அறியாத
இவளின் அடையாளம்
புரியாததாய்
மறைந்துள்ள
ரகசியமாம்..
வித்தார்த்திற்கு அழைத்து விட்டு மீண்டும் கிச்சனிற்கு வந்த மாறனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் கொடுத்து சென்ற ஸ்பூனை கடித்திடும் முயற்சியில் இறங்கியிருந்தாள் அப்பெண்.
பதறிய படியே அவளருகே சென்ற மாறன் அவளிடமிருந்து ஸ்பூனை பறிக்க முயல அவனால் அது முடியாமல் போனது.
அவளின் பிடி வழமைக்கு மாறான உறுதியோடு இருக்க
“ஏய் என்ன பண்ணுற நீ? முதல்ல அதை விடு...” என்று கத்த அப்பெண்ணோ பிடியை தளர்த்தாது அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உனக்கு இது பத்தலைனா வேற தரேன். ஆனா இந்த ஸ்பூனை விடு.”என்று அவளிடமிருந்து பிடுங்க கடுமையாய் போராட அப்பெண்ணோ அவன் எதிர்பாரா நேரத்தில் பிடியை விட்டுவிட ஸ்பூனோடு தூர விழுந்தான் மாறன்.
ஆனால் அப்பெண்ணோ ஏதும் நடக்காதது போல் கோப்பையிலிருந்த பாஸ்தாவை கைகளால் எடுத்து உண்ணத் தொடங்கினாள்.
கீழே விழுந்த மாறன் எழுந்து அப்பெண்ணை விசித்திரமாக பார்த்தபடியே அங்கிருந்து வெளியேற முனைந்தான்.
ஆனால் திடீரென்று மனதில் அப்பெண் கோப்பையை கடித்து சாப்பிட்டுவிட்டால் என்று தோன்ற அவனின் நடை தடைப்பட்டது.
அவள் செய்வதற்கு வாய்ப்புள்ளதென்று அவன் மூளை எச்சரிக்கை அங்கேயே அமர்ந்து அவளை கவனிக்கத்தொடங்கினான்.
அந்த முழு கோப்பையையும் காலி செய்தவள் கோப்பையில் ஒட்டியிருந்த சிறு துகள்களை கூட விட்டுவைக்காமல் நாக்கால் வழித்து எடுக்க இதை பார்த்திருந்த மாறனுக்கு தான் குமட்டிக் கொண்டு வந்தது.
வாஸ் பேசினை நோக்கி ஓடியவன் ஒரு குடம் வாந்தி எடுத்து முடித்தபின்பே ஓய்ந்தான்.
நேற்றிரவு அளவுக்கதிகமாய் குடித்தது, அளவு தெரியாமல் சாப்பிட்டதென்று அவன் வயிற்றில் தங்கியிருந்த அனைத்தும் இப்போது வெளியேறியிருந்தது.
வாந்தி எடுத்து முடித்தவனுக்கு அப்போது தான் பாதாள சிறையிலிருந்து மீண்ட உணர்வு.
வாந்தி எடுத்து ஓய்ந்துபோய் கண்மூடி அமர்ந்திருந்த மாறானது அருகே வந்த அப்பெண் அவனை குறுகுறுவென்று பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
திடீரென்று உடல் ஈரமாவதை உணர்ந்த மாறன் கண்விழித்து பதறி எழ அவன் முன்னே கண்ணாடி கோப்பையோடு நின்றிருந்தாள் அப்பெண்.
உள்ளே எழுந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டவன் பல்லை கடித்தபடியே ஏதோ சொல்வதற்குள் அழைப்பு மணி சத்தம் கேட்டது.
தலையை குலுக்கி தன்னை சரி செய்துகொண்ட மாறன் தடுமாறி எழுந்து கதவை திறக்க சென்றான்.
உள்ளே வந்த விதார்த் வீடு இருந்த நிலைமையை கண்டு சோர்ந்திருந்த மாறனை திட்டத்தொடங்கினான்.
“டேய் என்னடா இது? இராத்திரி முழுக்கா குடிச்சிட்டு தான் இருந்தியா? இப்படி குடிச்சா உடம்புக்கு என்னடா ஆகும்? ஒரு சின்ன விஷயத்தால உன் வாழ்க்கையையே அழிச்சிக்க போறியா? இவ்வளவு கோழையா நீ?” என்று விதார்த் பேச மாறனோ
“டேய் வெண்ண.. எந்த நேரத்துல அட்வைஸ் பண்ணனும்னு உனக்கு ஒரு விவஸ்தை இல்லையா? பேசுறான் பத்து பக்கத்துக்கு...” என்று திட்டியபடியே மாறன் சோபாவில் அமர குழப்பத்துடன் அவனை நெருங்கினான் விதார்த்.
ஏதோ சரியில்லையென்று புரிந்துகொண்ட விதார்த்
“என்னடா ஆச்சு? ஏன் நீ இப்படி நனைஞ்சிருக்க?” என்று விசாரித்தபடியே சுற்றுப்புறத்தை ஆராய ஜன்னலருகே ஒரு பெண் உருவம் தெரிய பயத்தில் அலறினான் விதார்த்.
“அங்க... அங்க... ஏதோ நிக்கிதுடா.. அதுவும் பொண்ணு ரூபத்துல...” என்று தன்னை நெருங்கியவனை பிடித்து தள்ளிய மாறன்
“டேய் சீ.. தள்ளிப்போ.. அது பொண்ணு தான்.. எங்க இருந்து வந்தானு தெரியல. போய் நீயே விசாரி...” என்று கூற அவனையும் அப்பெண்ணையும் மாறி மாறி பார்த்த விதார்த்
“அவளா வந்தாளா இல்லை நீ போன் பண்ணி கூப்பிட்டியா?” என்று சந்தேகமாக கேட்க அவனை உஷ்ணப்பார்வை பார்த்த மாறன்
“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியிது?” என்று கேட்க விதார்த்தோ
“அதுக்கில்ல. இத்தனை நாள் அளவா குடிச்சிட்டு நேத்து அளவுக்கதிகமாக குடிக்கலையா... அதே மாதிரி இதுவும் இருக்குமோனு...” என்று இழுத்தவனை
“மரியாதையா எழுந்து போயிடு. இல்லைனா அடிப்பட்டே செத்திடுவ.” என்றவனின் குரலில் இப்போது நிஜ மிரட்டல் இருந்தது.
மெதுவாக எழுந்து அப்பெண்ணருகே வந்த விதார்த் அவளை முழுதாக ஆராய்ந்தான்.
ஐந்தடிக்கு சற்று குறைவான உயரம், வழமைக்கு மாறான வெண்மை தேய்ந்த முகம், ஆளை ஊடுருவும் சக்தி வாய்ந்த சற்று அகண்ட விழிகள், மெல்லியான தேகம் என்று உடலமைப்பு கச்சிதமாக இருக்க அதனை பகுதியாய் மறைந்திருந்தது மாறனின் நீலநிற மேற்சட்டை.
சோலை காட்டு பொம்மைக்கு சட்டையிட்டது போல் அம்மேற்சட்டையோ அவளின் தொடை வரை நீண்டு தொங்கிக்கொண்டிருந்தது.
அதை பார்த்தவனுக்கு ஒரு புறம் சிரிப்பாகவும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது.
அவளை அளவிட்டபடியே அருகில் வந்தவன்
“யாருமா நீ? எப்படி இங்க வந்த?” என்று கேட்க அப்பெண்ணோ விதார்த்தை குறுகுறுவென்று பார்த்தாளே தவிர வேறு ஏதும் பேசவில்லை.
அவள் பேசமாட்டாளென்று புரிந்துக்கொண்ட விதார்த்
“என்னடா இவ ஏதும் பேச மாட்டேங்கிறா?” என்று மாறனிடம் கேட்க
“என்கிட்ட கேட்டா எப்படி? நீ தான் டாக்டராச்சே... ஏதாவது பண்ணு” என்று கூற இப்போது மாறனை முறைத்தான் விதார்த்.
“டேய் நான் வெட்டனேரியன்டா. நான் என்னடா பண்ண முடியும்?” என்று கேட்க மாறனோ சற்றும் பரிதாபப்படாமல்
“அது எனக்கு தெரியாது. சீக்கிரம் அவளை இங்க இருந்து பேக் பண்ணு”என்றவனின் எண்ணமே விதார்த்திற்கும்.
ஆனால் எப்படி அனுப்புவது? அப்பெண்ணை பார்த்தாலும் பாவமாக இருந்தது. ஆனால் பேசக்கூட மறுக்கும் பெண்ணை தம் பொறுப்பில் வைத்திருப்பது சரி தானா என்று யோசித்தவனுக்கு குழப்பமாக இருந்தது.
யோசித்தபடியே திரும்பியவனின் எதிரே நின்றிருந்தாள் அப்பெண்.
அவளை கண்டு ஓரடி பின்னே குதித்தவன்
“ஷிட்... நல்லா பயந்துட்டேன். இப்படியா பின்னாடி வந்து நின்று பயமுறுத்துவ?” என்றவனுக்கு அப்போது தான் ஒரு விஷயம் புலப்பட்டது.
அதை பரிசோதித்து பார்க்க எண்ணியவன் தனக்கு தெரிந்த சைகை மொழி மூலம் அப்பெண்ணுடன் பேச முயன்றான்.
ஆனால் அந்தோ பரிதாபம் அவன் முயற்சி விபரீதமாக முடிந்தது.
அவன் சைகை செய்ய அப்பெண்ணோ அவன் கையை முறுக்கி நிலத்தில் தள்ளினாள்.
தரையில் விழுந்த விதார்த் ஐயோ அம்மாவென்று கதற அவனருகே ஓடிவந்தான் மாறன்.
விதார்த்தை எழுந்து அமரவைத்தவன்
“என்னடா பண்ணித்தொலச்ச?” என்று விசாரிக்க
“டெப் அன்ட் டம்ப்பானு செக் பண்ண சைன் லங்குவேஜில பேச ட்ரைபண்ணேன்டா. ஆனா அந்த பொண்ணு டிபென்ஸ் அட்டாக் பண்ணி என்னை கீழ தள்ளிடுச்சுடா.” என்று விதார்த் வலியில் முணங்கியபடியே கூறினான்.
மாறனுக்கும் என்ன செய்வதென்று புரியாது போக ஏதோ யோசித்தவன்
“சரி அந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும். வேற ஏதும் பிரச்சினை வந்தா நான் பார்த்துக்கிறேன். “ என்றவன் விதார்த்தை தூக்கி சோஃபாவில் அமரவைத்து விட்டு தன் மொபைலை எடுத்து வேலையாட்களுக்கு தகவல் சொன்னவன் அந்த பெண்ணிற்கு சில ஆடைகளை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்தான்.
அவன் போனில் வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் போது மீண்டும் அவனெதிரே நின்றிருந்தாள் அப்பெண்.
இப்போது புருவத்தை உயர்த்தி பார்த்தவன்
“என்ன வேணும்?” என்று கேட்க
“பசி” என்று அப்பெண்ணும் பதில் கூற இப்போது சிரித்து விட்டான் மாறன்.
அவளை பார்த்தநொடியிலிருந்து அவள் வாய்வழியே அவன் கேட்ட ஒரே வார்த்தை இது மட்டுமே.
தலையை குலுக்கி கொண்டு சென்றவனை பார்த்த விதார்த்
“டேய் அந்த பொண்ணு டெப் அன்ட் டம்ப் இல்லையா டா?” என்று குழப்பமாக கேட்க
“நான் உன்கிட்ட அப்படி சொன்னேனா?” என்று கேட்டுவிட்டு அப்பெண்ணிற்கு உணவு தயார் செய்ய கிச்சனிற்கு சென்றான் மாறன்.
அவன் பின்னேயே அப்பெண்ணும் செல்ல விதார்த்தும் அவர்கள் பின்னே சென்றான்.
மூவருக்கும் சேர்த்து மேகி தயாரித்த மாறன் அதனை மூன்று கோப்பைகளில் நிரப்பிவிட்டு மேசையில் வைத்தான்.
இப்போது அப்பெண் அவளே ஸ்பூனை எடுத்து நூடில்ஸை சாப்பிடத் தொடங்கினாள்.
அதை பார்த்த விதார்த்திடம் சற்றும் நடந்த அனைத்தையும் கூறிமுடித்தான் மாறன்.
“ஸ்பூனு பத்திரம்டா.” என்றவன் முதுகில் ஒன்று போட்ட மாறன்
“எனக்கென்னமோ இவ சாதாரண மனிஷியில்லைனு தோனுது. இவகிட்ட ஏதோ வித்தியாசம் இருக்குடா... நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு ஸ்ரோங்கா இருக்கா.” என்றவனது வார்த்தைகளிலிருந்த உண்மை விதார்த்துக்கு நன்றாகவே புரிந்தது.
சற்றுமுன் அவளின் பலத்தை அனுபவித்தவனாயிற்றே..
“நாம வேணும்னா யாராவது டாக்டரை வரச்சொல்லட்டுமா?” என்று கேட்க மாறனுக்கு அந்த யோசனை பிடித்திருந்த போதிலும் ஏனோ தயக்கமாக இருந்தது.
“மறுபடியும் ஒரு தடவை அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கிறியா?” என்று மாறன் கேட்க
“அடேய் ஏன்டா உனக்கு இந்த கொலைவெறி? மறுபடியும் எனக்கு டின்கட்ட பிளான் போடுறியா? உடம்புல தெம்புல்ல ராசா.” என்று விதார்த்தோ ஜகா வாங்க தலையிலடித்துக்கொண்டான் மாறன்.
“பேசச்சொன்னப்போ சரியா பேசாமல் கண்டமாதிரி டான்சாடுனா யாருனாலும் இப்படி தான் பண்ணுவாங்க.” என்று மாறன் கூற
“ஆஹான்... சார் தான் தைரியமான ஆளாச்சே... நீங்களே பேசுங்க...” என்று விதார்த் மறுபடியும் பந்தை அவனிடமே தூக்கிப்போட மாறனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.
அப்பெண்ணை நெருங்கிய மாறன்
“இங்கப்பாருங்க. நீங்க யாரு ஏதுனு உங்க டீடெயில்ஸ் சொன்னா தான் எங்களுக்கு உங்களுக்கு தேவையான உதவியை நாங்க பண்ண முடியும்.” என்று மாறன் கூற அப்பெண்ணோ மாறனை ஒருமுறை குறுகுறுவென்று பார்த்துவிட்டு
“தானோஸ் தினாய் திதா அஷிஹாய் சம்ரு ரியாஹி.” என்று கூற இப்போது முழிப்பது ஆடவர் இருவரின் முறையானது.
விதார்த்தோ
“என்னடா பெயரை கேட்டா அவென்ஜர்ஸ் கேரெக்டர்ஸ் பெயரெல்லாம் சொல்றா?” என்று விதார்த் கேட்க
“இது என்னோட பெயர்.” என்று கேட்ட அவளின் குரலில் இருவரும் ஒரு சேர திரும்பி பார்த்தனர்.
விதார்த்தோ ஒருபடி மேலே சென்று
“எந்த பிளானட்ல இப்படியெல்லாம் பெயர் வைக்கிறாங்க?” என்று அவன் கேலியாக கேட்க அப்பெண்ணோ சீரியஸாக
“பூமிக்கிரகத்தில் இருந்து 23458769 பில்லியன் தொலைவிலுள்ள அரோத்மன் சியாட்டா பிளானட்ல.” என்று பதில் இப்போது குழப்புவது விதார்த் மற்றும் மாறனின் முறையானது.
விதார்த் மாறனின் காதில்
“டேய் இவ லூசுடா. லூசு கிட்ட மாட்டிக்கிட்ட நீ?” என்று கூற மாறனுக்குமே அதே சந்தேகம் தான்.
“அப்போ நீ ஏலியானா?” என்று மாறன் கேட்க அப்பெண்ணும்
“வேற்றுகிரவாசியை உங்க கிரகம் அப்படி தானே கூப்பிடுவாங்க.” என்று கூற இப்போது இருவருக்கும் நிச்சயமானது.
“எதுக்கு இங்க வந்த?” என்று விதார்த் கேட்க
“சேட்டை பண்ணதுக்கு தண்டனையா பூமிக்கு அனுப்பிட்டாங்க.” என்று அப்பெண் கூற விதார்த்தும் மாறனும் ஒருவரை மற்றவர் ஏதோ புரிந்தது போல் பார்த்துக்கொண்டனர்.
“எப்போ திரும்ப உன்னோட இடத்துக்கு போவ?” என்று விதார்த் கேட்க
“31536000 விநாடிகள் முடிந்ததும் திரும்ப அழைச்சிட்டு போயிடுவாங்க.” என்று கூற மாறன் புரியாது விதார்த்தை பார்க்க
“ஒரு வருஷத்தை தான் அவ அப்படி சொல்றா..” என்று கூறிய விதார்த்
“நீ எப்படி வீட்டுக்குள்ள வந்த?” என்று கேட்க முதல் நாள் இரவு நடந்ததை விவரிக்கத்தொடங்கினாள் இனி ரியா என்று அழைக்கப்படப்போகும் தானோஸ் தினாய் திதா அஷிஹாய் சம்ரு ரியாஹி.