எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

13 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator


அத்தியாயம் 13

பௌர்ணமி காரை ஓட்ட, சொக்கும் கண்களுடன் அவளை முறைத்த வண்ணம் தான் அமர்ந்து வந்தான் குஹன்.

"தூக்கத்த கண்ட்ரோல் பண்ண வேணாம். தூங்குங்க ஹாஸ்பிடல் போனதும் டீ வெளியெடுத்துட்டா சரியாகிடும்" என்றாள் அவளே, அவன் முறைப்பெல்லாம் பெரிதாக தெரியவில்லை, மூன்று மாத்திரையும் வெளியே வந்தால் போதுமென்றே வாகனத்தை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தாள்.

"ம்ம் அப்படியே தூங்கிட்டா தூக்கிட்டு போய் போஸ்ட்மார்ட்டம் தான் பண்ணுவ நீ"

"ம்ச் நாந்தான் கோவத்துல செஞ்சுட்டேன்னு சொல்றேன்ல? நா மட்டும் டென்ஷன்ல இருக்கேன் நீங்க கூலா சுத்துனா அப்படித்தான் செய்ய தோணும்" என அவளும் கத்த,

"அடிப்பாவி அப்ப கோவத்துல கொலை பண்ணுவியா நீ?"

"இல்லாம உங்கள மாதிரி தண்ணி போட்டுட்டு நாலுபேர்ட்ட போய் சொல்லட்டா? என் புருஷன் என்னைய சீட் பண்றாருன்னு?"

"அதான் அல்ரெடி ட்வீட் போட்டியே?"

"எஸ் நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்கிட்ட என்ன பத்தி அவ்வளவு அசிங்கமா சொல்லும் போது நா ஜஸ்ட் ட்வீட் பண்ணது எனக்கு தப்பா தெரியல. அன்ட் எனக்கு டிவோர்ஸ் வேணும், இல்லனா இது மாதிரி இன்னொரு தடவை செஞ்சாலும் செய்வேன், தேட்ஸ் நாட் இன் மை ஹேண்ட்" என்றாள் அழுத்தமாக.

மருத்துவமனை வந்திருந்தது, அவனாலும் அதற்கு மேல் இருந்து பேச முடியவில்லை, தூக்கத்தை அவன் நிறுத்த முயல, அது அவன் தலையை பாரமாக்கியது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தியது, தலையை உலுக்கி சரி செய்ய முயன்றான், ஆனால் தலை சுற்றல் கட்டுக்குள் வர மறுத்தது.

அவனை கவனித்திருந்தவள், வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக உள்ளே ஓடிச்சென்று இரவு பணியில் இருக்கும் மருத்துவமனை உதவியாளர்களை அழைத்து வந்தாள்.

பெரிய மருத்துவமனை தான் என்பதால், அந்நேரத்திலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. மருத்துவர்களும் சுழற்சி முறையில் எப்போதும் இருப்பர் என்பதால் உடனடியாக அனுமதிக்கப்பட்டான் குஹநேத்திரன்.

அவனை தெரியாதவர்கள் இல்லையே? அதனால் விஷயம் மருத்துவமனை தலைமை வரை உடனே பகிரப்பட்டு, அவனுக்கு விஐபி சிகிச்சையும், அறையும் வழங்கப்பட்டது.

இரண்டு மூன்று மருத்துவர்கள் வந்துவிட, அடுத்த ஒரு மணிநேரத்தில் அவன் விழுங்கிய மூன்று மாத்திரைக்கு முழு குடலையும் வெளியே எடுத்திருந்தனர்.

பௌர்ணமி, மாத்திரையை அவன் டீயில் போடும்வரை, அதை எப்படி போடுவது என்று மட்டுமே யோசித்திருந்ததால், போட்டால் என்னவெல்லாம் ஆகும் என்ற திசையை நோக்கி அவள் மூளை பயணிக்கவில்லை, நினைத்ததை செய்து விட்ட பின்னர் தான், 'ஐயோ!' என்றிருந்தது அவளுக்கு.

ஒன்றும் ஆகாது என உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவன் எழுந்து அமரும் வரை உள்ளே படபடவென்று அடித்து கொண்டேதான் இருந்தது. விவாகரத்து என்ற கேட்டபோது கூட அவன் கொடுத்து விட்டால் அடுத்து என்ன என யோசிக்க பயந்தவள் அவள், அப்படியிருக்கையில் இன்று அவளாலேயே அவனுக்கு ஏதேனும் என்றால், 'ம்கூம்!' அவளால் அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. உள்ளே சிகிச்சை நடக்க, வெளியவே இருந்து கொண்டாள்.

முழுமையாக வெளியேற்றி விட்டாலும், மருத்துவர்கள், "இனி பயமில்லை, மாத்திரையின் வீரியம் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கும். நன்கு தூங்கி காலையில் எழுந்து விடுவார்" என நம்பிக்கையாக கூறியும், விடிய விடிய தூங்காமல் அதையும் இதையும் யோசித்து குழப்பி, தன்னை தானே நிந்தித்து தான் பொழுதை கழித்துக் கொண்டிருந்தாள்.

அந்த மாத்திரையை அவள் விழுங்கியிருந்தாலும், நஷ்டம் அவள் குடும்பத்திற்கு தானே? பாதிக்கப்பட போவது என பார்த்தால் அவள் பெற்ற பிள்ளைகள் மட்டுந்தான், அதுவும் தற்போதைக்கு மட்டுமே, வளர்ந்து விட்டால் அவர்களுக்கும் அவளை நினைக்கவெல்லாம் நேரம் இருக்காதே? அவள் காதல் கணவன் கூட மறுமணம் என அடுத்த வாழ்க்கையை பார்க்க சென்றுவிடலாம், அவளுக்காக வருந்துபவர்கள் கூட கூடி போனால் ஒரு வருடம் வருந்துவார்களா? அதன் பின்? அவரவர் வேலையில் கடந்து சென்றுவிடுவார்கள் தானே? பின் யாருக்காக யாரை பயமுறுத்த இன்று அவள் மாத்திரை விழுங்க வேண்டும்? அதனால் தான் அவனுக்கு கலந்து விட்டாளோ?

இவ்வாறெல்லாம் யோசித்து தான் குஹன் இருந்த அறைக்குள் கூட செல்லாமல் வெளியேவே அமர்ந்திருந்தாள். இன்னும் யாருக்கும் சொல்லவும் இல்லை, சொல்ல வேண்டும் என தோன்றவும் இல்லாமல் ஒருவித மனநிலையில் இருந்தாள். விடிந்தால் இருவரையும் காணும் என பிள்ளைகள் தேடுவர் என்றும் நினைவில் வரவில்லை, விசாலாட்சி பார்த்துக் கொள்வார், இவர்கள் இருவரையும் அவரவர் வேலையை பார்க்கச் சென்று விட்டதாக நினைத்து கொள்வார் என்றும் அவளுக்கு அவளே முடிவு செய்து கொண்டாள். அவள் மூளை நிதானத்திற்கு வராமல் ஏதேதோ சிந்தித்து அவளை குழப்பத்திலேயே தான் வைத்திருந்தது.

காலை ஏழு மணிக்கெல்லாம் விழித்துவிட்டான் குஹன். உள்ளே அமர்ந்திருந்த செவிலியர், "சார் எந்திச்சுட்டாங்க மேடம். நீங்க போய் பாருங்க நா டாக்டர கூட்டிட்டு வரேன்" என சொல்லி செல்ல, ஒரு பெரிய ஆசுவாச மூச்சுடன் எழுந்து உள்ளே சென்றாள்.

எழுந்து முன் நெற்றியை அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் குஹன். உண்மையில் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு. அவன்மீது கோவம் நிறையவே இருக்கிறது தான் அதற்காக அவனுக்கு எதுவும் ஆகட்டும் என நினைத்துவிட்டால் தானே அவள்! அப்படியென்றால் அவனுக்கு மட்டுமா அவள் மீது காதல் இல்லை? அவளுக்கும் தானே இல்லை! அதை நினைத்தே கலங்கி நின்றாள்.

"சாரி குஹன்!" என தானாக மெல்ல சொல்ல, கையை எடுத்து விட்டு மெல்ல நிமிர்ந்து பார்த்தவனுக்கும் அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது. எப்போதும் வெளியே வரும் போது அவ்வளவு நேர்த்தியாக வருபவள், இப்போது குட்டி முடி கலைந்திருக்க, சேலையும் நழுங்கியிருக்க, கண்கள் சிவந்து முகமே வாடிப்போய் நிற்பவளை பார்த்தவன், "இங்க வா!" என கையால் அவனருகே வரச்சொல்லி அழைத்தான்.

திரும்பி மருத்துவர் வருகிறாரா என்றும் பார்த்துக்கொண்டு அவனருகில் நடந்தாள்.

அவள் கைபிடித்து அருகே இழுத்து நிறுத்திக்கொண்டு, "டாக்டர்ட்ட பேசுனியா? எதாவது கேட்டாங்களா?" என கேட்க,

"இல்ல என்ட்ட எதுவுமே கேட்டுக்கல, ஆனா நைட்டே நாலு டாக்டர்ஸ் வந்து பார்த்துட்டு என்ட்டையும் நீங்க ஆல்ரைட்னு சொல்லிட்டு தான் போனாங்க"

"ஓ! சரி நா பேசிக்கிறேன். நீ எதுவும் சொல்ல வேணாம்"

"ஏன்? நா வேணும்னு தான் பண்ணேன் பட் உங்களுக்கு இப்படி ஆகணும்னும் பண்ணல" என்றாள் இறங்கிய குரலில்.

"இதோ இத தான் சொல்றேன். நீ தேவையில்லாம இப்ப நிறைய யோசிக்கிறன்னு நினைக்கிறேன் அதான் இவ்வளவு குழப்பமும். இது நீ இல்ல தானே சித்து? என்ன ஸ்ட்ரெஸ் உனக்கு? வீ ஆர் குட் இன் அவர் லைஃப், அப்றமு ஏன் நீ இவ்வளவு குழப்பிக்கிற?" என்றான் அக்கறையாக,

"அப்ப நீங்க பேசுனது சரியா? என்னோட இருக்குறதே போர்னு சொன்னது? நா உங்கள சேட்டிஸ்ஃபை பண்ணலன்னு வேற யார்கிட்டயோ போய் சொன்னது? என்ட்டயே நீங்க சொல்லிருந்தா கூட ஐ வில் ட்ரை டூ மேக் யூ சேட்டிஸ்ஃபை. ஆனா நீங்க?" என்றவளுக்கு கண்ணீர் இறங்கியேவிட்டது.

"ம்ச் அதுலாம் மென்ஸ் டாக்ஸ் டி. ஹஸ்பண்ட்ஸா மீட் பண்றோம் அப்ப இப்படி பேசிக்குறதுல ஒரு கிக், கெத், ரிலாக்ஸேஷன்னு கூட சொல்லலாம். என் பொண்டாட்டி என்ன நல்லா வச்சுக்குறான்னு சொன்னா கண்ணு வச்சுட மாட்டாங்க அதான் நா அப்படி பேசிருக்கேன்" என்றவன் இடுப்போடு அவளை அருகில் இழுத்து தன் கைக்குள் வைத்து கொள்ள,

"ஓ அதனால் தான் இன்னொரு பொண்ணுட்ட ஷோ யுவர் பாடின்னு கூட கேட்டீங்களா? அதுலயும் கெத்து கிக்லாம் கிடைச்சதா?" என்றாள் முறைத்துக் கொண்டு.

"ம்ச் தப்பு பண்ண ஈசி சான்ஸ் கிடைக்குற இடத்துல இருந்தும் ராமனா வாழ்றவன நீ இவ்வளவு சந்தேகபட கூடாதுடி" என்றான் வெகு நிதானமாக.

"ஓகே! நானும் நாளைக்கு ட்வீட் பண்றேன். என் ஹஸ்பண்ட்கு நா ஃபுல் ஃப்ரீடம் குடுத்தேன். ரொம்ப ரொம்ப குட் வைஃபா நடந்துகிட்டேன். ஆனா அவர் தான் எனக்கு நல்ல புருஷனா உண்மையா நடந்துக்கலன்னு. அந்த கிக், கெத்து, ரிலாக்ஷேஷன்லாம் நானும் எப்படி இருக்குன்னு ஃபீல் பண்ணிக்கிறேனே ப்ளீஸ். என்னால குடிச்சு என் ஹெல்த்த ஸ்பாயில் பண்ணிக்க முடியாது, எனக்குன்னு சொல்ல க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸும் கிடையாது. சோ நா, எனக்காக பேசுற சோசியல் மீடியா ஃப்ரெண்ட்ஸ்ட்ட பேசிட்டு போறேனே, என்ன சொல்றீங்க?" என கேட்க, அவன் அவளில் இருந்து கையை எடுக்க, அவளும் அழுகையை நிறுத்திவிட்டிருந்தாள்.

"மே கமின்!" என மருத்துவர் வந்துவிட்டார். இருவரும் முறைத்துக் கொண்டு நின்றனர்.

"ஹலோ டாக்டர்!" என முகத்தை மாற்றி அவரை பார்த்து சிரித்தவன், அவன் உடல்நிலை பற்றி அவனே விசாரித்து கேட்டுக் கொண்டான்.

"ஏன் டேப்லெட்ஸ் எடுத்தீங்க குஹன்?" அவர்தான் அங்க முதன்மை மருத்துவர் என்பதால், அதுவரை யாரும் விசாரித்திருக்கவில்லை, அதுமட்டுமின்றி இப்படி மருத்துவமனை சார்பில் வருபவர்களை தவறாது காவல்துறையில் புகார் பதிவு செய்து விடுவர். அதனால் அவர்களே விசாரித்து கொள்ளட்டும் என விட்டிருந்தனர்.

"கம்ப்ளைண்ட் ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்களா டாக்டர்?" குகன் தான் கேட்டான்.

"ஆமா சார் நேத்து நீங்க வந்தத நிறைய பப்ளிக் பார்த்து ஃபோட்டோ எடுத்து, சோசியல் மீடியா ஃபுல்லா வைரல் ஆகிட்டு. நாங்க கம்ப்ளைண்ட் குடுக்கலனா எங்களுக்கும் தான் இஷ்யூ ஆகும். ஆக்சுவலா இப்ப கொஞ்ச நாளாவே நீங்க வைரல் கப்பிலா தானே இருக்கீங்க. சோ அவங்களே ரீசன்லாம் எழுதிட்டாங்க. போலீஸும் வந்து கேட்டுட்டு, நீங்க எழுந்திருக்கவும் சொல்லுங்கன்னு போயிட்டாங்க. ஆனா நா சொல்லாமலே ந்யூஸ் இந்நேரம் போயிருக்கும் வந்துட்ருப்பாங்க" என்றார் அவர் சிரித்தபடி.

பௌர்ணமி, குஹன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவரவர் கைப்பேசியை தேட, இருவருமே இரவு வரும் அவசரத்தில் எடுத்து வந்திருக்கவில்லை.

"நா கிளம்பலாமா டாக்டர்?" என்றான் குஹன்.

"தாராளமா போலாம். டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்றேன். பட் போலீஸ் வந்திடட்டும் அவங்களுக்கு ரீசன் குடுத்துட்டு நீங்க கிளம்பிடலாம்"

"ஓகே டாக்டர்" என்றுவிட்டு, "நீ வீட்டுக்கு கிளம்பு. அம்மாக்கு விஷயம் எப்படி தெரிஞ்சுருக்குன்னு தெரியல. அட்லீஸ்ட் நா ஃபைன்னு தெரிஞ்சா பேசாம இருப்பாங்க" என சொல்ல, பௌர்ணமி கிளம்ப போக, போலீஸ் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்.

இன்ஸ்பெக்டர் இரு உதவியாளர்கள் என மூவர் வந்திருக்க, பௌர்ணமியும் அப்படியே நின்றுவிட்டாள்.

"எப்படி இருக்கீங்க சார்? சூசைட் அட்டெம்ட்டுன்னு சொன்னாங்க, என்னன்னு டீடெயிலா சொன்னீங்கனா ரிப்போர்ட் எழுதிட்டு கிளம்பிடுவேன்" என்றார் அவர்.

"கிட்டத்தட்ட சூசைட் அட்டெம்ட்டு தான். ஆனா நா பண்ணல" என்றான் அவன்.

"அப்றம்?"

"என் பொண்டாட்டி கொஞ்ச நாளாவே ஸ்லீப்பிங் டேப்லெட்ஸ் எடுக்குறாங்க சார். அவங்களுக்கு வொர்க்குல ப்ளஸ் எங்க பெர்சனல்ல ஏதோ ஸ்ட்ரெஸ் சரியான தூக்கம் வரலன்னு அத எடுக்குறாங்க, அதுல நேத்து நல்லா தூங்கணும்னு ரெண்டு மூணு மாத்திரைய டீ'ல போட்டு வச்சுருந்துருக்காங்க, நா அது தெரியாம அந்த டீய எடுத்து குடிச்சுட்டேன்" என திக்காமல் திணறாமல் சொல்லி முடித்தான்.

அவனை கண்ணை அகல விரித்து பார்த்த பௌர்ணமி, அவன் முறைப்பில் முகத்தை சரிசெய்து கொண்டாள், "அதானே கதை வசனம் எழுதுறதுலையும், நடிக்குறதுலையும் எப்பேற்பட்ட ஆளு, ஷாக்க குறைடி சித்து" என அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு நின்றாள்.

இன்னும் சிலவற்றை அந்த அதிகாரிகள் குஹனிடம் கேட்டு மொபைலில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

"டாக்டர் ப்ரிஸ்க்ரைப் பண்ணாங்களா உங்களுக்கு?" என்றார் அந்த முதன்மை மருத்துவர் பௌர்ணமியிடம்.

"ஆமா, தூக்கமே வரலைன்னு கேட்டு‌தான் வாங்கினேன். அவங்க கொடுத்ததே டென் டேப்லெட்ஸ் தான்"

"நீங்க கண்டிப்பா கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணணும் மேடம்" என அவர் சொல்லவும்,

"என் வொர்க் பேலன்ஸ் பண்ணிட்டு வரேன் டாக்டர். ஸுயர்" என்றாள்.

"இன்னைக்கே அட்டண்ட் பண்ணலாமா டாக்டர்? அப்பாயிண்மென்ட் வாங்கணுமா? டாக்டர் அவாயிலபில்லா இருக்காங்களா?" என குஹன் கேட்க,

அவர் திரும்பி செவிலியரை பார்க்க, அவர் வேகமாக வெளியே விசாரித்து வர சென்றார். காவல் அதிகாரிகளும், குஹன் கூறியதை அப்படியே எழுதி கையெழுத்தை பெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டனர்.

"நா ஃபுல் நைட் தூங்கல குஹன். ரொம்ப டயர்டா இருக்கு. இப்படியேலாம் என்னால எந்த கவுன்சிலிங்கும் அட்டெண்ட் பண்ண முடியாது" என்றாள் மருத்துவர் முன் பொறுமையாக,

சென்ற செவிலியர் திரும்பி வந்து மருத்துவரிடம் எதையோ மெதுவாக சொல்ல, அவர் இவர்களிடம், "நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஈவ்னிங் ஃபோருக்கு வாங்க மேடம். நா அப்பாயின்மெண்ட் போட்டு வைக்க சொல்றேன். வந்த உடனே நீங்க கன்சல்ட் பண்ணிட்டு போற மாதிரி பார்த்துக்கலாம்" என சொல்ல, திரும்பி குஹனை ஒருமுறை பார்த்துவிட்டு, "ஓகே டாக்டர்!" என்றுவிட்டாள்.

இருவரும் வீடு கிளம்பி வர, பிள்ளைகள் இருவரும் வெளியே வராந்தாவில் அப்போது தான் தூங்கி எழுந்து வந்தவர்களாக பாதி தூக்கத்தோடு உட்கார்ந்திருக்க, அங்குமிங்கும் பரபரப்பாக நடந்து ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் விசாலாட்சி. நிலன், அஞ்சாநம்பி அவர்கள் மனைவிமார் துவங்கி, குஹனின் உடன்பிறப்புகளிடம் வந்து, இப்போது விஸ்வநாதரை வாயாலேயே வாங்கி கொண்டிருந்தார் அவர்.

"எல்லாத்துக்கும் காரணமே நீங்க தான், ரெண்டு பிள்ளை பெத்த உடனே உங்கள நா டிவோர்ஸ் பண்ணிருக்கணும். அப்படி பண்ணாம தான் இன்னைக்கு இந்த கடக்குட்டியால பிபி வந்து அல்லல் படுதேன். தூக்க மாத்திரை திண்ணுற மூஞ்சியா உங்க புள்ள மூஞ்சி? உங்களுக்கு நாலு எனக்கு நாலுன்னு வேணா குடுப்பானே தவிர அவேன் முழுங்கமாட்டான். இதுல ஏதோ கோக்குமாக்கு பண்ணிருக்கான் என்னன்னு தான் தெரியல" என அவர் பேச்சை கேட்டவாறே தான் காரிலிருந்து இறங்கி வந்தனர் இவர்கள் இருவரும்.

இவர்களை கண்டதும், "இந்தா வந்துட்டான். இருங்க அவன்ட்ட பேசிட்டு வந்து உங்கள பேசிக்கிறேன்" என ஃபோனை தூக்கி வராந்தாவில் கிடந்த சோஃபாவில் போட்டுவிட்டு புடவையை இழுத்து சொருகி கொண்டு அவர்களை நோக்கி வேகமாக நடந்து சென்றார், அதிலேயே இருவரும் அங்கேயே நின்றுவிட்டனர்.

"ஏன்டா அன்னைக்கு தான் நா கோயம்புத்தூர்ல இருந்தேன். டிவிட்டர் மூலமா உன் பொண்டாட்டி உன்ன டிவோர்ஸ் பண்ண போறதா எங்கட்ட சொன்னா கேட்டுகிட்டோம். இன்னைக்கு கருமத்துக்கு அடுத்த ரூம்ல தான இருந்தேன்? நீ தூக்க மாத்திரைய முழுங்க போறேன்னு என்ட்ட முதல்ல சொல்லிட்டு செஞ்சா என்ன? இந்த தடவ இங்கனதானே இருக்கேம் நானு? ந்யூஸ்ல சொல்லி தெரிஞ்சுக்கணுமோ நானும்?" என அவர் கூறியதில் குஹனுக்கு வெடி சிரிப்பு தான், ஆனால் வாய்க்குள் சிரித்துக் கொண்டான். வெளியே சிரித்தால் விசாலாட்சி இன்னும் பேசுவார் என தெரிந்ததாலேயே அடக்கிக் கொண்டான்.

"இந்தாடி சிலுப்பட்ட, ஜில்லா கலெக்டருன்னு நெனப்பா உனக்கு? எதையும் நேரடியாவே தெரியப்படுத்த மாட்டீங்களோ? எல்லாத்தையும் நாங்க ந்யூஸ்ல சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமோ? இந்த மூஞ்சியெல்லாம் தூக்க மாத்திரைய முழுங்குற மூஞ்சியா? அவனையே தூக்க மாத்திரை போட வச்சுருக்கனா நீ எப்பேற்பட்ட ஆளா இருப்ப? ரெண்டு பேருக்கும் இப்பத்தான் பனிரெண்டு பதிமூணு வயசுல அரச மரத்துல தொங்கிட்டு இருக்கதா நெனப்பா? உனக்கு முப்பத்தாறு அவனுக்கு நாப்பது, பாதி நரைதட்டிருச்சு தெரியும்ல? குடும்ப மானத்தை வாங்குற வயசுல இருக்கீங்களா ரெண்டு பேரும்?" என ஆவேசமாக பேச,

"அத்த அது தெரியாம நடந்துருச்சு" என்றாள் சமாளிப்பாக பௌர்ணமி.

"தெரிஞ்சே முழுங்குற ஆளு இல்ல நா பெத்தவன்னு எனக்கு நல்லா தெரியும்மா. ஒன்னு அவனுக்கு தெரியாம நீ கலந்து கொடுத்துருக்கணும். இல்ல நீ குடிக்க கலந்து வச்சத தெரியாம அவன் எடுத்து குடிச்சுருக்கணும். இப்ப இந்த ரெண்டுல நடந்தது எதுன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க. உங்கள பிள்ளைகன்னு பெத்து வளர்த்ததுக்கு ரெண்டு மரத்த நட்டு அத வளர்த்துட்டு போயிருக்கலாம் நிம்மதியா உட்கார நிழலாச்சும் தந்துருக்கும்"

"தூக்கம் வருது அத்த. ப்ளீஸ்"

"ஏன்டா நா என்ன கேட்கிறேன் இவ என்ன சொல்லுறா? ஃபோனையும் வீட்டுலயே வச்சுட்டு போய்ட்டு விளையாட்டு காட்றீங்களா? வீட்ல இருக்க மனுஷங்கள என்னைக்கு தான்டா மனுஷங்கன்னு நெனச்சு மதிப்பீங்க? பாவம் பார்ப்பீங்க?"

"அத்த சாரி. அவசரத்துல மொபைல் எடுக்க மறந்துட்டு போய்ட்டோம். காலைல இவங்க எழும்புற வர எனக்கு ரொம்ப டென்ஷன், ஃபோன் கைல இல்லன்னு எனக்கு தோணவே இல்ல. பிள்ளைங்களோட நீங்க இருக்கீங்க உங்களையும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு மட்டும் தான் தோணுச்சு"

"சரி தூக்க மாத்திரை இவன் சாப்பிட்டது உண்மையா இல்லையா?" என்றார் மற்றதை விடுத்து,

"ஆமா நா கலந்து வச்சுருந்தேன், அந்த டீயை அவங்க எடுத்து குடிச்சுட்டாங்க"

"நீ எதுக்கு கலந்து வச்சுருந்த?"

"அத குடிச்சா தான் தூக்கமே வரும். அதனால கலந்து வச்சுருந்தேன்" அவன் அம்மாவிடமே, அவர் பிள்ளை மேல் உள்ள கோபத்தில் தான் கலந்து வைத்தேன் என சொல்ல முடியவில்லை அவளால். அதனால் அவரை நேராக நோக்காமலே படபடவென்று சொல்லிமுடித்து, "தூங்க போறேன் அத்த, இனி எதுனாலும் உங்க மகனையே கேளுங்க" என சென்றுவிட்டாள். பிள்ளைகள் இருவரும் கூட அவளுடனே சென்றிருந்தனர்.

"ஏன்டா?" என அவர் ஆரம்பிக்கையிலேயே, அவர் தோளில் கை போட்டு அழைத்து சென்று, "சாப்பாடு செய்மா பசிக்குது. நா இன்னைக்கு வீட்ல தான் இருப்பேன், நாம நிறையா பேசலாம்" என சொல்லி செல்ல,

"இவன்ட்ட நா உட்கார்ந்து பேசத்தான் தூக்க மாத்திரைய போட்டுட்டு போய் ஆஸ்பத்திரில படுத்து எந்துச்சு வந்தானா இவன்?" என முனங்கி கொண்டே தான் சமையலறைக்குள் சென்றார்.

குஹன் சென்ற போது மூவரும் குளியலறையில் இருப்பது தெரிந்தது, பிள்ளைகள் இருவரையும் முதலில் அவர்கள் வேலையை முடித்து வெளியே அனுப்பிவிட்டு அவளும் குளித்து உடைமாற்றி வந்தாள்.

காலை உணவாக இட்லியும் சாம்பாரும் தயாராகி கொண்டிருக்க, "ரெண்டு பேரும் அப்பத்தாட்ட ரெடி பண்ணதும் சாப்பிட்டு விளையாடுங்க. அம்மா சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்" என கணவன், மாமியார் இருவருக்கும் கேட்கவே சொல்லியவள், ப்ரெட்டை டோஸ்ட் செய்து ஒரு முட்டையையும் போட்டுக் கொண்டு வந்து யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று படுத்து விட்டாள்.

மூன்று மணியளவில் குஹன் சென்று எழுப்பும் வரை நல்ல தூக்கம் தான் அவளுக்கு. ஆனால் வெளியே அவ்வளவு சத்தம், அவன் குடும்பமும், அவள் குடும்பமும் என மொத்த பேரும் வந்திறங்கியிருந்தனர்.

"நாலு மணிக்கு அப்பாயிண்மென்ட். ரெடியாகு போலாம்" என நின்ற குஹனை நிமிர்ந்து பார்த்தவள், "நா அல்ரெடி கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணிதான் ஸ்லிப்பிங் டேப்லெட்ஸே வாங்கினேன். அதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகல"

"அவங்கள பேசவிட்டு நீ கேட்ருந்தா நல்லா ஆகிருக்கலாம். நீ உனக்கு எல்லாம் தெரியும்னு டிசைட் பண்ணி அட்டென்ட் பண்ணிட்டு வந்துருப்ப"

"குஹன்!"

"ரெடியாகுடி" என்றான் பொறுமை போக, வெளியே உள்ள ஆட்கள் அவ்வளவு நேரமும் அவனை கேள்வியாக கேட்டு படுத்தியதில் போயிருந்தது அவன் பொறுமை எல்லாம்.

இப்போது முழுமையாக தயாராகி வெளிவந்தவள் நேராக சாப்பிட அமர, அவளையும் அங்கேயே பிடித்துவிட்டனர்,

"இங்க பாரு சித்து மற்ற எல்லா உறவுகளும் புருஷன் பொண்டாட்டி உறவும் ஒன்னு கிடையாது, மத்த ரிலேஷன்ஷிப்லலாம் பாரு பேசு பேசாதன்னு ஈசியா முறிச்சுட்டு போக முடியும், அப்றம் தேவைன்னு வந்தா சேர்ந்துக்கவும் முடியும். நம்ம மனசும் மறந்து ஈசியா மறந்துரும் நடந்த பிரச்சினைய மன்னிச்சுரும். ஆனா புருஷனும் பொண்டாட்டியும் போடுற சண்டை அப்படி கிடையாது, 'இப்படி பேசிட்டாரே நம்மளன்னு!' காலம் போன‌கடைசிலேயும் சொல்லி காட்ட வைக்கும், கணவனோட மன்னிப்ப, ஆதரவ மனசு சுணங்கும் போதுலாம் எதிர்பாக்கும். அது கிடைக்கலன்னு சூசைட் பண்ணிக்க நினைச்சா என்பது சதவீத புருஷன்மாரு பொண்டாட்டி இல்லாம தான் அலையணும். புருஷனுக்கு பொண்டாட்டி மேலயும் பொண்டாட்டிக்கு புருஷன் மேலயும் 'இது நம்ம பொருள்' என்ற எண்ணம் இருந்துட்டே தான் இருக்கும், அது கைமீறி போகும் போது தான் சண்டை அதிகமாகும். அந்நேரம் பொறுமை ரொம்ப முக்கியம். இப்படி டிவோர்ஸ், சூசைட் அட்டெம்ட்டுலாம் சரியான முடிவே கிடையாது. படிச்சு நல்ல பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்க நீ இப்படி பண்ணுவன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல" என பெண்கள் குழு பேசிய பேச்சில் அவளுக்கு காதில் ரத்தம் வராத குறை தான்.

அடுத்தாக ஆண்கள் அணி, விஸ்வநாதர், குஹனின் அண்ணன், குஹனின் அக்கா கணவர் என் அவளை சுற்றி அமர்ந்துவிட்டனர்.

"ஒருவரை ஒருவர் சார்ந்து, எண்ணங்களையும், செயல்களையும் பங்கிட்டு, சண்டையிட்டு அதில் ஒருவர் விட்டுக்கொடுத்து என செல்லும் திருமண வாழ்க்கை தான் நிலைத்து நிற்கும். இல்லாமல், தன் சுதந்திரம் மட்டும் போதும் என நினைக்கும் உறவுகள் பிரிவு என்ற நிலையில் தான் இறுதியில் வந்து நிற்கும், அது திருமணம் முடிந்த இரண்டு மாதத்திலும் நடக்கலாம், இரண்டு வருடத்திலும் நடக்கலாம், உங்களை போல் இருபது வருடத்திலும் நடக்கலாம். அதன் அடிப்படை காரணம் என்று பார்த்தால் புரிதல் இன்மை மட்டுந்தான். உங்கள் இருவரிடமும் முக்கியமாக அது தான் இல்லை. அமைதியான கணவனுக்கு அதிகம் பேசும் மனைவியும், அதிக எதிர்பார்ப்புடன் வாழ்க்கையை எதிர்பார்த்து செல்லும் மனைவிக்கு, தன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என சுயநலமாக யோசிக்கும் கணவனும் அமைவது தான் இயற்கையாக இருக்கிறது, அதிலும் புரிதலோடு வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்" என பேச, கேட்கும் பொறுமையை இழுத்து பிடித்து தான் அமர்ந்திருந்தாள் பௌர்ணமி.

"நா சூசைட் பண்ணுற ஐடியாவுலயே இல்ல! நீங்க பேசி பேசித்தான் வர வச்சுருவீங்க போல!" என மனதிற்குள் மட்டும் தான் புலம்ப‌ முடிந்தது. தைரியமாக பதில் பேசிவிடுபவள்‌ தான் அவள், இப்போது அமைதியாக இருக்க காரணம் முதல் நாள் குஹனுக்கு அவள் செய்தது, குற்ற உணர்வாக உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்ததனால் மட்டுமே.

"டேய் நிலா! உன் அக்கா அமைதியே சரியில்லையே! அடுத்த பாயாசத்த ரெடி பண்ணிட வேண்டியது தான்னு யோசிச்சுட்டு இருக்காளோ?" என அவளையே குறுகுறுவென பார்த்தவாறு நிலனிடம் விசாலாட்சி கேட்க,

"அப்படினா கண்டிப்பா முதல் பலி நீங்க தான் ரெடியாகிக்கோங்க" என்றான் நிலன்.

"ஏன்டா உன் அக்காலாம் அட்வைஸ் பண்ணா கேட்டுக்குற ஆளான்னு நா அவளுக்கு அட்வைஸ் கூட பண்ண போகலையே?"

"ஆனா இவ்வளவு அட்வைஸ் பண்ணுற ஆளுங்களையும் ஊர்ல இருந்து வரவச்சது நீங்க தான?"

"இங்கிருந்து போற வர உன் அக்கா தண்ணி குடுத்தா கூட குடிக்க மாட்டேன்டா" என வாயை குணட்டிச் சென்றார், சிரித்துக் கொண்டான் நிலன்.

"கிளம்பு சித்து போலாம். கெட்டிங் லேட்" என குஹன் தான் அவளை இங்கு கிடைத்த கவுன்சிலிங்கில் இருந்து காப்பாற்றி மற்ற இடத்தில் கொண்டு விட கிளப்பிச் சென்றான்.

"நீ எந்தன் பாதி இதுதானே மீதி, உனை விட்டு போக முடியாதம்மா, மறைந்தாலும் நான் மறு ஜென்மமே, என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி, அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி"

தலைவலியோடு காரில் ஏறி அமர்ந்தவளை இன்னும் வெறுப்பேற்றவே காரில் சாவியை போட்டதும் எஃப்எம்மில் பாட்டு ஒலித்தது. பட்டென்று அமர்த்தியும் விட்டாள்.


 

Shamugasree

Well-known member
Visa ma tha nalla purinju vechurukanga rendayum 🤣🤣🤣
Ella ud la avanga tha nalla score pannuranga. ivlo periya vishayam nadanthuruku leave a cancel.semjutu nambi innum varala
 
Top