எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

15 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator

அத்தியாயம் 15

பௌர்ணமி குஹன் இருவரும் வீடு திரும்பியபோது எல்லோரும் கிளம்பியிருந்தனர். விசாலாட்சி, நிலன், காந்திமதி மட்டுமே இருந்தனர். நிலன் அவன் மனைவியை இவ்வளவு தூரம் அழைத்து வரமுடியாது என அவள் அம்மா வீட்டில் தான் விட்டு வந்திருந்தான். இங்கு உள்ள தலைமை மருத்துவமனை அலுவலகத்தில் அவனுக்கு இரண்டு நாட்கள் வேலை இருந்தது. வந்த கையோடு அதையும் முடித்து செல்லலாம் என இருக்க, உடன் காந்திமதியையும் இருக்க வைத்திருந்தார் விசாலாட்சி.

விசாலாட்சி அவர் மூத்த பிள்ளைகள் இருவரும் குடும்பமாக கிளம்பும் போதே, "இருங்கடா வெளிய போன ரெண்டு பேரும் வந்திடட்டும் சொல்லிட்டு கிளம்புங்க" என நிறுத்தி வைக்கத்தான் முயன்றார்.

"நாம இத்தன பேரு இங்க வந்து உட்கார்ந்து அவங்க ரெண்டு பேரு வாழ்க்கைக்காக தான பேசுனோம்? அவங்க வீடு தான இது. இங்க போறோம் இத்தன மணிக்கு வருவோம். இவ்வளவு நேரம் ஆகும்னு எதாவது நம்மட்ட சொல்லிட்டு போனாங்களா? எங்கள விடு. உன்ட்டயோ அத்தைட்டயோ கூட சொல்லிட்டு போயிருக்கலாம்ல? சொன்னாங்களா? நம்மளலாம் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா உன் கடைகுட்டிக்கு?" என குஹனின் அக்காவும் அண்ணனும் பேசிவிட,

காந்திமதி தான், "கோச்சுக்காதீங்கப்பா, நீங்களாம் பெரிய பிள்ளைங்க உங்க கூடவே வளர்ந்ததால, பிரிச்சு மரியாதை தரணும்னு இல்லாம, உங்கட்டயும் சின்ன பிள்ளைக மாதிரி சலுகையா இருந்துக்குறாங்க. இப்ப ரெண்டு பேரும் அவங்களுக்குள்ளயே ஏதோ மனஸ்தாபத்துல இருக்கனால நம்மலாம் கண்ணுக்கு தெரியல. அவ்வளவு தான்" என பாவமாக சொன்னார்.

"இல்லனா மட்டும் நா பெத்ததும் நீ பெத்ததும் நம்மள மதிச்சுட்டு தான் அடுத்த வேலை பாக்குங்க போ" என நொடித்தார் விசாலாட்சி.

"எங்களுக்கும் பழகிதான் போச்சு அத்த. ரெண்டு பேரும் அந்த விஷயத்துல ஒன்னு தான். யாரை பத்தியும் கவலை கிடையாது. தன்ன மட்டும் பார்த்தா போதும், தான் சந்தோஷம் மட்டுமே முக்கியம்னு வாழ்ற ஆட்கள். இப்ப அது தான் பெத்த பிள்ளைங்கள விடவும் அவங்க சந்தோஷம் மட்டுமே முக்கியம்னு நினைக்குற நிலைக்கு கொண்டு வந்து விட்ருக்கு. இனியா திருந்த போறாங்க?" என்றான் குஹனின் அண்ணன் நடேஷ்.

"நாம சொன்னதுலாம் எந்த அளவுக்கு புரிஞ்சதுன்னு தெரியல. ஆனா இப்படி சூசைட்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆகாத போகாத வேலை. அத மட்டுமாவது அத்தையும் நீயும் ரெண்டு பேர் புத்திலேயும் உரைக்க எடுத்து சொல்லுங்க. நாங்க கிளம்புறோம் ம்மா. பார்த்து எடுத்து சொல்லி புரிய வச்சுட்டு நிதானமா நீ வந்தா போதும். அவனுக்கு எங்க மேல அக்கறை இல்லாட்டியும் தம்பின்னு அவன் மேல எங்களுக்கு அக்கறை இருக்கு. நாப்பது எட்டியாச்சு இன்னும் இருபதுல இருக்க மாதிரி இளமை துள்ளலோட இருக்க வேணாம்னு சொல்லி புரிய வச்சுட்டு வா" என காட்டமாக சொல்லி கிளம்பினாள் குஹனின் அக்கா மகிமா.

"நா பெத்ததுல ஒன்னுக்கு கூட வாய் குறைச்சு பேச வரல நிலா. எல்லாம் எனக்கு புத்தி சொல்லத்தான் கிளம்பி வராய்ங்க பாரேன்? இவனுங்க ஆளாளுக்கு ஆட்ட நா என்ன செக்கு மாடா?" என இவர் நிலனை இடிக்க,

"உங்க ஒரு வாய் தான் அத்த அங்க மூணா ஸ்பிலிட் ஆகிருக்கு. அப்ப நீங்க மூணு பேருக்கு சமம் தானே அத்த? உங்களால மட்டுந்தான் முடியும்" என்றான் அவன்.

"என்ன முடியும்?"

"இவங்கள சமாளிக்க!"

"அதுலாம் ஒரு காலம்டா. இப்ப ஒருத்தரும் என் பேச்ச கேட்குறதில்ல. எல்லாம் தலைக்கு மேல வளர்ந்துட்டு கழுதை வயசும் ஆகிட்டுன்னு நம்மள தான் பேசுதாங்க. உன்ட்டயாவது சொன்னாங்களாடா ரெண்டு பேரும் எங்க போயிருக்காங்கன்னு?"

"உங்களையே மதிக்கல. என்னைய எங்கிருந்து மதிக்க?" என வாயை பிதுக்கினான் நிலன்.

இருவரும் கிசுகிசுவென பேசியபடி இருக்க, நடேஷ், மகிமா இருவரும் பிள்ளைகளுடன் காரில் ஏறி விட்டனர். விஸ்வநாதர் குஹன் பிள்ளைகளிடம் பேசி முடித்து விசாலாட்சியிடம் வந்தார்.

"பிள்ளைகள கூட்டிட்டு வர்றதுன்னா சீக்கிரம் கூட்டிட்டு வர பாரு. அவங்க ரெண்டு பேரும் அவங்க பிரச்சினை தனியா விட்டாலே பேசி சரி பண்ணிப்பாங்க. நாம போடாத சண்டையா? நம்மளுக்கு யாரு‌ பஞ்சாயத்து பண்ண வந்தா? அதுமாதிரி அவங்களே பார்த்துப்பாங்க. முக்கியமா உன் கடைக்குட்டிய சீண்டி விடாத, செய்யாதன்னா செய்வேன்னு நிக்றவேன். பௌர்ணமி எப்படியும் சமாளிப்பா அவன, நீ சீக்கிரம் கிளம்பி வர பாரு" என்றார் விஸ்வநாதர்.

"சூசைடு பண்ண போனது யாரோ அட்வைஸ் வைக்குறதுலாம் என்கிட்ட. ஏன் இத மகன் கிட்ட சொல்ல வேண்டியது தான? கிரகத்த நல்ல குடும்பம்டா எனக்கு" என விரைப்புடன் தான் அனைவரையும் அனுப்பி வைத்தார் விசாலாட்சி.

அவர்கள் கிளம்பிய ஒரு மணிநேரத்தில் தான் இருவரும் வந்துவிட்டிருந்தனர். வரும் வழியில் அவரவர் யோசனையில் தான் வந்திருந்தனர். பௌர்ணமி எதுவும் பேசவோ கேட்கவோ கூட முயலவில்லை.

வந்திறங்கி வீட்டினுள் நுழைந்தவர்களை, "எங்கதான்டா போனீங்க? உன்னால உன் அண்ணன்ட்டயும் அக்காட்டையும் நா திட்டுவாங்கிட்டு நிக்றேன். உன் வீட்டுக்கு உங்கட்ட பேசன்னு வந்தவங்கள கூட கவனிக்காம என்னடா பெரிய வேலை பாக்றீங்க?" என பிடித்துக் கொண்டார்.

"ம்மா அவங்க என்ன அடுத்த ஆளுங்களா? தம்பி வீட்டுக்கு வந்தாங்க கிளம்பிட்டாங்க, சிம்பிளா பாருங்க, எல்லாம் சிம்பிளா தெரியும்" என விசாலாட்சியை விலக்கி நடந்தவன், ஃபோனை ஜார்ஜரில் போட்டு நிற்க, விசாலாட்சி பௌர்ணமியை முறைத்து திரும்பினார்.

"இவங்க சொல்லிருப்பாங்கன்னு நெனச்சேன் அத்த. எல்லாரும் கிளம்பிட்டாங்களா?" என்றாள் வீட்டை சுற்றி அளவிட்டு.

"அதுசரி. இளவரசி நகர்வலம் முடிச்சு வர்ற வரை காத்திருக்கணுமாக்கும்?"

"ஹாஸ்பிடல் தான் போனோம். டாக்டர்ஸ் சூசைட்னு முடிவு பண்ணி, கவுன்சிலிங் அட்டென்ட் பண்ண சொல்லிட்டாங்க. அது தான் முடிச்சுட்டு வர்றோம்"

"அவங்க சொன்னா மட்டும் கேட்டுக்கிடுவீங்களா ரெண்டு பேரும்?"

"அத்த. இங்க யாரும் சூசைட் பண்ற ஐடியால இல்ல. வாழணும் நிறைய ஜெயிக்கணும்னு நினைக்குறவ நா. யார் யாரோ என்னவோ செய்றதுக்குலாம் நா சூசைட் பண்ணிக்க மாட்டேன். தூங்கி எந்திச்சா என் வேலைய நிம்மதியா பாக்கலாமேன்னு தான் அந்த மாத்திரைய எடுக்குறேன். வேற காரணம இல்ல. மறுபடியும் இத பேச நீ வேணாம்" என சொல்ல,

"அப்ப நெசமாவே பொண்டாட்டி பாசத்துல நீதான் மாத்திரைய முழுங்கிட்டியாடா?" என்றார் ஜார்ஜரில் போட்டு வந்த வேகத்தில் சோஃபாவில் சயணித்திருந்தவனிடம்.

"ம்மா. பொண்டாட்டி மேல பாசத்துல உனக்கு இன்னொரு பேரனோ பேத்தியோ வேணா தருவேன். சூசைட்லாம் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியாதா?" என அவன் நக்கலாக சொல்ல, பௌர்ணமி முறைத்தவாறு அவர்கள் அறை சென்றுவிட்டாள். செல்பவளை குறிஞ்சிரிப்புடன் பார்த்தவாறு கண்ணை மூடிக்கொண்டான் குஹன்.

"டேய் நிலா டிவோர்ஸ் கேட்குற பொண்டாட்டிட்ட இப்புடி பேசுனா என்னடா செய்வா? அதுலையும் உன் அக்கா சிலுப்பி என்ன செஞ்சுருப்பா?"

"பாயாசம் தான்"

"அப்ப அவ தான்டா இவனுக்கு கலந்து கொடுத்துருக்கா. இவன் இவனோட பவுசு வெளிய தெரிஞ்சுடும்னு சமாளிக்காம்னு நெனைக்கேன்"

"அப்படி செஞ்சுருந்தாலும் தப்பு தான். விளையாட்டுக்கு பண்றதில்ல தான இது?"

"இதுங்களுக்கு விளையாடுற வயசே இல்லங்கேன் நானு. நாம பேசுறதுலாம் கேட்காமலா இருக்கும்? பாரு கேட்காத மாதிரியே சயணத்துல இருக்குறத? விடாகண்டன்டா இவன், இவன்ட்ட தூக்க மாத்திரையே துண்ட காணும் துணிய காணும்னு போயிருக்கும்"

"உங்கள வச்சுகிட்டு" என அவரை விட்டு குஹனிடம் சென்று அமர்ந்து, நிதானமாக முந்தைய தினம் நடந்ததை விசாரிக்க முயன்றான் நிலன்.

"மாமா!"

"சொல்லு நிலா. கௌதமி, மிதிலா எப்படி இருக்காங்க? மிதிலா ஸ்கூல் எப்படி பிக் பண்ணிக்குறாளா?" என விசாரித்தான்.

"அதெல்லாம் நல்லாருக்காங்க மாமா. இப்ப அது விஷயம் இல்ல"

"டெலிவரி எப்போ?"

"இன்னும் ரெண்டு மாசம் இருக்கு மாமா. என்ன பேச விடுங்களேன்"

"சரி பேசு. உன்ன விசாரிக்கவே இல்லையேன்னு கேட்டேன்டா, அதுக்கும் சலிச்சுக்குற நீ" என தோள்களை குலுக்கி கொண்டான்.

"அக்கா, ஹரிணி, கிருத்தி பத்தி நானும் விசாரிக்கணும் மாமா. என்னாச்சு? ஏன் டிவோர்ஸ், இப்ப சூசைட்னுலாம் பப்ளிக் நியூஸ் விடுறளவுக்கு கொண்டு வந்துருக்கீங்க. எதுவும் பிக் ப்ராஜெக்ட் படத்துக்கு ப்ரோமோஷன் பண்றீங்களா?"

"இப்படியும் ப்ரோமோஷன் பண்ணலாமா? எனக்கு அவ்வளவு நீட் இல்லையேடா? ஓரளவுக்கு செட் பண்ணி தானே வச்சுருக்கேன். குஹன் படம்னா நம்பி துட்ட கட்டி போய் பார்க்கலாம்னு. அப்றமு ஏன் இப்படிலாம் ப்ரோமோஷன் பண்ணணும் அதும் என் ஃபேமிலிய நானே அசிங்கபடுத்துற மாதிரி?"

"அப்றம் எதுக்கு மாமா இவ்வளவும்? நீங்க ரெண்டு பேருமா இப்படின்னு என்னால நம்பவே முடியல. சண்டை இல்லாம ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சு விட்டுகொடுத்து லைஃப்ல ஜெயிச்சவங்க‌. எங்களுக்குலாம் எக்ஸாம்பிளா இருக்குறவங்க. இப்ப ஏன் இப்படி?"

"சித்துக்கு, என்ட்ட சில விஷயங்கள் இப்ப பிடிக்கல. அந்த கோவத்துல சிலது செய்றா. ஐ கேன் மேனேஜ் நிலா. டோன்ட் வொர்ரி. உனக்கு உன் அக்கா ஃபேமிலி தான் இது. பட் எனக்கு இது என் ஃபேமிலிடா" என சாவகாசமாக அவன் அமர்ந்து கூறிய தோரணை நிலனுக்கு நிம்மதியை தான் தந்தது.

"இந்த மாத்திரை போடுறதுலாம்?"

"உன் அக்கா கலந்து வச்சுருந்தா நா எடுத்து குடுச்சுட்டேன்டா. ரெண்டு பேருக்கும் வேறெந்த ஐடியாவும் இப்ப வர கிடையாது. இனியும் வராது‌. ஓகேவா?" என மற்றவர்களிடம் சொன்னதையே தான் அச்சுபிசகாமல் நிலனிடமும் பொறுமையாக கூறிக்கொண்டிருந்தான் குஹன். தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார் விசாலாட்சி.

மறுநாள் காலையில் நிலன், குஹன் அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட, மதியத்திற்கு மேல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பாட்டிகள் இருவரும், "உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புத்திய குடுக்க சொல்லி கேட்டுட்டு வருவோம்டா" என கோவில் கிளம்பி விட்டனர். வீட்டில் பௌர்ணமி மட்டுமே இருந்தாள்.

'எங்க ரெண்டு பேரையும் பிடிச்சு வச்சுருக்குறதுன்னு எதுவும் இருக்கா என்ன? அதுக்கு பேரு தான் லவ்'ன்னு இத்தன நாள் நம்பிட்டு தான் இருந்தேன். ஆனா அது தான் ஒன்னுமே இல்லன்னு ஒரு வார்த்தைல சொல்லிட்டாங்களே. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்க பேபீஸ் தான் எங்கள பிடிச்சு வச்சுருக்காங்கன்னும் சொல்ல முடியாது. அவங்கள டிபென்டெண்ட்டா தான் வளர்த்துருக்கேன் நான். கண்டிப்பா இவங்களுக்காகனாலும் சேர்ந்து இருக்கணும்னு தோணுற அளவுக்கு எங்க பாண்ட் இல்லையே? எதுவுமே இல்லாம இத்தன வருஷம் என்ன பேசிஸ்ல நாங்க ஃபேமிலியா இருந்தோம்?'

இப்போது அவள் மூளை இதையே தான் சுற்றி வந்தது. உண்டாலும் உறங்கினாலும் தலைக்குள் இந்த குடைச்சல் இருந்து கொண்டே இருந்தது.

மாலையில் குளித்து பிங்க் நிற குர்த்தியில் இறங்கி வந்தவளுக்கு, வெறிச்சோடி இருந்த வீடு வீட்டில் யாரும் இல்லை என சொல்ல, அவளுக்கென ஒரு டீயை போட்டு கொண்டு வந்து முன்னால் வராந்தாவில் கிடந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். ஆடைக்கான வடிவமைப்புகளை வரைந்து வைத்து கொஞ்சம் மனதை திசை திருப்பலாம் என்றால் கவனம் அவளுக்கு அதில் செல்ல மாட்டேன் என நின்றது. இந்த குடும்ப பிரச்சினையை எல்லாம் விட்டு வெளிவந்தால் மட்டுமே முழுமையாக பரந்து விரிந்து சுவாசிக்கவும் சிந்திக்கவும் முடியும் என்றே தோன்றியது அவளுக்கு.

அவள் வந்தமர்ந்த இரண்டொரு நிமிடங்களிலேயே குஹன் அவன் காரில் வீட்டினுள் நுழைந்தான். டீயை மிடறாக அருந்தி கொண்டிருந்தவள் அவனையே தான் பார்த்திருந்தாள். கருப்பும், சாம்பலும் கலந்த நிறத்திலான டீசர்டும் ட்ராக்குமாக வந்திறங்கியவனை நாற்பது வயதுக்காரன்‌ என சொல்வதற்கு இல்லை. அவள் அவனை இத்தனை வருடங்களில் நிதானமாக இருந்து ரசித்ததும் இல்லை, ரசிக்காமலும் இல்லை.

பல முறை, விழாக்களில், படத்திற்கான ஸ்டில்களில், ஒரு நிமிடத்திற்கும் கூடவே, "வாவ்!" என அவனை நின்று பார்த்து கடந்திருக்கிறாள். அந்நேரத்தில் அதிலிருப்பது அவள் கணவன் என்ற பெருமை உள்ளுக்குள் முகிழ்ந்து அமிழ்ந்து கொள்ளும் அவ்வளவே!

"ஜிம்முக்கு போறதில்ல, டைமுக்கு சாப்பிடறதில்ல, டைமுக்கு தூங்குறதில்ல, எதையும் கரெக்ட்டா ஃபாலோ பண்றதில்ல, இதெல்லாம் பத்தாதுன்னு ட்ரிங்க்ஸ் ஹேபிட் வேற. ஆனா பெர்ஷனாலிட்டிய மட்டும் கரெக்டா மெயின்டெய்ன் பண்ணிடுறாரு. எதுக்கா இருக்கும்? நா பார்க்கவா? ம்கூம்" என முனங்கியபடி விடாமல் பார்த்திருந்தவளை, தானும் பார்த்தே தான் வந்து அவளருகில் அமர்ந்தான்.

"சைட்லாம் அடிக்குற? டீயா சித்து?" என அவள் கையில் இருந்ததை தான் வாங்கி கொண்டு குடிக்க துவங்கியவன், "சுரேந்தர் வரேன்னு சொன்னார். அடுத்த ப்ராஜெக்ட். ட்ரைக்ட் பண்ணுவோமா இல்ல ஆக்டிங் எடுப்போமா? நீ என்ன சொல்ற?" என கேட்டவனை, முறைத்து பார்த்தாள்.

"என்னடி முறைக்குற? சஜஷன் தானே கேட்கிறேன்?"

"எதுக்கு புதுசா கேட்கிறீங்க? இதுக்கு முன்ன ஏன் கேட்டதில்லை?" என்றாள் நக்கலாக.

"நீ தான் புதுசா டவுட்லா படுற, டிவோர்ஸ் கேட்குற, ஆள் வச்சு ஆடியோலா கேதர் பண்ற. தூக்க மாத்திரை வேற கலந்த தர்ற. அதான் இனி உன்ட்ட கேட்டே எல்லாம் செய்யலாம்னு இருக்கேன். பாத்தியா இப்ப கூட உன் கையால டீயை தைரியமா வாங்கி குடிக்கிறேனே"

கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்தவள், திரும்பி அவனை மேலிருந்து கீழ் பார்த்து, "அது நா குடிச்சுட்ருந்தது, அதனால வாங்கி குடிச்சீங்க"

"சோ வாட். குடிச்சேன்ல?"

"ஏதோ ப்ளான் பண்ணிட்டீங்கள்ல?அப்ப டிவோர்ஸ் தர மாட்டீங்க ரைட்?" என புருவம் சுருக்கி கேட்க,

"நீ இல்லாம நா எப்படிடி தனியா வாழுவேன்?" என அவள் மேல் கைபோட்டு உடும்பாக அருகில் இழுத்தவனை, பட்டென்று தட்டிவிட்டவள், எழுந்து எதிரே வந்து நின்று லேசாக குனிந்து அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"ஆள்மாறாட்டம் எதுவும் பண்ணிட்டு வந்துருக்கீங்களா?"

"ம்ச் செத்து பொழைச்சு வந்துருக்கேன்டி. கொல்ல பாத்தல்ல நீ?"

"நேரா பேசுங்க எதுனாலும்"

"நேரா பேசவா? சரி சித்து, இப்ப உனக்கு எதுக்கு டிவோர்ஸ் வேணும்?" என்றான் சாதாரணமாக. அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் தன்மை தான்.

"திரும்ப திரும்ப கேட்கணுமா உங்களுக்கு? நீங்க என்னோட வாழ்ந்தத வேஸ்ட்டுன்னு சொல்லிருக்கீங்க? நா ஒரு யூஸ்லெஸ், வேதாளம், என்னால நிம்மதி இல்ல, பெஃமினிஸ்ட், இன்னும் நிறைய. இந்த ஆறு மாசமா நா யோசிச்சு யோசிச்சு குழப்பிட்டு என் வாழ்க்கைய நா வாழ்ந்ததையே வேஸ்ட்டுன்னு யோசிக்க வச்சீங்களே அத ரப்பர் வச்சு அழிக்க முடிஞ்சா அழிச்சு எனக்கு மைண்ட் பீஸ் தாங்கன்னு கேட்கிறேன் புரியலையா? கூடவே வச்சு என்ன சாவடிக்கணுமா உங்களுக்கு?" என அவன் முன் முறைத்து பார்த்தவளை, அதே அமைதியான பார்வை தான் பார்த்தான்.

"உள்ள சிரிக்கிறீங்களா? நா மொத்தமா மென்டல் ஆகிருந்தா இன்னும் பார்த்து சிரிச்சுட்டே இருந்துருப்பீங்களோ?" என கேட்டவளுக்கு என்ன முயன்றும் குரல் கமறியது. எவ்வளவு தைரியமான பெண்ணாகினும், அவளுக்கு பலவீனமானவன் முன்பு அந்த பலவீனம் வெளிப்பட்டுவிடும் போலும். இறுக்கி பிடித்தாலும் உடைந்து விடுகிறாள்.

அவள் கைபிடித்து அருகில் இழுத்து, வயிற்றை சுற்றி பிடித்தவன், "ஏன்டி அத தான் என்னைக்கோ ஒரு ஃபோலோல பேசிட்டேன்னு சொன்னேன்ல. ஏதோ குடிச்சுட்டு உளறுனான்னு விடாம அத போய் பெருசு பண்ணுற? வேற எப்பவாவது இத்தன வருஷத்துல உங்கிட்ட உன்கூட நா சந்தோஷமா வாழலன்னு சொல்லிருக்கேனா இல்ல செயல்லையாது காமிச்சுருக்கேனா? நா உன்னோட ரொம்ப ஹேப்பியா வாழ்ந்தேன்டி, வாழுறேன், இனியும் வாழுவேன் போதுமா? அந்த ஆடியோவ மறந்துடேன் ப்ளீஸ்"

"எப்படி மறக்கலாம்? அதையும் சொல்லி குடுங்க"

"நாம வேற ட்ரிப் எதுவும் ப்ளான் பண்ணலாமா?"

"எனக்கு உங்ககிட்ட இருந்து ஸ்பேஸ் வேணும். என்னைய பேசுனதுக்கு நீங்க உண்மையா ஃபீல் பண்றீங்கன்ற நிம்மதி வேணும். செய்ய முடியுமா உங்களால?"

"சரி பண்ணிடலாம்!" என அவளிலிருந்து இரு கைகளையும் எடுத்து, 'தம்ப்ஸப்!' செய்து வேறு காண்பித்தான்.

'இப்படிலாம் பேசுறவனே இல்லையே? அவ்வளவு சீக்கிரம் இறங்கி வர கூடியவன் இல்லையே அவள் கணவன்!' என கனவோ நனவோ என தான் புரியாத பார்வை பார்த்தாள்.

"என்னடி சிலுப்பி இன்னும் நம்ப மாட்டேங்குற? இதுக்கு மேலலாம் என்னால வசனம் பேச முடியாது அது இன்னுமே சினிமா டயலாக் மாதிரி தான் தெரியும் உனக்கு" என இழுத்து மடியில் உட்கார வைத்தான், நறுக்கென்று கிள்ளி எழுந்து நின்றாள்.

"இப்ப எதுக்கு இது? என்ன ப்ளான்ல இப்படி வீட்லயும் ஓவர் ஆக்டிங் பண்ணிட்ருக்கீங்க?"

"ஆக்டிங்கா? அவ்வா! பொண்டாட்டி எதுக்கோ நம்ம மேல கோவத்துல இருக்காளேன்னு சமாதானம் பண்ண உன்னையே சுத்தி சுத்தி வந்து விஷயத்த தெரிஞ்சுட்டு அதெல்லாம் ஒன்னுமே இல்ல, இதுக்காலாம் என்ன வேணாம்னு சொல்லாதன்னு கெஞ்சுறேன் என்னைய நீ எப்படி சொல்ற பாத்தியா?"

"நார்மலா பேசுங்க முதல்ல. இரிட்டேட் ஆகுது எனக்கு" உண்மையில் அவன் சாதரணமாக பேச பேச எரிச்சல் தான் வந்தது அவளுக்கு.

"நா பேசவே இல்லை போதுமா? நீ பேசு நா கேட்கிறேன்"

"எனக்கு டிவோர்ஸ் வேணும். உங்களோட எனக்கு வாழ‌ வேணாம்"

"எனக்கு நீ வேணும் சித்து. நீ ஹரிணி, கிருத்தின்னு எனக்கு நா வீட்டுக்கு வர்றப்போ என் ஃபேமிலின்னு நா வந்து கட்டிக்க நீங்க மூணு பேரும் வேணுமே" என மேல்பூச்சே இல்லாமல் தான் கேட்டான்.

"அப்படி எதுக்கு உங்களுக்கு ஒரு போரான வாழ்க்கை வேணும்?"

"ஓ காட். போருன்னு தெரியாம சொல்லிட்டேன்டி. நீ வேணா பதிலுக்கு, 'உன்னோட மனுஷி வாழுவாளா'ன்னு கேட்டு என்னைய பழிவாங்கிடேன்?"

"அதெப்படி உங்களுக்கு அப்படி பேசுனது அவ்வளவு ஈசியா தெரியுது? என்னால டைஜஸ்ட்டே பண்ணிக்க முடியல. நம்ம ரெண்டு பேரு நடுவுல என்னதான் இருக்குன்னு சொல்லுங்க"

"சித்து!"

"எஸ் சித்து தான். சொல்லுங்க. உள்ள இல்லாம அப்படிலாம் பேச வருமா? எனக்கு தெரியணும்?"

தலையை அழுந்த கோதி, நிமிர்ந்தவன், "ஜென்ஸ்குள்ள வரும்டி. சரி வென் வீ ஹேவ் அவர் லாஸ்ட் இன்டிமெசி நைட் சொல்லு பார்ப்போம்?" என கேட்க, விழித்தாள் சித்ரா.

"யோசிச்சே சொல்லு" என்றான்.

"நோ ஐடியா!"

"ம்ம். எனக்கும் நோ ஐடியா தான். அந்த டாக்டர் கேட்டதெல்லாம் எவ்வளவு நிஜம். நாம தனித்தனியா ஹேப்பியா தான் இருந்தோம். ஆனா சேர்ந்து? ப்ரொஃபெஷன காதலிச்சா லைஃப் பார்ட்னர விட்டுடணும்னா இருக்கு? நாம அதான் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன். எனக்கும் ஃபர்ஸ்ட் தெரியல, நாம ஹேப்பியா தானே இருக்கோம்னு நம்பிட்டு தான் இருந்துருக்கேன். ஆனா ஒரு டூ இயர்ஸ் முன்ன ஒரு நாள் அப்படி இல்லன்னு முகத்துல அறைய புரிஞ்சுகிட்டேன்"

குறுக்கிடாமல் அவனையே பார்த்து நின்றாள் பௌர்ணமி.

"பட ஷுட்டிங்ல ஸ்டென்ட் ஆக்டர்ஸ்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு. கொஞ்சம் பெரிய அடி தான். அதுல நாலு பேருக்கு ரொம்ப அடி. ஒருத்தர் இறந்தே போயிட்டாரு. மீதி மூணு பேருக்கும் லைஃபே அந்த இடத்துல ஆஃப். அந்த இடத்துல நாங்க முந்நூறு பேரு நின்னுருப்போம். ஆனா எல்லாமே போச்சேன்னு அழுதது அந்த பையனோட பொண்டாட்டி மட்டுந்தான். அதே மாதிரி பாதிக்கப்பட்ட மத்த மூணு பேரோட வைஃபும் இன்னைக்கு வர அழுதுட்டு தான் நிக்றாங்க. மத்த எல்லாரும் நா உட்பட அன்னையோட அதை மறுந்து அடுத்த வேலைய பார்க்க போயிட்டோம்" என்றவன் நிறுத்தி விட்டு அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

அசரவில்லை பௌர்ணமி, "சொல்லுங்க!" என்றாள்.

"அந்த இடத்துல நீ இருந்துருந்தா என்ன பண்ணிருப்பன்னு நினைச்சேன். நீ ஒரு இன்டிபென்டென்ட் உமன். எந்த வகையிலும் என்னைய நம்பி இல்ல. எனக்காக அழகூட மாட்டன்னு தான் தோணுச்சு. ஈசியா மூவ்வான் ஆகிடுவ. அதுதான் கரெக்ட்டும் கூட. ஏன் நின்னு நினைச்சு அழுதுட்டே இருக்கணுமா என்ன? உன் வாழ்க்கைய அடுத்தும் நீ வாழத்தான் வேணும். ஆனா உனக்கு என்ன பத்தின நினைவுகள்னு நா என்ன குடுத்தேன்னு யோசிச்சு பார்த்தேன்" என்றுவிட்டு, தலையை அசைத்து, "நத்திங்க்!" என்றான், மீண்டும் சில நொடி அமைதிக்கு பின், "சேம் நமக்குள்ள மாத்தி நடந்தாலும். நீ இந்த இருபது வருஷத்துல எனக்கு என்ன ஸ்வீட் மெமரீஸ் குடுத்தன்னு கேட்டா. நத்திங் தான். இதான் நாம வாழ்ந்த வாழ்க்கையோட ஓவரால் வியூ. இத அப்பவே உன்ட்ட வந்து சொல்லிருந்தா, 'டோன்ட் வேஸ்ட் மை டைன்' னு சொல்லிட்டு போயிருக்க மாட்ட நீ? அதான் நா சொல்லல, அதோட எக்ஸ்போஸர் தான் அந்த ஆடியோ கூட. உங்கிட்ட நா லாஸ்ட் வர எதையும் எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது, திடீர்னு உங்கிட்ட அதிக லவ்வ எதிர்பார்க்கவும் கொடுக்கவும் கூட வரலை எனக்கு. இப்படியே தான் இனி நாம இருந்தாகணும்னு நினைக்றப்ப உள்ளிருந்து ஒரு அழுத்தம், கோவம் வெளிப்படுமே அது தான் சித்து அந்த ஆடியோ பேச்சு. இப்ப நீயும் அதே ஃபீல் பண்ற நினைக்குறப்ப எனக்கு சந்தோஷமா தானே இருக்கும்? அதான் நா பேசுனத பெரிசா எடுக்காதன்னு திரும்ப திரும்ப சொன்னேன்"

"இருக்குறது ஒரு வாழ்க்கை, எனக்காக நான் வாழ்றேன் உனக்காக நீ வாழுன்னு ஹேப்பியா வாழ்றோம்னு நம்ம நினைச்சோம். ஒரு வயசு வரைக்கும் அது ரசிக்கவும் செய்யும். அப்றம் டக்குன்னு வாழ்ந்து முடிச்சாச்சு செத்துரலாம்னு நாம நினைச்சதும் கிளம்பிட டூரா வந்துருக்கோம்? நின்னு அனுபவிக்கணும். அதுவரை சந்தோஷத்த எப்படி தனியா அனுபவிச்சியோ அதேமாதிரி தனிமையையும் தனியா அனுபவிக்கணும். எனக்கு அந்த தனிமைய அனுபவிக்க வேணாம் சித்து" என நிறுத்த, அதிசயமாக தான் பார்த்தாள்.

தன் முதுகில் தண்டுவடத்தில் கைவைத்து காண்பித்தவன், "இதோ இந்த இடத்துல அலர்ஜி வந்து சின்ன ஆயின்மெண்ட் போட்டா சரியாகிடும்னு இருக்கும்போது, உன்ட்ட தான் போடுடின்னு வந்து குப்புற படுத்து காட்ட முடியும். வேற யார்ட்டையும் காட்டி ஈசியா கேட்டுட முடியாது. புருஷன் பொண்டாட்டி உறவு சின்ன விஷயம்னாலும் உள்ள இருக்க பாண்டோட ஆழம் அதிகம். டாக்டர்லாம் அப்றம் தான்டி சித்து" என பேசியவன், "எங்கம்மா இருந்துருந்தா, உன் முதுக சொரியத்தான் அவ வேணும்னு இவ்வளவு நேரமு தம் கட்டி பேசுனியான்னு கேட்டு என்னைய க்ளீன் போல்ட் ஆக்கிருப்பாங்க" என சிரித்தான், அவனை தான் புருவ சுழிப்புடன் பார்த்திருந்தாள் பௌர்ணமி.
 
Top