எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிழலின் நிஜம் - கதை திரி

Status
Not open for further replies.

NNK38

Moderator
நிழலின் நிஜம்

NNK38 pic.jpgவணக்கம்

உங்கள் அனைவரையும் இத்தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நிழலின் நிஜம் இந்த கதையில் நாயகன் நாயகி என்று எவரும் இல்லை. வீரநாராயணன், செவ்வந்தி மற்றும் கார்குழலி மூவரும் இக்கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜனனம் முதல் மரணம் வரை யாரும் முழுவதுமாக நல்லவராக இருப்பதும் இல்லை. முழுவதுமாக தீயவராக இருப்பதும் இல்லை.

ஆசை, பாசம், துரோகம், ஏமாற்றம் போன்ற உணர்வுகளின் சுழலில் சிக்கி தங்கள் சுயத்தை இழக்கிறார்கள். அப்படியான கதாபாத்திரங்கள் இங்கே உலவப் போகின்றது.

இந்த கதையைப் படிக்கத் தொடங்கும் முன் சிறு குறிப்பு.

சில கதைகளைப் படிக்கும் போது அதன் தாக்கம் நம் மனதில் காட்சிகளாய் தோன்றும். அப்படி இக்கதையில் தோன்றினால் அதைக் கருப்பு வெள்ளை காட்சிகளாகப் பார்க்க முயலவும். காரணம் இக்கதை நடக்கும் வருடம் 1954.

உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும்.

NNK 38

 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 1
NNK38 pic.jpg

சினிமா கிசுகிசு


1905ல் திருச்சியைச் சேர்ந்த சுவாமிகண்ணு வின்சென்ட் என்பவர் திரைப்படம் காண்பிக்கப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தார். இது தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு. இங்கு லூமி சகோதரர்கள் தயாரித்த ரயிலின் வருகை – ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பதுதான் மொத்த படமே.

தொடக்கத்தில் மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்கிற அச்சத்தில் திரையரங்கைவிட்டு ஓடினார்களாம்.
**********

1954 கும்பகோணம்

கைக்கடிகாரத்தை இரண்டொருமுறை பார்த்தார் வைகுண்டம். பெரிய முள்ளும் சின்ன முள்ளும் மணி மாலை நான்கு என்றது. மேலே கட்டியிருந்த பெரிய வெண்கல மணியை டன் டன் டன் எனப் பலமாக அடித்தார். பள்ளி நேரம் முடிவடைந்ததற்கான சங்கேத ஒலி.


பள்ளியில் இந்த ஒலியைக் கேட்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து வீட்டிற்கு விரைய முற்பட்டனர். மாணவர்கள் அதிகமாகவும். மாணவிகள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தனர்.

வெளியே வந்த சிறுவர்களில் சிலர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். சில மாணவர்கள் ஆங்காங்கே தேங்கி நின்றபடி அன்றைய நாளின் பாடத்தையும் தங்கள் அனுபவத்தையும் பேசிக் கொண்டிருந்தனர். கையில் துணிப்பை அதில் ஒன்றிரண்டு புத்தகங்கள் அதனோடு சிலர் கையில் மதிய உணவு உண்ட தூக்குபோசியும் (lunch box) வைத்திருந்தனர். மரப்பிடியுடன் கூடிய வெண்கல தூக்குபோசி.

மாணவர் கூட்டத்தில் பதினான்கு வயது வீரநாராயணன் இருந்தான். மூன்றாவது பாரம் ( 3rd form என்பது இன்றைய படிப்பளவில் ஒன்பதாம் வகுப்பு) படித்துக் கொண்டிருப்பவன். தந்தையின் உந்துதலின் பேரில் தினமும் பள்ளிக்குச் செல்கிறான். படிப்பில் சிறிதும் நாட்டமில்லை.

எப்பொழுதும் துருதுருவென இருப்பவன். குறும்பும் நகைச்சுவை உணர்வும் ஒருங்கே கலந்த சிறுவன். அவனுக்குச் சற்றே அகலமான பெரிய கண்கள்.

அவன் நண்பன் பிச்சுமணி என்னும் பிச்சு “வீட்டுக்கு எப்படிடா போகப் போற?” எனக் கேட்க

“ என் மோட்டார் வண்டியில போவேன் . . நீ எப்படி?” என வீரா குறும்பு சிரிப்புடன் நண்பனைக் கேட்டான்.

“நான் டயர் வண்டியில” எனக் கண்சிமிட்டியபடி பிச்சு பள்ளி அருகிலிருந்து தன் வண்டியை எடுத்து வந்தான்.

சரி கிளம்பு என இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்து தங்கள் வண்டியை ஓட்டினர். இருவரின் வீடும் அருகருகே உள்ளது.

“டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வாயில் சப்தமிட்டபடி தன் இரு கைகளையும் மோட்டார்(கார்) வண்டியை பிடிக்கும்ப் பாவனையில் வீரா ஓட அதாவது அவன் வரையில் ஓட்ட ஆரம்பித்தான்.

பிச்சு பெரிய சைக்கிள் டயரை தன் கையில் உள்ள குச்சியால் தள்ளிக் கொண்டே மிக லாவகமாக ஓட்டினான்.

இருவரும் சேர்ந்தபடி தத்தம் வீட்டை அடைந்தனர்.

வீரா தன் வீட்டுத் திண்ணையில் ஏறி தன் வண்டியை நிறுத்துவதுப் போல பாவனைச் செய்தான். அவனுக்கு அது தான் வண்டி நிறுத்தும் இடம் (பார்க்கிங் ஏரியா).

“அம்மா” என அழைத்தபடி வீட்டுக்குள் வந்தான். அந்த காலத்துப் பெரிய ஓட்டு வீடு முன்னே இரண்டு பக்கமும் திண்ணை நடுவே நான்கு படிகள். அடுத்து உட்பகுதி மற்றும் வாயிலையும் இணைக்கும் ரேலி என்னும் இடம். ரேலியின் இருபுறமும் திண்டு வைத்த கல் திண்ணை. அடுத்து வீட்டின் முதற்கட்டு ஆரம்பம்.

பெரிய முற்றம் அதன் நடுவே துளசிச் செடி. மேலே இரும்பு கம்பிகளால் மூடப்பட்டு இருந்தது. நிலத்தில் அமைந்த முற்றத்தில் காற்று, சூரிய கதிர் மற்றும் மழை நீர் தடையின்றி உள்ளே பிரவேசிக்கும். மழை நீர் தேங்காமல் வெளியே செல்ல வாட்டமாக அமைந்திருந்தது. அங்கே நின்று ஆகாயத்தின் அழகையும் ரசிக்கலாம். நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என பஞ்ச பூத சக்திகளும் நேரடியாக வீட்டினுள் நுழையும் இடமாக முற்றம் அமைந்திருந்தது. அதுவே வீட்டின் பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படும் இடம்.

முற்றத்தை சுற்றி நடைபாதையில் இரண்டு பக்கமும் முறையே மூன்று அறைகள் இருந்தன.

அடுத்த இரண்டாம் கட்டு (வீட்டின் அடுத்த பகுதி) தொடங்கியது. இடது பக்கத்தில் சமையலறையும் அதையொட்டி உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கள் சேமித்து வைக்கும் அறையும் இருந்தது. அதன் முன்னே அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்ண விசாலமான அறை.


அடுத்தாக கொல்ளைபுரம் முதலில் அம்மிகல் ஆட்டுக்கல் அடுத்து சிறிது தொலைவில் குளியல் அறை அதன் அருகே பெரிய நீர்த் தொட்டி மற்றும் கிணறு இருந்தன.

அதற்கும் பின்னே மாட்டுத் தொழுவத்தில் இரண்டு பசு மாடுகளும் ஒரு காளையும் இருந்தன. ஒரு கன்றுக்குட்டி தன் தாய்ப் பசுவின் காம்பிலிருந்து அமுதத்தைச் சுவைத்த வண்ணமிருந்தது. வாழை தென்னை மரங்களும். மல்லி செம்பருத்தி என பூச்செடி கொடிகளும் அவ்வீட்டை இன்னும் ரம்மியமாக்கியது.

உள்ளே வந்த வீரா கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டான். பிறகு அவன் தாய் சாதத்தில் ஆவக்காய் ஊறுகாய் விழுதினை இரண்டு சொட்டு நல்லெண்யுடன் பிசைந்து கொடுத்தார். வீரா பலகையைப் போட்டு அமர்ந்து சாதத்தை உருட்டி உருட்டிச் சாப்பிட்டான்.

வீரா தந்தை பெரியகண்ணன் விவசாயி. நாலுகாணி நிலம் தோட்டம் என அவரிடம் தேவைக்கு ஏற்ப சொத்து இருந்தது. அவர் மனைவி மரகதவள்ளி இந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள்.

மரகதவள்ளி நெற்றியிலும் பெரிய குங்குமப் பொட்டு படியப் படிய வாரிய எண்ணை வழியும் தலை. இடுப்பைத் தாண்டி ஊஞ்சலாடும் பின்னல் அதன் இறுதியில் பச்சை நிற ரிப்பனில் பட்டாம்பூச்சி நாட். கணவன் முன் குரல் உயர்த்திப் பேசாத ரகம். கணவன் சொல்லை மந்திரமாக ஏற்பவர்.

வீரா அவர்களுக்கு ஐந்தாவது புதல்வன். வீராவிற்க்கு இரண்டு அண்ணன் இரண்டு அக்கா மற்றும் ஒரு தம்பி ஒரு தங்கை.

வீராவின் இரண்டு அக்காவிற்கும் திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளன. வீராவின் முதல் அண்ணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது அண்ணன் திருமணம் நிச்சயமாகிவிட்டது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த வீராவிடம் அவன் தம்பி செல்வன் “விளையாடா வருகிறாயா?” எனக் குரலைத் தாழ்த்தி கிசுகிசுப்பாக கேட்டான்.

வீரா அகம் மலர சோற்றை அள்ளி வாயில் போட்டுக் கொண்டவன். தட்டை கிணற்றடியில் வைத்து கைகழுவியவன் அவசரமாக தன் சட்டையில் ஈரத்தை துடைத்தபடி ஓடினான்.

அவன் தாய் மாட்டுத் தொழுவத்தில் வேலையாக இருந்தார். பூனை போல நடந்து சமையற்கட்டிலிருந்து கரண்டி ஒன்றையும் அகப்பை ஒன்றையும் எடுத்தான். அதோடு இரண்டு தட்டுகளையும் எடுத்துக் கொண்டான்.

அப்படியே கொடியில் உலர்த்தியிருந்த தன் அண்ணனின் பெரிய துவாலையை (towel) உருவி எடுத்துக் கொண்டான். துவாலையின் ஒரு பக்கத்தை தன் பின்கழுத்தில் கட்டிக் கொண்டான். மிச்சத்தை நீளமாக விட்டுவிட்டான். மனதில் மகாராஜாவைப் போலத் தன்னை நினைத்துக் கொண்டான்.

அகப்பை மற்றும் தட்டை தம்பியிடம் கொடுத்தான். கரண்டி அவனது வாள் மற்றும் தட்டு கேடயம் ஆனது.

“என்னை வீழ்த்த உன்னால் இயலாது . . என் தாய் நாட்டை நான் காப்பாற்றியே தீருவேன்” என தன் கையில் லாவகமாகப் பிடித்திருந்த கரண்டியை வாளாக பாவித்துச் சுழற்றியபடி வீரா கம்பீரமாய் நிற்க . .

“உன் நாட்டை கைப்பற்றி நான் மகுடம் சூடுவேன்” என அவன் தம்பி எதிரி நாட்டவன்ஆனான். இருவரும் சளைக்காமல் சண்டையிட்டனர்.

இருவரின் வாட்களும் மோதி அந்த இடத்தில் ணங் ணங் என்ற சப்தத்தை ஏற்படுத்தியது.

வீராவின் வலுவான வாள் வீச்சால் எதிரி நாட்டவன் வாள் அதாவது அகப்பை இரண்டாக உடைந்து வெவ்வேறு இடங்களில் விழுந்தது.

வலுவான கை எதிரி நாட்டவன் முதுகில் தொம்மென்று விழுந்து மிருதங்கம் வாசித்தபடி “கரண்டி தட்லெல்லா எடுக்காதன கேட்கமாட்டீங்களா” என அவன் அம்மா திட்டியபடியே அடித்தார்.

“ஐயோ அம்மா” எனத் தம்பி அலறினான்.

வீரா கரண்டி தட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஓடினான் ஓடினான் தெருவின் எல்லைக்கே ஓடினான். அம்மாவின் கையில் அடி வாங்காமல் தப்பிக்க வேகமாக ஓடியதால் மூச்சுமுட்டியது.

அங்கிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி தன்னை சமன்படுத்திக் கொண்டான்.

“என்னடா சில்மிஷமம் செய்த?” என அவன் அப்பாவின் கர்ஜனை குரல் திடுக்கிடச் செய்தது.
திரை விலகும் . . .
 
Last edited:

NNK38

Moderator
நிழலின் நிஜம் 2சினிமா கிசுகிசு
தமிழில் முதல் “ஏ” சான்றிதழ் வாங்கிய திரைப்படம் 1951ல் வெளியான மர்மயோகி என்னும் படம். அப்படத்தில் கரிகாலன் என்னும் கதாபாத்திரத்திற்கு அறிவுரை கூறும் பேயாக அவரது தந்தை வருவார். இத்தனைக்கும் அதில் பேய் அல்ல மனிதர்தான் நாடகமாடுகிறார். குழந்தைகள் அதைப் பார்த்து அச்சப்பட கூடாது என ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

***********
NNK38 pic.jpg1954 திருச்சிராப்பள்ளி அருகே பெருமாஞ்சலம் கிராமம்ஜல் ஜல்லென்ற சலங்கை சத்தம் அமைதியைக் கிழித்தபடி கேட்டது. புழுதியினை எழுப்பியபடி கம்பீரமான மாடுகள் பூட்டிய வண்டிகள் வந்துக் கொண்டிருந்தன. கடகடவென சக்கரங்கள் மேடு பள்ளங்களில் உருண்டு . . மேலே இருப்பவர் கீழே வருவதும் . . கீழ் உள்ளோர் மேல் எழும்புவதும் தான் வாழ்க்கை என்னும் தத்துவத்தை சொல்லாமல் சொன்னபடி உருண்டன. வண்டியை ஓட்டுபவர்கள் கையில் மூக்கணாங்கயிறு. அதை அவர்கள் லாவகமாகக் கையாண்டு வேகத்தை கட்டுப்படுத்தினர்.

இரட்டை மாட்டுக் கூடு வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து வண்டிகள் வந்துக் கொண்டிருந்தன. மாடுகளும் வண்டியும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் சுபகாரியத்திற்குச் செல்கிறார்கள் என்பதை கட்டியம் காட்டியது.

முதல் வண்டியில் மயில்கண் வேட்டி சட்டை அணிந்திருந்த பதினாறு வயதே நிரம்பிய செழியன் அமர்ந்திருந்தான். அவனுடன் அவன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் இருந்தனர். அடுத்த அடுத்த வண்டிகளில் உறவினர்கள் இருந்தார்கள். அனைவரும் உற்சாகமாய் சிரித்த முகத்துடன் காணப்பட்டனர்.

வண்டி பெருமாஞ்சலம் கிராமத்தின் வீதியில் வந்து நின்றது. அந்த கிராமமே அவர்களை வரவேற்கக் காத்திருந்தது. மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஆர்வமாகச் செழியனை பார்த்தனர்.

தெருக்கள் முழுவதும் சாணம் கலந்த தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து அதில் அழகழகான கண்கவர் கோலங்கள் போடப்பட்டிருந்தன.

செழியன் வண்டியிலிருந்து இறங்கியதும் இரண்டு பெண்கள் அவனுக்கு மங்கள ஆர்த்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். பின்னர் அவர்கள் தங்க வேண்டிய ஜாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த லட்சுமியின் மகள் கார்குழலி தான் மணமகள். செழியனை கரம் பற்றப் போகிறாள்.

லட்சுமி கணவன் ஜமீன் பரம்பரை. நிறையச் சொத்துகள் மற்றும் நிலம் இருந்தது. ஆனால் அவன் பெரும் பணத்தை சூதாட்டத்தில் இழந்தான். அது மட்டுமின்றி முறைதவறிய பெண்கள் சகவாசத்தில் நோய் தாக்கி இறந்துவிட்டான்.

லட்சுமி தன் இளம் வயதில் கணவனை இழந்துவிட்டார். அப்போது கார்குழலி ஒரு வயதுக் குழந்தை. சொந்தங்கள் விலகிவிட்டன. மீதமிருந்த நகை மற்றும் ஒரே ஒரு சிறிய வீடு இவற்றுடன் தனியே விடப்பட்டார் லட்சுமி. நன்றாக வாழ்ந்து கெட்ட குடும்பம் என்னும் பெயர் மட்டுமே கூட இருந்தது. லட்சுமியின் மூத்த சகோதரன் அவர்களுக்கு உதவினார்.

தனக்கு சீதனமாக வந்த நகை மற்றும் சில பட்டுப்புடவைகளை பூதம் காப்பது போல காத்தார். அவற்றை அப்படியே தன் மகள் திருமணத்திற்கு வைத்துவிட்டார்.

மகளுக்கு கூட நகைகளைப் பற்றி கூறவில்லை. திருமணத்தின் போதுதான் அவற்றை வெளியே எடுத்தார். அனைவரும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்த “என் மகள் வாழ்க்கை எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தன் வீட்டை அடமானம் வைத்து திருமணத்தை நடத்தினார்.

அவர் சகோதரன் குடும்பம் . . லட்சுமியின் கணவர் வீட்டு சில ஆட்கள் போன்றவாகள் திருமணத்திற்கு மிகவும் உதவி புரிந்தனர்.

கார்குழலி சௌந்தரியத்தின் சொரூபம். அவளுக்கு அழகு அபரிதமாக இருந்தது. தலை முதல் கால்வரை அழகு.

காதில் ஜிமிக்கி, மூக்கில் எடுப்பான எட்டுகல் பேசரி மற்றும் புல்லாக்கு, தலையில் ராக்கோடி, மருதாணி வைத்த தளிர் விரலில் நெளி மோதிரம், குஞ்சலம் வைத்த ஜடை, சேலையில் புரூச் மற்றும் கால்களில் கொலுசு என தன் தாயின் நகை அணிந்த பன்னிரெண்டு வயது சிறுமி இளம் பெண்ணை யொத்த யெளவனத்தில் காட்சியளித்தாள்.

கார்குழலிக்கு தான் ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவள் என்னும் எண்ணம் எப்போதும் மனதை உருத்திக் கொண்டே இருக்கும். தான் பெரிய பணக்கார குடும்பத்தில் வாக்கபட வேண்டும் என்று ஆசைபட்டாள். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அந்த கிராமத்தின் செல்வந்தனின் மகன் ஒருமுறை குழலியை அவன் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான்.

பிறகு குழலியின் தோழியிடம் அவளை ஆசைநாயகியாக வைத்துக் கொள்ள விரும்புவதாகச் சொல்லி அனுப்பினான். ஆனால் குழலிக்கு அந்த பிராயத்தில் ஆசைநாயகி என்னும் சொல்லுக்கான பொருள் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அது தவறான சொல் என்று மட்டும் புரிந்தது.

அவன் சொன்னதை தோழி மூலம் அறிந்தவளுக்கு அழுகையோ கோபமோ வரவில்லை. தன்னிடம் உள்ள அழகின் மேல் கர்வம் ஏற்பட்டது. தன் அழகு எத்தனை வலிமையானது. அதையே தன் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தாள்.

தான் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அவளுள் வேரூன்றியது. ஆனால் அதற்கான வழி தெரியவில்லை. தன்னிடம் உள்ள அழகை பேணி பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். தன்னிடம் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டே தன்னை மிகவும் நேர்த்தியாக சிங்காரித்துக் கொண்டாள்.

செழியன் சாதாரண குமாஸ்தா வேலை. வீட்டிற்கு மூத்த பிள்ளை தம்பி தங்கை என்று பெரிய குடும்பம். கண்டிப்பான மாமியார்.

லட்சுமிக்கு தன் மகளின் ஆசை கனவு எல்லாம் தெரியும். மகள் கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறாள் எனப் புரிந்தது. ஆனால் நிதர்சனம் என்று ஒன்று இருப்பதை யார் மறுக்க இயலும். திருமணம் முடிந்தால் மகள் வாழ்க்கையை புரிந்துக் கொள்வாள் என நம்பினார்.

குழலி பூப்பெய்தி இரண்டு மாதங்களுக்குள் திருமணம் நிச்சயம் செய்துவிட்டார் லட்சுமி. பணம் படைத்தவர்கள் ஐந்து நாள் விமர்சையாக திருமணம் நடத்துவது வழக்கம். ஆனால் குழலிக்கு அப்படி நடத்த முடியவில்லையே என்று லட்சுமிக்கு வருத்தமாக இருந்தது.

முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மறுநாள் செழியன் மங்கள நாணை கார்குழலி கழுத்தில் பூட்டினான். திருமணம் எளிமையாக நடந்தது.

பெரியவர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம். பெண் பார்க்கும் படலமெல்லாம் இல்லை. மணமக்கள் ஒருவரை ஒருவர் திருமணத்தில்தான் பார்த்துக் கொள்ள முடியும். அதிலும் மணப்பெண் தலைகுனிந்தே இருக்க வேண்டும். இல்லையேல் ஊர் மக்கள் அவளை சாடுவார்கள். ஆதலால் கார்குழலி செழியனை ஓரக் கண்ணால் பார்த்தாள். அவளுக்கு அவனை பிடிக்கவில்லை.

மன்மதனைப் போல ஒருவனை எதிர்பார்த்தாள் ஆனால் செழியன் அழகில்லாமல் இருந்ததை கண்டதும் அவளுள் பெருத்த ஏமாற்றம் அது கோபமாக மடைமாறியது.

செழியன் கார்குழலி அழகில் சொக்கிப் போனான். பளிங்கு சிற்பமாய் ஆடை அலங்காரத்துடன ஜொலித்தாள். தான் மிகப் பெரிய பாக்யசாலி என நினைத்துக் கொண்டான்.

சாரட் வண்டியில் பவனி வரவேண்டிய தான் மாட்டு வண்டியில் செல்ல வேண்டியதை நினைத்து குழலி வெகுண்டாள்.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தன் மகளிடம் லட்சுமி “குழலி இனி கணவன் தான் உன் உலகம். அவர் பேச்சை மறுத்து பேசாதே . . உன் மாமியார் மனம் கோணாமல் நடக்க வேண்டும். நாம் ஆசைபட்டதை எல்லாம் வாழ்க்கையில் அடைய முடியாது . . வாழ்க்கை கொடுப்பதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். கனவு காண மட்டும்தான் நம்மால் முடியும். ஆசைப்படக் கூடாது.”

“முடியாது நான் ஆசைப்பட்டதை அடைந்தே தீருவேன்” என மனதில் சொல்லிக் கொண்டாள் குழலி.

ஊர் எல்லைவரை அந்த கிராமமே சென்று வழியனுப்பியது. லட்சுமிக்கு தன் வாழ்க்கை லட்சியம் ஈடேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி. தன் தாயை பிரியும் தருணத்தில்தான் குழலி தனக்காக தாய் செய்த தியாகத்தை உணர்ந்தாள். இருப்பினும் வேறு நல்ல பணக்கார குடும்பத்தில் தனக்கு திருமணம் முடித்திருக்கலாம் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

தன் தாயை பார்ப்பது இதுவே கடைசி முறை என குழலிக்கு தெரிய வாய்ப்பில்லைதான். கணவன் இல்லத்தை நோக்கி தன் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினாள்.

மாலை நேரம் நெருங்க லாந்தர் விளக்கு மாட்டு வண்டியின் நுகத்தடியில் மாட்டப்பட்டது. இரவு வெகு நேரம் கடந்து தன் கணவன் கிராமத்தை அடைந்தனர்.

செழியன் வீடு மிகச் சாதாரணமாக இருந்தது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் வீடு நிரம்பியது. மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது.

சில குழந்தைகள் சுவரில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் தம் கைவிரல்களை நீட்டியும் மடக்கியும் மான், கொக்கு, பாம்பு, ஆடு, யானை போன்ற வடிவங்களாக்கி விளையாடின. குழலிக்கு ஒரு நொடி தானும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. பின்னர் தான் மணப்பெண் என தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஆனாலும் அவள் கண்கள் குறுகுறுவென குழந்தைகளையும் சுவற்றின் வடிவங்களையும் கண்டுக் கொண்டிருந்தன. அவளையும் அறியாமல் இதழ்கள் புன்னகை பூத்தது.

அவளை செழியன் கண்களால் ரசித்து பருகுவதை அவள் அறியவில்லை. அவள் சட்டென திரும்ப செழியன் அவனைப் பார்த்து கண்சிமிட்டினான். அவளுக்கு குப்பென்று வியர்த்தது. அதன்பிறகு அவன் பக்கமே திரும்பவில்லை.

அவள் மாமியார் அழைக்கவும் விட்டால் போதுமென சென்றுவிட்டாள். அவள் செய்கை செழியனுக்கு சிரிப்புதான் வந்தது.

அவள் மாமியாரும் வீட்டு பெண்களும் அவளை சுவாமி படத்திற்கு முன் விளக்கேற்ற சொன்னார்கள். பின்பு அவர்கள் வழக்கப்படி சில பூஜை சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன.

பிறகு அவளை பெண்கள் அழைத்துச் சென்று அலங்கரித்தனர். அவர்கள் செய்த கிண்டலும் கேலியும் எதற்கு என்றே சிறுமி குழலிக்கு புரியவில்லை. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்.

அவளை முதலிரவு அறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். அவளை அறை உள்ளே விட்டு கதவை மூடிவிட்டனர். செழியன் அவள் வரவிற்காக காத்திருந்தான்.

அவனை கண்டதும் குழலிக்கு நடுக்கமாக இருந்தது. கட்டிலில் மல்லிகை சரங்கள் தொங்கின. கனிகள் பால் இனிப்பு வகைகள் தட்டில் வைக்கப்பட்டிருந்தது. மல்லிகை பூ அறை முழுவதும் வாசம் வீசியது.

“நீ அழகா இருக்க குழலி” அவன் கிரக்கமாக பேசினான்.

அந்த சொற்கள் அவளுள் தேனாக பாய்ந்தது. ரசமிழந்த கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள். அப்சரசை போல தான் இருப்பதாக உணர்ந்தாள். தன் உருவத்தை கர்வத்துடன் பார்த்து புன்னகைத்தாள்.

அந்த புன்னகையின் அர்த்தம் புரியாத செழியன் அவளை அணைத்து முத்திரை பதித்தான். இச்செயலால் திடுக்கிட்டவள் விலக முயற்ச்சித்தாள்.

அவள் விலக விலக அவன் நெருக்கம் அதிகமானது. இறுதியில் தான் கணவன் என்னும் உரிமையை நிலைநாட்டினான். குழலி துவண்டு போனாள்.திரை விலகும் . . .


 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 3


NNK38 pic.jpgசினிமா கிசுகிசு

சினிமாவிற்கு முன்னோடியாக விளங்கியது நாடகம். இயல் இசை மற்றும் நடிப்பு மூன்றின் கலவை நாடகம்.

நாடகத்தை சினிமாவின் மூத்த சகோதரன் என்றும் கூறலாம். தமிழ் நாடகங்கள் புத்துயிர் பெற சங்கரதாஸ் சுவாமிகளின் பங்கு மிகவும் பெரியது. அவர் சிறந்த நடிகராகவும் இயக்குனாராகவும் ஆசிரியராகவும் விளங்கினார்.

இவரின் சிறப்புகள் . . .

பாரம்பரிய வட்ட அரங்கை ஒரு பக்க அரங்காக மாற்றம் பெற்ச் செய்தார்.

வெகு ஜன மக்கள் மேடையில் ஏறி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.

இவருக்கு அடுத்தாக பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.***************தந்தை பெரியகண்ணனின் சிம்மக் குரல் வீரவை அதிர வைத்தது.

“அப்பா . . . அது வந்து . .” என மூன்று வார்த்தையைச் செல்லி முடிக்க மூன்று நிமிடங்கள் முழுதாய் கரைந்தது.

அவனின் கண்கள் மூட்டை அளவுக்கு விரிந்தது . . கோமாளி முகபாவணை . . காற்றில் தந்தியடிக்கும் விரல்கள் என அவன் உருவம் ஒரு நொடி அத்தனை கோபத்தையும் போக்கி தந்தைக்கு சிரிப்புதான் வந்தது.

ஆனால் மகன் முன் சிரித்து வைத்தால் அவனுக்கு பயம்விட்டுப் போய்விடும் என்பதால் சிரிப்பை அடக்கி ” வீட்டுக்கு நட” என மிரட்டியபடி அவனுக்கு முன்னால் நடந்தார். அவரின் தோல் செருப்பு சரக் சரக் என்று சப்தத்தை எழுப்பியது.

“ போச்சு . . இன்னிக்கு என்ன ஆகப் போகுதோ” என அவன் முணுமுணுக்க

“என்னடா?” என திரும்பிப் பார்க்காமல் நடந்தபடி தந்தை வினவ

“ஒன்றுமில்லையே அப்பா” பவ்யமாகப் பதில் வந்தது

“ம்ம்”

ஆட்டுக்குட்டி போல பின்னால் சென்றான் வீரா.

வீட்டில் நுழைந்ததும் மனைவி மரகதவள்ளியிடம் “உன் பிள்ளை லட்சணத்த பார்த்தயா?” எனச் சொல்ல

“நல்ல காரியம் செய்தால் உம் பிள்ளை . . விஷமம் செய்தால் மட்டும் எம் பிள்ளையோ” என மனதில் கேட்டுக் கொண்டார் மனைவி மரகதவள்ளி. வெளியே சொல்லும் அளவிற்கு சமர்த்து அல்ல.

“என்னடா செஞ்ச?” எனக் கோபமாகக் கேட்டார். கணவன் மேல் உள்ள கோபத்தை வெளியேற்ற மகன் சிக்கினான்.

“நான் எதுவும் செய்யல” அப்பாவியாக வீரா

பால் வடியும் முகத்தைக் கண்ட தாய்க்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பொழுதும் எதையாவது செய்து தந்தையிடம் பேச்சு வாங்குவது அவன் வழக்கமாகிவிட்டது.

“உன் புள்ள எல்லா பாடத்துலயும் பையில் . . ஒண்ணுல கூட தேர்ச்சியடைல” தந்தை அவருக்கே உரிய ஆதங்கத்துடன் சொன்னார்.

“அப்பாடா எதோ புது விஷயம் நினைச்சேன் . . இது பழைய விஷயமாச்சே . . நான் என்னிக்கு சரியா படிச்சிருக்கேன்” என வீரா மனதோடு பேசிக் கொண்டான்.

“என் அகப்பை உடைச்சிட்டான் அதை கேக்க மாட்டீங்களா?” என வீரா தாய் அடுத்த பிரச்சனையை முன் வைத்தார். அவருக்கு வீரா படிப்பை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் அந்த கவலை இல்லை. சமையலறை பிரச்சனையே அவருக்குப் பிரதானம்.

”அம்மா நான் உடைக்கல்ல தம்பிதான்” என வீரா திசைதிருப்ப

“இல்லமா அண்ணன்தான் உடைச்சான்” தம்பி சண்டையிட்டான்.

“ அகப்கை உன் கையிலதானே இருந்தது”வீரா கேள்வி எழுப்ப

“அது . . ஆனா ” தம்பி திணற

“அப்ப நீதான் உடைச்சே . . கையில இருப்பத பத்திரமா பார்த்துக்க தெரிய வேண்டாமா? ” பெரிய மனிதனாய் உபதேசம் வேறு செய்து வைத்தான்.

தம்பிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் வீராவின் சாமார்த்தியம் தந்தையை குளிர்வித்தது. இவனை வக்கீலாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் இவன் முதலில் சரியாக எஸ்எஸ்.எல்.சி முடிக்க வேண்டுமே என்ற ஆதங்கமும் கூடவே ஒட்டிக் கொண்டது.“வீரா” எனக் குரல் கேட்க நால்வரும் திரும்பிப் பார்த்தனர்.

மரகதவள்ளியின் அண்ணன் சடகோபன். அடுத்த கிராமத்தில் வசிப்பவர். இவர் கட்டை பிரம்மச்சாரி. பாட்டு வாத்தியார் என பிரியமாக அனைவராலும் அழைக்கப்படுபவர்.

அவர் பாட்டை சற்றே வித்தியாசமாகச் சொல்லிக் கொடுப்பார்.

சப்த ஸ்வரங்களை மேலை நாடுகளில் பாடுபவர்களைப் போல மாற்றி மாற்றிப் பாட வைப்பார். “நமக்கு தெரிஞ்ச விஷயங்களை வித்தியாசமான வகையில பயன்படுத்தி பார்க்கணும். குண்டு சட்டியில குதிரை ஓட்டி ஒரு பயனும் இல்ல” என்பது அவரின் தாரக மந்திரம்.

நாடகம் மற்றும் டூரின் டாக்கீசில் நடிக்க விரும்புபவர்கள் சிலர் இவரிடம் பாட்டு படிப்பார்கள். யாரிடமும் காசு வாங்கமாட்டார். “என் கலை விலைமதிப்பில்லாதது” என்பார்.

இவரின் பாட்டை பெரும்பாலோர் நிந்திப்பார்கள் “பாட்டா இது? கர்மம். . காட்டு கத்து கத்திண்டு. . சங்கீத மும்மூர்த்திகள் சாபம் தான் இவருக்கு கிடைக்கும்”

ஒருசிலருக்கு இவரின் பாட்டுப் பிடிக்கும். ஆனால் வெளியே சொல்ல அச்சம். அதனால் கண்டும் காணாததுமாய் இருப்பார்கள்.

வீராவிற்கு இவரின் பாட்டு என்றால் உயிர். அவரிடம் கொஞ்சம் பாட்டு கற்றுக் கொண்டான். முழுமையான தேர்ச்சி பெறவில்லை.

ஒருநாள் தன்னையும் மறந்து வீட்டில் பாடிவிட அன்றைய நாள் முழுவதும் தந்தையின் லட்சார்ச்சனை தான்.

அன்றிலிருந்து ஆற்றங்கரை மாந்தோப்பு போன்ற இடங்களில் நண்பர்கள் புலாம்சூழ பாடுவான்.

“நல்லா இருக்கு . . இன்னும் பாடு“ என நண்பர்களின் உற்சாகம் அவனுக்குப் புத்துயிர் ஊட்டும்.

வீராவின் தந்தைக்கு சடகோபனைச் சிறிதும் பிடிக்காது. ”வேலை வெட்டி இல்லயா உன் அண்ணனுக்கு” என மனைவியிடம் கடிந்து கொள்வார்.

சகோதரனை விட்டுக் கொடுக்க இயலாமல் மரகதவள்ளி மௌனமாக இருந்துவிடுவார்.

சடகோபன் வீட்டினுள் வந்ததும் “மாமா” என வீரா அவரை தன் பிஞ்சு கைகளால் அணைத்தான்.

மனைவியிடம் “என்னனு கேட்டு சீக்கிரமா அனுப்பிவை” என்ற வீராவின் தந்தை சடகோபனை “வா” என்றுகூட அழைக்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

துக்கம் தொண்டை அடைக்கத் தன்னை சமாளித்துக் கொண்டு “வா அண்ணா எப்படி இருக்க?” என பாசத்தோடு அழைத்தார் மரகதவள்ளி

“எனக்கு என்ன குறைச்சல் ராஜா மாதிரி இருக்கேன்” என்று சடகோபன் முகம் மலரச் சொல்ல

வீராவும் அவன் அம்மாவும் சிரித்தார்கள். உள்ளே இருந்தவருக்கு இந்த சிரிப்பு சத்தம் எரிச்சலை உண்டாக்கியது எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“உள்ளவா உட்காரு . . . ராத்திரி சாப்பிட்டுத்தான் போகணும் . .” என மரகதவள்ளி அழைத்தார்.

முற்றத்தின் அருகிலிருந்த ஊஞ்சலில் சடகோபன் அமர அருகே வீரா ஒட்டிக் கொண்டான்.

“சாப்பாடு வேண்டாம் முதல்ல காபி கொண்டுவா மரகதம்” என்றார்.

மரகதவள்ளி சமையலறைக்குள் புகுந்ததும். வீராவும் மாமாவும் தனியே விடப்பட்டனர்.

“நீங்க எப்ப கிளம்புவிங்க மாமா?” வீரா கேட்க

“உங்கப்பனுக்கு தப்பாமா பொறந்திருக்கடா . . ”

“நீங்க ஆத்தங்கரை பக்கத்துல முன்னே போங்க . . நான் பத்து நிமிசத்துக்கு அப்புறம் மெதுவா மேற்கு வீதி வழியா ஆத்தங்கரை வரேன். இங்க உங்களோட பேச முடியாது அப்பா திட்டுவார். எனக்கு நிறைய பேசணும் உங்க்கிட்ட” என கிசுகிசுப்பாக மாமா காதில் கூறினான்.

அவர் புன்னகையுடன் தன் பலம் கொண்ட கைகளால் அவனை அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டார்.

வெங்கல டவரா டம்பளரில் கமகம பில்டர் காபி ஆவி பறக்க மரகதவள்ளி தன் அண்ணனுக்கு கொடுக்க . . அதை வாங்கி நன்றாக ஆற்றினார். நுரை பொங்கக் காபியை பருகினார்.

வீரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவரின் ஒவ்வொரு செயலிலும் நேர்த்தி மிளிர்ந்தது. தன் மனவோட்டத்தை அவனுக்கு வெளிக்காட்டத் தெரியவில்லை. அவரை பார்த்து இளித்தான்.

அவர் கொஞ்சம் காபியை டவராவில் ஊற்றி அவனிடம் நீட்டினார். மாமா எது செய்தாலும் அவனுக்கு பிடிக்கும்.

அவன் ஆவலாக டபராவை பிடிக்க முயல கை சுட்டது. உடனே மாமா தன் மேல் துண்டை டபரா அடியில் வைத்து சற்றே ஊதி கொடுத்தார்.

அவரின் காபியில் ஆவி பறந்தது. தனக்கும் அப்படியே வேண்டுமென முயன்று நாக்கு சுட்டது.

அவர் சிரித்தபடி “உனக்கு எது எப்படி வேணுமோ அப்படிதான் நீ செயல்படனும். மத்தவங்கள பார்த்துச் செய்யாத”. இந்த வார்த்தைகள் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.

இவர் சகுனி மாமாவைப் போல விஷத்தையும் துவேஷத்தையும் மனதில் தூவவில்லை. மாறாக பின்னாளில் அவனுக்கான தனியொரு இடத்தைப் பிடித்து சரித்திரம் படைக்க நல்லதொரு வழியை அவன் மனதில் விதைத்தார்.

சிறிது நேரம் தங்கையுடன் அளவளாவிய பின் மாமா கிளம்பினார். வீரா புஸ்தகத்தைக் கையில் வைத்துப் படிப்பதைப் போலப் பாசாங்கு செய்தான். அவன் கண்கள் தந்தையைக் கவனிப்பதிலேயே இருந்தது.

தந்தை மீண்டும் வெளியே கிளம்பிச் சென்றார். இதற்காகவே காத்திருந்தவன் தானும் வெளியேறினான். மரகதவள்ளிக்கு அவன் போகும் இடத்தை ஒருவாறு யூகித்தார். அதனால் கேட்கவில்லை.

ஆற்றங்கரைப் பக்கமாக சென்றான். அங்கே மணல் வெளியில் மாமா நின்றிருந்தார். கம்பீரமாய் அவர் நின்றிருந்த தோரணையே வீராவை வெகுவாய் கவர்ந்தது.

“மாமா” என்றபடி அருகே சென்றான்.

அவனை மாமா உற்றுப் பார்த்தார் “நீ சாதாரணமானவன் இல்லடா”

“அப்படினா?”

“இதை நீயே உணரனும் . . நான் சொல்லிப் புரிய வைக்கக் கூடாது”

“நீங்க சொல்றது எதுவும் எனக்கு புரியல ஆனா பிடிச்சிருக்கு . .”

“நீ பெரியவனா ஆனதும் என்ன ஆகப்போற?” மாமா கேட்க

இந்த கோணத்தில் எல்லாம் அவன் சிந்தித்ததே இல்லை. அவனிடம் யாரும் கேட்டதும் இல்லை. தந்தை எப்போதும் படிப்பு ஒன்றை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அவன் அண்ணன் தம்பி அனைவரும் நல்ல படிப்பாளிகள். ஆனால் இவனுக்கு மட்டும் ஏனோ படிப்பு பிடிக்கவில்லை.

அதிலும் கணக்கும் அறிவியலையும் நினைத்தால் வேறு வினையே வேண்டாம் என்று தோன்றும்.

வீட்டுப் பெண்கள் பாடச்சாலைக்குச் சென்றதே இல்லை.

அவருக்கு பதில்ச் சொல்லத் தெரியாமல் முழித்தான்.“உன்னை ஒரு புது உலகத்துக்கு நான் கூடிட்டு போகப் போறேன்” என்றார் மாமா

அவன் ஆர்வமாய் பார்க்க . . என்னோடு வா என முன்னே சென்றார். அவர் பயணம் முடிந்த இடம் டூரின் டாக்கீஸ் (அந்த காலத்து சினிமா தேட்டர்).

வாயை பிளந்தபடி வீரா பார்த்தான். அவன் நண்பர்கள் சிலர் இங்கு வந்ததைப் பற்றிச் சொல்வார்கள். அவன் அப்பாவிற்கு மட்டும் தான் இங்கு வந்தது தெரிந்தால் கொன்றே விடுவார்.

இரண்டு நையா பைசாவிற்கு இரண்டு டிக்கெட் வாங்கினார் மாமா. ஒரு பக்கம் வெள்ளைதிரை மற்ற மூன்று பக்கங்களும் கனமான துணியால் மூடப்பட்டிருந்தது. மேலே வேயப்பட்ட கூரை.

ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் மற்றொரு பக்கம். பதாகையில் எழுதி நடுவே தட்டிக் கட்டியிருந்தது. மாமா ஆண்கள் பக்கம் சென்று தரையில் அமர்ந்தார். தனக்கு முன்னால் மணலை ஒன்று சேர்த்துக் குவியலாக்கினார். அதை சமமாக தட்டி அவனை அங்கு அமர செய்தார். மற்றவரைக் காட்டிலும் சற்றே உயரமாக அமர்ந்திருக்கும் அனுபவத்தால் வீரா குதூகலமானான்.

அவன் வாழ்க்கையில் உயரமான இடத்திற்குச் செல்ல உள்ளான் என்பதைக் கட்டியம் காட்டுவதை போல மாமாவிற்குத் தோன்றியது.திரை விலகும் . . .


 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 4


veera kuzhali 1.jpg
சினிமா கிசுகிசு


டி.பி.ராஜலட்சுமி தஞ்சாவூரில் 1911ல் பிறந்தவர். இவர் தமிழ் திரை உலகின் முதல் கதாநாயகி ஆவார். முதல் இயக்குனர் முதல் பெண் பாடலாசிரியர் நாவலாசிரியர் என்று பன்முக திறமைக் கொண்டவர்.

இவர் தன் சிறு வயதிலேயே தான் பார்க்கும் நாடகங்களின் பாடல்களை அப்படியே அச்சுபிசகாமல் பாடுவாராம். அந்தந்த நாடக நடிகர்ப் போல நடிக்கவும் செய்வாராம்.

அந்த கால கட்டத்திலேயே தமிழ் சினிமாவின் மிகப் பெரிய இடத்தை பிடித்தவர் இவர்.*********************

வானம் புதிது,

பூமி புதிது,

நீர், காற்று, மனிதர்கள், மனங்கள், உணர்வுகள் என அனைத்தும் புதிது.

மனைவி என்னும் பதவி புதிது. கணவனின் ஸ்பரிசம், முத்தம், காதல், காமம் என அனைத்தும் குழலிக்கு புதிதாக இருந்தது.

இந்த புதியவைகளை ஏற்க அவளுக்கு கால நேரம் தேவைப்பட்டது.

கார்குழலி திருமணம் முடிந்து ஆறு திங்கள்(மாதம்) ஆயிற்று. ஆனந்தம், கொண்டாட்டம்,
குதூகலம் என எதுவும் நிரந்தரமாக இல்லாமல் அவ்வபோது தள்ளுபடியில் கிடைத்தன.

மனம் வற்றி போயிருந்தது. வெளி உலகிற்கு மகிழ்ச்சியாக இருப்பதைப் போல தோன்றினாலும் மனதில் வெறுமை குடிக் கொண்டது. அது ஏன் என அவள் சில சமயங்களில் குழம்பினாள்.

அவள் வயது பெண்கள் திருமணம் செய்துக் கொண்டு குடும்பமே உலகம் என தன்னை அதில் அமிழ்த்திக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் தன்னால் ஏன் அப்படி குடும்ப வாழ்வில் ஒன்ற முடியவில்லை என அவளுக்குத் தெரியவில்லை.

தான் ஜமீன் பரம்பரையில் பிறந்தவள் எப்படியோ வாழ நினைத்தவளுக்கு இப்படி ஒரு சாதாரண குடும்பத்தில் அல்லல் பட நேரிட்டதை எண்ணி வெதும்பாத நாளில்லை. அவள் விரும்பியது பணம் புகழ் மற்றும் பாராட்டு.

கணவன் செழியன் தன் தேவைக்கான நேரங்களில் அவளிடம் அன்பை பொழிவான். அவன் தேவை கிடைத்ததும் தன் வழியேச் சென்றுவிடுவான். செழியன் காலையில் வேலைக்கு சென்றால் இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்புவான். ஞாயிறு மட்டும் விடுமுறை நாள்.

கணவனின் தொடுகை முத்தம் அணைப்பு எல்லாம் ஏற்காவும் முடியாமல் நிராகறிக்கவும் தெரியாமல் விழித்தாள். குழந்தை பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல அவன் கையில் இருந்தாள்.

குழந்தை பொம்மையிடம் அதன் விருப்பத்தை கேட்பதில்லை இங்கும் அப்படிதான்.

“உன் கணவனை பிடித்திருக்கிறதா?” என தன்னையே ஆயிரம் முறை கேட்டுவிட்டாள் குழலி.

சில சமயங்களில் ஆம் என்றும் சில தருணங்களில் இல்லை எனவும் பதில் வந்தது.

இது என்ன? மற்ற பெண்டுகள் மனதும் இப்படிதானா இல்லை தான் மட்டும் விசித்திர பிறவியா? இதை யாரிடம் கேட்பது. கேட்கத்தான் முடியுமா?.

செழியனின் தாய் கமலம் தான் ஒரு மாமியார் என்னும் ஸ்தானத்தை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தார். காலை நான்கு மணிக்கு எழும்பி வீட்டு வாசலில் நீர் தெளித்து கோலம் போட வேண்டும். பின் சமையல் துணி துவைப்பது பாத்திரம் துலக்குவது என அத்தனை வேலைகளையும் அவளிடம் செய்யச் சொன்னார்.

குழலி சற்றும் எதிர்க்காமல் தான் மருமகள் என்று முதலில் அத்தனை வேலையும் செய்தாள். அவள் வேலையில் நேர்த்தியில்லை. அவளாகவே கற்றுக் கொள்ளட்டும் என மாமியாரும் விட்டுவிட்டார். செழியனின் தாயும் தங்கையும் ஊர் சுற்றுவது வம்பு பேசுவது என உல்லாசமாக பொழுதை கழித்தனர். செழியனின் தந்தையும் தமையனும் எதிலும் தலையிட மாட்டார்கள். அனைத்து முடிவுகளும் மாமியார் கையில்.

ஆனால் இதை இப்படியே விட்டால் ஆயுள் முழுவதும் இந்த வீட்டு வேலைக்காரியாகதான் இருக்க வேண்டிவரும் என நினைத்த குழலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

குழலி எப்போதும் நேருக்கு நேர் நின்று சண்டைப் போட மாட்டாள். சிரித்து பேசி மழுப்பி தான் செய்ய வேண்டிய காரியத்தை செய்துக் கொள்வாள். இதுதான் கமலத்திற்கு பிரச்சனையாக இருந்தது. நேருக்கு நேர் நின்று சண்டைப் போட்டால் தானும் அவ்வாறு செய்யலாம்.

ஆனால் அவள் நிதானத்தோடு இருக்கையில் தானும் மட்டும் சண்டைப் போட்டால் பார்ப்பவருக்கு எப்படி தோன்றும்? . . ஏற்கனவே ஊரில் அனைவரும் “உன் மருமகள் போல இல்லை . . நீ பாக்கியசாலி சண்டையே இல்லாமல் நீ சொல்வதற்கு எல்லாம் தலையாட்டும் மருமகள் ” என கூறத் தொடங்கிவிட்டனர்.

ஒரு நாள் கமலமும் வள்ளியும் வாசல் திண்ணையில் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். குழலி பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தாள்.

குழலிக்கு அவர்கள் பேச்சு சிரிப்பு சத்தம் கேட்டு எரிச்சலாக இருந்தது. கோபத்தில் கையில் இருந்த பாத்திரத்தை தூக்கி எரிந்தாள். அந்த பாத்திரம் சுவரில் பட்டு ஒடுங்கி ஓரத்தில் விழுந்தது.

அப்போதுதான் தான் செய்த தவறு குழலிக்கு புரிந்தது. பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு மாமியார் உள்ளே வருவது தெரிந்தது. சட்டென கீழே அமர்ந்தவள் ஓவென அழ ஆரம்பித்தாள்.

தான் வழுக்கி விழுந்ததாகவும் காலில் வலி என அழுதாள். கமலம் பதறிப் போனார். அவளை அறையில் படுக்க வைத்து பார்த்துக் கொண்டனர். காலில் சுலுக்கு என பத்து நாட்கள் கமலத்தையும் வள்ளியையும் பம்பரமாய் சுழற்றினாள் குழலி.

வலியில் துடிப்பதை போல குழலி தத்ரூபமாக நடித்தாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி தன்னால் முடிந்தது? அவர்கள் எப்படி அரற்றினார்கள்? தனக்கு தானே சிரித்துக் கொள்வாள்.

செழியனிடம் இருந்து பத்து நாட்கள் விடுமுறை.

கால் சரியாகிவிட்டதும் “அத்தை நான் வேலை செய்கிறேன்” என சென்று எதையாவது செய்து குறைந்தது ஒரு பாத்திரத்தையாவது ஊனமாக்குவாள்.

“உனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியவில்லை” என குற்றம் சாட்டினார் மாமியார்.

“நான் என்ன செய்வேன் . . நான் ஜமீன் பரம்பரை ஆயிற்றே . . எங்களுக்கு வேலை வாங்கித்தான் பழக்கம் செய்து அல்ல . . ஆனால் நான் மாற்றிக் கொள்கிறேன் அத்தை” மிக சாதுர்யமாக இனிமையாக பதிலளித்தாள்.

மீதம் இருப்பவற்றை காப்பாற்ற எண்ணிய கமலம் “இனி நீ பாத்திரம் துலக்க வேண்டாம்” எனச் சொல்லிவிட்டார். அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளில் இருந்தும் விடுதலை பெற்றாள்.

கமலம் தன் மருமகளிடம் ”உன் தங்க வளையல் கொடு குழலி . . எதிர்வீட்டு கல்யாணத்துக்கு போட்டுக்க வேணும் . . உன் ஹாரம் வள்ளிக்கு வேணும் . . அப்படியே உன் பட்டுப்புடவை காட்டு” என குழலியின் நகை புடவை என ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் குழலி சண்டை சச்சரவு வேண்டாம் என அவர் கேட்டதை கொடுத்தாள். ஆனால் போனது அவளிடம் திரும்பவே இல்லை.

செழியனிடம் சொன்னாள் அவனோ “அம்மாவும் தங்கச்சி தானே . . எங்க போயிடப் போறாங்க?” என அவர்கள் பக்கம் பேசினான்.

குழலி இவனிடம் பேசி பயனில்லை என “அத்தை பக்கத்து வீட்டு அக்காவோட கோயிலுக்கு போகணும் . . நகை வேணும்” என விடாப்படியாக முகத்தை பாவமாக வைத்தபடி கேட்டு அத்தனையும் வாங்கிக் கொண்டாள்.

தன்னை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். கமலம் இதை தோல்வியாக கருதினார். குழலியின் நகைகளை அப்படியே தன் மகளுக்கு போட்டு திருமணம் செயதுவிட வேண்டும் என்பது அவரின் கணக்கு. ஆனால் குழலி விட்டுக் கொடுப்பவள் போல்த் தெரியவில்லை.

மகனிடம் முறையிட்டார் “உன் பொண்டாட்டிக்கு ஆனாலும் ஏத்தம் ஆகாதுபா” என இல்லாத்தையும் பொல்லாத்தையும் சொல்லி வைத்தார்.

அன்று இரவு செழியன் அவளிடம் வினவ “ நான் எங்க போக போறேன்? நகை எங்க போக போகுது . . இதெல்லா பிரச்சனையா?” அவன் தன்னிடம் கேட்டதை அப்படியே மாற்றிக் கேட்க . . செழியன் செய்வதறியாது விழித்தான்.

இதற்கு மேல் அவனை சிந்திக்கவிடக் கூடாது என தன் அழகால் அவனை கிறங்கடிக்கச் செய்தாள். தன் மகன் தங்களைவிட்டு கைநழுவி சென்றுவிடுவானோ என கமலம் அச்சப்பட்டார்.

வீட்டின் அத்தனை வேலையும் இப்போது தாயும் மகளும் செய்ய நேரிட்டது.

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகியும் குழலி கர்ப்பம் தறிக்காமல் இருந்தது கமலத்திற்கு சாதகமானது. அந்த விஷயத்தை பெரிது படுத்த நினைத்தார். இதன் மூலம் குழலியை தனக்கு அடிமையாக்கி தான் சொல்வதைச் செய்யும் கிளிப் பிள்ளை போல் நடத்த நினைத்தார்.

ஆனால் அதற்குள் குழலியின் தாய் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தகவல் வர . . குழலி ஸ்தம்பித்துப் போனாள்.

தன் நலனுக்காகவே முழு வாழ்க்கையும் தியாகம் செய்த தாயை எண்ணி மருகினாள்.

தன் ஊருக்கு கணவன் மற்றும் புகுந்த வீட்டினற் உடன் சென்றாள். செழியனும் அவன் வீட்டாரும் கமலத்தின் வற்புறுத்தலினால் இரு தினங்களில் திரும்பிவிட்டனர். குழலி மட்டும் அங்கிருந்து பதினாலு நாள் காரியத்தையும் முடித்தாள்.

குழலி தாய் தன் கடமை முடிந்த்தென கண்மூடிவிட்டார். ஆனால் குழலிக்கு தன் தாய் தான் பெரும் பணம் புகழ் அடைந்து பார்க்கவில்லையே என குறையாக இருந்தது.

தான் பணக்காரியா? சிரித்துக் கொண்டாள் எவ்வாறு? இருக்கும் நகையே எப்போது களவாடப்படும் எனத் தெரியாது. இதில் பணக்காரியா?

தனிமை அவளுக்கு துணையாக இருந்தது. சிந்தித்து செயல்படவும் உதவியது.

காலம் முழுக்க செழியனின் மனைவியாக வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டுமா? அல்லது????

தனக்குள் கேட்டுக் கொண்டாள். அல்லது என்பதற்கு என்ன பொருள்?

மனம் ஒரு நிலையில் இல்லை. அதன் பிறகு அவள் சில வேலைகளை செய்தாள். நிச்சயம் இதை விதி என்றே கூற வேண்டும். வீட்டில் தெரிந்தால் பூகம்பம் வெடிக்கும்.

ஆனால் இவள் இல்லாமலே அங்கு பூகம்பம் வெடித்தது.வீரா வீட்டில் . . .

வீராவின் தந்தை கிணற்றில் இருந்து நீர் சேந்தி தலை முழுகினார். இரண்டு மூன்று வாளி தண்ணீர் கொட்டியும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை.

“என் மகன் வீரா செத்துட்டான்”என கத்தினார். அவரை அவரின் மூத்த மகன்கள் அடக்க முற்பட்டனர்.

“ஐயோ அப்படி அபசகுணமா சொல்லாதீங்க” என கதறினார் அவர் மனைவி.

“புள்ளையா பெத்துவெச்சிருக்க?” மனைவியிடம் சீறினார்.

“நான் என்ன செய்வேன்?” விசும்பலுடன் பதில் வந்தது.

“வீரா இந்த வாசலை மிதிக்கக் கூடாது“ உஷ்ணமாய் வார்த்தைகள் வந்தன.

சரி என்று தலையசைத்தார் மனைவி. மகன் பற்றிய கவலைகளை மனதில் சுமந்தவராய்.ஒரு நாள் இவர்கள் வீராவிற்கு ஆரத்தி எடுத்து அட்சதை தூவி வீட்டிற்க்குள் அழைக்கப் போகிறார் என்பது விதிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.திரை விலகும் . . .


 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 5veera kuzhali 1.jpg

சினிமா கிசுகிசு


1800களில் மாய விளக்கு என்பதுதான் சினிமா. மரச்சட்டத்தில் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகளை கண்ணாடி வில்லையில் வரையப்பட்டு அடுத்து அடுத்து வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு வில்லையும் மெதுவாக சுழலும். அதன் மேல் ஒரு எண்ணை விளக்கின் மூலம் ஒளி ஏவப்படும். காட்சிகளுக்கு ஏற்ப பிண்ணனியில் பாட்டுப் பாடுவார்கள்.

ராஜகுடும்ங்களுக்கும் பிரிடிஷ்கார்ர்களுக்கு இந்த மாய விளக்கு காட்சிகள் காண்பிக்கப்படும். சாதாரண மனிதனால் இவற்றை கண்டு ரசிக்க இயலாது.***************

சின்னஞ்சிறு விதை தன்னுள் பலநூறு ஆண்டுகள் வாழும் மரத்தை அடக்கி வைத்துள்ளது. எந்தவொரு ஆணவமும் ஆர்பாட்டமும் இன்றி வளர்கிறது. வீராவின் வளர்ச்சியும் அவ்வண்ணமே அமைதியாக ஆனால் ஸ்திரமாக வளர்ந்தது எனலாம்.

மேடை நாடகத்தில் . . .

ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான சிங்க முகமும் மனித உடலுமான நரசிம்மர் தூணை பிளந்தபடி ஆக்ரோஷமாக வெளி வந்தார்.

அதர்மம வழியில் மக்களை துன்புறுத்தும் அரக்கன் இரண்யகசிபை வதம் செய்தார். பிரகலாதன் மிக அழகாக நரசிம்மர் துதிகளை பாடி அவர் கோபத்தை குறைத்து மனதை குளிர்வித்தான்.

பின்பு நரசிம்மர், சிறுவன் பிலகலாதனை தன் மடியில் அமர்த்தி அவனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்து அந்த நாட்டிற்கு அரசனாக்கினார்.

அப்போது பிரகலாதன் “நரசிம்மரே எதில் அமர்ந்து அரசன் ஆட்சி செய்கிறானே அதற்கு நிருபாசனம் என்று பெயர். நிருபன் என்றால் ராஜா.

இன்று நீங்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர். சிம்மமே அதில் அமர்ந்துள்ளதால். இனி வருங்காலத்தில் இதை சிம்மாசனம் என்றே அழைக்கப்படும்” என்று திருவாய் மலர்ந்த சிறுவன் பிரகலாதன் அவர் காலில் பணிந்தான்.

திரை மூடியது. பின்பு ஒருசில நொடிகளில் திரை விலகியது. பக்த பிரகலாதன் நாடகத்தில் நடித்த அத்தனை பேரும் வரிசையாக நின்று பார்வையாளர்களுக்கு நன்றி கூறினார்கள்.

பார்வையாளர்கள் அனைவரின் கரகோஷம் விண்ணை பிளந்தது. கூட்டம் மெல்ல மெல்ல கலைந்தது.

“சபாஷ் வீரா” என பிரகலாதன் வேடத்தில் இருந்த வீராவை அவன் மாமா தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

அவனை சுற்றி நின்ற அவன் நண்பர்களும் சக நடிகர்களும் கூட வெகுவாக பாராட்டினார்கள். ஒரு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஆடவும் பாடவும் தெரிந்திருக்க வேண்டும்.

அன்று டூரின் டாக்கீசில் மாமாவுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த வீராவின் மனதில் உண்டான ரசவாதம் தான் இதற்கு முழுகாரணம்.

அன்று பார்த்த படம் ஹரிதாஸ். அந்த படம் முன்பே வெளி வந்துவிட்டது. ஆனால் அந்த டூரின் டாக்கீசில் சிலசமயங்களில் முன்னர் வெளிவந்த படங்களை மீண்டும் திரையிடுவது வழக்கம்.

தியாகராஜ பாகவதர் மற்றும் டி.ஆர். ராஜகுமாரி நடித்த ஹரிதாஸ் படத்தை பார்த்து மெய் மறந்துப் போனான் வீரா.

திரைக்கு பின்னாலும் திரை கீழேயும் ஆராய்ச்சி பாவணையில் எட்டிப்பார்த்த வீராவை “என்னடா எங்கயோ பாக்கிற?” என மாமா கேட்டார்.

”இதுல நடிச்சவங்க திரைக்கு பின்னாடி தானே இருப்பாங்க அதான் பாக்குறேன்” என்றான் அப்பாவியாக வீரா.

மிகப் பெரியதாக சிரித்த மாமா “இல்லடா இவங்க நடிக்கிறதை ஒரு சின்ன பெட்டிக்குள் பதிவு செய்வாங்க. அதில் இருந்துதான் நாம பார்க்கிறோம்” என்றார்.

வீராவிற்கு எதுவுமே புரியவில்லை. “பதிவு செய்வதா? அப்படினா என்ன? சின்ன பெட்டிக்குள்ள எப்படி இத்தனை பேரும் இருக்க முடியும்? ” எனப் பல வினாக்களை எழுப்பிய வண்ணமிருந்தான்.

“அடேய் அது அப்படிதான்டா” என்றார். அதற்கு மேல் விளக்கமாகச் சொல்ல அவருக்கு தெரியாது. ஆனால் வீராவிற்கோ தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பண்மடங்காகியது.

படம் முடிந்தது வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானார்கள். டூரின் டாக்கீசை விட்டு வெளியே வந்து சிறிது தொலைவு நடந்தார்கள். பேருந்து நிலையம் அருகில் வந்ததும்.

“வீரா நீ வீட்டுக்கு பத்திரமா போ . . நானும் ஊருக்கு கிளம்புறேன்” என்றார் மாமா.

வீராவிற்கு வீட்டுக்குச் செல்ல பிடிக்கவில்லை. நாளை காலை பள்ளிக்கு போக வேண்டும். மீண்டும் தனக்கு பிடிக்காத கணக்கு அறிவியல் பாடங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். இதை நினைக்கவே கசந்தது.

தன் நண்பன் பிச்சுவின் சகோதரன் சங்கரனை அங்கே எதிர்பாராமல் பார்த்தான் வீரா. ஒரு நொடியில் சிலர் வாழக்கையே மாறிவிடும் அவ்வாறு வீராவின் அழகான வாழ்க்கை பயணம் தொடங்கும் தருணம் வந்தது.

“அண்ணா” என அழைத்தான் வீரா.

“என்னடா இங்க?” என ஆச்சரியமாக பார்த்தான் சங்கரன். அருகில் நின்றிருந்த மாமாவை “எப்படி இருக்கீங்க மாமா?” என மரியாதை நிமித்தமாக கேட்க அவரும் அவனை நலம் விசாரித்தார்.

“அண்ணா நான் மாமா கூட ஊருக்குப் போறேனு வீட்ல சொல்லிடுங்க” என்றான் வீரா.

சிலசமயங்களில் வீரா மாமா வீட்டிற்கு போவது சகஜமான விஷயம்தான். அந்த வீட்டிலேயே வீரா மட்டும் தான் மாமாவுடன் ஒட்டுதலாக இருப்பவன்.

சங்கரனும் “சரி உன் அம்ம்மாட்ட சொல்றேன்” என்று கிளம்பிவிட்டான்.

“என்னடா உன் அப்பா கோபிக்க மாட்டாரா?” மாமா ஆதங்கத்துடன் வினவ

“அந்த சின்ன பெட்டிக்குள்ள எல்லாரும் போக முடியுமா?” என வீரா பழைய நினைவிலேயே இருந்தான்.

அவன் தலையில் செல்ல கொட்டு வைத்த மாமா அவனுடன் பேருந்தில் தன் ஊருக்கு கிளம்பினார்.

வீரா சினிமாவைப் பற்றி நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தான். அர்ச்சுனன் கண்ணுக்கு எப்படி கிளியின் கண் மட்டும் இலக்கானதோ அவ்வாறு வீராவிற்கு வேறு எதிலும் நாட்டமில்லை.

“இயல் இசை நாடகம் மூணும் தெரியனும் அப்பதான் சினிமாவ படிக்க முடியும்” என்றார் மாமா தீவிரமாக

“எனக்கு பாட்டு சொல்லி தாங்க” என பட்டென கேட்டுவிட்டான்.

“உன் அப்பா….?” விழி பிதுங்க கேட்டவரை புன்னகையில் மடக்கினான்.

மிக விரைவாக வீரா இசையை பயின்றான். அவனுக்கு இசையில் இருந்த ஆர்வம் மாமாவை பிரம்மிக்க வைத்தது. நாள் முழுதும் இசையில் தன்னை கரைத்தான்.

வீட்டிலிருந்து இரண்டு மூன்றுமுறை அழைப்பு வந்தது. வீரா செல்ல மறுத்துவிட்டான். இவன் செயல் தன் தங்கையின் வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க வேண்டுமெ என மாமாவிற்கு கவலையாக இருந்தது. ஆனால் வீராவின் பிடிவாதத்தை தளர்த்தவும் முடியவில்லை.

மாதங்கள் வேகமாக நகர்ந்தன. ஒருநாள் வீரா ஆற்றில் குளிக்க சென்றான். வீடு திரும்பியவனுக்கு வீட்டினுள் இருந்து புதிய குரல் கேட்டது. எங்கே தன் தந்தை வந்துவிட்டாரோ என உள்ளே செல்லாமல் ஜன்னல் வழியே பார்த்தான்.

ஐம்பது வயதை கடந்தவர் மாநிறம் வெள்ளை வேட்டி சட்டையில் பளிச்சென்று இருந்தார். நெற்றியில் அகலமாக சந்தன கீற்று நடுவே குங்கும பொட்டு என பார்க்கவே தெய்வீகமாக இருந்தார். ஆனால் முகத்தில் கவலையின் ரேகை.

“ என் வாழ்க்கையில இப்படி நடந்ததே இல்ல . . இத்தன பெரிய சங்கடம் . . இப்ப என்ன செய்யறது?” என மாமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

“கவலப்படாத வத்சா எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு” என ஆறுதலாக பேசிய மாமா . . யோசனையில் ஆழ்ந்தார். தற்செயலாக ஜன்னல் பக்கம் பார்த்தவர் வெளியே வந்து “வீரா உள்ள வா” என்றார்.

“இது வீரா . . . வீரநாராயணன் என் தங்கை மகன்” என அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“இவர் ஸ்ரீவத்சன் கலைவாணி நாடக கம்பெனி முதலாளி” என்றார்.

வீரா இருகரம் கூப்பி வணக்கம் என்றவன் என்ன தோன்றியதோ சட்டென நெடுஞ்சான் கட்டையாக அவர் காலில் பணிந்தான்.

அவர் அவன் தலையில் கைவைத்த “ஆயுஷ்மான்பவ” என்றார்.

வீரா நிதானமாக எழுந்தான். இருவர் கண்களும் ஒருசில நொடி நேருக்கு நேர் சந்தித்தன.

அவர் “நீ நடிக்கிறயா?” என கேட்கவும்

வீராவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மாமாவை பார்த்தான்.

அவரும் புன்னகையோடு அதையே கேட்க . . “நான் பயிற்சி முடிக்கலயே” என்றான் தயக்கமாக

“இது சின்ன வேஷம்தான் . . ஆனா பெண் வேடம்” என்றார் வத்சன். மேலும் “இந்த வேஷத்துல நடிக்கறவனுக்கு காய்ச்சல் ஆஸ்பத்திரில இருக்கான்” என்றார் சோகமாக

மாமாவிற்கு சற்று தயக்கமாக இருந்தது. அந்த காலத்தில் பெண்கள் நாடகத்தில் நடிப்பது மிகவும் அரிது. அதனால் ஆண்களே பெண் வேடத்தில் நடிப்பார்கள். சிலருக்கு ஒருமுறை பெண் வேடமிட்டால் எப்பொழுதுமே பெண் வேடம் தான் என முத்திரை பதிந்துவிடும். மற்ற வேடங்கள் அவர்களுக்கு கிடைப்பது கஷ்டமாகிவிடும்.

வீராவிற்க்கு அப்படி ஒரு சங்கடம் வந்துவிடுமோ என அவர் மனம் பதறியது. ஆனால் ஒரு ஆண்மகன் தன் நாடக திறனை எந்த வேடத்திலும் வெளிக்காட்ட வேண்டும். அதற்கு பெண் வேடம் சிறந்த உதாரணம்.

பெண்ணின் நளினம் நடை உடை பாவணை பேச்சு என அனைத்தும் கண்முன்னே கொண்டுவர வேண்டும்.

அதனால் வீராவிடம் அவன் மாமா அந்த வேடத்திற்கான நன்மை தீமை இரண்டையும் கூறினார். முடிவு அவனே எடுக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

வீரா நடிக்க முடிவெடுத்தான். இசை மட்டுமே தெரிந்தவனுக்கு நடிப்பையும் கற்று கொள்ள தீரா ஆசை வந்தது.

மறுநாள் அவனை அழைத்து வருவதாக மாமா கூறினார். வத்சன் விடைப்பெற்றுச் சென்றார். அந்த நாள் முழுவதும் வீராவை பதற்றம் தொற்றிக் கொண்டது. தன்னால் இயலுமா என்னும் சந்தேகமும் பயமும் அவனை பாடாய்படுத்தியது.

அடுத்த நாள் காலையில் மாமாவுடன் சென்றான். வத்சன் அவனை வரவேற்றார். அந்த இடத்தை தன் பார்வையால் நனைத்தான் வீரா. மிகப் பெரிய வீடு. பல அறைகள் இருந்தன. ஆண்களில் அனைத்து வயதினரும் இருந்தனர். ஆங்காங்கே பல வண்ணத் துணிகள் காணப்பட்டன.

ஓர் அறையில் அட்டையால் செய்யப்பட்ட போர் சாதாணங்கள் மற்றும் கிரீடம் கவசம் என்று இருந்தன. பட்டு பீதாம்பரம் போன்ற வஸ்திரங்கள் இருந்தன. விதவிதமான தலைபாகை விக் போன்றவை காணப்பட்டன. போலி ஆபரணங்களும் இருந்தன.

வத்சன் வீராவை அழைத்துக் கொண்டு ஒருவரிடம் சென்றார். கோபு என அழைத்து அவரிடம் எதையோ சொன்னார். கோபு என்பவர் வீராவை தலைமுதல் கால்வரை தன் கண்களால் எடைப் போட்டார்.

வத்சன் வீரா மாமாவுடன் வெளியே சென்றுவிட்டார். கோபு “உன் பேரு என்னப்பா?” நிதானமாக கேட்டார்.

“வீரா”

“என்ன வேடம் தெரியுமா?”

“ம்ம் . . பெண்” அவன் கண்ணில் எந்த கூச்சம் தயக்கமில்லை.

தலையசைத்தவர் அவன் பேச வேண்டிய வசனங்கள் அடங்கிய தாளை அவனிடம் கொடுத்தார். “மனனம் செய் . . எப்போது எப்படி பேச வேண்டும்னு சொல்றேன்”

வீரா வாங்கிப் பார்த்தான். நான்கு வரிகள் கூட இல்லை. இது என்ன பிரமாதம் என மனதில் தோன்றியது. அவனை ஒருமணி நேரம் தனியாக விட்டுவிட்டார்.

பத்து நிமிடத்தில் வரிகளை மனனம் செய்துவிட்டான்.

ஒத்திகை செய்ய அழைத்தார். அந்த வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் அரங்கம் இருந்தது. அவனும் மற்றவருடன் சென்றான். அனைவரும் மேடை ஏறும் முன்பு மேடையை தொட்டு வணங்கினார்கள்.

வீராவும் மேடையை தொட்டான். அந்த நொடி அவனுக்கு பரவசமாக இருந்தது. அவனுள் ஒரு இன்ப ஊற்று. அது ஏன் என அவனுக்கு பிடிப்படவில்லை.

இனி வாழ்க்கையில் அவன் பெரும் ஏற்ற இரக்கங்களை சந்திக்கப் போகிறான்.

தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள் சில தருணங்களில் தங்கள் காலடியில் அவனை மிதிக்கவும் செய்வார்கள்.

வீரா எது நிழல்? எது நிஜம்? என அறிந்துக் கொள்ளும் நேரம் வெகு தொலைவில் இல்லை.திரை விலகும் . . .
 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 6
NNK38 pic.jpgசினிமா கிசுகிசு

தமிழ் திரைப்பட உலகின் முதல் இரட்டை வேடப் படம் 1940ல் வெளி வந்தது. பி.யு.சின்னப்பா அவர்கள் நடித்த உத்தமபுத்திரன் என்னும் படம். முதன் முதலில் ப்ளாக்பஸ்டர் என்ற வார்த்தை இந்த படத்தின் மூலமே அறிமுகமானது.

ஒரே நடிகர் இரட்டை வேடங்களில் நடிக்கும் போது இரண்டு முரணான கதாபாத்திரங்களை நடிக்க வேண்டும். நடை உடை பாவனை என அனைத்தும் வேறுபடும். இது நடிகருக்கு மிகவும் சவாலான விஷயம். தன் முழு திறமையை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு.***********கோபு நிதானமாக வீராவின் பெண் கதாபாத்திரத்தை விளக்கிக் கூறினார். இளவரசியின் தோழியாக அவன் கதாபாத்திரம் அமைந்திருந்தது. வீரா ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்துக் கொண்டான்.

அடுத்தாக இளவரசியாக நடிப்பவனை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். அவன் நட்போடு வீராவைப் பார்த்து புன்னகைத்தான். இருவரும் சமவயதினர். வீராவின் வசன உச்சரிப்பு கதாபாத்திரத்தின் உடல் மொழி என ஒவ்வொன்றாக கோபு நிதானமாக நடித்துக் காண்பித்தார். வீரா படிபடியாக புரிந்து கொண்டான்.

முதலில் ஒத்திகை பார்த்தனர். வீராவிற்கு அது கடினமாக இல்லை. அவனுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.

இரண்டு நாள் பயிற்சிக்குப் பின்னர் மாலையில் நாடகம் அரங்கேறியது. முதன் முதலில் மக்கள் முன் வீரா தோன்றப் போகிறான். வீராவிற்குப் பதட்டமாக இருந்தது.

பெண் வேடமிட்ட ஆண்களை அவர்கள் பெண்களாக பாவித்து மரியாதையாக நடத்தினார்கள். பெண் வேடம் போட்டவரிடம் தள்ளி நின்று பேசினார்கள்.

என்னதான் ஆண்கள் பெண் வேடம் போட்டாலும் அவர்களுக் கென்று தனி அறையில்தான் ஆடை அலங்காரம் நடைப் பெற்றது. வீராவின் மனதில் அனைத்தும் பதிந்தன. மலைப்பாக இருந்தது.

முதல் முறை மேடையில் அத்தனை மக்களைக் கண்டவனுக்கு நடுக்கமாக இருந்தது. பதட்டத்தால் சில இடத்தில் வசனங்களை மறந்துவிட்டான். ஆனால் திரைக்குப் பக்கவாட்டில் மறைவாக நின்ற கோபுவின் ஆட்கள். அவனுக்கு வசனத்தை எடுத்துக் கொடுத்தார். வீராவின் முதல் முயற்சி என்பதால் கோபு ஏற்பாடு செய்திருந்தார்.

நாடகத்தில் அவன் பங்கு முடிந்ததும் அறைக்குத் திரும்பினான். தன்னை கண்ணாடியில் அப்போதுதான் சரியாக பார்த்தான். மிகவும் அழகாக தெரிந்தான். அதுவும் பெண்ணின் நளினத்தை மிக கச்சிதமாகப் பறைசாற்றியது அவன் உருவம்.

அறையில் யாருமில்லை கண்ணாடி முன் இப்போது வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு பேசினான். நேர்த்தியாக வந்தது. மேடையில் இப்படிப் பேசவில்லையே என வருத்தமாக இருந்தது. இனி தனக்கு வாய்ப்புக் கொடுப்பார்களா? என அவனுள் அச்சம் எழுந்தது.

கோபு அறைக்கு வந்தார் “வீரா உன் நடிப்பு நல்லா இருந்தது” என்றார். அது சம்பிரதாய பேச்சு .. தான் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் கூறுகிறார் என அவனுக்குப் புரிந்தது.

“மன்னிக்கனும்” எனத் தலை குனிந்தான் வீரா

“சரி வருத்தப்படாத முதல் தடவைல அதான் .. இனி சரியா செய்யணும்” என்றார்.

எனில் மீண்டும் தனக்கு வாய்ப்பு உண்டா? என நினைத்ததும் கண்கள் பளிச்சிட்டன.

“உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க போய் பாரு” என்றுவிட்டுச் சென்றார். வீரா திறமை மிக்கவன். அவனை நன்கு பட்டை தீட்டி ஜொலிக்க வைக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டார்.துள்ளிக் குதித்து நாடக நடிகர்களுக்காக உள்ள தனி வழியில் சென்றான். நாடகம் இன்னும் முடியவில்லை. ஆதலால் வெளியே யாருமில்லை.

இருட்டில் யாராக இருக்கும் என பார்த்தவன் கன்னத்தில் பளார் என அரை விழுந்தது. அடியின் தாக்கத்தால் சுருண்டு கீழே விழுந்தான். மயக்கம் வருவது போல இருந்தது. தலை சுற்றியது.

தள்ளாடியபடி எழுந்து நின்றான். “ச்சீ . . நீ எனக்கு மகனும் இல்ல . . நான் உனக்கு அப்பாவும் இல்லை .. என்வரையில நீ செத்துட்ட” என வீராவின் தந்தை கோபமாக திட்டித் தீர்த்தார்.

வீராவின் நண்பர்கள் சிலர் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். கண்கலங்கிய வீரா “அப்பா” என ஏதோ சொல்ல எத்தனிக்க

“என்னோடு பேசாத . . என் வீட்டு வாசல்படிய இனி நீ மிதிக்க கூடாது” என்றவர் விறு விறுவென நடந்து இருட்டில் மறைந்தார்.

“அப்பா . . அப்பா” என அழைத்தவனுக்கு எந்த பதிலும் கிட்டவில்லை.

நண்பர்கள் வீராவை உள்ளே அழைத்து வந்து பருக தண்ணீர் கொடுத்தனர். அவன் மனம் சமாதானம் அடையவில்லை. கண்ணீர் பெருகியது. மனதளவில் தளர்ந்துவிட்டான்.

“விடு வீரா நம்ம வீடுகள்ல நாம நடிக்கிறது பிடிக்கலதான் . . சரியாயிடும் . . கவலப்படாத” என தேற்றினார்கள்.

விஷயம் அறிந்து வீராவின் மாமா ஓடோடி வந்தார். அவனை அணைத்தபடி “நான் எதிர்பார்த்தது நடந்து போச்சு” என கண்கலங்கினார்.

“வீரா நீ முடிவு எடுக்கும் நேரம் வந்தாச்சு உனக்கு வேண்டியது நடிப்பா? படிப்பா? உடனே சொல்லு. படிக்கணும்ன இப்பவே கிளம்பு” என்றார். அவர் குரலில் உறுதி மிகுந்தது.

சற்று நேரம் சிந்தித்த வீரா கண்களை துடைத்தபடி “என் வாழ்க்கை முழுக்க நான் நடிக்கணும்” என்றான்.

மீண்டுமாய் “எல்லா வழியிலும் மேடு பள்ளம் இருக்கும். ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து பின்வாங்க கூடாது. இங்க நடிக்க வாய்ப்பு கிடைக்காம போலாம். போட்டி பொறாமை இருக்கலாம். அதனால யோசி” என்றார். அவன் நலனில் அக்கறை உள்ளவராய்.

அவர் பல நபர்களை கண்டுள்ளார். நடிப்பு துறையை தேர்ந்தெடுத்த பின் வாய்ப்பு இல்லாமல் “நான் நடிக்க வந்ததே தவறு” என்று புலம்புவார்கள். அந்த நிலைமை வீராவிற்கு வரக் கூடாது என ஆதங்கப்பட்டார்.

ஆனால் வீரா உறுதியாக நடிப்பை தன் சுவாசமாகவே கருதினான். ஒரு தந்தையாக தன் மகன் மீதுள்ள அக்கறையில் அவன் தந்தை இப்படி செய்துள்ளார் என்பது நன்றாகவே புரிந்தது. காலம் எல்லாவற்றையும் மாற்றும் என நம்பினான்.

வத்சனும் கோபுவும் அவனுக்கு பல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தனர். அவன் நடிப்பு மெருகேறியது.

நாடகம் என்பது ஏதோ மேடையில் நின்று நான்கு வசனம் பேசுவது மட்டும் அல்ல. கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அனைவரின் கண்களும் நாடக கலைஞர் மேல்தான் இருக்கும் அதனால் ஏற்க்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

வசனம் மறந்தால் தலையை சொரிந்தபடி முழிக்காமல் கதாபாத்திரம் மற்றும் கதைக்கு ஏற்ப தானே வசனம் பேச வேண்டும். தனக்கடுத்த கதாபாத்திர நபர் மேடைக்கு வர நேரம் ஆனால் அதுவரை சும்மா இருக்காமல் பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்ப வேடிக்கையாக அல்லது கருத்துகள் என்று எதையாவதுச் சொல்லி சமாளிக்க வேண்டும். இப்படி பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டான்.

காலம் உருண்டோடியது. வீராவின் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அபாரமாக நடித்தான். வாழ்க்கை வண்ணமயமாய் ஆனது.

வத்சனுக்கு தனிப்பட்ட அரங்கம் என்று இல்லை. அதனால் நாடக குழுவுடன் ஊர் ஊராக சென்று நாடகம் போடுவார்கள். மொத்த நாடக குழுவும் வெவ்வேறு ஊருக்கு பயணமாவார்கள். குழுவில் அனைவரும் ஆண்கள்.

வத்சனின் மனைவி மற்றும் மகள் இருவரும் சேர்ந்து செல்வது வழக்கம். கோபுவின் குடும்பம் அவ்வபோது சேர்வதும் பின் வேறு எங்காவது செல்வதும் உண்டு.

என்ன பிரச்சனை வந்தாலும் நாடகம் மட்டும் சொன்ன தேதியில் அந்த இடத்தில் நடந்துவிடும். ஆரம்பகாலத்தில் வீராவிற்கு மூன்று வேலை சாப்பாடு மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது.

மாதங்கள் செல்லச் செல்ல கதாபாத்திரத்திற்கு ஏற்ப பத்து ரூபாய் சம்பளம் ஆனது. முதல் மாத சம்பளம் வாங்கிய போது வீராவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்பட்டது.

மற்றொரு ஊருக்கு அனைவரும் பயணமானார்கள். வீராவும் அவன் நண்பர்களும் தங்களின் துணி மூட்டைகளுடன் கிளம்பினார்கள். ஐந்து மாட்டு வண்டிகள். பெண்கள் மற்றும் வயதானவர்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் .. நாடக ஆடை அலங்கார பொருட்கள் போன்றவை மாட்டு வண்டியில் வர இளசுகள் பேசி சிரித்தபடி கூடவே நடந்து வந்தனர்.

ஊர் எல்லை தாண்டி கிராமத்தினுள் பிரவேசித்தனர். அந்த கிராமம் அத்தனை ரம்மியமாக காட்சியளித்தது. சிலுசிலுவென அருவியும் மரங்களும் கண்களுக்கும் மனதிற்க்கும் விருந்தாக இருந்தது.

வீரா மனதில் ஆசை துளிர்விட தன் நண்பன் பீமனிடம் “பீமா நான் அலுப்பு தீர அருவியில் குளித்துவிட்டு வருகிறேன்.” கிசுகிசுத்தான்.

“கோபு ஐயா கேட்டா? . . ஐயோ என்னால் சமாளிக்க முடியாது” புருவத்தை உயர்த்தி முறுக்கிக் கொண்டான் பீமன்.

“நாடகத்துக்கு வசனம் எழுதும் உனக்கு . . இது என்ன பிரமாதம்?” என்று அவனை உச்சிகுளிர வைத்ததும்.

“சரி சீக்கிரமா போயிட்டு வா” என்றான் பீமன்.

நண்பனிடம் விடைபெற்று தன் துணி மூட்டையுடன் மெதுவாக கூட்டத்தில் பின்னே சென்று தப்பித்தான்.

மலையிலிருந்து நிலத்தை அடைய அருவி தாவி குதித்து கீழ் நோக்கி பாய்ந்தது. நிலத்தை அணைத்து முத்தமிட்ட அருவி . . நாணத்தினால் அமைதியாக ஓடியது. ஒருபுறம் அருவி மறுபுறம் மனித நடமாட்டம் அற்ற வனாந்திரம்.

அருவியைக் கண்டதும் வீரா தன் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியபடி சாரல் நீர் மற்றும் குளிர்ந்த காற்றை கண்மூடி சில வினாடிகள் அனுபவித்தான்.

பிறகு சட்டையை கழுற்றி வேஷ்டியை கச்கம் போல சொருகினான். சிறுவனலிருந்து வாலிப பருவத்தை எட்டிப் பிடிப்பவனாய் இருந்தான். வீராவின் அகண்ட மார்பும் புஜங்களும் அவன் பெயருக்கு ஏற்ப காட்சியளித்தன.

நடிப்பு துறையில் இருபதால் வயிறு தொந்தி இல்லாமல் ஒட்டி இருந்தது. சுருள் சுருளான கேசமும் லேசாய் எட்டிப் பார்க்கும் மீசையும் முகத்தை வசீகரமாக்கியது.

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் தண்ணீரில் குதித்தான். உடல் பொருள் ஆவி என அனைத்தும் மறந்து இயற்கை அன்னையோடு கொஞ்சி மகிழ்ந்தான். எத்தனை நேரம் அப்படி இருந்தானோ அவனுக்கே தெரியவில்லை.

“வீல்ல்ல்” என்று ஒரு பெண்ணின் அலறல் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தவன் அவசரமாக கரை ஏறினான்.

அழகான பெண்ணொருத்தி தலைவிரி கோலமாய் ஓடிவந்தாள். மானை வேட்டையாட துடிக்கும் சிங்கத்தைப் போல பின்னே ஒரு காமூகன் அவளை துரத்தியபடி வந்தான்.

அந்த பெண்ணின் முகத்தில் எப்படியாவது தன் பெண்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதி இருந்தது. அவன் அவளை அருகே நெருங்க நெருங்க அவள் சட்டென கீழே தடுமாறி விழுந்தாள் பின்பு சமாளித்து எழுந்தாள்.

அவள் செய்கையைக் கண்டு அவன் பலமாக சிரித்தான். அவன் எதிர்பாரா நொடியில் தன் கையிலிருந்த மண்ணை அவன் கண்ணில் தூவினாள்.

இப்போது அலறுவது அவன் முறை ஆயிற்று. அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அங்கிருந்த பெரிய மரகட்டை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள். அவன் கீழே விழுந்தான் பின்பு தன் ஆத்திரம் தீரும் வரை அவனை அடித்து துவைத்தாள்.

அவள் கீழே தடுமாறி விழுவில்லை வேண்டுமென்றே மண்ணை எடுக்க விழுந்தாள் என்பது பிறகுதான் வீராவிற்கு புரிந்தது. அவளின் சமயோசித புத்தி வீராவை வியக்க வைத்தது.

சரிந்து அமர்ந்தவள் தன்னையும் மறந்து அழுதாள். வீராவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கீழே விழுந்தவனின் முனகல் சத்தம் கேட்கவே மீண்டும் அவனுக்கு பல அடிகள் விழுந்தன. அவன் மயக்கம் அடைந்தான். அவள் பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்.

வீரா அவளின் ஆடை ஆங்காங்கே கிழிந்திருந்ததை கண்டான். அவள் நிலையை உணர்ந்தான். காமூகனிடம் அவள்ப் போராடித் தன்னை காத்துள்ளாள் எனப் புரிந்தது.

அவள் முன்னே செல்ல தயக்கமாக இருந்தது. அவன் துணி மூட்டை அவளுக்கு பின்னால் இருந்ததால் அப்படியே தன்வழியில் செல்லவும் முடியாது.

வேறு வழி இல்லாமல் இரண்டடி எடுத்து வைத்தான். காய்ந்த சருகில் அவன் பாதம் பட்டதால் சத்தம் கேட்டது. சர்ப்பத்தைப் போல சட்டென திரும்பியவள் மரகட்டையை மீண்டும் எடுத்தாள்.

“நான் அருவியில் குளிக்க வந்தேன்” என வீரா தட்டுதடுமாறி சொல்லி முடித்தான்.

அவள் கண்களில் துளியும் நம்பிக்கை இல்லை.

“என் துணி மூட்டை” என அவளுக்கு பின்னிருப்பதை கைக்காட்டினான்.

அவள் மிக ஜாக்கிரதையாக அவன் மேல் கண்ணை வைத்தபடி மூட்டையை எடுத்து அவனிடம் வீசினாள்.

அதை பிடித்தவன் மறைவிடம் சென்று ஆடை மாற்றிக் கொண்டான். பின் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான். அவளை தனியே வனாந்திரத்தில் விட மனமில்லாமல் “ உன் வீடு எங்க? துணைக்கு வரவா?” எனக் கேட்டான்.

தன்னிலை வந்தவள் அப்போதுதான் வீராவை கவனித்தாள். பொய் உரைப்பவன் போல அவளுக்கு தோன்றவில்லை. இருப்பினும் நம்ப இயலாமல் மௌனம் காத்தாள்.

“இந்த வனாந்திரத்துல மனித சஞ்சாரமே இல்லை. இரவில் விலங்குகள் நடமாட்டம் இருக்கலாம்” என்றவன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

அவள் முகத்தில் சிறிது மாற்றம். அச்சம் குழப்பம் நம்பிக்கையின்மை என மனப் போராட்டமானது.

“நான் உன்ன தவறான கண்ணோட்டத்தில் பார்க்கல. உன்னை காப்பாத்த நினைக்கிறேன். இது என் அம்மா மேல் சத்தியம்” என்றான்.

கீழே சிதறியிருந்த தன் துணிகளை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டாள். அவனை நோக்கி வந்தாள் கையில் மரக்கட்டையுடன். அவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டபடி முன்னே சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் “உன் பேர் என்ன? எந்த ஊர்?” எனக் கேட்டான்.

கண்ணகிப் போல காட்சியளித்தவளிடம் எந்த பதிலும் இல்லை. அவள் சொல்ல விரும்பவில்லை என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.

“சரி எதுவும் சொல்ல வேண்டாம் . . இனி நீ எங்க போகணும் அதையாவதுச் சொல்லு. . உன்னை அங்க பத்திரமா விடறேன்”

அவள் பதில் கூறவில்லை.

“பதில் சொல்ல மாட்டயா?” அவன் குலரில் சலிப்பு தென்பட்டது.

“தெரிந்தா சொல்லாமல் இருப்பேனா?” அவள் முதல் முறையாகப் பேசினாள்.

ஆச்சரியமாய் அவளை பார்த்தான்.

“உன் பெயர்?” எப்படியும் அவள் சொல்லப் போவதில்லை என நினைத்தவனுக்கு அடுத்த நொடியே

“கார்குழலி” என பதில் வந்தது.

“உன்னோட யாரும் இல்லையா . . உன் கணவன்?”

“என் கணவர் செழியன் இறந்துவிட்டார்”

திரை விலகும் . . .

 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 7
Story pic.jpgசினிமா
கிசுகிசு

தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ஆர். நடராஜ முதலியார் அவர்கள். முதல் முறையாக 1916ல் பெங்களுரில் திரைப்பட ஸ்டுடியோவை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் இந்தியா பிலிம் கம்பெனி.

1918ல் கீசக வதம் என்னும் பேசாப் படத்தை எடுத்தார். மெளன படம் என்பதால் பார்ப்பவர்களுக்குப் புரிவதற்காக. அப்படத்திற்குத் தனி புரெஜக்டர் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் காட்டப்பட்டது.

இதை எழுதியவர்கள் பிரபல மருத்துவர் திரு. குருசாமி முதலியார் மற்றும் திரு.திருவேங்கட முதலியார். பின்னர் ஹிந்தி சப்-டைட்டிலை மகாத்மா காந்தி அவர்களின் மகன் திரு. தேவதாஸ் காந்தி அவர்கள் எழுதினார்.***************

வீராவின் மனம் குழலி சொன்ன வார்த்தைகளால் கனத்தது. அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இனி இவள் வாழ்க்கை என்ன ஆகும்? எப்படி இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளப் போகிறாள் என மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன. அவளுக்கு உதவ வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

குழலியின் பார்வையிலும் தோற்றத்திலும் கம்பீரம் இயல்பாக தென்பட்டது. அவளின் நிலையால் அவள் துவண்டதாகத் தோன்றவில்லை. தான் சாதிக்கப் பிறந்தவள் என மற்றவருக்கு அறைகூவல் விடுவதைப்போல தான் அவனுக்குத் தோன்றியது.

அவளின் முதல் எதிரி அவள் அழகு . . கூந்தலை அள்ளி முடிந்து பூச்சூடவில்லை. பொட்டிட்டு மையிடவில்லை. விலை உயர்ந்த ஆடை ஆபரணம் இல்லை. இருப்பினும் அவள் அழகில் குறைவில்லை குறையுமில்லை.

கார்குழலி வீராவுடன் மௌனமாக நடந்தாள். எந்த நம்பிக்கையில் இவனுடன் பயணிக்கிறோம் எனத் தன்னையே கேட்டு கொண்டாள். அவள் கையில் பிடித்திருந்த மரக்கட்டை மேலிருந்த அழுத்தம் சற்றே குறைந்தது.

ஒரு மாதத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் அவள் மனதில் முள்ளாய் குத்தியது.

“கல்யாணம் முடிஞ்சி இத்தன நாள் ஆகியும் இன்னும் நீ உண்டாகல” என மாமியார் எப்பொழுதும் போலச் சத்தமிட்டபடி வேலை செய்துக் கொண்டிருந்தார்.

“நீ இப்படி மினுக்கிட்டு இல்லாம காலகாலத்துல குழந்தை பெத்துகல . . உன்னைத் தள்ளி வெச்சிட்டு செழியனுக்கு வேற கல்யாணம் பண்ணிடுவேன்” என விடாமல் பொரிந்து தள்ளினார். அவரின் மறைமுக மிரட்டல் அவளுக்குப் புரியாமல் இல்லை.

குழப்பமான மனநிலையில் இருந்தாள் குழலி. தான் ஏன் இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லை என அவளுக்கே தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. மாமியாரின் பேச்சு எரிச்சலை உண்டாக்கியது. ஆனால் மறுமொழி பேசவில்லை.

செழியனுக்கு தன் மேலிருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது என்பது நன்றாகவே அவளுக்குப் புரிந்துப் போயிற்று. இரவில் அவளை நாடுவதில்லை. மனதாலும் உடலாலும் தள்ளி போனான்.

தன் தாயுடன் சேர்ந்து அவளை தினமும் வசைப்பாடுவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. அவனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது எனச் சில தகவல்கள் அவளை வந்தடைந்தது. ஆனால் அதைப்பற்றி செழியனிடம் எதுவும் கேட்கவில்லை.

அவளுக்கென்று ஒரு ஜீவன் உலகில் இல்லை என்று நினைக்கையில் வேதனையாக இருந்தது. மறைந்த தன் தாயை நினைத்து கண்ணீர் சிந்தாத நாளில்லை எனலாம்.

இந்த நிலையில் செழியன் தன் நண்பர்களுடன் வேறொரு ஊருக்கு உல்லாசப் பயணமாகச் சென்றிருந்தான். அவன் நண்பர்களுடன் அல்ல அவன் காதலியுடன் சென்று உள்ளான் என குழலிக்கு தெரியும்.

அங்கே ஆற்றில் குளிக்கும் போது அதில் மூழ்கி உயிரிழந்தான் எனத் தகவல் வந்தது. குடும்பமே ஆடிப் போனது.

குழலி செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியில் அழக் கூட முடியாமல் துவண்டாள். அதைப் பார்த்த மாமியார் “உன் புருஷன் செத்துட்டான் உனக்கு அழுகை வரல . . அவன் மேல பாசம் இருந்தாதானே அழத் தோணும்” எனத் தவறாகப் புரிந்து கொண்டு அவளைப் பழித்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினார்.

“நீ என் மருமகளே இல்ல . . உனக்கு சடங்கு சம்பிரதாயம்னு எதுவும் செய்ய மாட்டேன் . . முதல்ல இங்கிருந்து போ . . செழியன் பொணத்த கூட நீ பார்க்கக் கூடாது” என விரட்டினார்.

மகன் மரணத்தை ஏற்க முடியாமல் பித்து பிடித்தவர் போல தன் மருமகளை கோபத்திற்கு இரையாக்கினார். மாமியாரின் மனதைப் புரிந்த அண்டை வீட்டார் குழலியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவளும் என்ன செய்வாள் பாவம் என்றுதான் அவர்களுக்கு தோன்றிற்று.

மறுநாள் சிலரின் உதவியால் செழியனின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப் பட்டது. அங்கு குழுமியிருந்தவர்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். குழலி வீட்டிற்கு செல்ல முற்பட மீண்டும் மாமியார் சண்டையிட்டு அவளை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

செழியனின் காரியம் முடியும்வரை அண்டை வீட்டில் இருந்தாள். பின்பு எங்கே செல்வதென்றே தெரியாமல் குழம்பினாள்.

குழலிக்கு செழியன் மேல் பாசமும் பரிவும் உண்டு. ஆனால் செழியன் அவளிடத்தில் அன்பு கனிவு காதல் என மென்மையான எந்த உணர்வையும் காட்டியதில்லை. காமம் மட்டுமே பிரதானமாக இருந்தது. அவன் வரையில் மனைவி என்பவள் குழந்தை பெற்று தரும் இயந்திரம். சமீப காலமாக அவன் இயந்திரத்தில் பழுது என்ற எண்ணம் அவன் ஆழ் மனதில் அவன் அன்னையால் பதிய வைக்கப்பட்டுவிட்டது.

ஆதலால் அவன் இழப்பு அவளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கணவன் என்பவன் இறந்துவிட்டால் அந்த பெண்ணை அக்கால சமூகம் எப்படி நடத்தும் என்னும் அவலம் தன் தாயை கண்டே தெரிந்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

குழலியின் ஆடைகளை அவள் மாமியார் குப்பையில் எரிந்தார். அதனுடன் செழியனின் ஆடைகளும் இருந்தன. குழலி அனைத்தையும் எடுத்துக் கொண்டாள்.

அடுத்தவர்களுக்கு தொந்தரவாய் இருக்க பிடிக்காமல் அடுத்து வந்த நாட்களில் வெளியேறினாள். தன் தாலி , மெட்டி போன்ற மங்களப் பெருட்களை ஆற்றில் நீராடி அவைகளை விட்டுவிட்டாள். நெற்றி குங்குமமும் அழிந்தது.

எங்கே செல்வதென்றே தெரியாமல் கால் போன போக்கில் நடந்தாள். தன் கனவு லட்சியம் அனைத்தும் தகர்ந்து பாதாளத்தில் விழுந்ததுப் போன்ற உணர்வு.

ஊர் எல்லையை தாண்டும் தருணத்தில் “அக்கா” என்றொரு குரல் அழைத்தது. திரும்பிப் பார்த்தாள் ஊர்ச் சிறுவன் “உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க” என கசங்கிய தாளை அவளிடம் திணித்துவிட்டு ஓடிவிட்டான்.

“உன் நகைகள் என்னிடம் பத்திரமாக உள்ளது. அவை என்றுமே உனக்குதான். காலம் கனியும் போது உன்னிடம் கொடுக்கிறேன்” என அவள் மாமனார் எழுதியிருந்தார்.

அதைப் பார்தது அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. அவளுக்கு நகைகளின் மேலிருந்த நாட்டமே குறைந்துவிட்டது.

தன் மாமனார் யாருக்கும் தெரியாமல் இதை செய்திருக்கிறார் எனப் புரிந்தது. அவருக்கு மனமார நன்றி கூறினாள்.

அவள் உள்மனமோ இது உனக்கு கிடைத்த மறுபிறவி . . இனி நீ நினைத்ததை செய்யலாம் என்றது. ஆனால் கைம்பெண்ணான தன்னால் என்ன செய்ய முடியும்? என்ற குழப்பமும் இருந்தது.

தனிமையும் வெறுமையும் அவளை பாடாய்ப்படுத்தியது. இரவை கோயிலில் கழித்தாள். காலையில் மீண்டும் பயணத்தை மேற்க்கொள்டாள்.

வனாந்திர பகுதியில் வருகையில் தான் காமுகனிடம் மாட்டிக் கொண்டாள். அசுரனை வதைப்பதுப் போல அவனை வீழ்த்தினாள்.

வீராவுடன் செல்கையில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாள்.

“உன் வீடு இங்க இருக்கா?” குழலி கேட்க

“இல்லை” என தன் சரித்திரத்தை வேகமாகச் சொல்லி முடித்தான்.

“நீ நாடகத்தில் வேஷம் கட்டுறியா?” என அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

“ஆம்” என்றான் பெருமையாய் விரிந்த புன்னகையுடன். அவள் கேள்வியில் இருந்த ஆச்சரியம் அவனுக்கு பிடித்திருந்தது. சிலர் அவனை “வேஷம் கட்டுபவன் தானே” என ஏளனமாக பார்த்துள்ளனர்.

“எனக்கு நாடக கம்பெனில வேஷம் கிடைக்குமா?”ஆர்வமாகக் கேட்டாள். தான் ஏன் அப்படி கேட்டோம் என அவளுக்கு வியப்பாக இருந்தது.

“அச்சோ . . அங்க எல்லாரும் ஆண்கள்தான் . . பெண் வேஷம் போடுறவங்களும் ஆண்கள்தான்” என்றான்.

“பெண்களுக்கு இடமில்லையா?”

“ம்கூம்” என இடமும் வலதுமாய் தலையாட்டினான்.குழலி ஒரு நிமிடம் நின்றவள் சட்டென வந்த வழியே மீண்டும் வேகமாக ஓடினாள்.

“இவளுக்கு என்ன ஆனது?” என வீரா பின்னால் ஒடினான்.

காமுகன் வீழ்ந்த இடத்திற்கு வந்தாள். அவன் இன்னமும் அப்படியே வீழ்ந்திருந்தான். அவனருகில் சென்று ஆராய்ந்தாள் “கிடைத்தது” என்றாள்.

“எது?” வீரா புரியாமல் கேட்க

அவனருகிலிருந்த அவனுடைய சிறிய கத்தியை எடுத்தாள்.

“இது எதுக்கு?“ அலறினான் வீரா

அவள் சட்டென யோசிக்காமல் தன் நீண்ட கேசத்தை வெட்டத் தொடங்கினாள்.

“உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” வீரா கத்தினான். தடுக்க அருகே சென்றவனை கத்தியை காட்டி மிரட்டினாள் “தள்ளி நில்” என்று.

பின்பு வீராவை அங்கேயே காத்திருக்கச் சொல்லி மறைவான இடத்திற்குச் சென்றாள். சில நிமிட காத்திருப்பிற்கு பின் குழலியை கண்டவன் அதிர்ந்துப் போனான்.

செழியனின் வேட்டி சட்டை மற்றும் குட்டை முடியுடன் அவளை காண ஆண்மகன் போலவே இருந்தது.

“அற்புதம்” என தன்னையும் மறந்து வீரா உதடுகள் உச்சரித்தன.

ஆண் குரலில் “இப்போது இந்த ஆண்மகனுக்கு உங்கள் நாடக கம்பெனியில் வேஷம் கிடைக்குமா?” என குறும்பாக கேட்டாள். அவள் சிரிக்கும் போது அழகாய் இருந்தாள்.

“ஆண்மகன்” எனச் சொல்கையில் தன்னையேச் சுட்டிக் காட்டினாள். இருவரும் சிரித்துவிட்டனர். குழலி கண்களில் நீர் தழும்புமளவு சிரித்தாள்.

சமீபத்தில் கணவனை இழந்த கைம்பெண் இப்படியா சிரிப்பது? என அவள் மனசாட்சி கேள்வி எழுப்பியது. அதை அவள் மனம் அடக்கியது.

இருவரும் ஊருக்குள் பிரவேசித்து வீராவின் ஜாகையை நோக்கி நடந்தனர். வரும் வழியில் குழலி தன் கதையை சொன்னாள்.

அடங்காபிடாரி கைம்பெண் மலடி எனப் பல பட்ட பெயர்களை இந்த சமூகம் அவளுக்கு வாரி வாரி வழங்கி உள்ளது. இனி இந்த சமூகத்தை தான் ஏமாற்றப் போகிறேன் என தனக்குள் சூளுரைத்தாள்.

நாடக கொட்டகை அருகே இருவரும் வர ஒருபெண் தடாலென இருவருக்கும் முன் மரத்திலிருந்து விழுந்தாள். அது வத்சனின் மகள் செவ்வந்தி.

“ஆஆஆ” என சத்தமிட்டபடி எழு முயன்றாள் செவ்வந்தி.

“மரத்திலிருந்து கனி விழுந்து பார்த்திருக்கிறேன் . . இங்கு கன்னி விழுகிறதே” என குழலி வசனம் பேசினாள். நாடக கம்பெனியில் சேர வேண்டும் என்னும் உந்துதலால் . .

“முதல்ல அவளை கவனி . . எங்க முதலாளி பெண்” என வீரா கிசுகிசுத்தான்.

குழலி அவளை எழுப்பினாள். கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டாள் “அடி பட்டிருக்கா?” என்று வினவ

“ஒரு ஆண் இப்படிதான் என் கையை பிடிப்பதா?” என சுள்ளென செவ்வந்தி கேட்டதுதான் தாமதம்

வீரா குழலி இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொண்டனர். பொங்கி வந்த சிரிப்பை சிரமத்துடன் அடக்கி . . “ஆபத்துக்கு பாவமில்லை” என குழலி எதோ சொல்ல வேண்டுமென சொன்னாள்.

செவ்வந்தி வத்சனின் கடைசி மகள். அவளுடைய மூன்று அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. இவள் ஒயாமல் பேசும் வாயாடி அதனால் பார்த்த மாப்பிள்ளை பையன்கள் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டனர்.

வீரா அவளுடன் பேசியதில்லை. தொலைவிலிருந்துப் பார்த்திருக்கிறான். அனைவரிடமும் குறும்பாக சிரித்து பேசுவாள். ஆனால் நெருப்பை போன்றவள். அசடு வழியும் வாலிபருக்கு தக்க தண்டனையும் அளிப்பாள். அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும் வீராவிற்கு. ஆனால் தன் நாடக முதலாளியின் மகள் என்பதால் அவளிடம் பேசவே தயங்குவான்.

செவ்வந்தி குழலியை கண்ணிமைக்காமல் பார்த்தாள். முதலில் கையை பிடித்தது கோபமாக இருந்தாலும். அதில் தீய எண்ணம் இல்லை என்பது புரிந்தது.

சீரில்லா தலைமுடி, கம்பீரமான உடல் வாகு, செதுக்கிவைத்தாற் போன்ற முகம். யார் இந்த அழகன்? என தன்னை கேட்டுக் கொண்டாள்.

“உன் பெயர் என்ன?” செவ்வந்தி குழலியைக் கேட்க

“என் பெயர் கு . .கு . .” என குழலி சட்டென என்ன சொல்வது என முழிக்க

“குமரன்” வீரா காப்பாற்றினான்.

“உன் பெயர் கூட உனக்கு தெரியாதா?” செவ்வந்தி வம்பிழுக்க

“உன் அழகில் என்னை நானே மறந்துட்டேன்” என சும்மா குழலி சொல்லி வைத்தாள். ஒரு பெண்ணை நீ அழகாக இருக்கிறாய் என்று சொன்னால் போதும் அவர்கள் மேலும் கேள்வி கேட்டு துளைக்க மாட்டாள் என்பதற்காக குழலி இப்படி கூறினாள். ஆனால் அது செவ்வந்தியிடம் நடக்காது எனத் தெரியவில்லை.

அதை தவறாக புரிந்துக் கொண்ட செவ்வந்தி முகம் நாணத்தால் சிவந்தது. தன்னை சமாளித்தவளாக “ குமரா என் கையை பிடித்ததால் உனக்கு தண்டனை உண்டு” விடாபிடியாக செவ்வந்தி கூற

குழலி கலங்கிப் போனாள். வீரா அவளை மீண்டும் காக்க “நீ ஏன் மரத்திலிருந்து விழுந்த?” எனக் கேட்டு பேச்சை திசை திருப்பினான்.

“மாங்காய் பறிக்க” மெத்தனமாக பதில் வந்தது.

“கல் எடுத்து அடித்தால் மாங்காய் விழப் போகிறது . . இதுக்கு மரத்தில் ஏறனுமா?” குழலி கேட்க

“கல்லால் அடித்தால் மாங்காய்க்கு வலிக்காதா?” செவ்வந்தி கேலியாக புருவத்தை உயர்த்தி சிரித்தபடி வினவ.

அவளை ஆவென வீரா பார்த்தான். இப்படியெல்லாம் அவனிடம் யாரும் பேசியதில்லை.

“அது சரி கல்லால் அடித்தால் வலிக்கும் . . பல்லால் கடித்தால் இந்த ஊர் மாங்காய்க்கு வலிக்காது போல” என குழலி முணுமுணுக்க

“என்ன சொன்ன?” இருவிழிகளையும் உருட்டியபடி செவ்வந்தி கேட்க

“ஒண்ணுமில்லையே” குழலி சமாளித்தாள்.

“சரி இன்னைக்கு எங்கள் வீட்டு வேலை எல்லா நீதான் செய்ய வேண்டும். என்னுடன் வா. அதுதான் உனக்கு தண்டனை” என்றாள்.

வீராவிற்கு இந்த தண்டனை நிம்மதியை அளித்தது. குழலியை தன் ஆண் நண்பர்களுடன் தங்க வைக்க முடியாது. அவளுக்கு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

செவ்வந்தி அவள் தாயும் வசிக்கும் ஜாகையில் குழலி இருப்பதுதான் அவளுக்கு பாதுகாப்பு என நினைத்தான்.

செவ்வந்தி தன் மாங்காய்களுடன் முன்னே நடந்தாள்.

“குழலி இவளோட சினேகிதம் ரொம்ப முக்கியம். செவ்வந்தி மூலமா நாடகத்துல நடிக்க வாய்ப்பு கேட்கலாம். ஆனா ஜாக்கிரதையா இரு” என்றான் வீரா

அதற்குள் “வீரா சீக்கிரம் வா” என அவன் நண்பர்கள் நாடக கொட்டகையிலிருந்து அழைத்தனர்.

செவ்வந்தி குழலி பின்த் தொடர்கிறானா(ளா) என திரும்பிப் பார்த்தாள்.

“நாளை பார்க்கலாம்” என வீரா குழலியிடம் சொல்லிவிட்டு . . செவ்வந்தியிடம் மரியாதையுடன் தலையசைத்து தன் நண்பர்கள் இருந்த திசையை நோக்கிச் சென்றான்.

செவ்வந்தி குமரனை தன்னுடன் வருமாறு செய்கை செய்து முன்னே நடந்தாள். குமரன் பின்த் தொடர்ந்தான்(ள்).திரை விலகும் . . .


 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 8


சினிமா கிசுகிசு

1938ல் ராஜதுரோகி என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக ட்ரூகலர் என்று சொல்லபடக்கூடிய (Sepia வண்ணம் என்றும் இதைச் சொல்வார்கள்) வண்ணத்தில் வெளியானது. இயற்கை வர்ணக் காட்சிகள் அடங்கிய முதல் திரைப்படம் என்று பட விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.

அதாவது அதுவரை வெள்ளை திரையில் கருப்பு வண்ண ஒளிபாய்ச்சப்பட்டே திரையில் படம் தெரியும். இந்த படத்தில் கருப்புக்கு பதிலாக பிரவுன் நிறம் பயன்ப்படுத்தப்பட்டது.

புராணம் மற்றும் சரித்திர படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் இப்படம் சமூகக்கதையாக எடுக்கப்பட்டது.


*******************வீரா தன் நண்பர்களுடன் சேர்ந்து நாடக ஒத்திகை பார்ப்பது. வசனத்தில் திருத்தம் என்று பொழுதை கழித்தாலும் குழலி என்ன பாடுபடிகிறாளோ? என்ற எண்ணம் மனதை குடைந்துக் கொண்டே இருந்தது.

செவ்வந்தி சிறுபிள்ளை தனமாக ஏதேனும் செய்து, குழலி மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. வீரா வத்சனிடம் குழலி என்ற குமரின் நாடக அபிலாஷைப் பற்றி கூறினான். அவர் மௌனமாக இருந்தார். அவர் சிந்தித்து முடிவெடுக்கட்டும் என வீரா நகர்ந்தான்.


குமரனாக உருவெடுத்த குழலி செவ்வந்தியின் வீட்டைக் கண்டு அதிசயித்தாள். அழகாக அடுக்கிய அளவான பொருட்கள் இருந்தன. ஊர் ஊராக அவ்வப்பொழுது நகர வேண்டும் என்பதால் மிகவும் அவசியமான பொருட்களை மட்டுமே வைத்திருந்தனர்.

செவ்வந்தியின் குறும்புதனம் குழலியை மிகவும் கவர்ந்தது. அவள் கவலையின்றி பேசி சிரித்து மகிழ்ந்தாள். செவ்வந்தி பாசமாக வளர்க்கும் பூனையை பாதுகாப்பதுதான் குழலிக்கான தண்டனையாக கொடுக்கப்பட்டது.

சற்று தள்ளி கிண்ணத்தில் பால் வைத்துவிடுவாள். குழலி பாலை பூனையிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இப்படி குழந்தைதனமாக தான் அவள் தண்டனைகள் இருந்தன.

செவ்வந்தியின் தாய் குமுதினி. தன் மகள் மீது அதீத பாசம் கொண்டவர். அவரது பாசம் சற்று கடுமையாக இருக்கும்.

முதல் முறையாக செவ்வந்தியின் தாய் குமரனை கண்டதும் சந்தேகம் கொண்டார். ஏனெனில் தன் மகளிடம் பல ஆண்கள் பல்லை காட்டி நிற்பதை கண்டு உள்ளவர். அவர்களுக்கு தன் மகள் பாடம் புகட்டுவதைக் கண்டு பெருமையடைவார். தன் மகள் மீது மிகவும் நம்பிக்கை உண்டு.

“யாரப்பா நீ?” குமரனை கண்டதும் கேட்டார்.

“வீராவின் … நண்பன்” என செவ்வந்தி பதில் அளித்தாள்.

அவர் தாய் “ஏன் நீ பதில் சொல்ல மாட்டாயா?” என கேட்டபடி குமரனை ஊடுறுவிப் பார்த்தார்.

“வீராவின் நண்பன்” குழலி ஆண்குரலில் கம்பீரமாய் பேச முயற்ச்சித்தாள்.

செவ்வந்தியின் தாயின் ஊடுருவும் பார்வை தன் உண்மை தன்மையை காட்டிவிடுமோ என அச்சமாக இருந்தது.

“உன் பேர் என்ன? எந்த ஊர்?” அவர் குரலில் கடுமையை உணர முடிந்தது.

“பெயர் குமரன் .. கும்பகோணம்”

“இங்க ஏன் வந்த?” அவர் விடுவதாய் இல்லை

தான் ஜமீன்தார் பரம்பரை எனவும் நடிப்பில் ஆர்வம் உள்ளதால் இங்கு வந்துவிட்டதாக பொய்யும் மெய்யும் கலந்து குமரனாகிய குழலி சொன்னாள்.

இதை கேட்ட செவ்வந்தி அதிர்ந்தாள். ஜமீன்தார் பரம்பரையை சார்ந்தவனை தான் வேலையாள் போல நடத்தினோம் என எண்ணி அஞ்சினாள்.

அடுத்த வந்த நாட்கள் நத்தையாய் நகர்ந்தது.

நீண்ட காலத்திற்குப் பிறகு குழலி நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தாள். புன்னகை என்னும் ஆபரணம் பூண்டாள். மகிழ்ச்சியாக வளம் வருவது போன்றவையும் அவள் வாழ்க்கையிலும் அரங்கேறியது. செவ்வந்தியை உற்ற தோழியாக குழலி பாவித்தாள்.

குழலி ஆற்றங்கரையில் வீராவை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

செவ்வந்தியைவிட்டு சற்று விலகியே இருக்குமாறு வீரா கூறினான். இதை கேட்டு குழலி பெரியதாக நகைத்தாள்.

“உனக்கு அவள் பிரியம் தானே?” என தன் வண்டுகளை யொத்த கண்களால் படபடக்க வினவியவளை முறைத்தான் வீரா.

அவள் வினாவிற்கு அவனிடம் தெளிவான பதில் இல்லை. ஆம் இல்லை என இரண்டு பதில்களும் முட்டி மோதின.

தன் குருவின் மகளை தவறான எண்ணத்தில் மனதிலும் நினைக்க கூடாது என நினைத்தான்.


செவ்வந்தி குமரனிடம் தன் மனதை முழுமையாக பறிக் கொடுத்தாள். எனினும் வெளி காட்டிக் கொள்ளவில்லை. குமரனை மனதார காதலித்தாள். குமரனின் விகல்பமில்லாத பேச்சு செயல் என ஒவ்வொன்றும் அவளை கவர்ந்து இழுத்தது.

செவ்வந்தி தாய்க்கும் குமரன் மேல் மதிப்பும் மரியாதையும் உண்டாயிற்று. இருந்தாலும் தன் மகள் வாழ்க்கையின் நலன் மீது அக்கறை கொண்டவராக இருந்தார்.

இருவருக்கும் இடையே எப்போதும் தன்னை இருத்திக் கொண்டார். குமரனை விரைவில் வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

தன் கணவன் வத்சனிடம் பேசி அவனுக்கு வாய்ப்பு கேட்டார்.

“குமுதா நடிப்பு ஒரு கலை .. போற வரவங்களை நடிக்க வைக்க முடியாது.”காட்டமாக பதில் வந்தது.

“பரீட்சை வைக்காம முடிவு சொன்னா எப்படி?” என அவர் பிடிவாதமாக வினவவும் ..

மனைவி சொல்லை தட்ட இயலாமல் “சரி முதல்ல கோயில்ல நாட்டியம் ஆடட்டும் .. பிறகு பார்க்கலாம்” என பேச்சை வளர்க்க விரும்பாமல் சென்றுவிட்டார்.

செவ்வந்தி தாய்க்கு தான் எதிர்பார்த்த பதில் முழுவதுமாய் கிடைக்கவில்லை எனினும் இதுவே சற்று ஆறுதல் அளித்தது.

குழலியை அழைத்து வத்சன் பேசினார் “ கிருஷ்ணர் கோயிலில் நீயும் வீராவும் நடனம் ஆடுங்க .. ” என்று கட்டளை பிறப்பித்தார்.

வத்சனுக்கு குமரனை பிடிக்கவில்லை. சுகமாய் வளர்ந்த ஜமீன்தார் மகன். ஆர்வகோளாரில் வந்துவிட்டான். இவன் எங்கே ஆடப் போகிறான் என்று நினைத்தார்.

குழலி கண்ணனாகவும் வீரா ராதையாகவும் ஆட வேண்டும் என வத்சன் சொல்லிவிட்டார். நாட்டியமும் நாடகமும் இருசேர கலந்து அமைத்துக் கொடுத்தார் கோபு.

குழலியின் பதட்டத்தை வீராவால் நன்கு உணர முடிந்தது. தன் முதல் அனுபவத்தைக் கூறி தேற்றினான்.

ஒத்திகை பார்த்தனர். அதில் இருவருக்குமே தடுமாற்றம் இருந்தது. வீரா தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணின் கையை பிடித்து நடனம் ஆடுகிறான்.

பெண்ணின் முதல் ஸ்பரிசம் அவனை நிலைதடுமாறச் செய்தது. குழலிக்கும் இதே நிலை. கணவன் அல்லாது ஒருவன் கைப் பிடித்து நடனமாட வேண்டும்.

ஒத்திகையில் குழலியின் தடுமாற்றத்தை கண்ட வத்சனுக்கு இதுவே இவளின் இறுதி நடனம் என்ற முடிவுக்கு வந்தார்.

கோகுலாஷ்டமி இரவு கோயிலில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். குழலி தன் வாழ்க்கையின் மற்றொரு அத்தியாயத்தை அங்கு தொடங்கினாள்.

இரவு நிகழ்ச்சித் தொடங்கியது. குழலி மற்றும் வீரா நடனம் தொடங்கியது. இருவரும் அலங்காரத்தில் ஒருவர் மற்றொருவருக்கு சளைத்தவர் அல்லர் என்று நிரூபிப்பது போல மிக அழகாக இருந்தனர்.

கண்ணனும் ராதையும் பூலோகத்தில் தாங்களே சுயமாக வந்து நடனமாடுவதுப் போல காட்சியளித்தது. மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.

குழலியின் ஆட்டத்தை கண்ட வத்சன் தனக்குள் அபாரம் என சொல்லிக் கொண்டார். அவளின் அபிநயம் முக பாவம் அனைத்துமே நேர்த்தியாக இருந்தது. அவளுள் சிறந்த கலைநயம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை எனத் தெரிந்தது. அந்த அழகு சிலையை இன்னமும் செதுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரு கட்டத்தில் வீராவும் குழலியும் தட்டாமாலை என்று சொல்லப்படும் ஆட்டத்தை நடன அசைவாக ஆடும் இடம் வந்தது. அதாவது இருவர் எதிர்எதிரே நின்றபடி ஒருவர் கைகளை மற்றவர் நீட்டிச் சேர்த்து கெட்டியாகப் பிடித்தபடி வேகமாக சுற்ற வேண்டும்.

அப்படி வேகமாக சுற்றுகையில் குழலியின் கை சற்றே நழுவ வீரா அதை உணர்ந்த நொடி அவள் விழாமல் இருக்க அவளை வேகமாக தன் பக்கம் இழுத்தான். அவள் அவன் மேல் சாய்ந்தாள். இருவரின் மூச்சு காற்றும் கலந்தது. இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தது.

அனைத்தும் ஒருசில நொடிகளில் நிகழ்ந்துவிட்டது. பார்வையாளர்கள் இதுவும் ஒரு நடன அசைவு என எண்ணினார்கள். கோபு மற்றும் வீரா நண்பர்கள் என யவரும் இதை கூர்மையாக கவனிக்கவில்லை.

நடனம் முடிந்தது. கோயில் தர்மகர்த்தா இருவரையும் பாராட்டி பரிசு வழங்கினார். மக்கள் ஆரவாரம் நண்பர்கள் பாராட்டு என அடுத்தடுத்து நடந்த எந்த செயலும் இருவர் கருத்திலும் பதியவில்லை.

தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதைப் போல வீரா நடுங்கினான். அவள் மேடையில் விழுந்துவிடக் கூடாது என்கிற நல் எண்ணத்தில் தான் இவ்வாறு செய்தான். இருப்பினும் நெருக்கமான அந்த நொடிகளில் அவள் காந்த கண் வீச்சு அவன் சித்தத்தை கலக்கியது.

குழலியும் இப்படியான ஒரு நிலையில்தான் இருந்தாள். கணவனை இழந்த தான் இவ்வாறு நடப்பது தவறு என அவள் மனசாட்சி குற்றவாளி கூண்டில் ஏற்றியது.

செவ்வந்தி குழலியாகிய குமரனின் நடனத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனாள். தன்னையே ராதையாக எண்ணி மனகண்ணில் அவனுடன் நடனமாடினாள். பேதையவள் காதல் போதையில் தன்னை மறந்தாள்.

மறுநாளே குழலியை அழைத்த வத்சன் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உத்தரவிட்டார். அதனோடு கோபுவை அழைத்து குழலிக்கு(குமரன்) பயிற்சியளிக்கவும் செய்தார்.

குழலிக்கு தன்னை குமரனாக அனைவரும் பாவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும் இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே இருப்பது என்றும் தெரியவில்லை.

கோபுவின் பயிற்சிக்கு மற்றவர்கள் வசிக்கும் ஜாகையில்தான் குழலியும் இருக்க நேரிட்டது. ஒரு பெண்ணாக அவளுக்கு இவற்றை சமாளிப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

குளிப்பது ஆடை உலர்த்துவதிலிருந்து மாதாந்திர பிரச்சனைவரை அனைத்தும் பாடாய்படுத்தியது. வீரா அவளுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவினான்.

இரவில் ஆண்கள் மேலங்கி இன்றி படுப்பது சகஜமான விஷயம் அங்கே அவர்களுடன் குழலி படுக்க திணறிப் போனாள். அவள் தனியே ஜன்னலருகே படுக்க வீரா ஏற்பாடு செய்தான்.

அவனை அனைவரும் கேள்வியோடு நோக்க “ என்ன இருந்தாலும் ஜமீன்தார் வீட்டு பிள்ளை இல்லையா?” என சமாளித்தான்.

இருவரும் மனதிலும் தற்பொதைய பிரச்சனை விஸ்வரூபமாக காட்சியளித்தால். நடனத்தில் ஏற்பட்ட சங்கடம் தற்காலிகமாக விடைப் பெற்றது. தற்செயலாக நடந்த நிகழ்வு என இருவரும் அதை ஒதுக்கிவிட்டனர்.

அன்று நாடக ஒத்திகை முடித்த குழலி உணவு உண்ணும் இடத்திற்குச் செல்லுகையில் இருவர் பேசியது தற்செயலாக காதில் விழுந்தது.

“ அநியாயம் .. அநியாயம்” என ஒருவன் செய்திதாளை வாசித்து புலம்பினான்.

“என்ன நடந்தது? மற்றொருவன் வினவ

“அருவி பக்கத்துல காவல்துறை ஒரு ஆண் சடலம் கண்டெடுத்திருக்காங்க”

“சடலமா?”

“ஆமா .. யாரோ கொலை செய்திருக்காங்க .. பாவி நல்லா இருப்பானா?”

இதைக் கேட்ட குழலி நடுங்கிப் போனாள். அன்று அவனை தான் கொலை செய்தோம் என்று மனதில் நினைக்கக் கூட இயலவில்லை.


திரை விலகும் … 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 9சினிமா கிசுகிசு


1948ல் வெளிவந்த சந்திரலேகா திரைப்படம் வரலாற்றில் சாதனை படைத்த படம். இப்படத்தை இயக்கி தயாரித்தவர் எஸ்.எஸ்.வாசன்.

திரை உலகில் முதன் முதலில் பிரம்மாண்டம் என்ற சொல்லை கண்முன் கொண்டுவந்தது இப்படம் . நாற்பது லட்ச ரூபாய் செலவில் 609 பிரதிகளுடன் வெளியானது.

**************குழலியால் தான் ஒரு மனிதனை கொலையும் செய்யகூடியவளா? என ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் இருந்தாள். அவனை கொலை செய்ய வேண்டும் என கனவிலும் எண்ணவில்லை. தன் மென்மையான கரங்களில் எங்கிருந்து வந்தது இத்தனை வலு என வியந்தாள். கைது தண்டனை சிறைவாசம் என அவள் மனம் சங்கலி தொடர்பாக அவற்றின் விளைவுகளை எண்ணி நடுங்கின.

ஏன் தன் வாழ்க்கையில் துயரங்களும் வீழ்ச்சிகளும் நிறைந்துள்ளன என கலங்கிப் போனாள். மனம் நீரில்லா செடி போல துவண்டு போனது.

வீராவிடம்ச் சொல்ல நினைத்தவள் ஏனோ பின்பு பின்வாங்கினாள். எங்காவது எதிர்பாரா விதமாக காவல்துறையினரைக் கண்டால் வெலவெலத்துப் போவது வழக்கமானது.

தான் ஆண் வேடத்திலேயே தொடர்வது என முடிவெடுத்தாள். அடுத்டுத்து பல நாடகங்களில் அவள் நடித்தாள். நல்ல பெயர் கிட்டியது. பாராட்டு மழையில் நனைந்தாள்.

வீரா அவளை இமை காப்பதுப் போல காத்தான். நாடகத்துறையை திரைப்படம் மெல்ல விழுங்க தொடங்கிய காலகட்டமாய் அது அமைந்திருந்தது.

பல நாடக கம்பெனிகள் மூடப்பட்டன. மக்களுக்கு நாடகங்களில் சரித்திரத்தைக் காட்டிலும் சமூக கதைகள் மேல் ஆர்வம் மேலோங்கத் தொடங்கியது.

ஆதலால் வத்சனும் மக்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்தார். அந்த நாடக குழு பல ஊர் மண் மனிதர் என அனைத்தையும் கண்டு மகிழ்ந்து உணர்ந்து நகர்ந்தபடி இருந்தது. காலச்சக்கரம் சுழன்றது.

வீரா மனதை குழலி முழுதாய் ஆக்கிரமித்திருந்தாள். அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்தபடி இருந்தான். நாடகத்தில் இன்பமாய் அவளுடன் காதல் வசனங்கள் பேசினான்.

குழலிக்கு இது புரியாமல் இல்லை. இருப்பினும் தன் நிலை உணர்ந்து சற்று விலகி இருந்தாள். அவளுக்கும் அவன் மேல் ஈடுபாடு இருந்தது. ஆனால் காலமும் கோலமும் சரியில்லை என மனதை அடக்கி வைத்தாள்.

வத்சனின் நாடக குழுவிற்கு மிக அரிய வாய்ப்பாய் மதராசபட்டினத்தில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது. இதுவரையில் கிராமங்களில் தான் நாடகத்தை நடத்தி வந்தனர்.

பட்டணத்தில் வசிக்கும் மக்களின் ரசனைக்கு ஏற்ப நாடகத்தில் மாறுதல்கள் செய்தார் வத்சன். ஆனால் இது கோபுவிற்கு பிடிக்கவில்லை.

“மேலை கலாச்சாரம் நாகரீகம் இதெல்லாம் நம் நாடகத்துல தேவையா?” என கோபு கேட்கும் போதே அவரின் வலி முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. தன் நாடக குழுவை அவர் அந்த அளவு நேசித்தார்.

“ஜனங்க முன்ன மாதிரி இல்ல கோபு .. அவங்க எதிர்பார்ப்பு அதிகமாகுது . . அதுக்கு தகுந்தாற்போல நாடகம் இருக்க வேண்டாமா?”

“அதுக்காக புடவைக்கு பதிலா கவுன் .. வேட்டிக்கு பதிலா குலாய் பேண்ட் எல்லா நல்லாவா இருக்கு .. செலவும் அதிக ஆகுமே .. கட்டுபடாதுங்க” என தன் பக்க ஆதங்கத்தை எடுத்துரைத்தார்.

ஆனால் இது எதுவும் வத்சனின் காதில் விழவில்லை. அவர் கனவு லோகத்தில் சஞ்சரித்தார்.

அடுத்த பத்து நாட்களில் பட்டண பிரவேசம் என முடிவானது. நாடக குழுவில் உள்ள அனைவரும் அளவில்லா மகிழ்ச்சியில் இருந்தனர்.

அனைவருமே முதல் முறையாக பட்டணம் செல்ல போகிறார்கள். பட்டணத்தில் நவநாகரீக யுவ யுவதிகள் உள்ளனர். ரோட்டில் படகு போல கார் சர் சரென பறக்கும். வானளாவும் கட்டடங்கள் என பட்டணம் சென்றவர்கள் சொல்லி கேட்டுள்ளதால்.

அவரவர் தங்கள் மனக்கண்ணில் பட்டணத்தை ஆனந்தமாக கண்டனர். வீரா மற்றும் குழலி என்ன விதிவிலக்கா? அவர்களும் ஆசையாக தயாராகினர்.

குழலி பட்டணம் சென்றுவிட்டால் தான் செய்த கொலையிலிருந்து தப்பிவிடலாம். அங்கு யாரும் வந்து தன்னை தேட மாட்டார்கள் என எண்ணினாள்.

அன்றைய காலை பொழுதில் வீராவை வத்சன் அழைத்தார் “வீரா பக்கத்து கிராமத்துல தெய்வ நாயகம் இருக்கார் தெரியும்தானே?”

“தெரியுங்க .. உங்க உறவுகாரங்க”

“ஆங் ..ஆமா அவர்கிட்ட நூறு ரூபா கடனா வாங்கிட்டு வா .. முன்னமே சொல்லி இருக்கேன் அதனால பிரச்சனை இல்லை .. உடனே கொடுத்திடுவார்”

வீரா நூறு ரூபாயை மொத்தமாக அவன் வாழ்க்கையில் கண்டதே இல்லை. வாயை பிளந்தான். “நான் எப்படி?” என தயங்கினான். உண்மையில் அவனுக்கு நூறு ரூபாயை நினைக்கவே அச்சமாக இருந்தது.

அவன் மனதை உணர்ந்தவராக “வீரா பயந்தா என்ன ஆகுறது? எனக்கு அப்புறம் இந்த நாடக கம்பெனி நீதான் நடத்தணும். இது நான் எப்பவோ எடுத்த முடிவு .. நடிப்புல உனக்கு இருக்கிற ஈடுபாடு .. உன் நடிப்பு திறமை .. இது வேற யார்கிட்டயும் இல்லை”என பக்குவமாக எடுத்து கூறினார்.

அவர் சொன்னவற்றை முமுவதுமாக அவன் கவனிக்கவில்லை காரணம் தான் சென்றுவிட்டால் குழலிக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என கவலையுற்றான். குழலியை தனியே விட்டு போக மனமில்லை.

வீரா அரைமனதாகச் செல்ல சம்மதித்தான்.ஆனாலும் தயங்கி நிற்க “என்னடா?” என கேட்க

“அது குமரன் அப்பாக்கு உடம்பு சுகமில்ல .. அவனை நீங்க அவன் வீட்டுக்கு போய் வர அனுமதிக்கணும்”

“சரி போகட்டும் .. இன்னும் பத்து நாளுக்கு நாடகம் எதுவுமில்லயே .. ஆனா சீக்கிர திரும்ப சொல்லு” என்றார்.

நாடகத்தில் நடிப்பவனுக்கு வசனத்திற்கா பஞ்சம் .. இல்லாத குமரனுக்கு இல்லாத தந்தையை உருவாக்கி அவருக்கு நோயும் கொடுத்தாயிற்று. அவன் நினைத்தது நடந்தேறிவிட்டது.

நண்பர்கள் ஆங்காங்கே குழுவாக பேசிக் கொண்டிருக்க .. குழலி மட்டும் தனியே ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள். ஆண் வேடம் அவளுக்கு கனகச்சிதமாய் பொருந்தி இருந்தது.

“குமரா நீ ஊருக்கு போயி உடம்பு சுகமில்லாத உன் அப்பாவ பார்த்துட்டு வா .. ஐயாவே சொல்லிட்டாரு” என அனைவர் முன்னிலையில் வீரா கூற

குழலி முழித்தாள். இது என்ன புது கதை என அவனை கண்களால் வினவ .. அவன் தன்னோடு வா என்றபடி முன்னே சென்றான்.

உடனே செல்லாமல் இரண்டு நிமிடம் கழித்துச் சென்றாள். வீரா அனைத்தையும் அவளிடம் மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான்.

“நீ இப்பவே கிளம்பி ஐய்யனார் கோயில் பக்கமா போ .. நான் மதியம் கிளம்பி அங்க வரேன்” என முடித்தான்.

அவனுக்கு சில நாட்கள் தனிமையில் குழலியுடன் இருக்க போவதை நினைக்கவே இனிமையாக இருந்தது.

குழலிக்கு பயம் கவ்வியது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என பதற்றத்துடன் மறுத்தாள் “வேண்டா வீரா”

அவள் முடிப்பதற்குள் “நான் இல்லாம உன்னால இங்க தனியா சமாளிக்க முடியுமா ?..”

அவள் முழிக்க .. தான் செய்த கொலை வேறு அச்சுறுத்தியது.

அவளை சிந்திக்கவிடாமல் “பேசாம கிளம்பு”என வற்புறுத்தினான்.

எது சரி எது தவறு என குழம்பிய நிலையில் செய்வதறியாது நின்றாள். அவளது மனம் தன் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு இனிமையாக வீராவுடன் செல்ல துடித்தது.

தான் பட்ட துயரங்களின் பட்டியலும் மனக்கண்ணில் தோன்றியது.


அப்போது இரண்டுகாவல் துறையை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். வீரா நண்பர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்றவர்.

அருவி அருகே நடந்த கொலை பற்றி விவரித்தனர். பின்பு சந்தேகப்படும்படியான ஆட்களை கண்டால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி கூறிச் சென்றனர்.

காவல்துறையினரை கண்டவளுக்கு உலகம் சுழ்வதே ஒரு நொடி நின்று போனதாய் தோன்றி ஸ்தம்பித்துப் போனாள்.

குழலி தன்னையும் அறியாமல் வீரா கையை பற்றினாள். குரலடைத்தது எதுவும் பேச திராணி இல்லாமல் சிலையென நின்றாள்.

குழலி வீராவின் கையை பற்றியதை தன்னிச்சையான செயலாக கருதினாள். ஆனால் வீரா அந்த நொடியை பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய தருணமாக கருதினான். அவளின் மென்மையான கரங்களில் பதட்டம் காரணமாக வியர்வை சுரப்பிகள் வேலை செய்தன.

ஆனால் வீரா நாணத்தால் என தவறாக எடுத்துக் கொண்டான்.

குழலி எண்ணத்தில் இங்கே இருந்து தன்னையும் விசாரணை என்னும் பெயரில் அழைத்தால் என்செய்வது? மறுக்கவா முடியும்?

பின்னர் அவளை கொலை குற்றவாளி எனக் கண்டு பிடித்தால் … தன் வாழ்க்கையே நரகம் ஆகிவிடுமே.

இங்கிருந்து தப்பிக்க வேண்டுமெனில் வீராவுடன் செல்வதுதான் உசிதம் என முடிவெடுத்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் குழலி தன் துணி மூட்டையுடன் கிளம்பினாள். ஐய்யனார் கோயில் இருக்கும் திசை நோக்கிச் சென்றாள். அருகே சலசலவென எங்கிருந்தோ வரும் ஆற்றுநீர்.

செவ்வந்தி தண்ணீர் குடத்துடன் அந்த பக்கமாக வந்தாள். வாட்டத்துடன் சுற்றிலும் நடப்பதை கவனிக்காமல் நடந்துக் கொண்டிருந்த குமரனை (குழலி) கண்டவளுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றியது.


“குமரா” என அழைத்தாள்.

உயிர்பெற்ற சிலையாய் குழலி நிலை தடுமாறினாள். புதிதாக பார்ப்பதைப் போல செவ்வந்தியை நோக்கினாள்.

“எங்கே செல்கிறாய்?” என கேட்பது முறையாகாது என்பதால் “என்ன இந்த பக்கம்?” எனக் கேட்டாள்.

“ குமரன் அப்பாக்கு உடம்பு சரியில்ல” என வீரா பதிலளித்தான்.

இவன் இங்கு எப்படி என மற்ற இருவரும் அவனை கேள்வியோடு நோக்க

“குமரா நீ சீக்கிரமா போ .. அப்பாவை பார்க்கணும் தானே” என விரட்டாத குறையாக அனுப்பி வைத்தான்.

குழலியும் பேசாமடந்தையாக சென்றுவிட்டாள். செவ்வந்தி வீராவை சினத்துடன் முறைத்தாள் “இவன் நந்தி மாதிரி எப்பவும் எனக்கும் குமரனுக்கும் இடையில் ” என முணுமுணுத்தபடி அவனுடன் பேச விருப்பமில்லாமல் நடையைக் கட்டினாள்.

அவளுக்கு குமரன் செல்லும் இடம்? மற்றும் எப்போது திரும்புவான் என இப்படிப் பல கேள்விகள் மனதில் வரிசைக்கட்டி நின்றன. ஆனால் இந்த வீராவால் எதையும் கேட்க முடியாமல் போனதால் சுருங்கிய முகத்துடன் அகன்றாள்.

செவ்வந்தி மற்றும் குழலி சந்திப்பு நிகழலாம் என எதிர்பார்த்தான் வீரா. செவ்வந்தி கேள்வி கணையில் குழலி சிக்கி தவிக்ககூடாது என எண்ணியவன் அவளை பின்த்தொடர்ந்தான். அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

சில நாட்களாக குழலியின் முகம் வாட்டத்தோடு இருப்பதை அவன் கவனிக்கத் தவறவில்லை. இரண்டொரு முறை கேட்டும் சரியான பதில் இல்லை. குழலியிடம் அதன் காரணத்தை கேட்டு அவள் துயரத்தை போக்க வேண்டும் என்பதே அவனின் தலையாய கடமையாக நினைத்தான்.

துயரை துடைத்து அவள் மனதில்தன் காதல் செடியை நட்டு வைக்க அவன் உடல் பொருள் ஆவி என அனைத்தும் பரபரத்தது.

குழலி மற்றும் செவ்வந்தி எதிர்எதிர் திசையில் சென்று மறையும்வரை அங்கேயே நின்றான்.

பின்பு குழலி பக்கமாக மிக நிதானமாக நடந்தான். மனதில் இனம்புரியா மகிழ்ச்சி தாண்டவமாடியது. அந்த நொடியே குழலியை ஓடிச் சென்று அணைத்து முத்தமிடத் துடித்த மனதை கடிந்துச் செல்லமாக அடக்கினான்.


திரை விலகும் … 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 10

சினிமா கிசுகிசு

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதாசாகே பால்கே ஆவார். அவர் 1913ல் “ராஜா ஹரிசந்திரா“ என்ற முழு நீள திரைப்படத்தை எடுத்தார். இப்படத்தில் நடித்தவகள் அனைவருமே ஆண்கள். பெண் கதாபாத்திரத்தையும் ஆண்களே ஏற்று நடித்தனர். அந்த காலகட்டத்தில் பெண்கள் யாரும் திரைப்படத்தில் நடிக்க முன்வரவில்லை.**********************


குழலி நடையில் வேகமில்லை. மீண்டும் நாடக குழுவிற்குத் திரும்ப கெஞ்சிய மனதை அமைதிப்படுத்த முயன்றாள். மனமும் மூளையும் சண்டையிட்டுக் கொண்டன. அவள் செய்த கொலை விஸ்வரூபமாய் அச்சமூட்டியது.

வீராவுடன் தனிமையில் இருக்கப்போவதை எண்ணி ஏனோ மனம் மகிழ்ச்சி துன்பம் என இருநிலையில் ஊஞ்சலாடியது. இருவரும் வாலிபத்தை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் உள்ளனர் ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் என்செய்வது என சிந்தித்த வண்ணம் பால்வண்ணத்தை யொத்த தன் பிஞ்சு கால்களால் அடி மேல் அடி எடுத்து வைத்தாள்.

“குழலி .. குழலி” என பின்னே வீராவின் குரல் கேட்டது. அவள் திரும்பாமல் நடந்தபடி இருந்தாள்.

அவள் கையை பிடித்து அவள் பாதையை மாற்றினான். “இந்த பாதையில விரைவா போயிடலாம்” என அவளை தன் பின்னே நடத்தினான். அவள் தன் கையை லாவகமாக மீட்டாள்.

இந்த மார்க்கமாக பயணித்தால் விரைவாக செல்ல வேண்டிய இடத்தை அடையலாம் என்பதற்காகவே இந்த பாதையை தேர்ந்தெடுத்தான். அது இரண்டு கிராமத்திற்கான எல்லை.

“என் மேல் கோபமா?” என இரைஞ்சிக் கேட்டவன் குரலில் மெல்ல உருகியது பெண் மனம்.

குழலி பதில் உரைக்கவில்லை. இத்தனை காலம் தன்னை பத்திரமாக பாதுகாத்தவனோடு பயணிக்க தான் ஏன் அச்சப்பட வேண்டும்? என தன்னையே கேட்டாள். எனினும் பெண்களுக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு விழித்துக் கொண்டுதான் இருந்தது.

தன்னோடு வரும் வீராவை பார்த்தாள். அழகன், வசீகரிக்கும் முகம் நடிப்பு என்று வந்துவிட்டால் அவனின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும். இதுவரை தன்னிடம் ஒருமுறைக் கூட தவறாக நடந்ததில்லை. விகல்பம் இன்றி திடமான பார்வை கொண்டவன்.

அப்படி இருக்க தான் ஏன் அஞ்ச வேண்டும் என மனம் வீராவிற்காக வக்கீலைப் போல வாதிட்டு நீதிபதியாக தீர்ப்பும் வழங்கியது. பாவம் மூளை அடங்க போனது.

அவள் முக மாறுதல்களைக் கொண்டு அவளின் மனதை உணர்ந்தான். பேரிரைச்சலுடன் வீசிய அலைகள் இப்பொழுது வலுவிழந்த புயலைப் போல சாந்தமடைந்துவிட்டது என புரிந்துக் கொண்டான்.

வீரா புன்னகையோடு அவளின் அழகான கண்களை உற்று நோக்கினான். அவளே இன்னமும் தான் கோபத்தில் இருப்பது போல பாசாங்கு செய்ய முனைந்து தோற்றாள்.

இருவரின் நடையில் வேகமில்லை. நிதானமாக அந்த ரம்மியமான சூழ்நிலையை ரசித்து லயித்து தங்களை மறந்து நடந்தார்கள். இருவரின் கைகளும் அவ்வப்பொழுது தீண்டி சிலிர்த்து பரவசமடைந்தது.

ஒரிடத்தில் கால் தடுக்க விழ போனவளை வீரா சட்டென பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் பதற்றமாக விலகினாள். அவளின் இதய துடிப்பு அவனுக்கு லய சங்கீத கச்சேரியானது.அவளுக்கு படபடப்பு குறைய சற்று நேரம் பிடித்தது.

“ உனக்கு இன்னமும் என் மேல நம்பிக்கை வரல .. அந்த காமூகன் மாதிரி என்னை நினைச்சிடாதே” என்றபடி அவளை கூர்ந்து நோக்கினான் வீரா.

அவன் முகத்திலிருந்த உற்சாகம் முழுவதுமாய் வடிந்து போனது. குற்றவாளி கூண்டில் நிற்பவனை போல நின்றிருந்தான்.

குழலி மனம் வெல்லபாகாய் இளகியது. ஏனோ கண்களில் நீர் கோர்க்க மறுபுறம் திரும்பி துடைத்துக் கொண்டாள். அவளின் இதயம் கனிந்து என்றுமில்லாத உணர்வை பிரதிபலித்தது. ஆனாலும் குழப்பம் அகலவில்லை.

“வீரா உன் ஆசை கைக்கூட வாய்ப்பே இல்ல .. நான் … இந்த சமுதாயம் …” என தன் எண்ணத்தை வார்த்தைகளாக வடிக்க இயலாமல் தவித்தாள். மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“நீ சங்கடத்தில் இருந்த சமயம் இந்த சமுதாயம் உனக்கு உதவல … அப்புறம் ஏன் அவங்களை நினைச்சி சங்கடப்படனும்?” வீரா அவள் நிலை புரிந்து வினவ

“இல்ல வீரா . . . நான் செழியனோட மனைவி …”

“செழியன் உயிரோட இல்ல” அழுத்தம்திருத்தமாக வீரா உரைக்க

இன்னும் என்னச் சொல்லி வாதிடுவது என குழலி அவன் கண்களை தவிர்த்தாள்.

“கொஞ்ச நாளாவே நீ ஏதோ சங்கடத்துல இருக்க .. உனக்கு என்ன பிரச்சனை?” ஆதுரத்துடன் கேட்டான்.

“நான் ஒரு மனித மிருகத்தை வேட்டையாடினேன் அதான் காரணம்” என பதிலை மனதில் சொல்லிக் கொண்டாள். சிந்தனை வயப்பட்டவள் முகம் வாட்டமடைந்தது.

“குழலி” காதல் ததும்ப அழைத்தான்.

அப்போது அங்கிருந்த ஒரு கோயிலில் இருந்து மணியோசை கேட்டது. தாங்கள் வெகு தூரம் வந்துவிட்டதை உணர்ந்தனர்.

இருவரும் கோயிலுக்கு சென்றனர். பூஜை முடித்து ஒருவர் வெளியே சென்றுவிட்டார். கோயிலில் தற்பொழுது எவரும் இல்லை. முருகன் வள்ளி தெய்வயானையோடு காட்சியளித்தார். அது பழம்பெரும் கோயில் நல்ல பராமரிப்பு இன்றி ஆங்காங்கே சுவரில் விரிசல் இருந்தது. வவ்வால்களின் எச்சத்தின் நாற்றம் என பரிதாப நிலையில் காணப்பட்டது.

காலையில் பூஜை நடந்த்திற்கான அறிகுறிகள் தெரிந்தது. முருகன் சன்னதியில் பூமாலை தூப தீபத்தில் அழகாய் காட்சியளித்தான்.

“இப்பவும் குமரனா இருக்கணுமா .. கொஞ்ச நேரம் குழலியா இருக்கலாமே?” வீரா வசீகர புன்னகையுடன் வினவ

மறுக்க இயலாமல் தலையசைத்து மறைவிடம் நோக்கி நகர்ந்தாள். இரண்டொரு நிமிடங்களில் சேலையில் அழகாய் ஆபரணங்கள் ஏதுமின்றி அப்சரசாக தோன்றினாள்.

வீரா இமைக்க மறந்தவனாக அவளை கண்களால் பருகினான். நாணத்தால் முகம் சிவக்க தலை குனிந்தாள்.

மந்திரத்தால் கட்டுண்டவன் போல அவள் அருகில் சென்றவன் பாவையின் முகத்தை தன் கையில் ஏந்தியவன் “இந்த நொடி முதல் நீ என் மனைவி” என்றான்.

அவன் சொன்னவற்றின் பொருள் அவள் மனதில் பதிய சில நொடிகள் ஆனது. பாவையவள் புரியாமல் விழித்தாள்.

சட்டென குழலி கழுத்தில் மாலையை சூட்டினான். அது முருகனுக்கு அணிவித்திருந்த மாலை என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. பிறை நிலா போன்ற அவள் நெற்றியில் குங்கும திலகமிட்டான். விக்கித்து நின்றாள். கண்ணீர் ஆராய் பெருகியது.

முருகன் அருகிலிருந்து வள்ளிக்கு அணிவித்திருந்த மாலையை வீரா அவள் கையில் கொடுத்தான். எதன் மூலமோ இயக்கப்படுவதைப் போல மாலையை அவன் கழுத்தில் சூட்டினாள்.

ஊர் என்ன பேசும்? மக்கள் என்ன நினைப்பார்கள்? தான் ஒரு கைம்பெண் போன்ற சிந்தனைகள் அகன்றன. இனி எல்லாம் அவனே என அவன் காலில் விழுந்து சரணடைந்தாள். அவள் கண்ணீர் துளிகள் அவன் பாதத்தை நனைத்தது.

பதட்டமாய் எழுப்பியவன் நீ காலில் அல்ல என் இதய சிம்மாசனத்தில் அமர வேண்டியவள் என தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை மட்டுமே அதிகமாய் கண்டவளுக்கு அவனின் அன்பும் அரவணைப்பும் ஆறுதலை அளித்தது. அவனுள் அழுதபடி கரைந்து போனாள்.

எத்தனை நேரம் அப்படி ஒருவருக்குள் ஒருவர் தங்களை தொலைத்தார்களோ அவர்களுக்கே தெரியவில்லை.

அன்று இரவு அவர்கள் அந்த கோயிலில் கழித்தார்கள். கணவன் மனைவி என்ற நிலையிலும் அவர்களின் எல்லையை தாண்டவில்லை. வீராவின் கண்ணியமான நடத்தை அவன் மேலிருந்த காதலை பண்மடங்காக்கியது. அவனுக்காக தன் உயிரையே கூட தர சித்தமாயிருந்தாள்.

இனி வீராவை தவிர மற்ற யாருடனும் நடிக்க கூடாது என முடிவெடுத்தாள். தாங்களே ஒரு புதிய நாடக கம்பெனியை தொடங்க வேண்டும் என்பன போன்ற பல கற்பனைகளில் உழன்றவளுக்கு இரவு உறக்கம் பிடிபடவில்லை.

தன்னாலான உதவியை தன் ஆருயிர் கணவனுக்கு செய்ய எண்ணினாள். காலையில் வத்சனின் உறவினர் வீட்டுக்குச் செல்ல வீரா தயாரானான்.

“நீங்கள் உங்க வேலையை முடியுங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்றாள்

“அது என்ன முக்கியமான வேலை?” கண்களால் கேள்வி கேட்டபடி நோக்கினான்.

“என் கிராமத்துக்கு போகணும்”

“எதுக்கு?”

“வந்ததும் சொல்றேன்” என்றாள் பூடகமாக

“உன்ன விட்டு என்னால இருக்க முடியாது குழலி” அவளை பிரிய மனமில்லாமல் வினவினான்.அவள் கையை பற்றியவன் முகத்தில். ஏக்கமும் துக்கமும் தாண்டவமாடியது.

“எனக்கு சொந்தமான .. இல்ல இல்ல .. நமக்கு சொந்தமான பொருள் ஒண்ணு கிராமத்துல இருக்கு அதை எடுத்து வரணும்” என்றாள்.

“சரி சேர்ந்தே போலாம்”

“இல்ல நேரம் அதிகமாயிடும் .. வத்சன் ஐயா காத்திருப்பார் .. நீங்க உங்களுக்கான வேலையைப் பாாக்க போங்க”

அவனை பிரிய அவளுக்கும் மனமில்லை தான் இருப்பினும் கடமையின் பொருட்டு செல்ல ஆயத்தமானான்.

அவனுக்காக எதையும் செய்ய தயாராயிருந்தாள். ஆதலால் இந்த முடிவை எடுத்தாள்.

இனி தனக்கென எதுவுமில்லை அனைத்துமே நமக்கு என அவள் காதல் மனம் சொல்ல “நிச்சயமாய் தனக்கு அவன் மேல் பித்து பிடித்துவிட்டது” என தன்னை செல்லமாய் கடிந்துக் கொண்டு வெட்கப்பட்டாள்.

அனைவர் முன்னும் அவனை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். அழகான வாழ்க்கை பணயத்தை தொடங்கி பிள்ளைகள் பெற வேண்டும் என பெண் மனம் ஆசைக் கொண்டது.

காதல் என்னும் மாய உணர்வில் இருவரின் மனமும் இன்பமாய் சிக்குண்டது. இந்த இன்ப வேதனை கூட அழகாயிருந்தது.

இந்த பிரிவு நிரந்தரமான பிரிவு என்பதை அறிந்திருந்தால் இருவரும் பிரிந்திருக்க மாட்டார்கள்.


திரை விலகும் ….


 

NNK38

Moderator
நிழலின் நிஜம் 11


சினிமா கிசுகிசு


ஹெச்.எம். ரெட்டி இயக்கிய காளிதாஸ் 1931 இல் வெளியானது. வசனங்கள் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் இடம்பெற்றன. ரூபாய் 8000 தில் தயாரிக்கப்பட்டு ரூபாய் 75000 வசூலாகி இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

************காலையில் ஆதவன் கூட இன்னும் முழுதாய் விழிக்காத பொழுது. வீரா அருகிலிருந்த நீரோடையில் நீராடினான். பின்பு வத்சன் சொன்ன இடத்திற்கு கிளம்ப தயாரானான்.

வீரா தன்னவள் நெற்றியில் ஆழமாய் இதழ் பதித்தான். அவள் கன்னம் உதடு என அவளை ரசித்து ரசித்து முத்தமிட்டான். தன் உணர்வுகளை அடக்க அவன் பெரும்பாடுபடுவது அவளுக்கு நன்கு புரிந்தது. அவள் உருவத்தை தன் மனதில் செதுக்கி வைத்தான்.

அவன் கைகளுக்குள் அடைக்கலமாகி அவன் மார்பில் தலை சாய்ந்தவளுக்கு இந்த நொடியே தன் உயிர் போனாலும் மகிழ்ச்சியே என்றிருந்தது.

பலமுறை அவளை திரும்பித் திரும்பி பார்த்தபடி கவலை தேய்ந்த முகத்துடன் வீரா சென்றான். அவன் காலடி சுவடுகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னமும் அவனின் வாசம் காற்றில் கலந்திருந்தது. மீண்டும் அவனை காண கண்கள் ஏங்கின.

குழலியாய் இருப்பவள் குமரனாய் தன் உருவத்தை மாற்றிக் கொள்ள மறைவான இடத்தை நோக்கி நடந்தாள்.

அப்போது “ஒரு நிமிஷம்” என்ற வார்த்தை அவள் கால்களுக்கு தடை விதித்தது.

திரும்பிப் பார்த்தாள் குலாய் பேண்டும் சட்டையும் அணிந்திருந்தான். பைப் வழியே புகைப்பிடித்தபடி நின்றிருந்தான். அதிலிருந்து நாகத்தை போல மெலிதாக புகை வந்தது. அது பைப் என்று அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.்

அவளின் தலை முதல் கால் வரை அவன் கண்கள் பயணித்தது. பின்பு “நீ என் படத்துல நடிக்கிறயா?” எனக் கேட்டான். குழலிக்கு அவன் பார்வை நடவடிக்கை அனைத்தும் வேறு திணுசாக பட்டது.

புது மனிதனிடம் பேசுவதா வேண்டாமா எனக் குழம்பினாள். அந்த காமுகனை போல இவனும் … சிந்திக்க கூட இயலவில்லை. உடலும் உள்ளமும் நடுங்கியது. நிச்சயம் மற்றொரு கொலை செய்யும் அளவு தன்னிடம் திராணி இல்லை.

“பயப்படாதமா …” அவன் சொல்ல

“ச்சே தான் இத்தனை பலகீனமானவளா?” என எண்ணியவள்

அவனை நிமிர்ந்து பார்த்தபடி “சொல்லுங்க” என்றாள்

“நான் சினிமா டைரக்டர் .. உனக்கு நடிக்க விருப்பம் இருந்தா .. இந்த விலாசத்துல என்னை பாரு” என்றபடி ஒரு காகிதத்தை நீட்டினான்.

“நடிக்க விருப்பமில்ல .. எனக்கு கல்யாணம் ..” பட்டென சிந்திக்காமல் சொன்னாள்.

“என் விலாசத்த வாங்கிக்க தப்பில்ல .. வாழ்க்கை எப்ப வேணா மாறலாம்”

அவள் வேண்டா வெறுப்பாக அதை வாங்கிக் கொண்டாள். அவன் சென்றுவிட்டான். தனது மூட்டையில் அதை திணித்தாள்.

சிறிது தொலைவில் ஒரு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. குழலியிடம் பேசியவன் தான் அங்கு இயக்கிக் கொண்டிருந்தான்.

சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். அதில் வாலிபன் ஒருவன் பலருடன் வாள் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

அந்த குறிப்பிட்ட வாலிபனுக்கு மட்டும் மிக அதிக விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் பூண்டிருந்தான். உடலை விட முகம் ஏதோ மைதா மாவில் செய்ததுப் போல வெள்ளையாக இருந்தது. அவன் தான் கதாநாயகன் போலும் என நினைத்தாள் குழலி.

அவனை சுற்றி ஐம்பது பேர் நின்று சண்டையிடும் காட்சி. ஆனால் அவர்களோ ஒருவன்பின் ஒருவனாக ஏதோ கடையில் பொருட்கள் வாங்க செல்வது போல ஒவ்வொருவராக சென்று சண்டையிடுவதைப் பார்க்க குழலிக்கு சிரிப்பாக இருந்தது.

இத்தனை பேர் எதிரியிடம் இப்படியா சண்டையிடுவர் என எண்ணினாள்.

பின்பு குமரனாய் தன்னை மாற்றிக் கொண்டு தானும் செழியனும் கணவன் மனைவியாக வாழ்ந்த கிராமத்தை நோக்கிச் சென்றாள்.

குமரன் வேடத்தில் இருந்ததால் யாரும் இவளை கண்டுக் கொள்ளவில்லை. ஒரு சில பெரியவர்கள் இவளை விசாரிக்க கோயிலுக்கு வந்துள்ளதாக கூறி நழுவினாள்.

செழியனின் வீடு ஏழ்மையின் கோர பிடியில் தாண்டவமாடியது. தன்னை கொடுமைப்படுத்திய மாமியாருக்கு இது தேவைதான் என ஒருபக்கம் சிந்தனை ஓட … பாவம் இவர்கள் என எண்ணவும் தோன்றியது. தன் மாமியார் தன்னை நடத்திய விதம் இன்னும் மனதில் ஆறாத வடுவாய் வலித்தது.

எனினும் இனி தனக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனும் போது தான் ஏன் இவர்கள் நிலையை சிந்திக்க வேண்டும் என தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.

செழியன் தந்தைக்கு சொந்தமாக சிறிய நிலம் உள்ளது. அதுதான் அவர்களுக்கான வாழ்வாதாரம். அங்கு வயது முதிர்ந்த நிலையிலும் செழியனின் தந்தை வேலைச் செய்துக் கொண்டிருந்தார்.

இவள் அருகே சென்றதும் தன் கையை புருவத்தின் மேல் வைத்து கண்களை இடுக்கி “யாருப்பா நீ? என்ன வேணும்” எனக் கேட்டாா்.

தோலின் சுருக்கங்கள் வயதை காட்டின. மகனை இழந்த சோகம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. இன்னும் அந்த அதிர்விலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இதயத்தை அவளால் உணர முடிந்தது.

“நான் …. குழலி” என்றாள் மிக மெதுவாக பின்பு நாடக கம்பெனியிலிருந்து எடுத்து ஒட்டிக் கொண்ட மீசையை மெதுவாக ஒரு பக்கம் மட்டும் எடுத்து தான் யார் என்பதை புரிய வைத்தாள். எந்த தயக்கமும் இன்றி இருந்தாள். அவள் கண்களில் சோகம் துயரம் என்று எதுவுமில்லை.

அவர் கண்கள் நொடியில் மின்னல் வெட்டியது போல பளிச்சிட்டது. அவள் எண்ணங்களை உள்வாங்கினார் “எங்க இருக்க? எப்படி இருக்க? ஏன் இந்த வேஷம்?” எனப் பல கேள்விகள் மனதில் ஊர்வளம் சென்றன. ஆனால் அவர் உதடுகள் எதுவும் கேட்கவில்லை.

கேட்க தனக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்தவராய் மறுபக்கம் திரும்பி தன் கண்ணீரை சுண்டி விட்டார். பின்பு எதையோ நினைத்தவர் போல அவசரமாக வேப்பமரம் அருகே சென்று குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டினார்.

இரண்டொரு நிமிடங்களில் துணி மூட்டை கிட்டியது. அதை வெளியே எடுத்து மண்ணை தட்டி சுத்தப்படுத்தினார். அவளிடம் “உன் நகை …” என நீட்டினார்.

வாங்கியவள் காலில் விழ எத்தனிக்க “ நல்லாயிரு .. போ” என்றுவிட்டு அவளிடமிருந்து விலகி தன்வழியில் சென்றுவிட்டார். தன் ஏழ்மையை இந்த நகை கொண்டு போக்கியிருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நேர்மையான மனிதர்.

குழலி மனம் முழுவதும் வீராவின் நினைவு நிரம்பி தழும்பி வழிந்ததால் இவர்களின் நிலை அவ்வளவாக மனதை பாதிக்கவில்லை.

ஆதலால் இந்த எண்ணங்களிலிருந்து விடுப்பட்டு தன் நகைகளை வீராவிடம் கொடுத்து அவனுக்கு உதவ வேண்டும். தாங்கள் இருவரும் ஜோடியாக நடிக்க வேண்டும். தனியே நாடக கம்பெனி துவங்க வேண்டும். நிறைய செல்வம் திரட்ட வேண்டும். இப்படியான பல ஆசைகளை மனதில் அசைப் போட்டபடி கிளம்பினாள்.

வத்சனின் நாடக கம்பெனி இருக்கும் இடத்திற்கு வந்து சேர இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. உடல் சோர்ந்து போனாலும் உள்ளம் சோர்ந்து போகவில்லை. வீராவை காண கண்கள் துடித்தன.

நாடக குழு இருக்கும் இடத்தை நெருங்கியதும் தான் கவனித்தாள். திருவிழா போன்று எல்லோரும் இங்கு அங்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி நாடக கம்பெனி வாயிலில் தோரணம் வாழை மரம் என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நாதஸ்வர ஒசையும் கேட்டது. அனைவரும் நல்ல ஆடை உடுத்தி ஜம்மென்று இருந்தார்கள்.

குழலிக்கு எதுவும் விளங்கவில்லை. இன்றே மதராஸபட்டினம் கிளம்ப திட்டமா? அதனால்தான் இந்த ஆர்பாட்ட கொண்டாட்டமா என தன்னையே கேட்டுக் கொண்டாள்.

பயணத்தின் பலனாக தன் ஆடைகள் கசங்கி அழுக்ககாக இருந்தது. அதனால் பின் வழியே தன் இருப்பிடத்திற்குச் செல்ல திட்டமிட்டாள்.

நாடக குழு பின் வாசலை நோக்கி யாரையும் கவரா வண்ணம் நடந்தாள். குமரானாக இருப்பதால் கவனித்தாலும் ஏதோ ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவார்கள்.

அப்போது செவ்வந்தி திரும்பி திரும்பி பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தாள். செவ்வந்தி மணக்கோலத்தில் இருந்தாள்.

“குமரா” என அவன் கையை பிடித்து அழத் தொடங்கினாள் செவ்வந்தி.

“செவ்வந்தி என்ன நடந்தது? கல்யாணமா? உனக்கா” குழலி ஆச்சரியமாக விழிவிரிய கேட்டாள்.

“குமரா எனக்கு அவனை பிடிக்கல … உன்னைதான் காதலிக்கிறேன் .. வா நாம எங்கேயாவது போயிடலாம்” என பிச்சிப் போல பிதற்றினாள்.

இவளிடம் என்ன சொல்லி தப்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள் குமரனாக நின்ற குழலி.

“அது வந்து……….” என திணறி

“என்ன குமரா என்னை பிடிக்கலயா? என் நகை சொத்து எல்லாம் உனக்குதான்” என்றாள் பாவமாக

“செவ்வந்தி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி .. எங்கப்பா மரணப் படுக்கையில இருக்கார். அவர் கண்முன்னால என அத்தை பெண்ணோட கல்யாணம் ஆயிடுச்சி … இரண்டு நாள் முன்ன” என உணமையும் பொய்யும் கலந்துக் கூறினாள்.

ஸ்தம்பித்துப் போனாள் செவ்வந்தி “ இந்த கல்யாணத்து மறுக்காம செய்துகோ அது தான் உனக்கு நல்லது” என உபதேசித்தாள்.

“இப்ப புரியுதா ஜமீன்தாரர்களை நம்பாதேனு சொன்னேன்ல” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்ப அங்கே செவ்வந்தியின் தாய் நின்றிருந்தார்.

அவர் வந்து செவ்வந்தியை கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனார். செவ்வந்தி பதுமை போல பின்த் தொடர்ந்தாள்.

குழலிக்கு நிம்மதியாக இருந்தது. தன்னிடத்துக்கு சென்று சற்றே நல்ல ஆடையை உடுத்திக் கொண்டு வந்தாள்.

“என்ன குமரா நீயே இப்படி கல்யாணத்துக்கு தாமதமா வரலாமா?” என நண்பர்கள் வினவ புன்னகையை பதிலாக்கி திருமண இடத்திற்கு சென்றான்(ள்).

கெட்டி மேளம் கொட்டி மேளம் என ஒருவர் சொல்ல

“மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுனா” என வேதமந்திரம் ஓத

வீரா செவ்வந்தி கழுத்தில் தாலியை கட்டினான்.


திரை விலகும் …

 
Status
Not open for further replies.
Top