எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மழை 02

வான்மழை 2

ஒட்டன்சத்திரத்தில் அதிகமான தொழில்கள் என்றால் அது காய்கறி சந்தையும், பால் சார்ந்த விற்பனைக்களுமே. இங்கிருந்து பல மாநிலங்களுக்கு காய்கறிகளும் பால் சார்ந்த பொருட்களும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அத்தகைய காய்கறி சந்தையிலும், பால் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் தனக்கென தனியொரு அடையாளத்தை கொண்டவர் தான் குருசாமி. பல ஏக்கருக்கு சொந்தக்காரரான இவரது நிலத்தில் அதிக மக்காச்சோளமும், காய்கறிகளும் விளைவிக்கப்படும். காய்கறி சந்தையில் கிட்டதட்ட பாதிக் கடைகள் அவருடையது தான்.

இவருடைய மனைவி மல்லிகா.மகன் கிருஷ்ணா மகள் வருணாக்ஷி.

இன்றைக்கு வருணாக்ஷியை தான் பெண் பார்க்க வருகின்றனர்.

“ஏய்யா‌‌ குரு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை‌ மணிக்கு வர்றதா தகவல் சொல்லியிருக்காங்க?” குருசாமியின் அம்மா முனிஸ்வரி கேட்க,

“கிளம்பிட்டாங்களாம் ம்மா, இன்னும்‌ கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க, பாப்பா ரெடியா?”

“ம்ஹூம் உன் மகளைப் போயி‌ நீயே பாரு, ரூமுக்குள்ள போனவ இன்னும் கதவை தொறக்க காணோம்.” என் அவர் நொடித்துக் கொள்ள,

அவரது அவதாரமான‌‌ மகளை காண வீட்டினுள் நுழைந்தார் குருசாமி.

“மல்லிகா!!” என்றவரின் அழைப்புக்கு, வந்து நின்ற மனைவியின் முகம், கோபத்தில் இருப்பதை கண்டவருக்கு இது அவரது சேட்டைக்கார மகளின் வேலை என்பது நொடியில் புரிந்து விட,

“காபி, பலகாரம் எல்லாம் ரெடியா மல்லி,மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களாம்.” என்க,

“அதெல்லாம் ஆச்சு, உங்க அக்காங்க அதை எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க”.

“ஓஹோ!! சரி சரி நீ எதுக்கும் பதட்டமாகாத, எல்லாத்தையும் அக்காங்கே பாத்துப்பாங்க.”

“அதெப்படி, நான் பதட்டமில்லாம இருக்க முடியும்? என்னை டென்ஷன் படுத்துறதுக்கு உங்க மக ஒருத்திப் போதாது??” என்றவர் கடுப்பில் கத்த,

“என்னாச்சு, பாப்பா என்ன பண்ணினா? சும்மா எல்லாத்துக்கும் அவளை திட்டாதே, இன்னைக்கு பிள்ளைக்கு தான் விசேஷம்.” என்றவரின் பேச்சில் இன்னும் கடுப்பான மல்லி,

“இன்னைக்கு விசேஷம் இருக்குற உங்க அருமை மக இன்னும் எழும்பாம தூங்கிட்டு இருக்கா? அது தெரியுமா உங்களுக்கு? இன்னும் ஒரு மணி நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க இவ இன்னும் தூங்கிட்டு கெடக்குறா, எருமை மாடு கதவை உள்பக்கமாக பூட்டி வேற வச்சிருக்கா? போன் அடிச்சாலும் கட் பண்ணி விடுறா, கதவை தட்டி தட்டி என் உயிர்ப் போகுது, எங்கயாச்சும் இந்த கூத்து நடக்குமா?” என்றவரின் பேச்சில்,

‘யாத்தே!!’ என் நெஞ்சில் கை வைக்காத குறையாக அதிர்ந்தவர் மகளின் அறை நோக்கி ஓடியிருந்தார்.

“பாப்பா! பாப்புக்குட்டி!” என அலறாத‌ குறையாக அவர் கத்தியும் கதவை திறக்கவில்லை அவரின் செல்ல மகள்.

“டேய் கிருஷ்ணா! அந்த மாத்துச்சாவியை எடுத்துட்டு வாடா,” என்றவர் போட்ட சத்தத்தில், அத்தை மகளுடன் அந்தாச்சரி ஆடிக் கொண்டிருந்த கிருஷ்ணா, பதறியடித்துக் கொண்டு கையில் ஸ்பேர் கீயுடன் வந்துவிட்டிருந்தான்.

அவனிடம் சாவியை புடுங்காத குறையாக பறித்தவர், உள் செல்ல அவர் செல்ல மகள் ஆழ்ந்த நித்திரையில் லயித்திருந்தாள்.

“அடிப்பாவி!!” என்ற கிருஷ்ணா வாயில் கைவைத்திட,

தூங்கும் மகளின் அழகில் லயித்த குருசாமி, வந்த வேலையை மறந்தவராக, மகளின் அருகில் சென்றவர் அவள் தலையை பரிவுடன் வருடி விட,

அதனை கண்டு கடுப்பான கிருஷ்ணா,
“இருங்க தகப்பனாரே, மம்மிய கூட்டிட்டு வரேன்” என முணங்கியவன், சத்தமில்லாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து, மல்லிகாவிடம் சென்றவன்,

“எம்மா! வாம்மா அங்கே, தகப்பனார் அவர் மகளை எழுப்புற அழகைப் பாருங்க,” என அவரை இழுத்துக் கொண்டு வருணாவின் அறைக்கு செல்ல,

“வருக்குட்டி! வரு! எழுந்திரிடாமா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களாம்!” என
மெல்லிய குரலில் குருசாமி அவளை எழுப்ப,

“அடியே அறிவுக்கெட்டவளே!..” என உச்சந்தியில் கேட்ட குரலில் தகப்பனார் பதறியடித்து எழ, அவர் பெற்ற செல்லமகளும் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்திருந்தாள்.

எழுந்தவள் கண்டது, சூலாயுதம் ஏந்தாத குறையாக நின்றிருந்த அன்னையையும், அவரின்‌ பின்னே‌ நக்கல் சிரிப்புடன் நின்றிருந்த கிருஷ்ணாவையும்.

எதற்காக அன்னை தன்னை முறைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை யோசித்துப் பார்த்தவளுக்கு அவளின்‌ மூளை இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்த, பட்டென திரும்பி கடிகாரத்தை பார்க்க, அது காட்டிய நேரத்தில் அதிர்ந்தவள்,

அடுத்த நிமிடம் கட்டிலில் இருந்து குதித்தவள், வழியில் நின்றிருந்த தாயையும், தமையனையும் இடித்து விட்டு, குளியலறையினுள் பாய்ந்திருந்தாள்.

கதவை மூடும் முன்பே,
“உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்காமா?, இவ்ளோ நேரமா என்னை தூங்கவிட்டு வேடிக்கை பார்ப்ப? உன் பாசத்தை காட்டுறதுக்கு இதுவா நேரம் மல்லி!” என்றவள், தன்னை நோக்கி பாய்ந்து வந்த துடைப்பம் அவளை தாக்கும் முன், பட்டென்று கதவை மூடியிருந்தாள்.

“திமிரெடுத்தக் கழுதை!” என அவளிற்கு திட்டியவர், அங்கே “பே” வென நின்றிருந்த குருசாமியை கண்டு,

“உங்களுக்கு என்ன இங்க வேடிக்கை,போயி வெளிய இருக்குற வேலைய கவனிங்க, கிருஷ்ணா நீயும் போடா” என இருவரையும் வெளியே விரட்டி விட்டவர்,

“வர்ணா படக்குனு வா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பி கால்மணி நேரம் ஆகிடுச்சு, கட்டில்ல புடவை எடுத்து வச்சுட்டு போறேன்” என்றவரின் குரலை இடைநிறுத்தியது வருணாக்ஷியின் குரல்.

“அம்மா, ம்மா ப்ளீஸ் ம்மா சேரி எல்லாம் கட்ட லேட் ஆகிடும். அப்பா என் பர்த்டேக்கு எடுத்துக் கொடுத்த சல்வாரா போட்டுக்கிறேன் ம்மா” என்க,

“புத்தி பேதலிச்சுப் போச்சா வருணா உனக்கு? பொண்ணு பாக்க வர்றாப்ப சல்வாரை போட்டுக்கிறேன்னு சொல்ற!” என அவர் இப்பக்கம் இருந்து கத்த,

அதற்குள் மின்னல் வேகத்தில் குளித்து முடித்த வந்திருந்தாள், “ம்மா வெறும் பொண்ணு தானேம்மா பாக்க வர்றாங்க, மிச்சுப் போனா ஒரு அஞ்சாறு பேரு வருவாங்களா, ப்ளீஸ் ம்மா சல்வாரும் நல்லா நீட்டான டிரெஸ் தானேம்மா, இப்போ எல்லாம் காபி ஷாப்ல பொண்ணு பாத்துட்டுப் போறாங்க, நீங்க என்னடான்னா, ஒரு புடவைக்கு இவ்வளோ பேசுறீங்க,” என வரு சலித்துக் கொள்ள,

மல்லிகாவிற்கும் அவள் சொல்வது தான் சரி எனப்பட்டது. வெறும் பெண் பார்க்கும் நிகழ்வு என்பதால் பத்திற்கும் குறைவான ஆட்கள் தான் வருவார்கள்‌ என்பது அவரது எண்ணம். ஆனால் அங்கே ஒரு ஊரே வருகிறது என பாவம் தாய், மகள் அறிந்திருக்கவில்லை.

“சரி, அதையே போட்டு சீக்கிரம் ரெடியாகு, நான் கிச்சனுக்கு போறேன்” என்றுவிட்டு அவர நகர,

தாய் அனுமதி அளித்து விட்டதில் குதுகலமாய் வருணா தயாராகி கொண்டிருந்தவளின் மனம்‌எங்கும் கார்முகிலனின் பிம்பமே.


பெரியவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டாரின் பின்னனியும், குடும்ப நிலவரமும் திருப்தியாக இருந்த போதிலும் அவ்வீட்டு மூத்த மகனின் திருமணம் சற்றே இடறத்தான் செய்தது.

“எய்யா குரு, மாப்பிள்ளையோட அண்ணன்‌ ஜாதி மாறியில்ல கல்யாணம் பண்ணிருக்கான். இது எப்புடி ஒத்து வருமா?”

“அப்பத்தா அது எல்லாம் பெரிய விஷயமா என்ன?” கிருஷ்ணன் கேட்க,

“அதுதான் கிருஷ்ணா பெரிய விசயமே! மூத்த மருமக வேத்து ஆளுங்களா இருக்கும் போது, நம்ம‌ பொண்ணு அங்கப் போனா சில பிரச்சனை வரத்தான் செய்யும் கிருஷ்ணா. அந்தப் பொண்ணு நம்ம ஆளுங்களா இருந்திருந்தாலே இன்னொரு மருமகப் போறப்போ, சில உரசல்கள் வரத்தான் செய்யும். இதுல அந்தப் பிள்ளை‌‌ வேற‌ நம்மாளுங்களா இல்லாதப்போ இதை வச்சே பிரச்சினை வர வாய்ப்பிருக்கு.” என மல்லிகா நடைமுறை சிக்கல்களை கூற,

ஆண்கள் இருவருக்கும் அது உண்மை என்றேப் பட்டது. இருந்தும் கார்முகிலனின் தோற்றமும், ஜாதகமும் அமோகமாக மகளுடன் பொருந்திப் போனதில் அவனை விட முடியாமல் தவித்துப் போனார் குருசாமி.

“நம்ம ஏன் ஆரம்பத்துலயே‌ முட்டுக்கட்டைய போடணும்.‌ஒருவேளை‌ அந்தப் பிள்ளை நல்ல பிள்ளையா இருந்து, நம்ம பொண்ணும் அங்கப் போயி சந்தோசமா வாழலாம் இல்லையா? நம்ம நினைக்கிற‌ இந்தப் பிரச்சனை‌, ஒண்ணுமே இல்லாம போகவும் வாய்ப்பிருக்கு தானே. ஏன் கெட்டதாவே நினைக்கனும், நம்ம இப்போ அவசரப்பட்டு வேண்டாம் சொல்லிட்டு, பின்னாடி வருத்தப்பட கூடாதில்லையா? மொதல்ல அவங்க பொண்ணுப் பாக்க வரச் சொல்லுவோம்.

நம்மளும் பாத்து பேசுவோம், மல்லி உனக்கு அந்த வீட்டூப் பொண்ணுங்க கூட பேசுனா‌ அவங்க கொணத்தை கவனிக்க முடியாத என்ன? ஏம்மா, உனக்கு ஆளுங்களை எடைப் போடத் தெரியாத என்ன? வரட்டும் பாக்கட்டும், நம்மளுக்கு எல்லாம் தோது வந்தா, மேற்க் கொண்டு பேசுவோம். சரிதான?” என்றவரின் பேச்சிலே அவருக்கு இவ்விடத்தை விட மனமில்லை என் வீட்டாளுங்களுக்கு புரிந்து விட அவர் சொல்லிற்கு தலையாட்டினர்.

இந்தப் பேச்சவார்த்தை அனைத்தும் வருணாக்ஷியின் அறியாது நடைபெற்றது. ஏனோ‌ எதுவும் உறுதியாக தெரியாது, அவளிற்கு அக்குடும்பத்தினை பற்றியும், தங்களது எண்ணத்தினை பற்றியும் கூறி அவளை பயமுறுத்த அவர்கள் விரும்பியிருக்கவில்லை‌.

இவர்கள் பேச்சுவார்த்தையினன முடித்துக் கொண்ட பிறகு தான் மல்லிகா முகிலனின் புகைப்படத்தை அவளிடம் கொடுத்திருந்தார்.
அவளிற்கென முதன்‌முதலாக கொண்டு வரப்பட்ட வரன். பார்த்ததும் மனதில் பதிந்து விட்டவனை கண்டு அவளிற்கு ஆச்சர்யம் எழுந்தது உண்மை.

ஏனோ, ஒருவித பிடித்தம் அவன்‌மேல் வந்துவிட்டதை வருணாவினால் நன்கு உணர முடிந்தது‌. அவனிற்கென பார்த்து பார்த்து அவள் தயாராக,

ஆனால், முதல் பார்வையிலேயே அவள்‌ அணிந்திருக்கும் உடையாமல் கார்முகிலனின் மனதில் அவள் நெருடலை ஏற்படுத்தப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை!

ஒருவேளை தெரிந்திருந்தால் அதனை தவிர்த்திருப்பாளோ, என்னவோ!




 

Mathykarthy

Well-known member
நைஸ் அப்டேட் ❣️🥰
வருணா வாத்தி பத்தி தெரியாம போட்டோவை பார்த்து கவுந்துட்டா🤭
 
நைஸ் அப்டேட் ❣️🥰
வருணா வாத்தி பத்தி தெரியாம போட்டோவை பார்த்து கவுந்துட்டா🤭
வாத்தியையும் அவ கவுத்திடுவா🫢🫢
 
Top