நூற்று இருபத்தியொரு கோடி மக்களின் வாழ்விடமாக திகழும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாடே திரும்பி பார்க்கும் அளவிலான தொழில் விருதுகள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது
வண்ண விளக்குகளும் ஆங்காங்கே தொங்கப்பட்டிருந்த ஒளி தோரணங்களும் இரவைப் பகலாய் மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்க, வந்திருந்த விருந்தினர்களை கம்பீரமாய் வழிகாட்டியது அங்கு விரிந்திருந்த சிவப்பு கம்பளம். பல்வேறு மாநிலங்களிலிருந்து முன்னணி தொழிலதிபர்கள் அங்கு கூடி விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
அரங்கமெங்கிலும் வைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி. திரைகள் மேடையில் நடப்பவற்றை ஒளிபரப்பியவண்ணம் இருக்க, அடுத்ததாக வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவருக்கான விருதை வழங்க மேடையிறினார், இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான அனுஷ் சிங்.
தொகுப்பாளர் வழங்கிய கியூ (cue) கார்டை பார்த்தவரின் இதழ்கள் மெலிதாக விரிய, தன் முன் கூடியிருந்த அரங்கத்தினரை நோக்கி சிறு புன்னகை ஒன்றை உதிர்த்தவர் தன் கம்பீர குரலில் "இந்த வருடத்தின் இளம் தொழில் முனைவர்" என்று ஆங்கிலத்தில் கூறும் போதே அந்த அரங்கம் அவரை ஆவலாய் நோக்க, அவரோ கண நேர மௌனத்திற்கு பின் "இட்ஸ் மிஸ்டர் இந்தர் சத்யபிரகாஷ்" என்றார் தன் கணீர் குரலில்.
இந்தரின் பெயரை அறிவித்ததும் அரங்கத்தில் கைதட்டல் ஒலிகள் காதைக் கிழிக்க, இரு ஜோடி விழிகள் மட்டும் அவனை வன்மத்துடன் தழுவியது.
முன் வரிசையில் அமர்ந்திருந்தவனோ தன் கோட் பட்டனை பூட்டியவாறு மேடையேற, அங்கிருந்த புகைப்பட கருவிகளோ அவன் கம்பீரத்தை அழகாக படம் பிடித்தது.
ஆறடிக்கு உயர்ந்து வளர்ந்திருந்தவன் அடங்காத தன் அலையலையான கேசத்தையும் ஜெல் தடவி அடக்கியிருந்தான்.
எதிரில் நிற்போரை நொடியில் அளந்திடும் அவன் கூர் விழி பார்வையில் கட்டி போடவும் சரி கட்டளையிட்டு அடக்கவும் சரி அவனை மிஞ்சுவோர் யாருமில்லை.
அடர்ந்த மீசையின் கீழ் ஒளிந்திருந்த ஆணவனின் இதழ்களில் எப்போதும் போல் ஆழ்ந்த புன்னகை ஒன்று குடியிருந்தது.
இரண்டிரண்டு படிகளாக தாவி மேடையேறியவனை ஆழதழுவிய அனுஷ் "யூ டிசர்வ் இட் மேன்" என்றார் மனம் நிறைந்த புன்னகையுடன்.
சீருடை அணிந்து வந்த பெண் கொடுத்த விருதை இந்தரிடம் நீட்டியவர் "இது ஆரம்பம் தான், இதுபோல இன்னும் நிறைய விருது வாங்க வாழ்த்துக்கள்" என்று வாழ்த்த, தன் அக்மார்க் புன்னகை ஒன்றை உதிர்த்தவன் "கண்டிப்பா" என்றான்.
அனுஷ் "கேரி ஆன்" என்றபடி ஒலிபெருக்கியை கொடுத்துவிட்டு மேடையிலிருந்து கீழிறங்க, விருதைத் தன் வலது கையால் அணைத்துப் பிடித்தவன், ஒலிபெருக்கியைத் தன் இடது கையில் பிடித்து "இந்த விருதை என் ரோல் மாடலாகியா அனுஷ் அவர்களிடமிருந்து பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. இந்த வெற்றிக்கான முழு முதற் காரணம் என்னோட ஊழியர்கள் மற்றும் அவர்களின் அயராத உழைப்பும் தான், தேங்க் யூ பேமிலி, திஸ் ஐஸ் பிகாஸ் ஆப் யூ கைஸ்" என்று விருதை தூக்கி காட்டிவிட்டு அதே கம்பீரத்துடன் மேடையிலிருந்து கீழிறங்க, இந்தரை மென் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் அனுஷ்.
விழா முடிந்து வெளிவந்தவனை வழி மறித்த பத்திரிக்கையாட்கள் சிலர் "சார் ஒரு கேள்வி" என்று ஆங்கிலத்தில் உரைக்க, "எஸ்" என்றான் கம்பீரமாக.
பத்திரிக்கையாட்களில் ஒருவர் "இந்தியாவோட மிக பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரேஸ் சொசைட்டியின் தற்போதைய தலைவரான சத்யபிரகாஷ் சாரோட ஒரே மகன் நீங்க அப்படி இருக்கும் போது இத்தனை நாள் நீங்க உங்க அடையாளத்தை மறைத்து வைக்க அவசியம் என்ன" என்று வினவ, அதுவரை அவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்து இறுக்கம் குடிக்கொண்டது.
நொடி பொழுதில் தன் முக பாவனையை சரி செய்தவன் "எனக்குனு ஒரு தனி அடையாளத்தை உருவாக்க" என்று சுருக்கமா விடையளிக்க, மற்றொருவரோ "உங்களோட ஐ மீடியாஸ் பத்தி சொல்ல முடியுமா" என்று கேள்வியெழுப்பினார்.
"ஐ மீடியாஸ் என்னோட கனவு, எனக்காக நான் உருவாக்கிய அடையாளம் அது" என்றவனிடம் ஒருவன் "நீங்க தான் ரேஸ் சொசைட்டியோட அடுத்த தலைவர், அப்படியிருக்க ஐ மீடியாஸ் விருதுக்காக ஒரு கண் துடைப்பா" என்று எள்ளலாக கேள்வியை தொடுக்க, இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் "உங்கள் கற்பனைக்கே" என்று கண்ணடித்துவிட்டு பாதுகாவலர்களின் உதவியோடு அங்கிருந்து வெளியேற, ஊடகங்களின் மத்தியில் சலசலப்பு தொடங்கியது.
தனக்காக காத்திருந்த மகிழுந்தில் ஏறிய இந்தரின் செவிகளில் அந்த பத்திரிகையாள் கேட்ட கேள்விகள் தான் ரீங்காரமிட்டது.
ரேஸ் சொசைட்டி, இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்று, அதை நிறுவனம் என்பதை விட கடல் எனலாம், அன்றாட வாழ்வில் ஒருவன் பயன்படுத்தும் பற்பசை முதல் பஞ்சு மெத்தை வரை அனைத்தையும் உற்பத்தி செய்யும் நிறுவனம் அது. உலகெங்கிலும் நூற்றிற்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களை கொண்டுள்ள அமைப்புதனில் கிடைக்காத பொருளே இல்லை.
இந்தரின் தந்தை வழி தாத்தா மூர்த்தி மற்றும் அவரின் நெருங்கிய நண்பருமான ராஜேந்திரன் தொடங்கிய அமைப்பு தான் ரேஸ் சொசைட்டி. கோவையில் அரிசி ஆலை ஒன்றில் தொடங்கிய அவர்களின் நிறுவனம் தான் இன்று இந்தளவு வளர்ந்திருந்தது.
நட்போடு நிறுத்திக்கொள்ளாது தங்கள் உறவை பலப்படுத்த பெரியவர்கள் முடிவு செய்திருக்க, அதன்படி ராஜேந்திரனின் இளைய மகளான சத்யபாமாவிற்கும் மூர்த்தியின் ஒரே மகனான சத்யபிரகாஷிற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
சத்யபாமாவும் சரி சத்யபிரகாஷும் சரி ஆளுமையும் அழுத்தமும் கொண்ட ஆட்கள், பணத்தை வைத்து ஆளை மதிப்பிடும் குணம் உடையவர்கள்.
ராஜேந்திரனின் மூத்த மகனான கதிரவனோ அவர்களுக்கு அப்படியே நேரேதிர், இளகிய மனம் கொண்டவருக்கோ தந்தை சொல்லே வேத வாக்கு.
மூர்த்தி மற்றும் ராஜேந்திரன் இந்தியாவின் பிற மாநிலங்களில் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை தொடங்க, சத்யபிரகாஷ் மற்றும் கதிரவன் இணைந்து மேல் நாடுகளில் தங்களின் கிளை நிறுவனங்களை நிறுவியிருந்தனர்.
சத்யபிரகாஷ் மற்றும் பாமாவிற்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து பிறந்தவன் தான் இந்தர், காண்போரை கவர்ந்திழுக்கும் மாயக் கண்ணன்.
பாமா தொழில்களில் கவனம் செலுத்தியதால் இந்தரை வளர்த்தது என்னவோ கதிரவனின் மனைவி ராதிகா தான்.
ராதிகா, சத்யபாமாவிற்கு அப்படியே நேரதிர் குணமுடையவர், யாரையும் அதிர்ந்து கூட பேச தெரியா வாயில்லா பூச்சி.
ராதிகாவிடம் வளர்ந்ததால் என்னவோ இந்தரும் அவரை போலவே சாந்தமானவன் தான். அனைவருடனும் இன்முகத்தோடு பழகுபவனுக்கு இந்த பகட்டானா வாழ்க்கையின் மீது என்றும் மோகம் இருந்ததில்லை.
எளிய வாழ்க்கையை அதிகம் விரும்புபவன் முயன்ற வரையில் தன் அடையாளத்தை மறைத்து விடுவான்.
இதோ இது நாள் வரையில் தன் அடையாளத்தை மறைத்து வைத்திருந்தவனுக்கு மனதை அரித்த ஒரே கேள்வி தன் அடையாளம் வெளி வந்தது எப்படி என்பது தான், அதே சிந்தனையில் புருவமுடிச்சோடு அமர்ந்திருந்தவனைக் கலைத்தது ஓட்டுனரின் குரல்.
சாரதி "சார், ஹோட்டல் வந்தாச்சு" என்றிட, அவருக்கு ஒரு புன்னகையுடன் கூடிய தலையசைப்பை கொடுத்துவிட்டு இறங்கியவனின் அலைபேசி சிணுங்க, குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது.
'கம் டு ரூஃப் டாப்' என்று முகவரி தெரியாத ஒரு எண்ணிலிருந்து செய்தி வந்திருக்க, அதை புருவம் சுருக்கிப் பார்த்தவன் மின்தூக்கியினுள் ஏறிய நொடி பின்னிலிருந்து ஒருவர் அவன் கண்ணைக் கட்ட, இந்தர் "டேய் யாருடா அது" என்று திமிற, அதற்குள் மற்றொருவன் அவன் வாயைப் பொத்த மூன்றாமவனோ அவன் கரத்தை வளைத்துப் பிடித்திருந்தான்.
டெல்லியின் மிகப்பெரிய நட்சத்திர விடுதிகளில் ஒன்றான ரேஸ் ரெசிடென்சியினுள் நுழைந்த அவ்விருவரின் விழிகளும் அதன் பிரம்மாண்டத்தில் அகல விரிய, அவர்களுக்கு பின் முகக்கவசம் அணிந்து வந்தவனோ "வாய பொளக்காதீங்க" என்றான் காட்டமாக.
பின்னிலிருந்து கேட்ட குரலில் சட்டென நிதானத்திற்கு வந்தவர்கள் "ஹிஹி" என்று இளித்து வைக்க, "பல்ல காட்டாம வந்த வேலைய பாருங்க" என்று மீண்டும் கட்டளையாகவே வந்தது அவன் குரல்.
"பாஸ் அவன் அங்க லிப்ட் கிட்ட போறான்" என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒருவன் இந்தரை சுட்டிக்காட்ட, முகக்கவசம் அணிந்திருந்தவனோ "சொன்னது நியாபகம் இருக்குல, அவன் பின்னாடி போங்க" என்றதும் இருவரும் அவனை நோக்கிச் சென்றனர்.
இந்தர் மின்தூக்கியினுள் ஏறியவுடன், எங்கிருந்தோ வந்த மூவர் அவர்கள் இருவரையும் முந்திக்கொண்டு மின்தூக்கியினுள் ஏறி இந்தரை சுற்றி வளைக்க, வாயிலில் நின்றிருந்த இருவரோ "என்ன நம்ம பண்ண வேண்டியதை இவனுங்க பண்ணுறாங்க" என்று குழம்பும் போதே மின் தூக்கியின் கதவுகள் மூடப்பட்டது.
மின்தூக்கியை நோக்கி வேக நடையுடன் வந்த மூன்றாமவனோ "டேய், உள்ள போகாம என்னத்த பண்ணிட்டு இருக்கீங்க" என்று பல்லை கடிக்க, இருவரும் திருதிருவென விழிக்க தொடங்கினர்.
"உங்களை வச்சுக்கிட்டு ஒன்னும் புடுங்க முடியாது, உங்கள போய் அனுப்பியிருக்கான் பாரு" என்று அவர்களையும் அவர்களை அனுப்பி வைத்தவனையும் திட்டிக்கொண்டே அங்கிருந்த மற்றொரு மின்தூக்கியினுள் ஏறியவன் "லிப்ட் எந்த ப்ளோர்ல நிக்குதுன்னு பார்த்து சொல்லுங்க" என்று கட்டளையிட்டான்.
மின் தூக்கியின் கதவுகள் மூடியவுடன் அந்த கட்டிடத்தின் இறுதி தளத்தின் பொத்தனை அழுத்தியவன், அவர்களுக்கு அழைத்து "எங்கயாச்சு நின்னுதா" என்று வினவ, ஒருவன் "இல்ல பாஸ்" என்றிட, மற்றொருவன் "பாஸ் பாஸ் லிப்ட் லாஸ்ட் ப்ளோர்ல தான் நிக்குது" என்றிட, அவனும் மேல் தளம் வரும் வரை காத்திருந்தான்.
*********************
மின்தூக்கி மேல் தளத்திற்கு செல்வதை அங்கு ஒலித்த பதிவு குரலின் வழி அறிந்த இந்தரின் இதழ்கள் யாரும் அறியா வண்ணம் புன்னகைத்துக்கொண்டன.
மின்தூக்கி மேல் தளத்தில் நின்றவுடன் இந்தரை தள்ளிக்கொண்டு வெளியே வந்தவர்கள் அவன் கைக் கட்டை எடுத்துவிட, இந்தர் இரு கரங்களையும் தேய்த்துக்கொள்ளும் போதே அவள் வாயில் இருந்த கட்டும் அவிழ்க்கப்பட்டது.
வாயிலிருந்த கட்டை எடுத்த நொடி "டேய் சுதீர், ஒரு கிட்னாப் கூட ஒழுங்கா பண்ண தெரியலடா உனக்கு" என்று இந்தர் கேலி செய்திட, கண் திறந்து பாராமலே தன்னை கண்டுகொண்ட முதலாளியின் புத்திக்கூர்மையில் நொந்த சுதீர் "ச்சே.. நம் தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே" என்று புலம்ப, அங்கிருந்த மற்றொருவன் "இவ்ளோ நேரம் அமைதியா தான இருந்தீங்க கண்ண திறக்குற வரையும் அதை மெயின்டெயின் பண்ணிருக்கலாம்ல" என்று பாவமாக கேட்டுக்கொண்டே அவன் கண்களை திறந்துவிட "சப்ரைஸ்" என்று அந்த கட்டிடமே அதிரும் வண்ணம் கூச்சலிட்டனர் அவன் அலுவலக ஊழியர்கள்.
அவர்கள் கூச்சலிட்ட சமயம் அங்கிருந்த மற்றொரு மின் தூக்கியின் கதவுகளும் திறக்கப்பட, அந்த கூச்சலில் புதிதாக வந்தவனை கவனிக்காது விட்டவர்கள் இந்தருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மும்முரமாக இருந்தனர்.
மின்தூக்கியிலிருந்து வெளிவந்தவன் அங்கு அத்தனை ஆட்களை எதிர்பாராமல் அதிர்ந்து நின்ற சமயம் அவன் கூட்டாளிகளான கிளியும் நாரியும் அங்கு வந்து சேர்ந்தனர்.
கிளி "ஆத்தி என்ன ஒரு ஊரே இருக்கு" என்று வாயை பிளக்க, நரி "இப்போ மட்டும் சிக்குனோம் அவ்ளோதான்" என்றான் மிரட்சியாக.
அவர்கள் இருவரையும் உறுத்து விழித்தவன் ஒரு மறைவான இடத்திற்கு அவர்களை இழுத்துச் சென்று "இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா ரெண்டு பேர் உடம்புலயும் உயிர் இருக்காது" என்று எச்சரித்துவிட்டு "ரூமுக்கு போங்கடா" என்று கட்டளையிட, அவனை அதிர்ந்து பார்த்தவர்களோ 'செஞ்சாலும் செய்வாரு' என்று மிரண்டபடி அங்கிருந்து ஓடிவிட, இந்தரின் முதுகை வெறித்தவன் அங்கு நடப்பவற்றை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான்.
அங்கு அத்தனை நபர்களை எதிர்பாராத இந்தர் "என்னடா மொத்த ஆபிஸும் இங்க தான் இருக்கு போல" என்று சிறு சிரிப்புடன் வினவ, சுதீர் "உங்களோட இவ்ளோ பெரிய வெற்றிய நாங்க கொண்டாடாம எப்படி" என்றான்.
இந்தரை அணைத்த அவன் நண்பன் அமீர் "கங்கிராட்ஸ் மச்சி" என்று வாழ்த்த, அவனை தொடர்ந்து மற்றவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
எப்போதும் போல் அவர்கள் அன்பில் நெகிழ்ந்தவன், மென்மையான புன்னகை ஒன்றுடன் அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டான்.
ஒவ்வொருவராக இந்தரிடம் தங்கள் வாழ்த்தைத் தெரிவிக்க, அவன் விழிகளோ தூரத்தில் நின்றிருந்த நங்கையின் மீது படிந்தது.
மெல்லிய விளக்கொளி அவள் பொன்னிற மேனியில் பட்டு மின்ன, ஜீன்ஸ் டீ ஷர்ட் சாகிதம் நின்றவள் முதுகு வரையிலான கூந்தலை போனி டெயில் போட்டு அடக்கியிருந்தாள்.
நவ நாகரீக யுவதியவளின் முகமோ இன்னும் குழந்தை தனம் மாறாதிருக்க, அவளையே உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்துக் கொண்டிருந்தது, ஆடவனின் கூர் விழிகள்.
இந்தரின் பார்வை தன் மீது படிவதை கண்டும் காணாதது போல் நின்றவளின் அருகே வந்த அவள் நண்பி கிரிஷா "ஹே ஐரா, என்னடி சாருக்கு விஷ் பண்ணலயா" என்று வினவ, "பண்ணனும்டி, கூட்டமா இருக்கே கொஞ்சம் செட்டில் ஆகட்டும்னு வெயிட் பண்ணுறேன்" என்றாள் சமாளிப்பாக.
இங்கோ இந்தரை சுற்றி ஆட்கள் நின்றுக்கொண்டே இருக்க, அவர்களுக்கான கொண்டாட்டமும் தொடங்கியது.
ஆட்டம் பாட்டம் கேலி கிண்டலென விடியும் வரை கொண்டாடியவர்களை அடக்கி அனுப்புவதற்குள் இந்தர் தான் ஒரு வழியாகிவிட்டான்.
அனைவரையும் அவரவர் அறைக்கு அனுப்பிவிட்டு திரும்பவே நேரம் இரவு இரண்டு மணியை கடந்திருந்தது, தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவன் அப்போது தான் அங்கு வந்த நின்ற ஐராவை கண்டு "இந்த நேரத்துல எங்க சுத்திட்டு இருக்க" என்று ஒற்றை புருவமுயர்ந்த, "உங்களுக்கு விஷ் பண்ணவே இல்ல அதான் பண்ண வந்தேன்" என்றாள் தயக்கமாக.
இந்தர் "விஷ் பண்ண ஒரு நேரம் காலம் இல்லையா" என்று முறைக்க, "எல்லார்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசுறது நான் பேசுனா மட்டும் முறைக்கிறது" என்று அவனை மனதினுள் வறுத்தெடுத்தவள் "அப்போ நான் கிளம்பட்டா" என்று வினவ, அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றவன் "இன்னும் விஷ் பண்ணல" என்று நினைவூட்ட, "அடச்ச, அதை மறந்து போயிட்டேன்" என்று நெற்றியில் அடித்துக்கொண்டவள் "கங்கிராட்ஸ் சார்" என்று கை நீட்ட, அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே அவள் கரத்தை பற்றி குலுக்கியவன் "தேங்க் யூ" என்றான் மென் புன்னகையுடன்.
ஐரா "இப்போ கிளம்பட்டா" என்று தலை சாய்த்து வினவ, "வேண்டாம் இங்கயே இருக்கியா, விடிய விடிய பேசிட்டு இருக்கலாம்" என்று ஒற்றை புருவமுயர்த்தி அவன் வம்பிழுக்க, "சரியான வம்பு பிடிச்சவரு" என்று முணுமுணுத்தவள் "குட் நைட்" என்று உதட்டை சுழித்துக்கொண்டு அகல, அவன் விழிகளோ அவளையே களவாடிக் கொண்டிருந்தது
இந்தரின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவள் தான் ஐரா, பார்ப்பதற்கும் சரி குணத்திலும் சரி குழந்தை தான்.
எப்போதும் ஏதாவது தவறு செய்து இந்தரிடம் வாங்கி கட்டிக்கொள்வாள், அந்த அலுவலகத்தில் இந்தரிடம் திட்டு வாங்கும் ஒரே ஜீவனும் அவள் தான்.
வேலையில் தவறு செய்தால் கூட வேலையை விட்டு அனுப்பி விடுவான் ஆனால் கொடுக்கும் வேலைகளை கட்சிதமாக செய்து முடிப்பவள் மாட்டிகொள்வது என்னவோ அவள் குறும்பு தனத்தில் தான்.
அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரிடத்திலும் வம்பு வளர்பாள், யாராவது மாறி பேசிவிட்டால் போதும் உடனே முகத்தை தூக்கி வைத்துக்கொள்வாள், பல முறை அவள் கசங்கிய முகம் காணாது இந்தரே அவளிடம் மன்னிப்பு கேட்ட தருணங்களும் உண்டு.
ஆறடி ஆண்மகனை தன் குறும்பு தனத்தால் மொத்தமாக ஈரத்திருந்தாள் பெண்ணவள்.
இந்தருக்கு அவள் மீது விருப்பமிருந்த போதிலும் அவர்களுக்குள் இருக்கும் வயது வித்தியாசம் தான் அவனுக்கு பெரிய தடையாக இருந்தது.
அவன் இருபதுகளின் முடிவில் இருக்க அவளோ இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தாள், இருவருக்கிடையே எட்டு வயது வித்தியாசம் இருந்தது.
ஐராவிற்கு இந்தரை பிடித்திருக்கிறதா என்றால் ஆம், அவன் மீது இனம் புரியா ஈர்ப்பு இருந்தது. அவன் எளிமை, பேச்சு, பிறரிடம் பழகும் விதம், உதவும் தன்மை என்று அடுக்கும் அளவிற்கு ஆடவனின் ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு ஈர்ப்பு இருந்தது ஆனால் அந்த ஈர்ப்பிற்கும் தடையாய் அமைந்தது அவன் உயரம், அவள் நடுத்தர வர்கத்தை சார்ந்தவள் என்றால் அவனோ எட்டாத உயர்த்தில் அல்லவா இருக்கிறான்.
இந்தருக்கு தன் மீதுள்ள காதலை பற்றி அவளும், அவளுக்கு இந்தர் மீதிருந்த ஈர்ப்பைப் பற்றி அவனும் அறியாமல் போனது யார் பிழையோ?
**********
இந்தர் மற்றும் ஐராவை கவனித்துக் கொண்டிருந்த அந்த முகக்கவசம் அணிந்தவனோ "ஓ, காதல் ஜோடிகள்" என்று நக்கலாக உரைக்க, அவன் அருகே ஒளிந்து நின்று எட்டி பார்த்துக் கொண்டிருந்த அவன் கூட்டளிகளான கிளி மற்றும் நரி "செம்ம ஜோடில" என்றனர் ஒருமித்த குரலில்.
பின்னிலிருந்த கேட்டக் குரலில் பல்லை கடித்தவன் "போய் ரெண்டு பேருக்கும் அச்சதை தூவி வாழ்த்திட்டு வர வேண்டியது தான" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, கிளியும் நரியும் "செத்தோம்" என்றனர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.
கிளியும் நரியும் ஒருவரை ஒருவர் மிரட்சியாக பார்த்துக்கொள்ள, அவர்களை நெருங்கிய முகக்கவசம் அணிந்தவனோ "சொன்ன வேலைய தவிர்த்து எல்லாம் பண்ணுறது" என்றபடி அவர்களின் முடியை பிடித்து ஆட்ட, இருவரும் "ஆஆ வலிக்கிது பாஸ்" என்று அலறினர்.
"சரியான வடிகட்டின முட்டாளுங்க" என்று இருவரையும் திட்டியவன் அவர்களை தள்ளிவிட்டு தன் அறைக்குள் நுழைய, கிளி "என்னடா நம்ம எவ்ளோ பெரிய ரௌடி நம்மளையே அடிக்கிறாரு" என தலையை தேய்த்துக்கொள்ள, நரி "அநேகமா இந்தருக்கு முன்ன நம்ம தான் போய் சேருவோம் போல" என்று மிரட்சியாக சொல்லிக்கொண்டவன் "வாடா போவோம் இல்ல அதுக்கும் அடிப்பாரு" என்று அறைக்குள் செல்ல, கிளியும் சாலித்தபடி உள்ளே நுழைந்தான்.
அடிபட்ட வேங்கையாய் அவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடை பயில, கன்னத்தில் கை வைத்து அமர்ந்த கிளியும் நரியும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை வரிசையாக மனதினுள் திட்டமிட்டுக் கொண்டவனின் இதழ்களில் இரகசிய புன்னகை.
****************
மறுநாள் மாலை, அமீர் "நைட் எட்டு மணிக்கு பிளைட், இப்போ போய் ஷாப்பிங் போகணும்னு அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க" என்று பெண்களை திட்டிக் கொண்டிருக்க, கிரிஷா "சார் நாங்க போயிட்டு ஆறு மணிக்கு ஷார்ப்பா இங்க இருப்போம் ப்ளீஸ்" என்று கெஞ்சலாக வினவ, அமீர் மறுக்கும் முன் இந்தர் "டேய் விடுடா, கிரிஷா நீங்க பார்த்து போங்க அண்ட் டைம்கு வந்திடுங்க" என்றான்.
"தேங்க்ஸ் சார்" என்று கண்களில் மின்னல் வெட்ட நன்றி உரைத்தவள் சிட்டாக பறந்துவிட, ஐரா மட்டும் தனியாக நிற்பதை கண்டு அவளருகே சென்ற இந்தர் "நீ மட்டும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க" என்றான் கேள்வியாக.
அமீர் "இவ போனா சும்மா இருக்க மாட்டா இவளை இழுத்து பிடிக்கவே ரெண்டு ஆள் போடணும்" என்று சிரிப்புடன் ஐராவை வம்பிழுக்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் "நான் யார்கிட்டயும் வம்பு பண்ண மாட்டேன், எனக்கு ஷாப்பிங் பிடிக்காது அதான் போகல" என்றாள் முறுக்கிக்கொண்டு.
அவள் செய்கையில் ஆண்கள் இருவரும் புன்னகைக்க, அவர்களை முறைத்துக்கொண்டே திரும்பி நடந்தவள் ஏதோ நியாபகம் வந்தார் போல் மீண்டும் அவர்கள் அருகே வந்து "இங்க ஸ்ட்ரீட் புட் சூப்பரா இருக்கும்னு கேள்வி பட்டேன், கிரிய கூப்பிட்டா டையட் அது இதுனு சொல்லிட்டா.. நீங்களாச்சு வரீங்களா போவோம்" என்று ஆர்வமாக கேட்டிட, இந்தரால் மறுக்க முடியுமா என்ன?
இந்தர் உடனே "போகலாமே" என்று பச்சை கொடி காட்டிவிட, அமீர் "நான் வரலடா, நீங்க போயிட்டு வாங்க" என்றான். ஐரா "வேஸ்ட் அண்ணா நீங்க.. சார் நீங்க வாங்க நம்ம போவோம்" என்று அவனை அழைத்துக்கொண்டு வெளியேற, இந்தரும் மென் புன்னகையுடன் அவளுடன் இணைந்து நடந்தான்.
டெல்லியின் முக்கிய உணவு வீதி ஒன்றினுள் நுழையும் போதே அங்கிருந்த உணவு வகைகளின் வாசம் மூக்கை துளைக்க, இருவரும் ஒரு கடைக்குள் நுழைந்தனர்.
ஒரு நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரும் அளவிலான சிறிய கடை ஒன்றில் கூட்டம் அலைமோத, ஐராவை தன் கைவளைவிற்குள் பிடித்து நிறுத்தியவன் "வேற கடையே இல்லையாடி இங்க" என்றான் முறைப்பாக.
அவன் உரிமையான செயலிலும் பேச்சிலும் விழி விரித்தவள் "பிடிச்சது கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட்டு தான ஆகணும்" என்றிட, அவளை மேலிருந்து கீழ் பார்த்து வைத்தவன் "சரி தான்.. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும்" என்றான் ஒரு மாதிரி குரலில்.
சிறிது நேர காத்திருப்பிற்கு பின் இரு இருக்கைகள் கிடைத்திருக்க அதில் அமர்ந்து கொண்டனர். நால்வர் அமரக் கூடிய இருக்கையின் ஒரு புறம் இரு சிறுவர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் தான் இந்தரும் ஐராவும் அமர்ந்தனர்.
ஐராவிற்கு பிடித்தவற்றை அவன் ஆர்டர் செய்திட, அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த சிறுவன் ஒருவனோ "சூப்பர் ஜோடி" என்றான் இந்தரிடம்.
அந்த சிறுவனின் கூற்றில் வாய் விட்டு சிரித்தவன் "அப்படியா" என்று வினவ, இருவரும் 'ஆம்' என்பதாய் தலையசைக்க, "அப்போ ஒரு போட்டோ எடுங்க பாப்போம்" என்று தன் அலைபேசியை அவர்களிடம் நீட்டியவன் ஐராவை தோளோடு அணைத்துக்கொள்ள, முன்னரே அவர்கள் கூற்றில் அதிர்ந்து விழித்தவள் அவன் நெருக்கத்தில் மொத்தமாக பேச்சிழந்தாள்.
தன்னை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளை கண்டதும் அவளை இழுத்து வைத்து முத்தமிட அவன் அணுக்கள் எல்லாம் போட்டிப்போட, வலது கையால் பின்னங்கழுத்தை அழுத்தமாக வருடி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் காளையவன்.
இந்தரின் அலைபேசியை வைத்திருந்த சிறுவனோ "பையா ஸ்மைல்" என்ற குரலில் மீண்டவன் தன் மார்பளவே இருந்தவளை காணவும், அவள் நிமிர்ந்து இந்தரை காணவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட நொடியை அழகாக புகைப்படம் எடுத்தவன் இந்தரிடம் அதை காட்ட, இந்தரின் புருவங்கள் மெச்சுதலாய் உயர்ந்தது.
நேரமாவதை உணர்ந்து சிறுவர்கள் இருவரும் ஓடிவிட, ஓரக் கண்ணால் அவளை ரசித்துக்கொண்டு உண்டவன் "ஏன் ஐரா உங்க வீட்ல உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா" என்று கேள்வியெழுப்ப, அவனை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தவள் "ஏன் கேட்குறீங்க" என்று கேள்வியெழுப்ப, "எல்லாம் ஒரு ஜி. கே தான்" என்றான் குறும்பாக.
"சரி தான்" என்று தலையசைத்தவள் "பிடிச்ச பையனா இருந்தா உடனே கூட பண்ணிக்கலாம்" என்று தோளை உலுக்க, "பையன் உன்ன விட எட்டு ஒன்பது வயசு பெரியவனா இருந்தா கூட ஓகேவா" என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேள்வியெழுப்ப, "பையனை பொருத்து" என்றவள் தொடர்ந்து "ஆமா நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க.. எனக்கு பையன் ஏதாவது பார்க்க போறீங்களா என்ன" என்று புருவமுயர்த்தி கேலியாக வினவ, "ஆமா கைவசம் ஒரு பையன் இருக்கான்.. கொஞ்சம் ஸ்மார்ட், ஹாண்ட்ஸம் அண்ட் ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. அவனுக்கு தான் பொண்ணு தேடிட்டு இருக்கேன்" என்றான் ஒற்றைக் கண்ணை சிமிட்டி.
"பையன் பெயர் என்ன இந்தரா" என்று நக்கலாக கேள்வியெழுப்பியவளைப் பார்த்து இருபக்கமும் தலையாட்டி முத்துப்பல் வரிசை மின்ன சிரித்தவன் "இருக்கலாம்" என்றான் தோளை உலுக்கிக்கொண்டு . அவன் பதிலில் புன்னகைத்தவள் "ஆஹான்" என்று எழ, அவள் வலது கையை தன் இடது கரத்தால் பிடித்தவன் "பதில் சொல்லிட்டு போறது" என்றிட, "சார் விளையாடுனது போதும்.. வாங்க போவோம்" என்றாள்.
"விளையாடுறேனா.. இதை விட சீரியஸா நான் பேசுனதே இல்லடி" என்று அவள் கண்களை பார்த்துக் கொண்டே விளக்க, ஐரா "சார்" என்றாள் குழப்பமாக. இந்தருக்கு தன் மீது விருப்பமுள்ளது என்பதை நம்பவே அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
இந்தர் "ஐரா ஐ அம் சீரியஸ், எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.. உன்னோட இன்னொஸென்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. இப்போன்னு இல்ல, இன்பேக்ட் ரொம்ப நாளாவே எனக்கு உன் மேல பீலிங்ஸ் இருக்கு.. உன்னோட வயசு தெரிஞ்சு கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு.. இப்ப நீ வயசு பிரச்சனை இல்லனு சொல்லவும் தான் உன்கிட்ட இதை சொல்லுறேன்" என்று பெரிதாக பேசியவன் "கல்யாணம் பண்ணிக்கலாமா" என்ற கேள்வியுடன் முடிக்க, அவனை நம்ப முடியாமல் பார்த்து வைத்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த உறுதி அவன் விளையாடவில்லை என்பதை உணர்த்தியது ஆனால் ஒரு தயக்கம் அவள் மனதை ஆட்டிப்படைக்க, "எனக்கு கொஞ்சம் டைம் வேணும்" என்றாள் தன்னிலை மறைக்காது.
அவளுக்கும் அவனை பிடித்திருந்தது, அவனை போல் வயது எல்லாம் அவளுக்கு பெரிதாக இருக்கவில்லை ஆனால் அவன் உயரம் அவளை அச்சுருத்தியது, தொட்டுவிடும் உயரம் அல்லவே அவன்.
அவள் தலையை செல்லமாக ஆட்டியவன் "யோசிச்சு பொறுமையா பதில் சொல்லு, உன் முடிவு எதுவா இருந்தாலும் அதை ஏத்துக்குவேன்" என்றவனை பிரம்மிப்பாக பார்த்தவளுக்கு அவன் என்றுமே பிரம்பிப்பு தான்.
நேரமாவதை உணர்ந்து "கிளம்பலாம் கேண்டி" என்றவன் முன்பு போலவே அவளை தன் கை வளைவிற்குள் வைத்துக்கொள்ள இம்முறை உரிமையாகவே அவனுடன் இணைந்து நடந்தாள்.
கடையில் இருந்து வெளியே வந்தவர்கள் அந்த கடை வீதியில் நடந்த போதிலும் இருவருக்கிடையே பலத்த மௌனம். அவளை ஜன நெரிசலிலிருந்து பாதுகாப்பதில் அவன் கவனமாகயிருக்க, அவளோ ஓரக்கண்ணால் அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.
கால் போன போக்கில் நடந்தவன் ஒரு முக்கிய அழைப்பு வரவும் "ஐரா ஒரு டூ மினிட்ஸ், முக்கியமான கால் வருது நான் பேசிட்டு வரேன் இங்கயே நில்லு" என்று அவளை ஒரு ஓரமாக நிற்க வைத்தவன், ஜன நெரிசல் இல்லாத இடத்திற்கு சென்று அழைப்பை ஏற்றான்.
இரண்டு நிமிடத்தில் வருகிறேன் என்றுவிட்டு சென்றவன் அரை மணி நேரம் கடந்து வந்த சமயம் அவன் முகமோ இறுகி இருந்தது.
எப்போதும் தவழும் புன்னகை இல்லாது இறுகியிருந்த அவன் முகத்தை கவனித்த பெண்ணவளோ "என்ன ஆச்சு சார், ஏன் உங்க முகமே சரியில்ல.. ஏதாவது பிரச்சனையா" என்று வினவ, "நத்திங்" என்றவன் முன்னே செல்ல, அவனை தொடர்ந்து பின்னே சென்றவளுக்கு மனதில் ஒரு நெருடல்.
அத்தனை நேரம் அவளை தன் கை வளைவிற்குள் வைத்திருந்தவன் அவளை திரும்பியும் பாராது முன்னே சென்றதால் உண்டான நெருடல் அது.
விடுதிக்கு திரும்பும் வரை இருவரின் பயணமும் மௌனமாகவே கழிய, வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ஐராவோ "என்கிட்ட ஒரு கேள்வி கேட்டீங்களே அதுக்கு பதில் தெரிய வேண்டாமா" என்று அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு கேள்வியெழுப்ப, "இல்ல இப்போ வேண்டாம், அப்பறம் கேட்குறேன்" என்றான்.
சட்டென்று அவனை திரும்பி பார்த்தவள் "கோபமா" என்று உதட்டை பிதுக்க, "ஹே வாலு, உன்மேல ஏன் கோபப்பட போறேன், இப்போ கொஞ்சம் மூட் ஆப் அதான்.. அண்டர்ஸ்டேண்ட்" என்று புரிய வைக்க, "ஓகே" என்றவள் அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்யவில்லை.
விடுதிக்கு திரும்பி உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையம் திரும்பும் வரையிலும் இந்தரின் மௌனம் தொடர, அதனை கவனித்து அமீர் கேள்வியெழுப்பிய போதும் அவனிடத்தில் பதிலில்லை.
நடுநிசியில் சென்னை திரும்பியவர்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிய சமயம், "மாமா" என்று அழைத்துக்கொண்டே இந்தரை நெருங்கினாள் அவள்.
முட்டி வரையிலேயான கவுன் ஒன்றை அணிந்து, பெரிதாக ஒப்பனைகள் ஏதுமின்றி பேரழகியாக மின்னியவளை கண்ட இந்தரின் இதழ்கள் "மது" என்று முணுமுணுத்தன.
மது, கதிரவன் ராதிகா தம்பதியர்களின் ஒரே மகள், இரு வீட்டாருக்கும் ஒரே பெண் பிள்ளை என்பதால் செல்லம் அதிகம் ஆனால் ஐராவை போல் அல்லாது அவள் வயதிற்குரிய முதிர்ச்சி மதுவிடம் இருந்தது. பாமாவை பார்த்து வளர்ந்ததால் என்னவோ அவளும் பாமாவை போல் மிகவும் அழுத்தமானவள்.
பால் வண்ண பெண்ணவளோ தந்தை மற்றும் மாமனுடன் சேர்ந்து அவர்களின் தொழில்களை கவனித்து வந்தாள்.
தன்னை நோக்கி வந்த மாமன் மகளை கண்ட இந்தர் "ஹாய் மது" என்க, ஓடி வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள் "கங்கிராட்ஸ் மாமா, ஐ ஆமா சோ பிரவுட் ஆப் யூ" என்று ஆர்ப்பரிக்க, இந்தரின் விழிகளோ அதிர்ந்து விரிந்தபடி ஐராவை தழுவியது.
அவன் நினைத்தது போலவே அவர்களை கண்டு முகத்தை சுருக்கியவளின் பார்வை இந்தரிலிருந்து ஒரு நொடி கூட அகலவில்லை.
மதுவை தன்னிடமிருந்து விலக்கியவன் "எப்படி இருக்க" என்று பேச்சை தொடங்க, "எனக்கு என்ன நல்லா இருக்கேன்" என்றவள் "நவீன், மாமாவோட திங்ஸ் கொண்டு வாங்க" என்று நவீனிடம் கட்டளையிட்டுவிட்டு அவனுடன் கைகோர்த்துக்கொண்டே நடக்க, இந்தர் "மது, என்னோட லக்கேஜ் நானே கொண்டு வருவேன்" என்றான் அழுத்தமாக.
மது "அது எனக்கு தெரியும், ஒரு முக்கியமான விஷயம் இருக்கு வா" என்று அவனை இழுத்துக்கொண்டு விமான நிலையத்தின் முகப்பிற்கு வரவும் ஈசல் கூட்டம் போல் பத்திரிகையாட்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர்.
இந்தார் "அட கடவுளே" என்று சலிக்க, மது "நான் பேசுறேன்" என்றவள் பத்திரிக்கையாட்களை நெருங்கி "சத்யபிரகாஷ் சாரோட போஸ்ட் பார்த்துட்டு தான் நீங்க வந்திருக்கீங்கனு எனக்கு தெரியும், அது உண்மை தான், எனக்கும் இந்தருக்கும் இன்னும் சில தினங்களில் திருமணம் நிச்சயிக்கப்படும்" என்றாள் அதிர்ந்து நின்ற இந்தரை கவனியாது.
இந்தருக்கு இது அதிர்ச்சி என்றால் ஐராவிற்கோ அது பேரதிர்ச்சியாக இருந்தது. மதுவின் கூற்று தடுமாற்றத்தை விளைத்தாலும் சில மணி நேரத்திற்கு முன் அவன் கண்களில் தெரிந்த உறுதி அவள் நம்பிக்கையை கட்டிக் காத்தது.
பத்திரிக்கையாட்கள் இந்தர் மற்றும் மதுவை புகைப்படமாக எடுத்து தள்ள, இந்தரைக் கண்டு உதட்டை சுழித்த ஐராவோ கிரிஷாவுடன் இல்லத்திற்கு திரும்பினாள்.
பத்திரிக்கையாட்களிடம் பேசிவிட்டு இந்தருடன் நடந்த மது "நீ நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவனு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல மாமா" என்றபடி மகிழுந்தினுள் ஏற, அவளை தொடர்ந்து வண்டியில் ஏறியவனின் முகம் மீண்டும் இறுக்கத்தை தத்தெடுத்தது.
இறுக்கமான மன நிலை ஒன்றில் பயணித்தவனின் செவிகளை தீண்டியது அவ்வரிகள்,
டூ டூ டூன்னு புட்டு
ஹார்ட்ட விட்டு குடுக்க
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா
த்ரீ ஒரு ஜோடியாக ஒன்னாயிருக்க நினைக்க
நீ தான் என்ன லார்டு முருகனா
சும சும சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன்னு
உன்ன நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ
செவிகளை தீண்டிய பாடல் வரிகள் மனதை இறுக்க, "வண்டிய வீட்டுக்கு விடுங்க" என்றான் கோபக் குரலில்.
தன்னை தானே கிள்ளிகொண்ட மதுவோ "இது நிஜம் தானா" என்று விழி விரிக்க, "ம்ம்" என்றான் இறுகிய குரலில். ஈரைந்து நெடிய ஆண்டுகளுக்கு பின்னான அவன் வருகையை அவள் வீட்டினருக்கு தெரிவிக்க, அவர்களுக்கும் அது அதிர்ச்சி தான் ஆனால் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
மருமகன் வீட்டிற்கு வருகிறான் என்றறிந்த ராதிகா அவனுக்கு ஆலம் கரைத்து வைக்க, சத்யபிரகாஷ் "திமிரெடுத்து வீட்டை விட்டு போனவனுக்கு இதெல்லாம் அவசியமா" என்றார் கடுப்பாக.
சத்யபிரகாஷின் தோளில் தட்டிய கதிரவன் "அவனே மனசு மாறி இப்போ தான் வீட்டுக்கு வரான், திரும்ப ஒரு சண்டை வேண்டாம் மாப்பிள்ளை" என்று சமன் செய்ய, "என்னமோ பண்ணுங்க" என்றவர் தன் அறைக்குள் சென்றிட, மூர்த்தி தான் "இன்னும் கொஞ்சம் கூட மாறல இவன்" என்று தனக்குள் சலித்துக்கொண்டார்.
அனைவரும் ஆவலாக வாயிலில் கண் பதித்திருக்க, மதுவின் மகிழுந்து அவர்கள் வளாகத்தை வந்தடைந்தது. மகிழுதிலிருந்து இறங்கி நடந்து வந்தவனின் வேகமே அவன் கோபத்தை பறைசாற்ற, புயலாக வீட்டின்னுள் நுழைந்தவன் "எங்க அவரு" என்றான் விழிகளை சுழல விட்டப்படி.
கதிரவன் "இந்தர்" என்றழைக்க, "மாமா நீங்க எதுவும் பேசாதீங்க.. யாரை கேட்டு என்னோட ஐடென்டிட்டிய ரிவீல் பண்ணாரு.. இப்போ என்னடானா மதுவுக்கும் எனக்கும் கல்யாணம்னு டுவீட் பண்ணிருக்காரு" என்று பொரிய, தன் அறையிலிருந்து வெளி வந்த சத்யபிரகாஷ் "யாரடா கேட்கணும்.. நீ என் பையன் அதனால தான் ரிவீல் பண்ணேன்.. அதுமட்டுமில்லாம நீ ரேஸ் சொசைட்டியோட ஒரு அங்கம், நீயே அதை மறுத்தாலும் அது தான் உன்னோட அடையாளம்" என்றார் கடின குரலில்.
தன் தந்தையை அழுத்தமாக பார்த்து வைத்தவன் "நீங்க நினைக்கிறது என்னிக்குமே நடக்காது.. ஐ அம் லீவிங்" என்றவன் வெளியேற பார்க்க, அவன் கரத்தை எட்டி பிடித்த மது "நைட் இங்க ஸ்டே பண்ணிட்டு காலைல போ" என்றாள்.
மதுவின் வேண்டுகோளிற்கு மறுப்பாக தலையசைத்தவனை கண்ட கதிரவன் "என்னிக்கோ நடந்து முடிஞ்சதை வச்சு இன்னும் எத்தனை நாளுக்கு சண்டை பிடிக்க போற இந்தர்" என்று ஆயாசமாக கேள்வியெழுப்ப, விரக்தியாக இதழ் வளைத்தவன் "முடிஞ்சதா, நிஜமாவே முடிஞ்சு போயிடுச்சா மாமா" என்றான் அவரை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே.
இந்தரின் கேள்வியில் தடுமாறியவர் "இல்ல அது" என்று ஏதோ கூற வர, ஒரு கரம் நீட்டி அவரை தடுத்தவன் "கிளம்புறேன்" என்றுவிட்டு வெளியேற, அனைவரிடத்திலும் ஒரு பெருமூச்சு மட்டுமே.
வீட்டை விட்டு வெளி வந்தவனை நவீன் எதிர்கொள்ள, இந்தர் "நவீன் என்ன அப்பார்ட்மெண்ட்ல டிராப் பண்ணிடு" என்று கட்டளையிட்டுக்கொண்டே வண்டியில் ஏறி அமர, நவீனும் தலையசைப்புடன் வண்டியை எடுத்தான்.
மதுவின் தனி உதவியாளரான நவீன் "உங்களுக்கு இந்த கோப முகம் செட் ஆகல சார், எப்போவும் போல ஜாலியா இருங்க அது தான் நல்லா இருக்கும்" என்றிட, கையை உயர்த்தி சோம்பல் முறித்தவன் "படுத்துறாங்கடா" என்றான் கடுப்பாக.
நவீன் "ஆனா நிஜமா நீங்க குரூப்ல டூப்பு தான் சார், உங்க வீட்ல யாரும் தேவைக்கு அதிகமாக பேசி கூட நான் பார்த்தது இல்ல.. நீங்க அப்படியே நேரதிர்" என்று பேசிக்கொண்டு வர, இந்தருக்கும் சற்று இறுக்கம் தளர்ந்த உணர்வு.
பேசிக்கொண்டே இந்தரின் குடியிருப்பினுள் வண்டியை நிறுத்தியவன் "சீக்கிரம் மீட் பண்ணலாம் சார்" என்று விடைபெற, மென் புன்னகையுடன் தலையசைத்துக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கியவனின் பார்வை பூங்காவில் அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பாவையின் மீது படிந்தது.
மெல்லிய இரவு விளக்கின் ஒளியில் தனியாக அமர்ந்து ஊஞ்சலாடிக் கொண்டிருந்த ஐராவை பார்த்துக் கொண்டே நெருங்கியவன் "ஹே கேண்டி, இந்த நேரத்துல இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்க" என்றான் கேள்வியாக.
பின்னிலிருந்து கேட்டக் குரலில் திரும்பியவள் "ஒன்னுமில்ல சார் தூக்கம் வரல அதான்" என்று சமாளிக்க, "சரி சீக்கிரம் வீட்டுக்கு போ" என்றவன் தன் இல்லத்திற்கு சென்றிட, ஐராவிற்கு அவன் செயல்கள் அனைத்தும் விசித்திரமாக பட்டது. இருபக்கமும் தலையாட்டி அவன் நினைவுகளை விரட்டி அடித்தவள் "கண்டதை யோசிக்காத ஐரா" என்று தனக்கு தானே கூறிக் கொண்டாள்.
அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பெண்ணவளுக்கு இந்தரை நினைத்து மனதினுள் ஒரு நெருடல். அவன் செய்கைகள் அனைத்தும் விசித்திரமாக பட, "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு" என்ற யோசனையுடன் அங்கிருந்து எழுந்து செல்ல, தன் அறையிலிருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த இந்தரின் இதழ்கள் "இடியட்" என்று முணுமுணுத்தன.
கையிலிருந்த சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்தவனின் மனமும் புகைந்துகொண்டு தான் இருந்தது. முடிக்க வேண்டிய வேலைகள் பல வரிசைகட்டி நிற்க, சோம்பல் முறித்துக்கொண்டே தன் மடிக்கணினியின் முன் அமர்ந்தான்.
மனதில் திட்டமிட்டிருந்த வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அவன் நிமிர்ந்த சமயம் விடிந்திருந்தது.
உடலெல்லாம் அடித்துப்போட்டார் போல் வலிக்க, கழுத்தில் கை வைத்து நெட்டி முறித்தவன் அப்படியே கட்டிலில் சரிய,
சில மணி நேரம் கடந்து வந்த அலைபேசி அழைப்புகள் அவன் தூக்கத்தை தொடர விடாமல் சதி செய்தது. மெத்தையில் துழாவி அலைபேசியை எடுத்தவன் கண்களை கூட திறக்காது "ஹெலோ" என்றது தான் தாமதம் "மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க இடியட், உன்னோட முட்டாள் தனத்தால எவ்ளோ கோடி லாஸ் ஆகியிருக்கு தெரியுமா" என்று சத்யபிரகாஷ் காய்ந்துகொண்டிருக்க, அலைபேசியை காதிலிருந்து தள்ளி பிடித்தவன் "ஊப்" என்று இதழ் குவித்து ஊதிக்கொண்டே எழுந்தமர்ந்தான்.
"இந்தர் லைன்ல இருக்கியா, இந்தர்ர்ர்" என்ற அழுத்தமான குரலில், "இருக்கேன்" என்றான் எரிச்சலாக.
"நீ செய்த வேலைக்கு நான் தான்டா கோபப்படணும் மாறி நீ கோபமா இருக்க" என்று எரிந்து விழுந்தவர் தொடர்ந்து "20% ஷேர்ஸ் விக்க அவசியம் என்னடா வந்துச்சு" என்று வினவ, "என் பெயர்ல இருக்குறத விக்க நான் யாரையும் கேட்கணும்னு அவசியம் இல்ல" என்றான் அலட்சியமாக.
"இந்தர் புரியாம பேசாத, 20% எனக்கு பெருசில்ல ஆனா நீ பண்ண ஒரு சின்ன வேலையால எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா, இதுக்கான பதில் நீ கொடுத்தே ஆகணும்.. முதல கிளம்பி ஆபிசுக்கு வா" என்றுவிட்டு பட்டென்று அழைப்பை துண்டித்தார்.
கண்களை மூடி திறந்தவன் இதை எதிர்பார்த்தே இருந்தான், சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து அங்கிருந்த நிலை கண்ணாடியில் தன்னை ஆழ்ந்து பார்த்தான், இதழ்களில் யாரும் கண்டு பிடிக்க முடியாத அளவிலான சிறு புன்னகை.
கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து "நீ ஹீரோ இல்லடா வில்லன்" என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன் குளியலறைக்குள் புகுந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி வந்தவன் நேராக ரேஸ் சொசைட்டியின் அலுவலகத்திற்கு விரைந்தான்.
பல அடுக்குகளை கொண்டு கம்பீரமாக வீற்றிருந்த அந்த கண்ணாடி கட்டிடத்தின் முன் தன் வண்டியை நிறுத்திய கணம் அவனை வரவேற்ற நவீன் "உங்களுக்கு தான் காத்திட்டு இருந்தேன் சார்" என்றான்.
நவீனுடன் இணைந்து நடந்த இந்தரை கண்டு அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, அனைவரையும் சிறு தலையசைப்புடன் கடந்து சென்றவன் நேராக மீட்டிங் அறையினுள் நுழைய, அவன் மொத்த குடும்பமும் அங்கு குழுமி இருந்தது.
நீள் வட்ட வடிவிலான மேசையின் ஒருபுறம் சத்யபிரகாஷ், பாமா மற்றும் மது அமர்ந்திருக்க மறுபுறம் கதிரவன் மூர்த்தி மற்றும் ராஜேந்திரன் அமர்ந்திருந்தனர்.
நிதானமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே அங்கிருந்த ஒரு கதிரையில் அமர்ந்தவனை கண்ட சத்யபிரகாஷ் "நீ பண்ணுற எதுவும் எனக்கு பிடிக்கல" என்றார் அதிருப்தியாக.
மூர்த்தி "அந்த உரம் தயாரிக்கிற பேக்டரிய தொடங்குனதுல இருந்து எவ்வளவு பிரச்சனை வந்துச்சுனு உனக்கு நல்லாவே தெரியும் இந்தர், இப்போ கொஞ்ச வருஷமா தான் எந்த பிரச்சனையும் இல்லாம ஸ்மூத்தா ரன் ஆச்சு அது உனக்கு பொறுக்கலயா" என்று ஆதங்கப்பட, மது "நம்ம கம்பெனிக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிட்டு இருந்த.. இப்போ அதை விக்க மட்டும் உனக்கு எப்படி உரிமை வந்துச்சு" என்று அழுத்தமாக வினவ, இருக்கையில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன் "எனக்கு பிடிக்கல அதான் வித்தேன்" என்றான் அலட்சியமாக.
பாமா "நீ காரணமில்லாம எதையும் செய்ய மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும் இந்தர், எதை மனசுல வச்சிக்கிட்டு இப்படி பண்ண" என்றார் அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டு.
அன்னையின் புத்தி கூர்மையில் மெச்சுதலாய் விழி விரித்தவன் "யூ ஆர் ரைட், காரணத்தோட தான் இதை பண்ணேன்.. நீங்க சோ கால்ட் நடத்துற அந்த பேக்டரியால நாலு கிராமமே அழிந்து வருது" என்றான் குற்றம் சாட்டும் தோரணையில்.
சத்யபிரகாஷ் "உனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல அதனால தேவையில்லமா இதுல மூக்கை நுழைக்காத" என்று எரிந்து விழ, "நீங்க பண்ணுறது ரொம்ப பெரிய தப்பு" என்றவன் தொடர்ந்து "நீங்களா இந்த பேக்டரிய மூடுனா நல்லது இல்ல நான் மூட வைப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தவன் அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து செல்ல, அவனை தொடர்ந்து எழுந்த மது "நான் பேசுறேன்" என்று கூறிக்கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்.
தன் மகிழுந்தினுள் ஏறி வண்டியை கிளப்ப முயன்றவனின் கரத்தை பற்றி தடுத்தவள் "இரு மாமா கொஞ்சம் பேசணும்" என்றாள் அழுத்தமாக.
இந்தர் "என்ன பேசணும்" என்று வினவ, "சாப்பிட்டே பேசலாம்" என்றாள். பெருமூச்சுடன் வண்டியை எடுத்தவன் ஒரு சாதாரண உணவகத்தில் வண்டியை விட, பெரிதாக அலட்டல்கள் ஏதுமின்றி வண்டியிலிருந்து இறங்கியவள் அவனோடு கைகோர்த்துக்கொண்டாள்.
இந்தரும் மதுவும் ஓரமாக போடப்பட்டிருந்த மேசை ஒன்றில் அமர்ந்துக்கொள்ள, அவனுக்கு பிடித்தவற்றை கேட்டு ஆர்டர் செய்தவள் கலைந்திருந்த அவன் முன் உச்சி முடிகளை தன் விரல்களால் சீர் செய்து "ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா நீ, பாரு எப்படி இளைச்சி போயிட்டனு" என்று உரிமையாக கடிந்துகொள்ள, அவள் கரத்தை பற்றியவனோ "ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன விஷயம்" என்றான் கேள்வியாக.
மது "நம்ம பண்ணுறது பிசினஸ் மாமா, அதுல குளறுபடிகள் இருக்க தான் செய்யும் அதை திருத்திக்க தான் பார்க்கணுமே தவிர்த்து இழுத்து மூட நினைக்க கூடாது" என்றாள் பெரிய மனுஷியாக. அவள் கூற்றில் புன்னகைத்தவன் "பெரிய மனுஷி போல பேசுற மது" என்று பேச்சை மாற்ற, அவன் தோளில் அடித்தவள் "பேச்சை மாத்தாத" என்றாள் முறைப்புடன்.
இந்தர் "ஸோ திருத்த போற அப்படி தான" என்று வினவ, "நிச்சயமா" என்று உறுதியளித்தவள் "எல்லா விபரமும் எனக்கு மெயில் பண்ணி விடு, ஒரு மாசத்துல எல்லாத்தையும் சரி பண்ணுறேன்" என்றாள்.
மதுவை ஆராய்ச்சியாக பார்த்தவன் "கல்யாண முடிவை பத்தி நீ என்ன நினைக்கிற" என்று தீவிர முகப்பாவத்துடன் கேள்வியெழுப்ப,
அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள் "நான் என்ன பேசுறேன் நீ என்ன கேட்குற" என்று கடுப்பாக, "கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான் விடாப்படியாக.
மது "நமக்கு கல்யாணம் நடந்தா பெருசா எந்த மாற்றமும் வர போறது இல்ல மாமா, இப்போ இருக்குற அதே அக்கறையும் அன்பும் தான் அப்போவும் இருக்க போகுது.. ஆனா கணவன் மனைவி உறவுக்கு அன்பும் அக்கறையும் மட்டும் போதாது அதுக்குமேல காதல்னு ஒன்னு இருக்கு.. உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்த நொடி வரையும் உன் மேல காதலெல்லாம் இல்ல ஆனா கால்யாணம் நடந்தா நேச்சுரல்லா அந்த பீல் வந்திடும் அப்படின்ற நம்பிக்கைல தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.. ஆனா இப்போ எனக்கு ஒன்னு தெரிஞ்சே ஆகணும்.. உன் மனசுல என்ன இருக்கு.. உன்னோட விருப்பம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்" என்று தன்னிலை விளக்கத்தில் தொடங்கியவள் கேள்வியாக முடிக்க, இந்தர் "எனக்கு சம்மதம்" என்றான்.
அதே சமயம் இந்தருக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த ஐராவின் கண்கள் அவன் சம்மததில் கலங்கி விட, கண்களை மூடி திறந்து ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவள் இந்தரை கடந்து வெளியேற, அங்கு ஐராவை சற்றும் எதிர்பாராத இந்தரின் விழிகள் அவளையே பின் தொடர, மது "சரி மாமா, நான் கிளம்புறேன்" என்றவள் அவனை அணைத்து விடைபெற்றாள்.
காதல் மற்றும் கடமைக்கு நடுவே சிக்கி தவிப்பவன் தேர்ந்தெடுக்க போவது ஐராவையா? மதுவையா?
உணவகத்திலிருந்து கலங்கிய கண்களுடன் வெளி வந்த ஐராவின் மனதில் பல கேள்விகள் வண்டாய் குடைய தொடங்க, யோசனையுடனே வீட்டிற்கு திரும்பியவளின் கண்ணில் பட்டது பல லட்சங்களை விழுங்கிவிட்டு கம்பீரமாக வீற்றிருந்த இந்தரின் மகிழுந்து.
வேகமாக அதன் அருகே சென்று கோபமாக அதன் சக்கரத்தை எட்டி உதைத்தவள் "எதுக்கு அந்த மதுக்கு ஓகே சொன்னீங்க" என்று அவனே அங்கு நிற்பது போல் முறைக்க, "அங்க என்ன பண்ணுற" என்று அதட்டலாக வந்தது அவன் குரல்.
இந்தரின் குரலை கேட்டும் திரும்பாது நின்றவள் "ஒன்னுமில்ல" என்று அங்கிருந்து செல்ல பார்க்க, இந்தர் "ஐரா நான் பேசிட்டு இருக்கேன்" என்ற போதும் அதட்டலாகவே வந்தது அவன் குரல்.
அவன் அதட்டலில் வெகுண்டவள் "என்ன பேசணும் சார், என்ன பேசிட போறீங்க.. நீங்க பண்ணுறதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க போறீங்களா..
நீங்க ஏன் இப்படி நடந்துக்குறீங்கனு எனக்கு சத்தியமா புரியல.. சில சமயம் இது நீங்க தானானு கூட சந்தேகம் வருது.. உங்க கண்ணுல தெரியுதே.. தோ இந்த அலட்சியம் அது ரொம்ப புதுசா இருக்கு" என்று மனதிலிருந்தவற்றை மறைக்காது பொரிய, அவள் கூற்றில் இறுகி நின்றவன் "அவ்ளோதானா" என்றான் உணர்ச்சிகளற்ற குரலில்.
அவன் அலட்சியத்திலும் உதாசீனத்திலும் முனுக்கென கண்ணீர் துளிகள் கோர்த்துக்கொள்ள, கண்களை இறுக மூடி திறந்து அதை கட்டுப்படுத்தியவள் "அவ்ளோதான்" என்று கடுப்பாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.
செல்லும் அவளை கண்டு சலிப்பாக தலையாட்டியவன் மகிழுந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிட, அவனிடம் கோபமாக பேசிவிட்டு வந்தவளை தொடர்ந்து வந்தனர் முகக்கவசம் அணிந்த இருவர்.
இந்தரை மனதினுள் திட்டிக்கொண்டே வந்தவளோ அவர்களை கவனிக்காது திரும்பிய நொடி அவள் முகத்தில் மயக்க மருந்து அடிக்கப்பட்டது.
நொடிக்குள் நடந்த நிகழ்வை எதிர்பாராது திணறியவள் தன் முன் நின்றிருந்தவனின் கரத்தை தட்டி விட்டு "டேய் யாருடா நீங்க.. நடக்கும் போது செண்ட் அடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க" என்று முறைக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட கிளியும் நரியும் திருதிருவென விழித்தனர்.
கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது திருட்டு முழி முழித்தவர்களை கண்டு இந்தரின் மீதிருந்த கோபம் அவர்களின் புறம் திரும்ப தனக்கு தெரிந்த வார்த்தைகளில் அவர்கள் இருவரையும் திட்டி தீர்த்தவள் கோப மூச்சுக்களுடன் அவர்களை கடந்து செல்ல, அவளின் இந்த அவதாரத்தை எதிர்பாராத கிளி "டேய் நரி, என்னடா இவ இந்த கிழி கிழிக்கிறா" என்றான் அதிர்ச்சியில் வாயை பிளந்து.
அதே அதிர்ந்த பாவனையுடன் நின்ற நரி "ஆமா அவ என்ன மயங்கவே இல்ல.. ஒருவேளை அவ சொன்ன மாதிரி மாத்தி தான் கொண்டு வந்துட்டியா" என்று விழி சுருக்க, "ஒருவேளை இருக்குமோ" என்று குழம்பிக்கொண்டே அந்த மருந்தை திருப்பி பார்த்தவன் "இல்லையே இது மயக்க மருந்து தான்டா" என்றான் உறுதியாக.
நரி "அப்ப ஏன்டா அவ இன்னும் மயங்கல" என்று கேட்கும் போதே அவள் சரிந்து விழும் சத்தம் கேட்க, "எஸ் சக்ஸஸ்" என்று கையடித்து கொண்டவர்கள் அவசரமாக மயங்கி கிடந்தவளின் அருகே விரைந்தனர்.
கிளி "அடுத்த முறை இதை வாங்க கூடாது மச்சான், லேட் ரியாக்ஷனா இருக்கு" என்று அந்த மயக்க மருந்தை காட்டி உரைக்க , நரி "அட ச்சே.. இவளை சீக்கிரம் தூக்கு, அந்த வாட்ச் மேன் வந்திட போறான்" என்றான் பரபரப்பாக.
கிளி "வாத்தியாரே பர்ஸ்ட் கிட்னாப்.. நியாபகமா இருக்க ஒரு செல்பீ எடுப்போமா" என்று ஆர்வமாக வினவ, "அந்த வாட்ச் மேன் மட்டும் பார்த்தான் ஜோடியா சேர்ந்து நம்ம களி தான் திங்கணும்" என்று முறைத்தவன் "தூக்கி தொலைடா" என்று காய்ந்தான்.
கிளி "அந்த ஆளுக்கெல்லாம் பயப்படாத மாமே" என்றபடி அவளை கைகளில் அள்ளிகொள்ள, அப்போது தான் அவர்களை கவனித்த குடியிருப்பின் காவலாளி "ஐயோ ஐரா பாப்பாவுக்கு என்ன ஆச்சு" என்று பதறினார்.
நரி "ஒன்னுமில்ல அண்ணாத்த, தங்கச்சி மயங்கிடுச்சு.. நாங்க உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போறோம்" என்றிட, அவரோ "ஆமா நீங்க யாரு, நான் உங்களை இதுவரை இங்க பார்த்ததே இல்லையே" என்றார் சந்தேகமாக.
நரி 'ஐயோ கிழவன் நேரம் காலம் தெரியாம கேள்வி கேட்டு தொலையுறானே' என்று பதற, கிளி "நாங்க பாப்பாவோட ஒன்னு விட்ட அண்ணனுங்க.. அவன் ரமேஷ் நான் சுரேஷ்" என்று வாய்க்கு வந்ததை உளற, பதட்டத்தில் அவர்கள் கூறியதை நம்பியவரோ "பாப்பாவை பத்திரமா கூட்டிட்டு போங்க தம்பி" என்றார்.
"நாங்க பார்த்துக்குறோம்" என்று ஒருமித்த குரலில் கூறியவர்கள் ஐராவை மகிழுந்தில் கிடத்திவிட்டு அங்கிருந்து விரைந்தனர்.
மகிழுந்து அந்த குடியிருப்பை கடந்தவுடன் கிளியின் அலைபேசி சிணுங்க, அதை பவ்யமாக ஏற்றவன் "பாப்பாவ தூக்கியாச்சு பாஸ்.. நம்ம இடத்துக்கு தான் போறோம்" என்றிட, மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ "சரி பாஸ்" என்றவன் "மாமே கொஞ்ச தூரம் போனா ஒரு கடை வருமாம் அங்க வண்டிய நிறுத்து" என்றான்.
நரி "எதுக்குடா" என்று குழம்ப, "எனக்கு மட்டும் என்ன தெரியும்.. பாஸ் தான் சொன்னாரு" என்று தோளை உலுக்கினான். சிறிது தூரத்தில் பல் பொருள் அங்காடி ஒன்றிருக்க, அதன் வாயிலில் முகக்கவசத்துடன் நின்றிருந்தான் அவன்.
நரி வண்டியை அவன் அருகே நிறுத்தியதும் தன் கையிலிருந்த பைகள் சிலவற்றை மகிழுந்தினுள் அமர்ந்திருந்த கிளியிடம் நீட்டி ஏதோ கூற வரும் முன் அவன் கொடுத்த பைகளை ஆர்வமாக பார்த்த கிளி, அதிலிருந்த தின்பண்டங்களை கண்டு "ச்சே என்ன மனுஷன்யா" என்று புகழ, நரி "பசிக்கும்னு சாப்பாடு வாங்கி கொடுக்குறீங்க பாருங்க அந்த மனசு தான் சார் கடவுள்" என்று தன் பங்கிற்கு புகழ, அவர்களை மேலிருந்து கீழ் பார்த்து வைத்தவனோ "இது அவளுக்காக" என்றான்.
அவன் கூறியதை கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் "ஓஹோ" என்று ராகமிழுக்க, இருவரையும் சரமாரியாக முறைத்து வைத்தவன் "சங்க அறுத்திடுவேன்" என்றான் எச்சரிக்கையாக. கிளி "ரைட்டு விடுங்க" என்று ஜகா வாங்கிட, நரி "ஹிஹி" என்று அசட்டு புன்னகை ஒன்றை உதிர்த்துக்கொண்டே வண்டியை கிளப்பினான்.
மகிழுந்து அவனை கடந்து சென்றதும், கிளி "இவளுக்கு எதுக்கு இவ்ளோ ஸ்னேக்ஸ்" என்றபடி ஒரு தின்பண்டத்தை பிரிக்க, நரி "நீ பாஸ் கிட்ட அடிவாங்கி சாக போறடி" என்று நக்கலடிக்க, கிளி "ரிஸ்க்கெல்லாம் இந்த கிளிக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி" என்று காலரை உயர்த்தி விட்டுக் கொண்டான்.
அதன் பின் கூட்டாளிகள் இருவரும் கதையடித்துக்கொண்டு பயணிக்க, சில மணி நேரத்திற்கு பின் தலையை பிடித்துக்கொண்டே எழுந்தமர்ந்தாள் அவள்.
தலை பாரமாக இருக்க, அதை உலுக்கிக்கொண்டே நிமிர்ந்தவள் அப்போது தான் மகிழுந்தில் இருப்பதை உணர்ந்து "ஹே யாரு நீங்க.. எங்க கூட்டிட்டு போறீங்க என்ன.. இது என்ன ஹைவே மாதிரி இருக்கு.. நீங்க அந்த செண்ட் அடிச்சவங்க தான.. அப்போ என்ன கிட்னாப் பண்ணிட்டீங்களா" என்று மூச்சு விடாது கேள்வியெழுப்ப, கிளி அவளை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.
நரி "இந்தா பாப்பா கொஞ்ச நேரம் வாய மூடிட்டு வா இல்லனா வண்டில இருந்து உருட்டி விட்டுடுவேன்" என்று மிரட்ட, அவளோ "அப்போ நிஜமாவே நியூஸ்லலாம் சொல்லுற மாதிரி என்ன பாம்பேல வித்துடுவீங்களா" என்று மிரண்ட பாவனையுடன் கேள்வியெழுப்ப, கிளி "நீ அமைதியா வரலனா கண்டிப்பா செய்வோம்" என்றான் மிரட்டலாக.
கிளியின் மிரட்டலில் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டவள் "பேசாம எப்படி வர முடியும்" என்று முணுமுணுக்க, கிளி "என்ன சத்தம்" என்று அதட்டலாக வினவ, அவளோ "பசிக்கிது" என்றாள் சிறுபிள்ளையாக.
தன்னிடம் இருந்த பையை அவளிடம் கொடுத்தவன் "இதுல என்ன வேணுமோ சாப்பிடு" என்றிட, "ஹை தேங்க்ஸ்" என்று இளித்தவள் "நீங்க ரொம்ப நல்ல கிட்னாபர்ஸா இருக்கீங்க" என்று பாராட்டு பத்திரிகை வழங்க, கிளி "எனக்கு புகழ்ச்சி பிடிக்காது" என்றான்.
நரி "ஆமா பாக்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்க, என்ன வயசாகுது உனக்கு" என்று பேச்சுக்கொடுக்க, "என்ன இன்ட்ரோ பண்ணவே மறந்துட்டேன் பாருங்க" என்று நன்றாக கால்களை மடக்கி அமர்ந்தவள் "என் பெயர் ஐரா, எனக்கு இருபத்தி மூனு வயசாகுது.. ஐ மீடியாஸ்ல டிசைர்ரா இருக்கேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டாள்.
கிளி "ஹாய் ஐரா, நான் கிளி இது என் தோஸ்த் நரி.. நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்ளோ அழகு.. இதுக்கு முன்ன எங்க வீட்டு பக்கத்துல இருக்க புட்டு விக்கிற சேச்சி தான் அழகுனு நினைச்சேன் ஆனா நீ அத விட அழகு" என்றிட, அவன் கூறிய விதத்தில் கிளுக்கி சிரித்தவள் "அது என்ன பெயர் கிளி, நரினு" என்று கேள்வியெழுப்ப, "அதெல்லாம் அப்படி தான்" என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த மகிழுந்து கோவைக்கு அருகே அமைந்திருந்த கிராமம் ஒன்றினுள் நுழைந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் வரையிலும் வளங்களை வாரி இறைக்கும் அமுதசுரபியாக இருந்த நிலங்கள் யாவும் காய்ந்து வறண்டிருக்க, பெயருக்கு கூட ஜன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது அந்த கடை வீதிகள்.
ஜன்னலின் வழி தெரிந்தவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐரா "இங்க ஏன் ஆளுங்களே இல்ல" என்று கேள்வியெழுப்ப, கிளி "யாருக்கு தெரியும்" என்று தோளை உலுக்கினான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் மகிழுந்து ஒரு பெரிய வீட்டின் முன் நிற்க, ஜன நெரிசலின்றி வெறிச்சோடி கிடந்த வீதிகளும் இடிந்து சிதைந்திருந்த வீடுகளும் அதுவரை இல்லாத பயத்தை அவளுள் விதைத்தது.
கிளி "வா வா இறங்கு" என்று கட்டளையிட, 'மாட்டேன்' என்பதை போல் மறுப்பாக தலையசைத்தவளின் மறுப்புகளை கண்டுகொள்ளாது அவள் கரத்தை பற்றி இழுத்தனர்.
ஐரா "இல்ல நான் வர மாட்டேன்.. என்ன விடுங்க" என்று அரற்றியவளுக்கோ மெல்லிதாக உடல் நடுங்க தொடங்க, நரி "இங்க பாரு பாப்பா, உன்ன ஒன்னும் பண்ண மாட்டோம் வா" என்றான் தன்மையாக.
அப்போதும் மாட்டேன் என்று அடம் பிடித்தவளின் விழிகள் எதிரில் வந்து மகிழுந்தை கண்டு விரிய, அடுத்த நொடி அவர்கள் பிடியிலிருந்து நழுவியவள் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த வண்டியை நோக்கி செல்லவும், தன்னை நோக்கி வந்தவளை கண்டு உள்ளிருந்து அவன் வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது.
காற்றை கிழித்துக்கொண்டு வந்த மகிழுந்தின் வேகம் எதிரில் வந்தவளை கண்டு குறைய தொடங்க, ஆபத்பாண்டவனாய் மகிழுந்தில் வந்துகொண்டிருந்தவனை நோக்கி ஓடியவளோ "ஹெல்ப்" என்றாள் மூச்சிரைக்க.
நூலளவு இடைவெளியில் சடன் பிரேக் அடித்து நின்றவனோ கோபமாக வண்டியிலிருந்து இறங்க, நரி "ஆத்தி இன்னிக்கு செத்தோம்" என்று வீட்டினுள் ஓடிவிட, கிளி "விட்டுட்டு ஓடாதடா துரோகி" என்றபடி அவன் பின் ஓட, தன்னை கண்டவுடன் தப்பி ஓடும் இருவரையும் திட்டிக்கொண்டே வந்தவனின் பார்வை ஐராவின் மீது அழுத்தமாக படிந்தது.
"இந்தர்" என்று தன்னையும் மீறி நங்கையவளின் இதழ்கள் முணுமுணுக்க, ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தவனோ "கொஞ்சமாவது அறிவிருக்கா, நேரா வந்து வண்டில விழுற.. நான் மட்டும் விட்டிருந்தா ஒரேடியா மேல போய் சேர்ந்திருப்ப" என்று கர்ஜிக்க, அவன் கர்ஜனையில் நடுங்கியவளுக்கு கன்னங்கள் தீயாக தகித்தன.
விழியில் தேங்கி கிடந்த நீர் துளிகள் கட்டுப்பாட்டின்றி கன்னத்தை நனைக்க, ஐரா "இதெல்லாம் பண்ணது நீங்களா" என்றாள் அதிர்ச்சி நிறைந்த குரலில்.
அவள் கேட்டதை அலட்சியம் செய்தவன் பெண்ணவளின் முழங்கையை பற்றி தரதரவென இழுத்துச் செல்ல, "ஆ.. வலிக்குது சார் விடுங்க.. விடுங்க" என்று தன் கரத்தை உருவ முயல, அந்த பெரிய வீட்டினுள் அழைத்துச் சென்றவன் அவள் கரத்தை உதற, கண்ணீருடன் அவன் இழுப்பிற்கு இசைந்தவள் அவன் உதறியதும் நிலை தடுமாறி விழ போக, அவள் இடையை வளைத்து தாங்கி பிடித்தது ஒரு ஆடவனின் வலிய கரம்.
தன் இடை பிடித்து வளைத்தவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் மேலும் வட்டமாய் விரிய, கண்களை நன்றாக கசக்கிக்கொண்டவளின் இதழ்கள் "இந்தர்" என்றே முணுமுணுத்தன.
சட்டென நிமிர்ந்து வாயிலை காண அங்கும் அவனே நின்றிருக்க, குழம்பி போன பெண்ணவளோ இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம், அச்சில் வார்த்தார் போல் ஒரே சாயலில் நின்றிருந்த இருவரையும் அதிர்ச்சி விலகாது பார்த்தவளை தன் கை வளைவிற்குள் நிறுத்தி வைத்தவன் "கேண்டி ஆர் யூ ஓகே" என்றபடி அவளை ஆராய, தன்னை தாங்கி பிடித்தவன் தான் இந்தர் என்பதை நொடி பொழுதில் கணித்தவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
தன் மார்ப்பளவே இருந்தவளின் முகத்தை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் வாயிலில் நின்றிருந்தவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டு "நீங்க பண்ணுறது ரொம்ப தப்பு மிஸ்டர் அமரன் விஷ்வனாத்" என்று எச்சரிக்க, மார்பிற்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவர்களை பார்த்தவனோ "எவரிதிங் இஸ் பேஃர் இன் திஸ் பிளடி கேம்" என்றான் உறுமலாக.
இந்தரின் மார்பில் முகத்தை புதைத்திருந்தவளோ இந்தரை தவிப்பாக ஏறிட, அப்போது தான் அவள் கன்னம் கன்றி சிவந்திருப்பதை கவனித்தவன் "கேண்டி, என்ன ஆச்சு ஏன் உன் கன்னம் இப்படி கன்றியிருக்கு" என்று பதற, அவள் பார்வையோ அமரனின் மீது படிந்தது.
இந்தர் "உனக்கு என் மேல கோபம் இருந்தா அதை என் மேல மட்டும் காட்டு அமரன்.. அவ குழந்தைடா, அவளை எதுக்கு அடிச்ச" என்று சீறியவன் தொடர்ந்து "என்ன கடத்துன அதுல ஒரு நியாயம் இருக்கு.. இவ என்ன பண்ணா.. இவளை எதுக்கு கடத்துன" என்று புரியாமல் வினவ, இந்தரை கூர்மையாக அளவெடுத்தனோ "நீ கேட்டதுக்குலாம் பதில் சொல்ல நான் ஒன்னும் உன் அடியாள் கிடையாது" என்றபடி அங்கிருந்து வெளியேற, "ஹெல்" என்று வாய் விட்டு திட்டியவன் ஐராவின் கரத்தை பற்றி அங்கிருந்த அறை ஒன்றினுள் அறைக்குள் இழுத்துச் சென்றான்.
நடப்பவை புரியாது இந்தருடன் நடந்தவளை அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர வைத்தவன் அவள் அருகே அமர்ந்து கன்றியிருந்த அவள் கன்னத்தை வருட, "ஸ்ஸ்" என்று எரிச்சலில் முனங்கியவள் "என்ன நடக்குது இங்க.. அவரு யாரு, நீங்க எப்படி இங்க வந்தீங்க" என்று கேள்விகளை அடுக்க, "ரிலாக்ஸ் கேண்டி" என்றவன் அவள் கன்னத்திற்கு மருந்தை தடவிக்கொண்டு நடந்தவற்றை உரைத்தான்.
டெல்லியில் ஐராவிடம் தன் மனதை வெளிப்படுத்தியவன், முக்கிய அழைப்பு வரவே அதை ஏற்க சென்ற சமயம் அவனை தொடர்ந்து வந்த அமரன் இந்தரின் முகத்தில் மயக்க மருந்து தடவிய கைக்குட்டை ஒன்றை வைத்து அழுத்த, முதலில் திமிறியவன் யாரென திரும்பி பார்க்க, அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் முகமே.
ஒரே சாயலில் இருந்த இருவரின் உடை கூட ஒன்று போலிருக்க, திமறிக்கொண்டே இருந்தவன் ஒரு கட்டத்தில் அதன் வீரியம் தாங்காது மயங்கினான்.
இந்தரின் அலைபேசி மற்றும் இதர சில முக்கிய பொருட்களை அவனிடமிருந்து எடுத்துக்கொண்டவன் அவனை
கிளி மற்றும் நரியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இந்தராக மாறி ஐராவுடன் விடுதிக்கு திரும்பினான்.
இங்கு கிளி மற்றும் நரி இந்தரை பொறுப்பாக ஊருக்கு அழைத்து வந்திருந்தனர். பல மணி நேரம் கழித்து கண் விழித்த இந்தருக்கோ நடப்பவை ஒன்றும் புரியாமல் இருந்தது.
தன்னை கடத்தி மிரட்டும் அளவிற்கு அவனறிந்த வரை அவனுக்கு எதிரிகள் யாரும் கிடையாது அப்படியிருக்க இது யாராக இருக்கும் என்று குழம்பியவனுக்கு அவ்வளவு எளிதில் விடை கிடைத்துவிடவில்லை.
கதிரை ஒன்றில் கை கால்கள் கட்டிப்போடப்பட்டிருக்க, விழிகளை உருட்டி அவ்வறையை நோட்டமிட்டவன் தன் கட்டுக்களை எடுக்க முயல, அச்சத்தம் கேட்டு வந்த கிளி "முழிச்சிட்டியா, இதுக்கு தான் வெயிட் பண்ணோம்.. இரு சாப்பாடு கொண்டு வரேன்" என்று இயல்பாக பேசிவிட்டு அவனுக்கென வாங்கி வைத்த உணவை கொண்டு வர, இந்தர் கட்டியிருந்த தன் கரத்தையும் கிளியின் முகத்தையும் ஏறிட்டான்.
கிளி "கை கட்டிப்போட்டிருந்தா சாப்பிட முடியாதுல.. சரி இரு நானே ஊட்டி விடுறேன்" என்று உணவை பிரிக்க, இந்தர் "யாருடா நீங்க" என்றான் யோசனையாக. அவர்கள் காண்பதற்கும் கடத்தலாட்கள் போல் இல்லாது கல்லூரி முடித்த மாணவர்கள் போலிருந்ததால் தான் இந்தரை இந்த கேள்வியை தொடுத்திருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இந்தர் "டேய் ஏதாவது பிராங்க் பண்ணுறீங்களா" என்ரு சந்தேகக் குரலில் வினவ, அதில் வெகுண்ட நரி "பிராங்க்கா, ஏன்யா யோவ் எங்களுக்கு வேற வேலை இல்லையா..பிராங்க் பண்ணுறாங்கலாம் பிராங்க்கு" என்று அங்கலாய்ந்துவிட்டு "இங்க பாரு நாங்க உன்ன நிஜமாவே கிட்னாப் பண்ணிருக்கோம்" என்று கண்களை உருட்டி மிரட்ட இந்தருக்கு சிரிப்பு தான் வந்தது.
இந்தர் "யாருடா நீங்க.. ஜோக்கர் பாய்ஸ் மாதிரி இருக்கீங்க" என்று மென் புன்னகையுடன் வினவ, கிளி "நாங்க யாருனு சொன்னா மட்டும் தெரிஞ்சிடுமா.. கேள்வி கேட்காம தின்னுடா" என்று நக்கலடித்துக்கொண்டே உணவை ஊட்ட, இந்தர் "ப்ச் முதல இந்த கட்டை கழட்டி விடுங்கடா" என்றான்.
நரி "தோடா.. பார்க்க ஜிம் பாய் மாதிரி இருக்க, கட்டை கழட்டி விட்ட உடனே எங்களை அடுச்சி போட்டு ஓடிட்டா அவருக்கு நாங்க என்ன பதில் சொல்லுறது.. ஒழுங்கா அடம் பிடிக்காம சாப்பிடு.. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு" என்றிட, இந்தரோ பிடிவாதமாக மறுத்தான்.
நரி "இப்போ என்ன தான்யா வேணும் உனக்கு" என்று இறங்கி வர, இந்தர் "எதுக்காக என்ன கடத்துனீங்க" என்றான் கேள்வியாக. கிளி "இங்க பாரு இந்தரு.. நீ கேட்க போற எந்த கேள்விக்கும் எங்களுக்கு பதில் தெரியாது.. எங்க வேலை உன்ன பார்த்துக்குறது மட்டும் தான்.. புரியுதா" என்று விளக்கினான்.
இந்தர் "எதுக்கு கடத்துனாங்கனு தெரியாது ஆனா யாரு கடத்துனானு உங்களுக்கு தெரியும் தான" என்று சாமர்த்தியமாய் காயை நகர்த்த, கிளி "ஏன்யா இப்படி கேள்வி கேட்டு சாகடிக்கிற" என்று கடுப்படித்துவிட்டு "சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. உன்ன கடத்துனவர் பெயர் அமரன்.. பாக்க அப்படியே உன்னோட செராக்ஸ் காபி மாதிரி இருப்பாரு.. உங்களுக்குள்ள இருக்குற ஒரே வித்தியாசம், நீ சிரிச்சிட்டே ஜாலிய இருப்ப அவருக்கு சிரிப்போட ஸ்பெல்லிங் கூட தெரியாது.. இப்போ நீ இருக்குற வீடு அவரோடது தான்.. இம்புட்டு தான் எங்களுக்கு தெரியும்" என்று வாக்குமூலம் கொடுத்துவிட, இந்தரின் புருவம் சுருங்கியது.
மேலும் தனக்கு தேவையான தகவல்கள் சிலதை பெற்றுக்கொண்டவனுக்கு இவர்களிடம் இந்த கடத்தல் குறித்து கேட்பதில் பயனில்லை என்பது புரிய, "ஸோ என்ன பார்த்துக்க தான் உங்களுக்கு சம்பளம்" என்று கேள்வியாக இழுக்க, நரி "அதே தான்" என்றான். அவர்கள் இருவரையும் யோசனையாக ஏறிட்டவன் "உங்களுக்கு எவ்வளவு வேணுமோ நான் கொடுக்குறேன் இந்த கட்டை கழட்டி விடுங்க" என்றிட, இருவரும் மறுப்பாக தலையசைத்தனர்.
இந்தரின் புருவம் கேள்வியாக உயர, கிளி "என்ன தான் நாங்க பண்ணுறது திருட்டுத்தனமா இருந்தாலும் எங்களுக்குனு சில பாலிஸி இருக்கு.. இப்படி காசுக்காகலாம் துரோகம் பண்ண மாட்டோம்" என்றான் மிதப்பாக. இருவரையும் மெச்சுதலாக பார்த்தவன் "ஓகே பைன்" என்றிட, நரி "இப்போ சாப்பிட போறியா இல்லையா" என்று இறுதியாக கேள்வியெழுப்ப, இந்தர் மறுத்தான்.
கிளி "ரைட்டு விடு.. நரி நீ வா நம்ம போவோம்" என்று நரியுடன் வெளியேற, இந்தரின் மனதில் வந்த ஒரே பெயர் 'அமரன்'.
'யார் இந்த அமரன், எதற்காக தன்னை கடத்தியிருக்கிறான், ஒருவேளை பணத்திற்காகவா' என்று பல கேள்விகள் மனதில் வலம் வர, அன்றைய உறக்கம் முற்றிலுமாக தொலைந்து போனது.
மறுநாள் காலை கதவு திறக்கப்படும் ஓசையில் நிமிர்ந்தவன், புதிதாக வந்தவனை கண்டு "எனக்கு வாஷ்ரூம் போகணும்" என்றிட, அந்த புதியவனோ எந்த கேள்வியும் கேட்காது அவன் கட்டுகளை எடுத்துவிட, இந்தர் வலது காலால் அவன் நெஞ்சில் எட்டி உதைத்தான்.
இந்தரின் இந்த அதிரடி தாக்குதாளில் பத்தடி தள்ளி விழுந்தவனோ சுதாரித்து எழும் முன் அவனை நெருங்கி அவன் வலது கையை முறுக்கியவன் "எதுக்காக என்ன கடத்துனீங்க" என்று வினவ, கரத்தில் உண்டான வலியில் முகம் சுருக்கியவனோ "ஆஆ.. கைய விடு..ங்க சொ..ல்லு..றேன்" என்றான் வலியில் திணறியபடி.
புதியவனின் கரத்தை விடுவித்தவன் 'சொல்லு' என்பதை போல் பார்க்க, சட்டென தான் வைத்திருந்த மயக்க மருந்தை எடுத்தவன் அதை இந்தரின் முகத்தில் வைத்து அழுத்த, அவன் செயலை கண்டுகொண்ட இந்தரோ அவனை ஓங்கி குத்தியதில் அவன் அடங்கிவிட, இந்தர் "உன் குறுக்கு புத்திய என்கிட்ட காட்டாத.. கொன்றுவேன்" என்றான் மிரட்டலாக.
மூக்கில் வழிந்த குருதியை துடைத்துக்கொண்டே நிமிர்ந்துவனை அங்கிருந்த கதிரையில் கட்டிப்போட்டவன் "உண்மைய சொல்லு.. எதுக்காக என்ன கடத்துனீங்க.. காசுக்காகவா இல்ல" என்றிழுக்க, அதில் விரக்தியாக சிரித்த அந்த புதியவனோ "யாருக்குயா வேணும் உங்க காசு" என்றான்.
அவன் கூற்றில் குழம்பியவன் "காசுக்காக இல்லனா வேற எதுக்காக என்ன கடத்துனீங்க.. முதல நீ யாரு" என்று வினவ, அவனோ "என் பெயர் ராகவன்.. இதோ இந்த ஊர் தான்" என்றான்.
இந்தர் "நான் கேட்ட முதல் கேள்விக்கான பதில்" என்று சந்தேகமாக புருவமுயர்த்த, ராகவனும் அதற்கு மேல் மறைக்காது தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தயும் ஒப்பித்துவிட, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்த இந்தரின் விழிகள் தன்னையும் மீறி கண்ணீரை சுமந்தது.
ராகவன் கூறிய உண்மைகள் என்ன? ராகவன் கூறியதை கேட்டு இந்தர் எடுக்கவிற்கும் முடிவு என்ன?..
நடந்தவற்றை சுருக்கமாக ஐராவிடம் ஒப்பித்தவன் "அமரன் என்ன பிளான்ல இருக்கானு எனக்கு தெரியாது ஆனா அவன் எது பண்ணாலும் அவனுக்கு என் சப்போர்ட் இருக்கும்" என்றான் ஆழ்ந்த குரலில். பின் அவனே "ஸோ அமரன் பிளான் முடியுற வரை நான் இங்க தான் இருக்க போறேன்.. வெகேஷன் டைம்" என்றபடி சோம்பல் முறிக்க, ஐரா அவனை கலவரமாக பார்த்து வைத்தாள்.
ஐராவின் முகத்தில் வந்து சென்ற கலவரத்தை கண்டுகொண்டவன் "ஏன் இப்படி பயப்படுற" என்று புருவமுயர்த்த, சென்னை வந்திறங்கியது முதல் இன்று காலை வரை நடந்தவற்றை தெரிவித்தவள் "பழி வாங்க எதுக்கு கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும்" என்று புருவம் சுருக்க, இப்போது இந்தரின் புருவமும் யோசனையில் முடிச்சிட்டது.
இந்தர் "கிளி" என்று குரல் கொடுக்க, அலைபேசியை நோண்டிக்கொண்டே உள்ளே வந்தவனோ "ஹாய் பேபி" என்று ஐராவிடம் கூறிவிட்டு இந்தரின் புறம் திரும்ப, இந்தர் "நான் அமரன் கூட பேசணும்" என்றான்.
கிளி "பேசு.. என்னமோ நான் உன் கைய பிடிச்சு கட்டி வச்சிருக்க மாதிரி என்ன கூப்பிடுற" என்று கேலி செய்ய, ஐராவை அறையில் ஓய்வெடுக்க பணித்தவன் ஐராவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த கிளியின் சட்டையை பிடித்து இழுத்துச் செல்ல, "யோவ்.. ஹியூமன்ஸாயா நீ.. ஒரு மனுஷன நிம்மதியா சைட் கூட அடிக்க விட மாட்டேங்கிற" என்று திமிற, "அடிங்கு.. அவ என் ஆளுடா" என்றான் மிதப்பாக.
"ஹலோ அத என் பேபி சொல்லனும்" என்று சிலுப்பியவனின் கழுத்தை இறுக்கியவன் "அவ கண்ண பார்த்திருக்கியா.. அது ஆயிரம் கதை சொல்லும்டா" என்று சிலாகிக்க, கிளி "எங்க நீ விட்டா தான பார்க்க" என்றான் சலிப்பாக.
அவன் தலையில் தட்டிய இந்தரோ "முதல வந்த வேலைய முடிக்கணும் வா" என்று அமரன் இருக்கும் இடத்திற்கு இழுத்துச் செல்ல, கிளி "தெய்வமே என்ன இங்கயே விட்டுட்டு போனா உனக்கு புண்ணியமா போவோம்" என்று சரண்டர் ஆகிவிட, "போய் தொலை" என்று கெத்தாக உரைத்தவன் அமரனை தேடிச் சென்றான்.
வீட்டின் பின்புறத்தில் அமைந்திருந்த கல் இருக்கையில் அவன் அமர்ந்திருக்க, அவனருகே அமர்ந்த இந்தர் "எதுக்காக ஐராவை கடத்திட்டு வந்த" என்று வினவ, "அவ அங்கிருந்தா எனக்கு டிஸ்டர்பிங்கா இருக்கும் அதான்" என்றான் தோளை உலுக்கி.
இந்தர் "உன்னோட பிளான் என்னனு கேட்க மாட்டேன் ஆனா மது விஷயத்துல எதுவும் தப்பு நடக்க கூடாது.. அவ கொஞ்சம் பிடிவாதக்காரி தான் ஆனா ரொம்ப நல்லவ.. உன்னோட பிளான்லா அவ லைப்பை ஸ்பாயில் ஆகிட கூடாது" என்று அழுத்தம் திருத்தமாக உரைத்திட, இந்தரை நக்கல் பொதிந்த பார்வை பார்த்தவனோ "நான் என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்லாத.. நீ சொன்னாலும் என் பிளான்ல எதுவும் மாற்றம் வர போறது இல்ல" என்றான் அதே அழுத்தத்துடன்.
இந்தர் "உன்னோட வலிக்கு மரியாதை கொடுத்து தான் நான் அமைதியா இருக்கேன்.. மதுவோட வாழ்க்கைல நீ உன் வேலைய காட்டுனா அப்பறம் வேற இந்தர பார்ப்ப" என்று மிரட்டல் விட, இருபக்கமும் தலையாட்டி சிரித்தவனோ "இந்தர்.. நீ எப்போவாச்சு தான் வில்லன் நான்லாம் எப்போவுமே வில்லன்டா" என்றான், இதழில் மெல்லிய புன்னகை இருந்த போதிலும் அவன் விழிகளில் அனல் பறந்தது.
கதவு நிலையில் அவர்கள் உரையாடுவதை திருட்டுத்தனமா எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ஐரா "என்ன பன்ச் டைலாக்லாம் பேசிக்கிறாங்க" என்று வாய்விட்டு புலம்பியபடி வேடிக்கை பார்க்க, "என்ன மாஸா பேசுறாரு பாரேன்" என்று மற்றொரு கதவு நிலையில் நின்ற கிளி சொல்லவும், ஐரா திரும்பி பார்க்க, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அசடு வழிந்தனர்.
ஐரா "ஜாலியா இருக்குல" என்று வாயசைக்க, நரி "எஸ் நைஸ் என்டர்டேயின்மெண்ட்" என்றுவிட்டு கிளியை காண அவனோ ஐராவை அல்லவா சைட் அடித்துக் கொண்டிருந்தான்.
அங்கு பல்லை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திய இந்தரோ "அவளை கடத்திட்டு வந்தீங்கல.. அவளுக்கு மாத்து ட்ரெஸ் எங்க" என்று பேச்சை மாற்ற, இந்தரை கேள்வியாக பார்த்த அமரனோ "உங்க ரெண்டு பேர நான் விருந்துக்கா அழைச்சிட்டு வந்தேன்.. கடத்திட்டு வந்திருக்கேன் அதை முதல புரிஞ்சிக்கோ.. ராகவன் என்ன சொன்னானு எனக்கு தெரியாது ஆனா அவன் சொல்லுற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது.. ஒன்னு நியாபகம் வச்சுக்கோ உன்னையும் உன் குடும்பத்தையும் அடியோட அழிக்க தான் நான் வந்திருக்கேன்.. உங்கள்ல ஒருத்தரை கூட நான் உயிரோட விட மாட்டேன்" என்றவனின் விழிகளில் அத்தனை ஆக்ரோஷம்.
இந்தர் "கூல் சகோ.. இவ்ளோ டென்ஷன் ஆகாத அப்பறம் பிபி வந்திடும்" என்று அமரனின் தோளில் தட்டிக்கொடுக்க, 'என்ன மேக்டா நீ' என்ற பார்வையை இந்தரின் மீது செலுத்தியவனோ சலிப்பாக தலையாட்டிக்கொண்டே வீட்டிலிருந்து வெளியேறினான்.
ஐரா "அவர் ரொம்ப பேட் பாய் சார், நீங்க இங்கிருக்கிறது நல்லது இல்ல.. தப்பிச்சு போயிடுங்க" என்று கலங்கிய முக பாவனையுடன் பேசிக்கொண்டிருக்க, அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் நிறுத்திக் கொண்டவன் "சில் கேண்டி.. அவன் அவ்வளவு கெட்டவன் கிடையாது" என்றிட, "எக்ஸ்கியூஸ் மீ" என்று இந்தரிடமிருந்து ஐராவை விலக்கிய கிளியோ "யோவ் என்னயா சும்மா சும்மா கட்டிப் பிடிக்கிற.. முதல தள்ளிப்போ" என்றான் கடுப்பாக.
ஐரா அவனை விசித்திரமாக பார்க்க, இந்தரோ அவனை நன்றாக முறைத்து வைத்தான். நரி 'இந்த நாய் ஏன் இப்படி விசித்திரமா நடந்துக்குது' என்று குழம்ப, கிளி "இந்தா பாப்பா நீ அவன் பக்கமே வர கூடாது புரியுதா.. போ போய் அந்த ரூம்ல இரு" என்று அதட்டிவிட்டு இந்தரின் புறம் திரும்பியவன் "நீ அந்த ரூமுக்கு போ" என்று ஐராவின் அறைக்கு சற்று தள்ளி இருந்த அறையை காட்ட, இந்தர் "போடா டோமேட்டோ" என்று திட்டிக்கொண்டே தன் அறைக்குள் சென்று முடங்கினான்.
***********
சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அமரன் நரிக்கு அழைத்து ஐராவிற்கு தேவையான உடைகளை வாங்கி கொடுக்கும்படி பணித்தான்.
நாற்றிசையும் பைநிற போர்வை போர்த்திய வயல்களும் அவற்றின் பசுமையான நினைவுகளும் நெஞ்சத்தில் நீங்காத வடுவாய் பதிந்திருக்க, 'இந்த ஊர பழைய மாதிரி செழிப்பா மாத்தி உங்க இறப்புக்கு ஒரு நியாயத்தை வாங்கி கொடுப்பேன்பா' என்று தனக்குள் பேசிக்கொண்டே வண்டியை செலுத்திய அமரனின் மனமோ பழைய நினைவுகளின் சுழலில் சிக்கி தவித்தது.
சில மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்தவனை அழைத்த கதிரவன் "இந்தர், நேத்து ஜோசியர் வீட்டுக்கு வந்திருந்தாரு, உன்னோட ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்காம் அதனால அடுத்த முஹூர்த்ததுலயே கல்யாணம் பண்ணி வைக்க சொன்னாரு, கல்யாணத்தை சிம்பிளா முடிச்சிட்டு இன்னொரு நாள் வரவேற்பை பெருசா பண்ணிடலாம்னு முடிவெடுத்திருக்காங்க.. நீ என்ன சொல்லுற" என்று கேள்வியெழுப்ப, "இப்போ எதுக்கு இவ்வளவு அவசரம்.. மூனு மாசம் போகட்டும்" என்று அவன் மறுக்க, கதிரவன் "ரெஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம் இந்தர்" என்றார் கெஞ்சுதலாக.
"இல்ல வேண்டாம், எதுவா இருந்தாலும் மூனு மாசம் ஆகட்டும்" என்று முடிவாக மறுத்துவன் அழைப்பை துண்டித்துவிட, சிறிது நேரத்தில் ராதிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சரியான இம்சைங்க" என்று பல்லை கடித்தவன் அழைப்பை ஏற்க, மறுமுனையில் இருந்தவரோ "இந்தர் கண்ணா, என்ன பண்ணிட்டு இருக்க" என்று பேச்சை தொடங்க, "நேரா விஷயத்துக்கு வாங்க அத்தை" என்றான் சலனமற்ற குரலில்.
ராதிகாவோ பெருமூச்சுடன் "கல்யாணத்துக்கு ஓகே சொன்ன தான.. அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன பிரச்சனை கண்ணா" என்று வினவ, "எனக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு அத்தை.. அதை முடிச்சிட்டு பண்ணிக்கலாம்னு தான் வேண்டாம்னு சொன்னேன்" என்றான்.
ராதிகா "கண்ணா நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காத.. இன்னிக்கி வீட்டுக்கு வந்த ஜோசியர் உங்க ஜாதகத்தை பார்த்துட்டு இந்த ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல அப்படியே நீங்க நடத்த நினைச்சாலும் அதுக்கு ஏதாவது தடங்கல் வந்துட்டே இருக்கும்னு சொல்லிட்டாரு அதான் வீட்ல எல்லாரும் கல்யாணத்தை கையோட முடிக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க" என்று விளக்கமளிக்க, "அவரு ஆயிரம் சொல்லுவாரு அதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா" என்றவனின் குரலில் எவ்வளவு முயன்றும் எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை.
ராதிகா ஏதோ பேச வரும் முன் அவருடமிருந்து அலைபேசியை பிடுங்கிய மது "இப்போ என்ன பிரச்சனை உனக்கு.. அதான் அம்மாவும் அப்பாவும் மாறி மாறி கேட்குறாங்கல, ஏன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னால ப்ராஜெக்ட் பண்ண முடியாதா.. சும்மா இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லிட்டு இருக்க" என்று கடுப்படித்தவள் தொடர்ந்து "இப்போதைக்கு தாத்தாவுக்காக குல தெய்வம் கோவில்ல தாலி கட்டிடு.. ரெஜிஸ்டர் பண்ணுறது கூட லேட்டர் பண்ணிக்கலாம்" என்றாள்.
அமரன் மறுக்க வாயெடுக்க, மது "இப்போ முடியாது அது இதுனு காரணம் சொன்ன அவ்ளோ தான் உன்ன.. இங்க பேசிட்டு டேட் சொல்லுறேன்.. பை" என்று பட்டாசாக படபடத்தவள் அழைப்பை துண்டிக்க, அவனுக்கோ மழை அடித்து ஓய்ந்தார் போன்ற உணர்வு.
******************
"எவ்ளோ நேரம்டா எங்களை இப்படி வீட்லயே வச்சிருக்க போறீங்க" என்று இந்தர் கடுப்பாக , நரி "இங்க பாருயா.. நாங்க கிட்னாபர்ஸ் ஆனா நீ எங்களை டூர் கைட் மாதிரி நடத்திட்டு இருக்க" என்று முறைக்க அதற்கு சலிப்பாக தலையசைத்தவன் "படுத்துறீங்கடா" என்றான் புலம்பலாக.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அங்கு மடிக்கணினி மற்றும் இதர சில பொருட்களோடு வந்த ராகவன் "இதெல்லாம் அமரன் கொடுக்கச் சொன்னான்.. ஏதோ முக்கியமான ப்ராஜெக்ட்டோட கோடாம்" என்று நீட்ட, "நானே இதை கேட்கணும்னு இருந்தேன்.. கொடு பார்ப்போம்" என்றவன் அதில் கவனமாக மற்ற நால்வரும் அவன் பின் வந்து நின்றனர்.
இந்தர் கோடை சரி பார்த்துக்கொண்டிருக்க, நரி "இங்க ஏன் இவ்ளோ கஷ்டமா போடணும், ஈஸி ஆக்ஸஸ் பண்ணுற மாதிரி மாத்தலாமே" என்றிட, அவனை மேலிருந்து கீழ் பார்த்த இந்தர் "கோடிங் தெரியுமா" என்று ஆச்சரியமாக வினவ, கிளி "அவன் படிச்சதே அதுக்கு தான் ஆனா வேலை தான் கிடைக்கல" என்று உதட்டை பிதுக்க, இந்தர் அவர்களை புரியாமல் பார்த்தான்.
ஐரா "ஏன் வேலை கிடைக்கல, நீங்க பேசுறதை பார்த்தா உங்களுக்கு நிறைய தெரியும் போல இருக்கே" என்று கேள்வியெழுப்ப, நரி "அட போமா அது ஒரு சோக கதை" என்று புலம்ப, ஐரா "பரவால்ல சொல்லுங்க.. நான் கேட்குறேன்" என்று இந்தருக்கு அருகே இருந்த இருக்கையில் அமர, நரி "நாங்க ரெண்டு பேரும் கோயம்பத்தூர்ல ஒரு ஆசிரமத்துல தான் வளர்ந்தோம்.. அங்க நல்லா படிக்கிற பசங்களுக்கு மட்டும் தான் ஸ்பான்ஸர் கிடைக்கும்.. எனக்கும் சரி கிளிக்கும் சரி படிக்கணும்னு ரொம்ப ஆசை அதுனால ரெண்டு பேரும் நல்லா படிச்சு ஸ்பான்ஸர்ஷிப்லயே காலேஜ் சேர்ந்தந்தோம்.. நல்லாவும் படிச்சோம் ஆனா அந்த ஒரு நாள் எங்க வாழ்க்கையையே மாத்திடுச்சு" என்றான் உள் சென்ற குரலில்.
கிளி "நாங்க படிச்ச காலேஜ்ல பெரிய பணக்கார வீட்டு பசங்களும் படிச்சாங்க.. ஆனா அவங்களுக்கும் எங்களுக்கும் சுத்தமா செட் ஆகாது.. அவங்க என்ன தப்பு பண்ணாலும் பழி எங்க மேல தான் விழும் அப்படி தான் அந்த சம்பவமும் நடந்துச்சு.. சரியா எங்க பைனல் எக்ஸாம் அப்போ எங்க கிளாஸ் பசங்க குவெஸ்டின் பேப்பர லீக் பண்ணிட்டாங்க ஆனா காசு கொடுத்து அதை நாங்க தான் பண்ண மாதிரி பழிய எங்க மேல போட்டுட்டாங்க" என்று பெருமூச்சு விட, நரி "நாங்க இத்தனை வருஷம் இப்படி தான் பாஸ் பண்ணோம்ணு அநியாயமா பழி போட்டு அது பெரிய கேஸ் ஆகி.. ஹப்பா" என்று சலிப்பாக தலையசைத்தான்.
கிளி "போலீஸ் கேஸ் இருந்ததால எந்த கம்பெனிலயும் வேலை தர மாட்டேன்னு சொல்லிட்டான்.. சரி அது தான் இல்ல வேற வேலை ஏதாச்சு முயற்சி பண்ணலாம்ணு பார்த்தா அங்கேயும் அதே பிரச்சனை தான் அதான் வேற வழி இல்லாம சின்ன சின்ன பிட் பாக்கெட், திருட்டுனு பண்ணி காலத்தை ஓட்டுறோம்" என்று முடித்தான்.
அவர்கள் கூறியதை கேட்டு ஐரா "ரொம்ப கஷ்டமா இருந்திருக்கோம்ல" என்று வினவ, கிளி "முதல கஷ்டமா தான் இருந்துச்சு அப்பறம் அதுவே பழகிடுச்சு" என்று தோளை உலுக்கினான்.
இந்தர் "ரகவன் எனக்கு இந்த ஊரை சுத்திக்காட்ட முடியுமா" என்று சம்மந்தமே இல்லாமல் வினவ, கிளி "இவ்ளோ பீலிங்கா பேசிட்டு இருக்கோம் என்ன கேட்குறான் பாரு.. கல் நெஞ்சுக்காரன்" என்று முணுமுணுக்க, ராகவன் "அமரன்ட்ட கேட்டு சொல்லட்டா" என்றான் தயங்கியவாறு.
ராகவன் அமரனுக்கு அழைக்க, முன்னரே கடுப்பில் இருந்தவனோ "என்னடா" என்றான் காட்டமாக. ராகவன் "அது மாப்பிள்ளை இந்தர் வெளியே போகணும்னு கேட்டுட்டு இருக்கான், அதான் என்ன பண்ணுறதுனு" என்றிழுக்க, "ஹான் கூட்டிட்டு போய் ஊர் சுத்திக் காட்டு" என்று எரிச்சலாக மொழிய, ராகவன் "ஏன்டா இப்படி கடுப்படிக்கிற" என்றான் பாவமாக.
அமரன் "இங்க ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை போயிட்டு இருக்கு இதுல நீயும் போன் பண்ணி டென்ஷன் பண்ணாத" என்று எரிந்து விழ, ராகவன் "சரி, நான் பார்த்துக்கறேன் நீ உடம்பை பார்த்துக்கோ" என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
இந்தர் "என்ன சொல்லுறான்" என்று புருவமுயர்த்த, ராகவன் 'ஹான் பச்சை பச்சையா திட்டுறான்' என்று நினைத்துக்கொண்டு வெளியே "வாங்க போவோம்" என்று அவர்களை அழைத்துச் சென்றான்.
ஊரின் எல்லையிலிருந்த கோவிலுக்கு அவர்களை அழைத்துச் சென்றவன் "இது தான் எங்க ஊரு கருப்ப சாமி கோவில்.. இங்க விஷேசமே ஊர் திருவிழா தான்.. ஊரே கலைகட்டிடும்" என்றவனின் கண்கள் பழைய நினைவுகளில் கலங்கி விட, அவன் தோளில் தட்டிக்கொடுத்த இந்தர் "இங்க வேற என்ன ஸ்பெஷல்" என்று பேச்சை மாற்ற, ராகவன் "இங்க விளையுற நாட்டு காய்கறி தான் ரொம்ப ஸ்பெஷல் ஆனா இப்போ இங்க எதுவுமில்ல" என்று உதட்டை பிதுக்கினான்.
பின் ஜன நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட வீதிகளில் ஐவரும் நடந்து வர, ராகவன் "இது தான் எங்க ஊரு சந்தை.. காய்கறி, பழம், இறைச்சி, ஜவுளி, நகைனு எல்லா கடையும் இருந்துச்சு.. விஷ்வனாதன் ஐயா தான் இதெல்லாம் கட்டிக்கொடுத்து புதுபிச்சாரு" என்று அங்கிருந்த சில கட்டிடங்களை காட்டி விளக்கினான்.
ஐரா "அது யாரு விஷ்வனாதன் ஐயா" என்று வினவ, ராகவன் "அமரனோட அப்பா, இந்த ஊருக்கே அவரு தான் குல சாமி.. எங்க ஊர் தலைவர்" என்றவன் தொடர்ந்து "அவர மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது" என்று உணர்ச்சிவசப்பட, இந்தர் "சரிடா ரிலாக்ஸ்" என்றான் அவன் தோளில் அழுத்தம் கொடுத்து.
கிளி "விஷ்வனாதன்.. இந்த பெயரை கேட்ட மாதிரியே இருக்குல" என்று நரியிடம் வினவ, அதற்கு அமோதிப்பதாய் தலையசைத்தவன் "எனக்கும் கேட்ட மாதிரி தான் இருக்கு.. சரியா நியாபகம் இல்ல.. முகத்தை பார்த்தா தெரியும்" என்றான்.
சிறிது தூரம் நடந்து சென்றவர்கள் வறண்டிருந்த விளைச்சல் நிலங்களின் அருகே வர, ராகவன் "இங்கிருந்து கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எல்லாமே விளைச்சல் நிலம் தான் ஆனா இப்போ தண்ணீர் இல்லாம விவசாயம் பண்ண ஆட்கள் இல்லாம இப்படி வறண்டு கிடக்கு" என்று பெருமூச்சு விட, இந்தர் அனைத்தையும் கவனித்துகொண்டான்.
கிளி "சுத்தி பார்த்தது போதும்னா வீட்டுக்கு போவோம்யா, வயித்துல எலி ஓடுற சத்தமெல்லாம் கேட்குது" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள, ஐவரும் வீட்டிற்கு திரும்பினர்.
உணவு மேசையில் அமர்ந்து ஐரா, நரி, கிளி மற்றும் ராகவன் உணவுண்ண, இந்தர் தன் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான். ஐரா "நீங்க சாப்பிடலயா" என்று வினவ, "பசிக்கில கேண்டி" என்றவன் சில வேலைகளை முடித்துவிட்டு வர, கிளி "எக்ஸ்கியூஸ் மீ பாஸ்" என்று இந்தரை அழைத்தான்.
இந்தர் "என்னடா" என்றபடி அவன் அருகே அமர, கிளி "ஆமா உன்ன எதுக்கு கடத்துனாங்க" என்று கேள்வியெழுப்ப, இந்தர் "என்னடா இப்படி கேட்குற" என்றான் சிரிப்புடன். கிளி "இல்ல அவரு என்னமோ உங்களை ரிவெஞ் எடுக்குறேன் அது இதுனு சொன்னாரு.. நீ என்னமோ டூர் வந்த மாதிரி ஊர் சுத்திட்டு இருக்கியே அதான் கேட்டேன்" என்று தன் சந்தேகத்தை முன் வைக்க,
இந்தர் "அவன் அவனோட வேலைய பார்க்குறான் நான் என்னோட வேலைய பார்க்குறேன்" என்று கண்ணடித்துவிட்டு செல்ல, கிளி 'வேலையா' என்று யோசனையுடன் அவனை காண, அவனோ ஐராவுடன் எதையோ பேசிக்கொண்டே வெளியேற, கிளி "அதானே.. எனக்கும் தெரியும்டி நீ என்ன வேலையா வந்திருக்கனு" என்று கிண்டலடித்தவன் தொடர்ந்து "இவனை அவகிட்டிருந்து தள்ளி வைக்கிறதே எனக்கு வேலைய போச்சு.. இந்தாயா நில்லு" என்று புலம்பிக்கொண்டே அவன் பின் ஓடினான்.