எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 04

வான்மழை 04:

தனது வகுப்புகளை முடித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தான் முகிலன். அப்போது அவனை கடந்து ஒரு மாணவி வேகமாக செல்ல,

“ஹேய் வரு நில்லுடி! நானும் வரேன்” என் மற்றொரு‌ மாணவி, முன் சென்ற மாணவியை அழைத்தவண்ணம் அவளுடன் சேர்ந்து செல்ல,

“வரு!!!” என்ற அழைப்பில் அவன்‌ நடை சில நொடிகள் நின்று பின் இயல்பு மீள,
அவன் அழுத்தமான இதழ்களில் சிறுப் புன்னகை நெளிந்தது. அப்பெயருக்கான சொந்தக்காரியை நினைத்து.

அன்றைய அவளின் அதிர்ந்த முகமும், கலங்கிய கண்ணும், அவன் கண்முன் வந்துச் செல்ல,
“சேட்டைக்காரி!!” என முணுமுணுத்தவன், தனது இருக்கையில் சென்றமர மனம் முழுவதும் அன்று நடந்தவையை அசைப்போட,

இடதுக்கையால் தனது முடியை லேசாக கோதி விட்டவனின் முகம் சற்றே மென்மையாக, விரும்பியே அன்றைய இனிய நிகழ்வுக்களுக்குள் சென்றான்.

********
“பொண்ணுக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவனைக் கண்டு அனைவரும் அதிர,

சுபலட்சுமியின் முகம் சற்றென சுருங்கிவிட்டது. இப்படி நடந்து விடக் கூடாது என தானே, அவள் பேச்சியை குழப்பி விட்டது.

யாருக்கும் என்ன பேசுவது என ஒரு நொடி சிந்தனையில்லை.

சட்டென தெளிந்த மேகலா,
“ஜாதகம் தான் நம்ம முன்னயே பாத்தாச்சுல, ரெண்டு பேரும் பேசிட்டு வரட்டுமே? அவுங்க ஒன்னும் விவரம் தெரியாத சின்னப் பிள்ளைங்க இல்லையே” என்றிட,

அனைவருக்கும் அது சரி எனப் பட அமைதியாக இருந்தனர்.

“வாங்க, முகிலன் மேல மாடிக்குப் போகலாம்” என கிருஷ்ணா அவனை அழைத்துச் செல்ல,

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாது அவனையே திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை‌ கடந்துச் சென்றவன்,
“முழிச்சது போதும் மேல வா” என இதழ் பிரியாமல் அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்து விட்டு அவன் செல்ல,

“பே” என விழித்து நின்றாள் வருணாக்ஷி.

அவன் பேசியது உண்மையா? இல்லை தனது மனப்பிரம்மையா? என புரியாது அவள் விழித்தப்படி நிற்க,
அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் கெளரி.

“ஏய்! இந்தா டி, கனவுலகத்துல இருந்து வெளிய வாடி” என‌ கெளரி அவள் காதினில் கத்த,

“ஆஆஆ..ஆ பிசாசே!! இப்புடியா கத்துவ?”

“பின்ன, நீ தான் கனவுலகத்துல மிதந்துட்டு இருக்கியே! சரி மேல போ அந்த அண்ணாட்ட பேசிட்டு வா” என அவளை மாடிநோக்கி தள்ள,

அதுவரையிலும் ஆர்வத்திலும், அதிர்விலும் இருந்தவளுக்கு, இப்போது அவனிடம் தனியே பேச வேண்டும் என்றதும் பயமும் படபடபடப்பும் சேர்த்துக் கொள்ள,

“ம்ஹும், நான் போக மாட்டேன்! எனக்கு பயமா இருக்கு” என்றவள் வீட்டினுள் ஓடப் பார்க்க,

“அடியேய்!!!” என்று அலறிய கெளரி அவளை இழுத்துப் பிடித்தவள்,
“மரியாதைய மேலே போடி, அந்த அண்ணா எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுவாரு, எல்லாரும் வேண்டாம் சொல்லியும் உன்கிட்ட பேசணும்னு வந்து நிக்குறாரு, ஒழுங்கா மேலேப் போ” என பேசியவாறே மாடிப்படியை நோக்கி அவளை தள்ள,

“ப்ளீஸ், ப்ளீஸ் கெளரி எனக்கு பதட்டமா டென்ஷன் ஆகுது, இங்குப் பாரு கையெல்லாம் எப்புடி வேர்த்திருக்குன்னு” என வியர்வையில் ஊறிப் போயிருந்த கைகளை அவள் கெளரியிடம் காட்ட,

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன, பேச வேண்டாம்னு சொன்னதும் மூஞ்சிய தொங்கப் போட்டவ நீதானே, ஒழுங்காப் போடி கொன்னுருவேன்”

“அப்போ, பேச முடியலையேன்னு வருத்தமா இருந்ததுடி, ஆனா இப்போ பயமா இருக்கு, அவரு வேற போற போக்குல சீக்கிரம் வான்னு சொல்லிட்டுப் போனாரு, அப்பல இருந்து கைகாலு எல்லாம் நடுங்க ஆர்மபிச்சுடுச்சு”

“யாரு அந்த அண்ணா வா? நானும் உன்‌ பக்கத்துல தானே நின்னேன்”

“நெஜமா சொன்னாரு டி, மெல்ல முணுமுணுத்தாரு”

“அப்போ கண்டிப்பா நீ போயி தான் ஆகணும், அவரு கூப்பிட்டும் நீ போகலைன்னா நல்லா இருக்காது” என்ற கெளரி அவளை தம் கட்டி பின்னிருந்து மாடிப்படியில் ஏற்ற,

பின்னிருந்து வருணாக்ஷியை தள்ள முயன்று கெளரியால் முடியாதுப் போக, அவளை இடித்துக் கொண்டு படியில் ஏறியவள், திரும்பி நின்று வருவின் கைகளைப் பிடித்து மேல் இழுக்க,

கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி மாடிபடியின் கைப்பிடியை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்ட வருணா, வர மறுத்து அடம்பிடித்துக் கொண்டிருக்க,

தாங்கள் வந்து வெகு நேரமாகியும் இன்னும் தங்கை வராததை உணர்ந்த கிருஷ்ணா மாடியில் இருந்து எட்டிப் பார்த்தவனின் விழிகளில் இருவரது சேட்டைகளும் விழுந்து விட,

‘அய்யய்யோ!!! பைத்தியம்ங்க? என்ன வேலை பாத்துட்டு இருக்குதுங்க’ என மனதினில் அவன் அலற,


அவன் பின்னோடு எட்டிப் பார்த்த கார்முகிலனின் விழிகள் சற்றே விரிந்து பின் சுருங்க, பிரிந்த இதழ்களை வழுக்கட்டாயமாக உள்ளிழுத்துக் கொண்டவன்,
‘சரியான சேட்டைக்காரியா இருப்பா போலயே!’ என மனதினில் நினைத்தவன், தனது நெற்றியை கட்டை விரலால் கீற,

அவனின் செய்கைகளை‌ கண்ட கிருஷ்ணா, இனி ஆகாது என நினைத்து,

“வருணா!! என்ன பண்ணிட்டு இருக்க? மேலே வா மொதல்ல” என கோபத்தில் அதட்டலாய் அவன் அழைக்க,

அவனின் குரலில் நிமிர்ந்து பார்த்த வருணாவிற்கு, கிருஷ்ணா அருகினில் நின்ற முகிலனும் தெரிய,

அவள் பார்வை தன்னை தொட்ட நொடி,
“சேட்டைக்காரி” என அவளை பார்த்து முணுமுணுத்தவன், தனது ஆள்காட்டி விரலை அவள் புறம் திரும்பி மேலே வருமாறு சைகைச் செய்ய,

மந்திரத்திற்கு கண்டுண்டவள் போல், அவனைப் பார்த்தவாறே மேலேறி சென்றவள், வழியில் நின்ற கெளரியின் கைகளையும் இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவள் மேலேறி வரும் வரை இம்மியளவு கூட பார்வையை அவன் மீதிருந்து அவள் விலக்காமல் வர,

அவளின் பார்வை சிறு சங்கடத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவனிற்கே சிறு வெட்கத்தை வரவழைக்க,

‘என்ன இவ, இப்புடி இருக்கா? இடம்,பொருள், ஏவல் எல்லாம் தெரியாதுப் போலிருக்க, இவளைக் கட்டிக்கிட்டு ஒண்ணொன்னுக்கும் க்ளாஸ் எடுத்துட்டு இவ பின்னாடியே திரியனும் போலயே!!’ என நொடியில்‌ அவளை‌ தன்னவளாக்கி அவன் நினைத்ததில் சற்றே திடுக்கிட்டுத் தான் போனான்.

‘அப்போ! இவளை‌ பிடிச்சிருக்கா எனக்கு? இரண்டு பேர்க்குள்ளயும் ஒத்து வருமா!!! ம்க்கும் இந்த சேட்டைக்காரிய என்னை தவிர வேற யாராலையும் சமாளிக்க முடியாது! இவளுக்கு நான் தான் சரி!,

இவ சேட்டை கொணத்தால குடும்பத்துக்குள்ளயே, இல்லை எங்களுக்குள்ளே ஏதாச்சும் மனக் கஷ்டம் வந்தா என்ன பண்றது? அவசரப்படுறேனோ‌? ம்ம்ம்ம் அப்புடி ஏதும் இவ பண்ணி கஷ்டம் வந்தா, நறுக்குன்னு நாலு கொட்டு தலையிலயே கொட்டி அடுத்த தடவை அந்த தப்பை பண்ணாம பாத்துக்கணும்.

அதுசரி, நானே யோசிக்கிறேனே, அவளுக்கு என்னை பிடிக்குமா? ஹான் அதான் அம்மணி பாக்குற பார்வையிலேயே தெரியுது’ என கேள்வியும் அவனே‌, பதிலும் அவனே, தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தவனை,

“சரி நீங்க பேசிட்டு வாங்க, நாங்க கீழே இருக்கோம்” என்ற கிருஷ்ணாவின் குரல் கலைக்க,

‘சரி’ என தலையசைத்தான் கார்முகிலன்.

இரண்டடி நடந்த கிருஷ்ணா, கெளரி தன்னுடன் வராமல் போகவும், திரும்பி பார்க்க,

வருணா, கெளரியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு கண்களால் விட்டுப் போகாதே எனக் கெஞ்சி கொண்டிருக்க,

அவளிடம் இருந்து தனது கைகளை பிரிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் கெளரி.

அதில் கடுப்பாகி பல்லைக் கடித்த கிருஷ்ணா, கெளரியின் அருகில் சென்று பட்டென ஒரு இழுவையில் அவளை தன்பக்கம் இழுத்துக் கொண்டு கீழிறிங்கியிருந்தான்.

இதனை எதிர்பார்க்காத வருணா, ஒரு நொடி திகைத்து பின் நின்றவளின் உள்ளங்கை முழுவதும் வியர்வை ஆறாக ஓடியது.

வியர்த்த உள்ளங்கையை தனது சல்வாரின் துப்பட்டாவில் மாறி மாறி துடைத்துக் கொண்டு பதட்டத்துடன் நின்றிருந்தவளை ஒருவித உரிமையோட பார்வையை அவள் மீது அலைய விட்டான்.

“வெறும் வாய்ச் சொல் வீராங்கனை தான் போலயே” என அவன் வாய் திறக்க,

அமைதியான அந்த சூழலில் திடீரென கேட்ட அவன் சத்தத்தில் அவளின் உடல் ஒரு நொடி தூக்கி வாரிப் போட,

“ஹான், எ..ன்..ன சொன்..ரீங்…க” என்றவளின் குரல் டைப்படித்து வெளியே வர,

“ப்ச் எதுக்கு இவ்வளவு பதட்டம்? ஜஸ்ட் ரிலாக்ஸ்,” என்றவள் அவள் கைகள் துப்பாட்டாவில் அழுந்த பற்றியிருந்ததை கண்டவன்,

முதலில் அவளது பதட்டத்தை குறைக்க முடிவெடுத்து,

மாடிப்படியில் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்றவன், “இப்போ கீழே போன பொண்ணு, யாரு?” என இயல்பாக கேள்வியை தொடுக்க,

“அவளா? அது கெளரி, வசந்தா அத்தையோட பொண்ணு!”

“ஓஹோ, உனக்கு எத்தனை அத்தை?”

“ரெண்டு!”

“ம்ம்ம், கெளரிக்கும், உங்க அண்ணனுக்கும் வீட்டுல பேசி வச்சுருங்காங்களா?”

“ஏன், கேட்குறீங்க?”

“இல்லை, உரிமையா இழுத்துட்டுப் போறாரே,”

“அது அப்புடித்தான், வீட்டுல அந்த எண்ணம் இருக்கு, இது அவுங்க கொண்டும் பேருக்குமே தெரியும். இருந்தாலும் அப்புடியே எதுவுமே தெரியாத மாதிரி ரெண்டும் நடந்துக்கும்ங்க, சரியான கேடிங்க” என சிரிப்புடன் பேசியவள், பதட்டம் சிறிதாய் தணிய, நின்றிருந்தாள்.

அதற்கு பிறகு சில பல கேள்விகள் அவளது வீட்டாள்களை பற்றி‌க் கேட்டு அவளை இலகுவாக்க,

பேச்சு சுவாரஸ்யத்தில், வருணா கார்முகிலனின் அருகே சிறு இடைவெளி விட்டு மாடிச்சுவரினில் சாய்ந்து நின்றதை இருவரும் கவனித்திருக்கவில்லை.

“பிடிச்சிருக்கா!!!” படபடவென பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சு அவன் ஒற்றைக் கேள்வியில் தடைப்பட்டது.

கன்னங்கள் செம்மை பூசிக் கொள்ள, அவளை விட்டு சற்றே விலகியிருந்த பதட்டம் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ள,

சுவரில் இருந்த கைகளை அவள் எடுக்க முயல, சிறு இடைவெளியில் நின்றதால் இருவரும் விரல்களும் நன்றாகவே உரசிக் கொள்ள,

பட்டென திரும்பி பார்த்தவளுக்கு, அதுவரை தெரியாத அவர்களது நெருக்கம் உணர, வேகமாக விலக முயன்றவளை விலக்க விடாமல் தடுத்தது அவள் சுண்டு விரலில் மீதிருந்த அவனது சுண்டு விரல்.

தெரிந்து வைத்தானா? இல்லை பேச்சு சுவாரஸ்யத்தில் வைத்தானா? அது அவனிற்கே வெளிச்சம்.

திடீரென அவளின் விரல்களின் எடை கூடியதுப் போல் இருக்க, மூச்சடைத்தது.
அவன் விரல் ஒன்றும் அவ்வளவு கனமாக இல்லை தான். நொடியில் விலக்கி விடும் எடையில் இருக்கும் விரலை விலக்கப் பிடிக்காது அவள் அமைதியாகி விட,

“பதில் இல்லையா?” என்றவன் கேட்க, திடீரென அவனது விரல்கள் அழுத்தமாய் இவளது விரல்களை உராய்வது போல் தோன்ற,

பட்டென திரும்பி நின்றுக் கொண்டவள்,
“ம்ம் பிடிச்சிருக்கு!!” என்க,

“ம்ம்ம ஓகே! போகலாம்” என்றவன் மாடியிறங்க,

அதுவரை ஒருவித மயக்கத்தில் இருந்தவள்,
‘என்ன, இது இவரு போறாரு! நம்மளை கேட்டாரு, அவரு எதுவும் பதில் சொல்லாம போறாரே’ என நினைத்தவள் இயல்பிற்கு மீண்டிற்க,

வேகமாக அவன் பின்னோடு சென்றவள்,
“என்ன கேட்டீங்க, நீங்க சொல்லாம போறீங்க?”

“என்ன சொல்லனும்?”

“அதான்…அதான்..” என அவள் திணற,

“அதான் எதான்??”

“ப்ச், உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

“என்ன? பிடிச்சிருக்கா?”

“என்னைப் பிடிச்சிருக்கா?” என அவள் வேகமாக கேட்க,

“அதையேன் உன்கிட்ட நான் சொல்லணும்?”

“ஏதே! என்கிட்ட சொல்லாமா வேற‌ யாருக்கிட்ட சொல்லுவீங்க?”

“ம்ம்ம், யாருக்கிட்ட வேணும்னாலும் சொல்லுவேன். உங்க அண்ணாக்கிட்ட சொல்லுவேன், இல்லைன்னா வீட்டுப் பெரியவங்க கிட்ட சொல்லுவேன்”

“அப்போ, நான் மட்டும் உங்ககிட்ட சொன்னேன் தானே?”

“நீ, சொன்னா, நானும் சொல்லணுமா என்ன?”

“அப்போ, நான் என்ன லூசா??”

“அது உனக்குத் தான் தெரியும்!!”

அவனின் வார்த்தை ஜாலத்தில் காண்டாகியவள் முகம் உர்ரென மாறியிருக்க,

“முசுட்டு வாத்தி!!” என முணுமுணுக்க,

“ஆமா, அப்டித்தான்!!” என்ற பதில் பட்டென அவனிடமிருந்து வர வாய்மூடினாள்.

இந்த உரையாடல் அனைத்தும் அவர்கள் படியில் இறங்கியவாரே தான் நடந்தது.

அவர்கள் கடைசிப் படியை நெருங்கி விட, இனி விட்டால் அடுத்து இவனிடம் எப்போது பேசுவது?’ என நினைத்தவள்,

“உங்களுக்கு, என்ன பிடிச்சிருக்கா? இல்லையான்னு? நான் எப்புடி தெரிஞ்சுக்கிறது?” என்க,

“அது, உன்பாடு, எப்புடி வேணும்னாலும் கண்டுப்பிடிச்சுக்கோ” என்றவன், அடுத்த அவள் பேசும் முன் விறுவிறுவென கீழிறங்கி சென்றிருந்தான்.

அவனிடம் இருந்து பதிலை பெற‌ முடியாததால் அவளின் முகம் சுணங்கி விட, அவன் பின்னே சென்றவள்,அமைதியாக நின்றுக் கொண்டாள்.

அவன் உள்ளே வந்ததும் அனைவரும் பதில் வேண்டி அவனைப் பார்க்க, மகாலிங்கம் வாய் திறந்தார்.

“என்னப்பா? முகிலா, பேசிட்டீங்களா? என்ன சொல்றீங்க?” என்க,

“ம்ம்ம் எல்லா விஷயமும் பொண்ணுக்கிட்ட தெளிவா பேசியிருக்கேன் ப்பா, அவுங்க கலந்து பேசட்டும், நம்மளும் வீட்டுல போய் பேசிட்டு சொல்லுவோம்” என அலுங்காமல் அவளை கோர்த்து விட,

வருணாவின் குடும்பம் முழுவதும், இப்போது அவளை திரும்பி பார்க்க,

‘அய்யோ, வாத்தி! பொய் சொல்றாரு’ என மனதினுள் அலற,

“அப்போ, நாங்க கிளம்புறோம்ங்க, பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்லுங்க” என்று அவர்கள் கிளம்பி விட,

‘அய்யய்யோ, என்கிட்ட அவரு எதுவுமே, சொல்லலை
யே, நான் என்னன்னு சொல்லுவேன்’ என புலம்பியவள் அவனை முறைத்துப் பார்க்க,

அனைவரிடமும் தலையாட்டி விடைப் பெற்றவன், வருணாவின் முறைத்தப் பார்வையையும் தனக்குள் உள்வாங்கி கொண்டு விடைப் பெற்றான்.


























 
Top