆகணும்.” என்று அவராக பேசிக்கொண்டே சென்றார்.

அதைக் கேட்ட பிரகாஷூக்குக் கோபம் வந்தாலும், அதை அடக்கியபடி, “சரி, இப்ப என்ன விஷயமா இங்க வந்திருக்க?” என்றார்.

“ம்ம்… கோபம் வரணுமே? இந்நேரம் உன் பொண்டாட்டியா இருந்தா நாலு அறையே அறைஞ்சிருப்பாங்க. நீன்னால சும்மா இருக்க.” என்று பிரகாஷை மீண்டும் கோபப்படுத்தினார்.

ஆனால், அவர் அதற்க்கு எதுவும் பேசவில்லை. தண்டபாணி சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை என்பது அவருக்கே தெரிந்த ஒன்றுதான். ஆனால், முன்பு அவர் வான்மதியைப் பற்றி சொன்னதுதான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.

“சரி, நான் விஷயத்துக்கு வரேன். என்னோட மருமகளுக்கு அடுத்த வாரம் வளைகாப்பு வச்சிருக்கேன். அதாவது என்னோட பையன் அப்பாவா ஆய்ட்டான். அதுமட்டுமில்ல என் மருமகள எவ்ளோ நல்லா பார்த்துக்கறான்னு தெரியுமா? உங்களுக்குத்தான் அந்தக் கொடுப்பனை இல்லையே? அதுக்கு எதுவும் செய்ய முடியாது. இந்தா இன்விடேஷன்.” என்று அவரது கையில் தராமல் டேபிளில் பத்திரிக்கையை வைத்தார்.

“இந்த ஃபங்க்‌ஷன்க்கு நீ வந்தாலும், வரலைன்னாலும் நான் கவலைப்படமாட்டேன். ஆனா, உனக்கு இந்த விஷயம் தெரியணும்னுதான் சொல்ல வந்தேன். வந்த கடமைக்கு ஒரு பத்திரிக்கையக் கொடுத்துட்டேன். இதை மறக்காம உன்னோட மனைவிக்குக் கொடு. அவங்க பார்த்தாவது தெரிஞ்சுக்கிட்டும்.” என்று மேலும் அவரை நோகடித்தார்.

எதுவும் பேசாமலேயே அமர்ந்திருந்தவரை திரும்பவும் ஏளனமாய்ப் பார்த்துவிட்டுச் சென்றார் தண்டபாணி. அவர் செய்த செயல் இப்பொழுது வேண்டுமானால் தவறாகத் தெரியலாம். ஆனால், அன்று அவரையும், அவரது குடும்பத்தாரையும் அவமானப்படுத்திய செயலில் இது கால் பாகம் கூட இல்லை.

அதையே நினைத்துக்கொண்டிருந்தவரின் தோளில் ஒரு கை பட நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள் கிட்டத்தட்ட கலங்கியிருந்தது. தோட்டத்தில் தனியாய் அமர்ந்து யோசித்துக்கொண்டிருப்பவரின் நிலை என்னவாக இருக்கும்? என்ற ஆர்வத்தில் அங்கே வந்தது அவரின் மகள் வான்மதி.

ஆனால், வான்மதி தனது தந்தை கண் கலங்குவதைக் கண்டு திடுக்கிட்டாள். எந்த ஒரு மகனுக்கும், மகளுக்கும் தனது தாய்மார்கள் கண் கலங்குவதைக் காண்பது என்பது புதிதல்ல. ஆனால், எந்தவொரு தகப்பனின் கண்களும் அத்தனை எளிதில் கலங்குவதைக் கண்டிருக்கமாட்டார்கள்.

அதே நிலைதான் இப்போது வான்மதிக்கும். அவரைப் பார்க்கவே அவளுக்கு சங்கடமாக இருந்தது.

“அப்பா, என்ன ஆச்சு? எதுக்கு அழறீங்க? ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்ட மகளை ஏறிட்டவர், அவளின் கையை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு அழுதார்.

தந்தை இப்படி கதறியழுவதைக் காணச் சகிக்காத வான்மதிக்கும் கண்கள் கலங்கியது. “அப்பா… ப்ளீஸ் பா… எனக்கு நீங்க அழறதப் பார்த்தா ரொம்பக் கஷ்டமா இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.” என்று அழும் மகளைக் கண்டவரின் கண்கள் அப்போதைக்குக் கண்ணீரை நிறுத்தின.

“நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன் டா. எனக்கு ரொம்ப கில்ட்டி ஃபீலிங்கா இருக்கு. உன்னை யார் யாரோ பேசற மாதிரி நடந்துடுச்சு. அதுக்கு முழுக்காரணமும் நாங்க தான். நீ எந்தத் தப்பும் பண்ணல.” என்று மறைமுகமாய்ப் பேசியவரின் பேச்சு விளங்கவே இல்லை வான்மதிக்கு.

“யாரு என்னைப் பத்தி என்ன சொன்னாங்க? அதுக்குத்தான் நீங்க இப்போ ஃபீல் பண்ணி அழுதுட்டிருக்கீங்களா?” என்றாள்.

அவள் கேட்டதும், அதுவரை மனதினில் தேக்கி வைக்க வேண்டுமென வைராக்கியத்தில் வைத்திருந்த அனைத்தையும் அவளிடம் கொட்டினார். அதைக்கேட்டு வான்மதிக்கு எரிச்சல் மண்டியது.

“அப்பா. நீங்க அவர் பேசற அளவுக்கு விட்டிருக்கக் கூடாது. அவர் பேசறதுக்கு முழுக் காரணமும் அம்மாதான? அவங்ககிட்ட இதெல்லாம் பேசினா ஒருவகைல நியாயமிருக்கு. அவங்க பண்ண தப்புக்கு உங்களை எப்படிப்பா அவர் அப்படிப் பேசலாம்?” என்று பொங்கியெழுந்தாள் வான்மதி.

“அதுக்கு ஒருவகைல நானும் காரணம் தானே டா. அப்பறம் அவங்க எப்படிப் பேசினாலும் நான் அதைக் கேட்டுத்தானே ஆகணும்.” என்றார் விரக்தியாக.

தந்தையின் பதிலில் அதிருப்தியானவள், அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

பிரகாஷூம், தண்டபாணியும், சிறிய வயது நண்பர்கள். பிராகஷூக்கு முன்பே தண்டபாணிக்குத் திருமணமாகிவிட்டது. தந்தையின் தொழிலையே பிரதானமாக வைத்துக்கொண்டார். அதேபோல், பிரகாஷ் அளவுக்கு அவர் வசதியானவரும் இல்லை என்றாலும், இருப்பதை வைத்து தனது குடும்பத்தை நடத்தினார்.

அவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் கல்லூரிப் படிப்பு முடித்து ஒரு நல்ல வேளையில் சேர்ந்திருந்தான். இரு வருடங்களில் அலுவலகத்தில் நல்ல வருமானமும், கூடவே நல்ல ஏற்றமும் கிடைக்க, அடுத்து அவனுக்கு ஒரு நல்ல வரனைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

ஒரு நாள் எதேச்சையாகக் கோவிலில் குடும்பத்தோடு வந்திருந்தவர், அதே நேரம் குடும்பத்தோடு கோவிலுக்கு வந்திருந்த பிரகாஷையும், வான்மதியையும் பார்த்துவிட்டார். பார்த்த உடனேயே அவளை குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்துப் போக, அவளைப் பெண் கேட்டு, எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் வந்து வான்மதியைப் பெண் கேட்டனர்.

அதைக் கண்டு வெகுண்டெழுந்தார் ஜோதி. தனது மகளுக்கு தங்களை விட வசதி அதிகமுள்ள வரனையோ, அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் வரனையோ பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு, இப்போது இவர்கள் வந்து பெண் கேட்பது பிடிக்கவில்லை.

கண்டிப்பாக இது பிரகாஷின் தலையீடு இல்லாமல் நடந்திருக்காது என்று நினைத்தவர், அவரின் கண் முன்னே அவர்கள் கொண்டு வந்த தட்டு, பூ, பழம் என அனைத்தையும் எடுத்து வெளியே வீசியவர், அவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார்.

பிரகாஷ், ஜோதியைத் தடுக்காமல் இருந்தது தண்டபாணியின் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. வெளியே இதைப்பற்றிப் பேசும்போது கூட, என்னிடம் ஒருவார்த்தை பகிரவோ, கலந்தோ கொள்ளாமல் நீ ஏன் நேரடியாக வந்தாய்? என்று கூறிய பிரகாஷை அவர் எரித்த பார்வை பார்த்துச் சென்றார்.

அடுத்து வந்த வரன் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும், ஜோதி எதைப்பற்றியும் யோசிக்காமல், விசாரிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அனைவருடைய பேச்சையும் மதிக்காமல் வான்மதியைத் திருமணம் செய்துகொடுத்தார்.

அதன் பிறகு, வான்மதிக்கு ஏற்பட்ட கொடுமைதான் அனைத்தும் அறிந்ததே. அதைக் கேள்விப்பட்ட தண்டபாணி ஒரு வெற்றிப் பெருமிதத்தோடு ஒரு நல்ல பெண்ணைத் தேடிப்பிடித்து தனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார்.

இப்போது, வளைகாப்பை சாக்காய் வைத்துக்கொண்டு வந்து பிரகாஷின் மனதை நோகடித்துவிட்டுச் சென்றுவிட்டார். இது பிரகாஷூக்கும் தெரியும் என்றாலும், அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை. தனது மகளின் வாழ்க்கை கெடத் தானும் காரணமே என்ற குற்ற உணர்ச்சியே அவர் அழுகையின் உச்சம்.

“அப்பா, இப்போ அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியாகிடுமா? அம்மா அன்னிக்கு அவங்கள அவமானப்படுத்தும்போது நீங்க ஏன் அவங்கள எதுவுமே தடுக்காம இருந்தீங்க? அப்படி நீங்க தடுத்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமை உங்களுக்கு வந்திருக்காதே பா.” என்றாள்.

“சரிதான் டா. ஆனா, அப்போ என் மனசுலயும் உன்னை ஒரு நல்ல வசதியான இடத்துல கொடுக்கணும்னு ஒரு மனநிலை தான் இருந்துச்சு. அவன் என்கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கேட்டிருந்தா நான் முடியாதுன்னு ஒரே வார்த்தைல சொல்லியிருப்பேன். ஆனா, அவன் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாம குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்டா, அதை எப்படிம்மா ஏத்துக்கறது? அப்போ, அவன் மேல எனக்கும் கோபம் இருந்துச்சு. அதனால தான் உங்கம்மா அவங்கள அவமானப்படுத்தும்போது அமைதியா இருந்திட்டேனோ என்னவோ? ஆனா, இப்போ யோசிச்சா அவங்க குடும்பத்துக்கு உன்னைக் கட்டிக்கொடுத்திருந்தா கூட நீ இந்நேரம் சந்தோஷமா இருந்திருப்பேன்னு தோணுது. அதனால தான், இன்னைக்கு அவன் வந்து பேசினப்போ நான் பண்ணத் தப்புக்கு பிராயிச்சித்தம்ன்னு நினைச்சு, அமைதியா இருந்தேன். ஆனா, அவன் உன்னைப் பத்தி சொன்னதும் தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு டா. நாங்க பண்ணத் தப்புக்கு நீ என்னடா பண்ணுவ? எல்லாமே எங்களால தான்.” என்று மீண்டும் கண்ணீரை சிந்தினார்.

வான்மதிக்கு இப்போதுதான் தனது தந்தையின் மனநிலை புரிந்தது. அவரும் ஒருவிதத்தில் இதற்க்குக் காரணம் என்று நினைக்கும் போது அதற்க்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை அவளுக்கு.

ஆனால், இந்நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக அது அவரது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அத்தனை எளிதில் தங்களது கவலைகளையும், கஷ்டங்களையும் ஒருவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ஆண்களுக்கு உடலளவில் பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்று.

அதை இந்த நிமிடம் நினைத்துப் பார்த்து கவலைகொண்டாள் வான்மதி.

“சரிப்பா, இன்னும் அதையே நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்கப் போறீங்களா? அடுத்து வேற என்ன வேலையோ அதைப் பாருங்கப்பா.” என்று ஆறுதல்படுத்தினாள்.

“இல்லடாமா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறவரைக்கும் இந்தக் கவலை என் மனச விட்டுப் போகும்னு நம்பிக்கை இல்ல. அதுக்காக உன்னை வற்புறுத்தறேன்னு அர்த்தமில்ல. எல்லாப் பெத்தவங்களுக்கும் உண்டாகற சாதாரணமான கவலை தான் இது. இனி எதுவா இருந்தாலும் அது உன்னோட விருப்பம் டா. நான் எதுக்கும் குறுக்க நிற்க மாட்டேன். ஏதோ, மனசு ரொம்ப பாரமா இருந்துச்சுன்னு உன்கிட்ட இதையெல்லாம் சொல்லி அழுதேன். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதடா.” என்று அவரின் தலையை வருடியபடி கூறினார் பிரகாஷ்.

“அப்பா…. அதெல்லாம் எதுவும் இல்ல. நீங்க இப்போ உங்க மனசுல இருக்கறத என்கிட்ட சொன்னதால தான் உங்க மனசு கொஞ்ச ரிலாக்ஸ் ஆகியிருக்கு. இது மாதிரி எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்கப்பா. நீங்க தான முதலெல்லாம் சொல்லுவீங்க நான் உங்க ஃப்ரெண்ட்டுன்னு. நான் அப்படித்தான் நினைக்கறேன்.” என்று சொன்ன மகளின் உச்சி முகர்ந்தவர், அவளிடம் சொல்லிவிட்டு வீட்டிற்க்குள்ளே சென்றார்.

மனது நொந்தவராகச் செல்லும் தனது தந்தையையே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதில், நிலன் சொன்ன விஷயங்கள் தான் அப்போது ஓடியது. அவன் சொன்ன விஷயமும், இப்போது தனது தந்தை சொன்ன விஷயமும் சரிதான் என்பது அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.

ஒரு பெண் இந்த சமூகத்தில் தனித்து இருந்தால், அதற்க்கு எத்தனை சவால்கள் இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், பெற்றவர்கள், அவளைச் சார்ந்தவரகள் என்பதையும் தாண்டி தனக்கு அது எத்தனை அவசியம் என்பதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தாள் வான்மதி.



தொடரும்………………………..












ஹலோ டியர்ஸ்... உங்க கருத்துக்களை இங்கே பதிவிடுங்க...........


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 10

வான்மதி தனது வேலையில் கவனம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தாள். நிலனும், பிரகாஷூம் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்க, அதிலிருந்து மீள முடியாமல் தவித்தாள்.

கடந்த கால வாழ்க்கையிலிருந்து இப்பொழுதுதான் சிறிது சிறிதாகத் தன்னை மீட்டுக்கொண்டிருந்தவளுக்கு, திடீர் வரவாய் நிலன் வந்து தன் நண்பனுக்காகப் பரிந்து பேசியதும், அவளுடைய தந்தை பிரகாஷூடைய நண்பர் அவரை ஏளனப்படுத்தியதும் என்று தன்னை சார்ந்து நடந்த விஷயங்களால் குழப்பமானாள்.

அதிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமா? இல்லை அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மீண்டும் ஒரு வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் என்று கூட தோன்றியது வான்மதிக்கு.

இதற்க்கு ஒரே வழி, யாரிடமாவது சொல்லி தனக்கான வழியைத் தேர்ந்தெடுப்பது. யாரிடம் சொல்வது, கேட்பது? என்ற முடிவில் வேலையைக் கூட செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவளுக்கு சட்டென்று வெண்ணிலாவினால் அறிமுகமான அவளது தோழி ரஞ்சனியின் நினைவு வந்தது.

அவளைப் பற்றி நிறைய முறை பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறாள் வெண்ணிலா. அதே போல், அவளுடைய பிறந்தநாளன்று அவளுக்கு ஆச்சர்யமளிப்பதற்க்காக ஒரு பெரிய பரிசை வாங்கி வந்திருந்தவளை அவ்வளவு சீக்கிரம் அவள் குடும்பத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஒரு தெளிவு பிறந்தது. அவள் ஒரு மனநல மருத்துவர் என்பது தெரிந்த விஷயமே. அதனால், அவளிடம் பிரச்சினையை சொன்னால் என்ன? என்று தோன்ற வெண்ணிலாவிற்க்கு போன் செய்தாள்.

“ஹலோ. அக்கா சொல்லு. என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?” என்றாள் வெண்ணிலா.

“எனக்கு ஒரு ஹெல்ப் நிலா. உன்னோட ஃப்ரெண்ட் அந்த சைக்காட்ரிஸ்ட் டாக்டர். ரஞ்சனி அவங்க அப்பாய்ன்மெண்ட் கிடைக்குமா?” என்றாள் வான்மதி.

அக்கா எதற்க்கு அவளைப் பார்க்க வேண்டும் என்கிறாள்? என்ற குழப்பத்திலேயே, “எதுக்கு கா? நீ பார்க்கணுமா?” என்றாள் வெண்ணிலா.

“இல்ல அது.. என்னோட ஃப்ரெண்டோட ரிலேட்டிவ்க்கு பார்க்கணுமாம். நீ தான் டாக்டர்ன்னு தெரியுமில்ல. அதனால தான் உன்கிட்ட கேட்க சொன்னாங்க.” என்று அவளிடம் உண்மையைச் சொல்லாமல், வேறு எதையோ சொல்லி மழுப்பினாள்.

“ஓ!! சரி அவளோட பர்சனல் நம்பர் உனக்கு அனுப்பறேன். நீ அவகிட்டயே பேசிக்கோ.” என்று சொல்லி அழைப்பை வைத்துவிட்டாள்.

அப்போதுதான் நிம்மதியாக இருந்தது வான்மதிக்கு. அடுத்த ஒரு நிமிடத்தில் அவளின் எண்ணை வெண்ணிலா அனுப்பிவைக்க, அப்போதே அவளுக்கு போன் செய்து பேசினாள் வான்மதி.

“ஹலோ.. யாரு?” என்று எதிர்முனையில் ரஞ்சனி பேச,

“நான் வெண்ணிலாவோட அக்கா வான்மதி பேசறேன் பா. நீங்க டாக்டர்.ரஞ்சனி தானே?” என்றாள்.

“ஆங்க்.. அக்கா. ரஞ்சனி தான். உங்கள ஞாபகம் இருக்கு. சொல்லுங்க என்ன விஷயம்?” என்றாள் நேரடியாக.

“அது.. அது… உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும் பா. நான் இப்போவே உங்களைப் பார்க்க முடியுமா?” என்றாள் வான்மதி.

அவருக்கு ஏதோ நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த ரஞ்சனி, “சரிங்க கா. நீங்க நாவலூர் வர முடியுமா? அங்க தான் நான் இருக்கேன். என்னுடைய கிளினிக்கும் அங்க தான் இருக்கு. ஈவினிங் அப்பாய்ன்மெண்ட் இருக்கு. இல்லைன்னா கூட வெளிய வந்திடுவேன்.” என்றாள் ரஞ்சனி.

அவளின் நிலை புரிந்தவளாக, “ஒன்னும் பிரச்சினை இல்ல பா. நான் இங்க ஓ.எம்.ஆர் ல தான் ஆஃபீஸ்ல இருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்திடறேன்.” என்று சொன்னவள், அழைப்பைத் துண்டித்துவிட்டு நேராக டி.எல் அறைக்குச் சென்றாள்.

அவரிடம் அவசரம் என்று ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு, தனது வண்டியை எடுத்துக்கொண்டு நேராக நாவலூரில் ரஞ்சனி குறிப்பிட்ட இடத்திற்க்குச் சென்றாள்.

மேலே வீடும், கீழே கிளினிக்கும் இருப்பதைப் பார்த்தாள். அவள் வண்டியின் சத்தம் கேட்டு மேலே பால்கனிக்கு வந்து நின்று பார்த்தபடி இன்முகமாய் வரவேற்றாள் ரஞ்சனி.

“வாங்க கா. கீழ தான் கிளினிக். மேல வீட்ல நான் இருக்கேன். காஃபி, டீ ஏதாவது குடிக்கறீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல பா. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். வீட்ல அம்மா, அப்பா இருக்காங்களா?” என்று உள்ளே பார்வையைச் சுழல விட்டபடி கேட்டாள் வான்மதி.

“அம்மா மட்டும்தான் கா. அப்பா இல்ல. இறந்துட்டாரு. அம்மாவும் ஊர்ல ஒரு ஃபங்க்ஷன் இருக்குன்னு நேத்துதான் கிளம்பிப் போனாங்க.” என்று சாதாரணமாய்ச் சொன்னவளைப் பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது வான்மதிக்கு.

“சொல்லுங்க கா. ஏதாவது முக்கியமான விஷயமா? உங்க முகமே ஒரு பதட்டத்துல இருக்கறது தெரியுது. நீங்க என்கிட்ட ஃப்ரீயா பேசலாம். நான் ஃபீஸ் எதுவும் வாங்கமாட்டேன்.” என்று சொல்லி சிரித்தாள் ரஞ்சனி.

“இல்ல… அதெல்லாம் இல்ல பா. நான் ஒரு குழப்பத்துல இருக்கேன். அதை எப்படி தெளிவுபடுத்திக்கறதுன்னு தெரியல. முதல்ல என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் சந்தேகமாய்.

“நிலாவும், நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் கா. ரெண்டு பேருக்குள்ளயும் எந்த ஒளிவு, மறைவும் இருந்ததில்ல. அவ உங்க எல்லாரைப் பத்தியும் என்கிட்ட எல்லாமே சொல்லியிருக்கா. உங்களுக்கு நடந்த கொடுமைகளையும் நான் கேள்விப்பட்டேன். சாரி அக்கா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.” என்று அவள் வருத்தப்பட்டதை நினைத்து முறுவலித்தாள் வான்மதி.

“அந்த விஷயத்துல இருந்து இப்போ தான் கொஞ்சம் வெளிய வந்திருக்கேன். ஆனா, நான் நிம்மதியா இருக்க முடியாத மாதிரி இப்போ எனக்கு ஒரு புது பிரச்சினை வந்திருக்கு. அது எனக்கு நல்லதா? கெட்டதா?ன்னு தெரியல. ஏன்னா, திரும்பவும் நான் எந்த ஒரு பிரச்சினைக்குள்ளயும் மாட்டிக்கக்கூடாதுன்னு கொஞ்சம் தெளிவா யோசிச்சிட்டு இருக்கேன். ஆனா, என்னால ஒரு சரியான முடிவெடுக்க முடியல. இதுல எனக்கு வேற யாராவது கொஞ்சம் சரியான யோசனை சொன்னா, நானும் கொஞ்சம் தெளிவாவேன்.” என்று சொன்னவளின் பிரச்சினை சற்று புரிந்தது ரஞ்சனிக்கு.

“நீங்க தாராளமா சொல்லுங்க கா. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு சொல்யூஷன சொல்றேன்.” என்றாள் ரஞ்சனி.

அவளுக்கு அதற்க்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், நந்தனின் தன் மீதான விருப்பம், அதையடுத்து நிலன் தன்னிடம் தன் நண்பனுக்காகப் பேசிய நியாயமான விஷயங்கள். பிறகு, பிரகாஷின் நண்பரின் பெண் பார்க்கும் படலம், அதைத் தாண்டி தனக்கு நடந்த விஷயங்கள், அண்மையில் தந்தையின் நண்பர் அவரை ஏளனம் செய்தவிதம் என்று அனைத்தையும் அவளிடம் ஒப்பித்தாள்.

அனைத்து விஷயங்களையும் ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் கேட்டறிந்தாள் ரஞ்சனி. அதே போல், அவள் இப்போது எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதையும் தெரிந்துகொண்டாள்.

“அக்கா. நீங்க உங்க விஷயத்துல நடந்த கெட்ட விஷயங்களை மட்டுமே பார்த்து உங்க வாழ்க்கையோட அடுத்தகட்ட சந்தோஷத்துக்கான வாய்ப்பையே கொடுக்காம இருக்கீங்க. அது முழுசா தப்புன்னு நான் சொல்லவரல. ஆனா, அதை நீங்க தடுக்க நினைக்கிறது தான் தப்புன்னு சொல்றேன்.” என்றாள் ரஞ்சனி.

அதைக்கேட்டு விழித்தாள் வான்மதி. அவளுக்குப் புரியும்படியாக அதை விளக்கினாள் ரஞ்சனி.

“உங்க கடந்த கால வாழ்க்கை இப்போ உங்கள விட்டுப் போய்டுச்சு. அதாவது உங்களுக்குப் பிடிக்காம வந்த பிறந்தநாள் பரிசு மாதிரி. ஆனா, இப்போ வரப்போகறதோ உங்கள நேசிக்கற ஒருத்தரோட அன்பு. அது ரொம்ப நாளா நீங்க ஆசைப்பட்டு, அது கிடைக்காம போய் இருந்த நிலைல, நீங்க எதிர்பார்க்காத நேரத்துல கிடைக்கிற பிறந்தநாள் பரிசு மாதிரி. அப்படி எதிர்பார்க்காம கிடைச்ச ஒரு பொக்கிஷம் கிடைக்கும் போது, அதை நீங்க ஏன் வேணாம்னு சொல்றீங்க?” என்றாள் ரஞ்சனி அவளுக்குப் புரியும் விதத்தில்.

அப்போதுதான் ரஞ்சனியின் மனது ஒருவித தெளிவை உணர்ந்தது. ஆனாலும், ஏனோ ஒரு பக்கம் சந்தேக உணர்வு வந்து தொற்றிக்கொண்டது.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் பா. ஆனா, என்னோட பாஸ்ட் லைஃப்ல நடந்த மாதிரிட் இல்லைன்னாலும், வேற ஒரு விதத்துல எனக்கு இப்போ வரப்போற லைஃப்ல கஷ்டம் வராதுன்னு என்ன நிச்சயம்?” என்றாள் வான்மதி.

அதைக்கேட்டு சிரித்தாள் ரஞ்சனி. வான்மதியோ அவள் சிரிப்பதைக் கண்டு ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அதைக் கண்டவள், “சாரி அக்கா. நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வருது. இந்த உலகத்துல கஷ்டம்ன்னு ஒன்னு இல்லாத மனுஷங்க எங்க இருக்காங்க சொல்லுங்க? மனுஷனாப் பிறந்தாலே கஷ்டத்த அனுபவிக்கணும்னு தலையெழுத்து கட்டாயம் இருக்கும். இல்லைன்னா, கடவுள்ன்னு ஒரு சக்தி இருக்கறதையே நாம மறந்துடுவோம் இல்ல?” என்று சொன்னதும், வான்மதி அமைதியாக இருந்தாள்.

“ஏன் என்னையே எடுத்துக்கோங்க, என்னைப் பார்த்தா கஷ்டம் இருக்காதுன்னு நினைக்கத் தோணுதா? ஆனா, நிஜமே வேற. எங்கம்மா சின்ன வயசுல அனுபவிக்காத கொடுமையே இல்ல. அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து அடிப்பாரு. சண்டை போட்டு ஊரையே கூட்டுவாரு. அத்தனையும் பொறுத்துக்கிட்டுத்தான் எங்க அம்மா எனக்காக குடும்பம் நடத்தினாங்க. கடவுளுக்கே ஒரு கட்டத்துக்கு மேல எங்கம்மாவ கஷ்டப்படுத்தத் தோணல. ரோட்ல குடிச்சிட்டு விழுந்து கிடந்த அப்பா மேல லாரி ஏறி அந்த இடத்துலயே இறந்துட்டார். அதுக்கப்பறம் அந்த ஊர விட்டு இங்க வந்து எங்கம்மா ஒரு வேலைல சேர்ந்து என்னைப் படிக்க வச்சு ஆளாக்கி இருக்காங்க. அவங்க விருப்பப்படி நான் டாக்டரானேன். ஆனா, நோயைப் போக்கற டாக்டரா இருக்கறத விட, மத்தவங்க கஷ்டத்தத் தீர்த்து வைக்கற டாக்டரா இருக்கனும்னு நினைச்சேன். அந்த வேலையைத் தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். என்கிட்ட தினம் தினம் வர எத்தனையோ பேரோட கஷ்டங்களைக் கேட்டா, என்னால ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க முடியாது. ஆனா, அவங்களுக்கு ஒரு சொல்யூஷன் கொடுத்து, அவங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்து அனுப்பறது மட்டும்தான் என் வேலை. அதை நினைச்சு நான் ஃபீல் பண்ண ஆரம்பிச்சா அவ்ளோதான். அதனால, எல்லாத்தையும் அப்படியே விட்டுடுவேன்.” என்றாள்.

அப்போதுதான், அவள் எத்தனை கஷ்டத்திலிருந்து வந்திருக்கிறாள் என்பது வான்மதிக்குப் புரிந்தது. தனக்காவது, குடும்பம் வந்து ஆதரவு அளித்தது. ஆனால், இவர்களுக்கு அதுவும் இல்லாமல் போனது வேதனையாக இருந்தது.

“அக்கா, நீங்க இப்போ என்னோட கதையைக் கேட்டு ஃபீல் பண்ணா அதுல எதுவும் கிடைக்காது. எல்லாத்தையும் ஜஸ்ட் லைக் தட்ன்னு போய்ட்டே இருக்கணும். அவ்ளோதான் வாழ்க்கை. ஆனா, இப்போ உங்களுக்குக் கிடைச்சிருக்கறது ஒரு நல்ல சான்ஸ். நீங்க அதை ஏத்துக்கறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியா இருக்கும்ன்னு சொல்லுவேன்.” என்றாள் ரஞ்சனி.

திரும்பவும் சிந்தனையில் ஆழ்ந்தவளின் மனஓட்டத்தைப் படித்தவள், “நீங்க இவ்ளோ யோசிக்கறதுக்கு வேணும்னா, உங்கள விரும்பறவர்கிட்டயே போய் பேசிப் பாருங்க. அப்போ உங்க மனசுல இருக்கற கேள்விகளைக் கேளுங்க. அது உங்களுக்கு சரின்னு பட்டா அவர ஏத்துக்கோங்க. இப்போதைக்கு இதுதான் கா, உங்களுக்கு நான் தர சொல்யூஷன்.” என்று தன் முடிவைச் சொன்னாள் ரஞ்சனி.

“ம்ம்.. நீ சொல்றது சரிதான் பா. நான் இதைப்பத்தி அவர்கிட்ட பேசித் தெளிவுபடுத்திட்டு அதுக்கப்பறம் நான் ஒரு முடிவெடுக்கறேன். என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்பக் குழம்பிப் போயிருந்தேன் பா. இப்போ, உன்கிட்ட பேசினதுக்கப்பறம் தான் கொஞ்சம் தெளிவா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் பா.” என்று நன்றி கூறினாள் வான்மதி.

“அக்கா. இது என்னோட வேலை. நீங்க உங்க பிரச்சினைய சொன்னீங்க. நான் அதுக்கு சொல்யூஷன் சொன்னேன் அவ்ளோதான். சிம்ப்பிள்.” என்று சிரித்தவளைப் பார்த்து முகம் முழுக்க பிரகாசத்துடன் புன்னகைத்தாள் வான்மதி.

“அப்பறம் இன்னொரு விஷயம் அக்கா. உங்க ஃபேமிலியோட ப்ராப்ளம்ன்னால நிலா மேரேஜே பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டிருக்கா. அவளோட மனசுல ரொம்ப ஆழமா அந்த விஷயத்த வச்சிட்டிருக்கா. அதனால தான் அவ நிலனக்கூட இப்போ வரைக்கும் ஓகே சொல்லல. அவர்கிட்ட உங்க விஷயம் எல்லாத்தையும் சொல்லி, காரணம் காட்டி அவர்கிட்ட வேண்டாம்னுதான் சொல்லியிருக்கா. ஆனா, அவர் தான் பரவால்ல, கொஞ்ச நாள் பழகிப் பார்க்கலாம்ன்னு சொல்லி சமாளிச்சிருக்காரு. ஆனா, நிலா பிடிவாதமா இருக்கறதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு.” என்றாள் ரஞ்சனி.

“ஓ!! இவ்ளோ நடந்திருக்கா. எனக்குத்தான் எதுவுமே தெரியல. ஆனா, என்கிட்டயும் நிலனப்பத்தி பேசும் போது, சரியா பேசறது இல்ல. அது எனக்கும் தெரிஞ்சது.” என்றாள் வான்மதி.

“நீங்க ஒரு நல்ல முடிவெடுத்தா, கண்டிப்பா அதைப்பார்த்தாவது நிலா கொஞ்சம் மனசு மாறுவான்னு தோணுது கா. சோ, நீங்க அவளையும் கொஞ்சம் நினைச்சுப் பார்த்து முடிவெடுக்கணும். கண்டிப்பா இந்த முறை உங்களுக்குப் பாசிட்டிவ்வான விஷயம் தான் நடக்கும் கவலைப்படாதீங்க.” என்று நல்லமுறையில் அவளிடம் பேசினாள் ரஞ்சனி.

“கண்டிப்பா. என்னால யாரும் பாதிக்கப்படக்கூடாதுன்னு தான் நினைப்பேன். என்ன நடக்குதுன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நான் நந்தன்கிட்ட பேசிட்டு அப்பறமா ஒரு முடிவெடுக்கறேன். எல்லாம் நல்லபடியா நடந்தா அதுக்கான எல்லா க்ரெடிஸ்ஸூம் உனக்குத்தான் பா.” என்றாள் வான்மதி.

அதைக் கேட்டு ரஞ்சனி, “இல்லக்கா, நீங்க முதல்ல பேசின நிலன மறந்துட்டீங்க. அவர்தான இதைப்பத்தி உங்ககிட்ட அப்ரோச் பண்ணது. சோ, இதோட மொத்த க்ரெடிட்ஸூம் அவருக்குத்தான். நீங்க இந்த விஷயத்துல கன்ஃப்யூஷனா இருக்கும் போது, நான் ஜஸ்ட் உங்கள தெளிவுபடுத்தினேன். அவ்ளோதான். அவர மறந்துடாதீங்க. அப்படியே அவரைப்பத்தி நல்லவிதமா நிலாகிட்ட சொல்லி கொஞ்சம் புரியவைங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அவகிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்.” என்றாள் அவள் தோழிக்காக.

“கண்டிப்பா இதைப்பத்தி அவகிட்ட பேசறேன் பா. நான் உனக்கு சீக்கிரமே போன் பண்றேன். அப்பறம், நான் வந்து உன்கிட்ட பேசின விஷயம் எதுவுமே நிலாக்கு தெரிய வேண்டாம்.” என்று சொன்னவளிடம் தலையாட்டி வைத்தாள் ரஞ்சனி.

சிறிது நேரம் பேசிவிட்டு, அவளிடமிருந்து விடைபெற்றாள் வான்மதி.

தெளிவான முகத்தோடு போகும் வான்மதியைக் கண்டதும் ரஞ்சனிக்குக் கொஞ்சம் மனது லேசானது. ஒரு மனநல மருத்துவராக தனது கடமையைச் செய்தாலும், தனது தோழியின் எதிர்கால வாழ்க்கையையும் நினைத்துப் பார்த்தே அவள் ஒரு நல்ல வழியை வான்மதிக்குக் கூறினாள்.

அதுவே அவளது வாழ்க்கைக்கான அடுத்த பாதைக்குச் செல்ல அவளுக்கு அடித்தளமிட்டது. அதே பாதைக்கு அவளது தோழி வெண்ணிலாவும் செல்வாளா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடரும்………………..








ஹலோ டியர்ஸ்..... உங்க கருத்துக்களை இங்க சொல்லுங்க.............

 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 11

பலதரப்பட்ட விஷயங்களை ஆராயும் போது, ஒரு மனிதனின் வாழ்க்கையில் தெளிவு என்பது ஒன்று அவரவர் அனுபவத்தின் மூலமாகக் கிடைக்கும். மற்றொரு புறம் அந்த அனுபவத்தைக் கடந்து வந்தவர்களின் அறிவுரையில் கிடைக்கும்.

அப்படியும் இல்லையென்றால் ஒரு நல்ல தேர்ந்த மனநல நிபுணர்களின் உதவியால் கிடைக்கும். அப்படித்தான் வான்மதியின் மனதிலிருந்த குழப்பம் ரஞ்சனியால் தெளிவுபெற்றது. ஆனாலும், அவள் சொன்னதைப் போல், தான் நந்தனிடம் பேசினால் மட்டுமே இதற்க்குத் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தாள் வான்மதி.

அடுத்த நாளே அதற்க்காக ஆயத்தமாகிச் சென்றாள். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தாலும், இருவரும் வேறு வேறு குழு என்பதால், தளமும் வேறு வேறு என்றிருந்தது. மாலை பணி முடிந்து தனது வண்டியை எடுக்க வந்தவனை எதிர்கொண்டாள் வான்மதி.

நீண்ட நாள் கழித்து அவளை நேரடியாகக் கண்டான் நந்தன். அவள் வேறு குழுவுக்குச் சென்றாலும், அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் அவளே அறியாமல் அவளைப் பார்த்துவிடுவான். ஆனால், வான்மதியோ முற்றிலுமே அவனைத் தவிர்த்திருந்தாள்.

இன்று, அவன் எதிர்பார்க்காத வகையில் அவள் தன்னை நேரடியாகப் பார்த்துக்கொண்டு நிற்பது அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உணர்த்தியது. நிலன், வான்மதியிடம் பேசியது நந்தனுக்குத் தெரியாததால் அவன் விழித்தான்.

இருந்தாலும், அவளைக் கண்டு புன்னகைத்தவன், “மதி.. எப்படி இருக்க? பார்த்தே ரொம்ப மாசம் ஆகுது?” என்றான்.

அவனின் கண்ணியப் பார்வையும், அக்கறையும் அவன் மீதான மரியாதையைக் கூட்ட, அதைக் காட்டிக்கொள்ளாமல், “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நந்தன்.” என்றாள் நேரடியாக.

அவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அவள் பேசவேண்டும் என்று சொல்லும் போது மறுப்பு சொல்ல முடியாதவன், அவளுடன் அலுவலக கேண்டீனுக்குச் சென்றான்.

சென்றவர்கள் தங்களுக்கு சாப்பிடத் தேவையானவற்றை சொல்லிவிட்டு ஓரிடத்தில் தனியாக அமர்ந்தார்கள். இதெல்லாம் புதுமையாகத் தெரிந்தது நந்தனுக்கு. ஏனென்றால், வான்மதி அவ்வளவு சீக்கிரம் எவருடனும் அரட்டை, கேலிப் பேச்சு, என்று கேண்டீனுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவள் அல்ல.

அவள் வேலை முடிந்தால், நேரடியாக வீடு. வீடு விட்டால் அலுவலகம் என்று மட்டுமே இருக்கும் ரகம். அவள் தோழிகள் அழைத்தாலும் அவ்வளவு எளிதில் வராதவள், இன்று தன்னுடன் இங்கே வந்திருப்பது அவனுக்குப் புதிதாகத் தான் தெரிந்தது.

“நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா நந்தன்?” என்று சாப்பிட்டவாறு மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள் வான்மதி.

“கல்யாணமா? அது நீ ஒத்துக்கிட்டா தான நடக்கும் மதி.” என்றான் நேக்காக.

“நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கத் தோணலையான்னு கேட்டேன் நந்தன்.” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

அதைக் கேட்டு நிமிர்ந்தவன், “நான் எதுக்கு வேற யாரையோ கல்யாணம் பண்ணனும் மதி? அந்த எண்ணம் உன்னைத் தவிர வேற யார் மேலயும் வரல. அதனால நான் இன்னும் சிங்கிள் தான்.” என்றான்.

அதைக் கேட்டு அவனை ஒரு நிமிடம் பார்த்தவள், “எதை வச்சு என் மேல உங்களுக்கு லவ் வந்துச்சு நந்தன்? நான் அப்படி ஒன்னும் ஸ்பெஷல் இல்லையே? ஏற்கனவே மேரேஜ் ஆனவ? இதுல எப்படி என்னைப் போய் நீங்க லவ்வெல்லாம்?” என்றாள் சாதாரணமாக.

“ஏன், கல்யாணம் ஆன பொண்ணுங்கள நாங்க யாரும் லவ் பண்ணக் கூடாதா?” என்றதும், திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் வான்மதி.

“ஓ! சாரி. நான் அப்படி சொல்ல வரல. அதாவது, மேரேஜ் ஆனாலும், சில காரணங்களால அந்த வாழ்க்கைய விட்டு வந்தவங்கள சொல்றேன்.” என்று தெளிவாகச் சொன்னான்.

“இருந்தாலும், உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க சிங்கிள்ளா இருக்கும் போது, என்னை ஏன் லவ் பண்ணீங்கன்னு தான் கேட்டேன்.” என்றாள்.

“அதுதான் காதல். ஒருத்தர் மேல இனம்புரியா உணர்வு ஏற்படும்போது நாம உணர்றதுக்குப் பேர் தான் காதல். அது எனக்கு வேற யார் மேலயும் வரல. உன்மேலதான் வந்துச்சு. நீ உன்னோட பாஸ்ட் லைஃப் பத்தி என்கிட்ட சொல்லும் போதுதான் உன்மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்துச்சு. அதுக்கப்பறம் அதுவே காதலா மாறிடுச்சு.” என்றான்.

அதைக் கேட்டு சிரித்தாள் வான்மதி. அவள் சிரிப்பதைப் புதிராய்ப் பார்த்த நந்தன், “எதுக்கு இப்போ சிரிக்கற?” என்றான்.

“அதுக்குப் பேர் காதல் இல்ல நந்தன். அது என் மேல உங்களுக்கு ஏற்பட்ட பரிதாபம். நான் இப்படி ஒரு நிலைல இருக்கேன்னு உங்க பாழாப்போன மனசு கொஞ்சம் பாவப்பட்டிருக்கு. அதைப் போய் காதல்ன்னு நினைச்சுட்டிருக்கீங்களே! அதை நினைச்சுத்தான் சிரிச்சேன்.” என்றாள்.

“அப்படி இல்ல மதி. நீ தப்பா நினைக்கற. முதல் முதல்ல நீ என்னோட டீம்ல வந்து ஜாய்ன் பண்ணப்போவே எனக்கு உன் மேல இண்ட்ரஸ்ட் அதிகமாகத்தான் இருந்துச்சு. அதனால தான் உன்கிட்ட கொஞ்சம் அதிகமாவே பேச ஆரம்பிச்சேன். நீ கல்யாணம் பண்ணிக்கற ஐடியால இருந்தா உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்னு இருந்தேன். அதுக்கப்பறம் நீ சொன்ன விஷயத்தால இன்னும் உன்னை ரொம்ப அதிகமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன். அவ்ளோதானே தவிர, நீ சொன்ன பரிதாபம் மட்டும் இருந்திருந்தா நான் உன்கூட இந்தளவு வந்து பேசியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.” என்று விளக்கினான் நந்தன்.

“என்னவோ நந்தன், உங்க ப்ரப்போசல அக்சப்ட் பண்ண யோசிக்கறேன். ஏன்னா, ஒரு தடவை நான் பட்ட அவஸ்தையே போதும்னு தோணுது. இதுல இன்னொரு வாழ்க்கை, அதுல கேட்கக்கூடாத வார்த்தைகளெல்லாம் கேட்டுட்டா என்னால நிம்மதியாவே இருக்க முடியாது. ஏன்னா, இந்த மாதிரி நிறைய பேரோட லைஃப்ல செகண்ட் மேரேஜ்ன்னு வரும்போது அவங்க எதிர்கொள்ற பிரச்சினைகள நானும் கேள்விப்பட்டிருக்கேன். அத என்னால எந்த அளவுக்கு ஃபேஸ் பண்ண முடியும்னு எனக்குத் தெரியாது. அதனால தான் எனக்குக் குழப்பமா இருக்கு. இப்போ நீங்க காதல், கத்தரிக்காய்ன்னு பேசலாம். ஆனா, கல்யாணத்துக்கப்பறம் வாழப்போற வாழ்க்கைல ஏதாவது ஒரு சின்ன வார்த்தை என்னைக் காயப்படுத்தினா கூட அது என்னை ரொம்பக் கஷ்டப்படுத்தும். இதெல்லாம் தான் என்னை இன்னொரு வாழ்க்கைய ஏத்துக்க யோசிக்க வைக்குது.” என்றவள் முகம் வாடியிருந்தது.

அதைக் கண்டவன், “மதி.. ஒரு விஷயம் சொல்லவா? நீ ஏன் என்னை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கப் போறன்னு நினைக்கற? இப்போதான் புதுசா மேரேஜ் பண்ணப்போற. உன்னோட பாஸ்ட்ன்னு ஒன்னு நடக்கவே இல்ல. அது உன்னை எந்த விதத்திலும் பாதிக்கல. அதெல்லாம் ஒரு கெட்ட கனவு. இந்த மாதிரி ஒரு பிம்பத்த உன் மனசுல உருவாக்கிட்டு அதுல இருந்து உன்னை நீ வெளிய கொண்டு வா. உனக்காக இங்க ஒருத்தன் காத்துக்கிட்டு இருக்கான். அவனுக்காக நாம வாழணும்னு நினைச்சு, என்னை நம்பி நீ வா. நான் உன்னை நிச்சயம் ஏமாத்த மாட்டேன்.” என்றான்.

அதைக் கேட்டு பெருமூச்சு விட்டவள், “இப்போ இப்படித்தான் சொல்லுவீங்க. ஆனா, ஏதாவது சின்னதா தப்பு பண்ணாக்கூட சண்டை போடுவீங்க. கோபத்துல வார்த்தைகளக் கொட்டுவீங்க. இதெல்லாம் நடக்காதுன்னு உங்களால உத்திரவாதம் தர முடியுமா?” என்றாள் அவனை மடக்கும் எண்ணத்தில்.

“ஆமா, கண்டிப்பா சண்டை போடுவேன். இந்த உலகத்துல சண்டை போடாத கணவன், மனைவிய உன்னால காட்ட முடியுமா? நெவர். அப்போதான் அந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்ட்ராங் ஆகும். நிறைய புரிஞ்சுக்க முடியும். நீ கேள்விப்பட்டதில்ல, ஊடலுக்குப் பின் கூடல்ன்னு.” என்று அவன் எதையோ சொல்லவர,

அதிர்ச்சியாகி திரும்பியவள் முறைக்க, “ஐ மீன், சண்டை போட்டு சேர்ந்துடலாம்னு சொன்னேன்.” என்று அழகாய்ச் சமாளித்தான்.

அதைக் கேட்டு சிரித்தவள், “எப்படிப் பார்த்தாலும், என்னை நீங்க கன்வின்ஸ் பண்ணத்தான் பார்க்கறீங்க. என்னை விடமாட்டீங்க போலிருக்கே?” என்றாள்.

“உன்னை விட எனக்கு மனசில்ல மதி. நீயும், நானும் ரொம்ப வருஷம் வாழணும், நம்ம ஃப்யூச்சர், நமக்குன்னு குழந்தைங்க, அழகா ஒரு வீடு, அதுல நாமளும், நம்ம கூட குழந்தைங்களோட அழகான நேரம், இப்படி எத்தனையோ கற்பனை பண்ணி வச்சிருக்கேன். நீ என்ன இப்படி சொல்ற?” என்று அவளைப் பேச்சாலேயே வசியம் செய்தான் நந்தன்.

அதைக் கேட்டு சிரித்தவளுக்கு கண்களில் கண்ணீரே முட்டியது. சிரிப்பிலிருந்து, அழுகையாய் மாறியதைத் தேற்ற முயன்று தோற்றவன், அவள் அருகே வந்து அவளைத் தன் தோள் மேல் அவள் நோகாவண்ணம் மென்மையாய் சாய்த்துக்கொண்டான். அதை மறுக்க முடியாத பாவைக்கும் அந்த நேரத்தில் அது தேவைப்பட்டதோ என்னவோ? அப்படியே இருந்துவிட்டாள்.


******

அந்த வார இறுதியில் யாரும் எதிர்பார்க்காதவாறு ஒரு நிகழ்ச்சி வெண்ணிலாவின் வீட்டில் அரங்கேற இருந்தது. அதை அறிந்த ஒரே ஒரு ஜீவன் வான்மதி மட்டுமே. உள்ளுக்குள் ராக்கெட் வேக பதற்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஏதோவொரு தைரியத்தில் அமைதியாகத் தன்னறையில் அமர்ந்திருந்தாள்.

அவளின் பதற்றம் அதிகரிக்கும் விதமாக, பத்மநாபனும், கமலமும் நிலன் மற்றும் நந்தனுடன் அவர்கள் வீட்டிற்க்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களின் திடீர் வரவால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தாலும், சகஜமாய் இருப்பதைப் போல் காட்டிக்கொண்டனர்.

வார விடுமுறையில் சந்திக்க வேண்டும் என்ற கட்டளையை இந்த வாரம் ஏனோ நிலன் சொல்லவில்லையே? என வெண்ணிலா யோசித்துக்கொண்டிருந்த போதுதான் இவர்களின் விஜயம் கண்டு மனதுக்குள் காரணத்தைப் புரிந்துகொண்டாள்.

ஆனால், அவர்கள் சகஜமாய்ப் பேசிவிட்டுப் போக வரவில்லை என்பதினாலோ என்னவோ? குடும்பத்தினருக்குக் குழப்பம் அதிகரித்தது. ஆனால், எதையும் நேரடியாகக் கேட்க முடியாத நிலைமை. அனைவரும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். அவர்கள் மட்டுமே வர வேண்டிய இடத்தில், கூடவே வந்த நந்தனுக்கு என்ன வேலையோ? என்று கூட நினைத்தார்கள்.

இவையனைத்தையும் பார்க்கவில்லை என்றாலும், மேலே அறையில் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டே அதே பதற்றம் இன்னும் விலகாமல் அமர்ந்து, இறைவனின் நாமத்தை மனதுக்குள் சொல்லியபடி இருந்தாள் வான்மதி. அன்று நந்தனிடம் சொன்ன விஷயங்கள் தான் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது அவளுக்கு.

“நீங்க என்னை சம்மதிக்க வைச்சிருக்கலாம் நந்தன். ஆனா, எங்க வீட்ல இதை எப்படி ஏத்துக்குவாங்கன்னு எனக்குத் தெரியல. அதுவும் எங்கம்மா ரொம்ப மோசம். ஏற்கனவே எங்கப்போவோட ஃப்ரெண்ட் பொண்ணு கேட்டு வந்தப்போவே அவங்கள ரொம்ப அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க.” என்று அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறினாள்.

“அது உனக்குத் தெரியாம யார் மூலமாவோ வந்த சம்பந்தம். ஆனா, நான் அப்படி இல்லையே மதி, நாம கல்யாணம் பண்ணிக்க அவங்க சம்மதம் வேணும் தான். ஆனா, அவங்க முடிவெடுக்கணும்னு எதுவும் இல்லையே? இதுல உன்னோட சம்மதமும், விருப்பமும் தான் முக்கியம். என்னோட சார்பா, நிலனோட தாத்தாவும், பாட்டியும் வந்து பேசுவாங்க. அவங்க வந்து பேசினா கண்டிப்பா உங்க வீட்ல ஒத்துக்குவாங்கன்னு நிலன் சொன்னான். எனக்காக உன்கிட்ட பேசினவன், அவங்க தாத்தா, பாட்டிக்கிட்டயும் பேசிட்டான். அதனால அது பிரச்சினையா இருக்காது. ஆனா, அங்க நாங்க வந்து பேசும்போது நீதான் ஸ்ட்ராங்கா இருந்து பேசணும். அதுதான் முக்கியம்.” என்று அழுத்தமாக அவளின் புத்தியில் உரைத்தான்.

அதனால் தான் அவளிடம் பதற்றம் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. இருந்தாலும், தைரியமாக இருக்க வேண்டும் என்று மனதை தேற்றிக்கொண்டிருந்தாள்.

கீழே வெண்ணிலாவோ, அவர்களுடன் சகஜமாய் உரையாடிக்கொண்டிருந்ததில் குடும்பத்தினரில் ஜோதியைத் தவிர அனைவருக்கும் பெருத்த சந்தோஷம். வெண்ணிலாவுக்கு அவர்களைப் பிடித்துவிட்டது என்றே முடிவு செய்துவிட்டனர்.

நிலனுக்கு அருகில் இருந்த நந்தனை நீண்ட நேரமாக அவர்கள் சந்தேகமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க, அவனை நிலனின் சிறந்த நண்பன் என்று அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு, சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிய பெரியவர்கள், நேரடியாக அவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

பிரகாஷிடம், “உங்க பொண்ணு வான்மதி எங்க? வீட்ல இருக்காளா?” என்றார் பத்மநாபன்.

அவரோ சகஜமாக, “இன்னைக்கு அவளுக்கு லீவ் தான். வீட்ல தான் இருக்கா.” என்றார்.

“அவளையும் கூப்பிடலாமே. நாம எல்லாரும் இங்க இருக்கோம். அவளைக் கூப்பிடுங்க.” என்று வேண்டுகோள் விடுத்தார் கமலம்.

அதைக் கேட்டு முறுவலித்தவர்கள் வான்மதியை அழைத்தனர். குடும்பத்தினரின் குரல் கேட்டு திடுக்கிட்ட வான்மதிக்கு உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. இருந்தாலும் சென்றுதானே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அறையிலிருந்து கீழே வந்தாள்.

அவள் வந்ததும், அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள். நந்தனுக்கோ அவளைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. அதை அடக்கிக்கொண்டு அவளை கண்களாலேயே பயப்படாதே என்று தைரியம் சொன்னான்.

அவள் வந்ததும், ஜோதியும் அவள் அருகே வந்து நின்றுகொண்டார். வான்மதியோ இப்போது வியர்த்து வழிந்தது போக, நடுங்க ஆரம்பித்திருந்தாள்.

“உங்க வான்மதியும், நந்தனும் ஒரே கம்பெனில தான் வேலை செய்யறாங்க. ஒருத்தரையொருத்தர் நல்லாவே தெரியும்.” என்றார் பத்மநாபன்.

அதைக் கேட்டதும், ரமணி, பிரகாஷ், சந்திரா மூவரும் சிநேகமாய் பார்த்தனர் இருவரையும். வெண்ணிலாவுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அமைதியாகவே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால், ஜோதிக்கு முகமே சரியில்லை. வான்மதியின் அருகில் இருந்தவர், முறைத்துக்கொண்டே அப்படியா? என்பது போல் அவளைப் பார்க்க, அவள் வெறும் தலையை மட்டும் ஆட்டினாள்.

“அதுமட்டுமில்ல. நீங்க தப்பா நினைச்சிடக்கூடாது. அவங்க ரெண்டு பேரும் இப்போ ஒருத்தரையொருத்தர் விரும்பறாங்க. கல்யாணம் செய்துக்கவும் ஆசைப்படறாங்க.” என்று உண்மையைப் போட்டு உடைக்க,

வெண்ணிலா முதற்கொண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜோதியோ அவளை எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். வான்மதிக்கு தொண்டைக்குழி அடைக்க, நடுக்கத்திலேயே அழும் நிலையில் நின்றிருந்தாள்.

“போதும்.. நிறுத்துங்க. என்ன நடக்குது இங்க?” என்று ஜோதி உயர்த்திய குரலால் அங்கே ஒரு போரின் சூழல் போன்ற நிலை உருவானது.

தொடரும்………………………….








ஹலோ டியர்ஸ்…………. உங்க கருத்துக்களை கருத்துத் திரியில் பதிவிடுங்க……..


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 12

ஜோதியின் உரக்கப் பேச்சால் வந்திருந்த நிலன் குடும்பத்தினர் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்துதான் போயினர்.

“எங்க வந்து என்ன பேசிட்டிருக்கீங்க? இவன என் பொண்ணு லவ் பண்றாளா? அதெல்லாம் கட்டுக்கதையா தான் இருக்கும். நீங்களா எதையோ நினைச்சுட்டு வந்து எங்கப் பொண்ணுகிட்ட இதெல்லாம் சொல்லிட்டிருக்கீங்க.” என்றார் ஜோதி மீண்டும்.

“ஜோதி, அவங்க என்ன சொல்ல வராங்கன்னு கூட கேட்காம இப்படித்தான் நடந்துக்குவியா?” என்று அதட்டினார் பிரகாஷ்.

“என்ன கேட்கணும்னு சொல்றீங்க? அவங்கபாட்டுக்கு ஒரு பையனக் கூட்டிட்டு வந்து, நம்ம பொண்ணும், அவனும் விரும்பறான்னு சொல்றாங்க. அதைக் கேட்டுட்டு நீங்களும் சும்மா இருக்கீங்க? ஏதோ, வெண்ணிலாவப் பொண்ணு பார்க்க வந்தவங்கன்னு நீங்க எல்லாரும் சொன்னதால தான் அமைதியா இருக்கேன். இல்லைன்னா நடக்கறதே வேற.” என்று மீண்டும் காட்டமாய்ப் பேசினார்.

அவரின் பேச்சு குடும்பத்தில் உள்ளவர்கள் மனதை வெகுவாய் காயப்படுத்தினாலும், இதற்க்கெல்லாம் தயாராய் தான் வந்திருந்தனர் அவர்கள் நால்வரும்.

வான்மதியின் மூலமாக அவரின் குணத்தையும், அவர் அன்றொரு நாள் வந்தவர்களிடம் நடந்துகொண்ட விதத்தையும் அறிந்துகொண்டு தான் வந்திருந்தனர். எதிர்பார்த்தே இருந்ததாலே என்னவோ? அவர்கள் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

“ஜோதி. கொஞ்சம் பேசாம இரு. அவங்கள அவமானப்படுத்தற மாதிரி இருக்கு நீ பேசற பேச்சு. அவங்க என்ன சொல்ல வராங்கன்னு தெரியாமயே நீ இப்படிப் பேசறது கொஞ்சம் கூட சரியில்ல.” என்றார் ரமணி.

“அத்த, இது என் பொண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதுல நீங்க யாரும் தலையிட வேண்டாம்.” என்றார் ஜோதி.

அதைக் கேட்ட ரமணியின் முகம் சிறுத்துப் போனது. தனக்கு பேச உரிமையில்லையா என்று நினைத்தவர் அமைதியாக இருந்துவிட்டார். நிலைமை மோசமாவதை உணர்ந்தனர் அவர்கள் நால்வரும்.

“ஜோதி, நீ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம வரம்பு மீறி பேசிட்டு இருக்க.” என்றார் பிரகாஷ் கோபத்தை அடக்கிக்கொண்டு.

“இங்க பாருங்க. தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம். என் பொண்ண எப்படி வாழ வைக்கணும்னு எனக்குத் தெரியும். அதுல யாரும் தலையிட வேண்டாம்.” என்று சொன்னவர், அருகே இருந்த வான்மதியின் கையை இறுகப் பற்றிக்கொண்டு அவளை அழைத்துப் போக நினைத்தார்.

ஆனால், அவர் இழுத்த வேகத்திற்க்கு வான்மதி உறுதியாய் அதே இடத்தில் விடாப்பிடியாய் நின்றிருப்பதைப் பார்த்த ஜோதி, “ஏய். என்னடி? விறைப்பா நிக்கற? உள்ள வா.” என்று திரும்பவும் இழுக்க, அவரின் கையை ஒரேயடியாய் உதறிவிட்டாள்.

அதைக் கண்டவர் அவளை அதிர்ச்சியாய்ப் பார்க்க, அவளோ சினம் கொண்டு அவரை முறைத்தாள்.

“என்னம்மா அதிர்ச்சியா இருக்கா? இத்தனை நாள் நீ பண்ணதுக்கெல்லாம் நான் அமைதியா இருந்தேன். ஆனா, இப்போ அப்படி இருக்க மாட்டேன். ஏன்னா, இது என்னோட வாழ்க்கை. இதுவரைக்கும் நீ முடிவெடுத்ததெல்லாம் போதும். ஏற்கனவே உன்னால என் வாழ்க்கை பாழானது பத்தாதா? இதுக்கப்பறமும் நீ சொல்ற வாழ்க்கைய நான் ஏத்துக்கிட்டு கடைசி வரைக்கும் கஷ்டப்படணும். அதுதான உன் விருப்பம். ஆனா, அது நடக்காது. இனிமேல் வாழப்போற என் வாழ்க்கைக்கு என்னோட விருப்பம் தான் முக்கியம். அவங்க சொன்னது உண்மை தான். நானும், நந்தனும் விரும்பறோம். எங்களுக்கு ஒருத்தரையொருத்தர் பிடிச்சிருக்கு. அவர் மேல அளவு கடந்த நம்பிக்கை இருக்கு. அதனால, நீ இதுல தயவுசெய்து தலையிட்டு என்னோட வாழ்க்கையக் கெடுத்துடாத.” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டாள் வான்மதி.

இத்தனை நேரமும் பேசியது தன் மகளா? என்று அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றிருந்தார் ஜோதி. அது போலவே தான் குடும்பத்தினரும். ஆனால், ஒரு வகையில் அவர்கள் அனைவருக்கும் சந்தோஷம்.

இவ்வளவு காலமும் தனக்கு இன்னொரு வாழ்க்கை வேண்டாம் என்று இருந்தவள், இப்போது அவளது விருப்பத்திற்கேற்ப ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டாள் என்று மகிழ்ச்சியுற்றனர்.

ஆனால், ஜோதிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அவன் யாரோ? எவனோ? அவனைப் போய் விரும்புகிறேன் என்கிறாளே! என்று உள்ளுக்குள் பற்றிக்கொண்டு எரிச்சல் வந்தது அவருக்கு.

“அப்பா, பாட்டி, அத்த என்னை மன்னிச்சிடுங்க. உங்ககிட்ட இந்த விஷயத்தை நான் மறைக்கணும்னு நினைக்கல. அவர் என்னை ஆரம்பத்துல இருந்தே விரும்பினார். ஆனா, நான் ஒத்துக்கவே இல்ல. அதுக்கப்பறம் அப்பா அன்னைக்கு ஒரு நாள், அவரோட ஃப்ரெண்ட் அவர ரொம்ப அவமானப்படுத்திப் பேசினதப் பத்தி சொன்னார். அவரும் நான் இன்னொரு வாழ்க்கைய வாழணும்னு தான் நினைச்சார். அதுக்கப்பறம் எனக்குள்ள நிறைய குழப்பம் இருந்துச்சு. அதெல்லாமே நந்தன்கிட்ட பேசி தெளிவுபடுத்திட்டதுக்கப்பறம் தான் இந்த முடிவுக்கே வந்தேன். அவரும் முறைப்படி நம்ம வீட்டுக்குப் பேச வரதா சொன்னார். மத்தபடி நீங்க எல்லாரும் நினைக்கற மாதிரி நாங்க ரொம்ப நாளா விரும்பி, இப்போ ஒன்னும் கல்யாணத்துக்கு சம்மதம் கேக்கல.” என்று எல்லாவற்றையும் சொல்லிமுடித்தாள் வான்மதி.

அதைக் கேட்டு, அவளை நிமிர்த்திய பிரகாஷின் கண்களில் இப்போது ஆனந்தக்கண்ணீர் வழிந்தோடியது.

“வானு மா, எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லடா. எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். நீ இன்னொரு வாழ்க்கை வேண்டாம்னு, இப்படியே இருந்துடுவியோன்னு, உன் எதிர்காலத்த நினைச்சு நான் பயப்படாத நாளே இல்ல. இப்போ, நீயா ஒரு பையன விரும்பறேன்னு சொல்றதுல எந்தத் தப்பும் இல்லடா. ஏன்னா, என் பொண்ணு ஒருத்தன விரும்பறான்னா, அவன் கண்டிப்பா நல்ல பையனாதான் இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்று நந்தனைப் பார்த்துக்கொண்டே சொன்னார் பிரகாஷ்.

“அதெல்லாம் எங்க பையன் ரொம்ப தங்கமானவன் பிரகாஷ். உங்க பொண்ண தாராளமா நம்பிக் கொடுக்கலாம். நீங்க கவலையே பட வேண்டாம். எங்க பேரன்னு நான் உரிமையாவே சொல்வேன்.” என்றார் பத்மநாபன்.

அதைக் கேட்டு எழுந்த நந்தன், “மாமா.. நான் அப்படிக் கூப்பிடலாம் தான?” என்று அவன் கேட்டதும், அதற்க்கு வேகமாய்த் தலையாட்டினார் பிரகாஷ்.

“அவங்க பெருந்தன்மையா என்னைப் பேரன்னு சொல்லலாம். ஆனா, என்னைப் பத்தின உண்மைய இந்த இடத்துல நான் சொல்லிடறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது.” என்று சொல்ல, அவர்கள் விழித்தனர்.

பத்மநாபன், “நந்தா, வேண்டாம்.” என்று குரலைத் தாழ்த்தி அவனிடம் சைகையில் சொல்ல, அவரைப் பார்த்த நிலன்.

“தாத்தா, அவன் சொல்லட்டும். ஏன்னா, அவனைப் பத்தின உண்மையெல்லாம் அவங்க தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். அவனத் தடுக்காதீங்க.” என்றதும், அவர் அமைதியாய் இருந்துவிட்டார்.

“நான் இவங்க ஆசிரமத்துல வளர்ந்த பையன். சொல்லப்போனா நான் ஒரு அநாதை. எனக்கு அந்த ஆசிரமம் தான் எல்லாமே கொடுத்துச்சு. படிப்பு, பண்பு, பாசம், நேசம், ஒழுக்கம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எனக்குன்னு என்ன கிடைக்குதோ அதை வச்சுத்தான் வாழ்ந்துட்டிருந்தேன். நல்லபடியா படிச்சேன், அதுக்கு ஏத்த மாதிரி சாஃப்ட்வேர் கம்பெனில நல்ல வேலை கிடைச்சது. இப்போ டி.எல் பொஷிஷன்ல இருக்கேன். கை நிறைய சம்பளம் வாங்கறேன். என்னோட எதிர்காலத்துக்குத் தேவைப்படும்ன்னு, நல்ல இடமா பார்த்து ஒரு க்ரௌண்ட் நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். அது போக, எங்க ஆசிரமத்துக்கு என்னால முடிஞ்ச உதவியும் செஞ்சிட்டிருக்கேன். ஏன்னா, நான் வளர்ந்த இடமாச்சே! அப்பறம், கடன் அந்த மாதிரி எதுவும் இல்ல. எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஏன்னா, அதெல்லாம் எங்களுக்கு ஆசிரமத்துல சொல்லித் தரல. உங்க பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தா கண்டிப்பா நல்லபடியா பார்த்துப்பேன். அவங்கள வேலைக்குப் போன்னு சொல்லி சிரமப்படுத்தமாட்டேன். அது அவங்களோட விருப்பம். நான் முதல் முதல்ல ஒரு விஷயத்தை விரும்பினேன்னா அது உங்க பொண்ணை மட்டும்தான். அப்படிப்பட்ட உங்க பொண்ண எந்த விதத்திலும் கஷ்டப்படுத்த மாட்டேன். பொண்ணைப் பெத்தவங்களுக்கு இருக்கற கவலை என்னன்னு எனக்குத் தெரியும். அதனால தான் இதையெல்லாம் முதல்லயே பேசி தீர்த்துக்கணும்னு உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்.” என்று தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்லிமுடித்தான் நந்தன்.

அதைக் கேட்டதும், அனைவரும் உணர்ச்சிவசப்பட்டது ஏனோ உண்மை.

“தம்பி, இனிமேல் நீ அப்படி ஒரு வார்த்தை சொல்லாதப்பா. உனக்கு நாங்களும் குடும்பம் தான். எங்க பேத்திங்க எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணாங்களோ? உங்கள மாதிரி பசங்க எங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போறீங்க. எங்களுக்கு மனசெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்கு.” என்றார் ரமணி.

அதைக்கேட்ட வெண்ணிலா சப்புக் கொட்டினாள். அவளுக்கு ரமணி சொன்ன வார்த்தைகளை ஏற்கத் தோன்றவில்லை.

“வானு மா, இந்த மாதிரி உண்மைய சொல்றதுக்கு எத்தனை பேருக்குத் தைரியம் வரும்? நானும் தான் காதல் திருமணம் செஞ்சேன். அது எல்லாமே ஒரு மாய வலை. ஆனா, இதுதான் உண்மையான காதல். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஹேப்பியா இருக்கணும்.” என்று மனதார வாழ்த்தினார் சந்திரா.

அதைக்கேட்டு வான்மதி, “அத்த, நீங்க எல்லாரும் என்னை என்ன நினைப்பீங்களோன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துட்டே இருந்தது. ஆனா, நீங்க எல்லாரும் இதை ஏத்துக்கிட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றாள்.

இதில் அதிக வருத்தமும், அதைக் காட்டிலும் கோபமும் இருந்தது என்னவோ ஜோதிக்குத்தான். போயும், போயும் ஒரு அநாதையை தன் மகள் வாழ்க்கைத் துணையாய் ஏற்றுக்கொள்ளப் போகிறாளா? என்று எரிச்சலில் நின்றிருந்தார்.

அதைப் பார்த்த வான்மதி, “அம்மா, உனக்கு இதுல விருப்பம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் இவரோட சந்தோஷமா வாழும்போதுதான் உனக்கு நான் எடுத்திருக்க முடிவு சரின்னு தோணும். நான் உன்னை அவமதிக்கணும்னோ, உன் மனச நோகடிக்கணும்னோ இதைப் பண்ணல. இவ்ளோ நாள் எதுவுமே என் மனச திருப்திப்படுத்தல. நான் எதிர்பார்த்த எதுவுமே கடந்த கால வாழ்க்கைல எனக்குக் கிடைக்கல. ஆனா, இப்போ அது எல்லாமே எனக்கு கிடைக்கப் போகுது. அதை நான் எப்படி விட முடியும்?” என்றாள்.

“இங்க பாரும்மா ஜோதி, நான் சொல்றனேன்னு தப்பா நினைக்க வேண்டாம். உன் அம்மாவா நினைச்சு சொல்றேன். காசு, பணம், சொத்து இதெல்லாம் இருந்தா தான் ஒருத்தன் பணக்காரன்னு நினைக்கக் கூடாது. அதை விட அதிகமா நல்ல மனசால அதிக மனுஷங்கள சேர்த்து வச்சிருக்காங்க பாரு, அவங்க தான் உண்மையாலுமே பணக்காரங்க. அந்த விதத்துல எங்க நந்தன் ரொம்பப் பெரிய பணக்காரன். காசும், பணமும் நாம போகும் போது வரப்போறது இல்ல. ஆனா, நம்மளத் தூக்கி சுமக்கறதுக்கும், நாம இல்லையேன்னு நினைச்சு வருத்தப்படறதுக்கும் ஆளுக இருந்தாலே போதும். அதுதான் நிதர்சனம். அதைப் புரிஞ்சுக்கிட்டு உன் பொண்ணயும், எங்க நந்தனையும் ஆசீர்வாதம் பண்ணு. ஏன்னா, பெத்தவளோட ஆசீர்வாதம் ரொம்ப முக்கியம். மனசளவுல நீ இப்போ வருத்தத்துல இருக்கேன்னு தெரியுது. ஆனா, நம்ம பசங்களோட விருப்பமும், சந்தோஷமும் முக்கியம்ன்னு நினைக்கணும் மா. அவங்க சந்தோஷமா இருக்கறதப் பார்க்கறதுக்குத்தானே நாம இருக்கோம்.” என்று அறிவுரை வழங்கிய கமலத்தைப் பார்த்தால் அவருக்கு அவருடைய பாட்டியின் நினைவு தான் வந்தது.

தனது குடும்பத்தினர் எத்தனை தான் தனக்கு சாதகாய்ப் பேசினாலும், அவரது பாட்டி மட்டுமே எது சரி? எது தவறு? என்று சொல்லி அறிவுரை வழங்குவார். அதுபோலவே இன்று கமலம் பேசியது அவரை நினைவுபடுத்த, அப்போதைக்கு ஒற்றை மனதாய்த் தலையாட்டி வைத்தார் ஜோதி.

இவையெல்லாவற்றையும் ஏதோ ஒரு நாடகம் பார்ப்பதைப் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவளுக்கு அதில் சந்தோஷமா? இல்லை வருத்தமா? என்று நிலனே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவளுடைய முகபாவனைகள் இருந்தன.

எதேச்சையாகத் திரும்பிய போது, நிலன் கண்ணில் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்தவள், பொய்யாய் சிரித்து வைத்தாள். ஆனால், அதைக் கூட கண்டுபிடிக்கத் தெரியாதவன் அல்ல நிலன். இருக்கட்டும் பேசிக்கொள்ளலாம் என்பதைப் போல் இருந்தான்.

“அப்பா.. ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல சந்தோஷம். எங்க நீங்க எல்லாரும் எங்களைத் தப்பா நினைச்சிடுவீங்களோன்னு இருந்தோம். இப்போதான் த்ருப்தியா இருக்கு.” என்றார் பத்மநாபன்.

“நாங்க எதுக்கு உங்களைத் தப்பா நினைக்கப்போறோம்? நாம இப்போ உறவுக்காரங்களா இன்னும் அதிகமா நெருங்கிட்டோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல எங்களுக்கு பரம த்ருப்தி.” என்றார் ரமணி.

“அப்போ சரி, நாங்க கிளம்பறோம். ஒரு நல்ல தேதி பார்த்துட்டு சொல்லுங்க. இவங்க கல்யாணத்தை முடிச்சிடுவோம்.” என்றார் கமலம்.

அப்போது குறுக்கிட்ட நந்தன், “பாட்டி, நாங்க இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணிக்கறோம். உடனே மேரேஜ்ன்னு சொல்லி எங்க லவ் ஸ்டோரிய இப்பவே முடிச்சிடாதீங்க.” என்றான்.

அதைக்கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.

“நந்தா, மேரேஜ் பண்ணிக்கிட்டு காலம் பூராவும் லவ் பண்ணுடா. உன்னை யார் வேண்டாம்னு சொன்னா? ஆனா, காலம் தாழ்த்தாம செய்ய வேண்டிய விஷயத்தை சரியா பண்ணனும்.” என்றார் பத்மநாபன்.

“அதெல்லாம் முடியாது தாத்தா. எங்க மேரேஜூம், நிலனோட மேரேஜூம் ஒன்னா நடக்கணும்னு நினைச்சிருக்கோம். உங்களுக்கும் ஒரே செலவா முடிஞ்சிடும் இல்ல. யோசிங்க.” என்றான்.

அதைக் கேட்டவர்கள் யோசிக்க ஆரம்பிக்க, வெண்ணிலாவோ திருதிருவென விழித்தாள். அதைப் பார்த்த நிலன் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். அதைப் பார்த்த வெண்ணிலா யாரும் அறியாவண்ணம் அவனை முறைத்தாள்.

“அது நந்தா, அவங்க ரெண்டு பேரும் இன்னும் எந்த முடிவையும் சொல்லல. கொஞ்ச நாள் பழகிப் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்களே!” என்றார் கமலம்.

“இன்னுமாங்க பழகறாங்க? எங்களுக்கு நிலன் தம்பிய ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க வெண்ணிலாவ அவருக்குத்தான் கொடுக்கணும்னு நாங்க எப்போவே முடிவெடுத்துட்டோம். நீங்க சொன்னீங்கன்னு தான் இத்தனை நாள் பழகட்டும்ன்னு விட்டோம்.” என்றார் சந்திரா.

தன்னிடம் எதையுமே கேட்காமல் பேசிக்கொண்டிருக்கும் தாயை நினைத்து உள்ளுக்குள் எரிச்சல்பட்டாள் வெண்ணிலா.

“சரி, அவங்க பேசட்டும், பழகட்டும். அதுவரைக்கும் நாங்க வெய்ட் பண்றோம். ஆனா, ஒரே நாள் தான் எங்க ரெண்டு ஜோடிகளுக்கும் மேரேஜ்ன்னு நான் உறுதியா இருக்கேன். என்னடா நண்பா? உனக்கு எப்படி வசதி?” என்று நிலனைப் பிடித்து நந்தன் கேட்க,

அவனுக்கு என்ன பதில் சொல்வது? என்று தெரியாமல் நின்ற நிலன், திரும்பி வெண்ணிலாவைப் பார்க்க, அவளோ தலையெழுத்தே என்று நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான்.

இன்னும் அவள் மனது மாறவில்லை என்பதை அவள் முகமே காட்டிக்கொடுத்தது. இவளை என்ன சொல்லி மாற்றுவது? என்ற வழி தெரியாமல் நண்பனது தோள்களைப் பற்றி, அப்போதைக்குத் தலையை ஆட்டி வைத்தான் நிலன்.



தொடரும்…………………………







ஹலோ டியர்ஸ்.... படிச்சு உங்க கருத்துக்களை இங்கே சொல்லுங்க...........

 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 13

உள்ளுக்குள்ளே கோபம் அனலாய்க் கொத்தித்துக்கொண்டிருந்தது வெண்ணிலாவுக்கு. அதைக் காட்ட வழி தெரியாமல் தவித்தவாறு, தனது அறையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தாள்.

அறைக்கதவு திறந்திருக்க, எதேச்சையாக எட்டிப் பார்த்த சந்திராவுக்கு அவள் ஏதோ ஒரு ஆற்றாமையில் உலாவிக்கொண்டிருப்பது புரிந்தது. மெல்ல கதவைத் திறந்து உள்ளே சென்றார்.

“நிலா என்னாச்சு உனக்கு? எதுக்கு அங்கயும், இங்கயும் நடந்துட்டிருக்க?” என்றார்.

அவரை எரித்துவிடுவதைப் போல் பார்த்தவள், அவரின் அருகே வந்து நின்றபடி, “உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே? ஏன்னா, நீ நினைச்சது நடந்திருச்சு. அதனால, உனக்கு குளுகுளுன்னு தான் இருக்கும். ஆனா, எனக்குத்தான் இங்க உள்ளுக்குள்ள எரியுது.” என்று எதையும் வெளிப்படையாகப் பேசாமல் கோபத்தை மட்டும் காட்டினாள்.

“ஏண்டி இப்படிப் பேசற? நான் என்ன பண்ணேன்? அப்படி என்ன கோபம் உனக்கு?” என்றார் சந்திரா.

“ம்ம்ம்…… ஆமா, நீ எதுவுமே பண்ணல. அதனால தான் பெத்த பொண்ணுகிட்ட சம்மதம் கூட கேட்காம, என்னை வீட்டை விட்டு துரத்தணும்னு ப்ளான் பண்ணிட்ட.” என்று சொற்களைக் கற்களாக வீசினாள் வெண்ணிலா.

“ஏய். நான் எதுக்கு உன்னைத் துரத்தணும்? தேவையில்லாத வார்த்தைகளையெல்லாம் பேசாத நிலா. நீ முதல்ல எதுவா இருந்தாலும், நேரடியாப் பேசு. இப்படிப் பேசினா நான் எதைப் புரிஞ்சுக்கறது?” என்றார்.

“அதான், என்னைக் கல்யாணம் பண்ணித் துரத்தி விடணும்னு ஒரேயடியா கீழ சொல்லிட்டிருந்தியே. அதைத்தான் சொல்றேன். என்னோட சம்மதமெல்லாம் உனக்கு முக்கியம் இல்ல. மாப்பிள்ளைய உங்களுக்குப் புடிச்சிருந்தா போதும்னு தான சொன்ன?” என்றாள்.

அப்போதுதான் அவள் எதைப்பற்றிப் பேசுகிறாள்? என்பதையே தெரிந்துகொண்டார் சந்திரா. அவளை இழுத்துப் பிடித்தவர்,

“ஏன் உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா? அதான் இவ்ளோ நாளா பேசினீங்க, பழகுனீங்களே? இன்னுமா நீ எதையும் முடிவு பண்ணல?” என்றார் கேள்வியாக.

“அவர் எப்படியோ தெரியல மா. ஆனா, எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள் பட்டென்று.

“என்னடி சொல்ற? நீங்க ரெண்டு பேரும் பேசி ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு நம்பிக்கைல தான் நான் அப்படி சொன்னேன். அதுவும் இல்லாம, நிலன் தம்பி ரொம்ப நல்ல பையன்னு பார்த்தாலே தெரியுது. அப்பறமும் நீ ஏன் இன்னமும் யோசிக்கற?” என்றார்.

“ப்ச்ச்…. உனக்கு சொன்னாப் புரியாது மா. எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல.” என்றாள்.

“நிலா, உங்க அக்காவுக்கே இப்போ இன்னொரு வாழ்க்கை அமையப்போகுது. உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போகுது. உங்க ரெண்டு பேரையும் நினைச்சு நாங்க சந்தோஷப்பட்டுட்டிருக்கோம். நீ என்னடான்னா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடற?” என்றார் அதிர்ச்சியாகி.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் வெண்ணிலா. அதைக் கண்டு சந்திரா, “உனக்கு என்ன பிரச்சினைன்னாலும் அம்மாகிட்ட சொல்லு நிலா. நான் புரிஞ்சுக்கறேன்.” என்றார் அவளது கன்னத்தைப் பற்றியபடி.

“அப்போன்னா, என்னை விட்ருங்க. இனிமேல் கல்யாணத்தைப் பத்தி என்கிட்டப் பேசாதீங்க.” என்றாள் ஒரேயடியாக.

“இவ்ளோ நல்ல பையனையே நீ வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அவன்கிட்ட உனக்கு என்னடி புடிக்கல?” என்றார் சந்திரா.

“அம்மா. எனக்கு நிலன் இப்போ பிரச்சினை இல்ல. கல்யாணம் தான் பிரச்சினை. எனக்கு கல்யாணமே புடிக்கல மா. தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க.” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தார் சந்திரா.

“பைத்தியம் மாதிரி உளறாத நிலா. கல்யாணமே புடிக்கலன்னா, நீ என்ன சந்நியாசியா போகப் போறியா?” என்றார் ஆவேசமாய்.

“ப்ச்ச்.. நான் அப்படி சொன்னேனா? நான் இப்படியே இருந்திடறேன். எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிடாதீங்க. நீங்க எல்லாரும் பட்ட அவஸ்தையே போதும். நானும், இதுல அவஸ்தைப்பட விரும்பல.” என்று தாயிடம் தனது மனதில் உள்ள பயத்தைக் கொட்டினாள்.

“நிலா, அது ரொம்பக் கஷ்டம். அப்படி இருக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும், உனக்குன்னு ஒரு துணை வேணும். அது இல்லாம, அதுவும் கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணு இந்த உலகத்துல வாழ முடியாது டி.” என்றார்.

“ஹூம்ம்ம். கல்யாணம் பண்ணி நீ என்னத்தக் கண்ட? அது உனக்கும் பொய்யா தானம்மா இருந்துச்சு. அதுவும் காதல் கல்யாணம். இப்போ நீ மட்டும் என்ன துணையோடவா இருக்க? பாட்டி, மாமான்னு எல்லாரும் உனக்காக இருக்கல? அதுமாதிரி நீங்க எல்லாரும் எனக்காக இருப்பீங்கன்னு நினைச்சுட்டே வாழ்ந்திடறேன்.” என்று பேசிக்கொண்டே போனாள் வெண்ணிலா.

அப்போதுதான் முதன்முறை தான் வாழ்வில் எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம்? என்று கவலைப்பட்டார் சந்திரா. தான் துணையோடு இல்லாத ஒரு நிலையால், தன் மகள் இப்போது அவளுக்குத் திருமண பந்தமே வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டதை நினைத்து ஒரு கணம் சிலையாய் நின்றார்.

எதையுமே பேசவோ, சொல்லவோ முடியாத நிலை. அமைதியாய் அவளது அறையிலிருந்து வெளியே வந்துவிட்டார் சந்திரா. வெண்ணிலா மனதிலிருந்த அனைத்தையும் அவரிடம் கொட்டிவிட, இப்போது சந்திராவின் மனதுதான் நிலைகொள்ளாமல் தவித்தது.


******

எப்படியோ நந்தனும், வான்மதியும் வாழ்வில் இணையப் போகின்றனர் என்ற சந்தோஷம் ஒரு புறம் நிலனுக்கு இருந்தாலும், வெண்ணிலாவின் தீவிர பிடிவாதம் ஒரு பக்கம் அவனை வாட்டியது.

கிட்டத்தட்ட இப்போது, அவன் வெண்ணிலாவைத் தவிர எந்தப் பெண்ணையும் நினைத்துப் பார்ப்பதில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டான். அந்த அளவுக்கு வெண்ணிலாவை அவனுக்குப் பிடித்துவிட்டது.

ஆனால், அவள் தான் பிடிகொடுக்கமாட்டேன் என்கிறாளே? அதனால், மீண்டும் தன் வழிக்கு அவளைக் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். நந்தன் சொன்னதைப் போல் தங்கள் இரு ஜோடிகளின் திருமணமும் ஒரே மேடையில் நடக்க வேண்டும் என்று அவனுமே ஆசைப்பட்டான்.

அடுத்த நாளே, வெண்ணிலாவுக்கு அழைத்தான். காலை முதலே அழைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் அவனது அழைப்பை ஏற்பதாக இல்லை. நிரம்பவும் அழுத்தக்காரிதான் என்பதைப் புரிந்துகொண்டான்.

ஆனாலும், விடுவேனா? என்று அவனும் அவ்வப்போது அலைபேசிக்கு அழைத்துக்கொண்டே தான் இருந்தான். அவள் வேலை நேரத்தில் அலைபேசியை அமைதியில் போட்டு வைத்திருந்தாலும், அதன்பிறகு எடுத்துப் பார்த்த போது, கணக்கே இல்லாமல் அவன் அழைத்திருந்தது கண்டு எரிச்சலுற்றாள்.

மாலை வழக்கம் போல் வேலை முடிந்து கிளம்பிய சமயம், அப்போதும் விடாமல் அழைத்துக்கொண்டே இருப்பவனின் தொல்லை தாங்காமல் அழைப்பை ஏற்றே விட்டாள்.

“ஹலோ…….. உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுட்டிருக்கீங்க நிலன்? போன எடுக்கலன்னா பிசியா இருப்பாங்கன்னு கூடவா தெரியாது? அப்படி போன் பண்ணிட்டே இருக்கணுமா?” என்றாள் கோபத்தில்.

“இவ்ளோ கால் பண்ணா, அட்லீஸ்ட் ஒரு கால் ஆவது நீங்க அட்டண்ட் பண்ணிடமாட்டீங்களான்னு ஒரு நப்பாசை தான். அதனால தான் விடாம கூப்பிட்டேன்.” என்றான் சிரிப்புடன்.

“மிஸ்டர். நிலன். நீங்க கூப்பிட்ட உடனே கால் அட்டண்ட் பண்றதுக்கு நான் ஒன்னும் சாதாரண பொண்ணு இல்ல. நான் ஒரு டாக்டர்ன்னு உங்களுக்கே தெரியும். என்னோட ரெஸ்பான்ஸ்சிபிளிட்டி என்னன்னும் உங்களுக்குத் தெரியும். எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றீங்க? நீங்க நினைச்ச நேரத்துல உங்ககிட்ட பேசவோ, உங்களைப் பார்க்கவோ என்னால முடியாது. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.” என்றாள் ஆவேசமாக.

“இப்போ தான் உங்களுக்கு வொர்க் முடிஞ்சிடுச்சே. இப்போ, உங்களைப் பார்க்கவும், பேசவும் முடியும் தான?” என்றான்.

“இல்ல… இன்னும் இல்ல… எனக்கு ஒரு எமர்ஜன்சி கேஸ் வந்திருக்கு. நான் பார்க்கணும். உங்களை என்னால பார்க்க முடியாது. தயவுசெய்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க.” என்று பேசிக்கொண்டே வாகன நிறுத்துமிடத்துக்கு வந்தவள் அதிர்ந்தாள்.

அங்கே, நிலன் ஸ்டைலாக வண்டியின் மேல் அமர்ந்துகொண்டு, தனது அலைபேசியை அமிழ்த்தியவன், அவளுக்கு “ஹாய்…” என்று கையசைத்தான்.

அதை எதிர்பாராதவள், அமைதியாய் அவனை நோக்கி வர, அவனின் குறும்புப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தாள்.

“அதுக்குள்ள எமர்ஜென்சி கேஸ் முடிஞ்சிடுச்சா வெண்ணிலா? நீங்க முடிச்சிட்டு வாங்க. நான் வேணும்னா வெய்ட் பண்றேன்.” என்றான் கேலியாக.

“இப்போ உங்களுக்கு என்ன வேணும் நிலன்? என்னை விடமாட்டிங்களா?” என்றாள் சலிப்புடன்.

“நான் உங்ககிட்ட பேசணும் வெண்ணிலா. நேத்திலிருந்து எனக்கு தோணிட்டு இருக்கு. அதனால தான் காலையில இருந்து உங்களுக்கு போன் பண்ணிட்டே இருக்கேன். ஆனா, நீங்க தான் எடுக்கவே இல்ல. சரி, இப்போ உங்க டியூட்டி முடிஞ்சு எப்படியும் வருவீங்கன்னு தெரியும். அதனால தான் நேரா ஹாஸ்பிடல்க்கே வந்துட்டேன்.” என்றான்.

அவளுக்குத் தெரிந்த நிறைய நபர்கள் இருக்கும் இடம் என்பதால் அவளால் அவனிடம் வெளிப்படையாக அவளது எரிச்சலையும், கோபத்தையும் கூட காட்ட முடியவில்லை.

“சரி, பேசலாம். ஆனா, இங்க வேண்டாம். பீச்சுக்குப் போகலாம்.” என்றாள்.

அவள் அதைச் சொன்னதுமே, விழிகள் விரிய ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தான் நிலன்.

“எதுக்கு இப்படிப் பார்க்கறீங்க?” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“இல்ல. நிஜமாலுமே நீங்கதான் பேசறீங்களா? அதுவும் பீச்சுக்குப் போகலாம்னு சொல்றீங்க. அதான் சந்தேகமா இருக்கு.” என்று வந்த சிரிப்பை அடக்க முயன்றான்.

“அதுவா. அங்க போய் சொல்றேன். இங்கிருந்து திருவான்மியூர் பீச் ரொம்பப் பக்கம். பேக் சைட்ல தான் இருக்கு. உங்களுக்கு ரூட் தெரியும் தான?” என்றாள்.

“ஆங்க்… அதெல்லாம். நீங்க???” என்று இழுத்தவனிடம்,

“நான், என்னோட வண்டியில பின்னாடியே வரேன். கிளம்புங்க.” என்று சொன்னபடி தனது வண்டியை நோக்கிச் சென்றாள்.

அவள் நல்ல மனநிலையில் இருக்கும் போதே, அவளிடம் பேசிவிட வேண்டும் என்பதால், உற்சாகத் துள்ளலோடு திருவான்மியூர் கடற்கரைக்கு முன்னே பயணித்தான் நிலன். வெண்ணிலாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

நிலன் அவ்வப்போது அவள் பின்னால் வருகிறாளா? என்று பார்த்துக்கொண்டேதான் சென்றான். அவளோ, அதற்க்கு அவனை முறைக்க அடுத்த முறை திரும்பாமல் அமைதியாய் கடற்கரைக்கு வந்துவிட்டான்.

வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தியவர்கள், மாலை நேரம் சற்று அதிகமாகவே வீசிக்கொண்டிருந்த கடற்கரைக் காற்றைக் கிழித்தபடி நடந்து சென்றனர்.

வார நாள் என்பதால் அங்கே அதிகக் கூட்டம் இல்லை. பேசுவதற்க்கு வசதியாக, தோதான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்த வெண்ணிலா, அருகே நிலனையும் அமரச் சொன்னாள். நடப்பதெல்லாம் புதிதாகவும், அதே சமயம் புதிராகவும் தெரிந்தது நிலனுக்கு.

கடற்கரைக் காற்றை மிக அருகிலேயே வாங்கிய நிலனுக்கு சுகமாக இருந்தது. அதே போல், எப்பொழுதும் தனது வீட்டின் தொலைவிலிருந்து கடலை ரசிப்பவளுக்கு, மிக அருகிலேயே இருப்பதும் ஒருவித அனுபவத்தைத் தந்தது.

“எனக்கு இந்தக் கடல் ரொம்பப் பிடிக்கும் வெண்ணிலா. அடிக்கடி போகணும்னு ரொம்ப ஆசைப்படுவேன். நீங்க அந்த விஷயத்துல ரொம்ப லக்கி. தினமும், வீட்ல இருந்து அதோட அழகை ரசிச்சுட்டே இருக்கலாம் இல்ல?” என்று சிலாகித்தபடி பேசிக்கொண்டிருந்தவனை ஒரு கணம் பார்த்தாள்.

அதைக் கண்டவனோ, புருவம் தூக்கி என்னவென்று வினவினான். அதைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டவள், தூரமாய் இருந்த ஒரு ஜோடியைப் பார்த்தாள். இருவரும் ஒரு படகுக்கடியில் துப்பட்டாவினுள் சில்மிஷம் செய்துகொண்டிருந்ததைக் கண்டாள்.

அவள் அப்படி என்னதான் பார்க்கிறாள்? என்று பார்த்த நிலனின் கண்ணுக்கும் அந்தக் காட்சி அப்பட்டமாகத் தெரிந்தது. அதைக் கண்டு ஒரு பக்கமாகத் திரும்பி சிரித்துக்கொண்டான்.

அதைப் பார்த்தவாறே, “அங்க போட்டுக்குக் கீழ உட்கார்ந்து அசிங்கமா மத்தவங்க இருக்காங்கன்னு கூட நினைப்பு இல்லாம நடந்துக்கறவங்களுக்கு என்ன வயசு இருக்கும் நிலன்?” என்று கேட்டாள்.

அதைக் கேட்டு புருவம் சுருக்கியவன், “என்ன ஒரு பதினெட்டு வயசு இருக்கும்.” என்றான்.

“ஹூம்ம்.. இந்த வயசுல இப்படி ஒரு விஷயம் பண்ணத் தோணுதுன்னா அதுக்கு என்ன ரீசனா இருக்கும்னு நினைக்கறீங்க?” என்றாள்.

“அவங்க லவ்வர்ஸ் தான? இதெல்லாம் அவங்களுக்குள்ள சகஜம். இதுல என்ன ரீசன் இருக்கப் போகுது?” என்றான் நிலன்.

“இல்ல. அது காதல்ன்னு தான் நினைக்கறீங்களா?” என்றாள் முகத்தை அவனிடம் திருப்பி.

அதைக் கேட்டு “ம்ம்…” என்று வேகமாய்த் தலையாட்டினான்.

அதற்க்கு அவளோ, “ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் அது காமம்ன்னு தான் தோணுது.” என்றாள்.

அதைக் கேட்டவன், “உங்களுக்கு ஏன் அப்படித் தோணுது? லவ்வர்ஸ்ன்னா இந்தக் காலத்துல இப்படித்தான் இருக்காங்க. இதெல்லாம் ரொம்ப நார்மல் ஆயிடுச்சு.” என்றான் சாதாரணமாக.

“ம்ம்ம்.. உங்களுக்கு இது நார்மலா தான் தோணும். ஏன்னா, நீங்க கல்ச்சர்ன்னா என்னன்னே தெரியாத நாட்ல இருந்து தான வந்திருக்கீங்க? அதனால, உங்களுக்கு காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாதது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.” என்றாள்.

அதைக் கேட்டு நிலனின் முகமே மாறியது. “கல்ச்சர் தெரியாத நாட்ல பிறந்து, வளர்ந்தாலும் கல்ச்சர் தெரிஞ்ச தாத்தா-பாட்டி, அம்மா-அப்பாவால தான் நானும், என்னோட ப்ரதரும் வளர்ந்தோம். சோ, இது தேவையில்லாத பேச்சுன்னு நினைக்கிறேன் வெண்ணிலா.” என்றான்.

“எது தேவையில்லாத பேச்சுன்னு சொல்றீங்க? இந்த மாதிரி லவ்வுன்னு சொல்லிட்டு சுத்தறவங்களும் சரி, கல்யாணம் பண்றவங்களும் சரி வெய்ட் பண்றது எல்லாமே அந்த ஒரு நாளுக்காகத்தான். அது நடந்து முடிஞ்சதுன்னாப் போதும், அதுக்கப்பறம் எல்லாமே ரொம்ப சாதாரணமா மாறிடும். இதுல நீங்க சொல்ற லவ்வெல்லாம் ஒன்னும் இருக்காது. அதெல்லாம் சும்மா. அந்தக் காமத்த அனுபவிக்கறதுக்காக எல்லாரும் போடுற வேஷம். அதுல வேற எதுவும் இல்ல.” என்றாள் வெறுப்பாக.

“ஓ! அப்போ என்னைப் பெத்தவங்களும் சரி, அவங்களப் பெத்தவங்களும் சரி இப்போவரைக்கும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கிட்டு, விட்டுக்கொடுத்துட்டு, சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஒருத்தரையொருத்தர் பகிர்ந்துகிட்டு, இப்போவரைக்கும் மேட் ஃபார் ஈச் அதர்ன்னு இருக்காங்களே, அப்போ அதையெல்லாம் என்ன சொல்றது வெண்ணிலா?” என்று அவளுக்கு சளைத்தவன் தான் அல்ல என்று கேட்டான்.

“இந்த உலகத்துல நீங்க சொல்ற மாதிரி இருக்கறவங்க வெறும் 10% தான் நிலன். மீதி, 90% இப்படித்தான் இருக்காங்க. அதுவும் இப்போ உலகம் போற ஃபாஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி லிவ்விங்க் டூகெதர் கல்ச்சர் எல்லாப் பக்கமும் பரவிட்டுத்தான் இருக்கு. சோ, நீங்க அதை நினைச்சுப் பார்த்தா, நான் சொல்றது உண்மைன்னு புரியும்.” என்றாள் விடாமல்.

“நீங்க அந்த 90% பேர மட்டுமே பார்க்கறீங்க. ஆனா, நான் அந்த 10% இருக்காங்களே அவங்கள மட்டும் தான் பார்க்கறேன். சோ, அவங்களால இன்னும் கல்ச்சர் இருந்துட்டுத்தான் இருக்கு. நீங்க சொல்றதப் பார்த்தா, நம்ம பிறப்பே தப்பாயிடும்.” என்றான்.

“நீங்க எப்படியோ தெரியல நிலன். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட பிறப்பு அப்படித்தான்னு தோணும். இல்லைன்னா ஏன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட பேரண்ட்ஸ் பிரிஞ்சு போகணும்? அப்பா, அம்மாவ கொடுமைப்படுத்தணும்? அம்மா மேல இருந்த காமத்தால தான் அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது குறைஞ்சதும், வேற போதைக்கு அடிமையாகி உயிரையே விட்டுட்டார். அப்படிப் பார்க்கும் போது, நான் சொல்றது சரியில்லன்னு உங்களால சொல்ல முடியுமா?” என்று கேட்டவளின் விழிகளில் அத்தனை வெறுப்பு.

“நீங்க இவ்ளோ டீப்பா யோசிச்சா, யாருமே உலகத்துல காதல், கல்யாணம் இரண்டையும் நினைச்சே பார்க்க முடியாது வெண்ணிலா. எல்லாமே ஒரு கட்டத்துல புரிய வரும்போது அதை ஏத்துக்க வேண்டியதுதான்.” என்றான் நிலன்.

“இந்தக் காதல், கல்யாணம் எல்லாமே என்னைப் பொறுத்தவரைக்கும் மக்காச்சோள வியாபாரம் மாதிரி நிலன். அப்போதைக்கு சூடு பறக்க வாங்கி சாப்பிட்டு த்ருப்திப்பட்டுக்குவாங்க. ஆனா, தினமும் அதையே சாப்பிடுவாங்களா? அதுமாதிரிதான் இப்போ வாழறவங்க வாழ்க்கையும். கொஞ்சம் போர் அடிச்சதுன்னா, வேற ஒரு ரிலேஷன்ஷிப்புக்குப் போகற நிலைல எதை நம்பி கல்யாணம் பண்றது? எப்படி நம்பிக்கை வரும்? இதைத்தான் ஆரம்பத்துல இருந்து உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன். ஆனா, நீங்க அதைப் புரிஞ்சுக்காம என்னை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணனும்னு நினைக்கறீங்க. வேஸ்ட் ஆஃப் யுவர் டைம்.” என்று சலித்துக்கொண்டவளின் முகத்தைப் பார்த்தவன்,

“சோ, நீங்க இப்போ என்ன சொல்ல வர்றீங்க? நாளைக்கு நானும் அதே மாதிரி உங்கள விட்டுட்டுப் போய்டுவேன்னு சொல்றீங்களா?” என்றான் தீவிரமான குரலில்.

“அஃப்கோர்ஸ். நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா? யூ மேட் ஆஃப் அமெரிக்கா வேற. கேட்கவே வேண்டாம்.” என்று அவள் திரும்பவும் எரிச்சலில் சொல்ல,

சட்டென்று எழுந்துகொண்ட நிலன், “ஓகே மிஸ்.வெண்ணிலா. நான் இத்தனை நாள் உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு ரொம்ப சாரி. குட் பை.” என்று மட்டும் சொன்னவன்,

அவளின் அடுத்த பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென நடந்து சென்று, அவனது வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

அதை சற்றும் எதிர்பார்க்காத வெண்ணிலா, அவன் கிளம்பியது வரை அவனையே பார்த்தவள், சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு அதன் பிறகு கிளம்பிச் சென்றாள்.

தொடரும்……………………






ஹலோ ஃப்ரெண்ட்ஸ், உங்க கருத்துக்களை இங்கே பதிவிடுங்க.


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 14

அன்று வெண்ணிலாவுடன் பேசியதற்க்குப் பிறகு, கோபத்தை எப்படிக் காட்டுவது? என்று தெரியாமல், அதை அடக்கிக்கொண்டு அப்படியே கிளம்பி வந்துவிட்டான் நிலன். ஆனால், அதன் தாக்கமோ இன்னும் அவனை விட்டுப் போகவில்லை.

அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் புனிதமான ஒரு பந்தத்தை கேவலப்படுத்துவதாக எண்ணினான். ஆனால், அவள் ஏன் அப்படிப் பேசினாள் என்பதையும் மௌனமாய் ஆராய்ந்தான். ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், அவனது மௌன ஆராய்ச்சியில் விடைகள் கிடைக்க அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்றும் யோசித்தான்.

அன்று அவன் வெளியே கிளம்பிக்கொண்டிருந்த சமயம், பத்மநாபனும், கமலமும் அவனை அழைத்தனர்.

“என்னாச்சு நிலா? ஏன் ஒருவாரமா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க? நானும், உன் பாட்டியும் உன்னைப் பார்க்காம இருக்கோம்னு நினைச்சியா? நாங்க எப்பவும் உன்னைப்பத்தி யோசிக்காம இல்ல. என்னாச்சுன்னு சொல்லு.” என்றார் பத்மநாபன்.

“அது… தாத்தா….” என்று தயங்கியவனின் தோளைப் பற்றிய கமலம், “எதுவா இருந்தாலும் பரவால்ல நிலா, தயங்காம எங்ககிட்ட சொல்லு. பார்த்துக்கலாம்.” என்று நம்பிக்கையுடன் பேசியவரின் கைகளைப் பற்றியவன்,

அன்று நிலாவுடன் கடற்கரையில் நடந்த விவாதத்தையும், இதுவரை அவளது மனம் மாறாமல் இருப்பதையும் சொல்லிமுடித்தான்.

“அந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கா என்ன? டாக்டராச்சே ரொம்பத் தெளிவா இருப்பான்னு தான நினைச்சோம். ஆனா, இப்படி ஒரு பிரச்சினை இருக்கும்னு நினைக்கவே இல்ல டா.” என்றார் கமலம்.

“சரிதான் கமலம். ஆனா, ஒரு வகைல அந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்குன்னு ஆரம்பத்துலயே நமக்குத் தெரிஞ்சதே பரவால்ல. இல்லைன்னா, நாம முடிவு பண்ணிட்டோம்னு நம்ம பேரனோட வாழ்க்கைய இல்ல கெடுக்கப் பார்த்திருப்போம்.” என்றார் பத்மநாபன்.

“தாத்தா, பாட்டி. நீங்க ரெண்டு பேரும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். அவ இப்படிப் பேசறான்னா அதுக்கு உண்மையான ரீசனே அவளோட குடும்பம் தான். அங்க எதுவுமே அவளைப் பொறுத்தவரைக்கும் சரியில்ல. அதனால, அவளுக்கு அந்த பந்தத்து மேல நம்பிக்கையும் இல்ல. அவ மனச யாரும் சரியா புரிஞ்சுக்கல. சரிவர எதையும் பேசல. அதுதான் இவ்ளோ பெரிய பிரச்சினையா உருவாயிருக்கு. அதை நான் தான் அவங்களுக்குப் புரிய வைக்கணும்னு நினைக்கிறேன். நீங்க சொல்லுங்க, நான் அதை செய்யட்டும் தானே?” என்றான் நிலன் அவர்களிடம்.

“உன்னை மாதிரி எல்லாத்தையும் புரிஞ்சுக்கற ஒரு பையன் கிடைக்க அந்தப் பொண்ணும், அவங்க குடும்பமும் புண்ணியம் பண்ணியிருக்கணும் டா. ஆனா, இங்க எல்லாமே தலைகீழா இருக்கு. உன்னால எல்லாத்தையும் சரி பண்ணிட முடியும்னா பாரு. இல்லைன்னா நாம வேற ஏதாவது சம்பந்தம் கூட பார்க்கலாம். உனக்கு இன்னும் வயசு இருக்குதானே?” என்றார் கமலம்.

“ம்ம்ம்… பார்க்கலாம் பாட்டி. நான் அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்திடறேன்.” என்று சொல்லிவிட்டு தனது வண்டியை கிளப்பிக்கொண்டு நேரே வெண்ணிலாவின் வீட்டிற்க்குச் சென்றான் நிலன்.

விடுமுறை நாள் என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருப்பார்கள் என்று நினைத்தவன், அவர்கள் எதிர்பாராத போது வீட்டினுள் நுழைந்தான்.

அவனைக்கண்டு அனைவரும் மகிழ்ச்சியாக அவனை வரவேற்றனர். ஆனால், தான் சொல்ல வந்திருக்கும் விஷயம் கேட்டால் இவர்களின் முகத்தில் இருக்கும் சந்தோஷம் போய்விடுமே என்று மனதினுள் நினைத்தபடி வந்து அமர்ந்தான் நிலன்.

“சொல்லுப்பா, எப்படி இருக்க? பாட்டி, தாத்தா வரலையா?” என்று நலம் விசாரித்தார் ரமணி.

எப்பொழுதும் அவனை முறைத்தபடி இருக்கும் ஜோதியும், இந்த முறை அதிசயமாக “வாங்க…” என்று புன்னகைத்ததைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

“இன்னைக்கு எல்லாரும் வீட்ல இருக்காங்க. ஆனா, உங்க ஹீரோயின் மட்டும் கேம்ப்ன்னு தஞ்சாவூர் போய்ட்டா.” என்றாள் வான்மதி.

அப்போதுதான் நிலனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஏனென்றால், அவன் பேச வந்ததே இவர்களிடம் தான். இந்த சமயத்தில் வெண்ணிலா இங்கே இருப்பது சரியாக இருக்காது என்று நினைத்தான்.

“நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேச வந்திருக்கேன். எனக்கு வெண்ணிலாவப் புடிச்சிருக்கு. நான் அவங்களக் கல்யாணம் பண்ணிக்கத் தயராவும் இருக்கேன். ஆனா….” என்று அவன் சொன்னதும்,

அனைவருடைய முகத்திலும் தெரிந்த பிரகாச ஒளி, அதற்க்குப் பிறகு அவன் சொன்ன ஆனால் என்ற வார்த்தையில் கேள்விக்குறி ஆனது.

“ஆனா என்னப்பா? ஏதாவது பிரச்சினையா?” என்றார் பிரகாஷ்.

“ஆமா, நிலாக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல.” என்றான்.

அந்த உண்மை தெரிந்தவர்கள் அமைதியாய் இருக்க, பிரகாஷ் அதிர்ந்தார்.

“ஏன், என்னாச்சு? அவளுக்கு ஏன் இதுல விருப்பம் இல்ல? அவளுக்குப் பிடிச்சிருக்குன்னு தான நாங்க எல்லாரும் நினைச்சுட்டு இருக்கோம்.” என்றார்.

“இல்ல அங்கிள். அது தப்பு. நீங்க யாருமே அவங்ககிட்ட மனசு விட்டுப் பேசவோ, கேட்கவோ இல்லை. உங்களுக்கு சரின்னு பட்டதால எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிங்க. ஆனா, அவங்க என்ன மனநிலைல இருக்காங்கன்னு நீங்க யாருமே கவனிக்கல. சின்ன வயசுல இருந்தே நீங்க கவனிக்காத ஒரு விஷயம் தான், இப்போ அது ரொம்பப் பெரிய விஷயமா வளர்ந்திருக்கு.” என்றான்.

“நீ என்னப்பா சொல்ல வர? எங்களுக்குப் புரியவே இல்ல.” என்றார் பிரகாஷ்.

“அந்த தம்பி சொல்றது சரிதான் அண்ணா. அன்னைக்கு முதன் முதல்ல இவங்க நிலாவ பொண்ணு பார்க்க வந்தப்போவே அவ நம்மகிட்ட வேண்டாம்னு சொன்னா நினைவிருக்கா? அதையே தான் திரும்பவும் அவ சொல்லிட்டு இருக்கா. இவங்க ரெண்டு பேரும் பழகினதுக்கப்பறம் அவ மாறியிருப்பான்னு நினைச்சேன். ஆனா, இன்னும் அவ மனசு மாறல.” என்றார் சந்திரா.

“ஆண்ட்டி. நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். வெண்ணிலா மேல எந்தத் தப்பும் இல்ல. ஏன்னா, அவங்க மனச பாதிக்கற அளவுக்கு உங்க எல்லாருடைய லைஃப்லயும் ஒரு விஷயம் நடந்திருக்கு. அதை அவங்களால நினைக்காம இருக்க முடியல. அந்த விஷயம் எங்க தனக்கும் நடந்திருமோன்னு பயந்துபோய் அவங்க எடுத்த முடிவு தான் இது. அந்த பயம் அவங்க அடிமனசுல இப்போ வேரோட மரமா வளர்ந்து நிக்குது. அதை எப்படி பிடுங்கி எறிய முடியும் சொல்லுங்க?” என்றான் நிலன்.

“நான் அன்னைக்கு அவகிட்ட பேசும் போதுகூட மேரேஜ் பத்திப் பேசாதன்னு தான் சொன்னா. அந்த அளவுக்கு அவ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கா. நானும் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். ஆனா, அவ மாறல.” என்றாள் வான்மதியும்.

“நீங்க எவ்வளவுதான் அவங்ககிட்ட பேசினாலும், அது பிரயோஜனமாகாது. ஏன்னா, அதனால அவங்க மனசு மாறுறதுக்கு வாய்ப்பில்ல. உங்க குடும்பத்துல நடந்த விஷயங்கள் தான், அதுக்குக் காரணம். அதை ஒவ்வொண்ணா நீங்க சரிசெய்ய முயற்சி பண்ணுங்க. அது வேணும்னா ஒரு வேளை அவங்க மனச மாத்த வாய்ப்பிருக்கு. ஏன்னா, தப்பு அவங்க மேல இல்ல. உங்க எல்லார் மேலயும் தான் இருக்கு. அதை நீங்க உணரனும். அதுக்கப்பறம் நீங்க மாறணும். இது நடந்தாலே அவங்க ஆட்டோமேட்டிக்கா மாறுறதுக்கான சான்ஸ் இருக்கு.” என்றான் நிலன்.

“இவ்ளோ விஷயம் உனக்கு எப்படிப்பா தெரிஞ்சது? எங்க நிலாவ நாங்க இவ்ளோ நாள் புரிஞ்சுக்காம இருந்துட்டோம். அவ மனசு இந்த அளவு பாதிச்சிருக்கும்னு தெரியாம இருந்துட்டோம். இனிமேல் நாங்க அதை மாத்த முயற்சி பண்றோம். ஆனா, நீ எங்க நிலாவுக்காக வெய்ட் பண்ணுவியா பா?” என்றார் ரமணி.

“பாட்டி. அது வந்து.. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. நான் இப்போ அந்த மனநிலைல இருந்து வெளிய வந்துட்டேன். அவங்க மனசுல நான் கண்டிப்பா இல்ல. நீங்க கட்டாயப்படுத்துனா மட்டும் எதுவும் நடக்கப்போறது இல்ல. அதனால, நீங்க வீணா என்னை எதிர்பார்க்காதீங்க. கண்டிப்பா அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும். அதாவது, நான் சொன்னதுமாதிரி நீங்க எல்லாரும் மாறும் போது.” என்றான் நிலன்.

“அப்போ, எங்க நிலாவ நீ விட்டுட்டுப் போய்டுவியா? அவ கூட இருக்க மாட்டியா?” என்று குரல் தழுதழுக்கப் பேசினார் ரமணி.

“பாட்டி, நான் இன்னும் ஒரு மாசம் தான் இங்க இருப்பேன். அதுக்கப்பறம் நான் யு.எஸ் கிளம்பிடுவேன். ஆஃபீஸ்ல வர சொல்றாங்க. அதனால தான். பாட்டி, தாத்தா மட்டும் இன்னும் ரெண்டு மாசம் இருந்துட்டு அப்பறம் வருவாங்க.” என்று எதையோ காரணம் சொன்னான் நிலன்.

அதைக் கேட்டு அவனது தோள்களைப் பற்றி அழுத ரமணி, சட்டென நெஞ்சை அழுத்திப் பிடித்தபடி அப்படியே சரிந்துவிழுந்தார். இதை எதிர்பார்க்காத நிலனும், குடும்பத்தினரும் அவரைப் பிடித்து,

“அம்மா…. என்னாச்சு…? எழுந்திரிங்க……” என்று கத்த ஆரம்பித்தனர்.

“அத்த…… என்னாச்சு…..?” என்று ஜோதியும் கதறினார்.

“பாட்டிய உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்.” என்று நிலன் சொல்ல,

“வானு மா, நிலாவோட ஹாஸ்பிடல்க்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் அனுப்ப சொல்லு.” என்று சொல்ல, அவளும் போனை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.

“அங்கிள். ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள நாமே கூட்டிட்டுப் போயிடலாம். நான் பாட்டிய தூக்கிக்கறேன். உதவி பண்ணுங்க.” என்று ரமணியை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வெளியே காருக்கு விரைந்தான் நிலன்.

அதற்க்குள், வண்டி சாவியை எடுத்துக்கொண்ட பிரகாஷ் அவன் ரமணியை உள்ளே படுக்க வைப்பதற்க்குள் வண்டியைக் கிளப்பினார். அவரது பதற்றத்தை உணர்ந்துகொண்டவன்,

“அங்கிள் நான் வண்டியை ஓட்டுறேன். நீங்க பதட்டமா இருக்கீங்க.” என்று அவரை தள்ளி அமரச் சொன்னவன், வண்டியை அவனே ஓட்டினான். பின்னே, சந்திரா ரமணியை தனது மடியில் அமர வைத்திருக்க, நால்வரும் மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

ஜோதியையும், வான்மதியையும் இப்போதைக்கு இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டனர். செல்பவர்களையே தவிப்புடன் பார்த்தபடியே ரமணிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு நின்றனர் இருவரும்.

செல்வதற்க்கு முன்னரே மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்குத் தொடர்புகொண்டு முதலுதவிக்குத் தேவையான அனைத்தையும் தயார் படுத்த வேண்டிக்கொண்டார் பிரகாஷ்.

வெண்ணிலா வேலை செய்யும் மருத்துவமனை என்பதால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் அனைத்தையும் செய்தனர். அவரை கொண்டு சென்றதும், உடனே இரண்டு ஊழியர்கள் அவரை ஸ்ட்ரெட்ச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இழுத்துக்கொண்டு ஓடினர்.

பின்னாலேயே இவர்கள் மூவரும் செல்ல, மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பெற்ற தாய்க்கும் மேல் தங்களுக்கு அனைத்துமாக இருந்த தங்களது அன்னை முதல் முறை உயிருக்குப் போராடுவதை பிரகாஷாலும், சந்திராவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் அழுவதையும் நிலன் பார்த்தான்.

“ஆண்ட்டி, அங்கிள். ப்ளீஸ் அழாதீங்க. பாட்டிக்கு எதுவும் ஆகாது.” என்று ஆறுதலாகப் பேசினான்.

அரைமணி நேரம் கரைய, வெளியே வந்த டாக்டர், “அவங்களுக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கு. நீங்க சரியான டைம்ல வரலன்னா கொஞ்சம் சிரமமாயிருக்கும். ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கோம். இன்னும் இரண்டு நாள் அவங்க அப்சர்வேஷன்ல இருக்கணும். அதுக்கப்பறம் பார்க்கலாம். வெண்ணிலாவுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?” என்றார்.

“இல்ல டாக்டர். பதட்டத்துல என்ன பண்றதுன்னே புரியல. அம்மாவ அப்படியே தூக்கிட்டு ஓடி வந்துட்டோம்.” என்றார் சந்திரா.

“அவங்களுக்கு இப்போதைக்கு சொல்ல வேண்டாம். ஏன்னா, அவங்க கேம்ப்ல முக்கியமான ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க. அவங்க அங்க இருக்கறது ரொம்ப முக்கியம். நாங்க இருக்கோம். அம்மாக்கு எதுவும் ஆகாது.” என்று அவரும் ஆறுதலாக சொல்லிவிட்டுச் சென்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து ரமணியை ஐ.சி.யூ வார்டிற்க்கு மாற்றினர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கேட்டு இன்னும் அதிக வருத்தத்திற்க்கு ஆளாகினர் பிரகாஷூம், சந்திராவும். நிலனோ சங்கடமாக நினைத்தான்.

அவனிடம் ரமணி கடைசியாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், அவர் மயங்கி விழுந்தார். அப்படியென்றால், அவரால் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால் தான் இந்த மாரடைப்பு ஏற்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டான் நிலன்.

இடையில், வான்மதி போன் செய்து விவரம் தெரிந்துகொண்டாள். அதே போல், வெண்ணிலாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம் என்பதையும் சொல்லிவிட்டார் பிரகாஷ். அதே நேரம், எதேச்சையாக மருத்துவமனைக்கு வந்த ரஞ்சனியும் இவர்களைப் பார்த்து விஷயத்தைத் தெரிந்துகொண்டாள்.

அவர்களிடம் நலம் விசாரித்தபோது, நிலன் தான் உதவி செய்தான் என்பதைத் தெரிந்துகொண்டாள். அன்றுதான் அவள் நிலனை முதல் முதலாகப் பார்க்கிறாள்.

அவளை யாரென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ் நிலன். நீங்க சரியான நேரத்துல பாட்டிய ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. இல்லைன்னா பாட்டியோட நிலைமைய நினைச்சுப் பார்க்கவே முடியல. பாட்டிதான் இந்த குடும்பத்தோட அடித்தளமே. அவங்க இல்லைன்னா இவங்க எல்லாருமே உடைஞ்சு போய்டுவாங்க. அதுவும் நிலா.. அவளுக்குப் பாட்டின்னா உயிர்.” என்றதும், அவனது முகம் சுருங்கியது.

அதைக் கண்டுகொண்டவள், “நிலா உங்ககிட்ட பேசினது ரொம்பத் தப்பான விஷயம் தான். அவ என்கிட்ட எதையும் மறைக்கமாட்டா. எல்லாத்தையுமே சொல்லிடுவா. அவ இதைப்பத்தி சொன்னதுமே நான் அவள ரொம்பத் திட்டிட்டேன். கோவிச்சுக்கிட்டுப் போய்ட்டா. கேம்ப்ல இருக்கா. இன்னும் எனக்கு போனே பண்ணல. வர வர அவளோட மன அழுத்தம் ரொம்ப அதிகமாயிடுச்சு நிலன். அதனால தான் அவ இந்த அளவுக்கு மாறியிருக்கா.” என்றாள்.

“எனக்கும் அது தெரியுது மிஸ்.ரஞ்சனி. ஆனா, அன்னைக்கு பேசின வார்த்தைகள் இன்னும் என்னால மறக்க முடியாது. ஆனா, அவங்க மேலயும் தப்பு இல்லன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சதுக்கப்பறம் தான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி தான் இன்னைக்கு இவங்க வீட்ல பேச வந்தேன். ஆனா, பாட்டிக்கு சடர்னா இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல.” என்றான்.

“நீங்க சைக்காலஜி படிச்சிருக்கறதால, எல்லாத்தையும் புரிஞ்சுக்கற பக்குவம் உங்களுக்கு இருக்கு. இதுவே உங்க இடத்துல இருக்கற வேற யாராவது இவ இப்படிப் பேசறதக் கேட்டிருந்தா, சரிதான் போடின்னு போயிருப்பாங்க.” என்று சொல்லி நகைத்தாள்.

“கஷ்டம் தான் நிலாவா மனசு வைக்கற மாதிரி விஷயம் நடந்தா, அவங்க மாறுறதுக்கு சான்சஸ் இருக்கு. அப்படியே அவங்க மாறினாலும், நான் இங்க இருக்க மாட்டேன். நான் கிளம்பியாகணும். சோ, அவங்க லைஃப்ல வேற யாரையாவது பார்த்து மேரேஜ் பண்ணி வைங்க.” என்றான்.

அதைக் கேட்டவள் அதிர்ச்சியாக, “ஆனா, நீங்க நிலாவ விரும்பறீங்க தானே? அப்பறம் ஏன், இந்த முடிவு நிலன்?” என்றாள்.

“ஆரம்பத்துல இருந்தே அவங்கள எனக்குப் பிடிச்சிருந்தது உண்மைதான். அன்னைக்குப் பேசுற வரைக்கும் அப்படித்தான் இருந்தேன். ஆனா, அவங்களோட கடைசி வார்த்தை என்னை ரொம்பக் காயப்படுத்திருச்சு. அதுல இருந்து என்னால வெளிய வர முடியல. இன்னும் முயற்சி பண்ணிட்டிருக்கேன். ஏனோ, தெரியல அவங்க வேணும்னு பேசல. இருந்தாலும், கஷ்டமா இருக்கு. சோ, ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.” என்றான் நிலன்.

அவனது மனநிலையை ஒரு மனநல மருத்துவராக உணர்ந்தவள், “ஓகே நிலன். ஐ அண்டர்ஸ்டாண்ட். பார்க்கலாம்.” என்றாள்.

அதன்பிறகு, நிலன் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டிற்க்குக் கிளம்பிவிட்டான். எந்த ஒரு உதவி என்றாலும், தன்னை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டான்.

அவன் சொல்லிவிட்டுச் சென்றதும், சிறிது நேரத்திலேயே நந்தன் வந்துவிட்டான். நிலன் மற்றும் வான்மதி இருவரும் தகவல் அளித்தால் அவனும் அங்கே வந்துவிட்டான். அவனால், முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருந்தான்.

இத்தனையும் நடந்துகொண்டிருந்த வேளை, எந்த ஒரு விஷயமும் அறியாமல் தான் சென்றிருந்த தஞ்சாவூர் கேம்ப்பில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்டிருந்தாள் வெண்ணிலா.



தொடரும்………………………






ஹலோ டியர்ஸ்......... உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்க......


 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 15

ரமணியின் உடல்நிலை சற்று தேறியிருந்தது. வெண்ணிலாவுக்கு கடைசி நிமிடத்தில் தான் உண்மையைச் சொன்னார்கள் மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள். விஷயம் கேள்விப்பட்டதுமே அடித்துப் பிடித்து ஓடிவந்தாள் வெண்ணிலா.

தான் திரும்பி வரும்வரை தகவல் சொல்லாமல் விட்டதற்க்காக அனைவரிடமும் கோபத்தைக் காட்டினாள். அவள் வந்ததற்க்குப் பிறகுதான் இல்லம் வந்து சேர்ந்தார் ரமணி. இப்போதைக்கு அவரை யாரும் தொந்தரவு செய்வதோ, அதிர்ச்சியான விஷயங்களைச் சொல்வதோ கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனால் அவருக்கு சேவை செய்வதைத் தவிர வேறு எந்த ஒரு செயலையும் குடும்பத்தினர் செய்யக்கூடாது என முடிவு செய்திருந்தனர். பிரகாஷ் தனது வேலையை மட்டுமல்லாது, அம்மாவின் தொழிலையும் அவ்வப்போது கவனித்து வந்ததால் அவருக்கு தொழிலை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரமணியின் அறிவுரையால் அதையும் நடத்தினார்.

இடையில் அவரை நலம் விசாரிக்க நிறைய பேர் வந்து சென்றவண்ணம் இருந்தனர். அவரை எந்த விதத்திலும் பாதிக்காதவண்ணம் அனைவரையும் அளவோடு பேசவும் சொல்லியிருந்தனர் குடும்பத்தினர்.

வேலை முடிந்து திரும்பியதும் வெண்ணிலா, வான்மதி மற்றும் சந்திரா மூவரும் அவருடன் ஆறுதலாய்ப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்தனர். வீட்டில் வேலையாள் ஒருவரை நியமித்து வீட்டு வேலைகளை முழு நேரமும் செய்ய வைத்தனர்.

அதே போல் ஜோதியும் அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டார். ஜோதியின் இந்த மனமாற்றம் பிரகாஷை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. முன்பு போல் இல்லாமல் பொறுமையாகவும், அமைதியாகவும் இருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், ஜோதியின் குணம் அப்படிப்பட்டது.

இன்று அவரிடம் மாற்றம் வந்திருக்கிறது என்றால், தானும் அவளைப் புரிந்துகொள்ளாமல் இத்தனை வருடங்கள் தவறு செய்து விட்டோமோ? என்று கூட நினைக்கத் தோன்றியது பிரகாஷுக்கு.

தன் மனதில் தோன்றிய விஷயத்தை இன்று ஏனோ ராமனியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் விருப்பப்பட்டார் பிரகாஷ். அவரின் அறைக்குச் செல்லும் போது, சந்திராவுடன், ஒரு நபர் ரமணியின் அறையிலிருந்து வெளியேறுவதைப் பார்த்தார்.

அவரைப் பார்த்ததும் புன்னகைத்தனர் இருவரும். அவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர் என்று அவரை, பிரகாஷுக்கு அறிமுகப்படுத்தினார் சந்திரா. அவர் கிளம்பியதும், ரமணியின் அறைக்குள் நுழைந்தார் பிரகாஷ்.

அவர் ஏதோ தன்னிடம் முக்கியமான விஷயம் பேச வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார் ரமணி. அமைதியாக வந்து அன்னையின் அருகே அமர்ந்து ஆறுதலாய் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டார் பிரகாஷ்.

“சொல்லுப்பா. என்ன விஷயம்? அம்மாகிட்ட ஏதோ பேச வந்திருக்க. சரியா?” என்று கேட்டவரை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்,

“எப்படிம்மா, என்னோட மனசுல இருக்கறத கரெக்ட்டா படிச்சு சொல்றீங்க?” என்றார்.

“பெத்த பசங்களோட முகத்தைப் பார்த்தாலே அவங்க என்ன நினைக்கறாங்கன்னு பெத்த அம்மாக்குத் தெரியாதா? நீ சொல்ல வந்தத சொல்லு.” என்றார்.

“ஜோதிகிட்ட இப்போ நிறைய மாற்றம் தெரியுது இல்ல மா. என்னால இன்னும் நம்ப முடியல. இந்த மாதிரி அவளப் பார்த்ததே இல்ல.” என்றார்.

“ம்ம்.. நானும் கவனிச்சேன் பிரகாஷ். அவ மனசு இப்போ நிறையவே மாறியிருக்கு. முதல்ல இருந்ததுக்கும், இப்போ இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. வானுவோட செகண்ட் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணதுக்கப்பறம் தான் இது நடந்திருக்கு. நிலனோட வீட்ல அவங்க வந்துட்டுப் போனதுக்கப்பறம் தான் அவளுக்குள்ள இந்த மாற்றம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். ரொம்ப நல்ல விஷயம் தான்.” என்றார் ரமணி.

“நானும், அவள நிறைய பேசியிருக்கேன், திட்டியிருக்கேன், சண்டை போட்டிருக்கேன். அவளும் கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்குப் போய்டுவா. ரெண்டு நாள்லயே திரும்பி வந்திடுவா. ஆனா, நான் வேணாம்னு அவ எப்பவும் நினைச்சதே இல்ல மா. அதை நான் இப்போ தான் உணர்றேன். நானும் அவள விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டதால நிறைய நோகடிச்சிருக்கேன். ஒருவேளை நிலன் எப்படி வெண்ணிலாவோட பிரச்சினையப் புரிஞ்சுக்கிட்டு நம்மகிட்ட வந்து பேசினாரோ, அப்போதான் நானும் எவ்ளோ தப்பு பண்ணியிருக்கேன்னு தோணுச்சு. அவளை நான் என்னைக்குமே மாத்தணும்னு முயற்சி பண்ணவே இல்ல. அன்பால எதையும் மாத்திடலாம்னு சொல்லுவாங்க. ஆனா, நான் அதை ஒரு தடவை கூட அவகிட்ட காட்டல. ஒருவேளை அப்போவே அவகிட்ட அன்பா நடந்திருந்தா, அவளும் என்னோட பேச்சுக்கு மரியாதை கொடுத்து நல்லபடியா இருந்திருப்பான்னு தோணுது. காலம் கடந்திடுச்சு தான். ஆனா, நான் பண்ண தப்ப இப்போ சரிபண்ணனும்னு நினைக்கிறேன் மா.” என்று பேசிய தன் மகனைப் பிடித்து உச்சி முகர்ந்தார் ரமணி.

“ரொம்ப சந்தோஷம் பிரகாஷ். கணவன்-மனைவிக்குள்ள புரிதல் வந்துடுச்சுன்னா, அது எப்பேர்ப்பட்ட சண்டையா இருந்தாலும், சீக்கிரமே காணாமப் போய்டும். நீ இத்தனை நாள் தப்பு பண்ணியிருந்தாலும், இப்போ நீ அதை உணர்ந்துட்ட. அதுவே போதும். அவகிட்ட மனசுவிட்டுப் பேசு. அவளும் அதைத் தான் எதிர்பார்ப்பாள். எல்லாமே சரியாகிடும்.” என்று மனம் குளிர அவரை ஆசிர்வாதித்தார் ரமணி.

“சரிம்மா…” என்று மனம் நிறைய அன்னையிடமிருந்து விடைபெற்று ஜோதியைத் தேடிச் சென்றார் பிரகாஷ்.

ஜோதி எப்பொழுதும் இல்லாமல், அன்று இரவு மொட்டைமாடியில் நின்றவண்ணம் தீவிர யோசனையில் இருந்தார். அவரைத் தேடி கடைசியில் அங்கே வந்த பிரகாஷ், அவருக்குப் பின்னால் வந்து அழைக்க, அவருக்குத் தெரியாவண்ணம் கண்களை அவசரமாய்த் துடைத்தார் ஜோதி.

அதைப் பார்த்தவர், “என்னாச்சு ஜோதி? ஏன் அழுதுட்டிருக்க?” என்றார்.

“ஒன்னும் இல்லைங்க. சும்மா காத்துல தூசி கண்ணுல பட்டுடுச்சு.” என்று சமாளித்தார்.

அதை நம்பாமல் பார்த்தவர், “அதை நான் நம்பணும்? என்ன பிரச்சினைன்னு சொல்லு.” என்றார்.

அவர் அப்படிக் கேட்டதும், மேலும் கண்கலங்கினார் ஜோதி. “நான் நிறைய தப்பு பண்ணிருக்கேங்க. அதை இப்போ நினைச்சாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு. அதெல்லாம் ஏன் பண்ணேன்னு என்னை நினைச்சு எனக்கே கோபம் வருது.” என்றார்.

“இது நீதானா ஜோதி? எப்படி இந்த மாற்றம் திடீர்னு உனக்குள்ள வந்துச்சு? நான் இன்னும் அதிர்ச்சில தான் இருக்கேன்.” என்று கேலியாக அவர் கேட்டாலும், ஜோதி கலங்குவதைக் கண்டார்.

“நான் கண்மூடித்தனமா செய்த தப்பால எத்தனை கஷ்டம்? அதுவும் நம்ம பொண்ணு வாழ்க்கையே போச்சு. அதை நான் பெரிய விஷயமாவே நினைக்கல. அவளோட விருப்பம் முக்கியம்னு எனக்குத் தோணல. நான் செய்ய வேண்டிய விஷயங்களெல்லாம், அந்த நிலன் தம்பியும், அவருடைய குடும்பமும் செய்த போதுதான் முதன்முறையா நான் என்னையே நினைச்சு வெட்கப்பட்டேன். அதுவும், நிலனோட பாட்டி பேசினப்போ தான், நான் இத்தனை நாளும் செய்த தப்பு என் கண் முன்னாடி வந்து என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிச்சு. இப்போ, நம்ம வானுவோட முகத்துல பார்க்கற சந்தோஷம் நான் இதுவரைக்கும் அவ முகத்துல பார்க்காத ஒன்னு. நந்தன் அவளோட வாழ்க்கைல வந்ததுக்கப்பறம் தான் அவ சந்தோஷத்தையே பார்க்கறேன். அப்போவே என்னுடைய தவறு எல்லாத்தையுமே நான் தப்புன்னு உணர்ந்துட்டேன். நிலன் தம்பி அன்னைக்கு வந்து நிலாவோட மனநிலை ஏன் இப்படி ஆச்சுன்னு சொன்னப்போ தான், அவளோட நிலைக்கு நாமளும் ஒரு காரணம்னு தெரிஞ்சுக்கிட்டேன். நாம எல்லாரும் மாறினா தான் அவளும் மாறுவா. அதனால தான் எனக்குள்ள மாற்றத்தைக் கொண்டுவந்தேன். உங்களுக்கு என்னைப் பிடிக்கலன்னாலும், நீங்களும் என்னை எப்பவாவது ஏதுப்பீங்கன்னு நினைச்சு தான் இருக்கேன். நான் இத்தனை நாள் செஞ்ச தப்ப மன்னிச்சிடுங்க.” என்று அவரது கையைப் பிடித்துக் கெஞ்சினார்.

அதைக் கேட்டு வாயடைத்துப் போனார் பிரகாஷ். என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றார். “ஜோதி, இப்படி ஒரேயடியா மாறினா பூமா தேவி தாங்காது மா. கொஞ்சம் பார்த்துக்கோ…” என்று கேலி பேசியவரைச் செல்லமாய் அடித்து கண்ணீருடன் சிரித்தார்.

“என்னை மன்னிச்சிரு ஜோதி. நானும், உன்னை இத்தனை வருஷம் புரிஞ்சுக்காம இருந்துட்டேன். ஒரு வேளை உன்னோட பிரச்சினைய புரிஞ்சு நடந்திருந்தா, நீயும் எப்பவோ மாறியிருந்திருப்ப. தப்பு உன்னோடது மட்டுமல்ல, என்னோடதும் தான். இவ்ளோ நாள் எப்படியோ போகட்டும். இனிமேல் நாம சந்தோஷமா இருப்போம்.” என்று அவரை அணைத்துக்கொண்டே பேச, அவரின் தோள்களில் சாய்ந்தவண்ணம் தலையசைத்தார் ஜோதி.

இவையனைத்தையும், வாயிலில் நின்றபடி எதேச்சையாய் அங்கே வந்த வான்மதி கண்டாள். தந்தையும், தாயும் இதுவரை இப்படி அந்யோன்யமாய் இருந்து பார்க்காதவளுக்கு, அவர்கள் மனம்விட்டுப் பேசி தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் பறிமாறி சேர்ந்துகொண்டது நிம்மதியைத் தந்தது.


******

அதே சமயம், பிரகாஷ் சென்றபிறகு ரமணியின் அறைக்கு வந்த சந்திரா அவருக்கு உதவி தேவைப்படும் என்று அங்கேயே இருந்தார். அதுமட்டுமல்லாது அவருக்கும் சில விஷயங்களை அவரிடம் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.

“அம்மா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றார் ரமணியிடம்.

“சொல்லு சந்திரா. ஆனா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்னு இருந்தேன். இப்போ, கொஞ்சம் முன்னாடி வந்துட்டுப் போனாரே ஒருத்தர். அவர் பேரு கூட…” என்று யோசித்தவரிடம்,

“வேணுகோபால்.” என்றார்.

“ஆங்க்… அவர் ரொம்ப நல்ல டைப்போ? அவருடைய ஃபேமிலி எல்லாம் என்ன பண்றாங்க?” என்று அனைத்தையும் கேட்டார்.

சொல்லப்போனால், சந்திரா அவரைப்பற்றித்தான் பேசவே வந்திருந்தார். அதைப்பற்றி ரமணியே கேட்டதும், “அவருக்கு ரெண்டு பசங்க கல்யாணம் ஆகி வெளிநாட்டுல செட்டில் ஆய்ட்டாங்க மா. அவருடைய மனைவி ரொம்ப வருஷம் முன்னாடியே இறந்துட்டாங்க. அவர் தனியா தான் இருக்கார்.” என்றார்.

அதைப் புரிந்துகொண்ட ரமணி, “ஓ! அவர் ரொம்ப நல்லவர் மாதிரிதான் தெரியுது. நீ பேசாம அவரக் கல்யாணம் பண்ணிக்கலாமே சந்திரா?” என்று நேரடியாகக் கேட்க, அதிர்ந்து போய் பார்த்தார் சந்திரா.

“அம்மா. நீ நிஜமாலும் தான் பேசறியா? என் மனசுல இருக்க சந்தேகமே இதுதான். ஏன்னா, அவர் என்கிட்ட இந்த விஷயமா ஏற்கனவே பேசியிருந்தார். அவர்கிட்ட என்னோட முடிவ சொல்லல. இந்த வயசுக்கப்பறம், எதுக்குன்னு நினைச்சேன். ஆனா, நிலாவோட இந்த மனநிலைக்கு நானும் ஒரு காரணம். ஒருவேளை நீங்க சொன்னமாதிரி நான் அப்போவே இன்னொரு வாழ்க்கைய ஏத்துக்கிட்டு வாழ்ந்திருந்தா அவளுக்கு இப்படி ஒரு பிரச்சினை வந்திருக்காதுன்னு தோணுச்சு. எல்லாமே நிலன் தம்பி சொன்னதுக்கப்பறம் தான் ரொம்ப தப்பு பண்ணிட்டமோன்னு நினைச்சிட்டே இருந்தேன். அதனால தான், இப்பவும் ஒரு நல்ல மனுஷன் நல்ல துணையா வர விருப்பம் சொல்லும்போது அதை நாம ஏன் ஏத்துக்கக் கூடாதுன்னு இப்போ தோணுது மா. ஒரு தடவை தப்பு பண்ணிட்டேன் மா. ஆனா, இந்த முறை அப்படி இல்ல மா. எனக்கு வேணு மேல நம்பிக்கை இருக்கு. அவர் எனக்கு ஒரு நல்ல துணையா இருப்பார்.” என்று பேசியவரை அணைத்துக்கொண்டார் ரமணி.

“என்னோட பசங்க வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு ரொம்ப வருத்தப்பட்ட நாட்கள் தான் அதிகம் சந்திரா. ஆனா, இன்னைக்கு நீங்க ரெண்டு பேருமே ஒரு நல்ல முடிவ எடுத்திருக்கீங்க. அதுவும் நிலாவுக்காக. எனக்கு இன்னைக்கு மாத்திரை கூட வேண்டாம். இந்த சந்தோஷமே, என்னை நோயிலிருந்து வெளிய எடுத்திட்ட மாதிரி இருக்கு.” என்று உற்சாகமாய்ப் பேசினார்.

“நிலா எப்படி இதை எடுத்துப்பான்னு தெரியல? ஆனா, வேற வழியும் தெரியல மா. நாம மாறினா தான் அவளும் மாறுவா. அதுக்காகவும், எனக்காகவும் நான் இந்த விஷயத்தைப் பண்ணித்தான் ஆகணும்.” என்றார்.

“ஊர் முன்னாடி நீங்க கல்யாணம் பண்ணிக்கலன்னாலும், சட்டப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு வாழ ஆரம்பிங்க. அதுவே போதும்.” என்றார் ரமணி.

“நல்ல யோசனை மா. அப்பறம், அவர் இங்க வந்து இருக்கறதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே?” என்ற சந்திராவைப் பார்த்து சிரித்தவர்,

“எனக்கு ஒரு பையன்னு நினைச்சேன். இப்போ இன்னொரு பையனையும் நீ கூட்டிட்டு வரப்போற. நான் எப்படி வேணாம்னு சொல்லுவேன்.” என்றார் ரமணி.

அதைக்கேட்ட சந்திரா அவரை சிறு பிள்ளை போல் கட்டிக்கொண்டார்.

அவருடைய இந்த முடிவைக் கேட்டு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் வெண்ணிலாவைத் தவிர்த்து. அவளுக்கு இதில் விருப்பமும் இல்லை, கோபமும் இல்லை. ஆனால், அன்னை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை தான்.

இதைப்பற்றி அவள் சந்திராவிடம் கேட்டபோது, “நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காதல்ன்னு நினைச்ச விஷயம் வெறும் மாயவலை. ஆனா, இப்போ எனக்கு கிடைக்கப்போறதுதான் உண்மையான காதல். அதை இழக்க நான் விரும்பல. என்னோட தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்க எனக்கு ஒரு துணை கடைசிவரைக்கும் தேவை. என்ன? அதை நான் ரொம்ப லேட்டா புரிஞ்சுக்கிட்டேன். அவ்ளோதான். ஏன்னா, பொண்ணுங்க லைஃப் இப்படித்தான். ஒரு வாழ்க்கைத் துணை இல்லைன்னா அது முழுமையடையாமயே போய்டும். அதை நீயும் சீக்கிரமே புரிஞ்சுக்கணும்.” என்று தன் மகளுக்கு சொல்லாமல் அனைத்தையும் சொல்லிவிட்டார் சந்திரா.

அதன்பிறகு, ரமணி சொன்னதைப் போல் அவர்கள் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். வேணுகோபாலும் அவர்கள் இல்லத்துக்கே வந்துவிட்டார். இதை அவரது மகன்களும் ஏற்றுக்கொண்டனர் என்பது இன்னொரு சுவாரஸ்யம். ஆனால், இதெல்லாம் வெண்ணிலாவுக்கு ஏனோ புதிராகத் தெரிந்தது.

தொடரும்……………….


































 

Aathirai Mohan

Moderator
அத்தியாயம் 16

அடுத்து வந்த நாட்களில் அனைத்தும் மாறியிருந்தன. வெண்ணிலாவுக்கு அனைத்துமே புதிதாகத்தான் தெரிந்தது. முன்பெல்லாம் எந்த ஒரு விஷயத்துக்கும் சண்டை போட்டுக்கொள்ளும் பிரகாஷூம், ஜோதியும் இப்போது அந்யோன்யமான தம்பதிகளாக வலம்வருவதை நேரடியாகக் கண்டாள் வெண்ணிலா.

அதே போல், தனது அன்னையும், புதிதாக வந்தவரும் காதல் கிளிகள் போல் சுற்றுவதையும் கண்டாள். வான்மதியும், நந்தனும் இளமைத் துள்ளலோடு சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள் போல் தெரிந்தார்கள் அவள் கண்களுக்கு.

அவளுக்குத் தெரிந்தவரை அவளது குடும்பம் ஒரு சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட சிறு பூச்சிகள் போல் பிரச்சினைகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள். ஆனால், இன்றோ அதற்க்கு நேர்மாறாக அனைத்தும் சட்டென மாறியதன் காரணம் தெரியாமல் தவித்தாள்.

அவளிடம் யாரும் பேசுவதில்லை என்பதால், என்றும் இல்லாத தனிமையை உணர ஆரம்பித்தாள். இதற்க்கு முன்பு மட்டும் அப்படி இருந்ததா? என்றால், அதற்க்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவளுக்கு இப்போதுதான் அனைத்தும் தெரிய ஆரம்பித்தது.

நிலைகொள்ளாமல் தவித்த மனதை சீர்படுத்த எண்ணினாள். அப்போது அவளது மனம் நாடிய ஒரே நபர் அவளுடைய தோழி ரஞ்சனி. அப்போதே, அவளைச் சந்திக்கச் சென்றாள். அவளும் அன்று வீட்டில் தான் இருந்ததால் வெண்ணிலாவுக்கும் வசதியாகப் போயிற்று.

“வா… நிலா… என்ன இவ்ளோ தூரம்?” என்றாள்.

“எனக்கு மனசே சரியில்ல ரஞ்சு. ரொம்ப பாரமா இருக்கு. உன்கிட்ட பேசினா தான் கொஞ்சம் குறையும்ன்னு தோணுச்சு. அதனால தான் வந்தேன்.” என்றாள்.

“சரி.. வா.. உட்காரு… சொல்லு என்ன பிரச்சினை?” என்று பொறுமையாய் அவளிடம் கேட்க, தனது குடும்பத்தினரின் திடீர் மாற்றத்தையும், அதைத் தொடர்ந்து அவளது தனிமையைப் பற்றியும் சொன்னாள்.

“ஹூம்ம். சிம்பிள். எல்லாரும் அவங்கவங்க லைஃப்ப பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுல உனக்கு என்ன வேலை? அவங்க சந்தோஷமா இருக்கறதுல உனக்கு என்ன பிரச்சினை?” என்றாள் ரஞ்சனி.

“இவ்ளோ நாள் அவங்க யாரும் அப்படி இல்லையே ரஞ்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு. அதுதான் எனக்குப் புரியல. இதுக்கு முன்னாடியும் யாரும் அப்படி ஒன்னும் வீட்ல பேசிக்கிட்டது இல்ல. ஆனா, அப்போ நான் இந்தத் தனிமைய உணரல. ஆனா, இப்போ மட்டும் ஏன் நான் அப்படி ஃபீல் பண்றேன்னு தெரியல.” என்றாள் குழப்பத்துடன்.

“ஏன்னா, அப்போ எல்லாருமே தனியாதான இருந்தீங்க. அதனால அது உன்னை பெரிய அளவுல பாதிக்கல. ஆனா, இப்போ எல்லாரும் ஜோடியா சந்தோஷமா இருக்கறதப் பார்க்கும் போது உனக்கு மட்டும் அந்த லோன்லி ஃபீல் வருது. அது உனக்குப் புரியலையா?” என்றாள் ரஞ்சனி.

“அப்போ நான் தனியா ஆய்ட்டேன்னு சொல்றியா?” என்றாள்.

“கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா, அதுக்கு ஒரு சொல்யூசன் இருக்கு. ஆனா, நீதான் அதை ஏத்துக்கவே தயங்கறியே.” என்று அவள் விழிகள் பார்த்து சொன்னவளின் பார்வையே அவள் எதைச் சொல்கிறாள் என்பதைச் சொன்னது வெண்ணிலாவுக்கு.

“இப்பவும் சொல்றேன். நீ கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கணும் நிலா. உன்னால கடைசி வரைக்கும் இப்படியே இருந்திட முடியாது. உன் ஃபேமிலிக்கு இப்போ இது புரிஞ்சுடுச்சு. ஆனா, நீதான் இந்த விஷயத்துல பிடிவாதமா இருக்க. தேவையில்லாத விஷயத்தை உன் மனசுல பதியவச்சிட்டு அதிலிருந்து வெளிய வரவே தயங்கற.” என்றாள்.

அதற்க்கு நிலாவால் எந்த பதிலையும் தர முடியவில்லை. அமைதியாய் நின்றாள்.

“நிலன நீ மேரேஜ் பண்ணிக்கிட்டா கண்டிப்பா எல்லாமே சரியா நடக்கும் நிலா. உனக்கும் அது தேவை. மேரேஜ் லைஃப் எவ்ளோ இம்ப்பார்ட்டண்ட் தெரியுமா?” என்றாள்.

அதற்க்கு நிலாவிடம் வெறும் பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.

“சரி, இப்போ என்னையே எடுத்துக்கோ. நானும், சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கத்தான் போறேன். ஏன்னா, எனக்கு லைஃப் அதுல ஃபுல்ஃபில் ஆகும். அது இல்லாம எந்த ஒரு விஷயமுமே நடக்காது. நம்ம ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ற ஐ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். அரவிந்த் அவராவே முன்ன வந்து என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணார். அவர் சொன்னவிதம் எனக்குப் பிடிச்சிருந்தது. அதுவும் இல்லாம அவர் எப்படின்னு இந்த ஹாஸ்பிடலுக்கே தெரியும். ரொம்ப நல்லவர், ஹெல்ப்பிங்க் டெண்டன்சி. மேரேஜ்க்கு அப்பறம் எங்க அம்மாவ தனியா விட முடியாதுன்னு சொன்னேன். நம்ம கூடவே இருக்கட்டும்ன்னு சொல்லிட்டார். இத விட வேற என்ன வேணும் சொல்லு? அம்மாகிட்ட பேசிட்டு உடனே ஓகே சொல்லிட்டேன். இந்த மாதிரி நம்ம மனச புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கறவங்க கிடைக்கிறது ஒரு வரம் நிலா. அதுவும் நிலன் மாதிரி ஒரு பையன் யாருக்குமே கிடைக்க மாட்டாங்க. நீ அவர எவ்ளோ வேணும்னாலும் ஹர்ட் பண்ணியிருக்கலாம். ஆனா, அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாம, உன்னைப் பத்தி யோசிச்சு உங்க ஃபேமிலிகிட்ட இதைப்பத்தி பேசினதுக்கப்பறம் தான் இந்த மாற்றமே நடந்திருக்கு. நிலன் மட்டும் இல்லைன்னா இது கண்டிப்பா சாத்தியமே இல்ல. அதுமட்டுமில்ல, அன்னைக்கு பாட்டிக்கு இப்படி ஆனதும், நிலன் உடனே தூக்கிட்டுப் போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணலன்னா உன்னோட் உயிருக்கு உயிரான பாட்டிய நீ பார்த்திருக்கவே முடியாது. வான்மதி அக்காகிட்ட பேசி, நந்தன மேரேஜ் பண்ணிக்க சம்மதிக்க வச்சதும் நிலன் தான். இதெல்லாம் சொன்னா நீ ஏதோ அவர் சிம்ப்பதி கிரியேட் பண்றதா நினைப்பன்னு தான், அவர் உன்கிட்ட எதுவும் சொல்லாம இயல்பாய் பழகினார். ஆனா, நீதான் அவர புரிஞ்சுக்காம கண்டதெல்லாம் பேசி அவரக் காயப்படுத்திருக்க. அவர் அதுல இருந்து மீள முடியாம, உன்னையும் மறக்க முடியாம கடைசில யு.எஸ் போக ரெடியாகிட்டார்.” என்று அனைத்து உண்மைகளையும் சொல்லிமுடித்தாள் ரஞ்சனி.

அனைத்தையும் கேட்ட வெண்ணிலா அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். நிலன் இத்தனை விஷயங்களை தனக்கும், தன்னுடைய குடும்பத்திற்க்கும் செய்திருக்கிறானா? என்று அதை உணர முடியாமல் நின்றாள்.

நிலைகுலைந்து நின்றவளை உலுக்கிய ரஞ்சனி, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல நிலா. நீ உன் மனசையும், முடிவையும் மாத்திக்கோ. அதனால எந்தத் தப்பும் இல்ல. உன் வாழ்க்கை கண்டிப்பா நிலனால எந்த பாதிப்பும் ஆகாது. அதுக்கு அவரே கேரண்டி. இனி, அவர சமாதானம் பண்ணி அவரை நீ மேரேஜ் பண்ணிக்கறது உன்னோட டேலண்ட்.” என்றாள்.

அவளால் அதற்க்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. வண்டியை எடுத்தவள், நேராக நிலன் அன்று அழைத்துச் சென்ற ஆசிரமத்துக்கு விரைந்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போல், அங்கே பத்மநாபனும், கமலமும் அங்கேதான் இருந்தார்கள்.

நிலனைப் பற்றி கேட்டபோது, அவன் அன்று இரவே விமானத்தில் அமெரிக்கா செல்வதாகச் சொல்ல, அப்போதே தாமதிக்காமல் விமான நிலையத்திற்க்குப் பறந்தாள்.

விமானத்திற்க்காக செல்ல இன்னும் நேரம் இருந்த காரணத்தால், உள்ளே செல்லாமல் எதையோ பறிகொடுத்தவன் போல் நின்றிருந்தான் நிலன். அவனால், வெண்ணிலாவை ஏனோ மறக்க முடியவில்லை. அவள் எந்த காரணத்தால் அவனது மனதை சிறைபிடித்தாள் என்று தான் இப்போதுவரை அவனுக்குப் புரியவில்லை.

அவன் அவளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்த வேளை, அவளே அங்கே நிற்பதைப் போன்றதொரு தோற்றத்தைக் கண்டான். ஆனால், அது கனவோ என்று தனது கண்களை அழுந்தத் தேய்த்துக்கொண்டவன் கண்கள் பொய்யில்லை என்று உரைத்தன.

“நிலன்……” என்று அவள் குரல் தழுதழுக்க வந்து நின்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் நிலன். ஏனென்றால், இதற்க்கு முன்பு பார்த்த வெண்ணிலாவின் விழிகளில் வெறும் அலட்சியமும், வெறுப்பும் மட்டுமே தெரியும்.

ஆனால், இன்றோ அதற்க்கு நேர்மாறாய் இருந்தது அவனுக்கு எதையோ சொல்லியது.

“என்னை விட்டுப்போக நினைச்சிட்டீங்களா நிலன்? நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா, இப்போதான் அதைப் புரிஞ்சுக்கிட்டேன். உங்ககிட்ட தேவையில்லாத விஷயத்தையெல்லாம் பேசி உங்க மனசக் காயப்படுத்தியிருக்கேன். ஆனா, இப்போ நினைச்சா அதெல்லாம் எவ்ளொ பெரிய தப்புன்னு தோணுது. என்னுடைய ஃபேமிலி மாறுறதுக்குக் காரணம் நீங்கதான். உங்களால தான் அவங்க இப்போ சந்தோஷமா இருக்காங்க. இத்தனை நாளா வெறும் பிரச்சினைகளையும், வருத்தங்களையும் மட்டுமே தான் பார்த்ததால என்னோட மனசும், அப்படி ஒரு நிலைக்குப் போய்டுச்சு. ஆனா, இப்போ நான் பார்க்கற சந்தோஷங்களை முதல்லயே பார்த்திருந்தா, கண்டிப்பா நான் அப்படி இருந்திருக்க மாட்டேன். எனக்குள்ள நம்பிக்கை இல்லாம போயிருக்காது. இது எல்லாமே உங்களால தான். உங்களை நான் மிச் பண்ண விரும்பல நிலன். நான் பண்ண தப்ப மன்னிச்சு என்னை ஏத்துப்பீங்களா?” என்றாள் அழுதுகொண்டே.

அத்தனை நேரமும், அவளது பேச்சுக்களை செவிமடுத்தவன், “எனக்கு உன்னை ஆரம்பத்துல இருந்தே பிடிக்கும் வெண்ணிலா. ஆனா, உன்னோட நம்பிக்கைய எப்படி மாத்தறதுன்னு எனக்குத் தெரியல. கடைசில நீ பேசிய வார்த்தைகள் தான் உன்னை விட்டு விலக வச்சிடுச்சு. ஆனாலும், இந்த நிமிஷம் கூட உன்னைத்தான் நினைச்சிட்டிருந்தேன். எதையோ மிஸ் பண்றோம்னு தோணுச்சு. உன் மேல நான் வச்சது காதல்ன்னு நீ வந்து நிக்கும்போதே நான் தெரிஞ்சுக்கிட்டேன். உன்னோட தப்பால என்னோட காதல் பொய்யாகாது. நான் உன்னை விட்டுப் போகல.” என்று சொன்னவன், இரு கைகளை நீட்டி அவளை அழைக்க.

அது தனக்காகக் காத்திருந்த இத்தனை நாள் அன்பு என்பதை உணர்ந்துகொண்டவள், அதில் சென்று தன்னைப் புகுத்துக்கொண்டாள். இருவரின் காதலும் ஒன்று சேர அவர்களது அணைப்பு அதை உறுதிசெய்துகொண்டிருந்தது.

இனி அவர்கள் வாழ்வில் ஒன்று சேர எந்த ஒரு தடையும் இருக்கப் போவதில்லை…



(சுபம்)





வணக்கம் டியர்ஸ்......... எப்படியோ ஒரு வழியா கதையை முடித்து விட்டேன். படிச்சு உங்க கருத்துக்களை சொல்லுங்க..........




 
Status
Not open for further replies.
Top