எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 01

கார்முகில் தூவிய வான்மழையே!!!

“அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்”


தெருமுக்கில் இருக்கும் அண்ணாச்சி டீக்கடையில் ஒலித்த பாடலில் தனது உறக்கம் கலைந்து மெல்ல புரண்டு நேரத்தைப் பார்த்தார் பேச்சி.

அதிகாலை ஐந்து மணி என அதுக் காட்ட, இருள் பிரியா வானமும் உறக்கம் பிரியா இமைகளும் இன்னும் கொஞ்சம் தூங்கேன்‌ என அவரை உறக்கத்திற்கு இழுக்க, இன்றைய நாளின் முக்கியத்துவம் உணர்ந்து எழுந்துக் கொண்டார்.

வழக்கமான காலை கடன்களை முடித்து விட்டு அவர் வெளிவந்த நேரம், முற்றம் பெருக்கப்பட்டு அழகான பெரிய கோலமிடப்பட்டிருந்தது, அவ்வீட்டு மூத்த மருமகள் சுபலட்சுமியால்.

எப்பொழுதும் சுபாவால் தோன்றும் பெருமை இன்றும் அவர் முகத்தினில் தெரிய, புன்னகைத்தவாறே அடுத்த வேலையை கவனிக்க தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அடுத்தடுத்து இருந்த வீடுகளில் விளக்குகள் எரியத் தொடங்கின.

சிவங்கிரிப்பட்டி பழனி அடிவாரத்தில் ஏறத்தாழ சில ஏக்கர் விவசாய நிலங்களையும் பல வீடுகளையும் கொண்ட சிறிய ஊர்.

ஆறு மணியளவில் மலை மீதிருக்கும் முருகப் பெருமானுக்கு முதல் அபிஷேகம் நடைபெற அதற்குள் ஊரே விழித்திருந்தது.

முத்துப்பேச்சி அடைத்து வைத்திருந்த கோழிகளை திறந்து விட்டு, மாடுகளுக்கு தண்ணீர் காட்டி விட்டு, என அவரின் அன்றாட வேலைகளை முடித்து விட்டு அவர் வருவதற்கும், அவரது கணவர் மகாலிங்கமும், மூத்த மகன் பரணிதரனும் கேட்டை திறந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது.

மகாலிங்கம் திருக்கோயில் செல்லும் பிராதான சாலையில் பூஜைக்கடையும் பஞ்சாமிர்த்த கடையும் வைத்திருந்தார். இதுபோக பழனி அடிவாரத்தில் கிரிவலம் செல்லும் பாதையிலும் சில கிளை கடைகள் இவருக்கு உண்டு. எனினும் இவர் அதிகம் இருப்பது பூஜை சாமான் விற்கும் கடைகளில் தான் இருப்பார்.

அதுப்போக, இவரின் கடைக்கு அருகிலேயே பக்தர்கள் தங்குவதற்கு ஒரு பெரிய மண்டபத்தினை முருகனின் பெயரில் பல வருடங்களுக்கு முன்பு கட்டி விட்டிருக்க இன்றைய காலக்கட்டத்தில் அது நன்கு வளர்ந்து லாபத்தை இரட்டிப்பாக ஈட்டி தந்துக் கொண்டிருக்கிறது.

இன்று விடுமுறை தினம் ஆதலால் மக்கள் கூட்டம் குவிந்திருக்க அதிகாலையே கடையை திறக்க சென்று விட்டிருந்தார் உடன் பரணிதரனும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 4 மணியளவில் இருந்தே பூஜை சாமான்கள் வாங்க அணிவகுத்து நின்றிட வியாபாரம் நெட்டித் தள்ளியது.

ஒருவழியாக இரண்டு மணி நேரம் அப்பாவும் மகனும் நின்று வேலையை கவினித்தவர்கள், பிறகு கடைப் பையனிடம் விட்டுவிட்டு, மண்டபத்தையும் மற்ற கடைகளையும் ஓர் எட்டு பார்த்து விட்டு வீடு திரும்பியிருந்தனர்.


“என்ன முத்து, மணி ஏழாகப் போகுது, இன்னும் யாரும் கிளம்பினப் பாடக் காணோம்.‌ ஒம்பது மணிக்கு நல்ல நேரம் இருக்குன்னு, நேத்தே சொல்லியிருந்தேன் இல்லையா?” என அவர் சத்தமிட,

“அட எதுக்கு இப்புடி, கால்ல வெந்திய ஊத்துனாப்புல குதிக்கிறீங்க! அது எல்லாம் இன்னும் நேரம் இருக்கு கிளம்பிடலாம். நீங்க போய் காபித் தண்ணிய குடிங்க,” என்றவர் கூறும்பொழுதே, சுபா காபி டம்ளருடன் வந்து விட, எடுத்துக் கொண்டனர்.

“சுபா நான் போய், சமையல் வேலையை கவனிக்கிறேன். நீ பிள்ளைங்களை எழுப்பு போ,”

“அத்தை ரொம்ப மெனக்கெடாதீங்க, சட்னி எல்லாம் அரைச்சாச்சு. இட்லி மட்டும் ஊத்திக்கிடலாம்,”

“அப்படியா சுபா! அப்போச் சரி, நா போயி மேலுக்கு ஊத்திட்டு வந்திடுறேன். ஆனா நம்ம பாரதிக்கு மட்டும் ரெண்டு தோசையை ஊத்தி வச்சிடுறேன் அவளுக்கு தான் இட்லி இறங்காதே,” என்க,

“அத்தை, இன்னைக்கு ஒரு நா இட்லி சாப்பிடட்டும் த்தை, நமக்கு நேரம் இல்லை, இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க?”

“இல்லை சுபா, அந்த சின்னக் கழுதைக்கு தோசைன்னாதான் இஷ்டம்.‌ நீ பாரு நான் ஊத்திக்கிறேன்.”

“நீங்க குளிச்சுட்டு வாங்கத்தை, நான் ஊத்தி வச்சிடுறேன். இப்போ கிளம்ப ஆரம்பிச்சா தான் நேரத்துக்கு போக முடியும்” என்க,

சரி என்று விட்டு அவரும் சென்றுவிட, சுபா அடுத்த அவளது குழந்தை சாத்விகாவை கவனிக்க சென்றாள்.

தூங்கி கொண்டிருந்த சாத்விகாவை எழுப்பி, அவளிற்கு பால் கொடுத்து, குளிக்க வைத்து, குழைந்தையை தயார்ப் படுத்தி அவள் வருவதற்கும், வீட்டிற்கு உறவினர்கள் வரவும் சரியாக இருந்தது.

“அட! விசேஷ வீட்டுக்காரங்களே இன்னும் கெளம்ப இருக்கீங்களே, காலைச் சாப்பாடைக் கூட, சாப்பிடாம நாங்க ஓடிவந்தா, நீங்க இன்னும் கிளம்பக் காணோம்.” என வந்திருந்த அத்தை உறவுள்ள ஒருவர் இடித்துரைக்க,

“அவ்ளோதான் சித்தி, முடிஞ்சது. பாப்பா எழுப்ப நேரம் ஆகிட்டு. விசேஷ வீட்டுக்கு வர்றவங்க வீட்டுல சாப்பிட்டா வருவீங்கா? நல்ல கதையா இருக்கே. பத்தே பத்து நிமிசம், இட்லி ஊத்தி வச்சிட்டுத் தான் வந்தேன். உட்காருங்க சாப்பிடலாம்.” என்ற சுபா அடுக்களையில் சென்று,

வெந்து விட்டிருந்த இட்லிகளை, எடுத்து குண்டாவினுள் போட்டவள், அடுத்த ஈடு ஊற்றி வைத்து விட்டு, வந்திருந்த உறவுக்காரப் பெண்மனிக்கு பரிமாற, அது அவரோடு நில்லாது, வீட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் காலை உணவு பரிமாறும்படி மாறியது.

தூங்கிக் கொண்டிருந்த பாரதியை எழுப்பி, தயார் செய்து பேச்சி கையோடு இழுத்து வர, வெளியே ஒரு பந்தி பரிமாறுப்படுவதை கண்டு அதிர்ந்தவர், வேகமாக சுபாவை தேடி அடுக்களைக்குள் செல்ல, எதிர்ப்பட்ட உறவுகளிடம் எல்லாம், நலம் விசாரித்து விட்டு அடுக்களைக்குள் நுழைவதற்க்குள், மேலும் சில பல நிமிடங்கள் பிடித்திருந்தது.

“என்ன சுபா? என்ன பண்ணிட்டு இருக்க?”

“என்னாச்சு அத்தை?”

“இப்போ‌ வெளியே நடக்குற விருந்து, ரொம்ப அவசியமா?”

“இதுல என்னத்தை இருக்கு, விடுங்க ஆளுக்கு ரெண்டு இட்லி தானே,”

“ப்ச் இவுங்க எப்போ சாப்பிட்டு முடிச்சு, நம்ம சாப்பிட்டு கிளம்புறது? மணி என்னன்னு பாத்தியா?”

“இதோ முடிஞ்சது அத்தை, இனி நம்ம வீட்டாளுங்க மட்டும் சாப்பிட்டா போதும்,கிளம்பிடலாம்.”

“சரி நீ நகரு, பாரதிக்கு நா ரெண்டு தோசையை சுட்டுக்கிறேன்?”

“அச்சோ, அத்தை ஆளுங்க வந்த அவசரத்துல, அதை மறந்தே போயிட்டேன். எல்லாருக்கும் சேர்த்து வேற இட்லியை ஊத்தி வச்சிட்டேனே த்தை!” என அவள்‌ கைகளை பிசைய,

“என்ன சுபா? நான் சொல்லிட்டு தானேப் போனேன்” எனும் போதே பரணி வந்தவன்,

“என்னம்மா எல்லாம் ஆச்சா? நம்ம சாப்பிட்டு கிளம்புறது தானே?” என்றவன், மனைவியின் முகத்தை கவனித்து விட்டு,

“ஏன் சுபா, ஒரு மாதிரி இருக்க?” என் கேட்க,

“இல்லைங்க அத்தை பாரதிக்கு ரெண்டு தோசை ஊத்தி சொன்னுங்க, நான் ஆளுங்க வந்த அவசரத்துல, நான் அதை மறந்துட்டு அவளுக்கு சேர்த்து இட்லியை ஊத்தி வச்சிட்டேன்.”

“ச்சு இது எல்லாம் ஒரு பிரச்சனை! இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடட்டுமே, அங்க வேற அப்பா கத்திட்டே இருக்காரு இன்னும் ரெடியாகலையான்னு?”

“அப்போ நீயே உன் மருமகளை சாப்பிட வையி” என் வெடுக்கென‌ கூறியவர் அங்கிருந்து சென்றுவிட, சுபாவின் முகம் மாறிற்று.

“விடு சுபா, இவ்வளவு ஆளுங்களுக்கு சமைச்சிட்டு, அவளுக்கு தனியா வேற தோசை ஊத்தனுமா?” எனும் போது மீண்டும் உள்ளே வந்த பேச்சி,

“உன் பொண்டாட்டிய யாரும் இங்க பாரதிக்கு தோசை ஊத்தி சொல்லலை, நான் ஊத்திக்கிறேன்னு தான் சொன்னேன்.” மகன் ஏதோ அவர் அடுக்களை வேலை செய்யவில்லை என்பதை குத்தி காட்டுவதை போல் உணர்ந்தவர் பட்டென கூறவிட,

“அய்யோ! அத்தை! அவர் தான் ஏதோ அவசரத்துல பேசுறாருன்னா, நீங்களுமா! ஏங்க உங்க வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? போங்க மொத அங்கிட்டு,” என கணவனை ஒரு கடி கடித்தவள்,

“அத்தை, நீங்க சாப்பிடுங்க மொதல்ல, பாரதி வந்தா நான் பேசிக்கிறேன். அங்கன போயி உட்காருங்கத்தை நான் இட்லி கொண்டு வரேன்” என் பேச்சியை சமாதானம் செய்து அனுப்பியவள், கணவனை முறைக்க,

“ப்ச் சுபா, நான் உனக்காக தானே பேசுனேன்!” என அவன் முறுக்க,

“அந்த தப்பை தான் இனி அத்தை முன்னாடி பண்ணாதீங்க. நாங்க ரெண்டு பேரு பேசும் போது இடையில வந்து அவுங்களுக்கோ, எனக்கோ சப்போர்ட் பண்ணி பேசாதீங்க! எதுவாக இருந்தாலும் நாங்களே பாத்துக்கிறோம்.” என்றபடி வெளியே வந்தவள் பேச்சிற்கு இட்லிகளை பரிமாறி விட்டு, சமையலறை திரும்ப,

அதுவரை அவர்களது சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டிருந்த வந்திருந்த உறவுகளில் ஒருவர்,

“பரவாயில்லை பேச்சி, சுபா வேற ஆளுங்களா இருந்தாலும் நம்ம வரைமுறை தெரிஞ்சு நடந்துக்குது, கொடுத்து வச்சவ தான் நீயி, நம்ம சனத்துல பாத்திருந்தாக் கூட சுபா மாதிரி யாரும் இருந்திருக்க மாட்டாங்க.

என் வீட்டுலயும் இருக்காளே ஒருத்தி, இதே மாதிரி என் வீட்டுல நடந்திருந்தா இன்னேரம் வீட்டுச் சண்டையை ஊர்ச் சண்டையா மாத்திருப்பா, அந்தளவுல நம்ம சுபா தங்கம் தான்” என்க,

அதுவரை மகனின் பேச்சில் சுருங்கி இருந்த, பேச்சியின் முகம்! தெளிந்து அப்பெண்மனியின் பேச்சில் பெருமை பொங்க, சிறிதே சிறிது கர்வம் வெளிப்பட்டிட,

அதனை ஓரக்கண்ணால் கண்ட சுபாவின் இதழ்கள் சற்றே கர்வத்தில் நெளிந்ததோ! இதனை தானே அவளும் எதிர்பார்த்தது!!!!

பேச்சி காணும் முன் தன் முகபாவனைகளை சட்டென மாற்றியவள், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்த பாரதியை தாஜா செய்து, இரவு உணவிற்கு அனைவரும் ஹோட்டல் செல்லலாம் என கொஞ்சி அவளையும் சமாதனப்படுத்தி, இறுதியாக சுபா முடிவு செய்திருந்த இட்லியையே அனைவரையும் உண்ண வைத்திருந்தாள்.

ஆட்கள் சிறிது நேரத்தில் மடமடவென கூடி விட, வீட்டில் விசேஷத்திற்கான அறிகுறிகள் ஆரம்பித்து உறவுகளின் கேலி பேச்சுகள் கேட்ட வண்ணம் இருந்தன.

விசேஷ வீடு என்றால் அங்கே இளவட்டங்கள் இல்லாமலா??

அதிலும் மகாலிங்கம் சனக்கட்டு அதிகம் உள்ள குடும்ப வகையறா, அதற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை பேச்சியின் பக்க உறவுகள்.

மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, என உறவுகள் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என நிறைந்ததில் இளசுகளுக்கு கொண்டாட்டம் ஆகிப்‌போனது.

“என்ன பரணி சித்தப்பா, வாத்திய காணோம். இன்னைக்கு பங்ஷனோட ஹீரோவே அவரு தானே!” என‌ ஒருவன் ஆரம்பித்து வைக்க,

“ஓஹோ! என் தம்பிய அவ்ளோ‌ மிஸ் பண்றியாடா மகனே! இதோ உனக்காகவே இப்பவே அவனை போனைப் போட்டு வர வச்சிடுறேன்” பரணி கூற,

“அய்யோ, அண்ணே அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க, நாங்க கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிக்கிறோம்.ஏண்டா மூஞ்சுறு, வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டா நீ!” என முதலில் கேட்டவனை ஒருத்தி பின்மண்டையில் “சொத்” என‌ ஒரு அடியை இறங்க முதலாமவன் வாய் மூடி மெளனியானான்.

இளசுகளின் அடுத்த கலாட்டாவில் பேச்சி சிக்கி விட சிரித்தப்படி அவ்விடம் விட்டு அகன்றான் பரணி.

“என்ன அயித்தை!” என்றபடி வாய் திறந்தவனின் கலாட்டாவில், பேச்சி மூச்சு திணற பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த வேளை, வேன் வந்துவிட்டதென மகாலிங்கம் அழைத்திட,

இளசுகள் எல்லாம் ஆரப்பாட்டத்துடன் வெளியேற, ஒருவழியாக, அனைவரையும் கிளப்பிக் கொண்டு வீட்டிலிருந்து வெளிவந்த சமயம், அதுவரை கேட்ட இளசுகளின் சிரிப்பும், கேலியும், வெளியே அவர்களுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனைக் கண்டதும் சுவிட்ச் போட்டது போல் நின்று விட்டிருந்தது.

“டேய் வாத்திடா!” என ஒருவன் அலற,

அவனின் பின்முதுகில் எட்டி மிதித்த மற்றொருவனே, “டேய் வீணாப்போனவனே, எதுக்குடா கத்தி தொலையிற, வாத்திக்கு பாம்பு காதுடா,
சங்கத்தை கலைங்க, மாட்டுனோம் மனுஷன் முதுகுல டின் கட்டிடுவாரு! எதுனாலும் நம்ம வேனுக்குள்ள போயி பேசிக்கலாம்” என குசுகுசுத்தவனின் பேச்சு கார்முகிலன் திரும்பி பார்த்த பார்வையில் பட்டென நின்றுவிட, பொட்டிபாம்பாய் அடங்கி வேனுக்குள் ஏறினர்.

அதுவரை ஆர்பரித்துக் கொண்டிருந்த இளசுகளின் சத்தம் சட்டென அடங்கியதில் பெரியவர்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு!

ஏனோ! பரணியிடம் நெருங்கி பழகும் இளசுகளால் முகிலனிடம் எப்போதும் அதுப் போல முடிந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அதிகம் பேசாது ஒரு எல்லையில் நின்றவன் அடுத்த அவனின் தொழிலிற்கு ஏற்ப இன்னமும் ஒரு எல்லைக்கோட்டை வகுத்துக் கொண்டதில் அவனின் மேல் உள்ள பயத்திலும் மரியாதையிலும் மற்றவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.

வேனில் ஏறி ஜன்னலோர இருக்கைகளை ஆக்ரமித்திருந்த இளசுகளின் பார்வை முழுவதும் வெளியே நின்றிருந்தவனின் மீதே!

எல்லாம் சரிப்பார்த்த நிலையில், அனைவரும் வண்டியில் ஏறி விட, கார்முகிலனும் வேனில் ஏறும் நோக்கத்துடன் வர,

“ஏய்! யாத்தே! வாத்தி வேனுக்கு வராருடா” என்றவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அலற,

“ஏதே! இங்கயாடா வராரு, நான் பொண்ணு பாக்குறதுக்கே வரலை, ஆளை விடுங்க டா,” என்ற மற்றொருவன் பின் இருக்கை வழியாக குதிக்க முயல,

அவனை தடுத்துப் பிடித்து கீழிழுத்துவிட்ட மற்றவர்கள், “ வாயை பொத்திக்கிட்டு உட்காரு டா, வாத்தி பாத்தாருனா, பிரம்படி தான் டி மாப்பிள்ளை” என அவனை அடங்கியிருந்தனர்.

நடந்து வந்துக் கொண்டிருந்தவனை கண்ட இளசுகளின் இதயம் குதிரை பந்தயத்தில் ஓடும் குதிரையாக அதிவேகத்தில் துடிக்க,

சரியாக வேனின் படிக்கட்டில் முகிலன் கால் வைத்த நேரம், பின்னிருந்து வந்த பரணி அவனிடம் எதுவோ கூறி முன்னிருந்தக் காருக்கு அழைத்துச் சென்றதில் அதுவரை இருந்த பதட்டம் நீங்க,

“பல்லாண்டு வாழ்க! பரணி சித்தப்பா!” என்றவனின் கோசத்தில் மொத்த வேனும் குலுங்கி சிரித்திட, அதே குதுகலத்துடன் வேன் பெண்ணின் ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு புறப்பட்டது.

 

Mathykarthy

Well-known member
நைஸ் ஸ்டார்ட் ❤️

முகிலனுக்கு பொண்ணு பார்க்கப் போறாங்களா...😊. வாத்தி ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல 🥰🥰🥰

இந்த சுபா நல்லவளா கெட்டவளா 🙄
 
நைஸ் ஸ்டார்ட் ❤️

முகிலனுக்கு பொண்ணு பார்க்கப் போறாங்களா...😊. வாத்தி ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல 🥰🥰🥰

இந்த சுபா நல்லவளா கெட்டவளா 🙄
ஸ்ட்ரிக்ட்டோ ஸ்ட்ரிக்ட். சுபா நல்லவ பாதி கெட்டவ பாதி🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 
Top