“ஐயோ என் புள்ள இப்படி எல்லாம் பன்னிக்காது சார் தயவு செஞ்சு என்ன இங்க கூட்டினு வராதிங்க சார்,
என் புள்ள ரொம்ப தைரியமான புள்ள சார்,
அது கண்டிப்பா வேற ஏதோ ஒரு புள்ளையா தான் சார் இருக்கும்”
என போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டரிடம் கதறி கொண்டே வந்தனர் அழகப்பன் தங்கம்மாள் தம்பதியினர்…..
“ஒரு அனுமானத்துக்கு தான் மா உங்கள கூட்டிட்டு போறோம்,
இந்த மாதிரி மிஸ்ஸிங் கேஸ்னு வந்தா இது எல்லாம் நார்மல் தான்…
அங்க கிடக்கற பொண்ணோட வயசும் உங்க பொண்ணட வயசும் ஒன்னா இருக்கறதால நீங்க வந்து அவங்களானு ஒரு தடவை பாத்து சொல்லனும்” என இன்ஸ்பெக்டர் கூறியதை கேட்டு தங்கம்மாள் கதறி அழுதார்…
“ஐய்யா ஐயனாரப்பா இதெல்லாம் என்னப்பா கொடுமை நேரங்காலம் பாக்காம என் மவ உன் கோவில்லயே இருப்பாளே நீ கொஞ்சம் அவ மேல கருணை காட்டி இருக்க கூடாதா”என தன் குமுறுலை ஐயனாரிடம் கொட்டி கொண்டே இருக்க தேவனாம்பட்டினம் கடற்கரை வந்தது….
“ம்.. இறங்கி வாங்க இரண்டு பேரும்” என இன்ஸ்பெக்டர் அழைக்க,
“மாமா வேண்டாம் மாமா அது நம்ம புள்ளையா இருக்காது மாமா அங்க போக வேண்டாம் எனக்கு என்னவோ சரி படல” என அழகப்பனின் கையை இறுக பற்றி அழுததை பார்த்து அழகப்பனால் அவளை சமாதானபடுத்த கூட முடியாமல் அவளை மெல்ல கடற்கரை பக்கம் நகர்த்தினான்…
கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து ஒரு இருபது பேர் பக்கம் கூட்டமாக எதையோ சுற்றி நின்று பார்த்து கொண்டிருந்தனர்…
அருகில் செல்ல செல்ல கடற்காற்றின் சத்தத்தை விட இவர்களின் இதயதுடிப்பின் சத்தம் அதிகரித்தது….
இன்ஸ்பெக்டர் அருகில் சென்று கூட்டத்தை விளக்கிவிட்டார்…
“எல்லாரும் நகருங்க எதுக்கு இப்படி கூட்டம் போட்டு இருக்கிங்க, ம்.. நகருங்க எல்லாரும்”என்ற சத்தத்தில் அனைவரும் நகர நடுவில் பதினாரு வயது தக்க ஒரு பெண்பிள்ளை பிணமாக கிடந்தாள்….
“இரண்டு பேரும் அங்கயே நின்னுட்டு இருந்தா எப்படி இங்க பக்கத்துல வந்து பாருங்க உங்க பொண்ணானு”என இன்ஸ்பெக்டர் சத்தமாக கூற மெல்ல அருகில் வந்தனர்…
தங்கம்மாள் அழகப்பனின் கைகளை இறுகபிடித்தப்படி முகத்தை அவனின் தோளில் புதைத்து மறைத்து கொண்டு வந்தாள்…
அருகில் வந்து அந்த பெண்ணின் முகத்தை உற்று பார்த்த அழகப்பனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது…
நீண்ட பெருமூச்சு எடுத்தவன் “இது என் மவ இல்ல சாமி,
ஐயோ யாரு பெத்த புள்ளையோ” என தலைமீது கைவைத்து கதறி அழுதான்…
அவனின் உள்மனதில் நம்பிள்ளைக்கு இப்படி எதுவும் நேரிட கூடாது என்ற எண்ணத்திலேயே அழுகையும் அதிமாக வந்தது…
இவன் கூறியதை கேட்ட பின்பு மெல்ல தன் தலையை உயர்த்தி கீழே பார்த்த தங்கம் தலை சுற்றி மயக்கமடைந்தாள்…
“யோவ் யோவ் புடி புடி கான்ஸ்டெபிள் கொஞ்சம் வந்து இந்தம்மாவ ஒரு கை பிடிச்சு ஜீப்புக்கு கூட்டிட்டு போங்க”என சத்தமிட கான்ஸ்டெபிள் ஓடி வந்து ஒரு கைபிடித்து கான்ஸ்டெபிலும் அழகப்பனும் இணைந்து தங்கம்மாளை கைத்தாங்கலாக ஜீப்பிற்குள் அமர வைத்து முகத்தில் தண்ணீரை தெளித்தான் அழகப்பன்…
தங்கம்மாள் மெல்ல கண்திறந்து பார்க்கும் போது கதறி அழுதபடி ஒரு பெண்மணி ஓடிவந்தார்…
ஓடிவந்தவர் அந்த இறந்த பெண்ணை எடுத்து மடியில் போட்டு கொண்டு கதறினார்…
நடப்பதை கனம் கூடிய இதயத்துடன் கூட்டத்தினரோடு சிறிது தூரத்தில் தங்கமாளும் அழகப்பனும் பார்த்து கொண்டிருந்தனர்….
ஜீப் அருகில் வந்த இன்ஸ்பெக்டர் “உங்க பொண்ணு காணாம போய் இரண்டு நாளாச்சு எந்த தகவலும் கிடைக்கல இந்த பொண்ணு இல்லங்கற வரை கொஞ்சம் ஆறுதல் அவ்ளோதான் சரி வாங்க ஸ்டேஷன் போலாம்”என இன்ஸ்பெக்டர் கூறி ஜீப்பில் ஏறினார்…..
வண்டி செல்ல செல்ல தங்கமாளும் அழகப்பனும் தங்கள் மகளின் நினைவுதனில் மூழ்கினர்….
தங்கம்மாள் அழகப்பன் தம்பதியினருக்கு அன்னம் என்ற ஒரு மகளும் இனியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்…
தங்கம்மாளும் அழகப்பனும் கருநிறதேகமும் ஏழ்மைக்கு உண்டான உடல்வாகுவும் கொண்டு எளிமையாக இருப்பார்கள்…
ஆனால் அவர்கள் ஏழ்மையில் இருந்தாலும் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுத்து அவர்களை நன்றாக வைத்திருந்தனர்…
அன்னம் பேருக்கு தகுந்தாற்போல் அந்த அன்னப்பறவை போல அத்தனை அழகாக இருப்பாள்…
பார்ப்பவர்கள் கண்களை உறுத்தாத பேரழகு…
சிரித்த முகம் மிகுந்த பொறுமையும் அமைதியும் நிரம்பிய புத்திசாலிப்பெண்….
இனியன் எட்டாம் வகுப்பு தான் படிக்கிறான் என்றாலும் ஆள் நன்றாக வளர்ந்து பெரிய பையன் போல் இருப்பான்…
இவர்கள் கடலூரில் உள்ள மஞ்சகுப்பம் பகுதியில் வில்வம் நகரில் இருக்கும் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் அங்கேயே தங்கி விவசாயம் பார்க்கும் ஒரு சாதாரண அடிதட்டு மக்கள் ஆவர்…
தாங்கள் படும் கஷ்டம் யாவும் பிள்ளைகளை வந்து அண்டக்கூடாது என முடிவு செய்ய தங்கமும் அழகனும் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டுமென முடிவு எடுத்து எந்த கஷ்டம் வந்தாலும் அதை தாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார்கள்…
இருவரும் கடலூர் வேணுகோபாலபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வந்தனர்….
அன்னம் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பதினொன்றாம் வகுப்பில் பயாலஜி குரூப் எடுத்திருந்தாள்…
இனியன் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்..
சிறிய குடும்பம் பணத்திற்கு பஞ்சம் இருந்தாலும் பாசத்திற்கு ஒருபோதும் இருக்காது…
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தோழி வீட்டிற்க்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அன்னத்தை காணவில்லை…
அவளை தேடித்தான் இந்த இயலாத தம்பதி தன்னிலை மறந்து தளர்ந்து போய் உள்ளனர்…
திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் என்ற பெயர் பலகை வரவேற்க அனைவரும் ஜீப்பை விட்டு கீழே இறங்கினர்…
“இரண்டு பேரும் பயப்படாம வீட்டுக்கு போங்க ஏதாவது தகவல் தெரிஞ்சா உடனை உங்கள கூப்பிடறோம்” என கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று விட்டார்…
காவல் நிலைய வாயிலில் உடன் வேலை செய்யும் சில ஆண்கள் வந்து அழகப்பனை சூழ்ந்து கொண்டனர்…
காலையில் அவசர அவசரமா இருவரையும் காவலர் ஜீப் அழைத்து வந்தது அவர்களுக்கு ஏதோ தவறாய் தோன அவர்களும் பின்னாலேயே சைக்கிளை எடுத்து கொண்டு காவல் நிலையம் வந்துவிட்டனர்…
“அதெல்லாம் இன்னும் கிடைக்கலனா”என சோர்ந்த முகத்துடன் நடந்தது அத்தனையும் விளக்கி கூறினான்…
அனைவரும் அழகப்பன் கூறியதை கேட்டு சோகமடைந்தனர்…
“சரி வாப்பா நம்ம அன்னத்தோட நல்ல மனசுக்கு அதுக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் கிடைச்சிரும் வா போவோம்”என அழைத்து கொண்டு சென்றனர்….
பல ஏக்கர் கணக்கில் கரும்பு சாகுபடி பயிரடபட்டிருக்கும் அந்த ஆராய்ச்சி நிலையத்திற்குள் சென்றனர்…
உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் “அழகப்பா எதுக்குன்னு நம்ம முதலாளி கிட்ட ஒரு பேச்சு சொல்லுப்பா அவர் மகன் கூட வக்கீல் தான ஏதாவது செய்ய முடியுதான்னு பாப்போம்”என கூற அழகப்பனும் தங்கம்மாளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்….
அந்த கரும்பு ஆராய்ச்சி நிலையம் அரசாங்கத்தை சார்ந்ததாக இருந்த போதிலும் அங்குள்ள விவசாய நிலங்களின் உரிமைதாரர் முத்துராமலிங்கம் ஐயா தான்…
இவர்களை எல்லாம் வேலைக்கு அமர்த்துவது நல்லது கெட்டது பார்ப்பது என அனைத்தும் அவரே…
அவரது மகன் பிரபு வக்கீல் படிப்பை முடித்து ஒரு பிரபல வக்கீலிடம் ஜீனியராக பணிபுரிகிறான்….
“ஏன் மாமா ஐயாகிட்ட கேக்கறதுக்கு பதிலா நாம ஏன் பேச்சி அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்க கூடாது” என தங்கம் கேட்க,
“அப்படிங்கறயா எடுத்த உடனே அம்மா கிட்ட கேட்டு ஐயா எதும் கோவப்பட்டா என்ன செய்யறது, அப்படி எதும் அவரு கோவப்பட மாட்டாரு தான் சரி காலைல நேரமா எந்திரிச்சு போனா அம்மா கட்டுதறைல இருப்பாங்க பாத்து பேசிடலாம்”என கூறினான்…
“அம்மா அக்காவ எப்பம்மா கூட்டினு வருவிங்க அக்கா எங்கனு ஏதாவது தெரிஞ்சுதா,
நான் கூட அக்காவோட பிரண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போய் பாத்துட்டு வந்துட்டேன்” என இனியன் கூற கூற அவன் கண்கள் கலங்கின…
“அழாத கண்ணு அக்கா நாளைக்கு வந்திடுவா போலீஸ் காரங்க நாளைக்குள்ள எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்னு சொல்லிட்டாங்க”என தங்கள் கண்ணீரை மறைத்து மகனுக்கு ஆறுதல் கூறினர்…
“ம்மா காலைல இங்க மாட்டுபொங்கல் எப்படி கொண்டாடனாங்க தெரியுமா அக்கா இருந்து இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருந்து இருக்கும்,
அக்கா கலர் கலரா கோலம் போட்ருப்பா, மாட்டை எல்லாம் அழகா ரெடி பன்னிருப்பா,
பொங்கல் அன்னைக்கும் அக்கா இல்ல,
அக்காக்கு பிடிச்ச பண்டிகையே இந்த பொங்கல் பண்டிகை தான் ஆனா பாரு இந்த பொங்கலுக்கு நம்மள எல்லாம் இப்படி அழவச்சிட்டு எங்க போனால்னே தெரியல”என வாய்விட்டே அழுதுவிட்டான் இனியன்…
உடன் இருக்கும் போது நிமிடத்திற்கு நான்கு சண்டை வரும் ஆனால் இப்போது அவளை காணவில்லை என்ற ஏக்கமும் பயமும் அவனை போட்டு அழுத்தி கொண்டுள்ளது…
“இந்த பொங்கல் திருனால என் மவ என்னா சந்தோஷமா இருப்பா,
காலைல நேரமா எந்திரிச்சு குளிச்சு பட்டுபாவாடை தாவணி போட்டு சடை பின்னி பூ வைச்சா பாக்க ஆயிரம் கண்ணு வேணும்,
ஐயோ!! அன்னம் எங்க தாயி இருக்க இந்த அம்மா கிட்ட வந்திடுடா”என தங்கம்மாள் கதறி அழ,
அதுவரை எப்படியோ அடக்கி வைத்திருந்த கண்ணீர் அருவி போல் கொட்டியது அழகப்பனுக்கு….
மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தனர்…
“ஏய் அறிவழகி எந்திரிச்சு சாப்பிட வா, அவ காணாம போய்ட்டாளா இல்ல எவன் கூடயாவது ஓடிப்போய்ட்டாளோ யாருக்கு தெரியும் பிரண்டாம் பெரிய பிரண்ட் எந்திரிச்சி வந்து சாப்பிட்டு தொல,
காலைல ஆத்து திருனா நிறைய வேலை இருக்கு”என கடிந்து கொண்டிருந்தாள் அறிவழிகியின் தாய் சாந்தி…
அறிவழகி அன்னத்தின் நெருங்கிய தோழி…
இவள் வீட்டிற்க்கு வருவதாக கூறிவிட்டு வந்தவளை தான் இரண்டு நாட்களாக காணவில்லை…
இவர்கள் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர் குடும்பத்தை சார்ந்தவர்கள்….
அன்னத்திற்கு மகிழ்ச்சியோ துக்கமோ வருத்தமோ எதாக இருந்தாலும் சரி அறிவழகியுடன் சேர்ந்து சில்வர் பீச் என அழைக்கப்படும் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று விடுவாள்…
அவளின் அளவு கடந்த அன்புக்கு சொந்தக்காரி அறிவழகி..
ஆனால் படிப்பு சற்று குறைவு தான்…
அன்னம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி…
அறிவழகி தேர்ச்சி பெறுவதே பெரிய விஷயம்…
ஆனால் எப்படியோ அறிவழகிக்கு தேர்ச்சி பெறும் அளவு அன்னம் சொல்லி கொடுத்து விடுவாள்…
ஆனாலும் ஏனோ சாந்திக்கு அன்னத்தை கண்டாலே பிடிக்காது..
இவர்ளின் நட்பை கண்டாலே கோபம் தான் வரும்…
அன்னத்தை காணவில்லை என கேள்விப்பட்டதிலிருந்து சரியாக உணவு உண்ணாமல் தனியாக உட்கார்ந்து அழுத வண்ணமே இருப்பதற்க்கு தான் சாந்தியிடம் இத்தனை பேச்சுகள்….
இப்படியாக ஒவ்வொருவரும் அன்னத்திற்க்காக அழும் வேளையில் அந்த இருள் நிறைந்த அறையில் அருகில் இருக்கும் பொருள் கூட தெரியாத அந்த மை இருட்டில் ஒரு முனகல் சத்தம்….
“ம்…ம்…ம்மா…ப்பா…..”
என்ற மெல்லிய முனகல்…
“பாப்பா பத்திரமா இருக்கு,
இன்னும் யாரும் எதும் செய்யல மயக்க ஊசி போட்டதுல கொஞ்சம் அப்பப்ப உளறிட்டு இருக்கு அவ்ளோ தான்…
நாளைக்கு நமக்கு தான் திருனாவே
என்ன கடலூர்ல இல்ல பாண்டில சரியா எல்லாரும் நாளைக்கு மதியம் சீக்கிரம் வந்திருங்க”என்ற அலைபேசியில் பேசும் குரல் மட்டும் எங்கோ ஒரு மூலையில் வந்து கொண்டிருந்தது…
“அடியேய் அன்னம் இங்க வாயேன் எனக்கு இந்த கணக்கு சுத்தமா புரியல”என அறிவு கேட்க அருகில் வந்த அன்னம்,
“ஏன்டி அந்த ஆண்டவன் உன் பேர்ல குடுத்த அறிவ உன் மண்டைல குடுக்காம விட்டுட்டான்,
இந்த பார்முலா தானே சொன்னேன் நீ எந்த பார்முலா யூஸ் பன்னி வச்சிருக்கனு கொஞ்சம் பாரு”என செல்லமாக திட்ட “சாரி” என அசடு வழிந்தாள் அறிவழகி…
“அன்னம் இன்னைக்கு கடலுக்கு போலாமா சாயங்காலம்”
“அடியேய் அடியேய் நாளைக்கு பரிட்சை இருக்கு டி உனக்கு பயமா இருக்கா இல்லையா”
“இல்லையே அதான் சொல்லி தர நீ இருக்கியே” என அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தமிட,
“அப்போ அந்த டென்ஷனும் சேர்ந்து எனக்கு தானா”என தலையில் கைவைத்து அமர்ந்தவளை பார்த்து அறிவழகிக்கு சிரிப்பு தான் வந்தது….
“ஏன் அன்னம் நீ தான் எல்லாம் படிச்சிட்டயே அப்பறம் ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகற கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இரு” என கூறி அன்னத்தின் முறைப்பிற்க்கு ஆளானாள்….
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே தங்கம் அன்னத்திற்கு மதிய சாப்பாடு கொண்டு வந்தார்…
“நீ ஏன் ம்மா கஷ்டப்படற உனக்கு அங்க இருக்கற வேலை பத்தாத இதுல எனக்கு வேற வேலை செய்யனுமா நான்தான் கேண்டின்ல சாப்பிட்டுக்கறேன் இல்லனா அறிவு கூட ஷேர் பன்னிக்கறேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்”என கவலையாக கேட்டாள்…
“இல்ல கண்ணு நீ காலைலயும் சாப்பிடல உங்கிட்ட காசும் கம்மியா தான் இருக்கும் நீ அத கடைல வாங்கி சாப்பிட்டு தண்டம் பன்ன மாட்ட பட்டினியா இருந்தாலும் இருப்ப அறிவு கொண்டு வர சாப்பாடு ஒன்னாங்கிளாஸ் புள்ளைங்க சாப்படற அளவு இருக்கும் அத நீங்க ரெண்டு பேர் வேற பிரிச்சு சாப்பிட போறிங்களா”என சிரிக்க அறிவுதான் சிணுங்கினாள்…
“விடு கண்ணு ஏதோ ஸ்பெஷல் கிளாஸ்னு தான சீக்கிரம் வந்துட்ட இல்லனா தினமும் நீதான சமைச்சு வச்சிட்டே வர ஒரு நாளைக்கு நான் உனக்கு சாப்பாடு கொண்டு வந்து தரக்கூடாதா,
இல்ல நான் உன் பள்ளிகூடதுக்கு வந்தா உனக்கு எதும் சங்கடமா இருக்கா கண்ணு” என்ற கேள்வியில் அன்னம் பதறி விட்டாள்…
“ம்மா என்னம்மா நீ இப்படி பேசற உனக்கு ஏன் சிரமம்னு தான் சொன்னேன் நீ தினமும் கூட என் பள்ளிகூடத்துக்கு வா எனக்கெந்த பிரச்சனையும் இல்ல”என இறுக அணைத்து கொண்டாள்…
“எப்படி அத்தை நீங்க மட்டும் இந்த விளம்பரத்துல வர அம்மா மாதிரி இவ்ளோ பாசமா இருக்கிங்க,
எங்கம்மாவும் இருக்குதே அறிவழகினு அழகா பேர் வச்சிட்டு எப்போ கூப்பிட்டாலும் அடியேய் எருமைமாடு செவிடி வந்து தொலைடி ன்னு இப்படி தான் இருக்கு,
ம் எல்லாம் என் நேரம்”என புலம்ப அன்னமும் தங்கமும் சிரித்தார்கள்….
“என் புலம்பல பாத்தா உங்களுக்கு சிரிப்பு வருதா,
சிரிங்க சிரிங்க” என வராத கண்ணீரை துடைத்து கொண்டாள்…
“சரி வரேன் கண்ணு சாப்பிடு நல்லா படி” என கிளம்ப எத்தனிக்கும் வேளையில்,
“ம்மா ஒரு நிமிஷம் இருங்க”என அழைத்து கொண்டே தூரத்தில் ஒருபெண்மணி வேகவேகமாக வந்தார்…
“யார் அன்னோ அது”
“எங்க கிளாஸ்டீச்சர் மா பேர் ருத்ரா”
ருத்ரா அன்னத்தின் வகுப்பாசிரியை திறமையானவள்,
தைரியமானவள் திருமண வயதில் இருக்கும் அழகு மங்கை,
அன்னத்திற்கு பிரியமான ஆசிரியை….
“ம்மா உங்க பொண்ணுதானே அன்னம்,
ரொம்ப நல்ல பொண்ணு நல்லா வளத்து இருக்கிங்க,
ரொம்ப நல்லா படிக்கறா உங்கள இதுக்கு முன்ன நான் பாத்ததில்ல இப்போதான் பாக்கறேன்,
அதான் சொல்லலாம்னு வந்தேன்,
அவள நல்லா படிக்க வைங்க அவ படிப்புக்கு என்ன உதவின்னாலும் எப்போ வேணும்னாலும் என்கிட்ட நீங்க தயங்காம கேட்கலாம்”என ருத்ரா அன்னத்தை பற்றி பெருமையாக கூற கூற தங்கத்தின் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்தன…
“ம்மா உங்கள மாதிரி பெரியவுக என் பொண்ண பாராட்டும் போது எத்தனை பெருமையா இருக்கு ரொம்ப நன்றிங்கம்மா” என இருகைகூப்பி நன்றி தெரிவித்து வீடு திரும்பினாள்…
வேலை செய்யும் போது கூட தனக்குள்ளே பெருமைபட்டு சிரித்து கொண்டாள்…
இதை கவனித்த அழகப்பன் “என்ன தங்கம் வாயெல்லாம் பல்லா இருக்கு” என கேட்க,
“மாமா காலைல புள்ள பள்ளிகூடத்துக்கு போனேன்ல”என ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்தாள் புன்னகை பூத்த முகத்துடனே…
செய்தியை கேட்ட அழகப்பனின் முகமும் அழகாய்த்தான் மாறிப்போனது…
“ம்மா விடிஞ்சிருச்சு எந்திரிம்மா அக்காவ பத்தி ஏதும் தகவல் கிடைக்குதானு பாருங்க ம்மா”என்ற இனியன் குரலில் கண் திறந்தவள் அன்னத்தின் நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள்….
“மாமா நான் போய் பேச்சி அம்மாவ பாத்துட்டு வரேன்” என முடியை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டே வெளியில் சென்றாள்…
கட்டுதரையில் பால் பீச்சிக் கொண்டிருந்த பின்கொசவம் வைத்து, நூல் சேலை கட்டி, முடியை அள்ளி கொண்டையிட்டு நடுநெற்றியில் பெரிய வட்ட பொட்டும் கழுத்தை ஒட்டிய அங்கியும் அணிந்து பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும் பேச்சியம்மா அருகில் தங்கம் சென்றதும் தலைநிமிரந்த பேச்சி “வா தங்கம் அன்னத்தை பத்தி எதும் தெரிஞ்சிதா என்ன,
இந்த போலீஸ்காரவுக என்ன சொல்றாங்க”என வினவினார்…
“அதப்பத்தி பேசதாம்மா வந்தேன்,
அம்மா ஐயாகிட்ட சொல்லி அதிகாரிங்க யார்கிட்டயாவது பேச சொல்றிங்களாம்மா,
இன்னையோட மூனாவது நாள் ஆச்சு புள்ள காணாம போய் எங்க போச்சு ஏது போச்சுனு ஒரு விவரமும் தெரியல” என வாயைப்பொத்திக் கொண்டு அழ பேச்சியம்மாவுக்கு எப்படி ஆறுதல்கூறுவதென தெரியாமல்,
“நீ அழகப்பன கூட்டிட்டு முன்வாசலுக்கு வா ஐயா திண்ணைல தான் உட்காந்து பேப்பர் படிச்சிட்டு இருக்காரு,
ஒரு எட்டு பேச சொல்லுவோம்” என கையில் இருந்த பால் பாத்திரத்தை அங்கேயே ஒரு ஓரமாக வைத்து விட்டு உள்ளே சென்றார்….
தங்கமும் வேகமாக வீட்டுக்கு வந்து அழகப்பனை அழைத்து கொண்டு முன்வாசலுக்கு சென்றாள்…
இவர்கள் வரும் போதே பேச்சியம்மா முத்துராமலிங்கம் அருகில் நின்று தங்கம்மாள் கூறியதை கூறி கொண்டிருந்தார்…
முத்துராமலிங்கம் பேருக்கு ஏற்றார் போல் ஆள் நல்ல வாட்ட சாட்டமாகவும் முகம் மிக சாதுவாகவும் இருக்கும்…
இருவரும் அவரின் முன் சென்று கைகளை கட்டி நின்றனர்…
“என்னதாண்டா சொல்றாங்க இந்த போலீஸ்காரனுவ,
அது சரி அவனுங்களும் என்ன செய்வானுக இங்க சும்மாவே வெட்டிக்கிட்டும் குத்திகிட்டும் கிடப்பானுவ இதுல ஊருக்குள்ள பொங்கல் திருனா வேற அவனுங்கள சொல்லியும் குத்தமில்ல,
சரி இரு நான் பிரபு கிட்ட சொல்லி ஏதாவது செய்ய முடியுமானு கேட்கிறேன்”என கேள்வியில் ஆரம்பித்து அவரே பதிலை கூறி முடித்து விட்டார்…
“பேச்சி பிரபு வீட்ல தானே இருக்கான் கொஞ்சம் கூப்பிடு”என கூற பேச்சியும் உள்ளே சென்றார்…
பேச்சி பிரபுவின் அறைக்கதவை தட்ட உள்ளே எந்த சத்தமும் இல்லை…
மெல்ல கதவை திறக்க பிரபு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான்…
“பிரபு அப்பா கூப்படறாரு எந்திரிச்சு வாப்பா” என அழைக்க மெல்ல கண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்…
கருநிற தேகம் கட்டுமஸ்தான உடல்வாகு வயல்வெளிகளில் அவ்வபோது வேலைகள் செய்வதில் விருப்பம் உள்ளதற்கு அடையாளமாய் இறுகிய உடல்,
பெரிய இடத்து பிள்ளைக்கு உரிய பளபளப்பு, அடர்ந்த கேசம்,நல்ல உயரம்
கடந்து செல்லும் பெண்கள் ஒருமுறையேனும் திரும்பி பார்க்க வைக்கும் வசீகரம் நிறைந்த முகம்….
“ஒரு கேஸ் ரொம்ப வேலை வாங்குது மா நைட் லேட்டா தான் தூங்கனேன் கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிக்கறனே,
அப்படியே கொஞ்சம் நம்ம அன்னத்த கூப்பிடுங்களேன் இன்னைக்கு திருனாக்கு தனியா எதும் வெளில போகப்போறா நான் போகும் போது கூட்டிட்டு போறேன்னு சொல்லனும்” என கூறினான்…
ஆம் அன்னம் காணமல் போனது இவனுக்கு இன்னமும் தெரியாது,
அன்னம் இவனிடம் ஒரு தங்கையை போலவே இருப்பாள் அவளின் அதிக சந்தேகங்களை இவன் தான் தீர்த்து வைப்பான்..
இவன் வீட்டில் இருந்தால் எந்நேரமும் அண்ணா அண்ணா என இவனை சுற்றியே தான் இருப்பாள்…
“பிரபு அன்னம் தொலைஞ்சி போய் இன்னையோட மூனு நாள் ஆகுது பா அது பத்தி பேச தான் அப்பா கூப்படறாரு,
நீயும் வீட்டுக்கே நேரங்கழிச்சு வரதால என்னால உங்கிட்ட சொல்ல முடியல”என கூறியதை கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்….
“என்னம்மா சொல்றிங்க அன்னத்த காணோமா ஏன் என்கிட்ட சொல்லல ஒரு போனாவது பன்னி சொல்லிருக்கலாமே” என பரபரப்பாக எழுந்தவன் வேகமாக முகம் கழுவி சட்டையை மாட்டிக்கொண்டு வேகவேகமாக வெளியில் வந்தான்…
அவனுடைய அசைவுக்கு ஏற்ப அவனது அடர் கேசமும் அசைந்து கொடுத்தது…
“அப்பா சொல்லுங்கப்பா”என தந்தையின் முன் வந்து நின்றான்…
“நம்ம அன்னத்த மூனு நாளா காணலப்பா போலீஸ்காரங்களக்கு பொங்கல் சமயத்துல இருக்கற அலைச்சல்ல இந்த கேஸ்ல கொஞ்சம் மந்தமா இருக்காங்க நீ கொஞ்சம் என்ன ஏதுனு பாரேன்”என கூற,
“எனக்கு முன்னமே சொல்லி இருந்தா இந்நேரம் நம்ம அன்னம் வீட்ல இருந்து இருப்பா பரவால்ல ப்பா இப்பயும் ஒன்னும் குறைவில்ல எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நம்ம அன்னத்த நான் கூட்டிட்டு வரேன்” என உள்ளே சென்றவன் குளித்து தயாராகி ஜீன்ஸ் பேண்ட்டும் சிகப்பு நிற சட்டையும் அணிந்து ஆஜானுபாகுவாக வெளியே வந்தான்…..
அழகப்பன் அண்ணா அக்காவும் நீங்களும் நம்ம டிவிஸ் எடுத்துக்கிட்டு முன்னாடி போங்க நான் என் வண்டில வரேன்…
“அங்க தான அன்னம் போறதா சொன்னா அவ பிரண்ட் வீட்டுக்கு, போங்க நான் பின்னாடி வரேன்”என கூற அவர்களும் முன்னே செல்ல இவனும் வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டான்…
சிறிது நேரத்தில் தேவனாம்பட்டினம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்…
அங்கே அறிவழகியின் வீட்டு வாசலுக்கு சென்றனர்…
தங்கம்மாள் மூடியிருந்த கதவை தட்ட அறிவழகி வந்து கதவை திறந்தாள்…
இவர்களை பார்த்தவுன் தங்கத்தை கட்டிக்கொண்டு ஓவென கதறி அழுதாள்…
“அத்தை அன்னம் எங்கத்த எங்கம்மா என்ன வெளிலயே விட மாட்டேங்குது அன்னம் வந்துட்டாலா அவள கண்டுபிடுச்சிட்டிங்களா” என அழுதுகொண்டே கேள்விகளை அடுக்கினாள்…
ஏற்னவே துக்கத்தில் இருந்த தங்கம் இவள் அழுகையில் இன்னும் துக்கமடைந்தார்…
“உன் வாய தொறந்தா அன்னம் எங்க இருக்கானு தெரிஞ்சிடும்” என பிரபு அறிவழகியை நோக்கி கூற அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகினர்…
“அண்ணா நான் என்ன சொல்லனும்,
அன்னைக்கு அவ என்ன பாக்க வரேன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கா ஆனா அவ என்ன பாக்கவே வரலையே” என அழுது கொண்டே அறிவழகி கூற,
“உன்கிட்ட நான் கதை கேட்கல அறிவு உண்மைய கேட்டேன்” என அழுத்தி கேட்க,
இவனின் கேள்வியில் உள்ள காட்டம் தாங்க முடியாமல் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்…
“அவ இங்க வரன்னு சொன்னது கூட அத்தை சொல்லி தான் எனக்கு தெரியும் அவ ஏன் வந்தா எதுக்கு வந்தா எதுமே எனக்கு தெரியாது”என அழுது கொண்டே கூறும் போது அங்கு சாந்தி வந்துவிட்டாள்…
“ஏய் எல்லாம் கிளம்புங்க உன் மவ எவனையோ இழுத்துட்டு போய் இருப்பா இரண்டு நாள் கழிச்சு கழத்துல தாலிய தொங்கப்போட்டுட்டு வருவா போய் பாரு போ,
இங்க வந்து என் மவள விசாரணை நடத்திட்டு இருக்காங்க,
ஏய் உள்ள போடி இவங்க கேள்வி கேக்கறாங்களாம் இவ பதில் சொல்றாலாம்”என அறிவை தள்ள அறிவு அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள்….
“ம்மா நான் ஒரு வக்கீல் அன்னம் அறிவோட குளோஸ் பிரண்ட்,
அவ காணாம போன அன்னைக்கு இவள பாக்க வரதா தான சொல்லிட்டு வந்திருக்கா அப்போ அறிவ விசாரிச்சா தான தெரியும்” என பிரபு சாந்தியிடம் கூற,
“நீ யாரா வேணா இரு என் மவ எந்த பதிலும் சொல்ல மாட்டா ஏற்கனவே அந்த சிறுக்கி தொலைஞ்சத நினைச்சு சோறு தண்ணி இல்லாம் படுத்து கிடக்குது மூதேவி இதுல இது வேறயா,
அப்படி நீ வக்கீலு உனக்கு பதில் சொல்லனும்னா போய் ஸ்டேஷன்ஷ பேப்பர் வாங்கினு வா போ”என விரட்டினாள்…
“சாந்தி என் அன்னத்த பத்தி சின்னதா எதாவது தகவல் தெரிஞ்சாலும் கொஞ்சம் சொல்லுங்கம்மா, அப்றம் என் மவ எவன் கூடயோ ஓடி போற அளவுக்கெல்லாம் நான் அவள வளத்து வைக்கல” என கண்ணீர் மல்க அவளிடம் கைக்கூப்பி நின்றும் கனியாத சாந்தி மீன் கூடையை தூக்கி கொண்டு கடற்கரை நோக்கி சென்றாள்…
என்ன செய்வதென புரியாமல் நின்ற தங்கத்தையும் அழகப்பனையும் அழைத்து கொண்டு பிரபு திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் வந்தான்…
“ஹலோ சார் ஐ அம் அட்வகேட் பிரபு,
அட்வகேட் ரவிச்சந்திரன் கிட்ட அசிட்டெண்ட்டா ஒர்க் பன்றேன்”என இன்ஸ்பெக்டரிடம் பரஸ்பரம் செய்து கொண்டான்…
“ஹலோ சார் சொல்லுங்க என்ன விஷயம்” என இன்ஸ்பெக்டர் கேட்க,
“இவங்க எங்க பண்ணைல வேல செய்யறவங்க இவங்க பொண்ண காணோம்னு கம்பிளைண்ட் குடுத்து இன்னையோட மூனு நாள் ஆகுது ஆனா எந்த இன்பர்மேஷனும் இப்போ வரை கிடைக்கல”என கூறினான்…
“சார் நானே கூப்பிடலாம்னு தான் இருந்தேன்,
இவங்க பொண்ணு அவ பிரண்ட் வீட்டுக்கு போறதா சொல்லுச்சுனு இவங்க சொல்றாங்க ஆனா அந்த பக்கம் இருக்கற கேமராவ எல்லாம் செக் பன்னதுல அந்த பொண்ணு அந்த சைடு போனதுக்கு உண்டான எந்த அடையாளமும் இல்ல,
சோ பொண்ணு அங்க போகல வேற எங்கயோ போய் இருக்கு,
வயசு வேற அப்படி, பருவ வயசு காதல் கீதல் ஏதாவது இருக்கானு விசாரிக்கனும்”என கூற தங்கம் “என்புள்ள அப்படிபட்ட பொண்ணு இல்லைங்கய்யா”என கைகூப்பி அழுதாள்….
“ம்மா உங்கபொண்ணு உங்க வீட்ல நல்ல பொண்ணா இருந்தா எல்லா இடத்துலயும் அப்படியே இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லம்மா,
அதுவும் இந்த காலத்துல இந்த நாசமா போன போன் வந்து எல்லாம் பிஞ்சுலயே பழுத்து போய் கிடக்கதுங்க,
ஒரு நாளைக்கு எத்தனை கேஸ் இந்த மாதிரி பாக்கறோம்,
ஸ்கூல் எல்லாம் நாளைக்கு தான் ஓபன் ஆகும் அதனால நாளைக்கு போய் தான் ஸ்கூல்ல விசாரிக்க முடியும்,
பொங்கல் சமயத்துல ஒவ்வொருத்தர் வீட்லயும் போலீஸ் போய் நிக்க முடியாதுனு உங்களுக்கே தெரியும் அட்வகேட் சார்” என இன்ஸ்பெக்டர் கூறினார்….
“அண்ணா அக்காவ வீட்டுக்கு கூட்டிட்டு போங்க நான் போய் ரவிச்சந்திரன் சார பாத்துட்டு வரேன்” என அவர்ளை அனுப்பி விட்டு அவனும் வண்டியில் புறப்பட்டான்….
வக்கீல் ரவிச்சந்திரனின் வீடு திருவந்திபுரம் கோவில் அருகில் தான்….
போகும் வழியில் அன்னத்தின் நினைவுகள் அவன் முன் நிழலாடின…
”அண்ணா அங்க மலை மேல இருக்க பெருமாள கும்பிட்டா நல்லா படிப்பு வருமாம், அதனால தான் வாரந்தவறாம அங்க போறேன்” என கண்களை உருட்டி உருட்டி பேசினாள்..
“நல்லா படிக்தறது உன் கைல தானடா இருக்கு நீ நல்லா கவனமா படிச்சாவே நல்ல மார்க் வருமே”
“வரும் தான் ஆனா கடவுளோட ஆசிர்வாதமும் கொஞ்சம் வேணும்தானே”
“அப்போ நம்ம ஐயனாரப்பனையும் விழுந்து விழுந்து கும்பிடற அதான் அந்த மலை மேல இருக்கற பெருமாள் தான் உனக்கு படிப்ப தராரே”
“நம்ம ஐயனாரப்பன் என்னோட அப்பா மாதிரி, எனக்கும் அப்பா அம்மாக்கும் தம்பிக்கும் பாதுகாப்பா இருக்க சொல்லி கும்பிடுவேன்”என்றாள்…
“ஆஹா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு காரணம் வச்சிருப்ப போல”எனக் கூறி சிரித்தான்…
“ஆமா அண்ணா நல்லா படிக்கனும் படிச்சு வேளாண் துறையில பெரிசா சாதிக்கனும்,
தம்பியையும் நல்லா படிக்க வைக்கனும், அப்பா அம்மாவ வீட்ல உட்கார வச்சி ஜம்முனு பாத்துக்கனும்”என கண்கள் மின்ன கூறியவளை பார்த்து சந்தோஷமாக சிரித்தான்…
“கண்டிப்பா நீ சாதிப்ப அன்னம் அது உன்னோட ஆசையில்ல உன்னோட இலட்சியம் அதனால கண்டிப்பா நீ அதை அடைஞ்சிடுவ”என கூறியதை நினைத்து பார்க்கையில் கண்களில் இருந்து சில துளி காற்றோடு கலந்தது வண்டியின் வேகத்தில்….
“டேய் வந்துட்டிங்களா இல்லையா என்னடா செய்யறிங்க இன்னும்,
அந்த புள்ளைக்கு எத்தனை மயக்க ஊசி போடறது அனுபவிக்கறதுக்கு முன்னாடியே போய் சேந்துட்டா அத்தனையும் தண்டமா போய்டும்”என ஒருவன் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தான்…
“இதோ அவ்ளோதான் மச்சி பாண்டிச்சேரிக்குள்ள என்ட்ரி ஆகிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்போம் பாப்பாவ ரெடி பன்னி வை”என எதிர்முனையில் கேட்க போனை ஆஃப் செய்துவிட்டு உள்ளே வந்தான்…..
உள்ளே வந்து மின்விளக்கை போட்டவன் முன்னால் சுவற்றின் ஓரமாய் மருந்தின் வீரியத்தில் கண்களை திறக்க முடியாமல் அன்னம் விழுந்து கிடந்தாள்….
“ஏய் யாரங்க”என கத்த ஒரு நடுத்தர வயது பெண்மணி பயத்துடன் வந்து நின்றாள்…
“இந்த புள்ளைய பாத்ரூமுக்கு கூட்டிட்டு போய் நல்லா குளிக்க வச்சு உள்ள ரூம்ல படுக்க வை வெறும் போர்வைய மட்டும் போத்தி விடு போதும்”என மிரட்டும் தோணியில் கூற அப்பெண்மணியும் பயத்துடன் அன்னத்தை மெல்ல கைப்பிடித்து தூக்கி கழிவறைக்கு அழைத்து சென்றாள்….
அன்னத்தை குளிப்பாட்டி கொண்டு வந்து அவன் கூறியபடி அறையில் கொண்டு படுக்கவைத்து வெள்ளை நிற பெட்சீட்டை கழுத்து வரை போர்த்தி விட்டு அன்னத்தின் நிலையை எண்ணி பெருமூச்சை விட்டு வெளியே சென்றுவிட்டாள்….
அந்த பெரிய கட்டிடத்தின் வாசலில் இருந்த காரில் இருந்து மூன்று ஆண்கள் இறங்கினர்…
“டேய் மச்சி சொன்னது போலவே வந்துட்டோம் பாத்தியா” என அதில் ஒருவன் கூற,
“கிழிச்சிங்க காலைல வாங்கடானா ஆடிகிட்டு மதியமா வந்திருக்காங்க, வேலைய முடிச்சிட்டு நைட் எல்லாம் இவள டிஸ்போஸ் பன்னிடனும் நியாபகம் இருக்குள்ள” என என காட்டமாக பேச,
என்னா அழகா இருப்பா, இந்த நாளுக்காக தான் நான் ஏங்கி போய் கிடந்தேன்” என ஒருவன் கேட்க மூவரும் அவனை அடக்கி உள்ளே அழைத்து சென்றனர்….
“டேய் பாப்பா இந்த ரூம்ல தான் இருக்கு, சும்மா பாத்துட்டு மட்டும் வாங்க சரக்க அடிச்சிட்டு அப்பறம் நம்ம வேலைய பாப்போம்” என ஏற்கனவே இங்கிருந்தவன் புதிதாக வந்த மூவரிடமும் கூறிவிட்டு சென்றான்…
மூவரும் மெல்ல கதவை திறக்க ஊசி மயக்கத்தில் மெல்லிய முனகலையும் அசைவையும் கொடுத்து தன் சுயநினைவை இழந்து அந்த போர்வைக்குள் உடலை மறைத்து படுத்திருந்தாள்…
“டேய் அப்பறம் சரக்கடிக்கலாம் டா நான் போய் முத என் வேலைய முடிச்சிடறேன் அச்சோ அங்க பாரேன் பாத்த உடனே உணர்ச்சி பொங்கற மாதிரி எப்படி படுக்க வச்சிருக்கான்னு” என ஒருவன் எகிற மீதி இருவரும் இவனை வைத்துக்கொண்டு இம்சை என இழுத்து சென்று விட்டனர்…..
“மாமா தம்பி காலைல போச்சு பெரிய வக்கீல பாக்கறேன்னு இன்னமும் எந்த தகவலும் இல்ல எனக்கு நேரம் அதிகமாக அதிகமாக பயம் ஏறிட்டே போகுது”என விரக்தியாக கூறிய தங்கத்திற்க்கு என்ன ஆறுதல் சொல்வது என தெரியாமல் அழகப்பன் உடன் அமர்ந்திருந்தான்….
“இத்தனை பெரிய பண்டிகைல இப்படி இருப்போம்னு ஒரு நாளும் நெனச்சிருப்போமா,
பண்டிகைனால தேட முடியாதாம் ஒருத்தங்க வூட்ல போய் நிக்க முடியாதாம் காரணம் சொல்றானுவ,
இதுவே இந்த ஊர் பெரிய மனுஷங்க வீட்ல எதாவது வந்துட்டாலும் இப்படித்தான் சாக்கு சொல்லினு நிப்பானுவளா
எல்லா இடத்துலயும் உள்ளவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாயம் தான் தங்கம்,
நம்ம பிரபு தம்பிக்கு அன்னத்து மேல கொள்ள பிரியம் இப்போதைக்கு என்னோட நம்பிக்கை அவரு மட்டும் தான்,
இதுக்கு மேல அந்த ஐயனாரப்பன் தான் துணை நிக்கனும்”என விரக்தியின் உச்சத்தில் பேசிய அழகப்பனின் வார்த்தைகள் தங்கத்தின் காதுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பித்து பிடித்து அமர்ந்து இருந்தாள்…..
அடுத்த நாள் காலை கதிரவன் மெல்ல அவன் ஒளியை தானமாக தர இருள் எனும் பசி விலக தங்கம் மெல்ல எழுந்து வெளியே சென்றாள்….
“அக்கா தங்கம்மா க்கா”என பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவன் கத்திக்கொண்டே வந்தான்….
“என்னாச்சு அண்ணா ஏன் இப்படி பதட்டமா ஓடிவரிங்க”
“அழகப்பன்னா இல்லையா”
“இருக்காரு என்னாச்சு சொல்லுங்க”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அழகப்பன் எழுந்து வெளியே வந்தான்…
“அண்ணா சீக்கிரம் வாங்களேன் கன்னிகோயில் பாலத்துக்கிட்ட கிட்ட நம்ம அன்னத்த யாரோ போட்டுட்டு போயிட்டாங்களாம் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு வெளில நிக்கறாங்க ஜீப்ல கொஞ்சம் வாங்களேன்”என பதறியபடி கூற இருவரும் அதிர்ந்து சிலை போல நின்றனர்…
“சார் உயிர் இல்ல இறந்துட்டாங்க” என ஆம்புலன்ஸ் டிரைவர் கூற தங்கம்மாளும் அழகப்பனும் “ஐய்யய்யோ”என கத்தியதில் கன்னிகோயிலே அதிர்ந்தது….
பிரபு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நின்றிருந்தான் என்றாலும் அவனும் நிலை தடுமாறினால் இங்கு என்ன நடக்கிறது என யூகிக்க முடியாமல் போகும் என…
தங்கம் அன்னத்தை அள்ளி மடியில் போட்டுக்கொண்டு கதறுவதை பார்க்க சுற்றி இருப்பவர்களாலே தாங்க முடியவில்லை…
பிரபு மெல்ல குனிந்து அன்னத்தின் முகத்தருகே செல்லவும் அன்னம் மெல்ல மிகமெல்ல முனகும் சத்தம் கேட்டது….
“இன்ஸ்பெக்டர் உயிர் இருக்கு “ என பிரபு போட்ட ஒரு சத்தத்தில் அங்கிருந்த அனைத்து சலசலப்புகளும் அடங்கி கப்சிப் ஆனது…
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தது….
கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அன்னத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது….
“ஐயா பிரபு அன்னம் புழைச்சிடுவால்ல டாக்டர் கிட்ட சொல்லி கொஞ்சம் நல்லா பாக்க சொல்லுங்கப்பா” என அழகப்பனும் தங்கம்மாளும் அவன் முன் கைகூப்பி வணங்கி அழுது கொண்டே கேட்க,
சட்டென அவர்கள் கையினை இறக்கி “அன்னத்துக்கு ஒன்னும் ஆகாது நான் பாத்துக்கறேன் நீங்க இரண்டு பேரும் தைரியமா இருங்க,
இனி அவளோட தைரியமே நீங்க தான்”என கூறி அவர்களை சமாதானப்படுத்துவதுடன் அவர்கள் மனதையும் சற்று திடமாக்கினான்…
தங்கம் அந்த அறையின் வாசலிலேயே போடப்பட்டிருந்த நீளபெஞ்சில் விரக்தியோடு அமர்திருந்தாள்….
நான் எப்படி இருக்கேன் அழகா இருக்கேனா” என பாவாடை தாவணியில் ஒரு சுற்று சுற்ற தங்கத்தின் கண்களுக்கு மகள் தேவதையாக காட்சி தந்தாள்….
“உனக்கென்ன கண்ணு தேவதை மாதிரி இருக்க என் கண்ணே பட்டுடும் போல இருக்கு,
ஆத்து திருனாக்கு கிளம்பியாச்சா,
அறிவு வரலயா யார்கூட போற இனியனையும் கூட்டினு தான போற”என கேள்விகளை அடுக்கினாள்…
“ மூச்சு விட்டு கேள்வி கேளு மா,
அறிவு இப்போ வந்திடுவா, பிரபு அண்ணா கூட தான் போறோம் இனியன் ஏற்கனவே பிரபு அண்ணா கிட்ட போய்ட்டான் நான் நீ வயல்ல இருந்து வந்தா உங்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு போலான்னு இருந்தேன்”என கூறிகொண்டு இருக்கும் போதே தங்கம் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அன்னத்தின் கையில் வைத்தாள்…
“வேணாம் மா எதுக்கு”
“ஏன்மா திருனாக்கு போய்ட்டு எதும் வாங்கமயா இருப்பா ஏதாவது வாங்கி சாப்பிடுங்க” எனக்கூறி கையில் திணித்தார்…..
“அதெல்லாம் எதும் வேணாம்க்கா நீங்க உள்ள வைங்க நான் தான கூட்டினு போறேன் எதுனா வேணும்னா நான் வாங்கி தரமாட்டனா”என கேட்டுக்கொண்டே பிரபு வந்து நின்றான்…
“அப்படி இல்லங்க தம்பி உங்களுக்கு எதுக்கு சிரமம்”என தங்கம்மாள் நெளிய,
“அதெல்லாம் எந்த சிரமும் இல்ல நீங்க அத செலவுக்கு வச்சிக்கோங்க,
வருஷத்துல ஒரு நாளைக்கு இவங்கள நான் வெளில கூட்டிட்டு போறேன் இது போய் சிரமமா,
“இல்லைங்க தம்பி கரும்பு அறுவடை முடிஞ்சு கிளை செடி எல்லாம் கொளுத்தி விட்டுருக்கு,
காட்டுல வேலை இருக்கு நீங்க போய்ட்டு வாங்க,
பசங்க பாத்தா போதும் நாம இனிமேல் அங்க எதுக்கு”என மறுத்து விட்டாள்….
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே அங்கு அறிவழகியும் வந்து விட்டாள்…
“ஏய் அறிவு வாடி, அழகா இருக்க புள்ள இந்த தாவணில” என அன்னம் அவளை கட்டிக்கொண்டாள்…
“கண்ணு மூனு பேரும் அப்படியே முன்பக்கம் போய் அய்யா கிட்டயும் அம்மா கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க அதுக்கு அப்றம் கிளம்புங்க”என தங்கம்மாள் கூற மூவரும் சரியென்று முன்னே சென்று முத்துராமலிங்கம் பேச்சியம்மாள் தம்பதியிடம் ஆசிர்வாதம் வாங்கினர்…
அவர்கள் இவர்களை வாழ்த்தி ஆளுக்கு நூறு ரூபாய் கையில் கொடுக்க பிள்ளைகள் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டனர்….
“கூட்டமா இருக்கும் பாத்து போய்ட்டு வாங்க”என இருவரும் கூற சரியென தலையாட்டினர் மூவரும்…
“சரி எல்லாரும் அப்படியே கேட்டுக்கு வெளிய போங்க நான் கார் எடுத்துட்டு வரேன்” என பிரபு அவர்களை வெளியே அனுப்பி விட்டு அந்த மாருதி காரை எடுத்து கொண்டு வந்தான்…
நால்வரும் ஏற கார் பெண்ணையாறு நோக்கி சென்றது…
ஆற்றுக்கு அருகில் வரும்போதே கடும் வாகன நெரிசல்,
அதனால் சற்று முன்பே காரை நிறுத்தி விட்டு நால்வரும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்….
“அண்ணா எவ்ளோ கூட்டம் பாத்திங்களா”என சிறுசுகள் மூன்றும் வாய்பிழக்க,
கடலூர் மாவட்டத்தில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஒன்று கெடிலம் இன்னொன்று தென்பெண்ணை…
அந்த பெண்ணை ஆற்றில் தான் இந்த ஆற்றுத்திருவிழா தை மாதம் ஐந்தாம் நாளில் நடைபெறும்….
கடலூரை சுற்றி இருக்கும் மக்கள் பலரும் இந்த திருவிழாவில் ஒன்றாக கூடுவார்கள்…
திருப்பாதிரிபுலியூர், தேவனாம்பட்டினம், மஞ்சக்குப்பம், கடலூர் துறைமுகப்பகுதி அப்படி சுற்றி இருக்கும் இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கடவுள்களை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அங்கு ஆற்றில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கும்…
நீருக்கு ஆதாரமான ஆற்றிற்க்கு நன்றி கூறும் விதமாக இந்த திருவழா கொண்டாடப்படுகிறது…
பல வித பொம்மை கடைகளும், மாங்காய், சுண்டல், பஞ்சு மிட்டாய்,பெரிய அப்பளம் என பலவித தின்பண்டங்களும் பெரிய பெரிய ராட்டினங்களும் நிறைந்து அத்தனை பெரிய இடமே அடைத்து கொண்டு அழகாக தோன்றும்….
பார்க்க பார்க்க மனம் அத்தனை மகிழ்ச்சி கொள்ளும்…
நால்வரும் அப்படியே கூட்டத்தின் கூடவே ஆற்றுக்கு சென்றார்கள்…
பிள்ளைகள் மூவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்…
“அண்ணா மாங்காய் இரண்டு தர்பூசணி இரண்டு அன்னாசிப்பழம் இரண்டு கப் குடுங்க”என அதில் அதில் இரண்டு வாங்கி பிள்ளைகளிடம் தந்து அவனும் சிறிது உண்டான்…
“பசங்களா ராட்டிணம் ஏறலாமா”என பிரபு கேட்க அன்னத்தை தவிர மற்ற இருவரும் குஷியாக தலையாட்டினர்….
“அன்னம் இந்த வருஷமும் உன்ன பாவம் பாத்து விட முடியாது வா இன்னைக்கு நீ ராட்டினம் ஏறனும் சரியா”என விஜய் கூற அன்னம் தான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டாள்…
“எனக்கு தான் பயம்னு தெரியும்ல அப்பறம் ஏன் அண்ணா என்ன கூப்படறிங்க”என சிணுங்க,
“பயந்துட்டே இருந்தா எப்படி நான் இருக்கேன்ல நான் பாத்துக்கறேன் வா”என கூறி கைப்பிடித்து அழைத்துச் சென்றான்…
டிக்கெட் பெற்றுக்கொண்டு நால்வரும் அந்த பெரிய ராட்டினத்தின் ஒரே பெட்டியில் அமர்ந்தனர்…
இனியனும் அறிவழகியும் ஒரு பக்கமும் அன்னமும் பிரபுவும் ஒரு பக்கமும் என எதிர் எதிர் அமர்ந்தனர்…
அன்னம் அதிகம் பயப்படுவாள் என அறிந்து தான் பிரபு தன்னருகில் அமர்த்தி கொண்டான்…
அனைத்து பெட்டிகளும் நிரம்பிய நிலையில் இராட்டினம் மெல்ல சுற்ற ஆரம்பித்தது…
இனியனும் அறிவும் மகிழ்ச்சியாக கூச்சலிட்டு கொண்டு வந்தனர்..
அன்னம் பிரபுவின் கைகளை இறுக பிடித்து அவன் தோளில் முகம் பதித்து கொண்டாள்…
பிரவு அவளை அணைத்தபடி “அன்னம் கண்ண திறந்து பாரேன் நான் உன்கூட தானே இருக்கேன்”என அவள் காதருகில் கூற,
“வேண்டா அண்ணா பயமா இருக்கு அடிவயித்துல ஏதோ செய்யுது நான் கண்ண தொறக்கல மேல இருந்து பார்த்தா ரொம்ப பயமா இருக்கும் கீழ எதும் விழுந்துட்டா போச்சு”என ராட்டினத்தின் வேகத்திற்கு ஏற்ப அவள் குரலும் ஏறி இறங்கி வந்தது…
“அன்னம் என் மேல நம்பிக்கை இருக்கா இல்லையா நான் இருக்கும் போது நீ கீழ விழுந்துடுவியா அப்படி நான் உன்ன விட்டுருவனா மெதுவா தலை நிமிரந்து பாரு”என அவள் தலையை மெல்ல தூக்கி விட்டான்…
“அன்னம் கண்ண துறந்து பாரேன்”என அறிவும் இனியனும் எதிரில் இருந்து கத்த அன்னம் மெல்ல கண் திறந்து பார்த்தாள்…
ராட்டினம் மேலே உச்சிக்கு சென்ற போது சுற்றிலும் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது அவளுக்கு…
மொத்த மக்கள் கூட்டமும் அவளுக்கே கீழே எறும்பாய் நகர்ந்து கொண்டு இருந்தது…
பெண்ணை ஆற்றின் அழகும் அங்கு நின்றிருந்த கடவுள்களின் அழகும் என சுற்றி சுற்றி பார்த்து சந்தோஷமடைந்தாள்…
“இவ்வளோ தான் அன்னம் இதுக்கா இத்தனை பயம் உயரத்துல இருக்கும் போது சந்தோஷமும் நிதானமும் இருந்தா போதும் கீழ விழாம அனுபவிக்கலாம் வாழ்க்கையை”என கூறி அவளின் தலையை நீவி விட்டான்…
“பேஷண்ட் அன்னத்தோட ரிலேட்டிவ் யாரு”என நர்ஸ் வெளியில் வந்து கேட்க நிஜ உலகிற்க்கு வந்த பிரபு “சொல்லுங்க சிஸ்டர்”என கேட்க,
“நீங்க யாரு அந்த பொண்ணுக்கு”
“அவங்க அப்பா அம்மா எங்க பண்ணைல தான் வேலை செய்யறாங்க, அவ என் தங்கச்சி மாதிரி இப்போ அவளோட அட்வகேட்டும் நான் தான்” என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்…
“சார் அந்த பொண்ண ஒரு மூனு நாளு பேர் சேர்ந்து ரேப் பன்னிருக்காங்க,
அந்த அதிர்ச்சில அந்த பொண்டோட மூளை இப்போதைக்கு எதையும் யோசிக்கற நிலைல இல்ல,
உடம்புல பல காயங்கள் இருக்கு,
அந்த பொண்ணால அவங்கள இப்போ அடையாளம் எல்லாம் சொல்ல முடியாது,
அவ சரியாக ஒரு வாரமும் ஆகலாம் ஒரு மாசமும் ஆகலாம்,
ஆனா மனசளவுல ரொம்ப பாதிக்க பட்டு இருக்கா இப்போதைக்கு எங்களால அவளோதான் சொல்ல முடியும்,
ட்ரீட்மெண்ட் முடிஞ்சது ஒரு மணிநேரம் கழிச்சு நீங்க போய் பாக்கலாம்”என கூறிவிட்டு மருத்துவர் சென்று விட்டார்..
இங்கே தங்கம்மாளும் அழகப்பனும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கதறிக்கொண்டிருந்தனர் அன்னத்தின் நிலைமை கண்டு….
“டேய் அவ செத்துட்டானு சொல்லி தான பாலத்துகிட்ட கொண்டு போய் வீசிட்டு வந்தோம் இப்போ என்ன உயிர் இருக்குனு சொல்லி ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் நடக்குதாமா” என அவளை நாசமாக்கிய நால்வர் குழுவில் ஒருவன் கூற மீதி மூவரும் பலத்த யோசனையில் அமர்ந்திருந்தனர்….
“டேய் அவ பொழச்சாலும் எந்த புண்ணியமும் இல்ல நம்மல அடையாளம் காட்டற அளவு எல்லாம் அவளுக்கு தைரியம் இல்ல அவ குடும்பமே பஞ்ச பரதேசிங்க,
தோட்டத்துல பண்ணை வேலை பாக்கறவங்க,
அப்படியே அவ பொழச்சு வந்து அடையாளமே சொன்னாலும் கூட நம்மள ஒன்னும் பன்ன முடியாது,
அரசாங்க விசுவாசிகளே எல்லாம் நம்ம பக்கம் இருக்காங்க, சும்மா பொலம்பாம போய் ஆகற வேலைய பாருங்க”என அந்த வீட்டில் அவளை கட்டி வைத்திருந்தவன் தைரியம் கூற மற்ற மூவருக்கும் அவன் கூறுவது சரியெனப்பட்டது…..
“அம்மா அக்காக்கு இப்போ எப்படி மா இருக்கு,
பிரபு அண்ணா தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க” என இனியன் இடிந்து போய் அமர்ந்திருந்த தங்கம்மாளின் மீது கைவைக்க சுயநினைவுக்கு வந்தவள் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்….
“ம்மா அக்காக்கு ஒன்னும் ஆகாது மா பயப்பட வேண்டாம், நாம தைரியமா இருந்தா தானே அக்காவ பாத்துக்க முடியும்” என அன்னையை அழைத்து வயதுக்கு மீறிய ஆறுதல் அளித்தான்…
ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என இதனால் தான் கூறி வைத்தார்கள் போலும்…
ஆனால் இந்த தைரியத்தை இவனக்கு வழங்கி தான் பிரபு இவனை அழைத்து வந்திருந்தான்…
“ம்மா அன்னத்தோட பேமிலி யாரு அவங்க கண் முழிச்சிட்டாங்க யார் பாக்கறிங்களோ பாருங்க,
அவர் கூறி கொண்டு இருக்கும் போதே அங்கு பிரபு வந்து விட்டான்…
“அக்கா நீங்களும் அண்ணாவும் உள்ள போங்க அழாதிங்க உங்க முகத்துல இருக்கற தைரியம் தான் அவ மனசுல ஏறும் நீங்க அழுதா அவளுக்கு இன்னும் பயம் வரும்” என அவர்கள் இருவரையும் முதலில் தைரியப்படுத்தி அனுப்பி வைத்தான்….
இருவரும் அறைக்கதவை திறந்து மெல்ல உள்ளே சென்றார்கள்…
மருந்தின் வீரியமும் காயங்களின் வலிகளிலும் அவளால் அதற்கு மேல் கண்களை திறக்க முடியவில்லை….
இருவருக்கும் அவள் நிலை கண்டு இதயமே வெடிக்கும் போல் இருந்தாலும் அவள் முன் அழக்கூடாது என பிரபு சொல்லியதை மனதில் கொண்டு உதட்டில் ஒரு பொய்யான சிரிப்பை மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்து அவள் அருகில் சென்றனர்…
அழகப்பன் அவளின் தலையை மெல்ல வருடி “கண்ணு உனக்கு ஒன்னு இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க நாம சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்” என கூற அவளிடம் எந்த எதிர் பதிலும் இல்லை….
ஆனால் கண்களின் ஓரம் இருதுளி கண்ணீர் மட்டும் வந்தது…
அது வலியின் தாக்கத்தில் வந்ததா இல்லை அவளின் கசப்பான நினைவுளில் வந்ததா என தெரியவில்லை…
கண்ணீரை கண்டவுடன் இருவராலும் அங்கு நிற்க முடியாமல் அறைக்கு வெளியே வந்து விட்டனர்…
“தம்பி பிரபு பாப்பாக்கு காயமெல்லாம் நாம பாத்ததுதான் ஆனா கால்ல ஏம்பா கட்டு போட்டுருக்காங்க” என தங்கம் கேட்க,
தொண்டை ஒருமுறை செருமி கொண்டு “அந்த கொடூர மிருகங்கங்க அன்னத்தோட காலை உடைச்சிட்டாங்க,
மனுஷ உருவத்துல இருக்கற மிருகங்கள் அவ கால உடைச்சி அந்த வலில அவ துடிக்கறத பாத்து ரசிச்சு இருக்கானுங்க” என கோபத்தின் உச்சத்தில் கூற அந்த உஷ்ணத்தின் வெளிப்பாடாக கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது…
தங்கம்மாளிற்க்கும் அழகப்பனுக்கும் இடிக்கு மேல் இடியாய் வந்து இறங்கியது ஒவ்வொன்றும்…
தன் பிள்ளைகள் தவறி விழுந்து அடிபடுவது கூட பெற்றோரை பதைபதைக்க வைக்கும்..
இப்படி எல்லாம் நடந்தால் எந்த இதயம் தான் பொறுத்து கொள்ளும்….
நான்கு நாட்களாக அழுது அழுது கண்களில் இருந்த கண்ணீர் கூட வற்றி இருந்த நிலையில் பேயறைந்ததை போல் அமர்ந்து விட்டனர் இருவரும்…
“இனியா நான் உள்ள போய் அன்னத்த பாத்துட்டு வரேன் நீ இங்க இருந்து அம்மா அப்பாவ பாத்துக்கோ” என கூறிவிட்டு பிரபு உள்ளே சென்றான்….
உள்ளே சென்றவன் அன்னத்தின் நிலை கண்டு மனம் நொறுங்கி போனான்…
அவளின் நிலையும் முகங்களின் காயங்களும் காலில் போடப்பட்டிருந்த கட்டும் அவனின் மன உறுதியையே சற்று அசைத்து பார்த்தது…
அவள் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்…
ஊசி ஏற்றப்பட்டு இருந்த கையை மெல்ல பற்றினான்…
நினைவுகள் பின்னோடியது…
“அன்னம் நம்ம ஸ்கூல் ஆண்டுவிழால நீ டேன்ஸ்ல சேந்திருக்க தானே” என அறிவு கேட்க,
“ இல்லடி இந்த வருஷம் சேரல ட்ரெஸ் எல்லாம் எடுக்கனும் அதுக்கெல்லாம் இப்போ அம்மாவால முடியாது அவங்களுக்கு கஷ்டம் குடுக்க கூடாதுடி”என சற்று கவலை நிறைந்த முகத்துடன் கூறினாள் அன்னம்…
“என்னடி இப்படி சொல்ற நீ சேராம நான் மட்டும் எப்படி கலந்துக்கட்டும் நானும் சேரல விடு”
“ஏய் லூசு நான் சேரலனா என்ன நீ கலந்துக்கோ நீ ஆடறத நான் பாப்பேன்ல”
“என்ன விட உனக்கு தான் டேன்ஸ் ரொம்ப பிடிக்கும் நீயே கலந்துக்கல நான் மட்டும் எதுக்கு,
அடுத்த பீரியட் ருத்ரா டீச்சர்து தான் அவங்க தானே டேன்ஸ் சொல்லி தரது அவங்க கிட்ட நாம ரெண்டு பேரும் சேரலனு சொல்லிடலாம்”என அன்னத்தை பேசவிடாது அவளே பேசி முடித்தாள்…
அடுத்து வகுப்பை ருத்ரா வந்து பாடம் நடத்தி முடித்த பின் இருவரும் அவள் அருகில் சென்று இந்த வருடம் ஆண்டுவிழாவில் நாங்கள் நடனத்தில் பங்குபெறவில்லை என கூறினர்…
அன்னம் சற்று தயங்கியபடி அவளின் நிலையை எடுத்து கூற “இவ்ளோதானா இதுக்கா சேர மாட்டேன்னு சொல்ற நீ டேன்சுல சேந்துக்க உனக்கு என்ன வேணுமோ நான் வாங்கி தரேன்” என ருத்ரா கூறியதும் அன்னத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் எதற்கு வீண் செலவு என மறுப்பு கூற ருத்ரா அதெல்லாம் முடியாது சேர்ந்து தான் ஆக வேண்டும் என உறுதியாக கூறி விட்டார்…
அவளும் சரியென கூறி அறிவையும் அழைத்து கொண்டு நடனப்பயிற்சியை ஆரம்பித்து விட்டாள்…
ருத்ரா தான் நடன பயிற்சிக்கும் ஆசிரியை…
புன்னகை மன்னன் படத்தில் இருந்து “கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒருவகை ஆகும்..
பூமி எங்கும் சுற்றும் மட்டும் ஆட வந்தேன் என்ன நட்டம் ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்” பாட்டு அதிர அதற்கு ஏற்ப நடன இசைவுகளை ருத்ரா ஆட அப்படியே சிலை போல நின்றனர் அறிவும் அன்னமும்…
“என்ன அப்படியே வாயடைச்சி நிக்கறிங்க கூட சேர்ந்து ஆடுங்க” என கூற அவர்களும் அவளுடன் இணைந்து கொண்டனர்…
மாலை வீட்டிற்க்கு சென்றவுடன் தங்கத்தை கட்டிக்கொண்டு “தங்கம் உனக்கு தெரியுமா இந்த வருஷம் ஆண்டுவிழாவுல நான் ஆடறேன் அதுக்கு ஆகற செலவ ருத்ரா டீச்சரே போட்டுக்கறேன்னு சொல்லிட்டாங்க” என மகிழ்ச்சியாக கூறினாள்…
“நல்லவங்களும் அங்கங்க இருக்க தான் செய்யறாங்க” என கூறிக்கொண்டு தங்கமும் அவளை இறுக அணைத்து கொண்டாள்…
அன்னமும் அறிவும் பள்ளியில் பயிற்சி எடுப்பது பத்தாது வீட்டிலும் ஆடிப்பார்த்து கொண்டனர்…
ஆண்டு விழாவிற்கு முந்திய நாள் மாலை பிரபு அவனது சிறிய ரக ஒலிப்பெருக்கியை கொண்டு வந்து பெரிய தரை நிறைந்த பகுதியில் வைத்து அங்கு வேலை செய்யும் அனைவரையும் அழைத்து அமர வைத்திருந்தான்….
முத்துராமலிங்கம் பேச்சியம்மாள்,
தங்கம்மாள் அழகப்பன் உட்பட அனைவரையும் அமர வைத்திருந்தான்…
“டேய் என்னடா செய்ய போற இப்படி எல்லாரையும் உட்கார வச்சு எதும் வித்தை காட்ட போறியா”என முத்துராமலிங்கம் கேட்க,
“நாளைக்கு அன்னத்தோட ஸ்கூல்ல ஆண்டுவிழா அன்னமும் அவ பிரண்ட் அறிவு வரால்ல அவளும் டேன்ஸ் ஆட போறாங்க எப்படியும் நாம எல்லாரும் அங்க போய் பாக்க முடியாது அதனால இப்போ அவங்க இரண்டு பேரையும் இங்க ஆட வச்சு பாத்துருவோம்”என கூற அனைவரும் மகிழ்ச்சியாக புன்னகைத்தனர்….
அன்னமும் அறிவும் சுடிதார் அணிந்து அதன் துப்பட்டாவை ஆடுவதிற்கு ஏற்றார் போல் கட்டிக்கொண்டு வந்தனர்….
ஒலிப்பெருக்கியில் பாட்டு ஆரம்பித்தவுடன் இருவரும் தங்களின் நடனத்தை ஆரம்பித்தார்கள்…
பாட்டும் இசையும் இவர்களின் நடனமும் பார்ப்பவர்களுக்கு அப்படியே அவர்களே ஆடுவது போல் ஒரு மகிழ்ச்சியை தந்தது….
பாட்டின் இறுதி வர வர அனைவருக்கும் அவள்களின் நடனம் புல்லரித்தது…
“தோம்த தீம்த தீம் பதங்கள் ஆட,
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட” என உச்ச தோனியில் அவள்கள் ஆட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்….
அதிலும் அன்னத்தின் முகபாவனை தான் அனைவரையும் அதில் லயிக்க செய்தது…
இருவரும் ஆடிமுடித்தவுடன் அனைவரும் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தனர்….
இருவரும் அனைவரின் முன்னும் கைகூப்பி நன்றிதனை தெரிவித்து கொண்டனர்…
“சார் டாக்டர் வராரு நீங்க கொஞ்சம் வெளிய இருக்கிங்களா”என்ற குரலில் நிகழ் உலகிற்கு வந்தவன் எப்படியும் எழுந்து நடக்க ஆறு மாதம் ஆகும் என டாக்டர் கூறியிருந்த அன்னத்தின் காலை பார்த்து கொண்டே வெளியில் சென்றான்……