டீசர் 1
அவளை மேலும் முறைத்த கீர்த்தியோ, “நான் கடைக்கு போயிட்டே வந்துட்டேன் எருமை. சுத்தி என்ன நடக்குதுன்னே தெரியாம, அப்படி எதுல தான் மூழ்கி இருப்பியோ?” என்றாள்.
“ஹ்ம்ம், புகழ்ங்கிற போதையில தான் மூழ்கிட்டேன் கீர்த்து.” என்று ஆரபி கண்ணடிக்க, “க்கும், ஒரு ஓட்டை கதையை எழுதிட்டு, அதுக்கு நாலு பேரு ‘நைஸ்’னு கமெண்ட் பண்ணதுல, உனக்கு புகழ் வந்துடுச்சாமா?” என்று தோழியை கேலி செய்தபடி அவளருகே அமர்ந்தாள் கீர்த்தி.
“ஷு, பொறாமை டி உனக்கு! பாரு, நீயும் தான் ஆஃபிஸ்ல ஓடா தேயுற அளவுக்கு வேலை பார்க்குற. என்னைக்காவது உன் மேனேஜர் பாராட்டியிருக்காரா? இங்க பாரு, ஒரே கதை... அதை இன்னும் முடிக்க கூட இல்ல, அதுக்குள்ள எத்தனை கமெண்ட்ஸ்? இந்த ஸ்பீட்ல போனா, இன்னும் அஞ்சு வருஷத்துல என்னை நீ ‘புக் சைனிங் செரிமனி’ல தான் பார்ப்ப கீர்த்து.” என்று தூங்கி எழுந்து கழுவப்படாத எண்ணெய் படிந்த முகம் மினுமினுக்க கூறினாள் ஆரபி.
“எதே, ‘புக் சைனிங் செரிமனி’யா? கொஞ்சமாச்சும் ரியாலிட்டிக்கு வாடி. அதுவும் இந்த காப்பி கதைக்கு எல்லாம் அவ்ளோ சீன் இல்ல.” என்று கீர்த்தி கூறியதும் பொங்கி விட்டாள் ஆரபி.
“காப்பி கதையா? எவ்ளோ தைரியம் இருந்தா காப்பி கதைன்னு சொல்லுவ? உனக்கு தெரியுமா, மொத்தமே ஏழு ஸ்டோரி லைன் தான் இருக்கு! அதை தான் மாத்தி மாத்தி எழுதணும்.” என்று மூக்கு விடைக்க பேசிய ஆரபியோ, “வந்துட்டா காப்பி கதை பால் கதைன்னு!” என்று முணுமுணுக்க, அவளை பார்த்து சிரித்த கீர்த்தியோ, “ஸ்டோரி லைன் காப்பின்னா பரவால, இங்க ஸ்டோரியே காப்பியா இருந்தா என்ன பண்றது?” என்று மேலும் சீண்டினாள்.
“அப்படி என்ன பெருசா காப்பி அடிச்சுட்டேன்?” என்று ஆரபி வினவ, “பணக்கார ஹீரோ, பாவப்பட்ட ஹீரோயின், சித்தி கொடுமை, தங்கச்சி பொறாமை – இதெல்லாம் சிண்டரெல்லா கதைல வரது தான? இதையே எத்தனை வருஷமா படிக்க?” என்றாள் கீர்த்தி.
“நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமா? என்னை மட்டுமில்ல ஓர் ஜெனரையே குறை சொல்ற!” என்று ஆரபி உதட்டை பிதுக்க, “சரி, உன் கதைல நீ என்ன புதுசா பண்ணியிருக்க சொல்லு பார்ப்போம்.” என்றாள் கீர்த்தி.
“என்ன இப்படி கேட்டுட்ட? என் கதையில வர வில்லி கேரக்டரை எப்படி செதுக்கி இருக்கேன் பார்த்தியா? யாரா இருந்தாலும் அவளைப் பத்தி படிக்கிறப்போ ஆட்டோமேட்டிக்கா வெறுப்பு வந்துடும். நீ வேணும்னா கமெண்ட்ல பாரேன், முக்கால்வாசி பேரு அவளை திட்டியிருப்பாங்க. இதுவே, அந்த கேரக்டருக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி தான?” என்று பெருமையாக பேசினாள் ஆரபி.
டீசருக்கான உங்க கருத்துக்களை கீழ இருக்க கருத்து திரியில் பகிருங்க.
பாவை கைப்பாவையோ? - கருத்து திரி
"பாவை கைப்பாவையோ?" கதைக்கான கருத்துகளை இங்கு பகிரவும்.
narumugainovels.com