எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் விரிவுரை - கதை திரி

NNK12

Moderator
வணக்கம் தங்கம்ஸ் 🤩

காதல் விரிவுரை - விஜயராகவன் அலர்மேல் மங்கை இடையேயான காதலை, மோதலை, அன்பை வெளிப்படுத்தும் கதைக்களம்.

கதையை வாசித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள் அன்பூஸ் 😍
 
Last edited:

NNK12

Moderator
காதல் - 01

காலை நேரப் பரபரப்புகள் விடியல் நெருங்கும் நேரத்திலேயே தொடங்கியிருந்தது கொங்கு நாட்டுத் தலைநகராம், கோயம்புத்தூரில். ‌

இன்னும் இருள் கூட பிரியாத வேளையில் தான் துப்பட்டாவை இழுத்துவிட்டபடி வேக நடை நடந்துகொண்டிருந்தாள் அவள்.

மார்கழி மாதக் குளிர் ஊசியாய் அந்நேரத்தில் இறங்க, கதகதப்பிற்குக் கொஞ்சிய உடலை மிரட்டி, அடுத்த எட்டு வைத்து நடக்கப் பெரும்பாடு ஆகியது அவளுக்கு.

பேப்பர் போடும் பையன்கள் தனித்தனியாக வந்திறங்கிய பேப்பர்களில் விளம்பர தாள்களை இடையே சொருகி வரிசையாக அடுக்கி வைக்கும் காட்சி அவள் கண்ணில் பட்டாலும், 'மனிதர்கள் இருக்கிறார்கள்' என்ற எண்ணத்தையும்
மீறிய ஒருவித அலைப்புறுதல் அவள் கண்களில்.

'மனிதர்கள் இருப்பார்கள் தான். ஆனால் அதில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று புறத்தோற்றம் கூறிவிடுமா?' என்ற அவனின் பேச்சு அவள் குட்டி ஜிமிக்கி அணிந்த காதினைத் தீண்டியது போல் தோன்றியது.

நினைத்த மாத்திரம் ஒரு சிறு உதடுகள் பிரியா புன்சிரிப்பு, அவள் பெயரைப் போலவே.

அலர்மேல் மங்கை, ப்ரியமாய் அவள் அண்ணனும் ஆச்சியும் வைத்த பெயர்.

ஆசையாய் ‘மங்கை’ என்று வாய் நிறைய அழைக்கும் பெற்றவர்களை விடுத்து ‘அலர்’ என்று பாசம் ஒழுக அவளின் அண்ணன் அழைக்கும் அழைப்பிற்குத் தான் அவள் திரும்பியே பார்ப்பாள்.

இப்போது அந்த பாசத்தைப் பங்கு போட வந்தவனைக் கூட 'அலர்'
என்றே அழைக்கப் பழக்கியிருந்தாள்.

ஆம், பழக்கித்தான் வைத்திருந்தாள் இந்த பாதகத்தி!

அவனின் ஆசை செல்ல பெயர்களை எல்லாம் மூட்டை கட்ட வைத்துவிட்டு 'அலர் சொன்னால் தான் என் ஃப்ரீ டைம்மில் நேரம் ஒதுக்குவேன்' என்று அவனிடமும் தன் பஜனை இல்லை இல்லை லெக்சரை எடுப்பாள் இந்த கல்லூரி இணை பேராசிரியை.

அவன் நினைப்பை எல்லாம் கடந்து அந்த ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவு நடந்து விட்டவளுக்கு அப்போது தான் ஒன்று உரைத்தது.

அவள் கொண்டு வந்த பொதிகளில் ஒரு சிறு பை பேருந்திலேயே விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வர, தலையில் அடித்துக்கொண்டு மீண்டும் நடையைக் கட்டினால் அந்த தனியார் பேருந்து இருந்த இடத்தை நோக்கி.

"புத்தி புல் மேயத் தான்டீ போயிருக்கு உனக்கு.. பசில கொண்டு வந்த பேக் கூடவா மறந்துட்டு இறங்குவ" என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தவள் பேருந்தை அடைந்திருந்தாள்.

அங்கோ அந்த பேருந்து ஓட்டுபவனின் தோளில் அழகாகத் தொங்கிக்கொண்டிருந்தது அவள் ஐஸ்ஸு வாங்கித் தந்த தோள் பை!

"அண்ணா.. இது என் பேக் தான். மறந்து வெச்சிட்டு போய்டேன்" என்றாள் நடுங்கும் குளிரில் வாய் குளற.

அவனோ அவளை ஒரு ஏற்ற இறக்கப் பார்வை பார்த்துக்கொண்டே பையைத் கழற்றி பேருந்திற்குள் வீசியவாறு, "உள்ள போய் எடுத்துக்கோ" என்றான்.

அவனின் சிவப்பேறிய கண்களும், அவன் பேச்சின் போது வந்த மது நெடியும் அவனின் எண்ணத்தைக் கூறாமல் கூறியிருக்க, இந்த அரை பேக்கு ஃபேக் தான் முக்கியம் என்று பேருந்து ஏற திரும்பிய சமயம், 'ஏ பப்ளிமாஸ், பத்தரம்!' என்று அசரீரியாக ஒலித்த அவனின் குரலில் சுதாரித்துவிட்டாள்.

அவளின் நடவடிக்கையே பார்த்துக்கொண்டிருந்தவனோ, 'பச்சி மடங்கீருச்சு' என்று சுற்றும் பார்வையை ஓட்ட, அதற்குள் அலர், "அண்ணா நீங்களே எடுத்துக் கொடுங்க.. நா உள்ள போகல" என்று அவனின் இன்ஸ்டன்ட் ஆசைக்குக்கு ஆப்பு வைத்திருந்தாள்.

"அடிங்கு.. உள்ள ஏறுடீ" என்று அவள் கையை பிடித்து முறுக்கித் திருப்ப, அதை எதிர்பாராதவள் நிலை தடுமாறி அந்த பேருந்து படிகளிலேயே விழுந்துவிட, அந்த போதையாகியவனுக்கு அது வசதியாகிற்று.

"டேய் கண்ணா" என்று குரல் கொடுத்தவாறு அலரின் கால்களை அவன் பற்ற, அவன் முகத்தில் விழுந்தது ஒரு குத்து.

என்ன என்று அவன் சுதாரிப்பதற்குள் "ஹெல்ப்.. ஹெல்ப்" என்று கத்தியவாறே அவன் அடிவயிற்றில் அவள் முட்டியை மடக்கிக் குத்த, அவன் சற்று நிலைதடுமாறவும் அவன் கால்களைத் தட்டிவிட்டவாறே மீண்டும் கத்தினால்.

அதற்குள் அந்த கண்ணன் வந்துவிட, அவனும் இவளை அடக்கப்பார்க்க, கீழே விழுந்தவனின் அடிவயிற்றில் ஓங்கி மிதித்தவாறே அந்த கண்ணனின் கைகளைப் பற்றித் திருப்பியிருந்தாள் நம் திடீர் ஜான்சி ராணி.

தொடர்ந்து அடிவயிற்றில் விழுந்த அடியால் அவனால் சுத்தமாய் எழ முடியாமல் போக, அந்த கண்ணனை ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் வேகம் கொண்டு கீழே தள்ளியவளை அங்கிருந்த பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர்

பயணிகளும் மற்ற பஸ் ஓட்டுநர்களும் அங்குக் கடை வைத்திருப்பவர்கள் என்று பத்திற்கும் மேற்பட்டோர் வந்துவிட, கீழே விழுந்திருந்த இருவருக்கும் இன்னும் சிறந்த முறையில் அடிகள் தரப்பட்டது.

அலரின் துப்பட்டா அங்குக் கீழே விழுந்திருக்க அதனை எடுத்துக்கொடுத்த ஒரு நடுத்தர வயது நபர், "மேடம்.. பயப்படாதீங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை. இத்தன பேர் இருக்கோமே. உங்க வீட்டுக்குக் கால் பண்ணி வர சொல்லுறீங்களா இல்ல போலீஸ்க்குக் கால் பண்ணலாமா" என்றவர் தன்மையாகக் கேட்க, அவள் முகத்தில் பதட்டமோ பயமோ ஒன்றும் இல்லை.

இயல்பை மீறி மூச்சு வாங்கல் மட்டும் இருக்க அந்த நபரிடம், "தேங்க்யூ சார், போலீஸ்கே கால் பண்ணுங்க. ஐ வில் ஹேண்டில் திஸ்" என்றவள் தன் பையில் இருந்து தண்ணீர் எடுத்துப் பருகியவாறே காவல்துறையினருக்காகக் காத்திருந்திருந்தாள்.

இருபது நிமிடங்கள் சென்றே இரண்டு பிசிகள் (PC) வந்தார்கள். அலர்மேல் மங்கையிடம் விசாரித்தார்கள். சுற்றியுள்ளவர்களிடம் பேசினார்கள்.

"இவனுங்கல மேற்கொண்டு கவனிக்கனும்னா, FIR போடனும். நீங்க ஸ்டெஷன் வந்து ஒரு ரிட்டர்ன் கம்பிளைண்ட் எழுதித் தரனும்" என்ற அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு தலையசைப்பைத் தந்தவள்,

"நீங்க முன்ன போங்க சார். வீட்டுக்குப் பேசீட்டு வரேன்" என்றவள் தன் பைகளை எடுத்துக்கொண்டு ஒரு டீ கடையில் அமர்ந்தால்.

நன்கு விடிந்துவிட்டது. இருள் மெல்ல மெல்லப் பிரிய ஆரம்பிக்கவும் தான் அலருக்கு அவளின் பசியின் அளவே தெரிந்தது!

'முதல்ல வயித்த கவனிப்போம்' என்று நினைத்தவள், "அண்ணா ஒரு டீ, நாலு சால்ட் பிஸ்கட் அப்புறம் வடையிருக்கா?" என்றவளை அந்த டீகடைக்காரர் 'ஙே' என்று பார்த்துவைத்தார்.

'சற்று முன்பு தான் ஒருவனுடன் போராடி தன்னை மீட்டவளைப் போலவா அவள் நடந்து கொள்கிறார்?' என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் அலர்மேல் மங்கையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?

அவள் முகத்தையேப் பார்த்திருந்தவருக்கு, 'புள்ள குண்டாயிருந்தாலும் நல்ல அம்சமா தான்யா இருக்கு.. இருந்து நெஞ்சுல பயமிருக்கா பாரு' என்று நினைத்துக்கொண்டே அவள் கேட்டதைத் தந்தார் அவர்.

ஆம், அலர்மேல் மங்கை சற்று பூசிய உடல்வாகு தான். இப்போது சொல்லும் 'சப்பி' ரக கேட்டகிரி தான் அவளும். ஆனாலும் நல்ல முகலட்சணம் கொண்ட பக்கா கிராமத்து பெண்பிள்ளை.

பெரும்பாலும் வளர்ந்தது எல்லாம் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் என்றாலும் ஊர் பாசம் அதிகமுள்ளவள்.

அவளின் தந்தை குணசீலன், ஒரு தேசிய வங்கியில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் டிரன்ஸ்பர் அடிக்கடி வந்துவிடும். அதன் பொருட்டு இவளும்‌ ஒரு ஊர் சுற்றும் வாலிபியாக இருந்து இப்போது கடந்த ஆறு வருடங்களாகச் சென்னையின் வசம்.

கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுப் படித்த அதே கல்லூரியில் தற்போது விரிவுரையாளராகப் பணியில் இருக்கிறாள்.

இவளின் ஆச்சியுடன் ஊரில் ஒருவாரம் கொட்டம் அடித்துவிட்டு இன்று தான் சென்னை திரும்பியவளைச் சூழ்ந்தனர் அந்த இருவர்.

டீயைக் குடித்தவள் அதற்குறியப் பணத்தைக் கொடுத்ததும் அங்கிருந்த செல்ல முற்பட அவளையேப் பார்த்திருந்த அந்த டீக்கடைகாரரின் மனைவி,

"பாப்பா.. அதான் அந்த பயலுவ உன்னைய ஒன்னும் பண்ணலையே. எதுக்கு போலீஸு கேஸுனு போயிட்டு.. வயசுப் புள்ள எதுக்கு இந்த மாதிரி விசயத்துல போய் சிக்கிட்டு.." என்றவர் சொல்லு, அவரையேப் பார்த்திருந்தவள் ஒரு பெருமூச்சுடன் நிதானமாக,

"அக்கா.. உங்களுக்கு என்ன வயசாகுது?" என்றவளை அவர் இப்போது புரியாமல் பார்த்தார்.

"சும்மா சொல்லுங்க அக்கா.. உங்களுக்கு என்ன வயசாகுது?"

"நாப்பதாறு பாப்பா" என்றார் அவரின் கணவர் (டீக்கடைக்காரர்).

"உங்க வயசு அனுபவத்துல நீங்க இப்படி சொல்லுறீங்க. இந்த நாப்பத்தாறு வருஷத்துல ஒருத்தன் கூடவா உங்கள இந்த மாதிரியான கண்ணோட்டத்துல பார்த்திருக்க மாட்டான்? தப்பா எடுத்துக்காதீங்க அக்கா.." என்றவள் அவரின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே,

"அந்த சமயம் உங்களுக்கு எப்படி கோபம் வந்திருக்கும்.. அந்த கோபத்த அடக்கீட்டு உங்க மானத்த காத்துட்டு என்ன செஞ்சீங்க? நமக்கு எதுக்கு வம்புனு விட்டுட்டு தான வந்திருப்பீங்க.. ஏன் எல்லாரும் அப்படி தான். ஆனா உங்கள மட்டுமா இந்த மாதிரி நாய்ங்க பார்க்கும்? சில பேர் கிட்டப் பாயவும் செஞ்சிருக்கலாமே?

என்கிட்ட அந்த பரதேசி பாயப் பார்த்தான். நா சுதாரிச்சுட்டேன். ஆனா இனி அவன் யார்கிட்டையும் இப்படி பண்ண மாட்டான்னு சொல்ல முடியாதே! அதுக்குத் தான் இந்த கேஸ். எனக்கானதுக்கு நீதியா இல்லை, இனி மத்தவங்களுக்கு இந்த மாதிரி இவனால நடக்காம இருக்கறதுக்கான தடுப்பு" என்றவள் பைகளை எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பக்கத்தில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றாள் வீட்டினரிடம் சொல்லாமல்.

படித்தவள் என்று அவள் பேச்சில் அவள் காட்டியிருந்தாலும், அவள் சொன்ன செய்தி உண்மை தானே?!

நம்மை யார் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்று நம்மின் பதின்பருவம் வரை நமக்குத் தெரியாமல் இருந்தாலும் விவரம் வந்த பின்னர் அந்த ஓட்டுநரைப் போன்ற பிணம் தின்னி கழுகுகளின் பார்வையைக் கண்டுகொண்டு, அகன்று வந்திருப்போம்.

அதில் கொடூரமாய் கொத்தித் தின்னும் கழுகுகளும் அடங்கும் அல்லவா?

அதைத் தடுக்கும் ஒரு சிறு மார்க்கத்தைத் தான் இப்போது அலர்மேல் மங்கை செய்து வந்திருக்கிறாள்.

மொத்தமே மூன்று பேர் தான் அந்த காவல் நிலையத்தில் இருந்தனர். அவள் தன்னின் பைகளுடன் உள்ளே செல்லும் போது மூவரில் இருவர் லாக்கப்பில் படுபயங்கர உறக்கத்தில் இருந்தனர்.

அதைப் பார்த்ததுமே ஒரு முகச்சுழிப்புடன் நாற்காலியில் சொக்கிக்கொண்டிருந்த காவலரிடம் சென்றவள்,
"கம்ப்ளைண்ட் பண்ணணும் சார்" என்றாள் அங்கிருந்த காவல்நிலைய பொறுப்பாளர் பெயரைப் பார்த்துக்கொண்டே அவள் சொல்ல,

"அங்க என்ன ம்மா பார்க்கற? காலங்காத்தாலையே வந்துடுவீங்களா கம்ப்ளைண்டு காம்பிளான்னுட்டு.. போ.. போய் பத்து மணிக்கு மேல வாம்மா.." என்றவர் தூக்கம் கலையாது ஏக வசனத்தில் கத்திக்கொண்டே கண்ணுறங்க,

"என்ன ம்மா.. என்ன பிரச்சினை" என்று அப்போது பணிக்கு வந்து காவலர் தன்மையாகக் கேட்டாலும் அந்த கத்தில் எரிச்சலுற்றவள் அந்த பொறுப்பாளர் எண்ணிற்கு அழைத்துவிட்டாள்.

அதைக் கவனித்துவிட்ட அந்த காவலரோ, "எம்மா.. என்ன ம்மா பண்ணுற? ஐயாக்கு எல்லாம் கூப்பிடாத ம்மா. மனுசன் முதல்லையே மொளகாயா காய்வார்.. நீ வேற தூபம் போட்டுவிடாத" தன்மையைவிடுத்து அவரும் கத்த, அந்த புறம் அழைப்பு இணைப்பானது.

இவள் 'ஹலோ' என்று சொல்வதற்கு முன்பு கேட்ட, "அலர்" என்ற குரல் அவளின் உயிர் வரை சிலிர்த்தது.

''தர்ஷா, பஸ் ஸ்டென்ட்’ல உன் லிமிட் ஸ்டேஷன்ல தான் இருக்கேன். சீக்கிரம் வா" என்றவள் சொல்ல அந்த ஸ்டேஷனே‌ ஆட்டம் கண்டுவிட்டது.

கேட்டவர்களுக்கு அவர்களின்‌ மதிப்புமிக்க, ப்ரியதர்ஷன் ஸாரை 'தர்ஷா' என்று அழைத்ததிலேயே வயிற்றில் எலி ஓடியது.

“இந்தாம்மா?” என்று தூக்கத்தில் இருந்த காவலர் எழுந்துவிட, “எங்க இருக்க அலர்?” என்ற ப்ரியதர்ஷனின் குரல் அழுத்தமாய் கேட்டது.

“நீ வா தர்ஷா, ஒரு கம்ப்ளைண்ட் பண்ணனும்” என்று அவள் மீண்டும் சொல்ல, “டென் மினிட்ஸ்” என்று வைத்தவன் சொன்ன நேரத்தில் வந்துவிட்டான்.

அதற்குள் ஒரு பேப்பரில் அவளின் புகாரை அவள் எழுதியிருக்க, “ஸார்” என்ற கோரஸ் குரல்கள்.

அழுத்தமான நடையுடன், புருவங்கள் சுருங்க யோசனையாக உள்ளே வந்தவனைத் தான் பார்த்து நின்றிருந்தனர் அனைவரும்.

ஒரு இலகுவான டிசர்ட், காக்கி கால் சராயில் இருந்தவன் பார்வை மொத்தமும் அலரிடமே.

வந்தவனைத்தான் அவளும் பார்த்து நின்றிருந்தாள். கசங்கலான அவள் தோற்றத்தைப் பார்த்துவிட்டு நிலையத்தில் இருந்தவர்களை ஒரு வட்டம் பார்த்து வைத்தான்.

ஒருத்தரும் வாய் திறக்கவில்லை.
அவன் பார்வையின் வீச்சே அவர்கள் கப்பென்று அடக்கிவிட,

“பத்து மணிக்கு மேல தான் கம்ப்ளைண்ட் வாங்கு வாங்கலாம். ஏன் அதுக்கு முன்ன வாங்கக்கூடாதுன்னு உங்களுக்கு தனி சட்டம் போட்டு வெச்சிருக்கீங்களா ஸார்?” என்றவள் பேச்சு அமைதியாய் இருந்த இடத்தில் வெகு அழுத்தமாய் ஒலித்தது.

“ஒரு எமர்ஜென்சி’னா கூட ரிட்டன் கம்ப்ளைண்ட் வேணும்ங்கறாங்க, இவர் அதை பத்து மணிக்கு மேல வந்து கொடுங்கறார்.. அப்புறம் போலீஸ்னு எதுக்கு நீங்கெல்லாம் இருக்கீங்க? இதுக்கு ஸ்டேஷன் வேற” என்க, ப்ரியதர்ஷனின் முகம் மாறிவிட்டது.

நேரம் பார்த்து வார்த்தைகளால் அடித்தால் அலர்மேல் மங்கை.

அதில், “என்ன ராமன்?” என்று தர்ஷன் கேட்ட த்வனியில் அரண்டு விட்டனர் காவலர்கள்.

“என்ன கம்ப்ளைண்ட்?”

சொன்னவளைக் கோபமாக முறைத்தவன் காவலர்களிடம், “அங்க வெச்சே அவனை இழுக்காம என்ன புடுங்கீட்டு வந்தீங்க?” என்றவன்,

“எவன்னு பார்த்து FIR பைல் பண்ணி லாக்கப்’ல வைங்க, வந்து கவனிக்கறேன்” என்றபடி அலர்மேல் மங்கையின் பைகளை எடுத்துக்கொண்டுக் காரை நோக்கிச் சென்றான்.

‘என்ன, அவ்வளவுதானா?’ என்று நினைத்துக்கொண்டே ப்ரியதர்ஷன் பின்னால் சென்றவள் அதைக் கேட்கவும் செய்ய,

“பல்லக் கழட்டீடுவேன் ராஸ்கல். என்ன பேச்சு பேசீட்டு இருக்க நீ? ஏதாவதுனா எனக்கு போன் பண்ணமாட்டியா? அதுக்குள்ள கம்ப்ளைண்ட் பண்ண வந்துட்ட, முட்டாள்” என்று வசைமாரி பொழிவில் கண்ணை விரித்து நின்றாள் தர்ஷனின் தங்கை.

“எல்லாம் அந்த பன்னாட கொடுக்கற தைரியம். இருக்கு அவனுக்கு” என்று அலரை ஏற்றிக்கொண்டு அவன் வீட்டை நோக்கிக் காரை செலுத்த,

“எங்க போற தர்ஷா? நான் அங்க வரமாட்டேன்ல” என்று முறைத்தாள் பெண்.

ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பியபடி, “ஷட்டப் அலர்” என்றான் பட்டென்று.

“முடியாது. என் வீட்டுக்குப் போ” என்று அவளும் மல்லு கட்ட, அவன் கடுமை அதிகரித்தது.

“நீ தனியா இருந்து கிழிச்சதெல்லாம் போதும். அமைதியா வா” என்றுவிட,

“எதுக்கு நான் அமைதியா இருக்கனும்? நிறுத்து.. வண்டிய நிறுத்து மொத” என்று அவளின் அடம் வென்றிட, “அலர்” என்ற கத்தலுடன் ஓரமாய் காரை நிறுத்தினான், ப்ரிய தர்ஷன்.

“எல்லாம் அவன சொல்லனும். என்ன பண்ணி வெச்சிட்டு வந்திருக்க? எங்க கிட்ட எல்லாம் சொல்லாம ஸ்டேஷன் போற அளவுக்கு வளர்ந்திருக்கியா நீ? அவன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுப்பியா? மொத அந்த நாய வெளுக்கறேன்” என்று அவன் அலைப்பேசியை எடுக்க,

“அவர ஏதாவது சொன்னா, உன் காதலுக்குச் சமாதி தான்டா எரும” என்றவள் சொல்லைக் கேட்டு சிறிதும் அசராதவன்,

“அங்கையும் அதான் நடக்கும்” என்றபடி அவர்கள் வீட்டை அடைந்துவிட்டான்.

“எறங்கு அலர்” என்று அவன் அதட்டுவதற்குள், “இவள எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?” என்று அதிர்ச்சியுற்றவராகக் கேட்டார், மஞ்சுளா.

“தாயா நீ எல்லாம்?” என்று அதற்கும் அலர்மேல் மங்கை கத்த,

“உன்ன பெத்த நானெல்லாம் தாய் இல்லடி, தெய்வம்” என்று எதிர் கவுண்டர் கொடுத்தவர் மகனிடம்,

“இவள அங்க போய் விட்டுட்டு வாடா. உங்க அப்பா இவள இங்கப் பார்த்தார்னா சலங்கை இல்லாம அரங்கேற்றம் பண்ணிடுவார்” என்று பரபரக்க, இடையில் கைக்குற்றி தாயையும் தங்கையையும் முறைத்துப் பார்த்து நின்றிருந்தான், ப்ரிய தர்ஷன்.

“பெத்த புள்ளை ஊருக்கு போயிட்டு வந்திருக்காளே, சாப்பிட்டையா? நல்லா இருக்கியான்னு கேட்க தோனுதா உனக்கு? என்னைய என்னானுட்டு பெத்த நீ?” என்று காரில் இருந்து இறங்கியவள் மஞ்சுவை பிடித்துக்கொள்ள,

“அலர்” என்று தர்ஷனின் அதட்டல் எல்லாம் மதிப்பில்லாது பறந்திருந்தது.

“ஆமாடி, திங்காம தான் இம்புட்டு வளர்ந்திருக்கியா நீ? பஸ்ஸ விட்டு எறங்கின கையில சாப்பிட வாங்காம இருந்திருப்பியா, சொல்லு?” அவளை அறிந்தவராகக் கேட்க,

“அது நொறுக்ஸ். நான் மெயின் டிஸ் பத்தி கேட்கறேன்” என்றாள் அசராது.

தர்ஷனுக்குத் தலையெல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்க, அவன் அலைப்பேசி அதன் இருப்பை காட்டியது.

“ராகவ்” என்ற பெயரைத் தாங்கி வரவும் அதுவரை அவனைப் போட்டு அழுத்திய அனைத்தும் அடைப்பெடுத்த சாக்கடை போல வாயில் வண்ணமயமாக வந்துவிட, எதிர்முனையில் இருந்தவனைப் பேசவிடாது,

“உன்ன தலைகீழ ஜட்டியோட கட்டிவெச்சு லாடம் கட்டறேன்டா பரதேசி பயலே. உன்னால என் வாழ்க்க தான் வீணா போகப் போகுது” என்றுவிட,

“ப்ரியா” என்ற கரகரப்பான குரல் கேட்டு உறைந்து நின்றுவிட்டான், ப்ரிய தர்ஷன் குணசீலன்.


🐚
 
Last edited:
அட்டகாசமான ஆரம்பம்!!... தர்ஷன் அவளோட அண்ணாவா???... அம்மாவும், மகளும் அசத்துவார்!!... கடைசியில என்ன இப்படி ஒரு ரியாக்சன்???..
 

NNK12

Moderator
அட்டகாசமான ஆரம்பம்!!... தர்ஷன் அவளோட அண்ணாவா???... அம்மாவும், மகளும் அசத்துவார்!!... கடைசியில என்ன இப்படி ஒரு ரியாக்சன்???..
மிக்க நன்றி டியர் 😍 ப்ரிய தர்ஷன் அண்ணன் தான்.
 

Advi

Well-known member
தர்ஷன் அண்ணனா🤣🤣🤣🤣

யார் அந்த பரதேசி🤭🤭🤭🤭, அவள் காதில் பேசும் குரலுக்கு சொந்தக்காரனா.....

இப்ப phone பண்ணினது, அலர் சொன்ன காதலோ🤔🤔🤔🤔🤔
 

NNK12

Moderator
தர்ஷன் அண்ணனா🤣🤣🤣🤣

யார் அந்த பரதேசி🤭🤭🤭🤭, அவள் காதில் பேசும் குரலுக்கு சொந்தக்காரனா.....

இப்ப phone பண்ணினது, அலர் சொன்ன காதலோ🤔🤔🤔🤔🤔
அண்ணனேதான் 😂

காதில் பேசும் குரல் ஒரு EV 😆

நன்றி டியர் 😍
 

Mathykarthy

Well-known member
அலர் செம bold... 😍 அதுக்கு காரணம் காதுல கேட்குற குரலுக்கு சொந்தக்காரன் போல.... பாவம் தர்ஷன் தான் வெறியாகுறான்.... 🤣
அம்மாவும் பொண்ணும் நல்ல காம்போ 😆

எங்க போக சொல்றாங்க இந்த அம்மா.... அப்பா ஏன் கோபப்படுவாரு... 🤔🤔🤔

சூப்பர் ஸ்டார்ட் 🥰💜
 

NNK12

Moderator
அலர் செம bold... 😍 அதுக்கு காரணம் காதுல கேட்குற குரலுக்கு சொந்தக்காரன் போல.... பாவம் தர்ஷன் தான் வெறியாகுறான்.... 🤣
அம்மாவும் பொண்ணும் நல்ல காம்போ 😆

எங்க போக சொல்றாங்க இந்த அம்மா.... அப்பா ஏன் கோபப்படுவாரு... 🤔🤔🤔

சூப்பர் ஸ்டார்ட் 🥰💜
நன்றி டியர் 😍
 

NNK12

Moderator
காதல் - 02

தர்ஷனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்திருந்த பெண்கள் இருவரும் அவர்கள் வாய்க்கால் தகராற்றைச் சற்று ஒற்றி வைத்திருக்க,

“மாமா” என்று முணுமுணுத்தான் ப்ரியதர்ஷன்.

“ஆத்தி அருவா” என்று அலர் அலறுவது இணைப்பில் இருந்தவருக்கே கேட்டிருக்க, தங்கையைத் திரும்பிப் பார்த்து முறைத்தான் ப்ரியதர்ஷன்.

எதிர்முனையில் மீண்டும், “ப்ரியா” என்ற குரல் கேட்கவும், தடுமாறிவிட்டான் அவன்.

“மாமா.. அது ராகவ்னு” என்றவன் மெல்லிய குரலில் சொல்லவும், “யார் எடுக்கறான்னு தெரியாம இப்டிதான் பேசுவியா தம்பி” என்றார் அவரின் கரகர குரலில்.

“ஸாரி மாமா” என்று உடனே மன்னிப்பைக் கேட்ட மகனை விழிகள் தெறிக்கப் பார்த்து நின்றிருந்தார், மஞ்சு.

ப்ரியதர்ஷன், தோற்றம் மற்றும் அல்ல மொத்த குணமும் அவன் தந்தை குணசீலனை ஒத்தது.

அதில் ப்ரதானமானது, அவர்கள் மீது தவறே என்றாலும் சட்டென்று இறங்கி வரவே மாட்டார்கள் இருவரும்.

அப்படி இருக்க, மகனின் இந்த செய்கையில் மலைத்துவிட்டார் அவனைப் பெற்றவர்.

‘என் பையனா இவன்?’ என்று மனதோடு அவர் நினைத்தாலும், ‘ஏய், அவன் என் புள்ளடீ’ என்று கண்ணை உருட்டி அவர் மனக்கண்ணிலும் வந்து மிரட்டினார், குணசீலன்.

“போலீஸ்காரனுக்கு நிதானமும் பொறுமையும் ரொம்ப முக்கியம் தம்பி. மறந்துடாதீங்க” என்றார் ஆழ்ந்த குரலில்.

அதைக் கேட்டுக்கொண்டவன் போல், “ம்ம்.. மாமா” என்க, “பாப்பா வந்துட்டாளா? உங்க அத்த உன்ன பார்க்கனும்னாங்க ப்ரியா” என்றார்.

“அலரை இப்போதான் மாமா கூட்டிட்டு வந்தேன்” என்றவன் தங்கையைப் பார்த்தவண்ணம், “அலர் கிட்ட பஸ் ஸ்டென்ட்'ல..” என்று நடந்ததை அலர் செய்த ‘சொல்லாதே’ செய்கை எல்லாம் பார்த்தபடி மொத்தமாய் சொல்லி முடித்திருக்க, மஞ்சுவிற்கு உயிரே பதறிவிட்டது.

“மங்கை’ம்மா” என்று மகளின் கையை நெஞ்சம் பதறப் பற்றிய மஞ்சுவிற்கு இருதயம் தாறுமாறாக இயங்கியது.

கண்ணெல்லாம் கலங்கி தன் கையை இறுகப் பற்றியிருந்த தாயின் நிலை புரிந்து அண்ணனை முறைத்தாள், அலர்மேல் மங்கை.

“ஒன்னும் இல்ல’ம்மா. நல்லா தானா உன் முன்ன நிக்கறேன்” தன்மையான குரலுக்கு இறங்கியபடி அவள் சொல்ல, அதெல்லாம் அவருக்குப் போதவில்லை.

படபடப்புடன், “என்ன? என்ன நிக்கற. ஏதாவது ஆகியிருந்தா? அய்யோ முருகா..” என்றவர் நிதானமாக இல்லை.

தர்ஷனும் பேசிவிட்டு வந்தவன், “இவ கம்ப்ளைண்ட் பண்ணத்தான் என்னைய வரச் சொல்லியிருக்கா, அரஸ்ட் பண்ண சொல்லிட்டு தான்ம்மா வந்திருக்கேன்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க,

“அவள மொத உள்ள வரசொல்லு தர்ஷா. எனக்கு இருக்கற சொச்ச மானமாவது இருக்கட்டும்” என்ற குணசீலனின் பேச்சைக் கேட்டு மூவரும் திரும்ப, வீட்டு நிலைக்கதவருகே அத்தனை கோபத்துடன் நின்றிருந்தார் மனிதர்.

“காட்ஜில்லா வந்தாச்சு” என்று அலர் சத்தமில்லாது வாயசைக்க, அதைக்கேட்டுத் தங்கையை முறைத்தான், தர்ஷன்.

“நான் கிளம்பறேன்” என்று அவள் தகப்பனைப் பார்த்துத் திருப்பிக்கொண்டு செல்ல,

“மங்கை” என்ற அதட்டலுடன் வாசலுக்கு வந்துவிட்டார் குணசீலன்.

மஞ்சுவிற்கு மனதெல்லாம் பதறிக்கொண்டு வந்தது. மகள் ஒரு பெரும் ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்க, அதைப் புரிந்தோ தெரிந்தோ வீட்டுக்குள் அவளை அழைத்த கணவனின் பேச்சை எண்ணி மகிழ்ந்தாலும் மகளின் செயல் அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

அதில் மூண்ட கோபாவேசத்துடன், “என்னடீ, ஆக்கங்கெட்டத்தனமா பண்ணிட்டு இருக்க” என்று மகளின் கையை முரட்டுத்தனமாக மஞ்சு பற்றி இழுக்க, நிலை தடுமாறியவள் தர்ஷனைப் பிடித்துக்கொண்டு இரும்பு கதவில் மோதிவிட்டாள்.

தடுமாறியவனும், “அலர்” என்று அவளோடு அவனும் சரிந்திருக்க, மேற்புறம் கூர்மையாக இருந்த இடத்தில் அலரின் கன்னம் பட்டுக் கீறி ரத்தம் தெறித்துவிட்டது.

அலறியவராக, “ஏய் மங்கைம்மா” என்று குணசீலன் மகளைப் பிடித்து எழுப்ப, காதோரத்தில் ஆழமாய் குற்றி பக்கவாட்டாகக் கீறியபடி ஆகியிருந்தது காயம்.

“அம்மா, தண்ணீ கொண்டு வாங்க” என்றபடி தன் கைக்குட்டையால் தங்கையின் கன்னத்தை தர்ஷன் அழுத்திப் பற்ற, அலரை முன்னிருந்த படியில் அமர வைத்தார் குணசீலன்.

கண்ணெல்லாம் கலங்கிவிட்டாலும் வலியைப் பல்லைக்கடித்து பொறுத்தவள் தந்தையின் கையை தட்டிவிட்டாள்!

அவரை விலக்குவதில் அத்தனை ஸ்தீரமாய் இருந்தவளிடம் அழுத்தமான அழுத்தம்.

பல்லைக் கடித்தபடி தர்ஷன், “அலர்” என்றான் அவளின் செயலால் விளைந்த கோபத்தில்.

“விடு விடு.. வலிக்குது. நான் போறேன்” என்றாள் அப்போதும்.

தண்ணீரோடு வந்த மஞ்சுவின் கையில் மஞ்சள் டப்பா இருக்க, தர்ஷன் அதைக் கவனித்துத் தடுக்கும் முன்னர் பதைபதைப்புடன் அலரின் கன்னத்தில் அதைக் கொட்டிவிட்டார்.

அதில் எரிச்சல் உண்டாக அரண்டு கத்திவிட்டாள், அலர்மேல் மங்கை.

மகளின் வலி எந்த தகப்பனுக்குத் தான் பொறுக்க முடியுமாம்?

குணசீலனின், “மஞ்சுளா” என்ற கோபழைப்புக் கொடுத்த பயமும் மகளின் வீரிடலும் மொத்தமாய் செயலிழக்க வைத்திருந்தது மஞ்சுவை.

விசும்பியவண்ணம், “ரத்தம் நின்னுருங்க” என்றவர் சொல்லை யாரும் கேட்கத் தயாராக இல்லை.

“தர்ஷா, தர்ஷா.. எரியுதுடா” என்று கத்தியவளைக் குண்டுக்கட்டாக தந்தையும் மகனும் மருத்துவமனைக்கு இழுத்துச் சென்றனர்.

காரில் ஏறிய போது குணசீலனும் வருவதைக் கவனித்தவளாக, “இவரோட நான் வரமாட்டேன்” என்று வலியை மீறி அரற்றியவளைக் கோபம் கலந்த இயலாமையாகப் பார்த்து வைத்தார்.

தர்ஷன், “பேசாம வா, அலர்” என்க,

“என்ன பேசாம, இவர் வந்தா நான் வரமாட்டேன்” என்று அவளும் விடாது பேச,

குணசீலன், “அமைதியா வா மங்கை” என்றார் பொறுமையாகவே.

அலர், காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மனதின் படபடப்பிலும், “என்ன அமைதி, எதுக்கு நான் அமைதியா இருக்கனும்? நீங்க இத்தன வருசமா மாமாகிட்ட அமைதியா‌ இருந்து அவரை நோகடிக்கறது பத்தாதா? அத்தகிட்ட பேசாம அவங்கள அழ வைக்கறது போதாதா? பெரிய இவர் மாதிரி பேசறீங்க?” இருந்த கோபத்தையெல்லாம் ஒன்று திரட்டி தந்தையிடம் அவள் இறக்கி வைக்க, வெகுண்டுவிட்டான் ப்ரிய தர்ஷன்.

அலரின் தாடையை வலிக்கப் பற்றியவன், “அப்பாகிட்ட இப்டியா பேசுவ. பல்லத் தட்டீடுவேன் ராஸ்கல்” என்று கன்னத்தில் அழுத்தம் கொடுக்க, ரத்தம் மஞ்சள் பொடியை மீறிக் கசிந்தது.

குணசீலன், “தர்ஷா, விடுடா’ப்பா” என்றதும் கையை எடுத்தவன், “பேசாம வா அலர்” என்று விட்டு காரை செலுத்தி மருத்துவமனைக்குச் சென்றான்.

அங்கு, ப்ரிய தர்ஷனிடம் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் தந்தையின் முகத்தையேப் பார்த்தபடி இருந்தனர், ப்ரியதர்ஷனின் அத்தை மகன்கள்.

“இவர் முகம் போறப் போக்கே சரியில்லையே” என்றபடி அண்ணனிடமிருந்து தினசரியை இளையவன் பிடுங்கிக்கொள்ள, ஒரு சிரிப்புடன் அவனைப் பார்த்துவிட்டு நகர்ந்தான், விஜயராகவன்.

சித்ரா, “ராகவா, சாயந்திரமா ஜிசிடி சிங்னல்ல தேங்காப்பூ விக்குமே, வாங்கிட்டு வாடா” என்க,

“எதுக்கு உனக்கு? அதான் அன்னிக்கு வந்து தோட்டத்திலே பத்துக் காய் ஊண்டிட்டு போனேல ம்மா. அது முளச்சு வரட்டும்” என்று முகுந்த் தடை போட, கோபம் வந்துவிட்டது சித்ராவிற்கு.

“நான் ஒரு தேங்காப்பூ சாப்பிடக் கூட இந்த வீட்டுல..” என்றவர் ஆரம்பிப்பதற்குள்,

பணிக்குக் கிளம்பி வந்தவராக, “சித்ரா” என்ற அதட்டல் பறந்தது சேத்தனிடம்.

சேத்தன் காக்கி சீருடையில் அத்தனை மிடுக்காக இருக்க, தன்னைப் போல் தாய் - மகன்களுக்கு ஒருவித மரியாதை வந்துவிட்டது அவரை சீருடையில் பார்த்த பின்னர்.

“இல்லைங்க” என்றவர் மறுத்து ஏதோ கூறும் முன்னர், “முகுந்த் தான் சொல்லுறான்ல, தோட்டத்துக்காய் முளைக்கட்டும். அதையே சாப்பிடு. பொழுதுக்கும் வெளியவே வாங்காதா சித்ரா” என்றவர் பெரிய மகனிடம்,

“தம்பி, காலேஜ் முடிச்சிட்டு ப்ரியாவ பார்த்துட்டு வந்துடுப்பா. பாப்பாவ பத்தி பேசனும்னார்” என்றவர் தலையசைப்புடன் விடைபெற்றார்.

சேத்தன், காவல்துறை ஆய்வாளராகப் பதவியில் இருப்பவருக்கு எந்தவித அழுத்தமோ கவலையோ இல்லை. வாழ்க்கையை அனுபவித்து, வேலைப் பளு இல்லாது வாழ்ந்துவருபவருக்கு இருக்கும் ஒரே மனக்குறை, அவர் நண்பனுடனான பிணக்கு தான்.

குணசீலனிடம் பேசி கிட்டத்தட்ட முப்பது வருடங்களைக் கடந்திருந்தாலும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் தருணங்களில் கண்ணார மனதார ஆருயிர் நண்பனை, அவர் வாழ்க்கையில் உச்ச ஜோதியை மனம் குளிர பார்த்து மகிழ்ந்து பரவசம் ஆகிவிடுவார்.

நட்பு கூட காதலை ஒத்த பரிசுத்த பேரன்பு தானே?!

“அந்த பீப்பா பாப்பாவாம்” என்று மௌனத்தை உடைத்த முகுத்ந்தை முறைத்து நின்றிருந்தனர் தாயும் தமயனும்.

“என்னவாம்? அந்த பெருச்சாளி எந்த பொந்துக்குள்ள புகுந்து கரகம் ஆடுச்சோ. தர்ஷன் திரும்பிக் குற்றப்பத்திரிகை வாசிக்கத் தான் இவன பார்க்கனும்னு சொல்லியிருப்பான். இதுல என்னைய மொறச்சு என்னவாகப் போகுது” என்க,

“இத அவ கேட்டா தெரியும் யார் மண்ட இன்னிக்குக் கரகம் ஆடப் போகுதுன்னு” என்றபடி தம்பியை ஏகத்திற்கு முறைத்தபடி சென்றான், விஜயராகவன்.

அவன் முறைப்பு மட்டும் தான் அவனின் அதீத வெளிப்பாடு!

அவனின் அத்திப்பூத்தாற் போல் தோன்றும் கோபத்தையோ ஆவேசத்தையோ மகிழ்வையோ ஏன் அதிகபட்சமாய் அவனின் விருப்பமின்மையைக் காட்ட அவன் செய்யும் முகத்திருப்பலைக் கூட ‘இதெல்லாம் உண்மையா கோபால்’ என்ற அயிர்ப்பு வந்துவிடும் அவனைத் தெரிந்தவர்களுக்கு.

அப்படியொரு அமைதியோ அமைதி, அமைத்திக்கெல்லாம் பெரும் அமைதியானவன், விஜயராகவன்!

ராகவனின் செயலில் தூண்டப்பட்டவராக சித்ரா, “இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல. நான் சொன்ன ஒரு வேல செய்ய முடியுதா உங்கண்ணனுக்கு” என்று திரும்பவும் வேறொரு பல்லவியை ஆரம்பித்துவிட்டார்.

கையில் வைத்திருந்த தொலைக்காட்சி ரிமோட்டை சித்ராவை நோக்கிக் காட்டியபடி, “ஃபாஸ்” என்றுவிட்டுச் சாப்பிட அமர்ந்துவிட்டான் முகுந்தன்.

“ஆமாண்டா, என் வாய அடைக்கறதுலையே அப்பாவும் புள்ளைங்களும் இருங்க. ஒத்த வேல செய்ய யாருக்கும் கையாளாகல, இதுல என்னைய என்னைய நோண்டறது” என்றார் கண்களை உருட்டி.

முகுந்த், “தாயே, போதும்” என்று இருகரம் உயர்த்தி கூப்பிச் சொல்ல,

“என்னடா போதும்? நானென்ன இல்லாததையா சொல்லுறேன்” என்றவர் முந்தானையைச் சொருகியபடி அவனை நெருங்குவதற்குள் விஜயராகவன் தயாராகி வந்துவிட்டான்.

“வாங்க, திருவாளர். ஸ்க்ரப் கோட் (பலி ஆடு)” என்று சிரித்தவனை,

“டேய்” என்று அவன் தலையில் தட்டியவன் அமர்ந்து இட்லியையும் சட்னியையும் அவனே வைத்து உண்ண ஆரம்பித்தான்.

அதையெல்லாம் பார்த்து இருந்த சித்ராவிற்குச் சுத்தமாய் முடியாது போக,

"ஏன்டா.. ஏன்டா இப்படி இருக்க? என் பையன்னு வெளிய தயவு செஞ்சு சொல்லிடாத. அசிங்கமா போயிடும் எனக்கு" முகத்தைச் சுழித்துக் கொண்டு அவனுக்கு மேலும் இரு இட்லியை வைத்தார்.

சித்ரா தேவி, எண்பதின் இறுதியிலேயே ஃபேஷன் டிசைனிங் முடித்திருந்தவர் சில காலம் அப்போதைய ஒரு திரைத்துறை பிரபலத்திற்கு டிசைனராகவும் இருந்தார்.

நகரத்தின் சாயம் பூசியபடி இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி பக்கம் தான்.

சித்ராவின் உடை துவங்கி பேச்சு வரை அனைத்திலும் அண்ணன் குணசீலனின் தாக்கம் இருந்தாலும் கண்ணியம் மீறாது இருக்கும்.

திருமணத்திற்குப் பின்னரும் கூட அவர் உடைக்கான நேர்த்தியும் அதற்காக அவர் மெனக்கெட்டு தயாராவதும் தொடர்ந்தது.
அதை சேத்தனும் பெரிதும் ஆதரித்தார்.

மகன்களைக் கணவனை அவர்களின் நிறத்திற்குத் தக்க அந்தந்த கால ஃபேஷன் உடை உடுத்த செய்வது துவங்கி பிள்ளைகளின் பள்ளியில் நடைபெறும் மாறுவேடப் போட்டியில் பிற குழந்தைகளுக்கும் சிற்சில நேரங்களில் காஸ்டியூம் டிசைன் செய்து கொடுத்தபடி இருப்பார், சித்ரா.

அதன் துவக்கமாக, மனைவியின் படிப்பையும் ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் படியாகத் தனித்து தொண்ணூறின் இறுதியில் கோவையிலேயே ஒரு குட்டி போட்டிக் ஆரம்பித்துக் கொடுத்திருந்தார், சித்ராவின் காதலர் கணவர்.

“நானும் அவரும் இருந்த இருப்புக்கு ஒரு பத்து பெர்செண்ட்டாவது நீ இருப்பேன்னு பார்த்தா, என் வய்துல பொறந்து இரண்டும் இந்த விசயத்துல மகா தத்தியா வந்திருக்கு” என்க,

“என்னைய என்னத்துக்கும்மா இழுக்குறா? இருந்த ஒரு மாமன் பொண்ணையும் உம் பெரிய பையனுக்குத் தார வார்த்துட்ட. நான் எங்க போய் இன்னொன்ன பிடிக்க” என்க, சித்ராவின் முகமே விழுந்துவிட்டது.

சட்டென்று மாறிய அவரின் பாவத்தை மகன்களும் பார்த்திருக்க, தலையைக் கொடுக்க இருவரும் தயாராக இல்லை.

இருந்தும் தாங்காது, “அம்மா” என்று விஜயராகவன் அழைத்துவிட, ‘செத்தான்டா சேகரு’ என்று முகுந்த் மனதில் நினைத்ததற்கு ஏற்ப தான் நடந்தது.

சித்ராவிற்கு நல்ல மங்களகரமான முகம்தான். இப்போது பெரிய மகன் மீதான கோபத்தில் நன்கு சிவந்து வெந்திருந்தது.

ராகவனை அத்தனை பேசிவிட்டார் இருந்த கோபத்தில். முகுந்த் கண்ணைக் குறுக்கி காதைப் பொத்தியதெல்லாம் கண்டும் காணாது போல் இருந்தவர் ராகவன் எதிர் பேச்சு பேசாததைக் கவனித்துத் திரும்பவும், "அசிங்கம்.." என்றவர் ஆரம்பிக்க, "அம்மா பிளீஸ்" என்று கத்தியிருந்தான், விஜயராகவன்.

"என்னடா பிளீஸ்.. எப்ப பாரு அந்த புக்குக்குள்ளையே தலைய விட்டுட்டு இருந்தா இப்படி தான் ஒரு வேலக்கும் துப்பு இருக்காது. பேருக்குப் பின்ன மட்டும் ரயில் நீளத்துக்கு பட்டத்தப் போட்டா மட்டும் காணாது.. அதுக்கு தக்க சூதும் இருக்கனும். இத்துனூண்டு வேல அத முடிக்க இத்தன காலமா உனக்கு?" என்றவர் படபடக்க,
அவர் அருகே அமர்ந்திருந்த அவரின் இளைய மகன் முகுந்தனோ,

"ஆனா ஊருல இப்படி ஒரு அம்மா யாருக்குமே கிடைக்க மாட்டாங்கடா ராகவா" என்று தலையில் அடித்துக்கொண்டு அவன் அறைக்குள் செல்ல, அவன் பின்னூடே கத்தியபடி,

"அப்படி இல்லாத அம்மாவா உங்களுக்குக் கிடச்சனால தான என்னையும் என் பேச்சையும் மதிக்காம சுத்தறீங்க அண்ணனும் தம்பியும்" என்றார் சித்ரா இருந்த கடுப்பு தாங்காது.

காதில் வாங்காமல் அவன் சென்றுவிட, இப்போது அவன் மீதான கோபம் கூட திரும்ப ராகவனிடமே வந்து நின்றது.

சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த ராகவன் முடித்தவுடன், "இப்போ என்ன அலரை லவ்வ சொல்ல வைக்கனும். அதுதான உங்களுக்கு வேணும். இன்னும் ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுங்க.. அத்த நீங்களே எங்க கல்யாணத்த நடத்தி வைங்கனு உங்க
கிட்ட அவளே வந்து சொல்லுவா.. ம்ஹூம்.. சொல்ல வைக்கிறேன். இப்போ காலேஜ் கிளம்பறேன்" என்று சபதம் எடுத்த கையுடன் வீறுகொண்டு கல்லூரி நோக்கிச் சென்றான், விரிவுரையாளர் விஜயராகவன்.


😴
 
Last edited:

Mathykarthy

Well-known member
மஞ்சு 😱😱😱😱😱 அவ பாட்டுக்குப் போறேன்னு சொன்னா இவங்க உணர்ச்சிவசப்பட்டு பிடிச்சு கேட்டுல தள்ளி மஞ்சப் பொடியை கொட்டி... 😰😰😰😰😰😰 ஏன் இந்த கொலைவெறி... 🥵🥵🥵🥵🥵

குணசீலன் கோபம் இருந்தாலும் பொண்ணு மேல பாசம் இருக்கு... அலர் தான் வீம்பு பிடிக்கிறா.... என்னவா இருக்கும்... 🤔🤔🤔🤔

குணசீலன் சேத்தன்கிட்ட பேசாம இருக்குறதுக்கு காரணம் அவர் தங்கையை லவ் marriage பண்ணினதாலயா..

சித்ரா என்ன பேச்சு பேசுறாங்க... 😳😳😳😳😳😳😳
ஒரு ஹீரோ ன்னு கூடப் பார்க்காம... 🤭🤭🤭🤭
கடைசில ஹீரோ அம்மா ஆசையை நிறைவேற்ற சபதம் எடுத்துட்டாரு 🤪🤪🤪
 

NNK12

Moderator
ஆத்தி!!.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன்ல இருக்காங்க!!!!... பட் செமையா இருக்கு!!.!.. இன்ட்ரெஸ்டிங்!!!
மிக்க நன்றி 🤗.. இன்னும் பல டிசைன்கள் வரவேண்டி இருக்கவே 😂
 

NNK12

Moderator
மஞ்சு 😱😱😱😱😱 அவ பாட்டுக்குப் போறேன்னு சொன்னா இவங்க உணர்ச்சிவசப்பட்டு பிடிச்சு கேட்டுல தள்ளி மஞ்சப் பொடியை கொட்டி... 😰😰😰😰😰😰 ஏன் இந்த கொலைவெறி... 🥵🥵🥵🥵🥵

குணசீலன் கோபம் இருந்தாலும் பொண்ணு மேல பாசம் இருக்கு... அலர் தான் வீம்பு பிடிக்கிறா.... என்னவா இருக்கும்... 🤔🤔🤔🤔

குணசீலன் சேத்தன்கிட்ட பேசாம இருக்குறதுக்கு காரணம் அவர் தங்கையை லவ் marriage பண்ணினதாலயா..

சித்ரா என்ன பேச்சு பேசுறாங்க... 😳😳😳😳😳😳😳
ஒரு ஹீரோ ன்னு கூடப் பார்க்காம... 🤭🤭🤭🤭
கடைசில ஹீரோ அம்மா ஆசையை நிறைவேற்ற சபதம் எடுத்துட்டாரு 🤪🤪🤪
மஞ்சுன்னு இல்ல.. நம்ம வீட்டுல இருக்கறவங்க அடிபட்டா மஞ்சளும் காஃபி பொடியத் தானே மொத தூக்குவாங்க?! 😂

மிக்க நன்றி ஒரு ஒரு கதாபாத்திரமா எடுத்து சொன்னதற்கு 🤗
 

Advi

Well-known member
ஆஹா நல்ல அம்மா 😂😂😂😂😂

ராகவ், சபதம் எல்லாம் பயங்கரமா இருக்கு🤩🤩🤩🤩🤩
 

NNK12

Moderator
காதல் - 03

கோவை - கேரளா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கிட்டத்தட்டப் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது ‘வாரிஜம் குரூப் ஆஃப் இன்ஸ்டியூஷன்ஸ்’.

பொறியியல், கலை அறிவியல் கல்லூரி, நிர்வாக படிப்பு, பாலிடெக்னிக், பேராமெடிக்கல், நர்சிங் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி என்று அடுக்கடுக்கான கல்வி நிலையங்கள் உள்ளடங்கியிருந்தது அந்த ஸ்தாபனத்தில்.

இன்னும் மருத்துவக்கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் அது மட்டும் வராது இருக்க, அதற்கான கட்டுமான இடத்தை விட்டு மற்றைய கட்டிடங்கள் வானுயர்ந்து நின்றிருந்தது.

வாயிலில் அத்தனை கெடுபிடியான காவலாளிகள் படை உள்ளே வருவோரை அவர்களின் உடை, சிகையலங்காரம், அடையாள அட்டை சகிதம் கண்காணித்தபடி அனுமதி கொடுத்துக்கொண்டிருக்க, சரியாக மித வேகத்தில் வாயிலை அணுகியது விஜயராகவனின் பலேனோ.

“விஜய் ஸார்” என்று ஒரு காவலாளி ஆர்ப்பாட்டமாக சல்யூட் அடித்து அவனை நோக்கி வர, ஒரு சன்ன புன்னகையுடன் அவரை பார்த்திருந்தான் ராகவன்.

“குட் மார்னிங் ராமன். சாப்டிங்களா?” என்று இரண்டு வார்த்தை அவரிடம் நலம் விசாரித்த பின்னரே அவன் கார் காம்பவுண்ட்டினுள் சென்றது.

அன்றாட வழக்கங்களை முடித்தவனுக்கு முதல் வகுப்பாக மூன்றாமாண்டு வகுப்பிற்கு நுழைந்தவனை வரவேற்றது பாதிக்கும் மேல் ஆளே இல்லாத வகுப்பறை.

புருவமுயர்த்தி அவன் இருந்த சொச்ச மாணாக்கரைப் பார்க்க, “மாஸ் பங்க் ஸார்” என்றனர் கோரசாக.

“எதுவும் படம் ரிலீஸ் ஆகுதா என்ன?” என்க,

“சமந்தா *** காலேஜ்க்கு வராங்க ஸார்” என்றனர் பதிலாக.

‘வெளங்கீடும்’ என்று மனதில் நினைத்தாலும் கடமையாக, “சரி நோட்ஸ் மட்டும் இன்னிக்கு தரேன், ஃபேர் பண்ணிக்கோங்க. நெக்ஸ்ட் க்ளாஸ் எக்ஸ்பிளைன் பண்ணுறேன்” என்றவன் அவன் பாடத்திற்கானக் குறிப்புகளைக் கொடுத்தான்.

வகுப்பு முடிய இன்னும் கால் மணிநேரம் இருக்க, ஓய்வாக அமர்ந்தவன், “போன க்ளாஸ் டவுட்ஸ் இருந்தா கேளுங்க, அடுத்த மாசம் செம் வருதே” என்க,

“ஸார், அலர் மேம் இன்னும் வரலையே? அவங்க போர்ஷன்ஸ் கம்பிலீட் ஆகல ஸார்” என்றான் ஒரு மாணவன்.

அலர்மேல் மங்கை, விஜயராகவன் பணியில் இருக்கும் கல்லூரியில் தான் அவளின் முனைவர் பட்டத்துக்கான படிப்பிலும் பணியிலும் இருக்கிறாள்.

அதுவும் அவனின் கீழ் இயங்கும் இளங்கலை மற்றும் முதுகலை கணிதப் பிரிவு துறையில் தான் தாயாரும் கணித பேராசிரியை.

அலரை பற்றிச் சொன்ன மாணவனை புருவஞ்சுருங்க பார்த்தவன், “வரலையா?” என்றவன் சிந்தனைகள் அவளிடம் இருந்தாலும், “எந்த டாப்பிக்?” என்று கேட்டுக்கொண்டவன்,

“மேம் வரலேனா அவங்க டாப்பிக் நானே உங்களுக்கு எடுக்கறேன். நாளைக்கு வரவங்க கிட்டையும் சொல்லிடுவாங்க. போர்ஷன்ஸ் முடிக்கற வர லீவ் எடுக்கக்கூடாதுன்னு சொல்லிடுங்க. மீறினா CA (CLASS ASSESSMENT) எழுத பர்மிட் பண்ண மாட்டேன்.” என்று அத்தனை அழுத்தமாய் சொல்லிச் சென்றான்.

அமைதியானவன் தான் ஆனால் மாணாக்கரிடம் சிறு கண்டிப்பு எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதிலும் அலர் என்று அவனுக்குக் கீழ் வேலையில் பணி அமர்த்தப்பட்டாளோ அன்று முதல் இன்னும் சற்று கடினத்தன்மை கூடியிருந்தது ராகவனிடம்.

எப்போது என்றெல்லாம் தெரியாது ராகவாகட்டும் அலராகட்டும் இருவருக்கும் ஒருவர் மீதான ஒருவரின் அன்பு அலாதியானது.

என்ன இருவரும் தேர்ந்து அதை வெளிக்காட்டாது இருந்தாலும் தேவையின் போது அது மலர்ந்து சுகந்தத்தை வீசாது இருந்ததில்லை.

“இவங்க என் கசின், மிஸ். அலர்மேல் மங்கை குணசீலன். நம்ம ஸ்டூடண்ட், யூஜி & பிஜி இங்க பண்ணிட்டு இப்போ நம்மோட சக பேராசிரியரா வர்க்க இன்னேல இருந்து ஆரம்பிக்கறாங்க. வாழ்த்துக்கள் மங்கை” என்று சிறு புன்னகையுடன் அவள் வேலையில் சேர்ந்த அன்றே இருவருக்குமான உறவைத் தெளிவாக அனைவர் முன்பு சொல்லிவிட்டான் விஜயராகவன்.

‘பரவாயில்லை, மோட்டி உசார்தான். இத்தன நாள் சொல்லாத விஷயத்தை இப்போவாது சொன்னாறே’ என்று மனதினுள் அலர் மெச்சியதெல்லாம் ராகவனுக்குத் தெரியாதபோதும் இருக்கும் ஜாக்கிரதை இருந்தாக வேண்டும் என்ற எச்சரிக்கை மணி அவனிடம் எப்போதும் இருந்தது.

🪄

பயிற்சி மருத்துவர்களுக்கான ஓய்வறையில் தன்னின் காலை நேர வேலையை முடித்து அமர்ந்திருந்தவளிடம், “மிரு, உங்க வீட்டில இருந்து வந்திருக்காங்க” என்ற அழைப்பை ஏற்று மெல்ல மருத்துவமனை ரிசப்ஷன் சென்றாள் அவள்.

அவள் அணிந்திருந்த வெள்ளை கோட்டில் எடுப்பாகக் குற்றியிருந்த பேட்ச்சில் கறுப்பில் தங்க நிற எழுத்துக்களால் மின்னியது அவளின் பெயர்.

மிர்ணாளி கண்ணதாசன். தற்சமயம், இன்டர்ன் டாக்டர்.

ஆறு மாதங்களாக அந்த பிரபல மருத்துவமனையில் தன் டிரைனிங் பீரியடில் இருக்கிறாள்.

ஓய்விருக்கையில் அவள் வீட்டினர் ஒருவரும் இல்லாது போக, அவளின் இளைய அண்ணன் முகுந்த்தைத் தொடர்புகொள்ள முனைந்த நேரம், “கூல் டீ” என்ற அழைப்பில் விதிர்த்துத் திரும்பினாள் பெண்.

உடல் அப்பட்டமாக அதிர, அவளின் விரிந்த விழிகளின் வழி பிம்பமாய் பதிந்தவனைக் கண்டவுடன் அவள் மூளையும் இருதயமும் செய்வதறியாது நின்றது போன்றதொரு தருணம்.

‘அவரா? அவரா? வந்துட்டாரா. என்னைய பார்க்கவா? இல்ல.. திரும்ப..’ என்றவள் உள்ளுக்குள் நடந்த போராட்டத்தை எல்லாம் ஒன்றுமே இல்லாது தகர்ப்பதைப் போல், “அலர் கேஸ்வாலிட்டி’ல இருக்க, வா” என்றான் ப்ரியதர்ஷன் சாதாரணமாக.

அவன் வந்தான் என்பதே அவளுக்கு அதிர்வைத் தந்திருக்க, இதில் அவன் பேசியது யாவும் புரியாதுப் பார்த்து நின்றாள் அவள்.

மிர்ணாளி அலங்க மலங்க விழிப்பதைப் பார்த்தவனின் மனது பாகாய் இலகியது. அவன் ஆசை வெல்லக்கட்டியல்லவா அவள்!

அவன் வெல்லத்தின் தவிப்பைத் தாங்காத காவலனோ இருந்த மன சுணக்கையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, “மீனுக்குட்டி” என்று அத்தனை இதமாய் அழைக்கவும், அவளுக்கான அழைப்பை அவனிடமிருந்து வந்தவுடன் முணுக்கென்று வந்துவிட்டது கண்ணீர்.

இம்மாதிரியான இன்பார்ப்பரிப்பு எல்லாம் அவள் வாணாளில் ஏங்கும் ஒரு இனிப்பான நிகழ்வுகள்.

அது கிடைத்தாலும் ஏற்கமுடியாத தவிப்பில் ஆழ்ந்திருந்தவளை நோக்கி வந்தவன், “ம்ம்ப்ச்.. ஸாரி. போதுமா. வரியா இப்போ?” என்க,

அவள் கேள்வியாய் அவனைப் பார்க்கவும், “அலருக்கு அடிபட்டிருக்கு. ட்ரீட்மெண்ட் முடிஞ்சு தூங்கறா” என்றான் விவரமாக.

“ஓ” என்றவளால் சட்டென்று எந்த எதிர்வினையையும் தரமுடியாது அவளின் உள்ளத்தவிப்பு உள்ளுக்குள் அழுத்திப் பிடித்தது.

அந்த தவிப்பு அலைப்புறுதலாய் உருமாறி அவளின் சுயத்தை, சுற்றத்தை யோசிக்க வைக்காமல் தன்னுள்ளே சுற்ற வைத்தது அவள் ப்ரியன் திடீரென்று வந்து நின்ற பின்.

அவளின் மாற்றங்களைத் துல்லியமாய் காட்டிய அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவனுக்கு அவளின் பெரும் யோசனை அவனைச் சீண்டிவிட, ‘இவள யோசிக்க விடாதடா தர்ஷா’ என்று எண்ணியவன் கிட்டத்தட்ட அவளை இழுத்துக்கொண்டு அலர் இருந்த அறைக்குச் சென்றான்.

“என்ன’ங்க” என்று அழைத்துக்கொண்டு நடந்த மிர்ணாளியின் பேச்சை அவன் செவி மடுக்காவிட்டாலும் அவளின் அழைப்பு தேனாய் தித்தித்தது அவனுள்.

‘பார்க்கறேன், இன்னும் எத்தன நாளுக்குத் தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம்னு’ என்ற நினைத்தபடி இருந்தவனுக்குத் தெரியவில்லை ஆட்டத்தை அவனே தொடர்ந்து முடியாத முடிவிலியாக மாற்ற இருப்பதை!

அலரின் கன்னத்தில் ஆழக் கீறல் இருந்ததால் தையல் எதுவும் போடாது இருக்கமாய் ப்ளாஸ்டர்ஸ் போட்டிருந்தனர்.

நம்னஸ் இஞ்ஜெக்சன் (மரத்துப்போகும் ஊசி) போட்டிருந்தாலும் ஒருவித அசௌகர்ய உணர்வுடனேயே அவள் இருக்கவும், தூக்கத்திற்கான மருந்தைக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டார் மருத்துவர்.

மெல்ல அலரிடம் வந்தவள் அவளுக்கானச் சிகிச்சையைப் பார்த்தபின்,

“அண்ணியால வலி தாங்க முடியாதேங்க. எழுந்தா ரொம்ப அழுவாங்க” என்றாள் அலரைப் பார்த்துக்கொண்டு கவலையாக.

“ம்ம்” என்று தங்கையின் சிவந்த கன்னத்தைப் பார்த்தபடி இருந்த தர்ஷனுக்கு ஏனோ அந்த நாள் வெறுப்பாக இருந்தது.

மன உளைச்சல் என்பதைத் தாண்டி ஒருவித மனக் கசப்பு அவனுக்கு.

தகப்பனா, மாமனா, தங்கையா மச்சானா என்ற அவன் மனக்கேள்விகளைத் தாண்டி இப்போது அவனின் சக தர்மினியாய் வரவிருப்பவளுக்காக அவனிடமே வாதிட ஆரம்பித்திருந்தது அவனின் பொல்லா காதல் கொண்ட மனம்.

அதைக் கலைக்கும் விதமாய், “என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க” என்று கடுப்பாய் கடுத்தபடி அறையினுள் பிரவேசித்தான், விஜயராகவன்.

அவன் நடந்து வந்த வேகத்தில் சட்டை முழுதும் வியர்வையில் நனைந்திருக்க, அவன் முகத்தின் தெரிந்த பரிதவிப்பும் வார்த்தைகளின் சரமும் அவன் கோபத்தைக் குத்தீட்டியாய் இறக்கியது அங்கு.

படுக்கையில் தளர்ந்து போய், ஒரு பக்கம் முழுக்க கட்டிடப்பட்ட நிலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள், அலர்மேல் மங்கை.

விஜயராகவன் போட்ட சப்தத்தில் சிறிதே அவள் அசைந்துகொடுத்தாலும், எழும்பாமல் வலியில் முகத்தைச் சுழித்தாள் அலர்.

ப்ரியதர்ஷனும் மிர்ணாளியும் ராகவனின் திடீர் வரவை எதிர்பார்க்கவில்லை.

“அண்ணா” என்று மிர்ணாளி அவனிடம் விரைய, அலரையேப் பார்த்துக்கொண்டிருந்தவன், “அவளைப் பார்” என்றான்‌ பட்டென்று.

ஏக டென்ஷனில் வந்திருக்கிறான் என்று அவன் உடல் பாவனை காட்டிக்கொடுத்தது. அவனின் சரீரம் சற்று பருமனாக இருக்கவே அவனின் ஓட்டத்தையும் படபடப்பையும் தவிப்பையும் அவன் உடல் உள்வாங்கி வெளிக் காட்டத் திணறித்தான் போனது.

மூச்சு வாங்க நின்றிருந்தவன் கவனமெல்லாம் அவன் மயிலிடம் தான்.

அதற்குள் குணசீலன் பில்லை கட்டிவிட்டு வர, விநாடியில் பரபரப்பு தோற்றியது தர்ஷனுக்கு.

“ராகவா, இங்க வாடா” என்று தகப்பன் கண்ணிலிருந்து மச்சானை அவன் விலக்கப்பார்க்க, க்கூம்.. விளைவு காற்றுப்போன சிப்ஸ் பேக்கெட் தான்.

“அடம் பண்ணாத ராகவா, அப்பா வந்துட்டார்டா” என்றான் தர்ஷனும் தாளாது.

வந்தவர், அங்கு ராகவை எதிர்பாராது திடுக்கிட்டு நின்றுவிட்டார்.

விஷயம் புரியவும், “இங்க நீ என்ன பண்ணுற?” என்ற சீற்றமான பேச்சு மிர்ணாளிக்குத் தூக்கிவாரிப் போட, வழக்கம் போல் பிள்ளை நடுங்கிப்போனது அவர் குரல் கேட்டு.

அலர் படுத்திருந்த படுகையோடு அவள் ஒட்டி நின்றுவிட, குணசீலனின் அவதாரம் அவளை மிரட்டியது.

“தர்ஷா, வெளிய போகச் சொல்லு” என்றவர் உறங்கும் மகளை முறைத்துப் பார்த்தார்.

“ஏன் மாமா இத்தன வருஷமாகியும் இன்னும் இப்படியே இருக்கீங்க?” என்று அறையே அதிர கத்தினான் விஜயராகவன்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கான மொத்த உருவாய் நின்றிருந்தான் அவன்.

அவன் அலரின் நிலை அவனை மாற்றியிருந்தது.

சொல்லப்படாத காதலுக்கான தவிப்பும் கோபமுமே இந்த அளவில் இருக்க, இதில் அவள் முழுதும் அவனுக்கானவளாய் அவளை ஒப்புவித்த பின் நடக்கும் நிகழ்வுகளின் வீரியமெல்லாம் எந்த அளவில் இருக்குமோ?

சில அதீதங்கள் சூழலுக்கும் சூழ்நிலைக்கும் தக்க மிகையாக இருக்க வேண்டிய அவசியம் உறவுகளுக்கு இடையே தேவையான ஒன்று.

அதைத்தான் அவனையும் மீறி விஜயராகவனின் கோபம் செய்துகொண்டிருந்தது.

“எப்போதான் மாமா நீங்க சரியாவீங்க? உங்களால, உங்க ஒருத்தரால எத்தனை மன கஷ்டம் எல்லாருக்கும்?” என்க, அதில் குணசீலனின் தன்மானம் தூண்டப்பட்டது.

“ஆமா, என்னால தான் உங்களுக்குக் கஷ்டம் இல்லையா? உங்க அப்பன் பண்ணது மட்டும் ஆகச்சிறந்த செயல்! அதை ஆதரிச்சு, பூரிச்சுப்போய் நானும் உங்களோட வெக்கமே இல்லாம ஐக்கியமாகனுமா” என்றவர் கோபத்தை எதிர்நோக்கியபடி தான் இருந்தான் விஜயராகவன்.

அவனுக்கே அவனின் அந்த பேச்சு பிடிக்காது இருக்க, பல்லைக் கடித்து மேற்கொண்டு பேசாது அமைதியாகத் தன்னை அடக்கப் பார்க்க, “நீங்க ஏத்துக்கிட்டனால தான் அப்பா, மாமா அத்தைய கல்யாணமே பண்ணாரு” என்ற தர்ஷனின் பேச்சைச் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை, குணசீலன்.

“சொல்லுங்க ப்பா, நீங்க அவங்க காதலை ஏத்துக்கிட்டனால தான் மாமா துணிஞ்சு அத்தையக் கல்யாணம் பண்ணாரு. இல்லைன்னு சொல்லிடுவீங்களா நீங்க? யாரோ எவனோ சொன்ன விஷயத்தை முப்பது வருஷமா பிடிச்சு தொங்கிட்டு, எல்லார் மனசையும் நொகடிக்கறீங்க நீங்க” என்றான் அப்பட்ட குற்றச்சாட்டாக.

ப்ரிய தர்ஷனின் பேச்சால் அவன் மீது கட்டுக்குள் கொண்டுவர முடியாத அளவு கோபம் வந்தாலும், விஜயராகவன் இருப்பதை உணர்ந்து, “தர்ஷா” என்று மகனை அதட்டி அடக்கப் பார்த்தார் குணசீலன்.

“நீங்க பூரிச்சு ஏத்துப்பீங்கன்ற எல்லையெல்லாம் தாண்டி இப்போ நான் உங்க மகளைக் கல்யாணம் பண்ணுற எண்ணத்தில இருக்கேன். நீங்க இன்னும் எங்க அப்பாம்மா கல்யாண பஞ்சாயத்துலேயே நின்னுட்டு இருக்கீங்க” என்க, அறையே சப்தமில்லாது இருக்க அலரிடம் ஒரு விக்கல் வெளிப்பட்டது.

‘கேப்ல பில் பண்ணிட்டான் விஷயத்தை’ என்று ப்ரியதர்ஷன் ராகவனைப் பார்க்க,

“எங்க அப்பா இன்னும் ‘என் குணா என்னை விடமாட்டான்’னு சொல்லிட்டு இருக்கார். ஆனா நீங்க அந்த மனுஷன ஒரு சின்னக் கல்லாக் கூட மதிக்காம இத்தன வருஷமா, உங்க பாஷையில் சொன்னா வைராக்கியமா அவரை தண்டிக்கறீங்க. இப்போ யோசிச்சா கூட உங்களோட கண்ணோட்டம் ஒரு குப்பை தான்!

ஆனா அதையே கவுரவம், மானம்னு சொல்லி தலையில் தூக்கி வைச்சிட்டு சுத்தி இருக்கறவங்களை அண்டாம இருக்கற உங்க செயல் உங்களுக்கு என்ன கொடுத்துச்சு மாமா?

நான் தான் உங்களை மாமானு சொல்லுறேன்.‌ஒரு தடவையாது இத்தனை வருஷத்துல மருமகனேன்னு எங்க ரெண்டு பேர கூப்பிட்டிருப்பீஙக்ளா? தங்கச்சினு‌ எங்க அம்மாவ வந்து பார்த்தீங்களா?

அட அதையெல்லாம் விடுங்க, நாங்க வேறாவே இருக்கறோம். எங்க அப்பா, உங்க மூச்சு காத்துன்னு சொல்லிவீங்களாமே! அந்த மனுஷன் முகத்தைப் பார்த்து ஒரு வார்த்த பேசியிருக்கீங்களா? என்ன கொடச்சது உங்களுக்கு எங்களை ஒதுக்கி வெச்சு? எவனோ வாயிருக்காம பேசினா, எங்கள விட்டுடுவீங்க. இல்லையா” என்று இத்தனை வருட ஆதங்கங்களை அனைத்தையும் மொத்தமாய் கொட்டிக் கவிழ்த்தான் விஜயராகவன்.

பேச்சற்று போனார் என்பதைவிடப் பேச வார்த்தைகளைக் கோர்க்க முடியாது தவித்தபடி நின்றிருந்தார், குணசீலன்.

ப்ரியதர்ஷனுக்கு தந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் முன்னிலையில் அவன் அம்மாவோ அலரோ குணசீலனை ஒத்தை வார்த்தை பேசினால் கூட தாங்காதவன் இப்போது ராகவை பேச விட்டுப் பார்த்து நிற்கிறான்.

சரி தவறு என்ற எண்ணத்தையெல்லாம் தாண்டி சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உணர்வின் உந்துதலில் தந்தையின் தவறை(?); தேவையற்ற கோபத்தை ஆதரிக்காது ராகவன் அவரைச் சாடுவதை இறுகிப்போய் கேட்டுக்கொண்டிருந்தான், அவன் செய்ய முடியாத செயலை அவனாவது செய்யட்டும் என்று.

அங்கு மஞ்சுவின் தொலைப்பேசி அழைப்பு சித்ராவிடம் புயலைக் கிளப்பி இருந்தது.

மஞ்சு நடந்தை சொல்லச் சொல்ல, “என்ன’ண்ணி சொல்லுறீங்க” என்று அதிர்ந்து நின்றுவிட்டார் சித்ரா.

குணசீலன் எப்படியோ நாத்தனாரும் அண்ணியும் அத்தனை பிடிப்பான பிடிப்பு அவர்களின் உறவு நிலையில்.

மஞ்சுவின் செய்தியும் அவரின் அழுகையும் அவரை பீதியடைய வைத்திருக்க, “எந்த ஹாஸ்பிட்டல்ல ண்ணீ இருக்காங்க?” என்று வேகவேகமாய் கேட்டவர் அந்த வேகத்திலேயே கடையைப் பொறுப்பாளரிடம் மேற்பார்வையில் விட்டுவிட்டு சின்ன மகனை அழைத்திருந்தார்.

முகுந்த் வந்தவுடன் மருத்துவமனை கிளம்பியவர்கள், “ம்மா, மாமா” என்று மெல்ல ஆரம்பித்தான் மகன்.

அவன் பார்வையின் தயக்கங்கள் சித்ராவிற்குப் புரிந்தாலும் மஞ்சு சொல்லிய செய்தி அவரை உலுக்கியது.

“இருக்கட்டும், இன்னிக்கு என்ன ஆனாலும் ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம் முகுந்தா. புள்ள எத்தன பெரிய ஆபத்தில இருந்து மீண்டிருக்கா, இதுக்கு மேலையும் நான் வாய மூடிக்கிட்டு கிடந்தா என்ன பொம்பளை நான்?”

“அப்பா” என்றவன் இழுக்க,

“வேண்டாம். அங்க உன் மாமா எப்படி ஆடுவார்னு தெரியாம அவரை ஏன் வேகவிடனும்? நானே பார்த்துக்கறேன், இல்லேனா..” என்றவரால் அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

தொண்டையைக் கவ்விய உணர்வுகளை அடக்கிக்கொண்டவரால் இன்னும் எத்தனை நாட்கள் இந்த உணர்வு போராட்டத்தை அண்ணன் தொடர்வார் என்ற ஆயாசமும் இல்லாமல் இல்லை.

என்ன செய்ய? எல்லாம் பாசம் என்ற வலையில் சிக்
கிய மீன்கள் தானே நாம்!

துள்ளித் துடித்தாலும் ரத்த சொந்தத்தைத் தான் விட்டுவிட முடியுமா? கைவிட்டுப் போன சொந்தமென்றாலும் அதை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள பிரயத்தனப்பட மாட்டோமா என்ன?
 
Last edited:

Mathykarthy

Well-known member
விஜய் சூப்பரா பேசுனான்..👍 சைடு கேப்புல உங்க பொண்ணு எனக்குத் தான்னு பிட்டப் போட்டுட்டான்..... 🤭
சித்ரா இப்போ எங்க ஹீரோ ஓகே வா... 😝😎
 

NNK12

Moderator
விஜய் சூப்பரா பேசுனான்..👍 சைடு கேப்புல உங்க பொண்ணு எனக்குத் தான்னு பிட்டப் போட்டுட்டான்..... 🤭
சித்ரா இப்போ எங்க ஹீரோ ஓகே வா... 😝😎
மிக்க நன்றி
 

santhinagaraj

Well-known member
அந்தக் கிழவி ரொம்ப ஓவரா பேசுது தர்ஷன் நீ பேசினது தான் கரெக்ட்டு அந்த கிழவி என்ன உங்க அம்மாவ வெட்டி விடுறது நீங்க எல்லாரும் சேர்ந்து அந்த கிழவியை வெட்டி விடுங்க.

எழுத்து பிழைகள் நிறைய இருக்கு அதை கொஞ்சம் சரி பாருங்க
 

NNK12

Moderator
காதல் - 04

முன்மாலை நேரம். சூரியனின் செக்கர் சிவந்த வதன ஒளியால் செம்மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது மருத்துவமனை கேன்டீன்.

நல்ல கூட்டம். கலவையான மக்களின் சப்தமும் உணவின் மணமும் ஒவ்வாத தன்மையைக் கொடுத்தது முகுந்தனுக்கு.

முகத்தைச் சுழித்துக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரே தர்ஷனும் மிர்ணாளியும் வடை பஜ்ஜி காஃபியில் லய்திருந்தனர்.

“எப்படிடா இங்க உங்காந்து சாப்படறீங்க” என்று மூக்கைச் சுருக்கி அவன் கேட்டுவிட,

தர்ஷன், “இங்க கஷ்டமா இருந்தா வா மார்சுவரி பக்க போகலாம். அங்க தான் ப்ரீயா இருக்கும்” என்க,

“அங்க நின்னுட்டுதான் குடிக்க முடியும். உட்கார இடமில்லை” என்று மிர்ணாளி சொல்ல, சிரித்துவிட்டான் தர்ஷன்.

“கூல்டீ, என்னடி” என்றவன் மீண்டும் சிரிக்க,

“இல்ல, அங்கையும் குட்டி கேண்டீன் இருக்கு. வர்க்கர்ஸ் யூஸ்காக” என்க, முகுந்த அதிர்ந்தான்.

“எடமாடா இல்ல இங்க? அங்க போய் எப்படி உட்காந்து நிம்மதி இந்த நாறிப்போன டீய கூடிப்பாங்க” என்று ஆதங்கப்பட்டான்.

“நாறியில்ல ஆறி!” என்று தர்ஷன் திருத்த, “ம்ம்ப்ச், போடா” என்றவன் முகத்தைத் திருப்பினான்.

அதற்குள் பரபரப்பாக அங்கு வந்தான் விஜயராகவன். அவனின் நடையிலேயே ஏதோ புதிய பிசாசு கிளப்பியிருக்கிறது என்று சரியாக யூகித்திருந்தான், ப்ரியதர்ஷன்.

வந்தவனும், “சுனாமி வருதுருச்சு” என்பது போல், “ஆச்சி வராங்கடா” என்க, “ஏதேய்” என்று கத்திவிட்டான் முகுந்தன்.

“சுத்தம்” என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் தர்ஷன்.

மிர்ணாளி பேயாய் முழித்து, “அண்ணா, அப்போ நான் என் ப்ரண்ட் வீட்டுக்கு போயிடவா” என்றாள் மெல்லிய குரலில்.

என்ன முயன்றும் அந்த பிசிறிய குரலில் வெளிப்பட்ட ‘தனிமையுணர்வு’ மூவரையும் ஆட்டிவிட்டது.

“சின்னு” என்று முகுந்த் போட்ட அதட்டலில் அவள் அமைதியானாலும், தர்ஷனுக்கு அவளின் நிலை உள்ளூர கொன்றது.

“லட்சம் முறை நாங்க சொல்லிட்டோம் சின்னு. எப்போதான் நீ நாங்க சொல்லுறத ஏத்துக்கப்போற? டாக்டர்க்கு தான படிக்க? சொன்னா புரியாதா? இல்ல நாங்க தேவையில்லேன்னு முடிவுல ஏதாவது இருக்கியா?” என்ற ராகவனின் அழுத்தமான கேள்வியில் தலையைக் குனிந்து மௌனமாகிவிட்டாள் மிர்ணாளி.

“டேய் விடுடா” என்றான் தர்ஷன் தாளாது.

“செவில்லைய அப்புவேன். அவள லவ் பண்ணுறேன்னு வந்து நின்னதான? கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக என்ன கேடு வந்துடுடா” என்று ராகவும் எகிற, விழுக்கென்று நிமிர்ந்து அண்ணனைப் பார்த்தால் பெண்.

இந்த செய்தி அவளுக்கு முற்றும் புதியது.

“அத்தனை வந்து பேசுனீங்க அப்பாகிட்ட, ‘உங்களவிட நல்லபடியா மிர்ணாளிய பார்த்துப்பேன்னு’ சொன்னிங்க? மாசம் எட்டாகியும் இன்னும் ஒன்னும் ஆகல. சின்னு இன்னும் அவளுக்குள்ளேயே தான் ஒடுங்கீட்டு இருக்கா” என்று முகுந்தும் தர்ஷனை பேச, மிர்ணாளிக்கு அந்த பேச்சுக்கள் எல்லாம் உள்வாங்கிக் கொள்ளவே நேரம் எடுத்தது.

மிர்ணாளி, சேத்தனின் தம்பி கண்ணதாசனின் ஒற்றை பெண்பிள்ளை.

சேத்தன் காவல்துறையில் சேர்ந்தபோது காஞ்சிபுரத்தில் தான் அவரின் முதல் பணியாணை வந்திருக்க, அம்மா, அப்பா, தம்பி கண்ணதாசன் உடன் அங்கேயே தங்கள் ஜாகையை மாற்றிக்கொண்டார்.

இடையில் அவர் காதலால் விளைந்த சோதனையில் சித்ராவை கரம்பற்றி காஞ்சிபுரத்திலேயே அவர்கள் வாழ்க்கையும் என்றாகிவிட்டது.

கண்ணதாசனின் திருமணம், விஜயராகவன் முகுந்தன் என்ற சித்ராவின் பிள்ளை பேறு, வீடு நிலபுலன்கள், கண்ணதாசன் திருமணம், ஒற்றை மகளாய் மிர்ணாளியின் பிறப்பு, அவருக்கான தொழில் வளர்ச்சி என்று சேத்தனும் கண்ணதாசனும் அடுத்தடுத்து அவர்களின் செல்வ நிலையில் உயர்ந்துகொண்டிருக்க, விதியின் கோரத்தாண்டவமாய் பெற்றோருடன் தம்பி குடும்பத்தையும் விபத்தில் பலியாகக் கொடுத்து நிர்க்கதியில் நின்றார் சேத்தன்.

சேத்தனின் அப்பா, அம்மா,
கண்ணதாசன்
அவரின் மனைவி
சீதாலட்சுமி என்று நால்வரும் உருத்தெரியாமல் விபத்தில் போயிருக்க, அதில் தப்பிப் பிழைத்தது என்னமோ மிர்ணாளி மட்டுமே.

எட்டு வயதுக் குழந்தை தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று நால்வரும் அவள் கண்ணெதிரே கோரமாய் மாண்டதைக் கண்ணுற்றபின் அவள் வாழ்க்கை மொத்தமாய் மாறியிருந்தது விதியின்படி.

சேத்தன், “பெரிப்பா இருக்கும் போது எங்க சாமி இப்படி அழலாமா?” என்று மகளை அணைத்துக்கொண்டவரின் தந்தை பாசம் மகன்களைக் காட்டிலும் மிர்ணாளியிடம் அதிகமாய் மிளிரும்.

ஏக்கங்கள் ஓராயிரம் இருந்தாலும்,
சித்ராவிடம், “பெரிம்மா, அந்த பாட்டி உங்ககிட்ட நான் வரக்கூடாது சொல்லுறாங்க. நீங்க அண்ணாக்கு மட்டும் தானாமே” என்று அந்த வயதில் புரியாது வந்த நிற்கும் குழந்தையின் நிலை என்னவாக இருக்கும்.

‘உனக்கு அப்பா அம்மா இல்லை’ என்ற விஷத்தைத் தான் அவளிடம் இந்த சமூகம் வளர வளர ஆழப்பதித்தது.

அதன் விளைவால் துவண்ட பிள்ளையை முதலில் கண்டு, தாங்கிப் பிடித்தது, ப்ரிய தர்ஷன் தான்.

“ஏய் கூல்டீ, அத்தைகிட்ட சொல்லனுமா உன்ன? எதுக்கு இங்க தனியா உங்காந்து அழற” என்ற பதினோரு வயது மிர்ணாளியை அடக்கும் ப்ரியனைப் பார்க்க அத்தனை பயப்படுவாள்.

அந்த அதட்டலின் பின் மறைந்து வரும் அவள்பால் அக்கறையைக் கண்டுகொண்டு ரசிப்பதில் ஆரம்பித்தது மிர்ணாளியின் பிடித்தங்கள்.

அந்த பிடித்தங்களின் கோர்ப்புகள் நாள்பட நேசத்தின் விதையாய் அவள் மனதில் விழுந்து ஒருகட்டத்தில் அது ஏக்கமாய் உருமாறும் இடத்தில் அதைப் பிடித்துவிட்டான் அவள் ப்ரியன்.

“என்ன, என்னைய லவ் பண்ணுறீயா கூல்’டீ?” என்று அவன் கேட்கும் போது அவன் சிவில் சர்வீஸ் டிரைனிங் முடித்து போஸ்டிங்காக காத்திருந்த சமயம்.

அதில் அந்த அவனின் த்வனியில் அவள் பார்த்தது ப்ரியனை அல்ல அவனின் ஆச்சி, ஐய்யம்மாளை.

யார் அவளைத் துச்சமாய் மதித்தாரோ, சேத்தன் குடும்பத்துடன் ஒட்டவிடாது அவளை வெட்டிவிடப் பார்த்தாரோ, அவளின் இருப்பையே சபிக்கப்பட்டது போல் சித்தரித்தாரோ, அவள் ‘தனியாள்’ என்ற எண்ணத்தை அவளிடம் ஆழப்பதித்தாரோ அவரின் நகலான உருவாய் தான் தெரிந்தான் அவளின் ப்ரியன் அச்சமயத்தில்.

ஒரு கட்டத்தில் அவன் சொன்ன காதலை மனதால் அவள் சுவீகரித்தாலும் வெளியில் அதை காட்டாது கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தவளை தவிக்க விட்டு ஒரு கட்டத்தில் அவன் நகர்ந்துவிட, இந்த பெருந்தவிப்பில் அவனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தவளின் முன்னர் அவளின் ப்ரியனின் தரிசனம் இன்று.

“எதுக்கு இப்படியெல்லாம் கேட்டீங்க?” என்று முயன்று தருவித்த குரலில் மிர்ணாளி கேள்வியிட,

ப்ரியதர்ஷன், “நீ இப்படி கேள்வி கேட்கக் கூடாதுன்னுதான்” என்றான் பட்டென்று.

ராகவன், “வரவர உன்னோட போக்கு சரியா இல்லை சின்னு.‌ என்ன மனசுல வெச்சிட்டு இப்படி நடந்துக்கற? ஆச்சி என்னாவது திரும்பவும் சொல்லுச்சா? சொன்னா திரும்ப பேசுன்னு எத்தனை தடவை சொல்லுறது” என்க, அப்பட்டமாக எரிச்சல் தெரிந்தது ஆண்களின் முகத்தில்.

தர்ஷன், “ஆச்சி ஆச்சின்னு சொல்லிச் சொல்லி என் வாழ்க்கையத் தூசியா தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கறாங்கடா” என்க,

“இங்க மட்டும் என்ன வாழுதாம்” என்றான் ராகவனும் உடன்.

“இந்த கெழவியோட பெரிய இம்சை” என்று தலையில் அடித்துக்கொள்ள, சித்ரா ஐய்யம்மாளின் வருகையைச் செல்ல அழைத்துவிட்டார் முகுந்தனுக்கு.


ஐய்யம்மாள், நல்ல ஆஜானுபாகுவான உடலுடன் எழுபதின் துவக்கத்தில் சிறிதும் தளராத உடலும் தும்பைப்பூவாய் நரைத்த முடியும் காதில் பெரிய வைர கம்மலும் வேல் முகப்பில் ரெட்டைவடம் செயினும் தூய வெள்ளை புடவையில் கண்டாங்கி கட்டில் கடுமையூரிய முகத்துடன் பார்ப்போரை எட்ட நிற்க வைத்து மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும்.

நல்ல நிறம் அதில் கோபத்தின் தூரலால் இளஞ்சிவப்பில் மாறியிருக்க உள்ளூர அவரை கொதிக்க வைத்த தணலின் சூடு உடலில் பரவியிருந்தது.

சித்ராவும் சேத்தனும் அலர் இருந்த அறையில் முன்னர் அமர்ந்திருக்க, ஐய்யம்மாளின் வருகையில் விருட்டென்று எழுந்துவிட்டார் சேத்தன்.

ஐய்யம்மாள் என்றால் மரியாதை என்பதைத் தாண்டிய ஒரு ஆளுமையுடனான கம்பீரம் அவரிடம் இருக்கும்.

அந்த ஆளுமைக்கான மரியாதைக் கலந்த பயம்
மருமகனே ஆயினும் சேத்தனிடம் இன்று வரை இருப்பதற்கான காரணம்,
வேழ மூர்த்தி.

வேழமாய் அவர் ஊரை முன்னின்று வழி நடத்தியவரின் திண்மையான மேனியும் அறிவும் அவர் இல்லாத போதிலும் அத்தனை உயர்ந்து நிற்கின்றது இன்றுவரை.

அவருக்கே இத்தனை பெரும் மதிப்பு இருக்கும் இடத்தில் அவரின் துணைவியாரான ஐய்யம்மாளுக்கு இல்லாது போகுமா என்ன?

கண்ணசைவில் கட்டளை பிறப்பித்தவரைப் பார்த்து இன்றும் பவ்யமாக நின்று நலம் விசாரித்தார், சேத்தன்.

சேத்தனுக்குத் தலையசைத்தவர், “சீலன் எங்க?” என்றார்.

ஐய்யம்மாளுக்கு யார் இருந்தாலும் இல்லை என்றாலும் கவலையில்லை. மகன் வேண்டும் அவருக்கு, எங்கும் எதிலும்.

அவரின் குரல் அங்கு ஓங்கி ஒலிக்க, அறையினுள் அலரின் கைகளைப் பற்றிக்கொண்டு வெடவெடத்து அமர்ந்திருந்த மஞ்சுவிற்கு ஈரக்குலை நடுங்கியது.

சித்ரா, மஞ்சுவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததில் இருந்து மகளைவிட்டு இம்மி நகரவில்லை அவர். அத்தனை பரிதவித்துவிட்டார் மகளின் ரத்தத்தைப் பார்த்தும் கணவனின் உதாசீனத்தை நினைத்தும்.

“அம்மா” என்று தீனமாய் அழைத்தால் அலர்.

வாயை அசைக்கக் கூட முடியாதபடி வலி அத்தனை கொன்றது அவளை.

“மங்கை, அம்மா தப்புடா. அம்மாவ மன்னிச்சுருடா மங்கைம்மா” என்றார் மீண்டும்.

அலருக்கு ஆயாசமாய் போய்விட்டது. மஞ்சு மகள் மேல் கொண்ட பாசத்தால் அந்த நேரம் தோன்றிய ஆவேச பயத்தால் செய்த செயல் இத்தனை பெரும் பிரளயத்தில் முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அம்மாவிடம் சுரந்த அன்பால், “விடு’ம்மா” என்றவள் என்ன சமாதானம் செய்தாலும் பெற்ற மனம் துடிக்கத் தான் செய்தது.

அதிலும் குணசீலனின், “என் மங்கையை தள்ளிவிட்டவ என் முகத்துலையே முழிக்காத” என்ற பேச்சு மொத்தமாய் மஞ்சுவை முடக்கியிருந்தது.

என்ன இருந்தாலும் பாசத்திற்கு ஏங்கும் பாவப்பட்ட பெண் இனம் தானே அவரும்!

இயற்கையாகவே சற்று மென்மையானவர் இப்போது அழுதழுது அத்தனை பரிதாபமாக இருந்தார் மஞ்சு. அதை மேலும் அதிகரிக்கும் வண்ணம் இருந்தது ஐய்யம்மாளின் வருகை.

“ஊருல இருந்து வந்து ஒரு நா ஆகலை அதுக்குள்ளையும் புள்ளைய படுக்கப்போட்டாச்சு” என்றவர் மஞ்சுவை நோக்கி,

“புள்ள பெத்தவளுக்கு அதுங்களை பத்தரமா பார்க்க துப்பத்துப்போய் நீயே புடிச்சு தள்ளி வுடுவீயோ? கொல்லிக்கட்டைய எடுத்து கையில வெச்சா சரியாபுடும். யாரூட்டு பேத்தியா மேல கைய வெச்சிருக்க நீ” என்று உக்கிரமாய் வந்தவரின் பேச்சை அலர் சுத்தமாய் ரசிக்கவில்லை.

பேரப்பிள்ளைகள் நால்வர் மேலும் அத்தனை அதீத பாசம் தான் ஐயம்மாளுக்கு. என்ன மருமகனும் மருமகளும் மட்டும் துச்சமாகத்தான் இருந்தனர் அவர் கண்களுக்கு.

அவரின் அந்த ஆளுமையும் தனித்தன்மையும் நான்கு பேரப்பிள்ளைகளிடமும் இருக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே அவர்கள் வெவ்வேறு சமயங்களில் அவரைப் பார்க்க வரும் போதெல்லாம் ‘அவரின் ஆளுமையுணர்வை’ போதனை செய்வார்.

அப்போது பிள்ளைகளின் கண்ணில் அவர்களின் “ஆசை ஆச்சி”யாக இருந்தார் என்றால் மிகையாகாது.

நாள் போக்கில் அது மாறி “அனகோண்டா ஆச்சி”யாக அவரை அவரே உருமாற்றம் செய்து கொண்டது தான் படுபாவமான செயல்.

‘இந்த கெழவிக்கு வாய் மட்டும் இல்லேனா தெருவுல போற வாண்டே எட்டா சுருட்டி கக்கத்தில கொண்டு போயிடும். வாயா இது, பனாமா வாய்க்கால்’ என்று நினைத்தபடி,

“ஆச்சி” என்றாள் மெல்லிய குரலில் அழுத்தமாய்.

“ஏனாத்தா, செத்த பேசாது இரேமத்த மங்க. நோவப்போகுது” என்று அவள் பேத்தியிடம் அமர,

“அம்..மாவ இப்..டி..யா பேசு..வீ..ங்க” என்றாள் இடைவெளிவிட்டு.

அதில் தெரித்த கண்டனத்தைத் துளியும் மதியாது, “பேசாத பேசாத.. நோவப் போகுது பாரு” என்று அவள் கட்டுப்போடாத கன்னத்தை அவர் தடவ, அதைத் தடுத்தாள் அவர் பேத்தி.

உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கியவராக, “உன்னைய இங்கன வர வரவெச்சுப்போட்டாளே ஆத்தா, இவள சீலன் கிட்டச் சொல்லி வெட்டி விட சொல்லலாம்ற ஆத்திரம் வருது” என்று அடங்கா ஆவேசத்துடன் அவர் பேச, அதை கேட்டபடி உள்ளே வந்தனர் தர்ஷனும் சித்ராவும்.

பட்டென்று, “மொத உங்களத் தான் நாங்க வெட்டி விடனும்” என்றுவிட்டான் தர்ஷன்.

“ஏன்ம்மா என்னம்மா பேசறீங்க” என்று மஞ்சுவின் இருண்டுவிட்ட முகத்தைப் பார்த்தபடி தாயிடம் சித்ரா விரைய,

“எல்லாம் இவ வந்த நேரம் தான்.” என்று மகளுக்கு விடை கொடுத்தவர் பேரனிடம் திரும்பினார்.

“அம்புட்டு ஆச்சிய விரோதியா காட்டியிருக்காலா சாமி இவ. என்னைய வெட்டி வுட்டுட்டு ராச இருந்துருவீயலோ? இந்த ஆச்சி வேண்டாமாய்யா? என்ன பேச்சு பேசறீய்ய அப்பு” என்று நொடியில் அவரின் மொத்த ரூபமும் மாறியிருந்தது பேரனின் பேச்சால்.

“ம்ம்ப்ச்.. நீங்க பேசுறது மட்டும் சரியா? எல்லாரையும் அப்படி என்ன கீழா பார்க்கற எண்ணம் உங்களுக்கு? அவங்க எங்க அம்மா, எங்க முன்னாடியே அப்பாகிட்ட அம்மாவ பிரிக்க சொல்லுறேன் சொல்லுறதெல்லாம் என்ன பேச்சு. அந்த எண்ணமிருந்தா இனி இங்க வராதீங்க” என்றான் தாட்சண்யம் இன்றி.

‘டேய் தர்ஷா, பின்றடா நீ’ என்ற அலர் மனதிற்குள்ளேயே தர்ஷனுக்குப் பாராட்டு பத்திரம் வாசிக்க, ‘நம்மாளும் தான் இருக்கே’ என்று விஜயராகவனையும் நொடிக்காமல் இல்லை.

“தர்ஷா” என்று சித்ரா அவனின் பேச்சைக் கேட்டு அதிர,

“பின்ன என்னங்கத்த? இவங்க அதிகாரமெல்லாம் அந்த ஊரோட சரி. இங்க, நம்ம வீட்ட அதிகாரம் பண்ணுற உரிமைய யாரும் தரல”

“அது எம் மவன் வீடுடா” என்றார் ஐய்யம்மாள் நெஞ்சை நிமிர்த்தி.

“இருந்துட்டு போகட்டும். அந்த வீட்டுல அவர் மட்டும் இல்ல, நாங்களும் தான் இருக்கோம். எங்க மேல உங்களோட அதிகாரத்தத் திணிக்கப் பார்க்காதீங்க, நல்லாயிருக்காது” என்றவன் விருட்டென்று வெளியேறிவிட,

“எனக்கெதிரா எம் பேரனைய இத்தன நாள் கொம்பு சீவி விட்டிருக்கியோ? உன்னையவே சீவிபுடுவேன்டீ” என்றவர் அடங்கியபாடில்லை.

வெளியே சேத்தனுடன் இருந்த மிர்ணாளியை அத்தனை கடுமையாக முறைத்தபடி, “மாமா, உங்க மககிட்ட சொல்லி வைங்க. ஆச்சி என்ன பேசினாலும் பிடிச்சாலும் இவ தான் எனக்கு வைஃப். அதுல மாற்றமில்ல. மீறி என்னாவது செஞ்சா” என்று அவன் பார்த்த பார்வையிலேயே மொத்தமாய் அடங்கிவிட்டாள், மிர்ணாளி.

🌼

மதியம் போல் மருத்துவமனை வந்த சேத்தனை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட குணசீலன் மகனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை என்பதைவிட எங்கு அவர் கோபம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் அவரை அச்சமூட்டியது.

ஒருபுறம் மனது வெந்து தவித்தது குணசீலனுக்கு. காலை மகளின் கேள்வியால் நெஞ்சோரம் இருந்த ரணம் கீறிவிடப்பட்டிருக்க, மதியம் வந்த மருமகனின் வார்த்தைகளால் கீறல் வெடிப்பானது.

யாரும் இல்லாத வீட்டின் தனிமை அவருக்கு புதியது இல்லை தான். ஆனால் இன்று அந்த தனிமையின் தவிப்பு கூடியபடி இருந்தது.

‘நான் இப்படிதான்’ என்ற கோட்டிற்குள் வாழும் ஒரு கோபக்காரர், குணசீலன்.

அந்த கோபத்தால் வரும் உதாசீனத்தையோ ஒதுக்கத்தையோ சுடுசொற்களையோ ஏன் அதனை ஒட்டி அவர் காட்டு அன்பையும் மற்றவர் ஏற்றாகவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளிவிடுவார்.

அவரின் அந்த பண்பே சில சமயம் அவருக்கே சற்று நெருடலாக இருந்தாலும் அவரை அப்படியே ஏற்றுக்கொண்டவர், சேத்தன்.

இத்தனை வருடங்களில் அவர் போகாத இடமில்லை பார்க்காத மனிதர்கள் இல்லை எதிர்கொள்ளாத சூழ்நிலை இல்லை. இருந்தும் அந்த நிலைகளில் எல்லாம் மஞ்சுவையும் பிள்ளைகளையும் தவிர்த்து அவர் மனது அடித்துக்கொண்டு தேடியது, சேத்தனை தான்.

சேத்தன், தங்கையின் கணவன் என்பதற்கு முன்னர் அவரின் உயிரான நண்பன்.

அப்படித்தான் சொல்லவேண்டும். எதிர்பார்ப்பற்ற தூய உறவு இருப்பின் பெற்றவர்களை விடுத்து அது நிச்சயம் நண்பனாகத் தான் இருக்கவேண்டும்.

எந்த நிலையில் எது வந்தாலும் ‘நான் இருக்கேன்டா குணா உனக்கு’ என்று சொல்லும் அவரின் சேந்தனை உயிருள் பொதிந்து வைத்திருக்கிறார் குணசீலன்.

“சேந்தன் இல்ல சேத்தன் சொல்லு. எம் பேரத் தப்பா சொன்ன அம்மா வைவாங்க” என்ற சேத்தனை நான்கு வயது நிரம்பிய சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்ந்தாலும், அந்த தொடர்பில் ஏற்பட்ட இடைப்பட்ட பிரிவினால் முன்னர் இருந்த நட்பு இல்லாது போய்விடுமா என்ன?

அப்படி இல்லாது போகவைத்த ஒரு தோற்றப் பிம்பத்தைத் தான் தன்னுள், தன்னை சுற்றியுள்ளோரிடம் ஏற்படுத்தி வைத்திருந்தார் குணசீலன்.

காரணங்கள் ஊறரிந்தாலும் நண்பனை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலை வரும் என்றறிந்திராதவரின் கோப இயலாமையுடன் இணைந்துகொண்டது சேத்தனின் செயல்.

“இல்லடா குணா, சித்ரா ரொம்ப பயந்துட்டா. அதான் அவசரமா கல்யாணம் பண்ண வேண்டியதாகிடுச்சு. உனக்கு அத்தனை டிரங்கால் போட்டேன்டா நீ வரவே இல்லை” என்றவரை கன்னங்கன்னாமய் அடித்து உதைத்திருந்தார் குணசீலன்.

பதறித் தவித்து அவர் ஓடி வந்ததே சேத்தன் நலத்தை அறிவதற்குத் தான். ஆனால் அதற்கு முன்னால் அவர் காதை அடைந்த தந்தையின் வார்த்தைகளைக் கேட்டவரால் ஊர் வந்து சேரும் வரை நிலைகொள்ளவில்லை.

“எம் பேரேன்ன? மருவாதி என்ன? கண்டவனும் நாக்கு மேல பல்லப்போட்டு பேசுவானுவலே. எனக்குப் புள்ளையே
இல்லேனாலும் பரவாயில்லை, சினேகித துரோகி அவென் உசுரோட இருக்கக்கூடாது அப்பு. கொன்டு அவென் தலைய தாமிரபரணீல வீசிட்டு வாலே” என்ற வேழ மூர்த்தியின் சொற்கள் இன்னும் குணசீலனின் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

🎈


வேழம் - ஆண் யானை
 
Last edited:

NNK12

Moderator
அந்தக் கிழவி ரொம்ப ஓவரா பேசுது தர்ஷன் நீ பேசினது தான் கரெக்ட்டு அந்த கிழவி என்ன உங்க அம்மாவ வெட்டி விடுறது நீங்க எல்லாரும் சேர்ந்து அந்த கிழவியை வெட்டி விடுங்க.

எழுத்து பிழைகள் நிறைய இருக்கு அதை கொஞ்சம் சரி பாருங்க
மிக்க நன்றி. இப்போ செக் பண்ணி பாருங்க, கண்ணுக்கு சிக்கிய இடம் எல்லாம் பிழை பார்த்தாச்சு 🎈
 

NNK12

Moderator
காதல் - 05

ஐய்யம்மாளின் வருகைப் புயலாய் சுழன்றடித்தது அனைவரிடத்திலும்.

மிர்ணாளி, ராகவன், தர்ஷன் துவங்கி சேத்தனைக் கடந்து அது மஞ்சுவை அடைந்து நிலை கொண்டிருக்க இன்னும் அது கரையைக் கடந்தபாடில்லை.

புயல், வார்த்தைகளால் மிக மோசமான தீவிரத்தை ஏற்படுத்தியிருக்க, எந்த நேரமும் எந்த அசம்பாவிதமும் நேரலாம் என்ற எதிர்பார்ப்பைக் கணித்திருந்தான், முகுந்தன்.

அலர் உறங்கி எழுந்திருக்க மஞ்சு, ராகவன் தவிர்ந்து அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியிருந்தான், ப்ரிய தர்ஷன்.

“இத்தன பேர் இங்க வேண்டாம். பாட்டி பேச்சக் கேட்டு அண்ணிக்கு ரொம்ப ஸ்ட்ரைன் ஆகுது. அவங்க கொஞ்சம் தூங்குனா பெட்டர்” என்று முகுந்தின் கையை பிடித்துக்கொண்டு தர்ஷனிடம் சொன்னால் மிர்ணாளி.

‘நான் என்ன இவளுக்கு முட்டுக்கோலா’ என்று முகுந்த் நினைக்க, தர்ஷன் இருவரையும் அவனின் ஆதர்ஷ முறைப்புடன் பார்த்துவைத்தான்.

“சின்னு, உனக்கு இவர்கிட்ட பயம்னா சொல்லு அப்பாகிட்ட வேற மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்று சம்பந்தமில்லாது பேச, வலிக்க அவன் கையை கிள்ளியவள்,

“மூளைய மியூசியத்திலையா வெச்சிருக்க. இவர விட்டு வேற யார..” என்றவள் சுதாரித்து தர்ஷனை பார்த்தால்.

அழுத்தமான ஒரு பார்வை மட்டும் அவனிடம். காலையிலிருந்து நிலவிய ஒருவித இறுக்கம் சற்று இலகியது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் இருந்த புழுக்கம் துளி மறையவில்லை அவனிடம்.

வேலை ஒருபுறம் இருந்தாலும் அவனின் குடும்பம் தான் தர்ஷனுக்கு முதல் ப்ஃரையோரிட்டி.

இப்போது மிர்ணாளியின் நினைப்புகளின் கோர்வை மட்டுமே அவன் எண்ணத்தின் வியாபனையில் இருக்க, அவள் பேச்சு இன்னும் அதை ஸ்தீரப்படுத்தியது.

“முகுந்த் நீ ஆச்சிய இங்கிருந்து பேக் பண்ணு. ராகவ அம்மாவோட நைட் இருந்துக்கட்டும். நைட் ரவுண்ட்ஸ் இருக்கு எனக்கு, கூல்’டீய நான் டிராப் பண்ணிடுறேன்” என்றவன் முகுந்தின் முன்பே மிர்ணாளியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான்.

அவர்களைப் பார்த்தபடி நின்றவனோ, “நான் இந்த குரூப்ல டூப் போல” என்றபடி அலர் இருந்த அறையை நோக்கிச் செல்ல,
சேத்தன் கிளம்பத் தயாராய் இருந்தார்.

சித்ரா, “அம்மா நீங்க வாங்க, நம்ம வீட்டுக்குப் போகலாம். அண்ணியும் ராகவனும் இங்க இருந்துப்பாங்க” என்க, முகுந்த் பாசமாய் பார்த்து வைத்தான் பெற்றவரை.

“ஏன் நா இங்க கெடந்தா என்ன வந்துச்சாம். நடுவுல ஆத்தா எழுந்தா நோவுல கொரலு கூட கொடுக்க முடியாம கெடக்கறா, பாவம். இவள நம்பி எம் பேத்தியாவ விட்டுப்போட்டு நா நவுர மாட்டான்”
என்றார் ஐய்யம்மாள்.

‘இந்த ஐஸ்ஸ யாராவது நாடு கடத்துங்கடா, முடியலை’ என்று மதியம் வந்ததில் இருந்து ஆச்சியின் அக்கப்போர் தாங்காது கிறுகிறுத்துவிட்டாள், அலர்மேல் மங்கை.

‘இத்தன நாள் நீ எங்க கோமாவுலையா இருந்த’ என்று முகுந்த் நினைத்தாலும், “இங்க வயசானவுகல தங்க விடமாட்டாங்க ஆச்சி. மீறி தங்கினா, இந்த கொரோனா பூச்சி வந்தப்போ போட்டாங்களே ஊசி அந்த மாதிரி ஏதோ தடுப்பு ஊசி திரும்பவும் இப்போ போடனும்னு சொல்லிக்கிட்டாக. அதான் ராகவனையும் அத்தையும் இருக்க வைக்கலாமேன்னு பார்த்தேன்” என்க, அலர் முகம் மலர்ந்துவிட்டது.

சேத்தன் அதைக் கவனிக்க, ராகவோ, “நாளைக்கு எனக்கு செமினார் இருக்குடா, படிக்கனும். நீயும் அத்தையும் இருங்க. இல்ல அம்மாவும் அத்தையும் இருக்கட்டும்” என்றவனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டார், சித்ரா.

“ராகவா” என்று முகுந்த் பல்லைக் கடிக்க, சேத்தன் வந்த சிரிப்பை மறைத்தவராக, “தம்பி, நீயும் மஞ்சுவுமே இருங்க. முகுந்த் பாட்டிய குணா வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டும்” என்று முடித்துவிட, ஐய்யம்மாள் வாய் திறக்கவில்லை.

ராகவன், “அப்பா” என்று ஆரம்பிக்கப் பார்த்தவனிடம், “நீ படிச்சு கிளச்சதெல்லாம் போதும். நாங்க போயிட்டு காலேல வரோம். நீ அத்தையும் அலரையும் பார்த்துட்டு இரு” என்றவர்,

“அம்மா கெளம்புங்க. மணி எட்டாச்சு, அண்ணா எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டார்” என்று சித்ரா பிரமாஸ்திரத்தை உபயோகிக்க, அது நன்றாக வேலை செய்தது.

“நீங்க இருங்க தம்பி, நான் வாசல் வரை போயிட்டு வரேன்” என்று மஞ்சு அவர்களை வழியனுப்பச் செல்ல,

“யோவ் மோட்டி” என்றாள் அலர்.

“ம்ம்ப்ச், அலர் அப்படி கூப்பிடாதேன்னு எத்தன தடவ சொல்லுறது” சலித்தபடி அவள் அருகே வந்தமர்ந்தான் விஜயராகவன்.

“என்ன செஞ்சு வெச்சுருக்க நீ? காலேல இருந்து நடந்ததெல்லாம் கேட்கக் கேட்க கோபம் தான் வருது உன் மேல” என்றவன், அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான்.

எப்போதும் அவனுக்கான ஒரு ஒளி அவள் கண்களில் மின்னும். அந்த மின்னல் தரும் உந்துதலால் தான் அவன் இருதயத்தில் சுரக்கும் அவள்பால் எண்ணங்கள் இன்றுவரை அவன் அலரை நெருங்க ப்ரதான உந்துசக்தி.

வாய்விட்டுச் சொன்னால் தான் காதல் என்றில்லை. ஒரு பார்வை, அது தரும் நிறைவு, அது உணர்த்தும் மொழிப்பொருள் அத்தோடு அதில் தெறிக்கும் உரிமை. இது போதாதா பெருங்காதல் இவ்வையகத்தில் வாழ?!

அவனின் தவிப்பு அவளுக்குப் புரியாமல் இல்லை. அதை முழுதாய் அனுபவித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

“நீங்க தான் என்னை காப்பாத்துனது” என்றவள் மெல்ல அவன் வலக்கையைப் பற்றியபடி,

“என்னோட மோட்டி கொடுத்த தைரியம் தான் இப்போ உங்க அலர் நல்லபடியா உங்ககிட்ட இருக்கக் காரணம். அந்த தைரியமும் சமயோசிதமும் இல்லேனா, இப்போ.. வேற மாதிரியான நிலையில தான் இருந்திருப்பேன்” என்க, அவள் கண்கள் நடந்த நிகழ்வை நினைத்துக் கலங்கிவிட்டது.

எத்தனை துணிச்சலாக அவள் அந்த சூழலை எதிர்கொண்டிருந்தாலும் அந்த நேரத்திற்கான பயத்தையும் பதட்டத்தையும் எவ்வளவு நேரம் தான் அவள் வெளிக்காட்டாது இருப்பாள்?

அவளுக்கான தோள் கிடைக்க, மொத்தமாய் கொட்டிவிட்டாள் பெண்.

“ச்சு.. அலர்” என்று அவள் கையில் அழுத்தம் கொடுத்து அவன் தோற்றப்பார்க்க,

அலைபாய்ந்த விழிகளில் அவனுக்கான காதலைத் தேக்கி, “என்னை உங்களுக்குப் புரியுதா?” என்றாள் தவிப்பாக.

“என்னடா”

“சொல்லுங்க, என்னை.. என்னோட..” என்றவள் தொடர்ந்து சொல்ல முடியாதபடி ஒருவித தயக்கம். அப்படியொரு வலி கன்னத்தைக் கவ்வ, முயன்று அதை நகர்த்தி ராகவனைப் பார்த்தாள்.

மூச்சு சற்று அதிகரித்தது போல் தோன்றினாலும் வந்த பதட்டத்தை மறைத்து, “உங்களைப் பிடிச்சிருக்கு மாமா” என்றுவிட்டாள், பிடித்திருந்த கையை நெருக்கியபடி.

முகம் மாறாது சன்னமாய் சிரித்தவன், “அதென்ன மாமா? எப்போ இருந்து வந்தது இந்த மரியாதை எல்லாம்” என்க,
இமைக்காமல் அவனையே பார்த்திருந்தாள் அலர்.

தலை குனிந்தாள், “இனிமேல் மாமா தான்” என்றுவிட்டு,

“அப்பாகிட்ட பேச மட்டும் தெரியும் ஆனா என் கேள்விக்குப் பதில் வராதா?” என்க, அவன் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தது.

இத்தனை நாட்கள் இல்லாத ஒருவித புதிய அனுபவமாய் சற்று கூச்சம் கூட தோன்றி இம்சித்தது விஜயராகவனை.

“உங்க அத்தகிட்ட நான் சேலஞ்ச் பண்ணியிருக்கேன். நீயே இன்னும் ரெண்டு மாசத்துல வந்து என்னைய கல்யாணம் பண்ண கேட்பேன்னு” என்க, அவனை முறைத்தாள் அலர்.

“அதுக்கு? புக்க தெரிஞ்ச அளவுக்கு உங்களுக்கு என்னைய தெரியுமா? இப்பவும் நானா தான் உங்களைப் பிடிச்சிருக்குனு சொல்லுறேன், நீங்க இல்லை” என்றவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“வலிக்கப் போகுது அலர். போதும் பேசாத” என்றவன் அவள் பருக சற்று சில்லென்ற பழச்சாறு கொடுத்தான்.

அவன் மேலான அவளின் பிடித்தங்கள் அவனுக்குத் தெரியும் என்றாலும் இன்று அதன் வெளிப்பாடு நிச்சயம் அவள் காலை எதிர்கொண்ட நிகழ்வினால் வந்த எதிர்வினை என்றறிவான்.

இப்படி ஒரு பயத்தால் வந்த உணர்வாக அவளின் இன்ப மொழிகள் இருக்க அவன் விரும்பவில்லை.

இருந்தும், அது இனித்தது!

நம் அன்பால் விரும்புபவர்களின் வழி சொல்லப்படும் நேசத்தின் தூரல்கள் நம்மீது சாரலாய் படிந்து தித்திக்காதா என்ன?

விஜயராகவனை அத்தனை அழுத்தமாய் பார்த்திருந்தாள் அலர்மேல் மங்கை.

அந்த பார்வையின் பொருள் உணர்ந்தாலும் அவனுக்கு அச்சமயத்தில் அவளுக்குத் தோதான பதிலைக் கொடுக்க முடியவில்லை.

“குடி அலர். அத்தை வந்தவுடன சாப்பிடலாம்” என்க,

“பதில் சொல்லுங்க மாமா” என்றாள்

‘அடமான அடம். விடுறாளா பாரு பப்ளிமாஸ்’ என்று நினைத்தவனாக, “நான் பேசினதிலேயே உனக்கான பதில் இருந்துச்சு அலர்”

“என்ன?” என்றவள் யோசிக்க, மஞ்சுளா வந்துவிட்டார்.

காரில் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் சித்ராவும் சேத்தனும்.

“என்ன இருந்தாலும் உங்க சமத்து ராகவுக்கு வராது சேது” என்ற மனைவியைச் சிரிப்புடன் பார்த்தார் சேத்தன்.

“இவன் படிப்போடயே வாழ்க்கைய வாழ்ந்துடுவான் போல. நம்ம காதலோட துளியளவாவது இவன்கிட்ட இருக்க வேண்டாம்? என்ன நெனச்சிட்டு பெத்தேனோ” என்றார் முகத்தைச் சுழித்துக்கொண்டு.

“காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறவங்க பசங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்” என்று சேத்தனும் சேர்ந்து கூற,

“என்னத்த? மங்கை மொகத்தப் பார்த்தீங்களா? புள்ள அவன் இருப்பான்னு சொன்னவுடனேவே அத்தன ஆசையா பார்த்தா. இவனுக்கு அதெல்லாம் எங்க புரிய? ஏதாவது மேக்ஸ் தியரி கேளுங்க பிரிச்சு மேஞ்சுடும் தடிமாடு”

“விடு, பாப்பா பார்த்துக்குவா” என்றவர் முகம் யோசனையைக் காட்டியது.

“அம்மா ரொம்ப பேசறாங்க சேது. அண்ணிய பார்க்கும் போதெல்லாம் கரிச்சுக் கொட்டறாங்க, எவ்வளவுதான் தாங்குவாங்க, பாவம்” என்று வருந்த, அதை ஆமோதித்தார் சேத்தன்.

“காலம் மாறினாலும் அவங்க மாறல சித்ரா, விடு” என்றவர் அவர்கள் அப்பார்ட்மெண்ட் வரும் வரை வேறு எதுவும் பேசவில்லை.

சித்ராவின் சலசலப்புகளுக்குத் தலையசைப்பு மட்டும் பதிலாகக் கொடுத்தவர், “நான் பார்க் பண்ணிட்டு ஆபிஸ் கால் ஒன்னு பேசனும். பத்து நிமிஷத்தில வரேன்” என்க, சித்ரா மட்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்.

மதியம் குணசீலனைப் பார்த்ததிலிருந்தே சேத்தனுக்கு ஏதோ ஒருவித உணர்வு. இன்னது என்று குறிப்பிட்டுக் கூற முடியவில்லை என்றாலும் முள்ளாய் அவர் இதயத்தில் குத்திக்கொண்டிருந்தது அவர் குணாவின் முகம்.

ஐய்யம்மாளை குணசீலன் வீட்டு வாசலில் விட்ட முகுந்த் காரை எடுக்க, சேத்தனின் அழைப்பு.

“ப்பா”

“பாட்டிய விட்டுட்டீயா முகுந்தா?”

“இப்போதான் உள்ள போனாங்க. நான் வாசல்ல தான்’ப்பா இருக்கேன்” என்க, உள்ளுக்குள் யோசனை சேத்தனுக்கு.

“தம்பி, உள்ள போய் மாமா எப்டி இருக்காங்கன்னு பாரு” என்க,

புரியாது புருவஞ்சுருங்கியவன், “ஏன்’ப்பா?” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“நீ போய் பாரு தம்பி. அப்பா லைன்ல இருக்கேன்” என்றார் மீண்டும்.

பெரும் யோசனை முகுந்திற்கு வீட்டிற்குள் செல்ல. அவன் பிறந்தது தொட்டு இன்று வரை அவன் அந்த வீட்டு வாசல்படி கூட மிதித்ததில்லை!

ரத்த உறவாய் இருந்தாலும் எட்ட நிற்க வைத்திருக்கும் குணசீலன், சேத்தன் குடும்பத்தாரை இன்றுவரை வீட்டிற்கு அழைத்திருக்கவே இல்லை.

இரு குடும்பங்களும் ஒன்றாய் பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெரியதாய் தவிர்த்துவிடுவார், குணசீலன்.

ஆனால், மணிமுத்தாறு சொல்லும் போது அவ்வாறு இருக்க முடியாது.

சித்ராவின் திருமணத்தை ஐய்யம்மாள் ஆதரித்த பின்னர் குணசீலனின் போக்குவரத்து ஊருடன் குறைந்துபோனது.

மகனின் எண்ணம் புரிந்தவுடன் பேரப்பிள்ளைகளின் உறவின் பிணைப்பை அதிகப்படுத்தி உறவாட வைத்திருக்கும் பெரும் புண்ணியத்தை வாங்கிக்கொண்டார், ஐய்யம்மாள்.

அப்படியிருக்க, தந்தை சொன்னவுடன் எப்படி அழையாத வீட்டிற்கு விருந்தாளியாகப் போவான் முகுந்த்?

“இல்லப்பா.. மாமா உள்ள கூப்பிட்டதே இல்லை” என்றவன் தயங்க, மகனின் தயக்கம் புரிந்தது பெற்றவருக்கு.

இருந்தும் அவரின் நிலையில்லாத தன்மை உணர்த்திய செய்தியை அலட்சியம் செய்ய அவர் தயாராய் இல்லை.

“ம்ம்ப்ச்.. அவன் கூப்டாதான் நீ போவியா. உன் தாய்மாமன்டா அவன். இத்தன நாள் கூப்படலேனா உள்ள போய் சட்டைய பிடிச்சு கேளு, போ” என்ற சேத்தன் போட்ட அதட்டலில் விருட்டென்று வீட்டினுள் சென்றுவிட்டான்.

ஐய்யம்மாள் ஹாலில் இருக்க வேகமாக வீட்டினுள் வந்த முகுந்தை அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் வருத்தி அழைத்தும் வராத பேரன் திடும் என்ற வரவும், “அப்பு, வாய்யா வாய்யா” என்று புன்னகைத்தவர்,

“சீலா இங்கன வெரசா வா” என்று உரக்க மகனை அழைத்தார்.

வந்தபோதே அவர் குணசீலனை அழைத்தும் இன்னும் அவர் தலை வெளியே வரவில்லை.

“நீ உங்காரப்பு, குடிக்க கொண்டாறேன்” என்றவர் உள்ளே செல்ல,

அவசரமாக, “முகுந்த் மாமா எங்கன்னு பாரு” என்றார் சேத்தன் அடித்துக்கொண்ட மனதுடன்.

“இருங்க’ப்பா” என்றவன்,

“ஆச்சி மாமா ரூம் எங்க?”

“வலது பக்கம் இருக்கேப்பு, அதென்” என்றார்.

விரைந்து அவன் அறைக்குள் செல்ல அங்கு இதுவரை அவன் பார்த்திராத குணசீலனைக் கண்ணுற்றான்.

அவரை அப்படிப் பார்க்கவும், தன்னைப்போல் “அப்பா” என்றான் அதிர்வான குரலில்.

“என்னடா? எப்டி இருக்கான்? நல்லா இருக்கான்ல, முகுந்தா.. தம்பி பேசுடா” என்று சேத்தன் பதற,
“நீங்க இங்க வாங்கப்பா” என்றுவிட்டான் தாளாது.

“என்ன முகுந்த்?” என்று கேட்டவரின் இருதயத் துடிப்பு அத்தனை தீவிரமாய் இருக்க, சூழ்நிலை புரிந்தவனாக, “மாமா இங்கதான் இருக்கார். நீங்க வாங்க ப்பா சீக்கிரம்” என்றுவிட்டான்.


🤔

 

santhinagaraj

Well-known member
அச்சோ முகுந்த் ஏன் இவ்வளவு அவசரமா அவங்க அப்பாவ கூப்பிடுறான் குணசீலனுக்கு அப்படி என்ன ஆச்சு??
 
Top