எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி-ஸ்ரீ - கதை திரி

Status
Not open for further replies.

admin

Administrator
Staff member
புதிய எழுத்தாளருக்கு எங்கள் வாழ்த்துக்கள்
 
அத்தியாயம் 1


ஓம் பூர் : புவ: ஸுவ: தத் சவிதுர்:
வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோ: யோந:
ப்ரசோதயாத்..!


என்ற காயத்ரி மந்திரத்தை, சூரிய பகவானை நோக்கி உச்சாடனம் செய்து தனது காலை சந்தியா வந்தனத்தை
சிரத்தையாக முடித்த விஷ்ணு நாராயண், அதனைத் தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும்
தெளிவாக உச்சரித்துக்கொண்டே, தோளில் இருந்த பூணூலை சரி செய்தபடி மாடித்தோட்டம்
போடப்பட்டிருந்த பெரிய பால்கனியில் இருந்து, கூடத்திற்கு நுழைய எத்தனிக்கும் போது, ஆதவனின் கிரணங்கள் ஆறடியில் உருண்டு திரண்டிருந்த அவனது வெண்மை நிற வெற்று மார்பின் செம்மை நிற தோள்களில்


'சமாஸ்ரயணம்'(பெருமாள் கைகளில் இருக்கும் சங்கு, சக்கர வடிவத்தை போல், சிறிய வெள்ளியிலான அச்சினை நெருப்பு தணலில் காட்டி, உபநயனத்திற்கு (முதல் முதலில் பூணூல் அணிவித்ததும்) பிறகு சங்கை ஒரு தோளிலும், சக்கரத்தை மறு தோளிலும் பதிப்பார் ஆச்சாரியன் என்றழைக்கப்படும் வைணவ குருமார்) செய்யப்பட்டிருந்த, சங்கு சக்கர முத்திரையின் மீது படிந்து ஜொலிக்க, கூடத்திற்கு வந்த மைந்தனிடம் எப்பொழுதும் போல் வேதவல்லி,


" விஷ்ணு, சந்தியா வந்தனம் ஆச்சா,
டேபிள் மேல தளிகை(சமையல்) பண்ணி வச்சிருக்கேன், சாப்ட்டுட்டு
ஆபிசுக்கு கிளம்பு ..." என்று உத்தரவு பிறப்பித்த படி தன்னுடைய
காலை நேர ஆசார அனுஷ்டான பூஜைகள் முடிந்ததால் , மடிசார் உடுத்தியிருந்தவர்
உடைமாற்ற தன் அறைக்குள் நுழைய, அவரது பேச்சைக் காதில் வாங்கியபடி மைந்தனும் தன் அறைக்கு சென்று அலுவலக உடைக்கு மாறினான்.


விஷ்ணு நாராயண், அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் அதிகாரியாக (Assistant Central Intelligence Officer (ACIO) grade I) , (இன்டலிஜென்ஸ் பீயூரோவில் Intelligence Bureau -IB ) இந்திய உள்நாட்டு உளவு பிரிவில் பணியாற்றுகிறான்.


மும்பை பெருநகரம் செம்பூரில், 22 அடுக்கு மாடிகளைக் கொண்ட
'கோல்டன் நெஸ்ட் ' என்ற வசதி படைத்தவர்கள் வசிக்கும் குடியிருப்பில் 15வது தளத்தில்
' வேதா நிவாஸ் ' என்ற பெயர் கொண்ட பெண்ட் ஹவுஸில் (pent house - தனி வீடு போல், கீழ்த்தளம், மேல்தளம் என இரு தளங்களை கொண்ட வீடு) வசிக்கிறான்.


ஃபார்மல் ஷர்ட் மற்றும் பேண்ட்டில் கம்பீரமாக காட்சியளித்தவனுக்கு, மடிசாரிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்த தாய் வேதவல்லி, காலை உணவினை பரிமாறிய படி,


" எப்படா விஷ்ணு கல்யாணம் பண்ணிப்ப.." என்றார் வழக்கம் போல் .


திருமணத்தை தட்டிக்கழிக்க மைந்தன் கூறும் புது புது காரணங்களை சுவாரஸ்யத்துடன் கேட்பதற்கும், அவனது மன உணர்வுகளை புரிந்து கொள்வதற்காகவும் இந்தக் கேள்வியை வேதவல்லி அடிக்கடி விஷ்ணுவிடம் கேட்பதுண்டு.


" எவன் பொண்ணு கொடுக்கிறான் ... உங்க ஆளுங்க கிட்ட பொண்ணு கேட்டா , எடுத்த எடுப்புல வடகலையா தென்கலையான்னு கேட்கறான்...
கடைசில நான் முருங்க கிளைன்னு சொல்ல வேண்டியதாயிடுச்சு...." என்று புன்னகையோடு சமாளித்தவனின் மனதில் நிழல் ஓவியமாய்
தன் மனதிற்கினியவளுடன் மாலை மாற்றிய காட்சி வந்து போக, அதே நிகழ்வை மனதில் நினைத்தபடி , மைந்தனின் முக உணர்வை படிக்க முயன்ற தாயிடம், சடுதியில் முகபாவத்தை மறைத்திருந்தான் மைந்தன் .


" சரி.... என் ஆளுங்கதான் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ட்டா ... உன் ஆளுங்கயிண்ட பொண்ணு கேட்க வேண்டியதுதானே .."


" என் ஆளுங்க யாரு இங்க இருக்கா .."
என்றான் அவனது அடர்ந்த மீசையை முறுக்கியபடி.


" ஏன்டா, நீ ஆள் பாக்க ஜம்முனு கம்பீரமா ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்க... அட்லீஸ்ட் யாரையாவது லவ் பண்லாமோல்யோ... மராட்டி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமின்னு எவ்ளோ அழக அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கா ..."


" நீங்க லாங்குவேஜ் தெரியாம, அவ கூட சண்டை போட முடியாம கஷ்டப்பட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தான் .." என்றான் குறும்பாக.


" பரவால்ல நான் ஹிந்தில, இல்ல இங்கிலீஷ்ல அவளிண்ட சண்டை பிடிச்சுப்பேன்...நீ அதை பத்தி வருத்தப்படாத... ச்சரியா ..." என்ற தாய் வேதாவை பார்த்து விஷமமாக சிரித்தபடி வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டு கிளம்ப எத்தனித்தவனிடம்,


" விஷ்ணு, மும்பை ஃபோர்ட் கிட்ட ( Mumbai fort)சில நியூ கம்பெனிங்க கூட , ஸ்டாக் மார்க்கெட் மீட்டப் (stock market meetup) இருக்கு .. என் பிஏ(PA) இன்னைக்கு லீவு... சோ நான் தான்
நம்ம கம்பெனி சார்பா அட்ரஸ் பண்ண போறேன் ... நீயும் என் கூடவே வந்துடு, உன்னை உன் ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடறேன் .."


" இல்லம்மா நீங்க கிளம்புங்க .. எனக்கு இன்னைக்கு காட்கோபர்ல(Ghatkopar) ஒரு வேலை இருக்கு... நான் என்னோட அபிஷியல் கார்ல, கவர்மெண்ட் லோகோவோட போனா தான் , ஈஸியா மும்பை டிராபிக்ல பூந்து பூந்து போக முடியும்..." என்று கூறியபடி கிளம்பி கொண்டிருந்தவனை பார்த்து,


" டேய், சொன்னா கேட்கவே மாட்டியா டா ... எத்தனை தடவை சொல்றது இந்த வாட்சை (Watch)ஆத்துல வச்சிட்டு, வேற ஏதாவது நன்னா புது வாட்ச் வாங்கி கட்டிக்கோன்னு...ரொம்ப புராணா வா இருக்குடா...நன்னாவே இல்ல ..."


" அம்மா, ஐ அம் எமோஷனாலி அட்டாச்சிடு வித் திஸ் வாட்ச் ... இட் ஸ் வெரி லக்கிம்மா...இந்த வாட்ச் என் கையில இருக்கும் போதெல்லாம் என் தாத்தா என் கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல்(feel) .. தி ஓல்ட் எச்.எம்.டி(HMT) பைலட்(pilot) டிசைன் ... வெரி நைஸ் ...இல்ல ..." என்று தான் அணிந்திருந்த வாட்சை சிலாகித்தவனுக்கு தெரியாது,
அந்த வாட்ச் தான் நம் நாட்டை பெரும் தீவிரவாத தாக்குதலில் இருந்து காக்க உதவ போகிறதென்று.


" இது உன் லக்கி வாட்ச்....உன் தாத்தா தான் இதை கொடுத்தது ...அதெல்லாம் ஓகே ... ஆனா வாட்டர் ப்ரூப் இல்லயேடா ...ரொம்ப பழசு ...ஸ்ட்ராப்(Strap) மட்டும் அடிக்கடி மாத்துர....என்னிக்காவது ஒரு நாள் இது ஓடாம போச்சுன்னா என்ன பண்ணுவ ...."


" அப்ப பாத்துக்கலாம் மா..." என்று துள்ளிக் குதித்தபடி கார் சாவியை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேற எத்தனித்தவனிடம்


" ஏய் நில்லு, பிஸ்டல(pistol) எதுக்காக எடுத்துண்ட.. " என்றார் அவனது பேண்ட் பாக்கெட்டை பார்த்து,


" கண்டுபிடிச்சிட்டீங்களா..." என்று சமாளிக்க முயன்றவனை பார்த்து,


" விஷ்ணு, நீ டெஸ்க் ஒர்க்கு (Desk work)தான பண்றேன்னு சொல்லி இருக்க ... பின்ன ஃபீல்ட் ஒர்க் (field work) பண்ற மாதிரி எதுக்கு பிஸ்டல்..."


" அம்மா உங்களுக்கே தெரியும், போலீஸ் மாதிரி எங்களுக்கு யூனிஃபார்ம் கிடையாது ...


தப்பு பண்றவனை அரெஸ்ட் பண்ற அதிகாரமும் கிடையாது ...


ஆனா நாங்க நினைச்சா, நாளைக்கு இந்தியாவோட தலைப்புச் செய்தியையே மாத்தலாம்...


நாங்க லோக்கல் போலீஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ்னு யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை ... ஹோம் மினிஸ்டிரிக்கு(உள்துறை) மட்டும் கட்டு பட்டா போதும் ... பெரிய அரசியல்வாதிங்க, அதிகாரிங்க, தீவிரவாதிங்கன்னு சந்தேகப்படுற அத்தனை பேரோட டெலிபோனிக் கான்வர்சேஷனையும் வயர் டேப்பிங்(Wire tapping - ஒட்டு கேட்டல்) பண்றோம் ...


போலீஸா இருந்தா, உள்நாட்டுல இருக்கிற கிரிமினல்ஸ் மற்றும் அரசியல்வாதிகளால மட்டும் தான் பிரச்சனை...


ஆனா நாங்க உள்நாடு வெளிநாடுன்னு பார்க்காம எல்லா இடத்திலிருந்தும்,
நம் நாட்டுக்கு எதிரா நடக்கிற இன்டலிஜென்ஸை(means Information) கலெக்ட் பண்ணி, டெரரிஸத்தை தடுக்கிறது, கவுண்ட்டர் டெரரிஸம் அட்டாக்(Counter terrorism attack - எதிர் தீவிரவாத தாக்குதல் ) நடத்திக்கிட்டு இருக்கோம்... அதுவும் உன் புள்ள நான் ஒரு இடம் விடாம கண்டம் விட்டு கண்டம் எல்லா இடத்துலயும் வம்பு இழுத்து வச்சிருக்கேன்.. அதனால எவன் என்னை எப்ப போடுவான்னு எனக்கே தெரியாது... அதனாலதான் இந்த சேஃப்டி ..."


" போடா நீயும் உன் வேலையும் ... போன்ல யாரோ பேசறதை ஒட்டுக் கேட்கறதும், உளவு பார்க்கறதும் ஒரு வேலையா டா..."


" அம்மா....நாட்டுல நடக்கிற பல தீவிரவாத செயல்களை, இப்படி ஒட்டு கேட்கிறதால தான் தடுக்க முடியுது...
உங்களுக்கு சொன்னா புரியாது ... நான் காஷ்மீர் பார்டர்ல இருந்து, மும்பைக்கு டிரான்ஸ்பர் ஆகி கிட்டதட்ட ஒரு வருஷம் தானே ஆகுது போகப் போக என்னோட வேலையை புரிஞ்சிப்பீங்க ..."


" என்னமோ போடா நினைச்சாலே பயமா இருக்கு ...
ஓகே தென்... சீ யூ இந்த ஈவினிங்..." என்று கார் சாவியை எடுத்துக்கொண்டு வேதா புறப்பட்டு செல்ல,
விஷ்ணு காட்கோபரை நோக்கி பயணமானான்.


வேதா கூறியது போல் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது மட்டும் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகளின் வேலை கிடையாது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களுக்கு 'விஐபி செக்யூரிட்டி' எனப்படும் பாதுகாப்பு வழங்குதல் ...


IBக்கு கிடைக்கும் தகவல்கள் சரியானதா என ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட மற்ற இந்திய இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிகளான NIA, CBI,CID,DIA,NCB
ஆகியவற்றுக்கும் வழங்குதல்...


நம் நாட்டின் ராணுவ ரகசியங்கள்,
விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை செலுத்துதல், இந்தியாவில் தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற மருந்துகளை பற்றிய தகவல்கள் (கொரோனா), உள்நாட்டு முக்கிய அரசியல் விவகாரங்கள் ஆகியவை இந்தியாவிற்குள் மட்டுமல்ல( ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு) வெளிநாட்டிலும் கசியாமல் காப்பது ...


CIA (அமெரிக்கா) ISI(பாகிஸ்தான்) MOSSAD(இஸ்ரேல்) போன்ற இந்தியாவின் போட்டி நாடுகளில் இருக்கும் உளவுத்துறையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக தீட்டப்படும் ரகசியங்களை கைப்பற்றுதல் ...


நக்சலைட்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தால் , அது குறித்து அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே தெரிவித்து , பாதுகாப்பு பணியை பலப்படுத்துதல் ...


இந்திய விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் ...


இவர்களது பணி காலம் முடிவதற்குள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள, கிட்டத்தட்ட அனைத்து பிரிவிலும் இவர்கள் பணியமர்த்தப்படுவர் .. இவர்களது பணி பெரும்பாலும் இடத்தையும் சூழ்நிலையையும் சார்ந்தது. (Region specific work)


இவர்களது பணி மிகவும் ரகசியமானது,
பெற்ற தாய், கட்டின மனைவி , குடும்ப உறுப்பினர்களிடம் கூட இவர்கள் தங்கள் பணிகளை குறித்த விவரங்களை விவாதிக்கக் கூடாது என்பது விதி.


****************************************


இடம் : காட்கோபர் காவல் நிலையம்


விஷ்ணு தன் அரசாங்க வாகனத்தை விட்டு இறங்கவும், அர்ஜுன் கிருஷ்ணா
அவனுடைய அரசாங்க வாகனத்தில், காட்கோபர் காவல் நிலையத்தை அடையவும் சரியாக இருந்தது.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டே "ஜெய் ஹிந்த்" என்று கூறியபடி கைகுலுக்கிக் கொண்டனர்.


அர்ஜுன் கிருஷ்ணா(ஏ.கே என்றால் அனைவருக்கும் தெரியும்) ஸ்டேட் இன்டலிஜென்ஸ் டிபார்ட்மென்டில் (State Intelligence Department (SID) , எஸ்.பியாக(Superintendent of police) பணியாற்றுகிறான். அவன் மீண்டும் மும்பைக்கு மாற்றலாகி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகிறது.


கடந்த 3 மாத காலமாக தான் , இருவரும் பரிச்சயம். அதுவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க வேண்டிய சூழலில் ஏற்பட்ட நட்பு. தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்ற ஈர்ப்பே இருவரையும் சந்திக்கும் இடத்திலெல்லாம் பேச வைத்திருந்தது.


மும்பையில் அடுத்த ஆறேழு மாத காலத்திற்குள் ஏதோ பெரிய தீவிரவாத சம்பவம் நிகழ போவதாக,
தகவல் கிடைத்ததை அடுத்து, மகாராஷ்டிர மாநில புலனாய்வு துறையில் காவல்துறைக் கண்காணிப்பாளராக பணியாற்றும்
அர்ஜுன் கிருஷ்ணாவிற்கு, ஒரு வாரத்திற்கு முன்பே விஷ்ணு தகவல் கொடுத்திருக்க, அது குறித்த விசாரணையில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது,
முந்நாள் இரவு இது தொடர்பாக ஒருவனை கைது செய்திருப்பதாக காட்கோபர் இன்ஸ்பெக்டர் யாதவ் இருவருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் தற்போது இருவரும் காட்கோபர் காவல் நிலையத்தை வந்தடைந்தனர்.


விஷ்ணு ஆறடி உயரம் என்றால், அர்ஜுன் கிருஷ்ணா 6 அடி 2 அங்குல உயரம், மாநிறம் , அழுத்தமான அதே சமயத்தில் ஆளுமையான
முகவெட்டும், 90 கிலோ எடையுடன் கனகச்சிதமான உடற்கட்டும், பேசும் மெல்லிய பூனை கண்களும், கன்னக்குழியும் அவன் பெயருக்கு பத்து பொருத்ததை ஏற்படுத்தி தந்திருந்தன.


" வாங்க சார் ... வருஷத்துக்கு நாலஞ்சு தடவையாவது, டெரரிஸ்ட் அட்டாக்ன்னு சொல்லி ஏழரையை கூட்டிடுறீங்க... " என்று விஷ்ணுவைப் பார்த்து கூறிய அக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் யாதவை அவன் முறைக்க,


" தப்பா எடுத்துக்காதீங்க சார் ... நாலஞ்சு தடவைல ஒரு தடவை நிச்சயமா உண்மையா இருக்கு சார்..." என்ற யாதவின் நக்கலை கேட்டு


" அப்ப நாங்க பொய் சொல்றோம்னு சொல்றீங்களா ... எங்களுக்கு கிடைச்ச தகவல்களை அந்தந்த மாநில அரசாங்கத்துக்கு கொடுத்து அலர்ட் பண்றோம்...
இவ்ளோ செஞ்சும் சில நேரத்துல எங்கள மீறி தீவிரவாதத் தாக்குதல் நடந்திடுச்சின்னா உடனே உள்துறை என்ன பண்ணுது... உளவுத்துறை என்ன பண்ணுதுன்னு எங்களை தான பொங்க வைக்கறீங்க...."


" கோச்சுக்காதீங்க சார் .... சும்மா தமாசுக்கு சொன்னேன்...நாம எல்லாம் அங்காளி பங்காளிங்க தானே... "


" அதுக்காக என் கிட்ட பொண்ணு
கேட்டுடாதே... எனக்கே இன்னும் கல்யாணம் ஆகல... ஒருத்தனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறான் .." என்று விஷ்ணு வெளிப்படையாக குமுற


"உங்களுக்கா சார் ஆளில்லை.."


" அறிவில்லையான்னு கேளு சந்தோஷப்படறேன்.... ஆள் இல்லையானு கேக்காத கடுப்பாயிடுவேன்...." என மீண்டும் பொங்கிய விஷ்ணுவைப் பார்த்து அர்ஜுன் சிரிக்க, இவ்விருவரையும் பொதுவாகப் பார்த்து,


" சார் ,நேத்து அரஸ்ட் பண்ண ஆளு கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார்... கழுத்தை திருப்பிக்கிறான் சார் ..." என கூறியபடி இன்ஸ்பெக்டர் யாதவ் முன்னே நடக்க, அவரை இருவரும் பின் தொடர, உள் அறையில் தரையில் அமர்ந்திருந்தவன் இவர்களைப் பார்த்ததும் மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.


" டேய், என்னா... புது பொண்டாட்டி மாதிரி அடிக்கடி தலைய குனிஞ்சுக்கிற... பதில் சொல்லுடா ..." என்று விஷ்ணு அவனை பார்த்து எகிற,


" இவனை எங்க அரெஸ்ட் பண்ணீங்க .." என்றான் அர்ஜுன் யாதவை நோக்கி.


" சார் , நேத்து ராத்திரி, இவன் ஏ-1 பார்ல குடிச்சிட்டு, இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில என்னென்னமோ நடக்கப்போகுது ... பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரப்போகுதுன்னு ... எல்லார் முன்னாடியும் ரெண்டு மூணு தடவ உளறி இருக்கான் சார் ... அந்த பார் மேனேஜர், எனக்கு போன் பண்ணி சொன்னாரு... இமெடியட்டா இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கொண்டு வந்துட்டோம் சார்... சரி போதை தெளியட்டும்னு ராத்திரி கேள்வி கேட்க வேணாமேன்னு விட்டுட்டு காலையில கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறான் சார் ..."


" எஃப்.ஐ.ஆர் (FIR) போடல இல்ல .." என்ற அர்ஜுனனைப் பார்த்து


" இல்ல சார் ..."


" இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கூட்டிட்டு வந்ததை யாரும் பார்க்கல இல்ல ..."


" இல்ல சார், எல்லாரும் போதைல இருந்தாங்க ..."


" அப்ப ஒன்னு பண்றேன் ... இவனை நான் க்ளோஸ் பண்ணிடறேன்...நீ பாடியை டிஸ்போஸ் பண்ணிடு..." என்றபடி அர்ஜுன், தனது பிஸ்டலை எடுத்து கீழே அமர்ந்தவனின் நெற்றியில் வைக்க, அவன் அலறியபடி


" சாப்(sahib...)இப்ப தான் சாப் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகத்துக்கு வருது... எனக்கு தெரிஞ்சதை சொல்லிடறேன் சாப் ....என்னை விட்டுடுங்க சாப்... நான் தீவிரவாதி இல்ல சாப்..."


" டேய் **** , பொற***கு,
*****, தீவிரவாதின்னு நீயே ஒத்துக்கிட்டாலும் நாங்க ஒத்துக்க மாட்டோம்... அதுக்கெல்லாம் ஒரு மூஞ்சி வேணும்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா பரதேசி ..." என்ற விஷ்ணு, தன் தலையை அழுந்த கோதியபடி,


" ச்சே, காயத்ரி மந்திரம் சொன்ன வாயால கெட்ட வார்த்தையை பேச வச்சிட்டான் ... கெட்ட வார்த்தை சொல்லாம உன் மூஞ்சை எல்லாம் தீட்டவும் முடியல ... " என வெளிப்படையாக நொந்து கொண்டிருந்த போது,


கீழே அமர்ந்திருந்தவன் அர்ஜுனை பயத்தோடு பார்த்தபடி,


" சாப், எம் பேரு சமீர்..
நான் ஈசி ஃப்ளை(Easy fly) டாக்ஸி டிரைவர் சாப் ... நேத்து சாயங்காலம் ரெண்டு பேரை சத்ரபதி சிவாஜி மகராஜ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்ல டெர்மினல் 2ல இறக்கி விட்டேன் சாப் ...
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை தான் சாப் நான் பார்ல சொன்னேன் ..."


" அவங்க ரெண்டு பேரும் அப்படி என்ன பேசிக்கிட்டாங்க..." என்றான் அர்ஜுன் பார்வையைக் கூர்மையாக்கி .


" சாப், அவங்க ரெண்டு பேரும், இன்னும் ஆறேழு மாசத்துல மும்பையில பெரிய சம்பவம் நடக்கப்போகுது ... அதனால பாகிஸ்தான்ல பெரிய மாற்றம் வரும்னு பேசிக்கிட்டாங்க சாப் ..."


" மும்பைல சம்பவம் நடந்தா, பாகிஸ்தான்ல எப்படி மாற்றம் வரும்... " என்று தனக்குத்தானே வெளிப்படையாக கேட்டுக் கொண்டவன்
" சரி, எந்த மொழில பேசிக்கிட்டாங்க ..." என்றான் விஷ்ணு.


" நிறைய பஞ்சாபியும், சிந்தியும்(Sindhi) கலந்து பேசினாங்க சாப் ... அப்புறம் கொஞ்சம் உருதுல பேசினாங்க எனக்கு அது சரியா புரியல... கடைசியா அரபில பேசினாங்க சாப்..."

" உனக்கு எப்படி அவங்க பேசுனது புரிஞ்சது..." என்ற விஷ்ணுவுக்கு


" சாப், என் வைஃப்(wife) பஞ்சாபி சாப்... அதனால எனக்கு பஞ்சாபியும் சிந்தியும் ஓரளவு நல்லாவே தெரியும் சாப்... அது மட்டும் இல்ல 10 வருஷம் நான் டிரைவரா சவுதில வேலை பார்த்து இருக்கேன் சாப்... அதனால எனக்கு கொஞ்சம் அரபியும் தெரியும் சாப் ..."


" எந்த பிளைட்ல போறதா
பேசிக்கிட்டாங்க ..." என்ற அர்ஜுனிடம்


" நான் கவனிக்கல சாப் ..."


" அவங்க இந்தியன்ஸா, பாகிஸ்தானிஸா, இல்ல வேற யாராவதா ..."


" பொதுவா இந்தியன்ஸ் அரபி பேச மாட்டாங்க சாப் ... அதில்லாம அவங்க பேசின பஞ்சாபியும் சிந்தியும் , நாம பேசுற மாதிரி இல்ல சாப் ...வேற மாதிரி இருந்தது.. அவங்க பாகிஸ்தானீஸ் தான்னு நினைக்கிறேன்..."


" அவங்க ரெண்டு பேரும் பாக்க எப்படி இருந்தாங்க..." என விஷ்ணு கேட்க,


" அதுல ஒருத்தர் ரொம்ப வயசானவரு...
இன்னொருத்தர் நடுத்தர வயசுல, இதோ.... இந்த அங்கிள்(Uncle) மாதிரி இருந்தாரு சாப்..." என அருகில் நின்றிருந்த யாதவை காட்டி அவன் கூற,


" அடிங் , **** , மூஞ்ஜை பேசிடுவேன்.. யாரைப் பார்த்து அங்கிள் மாதிரி இருக்கேன்னு சொன்ன.. அதுவும் உனக்கு நான் அங்கிளா..." என எகிறிய யாதவ்


" சார், இவன் சுத்த சாவுகிராக்கி சார் ...
இன்னிக்கு காலையில சாய்(Chai) கேட்டான் சார் ... வாங்கிக் கொடுத்தோம் ... அப்புறம் போஹா(அவல் உப்புமா) கேட்டான் சார்... அதையும் வாங்கி கொடுத்தோம் ... இப்ப மதியம் லஞ்சுக்கு பிரியாணி வேணுமாம் சார்.. அதுவும் தாஜ் ஹோட்டல் பிரியாணி...


இவன் கிட்ட நம்பர் வாங்கி இவன் பொண்டாட்டிக்கு போன் பண்ணா,
அந்த பொம்பள, இவன வீட்டுக்கே அனுப்பாதீங்க.. வீட்டுக்கு வந்தா குடிச்சிட்டு பிரச்சனை பண்றான்... நீங்களே வச்சுக்கோங்கன்னு சொல்லுது சார்..."


" அப்ப நல்லதா போச்சு ... இனிமே இவனை தேடி யாரும் ஜாமீன் எடுக்க வர மாட்டாங்க ... இவன் சரியா பதில் சொல்ற வரைக்கும் இங்கேயே இருக்கட்டும் ... ஒன் திங் யூ டூ யாதவ்,
ஏர்போர்ட்டுக்கு போன் பண்ணி, கோவிட் கைடுலைன்ஸ் ஃபார் இன்டர்நேஷனல் அரைவல்ஸ் , டொமஸ்டிக் அரைவல்ஸ் என்னென்னனு கேளுங்க ... நேத்து டெர்மினல் 2ல டேக் ஆஃப், லேண்ட் ஆன எல்லா பிளைட்ஸோட டி பார்ச்சர் அண்ட் அரைவல் டீடைல்ஸ கலெக்ட் பண்ணுங்க, அதுல யார் யாரெல்லாம் ட்ராவல் பண்ணி இருக்காங்கன்ற டீடைல்ஸை வாங்குங்க..."


என அர்ஜுன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ பேச்சுக்குரல் கேட்டு எதேச்சையாக காவல் நிலையத்தின் வாசலை பார்த்த விஷ்ணு , ஆனந்தம், இன்ப அதிர்ச்சி , ஆர்ப்பரிக்கும் மனது என தனித்தனியே விவரிக்க முடியாத கலவையான மனநிலையில் ஒரு நொடி உறைந்தவன், மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்க, என்னதான் மாஸ்க் அணிந்திருந்தாலும், அவன் பார்த்து ரசித்த, அவன் மனதை கொள்ளை கொண்ட கண்கள் அல்லவா ....எப்படி மறக்க முடியும் ...


உடனே யாதவிடம்,


" அங்க செகப்பா, கொஞ்சம் குண்டா ஒரு பொண்ணு நிக்குதே, அந்த பொண்ணு எதுக்காக வந்து இருக்கான்னு கொஞ்சம் கேட்டுட்டு வாங்க ..." என்றதும் யாதவ் அவ்விடத்தை விட்டு நகர,


" யாருடா அது ..." என்றபடி அர்ஜுனும் திரும்பி காவல் நிலையத்தின் வாயிலைப் பார்க்க ,


" ஸ்ரீலக்ஷ்மி ரங்கநாதன் , தூரத்து சொந்தம் ..."


" அது என்ன தூரத்து சொந்தம்..."


" பொண்டாட்டி மாதிரி ..."


" என்னது ....பொண்டாட்டி... மாதிரியா ... இந்த மாதிரி ஒரு உறவ நான் கேள்விப்பட்டதே இல்லையே டா... ஒன்னு பொண்டாட்டின்னு சொல்லு, இல்ல கட்டிக்கப் போற பொண்ணுன்னு சொல்லு...
இது என்ன புதுசா இருக்கு ..."


" அது ஒரு பெரிய கதை பையா(bhaiya) ... அப்புறம் சொல்றேன் .." என்றான் விஷ்ணு, யாதவ் அப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தபடி .


விஷ்ணுவிற்கு 28 வயதாகிறது. அர்ஜுன் விஷ்ணுவை விட நான்கு வயது பெரியவன். விஷ்ணு அர்ஜுனை சில நேரம்
'பையா', 'அண்ணா'
என்று மரியாதையோடு விளிப்பான் ... சில நேரம் 'அர்ஜுன்' , 'சீனியர்' என்றும் சில நேரம் 'வா, போ' என்றும் அழைப்பான் ... அவனுடைய மனோநிலையும், அங்கிருக்கும் சூழலுமே அவனுடைய அழைப்பை உறுதி செய்யும்.


" நேத்திலிருந்து யார் முகத்துல முழிச்சேன்னே தெரியல .... வர்றதெல்லாம் ஏழரையாவே இருக்கு ....." என்று வெளிப்படையாக புலம்பியபடி வந்த யாதவ், விஷ்ணுவிடம்


" சார் , அந்த பொண்ணு பேரு ஸ்ரீலட்சுமி ரங்கநாதன் .... மதராஸி போல ... மராட்டி சுத்தமா புரியல ... ஹிந்தி அரைகுறையா பேசுது ... இங்கிலீஷ்ல ஃபாஸ்ட்டா(fast) பேசுது சார் ... அதான் புரிஞ்சிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு ... ஏதோ ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிடுச்சாம்... கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கு ..."


" இவ ஹோண்டா சிட்டியை தொலைச்சாலே, தேட வேண்டிய அவசியம் இல்ல.... ஒரு ஸ்கூட்டிகாகவா இவ்ளோ தூரம் வந்திருக்கா.." என்று முணுமுணுத்த விஷ்ணு


" யாதவ், நீங்க அந்த ரெண்டு பொண்ணுங்களையும் உள்ள கூப்பிடுங்க... " என்றான்.


" சுனோ, ஓ தோ லடுகியோன் கோ இதர் பேஞ்சு தோ ..." (யோவ்,அந்த ரெண்டு பொண்ணுங்களையும் இங்க அனுப்பு யா...) என்று யாதவ் கூறிய மாத்திரத்தில்,


ஸ்ரீ லட்சுமியும், அவளுடன் இருந்த பெண்ணும் உள் அறை நோக்கி வர, வேண்டுமென்றே அவர்களுக்கு முதுகு காட்டி நின்ற விஷ்ணு, அவர்கள் அருகில் வந்ததும், திரும்பிப் பார்க்க,


அவனை எதிர்பாராமல் அங்கு கண்டதும் இம்முறை இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது ஸ்ரீ தான்.


தன் முகத்திலிருந்த மாஸ்க்கை விலக்கியபடி
அவன் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல், ஓரிரு நொடி
உறைந்திருந்தவள், சுய உணர்வு பெறும் போது ,அவள் கண்ணில் மெல்லிய நீர்த்திரையிட, அதில் தவிப்பு, ஏக்கம் , காதல் என அனைத்தும் கரைபுரண்டோட,
" விஷூ...." என்று அவளது உதடுகள்
சத்தம் வராமல் உச்சரித்ததை கண்டுகொள்ள வேண்டியவன் கண்டுகொள்ள, அவன் முகத்தில் தெரிந்த புரிதலை , ஒருவித நாணத்துடன் எதிர்கொண்டு அவள் தலை குனிந்து கொண்டாள்.


உன்னை தாண்டி கிட்டத்தட்ட ஒரு வருஷ லாக் டவுன் டைம்ல தேடிகிட்டு இருந்தேன் ... இவளை கண்ணுல காட்டினதுக்கு, தேங்க்ஸ் எ லாட் தாத்தா ... என விஷ்ணு மானசீகமாக தன் தாத்தாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் ,


இவனைப் பார்த்து கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாச்சு இல்ல .. என மானசீகமாக நிம்மதி பெருமூச்சு அவள் விட,


இவ்விருவருக்கும் இடையே நடக்கும் மொழியற்ற சம்பாஷணையை நொடியில் புரிந்துகொண்ட அர்ஜுன்,
குரலை உயர்த்தி செறும, சூழ்நிலையை புரிந்துகொண்ட விஷ்ணு பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்தபடி ஸ்ரீயை அணுவணுவாய் பார்த்துக்கொண்டே


" வெல், நீ உன் ஹோண்டா ஆக்டிவாவை தொலைச்சிருக்க ..."


" ம்ம்ம்ம்..."


" எங்க தொலைச்ச..."


" ரெண்டு தெருவுக்கு முன்னாடி இருக்கிற சிவாஜி மஹராஜ் சிலை கிட்ட வண்டிய நிறுத்திட்டு ஷாப்பிங் போயிருந்தேன் ... திரும்பி வந்து பார்த்தா வண்டி அங்க இல்ல ...தொலைஞ்சிடுத்து..."


" இது என்ன தமிழ்நாடா ... தெற்காசியாவையே கட்டி ஆண்ட ராஜராஜ சோழன், பூலித்தேவன், நரசிம்மவர்மனுக்கு சிலை வைக்காம திரும்பின இடத்துல எல்லாம் அரசியல்வாதிங்க சிலை இருக்கிறதுக்கு... இது மகாராஷ்டிரா ... எல்லா இடத்துலயும் சிவாஜி மகாராஜ் சிலை தான் இருக்கும்..
திருப்பதில போய் மொட்டையை தேடினா மாதிரி பதில் சொல்லக்கூடாது .." என்று குரலை உயர்த்தி வேண்டுமென்றே விஷ்ணு மிரட்ட,


சற்று நேரத்திற்கு முன்பு அவளது கண்ணில் தோன்றியிருந்த நாணம் மறைந்து , பய உணர்வு தலை தூக்குவதை அவள் முகம் வெளிச்சம் போட்டு காட்ட, மிகுந்த சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை ரசிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.


" சரி, மும்பை வந்து எவ்ளோ நாளாச்சு.."


"கிட்டத்தட்ட ஒன் இயர் ஆக போற்து ..."


" லைசென்ஸ் எடு ..."


" வண்டி வாங்கி 15 நாள் தான் ஆர்து..
லைசன்ஸ் எடுக்கலாம்னு நினைச்சுட்டுண்டு இருந்தேன் அதுக்குள்ள வண்டியே தொலைஞ்சிடுத்து..." என்றவளின் கலங்கிய பதில் இருவருக்கும் சிரிப்பை பொங்கி எழச் செய்ய, விஷ்ணு அடக்கியபடி அடுத்த கேள்விக்கு தாவ, அர்ஜுன் சிரிப்பை அடக்க முடியாமல், தலைகுனிந்தபடி அதனை மறைத்துக் கொண்டிருந்தான்.


" கிரைம் நம்பர் ஒன்... லைசென்ஸே இல்லாம நீ வண்டி ஓட்டி இருக்க... கிரைம் நம்பர் டூ... வண்டியையும் தொலைச்சிருக்க.." என்றவன் பேசப் பேச, அவள் முகம் பொலிவிழந்து போக,


" சரி, யார் இது , உன் ஃப்ரெண்டா..."


" இல்ல , இவ பக்கத்து ஆத்துல குடியிருக்கா... டென்த் கிளாஸ் படிக்கிறா..."


" ஏன் இதை விட சின்ன பொண்ணு உனக்கு கிடைக்கலையா... கூட கூட்டிட்டு வர..."


" இவளோட தங்கை சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறா, முதல்ல அவளை தான் கூப்பிட்டேன் ... அவ வர மாட்டேன்னுட்டா... அதான் இவளை அழைச்சிண்டு வந்தேன் ..."
இம்முறை அர்ஜுனுக்கு சிரிப்பை அடக்கவே முடியாமல்


" ஐ அம் சாரி டா ... என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலை... " என்று சிரித்தவன் " நீ அவள கலாய்க்கிறயா... இல்ல அவ உன்னை கலாய்க்கிறாளான்னு ஒன்னுமே புரியலையே டா..." என்று சன்னமாக விஷ்ணுவிற்கு மட்டும் கேட்கும் ரீதியில் மராட்டியில் மொழிய,


" சரி வண்டியை கொடுத்தா குரங்குபெடல் அடிச்சிக்கிட்டாவது வீடு போய் சேர்ந்துடுவியா..." என்ற விஷ்ணுவை ஸ்ரீ முறைத்து பார்க்க,


" இல்லம்மா...., உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா ... சரியா வீடு போய்
சேர்ந்துடுவியான்னு தெரிஞ்சுக்க தான் கேட்கிறேன் ... சரி வீடு எங்க இருக்கு ..."


" பவாய்ல (Powai)... என் வண்டி கிடைச்சிடுமா .." என ஆவலாக கேள்வி எழுப்பியவளிடம்


" யாருக்கு தெரியும் ... சரி உன் வண்டியை எந்த பார்க்கிங்கில் பார்க் பண்ண p1னா(parking 1) இல்ல p2 (parking 2) வா ..." என்று விஷ்ணு கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே,


யாதவ் விஷ்ணுவை நெருங்கி சன்னமாக,


" சார், வண்டி ராங்க் (Wrong) பார்க்கிங்கில் இருந்திருக்கும் சார் ...அதனால டூவீலரை ஆர்டிஓ ஆபீஸ்க்கு டோ(Tow) பண்ணிக்கிட்டு போயிருப்பாங்க ..."


" தெரியும் யாதவ்...அதான் கேட்டுகிட்டு இருக்கேன் ..." என்றவன் பார்வையை திருப்பி ஸ்ரீயை பார்க்க, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டவள்


" நேக்கு பார்க்கிங் பத்தி ஐடியா இல்ல..."


" ப்ரைம் லோகேஷன்ல, ஒத்த படை தேதில P1 பார்க்கிங்...இரட்டை படை தேதில P2 பார்க்கிங்ல டூவீலர நிறுத்தனும்னு உனக்கு தெரியாதா ... உன் வீட்டுல துவாரபாலகர்கள் மாதிரி ரெண்டு அண்ணனுங்க இருப்பானுங்களே.. இது கூடவா உனக்கு சொல்லிக் கொடுக்கலை ..." என்று விஷ்ணு கூறி முடிக்கும் முன், அவள் முகத்தில் ஒரு வித பயம் பரவுவதை உணர்ந்து கொண்டவன்,


" சரி சரி நீ என்ன பண்ற ... நான் எப்ப எல்லாம் கூப்பிடறேனோ அப்ப எல்லாம் இங்க வந்து, வண்டி கிடைக்கிற வரைக்கும் சைன் போட்டுட்டு போற..." என்றவன் கூறிய மாத்திரத்தில்,


" இது என்னடா புது சட்டம்...வண்டிய தொலைச்சவங்க ஏன்டா சைன் போடணும் ..." என அர்ஜுன் சன்னமான குரலில் குதூகலத்தை விதைத்தபடி கிசுகிசுக்க, அதே வேளையில்


" நான் எதுக்காக இங்க வந்து சைன் போடணும்..." என மெல்ல ஸ்ரீ கேள்வி எழுப்ப,


" நீ தீவிரவாதியா இருக்கலாம்... வேணுமுன்னே இல்லாத வண்டிய தொலைச்சுட்டேன்னு பொய் சொல்லி, எங்களை உளவு பார்க்க
வந்திருக்கலாம்... நாங்க எப்படி உன்னை நம்புறது ... நீ உண்மையா வண்டியை தொலைச்சியிருந்தா , வண்டி கிடைக்கிற வரைக்கும் டெய்லி வந்து சைன் போடுவ ...எங்களுக்கும் உன் மேல நம்பிக்கை வரும் , நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் நாங்க வண்டிய தேடுவோம் ..." என்ற விஷ்ணுவின் பேச்சை கேட்டு,


ஸ்ரீ 'ஆ' என்று வாயை திறந்தபடி உறைந்து நிற்க, மற்ற ஆண்கள் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருக்கும் போது, முதலில் சுதாரித்துக்கொண்ட விஷ்ணு,


" நீ வண்டியை பத்தின எல்லா டீடெயில்சும் இவர் கிட்ட கொடுத்துட்டு கெளம்பு..." என யாதவை காட்டி கூற, தயங்கி நின்ற ஸ்ரீ


" கூப்பிடறேன்னு சொன்னேளே..." என்றதும்


அடிக்கள்ளி, உனக்கு என் நம்பர் வேணுமா.... என்றெண்ணிவன் மென் புன்னகை பூத்தபடி


" உன் நம்பரை உன் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டா , இவ்ளோ நாளா நான் செஞ்சுகிட்டு இருக்கிற இந்த வேலைக்கு என்ன மரியாதை .... ப்ளூடூத் ஐ ஆன் பண்ணியே வச்சி இருக்க போல இருக்கு ... உன் நம்பர் என்கிட்ட இருக்கு இதானே ..." என்று காட்டி


"மெசேஜ் அனுப்புறேன் போ ..." என்றவனை அவள் ஆச்சரியமாக பார்க்க, அதே வேளையில் விஷ்ணுவின் பார்வையும் அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அளவு எடுத்தது.


மென்மையான லாவண்டர் நிற சல்வார் அணிந்து, முதுகு வரை இருக்கும் கட்டையான கூந்தலை குதிரைவாலிட்டு , ஒப்பனை ஏதுமில்லாமல் சிறிய லாவண்டர் நிற பொட்டில் ஜொலித்தவளிடம்


" ம்ம்ம்ம், முன்ன விட கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் அம்சமா தான் டி இருக்க ...." என அவளுக்கு மட்டும் கேட்குமளவுக்கு
அவன் கிசுகிசுக்க, அவனது பேச்சு புரியாமல்


" என்ன சொன்னிங்கோ..."


" ஒன்னும் இல்ல... அப்புறம் சொல்றேன்..." என்றவனிடம்


" நீங்க போலீசா ..." என ஆர்வத்துடன் அவள் கேள்வி எழுப்ப , அதற்கு சன்னமாக


" உன் புருஷன் ..." என்றான் கண்கள் சிமிட்டி.


பிறகு அங்கு வந்த ஏட்டையா ஸ்ரீயிடம் வண்டியை பற்றிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கும் போது, யாதவ் விஷ்ணுவிடம்


" ஓ கோன் ஹ ..." என ஹிந்தியில் ஸ்ரீயை பற்றி விசாரிக்க


" வோ, மேரீ பத்தினி பண்ணே ஜா ரஹி ஹ.. மிஸ்ஸஸ் விஷ்ணு நாராயண்..."( எனக்கு மனைவியாக போகிறவள்...) என சிலாகித்து
கூறியவனை அர்ஜுன் ஆச்சரியமாக பார்க்க


வழக்கம் போல் மராட்டிக்கு மாறிய யாதவ்,


" உள்துறை உளவுத்துறை எல்லாம் அவங்களை பேட்டி எடுக்கும் போதே நினைச்சேன் சார்... பெரிய ஆளா தான் இருப்பாங்கன்னு ... இப்பவே போய் ஆர்டிஓ ஆபீஸ்ல இருக்கிற எல்லா ரெட் கலர் ஹோண்டா ஆக்டிவாவையும் எடுத்துகிட்டு வர சொல்றேன் சார் ...
பாபியோட வண்டி எதுன்னு பார்த்து அவங்களே எடுத்துக்கிடட்டும்... "


" அதெல்லாம் வேணாம் யாதவ் ... அவளோட வண்டியை மட்டும் எடுத்துக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல வைங்க ... மத்ததை அப்புறம் பாத்துக்கலாம் ... அப்புறம் ஒரு ஆட்டோவை கூப்பிட சொல்லுங்க..."


" கவலையே படாதீங்க சார்... நமக்கு தெரிஞ்ச ஆட்டோகாரர் இருக்காரு ...அவரோட வண்டியில பாபியை அனுப்பிட்டு, அவங்க பின்னாடியே போய் அவங்க வீட்டுக்குள்ள நுழையற வரைக்கும் நானே ஃபாலோ பண்ணிடறேன் ..."


" பார்த்து... அவங்க அப்பா ஒரு மாதிரி யாதவ் ..." என்று முன்னெச்சரிக்கை செய்தவன், ஸ்ரீயை சைகையால் அழைத்து


" என்னா... ஆட்டோ பிடிச்சு கொடுத்தா சரியா வீடு போய் சேர்ந்திடுவியா..."


" ம்ம்ம்ம்..."


"உனக்கு மராட்டி தெரியாது ஓகே...ஹிந்தி பேசுவ இல்ல ..."


" ம்ம்ம்... இத்தனை நாள் துபாய்ல இருந்திருக்கேனே...." என பெருமிதத்தோடு கூறியவளைப் பார்த்து


" அதான் தப்ப தப்பா பேசறீயா..." என்றவனை அவள் முறைக்க


" நான் சொல்லலம்மா... என்னை முறைக்காத.... இந்த இன்ஸ்பெக்டர் தான் சொன்னாரு.. நீ சரியா பேசலன்னு..." என யாதவை அவன் கோர்த்து விட,


" பாபி ஏன் என்னை முறைக்கிறாங்க..."


" உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லிகிட்டு இருக்கேன் யாதவ்.. அதான்... சரி நீ கிளம்பு..." என்றவனுக்கு அவளை அவள் வீட்டிற்கு அனுப்ப மனமே இல்லை ...
இப்படியே அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாமா என்ற எண்ணம் தலை தூக்கிய நிலையில்,


இப்ப வேணாம் ... அதுக்குன்னு நேரம் வரும்... எனத் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவன்


ஆட்டோவில் அமர்ந்தபடி வெளியே தலை நீட்டி, ஆர்வத்துடன் பார்த்தவளை பார்த்து கையசைத்து வழியனுப்ப, அப்போது அவன் முதுகில் அர்ஜுன் ஓங்கி ஒரு அடி வைத்தபடி,


" யாருடா அது ....மாமி மாதிரி இருக்கு..."


" மாமியே தான் ..."


" உன்னை மாதிரி க்ராஸா(cross)... "


" ம்ச்... இல்ல ...அக்மார்க் அக்ரஹாரம்...."
என்றவனிடம் நினைவு வந்தவனாய் ,


" டேய், உள்ள இருக்கிற அந்த மூஞ்சி தீவிரவாதி இல்ல.. இந்த மூஞ்சி(ஸ்ரீ யை காட்டி) தீவிரவாதியா உனக்கு ..." என்றவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரிக்க,


" ஆழாக்கு அமுல் வெண்ணையை அப்பன மாதிரி ஒரு மூஞ்சி ....இது உனக்கு தீவிரவாதி ...உனக்கே ஓவரா இல்ல ...ஆமா... இவளையா கல்யாணம் பண்ண போற ... சைல்ட் மேரேஜ்ன்னு சொல்லி உன்னை போக்சோ சட்டத்துல அரெஸ்ட் பண்ணிட போறாங்க டா...." என மேலும் வாரியவனை பார்த்து விஷ்ணு குலுங்கி சிரித்தபடி


" அது ஒரு பெரிய கதை அப்புறம் சொல்றேன் சீனியர் ... அந்தேரில தான இருக்கீங்க ... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு ஒரு நாள் என் வீட்டுக்கு வாங்களேன்...
என் வீட்டுல நான், எங்க அம்மா, அப்பா தான் ... அக்காவுக்கு கல்யாணம் ஆகி அமெரிக்கால இருக்கா... அவளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ...உங்க வீட்ல யாரெல்லாம் இருக்காங்க ..." என்றவனின் கேள்வி நீண்ட கொடிய நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனின் முகத்தை இருட்டு அடைய செய்ய,
உடனே அதை மறைக்க முயலும் போது, அவனது கைபேசி சிணுங்கியது.


" ஒரு நிமிஷம் விஷ்ணு ...அப்பா கூப்பிடுறாரு..." என்றவன் கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தூரம் நடந்தபடி அதனை காதுக்கு கொடுக்க,


" எப்படிப்பா இருக்க ராஜா ..."


" நல்லா இருக்கேன் பா ... நீங்க எப்படி இருக்கீங்க ...."


" ம்ம்ம்... ஏதோ இருக்கேன் ... " என்று பெருமூச்சு விட்டவர்,


" ராஜா, நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பியா..." என்றவரின் கேள்வியிலேயே அவர் பேசப் போகும் விஷயத்தை அனுமானித்தவன், ஒருவித விரக்தி மனோநிலையில்


" சொல்லுங்கப்பா ... " என்றான்.


" இப்ப நான் காசில இருக்கேன்.... காலமான கோகிலாக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிச்சாச்சு ... முக்கியமான ட்ரெய்னிங்ல இருந்ததால கோகிலா சாவுக்கு உன்னாலயும் வர முடியாம போயிடுச்சு ... சரி விடு... இப்ப அக்னியும் அஷ்வத்தும் என் கூட தான் இருக்காங்க... நேத்து ராத்திரி தான் அக்னி கிட்ட பேசினேன்... அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா ... நீ என்னப்பா சொல்ற ....
எவ்ளோ நாள் தான் இப்படி தனியா இருப்ப..." என்றவரின் பேச்சு,
ஏனோ அவன் மனதில் நீண்ட நாட்களுக்கு பிறகு மெல்லிய மாருதத்தை வீச, ஓரிரு நொடி அமைதி காத்தவன்,


" சரிப்பா, கல்யாணம் பண்ணிக்கிறேன் ... " என்று மென்மையாக சொன்னவன், திடீரென ஆக்ரோஷத்துடன்


" இரக்கமே இல்லாம ரெண்டு கொலை செஞ்ச அந்த கொலைகாரி என் கல்யாணத்துக்கு வரக்கூடாது ... இதான் என்னோட ஒரே கண்டிஷன் ..." என்ற மைந்தனின் திடீர் பேச்சு, அவர் மனதில் பழைய நினைவுகளை தூண்ட,


" சரிப்பா, நிச்சயமா வரமாட்டா... அடுத்த வாரமே சிம்பிளா நம்ம கொடைக்கானல் எஸ்டேட்ல கல்யாணத்த வச்சிக்கலாம் ..." என்றவரிடம் தன் சம்மதத்தை உறுதிப் படுத்தி விட்டு விஷ்ணுவிடம் வந்தவன்,


" என்ன கேட்டுக்கிட்டு இருந்த விஷ்ணு ..."


" உங்க வீட்ல யார் யாரெல்லாம் இருக்காங்க.. ஒருநாள் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டு இருந்தேன்..."


" நிச்சயமா என் குடும்பத்தோட வரேன்,
என் வீட்டுல
நான், என் வைஃப்(wife) அக்னி, என் பையன் அஷ்வத் மூணு பேரு தான் ...." என்றான் அர்ஜுன்.


தகிப்பாள்Dear readers ,


இந்த தளம் எனக்கு மிகவும் புதிது.
இந்தக் கதையைப் பற்றி ஒரு சின்ன புரோலாக் கொடுத்துள்ளேன்.
Actually preface எழுதி இருக்கணும் ..
Since the story started already...வேற வழியில்லாம கடைசியா புரோலாக்கை இணைத்துள்ளேன்.


Prologue:


அக்னி-ஸ்ரீ இரு கதாநாயகிகள் கதை.


கதாநாயகர்கள் அர்ஜுன் கிருஷ்ணா, விஷ்ணு நாராயண்.


கதைகளம் : மும்பை


கதாநாயகி அக்னி பெயருக்கேற்றார் போல் தகிப்பவள், மற்றொரு கதாநாயகி ஸ்ரீலக்ஷ்மி நிலவைப் போல் குளிர்ச்சியானவள்....


நாயகி அக்னி - க்ரைம் லேபரட்டரி அனலிஸ்ட் ( பாரன்சிக் டிபார்ட்மென்ட் )
(Forensic department -தடவியல்)


நாயகி ஸ்ரீ - கல்லூரி மாணவி
( கார்மெண்ட் டெக்னாலஜி)


ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் மும்பையில் தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்க , அதை அறிந்த இரு நாயகர்களும் அதனை எப்படி முறியடிக்கின்றனர் என்பதே முழு கதை.
கதை IB( இந்திய உள்நாட்டு உளவு பிரிவு) RAW Agent( இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவு) ,IPS அதிகாரிகளைப் பற்றியது.


கதையோடு துறை சார்ந்த பல தகவல்களை ஆங்காங்கே துணுக்குகளாக(Snippets) கொடுத்திருக்கிறேன்.


I hope deep readers would love this story...


Its a complete political thriller ...


உடனே அரசியல்ல விருப்பமில்லாதவங்க முகம் சுளிக்க வேண்டாம் .....
வழக்கம் போல என் கதைல இருக்கிற எல்லா விஷயங்களும் இதுலயும் இருக்கு .


அழகான குடும்பம், அன்யோன்யமான காதல், ஆத்மார்த்தமான நட்பு, ஆன்மீகம், மனோதத்துவம் , அறிவியல், ஹாஸ்யம் இவை அனைத்துடன் கொஞ்சம் தூக்கலாக அரசியல் நெடி...


சொல்ல மறந்துட்டேனே, இதுல அமானுஷ்யமும் இருக்கு.... (ஆமாங்க பேய்தான் ...?)


கதைக்களம் மும்பையில் நடந்தாலும் 2 கதாநாயகர்களுக்கும் பெரிய பெரிய பிளாஷ்பேக் ...


கிட்டத்தட்ட பத்து, பத்து எபிசோட் ஃபிளாஷ்பேக் ....


ஸ்ரீவில்லிபுத்தூர்( தமிழ்நாடு), நார்த் பர்கானா ( மேற்கு வங்கம்) நாசிக் (மகாராஷ்டிரா) போன்ற இடங்களில் கதை பயணிக்கிறது.


கதை பிளாஷ்பேக் பாதி 80களில் நடக்கிறது, பாதி 2016ல் நடக்கிறது.


கதை போன வருடம் 2020 லாக் டவுனுக்கு பிறகு தொடங்குகிறது....
அதாவது போன வருடம் அக்டோபர் கடைசியிலிருந்த ஊரடங்கு தளர்விற்கு பிறகு (Unlock 5.0) கதை தொடங்குகிறது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் ஊரடங்கை அடிப்படையாகக் கொண்டது.


கதைக்கு தேவையில்லை என்பதால் கொரோனா இரண்டாவது அலையை
நான் கதையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


ஏற்கனவே பிரதிலிபியில் இந்த கதையின் முதல் ரெண்டு எபிசோடை பதிவேற்றி விட்டேன் ..இப்பொழுது நறுமுகையிலும் பதிவேற்றி இருக்கிறேன்.


ஒவ்வொரு வாரமும் ஞாயிறு (இன்றிலிருந்து) மற்றும் புதன் இரவு 10 to 10:45க்குள் அத்தியாயங்களை பதிவேற்றி விட்டு திரிகளை பகிர்கிறேன் நட்புகளே ..


ஒவ்வொரு எபிசோடும் குறைந்தபட்சம் 10 நிமிடம் , அதிகபட்சம் 20 நிமிடம் இருக்கும் .


இருபது நிமிஷம் கொண்ட முழு எபிசோட்ல
உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் அதோட ஒரு எதிர்பார்ப்போட முடிக்கும் போது அடுத்து வரும் அத்தியாயத்தை படிக்கும் ஆவல் அதிகமாக இருக்கும் தோழமைகளே... அதனால் தான்.

உங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் தோழமைகளே ..
கீழ்க்கண்ட லிங்கில் உங்களது கமெண்டுகளை பதிவுசெய்யவும்.

Thread 'அக்னி-ஸ்ரீ - கருத்து திரி' https://narumugai.ink/index.php?threads/அக்னி-ஸ்ரீ-கருத்து-திரி.98/
Thanks to jaanu and prasha for giving me the opportunity.
Happy reading


ப்ரியமுடன்


ப்ரியா ஜெகன்நாதன்
 
Last edited:
அத்தியாயம்-2


இடம்: காசி


பனிப்பொழியும் இரவில், ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றிருந்த அக்னிக்கு, அவள் அணிந்திருந்த ஜெர்கின், டீ-ஷர்ட் ,
ஜீன்ஸை தாண்டி குளிர் அவளது உடலை அணுவணுவாக துளைத்தெடுக்க, அதனை உணர்ந்தும் உணரா மனநிலையில்,
சற்று தொலைவில் பரந்து விரிந்து பயணித்துக்கொண்டிருந்த கங்கை நதியின் மேல் அவளது பார்வை நிலைத்திருந்தாலும், மனமோ எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி துடித்துக்கொண்டிருந்தது.


" அக்னி ..." என்று வாஞ்சையாக அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா அழைக்க, சுயம் உணர்ந்து மெல்ல திரும்பியவளை பார்த்து


" ரொம்ப நேரம் பனில நிக்காத.. உடம்புக்கு ஒத்துக்காதும்மா... காலைல ராஜா கிட்ட பேசினேன் ... கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்...
அடுத்த வாரமே உனக்கும் அவனுக்கும் நம்ம கொடைக்கானல் எஸ்டேட்ல கல்யாணம்....ஆனா உன்னோட
வேலைம்மா.... " என பேச்சை அரைகுறையாக முடித்துவிட்டு , ஒருவித தயக்கத்துடன் நோக்கியவரிடம்


" மாமா, நான் ஏற்கனவே என்னோட டெல்லி வேலைய ரிசைன் பண்ணிட்டேன்... " என்றவள் மீது ரகு கிருஷ்ணா புரியாத பார்வை ஒன்றை வீசி வைத்தார், காரணம் அக்னி விரும்பிப் படித்த படிப்பு பாரன்சிக் சயின்ஸ் (forensic science - தடவியல்).


அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்தமான கிரைம் லேபரட்டரி அனலிஸ்ட்டாக தில்லியில் உள்ள ரீஜினல் பாரன்சிக் லேபில் பணிபுரிந்து வருகிறாள், அந்தப் பணியை அவள் ராஜினாமா செய்ததாக சொன்னது தான் அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது.


" ரொம்ப சந்தோஷம்மா... உங்க டெல்லி வீட்டை அப்படியே வாடகைக்கு விட்டுட்டு கல்யாணம் முடிஞ்ச கையோட, நீ ராஜாவோட மும்பையில செட்டில் ஆயிடு... இனிமேலாவது அந்த கடவுள் உன் வாழ்க்கையில நிம்மதியை கொடுக்கட்டும் ... அஷ்வத் தூங்கிட்டான் ...
நீயும் போய் தூங்கு ம்மா..." என்றவரிடம் விடைபெற்று கொண்டு தன் அறைக்கு வந்தவள், உறங்கிக்கொண்டிருந்த தன் நான்கு வயது மகனின் தலையை கோதியபடி, நேற்றிரவு இதே நேரத்தில்
நடந்த நிகழ்வினை மனதில் ஓட்டிப் பார்த்தாள்.


அனுமன் கட்டில் (Hanuman ghat), பௌர்ணமி இரவு ஒளியில் குளிர்ந்த காற்றில், குழந்தை அஷ்வத்தை தன் மார்போடு அணைத்தபடி, கங்கை நதியின் அருகே இருந்த திட்டின் மேல் அமர்ந்துக்கொண்டு , சற்று தொலைவில் தெரிந்த ஹரிஷ்சந்திர கட்டில்(Harish chandra ghat) பிணம் எரிந்து கொண்டிருப்பதை விழிகளில் வழியும் நீரோடு நோக்கிக்கொண்டிருந்தவளின் மனதில்,


குழந்தை வேணாம், குழந்தை வேணாம்னு எதுக்காக சொன்னீங்கன்னா இப்பதான் புரியுது அஜய் ... அஷ்வத் மட்டும் இல்லன்னா நானும் உங்க கூடவே வந்திருப்பேன் ...
இப்படித் தன்னந்தனியா குழந்தையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது ...


இத்தனை நாளா எப்படியோ கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிட்டேன்... ஆனா இனிமே என்னால ஓடி ஒளிஞ்சு, குழந்தையை
காப்பாத்திகிட்டு என்னையும் காப்பாத்திக்க முடியும்னு தோணல அஜய்...


ஒரு சமயம் நானும் அஷ்வத்தும் உங்க கிட்டயே வந்துடனும்னு தோணுது... ஆனா உங்களை போலவே நிறம், குணம் , முகவெட்டோட இருக்கிற குழந்தையை கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு தைரியம் வரல ...அவனை இந்த உலகத்துல தன்னந்தனியா விட்டுட்டு சுயநலமா தற்கொலை பண்ணிக்கவும் மனசு வரமாட்டேங்குது ...


ப்ளீஸ் அஜய் ...ஏதாவது பண்ணி எங்க ரெண்டு பேரையும் உங்க கிட்டயே கூப்பிட்டுகோங்க...எனக்கு வாழவே பிடிக்கல ... என்றெண்ணியபடி, விழிகளில் கண்ணீர் மல்க உள்ளுக்குள் ஓங்காரமாய் அழுது கொண்டிருந்தவள், சற்று தொலைவிலிருந்து வரும் சப்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்க்க,


அங்கு சில சாதுக்கள் மற்றும் அகோரிகள், குளிரைப் போக்க நெருப்பை மூட்டி விட்டு அதை சுற்றி
ஏதேதோ பேசி, பாடிய படி நடனமாடிக் கொண்டிருந்தனர் .


அவர்கள் உடலில், இடையில் தரித்திருக்கும் ஒரே ஒரு வஸ்திரத்தை தவிர, தலை முதல் உள்ளங்கால் வரை சாம்பல் பூசப்பட்ட நிலையில், பின்னிப்பிணைந்த பாம்புகளைப் போல் இடையை தாண்டும் ஜடா முடி, கழுத்தில் நீண்ட கபால மாலை அணிந்தபடி
அவர்கள் எழுப்பும் அமானுஷ்ய சப்தங்கள், அவள் மனதில் ஒருவித கலக்கத்தை தோற்றுவிக்க,


இருந்தும் அவ்விடத்தை விட்டு நகர மனமில்லாமல் , அவர்களையே அவள் உற்றுநோக்கி கொண்டிருந்த போது ,அதிலிருந்த ஒரு சாது ஏதோ வேகமாக ஹிந்தியில் மொழிந்த படி அவள் அருகில் வந்தவர், அவளை நெருங்கி


"தர்மனின் பத்தினியே... கனலின் மறுமொழியான திரௌபதியே... உனக்கு ஒரு உபாயம் கூறுகிறேன் ....கேள்...


காண்டீபத்தை கையிலேந்தும் வில்லாளனின் நாமத்தோடு , கீதையைச் உபதேசம் செய்தவனின் நாமமும் கொண்ட ஒருவனால் மட்டுமே உன்னையும் உன் குழந்தையையும் காக்க முடியும் ...


ஓடு... அவனிடம் ஓடு ... சற்றும் தாமதிக்காதே...அவன் ஒருவனால் மட்டுமே, உன்னை சூழ்ந்துள்ள சூழ்ச்சியிலிருந்து உன்னை காப்பாற்றிக் கரை சேர்க்க முடியும் ...


ஓடு... அவனிடம் ஓடு... நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கும் உன் குழந்தைக்கும் ஆபத்து ... உன் விதியை மாற்றும் வல்லமை படைத்தவன் அவன் ஒருவனே ... " என தூய தமிழில் கம்பீரத்தோடு உரைத்தவரின் குரல், அவளது கணவன் அஜய்யின் குரலாகவே அவளுக்கு ஒலித்தது.


அஜய், மராட்டிய மைந்தன் ... தமிழ் என்ற வார்த்தையை தவிர தமிழே அறியாதவன்... ஆனால் இந்த சாதுவின் குரலில் வெளிப்பட்டது 100% அவளது அஜய்யின் குரலே....என்றுணர்ந்து அதில் உறைந்து போயிருந்தவளின் முகத்தில் , அந்த சாது, தன் கழுத்தில் இருக்கும் பெரிய மண்டை ஓட்டில் இருந்த சாம்பலை எடுத்து வீசி,


" கிளம்பு சற்றும் தாமதிக்காதே.." என்று மீண்டும் அவளது அஜய்யின் குரலிலேயே பிளிறியவர், அதற்கு மேல் அங்கு நிற்காமல் கூத்தாடிய படியே, பிணம் எரிந்து கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்து, கடைசியில் புள்ளியாய் மறைந்து போனார்.


அதற்கு மேல் அங்கு அமர மனமில்லாமல், ஒன்றுமே புரியாமல், அந்த சாது கூறி சென்றதை மனதில் அசை போட்டபடி அருகிலிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தவளிடம், அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா,


" இத்தனை நாள் உன் அம்மா உனக்கு பாதுகாப்பா இருந்தா...இப்படி திடீர்னு ஹார்ட் அட்டாக்ல அவ இறந்து போவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல .. அவ இறந்து இன்னையோட ஒரு மாசம் ஆச்சு... உன் அம்மா உயிரோட இருக்கும் போதே ராஜாக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...ஆனா அதைப்பற்றி உன்கிட்டயோ, கோகிலா கிட்டயோ பேச வேண்டிய சூழ்நிலை அப்ப அமையல ... இப்ப கோகிலாவும் இல்ல ... இனிமே நீ குழந்தையோட தனியா இருக்கிறது சரி இல்ல ம்மா...எத்தனை நாளைக்கு தான் இப்படி தனியா இருப்ப ....நீ ஏம்மா ராஜாவை கல்யாணம் பண்ணிக்க கூடாது ..." என்றவரின் திடீர் கேள்வியில், ஏதோ புரிந்தவளாய், அவரை உற்று நோக்கி,


" என்ன சொன்னீங்க ... திரும்ப சொல்லுங்க..." என்றாள் புரிந்து கொள்ள முயன்று.


" நீ ஏன் என் மகன் அர்ஜுன் கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு கேட்கிறேன் .." என்றவரின் அழுத்தமான பேச்சு சற்று முன் ஒலித்த சாதுவின் வாய் மொழியோடு ஒத்துப்போவதை உணர்ந்து,


'அர்ஜுன் கிருஷ்ணா' என்ற பெயரை மீண்டும் ஒரு முறை மனதிற்குள் உதிர்த்து பார்த்து உறைந்து போனவள், ஓரிரு நிமிடம் ஆழ்ந்து சிந்தித்து விட்டு பிறகு
பெருமூச்சை எடுத்து மனதை சமன் செய்தபடி


அஜய், நான் இப்ப இருக்கிற நிலைமையில , நீங்க எனக்கு காட்டின வழியா இதை எடுத்துக்கிறேன்... என மானசீகமாக தன் கணவனிடம் கூறி முடித்தவள்


" சரி மாமா ... அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தா, ப்ளீஸ் கோ எ ஹெட் .."
என்றாள்.


அவள் ஏற்கனவே மும்பைக்கு செல்ல திட்டமிட்டு தான் டெல்லி பணியை ராஜினாமா செய்திருந்தாள்.
தற்போது அவளுக்கு டெல்லியில் வசிப்பது ஆபத்து என்றால் மும்பைக்கு குடிபெயர்தல் பேராபத்து என்றும் நன்கு அறிவாள் .


ஆனால் அவளைப் பொறுத்த மட்டில் வேறு வழியில்லை, வேறு போக்கிடம் இல்லை ... பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தவள், கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்திருந்தாள்.
ஆதலால் இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமே அவளுக்கு மிகவும் பரிச்சயம்.
அவளது நீண்ட நாள் கல்லூரி தோழி கீதா மும்பையில் பணிபுரிந்து வருகிறாள். அவளது அறிவுறுத்தலின் பேரில் தான் மும்பைக்கு குடிபெயர திட்டமிட்டிருந்தாள்.


தமிழ்நாடு அவளது பூர்வீகம் என்றாலும், அவளை அங்கு அழைத்து ஆதரிக்க யாரும் இல்லை என்று தான் இத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தாள், சொல்லப் போனால் அவள் தாய் தந்தை இருந்த போதே இவ்வாறுதான் நினைத்து கொண்டிருந்தாள்.


அவளது தாயின் பிறந்த ஊர் மற்றும் தாய் மாமன் வசிக்கும் கொடைக்கானலுக்கு சிறுவயது முதல் வருடத்திற்கு ஒருமுறையாவது மூன்று நான்கு நாட்கள் சென்று தங்கியிருந்து விட்டு வருவது வழக்கம். கடந்த சில வருடங்களாக, தாய் மாமனோடு தொலைபேசி தொடர்பு மட்டும்தான், அதுவும் தேவை ஏற்பட்டால் தான்.


ஏற்கனவே தந்தை மற்றும் கணவரை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு போன மாதம் தாயும் இறந்துவிட நிராதரவாக நின்றவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது அவளது தாய்மாமன் ரகு கிருஷ்ணா தான்.


அவர் தற்போது மும்பையில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருக்கும் தனது மகன் அர்ஜுன் கிருஷ்ணாவை
மணந்து கொள்ள கேட்க, அவளையும் அவளது குழந்தையையும் காத்துக் கொள்ள ஒரே வழி, அவன் தான் என முடிவெடுத்து அதற்கு சம்மதம் தெரிவித்தாள் அக்னி.


**************************************
இடம்: அந்தேரி, மும்பை


இரவு வீடு திரும்பிய அர்ஜுனுக்கு , மனம் ஒரு நிலையில் இல்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவனுக்கு தற்போது நடக்கவிருக்கும் அக்னி உடனான திருமணம் , அதனை மேலும் அதிகரித்திருக்க, ஏகப்பட்ட நினைவலைகள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றி அலைக்கழிக்க, அறையில் இருப்பு கொள்ளாமல் சற்று நேரம்,
மொட்டை மாடிக்கு சென்று குறுக்கு நெடுக்காக நடந்தவன், மனதை திசை திருப்ப என்னும் போது திடீர் யோசனை உதிக்க, உடனே யாதவை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டேஷனுக்கு வருமாறு பணித்தான்.


" யாதவ், அந்த டிரைவர் வேற ஏதாவது சொன்னானா ..." என்றான் அர்ஜுன் காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனில் மஃப்டி உடையில்.


" இல்ல சார் ..." என்றவனை பின் தொடர்ந்து, அந்த ட்ரைவர் அடைபட்டிருக்கும் சிறையை அடைந்தவன்,


" யாதவ், இவன் கிட்ட நம்ம எல்லா கவர்மெண்ட் டேட்டா பேஸ்ல
இருக்கிற போட்டோஸை காட்டி அவன் பார்த்தா அந்த ரெண்டு பேர் அதுல இருக்காங்களான்னு அடையாளம் காட்ட சொல்லுங்க .... " என்றான் அந்த டிரைவரை பார்த்தபடி.


" சாப், அந்த ரெண்டு பேரும் மாஸ்க் போட்டிருந்தாங்க , அதனால நான் சரியா முகத்தை பாக்கல ...." என்றான் அந்த ட்ரைவர் அர்ஜுனிடம் நேரடியாக.


" ஓ காட் ...மறந்தே போயிட்டேன் ..
சரி, ஏர்போர்ட் மெயின் என்ட்ரன்ஸ்ல இருக்கிற சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை
பார்த்தா இவன் அவங்களை எங்க இறக்கி விட்டான், அவங்க எந்த பிளைட்ல போனாங்கன்னு ஒரு ஐடியா கிடைக்குமில்ல ..."


" சாப் , வழக்கமா எல்லாரும் கார் நிறுத்துற இடத்துல வேண்டாம்னு சொல்லிட்டு கொஞ்சம் தள்ளி வேற இடத்துல காரை நிறுத்த சொன்னாங்க சாப்..
அது மட்டும் இல்ல, கார்ல இருந்து இறங்கி அவங்க ஏர்போர்ட் உள்ளே போகாம, வேற ஒரு காரை நோக்கி போனாங்க சாப்..."


" அவங்க மாஸ்க் போட்டிருந்தாலும் வேற ஏதாவது அவங்ககிட்ட வித்தியாசமா , உனக்கு தெரிஞ்சதா..." என்ற அர்ஜுனின் கேள்விக்கு ஓரிரு நிமிடம் யோசித்தவன்,


" சாப், அதுல வயசான மாதிரி இருந்த
அந்த ஆளோட கண்ணு முழி பச்சையும் நீலமும் கலந்த மாதிரி வித்தியாசமா இருந்தது, இடது கண்ணு புருவம்னு நினைக்கிறேன்.... அதுல பாதி புருவம் இல்ல சாப் ....


அப்புறம், அந்த யங்கான ஆளோட (young) முகத்தை பார்க்கவே முடியல... ஆனா அந்த ஆளோட மணிக்கட்டுக்கு கீழ 'ஓம்'னு கருப்பு நிறத்துல ஹிந்தில பச்சை குத்தி இருந்தது..."


" வாட் ... பாக்கிஸ்தான் காரன் எதுக்காக ஓம்னு பச்சை குத்திக்கணும்... அதுவும் கைல... நல்லா பாத்தியா அது
'ஓம்' சிம்பள் தானா..."


" ஆமா சாப், அந்தாள் குனிஞ்சு லக்கேஜ் எடுக்கும் போது அவன் போட்டிருந்த வெள்ளை குர்தாவை மடிச்சு விட்டான் ... அப்ப தான் பார்த்தேன் ..."
என்பதைக் கேட்டு ஒன்றுமே புரியாமல் திணறியவன் ,


" யாதவ், ஃபிளைட் டீடைல்ஸ் எல்லாம் கிடைச்சுதா ..."


" கிடைச்சது சார் ..."


" குட், கோவிட் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கிறதால டொமஸ்டிக் அண்ட் இன்டர்நேஷனல்க்கு மினிமம் பிளைட்ஸ் தான்
ஆப்பரேட் பண்ணியிருப்பாங்க ... அதுமட்டுமில்ல அங்கங்க கோவிட் செக்கப் நடந்திருக்கும் ... கண்டைன்மெண்ட் சோன்ல(containment zone) இருந்து வந்திருக்காங்களான்னு செக் பண்ணி பேசஞ்சரோட அட்ரஸ் டீடைல்ஸ் வாங்கியிருப்பாங்க... சோ அவங்க ட்ராவல் பண்ணி இருந்தா நிச்சயமா சிசிடிவி புடேஜ்ல எங்கேயாவது ஒரு இடத்துலயாவது மாட்டுவாங்க..." என்ற அர்ஜுனின் பேச்சுக்கு பதிலேதும் கூறாமல் யாதவ் அமைதி காக்க ,


" என்ன யாதவ், ஒரு மாதிரி இருக்கீங்க ..."


" அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சார் ... அவங்க ரெண்டு பேரும் ட்ராவல் பண்ணி இருந்தா நிச்சயமா மாட்டு வாங்கன்னு ... நாங்க மொத்த பிளைட் டீடெயில்ஸ் , சிசிடிவி புட்டேஜஸ் எல்லாத்தையும் இவனோட(டிரைவரை காட்டி ) சேர்ந்து பார்த்தாச்சு சார்... அவங்க கிடைக்கல ... சோ நீங்க சொன்ன மாதிரி அவங்க டிராவல் பண்ணல...."


" ஆர் யூ ஷ்யூர்.... அப்ப இவன் சொன்னதும் சரிதான்... அவங்க ஏர்போர்ட்க்குள்ள போகாமலே வெளிய போயிட்டு இருக்காங்க ...சோ வீ ஹவ் டு மேக் எ சிட்டி வைடு அல்ர்ட் ..."


" நிச்சயமா மும்பையை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டாங்கன்னு நம்பறீங்களா சார் ..."


" நேத்திக்கு போகல அது மட்டும் உண்மை ... ஏர்போர்ட்டுக்கு கிளம்பி வந்திருக்காங்க கடைசி நேரத்துல பிளான் மாறியிருக்கு அதனால ஏர்போர்ட்குள்ள போகாமலே திரும்பி போயிட்டீருக்காங்க .... ஒரு வேளை
இன்னைக்கு போயிருக்கலாம் ... அடுத்த வாரம் போகலாம் ... இல்ல சிட்டிலயே இருக்கலாம் ..."
என்றவன்
தன் அடர்ந்த கேசத்தை அழுந்த கோதியபடி , ஓரிரு நொடி சிந்தித்து விட்டு


" யாதவ், ஏர்போர்ட் எக்ஸிட் கேட்(exit gate) ஃபுட்டேஜை செக் பண்ண சொல்லுங்க ... ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்குதான்னு பார்ப்போம் ... அதோட
பாரன்சிக் ஆர்டிஸ்ட்டை கூப்பிட்டு இவனை அடையாளம் சொல்ல சொல்லி அந்த ஆளோட கண்ணை வரைய செல்லுங்க... அந்த கண்ணு நம்ம கவர்மெண்ட் டேட்டாபேஸ்ல இருக்கிறவங்களோட மேட்ச் ஆகுதான்னு பார்க்கணும்... அதுல கூட சில சிக்கல் இருக்கதான் செய்யுது ... பார்க்கலாம்... " என பெருமூச்சு விட்டவனிடம்


" எஸ் சார்..." என்று யாதவ்
பதில் அளித்ததும், வீட்டிற்கு போகவே பிடிக்காமல் வேறு வழியின்றி வீட்டை நோக்கிப் பயணமானான் அர்ஜுன்.


****************************************


இடம்: செம்பூர் ,மும்பை


" ஏன்டா விஷ்ணு, அதான் சாப்பிட்டு முடிச்சிட்டயோல்யோ... எதுக்காக விட்டத்தை வெறிச்சிண்டு இருக்க....நேரமாற்துடா நான் போய் தூங்கணும் ...


நீ சாப்பிட்டு முடிச்ச தட்டை உன் ஆம்டியாளா (மனைவி) வந்தெடுப்பா... நீதான் எடுக்கணும் ...." என்று வேதா பேசிக்கொண்டே உணவு மேஜையின் மேல் இருக்கும் பாத்திரங்களை முறைப் படுத்த, ஏற்கனவே தன் காதல் தேவதை ஸ்ரீயை பற்றிய எண்ணத்தில் மூழ்கி இருந்தவன் , தற்போது தன் தாய் கூறிய வார்த்தையில், மதிமயங்கி


ஸ்ரீயின் பிம்பம் அவன் அருகே நின்று உணவு பரிமாறுவது போல், காட்சிகள் விரிய, தனக்குத்தானே புன்னகை பூத்துக் கொண்டிருந்தவனை பார்த்து


" டேய் விஷ்ணு.... பேசுடா ... ஏன்டா மந்திரிச்சு விட்டா மாதிரி இருக்க...." என்று வேதா அவனை உலுக்கிய போது தான் சுற்றம் தெளிந்தவன்,


" அம்மா, உங்க கிட்ட நான் எதையும் இதுவரைக்கும் மறைச்சதே இல்ல... இன்னிக்கு ஸ்ரீயை பார்த்தே ம்மா..."


" யாரு... ஸ்ரீ ..."


" ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கநாதன் ..."


" வாவ் ...என் அண்ணன் பொண்ணு
ஸ்ரீயையா சொல்ற ... டேய் டேய் ரங்கு எப்படிடா இருக்கான் .... சுமித்ரா மன்னி நன்னா இருக்காளா ... அவா துபாயில இல்ல இருந்தா... எப்ப மும்பை வந்தா... இங்க எங்க இருக்கா ..." என ஆர்வமிகுதியில் வேதா கேள்விகளை அடுக்க


" வண்டியை தொலைச்சிட்டேன்னு காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து நின்னா ஸ்ரீ ... மத்தபடி அந்த அரை மண்டையனையோ, உங்க வீட்டு ஆளுங்களையோ நான் பார்க்கவே இல்ல... மும்பை வந்து ஒரு வருஷம் ஆச்சாம்..."


"ஏன்டா எல்லாரையும் வயசு வித்தியாசம் பார்க்காம சகட்டுமேனிக்கு வைய்யற.... "


"உங்க வீட்டு ஆளுங்கன்ன உடனே , பாசம் பொத்துக்கிட்டு வருதோ ... அந்தாள் என் அப்பாவை என்னைக்காவது மதிச்சிருக்கானா ..."

"அது பெரியவாகுள்ள நடக்கிற கோல்டு வார் (Cold war) அதை பத்தி நோக்கு என்ன... மறந்துடாத, ஸ்ரீயும் எங்காத்து ஆளு தான் ... "


"அதுக்காக தான் அவளை நம்ம வீட்டு ஆளா மாத்தணும்னு முடிவு பண்ணியிருக்கேன் ... நீங்க என்ன பண்றீங்க ... அப்பா வந்ததும் ஸ்ரீ வீட்டுக்கு போய் பேசறீங்க ... " என்றவனை மென்மையாக பார்த்து


" இன்னும் நீ ஸ்ரீயை மறக்கலையா ..." என்றார் சிறிய கலக்கத்தோடு.


" எப்படிம்மா மறக்க முடியும் ... அவ என் பொண்டாட்டி ம்மா ...." என்றான் உணர்ச்சிமிக்க குரலில்.


" டேய், ரங்கு ஒத்துக்க மாட்டான் டா.... உனக்கே தெரியும், ஏற்கனவே எல்லாம் முறையா நடந்தே பிரச்சனைல இருக்கு..."


"அப்ப வேற வழியே இல்ல... நான் என் பொண்டாட்டியை தூக்கறேன்..."


"இடியட் மாதிரி பேசாதடா... இன்டலிஜென்ஸ் ஆபிஸர் மாதிரி பேசு ... விஷ்ணு நான் சொல்றத கேளு ... முதல்ல இந்த வேலையை விட்டுடு... இவ்ளோ ரிஸ்க்கியான ஜாப் தேவையே இல்லடா...ஒவ்வொரு நாளும் உன் அப்பா ஆத்துக்கு வந்து சேர்றதுக்குள்ள நான் பயந்த பயம் நேக்கு தான் தெரியும் ... இதை நான் மட்டும் சொல்லல , உன் அக்கா அத்திம்பேர் எல்லாரும் தான் சொல்றா..."


" அந்தாள் பேச்சுக்கெல்லாம் மரியாதை கொடுக்கணும்னு அவசியம் இல்ல..."


" ஓங்கி அறைஞ்சேன்னா பாரு ... நம் ஆத்துக்கு ஒரே மாப்பிள்ள ... தங்கமான மனுஷன் ...அவரை இப்படி எல்லாம் பேசாதே ... அவர் உன் நல்லதுக்கு தான் சொல்றேர்... ஒழுங்கா அவரை அத்திம்பேர்ன்னு சொல்லு..."


"ஐயோ ...அம்மா, போலீஸ், ராணுவம், எங்களை மாதிரி ஐபி(IB) ரால(RAW) இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் சாவு வருதுன்னு சொல்லுங்க ...நான் வேலையை விட்டுடறேன்... மனச தொட்டு சொல்லுங்க, இந்த வேலைக்காகவா உங்க அண்ணன் அன்னைக்கு அப்படி பேசினாரு ..." என்று பார்வையை கூர்மையாக்கி விஷ்ணு கேட்க, அதற்கு பதில் கூற முடியாமல் திணறிய வேதா, பேச்சை மாற்றும் முயற்சியில்


" சரி அதவிடு ... ஸ்ரீ இப்ப பார்க்க எப்படி இருக்கா ...."


" ம்ம்ம்ம்....நீங்க, உங்க பொண்ணு வித்யா எல்லாம் அவ பக்கத்துல நிக்கவே முடியாது... அவ்ளோ அழகா இருக்கா..."


" உனக்கு மட்டும் தைரியம் இருந்தா இதை என் ஆத்துக்காரர் முன்னாடி சொல்லி பாரேன்டா..."


" நிச்சயமா சொல்றேன்... உங்க வூட்டுக்கார் வரட்டும் ..."


" அப்படி என்ன வண்டியை டா அவ தொலைச்சா ..."


" ஸ்கூட்டி ..."


" கிடைச்சுடுமாடா கண்ணா... "


" ம்ம்ம்ம், இப்ப வண்டி ஸ்டேஷன்ல தான் இருக்கு ..." என்றவன்


" கூடிய சீக்கிரம் ஸ்ரீ யை நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர தான் போறேன்... யார் தடுத்தாலும் இது நடந்தே தீரும்... இப்ப உங்க வூட்டுக்கார் கிட்ட பேசுவீங்க இல்ல ... சொல்லி வைங்க .... "


" என் ஆத்துக்காரர் கிட்ட நான் பேசுறதுக்கு ... ஏன் உன் கண்ணுல ஜலசி(Jealousy) தெரியர்து..."


" யாருக்கு ஜலசி... எனக்கு ஆள் இல்லன்னு நினைச்சீங்களா ... நானும் இப்ப என் ஸ்ரீ யோட பேச போறேன்..."
என தன் முடிவை மறைமுகமாக அதே சமயத்தில் தீர்க்கமாக கூறிவிட்டு தன் அறைக்கு சென்றான் விஷ்ணு .


விஷ்ணுவை நன்கு அறிவாள் வேதா.
ஒரு விஷயத்தை அவன் நினைத்து விட்டால், அது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இருந்தாலும் அடைந்தே தீருவான்.


மைந்தனின் முடிவை மனதில் அசை போட்டபடி, சற்றுநேரம் அமர்ந்திருந்தவர், பிறகு தன் காதல் கணவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைக்க,


முதல் அழைப்பிலேயே , இணைப்பை எடுத்த வெங்கடேஷ்,


" என்ன மாமி, வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னாடியே கால் பண்ணிட்ட.."


" உங்களிண்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னா ..."


" என்ன மாமி, ஏதாவது விசேஷமா..." என விஷமமாக கேட்டு எதிர்முனையில் பெருங்குரலெடுத்து அவர் சிரிக்க,


" ஐய்ய... எந்த வயசுல எதைப் பத்தி பேசுறீங்கோ ... உங்களுக்கு பித்து தான் பிடிச்சிருக்கு தேவரே...நமக்கு பேத்தி இருக்கா... நீங்க தாத்தா, நான் பாட்டி நினைவிற்கோல்யோ.." என்ற வேதாவின் பேச்சைக் கேட்டு மீண்டும் சிரித்தவர்,


" இல்ல மாமி, நீ விசேஷம்னு சொன்னவுடனே பழைய ஞாபகம் எல்லாம் நினைவுக்கு வந்துடுச்சு டி... உன்னை பார்த்தா பாட்டி மாதிரியே தெரியல... க்யூட்டி மாதிரி இருக்க ... எப்போ உன்னை முதன் முதல்ல பார்த்தேனோ, அப்ப ஏறின பித்து தான் இப்ப வரைக்கும் தெளியல... சொல்லப்போனா நீ விஷ்ணுவுக்கு அக்கா மாதிரி இருக்க..." என்றவரின் பேச்சில் இருந்த காதலை ரசித்த வேதா,


" ஏன் விஷ்ணுக்கு தங்கச்சின்னு சொல்லுங்களேன்.."


" சொல்லலாம் ... ஆனா விஷ்ணு அடிக்க வருவான் ..." என வழக்கமாக குறும்பு கூத்தாட பேசியவர்


" ஏம்மா டல்லா இருக்க ... மூட்டு வலி எப்படி இருக்கு .... நான் லாக் டவுன் முடிஞ்ச கையோட கிளம்பி வந்துட்டேன்... விஷ்ணு உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்றானா ...மெய்ட்ஸ்(maids) எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்களா.." என வழக்கம் போல் அக்கறையாக விசாரித்தவரிடம்


" இன்னைக்கு தான் அவா எல்லாம் வர ஆரம்பிச்சிருக்கா... இப்ப மூட்டுவலி எவ்ளோ பரவால்ல... விஷ்ணு தான் ஹோம் கிளீனிங்(home cleaning), வெசல் வாஷிங்(vessel washing) ஏன் தளிகைக்கு கூட ஹெல்ப் பண்ணினான் ... அவன் இல்லாம இவ்ளோ பெரிய ஆத்தை(வீடு) என்னால மெயின்டெயின் பண்ணி இருக்க முடியாதுன்னா..."


" அவ்ளோ செஞ்சானா அவன் ... நான் வீட்டுல இருக்கும் போது ஜிம்முல போய் 50 கிலோ வெயிட்டை தூக்குவான் வீட்டுல ஒரு ஸ்பூனை கூட தூக்க மாட்டானே... எப்படிம்மா செஞ்சான் ...."


" அதான் நீங்க நேக்கு ஹெல்ப் பண்றீங்கோ இல்ல... அதான் அவன் செய்யல...ஆனா உங்களை டெய்லி பார்க்கிறானோல்யோ... அதான் நீங்க இல்லாத அப்ப, அவன் ஹெல்ப் பண்றான் ..."


"ஓ.... இதுல இவ்ளோ பாலிடிக்ஸ் இருக்குதா ... நல்ல வேளை... சொன்னியே..
இல்லன்னா போனை போட்டு அவனை வாங்கு வாங்குன்னு வாங்கி இருப்பேன் ... உன்னை நம்பி என் பொண்டாட்டிய விட்டுட்டு போனா நீ நிறைய வேலை வாங்கி அவளைக் கஷ்டப்படுத்தி இருக்கேன்னு..."


" அவனை ஒன்னும் சொல்லாதீங்கோ.. குழந்தை நிறைய ஹெல்ப் பண்ணினான் ..."


" அவனுக்கு 28 வயசு ஆகுது இன்னும் நீ அவனை குழந்தைன்னு கொஞ்சிகிட்டு இருக்க ... கேட்க பொறாமையா இருக்கு ம்மா ..." என பெருமைப் பொங்க அவர் சிரிக்க,


" சரி உங்களையும் கொஞ்சிட்டா போச்சு ... எப்ப வரீங்கோன்னு சொல்லுங்கோ..."


" என்னம்மா எதை பத்தி பேசணும் .." என்றார் குரலில் தீவிரத்தை விதைத்து.


" அதான் ஐஜியா இருந்து ரிட்டயர்டு ஆயிட்டீங் கோ .... திரும்பவும் இந்த வேலை எல்லாம் எடுத்து செய்யனுமா ..."


" நான் ரிட்டையடு ஆனாலும் கவர்மெண்ட் என்னை கைவிடலையே மாசா மாசம் பென்ஷன் வாங்கறேனே...
என்னை மாதிரி ரிட்டையர் ஆன ஐஜி, டிஐஜின்னு , நாங்க கொஞ்சம் பேர் ப்ரஷ்ஷர்ஸ்க்கு ட்ரெய்னிங் (Freshers training) கொடுத்துக்கிட்டு இருக்கோம்... கூடிய சீக்கிரம் இந்த வேலை முடிஞ்சிடும்... இப்ப சொல்லு... என்ன பேசணும்மா ..."


" எல்லாம் உங்க பையன பத்தி தான் ..."


" அவனுக்கென்ன அவன் என்னை மாதிரியே நல்லவனாச்சே..." என்றார் மீண்டும் குறும்புடன் .


" நீங்க ஆத்துக்கு வாங்கோ தேவரே.. எல்லாத்தையும் சொல்றேன் ... " என்றவருக்கு
ஞாபகம் வர
" ஆமா வர்ஷாயிண்ட பேசினீங்களா..."


" ம்ம்ம், என் பேத்தியோட பேசாம இருப்பேனா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், வித்யா, மாப்பிள்ளை ,
வர்ஷா குட்டியோட பேசி முடிச்சேன் ..."


" அதான பார்த்தேன் ... யாருக்கு போன் பண்றீங்களா இல்லையோ உங்க பேத்திக்கு மட்டும் கரெக்டா போன் பண்ணி பேசிடுவீங்களே ..." என்ற மனையாளின் வாய்மொழியை கேட்டு சிரித்தவர்


" சரிம்மா ...இன்னும் 2 வாரத்துல முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் ... சீக்கிரமே வந்துடறேன் .. ஞாபகமா வெளில போகும் போது மாஸ்க் போட்டுக்கிட்டு போ... உன்னோட இம்யூனிட்டி லெவல் ரொம்ப லோ... சரியா .. டேக் கேர் ...குட் நைட் ஸ்வீட் ஹார்ட் ..." என்று அழைப்பை துண்டித்தவர், அவரது மொபைல் போனின் கேலரிக்கு சென்று
முதன் முதலாக அவரும் அவரது காதல் மனைவி வேதாவும் "கேட்வே ஆஃப் இந்தியாவில் " எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசித்துப் பார்த்த போது
80களின் பசுமை மாறா நினைவுகள்,
அவர் மனதில் மையம் கொள்ள, உடன் அவரது உயிர் நண்பன் அப்துலை பற்றிய நினைவும் வர, அவரது மனப் பறவை பின்னோக்கி பறக்க ஆரம்பித்தது ..


வேதாவும் சுவற்றில் மாட்டியிருந்த, அவர்களது மூத்த மகள்
வித்யாவின் திருமணத்தின் போது
எடுத்த குடும்ப புகைப்படத்தை ரசித்துப் பார்க்க,


அதில் சால்ட் அண்ட் பெப்பர் சிகையுடன் விஷ்ணுவிற்கு அண்ணன் போல் கம்பீரமாக காட்சி அளித்த வெங்கடேஷை லயித்து பார்த்தவரின் மனமும் பின்னோக்கி செல்ல,


தன் அறையில் இருந்த விஷ்ணுவும்,
தன் காதல் மனைவி ஸ்ரீயை சந்தித்த நாட்களை அசை போட்டு பார்க்க ஆரம்பித்தான்.


80களின் மத்தியில் வேதவல்லி ருத்ர நாராயணன்
ஐயங்காருக்கும், வெங்கடேஷ் வாசு தேவருக்கும் அவ்வளவு எளிதாக திருமணம் நடந்துவிடவில்லை..


அவர்களது திருமணம் சமூகத்தையே புரட்டிப்போட்ட கால கட்டம் அது .தகிப்பாள்

Over to srivilliputhur, Tamil Nadu


உங்களது கருத்துக்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன். மேற்கண்ட லிங்கில் உங்களது கருத்துக்களை பதிவிடவும்.

Thread 'அக்னி-ஸ்ரீ - கருத்து திரி' https://narumugai.ink/index.php?threads/அக்னி-ஸ்ரீ-கருத்து-திரி.98/
 
Last edited:
அத்தியாயம் 3

இடம் : வேதா நிவாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்


" அம்மா.... இப்ப தான் நான் ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டேனே.... இன்னிக்கு நான் தளிகை(சமையல்) பண்றேம்மா .." என்று தன் தாய் மரகதவல்லியிடம், வேதா கெஞ்சிக் கொண்டிருக்க,


"நீ தளிகை பண்ணினா, உன் அத்தையும் நானும் சாப்பிட மாட்டோம்னு நோக்கு தெரியுமில்ல ... எதுக்குடி காலையில படுத்தற... போ, காலேஜுக்கு கெளம்புற வழியை பாரு.. "

" பின்ன, எப்ப தாம்மா நான் தளிகை பண்ண கத்துகிறது..."

" முதல்ல நீ படிப்பை முடி ... அப்புறம் கல்யாணம் பண்ணிக்கோ ... அதுக்கப்புறம்
'சமாஸ்ரயணம்' பண்ணிக்கோ ... அப்புறம் நம்ம ஆத்துல நீ தளிகை பண்ணினா நாங்க எல்லாரும் சாப்பிடுவோம்...ச்சரியா ...உனக்கு நாழி ஆயிடுத்து... இப்ப காலேஜுக்கு கிளம்பு ... நேக்கு தளிகைக்கு ஹெல்ப் பண்ண பாக்கியம் மாமி வந்துவிடுவா..."

" கோடி ஆத்து பாக்கியம் மாமி தளிகை பண்ணினா சாப்பிடுவ... நான் பண்ணினா சாப்பிட மாட்ட ... கேட்டா இப்ப சொன்ன பதிலையே திருப்பி சொல்லுவ ... கொஞ்சம் கூட மாத்தி சொல்லவே மாட்டியா ம்மா..."

" ம்ஹூம்...." என்று இடவலமாக மரகதவல்லி தலையசைக்க, வேதா கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானாள்.

'வேதா நிவாஸ்' மூன்று அடுக்குகளைக் கொண்ட, கிட்டத்தட்ட ஒரு சிறிய அரண்மனை போல் கட்டப்பட்ட வீடு.

ஆச்சார, அனுஷ்டானங்களின் பிறப்பிடம் என்றே கூறலாம் . உருவத்தில் தன் தாயையே கொண்டு பிறந்த தன் அன்பு மகள், வேதாவின் பெயரை தன் இல்லத்திற்கு வைத்திருந்தார் நீதிபதி ருத்ர நாராயணன். இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வு பெறப் போகிறவர். திருக்குறளின் ரசிகன், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகப் பார்த்த தெய்வப் பெருமகனார் முத்துராமலிங்க தேவரின் சிஷ்யன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சுப்ரமணிய பாரதியாரின் ஆன்ம பக்தன்.

வீட்டில் ஆச்சாரத்தை கடைப்பிடித்தாலும்,
வெளியில் தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட, மாதத்திற்கு இரண்டு முறையாவது சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்ளுதல், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வழியில் அனைத்து சாதியினருக்கும் பூணூல் போடுதல், அனைவருக்கும் வேதங்களை பயிற்றுவித்தல், உண்மையான அறத்தை போதித்தல் என சாதி மத வேறுபாட்டை இச்சமுதாயத்தில் இருந்து களைய தன்னால் இயன்ற தேச சேவையை செய்து வருபவர்.

சுருங்கச்சொன்னால் வார்த்தை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் , நீதியையும் நேர்மையையும் தன் உயிர் மூச்சாகவே கருதி வாழும் ஒரு உன்னத மனிதர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு ஒரு செல்லம்மா என்றால், ருத்ர நாராயணனுக்கு மரகதவல்லி. ஊருக்கே ருத்ர முகம் காட்டி, குரலை உயர்த்தாமல், தன் கருத்துக்களில் தெளிவாகவும் திடமாகவும் இருக்கும் ருத்ர நாராயணன், தழைந்து போகும் ஒரே இடம் அவரது மனையாள் மரகதவல்லியிடம் தான்.

அதற்காக மரகதவல்லி கோபக்காரரோ, குண மற்றவரோ கிடையாது ... மிகுந்த சாந்த சுபாவம்,
குழந்தையைப் போன்ற வெள்ளை மனம், பெருந்தன்மை, அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பாங்கு , அதி விரைவில் அனைவரையும் நம்பி விடும் அவரது மென்மையான குணமும் தான் ருத்ர நாராயணனை கட்டி நிறுத்திய ஆயுதம்.

மரகதவல்லி, பெரும் பணக்காரர், பிரபல வக்கீல் சக்கரவர்த்தி ஐயங்காரின் ஒரே மகள்.

ருத்ர நாராயணன் சிறுவயதிலேயே தந்தையை இழந்த, மிகுந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் . இரண்டு ஏக்கர் நிலத்திலிருந்து வந்த சொற்ப வருமானத்தில் தன் தாய் மற்றும் தமக்கையோடு வசித்து வந்தவர்,
சக்கரவர்த்தி ஐயங்காரிடம் , ஜூனியராக பணியில் சேர்ந்தார்.

ருத்ர நாராயணனின் புத்திக்கூர்மை, அவரது அயராத உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், மாநிறமே என்றாலும் அவரது உயரம் வாட்டசாட்டமான உடலமைப்பு, தீட்சண்யமான கண்கள் , களையான முகவெட்டு என அனைத்திலும் அம்சமாக இருந்தவரை தன் ஒரே மகளுக்கு மணம் முடித்து மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டார் சக்கரவர்த்தி ஐயங்கார்.

என்ன தான் மரகதவல்லியின் அழகில் மயங்கி ருத்ர நாராயணன் அவரை மணந்து கொண்டாலும், இன்று வரை அவரை மண்டியிடச் செய்வது மரகதவல்லியிடம் இருந்த குழந்தை மனமும், வெள்ளந்தி குணமும் தான்.

சுருங்கச்சொன்னால் ருத்ர நாராயணனின் மனதில் மரகதவல்லி என்றும் தேவதை தான் , அவர் அழகினால் அல்ல, அவரது சுயநலமற்ற தூய்மையான அன்பினால்.


அவருக்கு ருத்ர நாராயணன் சூட்டியிருக்கும் செல்லப் பெயர் 'மட்டி மரகதம் ' ... அதை அவரும் அறிவார் ..அவர் அறியாததும் ஒன்று உண்டு ... அது ருத்ர நாராயணன் அவர் மீது வைத்திருக்கும் கட்டுக்கடங்காத நேசம் ... அனைவரையும் பார்வையிலேயே தள்ளி நிறுத்துபவரின் பார்வை, பணியும் ஒரே இடம், அவரிடம் தான் என்பது.


ருத்ர நாராயணனின் தமக்கை ஆனந்தவல்லி, அவரது கணவன் சாரங்கன் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட,
குழந்தை இல்லாமல், தாயும் இறந்த நிலையில் தன்னந்தனியாக தவித்துக்கொண்டிருந்தவரை தன்னுடனேயே வசிக்கச் செய்தார் ருத்ர நாராயணன்.

திருமணமான புதிதில் சாரங்கன் மூன்று மாதம் ஆனந்த வல்லியோடு குடும்பம் நடத்தினால் , மூன்று வருடம் தேசாந்திரம் சென்று விடுவான்.
அவன் எப்பொழுது வருவான் எப்பொழுது போவான் என யாருக்குமே தெரியாது.

இது குறித்து பலமுறை சாரங்கனுக்கும் ருத்ர நாராயணனுக்கும் வாக்குவாதம் வந்தது உண்டு. ஒவ்வொரு முறையும் அவனும் ஏதாவது கூறித் தப்பித்துக் கொள்வான். ஆனந்தவல்லியும் தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் ஒத்து ஊதுவாள்.

கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

போட்டி, பொறாமை ,புறம் பேசுதல் ,அடுத்தவரின் குடியை கெடுத்தல் என அனைத்து தீய குணங்களின் குத்தகையாக இருப்பவர் ஆனந்தவல்லி.
ஆனால் மேற்சொன்ன அவரது எந்த குணமும் அவ்வளவு சீக்கிரம் வெளிப்பட்டு விடாது என்பதால்,
அவரின் குணத்தை நன்கு அறிந்த ருத்ர நாராயணனை தவிர மற்றவருக்கு எல்லாம் அவர் புரியாத புதிராகவே இருந்தார்.

ஓரளவு சூது வாது உள்ள
மனிதர்களாலேயே கணிக்க முடியாத ஆனந்தவல்லியை, வெள்ளந்தி மனம் கொண்ட மரகதவல்லியால் புரிந்து கொள்ள முடியாமல் போனது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல.

ஆனந்தவல்லிக்கு என்றுமே
மரகதவல்லியின் மீது ஒருவித பொறாமை உண்டு ... அவர் 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்று ஆங்கிலத்தில் கூறுவது போல் பிறந்ததிலிருந்து கவலை, கஷ்டம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர் ..

மேலும் ருத்ர நாராயணன் ஒழுக்க சீலனாய் இருக்க, மரகதவல்லிக்கும் அவருக்கும் இடையே
இருக்கும் உயிருக்குயிரான பிணைப்பை பார்த்து உள்ளுக்குள் பொருமுவார்.

ஒருவருக்கு தீங்கு செய்ய காரணம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறு பொறாமை உணர்வே, பாவத்தை கூட்டிக் கொள்ளவும் பகையை வளர்த்துக் கொள்ளவும் போதுமானது.

மரகதம் சூதுவாது அற்றவள் என ஆனந்தவல்லி நன்கு அறிந்தும், தன் தம்பி இத்தனை ஆண்டுகாலம் தன்னைக் காத்து நிற்கிறான் என்று தெரிந்தும், தன் பொறாமை உணர்வை தணித்துக்கொள்ள தன்னால் இயன்ற காரியங்களை ருத்ர நாராயணனின் குடும்பத்திற்கு எதிராக செய்து கொண்டுதான் இருந்தார்.


பார் கவுன்சில் உறுப்பினர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு தன் மனையாளுடன் செல்வதில் ருத்ர நாராயணனுக்கு அலாதி இன்பம்.

" மடிசாரை விட, ஆறு கஜ புடவையில கே .ஆர் விஜயா மாதிரி அழகா இருக்கடி .." என்பார் அம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு மரகதவல்லி சாதாரண புடவையில் வருவதைப் பார்த்து .

சிரித்த முகத்துடன் இருவரும் தம்பதி சமேதராய், சுபநிகழ்ச்சிகளுக்கு கிளம்பிவிட்டால், ஆனந்த வல்லிக்கு அடிவயிறு பற்றி எரியும் . அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,
இன்னைக்கு சந்திராஷ்டமம் என்பார், கிரகணம் என்பார், அமாவாசை என்பார், தலை சுற்றுகிறது என்பார்,
நெஞ்செல்லாம் வலிக்கிறது என்பார், கடைசியாக போலி கண்ணீர் விட்டு அழுவார்.

இவற்றையெல்லாம் கண்டு, ஒன்றுமே புரியாமல் மரகதவல்லி சற்று தயங்கினாலும்,

" அரை மணி நேரத்துல வந்துடுவோம் அக்கா ...பக்கத்தாத்து பட்டு மாமி ஆத்துல இரு ..." என்று அவரது நாடகத்தைக் கண்டு கொள்ளாமல் தன் மனைவியுடன் காரில் ஏறி சென்றுவிடுவார் ருத்ர நாராயணன்.

திரும்பி வரும் போது வீடு ராவண படுகளம் போல் காட்சியளிக்கும். எதையோ தேடினேன் என்பார், ஆனால் அனைத்தையும் கொட்டிக் கிளறி இருப்பார். என்னதான் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தாலும், கடைசியில் மரகதத்தின் இடுப்பு ஒடிந்து விடும்.

அது மறைமுகமாக மரகதத்திற்கு தரும் தண்டனை என்று கூட அறியாமல், உடன் அவரும் அமர்ந்து ஆனந்த வல்லிக்கு ஆறுதல் சொல்லி உதவிகள் செய்வார்.

இவை எல்லாவற்றையும் விட, ஆனந்தவல்லியின் மன வக்கிரத்தின் உச்சக்கட்டம், சாதத்தில் தண்ணீர் ஊற்றுதல், குழம்பு, ரசத்தில் மிளகாய்ப்பொடி, உப்பை அள்ளி கொட்டுதல் என விழாவிற்கு சென்று வந்தவர்கள், வெறும் வயிற்றோடு தூங்குவதற்கான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி வைத்திருப்பார்.

மரகதவல்லி வீட்டைத் தவிர வேறெங்கும் உணவு உட்கொள்ள மாட்டார். வெளியில் அவர் புசிப்பது பழங்களை மட்டுமே. இம்மாதிரியான சுபநிகழ்ச்சிகளுக்கு சென்றால் கூட வாழ்த்திவிட்டு வந்துவிடுவார்.

ருத்ர நாராயணன் வெளியில் சாப்பிடும் வழக்கம் உள்ளவர் என்றாலும், மனைவியுடன் சென்றால் வெளியில் உணவருந்த மாட்டார் என்பதை நன்கு அறிந்தே திட்டம் போட்டு காய் நகர்த்துவார் ஆனந்தவல்லி.

மரகதவல்லி வீட்டை விட்டு வெளியே செல்வதே மிக அரிது. வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரிப்பாரே ஒழிய
அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று வம்பு பேசும் பழக்கம் இல்லாதவர். அவருக்கு நேர்மாதிரி ஆனந்தவல்லி.

அந்த அக்ரஹாரத்தில் அவரிடம் வம்பு பேசவும், வம்பு கேட்கவும் ஆட்கள் மிக அதிகம் .

அக்காவின் திரிசமனத்தை ருத்ர நாராயணன் நன்கு அறிந்திருந்தாலும் ,
ஏதும் அறியாத மரகதவல்லியிடம் அதனைக் கூறி குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க அவர் விரும்பவில்லை. அதே சமயத்தில் தன் அக்காவின் குயுக்தி திட்டங்களில் இருந்து மறைமுகமாக தன் குடும்பத்தையும் மரகதவல்லியையும் செவ்வனே காத்துகொண்டு வந்த அந்த நீதிபதிக்கு, பொய் சொல்வது எவ்வளவுக்கெவ்வளவு தவறோ அதே போல் உண்மையை மறைப்பதும் தவறு
என்று அவர் உணரும் பொழுது, விலையில்லா ஒன்று இவ்வுலகை விட்டே சென்றிருக்கும் என அறியாமல்
சிந்தித்து செயல்படுவதாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருந்தார்.


அவருக்கு ரங்கநாதன் என்ற மகனும் வேதா என்ற மகளும் இருந்தனர் .
ரங்கநாதன் வேதாவை விட 3 வயது மூத்தவன் .

பெற்ற தாய் தந்தையை விட, அவனுக்கு அத்தையிடம் பிரியம் அதிகம். அத்தை கோண்டு. ஆனந்தவல்லி சொல்லும் அத்தனைக்கும் ஆடுவான்.
எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தாலும், தாய், தந்தை, தங்கையின் மீது அதிகப் பற்றுடையவன். ஆனால் அவை வெகு சில சமயங்களில் மட்டுமே வெளிப்படும்.

என்ன தான் சட்டத்திற்கு சாட்சிகள் வேண்டுமென்றாலும், மனசாட்சியை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்குவார் ருத்ர நாராயணன் என்ற அந்த நீதிமான்.

சில வழக்குகள் வக்கீல்களின் வாதத் திறமையால் ஜோடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தன் அனுபவ அறிவால் அறிந்துகொண்டால், மனசாட்சிக்கு விரோதமாக தவறான தீர்ப்பு வழங்காமல், அந்த வழக்கு முடியும் வரை, விடுப்பில் சென்று விடுவார்.

அவருக்கு அக்ரஹாரத்தை தாண்டி அனைத்து மக்களிடமும் செல்வாக்கு இருந்தது.

ருத்ர நாராயணனின் நட்பு வட்டம் சற்று விஸ்தாரமானது. அனைத்து மதங்களையும் , மதச் சடங்குகளையும் மதிப்பவர், நேசிப்பவர் என்பதால், சாதி மத பேதமில்லாமல்
அனைவரும் அவருக்கு நெருங்கியவர்களாகவே இருந்தனர் .

அவரது சமுதாயத்தை சேர்ந்த ராமானுஜம், முரளிதரன், தேசிகன் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருப்பது போல்
வாசு தேவர் ( வெங்கடேஷின் தந்தை) , மற்றும் இப்ராஹிம் ராவுத்தரும் அவரது மிக நெருங்கிய நட்பு வட்டம்.

வாசு தேவர், ஒரு காலத்தில் தலைசிறந்த வக்கீலாக இருந்தவர். அவருடைய இளம் வயதிலேயே அவர் மனைவி மறைந்து போக, பிறகு வேறு எதிலும் நாட்டம் இல்லாமல், தனது நட்பு வட்டத்தை சுருக்கிக்கொண்டு, இத்தனை ஆண்டுகளாக ஆத்ம திருப்திக்காக தன் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்.

பெரும் வசதி படைத்தவராக இருந்தாலும் தெய்வக் பெருமகனார் முத்து ராமலிங்க தேவரய்யாவை பின் பற்றி மீதமிருக்கும் தன் வாழ்நாளை ஆன்மீகத்திலும் தேசியத்திலும் செலவழித்தபடி
தனக்குத் தானே சமைத்து சாப்பிட்டுக்கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவர் மனைவி மறைந்ததும்
ஏழெட்டு வயதில் இருக்கும் அவரது ஒரே மகன் வெங்கடேஷை வளர்ப்பதற்காக வேண்டி,
அவரது உறவுகள், அவரை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய போது, அதற்கு இசைந்து கொடுக்காமல், வெங்கடேஷை உயர்தரப் பள்ளியின் விடுதியில் சேர்த்து படிக்க வைக்க எண்ணும் போது தான் பம்பாயில் வசிக்கும், ராணுவத்தில் பணியாற்றும் அவரது ஒன்று விட்ட தமையன், வெங்கடேஷை தன்னுடன் அழைத்துச் செல்ல கேட்க, அறிமுகமற்ற பள்ளி விடுதியில் தன் மகனை சேர்ப்பதற்கு பதிலாக
குழந்தை இல்லாத தன் தமையன் குடும்பத்தில், தன் மகன் வளர்வது
நல்லது என கருதி வெங்கடேஷை அவருடன் அனுப்பியதோடு ,அடிக்கடி சென்று பார்ப்பது, தன் மகனுடன் தங்குவது, என அந்த பிஞ்சுக் கொடி, புதிய கொழு கொம்பில் படரும் வரை , உறுதுணையாக இருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் மர சாமான்கள்( கட்டில், பீரோ, சோபா, உணவு மேஜை ) செய்யும் கடைகள் பெரும்பாலும் இவருக்கு சொந்தமானது.

தினமும் தவறாமல் ஐந்து முறை தொழுகை செய்தல், ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருத்தல் என தன் மதம் மற்றும் சடங்குகளின் மீது மாறா பற்று கொண்டவர். மிகவும் எதார்த்தமான மனிதர். நாட்டுபற்று மிக்கவர் , தேசியவாதி.

அவருக்கு மூத்த மகனும், இளைய மகளும் இருந்தனர். மகன் அப்துல், வெங்கடேஷின் பால்ய சினேகிதன். வெங்கடேஷை விட இரண்டு வயது சிறியவன் .
மகள் பர்வீன், வேதாவின் நெருங்கிய பள்ளி தோழி.

பொதுவாக, இரு வேறு மதத்தை அல்லது ஜாதியை சேர்ந்த இருவர் நீண்ட காலமாக நண்பர்களாக இருப்பது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. ஆனால் மூவர், நீண்ட காலமாக ஆத்ம நண்பர்களாக இருப்பது எளிதான காரியமல்ல .

ருத்ர நாராயணன், வாசு தேவர், இப்ராஹிம் ராவுத்தர் இவர்கள் மூவரும் ஆத்ம நண்பர்களாக பரிமளித்ததற்கு ஒரே காரணம் அவர்களுக்கு இடையே இருந்த புரிதல் தான்.

எப்படி அன்னியோன்யமான தம்பதிகளுக்கிடையே புரிதல் அவசியமோ, அதே போல் ஆத்மார்த்தமான நட்புக்கும் புரிதல் அவசியம்.

மூன்றாம் நபர் இல்லாத பட்சத்தில் மற்ற இருவர் அவரை பற்றிய குறைகளைப் பேசாமல் நிறைகளை பேசுவதால் அவர்களது நட்பு விருட்சமாக வளர்ந்து இருந்தது.


சிறு வயதிலிருந்து வருடத்திற்கு மூன்று நான்கு முறையாவது ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து , தான் பிறந்து வளர்ந்த மண், தன் தந்தை, உறவினர், தன் ஆத்ம நண்பன் அப்துல் ஆகியோருடன் நேரம் செலவழிப்பது வெங்கடேஷின் வழக்கம்.

வெங்கடேஷ் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில், பொறியியல் முடித்து, ஐபிஎஸ் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் 16 வயது பட்டாம்பூச்சியாய் வலம் வந்து கொண்டிருந்த வேதாவை முதன் முதலில் கோவிலில் பார்த்தார்.

கோவில் பிராகாரத்தில், வேகமாக புள்ளிகள் வைத்து, சுழன்று சுழன்று சிக்கு கோலம் போட்ட வேதா அவர் மனதில் கோலமிட்டு குடியேறியதும் அப்போதுதான். ஆனால் அப்போது அவர் ருத்ர நாராயணின் மகள் என்று அவருக்கு தெரியாது.

வேதாவை பிரம்மன் சிருஷ்டிக்கும் போது சௌந்தர்ய லஹரியை கேட்டுக் கொண்டே சிருஷ்டித்திருப்பான் போலும் ... அத்துணை அழகு ...
இடையை தாண்டும் நீண்ட கூந்தல், வேதாவின் கழுத்து திரும்பும் போதெல்லாம் காதில் கூத்தாடும், அழகிய சிறிய ஜிமிக்கி, மருதாணி இட்ட கைகளில் அவரது நிறத்தை ஒத்த மெல்லிய தங்க வளையல், கழுத்தில் தாமரைப்பூ பதக்கம், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அசைந்தாடும் வெள்ளி கொலுசொலி என வேதாவின் அழகில் மயங்கிய வெங்கடேஷ்,

அவர் பாடிய கீர்த்தனை, அங்கிருந்த தன் வயதை ஒத்த தோழிகள், வயது குறைந்த சிறார்களுக்கு கணிதம், ஆங்கிலம், தமிழ் என
அனைத்தையும் கோவில் மண்டபத்தில் அமர்ந்து சொல்லிக்கொடுக்கும் பாங்கு, மொழிகளில் இருந்த புலமை என அனைத்துக்குமாய் ரசிகன் ஆகிப் போனார்.

பிறகு வேதாவை பற்றி தெரிந்து கொள்ள விழையும் போது தான் அவர் ருத்ர நாராயணனின் மகள் என்று அவருக்கு தெரிய வந்தது .
காலை மற்றும் மாலை வேளைகளில்
வேதா தன் தோழிகள் மற்றும் அண்டை வீட்டாரின் குழந்தைகளோடு கோவிலில் செலவழிக்கும் அந்த ஒரு மணி நேரம் வெங்கடேஷிற்கு வரப்பிரசாதம்.

அப்போது வேதாவிற்கு தெரியாமல் நூற்றுக்கால் மண்டபத்தில், மறைந்திருந்து அவரைப் பார்ப்பது, புகைப்படம் எடுப்பதை தொழிலாகவே வைத்திருந்தார் வெங்கடேஷ்.

வருடத்திற்கு 4 முறை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தவர் அதனை 6 முறைகளாக உயர்த்திக் கொண்டார்.

இத்தனை மாற்றம் அவரிடம் நிகழ்ந்தும், அதனை தன் பெற்ற தந்தை , வளர்த்த தந்தை, தாய் மற்றும் உற்ற நண்பன் அப்துல் என யாரிடமும் அவர் பகிரவில்லை. அதற்கான காலத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காமல்,
தன் வேலையை செவ்வனே செய்ய, வெங்கடேசஷை வளர்த்த தாய் மற்றும் தந்தை காலமாகி விட, மும்பையில் அவர் ஏசிபியாக (ACP) பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தான், வாசு தேவரை
யாரோ அரிவாளால் வெட்டி விட்டதாகவும், அவரது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி அறிந்ததும் , சற்றும் தாமதிக்காமல், தன் வாழ்க்கையையே மாற்றப்போகின்ற பயணம் எனத் தெரியாமல் ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி பயணமானார் வெங்கடேஷ் .

ஒரு நாள் முன்பு நடந்தவை.


இப்ராஹிம் ராவுத்தரின் நெருங்கிய உறவினருக்கும்,
வாசு தேவரின் நெருங்கிய உறவினருக்கும் இடையே பணமோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமான வழக்கொன்று நடைபெற்று வந்தது.

ராவுத்தரின் அறிவுரையின் பேரில் அவர் தரப்பில் போடப்பட்ட வழக்கை, வாசுதேவர் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரிடம் ஜூனியராக பணிபுரிந்த ராமலிங்கம் ( தற்போது பெரிய வக்கீல் ஆகிவிட்டார்)வாசு தேவரின் உறவினருக்காக ஏற்று நடத்தினார்.

வாசுவும் ராமலிங்கமும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல ஒரு வகையில் உறவினர்களும் கூட.
அதனால் வாசு, சீனியர் வக்கீல் மற்றும் உறவினர் என்ற முறையில் ராமலிங்கத்திடம்,

" கேஸ் நிக்காது ...அவங்க சைடு தான் நியாயம் இருக்கு ஆதாரமும் இருக்கு ..பேசாம இந்த கேசை விட்டு நீ விலகிக் கோ ..." என பலமுறை அறிவுறுத்த, அவரது பேச்சை காதில் வாங்காமல், ருத்ர நாராயணனை சந்தித்து, இது குறித்து ராமலிங்கம் பேச என்பதை விட மறைமுகமாக மிரட்ட

" உங்களுக்கு என்னை பத்தி தெரியுமோல்யோ... எல்லாம் சட்டப்படி தான் நடக்கும் ...நீங்க இத பத்தி பேச இனிமே ஆத்துக்கு வர வேண்டாம் ...நீங்க இந்த மாதிரி என்னை அடிக்கடி தொந்தரவு பண்ணினேல்னா, நான் பார் கவுன்சில்ல உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டிய நிலைமை வரும் .." என கடுமையாக ராமலிங்கம் மற்றும் அவருடன் வந்திருந்த , அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் கட்சியில் இருப்பவர்கள் என அனைவரையும் எச்சரித்து அனுப்பினார் ருத்ர நாராயணன்.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இப்ராஹிம் உறவினருக்கு சாதகமாக அமைய, வழக்கு நிலுவையில் உள்ள போது நடந்த குற்றச் செயல்களுக்காக குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் உத்தரவிட்டார் ருத்ர நாராயணன்.

மூன்று மணிக்கு வழக்கின் தீர்ப்பை கூறிவிட்டு, மற்ற வழக்குகளுக்கான பணியினை ஓரளவு முடித்துவிட்டு,
மாலை 4 மணிக்கு, அவர் தன் வீடு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, அவரை சந்திக்க வந்தார் வாசு தேவர்.

" என்னடா வாசு , திடீர்னு சேம்பர்க்கே வந்திருக்க .... என்ன சமாச்சாரம்..." என கேள்வி எழுப்பிய ருத்ர நாராயணனிடம்

" இல்லடா ருத்ரா ... மனசே சரியில்ல ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு தோணுது... அதான் உன்னை பார்க்க வந்தேன் ...வீட்டுக்கு கிளம்பிட்டியா .."

" ஆமா, வேலை முடிஞ்சிடுத்து...ஆத்துக்கு போக வேண்டியது தான் ..."

" சரி வா, நானும் இன்னிக்கு உன் கூடவே உன் கார்ல வரேன் ... " என்றவரை ருத்ர நாராயணன் புரியாமல் பார்க்க,

" வா ருத்ரா... போலாம்..." என்ற படி வாசுதேவர் ருத்ர நாராயணனுடன் காரில் பயணிக்க, கார் ஆள் அரவமற்ற விளைநிலங்கள் இருமருங்கிலும் அமைந்த சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது , திடீரென்று ஒரு முதியவர் காரை நிறுத்துமாறு கையசைக்க,

" ரவி, காரை நிறுத்து ... யாரோ கை அசைக்கிறா பாரு ..." என ருத்ர நாராயணன் தனது டிரைவர் ரவியிடம் கூறிக் கொண்டிருக்கும் போது,

" நீ கார்லேயே இரு ருத்ரா ...நான் யாருன்னு பார்க்கிறேன் ..." என வாசு தேவர் காரை விட்டு இறங்கிய மாத்திரத்தில், எங்கிருந்தோ வந்த நான்கு முகமூடி அணிந்த நபர்கள், அவரைத் தாக்க ஆரம்பிக்க, சிலம்பம் கற்று தேர்ந்தவர் என்பதால், பதிலுக்கு வாசு தேவரும் அவர்களை விடாமல் தாக்க தொடங்க, நடப்பதை ஓரிரு நொடியிலேயே புரிந்துக்கொண்டு வாசுதேவரை காப்பாற்றுவதற்காக ருத்ர நாராயணன் வண்டியை விட்டு இறங்க,

" ருத்ரா ... நீ வண்டில போய் உட்காரு...போ..." என வாசு தேவர் பலத்த குரலில் அவருக்கு அறிவுறுத்தி கொண்டிருக்கும் போதே,
முகமூடி அணிந்த நபர், முதுகுக்குப் பின்னே மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு, ருத்ர நாராயணனின் கழுத்தை சீவ பாயும் போது குறுக்கே வந்து அதனை தன் தோளில் வாங்கிக்கொண்டார் வாசு தேவர்.

அருவாள் வெட்டு ஆழமாக தோளில் பதிந்ததும், குபுகுபுவென ரத்தம் கொட்ட ஆரம்பிக்க, அதற்குள் அங்கிருந்த சில விவசாய மக்கள் அந்த இடத்தில் கூட,
கூட்டம் கூடுவதை அறிந்து , அந்த முகமூடி நபர்கள் மின்னல் வேகத்தில் தலைமறைய, ரத்த வெள்ளத்தில் இருந்த தன் உயிர் நண்பனை,
அந்த விவசாய பெருமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ருத்ர நாராயணன்.

இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பிறகு,
கண்விழித்த வாசு தேவரிடம் ,

" ஏண்டா வாசு, இப்படி பண்ண..
என் கழுத்துக்கு வந்த அருவாளை , நீ ஏன் உன் தோள்ல வாங்கிண்ட.." என்ற ருத்ர நாராயணனின் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல், மந்தகாச புன்னகையோடு பார்த்தவரின் கண்ணில் நட்பு பெருக்கெடுத்து ஓட,
சற்று நேரம் இருவருக்குமிடையே ஒரு வித அமைதி நிலவ,

" சரி ஆத்துக்கு போய், நோக்கு சாப்பாடு அனுப்புறேன் ... இங்க கேண்டீன்ல கொடுக்கிறத சாப்டுடாத... ஏற்கனவே நேக்கு அல்சர் உண்டு... ச்சரியா ..." என கண் கலங்கியபடி அறிவுறுத்திவிட்டு விடை பெற்றார் .

கிருஷ்ணனுக்கு எப்படி பலராமனோ, ராமனுக்கு எப்படி லக்ஷ்மணனோ, அதே போல் தான் ருத்ர நாராயணனுக்கு வாசுதேவர்.


தற்போது :

தந்தையை காண பெரும் பரபரப்போடு மருத்துவமனைக்கு வந்த வெங்கடேஷ்,
அவர் எழுந்தமர்ந்துக்கொண்டு ராவுத்தர் மற்றும் அவரது மகன் அப்துல் உடன் உரையாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து,
நிம்மதி பெருமூச்சு விட்ட படி,

" ஐயா எப்படி இருக்கீங்க ... ரொம்ப பயந்தே போயிட்டேன் ..."

" நல்லா இருக்கேன் பா ... ...
நீ ஏன் இவ்ளோ பரபரப்பா இருக்க ...எனக்கு அவ்வளவு சீக்கிரம் ஒன்னும் ஆகாதுய்யா ..." என்றவரின் கரம் பற்றி வாஞ்சையாக தடவிக் கொடுத்த வெங்கடேஷை, அங்கிருந்த ராவுத்தர் மற்றும் அப்துல், நலம் விசாரிக்க, அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டே அப்துலிடம் தனியாக பேச வேண்டும் என்பது போல் பார்வை பரிபாஷையை அவர் பகிர,

" வாப்பா, நீங்க ஐயா கிட்ட பேசிக்கிட்டு இருங்க ... நான் வெங்கடேசை கேண்டீனுக்கு கூட்டிகிட்டு போய் டீ வாங்கிக் கொடுத்து கூட்டிவரேன்..." என்று தன் தந்தை ராவுத்தரிடம் அப்துல் கூறிவிட்டு வெங்கடேஷுடன் வெளியேற

" சொல்லுடா, என்னடா நடந்தது ...யார் ஐயாவை வெட்டினது..." என்றதும் அப்துல் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் பகிர, அவருடன் இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு சென்று வெங்கடேஷ் விசாரிக்க,

ஏற்கனவே ருத்ர நாராயணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டவர், காவல்துறை கண்காணிப்பாளரை தனியே சந்தித்து, வழக்கைப் பற்றி விசாரித்து , அதன் தற்போதைய நிலையைத் தெரிந்து கொண்டதோடு, தான் இன்னும் ஒரு வார காலம் இங்கு இருக்கப் போவதாகவும், குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில், உதவி தேவை என்றால் தன்னாலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துவிட்டு மருத்துவமனைக்கு திரும்பிய பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டார் வெங்கடேஷ் .

பிறகு தன் தந்தையிடம், நடந்ததை கூறிக் கொண்டிருக்கும் போது,
வாசு தேவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறை கதவை திறந்து கொண்டு பெரிய உணவு கேரியருடன் நீல நிற பாவாடை , நீல ரவிக்கை மற்றும் வெள்ளை தாவணி அணிந்து வெண்ணிற தேவதை போல் வேதா உள்ளே நுழைய, சற்றும் எதிர்பார்க்காத தன் மனம் கவர்ந்தவளின் திடீர் பிரவேசத்தால், அவரது இதயத்துடிப்பு ஓங்கி ஒலிக்க, சிந்தை தடுமாற,பரவசத்தில் திக்குமுக்காடி போய் , பேச்சை பாதியிலேயே அவர் நிறுத்திவிட,

" வாம்மா... வேதா ..எப்படிம்மா இருக்க ..."
என்ற வாசு தேவரிடம்,

" நன்னா இருக்கேன்... உங்க உடம்பு எப்படி இருக்கு ... இப்ப வலி பரவாயில்லையா ..."

" பரவால்லைம்மா ..."

" இதுல மத்தியானம் சாப்பாடு இருக்கு ..அம்மா கொடுத்தனுப்பினா... நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம், ரவி மாமா (டிரைவர்) வந்து பாத்திரத்தை எடுத்துண்டு போயிடுவேர்..." என வேதா வாசுதேவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,

" எப்படிம்மா இருக்க வேதா ... இந்த வாப்பாவை மறந்துட்டியா... பர்வின் இருக்கும் போது அடிக்கடி வீட்டுக்கு வருவ... ம்ம்ம்...பர்வீன் ஒழுங்கா
படிச்சிருந்தா இந்நேரம் உன் கூட காலேஜ் படிச்சிருக்கும்.. " என வாஞ்சையாக விசாரித்த இராவுத்தரிடம்,

" வாப்பா, பர்வீன் நன்னா இருக்காளா.."

" நல்லா இருக்காம்மா ...இப்ப அவ குழந்தைக்கு ஒரு வயசு ஆகப்போகுது..." என்றவர்

"நீ சின்ன புள்ளையா இருக்கும் போது அடிக்கடி தூக்கத்துல பயந்துக்குன்னு வயித்து வலி, ஜுரம்னு ரொம்ப சிரமப் படுவ... உங்க அம்மா அதிகாலைல நாங்க பள்ளிவாசல்ல துஆ ஓதி முடிச்சிட்டு வரும் போது , உனக்கு வந்து மந்திரிச்சுக்கிட்டு போவாங்க ...உடனே உனக்கு உடம்பு சுகமாயிடும்... திரும்ப மூணு, நாலு மாசம் கழிச்சு மறுபடியும் உடம்புக்கு சுகமில்லன்னு உன்னை கூட்டிகிட்டு வருவாங்க... இப்ப உன்னைப் பார்த்ததும், எனக்கு அதெல்லாம் ஞாபகத்துக்கு வருது ..இப்பவும் பயந்துக்கிறயா..." என்று அவர் கிண்டலாகக் கேட்க,
வேதாவின் முகம் வெட்கத்தில் அந்திவானமாய் சிவந்தது.

வேதா சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அவர் தாயார் மரகதவல்லி அவரை பள்ளிவாசலுக்கு மந்திரிக்க அழைத்து செல்வது வழக்கம்.

அப்படி ருத்ர நாராயணனுடன் மடிசாரில் மரகதவல்லி குழந்தையோடு பள்ளிவாசல் வாயிலில் நிற்க,
இமாம் குழந்தை வேதாவிற்கு மந்திரிக்கும் காட்சி, காண்போரைக் கவரும்
மத நல்லிணக்கத்திற்கான அற்புத சான்றாக இருக்கும்.

" ஏண்டி மரகதம், ஆச்சாரம் அனுஷ்டானம் எல்லாம் பாக்கற... ஆனா குழந்தைக்கு ஒண்ணுன்னா பள்ளி வாசல் வந்து மந்திரிச்சுக்கிறயே அதான் புரியல ..." என ருத்ர நாராயணன் கேள்வி எழுப்பிய போதெல்லாம்,
" உங்களுக்கு எத்தனை தடவை சொல்றதுன்னா... காலம் காலமா செஞ்சுகிட்டு வர்றது தானே... குழந்தைக்கு திருஷ்டி அதிகமாயிடுத்துன்னா , இவாண்ட வந்து ஓதிண்டு போனா குணமாயிடறது...நீங்களும் தான் பார்க்கறேளே... அவா அவா வழக்கம் தான் வேறயே ஒழிய, எல்லா பெருமாளும் நல்லது தானேன்னா செய்வா...." என்ற விசாலமான பதிலை மரகதவல்லி அளிப்பது உண்டு.

இப்போது அதையெல்லாம் ராவுத்தர் நினைவு கூற, பதில் கூற முடியாமல் ஒருவித வெட்கத்தில் நின்றிருந்த
வேதாவிடமிருந்து பார்வையை விலக்காமல், முதன் முதலாய் தன் காதல் தேவதையை மிக நெருக்கத்தில் பார்க்கும் நிகழ்வில் வெங்கடேஷ் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்க, மைந்தனின் முக மாற்றத்தை, அப்பொழுது தான் படுக்கையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனிக்கலானார் வாசு தேவர்.


வெங்கடேஷுக்கு அவர் சமூகத்தை சார்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள், நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க தயாராக இருந்த நிலையில், அவர் இவ்வளவு காலம் பிடிகொடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை கண்டு உள்ளம் திடுக்கிட்டார்.

திருமண பேச்சை எடுக்கும் போதெல்லாம், தட்டிக் கழிக்கும் தன் மகனின் பார்வையில் தெரிந்த புதிய மாற்றத்தை கவனித்தவருக்கு ஏதோ புரிவது போல் தோன்ற,

" இன்னும் நாலஞ்சு மாசத்துல
வேதாவுக்கு படிப்பு முடிஞ்சதும், ருத்ரா கல்யாணம் பண்றதா இருக்கானாம்....போன வாரம் சொன்னான் " என ராவுத்தரிடம் கூறுவது போல் கீழ் கண்ணால் மகனின் முக மாற்றங்களை பார்த்தபடி அவர் கூறிய மாத்திரத்தில்,

வெங்கடேஷின் முகத்தில் தோன்றிய
கலக்கம், தவிப்பு , படபடப்பு, அவர் கண்களில் தோன்றிய ஒருவித அலைப்புறுதல், வலி, வேதனை என அனைத்தையும் படித்துக் கொண்டிருந்தவரின் மனதில் வெளியே சொல்லொண்ணா பாரம் ஏறியது.

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, சற்று பின்னோக்கி(வேதாவின் பார்வை வட்டத்துக்குள் வராமல்) பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த, கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக
அவளையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும், ஒரு அப்பாவி ஜீவன், இந்தப் பூவுலகத்தில் மட்டுமல்ல, அந்த அறையில் இருப்பது கூட தெரியாமல்,

" நான் கெளம்பறேன்.. நாழி ஆயிடுத்து..." என மற்றவர்களை பொதுவாகப் பார்த்து கூறிவிட்டு வேதா வெளியேற,

" வாசு சாப்பிடு ... வெங்கடேஷ் நீயும் சாப்பிடு ப்பா ..." எனக் கேரியரை திறந்து ராவுத்தர் பரிமாற ஆரம்பித்தார்.

தன்னவள் அறையை விட்டு வெளியேறிய பின்னும் இயல்பு நிலைக்கு திரும்ப இயலாமல், ஏதோ ஒரு புது உணர்வில் கட்டுண்டிருந்த வெங்கடேஷ்,

" ரெண்டு பேர் சாப்பிடற மாதிரி, இவ்ளோ அதிகமா சாப்பாட்டை கொடுத்தனுப்பி இருக்காங்க... " என்று கேரியரில் இருந்த உணவின் அளவை பார்த்து சொல்ல ,

" ஐயர் வீட்டம்மா எப்பவுமே இப்படித்தான்.... புள்ளையார் சதுர்த்திக்கு கூட எங்க வீட்டுக்கு மட்டும் 20 பருப்பு கொழுக்கட்டையை கொடுத்தனுப்புவாங்க..." என அப்துல் கூற,

அனைவரையும் பொதுவாகப் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

" சாப்பாடு நல்லா இருக்கு இல்ல ..." என்ற வெங்கடேஷின் குழைவான பேச்சும் , அவர் முகத்தில் தெரிந்த புதுவித மென்மையும்,
எப்பொழுதுமே கம்பீரத்தோடு இருக்கும் தன் உற்ற நண்பன், கரைந்துருகிப் மெய் மறந்து அமர்ந்திருப்பதை முதன்முறையாக வித்தியாசமான பார்வையில் எதிர்கொண்ட அப்துல்
அவரை உற்று நோக்கி

" பசுந்தயிர், நெய், பாசிப்பருப்பு கூட்டு, தக்காளி பச்சடி, கீரை ,காய்கறி எல்லாம் முதல்ல ஒரு வாரம் சாப்பிட நல்லா தான் இருக்கும் ... வருஷம் முழுக்க சாப்பிட்டா வாயை அடக்கம் பண்ண வேண்டியது தான் ... உங்க ஐயாவுக்கு ஓகே ... உனக்கு எனக்கெல்லாம் செட்டாவாது ..." என்றான் ஏதோ ஒன்றைப் புரிய வைப்பது போல்.

அப்துல் குறிப்பாக உணர்த்தியது, புரிந்தது என்றாலும் , அதனை வெளி காட்டிக்கொள்ளாமல் உணவு அருந்துவதிலேயே கவனம் செலுத்தினார் வெங்கடேஷ் .

இந்த விஷயத்தை ருத்ர நாராயணன் அறிய நேர்ந்தால், அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் குழம்பினார், தன் மைந்தனின் மனதை செவ்வனே தெரிந்துகொண்ட வாசுதேவர்.

ருத்ர நாராயணன் முற்போக்குவாதி மற்றும் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும், ஆச்சார அனுஷ்டானங்களை குறையில்லாமல் அன்றாடம் கடைப்பிடிப்பவரும் கூட.

தன்னுடைய ஒரே மகளை மாற்று சமுதாயத்தில் மணமுடிக்க ஒத்துக் கொள்வாரா, அவர்களுக்கிடையே இருக்கும் 40 ஆண்டு கால தூய்மையான நட்பின் நிலை என்னவாகும்....போன்ற கேள்விகள் எல்லாம் வாசுதேவரின் மனதில் தோன்றி சஞ்சலத்தை உண்டாக்கின.

வழக்கம் போல் மாலையில், வேதாவை
நூற்றுக்கால் மண்டபத்தின் தூண்களுக்கு பின்னால் மறைந்திருந்த படி லயித்து பார்த்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ் .

அப்போது ஒரு இளைஞன், வேதாவின் அருகில் வந்து, ஒரு கடிதத்தை கொடுக்க எத்தனிக்க ,

"என்னது இது முரளி ..."

" இதுல என் மனசை எழுதியிருக்கேன் வேதா ...."

" ஓ....லவ் லெட்டரா..."

" ஆமா வேதா...நல்ல முடிவா சொல்லு.." என்றவன் கூறிய மாத்திரத்தில், அவன் கையில் இருந்த கடிதத்தை பிடிங்கி சுக்குநூறாக கிழித்தெறிந்ததோடு, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர்

" பத்தாங்கிளாஸ்ல பத்து தடவை கோட்டு அடிச்சிட்டு, லவ் லெட்டர் கொடுக்கிறியா .... நீ உன் ஆத்துக்கு போ... உன் அப்பாண்ட வந்து பேசறேன்.." என முகம் சிவக்க,
உடல் குலுங்க, கண்கள் படபடக்க கூறியவரை
பார்த்து ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றார் வெங்கடேஷ்.


" ஆஹா ...இவ அக்ரஹாரம்னு பார்த்தா .... ஆர்மியா இருப்பா போல இருக்கே ... என்னா அடி..." என தனக்குள்ளே கூறிக்கொண்டே தானே அடி வாங்கியது போல், தன் கன்னத்தை தேய்த்து விட்டபடி

" ஆமா இவ, என் ஐயா கிட்ட வந்து என்ன பேசுவா..." என்று சிந்தனையை சுழல விட்டவருக்கு, அடி வாங்கியது தான் அல்ல வேறு ஒருவன் என்ற எண்ணம்
தோன்றிய போது அவரால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

வெங்கி, நீ அக்யூஸ்ட்ட(Accused) கூட இப்படி அடிச்சதில்லையேடா...இன்னும் கொஞ்ச நாள்ல டிசி(DC) ஆக போற...

இந்த அடி வாங்கினா, உன் மானம் மரியாதை என்ன ஆகுறது ..." என்றெண்ணியவரின் மனதில் வேதாவின் முகச் சிவப்பும், கோபமும், அவர் பேசிய வார்த்தையும் மீண்டும் மீண்டும் வந்து போய், ஆர்வத்துடன் கூடிய ஆனந்தத்தைக் உண்டாக்க, அதனைப் பறைசாற்றும் விதமாக, இதழ் பிரியா புன்னகை அவர் முகம் முழுவதும் ஆக்கிரமிக்க,
வீடு வந்து சேர்ந்தவருக்கு, உறக்கம் தூரம் போனது.

தன் காதலை வேதாவிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது என உறக்கம் கொள்ளாமல் யோசித்துக்கொண்டிருப்பவருக்கு தெரியாது , நாளையே அந்த நிகழ்வு நடக்கப்போகிறதென்று.


தகிப்பாள்

உங்களது கருத்துக்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன் கீழ்க்கண்ட லிங்கில் உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்.

 
அத்தியாயம் 4


மறுநாள் வெங்கடேஷை அவரது இல்லத்தில் அப்துல் சந்திக்க, வெங்கடேஷ் இயல்பாகப் பேசுவது போல் ,


" ஐயர் பொண்ணு வேதா என்ன படிக்குது ...." என்றவரை மீண்டும் ஒரு வித்தியாசமான பார்வையில் எதிர்கொண்ட அப்துல்,


" அது பி.காம் படிக்குது.... என் தங்கச்சி பர்வீனோட கூட்டாளி தான்... என் தங்கச்சி பிளஸ் டூல ரெண்டு வருஷம் கோட் அடிச்சிருச்சு... ஆனா வேதா நல்லா படிக்கும் ... இப்ப யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்திருக்குது ... "


" ஐயருக்கு ஒரு பையன் கூட இருக்கான் இல்ல... அவன் என்ன பண்றான்..."


" ரங்கநாதன் .... அவன் பி.இ சிவில் முடிச்சிட்டு, மெட்ராஸ்ல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சு நடத்திக்கிட்டு இருக்கான் ..."
என்றவர் வெங்கடேஷின் முகத்தில் ஓடிய சிந்தனை ரேகையை கண்டு நேரடியாக


" நீ வேதாவை லவ் பண்றியா..." என்றார் ஆழ்ந்து நோக்கி.
சற்று திகைத்த வெங்கடேஷ், பிறகு


" ஆமா ...." என்றார் அழுத்தமாக.


" அது எப்படிடா அந்த பொண்ண பாத்த உடனே உனக்கு காதல் ..."


" உனக்கு என்னை பத்தி தெரிஞ்சும், ஏன் இப்படி கேக்குற டா ..."


" உன்னை பத்தி தெரிஞ்சதால தான் கேட்கிறேன்... இந்த மாதிரி செய்யற ஆள் இல்லையே நீ... அதான் எப்படின்னு கேட்கிறேன் ..." என்றவருக்கு தனது மனதில் ஐந்து வருட காலமாக பொத்தி வைத்திருந்த ஒரு தலை காதலை பற்றி முதன்முறையாக வெங்கடேஷ் மனம் திறக்க, அனைத்தையும் கேட்டு முடித்த அப்துல்,


" நீ பக்தி முத்தி போய் தான் சாமியை பார்க்க, ரெண்டு வேளை கோவிலுக்கு போறேன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன் கடைசியில நீ மாமியை பார்க்க போயிருக்க..." என்றவர் தொடர்ந்து


" நீ சொன்னதெல்லாம் சரி டா... உன் காதல் தூய்மையானது ...இப்ப அதைப் பத்தி கேள்வி இல்லை .... நான் பேசுறதையும் கொஞ்சம் கேளு... " என்ற பிடிக்கையோடு ஆரம்பித்தவர்


" சாப்பாட்டு விஷயம் சாதாரண விஷயம்னு நினைக்கிறோம் ஆனா அதுலயே உனக்கும் அதுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ... கல்யாணத்துக்கப்புறம் நீ மட்டன் பிரியாணியா அடியோடு மறந்து விட வேண்டியதுதான்... அதைக்கூட நீ இங்க வரும் போது என் வீட்டில இல்ல ஹோட்டல்ல
சாப்பிட்டுகலாம்னு வையி, தினமும் சமையல்ல வெங்காயம் வெள்ளைப்பூண்டு கூட வராது ... வெங்காய சாம்பாருக்கு கூட நீ சிங்கியடிக்கணும் டோய்....


சரி சாப்பாட்ட விடு ...
அவங்க ஆளுங்கள்ல மெஜாரிட்டி, குரல உசத்தி கூட பேச மாட்டாங்க ... ஆனா நீ முதல்ல அடிச்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்ப... உன்னை சொல்லி தப்பு இல்ல உன் வேலை அப்படி ... ஒரு வேளை வேதாவை நீ கல்யாணம் கட்டினேன்னு வை, கல்யாணத்துக்கு அப்புறம் உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்ததுன்னா, நம்ம ஆளுங்கள கட்டி இருந்தா நாம நிம்மதியா இருந்திருப்போம்னு ஒரு நிமிஷம் அந்த பொண்ணு நெனச்சா கூட அதுக்கு மேல உன் வாழ்க்கை நரகம் தான்....


இது எல்லாத்தையும் விட, இப்ப நான் சொல்ற போற விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியமானது, நீயும் அதுவும் வேற வேற சமுதாயத்தைச் சேர்ந்தவங்க...


ஐயர் தனிப்பட்ட முறையில நல்ல மனுஷன் தான்... ஆனா அவர் பொண்ணு விஷயத்துல என்ன முடிவு எடுப்பாருன்னு யாருக்குமே தெரியாது...


உங்க ஐயாவுக்கும் ஐயருக்கும் 40 வருஷம் சினேகிதம் ... உன் கிட்ட கூட, உங்க அப்பா பேசாம இருப்பாரு, ஆனா ஐயர் கூட மட்டும் பேசாம அவரால இருக்கவே முடியாது..
உன்னை விட உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும் ... பர்வீன் இருக்கும் போதெல்லாம் வேதா அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும் ..என்னை கூட அண்ணான்னு தான் கூப்பிடும் ... இத்தனை வருஷமா தாயா புள்ளையா பழகிக்கின்னு இருக்கோம் ...


இப்ப சொல்லு உன் பதிலை இதெல்லாம் தேவையா..." என்று முழு மூச்சாக காரணத்தை அடுக்கியவரிடம்


" நீயும் ஜாதி மதத்தை நம்பறயா டா..." என்ற கேள்வியை முன் வைத்தார் வெங்கடேஷ் தீவிரமாக .


" நான் ஒரு விஷயம் சொல்றேன் கேளு ... சின்ன வயசுலயே வேதா நல்ல பாட்டு பாடும் ...அத பாத்து என் தங்கச்சிக்கும் பாட்டு பாடணும்னு ஆசை வந்துடுச்சு .... அவங்க வீட்டில அவங்க அம்மா கிட்ட போய் பாட்டு கத்துக்குறேன்னு சொல்லிச்சு... முதல்ல எங்க வாப்பா யோசிச்சாரு... ஆனா நான் தான் என் வாப்பா கிட்ட சொன்னேன் பாட்டு கத்துகிறதுல என்ன தப்புன்னு... அப்புறம் போய் பாட்டு கத்துக்கிச்சு... பர்வீன் ரொம்ப நல்லா பாடும்... நான் கூட அடிக்கடி பஜன்ஸ பாட சொல்லி கேட்பேன் ... இத எதுக்கு சொல்றேன்னா, ஜாதி
மதங்கிறது பழக்க வழக்கம் தான் ... பிறந்த சிசுக்கு எந்த ஜாதி எந்த மதம் டா தெரியும்...


அவங்க வீட்ல வளர்ந்துச்சின்னா அவங்க முறைப்படி வளர போவுது... நம்ம வீட்டுல வளர்ந்துச்சின்னா நம்ம முறைப்படி வளர போகுது ... அவ்ளோதான் வித்தியாசம்...


அதாவது தண்ணிக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் மீனுக்கு பலம் தரையில இருக்கிற வரைக்கும் தான் மானுக்கு பலம் ...இரண்டும் இடம் மாறிச்சு அவ்ளோ தான் ... அவங்க அவங்களோட பழக்க வழக்கம் வாழ்வியல் முறை தான் ஜாதி மதம்னு சொல்றேன் ...


100ல ஒரு சதவீதமா ஒரு வேளை ஐயரே உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும், அவங்க ஆளுங்க அவரை சம்மதிக்க விட மாட்டாங்க ...
அவங்க சமுதாயத்துல மட்டுமில்ல எல்லா சமுதாயத்துலயும் இந்த மாதிரி ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது ...
வெள்ளைக்காரன் விட்டுட்டு போன பிரித்தாளும் கொள்கையை, இப்ப ஜாதிய வச்சு, தெளிவா அரசியல் செஞ்சுக்கிட்டு இருக்கானுங்க ... ஜாதி, மதம் மட்டும் இல்லன்னா இந்தியாவுல அரசியலே செய்ய முடியாது...


ஜாதி மதத்துக்கு அரசியல் வேண்டாம், ஆனா அரசியலுக்கு ஜாதி மதம் வேணும் ... உங்க ரெண்டு பேரோட அப்பாவும் சம்மதிச்சு, உங்க கல்யாணம் நடந்தாலும் இந்த சமூகத்தோடு பார்வை வித்யாசமா தான் இருக்கும் ...இங்க
தன் சொந்த சமுதாயத்துக்கு பயந்து தான், பிள்ளைகளோட கல்யாணத்துல முடிவெடுக்க முடியாம நிறைய பெத்தவங்க திணறராங்க ...


உனக்கு தெரியாதது இல்ல இருந்தாலும் சொல்றேன் ...
வடநாட்டுல அசால்டா அந்நிய மொழி காரங்களை கூட கல்யாணம் கட்டிக்கிட்டு அமைதியா குடித்தனம் நடத்துவாங்க ... அதுவும் பாம்பே எல்லாம் சொல்லவே வேணாம்... மராட்டி குஜராத்தியை கல்யாணம் கட்டிக்கிறது, பெங்காலி பஞ்சாபியை கல்யாணம் கட்டிக்கிறதுன்னு எல்லாம் சகஜம்.... ஆனா இங்க தமிழ் நாட்டுல தமிழ் தமிழ்னு கூவிக்கிட்டு ஜாதி பேரை சொல்லி ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாவானுங்க... ஜாதி பெருமையை பேசி கௌரவ கொலைகள சர்வ சாதாரணமா செஞ்சிட்டு அதை சரின்னு வேற நியாய படுத்துவானுங்க ...


இவனுங்க ஏன் இப்படி இருக்காங்கன்னா இங்க நடக்கிற அரசியல் அப்படி....


ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி தேர்தல்ல நிக்கிறவன் அத்தனை பேரும் , தன் தொகுதிக்கு ஆள நிறுத்தும் போது எந்த ஜாதிக்காரன் அந்த தொகுதில அதிகமா இருக்கானோ அந்த ஆள நிறுத்தி ஓட்டு வாங்குவான்... அப்புறம் எப்படி ஜாதி ஒழியும் ... ஜாதியையும் மதத்தையும் பார்த்து ஓட்டு போடுறவங்க இருக்கிற வரைக்கும் தமிழ் நாட்டோட நிலைமை இதுதான்..."


என நடப்பு அரசியலை அப்துல் தெளிவாக புட்டு புட்டு வைக்க,


" எங்கய்யா அடிக்கடி சொல்லுவாரு... ராவுத்தர் பையன் அப்துல் ரொம்ப தெளிவான ஆளுன்னு... இப்பதான் டா புரியுது ஏன் அப்படி சொன்னாருன்னு ..." என்ற வெங்கடேஷ்


" நீ சொல்றது எல்லாம் சரிதான் ... இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விஷயம் , வேதா கிட்ட என் காதலை இப்ப வரைக்கும் நான் சொல்லவே இல்ல ...அவ ஒத்துபாளான்னு கூட எனக்கு தெரியல... ஒரு வேளை அவங்க ஆளுங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு அவ நெனச்சா ..."
என்றவரின் குரல் இயல்புக்கு மாறாக கமர,


" அவங்க அத்தை தான், அக்ரஹார முதல் வீட்டில இருக்கிற கேசவனுக்கு, வேதாவை கட்டிக்கொடுக்க
போறோம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க..


அந்த கேசவன் கூட திருச்சி RECல லெக்சரரா இருக்கானாம்..." என்ற அப்துலின் பேச்சை இடைவெட்டி


" ஒரு வேளை வேதாக்கும் இதுல சம்மதம்னா, நான் விலகிக்கிறதை தவிர வேற வழியே இல்ல டா ... எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம் ..."


" ச்சே ச்சே... அவங்க அத்தை தான் அப்படி அக்ரஹாரத்துல சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒழிய, வேதாவுக்கு அந்த எண்ணம் எல்லாம் கிடையாது ...
அதுக்கு ஏதோ பங்குச்சந்தையை பத்தி நிறைய படிக்கணும்னு ஆசைனு அடிக்கடி பர்வீன் கிட்ட சொல்லுமாம்...
மற்றபடி அப்படி ஏதாவது இருந்திருந்தா நிச்சயம் பர்வீன் கிட்ட சொல்லி இருக்கும் .." என்ற பதிலை கூறி வெங்கடேஷ் வயிற்றில் பாலை வார்த்தார் அப்துல்.


" சரி உன் நிக்காஹ் எப்ப டா.."


" நான் தான் ஒரு டிகிரியை கூட ஒழுக்கமா முடிக்கல ... ஷர்மிளா நல்லபடிப்பா டா ... அது படிப்பை முடிக்க இன்னும் ஒரு வருஷம் இருக்கு ... அதுக்கப்புறம்தான் எங்க நிக்காஹ்..."


" நீ முன்ன மாதிரி அவங்க வீட்டுக்கு போறியா ..."


" இல்லடா ...வாணியம்பாடி போகணும்னாலே வாப்பா ஒரு மாதிரி பார்க்கிறாரு.... அவங்க வீட்டுல போன் கிடையாது... லெட்டர் போட்டா ஊரே படிக்கும் ...அதான் அடக்கி வாசிச்கிட்டு இருக்கேன்..." என்றார் புன்னகையோடு.


************************************


வழக்கு குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, காவல் நிலையத்திற்கு, இருசக்கர வாகனத்தில் அப்துல் உடன் வெங்கடேஷ் பயணித்துக் கொண்டிருக்கும் போது ,
வேதா தன் தோழிகளுடன் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வதை பார்த்தும்
அந்த பேருந்தை வெங்கடேஷ் பின் தொடர,


" டேய் ஆரம்பிச்சிட்டியா ...இனிமே போன வேலை முடிஞ்சா மாதிரிதான்..." என்று அப்துல் கூறிக் கொண்டிருக்கும் போதே, பேருந்து பாதியில் நிறுத்தப்பட்டு அதிலிருந்த பாதிப்பேர் கூச்சலுடன் இறங்க, இதனைக் கண்டு துணுக்குற்ற வெங்கடேஷ், பிரச்சனையை அறியும் நோக்கில், பேருந்து அருகில் வண்டியை நிறுத்திவிட்டு, கூடியிருந்த கூட்டத்திற்குள் சென்று பார்த்தால்,
பிக்பாக்கெட் அடித்த ஒருவன்
பிடிபட்டிருக்க, அவனை வேதா குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.


உடனே கண்டக்டரை பார்த்து,


" என்ன பிரச்சனை ..." என்றார் வெங்கடேஷ்.


" யார் சார் நீங்க ...."


" நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்... இப்ப சொல்லுங்க பிரச்சனை என்ன ...." என்றார் கெத்தாக.


" சார், இவன் இந்த அம்மாவோட பர்ஸ் அடிச்சதை இந்த பொண்ணு(வேதாவை காட்டி ) பார்த்த தா சொல்லுது சார்... ஆனா இவன் ஒத்துக்காம சண்டை போடறான் சார் ..." என கண்டக்டர் கூற


" டேய், பர்ஸ் அடிச்சியா ..."


" இல்ல சார் ..."


" பொய் சொல்றான் சார் ...நான் பார்த்தேன் சார், இவன் பர்ஸ் அடிச்சதை.." என்றார் வேதா அவசரமாக.


" சார் , இந்த பொண்ணு பொய் சொல்லுது சார் ... " என்றான் அந்த பிக்பாக்கெட் இடைபுகுந்து.


" நான் பொய் சொல்ல மாட்டேன் சார் .." என்று கலங்கிய குரலில் வேதா வெங்கடேஷின் முகத்தைப் பார்த்து முதன் முறையாக தீவிரமாக முறையிட, தன் காதல் தேவதை தன்னிடம், முதன் முதலாக நேரடியாக பேசியதை எண்ணி விண்ணில் பறந்து திளைத்தவர், பிறகு சுதாரித்துக்கொண்டு


" நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும் ..." என்றவரின் குழைந்த பேச்சு புரியாமல், எப்படி என்பது போல் வேதா பார்த்து வைக்க,
" நீ தான் சொன்னயே பொய் சொல்ல மாட்டேன்னு அதான் ..." என்றவரின் பதில் வேதாவுக்கு புரிந்ததோ இல்லையோ, வெங்கடேஷின் பின்னே நின்றிருந்த அப்துலுக்கு தெளிவாக புரிய


" டேய் வழியாத டா..." என்று சன்னமாக அறிவுறுத்தும் போது தான் , அங்கு தன்னோடு தன் காதல் தேவதையை தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமே வெங்கடேஷுக்கு உதயமாக,


" டேய், எடுத்த பர்ஸ நீயே கொடுத்துட்டா தப்பிச்ச... நானா கண்டுபிடிச்சேன்...நீ செத்த ...எப்படி வசதி... " என்று வெங்கடேஷ் முஷ்டியை மடக்கிக்கொண்டு விசாரணைக்கு இறங்கிய மாத்திரத்தில் அவரது தோற்றம் மற்றும் அவரது பணியை அறிந்தவன், அதிக வேலை வைக்காமல், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பர்சை எடுத்து நீட்ட, பர்சை பறிகொடுத்த பெண்மணி , வெங்கடேஷுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பர்சை பெற்றுக்கொண்டு செல்ல, பிரச்சனை முடிந்த நிலையில், கண்டக்டர் அனைவரையும் வண்டியில் ஏறுமாறு பணிக்க, இதுதான் தருணம் என வெங்கடேஷ் வேதாவை பார்த்து


" நீ ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா இவனை உள்ள தூக்கி வைச்சிடலாம் ..." என்றார் ஆர்வத்தோடு.


" இல்ல சார், போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போனா எங்க அப்பா வைய்வா..."


" நான் போலீஸ் மா ..." என்றார் கம்பீரமாய் .


" நீங்க போலீஸ் நீங்க போலாம்.. நான் தான் போக கூடாதுன்னு எங்க அப்பா வைய்வா..." என்றவரின் பேச்சு, வெங்கடேஷுக்கு பொங்கிய சிரிப்பை வரவழைக்க, அவர் அதை மறைக்க முயன்று கொண்டிருக்கும் போது


" இதுக்கு மேல நீ இங்க இருந்த ...நான் அந்த பஸ்ல ஏறி போயிடுவேன் டா ..." என்று அப்துல் சன்னமாக வெங்கடேஷை மிரட்டும் போது தான், அவரைக் கண்ட வேதா,


" அண்ணா,உங்களுக்கு இவரை தெரியுமா... யார் இவர்..."


" நம்ப வாசு தேவரய்யாவோட மகன் ...வெங்கடேஷ் ...பம்பாயில ஏசிபியா இருக்காரு ...அவங்க அப்பாவை வெட்டிட்டாங்கயில்ல அதான் பார்க்க வந்திருக்கிறாரு.." என்றதும் ஆச்சரியத்தில் விழிகள் விரிய
வெங்கடேஷை முதன்முதலாக ஆழ்ந்து நோக்கினார் வேதா .


ஏற்கனவே தன் தந்தைக்கும் வாசு தேவருக்கும் இடையே இருக்கும் நட்பை அறிந்தவள், தற்போது அவர் தன் தந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் என்பதும் தெரியுமாதலால் , அவளது கண்ணில் ஒரு வித நட்புணர்வு தோன்றுவதை வெங்கடேஷால் உணர்ந்துகொள்ள முடிந்தது .


இவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றத்தை அப்துல் கண்டு கொண்டாரோ இல்லையோ , அந்த பிக் பாக்கெட் கண்டு கொண்டு இதுதான் தருணம் என்று


" சார் நான் கிளம்பலாமா சார்... அதான் எடுத்த பர்ஸை கொடுத்துட்டேனே சார் ..." என்றவனிடம்


" நீ எங்க வண்டியிலயே வா , போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போறோம் ... அங்க நீ உன் பதிலை சொல்லிக்கோ..." என்ற வெங்கடேஷிடம் மலர்ந்த முகத்துடன்,


" நான் கிளம்புறேன் சார் .." என்று மிகுந்த நட்போடு தெரிவித்துவிட்டு, அப்துலிடமும் விடைபெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறினார் வேதா.


***************************************


மருத்துவமனையில் இருக்கும் வாசுதேவருக்கு இரவு உணவை கொடுத்துவிட்டு வேதா
வெளியேறும் போது ,


" வேதா" என்று யாரோ அழைத்தது போல் உணர்ந்தவள் திரும்பிப் பார்க்க,
வெங்கடேஷ் நின்றுகொண்டிருந்தார்.


அவரைப் பார்த்ததும், காலையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும், அவர் மனக்கண் முன் ஓட, சிரித்த முகத்துடன் அவரை எதிர்கொண்டவளிடம்


" வேதா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ..."


" சொல்லுங்கோ ..."


" நீ ஏன் நேத்து கோவில்ல அந்த பையனை அடிச்ச ..." என்றவரின் திடீர் கேள்விக்கு
பதில் சொல்ல முடியாமல் திணறியவர்


" அது வந்து ..... அவன் தப்பா பேசினான்...அதனால அடிச்சேன் ..." என்று வேதா சுதாரிக்க,


" அப்ப என்னையும் அடிப்பியா ..." என்றார் அவர் கண்ணோடு கண் நோக்கி.


" நீங்க போலீஸ் ... நீங்க அப்படி எல்லாம் பேச மாட்டீங்கோ ..." என்றவரின்
குழந்தை தனத்தில் ஒரு கணம் தன்னையே தொலைத்தவர்,


" ஏன் போலீஸ்க்கு லவ் வராதா... போலீஸ் லவ் பண்ண கூடாதா... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வேதா ...உன்னை நான் லவ் பண்றேன் ...." என்றார் வேதாவை ஆழ்ந்து நோக்கி .


காலையில் மட்டுமே சந்தித்த ஒரு நபர் மாலையில், இவ்வளவு உரிமையாக பேசுவதை கண்டு, வேதா திகைத்து நிற்க,


" நீ வழக்கமா இந்த கேள்விக்கு


உன் ஆத்துக்கு போ, உன் அப்பாண்ட வந்து பேசறேன் ...அப்படித்தானே சொல்லுவ... என் ஐயா உள்ள தான் இருக்காரு வந்து பேசுறியா ..."
என்றவரின் பேச்சு , வேதாவிற்கு நாணத்தோடு சிரிப்பையும் வரவழைக்க, தலைகுனிந்த படி
பதிலேதும் கூறாமல் நின்றிருந்தவரிடம்,


" அப்புறம் நான் பத்தாம் கிளாஸ்ல எல்லாம் ஃபெயில் ஆகல ... என்னோட இன்ஜினியரிங்கல கூட டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணி இருக்கேன் ... உன்னை மாதிரி யுனிவர்சிடி ரேங்க் எல்லாம் கிடையாது... இப்ப நான் ஏசியா இருக்கேன்...
இன்னும் ஆறு மாசத்துல டிசி ஆயிடுவேன்...." என்றவரின் பேச்சில் மேலும் வெட்கியவர், அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்காமல்
கொலுசொலி சலசலக்க ஓடிச்சென்று காரில் ஏறி செல்ல, அதை தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அப்துல்,


" சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திருக்க... இனிமே என்ன ஆகப்போகுதோ ..." என்றார் கவலையுடன்.


மறுநாள் காலை 10 மணி ஆகியும், வேதா காலை உணவுடன் வரவில்லை என்றதும்,


" வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்தியா நீ ...ஐயர் வீட்டில இருந்து அருமையான சாப்பாடு வந்துகிட்டு இருந்தது ... இப்போ அதுக்கு ஆப்பு வச்சுட்ட... உங்க ஐயாவுக்கு ஏற்கனவே அல்சர் டா... ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒத்துக்காது ... " என்று புலம்பியவர்,
" சரி வேற வழி இல்ல, நான் வீட்டுக்கு போய் வாப்பா கிட்ட சாப்பாடு குடுத்து அனுப்புறேன் ...எங்க வீட்டு சாப்பாடு கொஞ்சம் காரமா தான் இருக்கும் ..." என்று அப்துல் பேசிக்கொண்டிருக்கும் போது, ருத்ர நாராயணன் வீட்டு டிரைவர் ரவி, உணவு கேரியருடன் வந்திறங்கினார்.


"போய் முதல்ல அய்யாவை சாப்பிட வச்சுட்டு வா ...அப்புறம் உன்கிட்ட பேசணும் ..." என்றார் அப்துல் வெங்கடேஷிடம் .


சற்று நேரத்திற்குப் பிறகு, வெங்கடேஷ் அப்துலை சந்திக்க,
" டேய், வேதாவுக்கு பிடிக்கல போல இருக்குடா... அதான் சாப்பாட்ட டிரைவர் கிட்ட கொடுத்தனுப்பியிருக்கு ..."


" இல்லடா ...இப்பதான் என் போலீஸ் மூளை சரியா வேலை செய்யுது... அவ ரொம்ப ஸ்டிரெயிட் பார்வர்டு ... அவளுக்கு பிடிக்கலைன்னா இந்நேரம் நேரடியா வந்து சொல்லி இருப்பா... இப்படி பதில் ஏதும் சொல்லாம மௌனமா இருக்க மாட்டா... அந்த மௌனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கறேன் டா..."


" எனக்கு என்னமோ அது அவங்க அப்பாகிட்ட பேசி இருக்குமோன்னு தோணுது ..."


" அவ என்னடா அவங்கப்பா கிட்ட பேசுறது... நான் இன்னைக்கு அவங்க அப்பா கிட்ட பேச போறேன் ..." என்றவரிடம்


" அதுக்கு முன்னாடி, உன் அப்பாகிட்ட பேசு, அதுதான் சரி ..." என்று அறிவுறுத்தி விடைபெற்றார் அப்துல்.


அப்துல் கூறியது சரி என்று பட, உடனே வெங்கடேஷ், " ஐயா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ..." என்றார் வாசுதேவரிடம் .


" சொல்லுப்பா ..." என்றார், அவர் பேசப் போவதை பற்றி முன்பே அனுமானித்து .


" நான் ஐயரோட பொண்ணு வேதாவை விரும்பறேன் ப்பா.... அவளைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு
ஆசைப் படறேன்... " என்ற மைந்தனின் பேச்சு எதிர்பார்த்தது ஒன்று தான் என்றாலும், ஏனோ வாசு தேவருக்கு சிறு கலக்கத்தை உண்டாக்க, அதனை வெளிக்காட்டாமல்,


" வேதாவுக்கு உன்னை பிடிச்சிருக்கா.." என்ற முக்கிய கேள்வியை அவர் முன் வைக்க, தனது ஐந்து வருட ஒரு தலை காதல் மற்றும் முன் நாள் இரவு வேதாவுடன் பேசியதை பகர்ந்த வெங்கடேஷ்,


" அவளுக்கு என்னை நிச்சயம் பிடிக்கும் பா ... "


" சரி மேற்கொண்டு என்ன பண்றதா உத்தேசம் ..."


" ஐயர் கிட்ட பேசலாம்னு இருக்கேன் ..."


" ஒரு வேளை ருத்ரா இதுக்கு ஒத்துக்கலன்னா... "


" அவரைப் பொறுத்த மட்டில், வேற சமூகத்தை சேர்ந்தவங்கிறதை தவிர என்கிட்ட என்னய்யா குறை ..." என்ற மைந்தனின் கூற்றில் உண்மை இருந்தாலும்,


" ஒன்னு புரிஞ்சுக்கோ பா... நம்ப சமுதாய ஆளுங்களாவே இருந்தாலும், கேட்ட உடனே பொண்ணு கொடுக்கணும்னு அவசியமில்லையே ... எத்தனையோ பேரு உறவுல பையன் இருந்தும் சம்பந்தம் பண்ணிக்க பிடிக்காம வெளி ஆளுங்களுக்கு பொண்ணு கொடுத்திருக்காங்க பார்த்திருக்கிற இல்ல .... " என்றவருக்கு மைந்தனின் பக்கம் இருக்கும் நியாயம் புரிந்தது, அதே நேரத்தில் அவன் பிறப்பதற்கு முன்பே ஏற்பட்ட நீண்ட கால நட்பையும் விட மனமில்லை.


" ஒரு வேளை ருத்ரா சம்மதிக்கலன்னா.." என மீண்டும் அதே கேள்வியை அவர் முன் வைக்க


" நீங்க என் கூடவே பாம்பே வந்துடுங்க ...இனிமே நான் இந்த ஊருக்கு வரமாட்டேன் ... கடைசி வரைக்கும் நம்ம தேவரய்யா(முத்துராமலிங்க தேவர்) மாதிரியே என் வாழ்க்கையை ஓட்டிடறேன்..." என்ற மைந்தனின் வாய்மொழியில் இருந்த தீவிரத்தை
கண்டு மனம் கலங்கியவர்


" நம்ம பரம்பரைக்கே, நீ
ஒருத்தன் தாம்ப்பா வாரிசு .... என் குலம் விளங்கனும்னு எனக்கும் ஆசை இருக்காதா ..." என கண்களில் மெல்லிய நீர் திரையிட சொன்னவர்


"இதை ருத்ராகிட்ட நான் பேசறதை விட நீ பேசறது தான் சரியா இருக்கும் ... ஏன்னா அவன் உயிரைக் காப்பாத்தினதுக்காக அவன் பொண்ணை மருமகளாக்கி பார்க்கிறேன்னு.... அவன் சொல்ல மாட்டான் .. எனக்கு அவனை நல்லா தெரியும்... ஆனா அவனை சுத்தி இருக்கவங்க நிச்சயமா பேசுவாங்க ..."
என்றவர் வரவேற்பில் இருக்கும் தொலைபேசியை பயன்படுத்தி,
ருத்ர நாராயணனை தொடர்புகொண்டார் .


" சொல்லு வாசு... எப்படி இருக்க ... கை பரவால்லையா ... கார்த்தால சாப்பாடு வந்ததா..." என்று மடமடவென கேள்விகளை அடுக்கியவரிடம், எப்படி பேசுவது, என்று தயங்கிய வாசு, பிறகு குரலை செருமிக்கொண்டு ,


"ருத்ரா, என் மகன், உன்னைப் பார்த்து ஏதோ பேசணுமாம் ..." என்றதும்


" என்ன..." என்றார் ருத்ர நாராயணன் யோசனையாய்.


" பேசும் போது உனக்கே புரியும் ருத்ரா ...." என்றவர் சற்று தயங்கி
" உனக்கு என்னை பத்தியும் தெரியுமில்ல ..." என்றவரின் பூடகமான பேச்சு புரியாமல்,


" உன்னை பற்றி தெரியாதா வாசு..." என இயல்பாக சொன்னவர் தன்னை சந்திப்பதற்கான நேரத்தை சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.


பிறகு வந்த அப்துலிடம், நடந்த அனைத்தையும் வெங்கடேஷ் பகிர,


" ஐயர் வீட்டுக்கு போகப் போறியா ..."


" ம்ச்...இல்லடா ... சிங்கத்தை அதனோட குகையில தான் சந்திக்கணும்... அதுதான் புத்திசாலித்தனம் .... கோர்ட்டுல அவர் சேம்பரில மீட் பண்ண போறேன் ...." என்றவர் ருத்ர நாராயணன் முன் அனுமதி கொடுத்திருந்த நேரத்திற்கு அவரை சந்திக்க தயாரானார்.


ருத்ர நாராயணனுக்கு வாசுவின் மகன் பம்பாயில் ஏசிபியாக இருப்பது தெரியும்.
ஆனால் வாசு எப்பொழுதுமே, 'என் மகன்', ' என் மகன்' என்றே குறிப்பிட்டு பேசியிருந்ததால் வெங்கடேஷின் பெயரை அவர் மறந்தே போயிருந்தார்.


" ஐயா உங்களை பார்க்க, வெங்கடேஷ் வந்திருக்காரு ..." என்ற உதவியாளரிடம்


" யார் வெங்கடேஷ்..." என்றார் யோசனையாக .


" பம்பாயில ஏசிபியா இருக்காரே... வாசு தேவரோட மகன் ... வெங்கடேஷ் வாசு தேவர்..."


" ஓ..." என்று நெற்றியை நீவிக் கொண்டவர்,
" பேரை மறந்தே போயிட்டேன் ..." என தனக்குத் தானே கூறிக் கொண்டு,


" அவரை உள்ள வர சொல்லுங்கோ ..." என்றார் ருத்ர நாராயணன்.


தகிப்பாள்


Dear friends,


அடுத்த எபிசோட் ரொம்ப பெருசு ... என்னால அதுல கத்திரி போட முடியாது .. அதனாலதான் இந்த எபிசோட கொஞ்சம் சின்னதா கொடுத்து இருக்கேன் ...


சில பிரண்ட்ஸ், (private , public comment boxல) கதையில் வரும் சமஸ்கிருத வார்த்தைக்கு அங்கங்க அர்த்தம் சொல்லுங்கன்னு கேட்டு இருந்தாங்க .... சரியான ஆலோசனை அது ...


நான் முதல் அத்தியாயத்தில் முதல் பத்தியிலேயே ' சமாஸ்ரயணத்தை' பற்றி சொல்லியிருந்ததால,போன அத்தியாயத்துல அதைப் பற்றி விளக்கம் சொல்லல... ( இன்னும் ஓரிரண்டு எபிசோடில் அது பற்றிய உரையாடல்கள் வரும்) Next time i will do it on the same sentence only.


Next episodeல வர்ற சமஸ்கிருத வரிகளுக்கு எனக்குத் தெரிஞ்ச எளிய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கம் சொல்லி இருக்கேன் நட்புகளே ...
மத்தத நீங்கதான் சொல்லணும் ..???


ப்ரியமுடன்


ப்ரியா ஜெகன்நாதன்
 
அத்தியாயம் 5

வெங்கடேஷை சிறுவனாக தான் ருத்ர நாராயணனுக்கு நினைவு . அவர் பாம்பேவிற்கு சென்ற பிறகு,
விடுப்பில் வரும் நாட்களில், கூட இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமைந்ததே இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இளைஞனாக, வெங்கடேஷை இப்பொழுதுதான் சந்திக்கிறார் ருத்ர நாராயணன் .

அவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, அரை நொடிக்கும் குறைவான தருணத்திலேயே, ருத்ர நாராயணனின் கண்கள் தொழில் நுட்பத்தை விட வேகமாக ஆராய்ந்து

" எப்படி இருக்கீங்கோ..." என்றார் நட்பாக.

" நல்லா இருக்கேன் ..." என்றார் வெங்கடேஷ் , குரலில் இயல்பை கொண்டு வர முயற்சித்து.

" உங்க அப்பா இல்லன்னா, இப்ப நான் இல்ல ... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..." என்றவரின் தன்மையான பேச்சு , அடுத்து வெங்கடேஷ் பேச போகும் செய்திக்கு ஒரு வித சங்கடத்தை அளிக்க, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் சுதாரித்துக் கொண்டிருக்கும் போதே,

" சொல்லுங்கோ, நான் என்ன பண்ணனும்..
ஏதாவது கேஸ் விஷயமா என்னை பார்க்க வந்தேளா..." என்றவரின் கேள்விக்கு ஓரிரு நொடிகள் எடுத்துக் கொண்டவர்,

" இல்ல....கொஞ்சம் பர்சனலா உங்க கிட்ட பேசணும் ..." என்ற வெங்கடேஷின் பதில் , ருத்ர நாராயணனை துணுக்குற செய்ய,

" சொல்லுங்கோ ..." என்றார் கண்ணில் ஆராய்ச்சி மற்றும் ஆர்வத்தை தேக்கி.

" எனக்கு உங்க மக வேதாவை பிடிச்சிருக்கு... கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்..." என்றவரின் நேரடியான பேச்சு , ருத்ர நாராயணனின் மனதில் ஆழிப்பேரலையை சுழற்றி அடிக்க, அவரது சட்ட மற்றும் அனுபவ அறிவால், அதனை முகத்தில் காட்டாது, குரலை உயர்த்தாமல்,

" வேதா இதப்பத்தி என்னிண்ட எதுவுமே சொல்லலையே ..." என்று சகஜமாக கேட்டவரிடம், வெங்கடேஷ் தனது ஐந்து ஆண்டு கால ஒரு தலை காதல் மற்றும் முந்தின நாள் வேதாவிடம் பேசியது என அனைத்தையும் பகிர்ந்து

" வேதா இப்ப வரைக்கும் எனக்கு பதிலே சொல்லல ... ஆனா அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும்... என்னை பிடிச்சதால தான் மௌனமா இருக்காங்க... என்னை பிடிக்கலைன்னா நேரடியா எப்பவோ சொல்லிட்டு இருப்பாங்க ..." என்றவருக்கு ருத்ர நாராயணனின் மதி நுட்பத்தை கண்டு பெரும் வியப்பே.

ஒரே கேள்வியில்,தன்னுடைய நடத்தை மற்றும் அவர் மகளின் நடத்தை, அவர்களுக்கு இடையே இருக்கும் உறவின் தற்போதைய நிலவரம், மற்றும் தன்னுடைய மன உறுதி என ஏறக்குறைய அனைத்தையும் தெரிந்துக்கொண்டவரை எண்ணி, மளைத்துத் தான் போனார்.

" எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்கோ..."

" நீங்க பொதுவா பொய் சொல்ல மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் .... அதுவும் வேதாவோட முடிவுல பொய் சொல்ல மாட்டீங்கன்னு நிச்சயமா நம்பறேன்... சப்போஸ் வேதாவோட முடிவு எனக்கு சாதகமா வரும் பட்சத்தில், நான் வேற சமுதாயத்தைச் சேர்ந்தவங்கிறத காரணம் காட்டி என்னை மறுக்க மாட்டீங்கன்னு நம்பறேன் ... என்னை வளர்த்த அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்து மூணு வருஷம் ஆகுது ...
இப்ப பாம்பேல தனியா தான் இருக்கேன் ...
எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது .. என்னை பத்தி நீங்க எங்க வேண்டுமானாலும் விசாரிச்சிக்கலாம் ..."
என்றவரின் தெளிவான பேச்சுக்கு
ருத்ர நாராயணனின் மனம் ஆயிரம் மதிப்பெண்களை வழங்கியிருந்தது ...
அதுவும் வெறும் நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண்கள்.

வெங்கடேஷ் நினைத்திருந்தால் அவர் தந்தையின் மூலம், இந்த சமாச்சாரத்தை கையாண்டிருக்கலாம்.
ருத்ர நாராயணனால்
மறுத்திருக்கவே முடியாது... அப்படி ஏதும் செய்யாமல் அவர் தந்தையை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திருமணம் தனது தனிப்பட்ட விஷயம் தன்னைப் பார்த்து தான் பெண் கொடுக்க வேண்டும் என்ற அவரது உயரிய எண்ணம், அதே சமயம் வெங்கடேஷ் கண்ணில் இருந்த உண்மை, அவரது காதலில் இருந்த தீவிரம், அவரது காதல் கை கூடும் என்ற நம்பிக்கை, , எதிர்பார்ப்பு , அதிலிருந்த கண்ணியம் இது எல்லாவற்றையும் விட ருத்ர நாராயணன் என்ற சிம்மத்திற்கு எதிராக அமர்ந்து, அவரது மனதில் இருந்ததை நேர்மையாக ஆண்மையோடு நாகரீகம் தவறாமல் உரைத்த முறை என அனைத்தையும் நொடியில் பார்த்து படித்து மனம் லயித்துப்போனார் ருத்ர நாராயணன்.

வெங்கடேஷ் பேசிவிட்டுப் சென்ற பிறகு, ருத்ர நாராயணனுக்கு இரு முழு நாட்கள் தேவைப்பட்டது. பிறகு
மாலை சீக்கிரமே வீடு திரும்பியவர், வேதாவை அழைத்து

"வேதா, வர வாரம் உன்னை பொண்ணு பார்க்க வரா..." என்றவரின் எதிர்பாராத பேச்சில், ஆடி போன வேதா,

" அப்பா , நான் இன்னும் பி.காமே முடிக்கல.. அதுக்கப்புறம் எம்.காம் படிக்கணும்ப்பா..." என்றவரின் பேச்சில் தவிப்பு, தட்டிக்கழிப்பு, தடுமாற்றம் என்பன தெளிவாக தெரிய

" என் பால்ய சினேகிதனோட மகனுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருக்கேன் ..." என்றதும் வேதாவின் மனதில் அவர்களது சமூகத்தை சேர்ந்த, அவர் தந்தையின் நண்பர்கள் அனைவரும் வந்து போயினர், வாசு தேவரைத் தவிர.

" இல்லப்பா நான் படிக்கணும் ..."

" அப்ப சரி, நான் வாசுதேவரிண்ட சொல்லிடறேன்... அவர் மகன் உன்னிண்ட ஏதோ கேட்டதுக்கு நீ சரியா பதில் சொல்லலையாம்... சரி, நான் இப்ப சொல்லிடறேன் நீ மேல படிக்க ஆசைபடறதா..." என்ற பதிலைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடியவள்,

" நீங்க இவ்ளோ நேரம் வாசுதேவரை பத்தியா பேசினீங்கோ..."

" ஆமா ..." என்றதும் அதற்கு மேல் தயங்காமல் , தன் மனதில் இருப்பதை போட்டுடைத்தார் வேதா.

" உங்களுக்கு பிடிச்சிருந்தா... நேக்கும் பிடிச்சிருக்கு பா..."
என்றவரின் பேச்சு மட்டுமல்ல கண்ணில் தெரிந்த காதலும் ,அவரது முழு சம்மதத்தை பறைசாற்ற,

" நாளைக்கு தான் நான் உன் அம்மாண்ட இந்த விஷயத்தை பேச போறேன் ... அதுவரைக்கும் நீ இதை பத்தி யாரிண்டையும் பேசாதே ... காலேஜ்க்கு கூட போகாத ... ஆத்துலயே இரு... நான் உங்க பிரின்ஸ்பல்ண்ட பேசி பர்மிஷன் வாங்கி தரேன் ..."
என்றவருக்குத் தெரியாது
அதற்குள் ஒரு தாய், தன் மகளைப் பற்றி என்னவெல்லாம் கேள்வி படக்கூடாதோ, அது மொத்தத்தையும் மரகதம் கேட்க போகிறார் என்று.

ஏனென்றால் இவ்விருவரும் பேசிக் கொண்டிருப்பதை ஆனந்தவல்லி ஒட்டு கேட்டுவிட்டார்.

ஊரையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ருத்ர நாராயணனே, வீட்டில் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார், தன்னுடைய பேச்சுக்கு மட்டும் தான் தன் தம்பி செவிமடுப்பார் , என்றெல்லாம் அக்ரஹாரத்தில் பொய் பரப்புரை செய்து வந்தவர் ஒரு கட்டத்தில், வேதாவிற்கு வரன் பார்ப்பதையே தன் தம்பி தன்னை நம்பி தான் ஒப்படைத்து இருப்பதாக கூறி மேலும் தன் வறட்டு கௌரவத்தை உயர்த்திக் கொண்டார்....

அந்தக் இறுமாப்பில் தான், அக்ரஹாரத்தின் முதல் வீட்டில் இருக்கும் சுசீலா மாமியின் மகன் கேசவனுக்கு, வேதாவை மணமுடித்துக் கொடுக்க போவதாக, சுசீலாவை மட்டுமல்ல அனைவரையுமே நம்ப வைத்திருந்தார் ..
இப்போது ருத்ர நாராயணனின் பேச்சைக்கேட்டு, ஏறக்குறைய அதிர்ந்து போனவர், வேதாவின் திருமணம் மட்டும் ருத்ர நாராயணனின் எண்ணப்படி நடந்துவிட்டால், பிறகு அவர் கூறியது அனைத்தும் பொய் என்றும், அவர் ஒரு செல்லாக்காசு என்பதையும் அனைவரும் அறிய நேரும்.

எனவே இச் சூழ்நிலையைப் எப்படி கையாள வேண்டும் என்று ஆழ்ந்து யோசித்தவருக்கு இரண்டு வழிகள் தான் இருந்தன.

1. வேதா வெங்கடேஷ் திருமணத்தை நிறுத்துவது.

2. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும், என்று வேதாவை பற்றி, தானே வதந்தியை பரப்புவது.

இதில் இரண்டாவது வழி அவருக்கு கை வந்த கலை. மறுநாள் காலை சுசீலாவை சந்தித்து,

" சுசீலா, உன்னிண்ட ஒன்னு சொல்றேன்... நீ யாரிண்டயும் சொல்லிடாதே..." என்ற பீடிகையுடன் தொடங்கியவர்,

" என் தம்பி, என்னிண்ட வேதாவுக்கு நீதான் நல்ல வரனா பார்த்து வைக்கணும் சொல்லியிருந்தான்..
அதனால தான் , உன் மகன் கேசவனை முடிக்கலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேன்... ஆனா இந்த வேதா அது எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்ட... அந்த வாசுதேவரோட பையன் கூட அவ சுத்தாத இடமே இல்லை ... அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம் வேற ... ஏதோ அவா ரெண்டு பேருக்குள்ள தப்பு நடந்து இருக்கும் போலிருக்கு...
அதனாலதான் என் தம்பி வேற வழி இல்லாம அவ பண்ற அழிச்சாட்டியத்தால , வாசுதேவரோட மகனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு முடிவு எடுத்திருக்கான்.... இதெல்லாம் தெரிஞ்சிண்ட நேக்கு, மனசே சரியில்ல ...
நல்ல வேளை, நம்ப கேசவன் தப்பிச்சான்னு தான் நாம சந்தோஷப்படணும்... வேதா என் தம்பி பொண்ணு தான் இருந்தாலும்,
நியாயம்னு ஒன்னு இருக்கோல்யோ...
அதான் மனசு கேட்காம உன்னிண்ட வந்து சொல்லிட்டேன்...என்னை தப்பா எடுத்துக்காத டி ம்மா ..."

" நீங்க ரொம்ப நல்லவா மாமி ... எவ்ளோ பெரிய விஷயத்தை சொல்லி என் குடும்பத்தையே காப்பாத்தி இருக்கேள்...இந்த முறை கேசவன் ஊருக்கு வரும் போது, உம்ம தம்பியை சந்திச்சு பேசலாம்னு இருந்தோம் ... நல்ல வேளை அதுக்குள்ள எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேள்..." என்று சுசீலா, ஆனந்தவல்லி எதிர்பார்த்தது போலவே, அவரை உயர்த்திப் பேச, அதற்கு மேல் வந்த வேலை முடிந்து விட்டது என்ற மன மகிழ்ச்சியில் அவர் நடையைக்கட்டினார்.

ஆனால் விஷயம் காட்டுத் தீ போல், அக்ரஹாரத்தில் ஆரம்பித்து அரசியல் கட்சிகள், ஜாதி சங்கங்கள், பத்திரிகைகள் என அனைவரையும் சென்றடைந்திருந்தது .

ஏனென்றால் ருத்ர நாராயணனும் வாசு தேவரும் சட்டத்துறையில் மட்டுமல்ல சமுதாயத்திலும் பலரால் அறியப்பட்டவர்கள் .

இதற்கிடையில் வாசு தேவரை தொடர்பு கொண்டு வேதாவின் சம்மதத்தை ருத்ர நாராயணன் தெரிவிக்க, மனமகிழ்ந்து போன வாசுதேவர் , திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய எண்ணி நகைகள், அவர்களது சமுதாயத்தின் சடங்குபடியான முகூர்த்த புடவை , அரக்கில் பெரிய தங்க ஜரிகை கொண்டு வெய்த மடிசார் புடவை என அனைத்தையும் வாங்கி குவிக்கலானார்.

வெங்கடேஷையும் தொடர்புகொண்டு பேசியவர்,

" என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம்னு சொல்லிட்டா... நீங்க என்ன எதிர்பார்க்கறேள்னு சொல்லுங்கோ..."

" உங்க பொண்ணை மட்டும் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க ...அது போதும் ..." என்றவரின் பேச்சில் அளவுக்கதிகமான உறுதி தெரிந்தது .
வழக்கமாய் ருத்ர நாராயணனின் பேச்சு தான் இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கும் . இம்முறை
வெங்கடேஷிடமிருந்து அது வெளிப்பட்டது .


இந்நிலையில் ருத்ர நாராயணனின் சேம்பரில் இருக்கும், பல சீனியர் வக்கீல்கள் கூட, வேதா- வெங்கடேஷ் திருமணத்தைப் பற்றி அவரிடமே நேரடியாக விசாரிக்க,

அப்போது தான் அவருக்கு புரிந்தது எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று . வேதா-வெங்கடேஷ் திருமணத்தை பொருத்தமட்டில், அவரைத் தவிர விஷயமறிந்தவர்கள் ஐவர் மட்டுமே. வேதா, வெங்கடேஷ், வாசுதேவர், ராவுத்தர், அப்துல்.

மேற்கூறிய ஐவரும் விஷயத்தை முறையாக அறிவிக்கும் வரை, வெளியே வாய் திறக்க வாய்ப்பே இல்லை ... அப்படி என்றால் எப்படி விஷயம் கசிந்தது .... என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்,
வாசு தேவர் அவரைத் தொடர்புகொண்டு, இதே செய்தியைப் குறித்து பேச,

"யார் இந்த கல்யாணத்தை பத்தி பேசினாலும் ஆமான்னு சொல்லிடு வாசு .. அப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் ..." என்றவர் அறிவுறுத்த, அப்போது ராவுத்தர் ருத்ர நாராயணனை காண அவரது சேம்பர்க்கே வந்திருந்தார்.

" என்ன ராவுத்தர், இந்த பக்கம் திடீர்னு..."

" ஜட்ஜ்மெண்ட் காப்பியை பத்தி பேசிட்டு போலாம்னு வந்தேன்...." என்றவர் தயங்கிய படியே , வேதா வெங்கடேஷ் திருமணத்தைப் பற்றி அவரை சார்ந்தவர்கள் அவரிடம் விசாரித்ததாக பகிர,

" ராவுத்தர், இதுல வேற ஏதோ அரசியல் இருக்கிற மாதிரி நேக்கு தோன்றது ... ஆனா அது என்னன்னு தான் நேக்கு புரியல ..." என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே , சில பத்திரிகையாளர்கள் ருத்ர நாராயணனை சந்திக்க வந்திருப்பதாக உதவியாளர் தெரிவிக்க , ஏற்கனவே பிரச்சனையில் குழம்பி இருந்த ருத்ர நாராயணனுக்கு இவர்களது திடீர் வரவு விந்தையாக இருக்க, காரணத்தை அறிந்து கொள்ள எண்ணியே முன் அனுமதி இல்லை என்றாலும் அவர்களை சந்திக்க விரும்பினார்.

வெவ்வேறு சித்தாந்தங்களை அடிப்படையாகக்கொண்ட பத்திரிகைகளை சார்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு குழுவாக உள்ளே வர , ராவுத்தர் ருத்ர நாராயணன் அருகில் அமர்ந்து கொள்ள,

" சொல்லுங்கோ, இப்ப எதுக்காக என்னை பார்க்க வந்திருக்கேள்..."

" கேள்விப்பட்டோம், உங்க மகளை , உங்க பால்ய தோழன் வாசுதேவரோட மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்கன்னு ...இது உண்மையா ..."

" ஆமா உண்மைதான் ..."

" இப்படி பொசுக்குன்னு சொன்னா எப்படி சார்..... நாங்க செய்தி போட வேண்டாமா ..."

" நீங்க எதுக்காக என் வீட்டு செய்தியா பத்திரிக்கையில போடணும்...இது என் பொண்ணோட கல்யாணம் ..இதைப் பத்தி பத்திரிகையில எழுதி என்ன ஆகப்போற்து ..."

" அது எப்படி சார், நீங்க சாதாரண ஆளா... இந்த வட்டாரத்துலயே
பெரிய ஜட்ஜ், உங்க நண்பர் வாசு தேவரும் ஒரு காலத்துல பெரிய வக்கீல், இப்போ மிகப்பெரிய சமூக சேவகர், தேசியவாதி, இது எல்லாத்தையும் விட நீங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவங்க... உங்கள பத்தி நியூஸ் போடாம வேற யாரை பத்தி சார் நியூஸ் போடறது ..." என்றவர் கேள்வி களத்தில் இறங்கி

" இந்த கல்யாணம் எப்படி சார் முடிவாச்சு... ஒரு வேளை வாசுதேவர் உங்கள் உயிரை காப்பாத்தினதால இந்தக் கல்யாணம் முடிவாச்சா..."

" அப்படியும் வச்சுக்கலாம் ...உயிரைக் காப்பாத்துறது ஒன்னும் சின்ன விஷயம் இல்லையே... மேலும் அவர் என்னோட பால்ய சினேகிதன் ... நல்ல குடும்பம் ...அவரும் நானும் சம்பந்தம் பண்ணிக்கிறதுல தப்பு ஒன்னும் இல்லையே ... அன்னைக்கு நடந்த சம்பவத்துக்காக போலீஸ் குற்றவாளிகளை தேடிண்டு இருக்கா அதை பத்தி இப்ப பேச வேண்டாமே..." என்றார் ஊடகத்தை பற்றி தெளிவாக அறிந்ததால் வெங்கடேஷின் விருப்பம் மற்றும் வேதாவின் விருப்பத்தை சொல்லாமல் மறைத்து.

வேறொரு பத்திரிக்கையாளர்,

" நீங்க வர்ணாஸ்ரமத்தை தீவிரமா கடைப்பிடிக்கிற ஆச்சாரமான சமுதாயத்தை சார்ந்தவர்.. எப்படி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க..." என நேரடி தாக்குதல் நடத்த, பத்திரிகையாளர் எதைப் பற்றி கேட்கிறார் என்பது தெளிவாக விளங்கினாலும், அவருக்கு நேரடியாக பதில் அளிக்க விரும்பாமல்

" வர்ணாஸ்ரமம்ன்னா என்ன ..." என்று ருத்ர நாராயணன் எதிர் கேள்வி கேட்க

" என்ன சார்..இப்படி பேசறீங்க...த கிரேட் ருத்ர நாராயணனுக்கு தெரியாத வர்ணாஸ்ரமமா..."

" வர்ணாஸ்ரமத்துல நேக்கு நம்பிக்கை இல்லை... இருந்தாலும் அது குறித்த ஒருவகையான புரிதல் நேக்கு உண்டு.. உங்களோட புரிதல தெரிஞ்சுக்கலாமேன்னு தான் இந்த கேள்வி கேட்டேன் ..."

"பிரம்மாவின் வாயிலிருந்து வந்தவன் பிராமணன், தோளில் இருந்து வந்தவன் சத்ரியன், தொடையில் இருந்து வந்தவன் வைசியன், பாதத்தில் இருந்து வந்தவன் சூத்திரன்னு வேதத்துல குறிப்பிட்டிருக்கே..." என்றவர் முடிக்க

"'நீங்க எந்த பத்திரிகையிலிருந்து வரேள்..."

"****"

" ஓ ... கடவுள் மறுப்பு தானே உங்க பத்திரிக்கையோடு முதல் கொள்கை ... அப்போ, நான் கொடுக்க போற விளக்கங்கள், உங்களுக்கு புரியுமான்னு நேக்கு டவுட்டா இருக்கு ....ஏன்னா நீங்களெல்லாம் ராமரையும் கிருஷ்ணரையும் கற்பனை கதாபாத்திரம்னு சொல்லுவேள்... திருக்குறளை ஏத்துக்க மாட்டேள், பாரதியாரை ஒத்துக்கவே மாட்டேள் ... நான் என்ன பண்றது ..
இதோ இவர் என்னோட பால்ய நண்பர் (ராவுத்தரை காட்டி)அவர் ஒரு மார்க்கத்தை பின்பற்றறார், நான் என்னோட மதத்தைப் பின் தொடர்றேன்... ரெண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை உண்டு ... ஆனா உங்களுக்கு எதுலயுமே நம்பிக்கை இல்லையே ... உங்களைப் பொறுத்த வரைக்கும் பகவத்கீதையா இருக்கட்டும், பைபிள், குரானா இருக்கட்டும் எல்லாமே கட்டுக்கதை தானே ...உங்களுக்கு தேவைன்னா எனக்கு தெரிஞ்சதிலிருந்து நான் விளக்கம் சொல்றேன்........"

" ஆனா பைபிள், குர்ஆன்ல வர்ணாஸ்ரமம் மாதிரியான கருத்துக்கள் இல்லையே சார்..."

" உங்கள பொறுத்த மட்டில் வேதம், கீதை ,ராமாயணம் , மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகள் தானே ... அப்ப வர்ணாஸ்ரமத்தையும் கட்டுக்கதைகளா நினைச்சு ஒதுக்கிட வேண்டியது தானே ,அதை மட்டும் ஏன் தூக்கி பிடிக்கிறீங்கோ... கான்ட்ரவர்ஷியலா இருக்கிறதாலயா..."

" அப்ப நீங்களே ஒத்துக்கறீங்க சார்... அது
கான்ட்ரவர்ஷியல்ன்னு..."

" இல்ல ... கான்ட்ரவர்ஷியல் ஆக்கிட்டான்னு சொல்றேன்.... விளக்கம் சொல்றேன் கேட்டுக்கோங்கோ...

முதல்ல அது வர்ணாஸ்ரமம் இல்ல, வர்ணாஸ்ரம தர்மம் ....
மேலும் வர்ணாஸ்ரம தர்மத்துல குறிப்பிடப்பட்டிருக்கிற நான்கு வர்ணங்களும் ஜாதிகள் இல்ல , குலங்கள் .

நீங்க புருஷ சூக்த்தத்தில் இருக்கிற இந்த ஸ்லோகத்தை பத்தி சொல்றேள்....

* "ப்ராஹ்மணோ(அ)ஸ்ய ** முக மாஸீத்,
பாஹு ** ராஜன்ய: க்ருத:*
* ஊரூ தத்ஸ்ய *
* யத்வைஸ்ய : பத்ப்யாக்ம்
சூத்ரோ அஜாயத " *

இதுக்கு என்ன அர்த்தம்ன்னா,

" பிராமணனுக்கு முகமே பலம்,
வேதம் ஓதும் பிராமணன் வாயால் நல்லாசி வழங்கவும், நல் உபதேசம் செய்யவும் நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணையா இருக்கணும் ....

சத்ரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் நாட்டை காப்பாற்ற தோள் பலம் கொண்ட கரங்கள் தேவையா இருக்கணும் ....

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்ய கணக்கு வழக்கு பார்க்க தொடை பலமா இருக்கணும் ...

சூத்திரன் உழவு செய்ய கால்கள் பலமா இருக்கனும் ....

ரெண்டு வரி தமிழ்ல இருக்கிற திருக்குறளுக்கே கோனார் விளக்கவுரை இல்லாம பொருள் சொல்ல முடியாத நிலைமையில சமஸ்கிருத மொழி அறிவு இல்லாம , அந்த ஸ்லோகத்துக்கு நம்ம விருப்பப்படி பொருள் சொல்றது மகா தப்பு ..

இதைத்தான் திருவள்ளுவர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்..." அப்படின்னு சொல்றேர்...
அப்படின்னா என்ன அர்த்தம்னு உங்க எல்லாருக்கும் தெரியும் ...இருந்தாலும் அதனோட அர்த்தத்தையும் சொல்றேன்...

பிறப்பினால் அனைவரும் சமம் ... அவரவர் செய்யும் தொழிலில், காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு அமையும் ..

பிராமணனுக்கு நீதி, நேர்மை, தர்மம், அறம் போதித்தல், சத்திரியனுக்கு நேர்மையான ரௌத்திரம் பழகுதல்,நாட்டைக் காத்தல், பெண்கள், குழந்தைகளை காத்தல்,
வைசியனுக்கு வாணிபம் செய்தல், கணக்கு பார்த்தல் ... சூத்திரர்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்தல்.. சேவை செய்தல்.. இதான் அவா அவாளுக்கு விதிக்கப்பட்ட தர்மம்( செயல்கள்)

இப்ப அந்தணர், அரசர், வைசியர், வேளாளர்ன்னு
எல்லா குலத்தை சார்ந்தவாளும் போதித்தல் என்ற ஆசிரியர் பணியில இருக்கா, சத்திரியர்களுக்கு நிகரா பிராமணர்களும் ராணுவத்துல சேர்ந்து நாட்டைக் காப்பாத்தறா... வைசியர்கள் மட்டுமில்ல எல்லாரும் கடல் கடந்து போய் பிசினஸ் பண்றா... எல்லாரும் விவசாயமும் பண்றா.... இப்ப சொல்லுங்கோ இதுல எங்க வர்ணாஸ்ரமம் வந்தது ...

வர்ணாஸ்ரமமே பிறப்பின் அடிப்படையிலானது அல்ல ... அது அவா அவா செய்யும் தொழிலுக்கு தேவையான குணம் மற்றும் திறமையின் அடிப்படையிலானது...

சத்ரியன் ஷாந்தமா இருந்தா நாட்டை காக்க முடியாது, பிராமணன் ரௌத்திரமா இருந்தா போதிக்க முடியாது ...

ராமன் பிறப்பால் ஷத்ரியன், ராவணன் பிறப்பால் பிராமணன், வர்ணாஸ்ரம படி ராவணனை தானே நாங்களெல்லாம் சேவிக்கணும், ஏன் இராமனை சேவிக்கிறோம்... காரணம் உங்களுக்கே தெரியும் ...ராமன் குணத்தில் சிறந்தவன் ஏகபத்தினி விரதன்...
வள்ளுவரும் இதை தான் சொன்னேர்...
பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல ... அவரவர்கள் செய்யும் செயலினால் மட்டுமே உயர்வு தாழ்வு நிர்ணயிக்கப்படுகிறதுன்னு...

கிருஷ்ணர் பிறப்பால் யாதவர், அவன் சொன்ன கீதை எங்களுக்கு வேதம் ... வேதங்களை தொகுத்த, மகாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி, மீனவப் பெண்ணுக்கு பிறந்தவர், ராமாயணத்தை எழுதிய வால்மீகி, சூத்திரர் வகுப்பைச் சார்ந்தவர் ...

விஸ்வாமித்திரர் ஒரு ஷத்ரியர், அவர் சக்தி வாய்ந்த மந்திரமான காயத்ரி மந்திரத்தை போதித்து பிராமண தர்மத்தை செய்தார் ...

துரோணர் பிறப்பால் பிராமணர், ஆனா அவர் கௌரவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படை தளபதியா இருந்து ஷத்ரிய தர்மத்தை செய்தார் ...

இப்ப புரியர்தா, வர்ணாஸ்ரமம் செயல்களின் அடிப்படையிலானது பிறப்பின் அடிப்படையிலானது அல்லன்னு... இன்னும் தெளிவா சொல்லனும்னா ஒவ்வொரு மனிஷாகுள்ளேயும் இந்த நாலு வர்ணமும் இருக்கு...

நான் என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது பிராமணனா இருக்கேன், அந்நிய ஷக்திகளிடம் இருந்து என் ஆத்தை காப்பாத்தும் போது சத்ரியனா இருக்கேன் ...
கணக்கு போட்டு என் குடும்பம் நடத்தும் போது வைசியனா இருக்கேன் ... என் குடும்ப ஷேமத்திற்காக என் ஆத்து வேலைகளை எல்லாம் செய்யும் போது நான் சூத்திரனா இருக்கேன்..."

என்று தெளிவாகக் கூறி முடிக்க,


" பொய் சொல்லாம சொல்லுங்க... அப்போ உங்க சமுதாயத்துல இருக்கிறவங்க, இந்த வர்ணாஸ்ரமத்தை அடிப்படையா வச்சி ஜாதி பார்க்கிறதே இல்லையா ..."

" மொத்தம் நான்கு வர்ணம் தான் இருக்கு... ஆனா நடப்புல 4000 ஜாதி இருக்கே எப்படி ... சரி....நீங்க எந்த சமுதாயத்தை சார்ந்தவர் ..."

" *****"

" அப்போ உங்க சமுதாயத்துல இருக்கிறவங்க அத்தனை பேரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவாளா...யாருமே ஜாதி பாக்கறது இல்லையா .."

" அது எப்படி சார் சொல்ல முடியும் ... சில பேர் என்னை மாதிரி , பல பேர் சாமி கும்பிடுவாங்க, ஜாதி பார்ப்பாங்க ..."

" அதே மாதிரிதான் ...எங்க சமுதாயத்துல சில பேர் என்னை மாதிரி.. பல பேர் நீங்க சொல்ற மாதிரி ...
மகாகவி பாரதியாரை விட சிறந்த பிராமணன் லோகத்துலேயே இல்லங்கிறது என்னோட ஆணித்தரமான கருத்து ...
அவர் 14 மொழிகள் தெரிந்த வித்தகர்,
அவர் படிக்காத மூலநூல்களே கிடையாது ... எல்லாத்தையும் நன்னா படிச்சு புரிஞ்சுண்டு தான்

'ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்னு எழுதினேர்...'
உண்மைய சொன்ன ஒரே காரணத்துக்காக, அவர் வாழ்ந்த காலத்துல எங்க குலத்துல இருக்கிறவாளே அவரை பிராமணனே இல்லன்னு முத்திரை குத்தி ஒதுக்கி வச்சுட்டா... அவரை மனுஷனா கூட மதிக்கல... பாரதியாரோடு இறுதி ஊர்வலத்துல கலந்துண்டது வெறும் 14 பேர் தான்... நாளைக்கு இதே நிலைமை நேக்கும் வரலாம் ... ஆனா அதைப்பற்றி நேக்கு கவலையில்ல...

இந்த பாரத மண்ணுல நான் வாழ்ந்ததுக்கு அடையாளமா என்னால முடிஞ்ச சின்ன விஷயத்தை செய்துட்டு போறேன் ...
இங்க இருக்கிற யாருக்குமே மூலநூல்கள்ல இருக்கிற விஷயத்தை படிச்சு புரிஞ்சிக்கிற சமஸ்கிருத மொழி அறிவு இல்லை ... அதற்கான அக்கறையும் இல்லை..
அப்படியே புரிஞ்சிண்டாலும், முழுக்க முழுக்க சுயநலமா அவா அவா வசதிக்காக அதை நடைமுறைப் படுத்த விரும்பல ... இதுல பிராமண குலத்தை மட்டும் தப்பு சொல்லல அதுக்கு அடுத்து இருக்கிற எல்லா குலத்தையும் தான் சொல்றேன்.... இந்த சதுரங்கத்துல அதிகம் பாதிக்கப்பட்டது கடைசில இருக்கும் நான்காம் வர்ணத்தினர் தான்...
பாவம், அவாளுக்கு எதை நம்பறது , எதை நம்பக்கூடாது, எது உண்மை, எது பொய்னு எதுவுமே தெரியாம இன்னைய வரைக்கும் கஷ்டத்தை மட்டும் அனுபவிச்சிண்டிருக்கா... எல்லாரும் அவாளோட இந்த நிலைமையை மதமாற்றத்துக்காகவும் ஓட்டு அரசியலுக்காகவும் பயன்படுத்திண்டாலே ஒழிய,
அவாளுக்கு நல்ல வழி காட்டணும், சமுதாயத்துல இதைக்குறித்த புரிதல் ஏற்படுத்தணும்னு இன்னைய வரைக்கும் யாரும் அதற்கான முயற்சியை முன்னெடுக்கல...

சமஸ்கிருத மொழி அறிவே இல்லாம யார் யாரோ தங்களோட சுயநலத்துக்காக மூல நூல்களுக்கு எழுதின விளக்கவுரை, பொழிப்புரை போன்ற இடைச்சொருகலை படிச்சிட்டு அதன் அடிப்படையில ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி, அடுத்தவாளை நம்ப வச்சு
சொகுசா வாழ்ந்துண்டு இருக்கா அவ்ளோதான் .."என்றவரிடம் , விடாமல் வேறு ஒரு பத்திரிகையாளர்

" அப்போ சூத்திரர் என்ற நான்காம் வர்ணத்தினரை பற்றி உங்க கருத்து..."

" இவ்ளோ புரியும் படியா சொல்லியும் விடாம கேட்கறேளே ... சரி சொல்றேன்..
ஸ்ரீமத் பாகவதம் படிச்சிருக்கேளா.... அதுல நீங்க சொன்ன சோ கால்டு நான்காம் வர்ணத்தவரை பற்றி ரொம்ப தெளிவா சொல்லி இருக்கு ...
சமுதாயத்துல வேணுமானா முதல் வர்ணத்தினரான பிராமணர தர்மத்தை (செயல்கள்) உசத்தியா சொல்லி இருக்கலாம் .... ஆனா ஆன்மீகத்தை பொருத்தமட்டில் நான்காம் வர்ணத்தினரோட தர்மம் தான் உசத்தின்னு ஸ்ரீமத் பாகவதம் சொல்றது ...

மற்ற மூணு வர்ணத்தினரும் , கணக்குப் போட்டுத்தான் வேலை செய்வா, ஆனா நாலாம் வர்ணத்தினரோடது சேவை ...
சேவையை கணக்குப்போட்டு செய்யவே முடியாது ... லோகத்திலே எல்லா பணிகளை விட உசத்தியானது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம அடுத்த வாளுக்காக செய்யும் சேவை தான் ... அந்த சேவை தான் பகவானையே மயக்கும்...அவருக்கு உகந்ததும் கூட ... மருத்துவர்கள், விவசாயிகள் எல்லாம் இந்த பிரிவுல தான் வரா..
பிரம்மனின் பாதத்துல இருந்து
வந்தவானு மட்டமா எழுதி இருக்கிறதா சொல்றேளே,
பகவானோடு வாய், தோள், தொடையை விட பாதத்துக்கு தான் மரியாதை அதிகம் ...
"பாத தரிசனம் பாப விமோசனம் ",
பகவானோட பாதுகையான சடாரியை எல்லாரும் தலைகுனிஞ்சிண்டு வாங்கிக்கிறோம்....
அதைவிட பகவானோடு ஆஜானுபாகுவான சரீரத்தை அவரது தாமரைப் பாதங்கள் தான் தாங்கி நிற்கற்து.... அதனால தான் அதை தொட்டு சேவிக்கிறோம் .... அதே மாதிரி மகாலட்சுமியும் பகவானோடு பாதத்தை தொட்டபடி தான் அமர்ந்திருப்பா... தலைப்பக்கம் அமர்ந்திருக்க மாட்டா...நீங்க எல்லாம் பார்த்திருப்பேள்... இது எல்லாத்தையும் விட யாராவது காலமாயிட்டா,
உடனே என்ன சொல்றோம்,

அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம் அப்படின்னு தானே ...
பகவானின் தோளையோ, முகத்தையோ குறிப்பிடலயே... பாதத்தைத்தானே குறிப்பிடறோம்...
ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னொரு ஸ்லோகமும் இருக்கு,

"ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ
உச்யதே வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி:
ச்ரோத்ரிய உய்ச்யதே..."

இந்த ஸ்லோகத்துக்கு பிறப்பால அனைவரும் நான்காம் வர்ணத்தினரேன்னு அர்த்தம்...
இவ்ளோ உசத்தியானது நாலாவது வர்ணம் ...
இதைப்பற்றி இதுவரைக்கும் யாரும் ஏனோ பேசினதே இல்லை ...
என்னைப் பொருத்தவரைக்கும் வர்ணாஸ்ரமம் வட்டமாக தான் இருந்திருக்கணும் ... அதை இடைக்காலத்துல வந்த யாரோதான் படி நிலைகளா மாற்றி பிரித்தாளும் கொள்கையை புகுத்தி அவா வசதிக்கு தகுந்தா மாதிரி விளக்கவுரை எழுதியிருக்கணுங்கிறது என்னோட நீண்டநாள் அபிப்பிராயம்..."
என தன் கருத்தை தீர்க்கமாக பதிவு செய்தவரிடம்,

" சார் இன்னொரு கேள்வி ...நீங்க இன்னும் கொஞ்ச வருஷத்துல ரிட்டயர்டு ஆகப் போறீங்க... ஒரு வேளை உங்க பொண்ணோட இந்த கல்யாணம்,
நீங்க அரசியல்ல களம் இறங்கறதுக்கு அடிப்படையா இருக்குமா..."

" புரியல ..."

" இல்ல சார் ...நடக்கப் போற இந்த கல்யாணமே ஒரு பொலிட்டிக்கல் ஸ்டன்ட்டுன்னு(political stunt) பேசிக்கிறாங்களே ..." என்ற பத்திரிகையாளரை பார்த்து சிரித்தபடி

" 1939ல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களை எல்லாம், அழைச்சிண்டு, பல எதிர்ப்புகளை மீறி முதன் முதல்ல முத்துராமலிங்க தேவர், வைத்தியநாதய்யர், ராஜாஜி ஆலயப் பிரவேசம் நடத்தினா...அப்பவும் இதே மாதிரி அதை பொலிட்டிக்கல் ஸ்டன்டுன்னு தான் சொன்னா ...
என்ன பண்ண சொல்றேள்... நேக்கு அரசியல்ல ஆர்வம் இல்லை..
பெருந்தலைவர் காமராஜரையே தோற்கடிச்ச மண்ணு சார் இது ... முத்துராமலிங்க தேவர் மேலயே அவதூறு சொன்ன மண்ணு இது ... நானெல்லாம் எம்மாத்திரம் ... நேர்மையா இருக்கிறவாளுக்கு அரசியல் என்னைக்குமே ஒத்து வராது..."

வந்திருந்த நிருபர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது. சாதி பிரிவினையை தூண்டுவதற்காகவே வழக்கம் போல் தூக்கிபிடிக்கும் வர்ணாஸ்ரம ஆயுதமும் பலனளிக்கவில்லை என்றதும் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தடுமாறி தான் போயினர். அவர்களுக்கு வர்ணாஸ்ரம ஸ்லோகத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை, அதனுடைய உண்மையான விளக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அக்கறையும் இல்லை.

யாரோ ஒருவரின் உந்துதலால் எதையோ எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அவர்களை விட புத்திசாலித்தனமாக ருத்ர நாராயணன் நடந்துகொண்டது கோபத்தை மூட்ட, தாங்கள் வந்த வேலையை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற நோக்கில்,

" இப்ப எதுக்கு சார் திடீர்னு ஜாதிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடெல்லாம் பேசுறீங்க, உங்க சூழ்நிலைக்கு தேவைன்னா..." என குரலில் அளவுக்கதிகமான எள்ளலை விதைத்து அந்தப் பத்திரிகையாளர் ஒருவித கிண்டல் கலந்த தொனியில் கேட்டு முடிக்க, பதிலை எப்படித் துவங்குவது என ருத்ர நாராயணன் யோசித்து கொண்டிருக்கும் போதே ராவுத்தர்

" தம்பி....ஐயரோட பொண்ணுக்கு கல்யாணம்னு தெரிஞ்சுகிட்டு வேகமா நோட்டு பேனாவை எடுத்துகிட்டு கேள்வி கேட்க கிளம்பி வந்தியே, ஐயரை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்தியா நீ .... இன்னைக்கு நேத்திக்கு இல்ல
ஐயரு இருபது வருஷமா பாரதியார் வேத பாடசாலைனு ஒன்ன நடத்திக்கிட்டு வர்றாரு... அதுல சேர்றதுக்கு, இறைபக்தி இருக்கணும், அசைவம் சாப்பிடக்கூடாது, நேரமா எந்திரிச்சு அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சு முடிச்சு வந்துடனும், ரொம்ப ஒழுக்கமா இருக்கணும், இதெல்லாம்தான் அந்தப் பாடசாலைல சேர தகுதிகள், எல்லா ஜாதியினரும் சேரலாம்..., எல்லாரும் பூணூல் போட்டுக்கிட்டு வேதமும் கத்துக்கலாம்..."
என்றவரின் பதில் , கேட்டவரை அடித்தது போல் இருக்க,

" சார், கடைசியா ஒரு நேரடி கேள்வி , உங்க பொண்ணும் வாசு தேவரோட மகனும் ரொம்ப நாளா காதலிக்கிறதாகவும், இப்ப கல்யாணம் பண்ணியே ஆக வேண்டிய நிலைமையில தான் ( இந்த வரியில் ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்து) இந்த கல்யாணமே இப்ப நடக்கப்போறதாகவும் பேசிக்கிறாங்களே... இது உண்மையா சார் ..." என்ற வேறொரு பத்திரிக்கையாளரின் கேள்வி, ருத்ர நாராயணனின் கண்களை கோபத்தில் சிவக்க செய்ய ,தன் பெண்ணை பற்றிய தரம் தாழ்ந்த பேச்சை கேட்டு துடித்துப் போனவர், சடுதியில் அதனை மறைத்துக்கொண்டு, அதற்கு பதில் சொல்ல முற்படும் அதே நேரத்தில் அவர் அருகே அமர்ந்திருந்த ராவுத்தருக்கு கோபம் கரையை கடந்திருக்க, கோபத்தைக் காட்ட விருட்டென்று அவர் எழ எத்தனிக்கும் போது,
அவருடைய கரங்களை அழுந்தப் பற்றி,தடுத்த ருத்ர நாராயணன், சன்னமாக அதே சமயத்தில் அழுத்தமான குரலில்,

" இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லக்கூடாது ... காலம் பதில் சொல்லும் ... நீங்க எல்லாரும் கிளம்பலாம் ..." என பேட்டியை முடித்துக் கொண்டார்.

அன்றிரவு வெங்கடேஷை சந்தித்து, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்ததை அப்துல் கூற, வெங்கடேஷுக்கு ரத்தம் கொதித்தது.

" வேதா ரெண்டு மாசம் கர்ப்பமாம்... அதனால தான் காதலிச்ச உனக்கே , வேற வழியில்லாம ஐயரு கட்டி கொடுக்கிறாராம்... அப்படின்னு அந்த தரம் கெட்ட பத்திரிக்கையில ஜாடைமாடையா வந்திருக்குன்னு பேசிக்கிறாங்க வெங்கி...." என்றார் அப்துல் சொல்ல கூச்சப்பட்டு கொண்டு மிகுந்த தயக்கத்தோடு .

வேதாவின் நிழலைக் கூட வெங்கடேஷ் தொட்டதில்லை... 3 நாட்களுக்கு முன்பு தான் வேதாவிடம் முதன்முறையாக 10 நிமிடம் தனியாக பேசி இருக்கிறார் என்ற நிலையில் அவரது ஆத்மார்த்தமான காதலுக்கு கிடைத்திருக்கும் அவப்பெயர் அவரை வருந்தச் செய்ய,

" ஓ காட் ...அன்னைக்கு நீ சொன்ன அரசியல் இப்பதாண்டா எனக்கு தெளிவா புரியுது ..."

" ஐயரு உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாதுன்னு எப்படி எப்படியோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க ... முடியலன்ன உடனே ... இப்ப வேதாவை பத்தி தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க... ஒருத்தர் வேற ஜாதிக்கு பொண்ணை கட்டி கொடுக்கிறாங்கன்னாலே, நம்ப ஆளுங்க வித்தியாசமா தான் யோசிப்பாங்க...
ஒன்னு அந்த பொண்ணு நடத்தை சரி இல்லம்பாங்க.... இல்ல அந்த குடும்பமே சரியில்லம்பாங்க... இவங்களுக்கு வேற மாதிரி நேர்மையா யோசிக்கவே தெரியாது ...
இதான் இங்க நடக்கற அரசியல்....." என்றவர் தொடர்ந்து

" ஐயரு அனாயாசமா, அவங்க கேட்ட எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லிக்கிட்டே வந்தாராம் ...கடைசியா கேட்ட இந்த கேள்விக்கு தான் துடிச்சி போய்ட்டாருன்னு சொல்லி வாப்பா வருத்தப்பட்டாரு..." என்று முடித்தார் அப்துல்.

" எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் டா..." என்றார் வெங்கடேஷ் அழுத்தமான கோபத்தோடு.

" டேய், இதே பதிலை தான் ஐயரும் சொன்னாராம் ...வாப்பா சொன்னாரு... எப்படிடா நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க ..." என வியந்தார் அப்துல்.

மகாபாரத காலத்திலிருந்து இன்று வரை ஒரு பெண்ணின் கற்பு நெறியை காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்வது தான் பல துரியோதனர்களின் அடிப்படை குணம் , அதற்கு வேதா மட்டும் விதிவிலக்கா என்ன ...

அன்று மாலையில் வெளியாகும் நாளிதழிலேயே,வேத வெங்கடேஷின் திருமண செய்தியை
உள்ளூர் செய்திகளில் தலைப்பு செய்தியாகவே பத்திரிக்கைகள் வெளியிட்டன.

பெரும்பாலான ஊடகங்கள் இன்று மட்டுமல்ல, என்றுமே பத்திரிக்கை தர்மமான நடுநிலை தன்மையை பின்பற்றியதே இல்லை...
சில பெரும் பத்திரிகைகள், தங்களது கற்பனை வளத்தை வேதா-வெங்கடேஷ் திருமண விஷயத்தில் இலை மறை காய் மறையாக எழுதிய நிலையில், சில மூன்றாந்தர பத்திரிகைகள், அருவருக்கத்தக்க வகையில் கட்டிப்புரண்டனர், காதல் செய்தனர் என கற்பனை குதிரையை தட்டிவிட்டு தங்களது பத்திரிக்கையின் விற்பனையை அதிகரித்து காசு பார்த்தனர் ..

நல்ல வேளையாக அம்மாதிரியான பத்திரிகைகள் குடும்பப் பெண்களின் கைகளுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவற்றின் தாக்கம் மட்டும் ருத்ர நாராயணனையும், வெங்கடேஷையும் செவ்வனே சென்றடைந்திருந்தாலும் ,
அவர்களிருவரும் அதுகுறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவும் இல்லை.

செய்தித்தாள் செய்தியை பார்த்து ஒரு புறம் அக்ரஹாரம் திட்டித் தீர்க்க... மறுபுறம் அரசியல் கட்சிகள் பற்றி எரிந்தன ..

ருத்ர நாராயணனை பிராமண சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு சாரார் கொடிபிடிக்க, ருத்ர நாராயணனின் சில பிராமண நண்பர்கள் மற்றும் அவர் கொள்கையை ஆதரிப்பவர்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்க, கோவில் மற்றும் பிராமண இல்லங்களில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ருத்ர நாராயணனையும் அவரது குடும்பத்தையும் அழைக்கக்கூடாது , அவர்கள் குடும்பத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என விவாதம் இரு தரப்புகளுக்கிடையே தீவிரமாக நடைபெற்றது .

மரகதம் மற்றும் வேதா இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதோடு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமும் இல்லை என்பதால் அவர்களுக்கு செய்திகள்
ஆனந்தவல்லியின் மூலமே சென்றடைய வேதாவை விட துடித்துப் போனது மரகதவல்லி தான்.

ஆனால் அத்தகைய நிலையிலும், பத்திரிகை செய்தியை குறித்து, வேதாவிடம் நேரடியாக, ஒரு வார்த்தை அவர் பேசவில்லை. வழக்கம் போல் தன் கோபத்தை ஆழ்ந்த அமைதியிலேயே வெளிப்படுத்தினார்.

மரகதத்தை சென்றடைந்த செய்தி இதுதான். வேதாவும் வெங்கடேஷும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக காதலிக்கின்றனர் . காடு கம்மாயிலிருந்து சினிமா டிராமா வரை சுற்றித் திரிகின்றனர் என்பதே.

முதல் தர பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளில் வந்த செய்திகள் அரசல்புரசலாக வேதாவின் காதுகளுக்கு எட்டினாலும், அது குறித்து பெரிய வருத்தமோ, கோபமோ அவருக்கு தோன்றவில்லை ... காரணம் வதந்திகளுக்கு வாழ்க்கையில் வழி விடவோ வருத்தப்படவோ கூடாது.... நம் மனதிற்கு நாம் நேர்மையாக இருந்தால் போதும், மற்றவை கடவுளின் கையில் ...என்று சிறுவயது முதல் சொல்லி சொல்லி
வளர்த்த ருத்ர நாராயணனின் வளர்ப்புதான்.


நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ருத்ர நாராயணன் , காரிலிருந்து இறங்கியதும், அவசரமாக அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற ஆனந்தவல்லி

" ஏண்டா நோக்கு பித்து பிடிச்சு
போயிருக்கா ... ஏன் அப்படி பேப்பர்ல பேட்டி கொடுத்த... அக்ரஹாரமே காறி துப்பற்து... இதெல்லாம் உண்மையா டா ..."
என்றவரின் கண்களில் மருந்து அளவிற்குக் கூட கவலையோ கோபமோ இல்லை... மாறாக ஆனந்தம் கூத்தாடியது ... யாரையோ பழி தீர்த்து விட்டோம் என்ற பளபளப்பு தெரிந்தது ..
வினாடிக்கும் குறைவான இந்த மாற்றத்தை, ருத்ர நாராயணன் அறிந்து கொண்டதோடு, பிரச்சனையின் மூலமே தன் தமக்கை தான் என்பதையும் செவ்வனே புரிந்துகொண்டு

"அதெல்லாம் பொய் ... என் பொண்ணு நெருப்பு ... நேக்கு என் பொண்ண பத்தி நன்னா தெரியும் ..."

" அப்ப நல்லதா போச்சு... நம்ப அக்ரஹாரத்துலயே யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிடலாமே..."

" அப்ப மட்டும் அவ மேல சுமத்தின கலங்கம் போயிடுமா... கல்யாணத்துக்கப்புறம் தினம் தினம் என் பொண்ணு தீக்குளிப்பா..." என்றார் ஆனந்தவல்லி பரப்பி விட்ட வதந்தியினால் தானே இத்தனை பிரச்சனை என்பதை உணர்ந்து தீராத கோபத்துடன்.

" இருந்தாலும் நம்மளவா மாதிரி வராது...இவாலெல்லாம் வேத்து மனுஷா , நாளைக்கு கல்யாணம் பண்ணிண்டு நம்ம பொண்ணை விட்டுட்டு போயிட்டான்னா...."

" எப்படி உன் ஆத்துக்காரன் சாரங்கன் உன்னை விட்டுட்டு போனானே அது மாதிரியா... பிராமணன்னா தோளை சுத்தி பூணூல் இருந்தா மட்டும் போதாது, பிராமணனுக்கான தர்மம்னு சொல்லியிருக்கிற நேர்மை, நியாயம், ஒழுக்கம் இருக்கணும்..."

" என் ஆத்துக்காரருக்கு பட்டாளத்துல சேரணும்னு ஆசை அதனால போய் சேர்ந்துட்டேர்..."

" பொய் ...எத்தனை வருஷமா இதே பொய்யை எல்லாரிண்டையும் சொல்லுவ... மத்தவாளுக்கு வேணா உன் ஆத்துக்காரனை பத்தி தெரியாம இருக்கலாம்... நேக்கு எல்லாம் தெரியும்...
கல்கத்தாவுல பத்து பொண்ணுங்கள வச்சு பிராத்தல் பண்ணி போலீஸ்ண்ட மாட்டிண்டது...
பொண்ணுங்கள கடத்தினது, கஞ்சா கடத்தினதுன்னு அவன் மேல இல்லாத கேஸே கிடையாது...பிராமணனுக்கு பிள்ளையா பிறந்தா பிராமணன் ஆகிட முடியாது ... ஒழுக்கம் இருக்கணும் ...
அது அவனிண்ட துளிகூட கிடையாது...
ஊரை வேணா நீ ஏமாத்தலாம் ,உன் தம்பி என்னை ஏமாத்தவே முடியாது... எல்லாம் தெரிஞ்சுண்டு ஊருக்கே நீதி சொல்ற நேக்கு , என் ஆத்துல என்ன நடக்கிறதுன்னு தெரியாதா என்ன.."


" ஏன்டா அபாண்டமா பொய் சொல்ற...
உன் ஆத்துல உக்காந்து சாட்டுண்டு இருக்கேன்னு இல்லாத பொய் எல்லாம் சொல்லுவியா... அக்ரஹாரமே சபிச்சிடுத்துன்னா நாளைக்கு உன் பொண்ணு சுமங்கலியா வாழ மாட்டாளேங்கிற ஆதங்கத்துல தான் சொன்னேன் ..." என்றதும் ருத்ர நாராயணனின் கோபம் கரையை கடக்க,

" கொஞ்சம் வாய மூடறீயா... யாரோட சாபமும் அவளை ஒன்னும் பண்ணாது ...
அவளை பெத்தவன் நான் சொல்றேன்.. அவ தீர்க்க சுமங்கலியா சந்தோஷமா வாழத்தான் போறா... ஆனா உன்னை அக்ரஹாரமே தலையில தூக்கி வச்சு கொண்டாடறதே அப்ப நீ ஏன்க்கா அமங்கலியா இருக்க ..." என்றதும் ஆனந்தவல்லியின் முகம் பேயறைந்தது போல் மாற

" நான் அமங்கலியா... என்னடா உனக்கு பித்து முத்தி போயிடுத்தா..."

" அளவுக்கு அதிகமா குடிச்சிட்டு ரயில் முன்னாடி பாஞ்சி உன் ஆத்துக்காரன் உயிரை விட்டு நேத்தோட ஒரு வருஷம் ஆயிடுத்து ...
பட்டு மாமி ஆத்து அட்ரஸ்ல, உனக்கும் உன் ஆத்துகாரனுக்கும் லெட்டர் போக்குவரத்து இருக்குன்னு
நேக்கு தெரியாதா ... அவாத்து போனிலிருந்து நீ அடிக்கடி அவனோடு பேசறதும் நேக்கு தெரியும்.... " என்றதும்
ஆனந்தவல்லியின் கை கால்களில் ஒருவித நடுக்கம் ஏற்பட, உடனே அதனை சுதாரித்துக் கொண்டவர்,

" அப்ப, ஆத்துக்காரர் போயிட்டார்னு பொட்டு பூவைவெல்லாம் எடுத்துட்டு தலையை வழிசிண்டு மொட்ட பாட்டியா இருக்கணும்னு ஆசைப்படறியா..." என்றார் வன்மமாக.

" அப்படி நீ இருக்கணும்னு நான் ஆசைப்படாததால தான் இவ்ளோ தெரிஞ்சும் இத்தனை நாளா உன்னிண்ட கேட்டுகல ...அதுல நேக்கு உடன்பாடும் இல்ல... எம் பொண்ணை அப்படி சொல்லாதேன்னு சொல்ல வரேன்..."

" ருத்ரா, இந்தக் கல்யாணம் மட்டும் நடந்ததுன்னா, அக்ரஹாரமே உன்னை ஒதுக்கி வச்சிடும்டா... அப்புறம் ரங்கநாதனுக்கு கல்யாணமே ஆகாது உன்னிண்ட யாரும் சம்பந்தம் வச்சிக்க மாட்டா... ஏன் இந்த விஷப்பரீட்சை ...
வேற மாப்பிள்ளையே நோக்கு கிடைக்கலையா... அப்படி என்ன பெரிய தகுதி இருக்கு, வாசுவோட மகனுக்கு..."

" ஒரு பிராமணனுக்கான அத்தனை தகுதியும் அந்த பிள்ளையாண்டான் கிட்ட இருக்கு...
பிராமணன் நேர்மையா, உண்மையா, ஒழுக்கத்தோட இருக்கணுங்கிறதை விட , நேர்மையா உண்மையா ஒழுக்கத்தோட இருக்குற எல்லாருமே பிராமணன் தான் ... அந்த விதத்துல வாசுவோட மகன்ணின்ட அது எல்லாமே இருக்கு ...

இதை விட வேற என்ன தகுதி வேணும் ... நேக்கு மாப்பிள்ளையா வர...
எண்னிண்ட யார் சம்பந்தம் வச்சுக்கணும்னு பகவான் முடிவு பண்ணுவேர்...
எதுவும் என் கையில இல்ல ...
என் மனசுக்கு சரின்னு படறதை நான் பண்றேன் ..." எனக் கூறியவர் , தன் அப்பாவி மனையாள் ஏதும் புரியாமல் தவித்துக் கொண்டிருப்பாள் என்றுணர்ந்து விஷயத்தைக் கூற தன் அறை நோக்கி நடை போட்டார்.
மறுநாள் அவர் சந்தேகப்பட்ட, அவர் பெண்ணின் திருமணத்தை சுற்றி நடக்கும், அரசியல் சூழ்ச்சிகளை அறிந்து கொள்ளப் போவது தெரியாமல்.

அவர் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆனந்தவல்லி,

"எப்படி உன் பொண்ணு கல்யாணத்த நடத்துறேன்னு நானும் பார்க்கிறேன்... நடத்த விட்டுடுவோமா நாங்க..." என வன்மத்தோடு சன்னமாக வாய்விட்டே குமுறியவர் அதற்கான திட்டத்தினை ஏற்கனவே சில அக்ரஹார ஆசாமிகளோடு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இணைந்து தீட்டி விட்டே வந்திருந்தார் .


தகிப்பாள்
 
அத்தியாயம் 6


மரகதத்தை சந்திப்பதற்காக ஆவலுடன் வந்த ருத்ர நாராயணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


தான் வரும் நேரம் தெரிந்து எதிர்கொண்டு அழைக்கும் மனையாள் கண்ணில் படவில்லை என்றதுமே பிரச்சனையின் தீவிரம் அவரை எட்ட, இரவு உணவை கூட வேதா பரிமாறியதை வைத்தே மனையாளின் கோபம் , அவருக்கு தெள்ளத் தெளிவாக தெரிய,
எதுவும் பேசாமல் உணவு உட்கொண்டவர் தன் அலுவலக அறைக்குச் சென்று வழக்கம் போல் , சில கேஸ் கட்டுகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.


சற்று நேரத்திற்கெல்லாம், அவர் அறையின் வாயிலில் ஏதோ நிழலாடுவது போல் தெரிய, அவரது மனையாளே தான்...


மரகதம் அறையை அடைவதற்கு முன்பே, அவர் தலையில் சூடியிருந்த சம்பங்கி பூவின் வாசம், கஸ்தூரி மஞ்சளின் மணம், மெல்லிய கொலுசொலி என அனைத்தும் அவரது வருகையை பறைசாற்ற, மருதாணி இட்ட விரல்களால் மடிசாரின் முந்தானையை பற்றிக்கொண்டு தயங்கி நின்றவரை கீழ் கண்ணாலேயே நோட்டமிட்ட ருத்ர நாராயணன்,


" யாரது..." என்றார் வேண்டுமென்றே.. அவரது அலுவலக அறைக்கு அவர் அனுமதியின்றி மரகதவல்லியை தவிர வேறு யாருக்கும் வருவதற்கு துணிச்சலும் இல்லை, அனுமதியும் இல்லை என்பதை அறிந்தே.


" நான் தான் மரகதம் வந்திருக்கேன் ..." என்றார் வெள்ளந்தியாக.
இது தான் மரகதம் அவரது கோபம் கூட குழந்தைத்தனமாக தான் வெளிப்படும்.
அவ்வளவு நேரமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த ருத்ர நாராயணனுக்கு அந்த குரலை கேட்டதும், ஒரு வித நிம்மதி, மென் சிரிப்பு என
அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு எழ,


" என்னம்மா ..." என்றார் வாஞ்சையாக.


" நம்ம வேதாவை பத்தி பேப்பர்ல வந்ததெல்லாம் உண்மையான்னா.... " என மரகதம் கமரிய குரலில் கேள்வி எழுப்ப,


" நீ நம்பறியா ... அவளை வளர்த்தது நீயும் நானும் டி... நம்ம குழந்தையை பத்தி நமக்கு தெரியாதா..."


" பின்ன ஏன் என்ணின்ட கூட கலந்துக்காம அப்படி ஒரு பேட்டி கொடுத்தேள்..."


" உன்ணின்ட சொல்லனும்னு நினைச்சேன்ம்மா, அதுக்குள்ள என்ன என்னமோ ஆயிடுத்து... அதான் அப்படி பேட்டிக் கொடுக்க வேண்டியதா போயிடுத்து ..." என்றவர் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் பகிர்ந்து,


" வேதாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கக்கூடாதுன்னு பெருமாள வேண்டின்டு தான், அவ விருப்பத்தை கேட்டேன் ... அவ அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அவ கண்ணே ஒத்துண்டுடுத்து...


அப்புறம் இந்த கல்யாணத்துல அவளுக்கு இஷ்டம் இருக்கிறதா நேரடியாவும் சம்மதம் சொல்லிட்டா... நான் நினைச்சிருந்தா, வேதாயிண்ட எதையும் பேசாம, அந்தப் பையனிண்ட , என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டானு பொய் சொல்லியிருக்கலாம்....


அவனும் வழக்கம் போல பாம்பே போயிட்டு இருப்பான் ...
ஆனா 'தன்னெஞ்சறிய பொய்யற்கனு..' திருவள்ளுவர் சொல்லியிருக்கேரோல்யோ ... பொய் சொன்ன பாவத்துக்கு காலத்துக்கும் என் மனசாட்சி என்னை கொன்னுண்டே இருக்கும் ..
அது மட்டும் இல்ல, வேதாவோட முடிவுல பொய் சொல்லமாட்டீங்கன்னு நம்பறேன்னு , என் மேல முழு நம்பிக்கை வச்சு சொன்ன அந்த பையனை நான் எப்படிம்மா ஏமாத்தற்து....


இது எல்லாத்தையும் விட , நம்ம பொண்ணு அவனுக்கு பதில் சொல்லலைன்ன உடனே, அவ பின்னாடி சுத்தாம, என்னை நேருக்கு நேர் சந்திச்சு பொண்ணு கேட்டான் பாரு..
அந்த தைரியம் நேக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ம்மா ...


மேடையில மூச்சுக்கு 38 தடவை 'சாதி வேறுபாடுகளை களைந்து சமூக நீதியை நிலை நாட்டுவோம்னு' பேசற நான் என் வாழ்க்கையில அதை கடைபிடிக்கணுமோல்யோ....
இல்லன்னா மேடைப்பேச்சு
மேடையோடு போச்சுன்னு ஆயிடும்...


ரெண்டு நாள் முழுக்க டைம் எடுத்துண்டு, அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சுப் பார்த்ததுல , அஞ்சு வருஷ சர்வீஸ்ல ஆறு ட்ரான்ஸ்வர் ... மத்திய பிரதேஷ்ல மூணு, மகாராஷ்டிராலயே மூணு ட்ரான்ஸ்வர் ...
கை சுத்தம், இத்தனை வருஷத்துக்குள்ள ஏகப்பட்ட சாதனை ...நேர்மை ... கண்ணுக்கு லட்சணமா, ஒழுக்கத்தோட நன்னா படிச்சு நல்ல உத்தியோகத்துல இருக்கிற அந்த பையனை..." என்று நிறுத்தியவர்,
'அவரை' வேணாம்னு சொல்ல என்ணின்ட காரணமே இல்லம்மா..." என முடித்தார்.


" உங்களை விட பெரிய பதவியோ..." என்ற மரகதத்தின் கண்ணில், வெகு சிறு பொறாமையும் நிறைய ஆர்வமும் தெரிய, அதைக்கேட்டு வாய்விட்டே சிரித்த ருத்ர நாராயணன்,


" என் பதவியும் அவர் பதவியும் கம்பேர் பண்ண முடியாது ... அவா குற்றவாளிகளை அரஸ்ட் பண்ணி கோர்ட்டுல நிறுத்தும் போது , நாங்க சொல்றதுதான் சட்டம் ... அதே மாதிரி ஏதாவது கலவரம்னா அவா எடுக்கிற முடிவுல கோர்ட்டு தலையிட முடியாது ....
மொத்தத்துல இந்த வயசுல அவர் இந்தப் பதவில இருக்கிறது பெரிய விஷயம் ..." என்றார் குழந்தைக்கு சொல்வது போல் .


" ஆனா நீங்க என்ன சொன்னாலும், நேக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல ... என்னப்பா நேக்கு கொடுத்த என் வைரத்தோடு வைர அடிக்கை எல்லாம் கொடுக்க மாட்டேன்..." என்று தன் அதிகபட்ச கோபத்தை , தன்னுடைய அதிகபட்ச அறிவை பயன்படுத்தி வெளிப்படுத்தினார் மரகதம் . சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்பது போல், வைரத்தோடு இல்லை என்றால் திருமணம் நடக்குமா என்பது தான் அவருடைய அடிப்படை கேள்வி.


" அது சரி, நீ என்னைக்கு ருத்ர நாராயணனோட ஆம்டியாளா இருந்திருக்க... சக்கரவர்த்தி ஐயங்காரோட பொண்ணா தானே இருந்திருக்க..." என்று குறும்பாக கூறிய ருத்ர நாராயணனை முறைத்துப் பார்த்தவர்


" உங்கணின்ட பேசும் போது எல்லாம் சரியா தான் படறதுன்னா... ஆனா அக்ரஹாரத்துல பேசிக்கிறதையெல்லாம் அக்கா சொல்லும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.... ஏனோ காலம் காலமா பெரியவா சொல்லிக்கொடுத்து வந்ததெல்லாம் நாம மாத்தறது சரியா படலன்னா..." என்றவரின் பேச்சில் ஆனந்தவல்லியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்டவர், அதனை வெளிக்காட்டாமல்


" பாரதியார் நம்மெல்லாரையும் விட பெரியவர் தானே... நீயும் படிச்சிருக்கயோல்யோ...
ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லியிருக்கேர் இல்ல ...
அவர் சொன்னதை தான் நான் செய்றேன் சரியா ..." என்றவர்,


" ஒன்று மட்டும் நினைவுல வச்சுக்கோ... இப்ப நீ சுமங்கலியா நின்னுண்டு என்னிண்ட கேள்வி கேட்டுண்டு இருக்கேன்னா... அதுக்கு வாசு தான் காரணம் ..." என்ற பேச்சை கேட்டதற்கு பின்னும் கேள்வி எழுப்புவதற்கு மரகதத்திற்கு என்ன பைத்தியமா... எதுவும் பேசாமல் கண் கலங்கியவர், அதற்கு மேல் ருத்ர நாராயணனையே நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டு நிற்க


" நீ நிம்மதியா தூங்கு... நாளைய பொழுது நமக்கு நன்னாவே விடியும் பகவான் நம்ம கூடவே இருக்கேர் சரியா ..." என்று மனையாளுக்கு ஆறுதல் கூறுவது போல், தன் மனதினையும் தேற்றிக் கொண்டார் ருத்ர நாராயணன்.


****************************************


இடம் : முன்னாள் எம்.எல்.ஏ
வீர மாணிக்கம் இல்லம்.


" டேய், உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூறுங்கிறதே இல்லயாடா ... ஒரு நாலு நாள் ஊர்ல இல்லன்னா, இப்படித்தான் செஞ்சு வப்பீங்களா ...
எதுக்குடா ஐயர போட ஆள் அனுப்பனீங்க..." என வீர மாணிக்கம் கேள்வி எழுப்ப,


" தலைவரே, நாங்க ராமலிங்கத்தோட போயி, எவ்வளவோ பேசிப் பார்த்தும்,
வழக்கோட தீர்ப்ப ராவுத்தர் உறவு காரனுக்கு சாதகமா சொன்னதோட மட்டுமில்லாம, நம்ம ஆளுங்கள குண்டர் சட்டத்துல உள்ள தூக்கி வச்சுட்டான் அந்த ஐயரு...அதான் ..." என்றான் அந்த கட்சியின் தலைசிறந்த ரவுடி.


" டேய் ஏற்கனவே நாம ஆட்சில இல்லடா ... இப்ப அந்த ஐயரு மேல கைய வச்சிட்டதால, இந்த தொகுதில அந்த ஐயருக்கு இருந்த செல்வாக்கு இப்ப பல மடங்கு அதிகமாயி போச்சு ...
சும்மாவே அந்த ஆள் பேச்சைக் கேட்டு தான் இந்த தொகுதி மக்களே ஓட்டு போடுவாங்க ... இப்ப இருக்கிற நிலைமையில அந்த ஆள் சுயேட்சையாவோ இல்ல ஆளுங்கட்சில நின்னாலோ, நிச்சயமா அவன் தான் ஜெயிப்பான்..." என வீர மாணிக்கம் விளக்கிக் கொண்டிருந்த போது


" ஐயா, உங்களுக்கு உங்க பிரச்சனை எங்களுக்கு எங்க பிரச்சனை ..." என்றார் ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்கத்தின் தலைவர்.


" உங்களுக்கு என்னைய்யா பிரச்சனை. .. புரியல..." - வீர மாணிக்கம்.


" ஜாதி சங்கம் இருக்கறதால தான், ஜாதி கட்சி இருக்குது... அந்த ஐயரு கொடுத்த பேட்டியை பாத்தீங்களா...
வயிறு எரியுது ...
ஐயங்கார் பொண்ணை தேவர் கட்ட போறான்... அதை ராவுத்தர் கூட இருந்து அறிவிக்கிறான் ... இதே நிலைமை போச்சுதுன்னா ... நாங்களெல்லாம் ஜாதி சங்கத்தைக் களைச்சிட்டு,பழையபடி கடப்பால போய் கல்லு உடைக்க வேண்டியது தான் ...
ஜாதி சங்கத்தையே களைச்சிட்டா ஜாதி கட்சியை எப்படிய்யா நடத்தறது...
வனத்துல ஒண்ணா மேஞ்சாலும், இனம் இனத்தோடு தான் சேரணும் தலைவரே ...


ஜாதி விட்டு ஜாதி அவனவன் கல்யாணம் கட்டிகிட்டு போறதுக்கா நாங்க ஜாதி சங்கம் வச்சு நடத்திக்கிட்டு வர்றோம்...
எனக்கு தெரியாது இந்த கல்யாணம் நடக்கக் கூடாது தலைவரே ... இந்த செய்திய அரசல்புரசலா கேள்விப்பட்ட போதே ரொம்ப கடுப்பா ஆயிடுச்சு.. இப்ப பேப்பர்ல வேற அந்த ஐயரு பேட்டி கொடுத்துட்டான்... நாளைக்கு ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்றவன் எல்லாம் இவனுங்கள முன்னுதாரணமா சொல்லுவானுங்க ..." என முகாரி ராகம் வாசித்தார் அந்த ஜாதி கட்சி தலைவர்.


"யோவ், உன்னை விட எனக்கு தான்யா நஷ்டம் அதிகம்...
இப்ப தமிழ்நாட்டுல சூழ்நிலையே சரியில்ல... இந்த தொகுதி எம்எல்ஏவும் இப்பவோ அப்பவோன்னு இருக்கான் ... ஒரு வேளை இடைத்தேர்தல் வரலாம், இல்ல ஆட்சியே கூட கலையலாம் ...
அந்த ஐயரும் இன்னும் கொஞ்ச நாள்ல ரிட்டையர் ஆக போறான் ... அவனுக்கு விருப்பம் இல்லன்னாலும், இப்ப இருக்கிற நிலைமையில இந்த தொகுதி ஜனங்க, அந்தாள வேலையை ராஜினாமா செய்ய வச்சு, அரசியல் களத்துல இறக்கி, ஜெயிக்க வச்சுடுவாங்க போல இருக்கு...
இப்படி என் அரசியல் வாழ்க்கைக்கு தான் ஆபத்துன்னு பார்த்தா ...என்னோட நீண்ட நாள் திட்டமும் வீணா போயிடுச்சு ...


நான் நேரடியா இந்த லேண்ட் (land)கேஸ்ல சம்பந்தப்படாம, ராமலிங்கத்தையும், அவன் சாதியை சேர்ந்த ஒரு நாலஞ்சு பேரை வச்சிதான் கேஸ் போட வச்சேன்...
கேஸ் ஜெயிச்சு இருந்தா, 10 லட்சம் போற அந்த இடத்தை, வெறும் பத்தாயிரம் கொடுத்து ராமலிங்கதோட ஆளுங்க கிட்ட இருந்து வாங்கி சாராய ஆலை கட்டலாம்னு இருந்தேன்... டாக்குமெண்ட் எல்லாம் ராவுத்தர் உறவுக்காரன் சைட்ல கரெக்டா இருக்குன்னு அவன் பக்கம் தீர்ப்பு ஆயிடுச்சு ....
அதோட நாம பகுத்தறிவு, சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமூக முன்னேற்றம்னு வெறும் வாயில வடை சுட்டு , அரசியல் செஞ்சுகிட்டு இருக்கோம் .... ஆனா அந்த ஐயரு சத்தம் இல்லாம செய்துகாட்ட போறான் ... இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கைக்கே மூடுவிழா நடத்த வேண்டியது தான்.... " என்ற வீர மாணிக்கம் ஓரிரு நொடி தீவிரமாக யோசித்து விட்டு,


" சாதாரணமா இந்த கல்யாணம் நிக்ககூடாது ... முதல்ல மதக் கலவரம் வெடிக்கணும், அதனால கல்யாணம் நிற்கணும் ... அந்த ருத்ர நாராயணன் கொடுத்த பேட்டி பொய்னு ஜனங்களை நம்ப வச்சு , மக்கள் மத்தியில அவனுக்கு இருக்கிற செல்வாக்கை அடியோட ஒன்னும் இல்லாம பண்ணனும் ... அதுக்கு ஒரே வழி தான் இருக்கு ...
நம்ம ஆளுங்களை வச்சு, ராவுத்தரை போட்டுட்டு, பழிய தூக்கி வாசுதேவனோட ஆளுங்க மேல போட்டுட்டா.... நாம எதிர்பார்த்த மதக் கலவரம் வெடிக்கும் ...எனக்கும் இந்த நிலம் விஷயத்துல அந்த ராவுத்தரை பழி தீர்த்தா மாதிரி ஆயிடும் ... ஏன்னா அந்த ராவுத்தர் தான் அந்த நிலம் சம்பந்தமா முழுக்க முழுக்க ஆதாரத்தை தாக்கல் பண்ணி, இந்த கேஸ் ஜெயிக்கிற வரைக்கும் போராடினான்...
அதுமட்டுமல்ல
வாசு தேவரோட உறவுக்காரன் சார்பா ஏற்கனவே கோர்ட்டுல ராமலிங்கம் ஆஜரானதால, நில வழக்குல தோத்த கோவத்துல , வாசுதேவன் சொல்லிதான் ராவுத்தரை போட்டுட்டாங்கன்னு ராமலிங்கத்தை வச்சு, வதந்தியை பரப்பினா, நாம எதிர்பார்த்த மத கலவரம் வெடிக்கும் , ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாவான் ...
இப்படித்தான் ஒரே கல்லுல மூணு மாங்கா அடிக்கணும்..." என வன்மத்தோடு முடித்தார் வீர மாணிக்கம்.


" சரி தலைவரே, கல்யாணம் எப்படி நிக்கும் ... அந்த வாசுவோட பையனை போட்டா தானே கல்யாணம் நிக்கும் ...." என ஆர்வத்தோடு அந்த ஜாதி கட்சி தலைவர் கேள்வி எழுப்ப


" உனக்கு ருத்ர நாராயணனை பத்தி தெரியாது ...இப்படி ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு இருக்கும் போது அந்த சமுதாயத்துலயா தன் பொண்ணை கொடுப்பான்... நிச்சயமா கொடுக்க மாட்டான் ... நாம நினைச்ச மாதிரி கல்யாணம் நிக்கும்...
ருத்ர நாராயணன் கொடுத்த வாக்கை காப்பாத்தலன்னு நாம நம்ம சைடுல கிளறி விட்டா, அந்த ஆளுக்கு இருக்கிற செல்வாக்கு தானா குறைஞ்சு போயிடும் ... அது மட்டுமில்லாம லேண்ட் கேஸ்ல ராவுத்தருக்கு சாதகமா தீர்ப்பு சொன்ன காரணத்துக்காக ருத்ர நாராயணனை போட்டு தள்ள ஆளை ஏற்பாடு பண்ணினதோடு, அந்த அருவா வெட்ட தானே தன் தோள்ல வாங்கி தன்னை நல்லவனா காட்டிக்க முயற்சி பண்ணியிருக்கான் அந்த தேவன்னு மறுபடியும் வதந்தி பரப்பினா தேவரும் ஐயரும்
பிரிஞ்சிடுவானுங்க ...
அப்புறம் எப்ப எலக்சன் வந்தாலும் நாமதான் ஜெயிப்போம் ...


இத விட்டுட்டு நீ சொல்ற மாதிரி வாசு தேவனோட பையனை போட்ட கல்யாணம் தான் நிற்குமே ஒழிய, ராவுத்தர் சாகமாட்டான்,
அந்த ஐயரோட செல்வாக்கு இன்னும் அதிகம் தான் ஆகும் ...


யார போட்டா பவர் ஃபுல்லா கலவரம் வெடிக்கும்னு பார்த்து அந்த ஆளை போடணும்... அதுக்காகத்தான் ராவுத்தரை செலக்ட் பண்ணேன்...
இந்த சம்பவம் சாதாரணமா நடக்கக்கூடாது, தேவன் சொல்லித்தான்
தேவனோட ஆளுங்க ராவுத்தரை செஞ்சாங்கன்னு சொல்ல, சரியான சாட்சியை வச்சிகிட்டு செய்யணும் தெரியுதா .... முக்கியமா இதுக்கு பின்னாடி நாம இருக்கோம்னு யாருக்குமே தெரிய கூடாது... .." என்றவர் நக்கலாக


" சாதியை ஒழிப்போம் சாதியை ஒழிப்போம்னு சொல்லி இன்னை வரைக்கும் வெறும் பில்டப் அரசியல் தான் செஞ்சுகிட்டு இருக்கோம் ... அதை 100 வருஷம் ஆனாலும் இந்த முட்டாள் ஜனங்களால புரிஞ்சுக்க முடியாது.. நாடு அமைதியா இருந்தா நாம அரசியல் பண்ண முடியாது ... இவன் அவன் மதத்தை மதிச்சு நடக்கிறதும் அவன் இவன் மதத்தை மதிச்சு நடக்கிறதும் நடந்தா நாம எப்படி அரசியல் பண்றது.... அதனால தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரிவினை பேசணும், கலவரத்தை தூண்டனும் ..
அதனாலதான் நான் பத்திரிக்கை நிருபர்களை அனுப்பி சாதி பிரச்சினையை தூண்ட பார்த்தா, அதை அந்த ஐயரு வேற மாதிரி
சமாளிச்சிட்டான்... வேற வழி இல்லாம எல்லா பத்திரிகைக்கும் பணம் கொடுத்து, தரக்குறைவா,
எழுத வச்சேன்... ஆனா அதுக்கும் அவன் அசையாம கல்லு மாதிரி இருக்கான்... பார்த்துடலாம் அவனா, நானான்னு...
ஆமா... கல்யாணம் எப்ப நடக்கப்போகுது ..." என யோசனையாய் வீர மாணிக்கம் கேள்வி எழுப்ப,


" தெரியல தலைவரே, பத்திரிகை அடிச்சு எல்லாரையும் கூப்பிட வேணாமா, இன்னும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னு நினைக்கிறேன்..." என்றார் இடை புகுந்து அவர் கட்சியில் ஒரு குறிப்பிட்ட பதவி வகிப்பவரும் அவரது வலது கையுமான பாண்டியன் .


" அப்படின்னா, நாம நம்ம காரியத்தை சிறப்பா செய்திடலாம் ..." என வன்மத்தோடு பதிலளித்த வீர மாணிக்கம் , உடனே பாண்டியனைப் பார்த்து,


" அது சரி, உன் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் ... அந்தக் கீழ் ஜாதி பையனோட அது பேர் அடிபட்டுச்சே... அந்தப் பையனும் எதோ பிரச்சனை பண்ணான்னு கேள்விப்பட்டேன்..."


" அந்த பையனோட கைய கால முறிச்சாச்சு தலைவரே ...
என் பொண்டாட்டி சொந்தத்துல பேசி முடிச்சிருக்கேன்.. அடுத்த மாசம் என் பொண்ணுக்கு கல்யாணம் ..."


" உன் பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கும்மா ..."


" அது யாரு ஒத்துக்கிறதுக்கு.... கைய கால கட்டி கல்யாணம் பண்ணிட மாட்டேன் .... எங்க குலதெய்வ கோவில்ல தான் கல்யாணம் வச்சிருக்கேன் தலைவரே... நேத்தே ஐயரைப் பார்த்து தேதி குறிச்சு கல்யாணத்துக்கு அட்வான்ஸையும் கொடுத்துட்டு வந்துட்டேன்...முகூர்த்த நாள் வேற... அந்த ஐயரு ரொம்ப ராசியானவரு... அவரு வேற ஏதாவது கல்யாணத்தை ஒத்துகிட கூடாதுன்னுதான் முன்கூட்டியே புக்கு பண்ணிட்டு வந்திட்டேன் ..."


" யோவ், மேடைக்கு மேடை சாதி மறுப்பு, சமூக நீதினு பேசுவ..." என வீர மாணிக்கம் எள்ளலாய் கேட்டு சிரிக்க


" தலைவரே, கொள்கை கோட்பாடு எல்லாம் ஊருக்கு தான் வூட்டுக்கு இல்ல.... சாதி மறுப்பு , சமூக நீதின்னு என் வூட்ல பேசினா என் பொண்டாட்டி என்னை தூக்கிபோட்டு மிதிப்பா... சமூகநீதி, சாதி மறுப்பு , பகுத்தறிவு எல்லாம் வயத்து பொழப்பு அரசியலுக்கு தான் ... வாழ்க்கைக்கு இல்ல தலைவரே ..நான் என்ன அந்த ஐயரு ருத்ரா மாதிரி மான ஈனம் இல்லாதவனா ... கீழ் சாதில பொண்ணை கொடுத்தா என் சாதிக்காரன் ஒருத்தன் கூட என் வீட்ல தண்ணி குடிக்க மாட்டான் தலைவரே... என் வீட்டு கழுதை காதலிச்சதுதான் காதலிச்சது மேல் சாதிகாரணை காதலிச்சிருந்தா, இந்நேரம் சாதியை வேரறுத்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்னு மேடை போட்டு பேசி கல்யாணத்தையே முடிச்சிருப்பேன்... என்னத்தை சொல்ல எல்லாம் தலையெழுத்து ..." என்று பாண்டியன் குமுற


" இத்தனை சாதி கட்டுப்பாடுகளையும் மீறி, அந்த ருத்ரா சொன்ன மாதிரி தன் பொண்ணு கல்யாணத்தை நடத்திட்டான்னா, அப்புறம் நாம பேசுற அரசியலுக்கு மக்கள் மத்தில மரியாதை இல்லாம போயிடும் பாண்டியா ..."


" தலைவரே, அப்படி அந்த கல்யாணத்தை நடத்த விட்டுடுவோமா... விஷயத்தை கேள்விப்பட்டதும் அக்ரஹாரத்துல இருக்கிற பாதி ஐயமாருங்களை கூப்ட்டு பேசிட்டேனில...
ருத்ரா தன் பொண்ணை தேவனுக்கு கட்டி கொடுத்தானா, நாளைக்கு மற்ற எல்லா சாதிகாரனும் உங்க வீட்ல வந்து பொண்ணு கேப்பான் பரவாயில்லையானு ஒரு குண்ட தூக்கி போட்டேன்.... அக்ரஹாரமே கொதிச்சு போயிருக்கு.... அது மட்டும் இல்ல அக்ரஹாரத்துல இருக்கிற பாதிப்பேர் நமக்கு நல்ல பழக்கம்... எங்க குடும்பத்துல நடக்கிற எல்லா பூஜை, கல்யாணம், காது குத்துன்னு பரம்பரை பரம்பரையா எல்லா விசேஷங்களையும் அவங்கதான் நடத்தி வைக்கிறாங்க... அதனால நான் சொன்னா கேட்டுகிடுவாங்க.. ஏற்கனவே அந்த ருத்ர நாராயணனை அங்க இருக்கிற ஒரு கோஷ்டிக்கு பிடிக்காது ... அவன் பாரதியார் பாடசாலைன்னு எல்லாருக்கும் பூணூல் போடுறான்... வேதம் சொல்லிக் கொடுக்கிறான்னு கடுப்புல இருக்காங்க ... அதையெல்லாம் அவன் பொண்ணு கல்யாணத்துல
தீர்த்துகிடுவாங்க... இது எல்லாத்தையும் விட முக்கியமா ருத்ர நாராயணனோட அக்கா ஆனந்தவல்லி மாமியை பார்த்து பேசிட்டேன் ... ருத்ரா தன் பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பிச்ச உடனே எல்லா விவரத்தையும் தெரிஞ்சிக்கிட்டு நமக்கு சொல்ல சொன்னதோடு அதை எப்படி தடுத்து நிறுத்தனுங்கிற முதல் கட்ட திட்டத்தையும் சொல்லிட்டு தான் வந்து இருக்கேன் தலைவரே கவலைப்படாதீங்க ...


" யோவ், நீ என்னை விட அரசியல்ல பெரிய ஆளா இருக்க ... உன்கிட்ட நானே ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே..." என்று பெருங்குரலெடுத்து
சிரித்த வீர மாணிக்கத்துக்கு வாசுதேவர் மேல் வெளியில் சொல்ல முடியாத வன்மம் ஒன்று உண்டு.


அது வாசு தேவர் மணந்துக்கொள்ள இருந்த வசந்தியை (வெங்கடேஷின் தாயார்) வீர மாணிக்கம் மணந்துகொள்ள ஆசைப்பட்டார்.


வாசு தேவரும் வசந்தியும் ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதோடு, ஒருவகையில் வசந்தியை
மணந்து கொள்ளக் கூடிய உறவில் வாசுதேவர் வர, வீர மாணிக்கம் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்றாலும் நேரடியாக வசந்தியின் தந்தையை சந்தித்து பெண் கேட்க, வீர மாணிக்கத்தின் அடிதடி அராஜக அரசியல் மற்றும் நடத்தை சரியில்லை என்பதை எல்லாம் காரணம் காட்டி வசந்தியின் தந்தை மறுத்து விட, சிறை எடுத்தாவது வசந்தியை மணந்து கொள்ள நினைத்தவருடன் மல்லுக்கு நின்று
வசந்தியை மணந்தார் வாசுதேவர்.


மறு மாதமே வேறு ஒரு பணக்காரப் பெண்ணை போட்டிக்காக வீர மாணிக்கம் மணந்து கொண்டதோடு ஒரு வருடத்திற்குள் மனம் ஒட்டாமல் குடும்பம் நடத்தி ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையானார்.


காலம் வேகமாக சுழன்றாலும், வீர மாணிக்கத்திற்கு வாசுதேவர் மீது இருந்த வன்மம் மட்டும் அப்படியே தான் இருந்தது.


இந்நிலையில் வெங்கடேஷ் ஏழு வயதாக இருக்கும் போது ரத்தப் புற்று நோய் வந்து வசந்தி இறக்க, அன்று வாசுதேவர் துடித்து அழுததை கண்டதும் தான் வீர மாணிக்கத்தின் வன்மம் பாதியாக குறைந்தது.


அதன் பின் வாசுதேவர் தன் பதவியைத் துறந்து, நட்பு வட்டத்தை சுருக்கி, சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு யோகி போல் வாழ ஆரம்பிக்க, தன் கண் முன்னே அவர் துளித்துளியாய் கரைந்து காணாமல் போவதை கண்டதும் வீர மாணிக்கத்தின் மீதி வன்மமும் காணாமல் போனது.


பிறகு வீர மாணிக்கம் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டு, ஒரு பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டு படாடோபமாக வாழ, அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் வாசுதேவர் இல்லை.


அவர் காலக் கடிகாரம் அவர் மனைவி வசந்தியோடு முடிந்து போயிருந்தது.
மகனைக் காரணம் காட்டி மறுமணம் செய்துகொள்ள உறவினர்கள் அவரை வற்புறுத்த
மனைவியிடத்தில் மற்றொரு பெண்ணை வைத்து பார்க்க மனமில்லாமல் மகனை தன் ஒன்றுவிட்ட தமையனுக்கு ஏறக்குறைய தத்து கொடுப்பது போல், அவருடன் அனுப்பி வைத்துவிட்டு தனிமையை துணையாக அழைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார் வாசு தேவர்.


வாசுதேவர் முற்றிலும் வாழ்க்கையில் தோற்று விட்டதாக, வீர மாணிக்கம்
திருப்தி அடைந்திருந்த நிலையில் தான் வெங்கடேஷின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வர , வாசுதேவர் மேல் காணாமல்
போயிருந்ததாக கருதி இருந்த வன்மம், மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.


ஏய் வாசு, நான் கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்ட பெண்ணை நீ எந்த சாதியை வச்சு கல்யாணம் கட்டிக்கிட்டயோ... இப்ப அதே சாதியை வச்சு உன் பையன் கல்யாணம் கட்டிக்க ஆசைப்படற பெண்ணை, கட்டிக்க முடியாம செய்றேன் பார்...


என்று வாசு தேவரின் மேலிருந்த குரோதத்தை மனதில் வைத்து, அதனை வெளியே சொல்லாமல், காய்களை கச்சிதமாக நகர்த்தினார் வீர மாணிக்கம்.


**************************************


அக்ரஹாரத்தில் மட்டுமல்ல, அந்த ஊரிலேயே வேதா - வெங்கடேஷ் திருமணம் பேசும் பொருளாகி போனது.


இதனை பலவிதங்களில் அறிந்துகொண்ட ருத்ர நாராயணன், அதற்கு கூடிய சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க முடிவு கட்டினார்.


ஆனால் அவரது மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது, எங்கோ தவறு நடந்திருக்கிறது என அவரது உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருக்க, உடனே வாசுதேவரை தொடர்புகொண்டு , அந்த நில வழக்கில் ராமலிங்கத்தின் பின்னால் இருந்து இயக்கியது யார் என்று கேட்ட போது, அவருக்கு கிடைத்த பதில் வீர மாணிக்கம் .


வீர மாணிக்கத்தைப் பற்றி ருத்ர நாராயணன் நன்கு அறிவர். வீர மாணிக்கம் தான் நினைத்ததை சாதிக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருக்க,


மாலை சந்தியா வந்தனத்தை முடித்தவர், ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, சூரியனைப் பார்த்து உச்சரித்து விட்டு, கிருஷ்ண பாதுகையின் மேல் அவரது பார்வை நிலைக்கும் போது அவரது சட்ட அறிவு மற்றும் கடவுள் அனுகிரகத்தால், அவருக்கு எதிராக திட்டமிட்டிருக்கும் செயல்கள் நிழலோவியமாய் மனக்கண் முன் வந்து போக, உடனே ராவுத்தரை
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்


" அம்மா சலீமா, நான் ருத்ர நாராயணன் பேசறேம்மா..."


" சொல்லுங்க அண்ணா ..."


" ராவுத்தர் எங்கம்மா ..."


" பள்ளிவாசல் போயிருக்காருண்ணா.."
என்றதும் எதிர்முனையில் ஆழ்ந்த அமைதி ..


" சரிமா ஆத்துக்கு வந்ததும் , அவனை ஆத்தை விட்டு வெளியில போகாம பாத்துக்கோ... நான் சொன்னேன்னு சொல்லு ... முக்கியமா வாசு தேவர் கூப்பிட்டு அனுப்பினாருன்னு யார் வந்தாலும் , ராவுத்தர் ஆத்துல இல்லன்னு பொய் சொல்லிடும்மா...
ஒரு ரெண்டு நாள் எங்கயும் போகாம அவனை பார்த்துக்கோ... ஆத்துக்கு வந்ததும் எனக்கு போன் பண்ண சொல்லும்மா...
ஆமா... அப்துல் எங்க..."


" அவன் பர்வீன் வீட்டுக்கு போயிருக்காண்ணா..."


" யார் ராவுத்தர தேடி வந்தாலும், அப்துல் தான் ஆத்துல இருக்கான்,ராவுத்தர் வெளில போயிருக்காருன்னு சொல்லிடும்மா..." என்று எச்சரித்துவிட்டு தொலைபேசியை தாங்கியில் பொருத்தினார்.


சற்று நேரத்திற்கெல்லாம் இராவுத்தர் வீடு திரும்ப,
"ஐயர் போன் பண்ணியிருந்தாரு, தேவர் ஆளுங்கன்னு யாரு வந்து கூப்ட்டாலும் உங்களை போவ கூடாதுன்னு சொன்னாரு...உங்களை வீட்டுக்கு வந்ததும் அவருக்கு போன் பண்ண சொன்னாரு..." என்று சலீமா தெரிவித்ததும், ஒன்றுமே புரியாமல் குழம்பியவர், ருத்ர நாராயணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனைத்தையும் தெரிந்து கொண்டார்.


சற்று நேரத்திற்கெல்லாம், தேவர் அனுப்பியதாக கூறிக்கொண்டு நான்கு பேர் ராவுத்தரின் இல்லத்திற்கு வந்து, அவரை விசாரிக்க, சலீமா ருத்ர நாராயணன் கூறியது போல் அவர்களிடம் தெரிவிக்க,


" அப்ப வாசல்ல இருக்குற செருப்பு யாரோடது ..." என்றான் அதிலிருந்த ஒருவன்.
முதலில் தடுமாறிய சலீமா, பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு


" ஆ... என் மகன் அப்துலோடது... தோட்டத்துல தான் இருக்கான் கூப்டட்டுமா ..." என்றார் இயல்பாக.


வந்தவர்கள் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்காமல் வீட்டு வாயிலை நோக்கிச் செல்ல,


" டேய், ராவுத்தர் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதை நான் பார்த்தேன் டா ..."


" இருக்காதுடா, அப்பனும் பிள்ளையும் ஒரே மாதிரி ஆறடி உசரத்துல இருப்பானுங்க ... நல்ல வேளை அவன் பையன் கிட்ட சிக்கல அவனுக்கு கையும் பேசும் வாயும் பேசும் ......" என்று அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்கள், வீட்டின் மேல் அறையில் பதுங்கி இருந்த ராவுத்தரின் காதுக்கு எட்டியது.


பிறகு ராவுத்தரிடமிருந்து அனைத்தையும் கேள்விப்பட்ட, ருத்ர நாராயணன், அவர் எதிர்பார்த்ததுதான் நடக்கப்போகிறது, என்பதை உணர்ந்ததும், இதற்கு மேல் ஒரு நாள் தாமதித்தாலும், அவருடைய ஒரு நண்பரின் மேல் பழி விழும், இன்னொரு நண்பருக்கு உயிரே போகும்.... என்றதை உணர்ந்ததும் துரிதமாக செயல்பட்டவர், முதலில் வெங்கடேஷே தொடர்புகொண்டு, இயல்பாக நலம் விசாரித்துவிட்டு


" நீங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கோ..." என ருத்ர நாராயணன் சொல்ல,


" ம்ம்ம்...சரி..."என்றார் வெங்கடேஷ்.


இவரும் ஏன் என்று கேட்கவில்லை அவரும் எதற்காக என்று சொல்லவில்லை. இருவரும் எதையுமே பேசிக் கொள்ளாமலேயே சூழ்நிலையை உணர்ந்து புரிதலுடன் செயல்பட ஆரம்பித்திருந்தனர்.


மறுநாள் அதிகாலை, வேதாவின் அறைக்கு வந்த ருத்ர நாராயணன்,


" வேதா ,குளிச்சிட்டு நல்ல புடவையா உடுத்திண்டு கிளம்புமா..."


" எங்கப்பா ..."


" இன்னும் கொஞ்ச நேரத்துல, உனக்கும் வாசுதேவரோட மகனுக்கு கல்யாணம் ..." என்றதும் வேதாவின் முகத்தில் குழப்பம், தடுமாற்றம், இன்ப அதிர்ச்சி போன்ற கலவையான முகபாவங்கள் வந்து போக ,


" உன்னிண்ட என்னென்ன நகை எல்லாம் இருக்கோ, எல்லாத்தையும் போட்டுக்கோ...."


" என்னிண்ட இதெல்லாம் தான் இருக்கு மத்ததெல்லாம், அம்மா ரூம் பீரோல இருக்குப்பா ..."


" அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாத, அவளை சேவிச்சிண்டு கிளம்பு ... அம்மா நம்ம கூட வரல ..." என்றதும், தீவிர குழப்பத்தில் வேதா, ருத்ர நாராயணனை உற்றுநோக்கி


" எதுக்குப்பா இப்படி யாருக்கும் தெரியாம, ரங்கு, அம்மா யாரும் வராம..."


" உனக்கு சொன்னா புரியாது மா கல்யாணம் ஆனதும் எல்லோருக்கும் சொல்லிக்கலாம் ..." என்றவர்


ஆண்டாள் கோவிலில் இருக்கும் கிருஷ்ண பகவான் சன்னதியில், அவருடைய நெருங்கிய நட்புகளான முரளிதரன், ராமானுஜன் ,தேசிகன் ஆகியோரின் குடும்பங்கள், ராவுத்தரின் குடும்பம், வாசுதேவருக்கு நெருங்கிய ஓரிரு உறவுகள் சூழ திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


முந்தின நாள் இரவு வாசுதேவர் ருத்ர நாராயணனிடம்,


" உங்க முறைப்படியே கல்யாணம் பண்ணிடு ருத்ரா...எனக்கு தான் மனைவி இல்ல, சபைல நிற்க முடியாது...."


" இல்ல வாசு... மரகதத்துக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல ... என் அக்கா ஆனந்தவல்லி, அவளிண்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குழப்பி வச்சிருக்கா... கூடவே இருக்கிற என் அக்கா செய்யற அரசியலையே அவளால புரிஞ்சுக்க முடியல...நம்மள சுத்தி நடக்கிற அரசியல புரிஞ்சிக்கிற அளவுக்கெல்லாம் அவளுக்கு அறிவு கிடையாது ... அவளுக்கு சொல்லி புரிய வைக்கிற அளவுக்கு இப்ப நேரமும் இல்ல... அது மட்டும் இல்ல என் மனைவிக்கு தெரிஞ்சா, நிச்சயம் ஆனந்தவல்லி காதுக்கு போகும் ...
அதுக்கு நாம நேரடியா
வீர மாணிக்கத்தையே கூப்பிட்டு சொல்லிடலாம்... என் வீட்டுலயே எனக்கு எதிரி இருக்கும் போது என்னால இதைத் தவிர வேற எதுவும் செய்ய முடியாது ...
ராமானுஜம் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வருவான், அவனிண்ட பேசி என் ஸ்தானத்தில , இருந்து என் பொண்ண கன்னிகாதானம் பண்ணி தர சொன்னா நிச்சயம் செய்வான்...


அதோட கல்யாணம் முடியிற வரைக்கும், என்னைத் தேடாதே ...
வேதாவை மரகதம் அருமை பெருமையா வளர்த்தா.. அவ பார்க்காத கல்யாணத்தை என்னால பார்க்க முடியாது ... அதுக்காக இங்கேயேயிருந்து கண்ணை கட்டிண்டு காந்தாரி மாதிரி அபசகுனமா என்னால உட்காரவும் முடியாது... நீ முன்னிருந்து கல்யாணத்தை நன்னா முடிச்சிடு ... நான் கோவில்லயே பெருமாள் சன்னதில இருக்கேன்... " என்றவரின் குரல் கமர, அவர் மனமறிந்த வாசுதேவர், தலையசைத்து ஆமோதித்திருந்தார்.


திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் தயாராக இருக்க,
அரக்கு நிறத்தில் தங்க ஜரிகை வேய்த மடிசார் புடவையில், ஆண்டாள் கொண்டையுடன் வேதா அம்சமாக காட்சியளிக்க, அவருக்கு பொருத்தமாக பஞ்சகச்சத்தில் வெங்கடேஷ் கம்பீரமாக இருக்க,
ராமானுஜன் தம்பதிகள் முன்னிருந்து,
அனைத்து திருமண சடங்குகளையும் சிறப்பாக செய்ததோடு
தந்தையின் ஸ்தானத்தில் ராமானுஜரின் மடியில் வேதாவை அமர்த்தி, கன்னிகாதானம் செய்ய, வெங்கடேஷ் நின்றபடி, வேதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி, முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அவரை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டார்.


ஜாதகர்மம், நாமகரணம் , ஜானவாசம், காசி யாத்திரை, ஊஞ்சல், பிடி சுத்தல் என அய்யங்கார் முறைப்படியான எந்த சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறாமல் முக்கிய நிகழ்வான மாங்கல்யதாரணம் மட்டுமே சிறப்பாக நடந்தேறியது.


மாங்கல்யத்தை கழுத்தில் வாங்கிக் கொள்ளும் போது கூட வேதாவின் கண்கள் அவர் தந்தையை தேடி தேடி கலைத்தன.


அதன் பிறகு செய்தி காட்டுத்தீ போல் பரவ, வழக்கம் போல் பத்திரிகைகள் மொய்க்க, வேண்டுமென்றே மணமக்களோடு, வாசு தேவரையும் ராவுத்தரும் அருகருகே நிறுத்தி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் ருத்ர நாராயணன், வீர மாணிக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்.


விஷயத்தைக் கேள்விப்பட்டு துடித்து அழுதார் மரகதம்.
திருமணம் நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தாலும், தனக்குத் தெரியாமல் நடைபெற்ற இந்த திடீர் திருமணம் அவ மனதை வெகுவாக பாதித்திருந்தது..


ஆனந்தவல்லிக்கு செருப்பில் அடி வாங்கியது போல் இருந்தது ...
அவரது வன்மம் கொழுந்துவிட்டு எரிந்தது. திருமணம் நடக்கப் போவது முன்பே தெரிந்திருந்தால் போட்டு வைத்திருந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தி குழப்பத்தை விளைவித்து திருமணத்தையே நிறுத்தி இருக்கலாமே. அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தன் தம்பி தெளிவாக காய் நகர்த்தியதை எண்ணி, மனம் குமைந்து போனார்.


"அப்பா, மாங்கல்யம் தாரணம் போது உங்களை தேடினேனே, நீ எங்க இருந்தேள்..."


" உங்க அம்மா பாக்காத கல்யாணத்தை என்னால பாக்க முடியாதும்மா ...." என்றவர் பெரும் மூச்செடுத்து மனதை சமன்படுத்தி,


" நீ இப்ப நம்ம ஆத்துக்கு வரவேண்டாம் .. உங்க அம்மா கோவத்துல இருப்பா ... நல்ல நாள் அதுவுமா அவ கோவத்துக்கு ஆளாக வேண்டாம்... அவ கோவம் நிச்சயமா நாளைக்கு குறைஞ்சிடும் ... ஏற்கனவே ரங்கநாதனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் ...நாளைக்கு வர்றதா சொல்லி இருக்கான் ... நீ நாளைக்கு நம்ம ஆத்துக்கு வந்தா போதும் ... இப்ப நீ இவாத்துக்கு ..." என்றவர்
" உங்காத்துக்கு கிளம்பு ..." என்று முடித்தார்.


தந்தையின் பேச்சில் இருந்த வித்தியாசம், தாய் இல்லாமல் நடந்த திருமணம், புதியவர்களின் இல்லத்திற்கு முதன்முதலாக செல்லப் போவது போன்றவை வேதாவின் மனதில் கலக்கத்தை விதைக்க,
முன் நாளே திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்த பின்னும் ஆனந்தவல்லிக்கு அஞ்சியே, தன் தந்தை திருமணம் குறித்து முன்கூட்டியே தன்னிடம் சொல்லாமல் விட்டிருந்ததை கேள்விப்பட்டு மனம் நொந்து போனார் வேதா.


வாசுதேவரின் வீட்டுக்கு மண மக்களோடு சென்று, சற்று நேரம் இளைப்பாறி விட்டு, தன் வீட்டிற்குச் சென்ற ருத்ர நாராயணனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.


வீடே 'ஓ' வென்று இருந்தது. ஆனந்தவல்லியை காணவில்லை . மரகதம் அவர்களது அறையை விட்டு வெளியே வரவில்லை .
இத்தனை வருட திருமண பந்தத்தில், மரகதத்திற்கு கோபம் வந்தால், குரலை உயர்த்திப் பேசியோ , சண்டையிட்டோ ருத்ர நாராயணன் பார்த்ததே இல்லை . பெரும்பாலும் மரகதத்தின் கோபம் ஆழ்ந்த அமைதியில் தான் வெளிப்படும் .. அந்தக் கோபத்திற்கும் ஆயுசு குறைவு ... அவரால் தன் அன்பு கணவருடன் பேசாமல் இருக்கவே முடியாது ... எனவே வழக்கம் போல், கூடிய விரைவில் நிலைமை சரியாகிவிடும் என்றெண்ணி
தன்னுடைய அலுவலக அறைக்கு சென்று கேஸ் கட்டுகளை பார்க்க ஆரம்பித்தார் ருத்ர நாராயணன்.


ஏற்கனவே அவர் ரங்கநாதனை தொடர்புகொண்டு, திருமணம் நடந்ததற்கான அனைத்து காரணங்களையும் தெரிவித்திருந்தாலும், மதில் மேல் பூனையின் சுபாவத்தைக் கொண்டிருந்த ரங்கநாதனுக்கு, பிரச்சனையின் ஆழம் புரியாமல் ஏனோதானோவென்று ஆமோதித்து வைத்திருந்தார்.


இந்நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஆனந்தவல்லி.
அவரின் பிறவி குணமே, உடனுக்குடன் தன் எதிரிகளை பழி வாங்கியே தீருவது தான். ரங்கநாதனின் குணமும் ஓரளவிற்கு அறிந்தவராதலால், அவரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, வேதாவின் திருமணத்தைப் பற்றிய முன்கதை சுருக்கத்தை அச்சு பிசகாமல் ருத்ர நாராயணன் சொல்லி இருப்பது போலவே சொல்லியவர், கடைசியாக


" இந்த கல்யாணம் மட்டும் நடக்கலைன்னா நம்ம ஆத்துக்கே தலைகுனிவா போயிருக்கும் ... வேதா உண்டாகி இருக்கிறதால தான் அவசர அவசரமா உன் அப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கேர்னு ஊர்ல பேசிக்கிறா... சரி ...எது எப்படியோ, வேதா நன்னாயிருந்தா நமக்கு அதுவே போதும்..." என விருட்சத்தின் வேரில் விஷத்தை அழகாக தெளித்து, விரோதத்தை உண்டாக்கினார்.வாசுதேவர் இல்லம்


வாசு தேவருக்கு ஒன்றுவிட்ட அத்தை முறை உறவான மங்களம் தான் , திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் முன்னின்று செய்து முடித்திருந்தார்.


உறவினர்கள் வீட்டிற்கு கூட அதிகம் போயிராத வேதாவுக்கு,
வயல் வெளிகள் மற்றும் தென்னம் தோப்பிற்கு நடுவே அழகாக, பெரியதாக அமைந்திருந்த வாசுதேவரின் இல்லமும்
அந்நியமாக தான் இருந்தது.


நேற்று இந்நேரம் நாளை உனக்கு திருமணம் என்று யாராவது கூறியிருந்தால் அவர், மருந்து அளவிற்குக் கூட நம்பி இருக்க மாட்டார் ... இந்த திடீர் திருமணம், மனதளவில் திருமணத்திற்கு தயாராகாமல் இருந்த அவரை வெகுவாக பாதித்திருந்தது .


அவருக்கு வெங்கடேஷை பிடித்திருந்தது .ஆனால் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணத்தில், ஒரு மணப்பெண்ணிற்கு கணவனின் மீது ஆரம்பத்தில் எந்த அளவிற்கு ஈர்ப்பு இருக்குமோ, அந்த அளவிற்கான நேசம் மட்டுமே இருந்தது.


ஆனால் வெங்கடேஷின் நிலையோ தலைகீழ்... கடந்த ஐந்து ஆண்டுகளாய் ஒரு தலை காதலில் கசிந்துருகியவருக்கு, அவரே எதிர்பாராமல் , காதல் கைக்கூடி கல்யாணத்தில் முடிந்தது, ஏதோ விண்ணையே வளைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.


இப்படியான, இரு வேறுபட்ட மனநிலையில், இருவரும் திளைத்துக்கொண்டிருக்க, இரவு விருந்து உண்ணும் போது கூட மனையாளின் முகத்தில் குடிகொண்டிருந்த சிந்தனை, ஒருவித தயக்கம், அந்நியத்தன்மை போன்ற கலவையான முகபாவங்களை , ஆராய்ந்து கொண்டே உணவை,
தன் இணையோடு முடித்தார் வெங்கடேஷ்.


வீட்டின் மேல் தளத்தின் பெரிய அறையுடன் கூடிய பால்கனியில் , பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், குளுகுளுவென்று வீசிய காற்றில் அசைந்த தென்னங்கீற்று, இரவில் மலர்ந்த ஆம்பலின் வாசம், பனியை பொழியும் பால் நிலா என அனைத்தையும் ரசித்தபடி நடை போட்டு கொண்டிருந்தார் வெங்கடேஷ்.


கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெங்கடேஷ் திரும்பி பார்க்க, கையில் பால் செம்புடன் வந்த வேதா, அதனை அங்கிருந்த மேஜையின் மேல் 'டொம்'மென்று வைத்து அவரது கோபத்தை பறைசாற்ற,
அவரது கோபத்திற்கான காரணம் புரியவில்லை என்றாலும் அவர் நடந்து கொள்ளும் முறை வெங்கடேஷிற்கு சிரிப்பை வரவழைக்க,


" அம்மாடியோ ... முதலிரவுல ஒரு பொண்ணு இப்படி கோவப்பட்டு இப்பதான் பார்க்கிறேன் ..."


" இதுவரைக்கும் எத்தனை பொண்ணை இப்படி பார்த்திருக்கீங்கோ..." என்ற மனையாளின் கேள்வியில் தான், தான் பேசிய வார்த்தையின் அர்த்தமே உணர்ந்தவர்,


" ஐயோ அந்த அளவுக்கெல்லாம் நமக்கு கெப்பாசிட்டி கிடையாதம்மா ...நான் ஏகபத்தினி விரதன் ...உனக்கு வெட்கப்பட தான் தெரியல ...அட்லீஸ்ட்
கோவப்படறதுக்கான காரணத்தை சொன்னா கொஞ்சம் உதவியாயிருக்கும் .."


" நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது ...உங்களையும் யாரும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தான், நானே உங்களை கல்யாணம் பண்ணின்டேன்..." என்று கண்களில் கோபம் கொந்தளிக்க, துடிதுடித்த உதடு, படபடத்த விழியுடன் கூறிய மனையாளை பார்த்து


" ஆஹா ....என்ன ஒரு வில்லத்தனம்...
ஏம்மா இந்த நல்ல எண்ணம் உனக்கு ..." என்றார் சிரிப்பை கட்டுப்படுத்தி.


" நீங்க பெரீய்ய்ய போலீஸ் ஆபீசர்... ஆனா எங்கப்பாண்ட நம்ம கல்யாணத்துக்காக பேச உங்களுக்கு பயம் ... உங்கப்பா தான் என் அப்பாண்ட நம்ம கல்யாணத்துக்காக பேசியிருக்கேர், அப்புறம் வாய விட்டு நான் என் சம்மதத்தை சொன்னதால தான் இந்தக் கல்யாணமே நடந்தது.... நான் ஒன்னும் எங்கம்மா மாதிரி மட்டி இல்ல ... நேக்கு எல்லாம் தெரியும்..." என்றவரின் கடைசி வரி புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷை பார்த்து,


" பதில் சொல்லுங்கோ ..." என்று வேதா மிரட்ட


" நீ சொன்னது எல்லாம் புரிஞ்சது... ஆனா கடைசில மட்டின்னு என்னமோ சொன்னயே அப்படின்னா .." என்றார் கண்ணில் ஆர்வத்துடன் வேதாவின் பாஷை புரியாமல் .


" மட்டின்னா கொஞ்சம் வெள்ளந்தி...
எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா... " என்று தன்மையாக பதிலளித்த வேதா திடீரென்று தீவிரத்தை தத்தெடுத்து,


" எங்க அம்மா தான் அப்படி... ஆனா நான் மட்டி இல்ல..." என்று கண்களை உருட்டி சொன்னவரை பார்த்து, வாய்விட்டே சிரித்தவர்


" அப்ப, உங்க அம்மா மாதிரி நீயும் மட்டி தான்..." என்றவரை பார்த்து வேதா முறைக்க,


" இல்ல ....நீ உங்க அம்மா அளவுக்கு மட்டி இல்ல... கொஞ்சம் மட்டின்னு சொல்ல வந்தேன் ..." என்று சமாளித்தவர்


" என்னை காப்பாத்த நெனச்சு, எந்த இடத்துலயும் உங்க அப்பா என் பேரை சொல்லவே இல்ல ...
உனக்கு என்னையும் தெரியல... உங்க அப்பா, தி கிரேட் ருத்ர நாராயணனையும் தெரியல..." என்றவர் வேதாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி


"எங்க ஐயாவும், நீயும் பேசின உடனே பொண்ணு கொடுக்குற ஆளா அவரு..." என்றவர் அன்று சேம்பரில் நடந்த அவர்களது முதல் சந்திப்பை சொன்னதோடு, தன்னுடைய 5 ஆண்டு ஒரு தலைக் காதலையும் சொல்ல...
அனைத்தையும் கேட்டு ஆச்சரியத்தில்
வேதா விழிகள் செந்தாமரை போல் விரிய,


" நான் படிச்ச ஸ்கூல், காலேஜ் , எங்க டி.சி , ஐஜி வரைக்கும் விசாரிச்சிருக்காரு ...
ஐஜி எனக்கு போன் பண்ணி கேக்கறாரு, எப்பயா கல்யாணம்னு ...
அப்பதான் தெரிஞ்சது உங்கப்பா எவ்ளோ ஃபாஸ்ட் அண்ட் ஸ்மார்ட்ன்னு..."


" என்னை உங்களுக்கு அஞ்சு வருஷமா தெரியுமா ..."


" ம்ம்ம்ம்.." என்றவர் தன் சூட்கேஸில் இருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்து,
நீட்ட, வேதாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அவ்வளவு அழகழகான புகைப்படங்களாக அவரை எடுத்து தள்ளி இருந்தார்.கோலம் போடும் போது, பாடம் நடத்தும் போது , பாடும் போது என ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக படமாக்கியிருந்தார் வெங்கடேஷ்.


அதுவரை சற்று விலகி இருந்து, பேசிக் கொண்டிருந்த வேதா திடீரென்று
வெங்கடேஷின் மிக அருகில் அமர்ந்துகொண்டு, ஆல்பத்தில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆசையாக பார்த்ததோடு, அதில் அவர் அணிந்திருக்கும் பட்டுப்பாவாடை, தாவணி,கொலுசு, தோழிகள், அன்றைய நிகழ்வுகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை கூற ஆரம்பிக்க, அருகிலிருந்து தவித்துப் போனது வெங்கடேஷ் தான்.


பால் நிலாவிற்கு போட்டியான முகம், விண்மீன்களைக் ஒளியாகத் கொண்ட கண்கள்,
சந்தன பாலம் போல் நெற்றி, எள்ளுப்பூ நாசி , குழந்தையின் பிஞ்சு உதடு, வெண்பஞ்சு காது , சங்கு கழுத்து , அதில் காலையில் அவர் அணிவித்த , அவருக்கே அவள் உரியவள் என்ற உரிமையை பறைசாற்றும் மஞ்சள் கயிறு ...தலை நிறைய மல்லிகை சரம், பேசும் பொழுது அசைந்தாடும் ஜிமிக்கி, மருதாணியிட்டிருந்த வெண்டை விரல்கள் ... என அனைத்திலும் சிக்கி கிறங்கி தான் போனார் வெங்கடேஷ்.


அவர் வேதாவின் கரம் பற்றி அக்னியை வலம் வந்ததோடு சரி. இப்பொழுது கரம் பற்ற மனம் துடித்தாலும், அதற்கான நேரம் காலம் இதுவல்ல என்பதை உணர்ந்தவர், வேதா ஆல்பத்தை பார்த்து முடிக்கும் வரை காத்திருந்து விட்டு


" உனக்கு என்னை பத்தி எதுவுமே தெரியாது ...ஆனா எனக்கு உன்னை பத்தி ஓரளவுக்கு தெரியும்...
எனக்கும் கொஞ்சம் கோவம் வரும் ... அதுக்காக உன்னை மாதிரி
லவ் லெட்டர் கொடுத்ததுக்கு எல்லாம் புத்தூர் கட்டு போடற அளவுக்கு அடிக்க மாட்டேன் ..."


" அப்போ உங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காளா..."


" ம்ம்ம்ம்"


" நீங்க என்ன பதில் சொன்னேள்..."


" எனக்காகவே ஒரு பொண்ணு, பிறந்து வளர்ந்து எங்க ஊர்ல காத்துகிட்டு இருக்கா ...அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னேன் ..."


" உங்க கூட ஒர்க் பண்றவாளா லவ் லெட்டர் கொடுத்தா..." என்றவரின் கேள்வியில் அளவுக்கதிகமான பொறாமையும், வெங்கடேஷ் மீதான உரிமை உணர்வும் தென்பட,


" சும்மா சொன்ன ...எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிற அளவுக்கு யாருக்காவது தைரியம் உண்டா என்ன ... " என்றபடி தன் மீசையை முறுக்கியவர்


" அதை விடு, முதல்ல நீ என்னை புரிஞ்சுக்கணும் ,நான் உன்னை தெரிஞ்சுக்கணும் ... அதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கொஞ்சம் டைம் வேணும் ...


என்னோட உலகம் தமிழ்நாடு மாதிரி சின்னது கிடையாது ... நம்ப இந்தியா மாதிரி ரொம்ப பெருசு ...
நான் வளர்ந்ததெல்லாம் ஆர்மி கன்டோன்மென்ட்ல தான்... இப்ப நம்ம வீட்டை சுத்தி மகாராஷ்டீரியன் குஜராத்தி, அசாமி, பஞ்சாபி, பெங்காலினு ஏறக்குறைய எல்லா ஸ்டேட்டை சார்ந்தவர்களும் வசிக்கிறாங்க...


சோ, எனக்கு எங்க குடும்பத்தோட சடங்கு சம்பிரதாயமும் தெரியாது, உங்க குடும்பத்தோட சடங்கு சம்பிரதாயமும் தெரியாது ...
நீ உன் கம்போர்ட் ஜோனை (Comfort zone)ஐ விட்டு வெளியே வர வேண்டாம் ... நீ உன் ஆச்சார அனுஷ்டானங்கள ஃபாலோ பண்ணிக்கோ....
அதோட நாம நாளைக்கே பாம்பே கிளம்பறோம் ... என்னோட எல்லா லீவும் முடிஞ்சு போச்சு ...உனக்கு புது இடம், மொழி எல்லாம் புரிய கொஞ்ச நாளாகும்...
மார்ச் மாசம் உனக்கு ஃபைனல் எக்ஸாம் இருக்கு இல்ல ... டைரக்டா நீ எக்ஸாம் எழுதறதுக்கு உங்க அப்பா பிரின்ஸ்பல் கிட்ட பர்மிஷன் வாங்கி இருக்கிறாரு...எல்லா வருஷம் மாதிரி இந்த வருஷமும் நீ யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வரணும் ... அதான் என்னோட ஆசை ...அதுக்கு இன்னும் மூணு மாசம் தான் இருக்கு...
உன் எக்ஸாம் முடியட்டும், அப்புறம் நாம வாழ்க்கையை தொடங்கலாம்...." என்று படபடத்தவர் ஒரு நொடி வேதாவின் முகத்தை பார்த்து


"முக்கியமான கேள்வியை கேக்கவே மறந்துட்டேன்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கு இல்ல ..." என கண்ணில் ஆர்வத்தை தேக்கி வெங்கடேஷ் கேட்க


" உங்களை பிடிக்காமலா, என் அப்பாண்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.." என்று நாணத்தோடு வேதா எதிர்க்கேள்வி கேட்க,


" அதான பார்த்தேன் ...மாமியா.. கொக்கான்னா.." என்று வாய்விட்டு சிரித்தவர்,
" சரி நீ தூங்கு, நாளைக்கு உங்க வீட்டுக்கு போயிட்டு பாம்பே கிளம்பணும்..." என்றவருக்கு , தன் மனம் கவர்ந்தவளோடு ஒரே அறையில் இருப்பதே , நிம்மதியை அளிக்க, கட்டிலின் மறு பக்கத்தில் சென்று படுத்தவர், நிம்மதியாக நித்திரையை தழுவ
இதுநாள் வரை இல்லாத புது வித உணர்வில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தார் வேதா.


தகிப்பாள்
 
அத்தியாயம் 7

தன் கணவரிடம் காலையில் நடைபெற்ற தங்கள் மகளின் திருமணத்தைப் பற்றி கேட்க மனம் துடித்தாலும், வழக்கம் போல் தன் கோபத்தை மௌனத்தின் மூலமே பறைசாற்றிக் கொண்டு கட்டிலின் மறு புறத்தில் அமர்ந்திருந்தார் மரகதம்.

மனையாளின் மனநிலையை செவ்வனே அறிந்தவர்,

" ஏம்மா, என் மேல கோவமா..." என்றார் நாராயணன் மென்மையாக.

அதற்கு மீண்டும் மௌனத்தையே பதிலாக தந்தவரிடம், தங்கள் பெண்ணின் திருமணத்தில் நடந்த அனைத்து அரசியலையும் குழந்தைக்கு கூறுவது போல், அவருக்கு புரியும் படியாக ருத்ர நாராயணன் விளக்கிக்கூற,

" நீங்க ராவுத்தர் உயிருக்கு ஆபத்துன்னு சொல்றேள்....
தேவர் மேல பழி வந்துடும்னு சொல்றேள்... நேக்கு அதெல்லாம் தெளிவா புரியற்து... ஆனா என்னை ஏன் கல்யாணத்துக்கு அழைச்சிண்டு போகல... அத சொல்லுங்கோ ..." என்ற மரகதத்தின் அழுகையினுடே வந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வது எனப் புரியாமல் திணறியவர்,

" நோக்கு தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லணுட்ட.. உன்னிண்ட சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணுற அளவுக்கு நேக்கு நேரம் இல்லம்மா..." என்றார் ஆனந்தவல்லியை பற்றி சொல்லாமல் மறைத்து .

என்னதான் மரகதம் மனதளவில் குழந்தை என்றாலும், அவர் தன் மகளுக்கு தாய் என்பதை அடியோடு மறந்தே போனார் ருத்ர நாராயணன்.

ஆசையாசையாய் சுமந்து, அழகாய் பெற்றெடுத்து, அருமையாய் பேணி வளர்த்த மகளின் திருமணத்தை பற்றி முடிவெடுக்க ஒரு தாய்க்கு முழு அதிகாரம் உண்டு.

ஆனால் இங்கு அவர் அன்பு மகளின் திருமணம் அவருக்கு சொல்லாமலே நடந்தேறிவிட்டதால் அது அவர் மனதை பெருமளவில் பாதித்திருந்தது.

அதற்கு ருத்ர நாராயணன் கூறிய உப்புச்சப்பில்லாத காரணம் அதன் பாதிப்பை குறைக்காமல் கூட்டவே செய்ய,
அனைத்தும் அறிந்தவருக்கு தன் மனையாளின் மனம் புரியாமல் போனதுதான் விதியின் விளையாட்டு போலும்.

வழக்கம் போல், நடந்த நிகழ்வினை காலப்போக்கில் தன் மனையாள் மறந்து விடுவாள் என்றெண்ணிவருக்கு
இந்த நிகழ்வு ஏற்படுத்திய வடு அவர் மனையாள் மனதில் ஆறாத நெருப்பாய் காலம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் என்றும், அவரது காலம் முடிவதற்கும் இதுவே காரணமாக இருக்கும் என்றும் முன்பே தெரிந்திருந்தால் வேதாவின் திருமணத்தில் ஆனந்தவல்லி அடித்து ஆடிய ஆட்டத்தை மட்டுமல்ல நடந்த அனைத்தையுமே ஒன்றுவிடாமல் மலரைவிட மென்மையான மனம் படைத்த தன் மனையாளிடம் ஒப்பித்திருந்திருப்பார் ருத்ர நாராயணன்.

" ச்சரி என்னை விடுங்கோ...
அக்காவையாது கூட அழைச்ஷிண்டு போயிருக்கலாமோல்யோ..." என்றவரின் வாய்மொழியை கேட்டு
கிழிஞ்சுது போ என்று நாராயணனுக்கு தோன்ற

சற்று தயங்கி,

" உன்னை மாதிரி , அவளுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு நோக்கும் தெரியும் ...பின்ன எப்படி அவளை அழைச்ஷிண்டு போற்து..." என்று ஒருவாறு சமாளித்தவரிடம்

"ஏன்னா, நகை எதுவும் சரியா இல்லாம வைரத்தோடு கூட போடாம , எப்படி கல்யாணம் பண்ணேள்.."
என்றவரின் கேள்வி நாராயணனுக்கு சிரிப்பை வரவழைக்க ,

"நீ தான் உன் வைரத்தோடு அடிக்கை எல்லாம் கொடுக்க மாட்டேன்னுட்டயே..." என்றார் குறும்பாக .

" ஏன் ருத்ர நாராயணன்னின்ட பணமே இல்லையா... இல்ல ருத்ர நாராயணனுக்கு நகைக்கடை தான் தெரியாதா..." என கோபத்தை குரலில் தேக்கி கூறிய மனையாளை பார்த்து

" ஆத்துக்காரர் பேரை சொல்ல மாட்டேன்னுட்டு ரெண்டு தடவை சொல்லிட்டயே...." என கூறி வாய்விட்டு சிரித்தவர்

" மாப்பிள்ள எதுவும் வேண்டானுட்டேர், இருந்தாலும் என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டிய கடமைன்னு ஒன்னு உண்டு ...அது நேக்கும் நன்னா தெரியும் ... அவருக்கு பணத்துக்குப் பஞ்சமில்லை ... நம்ம பொண்ணு வாய்விட்டு சொல்லன்னாலும், பொருளாதார ரீதியா அவ நன்னா இருக்காளான்னு தெரிஞ்சுக்க அவ போட்டுண்டு இருக்கிற பொன் நகையும் , நிம்மதியா சந்தோஷமா இருக்காளான்னு புரிஞ்சிக்க அவ முகத்துல இருக்கும் புன்னகையும் தான் ஆதாரம் ... அத தெரிஞ்சுக்க தான் இந்த தடவ நான் எதையுமே செய்யல ..."

" நீங்க எப்படி இவ்ளோ திடமா இருக்கேள்னு நேக்கு புரியல...நேக்கு இந்த கல்யாணத்தை மனசால ஏத்துக்கவே முடியலன்னா..." என மரகதம் கமரிய குரலில் கூற,

" எல்லாம் எதிர்பார்த்தது தானம்மா.." என்றவரின் பேச்சு புரியாமல் மரகதம் உற்று நோக்க,

" நம்ம பொண்ணு பொறந்த அன்னைக்கே உன் தோப்பனார் அவ ஜாதகத்தை கணிச்சு சொல்லிட்டேரே... என்ன... உன்னிண்ட சொல்லக் கூடாதுன்னு என்னிண்ட சொல்லி இருந்தேர்....
இதுதான் பிரம்ம லிபீன்னு (தலையெழுத்து) தெரிஞ்சதுக்கப்புறம், நேக்கு எல்லாம் பழகிடுத்து... பகவான் ஒருத்தரை சிருஷ்டிக்கும் போதே அவா தலையெழுத்தையும் எழுதி தானே அனுப்பறேர்....அதை மாத்தற ஷக்தி எந்த மனுஷாளுக்கும் கிடையாது..."
என்றவர்

" நாளை காலையில, நம்ம மாப்பிள்ளையும் பொண்ணும் இங்க வரா... நாளைக்கே அவா பாம்பே புறப்பட்டு போறா ... நோக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல... நீயே புரிஞ்சு நடந்துப்பேன்னு நினைக்கிறேன்..." என்று இலை மறை காய் மறையாக, அறிவுரை கூறி முடித்தார்.


மறுநாள் காலை, விருந்திற்காக வந்திருந்த, வெங்கடேஷ், வேதாவை , அப்பொழுது தான் மெட்ராசில் இருந்து திரும்பிய ரங்கநாதன் ஏதோ எதிரிகளை பார்ப்பது போல் அளவுகடந்த வெறுப்போடு பார்த்துவிட்டு, வரவேற்காமல் கழுத்தைத் திருப்பிக் கொண்டு தன் அறை நோக்கி செல்ல,
அதனை பார்த்து மனம் குளிர்ந்த ஆனந்தவல்லியும் அதையே செய்ய,
மடிசார் முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி மரகதவல்லியும் ருத்ர நாராயணனும் அவர்களை இனிதாக வரவேற்று விருந்து படைத்தனர்.

அப்போது வாசு தேவரை வெட்டிய மர்ம நபர்களை கைது செய்திருப்பதாக செய்தி கிடைக்க , வெங்கடேஷ் காவல் நிலையத்திற்கு விரைந்து, விசாரணையில் ஈடுபட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் வீர மாணிக்கத்தின் ஆட்கள் என்றும் அன்றே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட போவதாக தெரியவர ஒருவித நிம்மதி வெங்கடேஷை ஆட்கொள்ள, செய்தியை கேள்விப்பட்ட வாசுதேவர்,
" குற்றவாளி யாருன்னு தெரிஞ்சு போச்சு... இனிமே நாங்க எல்லாத்தையும் பார்த்துக்குறோம் நீ நிம்மதியா உன் கல்யாண வாழ்க்கைய
நடத்து யா..." என்றார் மைந்தனின் மனம் அறிந்து.

அன்று மாலை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ருத்ர நாராயணனின் முகத்தில் ஏதோ ஒரு அலைப்புறுதல் தெரிய , உடனே வெங்கடேஷ்,

" வேதா, அப்துல் சூட்கேசை நம்ம கம்பார்ட்மெண்டுல வச்சிக்கிட்டு இருக்காரு... அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு .... இதோ வந்துடறேன் ..." என்று பக்குவமாக கூறி வேதாவை, அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட முதல் தர ஏசி கம்பார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ருத்ர நாராயணனிடம் வந்து

" ஏதோ சொல்லனும்னு நினைக்கிறீங்க சொல்லுங்க ..." என்றார் அவர் மனதைப் படித்து.
வெங்கடேஷின் புரிதல் அவருக்கு ஆச்சரியத்தை கொடுக்க,

" நீங்கோ என் ஆத்துக்கு வந்து முறைப்படி பொண்ணு கேக்கல ... கோர்ட்டுல என் சேம்பர்ல வந்து தான் பொண்ணு கேட்டேள்... ஒரு நீதிபதியா என்ன செய்யணுமோ என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, சரியா செய்து முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... ஆனா பெண்ணைப் பெத்தவனா, நேக்கு ஒரு கலக்கம் இருக்கவே செய்யற்து...

அவ நேக்கு பொண்ணு மட்டும் இல்ல என்னோட அம்மாவும் அவ தான் ...என் ஆத்தோட மகாராணி அவ..." என்ற போது எதற்கும் அஞ்சாத அந்த சிம்மத்தின் குரல் கமர,

" என் வீட்டுக்கும் தான்.. கவலைப்படாதீங்க... நல்லா பாத்துப்பேன் ..." என்றார் வெங்கடேஷ் ஒரே வரியில் அவர் மனதைப் புரிந்து.

வாசு தேவருக்கும் ருத்ர நாராயணனுக்கும் இடையே இருந்த அதே புரிதல், இவர்களிடத்திலும் இயல்பாகவே அமைந்திருந்தது .

அதற்கு மேல் ரயில் புறப்பட ஆரம்பிக்க,
ருத்ர நாராயணனிடம் விடைபெற்றுக்கொண்டு பம்பாய் நோக்கி பயணமானார்கள்.

ஜாதி, மத, இன பேதமில்லாமல், அனைத்து மாநிலத்தவரும் ஒன்று கூடி வசிக்கும் பம்பாய் இந்த இளம் ஜோடியையும் அழகாக அரவணைத்து கொண்டது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கென்றே கட்டப்பட்டிருந்த காவலர் குடியிருப்பில், தனித்தனி வீடுகள், சிறிய தோட்டத்துடன் காம்பவுண்ட் வால் சூழ வரிசையாக அழகாய் அமைந்திருக்க,
வெங்கடேஷின் வருகை முன்பே தெரியப்படுத்தபட்டிருந்ததால், அவரது உதவியாளரும், டிரைவரும் ரயில் நிலையத்திற்கே வந்து வெங்கடேஷை வரவேற்றனர்.

அவர் புதிதாக திருமணம் முடித்து தன் மனைவியோடு வருகிறார் என்ற செய்தி பரவியதும், அந்த குடியிருப்பில் குடியிருந்த மற்ற அதிகாரிகளின் வீட்டுப் பெண்கள் ஆவலோடு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்க,

ஆண்கள், அவரை தழுவிக்கொண்டு "முபாரக் ஹோ வெங்கடேஷ் பாய் " என வாழ்த்துக்கள் கூறி மகிழ,

அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த வயதான குஜராத்தி பெண்மணி,

" அப்பாவுக்கு உடம்பு சரி இல்லன்னு ஊருக்கு போயிட்டு, அப்சரஸ் மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்களே .... என் தங்கச்சி பொண்ணை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நான் ப்ளான் பண்ணிகிட்டு இருந்தேனே... இப்படி ஏமாத்திட்டாங்களே ..."
என வெளிப்படையாகவே குமுற,
உடனே அந்தப் பெண்மணியின் கணவர்,

" இவ தங்கச்சி பொண்ணு இவள மாதிரிதான் இருப்பா ... நல்ல வேளை நீ தப்பிச்ச.... சவுத் இண்டியன் பியூட்டி ஹேமமாலினி, ஸ்ரீதேவி மாதிரி, பியூட்டிஃபுல் வைஃப் உனக்கு அமைஞ்ச பொறாமைல இவ இப்படி சொல்றா... இவ பேச்சையெல்லாம் பெரிசா எடுத்துக்காதே ..." என கூறியதை பார்த்து வெங்கடேஷ் குலுங்கி சிரிக்க,

" இந்த ஓல்ட் மேனுக்கு எப்ப பார்த்தாலும் ஜொள்ளு விடனும்..." என்று அந்தப் பெண்மணி அவர் கணவரின் தலையில் கொட்ட அனைவரும் குலுங்கி சிரித்தனர்.

அங்கிருந்த பெண்கள் வெவ்வேறு விதமாக புடவை கட்டியிருக்கும் பாங்கினை வைத்தே, வெங்கடேஷ் கூறிய பாரத விலாஸை வேதாவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

வெங்கடேஷின் இல்லம் ,கீழ்தளத்தில் சமையலறை, கூடத்துடன் சேர்ந்து இரண்டு அறைகளும், மேல் தளத்தில் கூடம் மற்றும் பால்கனியுடன் கூடிய 2 பெரிய படுக்கை அறைகள் விஸ்தாரமாக இருக்க, வீட்டை பராமரிக்க, சமையல் வேலை, தோட்ட வேலை செய்ய அரசாங்கத்தால் உதவியாளர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.

நட்பு வட்டங்கள் கிளம்பியதும், சுற்றுமுற்றும் பார்த்த வேதா, வீட்டின் வாயில் கதவை தாழ்ப்பாள் போடாமல் சாத்தி விட்டு வெங்கடேஷை மிக நெருங்கி,

" அவா இவா தானா ..." என்றார் ரகசியம் பேசும் குரலில் கண்ணில் ஆர்வத்தை தேக்கி.

பயணத்திற்காக கட்டியிருந்த அடர் ஊதா நிற காட்டன் புடவை கசங்கி இருக்க,
கலைந்த தலை முடியில் கூட வேதா ரவிவர்மா ஓவியத்தின் நாயகியாகவே பளிச்சிட, மேலும் அந்த திடீர் நெருக்கத்தின் கிறக்கமும், வேதாவின் அழகிய முக பாவனையிலுமே மனம் லயித்த வெங்கடேஷூக்கு எதுவுமே காதில் ஏறவே இல்ல.

" சொல்லுங்கோ அவா இவா தானே ..." என மீண்டும் அதே கேள்வியை வேதா கேட்க, இம்முறை சுயம் உணர்ந்தவர்,

"எவா இவா..." என்றார் குறும்பாக.

" அதான் சொன்னேளே லவ் லெட்டர் கொடுத்தத பத்தி... அது...இவா தானே..." என பொறாமையுடன் கூடிய உரிமை உணர்வோடு வேதா தன் கண்டுபிடிப்பை கேட்க,

அந்த பெரியவர் ஆங்கிலம் கலந்து பேசியதால் வேதாவிற்கு அரைகுறையாக புரிந்திருக்கிறது என்பதை உணர்ந்துக்கொண்ட வெங்கடேஷ், நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் விளக்கிவிட்டு,

" அந்த அங்கிள், ஆன்ட்டி ரெண்டு பேரும் என் கொலிக்(colleague) பிரபுவோட அம்மா அப்பா .... டெய்லி ஜாக்கிங் போகும் போது பார்ப்பேன் ... இன்னைக்கு தான் அவங்களோட முதன் முறையா பேசின ... அவங்க சொல்ற பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாதும்மா ... எனக்கு அதுக்கெல்லாம் நேரமே இல்ல ..."

" ரொம்ப வருத்தப்படறீங்களோ..." என வேதா முறைக்க , அதனைக் கேட்டு வெங்கி வாய்விட்டே சிரித்தபடி

" நிச்சயமா இல்ல..." எனக்கூற
அவர் சிரிப்பையே இதழ் பிரியா புன்னகையோடு வேதா லயித்து பார்த்தபடி

" அப்ப சரி ...'
என அழகாக பெருமூச்சு விட , அப்போது அவர் காட்டிய முக பாவமும் , ஏறி இறங்கிய செழுமையும் வெங்கடேஷை சொக்க வைக்க,

நானே சும்மா இருந்தாலும், நீ சும்மா இருக்க விட மாட்ட போல இருக்கே மாமி ... என மனதுக்குள் புலம்பியவர்,

" வா குளிச்சிட்டு வந்து சாமி கும்பிடலாம் ..." என மனதை திசை திருப்பி மனையாளை அழைத்துச் சென்றார் .

மிக அழகாக பராமரிக்க பட்டிருந்த அந்தப் பெரிய வீட்டின் பூஜை அறையில் இருவரும் விளக்கேற்றி வழிபட,
உணவு மேஜையின் மேல் மதிய உணவு தயார் நிலையில் இருந்ததைப் பார்த்து

" வேதா, எனக்கு இவங்க சமையல் பழகிடுச்சு... உனக்கு இவங்க சமையல் பிடிச்சா சாப்பிடு, இல்லன்னா உனக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு சாப்பிடு..."

"இது வரைக்கும் நான் தளிகையே பண்ணனதில்ல... ஆனா போகப் போக கத்துப்பேன்...."

" தளிகைன்னா "

" சமையல் ..."

" ஓ .... ஆமா ...உங்க வீட்ல ஒரு தடவை கூடவா நீ சமைச்சது இல்ல... "

" ம்ஹூம்.... நான் தளிகை பண்ணினா என் அம்மா , என் அத்தை சாப்பிட மாட்டா..."

" ஏன் .."

" எனக்கு கல்யாணம் ஆகி, சமாஸ்ரயணம்(samasrayanam) ஆனா தான், என் கையால தளிகை பண்ணினா அவா சாப்பிடுவா..."

" இப்ப என்னமோ சொன்னியே, அப்படின்னா ..."

" சமாஸ்ரயணம்.. அப்படின்னா , என் கல்யாணத்துக்கு அப்புறம் ஆச்சாரியன் வெள்ளில பண்ணினா பெருமாள் கையில இருக்கிற மாதிரியான சின்ன சங்கு சக்கரத்தை, நெருப்புத் தணல்ல காட்டி என்னோட
ரெண்டு தோள்லயும் பதிச்சு எடுப்பா ...அந்த நெருப்பு சூடு ஆற்ரதற்கு ஒரு வாரம் ஆகும் ... அப்புறம் நான் தளிகை பண்ணா என் அம்மா சாப்பிடுவா..."

" நீ சமைச்சு உங்கம்மா சாப்பிடறதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போரா ..." என்றதும் வேதா குலுங்கி சிரிக்க,

" சரி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்ப யார் சமையல் பண்ணுவா ...." என ஆச்சரியமாக வெங்கடேஷ் கேள்வி எழுப்ப,

" கோடி ஆத்து பாக்கியம் மாமி பண்ணுவா, இல்லைன்னா ஆத்துல அப்பா, ரங்கு யாராவது இருந்தா தளிகை பண்ணுவா..."

" எப்டி எப்டி.. வித்தியாசமா இருக்கே.. அவங்க ரெண்டு பேருக்கும் சமைக்க தெரியுமா..." என ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக வெங்கடேஷ் கேள்விகளை அடுக்க

" பூணூல் போடும் போதே ,ஜென்ஸ்கெல்லாம் சமாஸ்ரயணம் ஆச்சாரியன் பண்ணிடுவா... அதனால அப்ப இருந்து அவா தளிகை பண்ணுவா... லேடிஸ்க்கு தான் கல்யாணத்துக்கு அப்புறம் சமாஸ்ரயணம் நடக்கும்... அதான் எங்களுக்குத் சரியா தளிகை தெரியாது ..."

" அம்மாடியோ ....சாப்பாட்டுல இவ்ளோ பெரிய சட்ட சிக்கல் இருக்குதா.... ஏகப்பட்ட ரூல்ஸ் போல ..."

" இதுக்கே இப்படிங்கிறேளே...நான் அவா குழந்தைதான்னாலும், வெளியில ஸ்கூல், காலேஜின்னு போயிட்டு வந்தா என் அம்மா தன் மேல படக் கூடாதுன்னு சொல்லுவா... கை கால் சுத்தமில்லாம இருக்கும்னு ஆத்துக்கு போனதும் குளிக்கணும்னு சொல்லுவா ... காபி சாப்பிடும் போது உதடு டம்பளர்ல படக்கூடாது, தூக்கி சாப்பிடணும்னு சொல்லுவா ... முக்கியமா மறந்துபோய் வாயில கை பட்டுட்டா, எச்சில்ன்னு உடனே கை அலம்ப சொல்லுவா ..."

" யப்பா........இந்த ரூல்ஸ் எல்லாம் உனக்கு மட்டும்தானா... இல்ல உங்க அப்பாவுக்கும் உண்டா .."

" எல்லாரும் ஃபாலோ பண்ணி ஆகணும் ..."

" அப்ப நீ பொறந்ததெல்லாம் ஆக்சிடென்ட்ன்னு சொல்லு... இத்தன ரூல்ஸ்ல எப்படிம்மா ..."
என்று குலுங்கி சிரித்தவரின் பேச்சு புரியாமல் ஓரிரு நொடி வேதா விழிக்க, பிறகு அரைகுறையாய் அதன் அர்த்தத்தை உணர்ந்தவள் அருகில் இருந்த கரண்டியை கையிலெடுக்க,

" நோ வயலன்ஸ் வேதா... நீ மட்டின்னு தெரியும் ... ஆனா இவ்ளோ மட்டின்னு இப்பதான் தெரியுது ...உங்க அப்பா அவ்ளோ ஷார்ப்பான மனுஷன் ரெண்டு மட்டிகளை வச்சு எப்படி தான் சமாளிச்சாரோ.... " என பேச்சு போகும் போக்கு சரி இல்லை என்றுணர்ந்து, வெங்கடேஷ் திசை திருப்ப

" எங்காத்து ரகசியத்தை சொன்னது தப்பா போச்சு ... நான் ஒன்னும் மட்டி கிடையாது..."

" ஆமா பெரிய ராணுவ ரகசியம் ... நீ சொல்லலன்னாலும் நானே கண்டுபிடிச்சிட்டேன்... அன்னைக்கு அந்த பிக்பாக்கெட் கேஸ்ல உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடும் போதே நீ சொன்ன பதிலை வச்சு நான் புரிஞ்சுகிட்டேன் ... என்ன ஒண்ணு அதுக்கு பேரு மட்டின்னு அப்ப தெரியல... நீ உங்க அம்மா அளவுக்கு இல்லேன்னாலும் உன்னை ஜூனியர் மட்டின்னு சொல்லலாம் ..." என்று குலுங்கி சிரித்தவரிடம்

" என்னை அப்படி எல்லாம் சொல்லாதீங்கோ...நான் ஜூனியர் மட்டி எல்லாம் இல்ல ..."

" அப்போ மிஸஸ் மட்டின்னு கூப்பிடறேன் ... பரவாயில்லையா ..." என்று சிரித்தவர்

" நேத்தே கேட்கணும்னு நினைச்சேன்... மறந்தே போயிட்டேன் உன்னோட ஹாபீஸ் (Hobbies) இன்ட்ரஸ்ட்(interest) பத்தி சொல்லு ..."

" எனக்கு பாட பிடிக்கும், நிறைய படிக்க பிடிக்கும் ..." என்று தயங்கியவரிடம்

" உனக்கு ஷேர் டிரேடிங்ல இன்ட்ரஸ்ட்ன்னு அப்துல் மூலமா தெரிஞ்சுக்கிட்டேனே..." என்றதும் ஆச்சரியத்தில் வேதா கண்களை அகல விரிக்க,

" உனக்கு என்னென்ன கத்துக்கணும்னு ஆசைப்படறியோ சொல்லு ... ஏற்பாடு பண்றேன் ..."

"கார் டிரைவிங், ஷேர் டிரேடிங் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு..."

" ஷேர் டிரேடிங்காக த்ரீ மந்த் கோர்ஸ்ல நாளைக்கே ஜாயின் பண்ணிடு... கார் கத்துக்க டிரைவிங் ஸ்கூல்ல ஏற்பாடு பண்றேன்... இதோட உன்னோட ஃபைனல் எக்ஸாம்க்கும் பக்காவா ப்ரிப்பேர் பண்ணு சரியா..." என்றவரிடம் தயங்கியபடி

" நான் தளிகை பண்ண கத்துக்கணும்... அதுக்கு சமைப்பது எப்படின்னு புக் வேணும் ... அப்புறம் துளசிச்செடி வேணும் ..."

" எவ்ளோ வேணும் ..."

" ஒரே ஒரு செடி இருந்தா போதும் ..." என்றார் சிரித்தபடி.

" சரி ...ஈவினிங் ஷாப்பிங் போலாம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு கிளம்பறேன்" என்று கிளம்பியவரின் மனம் ஒரு நிலையில் இல்லை .

தன் மனையாள் பல்கலைக்கழக தேர்வு எழுத இன்னும் மூன்று மாத காலம் இருப்பதால், கவனச்சிதறல் ஏற்படாவண்ணம் , அவர் மனதோடு தன் மனதையும் நேர் கோட்டில் பயணிக்க செய்யவே, மேற்கண்ட அட்டவணையை பின்தொடர முடிவெடுத்தார் வெங்கடேஷ்.

இத்தனை நாட்கள் கட்டை பிரம்மச்சாரியாய் காலம் கடத்தியவருக்கு,
காதலால் கசிந்துருகி கரம் பிடித்த கண்ணாட்டியின் அருகாமை வெகுவாகவே வாட்ட செய்தது.

முகூர்த்தப் புடவையை தவிர திருமணத்துக்கென்று புதிய ஆடைகள் வாங்கவில்லை என்றாலும் வேதாவிடம் இருந்ததெல்லாம் ஓரளவிற்கு விலை உயர்ந்த ஆடைகளே....

அவற்றில் பெரும்பாலும் பாவாடை தாவணிகளே.... புடவைகளை விரல் விட்டே எண்ணிவிடலாம்...

இயற்கையிலேயே இளமையும் அழகும் பொருந்திய மனையாள், இடைவரை கூந்தலுடன், பளிச்சென்ற வெண்ணிற இடை அசைய, பாவாடை தாவணிக்கே உரிய கவர்ச்சியில் வலம் வருவதை, அவரையும் மீறி அவரது கண்கள் ரகசியமாக ரசிக்கவே செய்ய, அதை தடுக்க சல்வார் வாங்கிக் கொடுக்க முடிவு செய்து , தன் மனையாளுடன் துணிக்கடைக்கு சென்ற பிறகு தான் ஒரு விஷயம் அவருக்கு தெளிவாக புரிந்தது.

பிரச்சனை வேதாவின் உடையில் அல்ல ... அவர் மனதில் தான் ...என்பது.

வாங்கிய புது சல்வார் அனைத்திலும் பேரழகியாக காட்சியளித்தவரை கண்டு
மனம் சொக்கி போனார் வெங்கடேஷ்.

அதற்கு மேல் அவரது உணர்வுகள் எவ்வகையிலும் வெளிப்படா வண்ணம் மறைத்து,
உன்னத காதலுக்கு அடையாளமாக, கட்டிய மனைவியே ஆனாலும், ஒரே வீட்டில் இருந்து கொண்டே கண்ணியமாக காதலிக்க தொடங்கினார்.

வேதா தன்னை, ஷேர் டிரேடிங் வகுப்புகள், கார் பயிற்சி வகுப்புகள், பல்கலைக்கழக தேர்வுக்கு தயாராவது,
சமையல் புத்தகத்தை பார்த்து சமையல் செய்வது, அந்த குடியிருப்பில் உடன் வசிக்கும் மற்ற குடும்பங்களுடன் நட்பு பாராட்டுவது என அனைத்திலும் ஈடுபடுத்திக்கொள்ள, வெங்கடேஷும் காலை பணிக்கு சென்றால் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

மனையாளின் சமையல் எப்படி இருந்தாலும், அவர் தயாரித்து பரிமாறுவதையே இரவு உணவாக உட்கொண்டார் .

முதலில் சில நாட்கள்,

" இன்னைக்கு தளிகைல பெரிய டிசாஸ்டர்(Disaster) ஆயிடுத்து... எதுவுமே நன்னாவே அமையல..." என
வருந்திய மனையாளிடம்

" நல்லா தான் பண்ணி இருக்க... டேஸ்டா இருக்கு... போக போக இன்னும் நல்லா டேஸ்டா பண்ண வரும் ..." என எந்த ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்காமல், பாராட்டி ஊக்கம் கொடுத்தார்.

நாட்கள் நகர நகர, வேதாவின் உழைப்பு புத்திசாலித்தனம் அனைத்தும், அவர் சமையலில் மட்டுமல்ல, அந்த வீட்டின் உள் அலங்காரத்திலும் பிரதிபலித்தது .

அங்கு வசித்த எல்லாரிடமும், அரைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் உரையாடினாலும் அவரின் சுறுசுறுப்பு, பெருந்தன்மை, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் பாங்கு, மற்றவருக்கு மனமுவந்து உதவும் சுபாவத்தால் மொழி பேதமின்றி அனைவரும்
வேதாவிடம் ஆத்மார்த்தமாக நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தனர்.

தன் ஸ்ரீவில்லிபுத்தூர் வீடு போல் இந்த வீட்டின் மீதும் வேதாவிற்கு ஒரு அந்நியோன்ய உறவு ஏற்பட்டிருந்தது.
அந்த வீட்டின் மேல் தளத்தில் இருந்த இரண்டு படுக்கையறைகளை தான் இருவரும் பயன்படுத்தி வந்தனர்.

வேதா அந்த வீட்டிற்கு வந்த அன்றே, தன் அறைக்கு நேர் எதிரில் இருக்கும் அறையை அவர் குளிக்க, உடைமாற்ற படிக்க , படுத்துறங்க என அனைத்துக்குமாய் ஒதுக்கினார் வெங்கடேஷ்.

வெங்கடேஷின் அறையிலிருந்த நூலகத்தை, பாரதியார், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி அதிகமாக ஆக்கிரமித்திருக்க, சார்லஸ் டிக்சன், ஷேக்ஸ்பியர், லியோ டால்ஸ்டாய், எமிலி டிக்கின்சனும் அலங்கரித்திருந்தனர் .

திரை இசைப் பாடல்களில் இளையராஜா, எம்.எஸ்.வி, வாலி வைரமுத்து, கண்ணதாசன், கிஷோர் குமார், எஸ.பி.பியின்
ஒலிநாடாக்களே அதிகம் இருந்தன .

வீட்டின் பெரும்பாலான இடங்களில் விவேகானந்தர், பாரதியார், பசும் பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சியளிக்க, பூஜை அறையில் சிவனும், முருகனும்
பிரதான தெய்வங்களாக அருள்பாளித்தனர்.

வைஷ்ணவ தெய்வங்களை வழிபட்டே பழகிய வேதா, சைவ கடவுள்களையும்
வழிபடத் தொடங்கினார்.

மனதைக் கட்டுப்படுத்த தெரியாமல் மனையாள் உடன் செலவழிக்கும் நேரத்தை வெகுவாக குறைத்துக்கொண்ட வெங்கடேஷ், தேவையானதற்கு மட்டுமே மனையாளுடன் வெளியே சென்று வந்தார்.

அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, கற்பழிப்பு என ஏகப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை மும்மரமாக தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால்
அவருக்கும் காவல் நிலையத்தில் கழுத்தை நெரிக்கும் வேலை இருக்கவே செய்தது.

வேதாவிற்கு தன் தாய் தந்தையுடன் வசித்ததற்கும் தற்போது கணவருடன் பம்பாயில் வசிப்பதற்கும் வித்தியாசம் அதிகம் இல்லை என்றே சொல்லலாம்.

தன் வீட்டில் இருந்த பாதுகாப்பு உணர்வு, நிம்மதி, சுதந்திரம் என அனைத்தும் கிடைக்கப்பெற, கழுத்தில் சரசரக்கும் புது மாங்கல்யம் மட்டுமே அவருக்கு திருமணமானதை அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டே இருந்தது.

என்னதான் மனையாளடமிருந்து விலகி நிற்க முயன்றாலும், வெங்கடேஷ் வீடு திரும்பும் போது, சிரித்த முகத்துடன் மான் குட்டியாய் துள்ளி குதித்து வரவேற்கும் மனையாளை காண அவர் மனம் தவியாய் தவிக்கும்.

தன் பல்கலைக்கழக தேர்வுக்குப் பின்னரே குடும்ப வாழ்க்கை தொடங்கப் போவது தெரிந்திருந்தாலும் , வெங்கடேஷின் விலகலை வேதா அதனோடு சம்பந்தப்படுத்தி பார்க்காமல்,
அது அவருடைய சுபாவம் என்றே கருதினார்.

அதே சமயத்தில் அவருடைய பொறுமை, புரிந்து செயல்படும் பாங்கு, பொறுப்புணர்வு, ஒழுக்கம் என அனைத்தும் அவர் மேல் மதிப்பை கூட்டியதோடு ஒரு வித ஈர்ப்பையும் பெண்ணவளின் மனதில் விதைத்திருந்தது.

நாட்கள் வேகமாக கடக்க, இரண்டு மாத பயிற்சியில், காரை நன்றாக ஓட்டி
பழகியிருந்தார் வேதா .

" வேதா, பாம்பே டிராபிக்கில் 15 கி.மீ ஸ்பீடுக்கு மேல போக முடியாது .... இருந்தாலும், நீ மத்தவங்க கார் மேல மோதினா பிரச்சனையே இல்ல புது காரையே வாங்கி கொடுத்திடலாம் ...
ஆனா ஆள் மேல மோதாம பாத்துக்கோ...
கை கால் போச்சு, இல்ல உயிரே போச்சுன்னா திரும்ப கிடைக்காது ...

பாம்பே மேப்ப (Map)கைல வச்சுக்கோ ... நம்ம ஏரியாவை விட்டு வெளில போகாது ... எங்கேயாவது உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா, என் நம்பருக்கு போன் பண்ணு இல்லன்னா கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணு அவங்க எனக்கு கனெக்ட் பண்ணுவாங்க ... ஆல் த பெஸ்ட் " என தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவுரையும் கூறி ஊக்கப்படுத்தினார்.

வேதா பாம்பே வந்ததிலிருந்து,
ருத்ர நாராயணனுடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். மரகதம் மட்டும் நான்கு முறை அழைத்தால் ஒரு முறை தொலைபேசி இணைப்பிற்கு வருவார், அப்படியே வந்தாலும் ஓரிரு வார்த்தை மட்டுமே பேசுவார், அதிலும் ஒருவித விலகல் தன்மை தெரியும். அவருக்கு மகள் மீது, கோபத்தை விட வருத்தம் அதிகமாக இருந்தது.

ருத்ர நாராயணனுக்கு, ரங்கநாதனை விட தன் தாயைப் போலவே பிறந்திருந்த தன் மகள் வேதாவின் மீது தான் பாசப்பிணைப்பு அதிகம் என்பதை அனைவரும் அறிவர்.

ரங்கநாதனுக்கும் தன் தந்தையிடம் அதிக ஒட்டுதல் இல்லை என்றாலும்,
அவர் மீது பயம் கலந்த மரியாதை இருக்கவே செய்தது.

ஆதலால் வேதாவின் விஷயத்தில் கூட தன் பிடித்தமின்மையை அவரிடம் நேரடியாக காட்டாமல், இயல்பை விட அதிக ஓதுக்கத்தை மேற்கொண்டதோடு வேதாவையும் தொடர்புக்கொண்டு அவர் பேசவில்லை.
அவ்வப்போது வீட்டிற்கு வந்தால் கூட, மரகதத்திடம் ஓரிரு வார்த்தைகளோடு நின்றுவிட்டு, அத்தை
ஆனந்தவல்லியிடம் மட்டுமே உரையாடி விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள, ஆனந்தவல்லி எதிர்பார்த்தது செவ்வனே ஈடேற தொடங்கியிருக்க
நடந்த அனைத்தையும் அறிந்த வேதாவும் ரங்கநாதனை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. நடந்தது என்ன என்று கேட்டறியாமல் ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்த ரங்கநாதனின் போக்கு அவருக்கு கோபத்தைக் கொடுத்திருந்தது.

வீட்டின் நிலைமை இப்படி இருக்க, இந்த மூன்று மாத காலத்தில் , அக்ரஹாரத்தில் வசிப்பவர்களும் வேதாவின் திருமணத்தை மறந்து விடவில்லை ...

அதில் ஒரு சிலர் ருத்ர நாராயணனை கடைத்தெரு, கோவில், என வெளியிடங்களில் சந்திக்க நேர்ந்தால் , வேண்டுமென்றே கழுத்தைத் திருப்பிக் கொண்டு, அவர் காதுபடவே அவரை தரக்குறைவாக பேசி விட்டு செல்வதும் நடந்து கொண்டுதான் இருந்தது .

வழக்கம் போல், 'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று பாரத்தை கடவுள் மீது சுமத்திவிட்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் ருத்ர நாராயணன் .

இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான தேசிகனின் தம்பி மகள் சுமித்ராவை ரங்கநாதனுக்கு மணம் பேசி முடித்தவர், திருமணத்திற்கு முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வதாக உறுதி கொடுத்துவிட்டு, தன் மகளையும் மாப்பிள்ளையையும் தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி
வேதாவின் பல்கலைக்கழக தேர்வுக்கு முன்னரே திருமணம் நடக்கவிருப்பதால், திருமணத்திற்கு முன்கூட்டியே கிளம்பி வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

ரங்கநாதனுக்கு திருமணம் நடக்கப் போவதை அறிந்த ஆனந்தவல்லி, வழக்கம் போல் உள்ளுக்குள் குமுறியபடி,

" டேய், ரங்கு .... நோக்கு சுமித்ராவை பிடிச்சிருக்கா ..."

" ம்ம்ம்.. " என்றார் ரங்கநாதன் ,ஏனென்றால் சுமித்ராவின் அழகு, அடக்கம் அப்படி.

" ம்ம்ம்ம், விதி யாரை விட்டது ... வியாபாரத்துல கொடி கட்டி பறக்கறா... நோக்கு கோடீஸ்வர பொண்ணுதான் அமைச்சிருக்கணும்... எல்லாம் உங்க அக்கா பண்ணின கூத்தால, சாதாரண குமாஸ்தா வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய நிலைமை நோக்கு ... உன்னோட தரம் இவ்ளோ தான்னு மத்தவா முடிவு பண்ணிட்டா... நோக்கு அழகு இல்லையா, திறமை இல்லையா , படிப்பில்லையா ...நேக்கு யாரை குத்தம் சொல்றதுன்னே தெரியல ..." என வழக்கம் போல் ஆனந்தவல்லி கொளுத்திப் போட்ட,

சுமித்ராவை முதல் பார்வையிலேயே ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்திருக்க, திருமணக் கனவில் மிதந்தவரின் மனதைக் கலைத்ததோடு, அவரது வாழ்நாள் முழுமைக்குமான நெருடலுக்கு முதல் விதையை செவ்வனே தூவி முடித்தார் ஆனந்த வல்லி.

நாட்கள் வேகமாக செல்ல, இன்னும் பத்தே நாட்களில மனையாளுடன் தன் சொந்த ஊருக்கு பயணிக்க இருந்த நிலையில்,

தன் அறையில் இருந்த பால்கனியில்,
பௌர்ணமி நிலவையும், நேர் எதிர் அறையில் இருந்த மனையாட்டியையும் ஒரு சேர ரசித்தபடி விவித பாரதியில்( சிலோன் ரேடியோ) திரையிசைப் பாடல்களை கேட்டக்கொண்டே நடைபயின்று கொண்டிருந்தார் வெங்கடேஷ்.

ரங்கநாதனின் திருமணத்துக்கு மறுநாளே வேதாவின் பல்கலைக்கழகத் தேர்வு தொடங்கவிருப்பதால் வேதாவின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க, அறையில் வீசிய தென்றல் காற்று அவரது கூந்தலை வருடிய போது

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழியிரண்டும் கடல் ஆனதே
எனது மனம் படக்கானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே ...

என்ற வைரமுத்து வரிகளை மலேசியா வாசுதேவன், இளையராஜாவின் இசையில் பாடிக்கொண்டிருக்க , ஏனோ வெங்கடேஷிற்கு , அந்த வரிகள் எல்லாம் அந்த
சூழ்நிலைகாகவே எழுதப்பட்டவை போல் தோன்ற, மெய் மறந்து
ரசித்துக்கொண்டிருந்தவருக்கு தன் மாமனாரிடம் பேசியது நினைவுக்கு வர, மறுநாளே அதனை செயல்படுத்த தன் மனையாளை நகை கடைக்கு அழைத்துச் சென்றார்.

" இதெல்லாம் ஏற்கனவே என்ணின்ட இருக்கு .... இந்த தடவை ஊருக்கு போகும் போது அம்மாண்ட கேட்டு எல்லாத்தையும் எடுத்துண்டு வந்துடறேன் ..."
என்றார் வேதா சகஜமாக ப்ளூ ஜாக்கர் வைரத்தோடு மற்றும் வைர அட்டிகையை பார்த்து.

" அது உங்க அம்மாவோடது. இது உனக்காக நான் வாங்குறது ...இனிமே உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட தான் கேட்கணும் .... உங்க அம்மா, அப்பா கிட்ட கேட்கக்கூடாது புரிஞ்சுதா ..." என்றார் வெங்கடேஷ் உறுதியாக.

பொதுவாக வெங்கடேஷின் கோபம் வீட்டுப் படியை தாண்டித்தான் வெளிப்படும்.
வெகு சில நேரங்களில், அவர் காட்டும் திடம், கோபமா அல்லது உறுதியா எனப் பிரித்தறிய முடியாத அந்த குரலுக்கு, தன்னிச்சையாய் கட்டுப்படும் வேதா, இப்போதும்
கட்டுபட்டு வைரத்தோடு, மூக்குத்தி, வைர அட்டிக்கை சகிதமாக வீடு வந்து சேர்ந்தார் .

ஊருக்கு கிளம்பும் நாளும் வர, தன் குடியிருப்பில் இருக்கும் அனைவரிடமும்
விடைபெற்றுக்கொண்டு, இருவரும் தன் சொந்த ஊர் நோக்கி பயணமானார்கள்.

ரங்கநாதனின் திருமணத்திற்கு ருத்ர நாராயணன், அக்ரஹாரத்தில் தன்னையும், தன் கொள்கையையும் மதிக்கும் குடும்பத்திற்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

வேதாவும், ரங்கநாதன் மணந்து கொள்ளப் போகும் சுமித்ராவும் சிறுவயதில் இருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள், விருதுநகரில் வசிக்கும் சுமித்ரா, விடுமுறையில் தன் பெரியப்பா தேசிகனின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வேதாவை பார்த்துப் பேசும் பழக்கமுண்டு.

திருமணத்திற்கு முந்தின நாள் நடக்கும் நிச்சயதார்த்த விழாவில்
சுமித்ரா மாம்பழ நிறத்தில் அரக்கு கரையிட்ட புடவையில் ஜொலி ஜொலிக்க, வேதா
'எம்.எஸ் ப்ளூ '(MS blue) என்றழைக்கப்படும் மறைந்த மதிப்பிற்குரிய கர்நாடக பாடகி திருமதி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிரத்தியோகமாக
பயன்படுத்திய நீல நிறத்தில் புடவை அணிந்து, அதற்குப் பொருத்தமாக நீலநிற ஜுவாலையுடன் மிளிரும், ப்ளூ ஜாக்கர் வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர அட்டிகை மற்றும் தங்க ஒட்டியாணம் சகிதமாக, விண்ணுலக தேவதை போல் காட்சி அளிக்க, திருமணத்திற்கு வந்திருந்த ஒரு சிலரின் பார்வையோடு, ரங்கநாதனின் பார்வையும் வேதாவின் மீது ஆராய்ச்சியோடு படிந்தது.

காரணம் வேதாவிற்கு திருமணம் முடிந்து நான்கு மாதம் ஆன நிலையில், கிட்டத்தட்ட ஆறுமாத கர்ப்பத்துடன் காட்சியளிப்பார் என்றே நம்பியிருந்தவர்களுக்கு, ஒட்டிய வயிற்றின் சிற்றிடையில், அம்சமாக பொருந்தியிருந்த ஒட்டியாணம், அதற்கு பதிலடி கொடுக்க, ஆனந்தவல்லியின் அறிவுரையை நம்பி இருந்த ஆர்வலர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்த

" அத்த, நீ வேதாவை பத்தி என்ன என்னமோ சொன்ன ... ஆனா பார்த்தா அப்படி தெரியலையே ..." என்றார் ரங்கநாதன் ஆனந்தவல்லியை தனியாக அழைத்து.

" ஒரு வேளை குழந்தையை கலைச்சிட்டாளோ என்னமோ ..." என்றார் ஆனந்தவல்லி தான் கூறிய வதந்தியை மெய்யாக்குவதிலேயே குறியாக இருந்து.

" வாய மூடு அத்த... நேக்கு வேதாவை நன்னா தெரிஞ்சும், நீ சொன்னதை நம்பினேன் பாரு ..என்ன சொல்லணும் ... குழந்தை உண்டானதால கல்யாணம் பண்ணின்டான்னு சொல்லிட்டு, இப்ப குழந்தையைக் கலைச்சிடான்னு பொய் மேல பொய் சொல்றயே.... நோக்கு வெட்கமா இல்ல ..." என்ற ரங்கநாதன் ஒருவித குற்ற உணர்வுடன்
ஆனந்தவல்லியை சாடி தீர்த்தார்.

ஆனந்தவல்லி கணக்குப் போட்டது இப்படிதான். எப்படியும் திருமணம் முடிந்ததும் ஓரிரு மாதத்தில் வேதா கர்ப்பம் தரிப்பாள். நான்கு மாதமாக இருந்தால் என்ன 6 மாதமாக இருந்தால் என்ன, வேதாவின் மெல்லிய சரீரத்திற்கு வயிறு தெரியவில்லை என கூறி தான் சொன்ன வதந்தியை உண்மையாக்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவரின் திட்டத்தில் ஒரு லாரி மண் விழுந்தது அவரே எதிர்பாராத திருப்பம்.

ரங்கநாதனின் ஏச்சுப் பேச்சை பொறுக்கமாட்டாமல்
உடனே அவர் கோபம் வேதாவின் மேல் திரும்ப, வழக்கம் போல் உடனுக்குடன் பழிவாங்கும் அவரது குணம் தலையெடுக்க, நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்த நிலையில் அனைவரும் இரவு உணவருந்த கிளம்பிக் கொண்டிருக்கும் போது, பெருங்குரலெடுத்து அனைவருக்கும் கேட்கும் படியாக,

" ஏண்டிம்மா வேதா,பம்பாய் எல்லாம் எப்படி இருக்கு ...." என்றார் மற்றவர்கள் அறிய.

" நன்னா இருக்கு அத்தை ..."

" நோக்கு மொழி புரியற்தா... தளிகை பண்ண கத்துண்டயா..."

" ம்ம்ம்ம், எல்லாரிண்டயும் ஓரளவுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன், தளிகை பண்ண கத்துண்டதோட , கார் ஓட்டக் கத்துண்டேன், ஷேர் டிரேடிங் பண்ண கத்துண்டேன் ..." என பெருமை பொங்க கண்களை விரித்து வெள்ளந்தியாக கூறிய வேதாவை பார்த்து, வன்மத்தோடு

" எல்லாம் சரிதான் ... கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆற்து... கோடி ஆத்து கோகிலாவுக்கு உனக்கு அப்புறம் தான் கல்யாணம் ஆச்சு... அவ உண்டாகி இருக்கா ... நோக்கு எந்த விசேஷமும் இல்லையே அதான் நேக்கு வருத்தமா இருக்கு ..." என ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவின் மூக்குடைக்க, அதற்கு பதிலளிக்க முடியாமல் வேதாவின் முகம் அனிச்சை மலராய் வாட,
அங்கிருந்த அனைவருக்கும் ஆனந்தவல்லியின் பேச்சிற்கு வேதாவின் முகபாவமே முழுவதையும் வெட்ட வெளிச்சமாக்க,

அனைத்தையும் கேட்டபடி தன் நெருங்கிய நட்பு வட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்த ருத்ர நாராயணன், உடனே அப்துல் அருகிலிருந்த வெங்கடேஷின் முகத்தை ஆராய,
அதில் ஒருவித நிம்மதியும் சாதித்த உணர்வும் தெரிந்தது.

வெங்கடேஷ் வேதாவிடம் அவரது படிப்பை காரணம் காட்டி தான், குடும்ப வாழ்க்கையை தள்ளிப்போடுவதாக சொன்னதெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்று தானே ஒழிய
அதி முக்கிய காரணம், ஆனந்தவல்லியின் சித்து வேலை( வாசுதேவர் மூலம் அறிந்து கொண்டது) மற்றும் மூன்றாம் தர பத்திரிகையின் கதை புனைவை முறியடிப்பது தான்.

வழக்கம் போல் ஜூனியர் மற்றும் சீனியர் மட்டிக்கு, தன்னைச் சுற்றி நடப்பவைகள் விளங்காமல் போக,
புரிய வேண்டிய அனைவருக்கும் தெளிவாக புரிந்திருந்தது.

வேதா , வெங்கடேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் 3 ஆண்டுகளாக காதலிக்கின்றனர் என்ற வதந்தி மட்டுமே வேதா மற்றும் மரகதத்தை சென்றடைந்திருந்தது.
வேதாவை பொருத்தமட்டில் , அவருக்கு வெங்கடேஷை பிடித்திருந்ததால், அந்த வதந்தியில் பாதி உண்மை பாதி பொய் என்று அரைமனதோடு அதனை ஏற்றுக் கொண்டிருந்தார் .
மற்றபடி ஆனந்தவல்லி மற்றும் மூன்றாம் தர பத்திரிகையின் கைங்கரியங்கள் அவர்களைச் சென்றடையாததால் , மற்றவர்களின் முக மாற்றங்கள் இருவருக்குமே புரியவில்லை. ருத்ர நாராயணன் கூட வேதாவிடம் ஆனந்தவல்லி பாண்டியனை சந்தித்து ஆடிய அரசியல் ஆட்டத்தை மட்டும் கூறினாரே ஒழிய, அவர் வேதாவின் மீது சுமத்திய அபாண்டத்தை கூறவில்லை.

மறுநாள் அதிகாலையில் திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்ததும் அன்றிரவு வேதா வெங்கடேஷின் இல்லத்திற்கு
சென்றுவிட,

தனிமையில் ருத்ர நாராயணனுடன் , மரகதத்திற்கு பேச நிறைய இருந்தது .

" ஏன்னா நேக்கு மனசு ரொம்ப வருத்தமா இருக்கு ..."

" ஏம்மா... "

"வேதாவை பார்த்தா அவ சந்தோசமா இருக்கிற மாதிரியும் தெரியர்து... இல்லாதது மாதிரியும் தெரியர்து...
கல்யாணமான புதுசுல ஒருவித பூரிப்பு, பளபளப்பு, புதுசா கல்யாணமான களைன்னு சொல்லுவாளே...
ஏனோ அதெல்லாம் அவ முகத்துல நேக்கு தெரியவே இல்லன்னா..." என்ற மரகதத்தின் பேச்சிலேயே, தன் மகளின் திருமண வாழ்வில் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெளிவாக ஊகித்த ருத்ர நாராயணன்,

" நம்ம பொண்ணு இன்னும் நம்ப பொண்ணா தான் இருக்கா ..." என்றார் பூடகமாய் .

" என்ன சொல்றீங்கோ... புரியல ..." என கேட்ட மரகதத்திடம் பேச்சை மாற்றி,

" நீ அவளிண்ட ஏதாவது பேசினயா .."

" ம்ம்ம்ம், பேசினேன் ... நன்னா இருக்கேன்னு தான் சொன்னா... நேக்கு தான் மனசு நெருடலா இருக்குன்னா..
நான் மனசுல அவ மேல கோபப்பட்டதால அவ குழந்தை உண்டாகாம இருக்காளோன்னு பயமா இருக்கு... இன்னைக்கு பார்த்தேளா அக்கா குழந்தையை பத்தி கேள்வி கேட்கும் போது கூட அவ முகம் வாடி போச்சு... ஒரு வேளை அவா ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது மனஸ்தாபம் இருக்குமோ ..." என்றவரின் வழக்கமான வெள்ளந்தி பேச்சை கேட்டுப் , மென் புன்னகை பூத்த ருத்ர நாராயணன்,

" என் மாப்பிள்ள தங்கம் டி... அது மட்டும் இல்ல அம்மாவோட கோபமெல்லாம் குழந்தைகளை ஒண்ணுமே பண்ணாது... கவலப்படாத வேதாவோட பரிட்சை முடியட்டும்... நீ எதிர்பார்த்த நல்ல செய்தி கூடிய சீக்கிரம் வரும் சரியா...." என்றவர்
அன்று பத்திரிகை பேட்டியில் சொன்ன 'காலம் பதில் சொல்லும்' என்ற வார்த்தை மெய்யாகி போனதை எண்ணி மனம் மகிழ்ந்து போனார்.

மறுநாள் அதிகாலை முகூர்த்தத்திற்கு, ஜோடியாக வந்திறங்கிய வேதா, வெங்கடேஷை , மணமேடையில் அமர்ந்திருந்த ரங்கநாதன் மரியாதை கலந்த பார்வையில் வரவேற்க,

வேதா அவர் பார்வையை வெடுக்கென்று தவிர்க்க, வெங்கடேஷ் , அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் மௌன போராட்டத்தை கண்டுகொள்ள, ருத்ர நாராயணனும் தன் பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் பனிப்போரை கண்டு கொண்டார்.

அடர் வாடாமல்லி நிற மடிசாரில் , இடை வரையான நீண்ட கூந்தலை அழகாகப் பின்னி குஞ்சலமிட்டு அதில் சரம் சரமாக மல்லிகை பூ சூடி , பிரத்தியேக அலங்காரத்தில் விண்ணுலக ரம்பைக்கு போட்டியாக காட்சியளித்த வேதாவுடன் பட்டு வேட்டி சட்டையில் ஆண்மைக்கு இலக்கணமாய் கம்பீரமாக நடந்து வந்த வெங்கடேஷின் ஜோடிப் பொருத்தம் வந்திருந்த அனைவரையும்
கவர்ந்திருந்தது.


ஆனந்தவல்லியின் நேற்றைய நேரடி தாக்குதலின் உபயத்தால்,
ரங்கநாதனின் பார்வையில் மட்டுமல்ல, திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோர், வேதா வெங்கடேஷை பார்த்த பார்வையில் ஒருவித மதிப்பு தன்மை கூடி இருந்ததென்றே சொல்லலாம்.

ஆனால் ரங்கநாதனின் மனதில் இருந்ததெல்லாம் இது தான்.
தங்கையை தவறாக எண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு இருந்ததே ஒழிய, மற்றபடி வேதா வெங்கடேஷின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ அவரது மனம் இடம் தரவில்லை.

ரங்கநாதனின் பார்வையில் தெரிந்த மரியாதையை வேதா உணர்ந்து கொண்டாலும் அதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவருக்கு தெளிவாக விளங்கியது தன் கணவருக்கான மரியாதையை ரங்கநாதன் இதுவரை ஒருமுறைகூட நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுக்கவில்லை என்று.

அந்த கோவத்தை முகத்தில் காட்டியபடி , வேண்டுமென்றே ஆனந்தவல்லியையும் ஆழ்ந்து நோக்கிவிட்டு, ஒய்யாரமாய் வெங்கடேஷை வெகுவாய் உரசியபடி நடந்துவர, வெங்கடேஷூக்கு சபையினர் முன்னால் மனையாள் காட்டிய நெருக்கம் சிறு கூச்சத்தை கொடுக்க, அதையெல்லாம் பொருட்படுத்தாது வேதா அவர் கரம் பற்றி நடந்து மணமேடை ஏறி, தம்பதி சமேதராய் காட்சிகொடுக்க ,அதனை காண சகிக்காது உள்ளுக்குள் ஆனந்தவல்லி காந்த, அவர் முகமும் அதனை தெளிவாக பறைசாற்ற,

" கொஞ்சம் தள்ளி நிக்கறியா மாமி..." என வெங்கடேஷ் ஒரு வித கூச்சத்தோடு வேதாவிடம் கிசுகிசுக்க ,

" செத்த சும்மா இருக்கேளா ..." என அதுவரை கரம் மட்டுமே பற்றி இருந்தவர் இப்பொழுது வெங்கடேஷின் முழங்கையை பற்றிக்கொண்டு மேலும் ஒன்றி நிற்க, கடைசியில் இம்முறையும் வெட்கப்பட வேண்டியது வெங்கியின் முறை ஆகிப்போனது.


வேத மந்திரம் முழங்க, ரங்கநாதன் சுமித்ரா கழுத்தில்
மாங்கல்யம் அணிவிக்கும் போது, கடைசி முடிச்சான நாத்தனார் முடிச்சை வேதா தோரணையாக போட , அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல் அந்த இடத்தைவிட்டே அகன்று விட்டார் ஆனந்தவல்லி.

ருத்ர நாராயணன் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றதால், விருந்து முடிந்த கையோடு, தன் தந்தைக்கு சில பணிகளில் உதவுவதற்காக, வெங்கடேஷ் வாசுதேவருடன் சென்றுவிட,

அன்று மாலை ரயிலிலேயே அவர் பம்பாய்க்கு பயணபடவிருப்பதால், அவரைப் பிரிந்து எப்படி இருக்கப் போகின்றோம் என்ற எண்ணம் முதல்முறையாக வேதாவிற்கு தலை தூக்க ஆரம்பித்தது.


தன் இல்லத்திற்கு திரும்பிய வெங்கடேஷிற்கும் , மனையாளை பிரிந்து தனியே பம்பாய் செல்வது உவப்பாகவே இல்லை .

ஏதோ தன் விலை உயர்ந்த கைப்பொருளை பாதுகாப்பின்றி புதிய நபர்களிடம் கொடுத்து விட்டுச் செல்வது போன்ற உணர்வு எழ,
அவள் பிறந்து வளர்ந்த ஊர், அவள் தாய் தந்தை ,என்ற எண்ணம் எல்லாம் ஏனோ வெங்கடேஷுக்கு அடியோடு மறந்தே போனது.

இரண்டு நாட்களாக மனையாளுடன் கழித்த அதிக தருணங்கள், அவளின் அலங்காரம், அருகாமை, அவளுக்கே உரிய வாசனை, பேசி சிரித்த நிமிடங்கள் என அனைத்தும் பாடாய்படுத்த, இன்னும் ஒரு மாத காலம் அவளை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்ற எண்ணமே, மனதில் பெரும் பாரத்தை ஏற்றி அவர் நிம்மதியை குலைத்திருந்தது .

தற்காலிக பிரிவு தான் என்றாலும் இருவருமே அந்தப் பிரிவு ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை வெகுவாகவே உணர ஆரம்பித்திருந்தனர்.

வெங்கடேஷ் தன் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது, வாசுதேவர்,

"ஏம்பா ... இன்னும் ரயிலுக்கு இரண்டு மணி நேரம் கூட இல்ல .... ஐயர் வீட்டுக்கு போயி வேதாவை பார்த்து ரெண்டு வார்த்தை பேசிட்டு வந்திடுப்பா .." என்று அறிவுறுத்த,

இத்தனை நாட்களாக ,மனையாளின் அருகாமையில் கடும் பிரம்மச்சரிய தவத்தை கடைப்பிடித்து வந்தவருக்கு இந்த தற்காலிக பிரிவின் தாக்கம் அவர் மனதிலும் உடலிலும் பெரிய உணர்வு பேரலையை ஏற்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருப்பதை செவ்வனே உணர்ந்தவர் , எங்கு
தன்னவளைக் கண்டால் தன் தவம் கலைந்து விடுமோ என்றஞ்சியபடி,

" போன்ல சொல்லிடறேன் ய்யா...."

" அது நல்லா இருக்காது பா .... உனக்காக வேதா காத்துகிட்டு இருக்கும் போய் நேர்லயே ரெண்டு வார்த்தை சொல்லிட்டு வந்திடு..."
என்று வற்புறுத்தி வேதாவின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார் வாசுதேவர்.


திருமணம் நடந்து முடிந்த வீடல்லவா ... உறவினர்கள் அதிகம் இல்லை என்றாலும் கலகலப்பாகவே இருந்தது.
வேதாவால் தான், அந்த கலகலப்பில் பொருந்தி இருக்க முடியவில்லை.
மனதில் இனம் புரியாத தவிப்பு,வலி, வேதனை, கடைசியாக துக்கம் தொண்டையை அடைத்து, அழுகை வர எத்தனிக்கும் போது தான், இரு சக்கர வாகனம் சத்தம் கேட்க , ஏறக்குறைய வெளியில் ஓடிச்சென்று பார்த்தவருக்கு
கணவரைக் கண்டதும் கண் கலங்க தொடங்கியது.

கூடத்தில் உறவினர்கள் விசாரிப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வெங்கடேஷை கைப்பற்றி இழுக்காத குறையாய்

" கொஞ்சம் தனியா வாங்கோ... பேசணும் ..." என்ற மனையாளின் சன்னமான கலங்கிய குரலை பின்பற்றி
வேதாவின் அறைக்குள் நுழைய, உடனே கதவை தாழிட்ட வேதா

" நான் உங்களோடயே பாம்பே வந்துடறேனே... நான் அப்புறம் எக்ஸாம் எழுதிக்கிறேன்னா..." என கண்ணீர் மல்க பேசியவரின் மொழி ஆனந்த
பேரலையை வெங்கடேஷ் மனதில் சுழற்றி அடிக்க,
ஒரு நிமிடம் அவருக்குமே அது சரி என்று தோன்ற, பிறகு சுதாரித்துக் கொண்டவர்,

" இன்னும் இருவத்தாறு நாள் தான்... எக்ஸாம்ஸ சரியா முடி .... நானே வந்து கூட்டிட்டு போறேன் ..."

" நான் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படறீங்கோ... இல்ல .." என்று கோபம் கொந்தளித்தபடி வேதா வசைபாட அவரது பேச்சும் செய்கையும் வெங்கடேஷுக்கு சிரிப்பை வரவழைக்க ,

அவர் பேச நினைத்தெல்லாம் அவர் மனையாட்டி பேச கேட்கும் போது அவர் மனம் இலவம் பஞ்சாய் மிதக்க , கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, சற்று தள்ளி நின்றிருந்தவர்

" எனக்கு மட்டும் உன்னை இங்க விட்டுட்டு போகணும்னு ஆசையா என்ன... என்னாலயும் நீ இல்லாம இருக்க முடியாதும்மா..." என்றது தான் தாமதம், அவர் இரு கைகளையும் விலக்கி , கட்டியணைத்து அவர் மார்பில் முகம் புதைத்து, குலுங்கி அழ ஆரம்பித்த மனையாளை தேற்றும் வழிதெரியாமல் தன்னுடனேயே இறுக்கிகொண்டார் வெங்கடேஷ்.

தகிப்பாள்
 
அத்தியாயம் 8


பம்பாயில் ஒன்றாக இருந்த போது உணராத உணர்த்தாத காதலை, இப்போது தன் கணவனை இறுக்கி அணைத்து தேம்பி அழுது, அவருக்கு உணர்த்தியதோடு தானும் தன் காதலை உணர்ந்து கொண்டிருந்தார் வேதா


புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
என்ற வரிகளுக்கு ஏற்ப.


மனையாளின் பட்டு போன்ற மென்மையான சருமம் , அம்சமான அலங்காரம், வாளிப்பான இளமை,
ஏக்கம் கலந்த காதல் தோய்ந்த பேச்சு
என அனைத்திலும் கிறங்கி போனவரின் காதல் கட்டுப்பாட்டை இழந்து கரையைக் கடக்க
முற்படும் போது
மேஜையின் மேலிருந்த புத்தகம் காற்றில் படபடக்க, அப்போது தான் சுயம் உணர்ந்து சுதாரித்தவர்,


" பட்டும்மா , நான் முன்னாடியே சொன்ன மாதிரி, இந்த தடவையும் நீ யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வரணும்... அதனால நல்லா படிச்சு எக்ஸாம் எழுது ... எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே , உன்ன நான் பாம்பேக்கு கூட்டிட்டு போறேன் சரியா...." என்றவரின் பேச்சில் இருந்த, அவர் முதல் முதலாக விளித்த செல்ல பெயரை கூட உணராமல் பதில் பேசாமல் தேம்பி கொண்டிருந்தவரிடம்,


" இப்பவே என் கூடவே உன்ன கூட்டிட்டு போயிடுவேன்... ஆனா ரெண்டு வருஷமா இந்த படிப்புக்காக நீ உழைச்ச உழைப்பு வீணாயிடும்மா ... இன்னும் ஒரே மாசம் தான்... நல்லா எக்ஸாம் எழுதி முடி ... நம்ம வீட்டுக்கு போயிடலாம் சரியா ..."


"....."


" பதில் சொல்லும்மா ..."


" அதான் தலையாட்டினேனே... எக்ஸாம் எழுதரேன்னு...." என சன்னமாக பதில் அளித்தவரிடம் சிரித்தபடி


" நீ இன்னும் அழறயோன்னு நினைச்சேன்.... எங்க என் முகத்தைப் பாரு ..." என்று தன் மார்பிலிருந்து வேதாவின் முகத்தை பிரித்தெடுத்து உச்சி முகர்ந்தவர்,


" சரி வா டைம் ஆச்சு நான் கிளம்பனும் ..." என்று பேசியபடி அறையை விட்டு வெங்கடேஷ் வெளியேற, அவரை உரசிக்கொண்டே அவர் கையை பற்றியபடி வேதா பின்தொடர,


அப்போது ருத்ர நாராயணன், மரகதம், ரங்கநாதன், சுமித்ரா ஆகியோர் பூஜை அறையில் இருந்து வெளிபட,


வேதாவின் அழுது வீங்கிய முகமும் அவர் வெங்கடேஷின் கரம் பற்றி பின் தொடர்ந்த பாங்கும், அனைவரின் கவனத்தையும் செவ்வனே கவர, உடனே மற்றவர்களின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை கண்டு, வெங்கடேஷ் தன் கையை,
வேதாவிடமிருந்து உருவிக்கொள்ள,


ருத்ர நாராயணன் ஒரு காலத்தில் வழக்கறிஞராக இருந்தவராயிற்றே அறையில் என்ன நடந்திருக்கும் என்பதை சரியாக அனுமானித்தவர்,


" எப்ப வந்தீங்கோ மாப்பிள்ள... நாங்க பூஜையில இருந்தோம் ... வேதாவோட எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் நானே அவளை பாம்பேல கொண்டுவிடறேன்..." என வெங்கடேஷுக்கு பதில் அளிப்பது போல் வேதாவுக்கு பதிலளிக்க,


" வந்து 10 நிமிஷம் ஆகுது ... ட்ரெயினுக்கு டைம் ஆச்சு ... நான் கிளம்புறேன் ... ." என வெங்கடேஷ் அனைவர் முகத்தையும் பார்த்து பொதுவாக கூறிவிட்டு விடைபெற, ரங்கநாதன் அமைதியாக நிற்க


" உங்களை வழியனுப்ப நானும் கூட வரேன் ..." என ருத்ர நாராயணன், அவருடன் புறப்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றார்.


வழக்கம் போல் அப்துலும் உடன் வர, ரயில் புறப்பட 10 நிமிடங்களே உள்ள நிலையில், ருத்ர நாராயணன்


" மாப்பிள்ள, இந்த சின்ன வயசுல, என் குடும்பத்தோட பாரம்பரியம், என் பெண்ணோட மானம், உங்களோடு மரியாதை , உங்க குடும்பத்தோட கௌரவம், உங்க கல்யாணத்தோட கண்ணியம்னு எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துண்டிருக்கேள்...


நானே என் பொண்ணுக்கு, மாப்பிள்ளை தேடி இருந்தா கூட இப்படி ஒரு சம்பந்தம் அமைஞ்சிருக்காது...."
என உணர்ச்சிப்பெருக்கில் பேசிக்கொண்டே வெங்கடேஷின் இரு கரங்களையும் சேர்த்து தன் இரு கரங்களால் பற்றியிருந்தவரிடம்,


" நீங்க சொன்ன எல்லாத்தையும் விட,
என் மனைவியோட மானம் , மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம் ... அவளை எந்த சூழ்நிலையிலும் தலைகுனிய விடமாட்டேன் .... என் காதல் கண்ணியமானதுன்னு எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய சூழ்நிலை... அதான் ..."


" நீங்க உங்க கல்யாணத்தைப் பத்தி என்ணின்ட பேசும் போது, எந்த ஒரு நல்ல பாசமான தகப்பனுக்கும் வர சந்தேகமும் பயமும் நேக்கும் வந்தது ....
ஆனா எப்ப என் பொண்ணு எங்க எல்லாரையும் விட்டுட்டு உங்க கூட வரணும்னு ஆசைப்படறாளோ... அப்பவே நேக்கு புரிஞ்சிடுத்து... நீங்க அவளை அருமையா பார்த்துக்கிறேள்னு..."
என்றவர் மனமார
ஆசி கூறி வழி அனுப்பி வைத்தார்.


*****************************************


கல்யாணத்தில் ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதைப் பற்றி ராவுத்தர்


" கல்யாணத்துல ரொம்ப அதிகமா பேசிடுச்சி அந்த ஆனந்தவல்லி... பாவம் வேதா முகமே மாறிடுச்சி... அத கூட வச்சுக்கிட்டு நம்ம ருத்ரா இன்னும் என்னென்ன கஷ்டப்பட போறானோ தெரியல ... நீ ஆனந்தவல்லியை பத்தி ருத்ரா கிட்ட கொஞ்சம் பேசக்கூடாதா வாசு..." என கேள்வி எழுப்ப,


" என்னத்த பேச சொல்ற ... ஏதாவது கேட்டா என் அம்மாவுக்கு கொடுத்த வாக்கு, நேர்மை, நியாயம், தர்மம்னு சொல்லுவான்... உனக்கு தெரியாதா... ருத்ரா ஏகத்துக்கும் நல்லவன்னு ... அதோட முன்ன மாதிரி இப்ப என்னால எதையும் பேச முடியாது டா ஏன்னா இப்ப சம்பந்தி ஆயிட்டேன்... நீதான்டா அவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லணும் ... " என ராவுத்தரிடம் பதிலளித்தவர் நினைவு வந்தவராய்


" ராவுத்தர், எனக்கு ஒன்னு புரியல டா, ஆனந்தவல்லி பேசினது ஒரு பக்கம் இருக்கட்டும், அதுக்கு ஏன் வேதா முகம் அப்படி சுருங்கிப் போவணும்...


கட்டினா அந்த புள்ளைய தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு எம் மகன் கட்டிக்கிட்டான் ... கட்டிகிட்டா மட்டும் போதாது ... கூடி ஒன்னா பொழைக்கணுங்கிற கூறு அவனுக்கு இருக்குதா இல்லையான்னே எனக்கு தெரியல...


வேதா என்னவோ ஷேர் டிரேடிங் படிக்கிறேன், கார் ஓட்டுறேன்னு சொல்லுது... இவன் என்னடான்னா
கல்லுளி மங்கன் மாறி நின்னுக்கிட்டு இருக்கான் ... ஊருக்கு போவறதுக்கு முன்னாடி ஐயர் வீட்டுக்கு போய் வேதாவை பார்த்து சொல்லிட்டு போன்னு நான் சொல்ல வேண்டியதா இருக்குது டா... இவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னே எனக்கு புரியல...
இவன் இந்த லட்சணத்துல இருந்தான்னா நான் பேர புள்ளைக்கு எங்க போவேன்......
இந்த விஷயத்தை பத்தி அவன்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல, தோளுக்கு மேல வளர்ந்த பய... பெரிய அதிகாரி வேற .... வேற வழி தெரியாம
இப்பதான் கோவிலுக்கு போயி ரெண்டு பேத்துக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லாம ஒன்னா பொழைக்கணும்னு வேண்டுதல் வச்சுட்டு வரேன் ..." என்று வாடிய முகத்தோடு நடையைக்கட்டினார் வாசு.


அன்றே ருத்ராவை சந்தித்து ராவுத்தர் ஆனந்தவல்லியை பற்றி பேச,


" என் அக்கா ஆனந்தவல்லி என் கல்யாணத்துல ஆடின ஆட்டம் நோக்கும் வாசுவுக்கும் தெரியாதாடா ...
என் கல்யாணம் நிச்சயம் ஆனதிலிருந்து கல்யாணம் நடந்து முடிகிற வரைக்கும் கல்யாணத்தை எப்படி எப்படி எல்லாம் நிறுத்தலாம்னு என்னென்ன பிளான் பண்ணினா...
எல்லாம் தெரிஞ்சும் அவளை என் ஆத்துல நான் வச்சிண்டு இருக்கேனா அதுக்கு ஒரே காரணம் என் அம்மாவுக்கு நான் கொடுத்த வாக்கு தான்...


என் அம்மா சாகும் போது என்ணின்ட


ருத்ரா, அவளுக்கு ஆத்துக்காரன் சரியில்ல, குழந்தை இல்ல, பத்து பேர் ஆத்துல பத்து பாத்திரம் தேய்ச்சு பொழச்சிக்கிற சாமர்த்தியம் இல்ல ....படு சோம்பேறி ...வாய் நீளம்.. போற இடத்துலயெல்லாம் வம்பு பேசி சிண்டு முடிஞ்சுவிட்டு சண்டை வழிஷிண்டு வருவோ... உன்னை விட்டா அவ பிச்சைதான் எடுக்கணும் ...
அவளுக்கு வேற நாதியில்லை ருத்ரா...


உன் கல்யாணத்துல அவ ஆடின ஆட்டம் நேக்கு தெரியும், அவ பொறாமை குணத்தை நம்மளால மாத்த முடியாது....
பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டு தான் இருக்கேர் ... அவ கெட்டவளாவே இருந்துட்டு போகட்டும் நாம நல்லவாளா இருக்கலாம்... உன்னை நம்பி அவளை விட்டுட்டு போறேன் டா எந்த சூழ்நிலையிலும் அவளை கைவிடமாட்டேன்னு நேக்கு சத்தியம் பண்ணு ... அப்படின்னு என் அம்மா பேசினது இப்ப வரைக்கும் என் காதுல ஓளிச்சிண்டே இருக்கு ராவுத்தர் ...


சத்தியம் பண்ணிக் கொடுத்து சங்கடத்துல மாட்டிண்டுடேன்.....


மரகதம் அவளைபத்தி புரிஞ்சுக்காம இருக்கிறது பகவான் நேக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன்... அதனாலதான் நானும் என் அக்காவை பத்தி எதுவும் அவளிண்ட சொல்றது இல்ல ...
மரகதம் இயல்புலயே ரொம்ப வெகுளி ...
அதனால தான் என் வண்டி ஓடிண்டு இருக்கு ... மரகதம் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா இந்நேரம் என் ஆம் ரெண்டு ஆயிட்டு இருக்கும்...
என் நிம்மதியும் போயிருக்கும் ... ஏதோ அந்த வகையில நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி டா.... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு கண்ணதாசன் எனக்காகவே எழுதினது போல இருக்கு ..." என முடித்த ருத்ர நாராயணனிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் விடைபெற்றார் ராவுத்தர்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் நடந்த சந்திப்பில்,
" ருத்ரா, வேதா என்ன சொல்லுது ..." என்றார் மிகுந்த தயக்கத்தோடு வாசு தேவர்.


வாசுவின் கண்ணில் தெரிந்த அலைப்புறுதலை வைத்தே அவர் எதைக் கேட்டு எண்ணுகிறார் என்பதை உணர்ந்த நாராயணன்,


" அவ எங்க பேசறா ... எதையோ பறி கொடுத்த மாதிரி சுத்திண்டு இருக்கா... வேதாவுக்கு இங்க இருக்கவே பிடிக்கல டா...
அன்னைக்கு மாப்பிள்ள ஊருக்கு போகும் போதே கூடவே போகணும்னு ஒரே அழுகை...
கடைசில எக்ஸாம்ஸ முடி நான் வந்து அழைச்ஷிண்டு போறேன்னு அவர் சொல்லிட்டு போனதால வேற வழி இல்லாம இங்க இருக்கா ..." என்ற பதிலைக் கேட்டு மனம் குளிர்ந்தவர்


" என்னதான் அவன் என் மகனா இருந்தாலும், நம்ம வேதாவை அவன் நல்லபடியா வச்சுக்கணுமேன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துகிட்டே இருந்தது... இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு ருத்ரா ... சாதி விட்டு சாதி கல்யாணம் கட்டிக்கும் போது சுவாரசியமாத்தான் இருக்கும்.... ஆனா தாய் தகப்பன் வீட்டுல எந்த தரத்தோட அந்த புள்ள இருந்ததோ அந்த தன்மையோட காலம் ழுழுசும் வச்சி காப்பாத்தணும்... இல்லாட்டி போனா ஐயிரு சமுதாய சீர்திருத்தம் பண்றேன்னு வெளியாளுக்கு கட்டிக் கொடுத்தாரு இப்ப அந்த பொண்ணோட நிலைமையை பார்த்தியான்னு , அக்ரஹாரத்துல இருக்கிறவங்க பேசறதுக்கு முன்னாடி உன் அக்கா ஆனந்தவல்லி பேசிடும்...


எப்பவுமே காதல் கல்யாணம் கட்டிக்கிட்டவங்க, இந்த சமுதாயத்துக்கு முன்னுதாரணமா வாழ்ந்து காட்டணும் ... இல்லன்னா சாதியை தூக்கிப் பிடிக்கிறவங்க , கடைசி வரைக்கும் அவங்க வாழ்க்கைய சாட்சியா காட்டுவாங்க ...


நீ நல்ல கொள்கையோட வாழறவன் ருத்ரா.... உன் கொள்கை என்னைக்கும் ஜெயிக்கணும் .... அப்பதான் நீ ஆசைப்பட்ட சமுதாய மாற்றம் நடக்கும்...
அது என் புள்ளையும் உன் பொண்ணும்
ஒன்னா சேர்ந்து பொழைக்கிற பொழப்புல தான் இருக்கு... இது எல்லாத்தையும் நினைச்சு தான் ரெண்டு நாளா வெசன பட்டு கிட்டு இருந்தேன்... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடா ..."
என வெளிப்படையாக வாசுதேவர் அகமகிழ,


" என் மாப்பிள்ள உன் மகன் டா ...
நீ யோசிக்கிறதுல பாதியாவது அவர் யோசிச்சிருப்பேர் இல்ல ..." என்று நாராயணன் புன்னகைக்க , உடன் வாசுதேவர் இணைந்துகொண்டார்.


*****************************************


பம்பாய் வந்து சேர்ந்த வெங்கடேஷுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கடக்கப்போகும் நாட்களை காலண்டரில் குறித்து வைத்தார் .


ஊருக்கு செல்லும் முன் தன் மனையாள் இட்ட கோலம் துளசி மாடத்தின் முன் கலையாமல் காட்சியளிக்க ,
தெய்வ விக்ரகத்திற்கு தொடுத்து சாற்றியிருந்த மாலை காய்ந்து தொங்க,
அவள் அறையிலிருந்த பாவாடை தாவணிகள், சல்வார் உடைகள், புத்தகங்கள், பயன்படுத்திய ஐ டெக்ஸ் சாந்து, கண் மை , ஒரு சில ஒட்டும் பொட்டுக்கள் ... ஒரே ஒரு தலை முடியுடன் காட்சியளித்த சீப்பு ...
போன்றவை திரும்பிய இடமெல்லாம் அவர் கண்ணாட்டியின் நினைவை அதிகரிக்க ,
மூன்றாவது முறையாக அனாதையான உணர்வை உணர்ந்தார் வெங்கடேஷ்.


அவரை பெற்றதாய், வளர்த்த தாய் இறக்கும் போது இருந்த வெறுமை உணர்வு
இப்போது தலை தூக்க ஆரம்பித்திருந்தது.


அவரை வளர்த்த தாய் தந்தையர் இறந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளாக
தனிமையை துணையாக்கிக் கொண்டு வெறுமையோடு வாழ்ந்து வந்தவருக்கு
மனையாள் உடன் கழித்த கடந்த நான்கு மாதங்கள் சர்க்கரை நிமிடங்களாய் தோன்றின.


அவர் தேவை அறிந்து செயல்படும் குணம், சைவ உணவே ஆனாலும் அவருக்குப் பிடித்ததை கேட்டுத்தெரிந்து கொண்டு அதனை பக்குவமாக சமைத்து பரிமாறும் விதம் என தாயின் பராமரிப்பில் பாசத்தில் திளைத்திருந்த குழந்தை போல் தன்னை முற்றிலுமாக தன் மனையாளிடம் தொலைத்திருந்தார் .


வேதாவின் நிலை அதைவிட மோசமாக இருந்தது.


சங்க இலக்கியங்களில் தலைவனை பிரிந்திருக்கும் தலைவிக்கு பசலை நோய் தாக்கியதாக பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்திருந்தவருக்கு , அந்த நோயின் தாக்கத்தை முழுவதுமாக இப்போது தான் உணர ஆரம்பித்திருந்தார்.


எந்த மகிழ்ச்சியிலும் முழுதாய் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலாமல் மனத்துக்குள் பிரிவு ஆற்றாமையால் வருந்தினார்.


தான் பிறந்து, வளர்ந்து, படித்து, தன் தாய் தந்தையருடன் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னியமாக போக, 4 மாதத்திற்கு முன்பு வரை பரிச்சயமில்லாத கணவன்,
திக்கு திசை தெரியாத மாநிலம், அவள் மொழி அறியாத மக்களெல்லாம் இப்போது அவரது சொந்தங்கள் ஆகிப் போயினர்.


'ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி ' என்ற வாக்கியத்தின் முழு அர்த்தத்தையும் அனுபவரீதியாக உணர ஆரம்பித்திருந்தார் .


தன் காதல் கணவரின் நினைவாகவே உறங்கி அவர் நினைவாகவே எழுந்தார்.


கடிகாரம் காட்டும் ஒவ்வொரு மணித்துளியோடும் தன் மணாளனின் செயல்களை நினைவுபடுத்திப் பார்த்தார்.


இப்ப தூங்கி எழுந்திருப்பேர்... இப்ப எக்சசைஸ் பண்ணிண்டு இருப்பேர்..... இப்ப பேப்பர் படிப்பேர்.... இப்ப ஸ்நானம் பண்ண போவேர்...இப்ப டியூட்டிக்கு கிளம்பிடுவேர்.... என வாய்விட்டே புலம்பலானார்.


ஓரளவிற்கு கடினப்பட்டு காலைப்பொழுதை கடத்தியவருக்கு மாலை 7 லிருந்து 9 மணியை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி போனது.
இரவு உணவின் போது தன் நாயகனுடன் நடந்த, கெஞ்சல், கொஞ்சல், ஹாஸ்யம் எல்லாம் அவர் கண்முன் தோன்றி வெகுவாக அலைக்கழிக்கும்.


" இது என்னதுன்னு சொல்லுங்கோ பார்ப்போம்..." என வேதா தான் சமைத்த உணவு வகையை வெங்கடேஷிடம் காட்ட,


" வாவ் நைஸ் பாசுந்தி போல இருக்கு ... ஆமா... ஏன் கடுகு இருக்கு ... " என கூறிக்கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலால் தொட்டு நாவில் ருசி பார்த்தவரின் முகம் எட்டு கோணலாகி போக,


" ச்சே...என்னம்மா இது புளிப்பும் காரமுமா இருக்கு ..."


" இது ஒன்னும் பாசுந்தி இல்ல ... மோர் குழம்பு ... என்னன்னு தானே சொல்ல சொன்னேன்... உங்களை சாப்பிட்டு பார்க்கவா சொன்னேன்... இப்படி நன்னா இல்லைன்னு பட்டுனு சொல்லிட்டேளே.." என்று வருந்தியவரிடம்


" ஏய்... இதை பாஸந்தின்னு மனசுல நினைச்சுகிட்டு சாப்பிட்டதால தான் ஏதோ மாதிரி இருந்தது ... இதை மோர் குழம்புன்னு மனசுல நினைச்சுகிட்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்... " என வெங்கி சமாதானப்படுத்த,


" ஆசை ஆசையா மொத முறையா மோர்க்குழம்பு பண்ணினேன் ... இப்படி நன்னா இல்லன்னுட்டேளே..."
என்ற வேதாவின் கண்களில் மெல்லிய நீர் திரையிட்டு , உதடுகள் துடிக்க


" இனிமே இந்த விஷப்பரீட்சையே வேண்டாம்மா... நீ எந்த டிஷ் செஞ்சாலும், அதுக்கு என்ன பேர் வச்சி இருக்கேன்னு முன்னாடியே சொல்லிடு... நான் சாப்பிட்டு பார்த்து அதனோட டேஸ்ட் எப்படி இருக்குன்னு மட்டும் சொல்றேன்... சரியா .."


" சரி, இப்ப சொல்லுங்கோ மோர் குழம்பா எப்படி இருக்கு ..."


" இது பாசுந்தியா தான் நல்லா இல்ல மோர் குழம்பா ரொம்ப நல்லா இருக்கு..." என்று கூறிவிட்டு வெங்கி மீண்டும் வாய்விட்டே குலுங்கி சிரிக்க,


" ஏன் இப்ப திடீர்னு சிரிக்கிறீங்கோ..." என வேதா முறைக்க


" நான் அக்யூஸ்ட்கள கூட இப்படி மிரட்டி கேட்டதே இல்லம்மா... " என்றவரின் முக பாவனையில் வேதாவும் உடன் குலுங்கி நகைத்தார் .


அன்றைய நினைவில் மூழ்கி
திளைத்தவருக்கு, உடனே தன் காதல் கணவருடன் பேசும் ஆசை வர, வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அது அடித்து அடித்து அடங்க,
அவர் இன்னமும் வீட்டிற்கு வரவில்லை
என்றறிந்தவர் மிகுந்த மனச்சோர்வோடு தொலைபேசியை தாங்கியில் பொருத்தினார்.


இரவில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தார். காலண்டரில் எத்தனை முறை எண்ணினாலும் நாட்கள் நகராமல் அதே எண்ணிக்கையை காட்டின.
இத்தனைக்கும் இயல்பான தம்பதிகளுக்கிடையே இருக்கும் தாம்பத்திய உறவினை கூட இருவரும் அனுபவித்ததில்லை. சொல்லப்போனால் வெங்கடேஷ் ஊருக்கு கிளம்பும் போது வேதா கொடுத்த அணைப்பும், வெங்கடேஷின் நெற்றி முத்தமும் தான், அவர்களுக்கு இடையே நடந்த முதல் தொடுகை.


வேதாவை பொருத்தமட்டில் அவர் வீட்டில் இருந்த அனைவருமே, தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க, தொலைவில் இருந்தவருடன் மானசீகமாக தொடர்பில் இருந்தார்.


பம்பாயில் வெங்கடேஷின் உயர் அதிகாரியும் நண்பருமான சீனிவாஸ் ஷர்மா ,


" ஏன்யா வெங்கி , ஏன் இப்படி இருக்க ... காலையிலிருந்து பார்த்துகிட்டு இருக்கேன் ரொம்ப கோவப்படற ... கொஞ்சம் வருத்தமா வேற தெரியற ...என்ன பிரச்சனை..." என சோக கீதம் பாடிய வெங்கடேஷின் முகத்தைப் பார்த்து அவர் மராட்டியில் துக்கம் விசாரிக்க


" ஒண்ணுமில்ல சார் ..." என்று வெங்கி தடுமாற,


" இல்லையே, திடீர்னு ஒருத்தர் இவ்ளோ எரிச்சல் படறாங்கன்னா யாரையோ மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம்... இப்பதானய்யா உனக்கு கல்யாணம் ஆச்சு... என்ன பிரச்சனை ..."


" அது வந்து ...என் வைஃப் ஊருக்கு போய் இருக்கா சார் ...."


" என்னய்யா , அதுக்குள்ள சண்டை வந்து கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கே போயாச்சா ..."


" இல்ல சார்... எக்ஸாம் எழுத போய் இருக்கா..."


" ஓ... முதல்ல போய் உன் வைஃப்பை கூட்டிகிட்டு வா ...உன் முகத்தை என்னாலயே பாக்க முடியல ..." என்றவரின் பேச்சு வெங்கடேஷுக்கு ஆச்சரியத்தை அளிக்க,


எப்பொழுதாவது சந்திக்கும் இவருக்கே, தன் முக மாற்றமும் நடவடிக்கையும் பளிச்சென்று தெரிகிறதே.... எப்பொழுதுமே தன்னுடனேயே இருக்கும் தன் வீட்டு வேலை ஆட்கள், டிரைவர், தனக்கு கீழே பணிபுரியும் மற்றவர்களின் பார்வையில், நிச்சயம் தன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தெரிந்திருக்குமே ...என நினைத்துப் பார்த்து மனதுக்குள் சிரித்தபடி காவல்துறை ஜீப்பில் பவனி வந்தவர் எதேச்சையாக


தெருவோரத்தில் பூ விற்கும் பெண்மணியை பார்த்ததும், மீண்டும் மனையாளை பற்றிய நினைவுகள் துளிர்த்தெழ,


" இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வாங்கோ ... வரும் போது பூ வாங்கிண்டு வரேளா... இங்க எல்லா இடத்திலும் சாமந்திப்பூ தான் கிடைக்கிறது ... நேக்கு மல்லிப்பூ வேணும் ..."


மனையாள் கேட்டதற்காக பூ வாங்க நினைத்தாலும் இயல்பிலேயே இருந்த கூச்ச சுபாவம் தடுக்க, அடுத்தவர்களை அழைத்து வாங்கித் தர சொல்லவும் மனமில்லாமல் தானும் வாங்க முடியாமல் தனக்குள்ளேயே திண்டாடி போனார்.


பொதுவாக எந்த ஒரு பரிபூரண ஆணும், தன் மனையாளுக்காக வாங்கும் பூவும், புடவையையும் தானே கடைக்கு சென்று வாங்க நினைப்பானே ஒழிய, அடுத்தவர்களை வாங்கித் தரச் சொல்ல மாட்டான், அவ்வாறு செய்தால் அவனது உள்ளுணர்வுக்கு அது ஒவ்வாததாகி விடும்.


அதே நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தவர், கடைசியில் பூ வாங்காமலே வீட்டுக்கு வர
அழைப்புமணி அழுத்தியதும் கதவைத் திறந்த மனையாளை பார்த்து சொக்கி தான் போனார்.


கல்யாணத்தின் போது பாரம்பரிய அரக்கு நிற மடிசார் புடவையில்,
பார்த்திருந்தவருக்கு, இப்போது அதே போல் காட்சியளித்தவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அணு அணுவாக ரசித்தபடி
ஏறக்குறைய அவரது மூச்சுக்காற்று அவர் மனையாட்டியின் முகத்தில் படும் அளவிற்கு நெருங்கிய போது


" நான் விரதத்துல இருக்கேன் ... என் மேல படாதீங்கோ.... மடி..." என வேதா பின் வாங்கும் போது தான் அவரது நெருக்கமே அவருக்கு உரைக்க,


தலையை அழுந்த கோதியவர், பெரும் மூச்செடுத்து மனதை சமன் செய்துக்கொண்டு,


" என்ன மாமி... கலக்குற இன்னைக்கு ..."


" காரடையான் நோன்பு ..."


" அப்படின்னா .."


" சத்தியவான் சாவித்திரி விரதம்னு சொல்லுவா..."


" ஓ... அதுவா...இதுக்கு தான் பூ கேட்டியா ..." என்றவரின் பார்வை அவர் வாங்கிக் கொடுத்திருந்த வைரத்தோடு மற்றும் வைர அட்டிகையின் மேல் விழ,


" எல்லாம் நல்லா இருக்கு மாமி ...ஆனா இந்த இடுப்புக்கு ஒரு ஒட்டியாணம் இருந்தா இன்னும் அம்சமா இருக்கும் ..."
என்றவரின் பார்வை போனயிடம் , வேதாவிற்கு ஒருவித கூச்சத்தை தர,


" நேக்கு நாழி ஆர்து... வாங்கோ பூஜைக்கு..." என்ற போது தான் பூஜையறையில் வரிசை கட்டி நின்ற புதிதாக சமைத்த உணவுகளைப் பார்த்து,


" இப்ப தான் எல்லாத்தையும் புதுசா சமைச்சிருக்க போல இருக்கு... காலையிலிருந்து நீ சாப்பிடலையா ..."


" இல்ல ... இன்னைக்கு நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடுவேன் ...."


" என்னம்மா இது ... அல்சர் வந்திடும்மா..." என்றவரின் பேச்சை காதில் வாங்காமல்


" நீங்க கை கால் அலம்பிண்டு டிரஸ் மாத்திண்டு வாங்கோ... பூஜை ஆரம்பிக்கணும்..." என்றதும் மின்னல் வேகத்தில் தயாராகி வெங்கடேஷ் வர


"உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் நூற்றேன்...ஒருகாலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் ... "என கண்மூடி வேதா பிரார்த்திக்க,


" ஏன் மாமி ... இதை ஏன் சாமி கிட்ட கேக்குற... ஆசாமி எங்கிட்ட கேட்டாலே நானே சொல்லுவேனே... உன்னை விட்டு நான் எங்கம்மா போவேன் ..." என்றவரை முறைத்துப் பார்த்த வேதா
தட்டில் இருந்த மஞ்சள் சரடை, எடுத்துக்கொடுத்து கட்ட சொல்ல


" என்னென்னமோ செய்யற .. ஒண்ணுமே புரியல ..." என
புன்னகைத்தபடி
வேதாவின் கழுத்தில் மஞ்சள் சரடை கட்டியவரிடம்


" கிழக்க பார்த்து நில்லுங்கோ... நான் சேவிச்சுக்கணும்... தீர்க்க சுமங்கலி பவான்னு சொல்லுங்கோ ..."
என்றவர் வெங்கடேஷின் பாதம் பணிய,


" நான் நல்லா இருக்கறதுக்கு நானே ஏன் இண்டைரக்ட்டா சொல்லணும்..."
என்றவருக்கு மறுபடியும் ஒரு முறைப்பு பரிசாக வழங்கப்பட்டதை எல்லாம் தற்போது நினைத்துப் பார்த்தவர்


இங்க இருந்த நாலு மாசத்துல, அவ கேட்டது பூ ஒன்னு தான் ...அதைக் கூட வாங்கிக் கொடுக்காம விட்டுட்டயே டா வெங்கி .... என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றி, அவர் மனதை பாரமாக்கியது.


அவர் கூறியது போல் மறுநாளே, அவர் மனையாளுக்கு ஒட்டியாணம் மற்றும் வேறு சில நகைகளையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் , அதைத்தான் ரங்கநாதனின் திருமணத்தில் வேதா அணிந்து கொண்டதும். ஆனால் வெங்கடேஷ் வாங்கி கொடுத்தது எல்லாம் அவர் ஆசைப்பட்ட பொருட்கள் தானே ஒழிய வேதா விருப்பப்பட்டது அல்ல .. என்ற எண்ணம் தான் அவரை அதிகமாக வருந்தச் செய்தது.


படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும் போதெல்லாம் வேதாவின் மனம்,
தன் கண்ணாளன் தன்னிடம் முதன்முதலாக கேட்டுக் கொண்ட, பல்கலைக்கழகத்திலேயே முதலாம் மாணவியாக வரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு
வெகுவாக உழைக்க ஆரம்பித்தார்.


தேர்வு நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றவரிடம், கல்லூரி முதல்வரிருந்து விரிவுரையாளர்கள், உதவியாளர்கள் வரை நலம் விசாரித்தாலும், அவர்களது பார்வையில் ஒருவித சந்தேகம் இருப்பதை வேதாவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.


உடன் பயின்ற மாணவிகளில் ஒரு சிலர், ஆழ்ந்த அன்போடு அவரது திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்ல,
வேறு சிலர், அவரது திருமணம் நடந்த முறையே தவறாக பேச, இன்னும் சிலர்


" உனக்கு என்னம்மா ...உங்கப்பா ஜட்ஜு ....உன் வீட்டுக்காரர் போலீஸ் ஆபீஸர் ... நீதித்துறை, காவல்துறை எங்களுக்கும் வந்து
வாய்க்குதே ...ம்ஹூம்.." என வெளிப்படையாகவே பொரும,


இவற்றுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியவளின் மனமோ பம்பாயிலேயே இருக்க, உடனிருந்தவர்கள் தான் கடைசிவரை பேசிப்பேசி களைத்து போனார்கள்.


டீக்கடை, பெட்டிக்கடை, கடைத்தெரு, பேருந்து நிலையம் என திரும்பிய இடமெல்லாம் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, புரியாத பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரிய ஆரம்பித்து, இசையின் வரிகளில் லயிக்க ஆரம்பித்தார் வேதா.


மனையாளை பற்றிய நினைவுகள் வரும் போதெல்லாம் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாட நினைப்பார் வெங்கடேஷ்.


வேதாவின் இல்லத்தில் தொலைபேசி கூடத்தில் இருக்கும் , தனித்துவமான பேச்சுக்கு வசதியும் இல்லை, அவர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பதால்
அவ்வாறு பேசுவதற்கு வெங்கடேஷூக்கும் மனமில்லை.


இருப்பினும் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது, வேதாவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, நன்றாக தேர்வு எழுதுமாறு ஊக்கப்படுத்தினார்.


வேதாவும் இரண்டு மூன்று முறை அவரை தொடர்புகொள்ள முயற்சித்திருந்தார், என்ன ஒன்று அவர் தொடர்பு கொள்ளும் நேரமெல்லாம், சொல்லி வைத்தாற் போல் வெங்கடேஷின் வேலைகள் உச்சத்திலிருக்கும்.


இவர்களுக்கிடையே இருக்கும் உரையாடலே இந்நிலையில் இருக்க ,
ஆனந்தவல்லி எப்பொழுதும் போல் தகிடு தத்த வேலையில் செவ்வனே தன்னை ஈடுபடுத்திக்கொண்டதற்கு அடையாளமாக,


கூடத்தில் தொலைபேசி ஒலிக்கும் போது அவர் எடுக்க நேர்ந்தால், மறுமுனையில் வெங்கடேஷ் என்று தெரிந்ததும் உடனே,
ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிடுவார்.
இது ஆனந்தவல்லியின் வேலைதான்
என வெங்கடேஷூம் அறிவார்.


இத்தனை ஆண்டுகளாக நிழல் உலக தாதா போல் செயல்பட்டு வந்த ஆனந்தவல்லி, சற்றும் யோசிக்காமல்
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழிக்கு எற்ப வேதாவை பழிவாங்குவதாக நினைத்து திருமணத்தில் அனைவரின் முன்பாக அநாகரீகமாக நடந்து கொண்டது அவரது ஆதரவாளர்களோடு அவரை அறிந்தவர்களுக்கும் அவரது குணத்தை அவரே வெட்ட வெளிச்சமாக்கி காட்டியது போலாகி போனது.


வீட்டில் ருத்ர நாராயணன் மட்டுமே அறிந்திருந்த அவரது குணம், தற்போது ரங்கநாதனுக்கும் வேதாவுக்கும் அத்துப்படியான நிலையில் முன்பு போல் அவரால் எந்த விஷயத்திலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை.


இருந்தாலும் தேனிலே தோய்த்து எடுத்தாலும் பாகற்காயின் கசப்பு மாறாதது என்பது போல் , அவரது உண்மை குணத்தை நேரடியாக வெளிக்காட்டாமல், இந்த மாதிரி
சிறுசிறு சில்மிஷங்களை செய்து தன்னுடைய இருப்பினை அடுத்தவர்களுக்கு உணர்த்திக் கொண்டே தான் இருந்தார்.


பலமுறை ரிசீவர் தொலைபேசியின் தாங்கியில் இல்லாமல், வெளியே இருப்பதைப் பார்த்து, வழக்கம் போல் மரகதம்,


" யாரோ தெரியாம கீழ
வச்சுட்டிருக்கா போல இருக்கு ..." என்று தனக்குத்தானே பேசியபடி, அதனை தாங்கியில் பொருத்திவிட்டு செல்வார்.


வெங்கடேஷ் அழைக்கும் போது , மரகதம் எடுக்க நேர்ந்தால்,
மாப்பிள்ளையிடம் மரியாதையாக நலம் விசாரித்துவிட்டு மகளை அழைத்து கொடுத்துவிடுவார்.


இம்மாதிரியான ஆனந்த வல்லியின் சித்து விளையாடல்கள் ருத்ர நாராயணனின் பார்வைக்கு வர,
அவர் தன் அலுவலக தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளுமாறு, வெங்கடேஷிடம் தெரிவித்திருந்தார்.


ஒரே தொலைபேசி எண் என்பதால், வேதா வெங்கடேஷ் பேசிக் கொள்ளும் பொழுது, கூடத்தில் இருக்கும் தொலைபேசியை எடுத்து ஓட்டு கேட்க ஆரம்பித்தார் ஆனந்தவல்லி.
முதன்முறை பேசும் போது வெங்கடேஷிற்கு சந்தேகம் எழவில்லை,
ஆனால் அடுத்த முறை வேதா அழைப்பை துண்டிப்பதற்கு முன், மற்றொரு அழைப்பு துண்டிக்கப்படுவதை உணர்ந்தவர், அதிலிருந்து தொலைபேசியில் அழைப்பதையே நிறுத்திக்கொண்டார்.


தொலைபேசிக்கே இந்த நிலைமை என்றால் , கடிதம் எழுதினால் நிச்சயம் அது, வேதாவை சென்றடையாது என்பதை அறிந்து அதையும் நிறுத்திக்கொண்டார் .


வாசு தேவரின் வெட்டுக்காயம் ஓரளவு ஆறிக்கொண்டே வர, தேர்வு இல்லாத நாட்களில், தானே தன் மாமனார் இல்லத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார் வேதா.


அவ்வாறு அவர் வரும் சமயங்களில்,
வெங்கடேஷ் தன் இல்லத்து தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு வேதாவுடன் உரையாடினார்.


நாட்கள் வேகமாக நகர
வேதாவின் தேர்வுகள் அனைத்தும் முடிந்த நிலையில், வெங்கடேஷுக்கு வேலைப்பளு காரணமாக அதிக நாட்கள் விடுப்பு எடுக்க முடியாத நிலையில், ரயில் பயணச்சீட்டும் சரியாக கிடைக்காத காரணத்தால், அவரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் தாமதப்படுவதாக செய்தி கிட்ட, அது வேதாவை வெகுவாக வாட்டியது.


" ஏண்டி எக்ஸாம் இப்பதான முடிஞ்சது... ஒரு பத்து நாள் இந்த அம்மாவோட இருக்க கூடாதா நீ ... " என்றார் மரகதம் மிகுந்த சோகத்தோடு காட்சியளித்த வேதாவை பார்த்து.


" இல்லம்மா, அவர் அங்க தனியா இருக்கேர்... நான் எங்காத்துக்கு போகணும் மா ..." என்ற வரியில் இருந்த 'எங்காத்து' என்ற வார்த்தை மரகதத்தை வருத்தமுற வைக்க,


தாய் மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் சம்பாஷணையை, கண்டும் காணாதது போல் ஊஞ்சலில் அமர்ந்தபடி ருத்ர நாராயணன் கேட்டுக்கொண்டிருக்க, சிறு அமைதிக்கு பிறகு


"உன் கல்யாணத்துக்காக நான் சேர்த்து வச்ச நகையை எல்லாம் அப்படியே இருக்கு... இந்த தடவை ஊருக்குப் போகும் போது எடுத்துண்டு போறயா ..." என்று ஆவலோடு மரகதம் கேட்க


" வேண்டாம்மா ... அவர் கோவிச்சுபேர்...
அவர் நேக்கு வைரத்தோடு, வைர அட்டிக்கையிலிருந்து எல்லாம் நகையும் வாங்கி கொடுத்திருக்கேர்.... ரங்கு கல்யாணத்துல போட்டுண்டு இருந்தேனே .. பார்த்திருப்பேளே.... அவர் எதுவும் நம்மாத்துல இருந்து எடுத்துண்டு வர கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேர்..." என்ற பதில், மரகதத்தை அடித்தது போலிருந்தது. வேதா இயல்பாகக் கூறியது தான், ஆனால் இது குறித்து முன்னவே மரகதம் தன் கணவரோடு உரையாடியது அவருக்கு நினைவு வந்து மேலும் வருத்தத்தை அளித்தது.


வேதா அவ்விடத்தை விட்டு அகன்றதும்,


" கேட்டேளா, உம்ம பொண்ணு பேசினத, எங்கான்றா, நகை வேண்டான்றா .... என்னன்னா நடக்கறது இங்க... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ..." என்றார் கண் கலங்கிய நிலையில்.


" ஏம்மா, இதுக்கு போய் வருத்தப்படறியே... நியாயமா நீ சந்தோஷப்படணும்... நம்ம பொண்ணு நம்ம ஆத்துல இருக்குறதை விட அவாத்துல சௌக்கியமா இருக்கான்னு அர்த்தம்....
மாப்பிள்ள அவளை நன்னா பார்த்துக்கறேர்னு அர்த்தம் ....


ஒரு பொண்ணு அழுதுண்டே புக்காத்துக்கு போறான்னா, புக்காத்து மனுஷா சரி இல்லன்னு அர்த்தம் ... ஆனா நம்ம பொண்ணு சந்தோஷமா போறான்னதும் நோக்கு புரிஞ்சியிருக்கணும் மாப்பிள்ள ரொம்ப நல்லவர்னு... அதனால அவ பேசினதை தப்பர்த்தம் பண்ணிக்காத ..." என்ற நீண்ட விளக்கம் அளித்து மரகதத்தை சமாதானப்படுத்தியவருக்கு,
வேதாவின் பம்பாய் பயணத்தைப் குறித்து , திடீரென்று ஒரு எண்ணம் உதயமாக,


ஏற்கனவே மெட்ராஸில் வசிக்கும் தன் மகன் ரங்கநாதன் இல்லத்திற்கு போக வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தன் மகள் வேதாவை உடன் அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானத்தின் மூலம் பம்பாய்க்கு பயணப்பட வைக்கலாமே .. என்ற சிந்தனை வந்ததும் அவர் வெங்கடேஷிடம் பகிர்ந்துகொள்ள ,


" சரி வேதாவால தனியா டிராவல் பண்ண முடியும்னா, அனுப்பி வைங்க... ஏர்போர்ட்ல நான் பிக் பண்ணிக்கிறேன் ..."


" நேக்கு மெட்ராஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு மாப்பிள்ள ... அதனால என்னால அவளோட பாம்பே வர முடியல ...அவ எல்லாத்தையும் கத்துக்கணும் ...நிச்சயமா அவளால தனியா டிராவல் பண்ண முடியும்... நான் அவளை அனுப்பி வைக்கிறேன் ..." என்றவர் சற்று தயங்கியபடி,


" நான் அவளுக்கு போட வேண்டிய நகையை கூட கொடுத்து அனுப்பலாம்னு நினைக்கிறேன் ..." என அவர் வார்த்தையை முடிக்கும் முன்,


" இதைப்பத்தி நாம முன்னாடியே பேசிட்டோம்னு நினைக்கிறேன் ... திரும்ப இதை பத்தி பேச வேண்டாமே..." என்ற பதிலை இறுதியாகவும் உறுதியாகவும் கூறி அழைப்பை துண்டித்தார் வெங்கடேஷ்.


ரங்கநாதன் இல்லத்தில் ஒரே ஒரு நாள் வேதா தங்க , ரங்கநாதன் அவருடன் இயல்பாக பேச எத்தனிக்க,


தன்னிடம் தன் திருமணம் குறித்து ஒரு வார்த்தை கேட்கவில்லை என்ற கோபமும், தன் கணவரிடம் ரங்கநாதன் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை என்ற வருத்தத்தை எல்லாம் மனதில் வைத்து
கேட்ட கேள்விக்கு பதில் என்ற நிலைப்பாடோடு தன் பாரா முகத்தை காட்டிய வேதா,சுமித்ராவிடம் மட்டும் நல்ல தோழியாக நட்பு பாராட்டினார்.


வேதா பம்பாய் செல்வதற்கான நாளும் வர, ருத்ர நாராயணன், மரகதம் ரங்கநாதன் , சுமித்ரா என அனைவரும் விமான நிலையத்திற்கு வந்து, அவரை வழியனுப்ப,


முதல் விமான பயணம், அவருக்குப் புத்துணர்ச்சி, சுவாரஸ்யம், சந்தோஷம் போன்ற கலவையான உணர்வை தர,உடன் தன் காதல் கணவரை
இன்னும் இரண்டரை மணி நேரத்தில் சந்திக்கப் போகின்றோம் என்ற எண்ணமே அவர் உள்ளத்தை குதூகலிக்க செய்ய , மிகுந்த எதிர்பார்ப்போடு பம்பாய் நோக்கி பயணமானார் .


காலை சுமார் 10 மணி அளவில், பம்பாய் விமான நிலையத்தை அடைந்தவர்,
அறிவிப்புகளை பின் தொடர்ந்து , தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு,
காத்திருப்போர் பகுதிக்கு வந்து, காத்திருக்க, 15 நிமிடம் கழித்தும் தன்னவர் வரவில்லை என்றதும்,
மிகவும் எதிர்பார்த்திருந்தவரின் மனம்
கலக்கம் கொள்ள,


" என் பிளைட் லேண்ட் ஆற டைம் அவருக்கு நன்னா தெரியும் ... தெரிஞ்சும் ஏன் என்னை அழைச்ஷிண்டு போக வரல ..." என்று தனக்குத் தானே வாய்விட்டு புலம்பியபடி கண் கலங்கிய போது, வெங்கடேஷ் பிரத்யட்சமானார் .


அவரைக் கண்டதும் வேதா முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொள்ள, சிரித்துக்கொண்டே அவர் அருகில் வெங்கடேஷ் நெருங்கி அமர


" ஏன் இவ்ளோ லேட் ..." என்றார் கண்களோடு மூக்கும் சிவந்து.


" நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது ...நீ சீரியஸா அழுதுகிட்டு இருந்தியா ...அதனால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு விலகி இருந்து வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் ..." என்றதும், வேதா வெடுக்கென்று எழுந்து வாசலை நோக்கி பயணிக்க,


" ஏய்.... மாமி நில்லு ... ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி கோவிச்சுக்கிறதா... சுத்தி முத்தி பார்க்கிற பழக்கமே இல்லையா ...நான் அங்கிருந்து உன்னை பத்து நிமிஷமா பார்த்து ஜொள்ளூ விட்டுகிட்டு இருந்தேன் பட்டும்மா.... நான் இங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன் ....." என்று அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேரும் போது , வேதாவின் வரவை அறிந்து, வெங்கடேஷின் வீட்டு வாசலில் வழக்கம் போல் அக்கம் பக்கத்து குடியிருப்பு நட்பு வட்டங்கள் கூடி நின்று வரவேற்க,


" ஐயோ ராமா... இந்த கோஷ்டியை எப்படி மறந்து போனேன்.." என்று வெங்கடேஷ் தனக்குள்ளே புலம்ப,


வேதாவும் மிகுந்த ஆனந்தத்தில் அவர்களோடு உரையாடியபடி, அனைவரையும் தன் இல்லத்தில் வரவேற்று அமரச் செய்ய,


" இவ ஒரு ஜூனியர் மட்டி ..." என்று புலம்பியபடி வெங்கடேஷ் தன் படுக்கை அறைக்கு சென்று உடைமாற்ற,


" டியூட்டிக்கு கிளம்பிட்டேளா..."
என்று கேட்டுக்கொண்டே அவரைப் பின் தொடர்ந்த வேதா


" என்னோட டிரஸ், புக்ஸ் எல்லாம் இங்க வந்துடுத்தே..."


" இனிமே இதுதான் நம்ப ரூம் மாமி..." என்று வேதாவை பார்த்து ஒற்றைக்கண் சிமிட்டியவரிடம்


" இன்னைக்கு நீங்க லீவு போடலையா ..."


" ஒரு நாள் லீவு கிடைச்சது ...லீவு போட்டுட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சேன் ... ஆனா ஹால்ல வந்திருக்கிற இந்த கோஷ்டி எல்லாத்தையும் பார்த்தா இப்பத்திக்கு போற மாதிரி தெரியல.. அதனால எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன் ..."


" அவா எல்லாரும் என்ணின்ட நம்ம ஊர் புடவை, பால்கோவா, வளையல்னு எல்லாத்தையும் கேட்டு அனுப்பியிருந்தா... அதெல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன் ... அதுக்காக தான் வந்திருக்கா ..."


"எப்ப பார்த்தாலும் சான்ஸ் கிடைச்சா கும்ப கூடி கும்மி அடிக்க வேண்டியது, சரி சீக்கிரம் பேசி முடிச்சு இந்த கோஷ்டியை பொட்டி கட்டி அனுப்புற வழியை பாரு ..."


" பிரதீப் சிங் ஆத்திலிருந்து , மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கிக்க அந்த அங்கிள் வருவேர் அவரை பார்த்துட்டு கிளம்புங்கோ..."


" மாமி, நான் எல்லாரையும் பார்த்தாச்சு..
இன்னும் உன்னை தான் டி பார்க்கல..." என விரசமாக அவரது பார்வை படிய, வேதாவிற்கு அவரது மொழி புரியவில்லை என்றாலும் பார்வை புரிய, சுதாரித்த படி


" காப்பி போட்டு தரட்டுமா ..."


" இல்ல மாமி ...வந்து ஃபுல் மீல்ஸே சாப்பிடறேன் ..." என்று வெங்கடேஷ் குறும்பாக புருவத்தை உயர்த்தி கூற


" அப்ப தளிகை பண்ணட்டுமா ..."


" மட்டி மாமி... நீ ஒன்னும் பண்ண வேண்டாம் ... மௌசி(வீட்டு பெண் உதவியாளர்களை சித்தி என்ற உறவுமுறை கொண்டு விளித்தல் ) என்ன பண்றாங்களோ அதை சாப்பிட்டுக்கலாம்... " என்று வேதாவை நெருங்கி இடை பற்றி அணைத்தவர்,
அவர் கன்னம், காது என முன்னேறி கழுத்தில் முத்தம் பதிக்க, இருவரும் கிறங்கி இருந்த சமயத்தில், கூடத்தில் பேச்சு குரல் வலுவாக கேட்க,


" குரல் கேட்கற்து ... சிங் ஆத்திலிருந்து அந்த ஆன்ட்டி வந்திருக்கா போல இருக்கு ..." என கூறிக்கொண்டே விடை பெற முயன்றவரின் முந்தானையை பற்றி இழுத்த வெங்கடேஷ்


" ஏய் பட்டும்மா போகாத...புடவை தாண்டி அம்சமாவும் வசதியாவும் இருக்கு ..." என்றபடி வேதாவின் இடை பற்றி தூக்கி கிட்டத்தட்ட மூன்று நான்கு சுற்றுகள் சுற்ற


" விடுங்கோ என்னை..."


" மாமி நான் உன்னை கீழ இறக்கி விட்டு ரெண்டு நிமிஷம் ஆகுது ...நீதான் என்னை புடிச்சிகிட்டு இருக்க ..." என்ற போது தான் வேதாவிற்கு உண்மை உரைக்க, நாணத்துடன் அவரை விட்டு
விலகியவரின் முகம் பார்த்து,


" என்னிடம் மயக்கம்... அதை என்னிடம் சொல்ல ஏனடி தயக்கம் ..." என்று தன் புருவத்தை ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி, கண்ணோடு கண் நோக்கி கவி பாடிய வெங்கடேஷின் முகம் பாராமல் வெட்கத்தால் தலை குனிந்தபடி,


" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ..." என வேதா நாணத்தோடு கூற


" ஏய் டுபாக்கூர் மாமி ... என்கிட்டயே பொய் சொல்றியா நீ..
ஒரு நாளைக்கு கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவிக்கி , ஃப்ராட்னு எத்தனை பேர பாக்கறேன்... ஆனா பொய்யை இவ்ளோ சாந்தமா அழகா சொன்ன ஒரே ஆளு நீதான் டி... அதான் உன்னை கொஞ்சணும் போல இருக்கு .." என்றவர்
" அப்ப அன்னைக்கு, என்னையும் பாம்பேக்கு கூட்டிண்டு போயிடுங்கோன்னு ... என்கிட்ட அழுதது யாரு"


" அது நான் இல்ல .." என்றபடி வேதா தன் சிவந்த முகத்தைத் திருப்பிக் கொள்ள


" அடிப்பாவி ...அப்ப நீ என் பொண்டாட்டி இல்லையா... அதான பார்த்தேன் ... இந்நேரம் என் பொண்டாட்டியா இருந்தா தள்ளி நின்னு பேசிகிட்டு இருக்க மாட்டாளே... நான் வேற யாரையோ ஏர்போர்ட்டில் இருந்து தப்பா கூட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன் ..."


" சும்மா உளறாதீங்கோ... நான் உங்க ஆம்டியாதான்...." என கூச்சத்தோடு கூறியவரிடம்


" அத வந்து சொல்றேன் மாமி ..." என்று நெற்றியோடு நெற்றி மூட்டி
சென்றவரின் ரோமியோ அவதாரம் வேதாவிற்கு மிக மிகப் புதிது.


இரவு உணவு முடித்ததும், தனக்கான ஓரிரு அலுவலக பணியை செய்து முடித்தவர் ,


" பட்டும்மா , எங்க இருக்க ..." என்று மனையாளை தேடிக்கொண்டே தன் அறையிலிருந்து கூடத்திற்கு வந்தவரிடம்


" நான் இங்க ஆகாஷத்தை பார்த்துண்டு இருக்கேன்... பௌர்ணமி நிலா ரொம்ப அழகா இருக்கு... இங்க வாங்கோ..."


" இத்தனை நாளா அப்சரஸ் மாதிரி பொண்டாட்டிய வச்சுக்கிட்டு நானும் ஆகாஷத்தை தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் ..." என்றவர் வேதாவை நெருங்கி
" அந்த நிலாவை விட இந்த நிலா ரொம்ப அழகா இருக்கே..." என்றவர் தன் கண்ணாட்டியின் செழுமையான கன்னத்தை கிள்ளி கொஞ்சியபடி


" ஆகாஷத்தை பார்க்கிறத நிறுத்திட்டு அம்மா அப்பா ஆகுற வழியை பார்ப்போமா...." என்றள்ளிக் கொண்டவருக்கு


மனையாளின் பட்டு சருமம், காந்தமாய் இழுக்க,


அவள் பூவுடல் மேனிக்கு வலிக்காமல், அதன் மென்மைத் தன்மையை அறிந்து,
ஆண் என்ற கர்வம், கம்பீரத்தை தொலைத்து, மிருதுவான ஆளுமையோடு ஆட்கொண்டவரின் தேடல் மட்டும் நீண்டு கொண்டே செல்ல , கன்னியின் இசைவும் ஒத்துழைப்பும், அவரது நீண்ட கால காதலுக்கு வடிகாலாக அமைய,
தாழிட்ட கதவுகளுக்குப் பின்னால் தரமான தாம்பத்தியம் அரங்கேறியது.


தகிப்பாள்


இனிய சொந்தங்களுக்கு,


இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், ஈகை குணம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும் . அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
 
அத்தியாயம் 9


அதிகாலை வேதாவிடம் அசைவு தெரிய, உடன் விழித்த வெங்கடேஷ், அவர் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு மீண்டும் பிணைத்துக்கொள்ள,
சுய உணர்வு பெற்ற வேதா, தான் இருக்கும் நிலையை பார்த்து, வெட்கத்தில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, தன் மணாளனின் வெற்று மார்பில் அழுந்த முகம் புதைக்க, அவர் செய்கையை பார்த்து வாய்விட்டு சிரித்த வெங்கடேஷ்,


" ஏய்...பட்டும்மா, என் முகத்தைப் பாரு.." என்றவர் சீண்ட, அதற்கு வேதா மீண்டும் அவர் மார்பில் இறுக முகம் புதைத்தபடி சன்னமாக


" டியூட்டிக்கு நேரம் ஆகல ..."


" மாமி, இப்படி எல்லாம் நீ கேள்வி கேட்பேன்னு தெரிஞ்சுதான், போட்ட லீவை கேன்சல் பண்ணிட்டு நேத்து வேலை பார்த்துட்டு வந்திருக்கேன் ..." என்றவர் குலுங்கி சிரிக்க,


" கோடி ஆத்துல இருக்காளே , அந்த ரெண்டு பெங்காலி ஃபேமிலிசும், காலைல நம்ம அத்துக்கு வரேன்னு சொல்லி இருக்கா..."


" பேசாம வீட்டை மாத்திடலாம்னு இருக்கேன் ... இந்த கோஷ்டிங்க தொல்ல தாங்க முடியல ... உலகத்துலயே என் காதலுக்கு தான் வித்தியாசமான வில்லனுங்க... பொதுவா பொண்ணை பெத்தவங்க வில்லனா வருவாங்க ...ஆனா எனக்கு மட்டும் அரசியல்வாதியும் அடுத்த வீட்டுகாரனும் தான் வில்லனா வரான்..." என்றவரின் பேச்சைக் கேட்டு வேதா நாணத்தோடு சிரித்த படி,


" அவாளை வைய்யாதீங்கோ... அவா என்னை பார்க்கணும்னு தானே வரா ..." என தன்னை மறந்து வெங்கடேஷின் முகம் பார்த்து உரைக்க,


" மாட்டினயா மாமி... இதுக்குத்தான் காத்துகிட்டு இருந்தேன் ..." என்றவர் வேகமாக வேதாவின் இதழில் ஆரம்பித்து நேற்றிரவு எழுதிய காதல் கவிதையை மீண்டும்
அதே சுவாரசியத்துடன் அணுஅணுவாய், இம்முறை ஆண்மையின் கர்வம் கலந்த ஆளுமையோடு
அம்சமாக எழுதி முடித்தார்.


*****************************************


வேதா பம்பாய் வந்து சேர்ந்ததும், வெங்கடேஷை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த வாசுதேவர்
வேதா ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு மாத காலத்தில், ஆனந்தவல்லி அடக்கி வாசித்ததற்கான காரணத்தை அப்போது பகிர்ந்தார்.


ஆனந்த வல்லியின் ஆட்டம் அடங்கியது இப்படித்தான்.


நீதிபதி மீது கொலை முயற்சி, அதனை தடுக்க வந்த அவரது நண்பருக்கு
அருவாள் வெட்டு என பல பிரிவுகளில் வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக தேடி கடைசியாக வீர மாணிக்கத்தின் கட்சியை சார்ந்த 4 கட்சி ரவுடிகளை குற்றவாளிகள் என கைது செய்தனர்.


அவர்கள் நால்வரும் வெறும் அம்புதான்.. எய்தவன் யார் எனத் தெரிந்தும் வாக்குமூலம் வாங்குவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட , வேறு வழியில்லாமல் வீர மாணிக்கத்தின் வலது கையான பாண்டியனின் பெயரை நால்வரும் மொழிய, அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாண்டியனைக் கைது செய்ய,
அவரை ஜாமீனில் எடுக்க வந்த வழக்கறிஞர் அவரிடம் நடந்ததைப் பற்றி விசாரிக்கும் போது , ராவுத்தர் உறவினரின் நில அபகரிப்பில் இருந்து வேதா வெங்கடேஷ் திருமணத்தை தடுத்து நிறுத்த மதக்கலவரத்தை தூண்டுவதற்காக போடப்பட்ட திட்டம் வரை அனைத்தையும் பாண்டியன் ஆதியோடு அந்தமாக விளக்க, அதில் ஆனந்த வல்லியின் பெயரும் அடிபட ,
அந்த வழக்கறிஞர் ஒருவகையில் ருத்ர நாராயணனுக்கு கடமைப்பட்டவர் என்பதால், பாண்டியன் தன்னுடைய கட்சிக்காரர் என்பதையும் மீறி, ஆனந்தவல்லியும் அந்த சதித்திட்டத்தில் உடந்தை என்பதை அறிந்ததும் ருத்ர நாராயணனிடம் தெரிவித்துவிட்டார்.


அதனை அப்போதே ஆனந்தவல்லியிடம் கேட்டு விட வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருந்தவருக்கு கல்யாண வேலை கழுத்தை நெரிக்க, ரங்கநாதனின் திருமணம் முடிந்ததும் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஆனந்தவல்லி பலர் அறிய வேதாவின் முக்குடைக்க, அதற்கு மேல் தாமதிக்காமல் மறுநாளே அவரை சாடி தீர்த்துவிட்டார் ருத்ர நாராயணன் .


எடுத்த எடுப்பில் ஆனந்தவல்லி, நாராயணனின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. பிறகு அவர் அதனை நிரூபிப்பதற்காக ஆனந்தவல்லியை
காவல்நிலையத்திற்கு அழைக்க, பலர் அறிய அங்கு செல்வது அவரது மரியாதைக்கு இழுக்கு என்பதால் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக் கொண்டார் ஆனந்தவல்லி.


" என் குடும்பத்துக்கு இத்தனை நாளா நீ நல்லதே பண்ணினது இல்ல .. நானும் போனா போகட்டும்னு விட்டுட்டேன்...
ஆனா இனிமே அப்படி இருப்பேன்னு எதிர்பார்க்காத... நல்ல வேளை பாண்டியன் அவன் வக்கீலிண்ட வாக்குமூலம் கொடுத்தான், போலீஸிண்ட வாக்குமூலம் கொடுத்திருந்தா, உன்னையும் தூக்கி உள்ள வச்சிருப்பா...


பரம்பரை பயங்கரவாதி கூட இப்படி ஒரு திட்டத்தை போட்டிருக்க மாட்டான்.
நம்ம ஊர்ல மதக்கலவரம் நடந்திருந்தா எத்தனை உயிர் போயிருக்கும் தெரியுமா... உன்னால ஆத்துக்கு தான் ஆபத்துன்னு நினைச்சிண்டு இருந்தேன் ... இப்பதான் தெரியுற்து ஊருக்கே ஆபத்துன்னு...


பாண்டியன் அரசியல்வாதி அவனுக்கு அசிங்கம் கிடையாது ... இன்னைக்கு ஜெயிலுக்குப் போவான் நாளைக்கு சிரிச்ச முகத்தோட வெளில வந்துடுவான்... ஆனா நீ அக்ரஹாரத்து பொம்மனாட்டி, நீ அவா போட்ட திட்டத்துக்கு உடந்தைன்னு தெரிஞ்சாலே அக்ரஹாரமே காரித்துப்பும்... அப்புறம் உன்னால வெளில தலை காட்டவே முடியாது ... என் பொண்ணு எக்ஸாம்காக இன்னும் ஒரு மாசம் இங்க தான் இருக்கப் போற...
உன்னால அவளுக்கு ஏதாவது பிரச்சனைனு நேக்கு தெரியவந்தாலே நானே உன்னை பத்தி போலீசுக்கு தகவல் சொல்லிடுவேன் .. ஜாக்கிரதை ... இத்தனை நாளா என்னை நாராயணனா தான் பார்த்துண்டு இருக்க , ருத்ரனா பார்க்கணும்னு ஆசைப்பட்டுடாத... " என்று மிரட்டி வைத்திருந்தார்.


அந்த மிரட்டலுக்கு அஞ்சி தான் , வேதா தேர்வு எழுத இருந்த அந்த ஒரு மாத காலம் சிறு சிறு சில்மிஷங்களோடு நிறுத்திக்கொண்டு ஆனந்தவல்லி அடக்கி வாசித்ததாக நாராயணன் நினைத்துக்கொண்டிருக்க, அதுவும் பாதி தான் உண்மை என்பது பிறகுதான் தெரியவந்தது.


வேதா தேர்வு எழுதி முடித்துவிட்டு பம்பாய் சென்றதும், வாசு தேவர்
ருத்ர நாராயணனை சந்தித்து


" உன்கிட்ட ஒன்னு மறைச்சிட்டேன் டா..."


நாராயணன் "என்ன " என்று கேட்க,


" அன்னைக்கு என் மகன் ஊருக்கு போனதும், வேதா என்ன சொல்லுதுன்னு உன்கிட்ட விசாரிச்சேன் நியாபகம் இருக்கா ..." என வாசு கேட்க அதற்கு ருத்ரா ஆமாம் என்பது போல் தலையசைக்க,


" அதுக்கப்புறம் ஒன்னு நடந்தது ..."
என தொடர்ந்தார் வாசு.


தன் மகனின் திருமண வாழ்வு அமைதியாகவும் அன்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதிலிருந்து வாசு தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.


ஆனால் ஆனந்தவல்லி பற்றி நினைக்கும் போது தான், அவருக்குள் ஒரு பய பந்து உருண்டோட, அப்பொழுது பார்த்து அவரைக் சந்திக்க ராவுத்தர், அவர் இல்லம் வர, அவரிடம் தன் மகிழ்ச்சியையும் மன சுமையையும் ஒருசேரப் பகிர்ந்தவர்,


" எனக்கு பயமா இருக்கு ராவுத்தர் ... இன்னும் வேதா ஒரு மாசம் இந்த ஊர்ல இருக்க போகுது ... எக்ஸாம் எழுத காலேஜ்க்கு வேற அது தனியா போய் ஆகணும் .... இந்த நிலைமைல நானும் கூட போக முடியாது.... இந்த ஆனந்தவல்லி என்னென்ன கூத்து பண்ணுமோன்னு ஒரே யோசனையா இருக்கு ..."


" எல்லா பரிட்சைக்கும் வேதாவை
அப்துல் கூட்டி போய் கூட்டி வருவான் ... நீ கவலப்படாத...."


" இருந்தாலும் இந்த ஆனந்தவல்லி விஷயத்துல ஏதாவது பண்ணியாகணும் டா..." என வாசு உறுதியாக கூற


" ருத்ரா கிட்ட ஆனந்தவல்லியை பத்தி பேசினேன்... நீ சொன்னதையே தான் சொன்னான்... அவங்க அம்மாவுக்கு கொடுத்த வாக்குன்னு... என்ன பண்ண சொல்ற...." என ராவுத்தர் கேள்வி எழுப்ப,


" ருத்ரா கிட்ட பேசினா இப்படி தான் சொல்லுவான் ... நாம ஆனந்தவல்லிக்கிட்டயே பேசினா .."


" ருத்ரா ஏதாவது சொல்ல போறான் டா ..." என ராவுத்தர் அஞ்ச


" இத்தனை நாள் வேதா அவன் பொண்ணு இப்ப என் மருமவ, என் மகன் என்னை நம்பி வேதாவை இங்க விட்டுட்டு போய் இருக்கான்... ருத்ரா தான் அவங்க அம்மாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கான்... நீயோ நானோ இல்ல... சரியா..." என்றவர்
அன்று மாலையே சுசீலா மாமி வீட்டில் வம்பு அளந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த ஆனந்த வல்லியிடம்,


" என்ன மாமி...எப்படி இருக்கீங்க..." என வாசு தேவர் மிடுக்காக பேச
அவர் பேச்சைக் காதில் வாங்காதது போல் ஆனந்தவல்லி கடந்து செல்ல,


" மாமி, கல்கத்தாவுல நடந்த ஒரு செய்தியை பத்தி உங்ககிட்ட பேசனும் ..
இப்படி கொஞ்சம் வரீங்களா ..." என்றதும் ' கல்கத்தா ' என்ற வார்த்தையில் ஆனந்தவல்லி ஆடிப்போய் நடை பயிலாமல் அதே இடத்தில் நிற்க,


" மாமி, இத்தனை நாள் வேதா உங்க வீட்டு பொண்ணு ... இப்ப என் வீட்டு மருமவ... என் மகன் ஆசைப்பட்டு கட்டி கிட்டு இருக்கான்...
இனிமே உங்களால அதுக்கு ஏதாவது பிரச்சனை வந்தது பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் ..." என வாசு மிரட்டும் போது கூட


உன்னால என்னை என்ன பண்ண முடியும் ... என்பது போல் தெனாவட்டாக ஆனந்தவல்லி பார்த்து வைக்க,


" ஒன்னும் பண்ண மாட்டேன் மாமி ...
கல்கத்தாவுல வெளியான பத்திரிக்கை சேதியோட பேப்பர் கட்டிங் இதெல்லாம்...
உங்க வீட்டுக்காரு பட்டாளத்துல இருக்கிறதா, ஊர் பூரா சொல்லி வச்சிருக்கீங்க இல்ல ...
இந்த பேப்பர் கட்டிங்க ஜெராக்ஸ் போட்டு எல்லா வீட்டுக்கும் கொடுத்தேன் வையுங்க,
உங்க வீட்டுக்காரர் பண்ண மொத்த தகிடுதத்தமும் வெளிய வந்துடும்... கஞ்சா கடத்தினது... பொண்ணுங்கள கடத்தினது....பிராத்தல் பண்ணது... ஜெயில்ல இருந்தது ... கடைசில குடிச்சிட்டு ரயில் முன்னாடி பாய்ஞ்சி செத்துப் போனது வரைக்குமான எல்லா சேதியும் போட்டோவோட இந்த பேப்பர் கட்டிங்ல இருக்கு... இந்த சேதி மட்டும் அக்ரஹாரத்துல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சது, அப்புறம் ஒரு பய உங்களை மதிக்க மாட்டான் ... உங்க வீட்டுக்காரரை பத்தி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து, எத்தனை பேர் வீட்டுல கட்டப்பஞ்சாயத்து பண்ணி இருப்பீங்க ... இனிமே அது நடக்காது ... இப்படி வீடு வீடா போய் நீங்க வம்பு பேசவும் முடியாது ... இப்ப சொல்லுங்க வசதி எப்படி ... " என்றபடி கல்கத்தாவில் தினசரி பத்திரிகைகளில் பிரசுரமான காகித வெட்டை வாசு நீட்ட, இதனை சற்றும் எதிர்பாராத ஆனந்தவல்லி அதிர்ச்சியில் உறைந்தேவிட்டார்.


வீட்டுக்காரர் பட்டாளத்தில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்து , இந்திய தேசத்தையே தூக்கி நிறுத்துவது தன் கணவர் தான் என போலி தம்பட்டம் அடித்துக்கொண்டு , நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் விதவிதமான புடவைகளை அணிந்தபடி , தலை நிறைய பூ, நெற்றி நிறைய குங்குமம் மஞ்சள், கழுத்து நிறைய நகை நட்டுகளோடு அக்ரஹாரம் முழுவதும் கம்பீரமாக பவனி வருபவரின் மிடுக்கான பிம்பம் உடைவதை துளிக்கூட அவர் விரும்பவில்லை என அவர் வெளிறிப்போன முகமே வெட்ட வெளிச்சமாக காட்ட


" நான் கல்யாணத்துல தப்பா ஒன்னும் பேசல ... வேதா இன்னும் குழந்தை உண்டாகலையேன்னு நேக்கு வருத்தம் அதான் அப்படி அவளிண்ட கேட்டேன் நீங்க அதை தப்பா எடுத்துக்காதீங்கோ..
இப்படி பிரிச்சு பேசாதீங்கோ... வேதா நம்மாத்து பொண்ணுன்னு சொல்லுங்கோ... நீங்க கவலையே படாதீங்கோ... உங்காத்து மாட்டுப்பொண்ணை நான் நன்னா பாத்துப்பேன் போதுமா..." என ஏகத்துக்கும் பணிந்து, மழுப்பி பதிலளித்தவரிடம்,


" ஒன்னு நல்லா நினைவுல வச்சுக்குங்க மாமி ....


வேதாவுக்கோ என் மகனுக்கோ உங்களால பிரச்சனைனு எனக்கு தெரியவந்துச்சின்னாலே,இந்த பேப்பர் கட்டிங் ஊர் முழுசும் பப்ளிஷ் ஆயிடும் ஜாக்கிரதை ...


ருத்ரா தான் கெட்டவனுக்கும் நல்லவன்... நான் நல்லவனுக்கு மட்டும் தான் நல்லவன்...


என்னா மாமி... வர்ட்டா ..." என்றபடி அவர் நடையைக் கட்ட, பல் பிடுங்கிய பாம்பு போல் பணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு வாயடைத்து நின்றார் ஆனந்தவல்லி .


அன்று நடந்த அனைத்தையும் வாசு கூற, நாராயணன் வாய்விட்டே சிரித்தார் .


" என் அக்காவை பத்தி நன்னா தெரிஞ்சிண்டு, எப்படி மடக்கணுமோ அப்படி மடக்கியிருக்க ... பாண்டியன் வாக்குமூலத்தை சொல்லி நான் மிரட்டினதால தான், அவ அடக்கி வாசிக்கிறான்னு நினைச்சிண்டு இருந்தேன்.. இப்பதான் புரியற்து உன் வக்கீல் மூளை சரியா வேலை செஞ்சிருக்குன்னு..."


" நீ தான்டா நீதிபதி .. . நான் வக்கீல் என் கட்சிக்காரர காப்பாத்த எந்த லெவலுக்கும் போவேன் ... ஆனந்தவல்லி மாதிரியான ஆளுங்களுக்கு அவங்க வழியிலயே போய் சொன்னாதான் புரியும் ..." என வாசு கூறி நகைக்க ருத்ரா இணைந்துகொண்டார்.


விஷயத்தைத் தெரிந்துகொண்ட வெங்கடேஷுக்கு ஏதோ ஒருவகையில் ஆனந்தவல்லி அடங்கியது, நிம்மதியை கொடுத்தது.


*****************************************
பம்பாயில்....


" இங்க பாருங்களேன் ..இந்த புடவையில நான் எப்படி இருக்கேன்...
நம்ப ஆத்துக்கு பக்கத்தாத்துல இருக்குற குஜராத்தி ஆன்ட்டி
நேத்து ஹல்தி குங்கும்காக அழைச்சு (மஞ்சள் குங்குமத்திற்காக) இந்த புடவையை கொடுத்தா...எப்படி இருக்கு ..." என்று குழந்தை போல் துள்ளலாய் கேட்டவரை, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, சுவாரஸ்யத்தோடு பார்த்துவிட்டு


" மாமி, உனக்கு எல்லா புடவையும் அம்சமா இருக்கு ...ஆனா இந்த புடவையே இல்லன்னா இன்னும் அம்சமா இருப்ப.." என ஒற்றைக் கண் அடித்து குறும்பாக கூறிய வெங்கியை பார்த்து,


" இங்க கிட்ட வாங்களேன்..."


" வரமாட்டேன் கிட்ட வந்தா நீ அடிப்ப..."


" நிச்சயமா இல்ல உங்கள கொஞ்சணும் போல இருக்கு ...."


" நேத்துதான் ஹல்தி குங்கும் வாங்கிட்டு வந்திருக்க, இப்ப ஆத்துக்கார அடிக்கிறது தப்புமா .." என அவர் தாவிக்குதித்து ஓட, வேதா பிடிக்க முயல,


ஒருவரை ஒருவர் பிடிக்க முயன்று, கடைசியில் ஒருவரிடம் ஒருவர் அடங்கியது தான் நடந்தது.


நாட்கள் வாரங்களாக, இருவரும் கணவன் மனைவி என்பதை விட காதலர்களாக பம்பாய் மாநகரம் முழுவதும் உல்லாசமாக சுற்றித் திரிந்தனர்.


கேட்வே ஆப் இந்தியா, ஜூஹூ பீச், மெரின் டிரைவ், சித்தி விநாயகர் கோவில், எலிபெண்டா கேவ்ஸ் போன்ற மிக முக்கியமான இடங்களில் நேரம் செலவழித்ததோடு, தமிழ் படம் திரையிடப்பட்டால், முதல் ஆளாக முன்பதிவு செய்து தன் மனைவியுடன் சென்று பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் வெங்கடேஷ்.


மனையாளுக்கு பாந்தினி(குஜராத்) பைத்தனி (மகாராஷ்டிரா) , காஞ்சிபுரம், துசார், பகள்பூரி ,பனாரஸி புடவைகள், காக்ரா சோளி போன்ற அனைத்து விதமான
மாநிலங்களின் ஆடைகளையும் வாங்கிக்கொடுத்து அணியச் செய்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்து ரசித்தார்.


ஒருமுறை 'நாயகன்' திரைப்படம் திரையிடப்பட, அந்தப் படத்திற்கு ஒரு சில இடங்களில் எதிர்ப்புகள் இருந்த நிலையில்,


" இவ்வளவு பிரச்சினைல இந்த படம் பார்க்கணுமா ..."


" நான் இருக்கேன் பட்டும்மா ...வா போலாம் .." என்று இருவரும் இரவு காட்சி பார்த்துவிட்டு வந்ததெல்லாம் மிகவும் அலாதியான அனுபவம்.


அப்போது வேதாவிற்கு ஓரளவு ஹிந்தி மொழி பரிச்சயமாகி இருந்தாலும், மராட்டி சற்று கடினமாகவே இருக்க,
யாரிடமாவது ஏதாவது சொல்ல அல்லது கேட்க வேண்டும் என்றால்


" ஐயரே, நான் சொல்றத அப்படியே சொல்லு ..." என்பார் டெல்லி கணேஷிடம் கமல் கூறுவது போல், அதனைக் கேட்டு வெங்கடேஷ் சிரித்தபடி


" எல்லாம் நேரம் மாமி... நான் சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் நீ சொல்ற ..." என்பார்.


வேதாவிற்கு பாடிக்கொண்டே சமைக்க மிகவும் பிடிக்கும். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். வெங்கடேஷ் வீட்டில் இருந்தால் பாடல்களை தன்னுள்ளே முணுமுணுப்பார்... அவர் பணிக்கு சென்றுவிட்டால் வாய்விட்டே பாடுவது வழக்கம்.


ஒரு சமயம், தன்னை மறந்து வேதா வாய்விட்டு அருமையாக பாடிக்கொண்டே சமைக்க,


அவர் பாடிய பாடல்


அழகாக சிரித்தது அந்த நிலவு ...
அதுதான் இதுவோ...


அதில் அவர் சரணம் பாடிக் கொண்டிருக்கும் போதே, பின்புறமாக வந்து அணைத்த வெங்கடேஷ், பாடலில் ஆண்களுக்கான வரிகளை இணைந்து பாட, ஒருவழியாக இருவரும் அருமையாகப் பாடி முடித்தனர்.


" தேவரே கலக்கிட்டீங்கோ... இவ்ளோ நன்னா பாடுவேள்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ..." என கண்களை அகல விரித்து பாராட்டிய மனையாளை கிறக்கத்தோடு பார்த்துக்கொண்டே


" ஏன் மாமி நீங்க மட்டும் தான் பாடுவீங்களா நாங்க பாட மாட்டோமா ..." என்று கன்னம் கிள்ளி கொஞ்ச, அதற்கு மேல் சமையல் பாதியில் நின்று போனதும் சுவாரஸ்யமான கதை.


வழக்கமான தம்பதிகளுக்கிடையே வரும் பிரச்சனைகள் போல் இவர்களுக்கு இடையேயும் பிரச்சனைகள் வருவதுண்டு, ஆனால் காரணங்கள்தான் வேறு.


யார் அதிகம் அன்பு செலுத்துவது, யார் அதிகம் விட்டுக் கொடுப்பது, யார் அதிகம் புரிந்து நடப்பது, யார் அதிகம் அனுசரித்து செல்வது போன்றவற்றில் போட்டி, பொறாமை , ஊடல் ,கூடல் கோபம், தாபம் என அனைத்துமே வெளிப்படும்.


இந்நிலையில் வேதாவின் தேர்வு முடிவுகள் வெளியாக, வெங்கடேஷ் ஆசைப்பட்டது போல், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார்.


ஏற்கனவே ஆனந்தவல்லி மற்றும் மூன்றாம் தர பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் வதந்தி என நிரூபிக்கப்பட்ட நிலையில், வேதாவின் இந்த தேர்வு முடிவுகள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழிகளை செவ்வனே துடைத்தெறிந்தது.


மேலும் ஓரிரு மாதங்கள் உருண்டோடிய நிலையில் ஒரு நாள்,


" என்னம்மா, திடீர்னு போன் பண்ணி இருக்கே ..."


" ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னா .."


" சொல்லுமா .."


" நீங்க முதல்ல ஆத்துக்கு வாங்கோ சொல்றேன் ..." என்றதும் தன் வேலைகளை ஓரளவிற்கு அரைகுறையாய் முடித்துக்கொண்டு
வீட்டுக்கு வந்த வெங்கடேஷுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


" என்ன மாமி....." என ஆவலோடு கேட்டார் கதவைத் திறந்த மனையாளிடம்.


பதில் கூறாமல் வேதா வெட்கப்பட,
ஏற்கனவே சிவந்திருந்த முகம் அந்திவானத்திற்கு போட்டியாக மேலும் சிவக்க , அவர் நாணத்தோடு தலைகுனிவதை பார்த்து, வெகுவாக ரசித்தபடி முகத்தை கையில் ஏந்தி கொஞ்ச எத்தனிக்கும் போது, சுற்றம் நினைவு வர, வாசலில் டிரைவர், தோட்டத்தில் தோட்டக்காரர், சமையலறையில் உதவியாளர் என அனைவரும் இருப்பதை உணர்ந்து,


" மாமி... உள்ள வா..." என்றபடி தன் தலை தொப்பி மற்றும் காவல்துறை காலணிகளை கழற்றிவிட்டு, தன் அறைக்குச் சென்றவரை அவர் மனையாள் பின்தொடர, அறைக்குள் வந்த அடுத்த நொடி அவர் அணைப்பில் அவர் மனையாள் இருக்க,


" சொல்லு பட்டும்மா ...." என்றவர் கேட்டுக்கொண்டே முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்த,


" இப்படி பண்ணா நான் எப்படி பேசற்து ..." என்ற மனையாளின் குரல் தடுக்க,


" சரி சொல்லு..." என்றார் அவர் கண்களை குறுகுறுப்போடு பார்த்தபடி.


" நாள் தள்ளி போய் இருக்கு ... தலை சுத்தற மாதிரி இருக்கு ...உடம்பு படுத்தற்துன்னா...
உண்டா இருக்கேன்னு தோன்றது..." என கேட்டதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனவர்,
தன் மனையாளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டார்.


வெளியில் சொல்லவில்லை என்றாலும் நீண்ட நாட்களாக அவர் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு, ஒரு பூரணத்துவத்தை உணர்ந்தவரின் கண்ணில் மெல்லிய நீர் திரையிட,
ஏனோ அவருக்கு தன் தாயின் ஞாபகம் வர, மணித்துளிகளா, நிமிடங்களா என தெரியாமல் மனையாளை தன் அணைப்பில் வைத்திருந்தவர் சுயம் உணர
உடனே வேதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து, கர்ப்பத்தை உறுதி செய்ததோடு
தன் தந்தை மற்றும் மாமனாருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.


செய்தியைக் கேட்டு மகிழ்ந்து போன மரகதம்,


" ஏன்னா, வேதாவுக்கு ஒத்தாசை பண்ண நான் பாம்பே போகலாம்னு நினைச்சுண்டு இருந்தேன் ... ஆனா அக்கா போறேன்னு சொல்றா..." என கூறியதும், ருத்ர நாராயணனின் மனம் கோபத்தில் கொந்தளிக்க,


" நீ காலம் முழுக்க மட்டியாவே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டியா மரகதம்... என் அக்காவை நீ புரிஞ்சிண்டதே இல்லையா... நம்ப பொண்ணுக்கு நல்லபடியா பிரசவமாகி, குழந்தை நன்னா பொறக்கணுகிற எண்ணமே நோக்கு இல்லையா ... என் அக்கா என்னைக்குமே யாருக்குமே ஒத்தாசையா இருந்ததே இல்ல... அவ அங்க போனா உன் பொண்ணு குடி கெட்டுப் போயிடும் ...நினைவுல வச்சுக்கோ ..."


"அக்காவை திட்டாதீங்கோ... அவா வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சவா..."


" முகம் தெரியாதவாளுக்கு கூட நல்லது பண்றவ நீ... ஆனா என் அக்கா உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்ணினவ... இந்தப் பிறவில அவ படற மொத்த கஷ்டத்துக்கும் அவளோட பிறவி குணம் தான் காரணம்...அவ குணத்தை எப்ப மாத்திக்கிறாளோ அப்பதான் பகவான் அவளுக்கு நல்லதையே கொடுப்பேர்... நீ அவளைப் பத்தி யோசிக்காம நீ ஊருக்கு போற வழிய பாரு ..." என மனையாளிடம் கூறி , அவரது பயணத்திற்காக ருத்ர நாராயணன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது
கால் உடைந்ததாக நாடகமாடி, அழுது புலம்பி கடைசியில் மரகதத்தின் பம்பாய் பயணத்திற்கு தடை விதித்தார் ஆனந்தவல்லி.


வாசுதேவர் உடல்நிலை தேறிய நிலையில், அவர் மட்டும் பம்பாய்க்கு பயணம் செய்து பத்து நாட்கள், தங்கியிருந்து விட்டு வந்தார்.

வெங்கடேஷுக்கு பதவி உயர்வு கிடைத்த சமயம் அது. ஏற்கனவே வேலை பளுவின் காரணமாக
தாய்மை அடைந்த மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியாமல் இருந்த அந்த தருணத்தில்
பம்பாய் மாநகரில், மதக்கலவரம் குண்டுவெடிப்பு என ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறிய நிலையில் அவர் பணிச்சுமை மேலும் வெகுவாக கூடியது.


ஆனந்தவல்லி நடத்திய நாடகம் முடியும் தருவாயில், மரகதம் மீண்டும் பம்பாய்க்கு பயணிக்கும் நிலையில், அங்குள்ள நிலைமையை சுட்டிக்காட்டி பயணத்தை தவிர்க்குமாறு வெங்கடேஷ் அறிவுறுத்த, அதைக்கேட்டு பூரித்துப் போன ஆனந்தவல்லிக்கு ,மறுநாளே
சுமித்ரா தாய்மை அடைந்திருக்கும் செய்தி தலையில் இடியை இறக்கியது.


பம்பாயில், வேலை விட்டால் வீடு, வீட்டிலும் வேதாவை சுற்றியே வெங்கடேஷின் வேத பாராயணம் நடந்து கொண்டிருந்தது.


யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ....


தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்யம் .... என்ற வாலியின் வரிகளுக்கு ஒப்ப , அவர்களது இல்லறம் பூத்துக்குலுங்க,


இப்படியே ஆறு மாதங்கள் கடந்த நிலையில், தாய்மையின் பூரிப்பில்
சற்று பெருத்த வயிற்றோடு லானில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த மனையாளிடம்


" என்ன மாமி ...பேப்பர்
படிச்சிகிட்டிருக்கீங்க போல ..."


" ஆமா, நாட்டு நிலவரத்தை நான் மட்டும் இல்ல, நம்ம குழந்தையும் படிச்சிண்டு இருக்கு ... அதனோட அறிவு விஷாலமா இருக்கணுமோல்யோ... அதான் ..."என தன் வயிற்றைக் சுட்டிகாட்டி கூறியவர்


" ஏன்னா, ஹால்ல இருக்கிற அந்த பேப்பரையும் கொஞ்சம் கொண்டு வாங்கோ... நான் படிக்கணும்...." என மிடுக்காக கூறியவரிடம்


" நான் டிசி (DC) மா.." என்றார் குறும்பாக.


" சோ வாட் , ஊருக்கு தான் நீங்க டிசி , ஆத்துல நான் தான் உங்களுக்கு டிசி ... போய் எடுத்துண்டு வாங்கோ..." என வேதா போலியாக மிரட்ட


" அது சரி ... நீ எனக்கு டிசி இல்ல டிஜிபி ..." என கண்ணாட்டியின் இரு கன்னத்தையும் பற்றி கொஞ்சியவரிடம்,


" கொஞ்சம் உங்களிண்ட பேசணும்னா ... அடுத்த மாசம் ஏழாம் மாசம் ... நேக்கு சீமந்தம் பண்ணி ஊருக்கு அழைச்சுண்டு போக போற்தா அம்மா சொன்னா .." என வேதா மென்மையாக சொல்ல கேட்டதும், துணுக்குற்ற வெங்கடேஷ்


" பட்டும்மா, உன்னை ஊருக்கு அனுப்பிட்டு என்னால இருக்க முடியாது.... நான் முன்னாடியே சொன்னது தான், எந்த சடங்கா இருந்தாலும் இங்க வந்து செஞ்சிட்டு போக சொல்லு... நான் உன்னை ஊருக்கு அனுப்பறதா இல்ல ... உனக்கு இங்க என்ன குறை ...உன்னை பாத்துக்க நர்ஸ் கூட போட்டிருக்கேன் ...இனிமே இதைப்பத்தி யாராவது பேசணும்னு நினைச்சா என்கிட்ட பேச சொல்லு .." என அவரது கோபத்தை காட்டும் திடமான குரலில் கூறிவிட்டு நகர்ந்தார்.


சீமந்தம் வெகு விமர்சையாக நடந்தது. சுமித்ரா தாய்மை அடைந்திருப்பதை காரணம் காட்டி ரங்கநாதன் மட்டும் கலந்து கொண்டு செய்யவேண்டிய சீரை செய்து விட்டு யாரிடமும் ஒட்டாமல் நடந்து கொண்டார். ஆனந்தவல்லி வரவில்லை. வாசுதேவர், ருத்ர நாராயணன், மரகதம், தேசிகன், சுந்தரம் (சுமித்ராவின் தந்தை) மற்றும் ராமானுஜம் அவர்கள் குடும்பத்துடன் வந்திருக்க, அப்துல், ராவுத்தர், வெங்கடேஷின் அலுவலக மற்றும் உடன் குடியிருப்போர் நட்பு வட்டங்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


அதன் பின் மரகதம் அங்கேயே தங்கி இருந்து வேதாவிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை உடனிருந்து சிறப்பாக கவனித்துக் கொண்டார்.


குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு,
சீமந்தத்தின் போது வந்திருந்த அனைவரும் வந்திருக்க,
வேதாவைப் போலவே பிறந்திருந்த பெண் குழந்தைக்கு வித்யா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.


அப்போது தான் சீமந்தத்தின் போது இருந்ததை விட
தற்போது ருத்ர நாராயணன் மிகவும் மெலிந்து, பலகீனமாக காணப்படுவதை மரகதத்துடன் வெங்கடேஷ், வேதாவும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வழக்கம் போல் ஆனந்தவல்லி கடந்த மூன்று நான்கு மாதங்களில் தன் கைவரிசையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.


சமையலுக்கு உதவும் பாக்கியம் மாமியிடம் சண்டை போட்டு அவரை நிறுத்திவிட்டு, தானும் நேரா நேரத்திற்கு சமைக்காமல், தான் மட்டும் பட்டு மாமி வீட்டிற்கு சென்று மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு ருத்ர நாராயணனுக்கு ஏதாவது ஒரு வேளை உணவு கொடுப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கோர்ட்டுக்கும் சென்று கொண்டு, சரியான உணவும் இல்லாமல் ருத்ர நாராயணனின் உடல்நிலை பின்னடைவை சந்தித்திருந்தது.

இதனை அறிந்த மரகதம் மறுநாளே ருத்ர நாராயணனுடன் கிளம்பிச் செல்ல,மூன்று மாதத்திற்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற
சுமித்ராவின் சீமந்தத்திற்கு , தங்கள் மூன்று மாத குழந்தையோடு வேதாவும் வெங்கடேஷும் கலந்து கொண்டனர்.


ரங்கநாதன் சுமித்ரா தம்பதியருக்கு, ஆண் குழந்தை பிறக்க, அதற்கு சீனிவாசன் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.


அதன் பிறகு நடைபெற்ற அப்துல் நிக்காஹ்வில் வெங்கடேஷ் தம்பதிகள் கலந்து கொண்டதோடு, தேவர் ஜெயந்தி விழா , சிவராத்திரி பூஜை என தன் புகுந்த வீட்டு பழக்கவழக்கத்தை ஒன்று விடாமல் கடைபிடித்தார் வேதா.


அடிக்கடி வருட விடுமுறைக்கு தன் தாய் வீட்டிற்கு வரும் வேதாவுடன் , மெட்ராஸில் வசிக்கும் சுமித்ராவிற்கு உறவுமுறை தாண்டி நல்ல நட்பு இருந்தது.


நாட்கள் உருண்டோட , கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து, விஷ்ணுவை வேதா உண்டாகி இருக்கும் போது, ஸ்ரீராமை சுமித்ரா உண்டாகி இருந்தார்.
விஷ்ணு பிறந்து கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளியில் ஸ்ரீராம் பிறக்க,
அதன் பின் ஏழு வருடங்கள் கழித்து சுமித்ராவுக்கு பிறந்தவள் தான் ஸ்ரீலட்சுமி.


ஸ்ரீனிவாசன், ஸ்ரீராம் இருவருக்குமே தங்கை ஸ்ரீ என்றால் உயிர் .
ஸ்ரீனி அதனை சாந்தமாக வெளிப்படுத்துவான், ஸ்ரீராம் அதனை அதிரடியாக வெளிப்படுத்துவான். ரங்கநாதனுக்கு ஸ்ரீ ,லக்கி சாம். (Lucky charm) ஏற்கனவே அவரது வியாபாரம் நல்லபடியாக நடந்து கொண்டிருந்தாலும், ஸ்ரீயின் பிறப்பிற்கு பிறகு நான்கு கால் பாய்ச்சலில் அவர் முன்னேறத் தொடங்கியது தான் அதற்குக் காரணம்.


சுமித்ராவின் மூத்தமகன் ஸ்ரீனி, வேதாவின் மூத்த மகள் வித்யாவை விட ஆறு மாதம் இளையவன்.
இருவருமே தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர்கள்,


ஆனால் ஸ்ரீராமிற்கும் விஷ்ணுவிற்கும் ஏழாம் பொருத்தம் . காரணம் 'பகையாளியைப் உறவாடி கெடு' என்ற பழமொழிக்கேற்ப சிறுவயதிலிருந்தே மகாபாரத சகுனி போல், ஆனந்தவல்லி கோவக்காரனாக இருக்கும் ஸ்ரீராமிடம் , விஷ்ணு மற்றும் வித்யாவை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, அவர்களுக்கு இடையே நட்பு நிலை நிலவாமல் பார்த்துக்கொண்டார் .


சீனிவாசன் எதையும் யோசித்து செயல்படுபவன், பொறுமைசாலி என்பதால் ஆனந்தவல்லியின் எண்ணம் அவனிடம் ஈடேறவில்லை.


ஒவ்வொரு விடுமுறைக்கு வரும் போதும் , ஸ்ரீராம் மற்றும் விஷ்ணுவிற்கு இடையே சண்டை வருவது சகஜம் ஆகிப்போனது.
ஆனால் எப்பொழுது ஸ்ரீ லக்ஷ்மி பிறந்தாளோ, அப்பொழுதிலிருந்து சண்டை மிக அதிகமாக வலுத்தது.


ஸ்ரீனிவாசனின் உபநயனத்தின் (பூணூல் அணிவிக்கும் விழா) போது இருவருக்குமிடையே சண்டை வர, வழக்கம் போல் , அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துவதே சுமித்ரா மற்றும் வேதாவிற்கு வேலையாகிப் போனது .


அதன் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஸ்ரீராம் மற்றும் விஷ்ணு, இருவருக்கும் ஒரு வார இடைவெளியில் உபநயனம் நடந்தது.


அப்போதுதான் சுருட்டை தலையும், செப்பு வாயும், கொழு கொழு கன்னங்களும் வெண்பஞ்சு பாதங்களுமாய் இருந்த 3 வயது குழந்தையான ஸ்ரீலக்ஷ்மியை பார்த்ததும் விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்து போயிற்று.


அவளை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவது, அவளுடன் விளையாடுவது என தன் நேரத்தை அவளுடன் செலவழிப்பதில் அலாதி இன்பம் கண்டான்.


இதனைக் கண்ட ஆனந்தவல்லிக்கு வழக்கம் போல் பொறுக்காமல்


" உன் தங்கை ஸ்ரீயை அவாத்துக்கு தூக்கிண்டு போய்விடுவான் ... ஜாக்கிரதையா பார்த்துக்கோ ..." என ஸ்ரீராமிடம் கொளுத்திப் போட , பத்தே வயது நிரம்பிய அந்த சிறுவனுக்கு விஷ்ணு வில்லனாகவே தென்பட்டான்.

அதிலிருந்து விஷ்ணு ஸ்ரீயுடன் விளையாடுவதை பார்த்துவிட்டால் போதும் ஸ்ரீராம் பொங்கி விடுவான்.
இருவரும் கட்டிப் புரண்டு சண்டை இடுவார்கள்.


வழக்கம் போல் சண்டையை விலக்குவதே வேதா மற்றும்
சுமித்ராவிற்கு தொழிலாகி போனது.


திருமணமாகி வந்த முதல் நாளே தன் மாமியார் மரகதத்தின் வெள்ளை மனம் மற்றும் ஆனந்தவல்லியின் திரிசமனத்தை சுமித்ரா புரிந்து கொண்டு விட்டதால், மரகதம் , வேதா மற்றும் சுமித்ராவிற்கு இடையே பகைமை மூட்ட வேண்டும் என்ற ஆனந்தவல்லியின் ராஜதந்திரங்கள் அனைத்தும் பலிக்காமல் போயின.


வருடா வருடம் கிடைக்கும் ஆண்டு விடுமுறையில், மெட்ராசில் இருந்து சுமித்ரா தன் குழந்தைகளோடும், பம்பாயிலிருந்து வேதா தன் குழந்தைகளோடும் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவது வழக்கம்.
ருத்ர நாராயணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தன்னை பயனுள்ள பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள, வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதன் பணிச்சுமை காரணமாக ஓரிரு நாட்கள் மட்டும் தங்கி இருந்து விட்டு சென்று விடுவர்.


சுமித்ரா பாதி நாட்கள் தன் தந்தை ஊரான விருதுநகரிலும், பாதி நாட்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கழிப்பார். வேதாவும் உள்ளூரில் இருக்கும் தன் மாமனாரின் இல்லத்தில் பாதி நாட்கள் கழிப்பது வழக்கமாகிப் போனது.


அப்படித்தான் ஒரு முறை வாசு தேவரின் இல்லத்திற்கு, வேதா
தன் குழந்தைகளோடு செல்ல,உடன் சுமித்ரா ஸ்ரீ உடன் சென்றார்.


சற்று நேரம் அங்கு அளவளாவி விட்டு மாமனாருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துவிட்டு, வீடு திரும்பும் போது , ஸ்ரீராமிடம் ஆனந்தவல்லி பக்குவமாக பத்த வைத்திருக்க,


" நீ அவாளோட எங்க வேணாலும் போ...ஸ்ரீயை கூட அழைச்சிண்டு போகாத..." எனக் கட்டளை இடுவது போல் பேசிய ஸ்ரீராமிடம்


" நான் என்ன பண்ணனும்னு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல...நேக்கு எல்லாம் தெரியும்..."


என்று சொல்லி பட்டென்று அவன் கன்னத்தில் சுமித்ரா அடிக்க,
அடி வாங்கியது என்னவோ ஸ்ரீராம் தான் ...ஆனால் அதனை அதிகமாக உணர்ந்தது ஆனந்தவல்லியே.


குழந்தைகளுக்கு இடையே நடக்கும் சண்டையை, ஆனந்தவல்லியை தவிர வீட்டில் யாருமே பொருட்படுத்துவதே இல்லை. இம்மாதிரியான குழந்தைகள் சண்டையை வீட்டுப் பெண்கள் யாரும் ஆண்களின் காதுகளுக்கு கூட எடுத்துச் செல்லவில்லை.


ஏற்கனவே வெங்கடேஷ் மற்றும் ருத்ர நாராயணனுக்கு ஆனந்தவல்லியின் அகங்காரம் அத்துபடி. வேதாவை பற்றி கூறிய பொய்யிலிருந்து ரங்கநாதனும் முன்பு போல் ஆனந்தவல்லியிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை, எனவே குழந்தைகள் மூலம், ரங்கநாதனுக்கு வெங்கடேஷுக்கும் இடையே பகைமையை உருவாக்கி தன் வன்மத்தை தீர்த்துக் கொள்ள பார்த்தார் ஆனந்தவல்லி.


வேதாவின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தது போல், அவள் மகன் விஷ்ணுவின் மனதிலும் விஷத்தைக் கலக்க எண்ணி, 14 வயது சிறுவனுக்கு ஓரளவுக்கு புரிதல் இருக்கும் என்றே தெரிந்து


" நீ பெரியவனானதும், ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்ட ,உன் மாமா ரங்கநாதன் மட்டுமில்ல நானும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் ..." என அவன் மனதில் புதியதோர் விதையை விதைக்க, அதுவரை 7 வயது சிறுமியான ஸ்ரீயை குழந்தையாகத்தான் எண்ணி விளையாடிக்கொண்டிருந்தவனுக்கு ஆனந்தவல்லியின் பேச்சுக்கு பிறகு
அப்படி செய்தால் என்ன என்ற எண்ணம் அவன் மனதில் உருவானது.


ஆனந்தவல்லி தெரிந்தே செய்த காரியத்தை ஸ்ரீராம் மனமுதிர்ச்சி இல்லாமல் செய்து கொண்டிருந்தான் .


அவன் ஸ்ரீயிடம் சொன்ன,


விஷ்ணுவை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, விளையாடக்கூடாது, பழககூடாது போன்ற ஏகப்பட்ட 'கூடாதுகள்' எல்லாம் கூடி விஷ்ணுவிடம் ஸ்ரீக்கு ஒரு தனி மயக்கத்தையே உண்டு பண்ணி இருந்தது.


காலம் உருண்டோட, வருடாவருடம் விடுமுறையில் ஏற்படும் சந்திப்புகள் எல்லாம் இரண்டு வருடம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஆகிப்போக, வேதா மற்றும் சுமித்ராவுக்கிடையேயான உறவு மட்டும் தொலைபேசி தொடர்புகள் மூலம் தொடர, விஷ்ணுவுக்கும் ஸ்ரீயுடன் தொலைபேசியில் உரையாட ஆசை இருந்தாலும், ஏனோ காரணமே இல்லாத தயக்கம் அதனைத் தடுத்துக் கொண்டே இருந்தது.


பிறகு நடந்த சந்திப்புகளில் மன முதிர்ச்சியின் காரணமாக முன்பு போல், ஸ்ரீராம் , விஷ்ணு இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போடுவது இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பார்வையில் அனல் பறந்தது.


ஸ்ரீனி சிஏ, ஸ்ரீராம் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, இருவரும் தந்தை ரங்கநாதனுக்கு கட்டுமானத்துறையில் உதவியாய் இருக்க, விஷ்ணு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஏசிஐஓ தேர்வுக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்க, வெங்கடேஷ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று பணியாற்ற, வேதா தன்னுடைய வி அண்ட் வி ஷேர் டிரேடிங் கம்பெனியை மிகவும் லாபகரமாக நடத்திக்கொண்டிருந்தார்.


ஸ்ரீ வளர வளர, ரங்கநாதன் பல கோடிகளுக்கு அதிபதியாகி, இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு தன் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியதோடு, தன் குடும்பத்தையும் இந்தியாவிலிருந்து துபாய்க்கு குடியமர்த்தினார்.


அச்சமயத்தில் தான், வெங்கடேஷின் நண்பரும் உயர் அதிகாரியுமான ஸ்ரீனிவாஸ் ஷர்மா, அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணி புரியும் தன் மகன் விக்னேஷுக்கு வித்யாவை பெண் கேட்டு வர, ஜாதகப் பொருத்தத்தில் இருந்து மனப்பொருத்தம் வரை அனைத்தும் ஒத்துப் போனதால் வித்யாவின் திருமணம் வெங்கடேஷ் மற்றும் வேதாவின் பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


வித்யாவின் திருமணத்திற்கு ரங்கநாதனுக்கு பத்திரிக்கை அனுப்பியதோடு, தொலைபேசியில் சுமித்ராவை தொடர்பு கொண்டு, வேதா அழைக்கும் போது தான்
ஸ்ரீ பூப்பெய்தி விட்டாள் என்ற செய்தியும் கிட்டியது.


திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திற்கே நேரடியாக தனது பிஎம்டபிள்யூ காரில் குடும்பத்துடன் மிடுக்காக வந்திறங்கினார் ரங்கநாதன்.


டிஐஜி மற்றும் ஐஜி குடும்பத்திற்கு இடையே நடக்கும் சம்பந்தம் என்பதால் பாதுகாப்பு பணிகள் பலமாக இருந்ததோடு, மூத்த அதிகாரிகள் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் பல பெரும்புள்ளிகள் கலந்து கொள்ள, அவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல், உன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்றால் என்னிடம் பணம் இருக்கிறது என்பதை ரங்கநாதனின் தோரணை பறைசாற்ற,
வேதா, வெங்கடேஷ், விஷ்ணு , வாசுதேவர் , ருத்ர நாராயணன் ஆகியோர் அனைவரையும் வரவேற்பது போல் இவர்களையும் எதிர்கொண்டு வரவேற்க,
வழக்கம் போல் சுமித்ரா மற்றும் ஸ்ரீனி இயல்பாக நலம் விசாரிக்க ,
விஷ்ணுவின் கண்கள் யாருக்காக தவமிருந்ததோ, அவள் காரை விட்டு மெதுவாக இறங்கி வர,


பெண்மையின் முதல் படிநிலையில் இருந்தவள் தங்கச் சிலை போல்
தக தகவென மின்ன, அவளது பார்வையும் விஷ்ணுவை தேடி கலக்க,
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதலோடு புன்னகைத்துக் கொள்ள , ஸ்ரீராமின் காதுகளில் இருந்து புகை வந்தது.


அறைக்கு வந்தவன் "அம்மா" என்று அலற,


" என்னடா..." என்றார் சுமித்ரா .


" அந்த விஷ்ணு ஏம்மா ஸ்ரீ யை பார்த்து சிரிக்கிறான் ..."


" எல்லாரும் உன்னை மாதிரி கடுவன் பூனையா இருப்பாளா... மனுஷளா பொறந்தா சிரிக்க தெரியணும் ...
அவனுக்கு சிரிக்க தெரியற்து சிரிக்கிறான் ...நோக்கென்ன பிரச்சினை ..."


" இன்னொரு தடவ அவன் ஸ்ரீய பாத்து சிரிச்சான் அவன் பல்லை தட்டிடுவேன்..." என பொங்கியவன், அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீயை அழைத்து,


" இங்க வா ...அவனோட பேச கூடாதுன்னு சொல்லி தானே உன்னை அழைச்சிண்டு வந்தேன் ..."


" நான் வேதா அத்தையைப் பார்த்து தான் சிரிச்சேன் ... அவா பின்னாடி அவர் நின்னுண்டு இருந்தேர்... உனக்கு அவரைப் பார்த்து நான் சிரிச்சா மாதிரி தோணிற்து..."


" பெரிய அவர் ..." என பற்களை நறநறவென்று கடித்தபடி ஸ்ரீயின் தலையில் ஸ்ரீராம் கொட்ட எத்தனிக்கும் போது,


" பாரும்மா அடிக்க வரான் ..." என ஸ்ரீ புகார் பத்திரம் வாசிக்க,


" டேய், இன்னும் ரெண்டு நாள் தான் இங்க இருக்க போறோம், அதுக்குள்ளே பெரிய ப்ராபகண்டா எதுவும் பண்ணாம உன் வேலைய மட்டும் பாரு போதுமா..." என்றவர்


" அப்படியே அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கான்.... ரெண்டு பேரும் சரியான கடுவன் பூனைங்க..."
என புலம்பலானார்.


வழக்கம் போல் வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதன், இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் கூட சந்தித்துக் கொள்ளவில்லை.


வெங்கடேஷிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும், அதில் வேதாவிற்கு மிகவும் பிடித்த குணம், வெங்கடேஷ் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்
தன்னை எங்கும் முன்னிறுத்திக் கொள்ள விழைய மாட்டார்.


எங்கு சென்றாலும் தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தன்னை மட்டுமே விசாரிக்க வேண்டும்
என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்.
என்னுடைய மரியாதை எனக்கு தெரியும். அதை நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற தெளிவோடு இருப்பார்.


ரங்கநாதன் விஷயத்திலும் அதே நிலைப்பாடு தான்.இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட ரங்கநாதன் நேரடியாக வெங்கடேஷிடம் பேசியதில்லை. வெங்கடேஷ் இருந்தாலே அந்த குழுவையே தவிர்த்து விடுவார் . ஆனால் வெங்கடேஷ், ரங்கநாதனுடன் நேரடியாக பேசவில்லை என்றாலும் , அவர் எங்கு இருந்தாலும் அவருக்கான மரியாதையை பொதுப்படையாக கொடுத்துவிடுவார்.


ரங்கநாதன் தன் பணம் மற்றும் பகட்டை காட்டிக்கொள்ள,
கிட்டத்தட்ட 100 சவரன் பெறுமானமுள்ள,
அனைத்து விதமான நகைகளை கொண்ட நகை பெட்டி மற்றும் விலை உயர்ந்த பட்டுப் புடவையை பலர் காண சபையில் தாய் மாமன் சீராக தன் மனைவி சுமித்ராவோடு தம்பதி சமேதராய் வித்யாவிடம் வழங்கினார்.


விமர்சையாக நடக்கும் வேதாவின் மகள் திருமணத்தை காண சகிக்காது, வழக்கம் போல் உடல்நலம் சரியில்லை என பொய் கூறிவிட்டு இல்லத்திற்கு சென்று விட்டார் ஆனந்தவல்லி.
மரகதத்திற்கு முன்பு போல் ஆனந்தவல்லியிடம் ஒட்டுதல் இல்லை. காரணம் அவர் பம்பாயில் இருந்த போது , ருத்ர நாராயணனின் உடல்நலத்தை ஆனந்தவல்லி சரியாக கவனித்து கொள்ளவில்லை என்பதுதான்.


ஆனந்தவல்லியிடம் மட்டுமல்ல ருத்ர நாராயணனிடமும் ஒருவித ஒட்டுதல் இன்றி தான் இருந்தார் மரகதம்.


அதற்குக் காரணம், தனக்குத் தெரியாமல், தன்னிடம் ஒரு வார்த்தை கூறாமல், தங்கள் மகளின் திருமணத்தை ருத்ர நாராயணன் மட்டும் முன்னின்று நடத்தியது தான்.
தானின்றி நடந்த திருமணத்தை பற்றி கேட்டு தெரிந்துகொள்ள அவர் தன்மானம் இடம் கொடுக்காததால், ஒருவித வைராக்கியத்தோடு, அவர் மனதில் இருக்கும் நெருடலை வெளியே சொல்லாமல் பற்றில்லாமல் காலம் கடத்தி கொண்டிருந்தார்.


மரகதத்தை பொருத்தமட்டில் வெங்கடேஷை அவர் மனமார மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டுவிட்டார் .
வெங்கடேஷ் வேதாவை தாங்கு தாங்கு என்று தங்குவதையும், பாச மழை பொழிவதையும் , அவர் பம்பாயில் இருந்த குறுகிய காலத்திலேயே உணர்த்தவராதலால், மாற்று சமுதாயத்தை சார்ந்தவர் என்ற சிறு உறுத்தல் கூட அவருக்கு இல்லாமலே போனது.


மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில், திருமணம் அருமையாக நடந்தேற,
திருமணத்திற்கு முன்பான மற்றும் பின்பான ஒவ்வொரு சடங்குகளிலும்,
விஷ்ணுவின் பார்வை ஸ்ரீயிடமே இருக்க, ஸ்ரீயும் விஷ்ணுவை பார்த்தபடியே நிற்க, திருமணத்தில் மனம் லயிக்காமல் , விஷ்ணு மற்றும் ஸ்ரீக்கிடையே நடக்கும் பரிபாஷையை பார்த்து ஸ்ரீராம் பொருமிக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த வெங்கடேஷுக்கு முதன்முறையாக விஷ்ணுவின் செய்கைகள் வித்தியாசமாக பட,
உடனே அவர் வேதாவை அழைத்து காட்ட, அவருக்கும் அது ஆச்சரியத்தோடு அதிர்ச்சியை தந்தது.


" என்னன்னா நடந்துண்டு இருக்கு இங்க ..." என தங்கள் அறைக்கு வந்ததும் வேதா கேட்க


" எனக்கும் ஒன்னுமே புரியலம்மா..."


" விஷ்ணு மனசுல இப்படி ஒரு தாட் (thought) இருக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலன்னா ..."


" நான் உன்னை கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி பார்த்துக்கிட்டு இருந்தேனோ அதே மாதிரி விஷ்ணு ஸ்ரீயை பார்த்துகிட்டு இருக்கான்... இல்ல ..." என்று வெங்கடேஷ் குறும்பாக கூற


" ஆரம்பிச்சிட்டேளா.. இன்னைக்கு நம்ம பொண்ணுக்கு கல்யாணம், நமக்கு இல்ல.."


" மாமி, நீ இப்ப கூட அம்சமா தாண்டி இருக்க ... இதே மாதிரி ஒரு சடங்கையும் விடாம நாம மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாமா..." என வாலிபராய் வெங்கடேஷ் துள்ள


" தேவரே, உங்களுக்கு மீச நரைச்சாலும் ஆச நரைக்கல... அதான் அறுவதாம் கல்யாணம் பண்ணிக்கப் போறோமே..."


" ஆமா இல்ல ... நம்ம அறுவதாம் கல்யாணம் சூப்பரா நடக்கணும் பட்டும்மா..." என மீண்டும்
துள்ளியவரிடம்


" உங்களையும் உங்க பேச்சையும் பார்த்தா கல்யாண பொண்ணுக்கு அப்பா மாதிரியே தெரியல ..." என்றவர் திடீரென தீவிரத்தை தத்தெடுத்து,


" இந்த விஷயத்துல நாம கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கிற மாதிரி காட்டிப்போம்ன்னா..."


" ஏம்மா, அவன் ஆசை நியாயமானது தானே..."


" இருக்கலாம் தேவரே... ஏற்கனவே எனக்கும் ரங்குவுக்கும் ஆகாது ... அதுமட்டுமல்ல விஷ்ணு உங்கள மாதிரி அவன் கல்யாண விஷயத்துல சீரியஸா இருக்கானான்னு நான் தெரிஞ்சுக்கணும்... அவன் என் பையனாவே இருக்கட்டும் ... இருந்தாலும் இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது ..."


" ஒரு போலீஸ்காரனா சொல்றேன் விஷ்ணு கண்ணுல உண்மை இருக்கும்மா... அதில்லாம அவன் என் பையன், இந்த மாதிரியான விஷயத்துல எல்லாம் விளையாட மாட்டான்... ஏன் ...உனக்கு ஸ்ரீயை பிடிச்சிருக்கு தானே..."


" ஸ்ரீயை நேக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
ஆனா நேக்கு ரங்குவை நன்னா தெரியும்.. அவன் என் கல்யாணத்தையே இன்னும் ஏத்துக்கல ..அதுமட்டுமல்ல இன்றைய தேதியில அவன் பெரிய பணக்காரன் ...நானும் ஒன்னும் இல்லாதவ கிடையாது , இருந்தாலும் அவன் நிச்சயம் ஸ்டேட்டஸ் பார்ப்பான் ... அதுக்கு நான் பதில் சொல்லணும்னா முதல்ல என் பையன் செட்டில் ஆகணும் ... அப்புறம் அவன் ஸ்ரீ விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்கானான்னு நேக்கு தெரியணும்..."
என்றார் தீர்மானமாய்.


" நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதாம்மா... ஸ்ரீயும் ரொம்ப சின்ன பொண்ணு தானே... இதெல்லாம் நடக்க இன்னும் ஏழேட்டு வருஷம் ஆகும் ... அதுவரைக்கும் நாம தெரிஞ்சிக்கிட்ட மாதிரி காட்டிக்க வேண்டாம் ..."
என்றவருக்குத் தெரியாது அதற்குள் விதி வேறு மாதிரியாக விளையாடப் போகிறதென்று.
அதோடு விஷ்ணு ஸ்ரீ இடையேயான காதல் பிணைப்பை வேறொரு
கண்ணும் கண்டு கொண்டது என்று.


தகிப்பாள்
 
அத்தியாயம் 10


மாலையில் திருமண மண்டபத்தில்
' விளையாடல்' சடங்கு ஆரவாரத்துடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.


மணமக்களை உறவுக்காரர்கள் சூழ்ந்துக்கொள்ள, மணப்பெண் சார்பாக சிலரும், மணமகன் சார்பாக சிலரும் போட்டி போட்டுக்கொண்டு போட்டி பாடல்களை அந்தாக்ஷரியாக பாட,
மணமக்களுக்கு இடையே தேங்காய் உருட்டுதல், ஒருவர் தலையில் ஒருவர் அப்பளம் உடைத்தல் போன்ற கேளிக்கை
கச்சேரிகள் களை கட்டிக் கொண்டிருக்க அந்தக் கூட்டத்தில் ஸ்ரீயை பார்ப்பதற்காகவே,
விஷ்ணு அழகான ஷெர்வானியில் கிளம்ப, மாம்பழ மஞ்சள் நிற புடவையில் மாதுளை முத்துக்கள் நிற கரையிட்ட மடிசார் அணிந்து, கொண்டையின் நடுவில் சூரிய பிரபை பில்லையை பதித்து அதனை சுற்றி தாழம்பூ மற்றும் இருவாட்சி கலந்த சரத்தை சூடி, புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக கற்கள் இல்லா தங்க நகைகளை பூட்டி, மிக பொலிவோடு காணப்பட்ட மனையாளிடம்,


" என்ன மாமி ... ஜாங்கிரி கொண்டை எல்லாம் போட்டு ஜம்முனு இருக்க ..." என வேதாவின் அலங்காரத்தைப் வழக்கம் போல் வெங்கடேஷ் கேலி செய்வது போல் ரசிக்க,
அதற்கு பதில் ஏதும் கூறாமல் அவர் நாணத்தோடு சிரித்து வைக்க,


" ஏண்டி, நீ , உன் பையன் எல்லாம்
ஃபேஷன் ஷோக்கு போறா மாதிரி,
அட்டகாசமா கிளம்பி இருக்கீங்களே என்ன பத்தி யோசிச்சீங்களா..." என குழந்தை போல் அவர் கேள்வி எழுப்ப,


" தேவரே, ஏற்கனவே உங்களுக்கு தான் திருஷ்டி அதிகமா இருக்கு ... கல்யாணத்துக்கு வந்தவாளோட அத்தனை பேரோட பார்வையும் உங்க மேல தான் இருக்கு... உங்க சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்க்கு டை
அடிச்சிருந்தீங்கன்னா, காலேஜ் கேர்ள்ஸ் எல்லாம் உங்க பின்னாடி தான் இருந்திருப்பா... யூ ஆர் லுக்கிங் சோ ஹாண்ட்சம் மேன் ..." என்ற மனையாளின் பாராட்டை பார்த்து,


" அப்படிங்கிற... நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் மாமி..." என்றபடி ஸ்டைலாக தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, தரையை தொட்டுக் கொண்டிருந்த பட்டு வேட்டியின் நுனியை, தன் காலை வலைத்து அனாயாசமாக கையிலேந்தி நகைத்தார்.


" வாங்கோ, நாழி ஆர்து... " என்ற மனையாளோடு அறையை விட்டு வெங்கடேஷ் வெளியேற, அவரைத்தேடி அங்கு அப்துல் வர , இருவரும் பேசி சிரித்தபடி 'விளையாடல்' சடங்கு நடக்கும் இடத்திற்கு செல்ல, வேதா சுமித்ராவோடு அவர்களை பின் தொடர்ந்தார்.


திருமணத்திற்கு வராமல் விளையாடல் சடங்கிற்கு மட்டும் வந்திருந்த ஆனந்தவல்லியின் விழிகளில் அப்போதுதான்
விஷ்ணு ஸ்ரீக்கு இடையே நிகழும் பார்வை பரிமாற்றம் விழ, தான் தூவிய விதை, விருட்சமாக வளர்ந்திருப்பதை பார்த்து உள்ளுக்குள் கொக்கரித்து போனார் .


அவர் விளையாடல் சடங்கிற்கு வந்திருப்பதை கவனிக்காமல், நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சியில், வேதாவின் மனம் லயித்திருக்க , அப்போது சுமித்ரா


" வேதா...., இன்னைக்கு காலைல மாங்கல்ய தாரணத்தின் போது , நம்ப வித்யா ஆண்டாள் கொண்டையோட மடிசார்ல , சாட்சாத் நம்ம ஊர் கோதை நாச்சியார் மாதிரியே அவ்ளோ அழகா இருந்தா... உண்மையிலயே அவ நம்ம எல்லாரையும் ஆட்கொண்ட ஆண்டாள் தான் ..
அவ உன் கருவுல லேட்டா தரிச்சு, உன் மேல படிஞ்ச கரையை தொடச்சிட்டாளே..." என தன்னை மறந்து கேளிக்கை நிகழ்ச்சிகளை பார்த்தபடி அரைகுறையாக அவர் உளறிக் கொட்ட, துணுக்குற்ற வேதா,


" என்ன சொன்னீங்கோ மன்னி... திரும்ப சொல்லுங்கோ..." என தீவிரத்தோடு கேட்க, அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்தே அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அப்போதுதான் உணர்ந்த சுமித்ரா, ஏதேதோ காரணங்களை சொல்லி பேச்சை திசை திருப்ப முயல, விடாப்படியாக வேதா விஷயத்தைத் தெரிந்து கொள்ள போராட, கடைசியில் ஆனந்தவல்லி கூறிய அபாண்டத்திலிருந்து , மூன்றாம் தர பத்திரிகைகள் வேதா வெங்கடேஷின் காதலை தரைகுறைவாக எழுதியது வரை அனைத்தையும் ஒருவழியாக சுமித்ரா பகிர்ந்து முடிக்க( அவர் பெரியப்பா தேசிகன் மூலம் தெரிந்து கொண்டது) , தலைசுற்றி விழாத குறையாக கேட்டுக்கொண்டிருந்த வேதாவுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வர, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுதாரித்தபடி
வேக வேகமாக அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகளை எல்லாம் முடித்து, தன் மகளை சோபன இரவிற்கு தயார் செய்து அனுப்பிவிட்டு, தன் அறைக்கு வந்து விழுந்தவருக்கு கண்ணீர் அணையை உடைத்துக் கொண்டு பெருக்கெடுக்க , அப்படியே அமர்ந்திருந்தவரின் அழுது சிவந்த முகத்தை பார்த்து பதறிப்போய்,


" என்ன பட்டும்மா... என்ன ஆச்சு...
ஏன் அழற ..." என்றார் அப்பொழுதுதான் அறையினுள் நுழைந்த வெங்கடேஷ் பதற்றத்தோடு.


சுமித்ரா கூறிய அனைத்தையும் வேதா கூறிவிட்டு


" உங்களுக்கு எல்லாம் தெரியுமில்ல தேவரே... நீங்க ஏன் என்ணின்ட சொல்லல ..." என பொங்கிய விழிகளோடு கேட்ட மனையாளிடம்,


" எப்பவோ நடந்தது ... இன்னைக்கு நம்ம பொண்ணுக்கே கல்யாணம் ஆயிடுச்சு..
இப்பவே நீ இவ்ளோ வருத்தப்படற... அன்னைக்கே தெரிஞ்சிருந்தா ரொம்ப துடிச்சி போயிருப்பம்மா ... அதனாலதான் சொல்லல...."


" நீங்க எப்படி இந்த விஷயத்தை அன்னைக்கு ஃபேஸ் பண்ணீங்கோ... மனசுக்கு கஷ்டமா இல்லையா..."


" மனசுக்கு கஷ்டமா தான் இருந்தது ... ஆனா அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான், மூணாம் நாளே உங்கப்பா நம்ம கல்யாணத்தை நடத்தி வச்சிட்டாரே... இதுல நான் கஷ்டப்பட்டத விட உங்கப்பா கஷ்டப்பட்டது தான் ரொம்ப அதிகம்... கல்யாணம் முடிஞ்ச கையோட நாம ரெண்டு பேரும் மும்பைக்கு போயிட்டோம் ஆனா உங்க அப்பா, இங்க எத்தனை பேரோட ஏச்சு பேச்ச நேரடியாவும் மறைமுகமாவும் ஃபேஸ் பண்ணி இருப்பாரு தெரியுமா...
கிரேட் மேன் ... நான் என் அப்பாவை விட ஒருபடி அதிகமா மதிக்கிற , பிரமிச்சு பாக்குற ஒரு நபர்னா அது உன் அப்பாதான் ... பொதுவா இந்த எண்ணம் எனக்கு எப்பவுமே உண்டு.. ஆனா இன்னைக்கு அதை ரொம்ப அதிகமா ஃபீல் பண்ணேன் ...


நம்ம பொண்ணு வித்யாவை, என் மடியில உட்கார வச்சு கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கும் போது எனக்கு கிடைச்ச மன நிம்மதியும், நிறைவும் வார்த்தைகளால சொல்ல முடியாது ...
ஆனா உன்னை பெத்த தகப்பனா கன்னிகாதானமும் பண்ணிக் கொடுக்க முடியாம, நம்ம கல்யாணத்தையும் கண்குளிர பார்க்க முடியாம அன்னைக்கு உங்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாருன்னு அந்த நிமிஷம் தான் உணர்ந்தேன்....


இன்னைய வரைக்கும் தன் கொள்கையில எந்தவித சமரசமும் செஞ்சுக்காம சத்தியத்தோட வாழ்ந்து காட்டுற அந்த மனுஷனுக்கு நான் மாப்பிள்ளை ஆனதுக்கு நான் கோடி புண்ணியம் பண்ணியிருக்கணும்...." என்று சிலாகித்து, கண்ணில் மெல்லிய நீர் திரையிட கூறி முடித்த வெங்கடேஷ் குரலை செருமிக்கொண்டு,


" கோவில்ல வெறும் மூணு நாலு குடும்பத்தோட முன்னிலையில தான் நம்ம கல்யாணமே நடந்தது ... ஆனா இன்னைக்கு நம்ம பொண்ணோட கல்யாணத்தை இந்த ஊரையே கூட்டி பிரம்மாண்டமா செஞ்சு முடிச்சிட்டோம் ...
வந்தவங்க அத்தனை பேர் கண்ணுலயும் தெரிஞ்ச மரியாதையே,
நாம வாழ்ந்துகிட்டு வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்திருச்சு... "


" சின்ன வயசிலிருந்தே என் அத்தை பொறுப்பா இருக்கமாட்டா... எப்பவும் என் அம்மாவுக்கு ஏதாவது ஒரு வேலை சொல்லிண்டே இருப்பா... அப்பெல்லாம் அவாளோட எண்ணம் நேக்கு தெரியல... நம்ம கல்யாண பேச்சு எடுத்தவுடனே தான் அவாள நான் புரிஞ்சிக்கவே ஆரம்பிச்சேன்... ஆனா இவ்ளோ தரம் இறங்குவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலன்னா..." என்ற வேதாவின் முகத்தில் துரோகத்தின் வலியும் ஏமாற்றத்தின் வடுவும் செவ்வனே தெரிய,


" நீ தான் அடிக்கடி சொல்லுவியே,


உண்மை நெருப்பு மாதிரி.. அது பகவானோட சொரூபம்... அதை மூடி வைக்க முடியாதுனு... அதுதான் இப்ப நடந்திருக்கு ...
நீ எதைப் பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்கு பட்டும்மா..." என்று
மனையாளின் தலை கோதி உறங்க வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவருக்கு,


தங்கள் திருமணத்தின் போது தான் சந்தித்த கலங்கத்தை, தன் மைந்தன் அவன் திருமணத்தின் போது சந்திக்கக் கூடாது என அவர் மனம் ஏனோ அப்போது ஆண்டவனிடத்தில் வேண்டுதல் வைத்தது.


மறுநாள் காலை உணவிற்கு முன்னதாகவே அவசர அவசரமாக தன் குடும்பத்தோடு ரங்கநாதன் கிளம்பி துபாய்க்கு பயணமாக,


ஸ்ரீ , விஷ்ணுவிற்கு இடையே இந்த திடீர் பயணம் ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஆனந்தவல்லிக்கு வேறொரு வகையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.


அன்று மாலை வரை ரங்கநாதன் தன் குடும்பத்தோடு தங்கி இருக்க போவதாக நினைந்து, திட்டம் போட்டு குட்டி கலகத்தை தொடங்க அவர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில்
ரங்கநாதனின் இந்த அதிரடி பயணம், அவரது ஆசையை அடியோடு அழிக்க


இன்றில்லை என்றால் என்ன... போட்ட திட்டத்தை செயல்படுத்த ஒரு சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்... என்றெண்ணி அந்த நாளுக்காக காத்திருக்கலானார்.


****************************************


மேலும் இரண்டு ஆண்டுகள் உருண்டோட,


திடீரென்று ஒரு நாள் ருத்ர நாராயணன்,


வெங்கடேஷ் மற்றும் ரங்கநாதனை தொடர்பு கொண்டு
ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் எனக்கூறி ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் வருமாறு பணித்தார்.


" ஏன்னா ஒரு மாதிரி இருக்கேள்..." என்ற வேதாவின் கேள்விக்கு, ருத்ர நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்ததை கூறியவர்,


" அவர் குரலே சரி இல்லம்மா... அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன்... " என வருந்திய குரலில் வெங்கடேஷ் கூற


" ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, அப்பா அம்மா ரெண்டு பேரிண்டையும் பேசினேனே... அவா எதுவுமே சொல்லலையே..."


" சரி ம்மா ... அதைப்பத்தி இப்ப பேச வேணாம் , ஆக வேண்டியதை பார்ப்போம்.... நான் ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துடறேன் ... விஷ்ணுவையும் லீவு போட்டுட்டு வர சொல்லு ... நாம இமெடியட்டா கிளம்பி போலாம்..." என்றவருக்கு ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என உள்ளுணர்வு உணர்த்த, உடனே வேதாவும் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துமுடித்தார்.


விஷ்ணு கிரேடு ஒன் இன்டலிஜென்ஸ் ஆபீஸராக தேர்வாகி , பயிற்சிக் காலம் முடிந்து, பதற்றமான பகுதிகள் எனக் கருதப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது.


அவனுக்கான விடுமுறைக்காலம் அருகில் இருந்ததால், எளிதாக அவனுக்கும் விடுப்பு கிடைக்க, ரங்கநாதன் குடும்பத்தோடு வருகிறார் என்ற செய்தியில், ஸ்ரீயை பார்க்கலாம் என்ற ஆவலில் துரிதமாக அவனும் கிளம்பி வர அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பயணமானார்கள்.


ரங்கநாதன் என்ன தான் பணம் பகட்டு என்றிருந்தாலும், தன் தந்தையின் மீது என்றுமே ஒரு வித பக்தி, அளவுகடந்த மரியாதை அவருக்கு உண்டு. ஆதலால் தான் தன் தந்தையின் கொள்கைகள் பலது பிடிக்கவில்லை என்றாலும் அதனை நேரடியாக கூறி அவர் மனதை துயரப்பட வைக்க மாட்டார்.


இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஒருமுறை கூட, தன் தந்தை இவ்வாறு அழைத்ததில்லை என்பது அவர் மனதிலும் ஒரு உறுத்தலை ஏற்படுத்த, உடனே அவரும் தன் குடும்பத்தோடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பயணமானார்.


முதலில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடைந்தது வெங்கடேஷ் குடும்பம் தான். ருத்ர நாராயணன் மற்றும் மரகதம் , அவர்களை எதிர்கொண்டு மிகுந்த சந்தோஷத்தில் வரவேற்க, வழக்கம் போல் அவர்கள் இரண்டாவது தளத்தில் இருந்த வேதாவின் அறை , அதைத்தொடர்ந்து இருந்த மற்றொரு அறையை பயன்படுத்திக்கொண்டு பயணக் களைப்பு நீங்கி புத்துணர்வு பெற்று,


மதிய உணவை உண்டு கொண்டிருக்கும் வேளையில்,


" மாப்பிள, இன்னும் ஒரு மணி நேரத்துல ரங்கநாதன் அவன் குடும்பத்தோடு இங்க வந்துடுவான்,
நான் உங்க எல்லாறிண்டையும் , இன்னைக்கு சாயங்காலம் சரியா அஞ்சு மணிக்கு இதே கூடத்துல ஒரு விஷயம் பேசணும் ...நீங்க உங்க அப்பாவை பார்த்துட்டு இங்க அஞ்சு மணிக்கு வந்துடுங்கோ..." என்று எதிர்பார்ப்போடு கேட்டவருக்கு, சம்மதம் கூறிவிட்டு வேதா, வெங்கடேஷ், விஷ்ணு தங்கள் அறைக்கு வரவும், ரங்கநாதன் தன் குடும்பத்தோடு வீட்டு வாயிலில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.


அவர்கள் குடும்பம், வழக்கம் போல் கீழ்த்தளத்தில் இருந்த அறைகளைப் பயன்படுத்திக்கொள்ள, மதிய உணவிற்கு பிறகு ரங்கநாதனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.


விஷ்ணு மட்டும் இருப்புக் கொள்ளாமல் மணி எப்பொழுது 5 அடிக்கும் என கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருக்க, வேதாவும் வெங்கடேஷும் கண்டும் காணாதது போல் அவனை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.


கூடத்தில் இருந்த அந்தப் பழங்காலக் பெண்டுலம் கொண்ட கடிகாரம் , மணி ஐந்தை காட்டி ஐந்து முறை ஒலிக்க, அதற்கு முன்னரே பாக்கியம் மாமி, அனைவருக்கும் மாலை தேநீரை அவரவர் அறைக்கே கொண்டு வந்து கொடுத்திருந்தார்.


கூடத்தில் இருந்த அந்த பெரிய ஊஞ்சலில், சிம்மம் போல் வீற்றிருந்தார் ருத்ர நாராயணன்.


ரங்கநாதன் மட்டும் ஊஞ்சலுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்திருக்க , அவரருகில் சுமித்ரா மற்றும் ஸ்ரீனி நின்று கொண்டிருக்க,
ஸ்ரீலக்ஷ்மி பாட்டி மரகதத்தின் கையைப் பற்றிக்கொண்டு, சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருக்க,
அப்பொழுது வெங்கடேஷின் குடும்பம் ஒருவர் பின் ஒருவராக , படியிறங்கி கூடத்திற்கு வந்தது.


வெங்கடேஷை பார்த்ததும்


" உக்காருங்கோ மாப்பிள..." என தனக்கு பக்கவாட்டில் இருந்த சோபாவை ருத்ர நாராயணன் சுட்டிக்காட்ட, அவர் பின்னே வந்த விஷ்ணுவின் கண்கள் ஸ்ரீயை தேட,
சுமித்ராவின் அருகில் இல்லாமல், சற்று தள்ளி மரகதத்தின் அருகில் நின்று கொண்டிருந்தவளும் , அதே ஆவலுடன் விஷ்ணுவை நோக்கினாள்.


முழு 2 வருடங்களுக்கு பின்பான சந்திப்பல்லவா... தோற்ற மாற்றங்கள் இருவரிடத்திலும் ... மற்றவை எதுவும் மாறவில்லை.


2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கல்லூரி மாணவனுக்கே உண்டான முதிர்ச்சியற்ற தோற்றம் எல்லாம் மறைந்து , பயிற்சி, பணி கொடுத்த கம்பீரம் அவனது நடை ,உடை பாவனையில் பளிச்சிட,
ஸ்ரீயிடம் குழந்தைத்தனம் சற்றே சற்று மறைந்து, பருவப் பெண்ணிற்கான பொலிவு கூறியிருந்தது.


ஒரு நிமிடத்திற்கும் குறைவான இந்தப் பார்வை பரிமாற்றத்தில், மற்றவர்கள் அனைவரும் மழுங்கிய நிலையில் காட்சி அளிக்க, அவர்கள் இருவரும் மட்டுமே தனித்து சஞ்சரித்துக் கொண்டிருந்த வேளையில்,


பேச்சை ஆரம்பிப்பதற்கு அடையாளமாக ருத்ர நாராயணன் குரலை உயர்த்தி செரும, அப்பொழுதுதான் இருவரும் சுயம் உணர,


" உங்க எல்லாரையும் இங்க நான் அழைச்சதுக்கு காரணம், நேக்கு வயசாயிண்டிருக்கு, இன்னும் எவ்ளோ நாள் இருப்பேன்னு தெரியல....


ஒரு அப்பாவா என்னோட கடமையை இதுவரைக்கும் நான் சரியா செய்து முடிச்சிட்டேன்னு நினைக்கிறேன் ...


என்னோடு சொத்துக்களை சரிபாதியா பிரிச்சு உங்க ரெண்டு பேர் மேலயும் உயில் எழுதி வச்சிருக்கேன் ...


இந்த ஆத்துக்கு வயசு கிட்டத்தட்ட 100 ...
என் மாமனார் நேக்கு கொடுத்தேர்... அவருக்கு அவர் மாமனார் கொடுத்தது...
இந்த ஆத்தை இவ்வளவு விஸ்தரிச்சு கட்டினது நான் தான்...
ஏன் இதெல்லாம் சொல்றேன்னா ....
சந்ததியை உருவாக்கலாம், ஆனா பாரம்பரியத்தையும் தலைமுறையையும் உருவாக்க முடியாது... அது தானா அமையணும்... அதுக்கு பகவானோட ஆசி இருக்கணும்...


நேக்கு தெரியும் நீங்க ரெண்டு பேருமே, இந்த சொத்தை எதிர்பார்க்கிற நிலைமையில இல்லன்னு ...
நீங்க எல்லாருமே ஃபினான்சியலி வெல் ஆப்னு....(financially well off)...


இருந்தாலும் உயில்ல நான் எழுதியிருக்கிறபடி
உங்க ரெண்டு பேர் பேர்ல இருக்கிற விவசாய நிலம் ,வீட்டு மனைகள இப்பவே நீங்க வித்துக்கலாம்...


ஆனா இந்த ஆத்தை மட்டும், இன்னும் ஒரு தலைமுறைக்கு நீங்க யாரும் விற்கக் கூடாதுன்னு நான் உங்க எல்லாரிண்டையும் கேட்டுக்கறேன்...
ஏன்னா நான் பார்த்த அடுத்த தலைமுறைக்கு இந்த ஆத்துல எல்லா நல்லதும் நடக்கணும்னு நேக்கு ஒரு ஆசை ..." என்ற போது அவர் குரல் தழுதழுக்க, சுதாரித்தவர்


" உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தா கேளுங்கோ..." என ரங்கநாதன் மற்றும் வெங்கடேஷ் தம்பதியினரை அவர் பொதுவாக ஒரு பார்வை பார்க்க, அனைத்தையும் வராண்டாவில் நின்றபடி யாருக்கோ வந்த விருந்து போல் ஆனந்தவல்லி கேட்டுக்கொண்டிருக்க,
அங்கு 5 நிமிடத்திற்கும் குறைவான தருணத்தில் பெரிய அமைதி நிலவ,


" நீங்க யாரும் எதையும் பேசாததால , நான் சொன்னதுல உங்க எல்லாருக்கும் சம்மதம்னு நான் எடுத்துக்கிறேன் ..." என்றவர் நடையை கட்ட, கூட்டம் இனிதே முடிந்தது.


விஷ்ணுவிற்கு தன் காதலி ஸ்ரீயை கண்டாலும் , வில்லன் ஸ்ரீராமை காணாமல் அவன் கண்கள் தேடி தேடி
களைக்க, ஒருவழியாக ஸ்ரீனியை அணுகி


" எங்க ஸ்ரீராம் ..." என்றான் குறும்போடு.


" ஏன் கட்டிப்புரண்டு சண்டை போட ஆள தேடறியா..." என்றான் ஸ்ரீனி அதே குறும்போடு.
இத்தனை ஆண்டுகளாக விஷ்ணுவிடம் ஸ்ரீனி பேசிய வார்த்தைகளை விரல் விட்டே எண்ணி விடலாம், அப்படி ஒரு சாந்த ஸ்வரூபியின் எதிர் கேள்வியில் மலைத்துப் போன விஷ்ணு,


" இதெல்லாம் பெருமையா... கடமை ...
அப்போசிஷன் பார்ட்டி இல்லாம சட்டசபை கலை கட்டாது இல்ல .." என்றவனின் பதிலைக் கேட்டு குலுங்கி சிரித்த ஸ்ரீனி,


" கவலைப்படாத, நாளைக்கு வந்திடுவான் கச்சேரி களை கட்டும் ..." என்றதும் இருவரும் இணைந்து நகைத்தனர்
நாளைய தினம் நிச்சயமாக கச்சேரி கலை கட்டப் போவது தெரியாமல்.


அறைக்கு வந்த வெங்கடேஷ்,


" எனக்கு என்னமோ உங்க அப்பா பேச வந்ததை பேசாம பாதியிலயே நிறுத்திட்டாரோன்னு தோணுது ..."


" என்னன்னா சொல்றீங்கோ... நேக்கு புரியல ..."


" மாமா, இந்த உயில் விஷயத்துக்காக மட்டும் நம்மல கூப்பிடல ... வேற எதுக்கோ கூப்பிட்டிருக்காருன்னு தோணுது... அது என்னன்னு தான் புரியல .." என்றவர் முடிக்கும் முன்பே உள் தொலைபேசி ஒலிக்க,


" மாப்பிள, நான் என் ஆபிஸ் ரூம்ல இருந்து பேசறேன்... கொஞ்சம் என் ரூமுக்கு வர முடியுமா ..."


" இதோ வந்துடறேன் மாமா .." என்றவர் தொலைபேசியை தாங்கியில் பொருத்தம் முன்


" எங்க அம்மாவை விட எங்க அப்பாவை நீங்க நன்னா புரிஞ்சு வச்சிண்டிருக்கேள்..." என்றார் வேதா அனைத்தையும் அருகில் நின்று கேட்டபடி.


" சொல்லுங்க ..." என்றார் வெங்கடேஷ் ருத்ர நாராயணனை ஆவலோடு பார்த்து.


சிறு அமைதிக்கு பின்


" நீங்க விஷ்ணுவோட கல்யாணத்தைப் பத்தி ஏதாவது முடிவு பண்ணி வச்சிருக்கேளா..." என்றதும் வெங்கடேஷ் துணுக்குற்று, பிறகு


" இல்ல ..." என்றார் யோசனையாய்.


" ஏன் கேக்கறேன்னா... நம்ப ஸ்ரீயை விஷ்ணுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நேக்கு ஒரு ஆசை..." என்றவர் முடிக்கும் முன்பே, வெங்கடேஷுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் குழப்பம் நிலவ,
இந்தப் பேச்சு இப்பொழுது எதற்காக,
என்ற முகபாவத்தை அவர் தன்னிச்சையாக வெளிப்படுத்த,


" இப்ப இந்த பேச்சு எதுக்காகன்னு யோசிக்கிறேளா... ஸ்ரீக்கு 16 வயசு தான் ஆற்து , ஒரு டிகிரி முடிச்சதும் 21 வயசுல தான் கல்யாணம் பண்ணனும்... ஆனா அவ்ளோ வருஷம் நான் உயிரோடு இருப்பேனான்னு நேக்கு தெரியல..
அதனால நாளை மறுநாள் முகூர்த்த நாள் , அவா ரெண்டு பேருக்கும்
நம்மாத்தோட நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்... அதுமட்டும் இல்ல நேக்கு ரங்கநாதன் மேல நம்பிக்கை கிடையாது ...அவன் அடிப்படையில நல்லவன் தான்.. ஆனா அவன் ஒரு வியாபாரி... வியாபாரம்னாலே பொய் சொல்லணும் ஏமாத்தணும்... அதை அவன் நன்னா செய்வான்னு நேக்கு தெரியும்... நிச்சயதார்த்தமே நடந்தாலும், நான் அவனை நம்ப தயாரா இல்ல... என் காலத்துக்குப் பிறகு நீங்கதான் முன்னிருந்து விஷ்ணு ஸ்ரீயோட கல்யாணத்தை முடிக்கணும்... உங்களை தான் மலை போல நம்பறேன்..."
என்ற பேச்சை கேட்டு, வெங்கடேஷ் ஒரு நிமிடம் ஆடிப் போக, பிறகு சற்று சுதாரித்து , மைந்தனின் மனமும் அறிந்தவர் அல்லவா,


" எனக்கு சம்மதம் ... நீங்க ரங்கநாதன் கிட்ட பேசுங்க ..." என்றார் ரங்கநாதனை பற்றி நன்கு அறிந்தவராய்.


ருத்ர நாராயணன் ரங்கநாதனிடம் அனைத்து விஷயத்தையும் பகிர,
அதனைக் கேட்டவர் கோபத்தில் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார்.


" யாரை கேட்டுப்பா முடிவெடுத்தீங்கோ... ஸ்ரீ என்னோட பொண்ணு ... அவ கல்யாணத்த பத்தி நான் தான் முடிவு எடுக்கணும்... நீங்க எடுக்க கூடாது..."


" ஏண்டா உன்னை பெத்து வளர்த்தது நான்... நோக்கு கல்யாணம் பண்ணி வச்சது நான்... என் பேத்தி கல்யாணத்த முடிவு பண்ண நேக்கு தகுதி இல்லையா ...இப்ப கல்யாணம் நடந்தா சட்ட ரீதியா அந்த கல்யாணம் செல்லாது... அதெல்லாம் நேக்கு தெரிஞ்சு தான் , நாளான்னிக்கு நிச்சயதார்த்தம் பண்ண முடிவெடுத்திருக்கேன்...
சட்ட ரீதியா கல்யாணம் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் பண்ணனும் .... அதோடு ஸ்ரீ குறைந்த பட்சம் ஒரு டிகிரியாவது முடிக்கணும்... அதனால அவளோட 21வது வயசுல தான் கல்யாணம் பண்ணியாகணும் ... அதுவரைக்கும் என் பேரன் பேத்தியோட கல்யாணத்தைப் பார்க்க நான் உயிரோட இருப்பேனான்னு நேக்கு தெரியல... நான் இருக்கும் போதே அவாளோட கல்யாணத்துக்கான முதல் படியே எடுத்து வச்சிட்டு போயிடணும்னு முடிவெடுத்திருக்கேன் ..." என்றவர் பேசிக்கொண்டே போக, அதில் அவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் ரங்கநாதனுக்கு சாதகமாக அமைய, அவரின் வியாபார மூளை செவ்வனே வேலை செய்ய ஆரம்பித்தது.


இன்னும் மிஞ்சி போனால் இரண்டு அல்லது மூன்று வருடம் தான் தன் தந்தை உயிரோடு இருப்பார், அதற்குப்பின் நடக்கப்போவது நம் கையில் தான் என தன் தந்தைக்கு கால நேரம் குறித்தவருக்கு தெரியாது அதே நேரத்தில், காலனே அவர் தந்தைக்காக அங்கு வந்து அமர்ந்திருப்பது.


" ஸ்ரீ சின்ன குழந்தை ப்பா ... படிக்கிற பொண்ணுன்ட இந்த மாதிரியான விஷயத்தை எல்லாம் எப்படி பேசற்து ...
அவளிண்ட விஷ்ணுவை பிடிச்சிருக்கான்னு கேக்க சொல்றேளா ...." என ரங்கநாதன் தட்டிக்கழிக்க பார்க்க


" நீ எதுவுமே கேக்க வேணாம் என் பேத்திக்கு விஷ்ணுவை பிடிக்கும்னு நேக்கு தெரியும்..." என்றார் ஆணித்தரமாக.


" சரிப்பா உங்க இஷ்டம் ..." என்றார் ஒற்றை வரியில்.

தன் அறைக்கு திரும்பியவர், சுமித்ராவிடம் அனைத்தையும் பகிர,
கேட்டவருக்கோ தலை கால் புரியாத அளவிற்கு சந்தோஷ மழை உச்சந்தலையில் ஜில்லென்று பொழிய


ஆனால் அதில் கடுகளவு கசிந்தால் கூட, ரங்கநாதன் நெற்றிக்கண்ணைத் திறந்து விடுவார் என்றுணர்ந்து அவரும் கடினப்பட்டு, கஷ்டப்பட்டு துக்கப்பட்டு, துயரப்பட்டு முகத்தை சோகமாக வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.


சுமித்ராவிற்கு வேதாவின் குடும்பத்தை எல்லா விதத்திலும் பிடிக்கும் ... அதிலும் விஷ்ணுவின்
துருதுரு சுபாவம், புத்திசாலித்தனம், ஒழுக்கம் , தோற்றம், அவன் ஸ்ரீ மேல் வைத்திருக்கும் பாசம் என அனைத்தையும் அறிந்தவறாதலால் அவர் மனம் மகிழ்ச்சியில் திளைக்க, இதை உணராமல் ரங்கநாதன்


" எங்க அப்பா இன்னும் ரெண்டு மூணு வருஷம் தான் உயிரோட இருப்பேர் ... போற ஆத்மா சந்தோசமா போகட்டுமேன்னு தான் இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒத்துண்டேன்... நான் இன்னும் என் அக்கா கல்யாணத்தையே ஏத்துக்கல... என் பொண்ணுக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்கணும்னு நேக்கு தெரியும் ...நம்பலவாள்லயே என்னை மாதிரி ஒரு மல்டி மில்லியனர பார்த்து முடிக்க போறேன் பார்..."
என்றவரின் பேச்சை பொறுக்கமாட்டாமல்


" எவ்ளோ பெரிய பதவில வேதாவோட ஆத்துக்காரர் இருக்கேர்... ஏறக்குறைய மும்பை சிட்டியே அவர் கண்ட்ரோல் தான் இருக்கு ... விஷ்ணுவும் நன்னா படிச்சிருக்கான்... நல்ல உத்தியோகத்துல இருக்கான்... ஒழுக்கமானவன்... அவாளுக்கும் பணத்துக்கு ஒன்னும் பஞ்சம் இல்ல.. ரெண்டு பெரிய வீடு இருக்கு மும்பைல..." என்ற சுமித்ராவை முறைத்துப் பார்த்த ரங்கநாதன்


" உனக்கு மில்லியனர்க்கும் , மல்டி மில்லியனர்க்கும் வித்தியாசம் தெரியாதா .... அவா மில்லியனர்... நான் மல்டி மில்லியனர்.... அது சரி ...உனக்கு இந்த வித்தியாசம் எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்னு எதிர்பார்க்கிறது தப்பு தான் என்னவா இருந்தாலும் நீ குமாஸ்தாவோட பொண்ணுதானே ..." என்றார் நக்கலாக, எதிர்த்துப் பேசிய ஒரே காரணத்திற்காக.


" என் தங்கை விஷயத்துல ஏமாந்த மாதிரி என் பொண்ணு விஷயத்துல ஏமாறுவேன்னு, நினைச்சான்னா அது அந்த வெங்கடேஷோட முட்டாள்தனம் ...
என் அப்பா அவர் பொண்ணு விஷயத்துல ஆடின அதே ஆட்டத்தை எம்பொண்ணு விஷயத்துலயும் ஆடணும்னு பார்க்கிறேர்... அது நடக்காது .... அவரா நானான்னு பார்க்கிறேன் .... பொம்மை கல்யாணம் மாதிரி இது பொம்மை நிச்சயதார்த்தம் அவ்ளோ தான்....


இதுவரைக்கும் தொழில்ல என் எதிரிங்க தான் என்னோட இன்னொரு முகத்தை பார்த்திருக்காங்க ... நிச்சயதார்த்தம் முடியட்டும் ... இந்த ரங்கநாதன் யாருன்னு எல்லாருக்கும் காட்டறேன்... அது வரைக்கும் நம்ப குழந்தைங்க யாரிண்டையும் எதையும் சொல்லாத ... நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துண்டதாவே இருக்கட்டும் ...." என வன்மத்தோடு பேசிக்கொண்டிருந்ததை எதேச்சையாக
ஸ்ரீ கேட்டுவிட, அவள் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. ஒருபுறம் நடக்கப்போகும் நிச்சயத்தை எண்ணி மகிழ்வதா, இல்லை அதற்கு மேல் தன் தந்தை ஆடப்போகும் ஆட்டத்தை எண்ணி வருந்துவதா எனத் தெரியாமல் , இயல்பிலேயே மென்மையான சுபாவம் கொண்டவளுக்கு, கண்கள் பனிக்க, வந்து போன தடயம் தெரியாமல் தன் அறைக்கு சென்று விட்டாள்.


தன் அறைக்கு வந்த வெங்கடேஷ் , வேதாவிடம் அனைத்தையும் பகிர ,


" அப்பா இந்த மாதிரி முடிவெடுப்பேர்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல... "


" இதுல ஒன்னு கவனிச்சியா ... விஷ்ணுவுக்கு ஸ்ரீயை பிடிக்குமான்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட அவர் கேக்கவே இல்ல... ஒரு வேளை வித்யா கல்யாணத்துல இவன் ஸ்ரீயை 'ஆ'ன்னு பாத்துக்கிட்டு இருந்ததை உங்க அப்பாவும் பார்த்திருப்பாரோ..."


" நீங்க என்னை பார்த்த மாதிரியே, விஷ்ணு ஸ்ரீயை பார்த்துண்டு இருந்தான்னு சொல்வேளே ... அதையேன் மறந்துட்டீங்கோ... நீங்க இதயம் முரளி மாதிரி, லவ் சொல்லாம அஞ்சு வருஷம் என் பின்னாடி சுத்தினேள்... இப்ப உங்க பையனும் அதையேதான் செய்றான் ..." என குறும்பாக வேதா சீண்ட


" அந்த படத்தையே என்னை பார்த்து தான்டி எடுத்தாங்க ...." என்றதும் இருவரும் இணைந்து நகைத்தனர்.


மறுநாள் காலையில் வந்திறங்கிய ஸ்ரீராம்,
அனைத்தையும் கேள்விப்பட்டு
வழக்கம் போல் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கினான்.


" அம்மா... என்னம்மா நடக்கற்து இந்த ஆத்துல ..."


" ஏண்டா நோக்கு தமிழ் புரியாதா ..."


" அம்மா விளையாடாதீங்கோ... அவன் சின்ன வயசுல சொன்ன மாதிரி இப்ப ஸ்ரீயை கூட்டிண்டு போக போறான்..."


" ஆமாண்டா, கூட்டிண்டு போக போறான்... கடத்திண்டு போக போறான்னு முட்டாள்தனமா பேசாத ... கல்யாணம் பண்ணி அவாத்துக்கு அழைச்சிண்டு போகப்போறான்... சாரி ... போகப்போறேர்.... அவாம் ஒன்னும் செவ்வாய் கிரகத்துல இல்ல ... எப்படியும் ஸ்ரீ கல்யாணமாகி அடுத்த ஆத்துக்கு போக வேண்டியவ தானே... அது மட்டும் இல்ல கல்யாணமே அஞ்சு வருஷத்துக்கு அப்புறம்தான் நடக்கப்போற்து.... நாளைக்கு வெறும் நிச்சயதார்த்தம் தான் ..." என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசியில் பேசிய படி ரங்கநாதன் அறைக்குள் நுழைய, உடனே சுமித்ரா வாய்ப்பூட்டு போட்டுக் கொள்ள, ஸ்ரீராமால் தாங்க முடியாமல் ரங்கநாதனை பார்த்து


" அப்பா, கடைசில அத்தை பாட்டி(ஆனந்தவல்லி) சொன்னது தான் நடக்கப் போற்து ... சின்ன வயசுலயே விஷ்ணுக்கிட்ட கேட்டா, நீ பெரியவனானதும் ஸ்ரீய கல்யாணம் பண்ணிப்பையான்னு ....
அப்ப அமைதியா இருந்தான் ... இப்ப தான் அவனோட அமைதிக்கு காரணம் நேக்கு
புரியற்து..." என்று தன்னை மறந்து அவன் வாக்குமூலம் கொடுக்க, நடக்கும் பிரச்சனைக்கெல்லாம் மூல காரணம் ஆனந்தவல்லி தான் என ரங்கநாதனின் மனம் நிமிடத்தில் கணக்குப் போட்டு உறுதி செய்ய, வழக்கம் போல் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ,


" போடா உன் வேலையை பார் ...நடக்க நடக்க நாராயணன் செயல் ..." என்றார் தனக்கு பிடித்தம் இல்லாத விஷயத்தை, பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் எப்போதும் பயன்படுத்தும் வரிகளை கூறி.


ஆமாம், நடக்கப்போவதை முடிவு செய்தது ருத்ர நாராயணன், அதனை நடத்தி காட்ட போவது விஷ்ணு நாராயணன் ... என்றார் சுமித்ரா மானசீகமாக.


அடிப்படையில் சுமித்ராவின் குடும்பம் ரங்கநாதனின் குடும்பத்தை விட பொருளாதார நிலையில் பல படிகள் கீழ். அதெல்லாம் சுமித்ராவை பெண் பார்க்கும் போது, ஒரு பொருட்டாகவே ரங்கநாதனுக்கு தோன்றவில்லை. எப்பொழுது ஆனந்தவல்லி வேதாவின் திருமணத்தோடு, சுமித்ராவின் பொருளாதார நிலையை சம்பந்தப்படுத்தி பேசி கொளுத்திப் போட்டாரோ அதிலிருந்து
இன்று வரை அவருக்கு அது ஒரு உறுத்தலான விஷயமாகிப்போனது.
என்றாலும் அவரது கோபம் தாபம் இரண்டையும் காட்டும் ஒரே இடம் சுமித்ரா தான் ...


மகன்களிடம் கூட மெயிலில் தான் பேசுவார் . மனைவியிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவார். சில சமயங்களில் அவரது நகர்வை சுமித்ராவால் கூட கணிக்க முடியாமல் இருந்திருக்கிறது..


ஸ்ரீனி , தாய் சுமித்ராவின் குணத்தை அப்படியே பிரதிபலிப்பவன். ஆனால் ஸ்ரீராம் தந்தையின் மறு பிம்பம்.


ஸ்ரீனி, ஸ்ரீராம் இருவருமே வியாபார புலிகள் தான். ஆனால் ஸ்ரீராம் அதிவிரைவில் உணர்ச்சிவசப்படுபவன்..
அவன் சிறுவயதிலிருந்தே தன் தங்கை ஸ்ரீலக்ஷ்மியிடம், 'ஸ்ரீ பாப்பா ஸ்ரீ பாப்பா' என அதிகம் அன்பு பாராட்டுவான்...


ஸ்ரீ லக்ஷ்மி தன் பாட்டி மரகதவல்லியின் மறுபதிப்பு . குணத்திலும் அழகிலும் .
ஆனால் மரகதவல்லியிடமிருந்த அந்தக்கால கட்டுப்பெட்டித்தனம் குறைந்து, இந்த காலத்திற்கே உரிய துடுக்குத்தனம் மட்டும் சற்றே அவளிடம் மேலோங்கியிருக்கும்.


ஸ்ரீராம் , விஷ்ணு இருவரையும் அருகருகே நிறுத்தினால் , அண்ணன் தம்பி என்று சொல்லும் அளவிற்கு உருவ ஒற்றுமைகள் இருக்கும் .. வேதாவின் சாயல் இருவரிடத்திலுமே காணப்படும்.


சிறுவயதிலிருந்தே விஷ்ணுவை பிடிக்காது என்பதால், ஸ்ரீயை திருமணம் செய்யப்போகும் அவனை இன்று வரை வில்லனாகவே பார்க்கிறான் ஸ்ரீராம்.


வயது மூப்பின் காரணமாக நித்திய சமையலுக்கு முழுக்க முழுக்க பாக்கியம் மாமியையே நம்பியிருந்தார் மரகதம்.
மறு நாள் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு தன் தாய் தந்தையை அழைப்பதற்காக சுமித்ரா ஸ்ரீயுடன் விருதுநகர் சென்றுவிட,


வீட்டில் அனைத்து உறவுகளும் வந்திருப்பதை அறிந்தும் வேண்டுமென்றே பாக்கியம் மாமியை பட்டு மாமியின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த
ஆனந்தவல்லியின் சூழ்ச்சிக்கு பின்னால் இருந்தது இதுதான்.


சுமித்ரா இருந்திருந்தால், அவர் முறையாக சமாஸ்ரயணம் பண்ணி கொண்டவர், அவர் சமைத்தால் அனைவரோடும் ஆனந்தவல்லியும் மரகதமும் சாப்பிடலாம், ஆனால் இப்போது அவர் இல்லாததால்
வேதா தான் சமைக்க வேண்டியநிலை. வேதா சமைத்தால் நானும் மரகதமும் சாப்பிட மாட்டோம் என்று கூறி, பிரச்சனையை பெரிதுபடுத்தி, வேதாவின் மனதை நோகடிக்க வழக்கம் போல் ஆனந்தவல்லி சூழ்ச்சி செய்ய, அவரது சூழ்ச்சியை அறிந்த ருத்ர நாராயணன்,


" அக்கா நீயும் மரகதமும் கோகிலா மாமி ஆத்துல போய் சாப்பிடுங்கோ... நாங்க எல்லாரும் வேதா தளிகையை தான் சாப்பிட போறோம்..." என்றார் பிரச்சனையின் மூலத்தை அறிந்து அதற்கு முடிவு கட்டும் விதமாக.


உடனே மரகதம்,


" நானும் வேதா தளிகையையே சாப்பிடுறேன்னா..." என்றார் ஏதோ உள்ளுணர்வு உணர்த்த.


மற்றவர்களுடன் ருத்ர நாராயணனுக்கும் மரகதத்தின் செயல்கள் ஆச்சரியத்தை விதைக்க, கடைசியில் பிரச்சினையை எதிர் பார்த்து காத்திருந்த ஆனந்தவல்லி, வேறு வழி இல்லாமல் வெளியேற, வேதா அருமையாக சமைத்து தன் தாய் தந்தை, தன் குடும்பம், ரங்கநாதன், ஸ்ரீனி , ஸ்ரீராம் என அனைவருக்கும் பரிமாறினார்.


மறுநாள் நடைபெறவிருக்கும் நிச்சயத்திற்காக , வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க,


காலையிலிருந்து தொடர்ந்து பார்த்த வேலையால்
மூட்டு வலியின் காரணமாக வேதா தன் அறையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.


" என்னம்மா... கால் வலிக்குதா ... " என்றார் வெங்கடேஷ் அனுசரணையாக.


" ஆமான்னா... இவ்ளோ பேருக்கு தளிகை பண்ணி வழக்கமில்ல நேக்கு..
அதான் கால் ரொம்ப வலிக்கற்து ..."


" நம்ம வீடா இருந்தா நானும் உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன் ..."
என்றபடி ஐயோடெக்ஸை தேடி எடுத்து வேதாவின் கால்களில் தேய்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது, ஒருக்களித்த கதவை திறந்துகொண்டு சுமித்ரா வர,
அங்கு அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து,


" சாரி..." என்றபடி அவர் வெளியேற எத்தனிக்க,


" மன்னி உள்ள வாங்கோ .." என்றார் வேதா.


" நீ பேசிக்கிட்டு இரும்மா நான் அப்புறம் வரேன் ..." என வெங்கடேஷ் வெளியேற,
அறைக்குள் வந்த சுமித்ரா, நாளை நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்தத்திற்கு அவர் தாய் தந்தையை அழைத்து வந்ததை பற்றி பேசியவர்,


" நீ ரொம்ப லக்கி வேதா ... உங்க அண்ணா, அதான் என் ஆத்துக்காரர், ஒரு நாள் கூட இப்படி அனுசரணையா நடந்துண்டதே இல்ல... தலை வலின்னு சொன்னா, ஆத்துல இத்தனை வேலைக்கார இருக்கும் போது நோக்கு எதுக்கு தலைவலி வர்றதும்பேர்...


ஏன் வேதா, வேலைக்காரளுக்கும் தலைவலிக்கும் சம்பந்தம் உண்டா என்ன... பொதுவா போலீஸ்காரா ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா உன் ஆத்துக்காரர் அப்படி இல்ல போலிருக்கே ..." என சுமித்ரா வியக்க


" அவரோட வேலையை என்னைக்குமே அவர் ஆத்துக்கு அழைச்சிண்டு வந்ததே இல்ல ... வெளில அவர் படு டெரர் ... அது நேக்கும் தெரியும்...
ஆனா ஆத்துல அவர் நல்ல அப்பாவா நல்ல ஆத்துக்காரரா தான் இன்னைய வரைக்கும் நடந்துண்டு இருக்கேர்..." என்ற போது வேதாவின் முகத்தில் அளவுக்கதிகமான பெருமிதம் பிரதிபலித்தது.


மறுநாள் காலையில் முகூர்த்த நேரத்தில், நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்க


எப்பொழுதும் போல் ருத்ர நாராயணனின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள,
அப்துலும் தன் குடும்பத்தோடு வந்திருக்க, விழா இனிதே தொடங்கியது.


ரோஜாப்பூ நிறத்தில் தங்க ஜரிகை இட்ட, பனாரஸி புடவையில் , புத்தம் புது ரோஜாவாய் ஸ்ரீ மிளிர, அவளருகே பட்டு வேஷ்டியில் கம்பீரத்தோடு அமர்ந்திருந்தான் விஷ்ணு.
பார்ப்பதற்கு மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியுமாய் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்க,


தட்டு மாற்றிக்கொள்ள
விஷ்ணுவிற்காக வெங்கடேஷ் அமர்ந்தால், ஸ்ரீகாக ரங்கநாதன் அமர வேண்டும்.
ஆனால் ரங்கநாதனின் மனம் , இந்த கல்யாணத்தை பொறுத்தமட்டில் நிச்சயமாக நேர்மறையான எண்ணத்தில் இருக்காது என்பதை முன்கூட்டியே அனுமானித்த ருத்ர நாராயணன்,
மணமகன் சார்பாக விஷ்ணுவிற்கு அவன் தாத்தா வாசு தேவரை அமரச்செய்து, மணப்பெண் சார்பாக ஸ்ரீயின் தாத்தா என்ற முறையில் தானே அமர்ந்து,
முறைப்படி தட்டு மாற்றிக் கொண்டனர்.


அதற்கு முன் படித்த லக்ன பத்திரிகையில், 2021 ஆம் ஆண்டில் ஏதாவது ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் நடத்தப்படும் என்று குறிப்பிட பட,


மணமக்களை மாலை மாற்றிக்கொள்ள சொல்லும் போது,( பொதுவாக நிச்சயதார்த்தத்தில் மாலை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் இல்லாதது)


விஷ்ணு மாலையைக் கையில் எடுத்து, ஸ்ரீ யின் கழுத்தில் போடுவதற்கு முன், அவன் கண்கள்
அவளது பார்வையை சந்திக்க , அது கலங்கி இருப்பதை கண்டு ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவனை, ருத்ர நாராயணன் ஊக்கி மாலையைப் போட செய்ய, அனிச்சையாய் ஸ்ரீயும், அவளது உயரத்திற்கு குனிந்து நின்ற விஷ்ணுவின் கழுத்தில் மாலை சாற்றினாள்.


ஊரும் உறவுக்கும் தான் லக்ன பத்திரிக்கை படி 2021ஆண்டில் திருமணமே தவிர, விஷ்ணுவைப் பொருத்தமட்டில் அவனுக்கு திருமணம் அந்தக் கணத்திலேயே, முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக நடந்தேறிவிட்டது.


மாலை மாற்றும் போது அவன் மனதில் சிறு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது.
இவ்வளவு காலமான சந்திப்பில் ஸ்ரீயும், விஷ்ணுவும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொண்டதேயில்லை . வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும்தான்.
ஆதலால் ஸ்ரீயின் கலங்கிய விழிகளுக்கான காரணம் புரியாமல் தவித்துப்போனவனின் மனதில் ஒரு வேளை அவளுக்கு இந்த திருமணத்தில் பிடித்தம் இல்லையா ...
தாத்தாவின் வற்புறுத்தலின் பேரில் தான் ஒப்புக்கொண்டாளா போன்ற கேள்விகள் அலை மோதின.


நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ருத்ர நாராயணனின் அறிவுறுத்தலின் பெயரில், புகைப்படம் மற்றும் காணொளியாக
பதிவு செய்யப்பட்டது.


வழக்கம் போல் ரங்கநாதன் , ஸ்ரீராம் இருவரும் தணல் மேல் நிற்பது போல் நின்று கொண்டிருக்க, சுமித்ரா, ஸ்ரீனி, ருத்ர நாராயணன், மரகதம், வேதா, வெங்கடேஷ் , வாசுதேவர் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.


ஆனந்தவல்லியை பொருத்தமட்டில் பிள்ளையார் பிடிக்க குரங்காகி போன கதையாகி விட்டது.


அவர் போட்ட திட்டப்படி விஷ்ணுவும் ஸ்ரீயும் காதலில் விழ , அதுவரை தான் எழுதிய நீண்ட நாள் திரைக்காவியம் அச்சுபிசகாமல் அரங்கேறியதை எண்ணி இறுமாந்து போயிருந்தவருக்கு கதையின் அடுத்த கட்டமான உச்சக்கட்டத்தில் யாருமே எதிர்பாராத நிலையில் ருத்ர நாராயணன் அதிரடியாக களமிறங்கியது மரண அடியை கொடுத்திருந்தது.


வெங்கடேஷ் ஒருவேளை தன் மகனின் திருமணத்திற்கு சம்மதித்து இறங்கி வந்தாலும், தங்கையின் திருமணத்தையே ஏற்றுக் கொள்ளாத ரங்கநாதன் நிச்சயம் விஷ்ணு உடனான தன் மகளின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான். நீர் பூத்த நெருப்பாக இருந்த பகைமை இருவருக்கிடையே அனலைக் கக்கிக் கொண்டு வெடிக்கும் .. ஒருவரோடு ஒருவர் மல்லுக்கு நிற்பர் என்றெல்லாம் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவருக்கு, தன் மகளின் திருமணத்தை எப்படி அதிரடியாக நடத்தி முடித்தாரோ, அதே போல் தன் பேத்தியின் நிச்சயதார்த்தத்தை ருத்ர நாராயணன் அடாவடியாக நடத்தி முடித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.


வேதாவின் வாழ்க்கையில் நடந்தேறியிருக்க வேண்டிய வில்லங்கம், விவகாரம், இப்போது விஷ்ணுவின் வாழ்க்கையில் நடத்திப் பார்க்க ஆவல் கொண்டிருந்தவருக்கு ஏமாற்றமே கிடைக்க, வேறு வழியில்லாமல் வேற வழியை கையாண்டு தன் பகையை தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.


விஷ்ணுவிற்கு ஸ்ரீயை தனியே சந்தித்து, அவள் கலங்கியதற்கான காரணமும் அவளது அலைபேசி எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதனை செயல்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.


ஆனால் அவன் எதிர்பார்த்தது போல்,
அப்படி ஒரு சந்தர்ப்பம் சுலபமாக வாய்க்கவில்லை. வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது.


வீட்டுத் திண்ணையை ஒட்டிய சேமிப்பறை எனப்படும், வீட்டு கிடங்கில் வருட சேமிப்பு உணவுப் பொருட்களான விதை நெல், நெல், அரிசி, புளி ,கம்பு, சோளம் ஆகியவை சால் எனப்படும் ஆளுயர பானையில் சேமிப்பது வழக்கம்.
அந்த அறையின் பரணையில் பல பழங்கால பொருட்கள், அறையின் மூலையில்
வீட்டிற்கு தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கப்பட்டிருக்க
எலி, பூனை, கரப்பான் ஆகியவற்றின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக அங்கு ஜீரோ வாட் வெளிச்சமுள்ள சிறிய பல்பு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்.

மாலை முடிந்து இரவு தொடங்கும் தருணத்தில், ஸ்ரீ கையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்த பூனை, தாவிக்குதித்து அந்த சேமிப்பறைக்குள் ஓட, ஸ்ரீ அதனை பிடிக்க பின் தொடர, சுற்றி முற்றி பார்த்த விஷ்ணு, கூடத்தில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும், இதுதான் தருணம் என
ஸ்ரீயை பின் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைந்தான்.


சற்று பெரிய அறை என்பதால், ஸ்ரீ பூனையைத் தேடிக்கொண்டே தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்குமிடத்தை நெருங்கும் போது ஆள் அரவம் கேட்க, திரும்பிப் பார்த்தவளுக்கு அங்கு விஷ்ணுவை கண்டதும் இன்ப அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க


அந்த ஜீரோ வாட் ஒளியில், பட்டுப்பாவாடை தாவணியில் தங்கசிலையாய் மின்னிய , தன் காதலியை பார்த்து உறைந்து நின்றவனின் இதயத்துடிப்பு ஓங்கி ஒலிக்க , அடி மேல் அடி எடுத்து அவளை நெருங்கும் போது,
திடீரென்று யாரோ அந்த ஜீரோ வாட் பல்பை அணைத்ததோடு, அறையின் வாயிற் கதவை வெளி தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்க , துணுக்குற்றவன் திரும்பி கதவைப் பார்க்கவும், திடீரென விளக்கு அணைந்தால் இருட்டுக்கு பயந்து ஸ்ரீ கத்த ஆரம்பிக்கவும் சரியா இருக்க, உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் வாயை பொத்தியவனுக்கு புரிந்து போனது, வெளி தாழ்பாள் போட்ட நபர் யார் , அவரது உள்நோக்கம் என்ன என்று.


ஒரு சில நொடிகளில் , மேல் ஜன்னலிலிருந்து வெளிப்படும் பௌர்ணமி நிலவின் ஒளி கீற்று, அந்த அறை முழுவதும் ஆக்கிரமிக்க, இடது கையால் அவள் கழுத்தை பற்றி வலது கையால் அவள் வாயை பொத்தியிருந்தவனுக்கு,
அந்த நெருக்கம் மயக்கத்தை கொடுக்க, அவளது பஞ்சு போன்ற கன்னம் பலாச்சுளை போன்ற உதட்டின் மென்மையில், தன்னை மறந்து அவன் மேலும் நெருங்க, அவளும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி நகர்ந்து சுவற்றில் மோதி நின்றவளின் கண்கள் விண்மீன்களாய் ஜொலிக்க


அதனைப் ரசித்து பார்த்தபடி கத்த கூடாது என்பது போல், இடவலமாக தலையசைத்தவன், அவள் வாயிலிருந்து கையை எடுத்துவிட்டு,
அவள் கன்னம் நோக்கி குனியும் போது , சுமித்ரா "ஸ்ரீ......"
என்று அறைக்கு வெளியே அழைப்பதை இருவரும் ஒரு சேர கேட்டதும் சுயம் உணர்ந்தவனுக்கு பிரச்சனையின் வீரியம் அப்போதுதான் புரிய ஆரம்பித்தது.


" ஒன்னும் பயப்படாதீங்கோ... கதவை தட்டினா திறக்கப்போறா... யாரோ நாம உள்ள இருக்கிற்து தெரியாம வெளில லாக் பண்ணிட்டிருக்கா போல..." என ஸ்ரீ வெள்ளந்தியாக சொல்ல


" சரி.... கதவு திறந்ததும், நீ எதுக்காக இங்க வந்தேன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ..." என ஆர்வத்தோடு விஷ்ணு கேட்க


" பூனை புடிக்க வந்தேன்னு சொல்லுவேன் ..." என்றாள் குழந்தையாய்.


" என்னை எதுக்காக இங்க வந்தேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது..."


" ஆமா... நீங்க எதுக்காக இங்க வந்தீங்கோ..." என அப்போது தான் அவன் வரவின் நோக்கத்தை அவள் அறிய முயல


" ம்ம்ம்ம், இப்பவாது கேட்டியே... உன் கிட்ட தனியா பேசணும்னு வந்தேன்.. பட் நவ் வி ட்ராப்புடு...(now we trapped...)"


" அப்படின்னா ..."


" எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டோம்னு அர்த்தம் ..."


" ஐய்ய... அது நேக்கு புரியர்து... எப்படி மாட்டிண்டுடோம்னு தான் கேக்கறேன்..."


"காலையில தான் நம்ம ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு... இப்ப ரெண்டு பேரும் இந்த ரூம்ல ஒன்னா தனியா இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைச்சுப்பாங்க..." என்றவனின் பேச்சு புரிந்ததும், சற்று நாணத்துடன் அவள் தலைகுனிய


" யப்பா... இப்பவாது புரிஞ்சதே... சுத்தமா குடும்பமே மட்டியா இருக்கும் போல இருக்கே ...ஜெனிடிக் இஷ்யூன்னு நினைக்கிறேன் ..." என்றவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு


" இப்ப நீ என்ன பண்ற, நீ இங்கேயே இருக்க ...நான் அந்த ஜன்னல் வழியா வழி ஏதாவது இருக்கான்னு பார்த்து குதிச்சு போனதுக்கு அப்புறம் நீ கதவை தட்ற ..."


" ஐயோ பெருமாளே , நேக்கு தனியா இருட்டுல இருக்க பயம்மா இருக்கு ... மூச்சு முட்றது.."


" உன்னோட இருட்டுல நான் தனியா இருந்தா எனக்கும் தான் மூச்சு முட்டுது ..." என்றான் குறும்பாய்.


" பேசாம ரெண்டு பேருமே போய் கதவை திறந்திடலாமே ... நீங்களும் என்னோட பூனை புடிக்க வந்ததா சொல்லிடலாம் ...எல்லாரும் நம்பிடுவா..."


" நீ சொல்லவே வேணாம் உன்னை பார்த்தாலே பூனை புடிக்க வந்த மாதிரி தான் இருக்குது....


ஆனா என்னை பார்த்தா பூனை புடிக்கிறவன் மாதிரியா இருக்கு... சரி அப்படியே சொன்னாலும் யாராவது நம்புவாங்களா ... அதுவும் உன் சின்ன அண்ணன் இருக்கானே, நான் புலி புடிக்க வந்ததா சொன்னா கூட நம்பிடுவானே ஓழிய பூனை புடிக்க வந்ததா சொன்னா நம்பவே மாட்டான் ...
அம்மா தாயே, உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க ...என்னை தான் சொல்லுவாங்க... இங்க பார் முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் .... ..." என்று நிறுத்தியவன்


"தர்ம அடி வாங்க போறதென்னவோ முள்ளு தான் ..."


" அப்படின்னா ..."


" இதை புரிஞ்சிக்கிற அளவுக்கு உனக்கு கெபாசிட்டி இருந்தா நீ ஏம்மா பூனை புடிக்க போற..."


" பூனை புடிக்கிறது குத்தமா ... " என்றாள் மிகுந்த வருத்தத்தில்.


" இல்லம்மா.... மகா புண்ணியம் ..."
என இருவரும் சன்னமாகப் சம்பாஷனை நடத்திக்கொண்டிருக்கும் போது, கூடத்தில் வேதா,சுமித்ரா, ஸ்ரீராம் ,மரகதம் என ஆளுக்கு ஒரு திசையில் அறை அறையாய் ஸ்ரீயை தேடிக் கொண்டிருக்க, விஷயம் புரியாமல் தெளிவான குரலில் வெங்கடேஷ்,


" என்ன வேதா என்ன பிராப்ளம்..."


" ஸ்ரீயை காணோம்னா... தேடிண்டு இருக்கோம்..."


" என்னது... ஸ்ரீயை காணமா..." என வெங்கடேஷ் எதிர் கேள்வி எழுப்ப,


" ஐயையோ ... என் அப்பாவுக்கு மட்டும் நாம இங்க இருக்கிறது தெரிஞ்சது சும்மா தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி என்னை தட்டி தூக்கிடுவாரு..." என விஷ்ணு அலற


" ரஜினி படமா ..." என ஆசுவாசமாய் அவள் கேட்க


" தங்கப்பதக்கம் சிவாஜிங்கிறேன்... ரஜினி படமான்னு கேக்கற.. சினிமாவுலயும் நீ சைபர்கேஃப் தானா...
அம்மா பரதேவத, நீ ஞான பழம்னு ஊருக்கே தெரியும் ... அதனால உன்னை யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க ... என்னை தான் என் அப்பா புழிஞ்சிடுவாரு... வளர்ந்த பையன்னு கூட பார்க்காம, விரட்டி விரட்டி வெளுத்துடுவாரு தாயே... நான் இப்பிடீக்கா எப்படியாவது அப்பீட் ஆயிடறேன்... நீ வந்த வழியே போய்டு ஆத்தா... "


" நான் இப்ப இங்க இருந்து வெளில போனா, இருட்டுல ஏன் பூனை புடிக்கப் போனேன்னு ஸ்ரீராம் தலையில கொட்டுவான் விஷு..." என உதடுகள் துடிக்க கண்கலங்கியபடி அவளது அதிகபட்ச கவலையை தெரிவிக்க , அதைக் கேட்டவனுக்கு முதலில் சிரிப்பு பொத்திக் கொண்டு வர, பிறகு அவள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து,


" உன் பிரச்சினை உனக்கு... என் பிரச்சனை எனக்கு... அதோட இந்த பூனை புடிக்கிற பிரச்சனை வேற பெரும் பிரச்சனை ஆயிடுச்சு...சரி, பயப்படாத எதுவாயிருந்தாலும் சமாளிக்கலாம் ..."


" எப்படி ..."


" எப்படின்னு உடனே கேட்டா எப்படி பதில் சொல்றது... யோசிக்கனுமில்ல..."


என்றவனுக்கு,
முதன்முறையாய் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.


" ஸ்ரீ எங்க போனா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூடத்துல பார்த்தேனே..." என சிம்மக் குரலில் ருத்ர நாராயணன் கேட்க,


" ஐயையோ தாத்தா..." என சன்னமாக ஸ்ரீ அலற,
" ஓ மை காட் .... அப்பா, அம்மா, தாத்தாவை எப்படி நான் ஃபேஸ் பண்ண போறேன் ...." என விஷ்ணு தலையில் அடித்துக்கொள்ள,


இருவரின் இதயமும் 200 டெசிபலில்
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது...
திக்... திக்..... திக்...


தகிப்பாள்
 
அத்தியாயம் 11

விஷ்ணு.... யோசி டா, இப்ப என்ன பண்றது .... என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவன் எதேச்சையாக விட்டத்தை பார்க்க, மின்னலென ஒரு எண்ணம் அவன் மனதில் மின்னியது.

ஆண்டு உணவுப்பொருட்களை சேமிக்கும் இம்மாதிரியான வீட்டு கிடங்கின் விட்டத்தில் இரு ஆட்கள் நுழையும் அளவிற்கு கதவுடன் கூடிய ஒரு திறப்பு எப்பொழுதும் பொருத்தப்பட்டிருக்கும்.

மொட்டை மாடியில், நெல், கேழ்வரகு , கம்பு போன்ற உணவு தானியங்கள் வெயிலில் காய வைத்திருக்கும் போது, எதிர்பாராத மழை அல்லது அளவுக்கதிகமான காற்றடிக்கும் நேரத்தில், உடனடியாக வீட்டு கிடங்கின் விட்டத்தில் இருக்கும் இந்த திறப்பின் வழியாக தான் காய வைத்திருந்த அந்த உணவு தானியங்கள் அனைத்தும் உட் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம்.

வெயில் காலம் என்பதால், அந்த மொட்டைமாடி திறப்பு அரைகுறையாக மூடப்படாமல் திறந்திருக்க,
சற்று தள்ளி சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணியை எடுத்து, அந்த திறப்பின் வாயிலில் பொருத்தியவனுக்கு மேலும் ஒரு எண்ணம் தோன்றியது.

இந்த சேமிப்பு அறையில் தட்டுமுட்டுச் சாமான்கள் அதிகமிருப்பதால் பொதுவாக யாரும் புழங்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இது வரையில், யாரும் இந்த அறையை ஆய்வு செய்யவில்லை.
அதுமட்டுமல்ல கடந்த 15 நிமிடங்களாக ஸ்ரீயை காணவில்லை என்பதை அனைவரும் அறியும்படி செய்து விட்டுத்தான், இந்த அறையை பற்றி ஆனந்தவல்லி மூச்சே விடுவார் என்பதை அறிந்த விஷ்ணு,
கதவருகில் இருந்த பழைய ஆட்டுக்கல்லை நகர்த்தி,கதவு உடனே திறக்கப் படாமல் இருக்க உட்புறமாக முட்டுக் கொடுத்தான்.

ஆம் விஷ்ணுவின் கணிப்பு சரியே. இந்த நாடகத்தை செவ்வனே அரங்கேற்றி கொண்டிருப்பது ஆனந்தவல்லி தான்.

" ஸ்ரீ, முதல்ல நான் ஏணில ஏறி போறேன்... அப்புறம் நீ ஏறி வா ..."
என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல், விறு விறுவென ஏறி,
விட்டத்தின் கதவை சத்தம் வராமல் மெதுவாக நகர்த்தி , சுவற்றில் கையூன்றி தாவி மொட்டை மாடியை அடைய,

" ஒரு வேளை ஸ்ரீ இந்த ரூமுக்குள்ள இருக்காளோ என்னவோ ..." - இது ஆனந்தவல்லி.

" இல்ல பாட்டி ...இங்க எல்லாம் அவ போகமாட்டா... பயப்படுவா..." - இது ஸ்ரீராம்.

" ஆத்துல எல்லா இடத்துலயும் தேடியாச்சு... இந்த ரூம் தான் பாக்கி ... ஒரு வேளை இங்க இருக்காளோ என்னமோ...ஓபன் பண்ணு ஸ்ரீராம்..."- இது வேதா.

இவர்களின் உரையாடல்கள் செவ்வனே
விஷ்ணு மற்றும் ஸ்ரீயின் காதுகளுக்கு எட்ட, ஸ்ரீ முந்தானையை இடுப்பில் அள்ளி முடிந்து கொண்டு, கண்களில் ஒரு வித பயத்தோடு, ஒவ்வொரு படியாக ஏறி திறப்பின் நுனியை அடைய , விஷ்ணு தன் இரு கரங்களை, ஸ்ரீயின் இரு தோள்களுக்கு கீழே கொடுத்து அலேக்காக அவளை தூக்குவதற்கும்,
கீழே மற்றவர்கள் கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது .

" பாருங்கோ... எவ்ளோ இருட்டா இருக்கு இங்கெல்லாம் நிச்சயமா ஸ்ரீ இருக்க மாட்டா..." எனக்கூறி ஸ்ரீராம் நடையை கட்ட, கூட்டம் களைய,

" நில்லுங்கோ, லைட்டை போட்டு பார்ப்போம் .."
என்று விளக்கைப் போட்டு பார்த்த, ஆனந்தவல்லிக்கு குழப்பமே மிஞ்சியது .

" எங்க போயிருப்பா... ரெண்டு பேரும் ...."
என தனக்குள்ளே பேசிக் கொண்டவருக்கு, ஏணி சாய்ந்து நின்றதை பார்த்ததும், அவரது குயுக்தி புத்தி சரியாக வேலை செய்ய,

" ஒரு வேளை மொட்டை மாடில இருக்காளோ என்னவோ ..." என அடியெடுத்துக் கொடுத்தார் ஆனந்தவல்லி.

முழு நிலவொளியில் காதலியின் முகத்தை ஆசை ததும்ப பார்த்துக் கொண்டிருந்தவன், தன் மனதில் உள்ளதை அவளிடம் கேட்க நினைக்கும் போது , சற்றும் எதிர்பாராமல் இவ்வளவு நேரமாக ஸ்ரீ தேடிக் கொண்டிருந்த பூனை, திறப்பிலிருந்து தாவி குதிக்க, அருகில் நின்றிருந்தவள் பயத்தில் விஷ்ணுவை இறுக தழுவிக்கொண்டாள்.

குளிர்ச்சி தரும் நிலவொளியில், இளம் தென்றல் காற்றில் , காதலியின் முதல் ஸ்பரிசம், அவன் உடலின் உஷ்ணத்தை உச்சத்திற்கே கொண்டு செல்லும் போது,

" சரி பாட்டி, மொட்டை மாடில இருக்காளான்னு பார்த்துட்டு வரேன் ..." என்ற ஸ்ரீராமின் குரல் கேட்டதும்,

" ஐயோ... உன் அண்ணன் வரான்.. சோலி முடிஞ்ச்... ஒரே வழிதான் இருக்கு ...நீ தோட்டத்துக்குப் போ .." என்றான் சுயம் உணர்ந்து விஷ்ணு.

" நீங்கோ..."

" என்னை பத்தி கவலை படாத ...நான் பட்டு மாமி வீட்டு மாடிக்கு தாவி அங்கிருந்து பின் வழியா பைப்பை புடிச்சி கீழ இறங்கி , ரோடுக்கு போயிடுவேன்..."

" முடியுமா ... எங்கேயாவது விழுந்திட போறீங்கோ..."

" என் வேலையே இதுதான் ... இத்தனை நாள் ப்ரொபஷன்காக செஞ்சுகிட்டு இருந்தேன்... இப்ப பர்சனல்காக செய்யப்போறேன் அவ்ளோ தான்... விடு ஜூட் ..." என்றவன் குரங்குக்கே சவால் விடுவது போல் தாவி குதித்து தலை மறைவானான்.

உடனே மின்னல் வேகத்தில் ஸ்ரீ இறங்கி தோட்டத்திற்கு செல்லவும், மொட்டை மாடிக்கு செல்லும் முதல் படியை ஸ்ரீராம் நெருங்கவும் சரியாக இருக்க

" ஏய் ஸ்ரீராம், கீழே இறங்கி வாடா ...ஸ்ரீ இங்க தான் கொல்லையில இருக்கா..." என்ற சுமித்ராவின் பேச்சைக் கேட்டு,
பாதியில் திரும்பியவன்,

" அறிவிருக்கா ... எங்கடி போயிருந்த ...
ஆத்துல எல்லாரும் உன்னை தேடிண்டு இருக்கோம் ..."

" முல்லைப் பூ பறிக்க போயிருந்தேன் ..."

" ஆமா பூ பறிக்க போனேன்... பூனை புடிக்க போனேன்னு ... இதெல்லாம் ராத்திரில செய்ற வேலையா ..." என்றவனின் இயல்பான கேள்வியில்
ஸ்ரீ பதட்டமடைய,

" குழந்தையை வைய்யாத டா ...நீ வாம்மா ஸ்ரீ .." என சுமித்ரா அவளை அழைத்துச் செல்ல,

சற்று நேரத்திற்கெல்லாம், வீட்டு வாயிலில் இருந்து உள்ளே நுழைந்த விஷ்ணுவை சந்தேகக் கண்ணுடன் ஸ்ரீராம் நோக்க,

இன்னும் இந்த கடுவன் பூனை, உள்ள போகலையா .... விஷ்ணு 'டர்' ஆவாத டா ... என தனக்குத் தானே தைரியம்
அளித்துக்கொண்டு வந்தவனிடம்,

" ஸ்ரீ தோட்டத்துல இருந்து வரா... நீ வாசல்ல இருந்து வர... என்ன நடக்கற்து இங்க..." என்றான் துப்பறியும்
சாம்புவாக ஸ்ரீராம்.
உடனே விஷ்ணு தனது ட்ரேட்மார்க் புன்னகையுடன், கண்களில் குறும்பு மின்ன, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு

" மச்சான் உன் மனசு புரியுது... ஆனா அதுக்கெல்லாம் இப்ப வாய்ப்பே இல்ல ராசா ... இன்னும் நாள் இருக்கு ... வருத்தப்படாத ....
உன் பிரச்சனை தான் என்ன ...
ரெண்டு பேரும் சேர்ந்து வரலன்னு வருத்தப்படறீயா....இல்ல ... தனித்தனியா வந்தோம்னு சந்தோஷப்படறீயா..."
என்றவனை கொலைவெறியுடன் பார்த்துவிட்டு ஸ்ரீராம் நகர்ந்ததும்,
இதுதான் தருணம் என நாலு கால் பாய்ச்சலில், தன் அறையை வந்தடைந்தவன்

" யப்பா ... கண்ணைக்கட்டிடுச்சி டா சாமி... நிஜமாவே இன்னைக்கு கச்சேரி கலை கட்டிடிச்சிடோய்..." என வாய்விட்டே கண்ணாடியை பார்த்து ஒருவித பெருமூச்சுடன் கூறியவனிடம் ,

" மிஸ்டர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் ..." என்றார் வெங்கடேஷ்.

"வா... வாங்கப்பா ..." என்றான் எதிர்பாராத அவரது வரவை கண்டு குரலில் இயல்பைக் கூட்டி .

" என்ன நடக்குது இங்க... நீ எங்க போய்ட்டு வர..."

" சும்மா போரடிக்குதேன்னு வாக்கிங் போயிட்டு வந்தேம்ப்பா..."

" பொய் சொல்லாத விஷ்ணு ...நான் உன் அப்பா மட்டும் இல்ல போலீஸ் காரனும் கூட..." என்றவரின் துளைத்தெடுக்கும் பார்வையைப் பார்த்ததும், நடந்த அனைத்தையும் விஷ்ணு பகிர,

" எல்லாம் சரிதான் ... கண்கட்டு வித்தை மாதிரி சிச்சுவேஷனை அம்சமாக ஹேண்டில் பண்ணியிருக்க...
ஆனா ஆதாரத்தை விட்டுட்டு வந்துட்டியே ..." என்றவர்
விஷ்ணுவின் வாட்சை தூக்கி காட்டிவிட்டு

" விஷ்ணு இந்த வாட்ச்சோட , கொஞ்சம் பூ இதழ்களும் இருந்தது ... ஸ்ரீராம் மேல போயிருந்தான்னா நிச்சயமா இதையெல்லாம் பார்த்திருப்பான்..." என்றவர்
" ஸ்ரீ முகத்துல அளவுக்கதிகமான பயம், உன் முகத்துல படபடப்பு, எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்து தான் என்ன நடந்திருக்கும்னு முடிவு பண்ணி மொட்டை மாடிக்கு போய் பார்த்தேன் ... இந்த ஒரு காரணம் போதும், ரங்கநாதன் எல்லார் முன்னாடியும் உன்னை அசிங்கப்படுத்த ... " என்றார் அவனை ஆழ்ந்து நோக்கி.

" அப்பா, நான் எந்த தப்பான எண்ணத்துலயும் ஸ்ரீயை பார்க்க போல,
அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்,
அவளோட போன் நம்பர் வாங்கணும்னு தான் போனேன் ..." என்றான் மீண்டும்.

" இதுவும் தப்பு விஷ்ணு ... ஸ்ரீ உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பொண்ணு அவ்ளோதான்... அவ உன் பொண்டாட்டி இல்ல ... ஒரு வேளை ஸ்ரீ உன் பொண்டாட்டியாவே இருந்தாலும் , அவ படிப்பு ரொம்ப முக்கியம் ... இந்த மாதிரி போன்ல பேசற எண்ணத்தை எல்லாம் முதல்ல நிறுத்து ...." என ஒரு நல்ல தந்தையாக, தப்பான எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், கண்ணியத்தோடு அறிவுரை கூற,
விஷ்ணு பதில் பேச தெரியாமல் தலைகுனிய, பிறகு தொடர்ந்தவர்

" சரி கேட்டியா, அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கா ..."

" கேக்க முடியலப்பா ...ஆனா அவளுக்கு என்னை நிச்சயமா பிடிக்கும் ப்பா ...." என்றதும் தன் தந்தை மற்றும் மாமனாரிடம் தான் கூறிய அதே பதிலை தன் மைந்தன் தன்னிடம் கூறியதை நினைத்து பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்தவர்

" சரி விஷ்ணு .... இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோ ... உன் தாத்தா, பாட்டி, உன் மேல அளவுக்கதிகமா நம்பிக்கையும் பாசமும் வச்சிருக்காங்க ... ஸ்ரீக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு எல்லாருக்குமே தெரியும்... இதெல்லாம் உன் அம்மாவுக்கு பிடிக்காது ... ஏற்கனவே நீ உன் காதல்ல ஸ்ட்ராங்கா இருக்கியாங்கிற டவுட் அவளுக்கு இருக்குது... இப்படி நடந்தது தெரிய வந்தா, அவ இதை காதலாவே கன்சிடர் பண்ண மாட்டா... பார்த்து நடந்துக்கோ ...ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் ... குட் நைட் ..." என்று விடைபெற்ற வெங்கடேஷ் ஒரு நொடி நின்று,

" இதை யார் செஞ்சிருப்பான்னு நினைக்கிற ..."

" அத்தைப் பாட்டி இல்ல ரங்கநாதன் மாமாவா இருக்கணும் ப்பா ..." என்றான் சிறு சந்தேகத்தோடு.

" இதை உங்க அத்தை பாட்டி தான் செஞ்சிருக்கணும்... ரங்கநாதன் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் .... அது எனக்கு தெரியும் ..." என்றபடி அறையை விட்டு வெளியேறினார்.

நாளை மறுநாள் ஊருக்கு செல்லவிருப்பதால், வேதா அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க , அவர் அறைக்கு வந்த மரகதம்,

" வேதா, உடனே ஊருக்குப் போய் ஆகணுமா ... இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போயேன் டி ..."

" இல்லம்மா, நாளன்னிக்கே கிளம்பி ஆகணும்... எல்லா வேலையையும் போட்டது போட்டபடி பாதில விட்டுட்டு வந்திருக்கேம்மா..."

" நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி ...என் பேரன் பேத்தியோட நிச்சயதார்த்தத்தை கண் குளிர பார்த்துட்டேன்... உன் கல்யாணத்தை தான், என் கண்ணுலயே காட்டாம, உன் அப்பா மட்டும் முன்னிருந்து நடத்தி முடிச்சிட்டேரே...." என்றவரின் குரலில் அளவுக்கதிகமான கசப்பு தெரிய,

" என்னம்மா புதுசா பேசற.... நோக்கு யார் சொன்னது .... அப்பா என் கல்யாணத்தை முன்னிருந்து நடத்தினேர்னு.... அவர் என்னை கோவிலுக்கு அழைச்சிண்டு போனதோட சரி.... ராமானுஜம் மாமா தான் என்னை கன்னிகாதானம் பண்ணி கொடுத்தேர்...அப்பா கல்யாணம் நடந்து முடிகிற வரைக்கும்,
சபைக்கே வரல ...அப்புறம் கேட்டதுக்கு,
உன் அம்மா பார்க்காத கல்யாணத்தை நான் மட்டும் எப்படிம்மா பார்ப்பேனு சொன்னேர்.... நீ என் கல்யாண ஆல்பத்தையே பாக்கலையா .... எந்த ஃபோட்டோவுலயும் அப்பாவை நீ பார்த்திருக்கவே முடியாது ம்மா ... கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான், பெருமாள் சன்னதில இருந்து வந்தேர்...." என்ற மகளின் நீண்ட விளக்கம், அவர் நெஞ்சில் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்த, கண்கள் பனிக்க,

" வேதா நீ சொல்றதெல்லாம் நிஜமா ..." என்றார் உடல் குலுங்கி மனம் தளர்ந்து சன்னமாக.

" ஆமாம்மா ... நோக்கு அப்பாவை பத்தி தெரியுமோல்யோ... பார் கவுன்சில் மெம்பர் ஆத்து கல்யாணத்துக்கு கூட , உன்னை விட்டுட்டு
தனியா போக மாட்டேறே..."

" பின்ன ஏன் உன் கல்யாணத்தை மட்டும் என்ணின்ட சொல்லாம நடத்தினேர்...." என ஆற்றாமையோடு மரகதம் வினவ ,

அதற்கு வேதா, அந்த காலத்தில் ஆனந்தவல்லி ஆடிய ஆட்டத்தை புட்டுப்புட்டு வைக்க, அனைத்தையும் கேட்டு ஆடிப்போன மரகதத்திற்கு துக்கம் தொண்டையை அடைக்க ,

அளவுக்கு மீறிய வியர்வை, கைகளில் ஒரு வித நடுக்கம், பேச முடியாதபடி நாக்கு ஒட்டிக்கொள்ள , தாயிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்காமல், தன் வேலையிலேயே வேதா மூழ்கியிருக்க,

ஆனந்தவல்லியை நம்பிய அளவிற்கு கூட ஆத்துக்காரரை நம்பவில்லையே என்ற குற்ற உணர்வு மரகதத்திடம் பல மடங்கு பல்கி பெருக,

" அம்மா, இன்னைக்கு ஏகாதசி ... நீயும் அப்பாவும் நிர்ஜலம் தானே... இன்னைக்கு நானே தளிகை பண்ணிடறேன் மா ..." என தலை குனிந்தபடி துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவரிடம், பதில் சொல்லாமல், அடியெடுத்து வைத்து நடக்க கூட முடியாத நிலையில் சுவரை ஆதாரமாக பற்றிக்கொண்டு மெதுவாக அறையை விட்டு வெளியேறியவர்,
ஊஞ்சலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ருத்ர நாராயணனை பிரம்மிப்பாக பார்த்தபடி, தட்டித் தடுமாறி அவரை நெருங்கி,

" நான் செத்த இங்க உக்காரலாமா ..." என வெகு சன்னமாக கேட்க, மனையாளின் இத்தகைய மொழி அவருக்கு மிக புதிதாக இருக்க,

" நம்ப கல்யாணத்தின் போது, நீயும் நானும் ஒண்ணா ஊஞ்சல்ல உட்கார்ந்ததோட சரி... எத்தன தடவ என் பக்கத்துல இந்த ஊஞ்சல்ல உட்கார சொல்லி கேட்டிருப்பேன் ... இன்னைக்கு தான் ஞானோதயம் வந்துதா..." என குறும்பாக கேட்டவர்

" வாம்மா... வந்து உக்கார்..." என்றதும் மரகதம் அவரருகில் அமர்ந்துக்கொள்ள,
அப்பொழுது வீட்டு வாயிலிலிருந்து வந்துக்கொண்டிருந்த ஆனந்தவல்லி,

" வர வர என் தம்பிக்கு அறிவே இல்லாம போயிடுத்து.... ஆத்துல பொண்ணு மாப்பிள்ள, பையன் மாட்டு பொண்ணுன்னு குடும்பத்தோட எல்லாரும் வந்திருக்கும் போது, இது என்ன... என்னைக்கும் இல்லாத திருநாளா, ரெண்டு பேரும் ஜோடியா ஊஞ்சல்ல உட்கார்ந்துண்டு கொஞ்சிண்டு இருக்கிறது ..." என வயிற்றெரிச்சலை வாய்விட்டே சன்னமாகப் புலம்பியபடி கூடத்தை நோக்கி வர


அப்போது மரகதம் ருத்ர நாராயணனை
பெருமையோடு பார்த்து

" நீங்க என்ணின்ட 100 % உண்மையா இருந்திருக்கேள்னா...
ஆனா நான் தான் உங்களை தப்பா புரிஞ்சிண்டிருந்திருக்கேன்...

நேக்கு கண்ல காட்டாம நம்ம பொண்ணு கல்யாணத்தை நீங்க மட்டும் முன்னிருந்து நடத்தி முடிச்சுட்டேளேன்னு இத்தனை நாளா தப்பா நினைச்சிண்டிருந்தேன்... அதனால தான் , வேதா கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களிண்ட இது வரைக்கும் ஒரு வார்த்தை நான் கேட்டதே இல்ல... என் மனசுல இருந்த வறட்டு வைராக்கியம்,உங்க மேல இருந்த கோபம் எல்லாம் என்னை பேச விடாம பண்ணிடுத்துன்னா... ஊருக்கெல்லாம் நியாயத்தோட நடந்துப்பேளே... பொண்ணைப் பெத்த அம்மா நேக்கு மட்டும் நீங்க நியாயம் பண்ணலையேனு ரொம்ப வருத்தப்பட்டேன் ...
இப்பதான் தெரியற்து நீங்களும் எனக்காக நம்ப பொண்ணோட கல்யாணத்தையே பார்க்கலன்னு...
அக்காவைப் பத்தியும் இப்பதான் புரிஞ்சுண்டேன்...
என்ன ஒண்ணு காலம் கடந்த புரிதல் ...

என்னை கைப்பிடிச்ச நாளிலிருந்து கை குழந்தை மாதிரி பார்த்துண்டிருந்திருக்கேள்... எல்லாரையும் போல நானும் கோவிலுக்கு போய் பெருமாள சேவிச்சிருக்கேன்....ஆனா பெருமாளோடையே வாழ்ந்துண்டு இருக்கேன்னு நேக்கு புரியாம போயிடுத்தேன்னா ...

அடிக்கடி சொல்வேள் என்னை மட்டின்னு... இப்பதான் புரியற்து நீங்க எவ்ளோ சரியா சொல்லியிருக்கேள்னு...

என்னை மன்னிச்சிடுங்கோன்னா..." என வார்த்தைகள் குழறியபடி , அளவுக்கதிகமான முக சிவப்போடு , உடல் தொப்பலாக வியர்வையில் நனைய, தள்ளாடிக்கொண்டே இரு கரங்களையும் கூப்பி மன்னிப்பு வேண்டி எழுந்து நின்றவர் அப்படியே சரிந்து ருத்ர நாராயணனின் பாதத்தில் விழ,

மனையாளின் வார்த்தைகள் மனதை சென்றடையும் முன்னே, அவர் மயங்கி விழுந்ததை பார்த்து பதறி எழுந்த ருத்ர நாராயணன், மரகதத்தை பற்றி தூக்க முயற்சிக்கும் பொழுது, அவரது உயிர் பறவை கூட்டை விட்டு பிரிந்ததை பறைசாற்றும் விதமாக அவர் கண்கள் நிலைகுத்தி நின்றன.

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமலே இருப்பது நல்லது..
அதுவும் காலம் கடந்து அறியும் பதில்கள் காலனையே அழைத்துவிடும்
என்பதற்கு மரகதம் ஒரு சான்று.

நீண்ட காலமாக மனதில் ஊறிப் போயிருந்த ஆற்றாமை, கோபத்தின் தாக்கம் தான், திடீரென அளவுக்கு அதிகமான குற்ற உணர்வாக உருமாறி இப்படி ஒரு முடிவை தேடிக் கொடுத்திருந்தது.

கடவுளும் பல காரணங்களுக்காகத் தான் சிலவற்றை நமது பார்வையிலிருந்து மறைக்கிறார் ...

தன் பதில் தன் தாயின் வாழ்க்கைக்கே முடிவுரை எழுதும் என தெரிந்திருந்தால், வேதா நிச்சயமாக இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்கவே
மாட்டார் .

நிமிட நேரத்தில் ஊரும் உறவும் கூட,

மஞ்சள் , குங்குமத்தோடு தலை நிறைய பூவுடன் மடிசார் புடவையில் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த மனையாளின் சாந்தமான முகத்தையே வைத்த கண் வாங்காமல் ருத்ர நாராயணன் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

அவர் அழவில்லை, கண்கலங்க வில்லை, யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை ....

ஆனால் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது எல்லாம் இதுதான்.

எல்லாரையும் நன்னா புரிஞ்சிண்டேன்னு நினைச்சிண்டு இருந்தேனே....

என்னோட அந்த கர்வத்துக்கு பகவான் கொடுத்த மரண அடி இது ...

ஊர் உறவை புரிஞ்சிண்ட நேக்கு, உன்னை புரிஞ்சுக்க முடியாம போயிடுத்தேம்மா....

நீதான் என்னை மன்னிக்கணும் ...

இதுதான் அவர் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

வேதாவின் மகள் வித்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போக, மற்ற அனைவரும் அங்கேயே இருந்ததால் யாருக்காகவும் காத்திருக்காமல் செய்ய வேண்டிய அனைத்து கடமையையும் ரங்கநாதன் செய்து முடித்தார்.

ருத்ர நாராயணன் இதுவரை பொய்யுரைத்ததில்லை. ஒரே ஒரு உண்மையை மனையாளிடமிருந்து மறைத்திருந்தார்.

அவர் வேதாவின் திருமணத்தை பற்றி முன்கூட்டியே மரகதத்திடம் சொல்லாததற்கு அவர் அக்கா ஆனந்தவல்லிதான் காரணம் என்ற உண்மைதான் அது.

அந்த குற்ற உணர்வே, ருத்ர நாராயணனை அளவுக்கதிகமாக வாட்ட, மனையாள் இறந்த மூன்றாம் நாளே ,
அவரது ஆன்மாவும் இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற சென்றுவிட்டது.

ருத்ர நாராயணன் என்ற அந்த மாமனிதரின் இறப்பு, அவரது உற்றார் உறவினரை தாண்டி ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது.

ஒரு மனிதரின் இறப்புக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைக் காட்டிலும், எத்தனை பேர் ஆத்மார்த்தமாக அழுகிறார்கள் என்பதே
அந்த மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சி.

மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் தொடர் இறப்பு அனைவரையும் பாதித்திருந்தாலும், வெங்கடேஷை வெகுவாக நிலைகுலையச்
செய்திருந்தது .

மாமனார் என்ற உறவைத் தாண்டி ஒரு மாமனிதனின் இழப்பை அவரால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

தன்னுடைய இந்த உலக உறவானது கூடிய விரைவில் முடியப்போகிறது ,என்பதை உணர்ந்துதான் ருத்ர நாராயணன் அனைவரையும் ஒன்று சேர்த்து தன் பேரன் பேத்தியின்
நிச்சயதார்த்தத்தையும் முடித்தார் போலும்.

புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கடவுள் முன்கூட்டியே உணர்த்திடும் சூட்சமம் தான் அது.

ருத்ர நாராயணன் இறந்த இரண்டாவது நாள், அவர் எழுதிய உயில் மற்றும் சிறு கடிதமும் படிக்கப்பட்டது.

சொத்து விவரங்களை ஏற்கனவே அவர் கூறியது போல் பிரித்து எழுதப்பட்டிருக்க,
மரகதத்தின் நகைகள் மட்டும், பொதுவே விட்டுச் சென்றிருந்தார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில்,

எங்களது காலத்திற்குப் பிறகு என் அக்கா ஆனந்தவல்லி உயிருடன் இருக்கும் வரை, இந்த வீட்டை யாரும் விற்கக் கூடாது.

ஆனந்தவல்லியின் மாதாந்திர செலவிற்காக வங்கியில் 10 லட்சம் இருக்கிறது.
அதில் கிடைக்கும் வட்டியை மாதாமாதம் அவர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

மேற்கொண்டு தேவைப்பட்டால், ஆனந்தவல்லியின் மருத்துவச் செலவிற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பணத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

ஆனந்தவல்லியின் காலத்திற்குப் பிறகு வங்கியில் உள்ள பணத்தை பிரித்து எடுத்துக் கொள்ளவும்
என்ற அறிவிப்பைக் கேட்டு ஆனந்தவல்லி ஆடிப்போனார்.

தன் தம்பி அவனது இறப்பிற்குப் பின்பு கூட, தான் யாரிடமும் எதற்காகவும் கையேந்த கூடாது என்ற ஏற்பாட்டினை செய்துவிட்டு சென்றதை எண்ணி மனம் நெகிழ்ந்தவர், முதன்முறையாக தான் தன் தம்பி குடும்பத்திற்கு இழைத்த அனைத்து அநீதிகளையும் நினைத்துப்பார்த்து கூனி குறுகிப் போனார்.

ஆனந்தவல்லி தன் வாழ்நாளில் எதற்காகவும் அழுததில்லை .
மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் இறப்பிற்கு கூட சிறு துளி கண்ணீர் வடிக்கவில்லை.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற குறலுக்கு ஏற்ப நன்னயம் செய்து விட்டுச் சென்ற தன் தம்பியை நினைத்து, முதன்முறையாக அவரது கண்கள் கண்ணீர் வடிக்கத் தொடங்கின.

பிறகு மரகதத்தின் நகைகளை பற்றி குறிப்பிடும் போது,

வேதாவின் திருமணத்திற்கென்று இது நாள் வரை, நான் எந்த நகையையும் கொடுத்ததில்லை.

என்னுடைய இரண்டு குழந்தைகளைப் பற்றியும் நான் நன்கு அறிவேன் என்று சூசகமாக முடித்திருந்தார்.

உடனே ரங்கநாதன் வெங்கடேஷை பார்த்து

" நேக்கு என் அம்மாவோட எல்லா நகையும் வேணும்.... உங்களுக்கு அந்த நகைக்கு ஈடா மூணு பங்கு பணத்தை கொடுத்துடறேன் ..."

" எனக்கு எந்தப் பணமும் வேண்டாம் நகையும் வேண்டாம்... " என்று உறுதியாக மறுத்துவிட்டார் வெங்கடேஷ்.

உறவினர்கள் அனைவரும் சென்று விட்ட நிலையில் பதினாறாவது நாள் காரியத்திற்காக ரங்கநாதன் மற்றும் வெங்கடேஷ் குடும்பம் காத்திருக்க ,

ரங்கநாதன் தன் ஆட்டத்தின் முதல் அடியை ஆரம்பிக்கும் விதமாக, அனைவரின் முன்பாக
ஆனந்தவல்லியை பார்த்து

" விருதுநகர் போறோம் ... 16ஆம் நாள் காரியத்துக்கு நானும் சுமித்ராவும் வந்துடுவோம் ... " என்றவர் ஒரு கணம் நிறுத்தி,

" என் பசங்க எல்லாரும் நாளன்னிக்கு துபாய் கிளம்பறா.... பிசினஸை இவ்வளவு நாள் பார்க்காம இருக்க முடியாது ... இன்னும் 10 நிமிஷத்துல கிளம்பிடுவோம்... போகும் போது போயிட்டு வரேன்னு சொல்லக்கூடாது அதனாலதான் ..." என பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டு, சென்றவரை ஸ்ரீயை தவிர அனைவரும் பின் தொடர, ஸ்ரீ அசையாமல் கண்களில் கண்ணீரோடு விஷ்ணுவையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

தாய் தந்தையரின் தொடர் இறப்பு வேதாவை வெகுவாக பாதித்திருக்க அழுதழுது களைத்துப் போயிருந்த வரை மடி தாங்கி இருந்தவனின் பார்வை ஸ்ரீயை நோக்க
இருவராலும் பேசிக்கொள்ள முடியவில்லை, இருவருக்கும் பேசவும் தோன்றவில்லை.

இதனைக் கண்டும் காணாமல் வெங்கடேஷ் அந்த இடத்தை விட்டு நகர,
அதற்கு மேல் ரங்கநாதனின் குடும்பம் காரில் புறப்பட்டு போன சத்தம் மட்டும் அவருக்கு கேட்டது.

மறுநாள் சுமித்ராவிடமிருந்து அழைப்பு வர, விஷ்ணு மற்றும் வேதாவிடம் பேசியவர்

" அவர் என்ன பிளான் பண்ணி இருக்கேர்னு நேக்கு தெரியல... ஆனா அவருக்கு நடந்த நிச்சயதார்த்ததுல துளிக்கூட இஷ்டம் இல்ல ... இப்ப அப்பாவும் அம்மாவும் வேற உயிரோட இல்ல... அதனால என்ன முடிவு எடுப்பேர்னு நேக்கு தெரியல... நாளைக்கு ஸ்ரீ ஸ்ரீராமோட துபாய் போறா.... நேக்கு பயமா இருக்கு... " என மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தார்.

உடனே விஷ்ணு,

" அப்பா, நான் இப்பவே போய் ஸ்ரீயை கூட்டிகிட்டு வரேன் ..."

" எங்க ... இங்கயா.. மும்பைக்கா..." என கோபத்தை அடக்கிக் கொண்டு வெங்கடேஷ் கேள்வி எழுப்ப,

" ஏன் ஜம்முக்கே என் கூட கூட்டிட்டு போறேன் ..." என அவன் சகஜமாக பதிலளிக்க

" ஓங்கி அடிச்சேன்னா பாரு....
முட்டாளா டா நீ .... உன் தாத்தாக்கு தெரியாத சட்டமா ...இல்ல எனக்கு தெரியாத சட்டமா .... 16 வயசு மைனர் பொண்ணை கடத்திட்டுப் போயிட்டான்னு ஈஸியா உன்னை உள்ள தூக்கி வச்சிடுவான் ரங்கநாதன்....

இப்பதான் நீ ட்ரெயினிங் முடிச்சு வேலைல சேர்ந்திருக்க... எனக்கு உன் கல்யாணம், கெரியர் ரெண்டும் முக்கியம்....அதைவிட உன் லைஃப் எனக்கு முக்கியம் டா...

ஸ்ரீயோட வயசு நமக்கு அட்வான்டேஜ் ...ரங்கநாதனால் இப்ப ஸ்ரீக்கு கல்யாணம் பண்ண முடியாது ..." என்றவர் விஷ்ணுவை உற்றுநோக்கி

"தெரியாமதான் கேக்கறேன்... 16 வயசு பொண்ணை கூட்டிட்டு போய் என்ன பண்றதா உத்தேசம்..." என்ற கேள்வியில் விஷ்ணுவின் முகம் அவமானத்தால் சிவக்க,

" உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சின்னா சொல்லு ... இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ... ஆனா ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கனும்னு நீ ஆசைப்பட்டா அவளுக்காக அஞ்சு வருஷம் காத்துகிட்டு இருந்துதான் ஆகணும் ... அதை விட்டுட்டு பொண்ண கூட்டிட்டு ஓடறேன்னு சொல்ற... வெக்கமா இல்ல ... பொண்ணை பெத்தவன் கிட்ட தைரியமா போய் நின்னு பொண்ணு கேட்டு கல்யாணம் பண்றதுல தான் டா ஆண்மையே இருக்கு "
என்ற வெங்கடேஷின் திடமான பேச்சில் விஷ்ணுவின் தலை தன்னிச்சையாக குனிய,

" ஏன்னா இப்படி எல்லாம் பேசறீங்கோ.."
என்று வேதா வருந்த,

" நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு புரிஞ்சுக்கணும் ... ரங்கநாதன் பூனை இல்ல யானை... தலை மேல ஏறி உட்கார்ந்து தான் அவனை அடக்கணும்... ஸ்ரீ தான் என் வீட்டு மருமக அதுல எந்தவித மாற்றமும் இல்லை...ஆனா அதுக்கு நாம கொஞ்ச காலம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் ... இவன் அஞ்சு வருஷம்
ஸ்ரீகாக வெயிட் பண்றதா வாக்கு கொடுக்கட்டும் ... அப்புறம் இவன் காதலுக்காக நான் களத்துல இறங்கறேன்... அதுவரைக்கும் ஸ்ரீயோட இவனுக்கு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது..."
என உறுதியாக வெங்கடேஷ் பேசி முடித்ததும், விஷ்ணு வெடுக்கென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.

" நீங்க விஷ்ணுண்ட, ரொம்ப அதிகமா பேசிடீங்கோ..."

" எனக்கும் அவன் மனசு புரியுது ம்மா ... அவன் ஸ்ரீயை ஆழமா நேசிக்கிறான்..
நான் அமைதியா அட்வைஸ் பண்ணி இருந்தா அவன் நிச்சயமா என் பேச்சை கேட்டிருக்க மாட்டான் ... அதனாலதான் அவன் ஈகோவை ஹர்ட் பண்ற மாதிரி பேசினேன் ... இன்னும் கொஞ்ச நாள்ல அவனே எல்லாத்தையும் புரிஞ்சிப்பான்... அது மட்டுமில்ல உங்க அப்பா சாதாரண ஆள் இல்ல .... இந்த மனுஷ பிறவியிலயே பல சாதனைகள் செய்தவர் ... இப்ப தெய்வம் ஆயிட்டாரு ... அவர் கொடுத்த வாக்கை எப்பவும் காப்பாத்தறவரு... இதையும் காப்பாத்துவாரு.... கவலைப்படாத " என பொறுமையாக விளக்கினார் வெங்கடேஷ்.

கடைசி நாள் காரியம் முடிந்ததும்,
"கிளம்பறேன்..." என பொதுவாக அனைவரையும் பார்த்து சொன்ன ரங்கநாதன் வெங்கடேஷிடம்

" என் அப்பாகாக தான் இந்த நிச்சயதார்த்தத்துக்கு நான் ஒத்துண்டேன்... இப்ப அவரே போயிட்டேர்... இனிமே இந்த சம்பந்தம் தொடர்றதுல நேக்கு விருப்பமில்ல... "
என குரலை உயர்த்தாமல் , ஒருவித கர்வத்தோடு கூறி முடிக்க,

" அவசரப்படாதே...கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு ... இது என் மாமனார் முடிவு பண்ணிட்டு போனது, நீயோ நானோ நினைச்சா மாத்த முடியாது ..." என திடத்தோடு உறுதியாக வெங்கடேஷ் கூறி முடிக்க,

அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஆனந்தவல்லியை திரும்பிக்கூடப் பார்க்காமல் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரங்கநாதன்.

ஆனந்தவல்லிக்கு முதன்முறையாக அனாதையான உணர்வு தலை தூக்க,
அவர் உணர்வுகளைப் புரிந்து கொண்ட வெங்கடேஷ்,


" நீங்க இந்த வீட்ல தனியா இருக்க வேணாம்... எங்க கூட வந்துடுங்க... என் மனைவி சமையலை நீங்க சாப்பிட வேண்டிய அவசியம் இல்ல ... நான் உங்களுக்காக சமைக்க ஆள் போடறேன் .." என்றவரின் கனிவான பேச்சில் ஆனந்தவல்லியின் கண்கள் கலங்க,
நேக்கு மாப்பிள்ளையா வர இதை விட என்ன தகுதி வேணும் ...என்ற ருத்ர நாராயணனின் வரிகள் அவரது காதுகளில் ஓங்கி ஒலிக்க,

" வேணாம் மாப்பிள ... நான் என்
புக்காத்துல இருந்ததைவிட, இந்த ஆத்துல தான் அதிக நாள் இருந்திருக்கிறேன்... என் சரீரம் இந்த ஆத்தோடயே அடங்கட்டும்... " என்றவருக்கு மரகதம் மற்றும் ருத்ர நாராயணனின் நினைவுகள் வந்து வாட்ட, இருபது நாட்களுக்கு முன்பு கூட தான் என்ற மமதையில் இறுமாந்து இருந்ததை எண்ணிப் வெட்கி போனார்.

மனித வாழ்வு எவ்வளவு சிறியது.
20 நாட்களுக்கு முன் இருந்தவர்கள் இப்போது இல்லை, என்றெல்லாம் நினைத்து வருந்தி கொண்டிருந்தவரிடம்

" லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போறேன் ... டெய்லி ரெண்டு வேளை வந்து உங்களுக்கு ஏதாவது தேவையான்னு கேட்டுட்டு போவாங்க ...

உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா அவங்ககிட்ட கேளுங்க நிச்சயமா செய்வாங்க ...
எங்க எல்லாரோட போன் நம்பர் இதுல இருக்கு ... எப்ப வேணாலும் பேசலாம் ..." என்றார் வெங்கடேஷ்.

அக்ரஹாரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இரண்டு மூன்று குடும்பங்கள் மட்டுமே தனித்திருந்த நிலையில், வேறு வழியில்லாமல் ஆனந்தவல்லியின் பாதுகாப்பிற்காக மேற்கூறிய ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தார் வெங்கடேஷ்.

ருத்ர நாராயணன், மரகதம் இறந்து ஒரு வருடம் கூட சரியாக முடியாத நிலையில், ஆனந்தவல்லியின் குற்ற உணர்வு அவரை மரண படுக்கைக்கே அழைத்து சென்றுவிட்டது.

ருத்ர நாராயணனும் மரகதமும் இருந்தவரையில் ஆனந்தவல்லிகென்று
பிரத்தியேகமான கவலையோ கஷ்டமோ இருந்ததில்லை ... மிகுந்த நிம்மதியோடும் பாதுகாப்போடும் சகல சந்தோஷங்களுடன் சௌக்கியமாக தான் இருந்தார்.

அவர்கள் மறைந்த முதல் மாதத்திலேயே ஒருவித வெறுமை உணர்வு தோன்ற, மாதங்கள் செல்லச் செல்ல.. அவர் மற்றவர்களுக்கு செய்த அட்டூழியமும் அராஜகமும் மனக்கண் முன் வந்து போய் குற்ற உணர்வை அதிகரிக்க செய்ய ...
ஒரு கட்டத்தில் தன்னால்தான் இரு உயிர்கள் போய்விட்டது ... தான் ஒரு கொலைகாரி .... என்ற எண்ணம் நித்தம் நித்தம் அவரை பாடாய்ப்படுத்தி கடைசியில் ஒருவழியாக மரண படுக்கையில் விழ வைத்தது .

ஒரு மனிதன் தன்னை உணர வேண்டுமானால் அதற்கு தனிமை வேண்டும். அது இப்போது தான் அவருக்கு கிடைத்திருந்தது.

அவரது உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கிட்டியதும் வேதாவும் வெங்கடேஷூம் துரிதமாக கிளம்பி வர,

" உங்க ரெண்டு பேரிண்டையும் மன்னிப்புக் கேட்காம, எங்க அனாதை பொணமா போயிடுவேனோன்னு நினைச்சிண்டு இருந்தேன்...
நல்ல வேளை , பகவான் நேக்கு கருணை காட்டிட்டேர்...
நேக்கு ஒரு மகன் இருந்திருந்தா, நிச்சயமா வேதாவை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை பட்டிருப்பேன் ...

நீங்க நான் பெறாத மகன் ... வேதா தான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் மாப்பிள்ள..

என்னை சுத்தி எல்லாரும் நல்லவளா தான் இருந்திருக்கா ,நேக்கு நல்ல வாழ்க்கை அமையாம போனதால , எல்லாரையும் பார்த்து பொறாமைப்பட்டு , எல்லா பாவத்தையும் சேர்த்துண்டுட்டேன்...

கீதையில பகவான் சொல்றேர்

கெட்டவனுக்கு கூட கெட்டது செய் , ஒரு விதத்துல அது தப்பில்ல... ஆனா நல்லவனுக்கு மட்டும் கெட்டத செய்யாத... அது பஞ்ச மகா பாவம்னு...

என் தம்பி, மரகதம், வேதா, விஷ்ணு, நீங்க, யாரும் நேக்கு கெட்டதே நினைச்சதில்ல ... ஆனா நான் உங்க எல்லாருக்கும் கெட்டதை தவிர வேற எதுவுமே நினைச்சதில்ல ...

இதே மாதிரி தான் போன பிறவியிலும் பாவம் செய்திருப்பேன் போலிருக்கு அதனாலதான், இந்த பிறவியில என் வாழ்க்கை நன்னாவே அமையாம போயிடுத்து ...
மறுபடியும் உங்க எல்லாருக்கும் கெட்டது பண்ணி மேலும் பாவ சூழல்ல மாட்டிண்டுட்டேன்... பேசாம வயசான காலத்துல ராமா கோவிந்தான்னு காசி ராமேஸ்வரம் போயி பெருமாள சேவிச்சுண்டு காலத்தை ஓட்டி இருந்திருக்கணும் ... பாவம் பண்ணும் போது பெருமாளோட நினைவு வராதுன்னு சொல்லுவா ... என் விஷயத்துல அது சரியா போயிடுத்து...

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், நீங்க யார் என்னை மன்னிச்சாலும் பகவான் மன்னிக்க மாட்டேர்... செய்யற பாவத்துக்கெல்லாம் மன்னிப்பு கிடைச்சுடுதுன்னா தப்பு பண்றவாளுக்கு தைரியம் வந்துடும் ...
அதனாலதான் பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது பிராயச்சித்தம் உண்டுன்னு நம்ப வேதம் சொல்றது... ஆனா நான் பண்ணின பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்ற அளவுக்கு பகவான் நேக்கு கால அவகாசம் கொடுக்கல .. ஒண்ணு மட்டும் நன்னா தெரியற்து...

நான் செய்ததுக்கெல்லாம் தண்டனை நேக்கு அதிகமா காத்துண்டு இருக்குன்னு...
நீங்க ரொம்ப நல்லவர் ... நீங்க வாழ்க்கையில எல்லா சந்தோஷத்தோட ரொம்ப நன்னா இருக்கணும் .... " என்றவரின் மனக்கண்ணில்

" அந்த வாசுதேவரோட பையன் கூட அவ சுத்தாத இடமே இல்ல ... அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரே அடம் வேற ... ஏதோ அவா ரெண்டு பேருக்குள்ள தப்பு நடந்திருக்கும் போலிருக்கு...
அதனாலதான் என் தம்பி வேற வழி இல்லாம அவ பண்ற அழிச்சாட்டியத்தால , வாசுதேவரோட மகனுக்கே கல்யாணம் பண்றதா இருக்கான் ..." என சுசீலா மாமியிடம் தூற்றிய காட்சியும்,

" ஒரு வேளை குழந்தையை கலைச்சிட்டாளோ என்னமோ ...." என ரங்கநாதனிடம் பேசிய காட்சியும் வந்து போக, துயரத்தின் எல்லைக்கே சென்று கண்கலங்கியவரின் பார்வையில் மங்கலாகத் தெரிந்த வேதா வெங்கடேஷை பார்த்து

" நான் எவ்ளோவோ உங்க ரெண்டு பேருக்கு கெடுதல் பண்ணியிருக்கேன் அதெல்லாம் தெரிஞ்சும் கூட, என்ணின்ட நீங்க ரெண்டு பேரும் தன்மையா நடந்துகிறேளே.... உண்மையிலேயே உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பெருந்தன்மை அதிகம்... என் தம்பி அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துக்க மாட்டான் .. அவன் ஒரு விஷயத்தை ஒத்துண்டா அது 100% சரியா இருக்கும் ... உங்களை எதுக்காக அவனுக்கு பிடிச்சிருந்ததுன்னு இப்பதான் நேக்கு தெரியற்து ..." என்றவர் வாசுதேவர் மற்றும் ராவுத்தரை பார்த்து

" நீங்க ரெண்டு பேரும் ருத்ரா மேல வச்சிருந்த சினேகித பாசத்தை கூட
ஒரு சகோதரியா நான் அவன் மேல வெக்கல ... தேவர்க்கு வேதா மாட்டு பொண்ணு , அதனால அவளை பாதுகாக்கணும்னு நெனச்சேர்...
ஆனா உங்களுக்கு வேதா சினேகிதனோட மகள் அவ்ளோ தான்...
ஆனா அவளை பாதுகாக்க அவளோட ஒவ்வொரு பரிட்சைக்கும் உங்க மகனை துணைக்கு அனுப்பினேளே... உங்களை எல்லாம் பார்த்தா நேக்கு வெட்கமா இருக்கு ... ரொம்ப அவமானமா உணரறேன்..." என ராவுத்தரை பார்த்து பேசி முடித்தவர்

" எல்லாரும் என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கோ... " என்று கதறி அழுதவரின் காலம் ஓரிரு நாட்களில் முடிய,

வெங்கடேஷ் மகன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தை சடங்கையும் செய்து முடிக்க, கடைசிவரை ரங்கநாதன் மட்டும் வரவேயில்லை .

அதன் பின் வாசு தேவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து காலமாக , பிறகு ஓராண்டு கழித்து ராவுத்தரையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டார்.

ருத்ர நாராயணனின் வீடு, வாசுதேவரின் தோப்பு வீடு, விவசாய நிலங்கள் ஆகியவை வெங்கடேஷின் தூரத்து உறவினர் சுப்பிரமணியம் மற்றும் ருத்ர நாராயணனின் கார் டிரைவர் ரவியால் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்து, வாழ்ந்து , மறைந்த ருத்ர நாராயணன் , வாசுதேவர், ராவுத்தரை பற்றி கதை கதையாக அந்த ஊர் மக்கள் கூறுவதுண்டு.

நீண்ட பாரம்பரியத்தோடும், பல தலைமுறைகளின் நினைவுகளோடும்
ருத்ர நாராயணன் என்ற சரித்திரம் வாழ்ந்த அந்த வீடு, காலங்களைக் கடந்தும்
இன்றும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது .தகிப்பாள்
 
அத்தியாயம் 12


மும்பையில் ஒரு வார கால பணி முடிந்து கொடைக்கானல் வந்த அர்ஜுனின் மனதில்


'மலைகளின் இளவரசி கொடைக்கானல் உங்களை இனிதே வரவேற்கிறது'


என்ற பதாகையை பார்த்ததும்


இதைப் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல ஆச்சு இல்ல - என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் போதே,


" ராஜா தம்பி, ஊருக்கு வந்து நாலு வருஷத்துக்கு மேல ஆகுது ... முன்னெல்லாம் வருஷத்துக்கு ஒரு தடவையாவது வருவீங்க ..." என்றார் பன்னீர்செல்வம்.


அர்ஜுனின் இல்லத்தில், இல்லை இல்லை அரண்மனையில்
பல வருடங்களாக ஓட்டுனராக பணி புரிந்து கொண்டிருப்பவர்.


70 வயதைக் கடந்தவர், பத்து மகிழுந்து ஓட்டுனர்கள் இருந்தாலும், அர்ஜுன் கொடைக்கானல் வரும் போதெல்லாம், இவர் தான் வண்டி ஓட்டுவது வழக்கம்.


அவர் சூசகமாக எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாமல், பார்வையை வெளியே பசுமை படர்ந்த மலைகளின் மீது செலுத்தியபடி அர்ஜுன் இருக்க , கார் எஸ்டேட்டுக்குள் பயணித்து , அதன் நடுவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்த அரண்மனையின் முன் நின்றது.


சீருடை அணிந்த வேலையாள் அர்ஜுனுக்கு சல்யூட் அடித்துவிட்டு அவனது பெட்டி , பைகளை காரிலிருந்து எடுத்துக் செல்ல,


அந்த அரண்மனையை பராமரித்துக் கொள்ளும் கவர்னர் லட்சுமி அம்மாளின் அறிவுறுத்தலின் படி வழக்கம் போல் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டான் அர்ஜுன் .


ராஜ பரம்பரை அல்லவா ... சிறு வயதிலிருந்தே இம்மாதிரியான பழக்க வழக்கங்களை பார்த்து, பழகி ஊறி, வெறுத்தே விட்டது அவனுக்கு .


அவனது தந்தையின் செயலாளர்
ராஜவர்மன் , அவன் தந்தையை விட ஐந்து வயது இளையவர், அவனை மரியாதையோடு அணுகி


" ராஜா தம்பி, உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு ... எப்படி இருக்கீங்க ..."


" ம்ம், நல்லா இருக்கேன்...." என்றான் அழுத்தமாக.


" ராஜா தம்பி, அப்பா ஆடிட்டரோட பேசிகிட்டு இருக்காரு... உங்களுக்கு 10:30 மணிக்கு டைம் ஒதுக்கியிருக்காரு அதுக்குள்ள நீங்க ப்ரெஷ் ஆயிட்டு வந்துடுங்க..."


இதான் இந்த அரண்மனையின் நடைமுறை.


அவன் தந்தை மற்றும் தாய்க்கு தனித்தனி செயலாளர்கள், அரண்மனையின் வேலைக்காரர்களை நிர்வகிக்க கவர்னர், சிறுவயதிலிருந்து அவனை பராமரித்து வளர்க்க செவிலித்தாய்.


பெற்ற தாய் தந்தையை பார்ப்பதற்கு கூட கால நேரம் , முன்கூட்டியே ஒதுக்கப்பட வேண்டும்.


அவன் தாய் தந்தை, சிறுவயதிலிருந்து அவனுடன் நேரம் செலவழித்ததை காட்டிலும், வியாபாரம், சங்கம் , பார்ட்டி என நேரம் செலவழித்தது தான் அதிகம்.


இது நாள் வரையில் அவனைக் காட்டிலும், அவன் தந்தையுடன் அதிக நேரம் செலவழித்தவர் , அவன் தந்தையின் செயலாளர் ராஜவர்மன் தான். இது அவன் தாய்க்கும் பொருந்தும், அவரும்
தன் செயலாளர் சொர்ணவதியுடன் தான் உலா வருவார்.


அர்ஜுனின் அறை


ஸ்விஸ் பளிங்குத் தரை, திரும்பிய இடமெல்லாம் பெல்ஜியம் கண்ணாடிகள்... ஆங்காங்கே சிறிய பெரிய சாண்ட்லியர், விலை உயர்ந்த பூ ஜாடிகள், பிக்காசோ ஓவியங்கள், கிரேக்க மன்னனின் வெண்கல சிலை, ஆங்காங்கே வெவ்வேறு நாட்டு சிற்பக்கலை, நான்கு பேர் ஒரே நேரத்தில் தாராளமாக படுத்துப் புரள இலவம் பஞ்சு மெத்தை என திரும்பிய இடமெல்லாம் பணத்தின் செழுமை கொட்டிக்கிடந்தது .


என்ன ஒன்று எதுவுமே அவனது ரசனையோடு இது நாள்வரை பொருந்தியதில்லை.


அவனுக்கு அம்மாதிரியான அலங்கார பொருட்கள் பிடிக்குமா பிடிக்காதா தேவையா, தேவையில்லையா போன்ற கேள்விகளெல்லாம் எழுந்ததே இல்லை.


அலுவலகத்தில் எப்படி ஒரு பதவிக்கென்று சில சலுகைகள் வழங்கப்படுகிறதோ, அதே போல்
இவனது இளவரசன் பட்டத்திற்காக வழங்கப்பட்டவைகளே இவைகள்.


அந்த அறையிலும் அவனுக்கு பிடித்தமான ஒன்றே ஒன்று இருந்தது.
அதுதான் அவனை பேணி வளர்த்த செவிலித்தாய் அன்னபூரணி அம்மாளின் புகைப்படம்.


சுவரில் மாட்டியிருந்த , தெய்வீக கலையோடு காட்சியளிக்கும் அவரது ஆளுயர புகைப்படமே அவனுக்கு பல நேரங்களில் ஆறுதல்.


அவன் கைக்குழந்தையாக இருந்ததிலிருந்து கையிலேயே வைத்து வளர்த்தவர் அல்லவா, அவனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எதை விரும்புவான், எதை வெறுப்பான்,
என அனைத்தும் அன்னபூரணிக்கு அத்துபடி.


அவன் தன் தாய் தந்தையுடன் செலவழிப்பதே சொற்ப நேரம் தான் , அந்த நேரத்தில் கூட அவன் தாய் தந்தையுடன் எவ்வாறு பேசி பழக வேண்டும் என்று முன்கூட்டியே அவனுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருந்தது, கிட்டத்தட்ட அலுவலகத்தில் படிநிலை ஊழியர்கள் தலைமையிடம் நடந்துகொள்ளும் முறையை
பயிற்றுவிப்பது போல்.


அவன் இயல்பாக சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே இடம் அன்னபூரணி அம்மாள் தான்.


அவரின் மறைவிற்குப் பின்னர், இந்த ஊரில் இருக்க பிடிக்காமல் வெளி மாநிலங்களில் படிப்பை தொடர்ந்தவன் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் இங்கு வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான்.


அன்னபூரணி அம்மாள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் அவன் குடிக்கு அடிமையாகி தறுதலையாக சுற்றித்திரிந்திருப்பான்.


மகிழ்ச்சி விலையில் இல்லை, அதன் தன்மையில் இருக்கிறது, பணத்தால் கிடைப்பது எதுவும் நிலைக்காது குணத்தால் கிடைப்பதே நிலைக்கும் என
சிறுவயதிலிருந்தே நேர்மையை போதித்து அவனை மிக ஒழுக்கமாக வளர்த்தார்.
அதனால் தான் என்னவோ குடித்துக் கூத்தடிக்கும் மற்ற எஸ்டேட் முதலாளிகளின் மகன்களோடு
அர்ஜுன் தோழமை பாராட்டியதே இல்லை.


அவன் தன் 24 ஆவது வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர்ந்து, பணியில் அமர்ந்த பின்னரும், வருடத்திற்கு ஒருமுறை என்ற நிலையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான், கடந்த நான்கு ஆண்டுகளாக தான் இங்கு அவன் வருவதே இல்லை.


இவ்வளவு பணம், வளம் இருந்தும் அவன் வாழ்க்கையில் என்றுமே ஒரு வெறுமைதான். அவன் விரும்பிய எதுவும் அவனுக்கு கிட்டியதில்லை. அப்படியே கிட்டினால் அது நிலைத்ததில்லை, இது அவன் வாழ்வின் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தும், ஒன்றே ஒன்றை தவிர, அது அவனுடைய பதவி.


அவன் வாழ்நாளில் அவன் ஆசைப்பட்டு கிடைத்த ஒன்று என்றால் அது அவனுடைய பதவிதான்,
இன்று வரை அது தான் அவனை உயிர்ப்போடு நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.


குளித்து முடித்து தயாராகி காலை உணவு உண்டு கொண்டிருந்தவனிடம்


" ராஜா தம்பி, நீங்க சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் அப்பாவை போய் பார்க்கலாம் .." - ராஜவர்மன்.


அவன் உண்டு முடித்ததும்,அந்த மாளிகையின் மூன்றாவது தளத்தில் இருந்த அவன் தந்தையின் அறைக்குச் சென்றான்.


" வாப்பா ராஜா, எப்படி இருக்க... பார்த்து ரொம்ப நாளாச்சு ..." என்ற அவனது தந்தை ரகு கிருஷ்ணாவின் குரல் மெலிந்து தளர்ந்திருந்தது.


ஒரு காலத்தில் இவர் குரலிலும், கர்வமும் கம்பீரமும் தாண்டவமாடும் ..
காலத்தின் கோலம், இப்போது சற்று தளர்ந்துள்ளது அவ்வளவே.


'கிருஷ்ணா' என்பது இவர்களது குடும்ப பெயர்,
ராஜா அர்ஜுன் கிருஷ்ணாவின் தந்தை ராஜா ரகு கிருஷ்ணா அவரது தந்தை ராஜா கோபால கிருஷ்ணா என பட்டியல் நீளும் ...


கடந்த ஐந்து தலைமுறைகளாக ஒரு ஆண் வாரிசு மட்டும் தான்.


ரகு கிருஷ்ணாவின் ஒரே தங்கை கோகிலாவின் மகள் தான் அக்னி.


அர்ஜுனின் தாய் ராணி மங்களேஸ்வரி நாச்சியார், கிட்டத்தட்ட நான்கைந்து பரம்பரைக்கு பின்பு பிறந்த ஒரே ஒரு பெண் வாரிசு. அவருக்கு மதன் என்ற ஒரு தம்பி.


அர்ஜுனின் தாய் தந்தையர் இருவரும் ராஜா வம்சம் என்றாலும், ரகு கிருஷ்ணாவின் குடும்பம், பொருளாதார நிலையில் பல படிகள் பின் தங்கியிருக்க, அதையே காரணமாக வைத்து அவரை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக்கொண்டார் மங்களேஸ்வரி நாச்சியாரின் தந்தை .


மங்களேஸ்வரி நாச்சியாருக்கு , கோகிலாவை தன் தம்பி மதனுக்கு மணம் முடிக்க ஆசை.
ஆனால் மதன் குடிகாரன், செலவாளி பெண் பித்தன். எனவே கோகிலா அவனை மணக்க விரும்பாமல், மங்களேஸ்வரி நாச்சியாரை எதிர்த்துக் கொண்டு பட்டாளத்தில் பணிபுரியும் தன் அத்தை மகன் விஸ்வநாதனை, மணம் முடித்து ஹிமாச்சல பிரதேசம் சென்று விட்டார்.


ரகு கிருஷ்ணாவிற்கு தங்கை கோகிலா மேல் மிகுந்த பாசம் உண்டு. அக்னி பிறந்ததற்கு பிறகு, பிரிந்து சென்ற உறவு மீண்டும் தொடர ஆரம்பித்தது.
ரகுவிற்கு மதனை பற்றி நன்கு தெரியும் என்பதால் கோகிலா, தங்கள் அத்தை மகன் விஸ்வநாதனை மணந்து கொண்டதில் அவருக்கும் விருப்பமே.


மங்களேஸ்வரியின் வாழ்க்கையில் ரகு வந்த பிறகு தான், அவரது சொத்துக்கள் மேன்மேலும் பல்கிப் பெருகின.
கல்யாணமான புதிதில் மங்களேஸ்வரி அவரை மதிக்கவே இல்லை. ஆனால் ரகுவின் புத்திசாலித்தனம் மற்றும் உழைப்பால் அவர் தொழில் துறையில் வெற்றிக்கொடி நாட்டி காட்ட, அதன் பின்னரே பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார் மங்களேஸ்வரி.
இயல்பிலேயே அவர் ஊதாரி, ஊரை சுற்றுபவர் , வன்மம் நிறைந்தவர், தன் எதிரிகளை வாழ விடாதவர் , வரட்டு கவுரவம் பார்ப்பவர் போன்ற குணநலன்களால் அப்பகுதியில் அவர் மிகவும் பிரசித்தம்.


அக்குணங்கள் அவ்வப்போது தலை தூக்குவதும் உண்டு. ரகு கிருஷ்ணாவின் ஆளுமைக்கு கீழ் அனைத்தும் வந்ததிலிருந்து சற்றே சற்று அடக்கி வாசிக்கிறார் அவ்வளவே.


வருடாவருடம் விடுமுறைக்கு ரகுவின் தங்கை கோகிலா தன் மகள் அக்னியுடன் வரும் போதெல்லாம் ,
மங்களேஸ்வரி ஊரில் இருக்கமாட்டார் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியூருக்கு சென்று விடுவார்.
அவர் இல்லாமல் இருப்பதும் ஒருவகையில் நன்மையே என்பதால் ரகுவும் அவரைக் கண்டு கொள்ளமாட்டார்.


கடந்த நான்காண்டுகளாக குடும்பத்தில் எதுவுமே சரியில்லை, ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்து பேசுவதில்லை.
இந்த முறையும் மங்களேஸ்வரி அர்ஜுன் மற்றும் அக்னியின் வரவை அறிந்து தான் வெளி ஊருக்கு சென்றுவிட்டார்.


என்ன ஒன்று, முன்பெல்லாம் காரணம் வேறாக இருக்கும், கடந்த 4 ஆண்டுகளாக அவர் அர்ஜுனை தவிர்ப்பதற்கு அவனின்
கொலை வெறியும் கோபமும் தான் முக்கிய காரணம்.
மீண்டும் அவரை அர்ஜுன் பார்க்க நேர்ந்தால் அவருக்கு சாவு நிச்சயம் என்பதை உணர்ந்து தான், இம்முறை தலை மறைந்திருக்கிறார்.


" ராஜா, அக்னி அஷ்வதோட எஸ்டேட்டை சுத்தி பார்க்க போய் இருக்கா... இன்னைக்கு சாயங்காலம் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னா ...
அவ என்ன பேச போறான்னு எனக்கு தெரியாது .... ஆனா எதுவாயிருந்தாலும் கல்யாணத்தை மட்டும் நிறுத்திடாதப்பா... நம்ம பரம்பரையில அஞ்சு தலைமுறையா ஒரு ஆண் வாரிசு தான் , இப்ப நீ கல்யாணம் பண்ணிக்கலன்னா உன்னோட இந்த வம்சமே முடிச்சு போயிடும்பா... நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும் ... சரியா.. " என்றவர் ஓரிரு நொடி தாமதித்து,


" உன் அம்மாக்கு கோகிலாவையும் பிடிக்காது.. அக்னியையும் பிடிக்காது... அவ கோகிலா சாவுக்கு கூட வரல... இப்ப அஷ்வத்தையும்
பிடிக்கப்போறதில்ல..." என்றவரின் பேச்சை இடைவெட்டி


" எத்தனை தடவை சொல்லிருக்கேன் அவளை பத்தி என்கிட்ட பேச கூடாதுன்னு ... அவ என் அம்மா இல்ல... ரெண்டு கொலை செஞ்ச கொலைகாரி.... என் அம்மா அன்னபூரணி அம்மா தான்... அவங்க இறந்துட்டாங்க ..." என்றவன் அதற்கு மேல் அங்கு தங்காமல் வெடுக்கென்று வெளியேறினான்.


அறைக்கு வந்த அர்ஜுனின் மனதில் தேவையில்லாத நினைவுகள் தோன்றி அலைக்கழிக்க, குற்றவுணர்வு தலைதூக்க, நான்கு ஆண்டுகளாக மரத்துப் போயிருந்த வடுக்கள் புத்தம் புது ரணங்களாக மாறி, அதிலிருந்து பச்சை ரத்தம் வழிய ஆரம்பித்தது.


அக்னிக்கும் அர்ஜுனுக்கும் ஐந்து வயது வித்தியாசம். சிறுவயது முதலே மிகுந்த சுறுசுறுப்போடும் அழகும் புத்திசாலித்தனமும் கலந்து பேசும் அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
பொதுவாக அதிகம் பேசுபவர்கள் பொய் பேசுவார்கள் என்பார்கள்.
ஆனால் அவனைப் பொறுத்தவரையில் அக்னி ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். அவள் அஸ்ட்ரானமியில் இருந்து அரசியல் வரையிலான உண்மையை பேசுபவள். அவனுக்கு
அவள் குணம் பிடிக்கும் , அவள் உழைப்பு பிடிக்கும், அவள் பேச்சு பிடிக்கும், அவள் நடத்தை பிடிக்கும், மொத்தத்தில் அவளையே பிடிக்கும்.


அவன் இந்த இல்லத்தில் அக்னியை கடைசியாக சந்தித்துப் பேசியது 8 ஆண்டுகளுக்கு முன்புதான் . அப்போது அவளுக்கு திருமணம் ஆகவில்லை.


இந்த எட்டு வருட காலங்களில்,
மூன்றாண்டுகளுக்கு முன் நாசிக்கில் அவளது கணவன் அஜய் இறந்த போது கிட்டத்தட்ட பத்து மாத குழந்தையான அஷ்வத்துடன் அவளை சந்தித்திருக்கிறான் என்றாலும் , அது வெறும் சந்திப்பாக இருந்ததே ஒழிய இருவரும் பேசிக் கொள்ளும் நிலை அமையவில்லை ... அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருந்தது.
இப்போது இருவரையும் காலம் ஒன்றாக சேர்த்து வைக்கப் போகிறதென்று நினைக்கும் போது அழுவதா சிரிப்பதா என தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் அர்ஜுன்.


இப்படியே சிந்தனையில் மூழ்கியிருந்தவனுக்கு இரவு உணவு அறைக்கே வர, இயந்திரத்தனமாய் உண்டு முடித்தவன், அவன் அறையின் பெரிய பால்கனியில் வேறெந்த செயற்கை வெளிச்சமும் இல்லாமல் வளர்பிறை நிலவொளியில்
தென்னை மர கீற்றுகள் அசைந்தாட, எப்பொழுதும் பொழியும் குளிர் அவன் உடலில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்த, ஏதோ சிந்தனையில் நடை பயின்று கொண்டிருந்தவன் காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்து ஒரு நொடி துடித்துப்போய்விட்டான்.


அவன் அக்னி தான் நின்று கொண்டிருந்தாள்.


உடல் மிகவும் மெலிந்து, பலகீனமாக வெளிறிய நிறத்தில் காட்சியளித்தாள்.
என்றுமே அவள் பூசிய உடல் வாகை கொண்டவள் இல்லை என்றாலும், தற்போதைய மெலிவு, அவள் ஆரோக்கியமாக இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.


அவன் பாதி வெளிச்சம் பாதி இருள் சூழ்ந்த பகுதியில் நின்று கொண்டிருக்க, அவள் அறையின் வெளிச்சத்தில் கருநீல நிற கையில்லா இரவு உடை அணிந்திருக்க, உடலோடு ஒட்டி இருந்த அந்த உடை, அவள் மெலிந்த கைகள் மற்றும் கழுத்து எலும்புகளை காட்டி, அவள் மெலிவை மேலும் உறுதிப்படுத்தின.


சந்தனமும் குங்குமமும் கலந்த நிறத்தில், பொலிவும் வசீகரமுமாய்,
இயற்கையிலேயே பேரழகிக்கான அனைத்து சாமுத்திரிகா
லட்சணங்களையும் கொண்டு பிறந்தவளின் முகம் தற்போது முற்றிலும் கலை இழந்து, கண்களில் ஒளி குன்றி காணப்பட,


தன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல், இதழ் பிரியா புன்னகையோடு நட்பாக தலையசைத்து வரவேற்றவனிடம்


" அர்ஜுன் " என விளித்தாள் அக்னி.


சிறு வயது முதல் அக்னி அர்ஜுனை 'அர்ச்சு அத்தான்', 'அத்தான்' என்று விளிப்பது தான் வழக்கம் . அதிலும்
பெரும்பாலும் மரியாதையுடன் அழைக்காமல் ஒருமையில் தான் விளிப்பாள். அப்படி ஒரு தோழமை இருவரிடத்திலும் இருந்தது.


அவனும் அவளை 'அம்மு' 'அனி' என்றே அழைப்பான் .
கடைசி இரண்டு சந்திப்பில் தான் அவன் 'அர்ஜுன்' ஆகிப் போனாதாக அவன் ஞாபகம் கூற,
அதற்கான காரணம் தான் இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை .


கடைசி இரண்டு சந்திப்புகளுமே மிகவும் உணர்வுபூர்வமான சந்திப்பு என்பதால் , இதனை பொருட்படுத்துவதற்கு கூட அப்போது அவனுக்கு நேரம் இல்லாமல் போயிருக்க, பழங்கதையிலேயே அவன் உழன்று கொண்டிருந்த நேரத்தில்


" மம்மா..." என்றழைத்தது அவள் பெற்ற இளந்தளிர், அவள் காலை கட்டிக்கொண்டு.
கிட்டத்தட்ட ஒரு வயதில் பார்த்த குழந்தையை இப்போது அதன் நான்கு வயதில் பார்க்கிறான்.


படிய வாரிய தலை, பால் போன்ற வெள்ளை நிறம், கொழுகொழு கன்னங்கள், மெல்லிய பூனை கண் கருவிழி, கன்னத்தில் குழி என
துருதுருக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டே நின்றிருந்த குழந்தையை வாரி அணைத்து கொஞ்ச வேண்டுமென்ற எண்ணம் ஏழ அதை அவன் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது,


" நாளைக்கு நடக்க போற நம்ம கல்யாணத்துக்கு என் சைடுல சில கண்டிஷன்ஸ் இருக்கு , அதைப்பத்தி உங்ககிட்ட பேசணும் அர்ஜுன் ...." என்றவளிடம் பதில் பேசாமல், பேச வேண்டியதை பேசு என்பது போல் அவன் பார்க்க, அதை புரிந்தவளாய்


" உங்களுக்கு அஜய்யை பத்தி தெரியும் இல்லையா ... நான் அவரை டீப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டதும் உங்களுக்கு தெரியும் .... அஜய்யோடையே என் லைப் முடிஞ்சிருக்கணும், அஷ்வத் இருக்கிறதால வேற வழி இல்லாம
ஐ அம் லீடிங் மை லைப் ...உங்களுக்கும் நாளைக்கு நமக்கு நடக்கப்போற கல்யாணத்துல விருப்பம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்..." என்றவளின் பேச்சு, ஏனோ அவன் தொண்டையை கனக்கச் செய்ய,
அதனை செருமி சரி செய்துக்கொண்டு பேச்சைக் தொடரு என்பது போல் அவன் பார்த்து வைக்க,


" நானும் மாமா சொன்னதால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்..."
என்றவளின் விழியில் அப்பட்டமாக பொய் தெரிய, காவல்துறை அதிகாரியாக அதனை படிக்க முயன்று கொண்டிருக்கும் போது,


"இதெல்லாம் ஏன் சொல்றேன்னா,
கல்யாணத்துக்கப்புறம் என்னால இயல்பான மனைவியா உங்க கூட வாழ முடியாது ...
அஷ்வத்துக்கு நீங்க பயாலஜிக்கல் ஃபாதர் இல்லைங்கிறதால, அவனுக்காக உங்ககிட்ட நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன் ...
இப்ப அவன் குழந்தை சொன்னா புரியாது...
கொஞ்சம் பெரியவனானதும் எல்லாத்தையும் சொல்லிடுவேன் ...
எனக்கும் என் மகனுக்கும் போதுமான அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் ...
உங்களை நான் ஃபினான்சியலா எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ....


நீங்க நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி வேணாலும் இருந்துக்கலாம் உங்களோட எந்த விஷயத்திலும் நான் தலையிட்டுக்க மாட்டேன் ..
உங்களுக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா அவங்களோட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ப ஏற்படுத்திக்கலாம்... ஏன்
அவங்களையே நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு ஒரு வாரிசையும் பெத்துக்கலாம் ...


ஆனா உங்க கூடவே தான் நானும் அஷ்வத்தும் இருப்போம் ... எந்த நிலையிலும் என்கிட்ட டிவோர்ஸ் மட்டும் கேக்கக்கூடாது நானும் டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்... இதெல்லாம் நான் முன்னாடியே சொல்றதுக்கு காரணம் உங்க வாழ்க்கை மேல எனக்கு இருக்கிற அக்கறை தான்...உங்களோட சில நியாயமான ஆசைகள் கூட இந்த கல்யாணத்துல நிறைவேறாது ... எல்லாத்தையும் யோசிச்சு முடிவெடுங்க...


இதுக்கெல்லாம் நீங்க ஓகேன்னா நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் ... "
என்றவளின் குரல் திடமாக நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருந்தாலும், அவளது பார்வை மட்டும் மண்டியிடாத குறையாக அவனை கெஞ்சிக் கொண்டிருந்தது
திருமணத்திற்கு சம்மதிக்கும் படி.


சிறுவயது முதலே வட மாநிலத்தில் பிறந்து வளர்ந்ததால், தமிழை அவள் வெறும் பேச்சு மொழியாகவே அறிவாள்.
ஆங்கிலம், ஹிந்தி ,மராட்டி அவளது பேச்சில், பெரும்பான்மையான தமிழோடு எப்பொழுதுமே அங்கம் வகிக்கும்.


அவளது பேச்சு வழக்கு சிறுவயது முதலே அவனுக்குப் பரிச்சயம் என்பதால், அவளது மொழியைக் காட்டிலும் அதிலிருந்த உணர்வுகளை அவனால் இயல்பாக புரிந்து கொள்ள முடிந்தது.


அவள் அந்த அறைக்கு வந்ததில் இருந்து இதுவரை அர்ஜுன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, முதன் முறையாக அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க எத்தனிக்கும் போது, குழந்தை அஷ்வத் துடுக்குத்தனமும் குறும்புமாய் , ஓடிச் சென்று அர்ஜுனின் கால்களைக் கட்டிக்கொள்ள, உடனே அக்னி அதிவேகமாக அர்ஜுனை நெருங்கி குழந்தையை பற்றி எடுத்து தூக்கிக் கொண்டவள்,


"சாரி " என்றாள் அவளது குழந்தை அவனுக்கு இடையூறு விளைவித்ததாக கருதி.


அப்பொழுது பார்த்து கதவு தட்டப்பட,
அர்ஜுன் "கம் இன்" என்றதும்,


அந்த வீட்டின் கவர்னர் லட்சுமி அம்மாள்,
அஷ்வத்தை உறங்க செய்வதற்காக அழைத்துச் செல்ல வந்திருந்தார்.


அந்த வீட்டில் தான் அனைத்துமே, நேரப்படி அலுவலகம் போல் நடக்குமே.
இதுவும் அதில் ஒன்று. அஷ்வத்தும் வேற்று முகம் தெரியாமல் அனைவரிடமும் போகும் குழந்தை என்பதோடு, காலையிலிருந்தே அவருடைய பராமரிப்பில் இருந்ததால்,
அவன் இயல்பாக அவரிடம் தாவிக் கொள்ள, அவர் சென்ற மறுநிமிடம், அவன் பதிலுக்காக அவள் விழிகள் காத்திருப்பதை எண்ணி, அவன் மனதில் எங்கோ ஒரு மூலையில் இம்மி அளவு சந்தோஷ உணர்வு துளிர்த்தது.


அவள் அவனுடைய ஆத்மார்த்தமான காதலி, விவரம் தெரியாத வயதிலேயே அவன் மனதில் குடி வந்தவள், இடையில் கொஞ்ச காலம் நாகரீகம் கருதி, தன் காதலை தன்னுள்ளே புதைத்து வைத்திருந்தான்.
அந்தக் காதலும் மரத்துப் மறைந்து தான் போயிருந்தது. சற்று முன் அவள் பேசிய பேச்சில் அது மீண்டும் உணர்வு பெற்று உலவ தொடங்க, அறையின் வெளிச்சத்தை விட்டு அரையிருளில் அவனை நெருங்கி நின்றிருந்தவளின்
முகத்தைப் பார்த்து,


" எனக்கு ஓகே நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ..." என அவன் கூறிய மாத்திரத்தில், பலத்த காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னை மரத்திலிருந்து திடீரென்று இளநீர் ஒன்று கீழே விழுந்து தெறிக்க ,அந்த எதிர்பாராத சத்தத்தில், பயந்து போனவள், அர்ஜூனின் மார்பில் முகம் புதைத்து இறுகப் பற்றிக் கொண்டாள்.


நீண்ட நாட்களுக்குப் பின்பான பெண்மையின் ஸ்பரிசம் அல்லவா, அது அவன் ஆண்மையை அசைத்துப் பார்க்க, அப்பொழுதுதான் கட்டி
அணைத்திருந்தவளின் உடலில் தெரிந்த அளவுக்கு அதிகமான நடுக்கத்தை உணர்ந்தவனுக்கு, கிளர்ச்சியை தூண்டிய காதல் காணாமல் போக, அவளிடமிருந்து விலகி அவளைப்பார்த்து
" அக்னி ,ஆர் யூ ஓகே ..." என்றான் வாஞ்சையாக.


"நோ அர்ஜுன்... அஜய் போனதுக்கு அப்புறம், எல்லா விஷயத்துக்கும் நான் ரொம்ப பயப்படறேன்..." எனக் பொங்கிய விழிகளோடு கூறியவளின் விழிகளில் அவளுடைய அஜய் தெரிந்தான், அவன் மேல் அவள் வைத்திருந்த அளவுக்கதிகமான பாசமும் காதலும் பளிச்சிட்டது.


சிறுவயது முதலே அக்னியின் நெற்றியில் பொட்டில்லாமல் அவன் பார்த்ததே இல்லை...
அவளது திருமணத்திற்கு பின் நெற்றி பொட்டோடு வகுட்டு குங்குமத்துடன்,
மராட்டியர்களின் மங்களத்தை பறைசாற்றும் கருகமணி தாலி, பச்சை நிற வளையல்களோடு தான் அவளை
பார்த்திருக்கிறான்....(அதுவும் புகைப்படத்தில் மட்டுமே)


ஆனால் இப்போது காதில் சிறு வளையமும், மாசு மறுவற்ற அந்த முகத்தில், மூக்கின் இடது பக்கத்தில் வெண்ணிற ஒற்றைக்கல் சிறு மூக்குத்தி மட்டுமே. அவளை நன்கு அறிந்தவன் என்பதால், கணவனை இழந்த பெண் இவற்றையெல்லாம் அணிந்து கொள்ளக் கூடாது என்ற பத்தாம் பசலி தனத்தை அவள் கடைப்பிடிக்கவில்லை , அவளது அலங்காரம் எல்லாம் அவள் அஜய்யுடனேயே சென்று விட்டிருந்ததை தான் அவள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.


ஆர்மி ரெஜிமென்ட்டை நன்கு அறிந்தவள், குண்டு வெடிப்பும் துப்பாக்கிச்சூடும் தாலாட்டும் இசையாய் கேட்டு வளர்ந்தவள்,
தற்காப்புக் கலையில் வல்லவள் ..
துப்பாக்கி சுடுவதில் கை தேர்ந்தவள் ...
அதனை ரசனையாக லாவகமாக அனாயாசமாக கையாளத் தெரிந்தவளுக்கு , ஒரு இளநீரின் வீழ்ச்சி நடுக்கத்தைக் கொடுப்பதை எண்ணி உள்ளூர வருந்தியவன், அவள் கணவனின் மறைவு அவள் சுயத்தை முற்றிலுமாக இழக்கச் செய்து இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டான்.


முன்பு குளிரை உணர்ந்தவனும் அவளது அணைப்பிற்கு பின் கதகதப்பை உணர்த்தவனும் அவன் ஒருவனே...


குளிரோ கதகதப்போ அவளை எந்த உணர்வும் தாக்கவில்லை போலும் . அவளிடம் தெரிந்த ஒரே உணர்வு பிரிவு மட்டும் தான். அதிலும் அவன் அஜய் மட்டுமே தெரிந்தான்.


" வீ வில் மீட் இன் அவர் மேரேஜ் ...டேக் ரெஸ்ட் ..." என்று அவளை
வழியனுப்பி வைத்தவனுக்கு சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன.


அவள் பேசியதை எல்லாம் மீண்டுமொருமுறை அசை போட்டு பார்த்தவனுக்கு புரிந்தது எல்லாம் இதுதான்.


அவள் அவனிடம் எதிர்பார்ப்பதெல்லாம் பாதுகாப்பு மட்டும்தான்.


ஒரு ஆணின் பாதுகாப்பு அவளுக்கும் அவள் குழந்தைக்கும் தேவை, அதுவும் சிறுவயது முதலே அவளை நன்கறிந்தவன் என்பதால் நம்பிக்கையின் காரணமாக அவனை மணந்து கொள்ள எண்ணி இருக்கிறாள் ... அவ்வளவே ..


பெண்கள் விண்வெளிக்கே சென்றாலும் அவள் உடலைத் தாண்டி திறமையை பார்க்காத சமுதாயத்தில் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
திருமணம் ஆகாத பெண்களை ஓரளவிற்கு அனுசரித்து செல்லும் இந்த சமூகம், கணவனை இழந்தவரையோ, விவாகரத்துப் பெற்றவரையோ எளிதாக கடந்து செல்லாமல் காம